Search This Blog

Wednesday, 29 July 2026

இறுதி விருப்பங்கள்

 

இறுதி விருப்பங்கள்

 

أَمْ كُنْتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِنْ بَعْدِي قَالُوا نَعْبُدُ إِلَهَكَ وَإِلَهَ آبَائِكَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ

(யூதர்களே! நபி) யஃகூபுக்கு மரணம் வந்த சமயத்தில் (அவருக்கு) அருகாமையில் இருந்தீர்களா? அவர் தன் சந்ததியை நோக்கி எனக்குப்பின் எதை வணங்குவீர்கள்? எனக் கேட்டதற்கு "உங்களுடைய இறைவனும், உங்களுடைய மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமான ஒரே இறைவனையே வணங்குவோம் அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களாகவே இருப்போம்" என்றே கூறினார்கள். திருக்குர்ஆன்:- 2:133

 

மனிதர்களின் இறுதி விருப்பம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கை முறை, அனுபவம், கலாச்சாரம் மற்றும் சிந்தனைக்கேற்ப மாறுபடும். பொதுவாக, வாழ்வின் இறுதிக் காலத்தில் மனிதர்கள் பணம், புகழ் போன்றவற்றைத் தாண்டி சில எதார்த்தமான உணர்வுப்பூர்வமான விருப்பதையே அதிகம் கூறுவார்கள்.

 

வாழ்க்கையில் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதும், பிறரிடம் இருக்கும் மனக்கசப்புகளை மறந்து நிம்மதியான மரணத்தைத் தழுவுவதும் பலரின் விருப்பமாக இருக்கும்.

 

ஒரு மனிதனின் இறுதி விருப்பங்களுக்கு (Will or last wishes) முழுமையான மரியாதை அளிக்கப்பட வேண்டும். அவை சட்டப்பூர்வமானவை, தனிப்பட்டவை மற்றும் அறநெறி சார்ந்தவை எனில், உயிருடன் இருப்பவர்களின் முதல் கடமையாக அவற்றைப் பின்பற்றுவது கருதப்படுகிறது.

 

இறந்தவரின் நற்பெயரைக் காக்கும் வகையிலும், மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்காத வகையிலும் இருக்கும் அனைத்து இறுதி விருப்பங்களையும் நிறைவேற்றுவது மனித நாகரிகத்தின் முக்கிய பண்பாகும்.

 

ஓரிறைக் கொள்கையில் நிலைத்திருக்க

 

(இறைத்தூதர் யஅகூப் - அலை அவர்கள் இறக்கும் தருவாயில் யூத மதத்தையே பின்பற்ற வேண்டும் என்று தன் பிள்ளைகளுக்கு உபதேசித்தார்கள் என்று யூதர்கள் கூறி வந்தனர். ஆகவே,) இஸ்ரவேலர்களில் உள்ள ஓரிறை மறுப்பாளர்களுக்கும் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றலான அரபுகளில் உள்ள இணைவைப்பார்களுக்கும் எதிரான ஆதாரத்தை (தலைப்பில் காணும் திருவசனத்தின் மூலம்) இறைவன் எடுத்துரைக்கிறான்.

 

இறைத்தூதர் யஅகூப் (அலை) அவர்களுக்கு இறப்பு நெருங்கிய வேளையில் அவர்கள் தம் மக்களுக்கு இணையற்ற அல்லாஹ் ஒருவனே வழிபட வேண்டும் என்றே அறிவுறுத்தினார்கள். (மேலும்,) எனக்குப் பின்னால் நீங்கள் எதை வழிபடுவீர்கள் என்று அன்னார் கேட்டார்கள். அதற்கு அவருடைய பிள்ளைகள், "உங்களுடைய இறைவனும் உங்களுடைய தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமான ஓரிறைவனே நாங்கள் வழிபடுவோம்" என்று பதிலளித்தனர் என்று இங்கு அல்லாஹ் தெரிவிக்கிறான். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

இறைத்தூதர் யஅகூப் (அலை) அவர்கள் தமது சந்ததியினரிடம், "நீங்கள் அனைவரும் ஓரிறைக் கொள்கையில் நிலைத்திருக்க வேண்டும்" என்பதே தமது இறுதி விருப்பமாக தெரிவித்தார்கள்.

 

அல்லாஹுத்தஆலா ஒரு மனிதனுக்கு வழங்கிய அருட்கொடையிலேயே மிகப்பெரிய அருட்கொடை இறைநம்பிக்கை தான். எனவே, ஒரு மனிதன் ஓரிறைக் கொள்கையிலேயே நிலைத்து நின்று, தமது வாழ்நாளின் இறுதிநேரத்தில் இறைநம்பிக்கையோடு மரணிப்பது என்பது மிகப்பெரிய பாக்கியமாகும்.

 

ஒவ்வொரு குடும்பத் தலைவனும் தமது குடும்பத்தினரிடம் இவ்வாறே இறுதி விருப்பம் தெரிவிக்க வேண்டும் என்பதையே இறைத்தூதர் யஅகூப் (அலை) அவர்கள் உணர்த்துகிறார்கள்.

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்களுக்கு இறப்பு நெருங்கியபோது தன் மகனிடம் கூறினார்கள். உனக்கு நான் இறுதி விருப்பமாக இரண்டு விஷயங்களை செய்யுமாறு கட்டளையிடுகிறேன்; இரண்டு விஷயங்களை செய்ய வேண்டாமெனத் தடை விதிக்கிறேன். லா இலாஹ இல்லல்லாஹ் (வழிபாட்டுக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்பதை (நம்பிக்கை கொள்ளுமாறு) உனக்கு நான் கட்டளையிடுகிறேன்.

 

ஏனெனில், ஏழு வானங்களும் ஏழு பூமிகளும் தராசின் ஒரு தட்டிலும் 'லா இலாஹ இல்லல்லாஹ்' எனும் நம்பிக்கை மற்றொரு தட்டிலும் வைக்கப்பட்டால் இந்த (நம்பிக்கையின்) தட்டு அ(டுத்த தட்டிலுள்ள வானம் பூமி ஆகிய)வற்றை மிகைத்துவிடும்.

 

ஏழு வானங்களும் ஏழு பூமிகளும் ஒரு மூடப்பட்ட இரும்பு வளையமாக இருந்தாலும் அவற்றை 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்பது தகர்த்துவிடும். லா இலாஹ இல்லல்லாஹு, வ சுபஹானல்லாஹி வபிஹம்தி' (வழிபாட்டுக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அல்லாஹ் பரிசுத்தமானவன். அவனைப் போற்றுகிறேன்) என்பது (படைப்பினங்களில்) ஒவ்வொன்றும் செய்யும் துதியாகும். இதன் மூலமே ஒவ்வொன்றுக்கும் வாழ்வாதாரம் (ரிஸ்க்) வழங்கப்படுகிறது.

 

இறைவனுக்கு இணைவைக்க வேண்டாம் என்றும் பெருமை கொள்ள வேண்டாம் என்றும் உனக்கு நான் தடை விதிக்கிறேன்.  அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-548, முஸ்னது அஹ்மத், ஹாகிம், ஸஹீஹுல் குத்பித்திஸ்ஆ வஸவாயிதுஹு-400

 

தொழுகை மற்றும் மனித உரிமைகள்

 

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த மரணப் படுக்கையில், ( الصَّلاَةَ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ) "தொழுகை(யை பேணிக் கொள்ளுங்கள்) உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிய செல்வங்கள் (விஷயத்திலும் கடமை தவறாதீர்கள்)" என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ( فَمَا زَالَ يَقُولُهَا حَتَّى مَا يَفِيضَ بِهَا لِسَانُهُ ) அதைச் சொல்லிச் சொல்லியே அவர்களின் நாவு (பேச முடியாமல்) வறண்டு போய்விட்டது. நூல்:- இப்னுமாஜா-1614, முஸ்னது அஹ்மத், ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, முஸ்னது அபீயஅலா

 

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. ( الصَّلاةَ الصَّلاةَ، واتَّقُوا اللَّهَ فيما مَلَكَتْ أَيْمَانُكُمْ ) "தொழுகை(யை பேணிக் கொள்ளுங்கள்). தொழுகை(யை பேணிக் கொள்ளுங்கள்). உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக்கொண்ட செல்வங்கள் (ஆகிய அடிமைகள்) விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்" என்பதுதான் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (இறப்புத் தருவாயில் பேசிய) இறுதிப் பேச்சாக இருந்தது. நூல்:- அபூதாவூத்-4489, இப்னுமாஜா-2689, அல்அதபுல் முஃப்ரத்-158, முஸ்னது அஹ்மத், முஸ்னது அபீயஅலா

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமது நோய் மற்றும் சோர்வின் காரணமாகத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் பேச முடியாத நிலை வரும் வரை, தம்மைச் சுற்றியிருந்தவர்களுக்கு அந்த அறிவுறுத்தலை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொண்டே இருந்தார்கள்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை அதிகமாக நேசித்தார்கள். தமது வாழ்க்கையின் இன்பம் துன்பம் என அனைத்துக் கட்டத்திலும், அதை நிறைவேற்றுவதில் அலாதி சுகம் கண்டார்கள்.

 

தொழுகை இஸ்லாத்தின் மாபெரும் தூணாகவும், உடல் ரீதியான வணக்க வழிபாடுகளில் மிகவும் கண்ணியமானதாகவும் இருக்கிறது. மேலும், ஒரு நாளைக்கு ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்யப்படுவதால் அது அலட்சியத்திற்கு உள்ளாகிவிடக்கூடாது.

 

மேலும், அதைக் கைவிடுவதிலிருந்தோ அல்லது அதன் முழுமையான வடிவத்தில் செய்யாமல் இருப்பதிலிருந்தோ எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதினால் நபியவர்கள், “தொழுகை, தொழுகை,” என்று இரண்டு முறை கூறி, தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பதில் பேணுதலாக இருங்கள் என்று எச்சரித்தார்கள்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவற்றில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்" என்று கூறினார்கள். அதாவது: உங்கள் கரங்கள் சொந்தமாக்கிக்கொண்ட மனைவி மக்கள், அடிமைகள், விலங்குகள் மற்றும் செல்வம் ஆகிய அனைத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். எனவே, நல்ல உரிமையாளர்களாக இருப்பதன் மூலமும், அவர்களுக்குத் தேவையானதைச் செய்வதன் மூலமும், அவர்களைப் புறக்கணிக்காமல் இருப்பதன் மூலமும், அவர்களின் உரிமைகளில் தவறாமல் இருப்பதன் மூலமும், அவர்களால் தாங்க முடியாத சுமையை அவர்கள் மீது சுமத்தாமல் இருப்பதன் மூலமும்,  மார்க்கம் மற்றும் உலக விவகாரங்களில் அவர்களுக்குத் தேவையானவற்றைக் கற்பிப்பதன் மூலமும், ஜகாத் மற்றும் தர்மம் போன்ற செல்வத்தில் அல்லாஹ்வின் உரிமைகளைச் செலுத்துவதன் மூலமும் அவற்றில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்.

 

எந்த நிலையிலும் கைவிடக் கூடாத கடமை தொழுகை, அது போன்று (மனித உரிமைகள் தொடர்புடைய) அடிமைகளின் நலனும் எந்த நிலையிலும் பேணப்பட வேண்டும் என்பதற்காகவே தொழுகையுடன் வலக்கரங்கள் சொந்தமாக்கிக்கொண்ட அடிமைகளையும் இணைத்துத் தமது இறுதிப் பேச்சில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

 

பார்க்க விரும்பினால்

 

தட்டம்மை நோய் முற்றி மரணத் தருவாயில் இருந்த ருக்கையா (ரலி) அவர்கள், ( وَهِيَ تَتَلَهَّفُ لِرُؤْيَةِ أَبِيهَا الَّذِي خَرَجَ إلَى بَدْرٍ وَرُؤْيَةُ أُخْتِهَا زَيْنَبَ فِي مَكَّةَ )  பத்ருப் போருக்குச் சென்ற தம் தந்தையையும், மக்காவில் இருக்கும் தமது சகோதரி ஸைனப் (ரலி) அவர்களையும் (இறுதியாக ஒருமுறை) பார்த்திட வேண்டும் என்று (இறுதி விருப்பம் தெரிவித்த நிலையில்) ஏங்கினார். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் செய்வதறியாது தமது அருமை மனைவியை கண்ணீர் மல்க ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்தார். துக்கத்தால் அவரது நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது. அதே வேளை ருகைய்யா (ரலி) அவர்கள் தமது இறுதி மூச்சை ஒவ்வொன்றாக விட்டுக்கொண்டே இருந்தார்கள். இறுதியாக திருக்கலிமாவை மொழிந்தவாறு இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றார்கள்.

 

தோழர்களுடன் பத்ருப்போருக்கு சென்றிருந்த (தமது தந்தையான) அருமை நாயகம் (ஸல்) அவர்களை இறுதிவரை அவரால் பார்க்க முடியாமல் போயிற்று. பத்ருப்போரில் இருந்து திரும்பிய நபியவர்கள் தமது மகள் மரணித்த செய்தியறிந்து, ( فَخَرَجَ إلَى الْبَقِيعِ وَوَقَفَ عَلَى قَبْرِ ابْنَتِهِ يَدْعُوَ لَهَا بِالْغُفْرَان ) அல்பக்கீஉ (எனும் மையவாடி)க்குச் சென்று, தன் மகளின் மண்ணறை அருகே நின்று, அவரின் ஈடேற்றத்திற்காக பிரார்த்தனை செய்தார்கள். நூல்:- திமாவுன் அலா கமீஸி உஸ்மான் பின் அஃப்பான் ( دماء علي قمیص عثمان بن عفان )

 

தமது வாழ்நாளின் இறுதி நேரத்தில் இருக்கும் மனிதர்கள் தமக்கு நேசத்திற்குரியவர்களை இறுதியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவது எதார்த்தமே. இதை பிழையென்று எண்ணலாகாது. முடிந்தால் அவர்கள் ஆசையை நிறைவேற்றி வைக்கலாம்.

 

மரணச் செய்தி கேட்டு நாம் செல்வதற்குள் இறந்தவர்களை அடக்கம் செய்துவிட்டால், அவரின் வீட்டினரை சந்தித்து ஆறுதல் சொல்வதுடன், இறந்தவரின் மண்ணறைக்குச் சென்று, அவரின் நல்வாழ்விற்காக பிரார்த்திப்பதும் நபிவழியாகும்.

 

சிறிது நேரம் சுற்றி நில்லுங்கள்

 

அப்துர் ரஹ்மான் பின் ஷிமாசா அல்மஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. இறப்பின் நெருக்கத்தில் இருந்த (நபித்தோழர்) அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் நீண்ட நேரம் அழுதார்கள். பிறகு அவர்கள் சுவரை நோக்கித் தமது முகத்தைத் திருப்பி கொண்டார்கள்.

 

அப்போது அவர்களுடைய புதல்வர், "அருமைத் தந்தையே! தங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இன்னின்ன நற்செய்தியைக் கூறவில்லையா?" என்று கேட்டார். உடனே அம்ர் (ரலி) அவர்கள் தமது முகத்தை (தம் புதல்வரை நோக்கி)த் திருப்பி (பின்வருமாறு) கூறினார்கள்: வழிபாட்டுக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறியதே நமது சேமிப்புக்களின் மிகச்சிறந்ததாகும். நான் (என் வாழ்நாளில்) மூன்று கட்டங்களை கடந்து வந்திருக்கிறேன்.

 

(முதலாவது கட்டத்தில்) நபியவர்கள்மீது கடுமையான வெறுப்பு கொண்டவர் என்னைவிட வேறெவரும் இருக்கவில்லை என்றே நான் கருதினேன். என்னால் இயன்றால் அவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்பதே எனக்கு மிகவும் விருப்பமான விஷயமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் மட்டும் நான் இறந்துவிட்டிருந்தால் நான் நரகவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன்.

 

(இரண்டாவது கட்டத்தில்) அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை ஊட்டினான். (பிறகு நான் இஸ்லாத்தை தழுவினேன்.) அப்போது நபியவர்களைவிட மிகவும் பிரியமானவர் வேறெவரும் எனக்கு இருக்கவில்லை; எனது பார்வையில் அவர்களைவிட மிகவும் கண்ணியமானவர் வேறெவரும் இருக்கவில்லை.

 

அவர்களை வர்ணித்துக் கூறும்படி என்னிடம் கேட்டுக்கொள்ளப்பட்டால் அதற்கும் என்னால் இயலாது. ஏனெனில், நான் அவர்கள்மீது வைத்திருந்த மரியாதையின் காரணத்தால் என் கண்கள் நிரம்ப அவர்களை நான் பார்த்திருக்கவில்லை. அந்த நிலை நாள் இறந்திருந்தால் சொர்க்கவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன் என்று எதிர்பார்க்கிறேன்.

 

பிறகு (மூன்றாவது கட்டத்தில்) பல்வேறு பொறுப்புக்களை நாம் வகித்தோம். அவற்றில் எனது நிலையென்ன என்பது எனக்குத் தெரியாது.

 

எனவே, ( فَإِذَا أَنَا مُتُّ فَلاَ تَصْحَبْنِي نَائِحَةٌ وَلاَ نَارٌ فَإِذَا دَفَنْتُمُونِي فَشُنُّوا عَلَىَّ التُّرَابَ شَنًّا ثُمَّ أَقِيمُوا حَوْلَ قَبْرِي قَدْرَ مَا تُنْحَرُ جَزُورٌ وَيُقْسَمُ لَحْمُهَا حَتَّى أَسْتَأْنِسَ بِكُمْ وَأَنْظُرَ مَاذَا أُرَاجِعُ بِهِ رُسُلَ رَبِّي ) நான் இறந்துவிட்டால் ஒப்பாரி வைப்பவரோ, நெருப்போ என் சடலத்தோடு இருக்கலாகாது. என்னை (குழிக்குள் வைத்து) நீங்கள் அடக்கம் செய்யும்போது என்மீது மண்ணைத் தள்ளுங்கள். பிறகு ஓர் ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியை பங்கிடும் நேரம் அளவுக்கு நீங்கள் அடக்கத்தலத்தைச் சுற்றி நில்லுங்கள். உங்களால் நான் ஆசுவாசமடைவேன்; என் இறைவனின் தூதர்க(ளான வானவர்க)ளிடம் நான் என்ன பதிலளிப்பது என்பதையும் கண்டு கொள்வேன். நூல்:- முஸ்லிம்-192, முஸ்னது அஹ்மத், ஸஹீஹுல் குத்பித்திஸ்ஆ வஸவாயிதுஹு-643

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا صَلَّيْتُمْ عَلَى الْمَيِّتِ فَأَخْلِصُوا لَهُ الدُّعَاءَ ) நீங்கள் இறந்தவருக்காக (இறுதித் தொழுகை) தொழுதால், அவருக்காகத் தூய எண்ணத்துடன் பிரார்த்தனை செய்யுங்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-2784, இப்னுமாஜா-1486, இப்னுஹிப்பான்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள், மரணமடைந்த ஒரு நபித்தோழரை நல்லடக்கம் செய்த பின்னர் அவருடைய மண்ணறைக்கு அருகில் போய் நின்றுகொண்டு, ( اسْتَغْفِرُوا لأَخِيكُمْ وَسَلُوا لَهُ التَّثْبِيتَ فَإِنَّهُ الآنَ يُسْأَلُ ) "உங்களின் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள்; இப்போது அவர் கேள்வி கேட்கப்பட இருக்கிறார். அவர் (அல்லாஹ்வின் தூதர்களான வானவர்களின் கேள்விக்கு பதில் கூறுவதில்) நிலையாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டுமென்று அல்லாஹ்விடம் கேளுங்கள்" என்று கூறுவார்கள். நூல்:- அபூதாவூத்-2804, பைஹகீ, ஹாகிம், ஃபளாயிலுஸ் ஸஹாபா இமாம் அஹ்மத், அல்பஸ்ஸார்

 

நல்லடக்கத்தில் கலந்து கொண்டவர்கள் அந்த மரணித்தவருக்காக, "இறைவா! இவருக்கு மண்ணறை விசாரணையின்போது தூய திருக்கலிமாவை தடையின்றி தயக்கமின்றி கூறுகின்ற சக்தியையும், உறுதியையும் கொடுப்பாயாக! மேலும், இவரின் பாவங்களை மன்னித்து இவருக்கு நல்வாழ்க்கை நல்குவாயாக!" என்று (நமக்கு தெரிந்த மொழியில்) பிரார்த்திக்க வேண்டும் என்பதே இந்த நபிமொழியின் கருத்து.

 

உணவு தர்மம்  

 

உம்மு ரம்ளா பின்த் முஹம்மது பின் இம்ரான் பின் ஹுசைன் (ரஹ்) அவர்கள், தம் தாயார் மர்யம் பின்த் ஸைஃபிய்யி பின் ஃபர்வா (ரஹ்) அவர்கள் வழியாக அறிவிக்கிறார்கள். நபித்தோழர் இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் மரணப்படுக்கையில் இருந்தபோது, ( إِذَا أَنَا مِتُّ فَشُدُّوا عَلَيَّ سَرِيرِي بِعِمَامَةٍ، فَإِذَا رَجَعْتُمْ فَانْحَرُوا وَأَطْعِمُو ) “நான் இறந்தவுடன், (அடக்கம் செய்ய) என்னை (தூக்கிக் கொண்டு செல்லும்போது உடல் அசையாமல் இருப்பதற்கு) என்னுடைய (ஜனாஸா) பலகையில் ஒரு தலைப்பாகையால் கட்டுங்கள். (அடக்கம் செய்துவிட்டு) நீங்கள் திரும்பி வந்துவிட்டால், (ஒட்டகம் போன்ற ஏதேனும் ஒன்றை) அறுத்து, ஏழைகளுக்கும் உணவளியுங்கள்” என்று (இறுதி விருப்பம்) கூறினார்கள். நூல்:- தப்ரானீ, தபக்காத்துல் குப்ரா (இப்னு சஅத்), மஜ்மஉஸ் ஸவாயித் (ஹைஸமீ), முஃஜம் அஷ்ஷுயூக் (இப்னு அல்அஃராபீ)

 

அன்சாரிகளில் ஒரு மனிதர் கூறியதாவது. ஒரு சடலத்தை அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்வதற்காக பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களுடன் நாங்களும் புறப்பட்டுச் சென்றோம். அடக்கம் செய்துவிட்டு அடக்கத்தலத்திலிருந்து திரும்பும்போது ஒரு பெண்மணியின் சார்பாக விருந்துக்கு அழைப்பவர் நபியவர்களையும் அழைத்தார். நபியவர்களும் வந்தார்கள். (நபித்தோழர்களுக்கு முன்) உணவு பரிமாறப்பட்டது. பிறகு நபியவர்கள் (உண்ணுவதற்காக) தம் கையை (உணவில்) வைத்தார்கள். பிறகு மக்களும் (தங்களது கையை உணவில்) வைத்து உண்ணத் தொடங்கினார்கள். நூல்:- அபூதாவூத்-2894, முஸ்னது அஹ்மத், முஸ்னது இப்னு அபீஷைபா 

 

அறிஞர் முல்லா அலீ காரீ (ரஹ்) அவர்கள் மேற்காணும் நபிமொழியில் வரும் பெண்மணி என்பவர் இறந்தவரின் மனைவியை குறிக்கும் என்று கூறுகிறார்கள். நூல்:- மிர்காத்துல் மஃபாத்தீஹ் ஷரஹ் மிஷ்காத்துல் மஸாபீஸ்

 

அத்தஹாவி நூலின் ஓரக் குறிப்பிலும் இவ்வாறே பதிவுச்செய்யப்பட்டுள்ளது.

 

மராகில் ஃபலாஹ் நூலின் விளக்கவுரையில் இமாம் அல்தஹ்தாவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( فَهَذَا يَدُلُّ عَلَى إبَاحَةِ صَُنْعِ أَهْلُ الْمَيِّتِ الطَّعَامَ وَالدَّعْوَةِ إِلَيْهِ )  “இது, இறந்தவரின் குடும்பத்தினர் உணவு தயாரித்து மற்றவர்களை அதற்கு அழைப்பது அனுமதிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது.

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள், ( أَنَّهُ قَدْ أَوْصَى حَتَّى عِنْدَ مَوْتِهِ بِصُنْعِه الطَّعَامِ عَنْهُ، وَفُعِلَ ذَلِكَ بِهِ بِحَضْرَةِ جَمِيعِ الصَّحَابَةِ بِلَا إنْكَارٍ ) தாம் இறந்த பிறகு தமக்காக உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்கள். மேலும், அனைத்து நபித்தோழர்களின் முன்னிலையிலும் எவ்வித எதிர்ப்புமின்றி அது அவர்களுக்காகச் நிறைவேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.

 

அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் குத்தப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் ஸுஹைப் (ரலி) அவர்களை மூன்று நாள்களுக்கு மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறினார்கள். மேலும், மக்களுக்காக உணவு தயாரிக்குமாறும் கட்டளையிட்டார்கள். அன்னார் இறந்து அடக்கம் செய்துவிட்டு திரும்பியபோது, மக்கள் பந்திகள் அமைக்கப்பட்டிருந்ததைக் கண்டார்கள். ஆனால், மக்கள் தங்கள் துக்கத்தின் காரணமாக உண்ணாவிரதம் இருந்தார்கள்.

 

அப்போது அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் வந்து, ( يَا أَيُّهَا النَّاسُ قَدْ مَاتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَكَلْنَا وَشَرِبْنَا بَعْدَهُ، وَمَاتَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَأَكَلْنَا وَشَرِبْنَا، أَيُّهَا النَّاسُ كُلُوا مِنْ هَذَا الطَّعَامَ ) "மக்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மரணமடைந்தார்கள். அதன் பிறகு நாங்கள் உண்டு பருகினோம். அபூபக்ர் (ரலி) மரணமடைந்தார்கள். அதன் பிறகு நாங்கள் உண்டு பருகினோம். எனவே, மக்களே! இந்த உணவை உண்ணுங்கள்" என்று கூறியவாறு, அவர் தம் கையை நீட்டினார். மக்களும் தங்கள் கைகளை நீட்டி உண்டனர். நூல்:- தபக்காத் இப்னு சஅத், தப்ரானீ, மஜ்மஉஸ் ஸ்வாயித் (ஹைஸமீ), அல்மதாலிபுல் ஆலியா (5/328) இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ

 

புகழ்பெற்ற தாபிஈ தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ( إنَّ الْمَوْتَى يُفْتَنُونَ فِي قُبُورِهِمْ سَبْعًا فَكَانُوا يَسْتَحِبُّونَ أَنْ يُطْعِمَ عَنْهُمْ تِلْكَ الْأَيَّامِ ) "இறந்தவர்கள் ஏழு நாள்களுக்குத் தங்கள் மண்ணறைகளில் சோதிக்கப்படுகிறார்கள். எனவே, அந்த நாள்களில் அவர்கள் சார்பாக உணவு வழங்கப்படுவதை அம்மக்கள் விரும்பினார்கள். நூல்:- அஸ்ஸுஹ்த் (இமாம் அஹ்மத்), அல்மதாலிபுல் ஆலியா (இமாம் இப்னு ஹஜர்), அல்ஹில்யா (இமாம் அபூ நயீம்), அத்திபாஜ் (இமாம் சுயூத்தீ)

 

மேலும், ( وَفِي شَرعَةِ الْإِسْلَامِ: وَالسُّنَّةُ أَنْ يَتَصَدَّقَ وَلِيُّ الْمَيِّتُ لَهُ قَبْلَ مُضِيِّ اللَّيْلَةِ الْأُولَى بِشَيْءٍ مِمَّا تَيَسَّرَ لَهُ فَإِنْ لَمْ يَجِدْ شَيْئًا فَلْيُصَلِّ رَكْعَتَيْنِ ثُمَّ يُهْد ثَوَابُهُمَا لَهُ، وَيُسْتَحَبُّ أَنْ يَتَصَدَّقَ عَلَى الْمَيِّتِ بَعْدَ الدَّفْنِ إلَى سَبْعَةٍ أَيَّامٍ كُلَّ يَوْمٍ بِشَيْءٍ مِمَّا تَيَسَّرَ ) இஸ்லாமியச் சட்டத்தில், இறந்தவரின் வீட்டார், முதல் இரவு முடிவதற்குள், தம்மால் இயன்றதைக் கொண்டு அவருக்காகத் தர்மம் செய்வது (சுன்னா எனும்) நபிவழியாகும். அவரால் எதையும் வழங்க முடியாவிட்டால், அவர் இரண்டு ரக்அத்துகள் தொழுது, அதன் நன்மையை அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். அடக்கம் செய்த பிறகு ஏழு நாள்களுக்கு, ஒவ்வொரு நாளும் தம்மால் இயன்றதைக் கொண்டு இறந்தவருக்காகத் தர்மம் செய்வது விரும்பத்தக்கதாகும். நூல்:- அவ்னுல் மஅபூத் ( عون المعبود )

 

மேற்காணும் நபிமொழி மற்றும் வரலாற்று நிகழ்வுகள், இறந்தவரின் குடும்பத்தினர் உணவு தயாரித்து, மற்றவர்களை அதற்கு அழைப்பது அனுமதிக்கப்பட்டது என்பதைத் தெளிவுப்படுத்துகிறது.

 

இது குறித்து அதிகப்படியான தகவல்களை இந்த லிங்கில் காணலாம்.


https://www.alukah.net/sharia/0/113994/%D9%85%D8%B4%D8%B1%D9%88%D8%B9%D9%8A%D8%A9-%D8%A7%D9%84%D8%A7%D8%AC%D8%AA%D9%85%D8%A7%D8%B9-%D9%88%D8%A7%D9%84%D8%A5%D8%B7%D8%B9%D8%A7%D9%85-%D8%B9%D9%86-%D8%A3%D9%85%D9%88%D8%A7%D8%AA-%D8%A3%D9%87%D9%84-%D8%A7%D9%84%D8%A5%D8%B3%D9%84%D8%A7%D9%85/

  

பிள்ளைகளுக்கு மத்தியில் ஒற்றுமை

 

ஜனாதிபதி அலீ (ரலி) அவர்கள் தம்முடைய மரண நேரத்தில் தமது மகன் முஹம்மத் அல்ஹனஃபிய்யா (ரஹ்) அவர்களை அழைத்து, ( وَأُوصِيكَ بِتَوْقِيرِ أَخَوَيْكَ لِعِظَم حَقِّهِمَا عَلَيْكَ فَاتَّبِع أَمْرِهِمَا وَلَا تَقْطَعُ أَمْرًا دُونَهُمَا ) "(ஹசன், ஹுசைன் ஆகிய) உன் இரு சகோதரர்களுக்கு உன் மீது அதிகப்படியான உரிமை இருப்பதன் காரணத்தால் அவர்களுக்கு நீ கண்ணியமளிப்பீராக என்றும், அவர்களுடைய கட்டளைகளைப் பின்பற்றுவீராக என்றும், அவர்களைக் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்காதீர் என்றும் உன்னிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்கள்.

 

பிறகு, (தமது பிற மகன்களான) ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) ஆகியோரிடம், ( أُوصِيكُمَا بِهِ فَإِنَّهُ ابْنُ أَبِيكُمَا وَقَدْ عَلِمْتُمَا أَنَّ أَبَاكُمَا كَانَ يُحِبُّهُ ) "நீங்கள் இருவரும் அவரை கவனித்துக்கொள்ள வேண்டும். அவர் உங்கள் தந்தையின் மகன். உங்கள் தந்தை அவரை அதிகம் நேசித்தார் என்பதை நீங்கள் இருவரும் நன்கு அறிவீர்கள் என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்கள். நூல்:- தாரீக் அத்தபரீ, அமீருல் முஃமினீன் அலீ (ரலி) அவர்கள் பக்கம் (அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபீ)

 

அலீ (ரலி) அவர்களுக்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள் மூலம் பிறந்தவர்கள் ஹசன் (ரலி) மற்றும் ஹுசைன் (ரலி) அவர்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களின் மறைவுக்குப் பிறகு அலீ (ரலி) அவர்கள் ஹல்வா பின்த் ஜஅஃபர் அல்ஹனஃபிய்யா என்பவரை மணமுடித்து, அவர் மூலம் பிறந்தவர் தான் முஹம்மத் அல்ஹனஃபிய்யா (ரஹ்) அவர்கள்.

 

தந்தை ஒன்று தாய் வேறாக இருக்கின்ற சகோதரர்கள் தங்களுக்கு மத்தியில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே அலீ (ரலி) அவர்கள் தமது பிள்ளைகளிடம் தெரிவித்த இறுதி விருப்பமாக இருந்தது.

 

ஒரு குடும்பத்தின் மிகப்பெரிய பலமும், சொத்தும் அந்தக் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளின் ஒற்றுமைதான். பெற்றோர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் உழைப்பது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக மட்டுமல்ல, தங்களுக்குப் பிறகும் அவர்கள் ஒருவருக்கொருவர் பாசத்துடனும் ஆதரவாகவும் வாழ வேண்டும் என்பதற்காகவும்தான்.

 

பெற்றோர்கள் உயிரோடு இருக்கும்போது குடும்பத்தைப் பசைபோல ஒட்டி வைத்திருப்பார்கள். ஆனால், அவர்கள் மறைந்த பிறகு குடும்பம் சிதறிவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவலை கொண்டிருப்பார்கள். சொத்து, பணம் போன்ற உலகாதாய விஷயங்களைவிட, தங்களுக்குப் பிறகு பிள்ளைகள் அண்ணன்-தம்பியாக, அக்கா-தங்கையாக ஒருவருக்கொருவர் கரம் கோர்த்து நிற்க வேண்டும் என்பதே அவர்களின் ஆகச்சிறந்த கனவாக இருக்கும்.

 

பிள்ளைகள் ஒற்றுமையாக வாழும்போது அந்த குடும்பம் சமுதாயத்தில் மிக உயர்ந்த மதிப்பைப்பெறுகிறது. எந்தவொரு வெளிச்சக்தியும் அந்தக் குடும்பத்தை அசைக்க முடியாது. மேலும், அடுத்த தலைமுறையினரான பேரக்குழந்தைகளுக்கும் இந்த ஒற்றுமை ஒரு நல்ல முன்மாதிரியாக அமைந்து, அவர்களையும் நல்வழியில் நடத்தும்.

 

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பது பழமொழி.

 

பெற்றோர் நமக்குக் கொடுத்த மிகப்பெரிய பரிசு நம் உடன்பிறப்புகள் தான். பெற்றோர் மறைந்தாலும் அவர்களின் ஆன்மா மகிழும் விதமாக, பிள்ளைகள் அனைவரும் ஈகோ (Ego) பார்க்காமல் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். அதுவே, நாம் நம் பெற்றோருக்குத் தரும் மிக உயரிய மரியாதையாகும்.

 

மறுமணம்

 

அபூ ரபிஆ அஸ்ஸஅதீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். (தாபிஊன்களில் ஒருவரான) ( ربيع بن خثيم ) ரபீஉ பின் குஸைம் (ரஹ்) அவர்கள் தமது மரண நேரத்தில், ( إنْ لِي امْرَأَةٌ شَابَّةٌ ، فَإِذَا أَنَا مِتُّ فَحَثَّوهَا عَلَى التَّزْوِيجِ ، وَاطْلُبُوا لَهَا رَجُلًا صَالِحًا ) "எனக்கு ஒரு இளம் மனைவி இருக்கிறாள். நான் இறந்த பிறகு, அவளை (மறு) திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துங்கள்; அவளுக்கு ஒரு நல்ல மனிதனைத் தேடிக் கொண்டு வாருங்கள்." என்று இறுதி விருப்பம் தெரிவித்தார்கள். நூல்:- ( وَصَايَا الْعُلَمَاءِ عِنْدَ حُضُورِ الْمَوْتِ لِلْحَافِظِ أَبِي سُلَيْمَانَ الرَّبَعِيِّ ) வஸாயல் உலமாஇ இன்த ஹுளூரில் மவ்த் - (மரணத்தின் விளிம்பில் அறிஞர்களின் இறுதி விருப்பங்கள்)

 

விவாகரத்து அல்லது விதவையாதல் காரணமாக முந்தைய திருமணம் முடிவுக்கு வரும்போது, ஒரு பெண் மீண்டும் திருமணம் செய்துகொள்வதே மறுமணம் ஆகும். முந்தைய திருமணம் முடிவுக்கு வந்த பிறகோ அல்லது துணையை இழந்த பிறகோ மறுமணம் செய்துகொள்வது ஒரு பெரிய மாற்றமாக அமையக்கூடும்.

 

இந்திய தேசத்தில் கணவனை இழந்த பெண் நல்ல ஆடை அணிய, பூ வைத்துக் கொள்ள, சிரித்த முகமாக இருக்கத்தான் இந்தச் சமுதாயத்தில் எத்தனை தடைகள்? கணவன் இல்லையென்றாலே அவள் உணவில்கூட உணர்ச்சிகளைத் தூண்டாத உணவுதான் உண்ண நிர்பந்திக்கப்படுகிறாள். இது எத்தகைய காட்டுமிராண்டித்தனம்?

 

இளம் வயதில் விதவையான எத்தனையோ பெண்களுக்கு அடிமனதில் மறுமணம் செய்யும் எண்ணம் இருக்கும். ஆனால், சமுதாயம் என்ன சொல்லுமோ, உறவினர்கள் என்ன பேசுவார்களோ என்று தேவையற்ற அச்சத்தினால் அவர்கள் இறுதிவரை மறுமணமே செய்துகொள்வதில்லை.

 

ஆண்களுக்கு இங்கே மறுமணம் மிகவும் சுலபம். ‘பெண்டாட்டி செத்தவன் புது மாப்பிள்ளை’ என்ற பழமொழிகூட உண்டு. மனைவியைப் புதைத்த இடத்தில் புல் முளைக்கும் முன்பு மறுமணம் புரிந்தவர்கள் நிறைய உண்டு. ஆனால், இளம் வயதில் கணவனை இழ்நத பெண்கள் தங்கள் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு வாழ வேண்டும் என்ற சிந்தனை மிகவும் தவறானது.

 

இளம் பெண்ணின் மறுமணம் என்பது அவளது எதிர்கால வாழ்வுக்கும் மன அமைதிக்கும் மிக அவசியமான ஒரு சமூக மாற்றமாகும். இது பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம், மனநலப் பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் சமமான அந்தஸ்தை உறுதி செய்கிறது.

 

கணவனை இழந்தோ அல்லது விவாகரத்து பெற்றோ வாடும் இளம் பெண்களுக்குத் துணையும் ஆறுதலும் தேவை. தனிமைத் துயரிலிருந்து மீண்டு இயல்பான வாழ்க்கை நடத்த மறுமணம் உதவுகிறது.

 

மறுமணம் கூடவேக் கூடாது என்ற பழமைவாதக் கருத்துக்களை மாற்றி, பெண்ணையும் ஆணின் நிலைக்கு இணையாகப் பார்க்கும் முற்போக்குச் சிந்தனையை வளர்க்கிறது.

 

இளவயதில் கணவனை இழக்கும் பெண்களுக்குப் பொருளாதார மற்றும் சமூகப் பாதுகாப்பை மறுமணம் பெற்றுத் தருகிறது. தாயின் அரவணைப்போடு ஒரு குடும்பச் சூழலை மீண்டும் உருவாக்கவும், குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இது பயனுள்ளதாக அமைகிறது.

 

மறுமணம் என்பது ஒரு பெண்ணின் சொந்த விருப்பம் மட்டுமே. செய்ய வேண்டுமா வேண்டாமா என்பதை அப்பெண்ணே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும்.

 

விதவை அல்லது விவாகரத்து பெற்ற பெண்களைத் தாழ்த்திப் பேசும் முறையைச் சமுதாயம் முற்றிலுமாக நிறுத்த வேண்டும். மறுமணம் செய்துகொள்ளும் பெண்களுக்குத் தார்மீக ஆதரவையும் அன்பையும் வழங்கி அவர்களைச் சமூகத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும்.

 

இறப்பைச் சந்திக்க இருக்கும் மனிதன், தமது மரணத்திற்கு பிறகு இளம் வயதுள்ள தமது மனைவி வாழ்நாள் முழுவதும் விதவையாகவே இருந்துவிடாமல், அவள் மறுமணம் செய்து சந்தோசமாக வாழ வேண்டும் என்ற எண்ணமே அவனை சிறந்தவனாக்கி விடுகிறது.

 

நேருக்கு நேராகச் சுடுங்கள்

 

சுதந்திரப் போராட்ட வீரர் ஹாஜி குஞ்சி அஹ்மத் (ரஹ்) அவர்கள் 1921 ஜனவரி 20 அன்று பிரிட்டிஷாரால் கைது செய்து சுட்டுக் கொல்லப்பட்டபோது, “என் கண்களையும் கைகளையும் கட்டிப் போட்டு நிற்க வைத்து பின்னாலிருந்து சுட்டு கொல்லப்போவதாகக் கேள்விப்பட்டேன். என் கண்களைக் கட்டிப்போடாமல் நேருக்கு நேராக நிற்க வைத்து என்னைச் சுடுங்கள். நான் இந்த மண்ணைப் பார்த்தவாறே இறக்க விரும்புகின்றேன்” என்று தமது இறுதி விருப்பமாகக் கேட்டுக்கொண்டார். அவ்வாறே நடைப்பெற்றது.

 

மலையாள ராஜ்யம் என்கிற பெயரில் தனி அரசாங்கத்தை அமைத்தவர் தான் வீரர் ஹாஜி குஞ்சி அஹ்மத் (ரஹ்) அவர்கள். இது, அவர் தமது தாய் நாட்டின்மீது கொண்ட காதலின் வெளிப்பாடு.

 

ஆங்கிலேயர்கள் இம்மண்ணை அடிமைப்படுத்தி ஆட்சி செய்ய முனைந்தபோது அடிமைத்தனம் என்பது இறைவனுக்கு முன்னால் மட்டுமே என்று முழங்கி, நாட்டிற்கே விடுதலை உணர்வை ஊட்டியவர்கள் இந்திய முஸ்லிம் அறிஞர்கள். இந்திய சுதந்திர வரலாறு, இஸ்லாமியர்களின் குருதியால் எழுதப்பட்டுள்ளது.

 

பிரபல வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான “குஷ்வந்த் சிங்” கூறுகிறார்: "முஸ்லிம்கள் அவர்களது தேசிய எண்ணிக்கையைக் காட்டிலும் இந்த நாட்டுக்காக அதிகமாகவே உயிர்த்தியாகங்களைச் செய்துள்ளனர். அதைக் காட்டிலும் தங்களது நிலங்களையும் வளங்களையும் நாட்டின் விடுதலைக்காக வாரி வாரி அளித்துள்ளனர்" நூல்:- இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி 29-12-1975

 

வசதி இருந்தால்

 

அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஆஸ் பின் வாஇல் (தமது இரு மகன்களிடம்) தம் சார்பாக நூறு அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்று இறுதி விருப்பம் தெரிவித்திருந்தார். இது குறித்து அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஆலோசனை கேட்பதற்காக வந்து, "எனது தந்தை தம் சார்பாக நூறு அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்று இறுதி விருப்பம் தெரிவித்திருந்தார். (எனது சகோதரர்) ஹிஷாம் (என் தந்தை சார்பாக) ஐம்பது அடிமைகளை விடுதலை செய்துவிட்டார். அவர் சார்பாக விடுதலை செய்ய வேண்டிய ஐம்பது அடிமைகள் மீதமிருக்கின்றனர். அவர் சார்பாக நான் விடுதலை செய்யட்டுமா நாயகமே!" என்று கேட்டார்.

 

அதற்கு கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், ( إِنَّهُ لَوْ كَانَ مُسْلِمًا فَأَعْتَقْتُمْ عَنْهُ أَوْ تَصَدَّقْتُمْ عَنْهُ أَوْ حَجَجْتُمْ عَنْهُ بَلَغَهُ ذَلِكَ ) "அவர் முஸ்லிமாக இருந்தால் அவர் சார்பாக நீங்கள் (அடிமைகளை) விடுதலை செய்யலாம். அவர் சார்பாக தர்மங்கள் செய்யலாம். அவர் சார்பாக ஹஜ்ஜுக்குச் செல்லலாம். அ(ந்த நல்லறங்களின் பலனான)து அவரை சென்றடையும்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-2497, முஸ்னது அஹ்மத், பைஹகீ

 

ஆஸ் பின் வாஇல் என்பவர் இறைமறுப்பாளராகவே இருந்தார். ஆயினும், இவரின் மகன் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் தமது தந்தையின் இறுதி விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்திலேயே அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டார்.

 

ஒரு தந்தையின் பயனுள்ள இறுதி விருப்பங்களை நிறைவேற்றும் அளவிற்கு பிள்ளைகளிடம் வசதி இருந்தால் அதை நிறைவேற்றுவது அவசியமாகும். அதன் நன்மைகள் அந்த தந்தை முஸ்லிமாக இறந்திருந்தால் அவருக்கு நிச்சயமாக கிடைக்கும். அவரை இறைமறுப்பாளராக இறந்துபோயிருந்தால் அதன் நன்மைகள் அவருக்கு அறவே கிடைக்கப் போவதில்லை.

 

இறந்தவர் ஏதேனும் கடன் பட்டிருந்தால், அல்லது பொருளாதார ரீதியாக இறுதி விருப்பம் தெரிவித்திருந்தால், அவர் விட்டுச் சென்ற சொத்திலிருந்து அவற்றை நிறைவேற்ற வேண்டும். பிறகு தான் அவரின் சொத்தில் இருந்து பாகப்பிரிவினை செய்ய வேண்டும்.

 

எனவே, நாம் இஸ்லாம் கூறும் சட்டத்திட்டங்களை முறையாக கடைபிடித்து வாழும் பண்பாளர்களாய் அல்லாஹ் நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்!

 

 மௌலவி, மு.முஹம்மது ஹைதர் அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்-9840535951

 

No comments:

Post a Comment

இறுதி விருப்பங்கள்

  இறுதி விருப்பங்கள்   أَمْ كُنْتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِنْ بَعْدِي قَالُوا...