வலிமையானவர்
إِنَّا سَنُلْقِي عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا
நிச்சயமாக விரைவில் உம்மீது
பாரமான சொல்லான (இவ்வேதத்)தை முழுமையாக நாம் இறக்கிவைப்போம். திருக்குர்ஆன்:- 73:5
இறைத்தூதர் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள், உடல் மற்றும் மன பலமிக்கவர்களாக திகழ்ந்தார்கள். (வஹீ எனும்) வேத அறிவிப்பின் சுமையை
உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தாங்கிக்கொள்வதற்கு பலம் அவசியமாகும். அழைப்புப் பணியை மேற்கொள்வதற்கும், அதில் ஏற்படும் இடையூறு துன்புறுத்தல்களை
தாங்கிக்கொள்வதற்கும் அசாதாரண உடல் பலம் முக்கியமானது.
ஏனைய இறைத்தூதர்களும்,
உடல் பலமிக்கவர்களாக திகழ்ந்தார்கள் என்று பின்வருமாறு குர்ஆன் கூறுகிறது.
இறைத்தூதர் நூஹ் (அலை)
அவர்கள் வலிமையான கரங்களைக் கொண்டு கடுமையாக உழைத்து, கப்பலை கட்டி முடித்தார்கள்.
இறைத்தூதர் இப்ராஹீம்
(அலை) மற்றும் அவரின் மகனார் இஸ்மாயீல் (அலை) ஆகிய இருவரும் சேர்ந்து தமது உடல் பலத்தால்
கல், மண் சுமந்து கடுமையாக உழைத்து, (முதல் இறையில்லம் எனும்)
கஅபாவை கட்டி முடித்தார்கள்.
இறைத்தூதர் மூசா (அலை)
அவர்கள் ஓர் தகராறின்போது எதிர்பாராத விதமாக எதிரியின்மீது ஒரே ஒரு அடி தான் அடித்தார்கள்.
ஆனால், அவன் இறந்து போனான்.
மேலும், மூசா (அலை) அவர்கள் கடுமையான பசியோடும், தாகத்தோடும், உடல் களைப்போடும் இருந்தபோது பல பேர்
சேர்ந்து அசைக்க முடியாத ஒரு கிணற்றின் (கல்லால் ஆன) மூடியை, தமது உடல் பலத்தால் முழுவதுமாய் திறந்து, தண்ணீர் இறைத்து உதவினார்கள்.
இறைத்தூதர் தாவூத் (அலை)
அவர்கள் யுத்தங்களுக்கு தேவையான இரும்பால் ஆன ஆயுதங்களை தமது உடல் பலத்தால் தயாரித்தார்கள்.
மலையேற்றம்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள்
ஆரம்பக் காலத்தில் அவ்வபோது அந்நூர் மலையின் உச்சியில் அமைந்திருந்த ஹிரா குகைக்குச்
சென்று இறைவழிபாட்டில் ஈடுபட்டு வந்தார்கள். குகையில் இருக்கும் சந்தர்ப்பத்தில் உணவு
தேவைப்பட்டால் நபியவர்கள் கீழே இறங்கி வருவார்கள். கதீஜா (ரலி) அவர்களே நபியவர்களுக்கு
தேவையான உணவை தயாரித்து வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள்
அந்நூர் மலையின் உச்சியில் அமைந்திருந்த ஹிரா குகைக்கு தொடர்ந்து ஏரியும் இறங்கியும்
வந்தது நபியவர்களின் உடல் பலத்துக்கான சான்றுகளில் ஒன்றாக அமைகிறது.
அம்மலையின் உயரம் 650 மீட்டரைவிட அதிகமாகும்.
அந்த இடத்தைச் சென்றடைய ஒருவர் மலையின் செங்குத்தான இடங்களைக்கூட தாண்ட வேண்டியிருக்கும்.
அதனால் தான் ஹஜ், உம்ராவுக்கு செல்பவர்கள் ஹிரா குகையைத் தரிசிப்பதை சவூதி அரசு தடை செய்துள்ளது.
ஏறும்போது ஏற்படக்கூடிய அபாயங்களை தடுப்பதற்காக இந்த ஏற்பாடு. சிலருக்கு களைப்பு ஏற்பட்டு
பிராணவாயு (Oxygen) குறைந்துவிடுவதும் உண்டு.
சூடான் நாட்டின் அறிஞர்
மாலிக் பத்ரீ (ரஹ்) அவர்கள் ஹிரா குகையைத் தரிசிக்க அந்நூர் மலையில் ஏறியதைப் பற்றி
தமது அனுபவத்தை கூறுகிறார். 1959 ஆம் ஆண்டு எனது 27 ஆம் வயதில் ஹிரா குகையைத் தரிசிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தான். அவ்வேளை நான்
பல்வேறு உடற்பயிற்சி விளையாட்டுகளில் ஈடுபடுகின்ற பலமான இளைஞனாக இருந்தேன். உண்மையில்
அந்தக் குகைக்கு ஏறிச் சென்று அந்த உன்னத மனிதர் நடந்த பூமியில் என் பாதங்கள் பதிய
வேண்டும் என்ற ஆவல் எனக்கிருந்தது. மலை ஏறுவதற்கான உடற்தெம்பு குறித்த திடமான நம்பிக்கையும்
எனக்கிருந்தது.
மலையுச்சிக்குச் செல்வதற்கான
பாதை விரிவாக்கப்பட்டும், சரிவுகளில் ஏறுவதற்கு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டும்கூட இருந்தன. ஆனாலும், மலையேறும்போது எனக்கேற்பட்ட பலவீனத்தையும்
பலமுறை உட்கார நேர்ந்ததையும் உணர்ந்தபோது வியப்பே ஏற்பட்டது. மூச்சை இழுத்துவிடவும்
தொடர்ந்து ஏறிச் செல்வதற்கான பலத்தைத் திரட்டி கொள்ளவும் அவ்வாறு நான் இடையில் உட்கார
வேண்டியிருந்தது. நூல்:- அல்ஜவானிபுல் ஆத்திஃபியா ஃபீ ஹயாத்தில் அன்பியா
வஹீ வரும் நேரம்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ( يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يَأْتِيكَ
الْوَحْىُ ) “நாயகமே! தங்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) எப்படி வருகின்றது?” என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள், ( أَحْيَانًا
يَأْتِينِي مِثْلَ صَلْصَلَةِ الْجَرَسِ وَهُوَ أَشَدُّهُ عَلَىَّ ) “சில வேளைகளில் மணி ஓசையைப் போன்று எனக்கு வேத அறிவிப்பு (வஹீ) வரும். இவ்வாறு வருவது
எனக்கு மிகவும் கடினமாக இருக்கும்” என்று பதிலளித்தார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
( وَلَقَدْ رَأَيْتُهُ يَنْزِلُ عَلَيْهِ
الْوَحْىُ فِي الْيَوْمِ الشَّدِيدِ الْبَرْدِ، فَيَفْصِمُ عَنْهُ وَإِنَّ
جَبِينَهُ لَيَتَفَصَّدُ عَرَقًا ) அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களுக்கு, கடுமையான குளிர்வீசும் நாளில் வேத அறிவிப்பு (வஹீ) வருவதை நான் பார்த்துள்ளேன்.
வேத அறிவிப்பு நின்ற பின் அவர்களது நெற்றியிலிருந்து வியர்வை சொட்டும். நூல்:- புகாரீ-2
ஸைத் பின் ஸாபித் (ரலி)
அவர்கள் கூறியதாவது. “இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின்
வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாகமாட்டார்கள்” எனும் (4:95ஆவது) வசனத்தை அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் (நான் எழுதிப் பதிவு செய்வதற்காக) என்னிடம் ஓதிக்காட்டிக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் என்னிடம் ஓதிக்காட்டிக்கொண்டிருக்கும்போது, இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின்
மீதாணையாக, என்னால் அறப்போர் புரிய
முடிந்திருந்தால் அறப்போர் புரிந்திருப்பேன்” என்று சொன்னார்கள். அவர் கண்பார்வையற்றவராக
இருந்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களின் தொடை என் தொடை மீதிருக்க, அவர்கள்மீது அல்லாஹ் (வேத அறிவிப்பை) அருளினான். ஆகவே, என் தொடை நசுங்கிப்போய்விடுமோ என்று
நான் அஞ்சும் அளவுக்கு நபி (ஸல்) அவர்களின் தொடை என்மீது கனத்து (அழுத்தத் தொடங்கி)விட்டது.
பிறகு அந்நிலை அகன்றது. அப்போதுதான் அல்லாஹ் “இடையூறு உள்ளவர்கள் தவிர' எனும் சொற்றொடரை (மேற்கண்ட வசனத்துடன்
சேர்த்து) அருளியிருந்தான். நூல்:- புகாரீ-4592
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களின் வாகனமான ஒட்டகத்தின்மீது அமர்ந்த நிலையில்
அவர்களின்மீது வஹீ இறக்கியருளப்பட்டதெனில் அந்த ஒட்டகத்தின் அடித்தொண்டை வறண்டு காய்ந்து
போய்விடும். நூல்:- முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் அல்முஸ்ஸம்மில் வசனம்-5
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
ஒட்டகத்தின்மீது அமர்ந்திருக்கும்போது வஹீ இறங்கினால் ஒட்டகம் நிற்க முடியாமல் காலை
மடித்து அமர்ந்து பூமியில் கழுத்தை நீட்டி வைத்துக்கொள்ளும் என்பதாகவும் மற்றொரு அறிவிப்பில், வஹீயின் கடுமையான அழுத்தத்தின் காரணமாகச்
சத்தமிடும் என்பதாகவும் இடம்பெற்றுள்ளது. நூல்:- சுனன் அல்குரா இமாம் பைஹகீ
(இறைச்செய்தி எனும்) வஹீ வாங்குவதற்கு உடலில் தனி பலம் தேவை. சாமானியர்கள் அதன்
கனத்தைத் தாங்க இயலாது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக ஆவதற்கு முன்னரே, நபியவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய உடல் பலத்தைத் தந்துவிட்டான்.
இரும்புப் பிடி
உமர் (ரலி) அவர்கள் முஸ்லிம்
ஆவதற்கு முன்பு உருவிய வாளுடன் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இருந்த இடத்திற்கு வந்து, கதவைத் தட்டினார். உமரின் சப்தத்தைக்
கேட்ட அனைவரும் நடுங்கினர். கதவைத் திறக்க யாருக்கும் தைரியம் இல்லை.
அங்கிருந்த ஹம்ஸா (ரலி)
அவர்கள், ( فَأْذَنْ لَهُ فَإِنْ كَانَ يُرِيدُ خَيْرًا بَذَلْنَاهُ
لَهُ وَإِنْ كَانَ جَاءَ يُرِيدُ شَرًّا قَتَلْنَاهُ بِسَيْفِهِ ) "அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவர் நன்மை நாடி வந்திருந்தால், நாம் அதை செயல்படுத்துவோம். தீங்கிழைப்பது
நோக்கமாகக் கொண்டு வந்திருந்தால், அவருடைய வாளாலேயே அவரை கொன்று விடுவோம்" என்று கூறினார்.
உமர் (ரலி) அவர்கள் வீட்டிற்குள்
வந்ததும் நபியவர்கள் எழுந்து வந்து அவருக்கு அருகே நின்று அவருடைய இடுப்புத்துணியையோ
அல்லது மேலங்கியின் ஓரத்தையோ பிடித்து, அவரை பலத்துடன் உலுக்கி தம்மருகே இழுத்து, ( مَا جَاءَ بِكَ يَا بْنَ الْخَطَّابِ ؟
فَوَاللَّهِ مَا أَرَاكَ أَنْ تَنْتَهِيَ حَتَّى يَنْزِلَ اللَّهُ بِك قَارِعَةً
) "கத்தாபின் மகனே! எதற்காக நீர் (இங்கு)
வந்தீர். அல்லாஹ்வின் மீதாணையாக! உனக்குத் திடுக்கிட செய்பவை அல்லாஹ் ஏற்படுத்தும்
வரை நீ நம்மிடம் வரமாட்டாய் என நான் கருதுகின்றேன்" என்று கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் முஸ்லிமாகத்தான்
வந்துள்ளேன் என்று கூறி, திருக்கலிமாவை கூறி முஸ்லிமானார். நூல்:- ஃபளாயிலுஸ் ஸஹாபா (இமாம் அஹ்மத்), அல்பிதாயா வந்நிஹாயா, சுபுலுல் ஹுதா வர்ரஷாதி ஃபீ சீரத்தி
கைரில் இபாதி
பிற்காலத்தில் உமர் (ரலி)
அவர்கள், “அண்ணல் நபி (ஸல்) அவர்கள்
அன்று பலமாக பிடித்து உலுக்கியதால் ஏற்பட்ட வேதனையை சில நாள்கள் வரை உணர்ந்தேன்” என்றார்கள்.
உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை
ஏற்றபோது அவர்களின் வயது 33 அல்லது 34 ஆக இருந்தது. அது உச்சக்கட்டமான வாலிபப்
பருவம். யதார்த்தமாகவே, உமர் (ரலி) அவர்கள் ஒரே நேரத்தில் பத்து பேரை அடித்து துவசம் செய்யும் அளவிற்கு
உடல் பலம்மிக்கவர்.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள்
நறுக்கென்று பிடித்த ஒரு பிடி, உடல்பலம் மிக்கவரான உமர் (ரலி) அவர்களுக்கே மிகக் கடினமான வலியைத் தந்தது என்றால், நபியவர்கள் எவ்வளவு உடல்பலம் மிக்கவராக
இருந்திருப்பார்கள் என்று யோசிக்க வேண்டும்.
மல்யுத்த வீரர்
ருகானா பின் அப்தி யஸீத்
பின் ஹாஷிம் என்பவர் குரைஷியரில் முரடராக இருந்தார். ஒருமுறை ருகானா கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்களை மல்யுத்தம் செய்வதற்கு அழைத்தார். ஆகவே, நபியவர்கள் அவரிடம் மல்யுத்தம் செய்தார்கள்.
நபியவர்கள் அவரைப் பிடித்து (வீழ்த்தி) படுக்க வைத்தபோது அவரால் சற்றும் திமிர முடியவில்லை.
பிறகு அவர், "முஹம்மத்! திரும்ப வாரும்!" என்று அழைத்தார். நபியவர்கள்
திரும்பவும் சென்று அவரிடம் மல்யுத்தம் செய்து அவரை வீழ்த்தினார்கள்.
அப்போது அவர், ( يَا
مُحَمَّدُ، وَاللَّهِ إِنَّ هَذَا لَلْعَجَبُ أَتَصْرَعُنِي مَا وَضَعَ ظَهْرِي إِلَى الْأَرْضِ أَحَدٌ
قَبْلَكَ ) "முஹம்மத்! அல்லாஹ்வின்
மீதாணையாக! நீ என்னிடம் மல்யுத்தம் செய்து என்னை வீழ்த்தியது வியப்பாக இருக்கிறது.
உமக்கு முன் எவரும் என் முதுகைத் தரையில் சாய்த்ததில்லை" என்றார். நூ:- அல்பிதாயா
வந்நிஹாயா
மல்யுத்த வீரர் ஒரு ருகானா
என்பவர் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களை மல்யுத்தத்திற்கு அழைத்து தோற்கடிக்கும் எண்ணம்
கொண்டிருந்தார். அதன் மூலமாக குறைஷி இறைமறுப்பாளர்களை மகிழ்விக்க விரும்பியிருந்தார்.
ஆனால், நபியவர்கள் அவருடன் மல்யுத்தம்
புரிந்து அவரைத் தோற்கடித்தார்கள். ருகானா, நடந்ததை நம்ப முடியாமல் ஆச்சரியமடைந்தார். இது சிலவேளை மறைமுக உதவியால் நிகழ்ந்திருக்கலாம்
என்று தனக்குள் சொல்லிக்கொண்ட அவர், முஹம்மத்! திரும்பவும் வாரும்! என அழைத்தார். நபியவர்கள் அவரை மீண்டும் தோற்கடித்து
நிலத்தில் வீழ்த்தினார்கள். இவ்வாறு மூன்று தடவை இடம்பெற்றது. எனினும், ருகானா அதை சூனியம் என்றே கருதினார்.
ஆனால், பிறகு முஸ்லிமானார்.
ஆண்மை பலம்
கத்தாதா பின் திஆமா (ரஹ்)
அவர்கள் கூறியதாவது. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், “கண்மணி பெருமானார் (ஸல்)
அவர்கள் இரவில், அல்லது பகலில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தம் துணைவியர் அனைவரிடமும் சென்றுவிட்டு
வந்துவிடுவார்கள். (அப்போது) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர்” என்று கூறினார்கள்.
உடனே நான், ( أَوَكَانَ
يُطِيقُهُ ) “அதற்கு நபியவர்கள் சக்தி பெற்றிருந்தார்களா?” என்று கேட்டேன். அனஸ்
(ரலி) அவர்கள், ( كُنَّا نَتَحَدَّثُ أَنَّهُ أُعْطِيَ قُوَّةَ ثَلاَثِينَ
) “நபியவர்களுக்கு முப்பது பேரின் சக்தி கொடுக்கப்பட்டுள்ளது என்று
நாங்கள் பேசிக்கொள்வோம்” என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-268, முஸ்லிம்-519
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது துணைவியர்களிடம் (தாம்பத்திய உறவுகொள்ளச்) சென்றுவிட்டு
வந்து ஒரேயொரு தடவை குளிப்பவர்களாக இருந்தார்கள். நூல்:- அபூதாவூத்-188 திர்மிதீ-130, நசாயீ-263
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
ஒரே நேரத்தில் தம்முடைய மனைவியரில் பலருடன் வீடு கூடினார்கள். இந்த நபிமொழி நபியவர்களின்
ஆண்மை பலத்திற்கு சான்றாகும்.
இன்றைக்கு நீண்ட நேரம்
தாம்பத்திய உறவுகொள்ள அல்லது தமது மனைவியை திருப்திபடுத்த பலரும் பல வகையான ஸ்ப்ரே, மாத்திரைகள் மற்றும் சிட்டுக்குருவி லேகியம் போன்ற பல்வேறு லேகியங்களை
பயன்படுத்துகிறார்கள். இதற்காக மட்டும் மனிதன் இன்று பல இலட்சங்களை செலவு செய்கிறான்.
இல்லற வாழ்க்கையில் ஒரு
மனைவியையே திருத்திப்படுத்தமுடியாத வாழ்க்கை வாழும்போது, ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியை எவ்வாறு
எண்ணிப் பார்க்க முடியும்?
இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? ஆண்களில் பெரும்பாலோனோருக்கு ஒன்றுக்கு
மேற்பட்ட மனைவிகள்மீது (அதாவது, இரண்டாவது திருமணத்தின்) ஆசை இருக்கத்தான் செய்கிறது என்கிறது ஓர் ஆய்வு.
நீண்ட நேரம் உறவுகொள்ள
விலை உயர்ந்த வயாக்ரா மாத்திரையை பயன்படுத்துகிறார்கள்.
அந்த மாத்திரையை பயன்படுத்துவோரில் பெரும்பாலோருக்கு (Heart attack எனும்) இதய அடைப்பு ஏற்படுவதாக
ஆய்வுகள் கூறுகின்றன.
மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இவற்றுக்கு
"ஹரிமவ், ஸ்ட்ராங் மேன்" போன்ற காபி தூள்களை பயன்படுத்துகிறார்கள்.
அதிகம் சோதிக்கப்பட்டவர்
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும்
அதன் வலிமைக்குமேல் சிரமப்படுத்துவதில்லை. திருக்குர்ஆன்:- 2:286
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்
(ரலி) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டுக் காய்ச்சலால்
சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். அவர்களை(ப் பரிவோடு) எனது
கையால் தொட்டு, ( إِنَّكَ لَتُوعَكُ وَعْكًا شَدِيدًا
) "நாயகமே! தாங்கள் கடும் காய்ச்சலால்
சிரமப்படுகிறீர்களே!" என்றேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள், ( أَجَلْ ، إِنِّي أُوعَكُ كَمَا يُوعَكُ رَجُلاَنِ
مِنْكُمْ ) "ஆம்; உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் ஒருவனே சிரமப்படுகிறேன்"
என்றார்கள். நான், "இத்துன்பத்தின் காரணமாகத் தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள்
உண்டு தானே?" என்று கேட்டேன். நபியவர்கள், "ஆம்" என்றார்கள். நூல்:- புகாரீ-5660, முஸ்லிம்-5023
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَيْسَ أَحَدٌ أَشَدُّ بَلَاءً مِنَ
الْأَنْبِيَاءِ كَمَا يَشْتَدُّ عَلَيْنَا الْبَلَاءُ كَذَلِكَ يُضَاعَفُ لَنَا
الْأَجْرُ ) நபிமார்களைவிடக்
கடுமையாகச் துன்பப்பட்டவர்கள் வேறு யாரும் இல்லை. எங்கள்மீது துன்பங்கள் தீவிரமடைவதுப்
போலவே, (அதனால்,) எங்களுக்குரிய வெகுமதியும்
பன்மடங்காகிறது. அறிவிப்பாளர்:- அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- தபக்காத்துல் குப்ரா இமாம் இப்னு சஅத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். ( ما
أُوذيَ أحَدٌ ما أُوذيتُ في اللهِ ) அல்லாஹ்வுக்காக
நான் பட்ட துன்பத்திற்கு ஈடாக வேறு யாரும் துன்பப்பட்டதில்லை. அறிவிப்பாளர்:- அனஸ்
ரலி அவர்கள் நூல்:- முக்தஸர் அல்மகாஸிர் இமாம் ஸர்கானீ, ஹுல்யத்துல் அவ்லியா இமாம் அபூநயீம், கன்ஸுல் உம்மால், ஜாமிஉஸ் ஸஙீர் இமாம் சுயூத்தீ
கண்மணி பெருமானார் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( مَا أُوذِيَ نَبِيٌّ مِثْلَ مَا أُوذِيتُ ) என்னைப்போல் வேறு எந்த நபியும் இவ்வளவு நோவினை செய்யப்பட்டதில்லை.
நூல்:- கஷ்ஃபுல் ஹும்மா ( كشف الغمة ), பிஹாருல் அன்வார்
உலக மக்களிலேயே அதிகமான
சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் ஆளானது நபிமார்கள் எனும்போது, அதை தாங்கிக்கொள்வதற்குரிய அதிகமான உடல் வலிமையும் மனவலிமையும்
பெற்றவர்கள் நபிமார்கள் தான் என்பது தெளிவாகிறது.
ஏனைய நபிமார்களைவிட அதிகமான
சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் நபிகள் நாயகம் முஹம்மது
(ஸல்) அவர்கள் ஆளானார்கள் எனும்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஏனைய நபிமார்களைவிட கூடுதலான
உடல்வலிமையையும் மனவலிமையையும் பெற்றவர்கள் என்பது தெளிவாகிறது.
சிலர், தமக்கு ஏதேனும் பிரச்சினைகள், நோய்நொடிகள் ஏற்படும்போது அதைத் தாங்கிக்கொள்ள
தம்மிடம் போதிய மனவலிமை, உடல்வலிமை இல்லை என்று எண்ணும்போதுதான் அதிலிருந்து தப்பிக்க தற்கொலை செய்து கொள்கின்றனர்.
எனவே, நாம் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மகத்துவம்
விளங்கி, நபியவர்கள் காட்டிய அழகிய
வழிமுறைகளை முழுமையாகக் கடைபிடித்து வாழ, அல்லாஹுத்தஆலா நமக்கு அருள்புரிவானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்:9840535951
No comments:
Post a Comment