Search This Blog

Saturday, 18 July 2026

வணக்கசாலியாக இருந்தால் போதுமா?

 

வணக்கசாலியாக இருந்தால் போதுமா?

 

وَلَا يَأْتُونَ الصَّلَاةَ إِلَّا وَهُمْ كُسَالَى

(நயவஞ்சகர்களான) அவர்கள் சடைந்தவர்களாகவே தொழுகைக்கு வருவார்கள். திருக்குர்ஆன்:- 9:54

 

இஸ்லாத்தில் தொழுகை முக்கியமான ஓர் வழிபாடாகும். இருப்பினும், ஒருவர் தமது வாழ்க்கையில் தொழுது வருவதால் மட்டும் சிறந்தவராகிவிட முடியாது.

 

தொழுதால் மட்டும் போதும். குண மாற்றங்கள் எதுவும் தேவையில்லை என்றிருந்தால் இஸ்லாமிய எதிரிகளான அபூலஹப், அபூஜஹ்ல் போன்றோர் கலிமாவைக் கூறி வெறுமனே தொழுகையை கடைபிடித்திருப்பார்கள். குண மாற்றங்கள் இல்லாத தொழுகை பரிபூரணமான தொழுகை அல்ல என்று அவர்கள் விளங்கிவைத்திருந்தனர் என்பதுதான் உண்மை.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுத தொழுகையாளிகளில் சிலரை குர்ஆன் நயவஞ்சகர்கள் என்கிறது. காரணம், அவர்கள் கெட்ட குணமுடையவர்களாக இருந்துள்ளனர். தொழுகையாளிகளாக இருப்பதால் மட்டும் அவர்கள் நல்லவர்களாகிவிட முடியாது என்பது தெளிவாகிறது.

 

இவர் தொழுகையாளியாக இருப்பதனால் இவருக்குப் பெண் கொடுக்கிறேன். அல்லது இவர் தொழுகையாளியாக இருப்பதனால் இவரை வேலைக்கு சேர்த்துக்கொள்கிறேன். அல்லது இவர் தொழுகையாளியாக இருப்பதனால் இவரை தொழிலில் பார்ட்னராக சேர்த்துக் கொள்கிறேன் என்பதைவிட இவரிடம் ஒழுக்கம், நாணயம், நற்குணங்கள் இருக்கிறதா? என்று விசாரித்து தெளிவு பெறுவதே சிறந்தது. காரணம், “தொழுகையாளிகள் அனைவரும் நல்லவர்களே” என்று சொல்ல முடியாது.

 

மாற்றத்தை உண்டாக்கும்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ لَمْ تَنْهَهُ صَلَاتُهُ عَنِ الفَحشَاءِ وَالمُنكَرِ، فَلَا صَلَاةَ لَهُ ) ஒருவரது தொழுகை அவரை வெட்கக்கேடான விஷயங்களிலிருந்தும் பாவங்களிலிருந்தும் தடுக்கவில்லையானால் அவருக்குத் தொழுகையே இல்லை. (அதாவது, அவர் தொழுதது முழுமையான தொழுகையே இல்லை). அறிவிப்பாளர்:- இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர் அல்அன்கபூத் வசனம்-45

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ لَمْ تَنْهَهُ صَلَاتُهُ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ، لَمْ يَزْدَدْ بِهَا مِنَ اللَّهِ إِلَّا بُعْدًا ) ஒருவரது தொழுகை அவரை வெட்கக்கேடான செயல்களிலிருந்தும் பாவங்களிலிருந்தும் தடுக்கவில்லையானால் அவர் அல்லாஹ்வி(ன் அருளி)லிருந்து தூரமாகிக்கொண்டே இருப்பார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- அல்கபீர் - தப்ரானீ, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர் அல்அன்கபூத் வசனம்-45

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம், ( إِنَّ فُلَانًا يُصَلِّي فَإِذَا أَصْبَحَ سَرَقَ ) "இன்னார் இரவில் தொழுகின்றார்; (ஆனால்,) காலையில் திருடுகின்றாரே!" என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ( سَيَنْهَاهُ مَا يَقُوْلُ ) "அதிவிரைவில் அவரது தொழுகை, நீர் கூறும் தவற்றிலிருந்து அவரை தடுத்துவிடும்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், முஸ்னது அல்பஸ்ஸார், தஃப்சீர் இப்னு கஸீர் அல்அன்கபூத் வசனம்-45

 

ஒருவர் இஸ்லாம் கூறும் தொழுகையின் ஒழுக்கங்களை முழுமையாகப் பேணி தொழுது வந்தால், அந்தத் தொழுகை நிச்சயமாக அவரிமுள்ள தீயவற்றை தடுக்கும். அவ்வாறு தடுக்கவில்லையெனில் அந்தத் தொழுகையில் குறை உள்ளது என்றே பொருளாகும். அந்தத் தொழுகையே அவருக்கு தண்டனையைப் பெற்றுத் தரவும் போதுமானது.

 

கொள்கைக் கெட்டவர்கள்

 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பொது நிதியை மக்களுக்குப் பங்கிட்டுக்கொண்டிருந்தபோது பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த ‘அப்துல்லாஹ் பின் தில்குவைஸிரா’ என்பவர் வந்து, ( اعْدِلْ يَا رَسُولَ اللَّهِ ) “அல்லாஹ்வின் தூதரே! நீதியுடன் நடந்துகொள்ளுங்கள்” என்றார். அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( وَيْلَكَ مَنْ يَعْدِلُ إِذَا لَمْ أَعْدِلْ ) “உனக்குக் கேடுதான். (இறைத்தூதராகிய) நானே நீதியுடன் நடந்துகொள்ளாவிட்டால் வேறு யார்தான் நீதியுடன் நடந்துகொள்ளப் போகிறார்கள்?” என்று கேட்டார்கள். (அப்போது அங்கிருந்த) உமர் (ரலி) அவர்கள், ( دَعْنِي أَضْرِبْ عُنُقَهُ ) “என்னை விடுங்கள்; இவர் கழுத்தை நான் வெட்டிவிடுகிறேன்” என்று கேட்டார்கள்.

 

நபியவர்கள், ( دَعْهُ فَإِنَّ لَهُ أَصْحَابًا يَحْقِرُ أَحَدُكُمْ صَلاَتَهُ مَعَ صَلاَتِهِ، وَصِيَامَهُ مَعَ صِيَامِهِ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ ) “இவரை விட்டுவிடுங்கள். இவருக்குத் தோழர்கள் சிலர் உள்ளனர். அவர்களுடைய தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும் அவர்களுடைய நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப்பார்த்து உங்களது தொழுகையையும் உங்களது நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (விரைவில்) மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்று விடுவார்கள். நூல்:- புகாரீ-6933

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يَخْرُجُ فِي هَذِهِ الأُمَّةِ قَوْمٌ تَحْقِرُونَ صَلاَتَكُمْ مَعَ صَلاَتِهِمْ فَيَقْرَءُونَ الْقُرْآنَ ‏.‏ لاَ يُجَاوِزُ حُلُوقَهُمْ يَمْرُقُونَ مِنَ الدِّينِ ) இந்தச் சமுதாயத்தாரிடையே ஒரு கூட்டத்தார் புறப்படுவார்கள். அவர்களது தொழுகையுடன் உங்களது தொழுகையை ஒப்பிட்டுப் பார்த்து உங்களது தொழுகையை நீங்கள் அற்பமாக கருதுவீர்கள். அவர்கள் (அதிகமாகக்) குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக்குழியைத் தாண்டி செல்லாது. (விரைவில்) மார்க்கத்தில் இருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்று விடுவார்கள். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1925

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், ( وَإِنَّ بَنِي إِسْرَائِيلَ تَفَرَّقَتْ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلاَثٍ وَسَبْعِينَ مِلَّةً كُلُّهُمْ فِي النَّارِ إِلاَّ مِلَّةً وَاحِدَةً ) "பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் எழுபத்திரண்டு கூட்டத்தாராகப் பிரிந்தனர். என் சமுதாயத்தார் எழுபத்தி மூன்று கூட்டத்தாராகப் பிரிவார்கள். அவர்களில் ஒரே ஒரு கூட்டத்தைத் தவிர மற்ற அனைவரும் நரகத்திற்கு செல்வார்கள்.  என்று கூறினார்கள்.

 

மக்கள், ( وَمَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ ) "நாயகமே! அந்தக் கூட்டம் எது?"  என்று கேட்டனர். அதற்கு நபியவர்கள், ( مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي ) "நானும் எனது தோழர்களும் எதில் இருக்கிறோமோ (அதைக் கடைப்பிடிக்கின்ற கூட்டம் தான்) அது" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2562

 

காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ( وَكَمْ مِنْ مُصَلٍّى يَقُولُ بِلِسَانِهِ مَا لَيْسَ فِي قَلْبِهِ ) எத்தனையோ தொழுகையாளிகள் தமது இதயத்தில் இல்லாததை நாவில் மொழிகின்றார்கள். நூல்:- முஸ்லிம்-1922

 

இஸ்லாத்தின் முதல் குழப்பவாதிகளான கவாரிஜிய்யாக்களில் ஒருவனான அப்துர் ரஹ்மான் பின் முல்ஜம் என்பவன் தான் ஜனாதிபதி அலீ (ரலி) அவர்கள் பள்ளிவாசலுக்குள் வந்து பஜ்ர் தொழுகைக்காக தக்பீர் கட்டியவுடன், தனது விஷம் தோய்ந்த வாளால் அலீ (ரலி) அவர்களின் முன்நெற்றியில் வெட்டினான். விஷம் தோய்ந்த வாளால் வெட்டப்பட்ட அலீ (ரலி) அவர்கள் அன்றிலிருந்து மூன்றாவது நாள் (ஹிஜ்ரீ-41, ரமளான்-21 - கி.பி.24-01-661 அன்று) மரணமடைந்தார்கள்.

 

உடனே அவனைப் பிடித்து விசாரணை செய்த பிறகு, மரண தண்டனை கொடுப்பதற்காக அவனை இழுத்துச் சென்றபோது அவனது இரண்டு முட்டுக்கால்களும் நெற்றியும் கருத்து காய்ந்து போய் இருந்தது. அது அவன் அதிகமாக குர்ஆன் ஓதுவதிலும் தொழுவதிலும் ஏற்பட்ட அடையாளம் ஆகும். அவன் அழகிய தொனியின் குர்ஆன் ஓதும் பழக்கமுடையவன் ஆவான்.

 

"லா இலாஹ இல்லல்லாஹ்" என்று மட்டும் சொன்னால் போதாது. "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்று சேர்த்து சொல்ல வேண்டும். மேலும், நபிவர்கள் மற்றும் நபித்தோழர்களின் வழிமுறையை வலுவாக பின்பற்ற வேண்டும்.

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களையும், நபித்தோழர்களையும், அவர்களின் வழிவந்த நல்லவர்களையும் குறை கூறி திரிபவர்களின் இறைவழிபாடுகள் இமயமலைவிட பெரியதாக இருந்தாலும், அது அவர்களை பாதுகாக்கப் போவதில்லை.

 

“அப்துல்லாஹ் பின் தில்குவைஸிரா” போன்ற துரோக குணமுள்ள, (கவாரிஜிய்யா, முஅதஸிலா, ஃபாத்திமிய்யா, அஹ்லுல் குர்ஆன்   போன்ற) கொள்கைக் கெட்ட தொழுகையாளிகள் நிறைய உள்ளனர். அவர்களால் இஸ்லாத்திற்கு எந்த இலாபமும் இல்லை. அவர்கள் இஸ்லாத்தில் நிலைத்திருக்க போவதுமில்லை. அதனால் அவர்களின் இறைவழிபாடுகளைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. 

 

ஒருவரிடம் ஆச்சரியமூட்டும் அளவுக்கு இறைவழிபாடுகள் இருந்தால் மட்டும் போதாது. அந்தளவுக்கு அவரிடம் நற்குணமும் நிறைந்திருக்க வேண்டும். நற்குணமற்ற இறைவழிபாடுகளுக்கு இஸ்லாத்தில் மதிப்பில்லை. 

 

தொழுகின்றேன்; வணங்குகின்றேன் அல்லாஹ்விற்காக. வைக்கோல் திருடுகிறேன் மாட்டுக்காக என்றானாம் ஒருவன்.

 

ஒருவர் பள்ளிவாசலில் செருப்புகள் திருடப்படுவதை எண்ணி கவலைப்பட்டவராக, "பள்ளிவாசலுக்கு தொழுக வருகின்ற தொழுகையாளிகள் பிறரின் செருப்புகளை திருடலாமா?" என்றார்.

 

அப்போது அருகில் இருந்த ஒரு முதியவர், "தம்பி! தொழுகையாளிகள் யாரும் திருடுவதில்லை; திருடன் தொழுக வருகின்றான்" என்று விளக்கமளித்தார்.

 

பெருமையடிக்கும் வணக்கசாலி

 

அனஸ் (ரலி) அவர்கள்  கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு இறைவழிபாடும் வீரத்தீரமும் நிறைந்த ஒருவர் இருந்தார். அவரைப்பற்றி பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களிடம் நாங்கள் குறிப்பிட்டபோது, அவர் அங்கு வந்தார். நாங்கள், (  هَا هُوَ ذَا ) "இதோ இவர் தான்" என்று கூறினோம். அங்கு வந்த அவர் யாருக்கும் சலாம் கூறவில்லை. அப்போது நபியவர்கள் அவரிடம், ( نَشَدْتُكَ بِاللَّهِ هَلْ قُلْتَ حِينَ وَقَفْتَ عَلَى الْمَجْلِسِ مَا فِي الْقَوْمِ أَحَدٌ أَفْضَلُ مِنِّي ) "அல்லாஹ்வின் மீதாணையாக! உம்மிடம் நான் கேட்கிறேன். 'மக்களில் என்னைவிட சிறந்தவர் யாரும் இல்லை' என்று நீர் சபையில் நிற்கும்போது கூறினீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக, ஆம்!” என்று கூறினார். பிறகு அவர் தொழுவதற்கு பள்ளிவாசலுக்குள் சென்றுவிட்டார்.

 

நபியவர்கள், ( مَنْ يَقْتُلُ الرَّجُلَ ) "இந்த மனிதரை கொல்பவர் யார்?" என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் அவரைக் கொல்கிறேன் என்று கூறிவிட்டு, பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர் சஜ்தாவில் இருந்தார். எனவே, அவரைக் கொல்லாமல் வந்துவிட்டார்கள். அப்போது நபியவர்கள், ( مَا فَعَلْتَ )  "என்ன செய்தீர்?" என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், ( كَرِهْتُ أَنْ أَقْتُلَهُ وَهُوَ يُصَلِّي وَقَدْ نُهِيتَ عَنْ قَتْلِ الْمُصَلِّينَ ) "(நாயகமே!) நீங்கள் தான் தொழுதுக்கொண்டிருப்பவரை கொல்லக்கூடாது என்று தடுத்துள்ளீர்கள். எனவேதான், நான் அவரை கொல்வதை வெறுத்தவனாக (அவரைக் கொல்லாமல்) வந்துவிட்டேன்" என்று கூறினார்கள்.

 

பிறகு உமர் (ரலி) அவர்கள், நான் அவரைக் கொல்கிறேன் என்று கூறியவாறு, பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர் சஜ்தாவில் இருந்தார். உமர் (ரலி) அவர்கள் அவரைக் கொல்லாமல் வந்துவிட்டார்கள். நபியவர்கள் "என்ன ஆனது?" என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள்,   ( وَجَدْتُهُ وَاضِعًا وَجْهَهُ فَكَرِهْتُ أَنْ أَقْتُلَهُ ) "(நாயகமே!) அவர் சஜ்தாவில் இருக்கக் கண்டேன். எனவேதான், நான் அவரை கொல்வதை வெறுத்தவனாக (அவரைக் கொல்லாமல்) வந்துவிட்டேன்" என்று கூறினார்கள்.

 

பிறகு நபியவர்கள், ( مَنْ يَقْتُلُ الرَّجُلَ ) "இந்த மனிதரை கொல்பவர் யார்?" என்று கேட்டார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், "நான் (கொல்கிறேன்)" என்றார்கள். நபியவர்கள், ( أَنْتَ إِنْ أَدْرَكْتَهُ ) "நீ அவரைப் பிடித்துவிட்டால் (கொன்றுவிடு!)" என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் பள்ளிவாசலுக்குள் நுழைந்தபோது அவர் பள்ளிவாசலை விட்டு சென்றுவிட்டார். அலீ (ரலி) அவர்கள், ( مَا وَجَدْتُهُ ) "(நாயகமே!) நான் அவரைக் காணவில்லை” என்று கூறினார்கள். நூல்:- மஜ்மஉஸ் ஸவாயித்

 

இஸ்லாத்தின் பார்வையில், அல்லாஹ்வை மட்டுமே வணங்குவது (ஏகத்துவம்) மிக முக்கியமான கடமையாகும். அதே நேரம், வழிபாட்டின் மூலம் தன்னைத்தானே பெருமைப்படுத்திக் கொள்வது (வீண் பெருமை) கடுமையான பாவமாகும். இது மனிதனின் நன்மைகளை அழித்து, இறைவனின் அருளை விட்டும் அவனைத் தூரமாக்கும்.

 

இறைவழிபாடுகள் (தொழுகை, நோன்பு, தர்மம் போன்றவை) ஒரு மனிதனிடம் பணிவை ஏற்படுத்த வேண்டும். இறைவனை  உண்மையாகவே வணங்குபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் பணிவானவர்களாகவும், இறைவனுக்கு முற்றிலும் அடிபணிந்தவர்களாகவும் இருப்பார்கள்.

 

செய்யும் நல்லறங்களால் தமக்குத் தாமே பெருமை கொள்வது, பிறரை மதிக்காமல் இருப்பது போன்ற செயல்கள் இறைவழிபாட்டின் அடிப்படையையே (இறைநம்பிக்கையை) கேள்விக்குறியாக்கிவிடும். எனவே, இஸ்லாத்தில் இறைவனை மட்டுமே பெருமைப்படுத்துவதற்கும், அவனது படைப்புகளிடம் பணிவாக இருப்பதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

 

நான் மற்றவர்களைவிட நிறைய இறைவழிபாடுகள் செய்கிறேன். எனவே, மற்றவர்களைவிட நான் சிறந்தவன் என்ற தற்பெருமையே நம்மை சிறுமைப்படுத்திவிடும். அரைகுறையாக தொழுபவர்களையும், தொழுக்காமலேயே இருப்பவர்களையும் மட்டரகமாக எண்ணுவதும் நம்மை சிறுமைப்படுத்திவிடும்.

 

பிறரைத் துன்புறுத்துபவன்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர், ( يَا رَسُولَ اللَّهِ إِنَّ فُلَانَةَ يُذْكَرُ مِنْ كَثْرَةِ صَلَاتِهَا وَصِيَامِهَا وَصَدَقَتِهَا غَيْرَ أَنَّهَا تُؤْذِي جِيرَانَهَا بِلِسَانِهَا ) "நாயகமே! இன்ன பெண் அதிகமாக தொழுததாலும், அதிகமாக நோன்பு நோற்றதாலும், அதிகம் தர்மம் செய்ததாலும் (மக்களுக்கு மத்தியில்) பேசப்பட்டாள். ஆனால், அவள் தனது நாவால் அண்டை வீட்டாருக்குத் தீங்கு செய்தாள். அவளது நிலை என்ன?" என்று கேட்டார். நபியவர்கள், ( هِيَ فِي النَّارِ ) "அவள் நரக நெருப்பில் இருக்கிறாள்" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், பஸ்ஸார், இப்னு ஹிப்பான்

 

யஸீத் பின் அபீ முஸ்லிம் என்பவர் ஆஃப்ரிக்காவின் ஆளுநராக இருந்தார். அவர் பொறுப்பற்றவர். கலீஃபாவிடமிருந்து வரும் சிறிய பெரிய உத்தரவுகள் அனைத்தையும் அலட்சியம் செய்வார். அநீதியாகவும் அடக்குமுறையாகவும் நடப்பார். அவ்வாறு நடந்து கொள்ளும் வேளையில் அல்லாஹ்வை அதிகமாகத் துதிப்பார் என்பது தான் விந்தை.

 

சிலரை அழைத்து வந்து தமக்கு முன்பாக சித்தரவதை செய்யுமாறு உத்தரவிடுவார். அந்த நேரத்தில் அவர், ( سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ شَدَّ يَا غُلَامُ مَوْضِعِ كَذَا وَكَذَا لِبَعْضِ مَوَاضِعِ الْعَذَابِ وَهُوَ يَقُولُ: لَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ شَدّ يَا غُلَامُ شَدَّ مَوْضِعِ كَذَا وَكَذَا )  "சுப்ஹானல்லாஹ்... அல்ஹம்துலில்லாஹ்... அடிமையே! இன்னின்ன இடத்தில் இறுகப் பிடி," என்று (அவர்களுக்கு உடலில் இன்ன இடத்தில் அடித்து அவர்களுக்குத் தண்டனையை அதிகப்படுத்துவீராக! என்று) அவர், சில வேதனை தரும் இடங்களைக் குறிப்பிட்டாவாறே, லா இலாஹ இல்லல்லாஹ்... அல்லாஹு அக்பர்... அடிமையே! இறுகப் பிடி, (அவர்களுக்கு வேதனை அதிகமாகும் அளவுக்கு) இன்னின்ன இடத்தில் இழு!" என்பார்.

 

உமர் பின் அப்துல் அஜீஸ் அவர்கள், இவ்வாறு கொடூரமாகவும், அநியாயமாகவும் மக்களை துன்புறுத்தும் இந்தச் செயலால் அவரைப் பதவி நீக்கம் செய்து கடிதம் எழுதினார்கள். சீரத் உமர் பின் அப்துல் அஜீஸ் (இப்னு அப்துல் ஹிகம்), உமர் பின் அப்துல் அஜீஸ் பக்கம்-55 (அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபீ)

 

மக்களைத் துன்புறுத்தக்கூடிய நற்பண்பற்றவர்களின் நற்செயல்களால் நற்பலன் ஏற்படப்போவதில்லை என்று தெளிவாகிறது.

 

நல்லவரின் அடையாளம்

 

அப்துல்லாஹ் அல்உமரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம், ( اِنَّ فُلَانَ رَجُلٌ صِدْق )  இன்னார் ஒரு உண்மையாளர்” என்றார். உமர் (ரலி) அவர்கள், ( هَلْ سَافَرْتَ مَعَهُ  ) “நீங்கள் அவருடன் பயணம் செய்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இல்லை” என்றார். உமர் (ரலி) அவர்கள், ( فَهَلْ كَانَ بَيْنَكَ وَبَيْنَهُ مُعَامَلَةٌ ) “நீங்கள் அவருடன் ஏதேனும் கொடுக்கல் வாங்கல் மூலம் தொடர்பு வைத்திருந்தீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இல்லை” என்றார். உமர் (ரலி) அவர்கள், ( فَهَلْ ائْتَمَنَهُ عَلَى شَيْءٍ ) “நீங்கள் அவரிடம் எதையேனும் (அமானிதம்) ஒப்படைத்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இல்லை” என்றார்.

 

உமர் (ரலி) அவர்கள், ( فَأَنْتَ الَّذِي لَا عِلْمَ لَكَ بِهِ، أَرَاكَ رَأَيْتَهُ يَرْفَعُ رَأْسَهُ وَيَخْفِضُ فِي الْمَسْجِدِ ) “அப்படியானால், அவரைப் பற்றி (முழுமையாக) அறியாதவர் நீங்கள்தான். அவர் பள்ளிவாசலில் (தொழுகையில்) தலையை உயர்த்தித் தாழ்த்துவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். (அதை வைத்து அவரை நல்லவர் என நினைக்கிறீர்கள்) என்று நான் எண்ணுகிறேன். (தொழுகையாளியாக இருப்பதால் மட்டும் ஒருவரை நல்லவர் என்று கூறிவிட முடியாது)” என்று கூறினார்கள். நூல்:- அல்மவாயிள் (அல்அஸ்கரி), ஜாமிஉல் அஹாதீஸ் (இமாம் சுயூத்தீ), கன்ஸுல் உம்மால்

 

இன்றைய காலத்தில் ஹஜ் மற்றும் உம்ராவுக்கு செல்லுதல் போன்ற நீண்ட கால பயணத்தில் ஒருவருடன் சேர்ந்து பயணிக்கும்போது அவரின் எதார்த்த நிலையை கண்டுக்கொள்ளலாம்.

 

தொழில் ரீதியாக அல்லது கடன் மூலம் ஒருவரிடம் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ளும்போது அவரின் எதார்த்த நிலையை கண்டுக்கொள்ளலாம்.

 

ஏதேனும் மதிப்புமிக்க ஒரு பொருளை (அமானிதமாக) கொடுத்து, "இதை வைத்திரு. பிறகு வாங்கிக்கொள்கிறேன்" என்று ஏதேனும் ஒன்றை கொடுத்து வைப்பதின் மூலம் அவரின் எதார்த்த நிலையை  கண்டுக்கொள்ளலாம்.

 

ஒருவரின் எதார்த்த நிலை வெளிப்படும் சூழ்நிலையை வைத்துத்தான் அவரை நல்லவரா? கெட்டவரா? என்று சொல்ல முடியும். மாறாக, அவரின் இறைவழிபாட்டை மட்டும் பார்த்து அவ்வாறு சொல்ல இயலாது. அவ்வாறு சொல்லவும் கூடாது.

 

அதிகாரிகளை  தேர்ந்தெடுப்பதில் கவனம்

 

உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் அவரை பிலால் பின் அபீ புர்தா என்பவர் வந்து வாழ்த்தினார். பின்பு அவர் பள்ளிவாசலுக்கு சென்று இரவும் பகலும் தொழுதவாறும் குர்ஆன் ஓதியவாறும் இருந்தார். அவரது பக்தியைக் கண்ட உமர் அவர்கள் அவரை ஈராக் ஆளுநராக நியமிக்க விரும்பி, ( هَذَا رَجُلٌ لَهُ فَضْلٌ ) "இவர் ஓர் தகுதி வாய்ந்த மனிதர்" என்று புகழ்ந்தார். இருப்பினும், நம்பிக்கைக்குரிய ஒருவரை அவரிடம் அனுப்பி விசாரித்தார்.

 

பிலாலிடம் சென்ற அவர், ( يَا فُلَانُ إِنَّكَ تَعْلَمُ مَقَامِي عِنْدَ أَمِيرِ الْمُؤْمِنِينَ فَمَا لِي لَوْ جَعَلْتَهُ يُوَلِّيْكَ عَلَى أَحَدِ الْبُلْدَانِ ) "மனிதரே! நான் ஜனாதிபதிக்கு நெருக்கமானவன் என்பதை நீர் நன்கறிவீர். எனவே, ஜனாதிபதியிடம் சொல்லி உம்மை ஒரு மாகாணத்தின் ஆளுநராக நியமித்தால் எனக்கு என்ன தருவீர்" என்று கேட்டார். உடனே அவர், ( لَكَ عَطَاءُ سَنَةً ) "உமக்கு ஓர் ஆண்டிற்கு உதவித் தொகை கிடைக்கும்" என்றார். செய்தியறிந்த உமர் (ரஹ்) அவர்கள் உடனே அவரை அங்கிருந்து வெளியேற்றி நாடு கடத்துமாறு கூறினார்கள். நூல்:- ஃபிக்ஹ் உமர் பின் அப்துல் அஜீஸ், தாரீக் திமிஷ்க் (இப்னு அசாகிர்), உமர் பின் அப்துல் அஜீஸ் பக்கம்-55, 314 (அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபீ)

 

ஜனாதிபதி உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் வெளி அடையாளங்களை வைத்து மட்டும் ஆளுநர்களை தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக, தனிப்பட்ட முறையிலும் அவர்களை சோதிப்பார்கள். பொறுப்புக்கு அவர் தகுதியானவர் தானா என்பதை நன்கு அறிந்த பிறகே நியமிப்பார்கள்.

 

உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் திறமையும் தகுதிமிக்கவர்களில் நல்லவர்களையே அதிகாரிகளாக தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனத்துடன் இருந்துள்ளார்கள். அவர்கள் யாரை பொறுப்புக்குத் தேர்வு செய்ய விரும்புகிறாரோ அவரைக் குறித்து ஐயம் இருந்தால் தமது நிலையை உறுதிப்படுத்தும் வரை அவரை பொறுப்பில் நியமிக்க மாட்டார்கள்.

 

அதிகாரிகள், ஆளுநர்கள் போன்றோர் ஆட்சித்தலைவரின் பிரதிநிதிகள். ஆட்சித்தலைவருக்கும் குடிமக்களுக்கும் இடையே தொடர்பானவர்களாக இவர்கள் தான் இருக்கிறார்கள். அரசியல் விவகாரங்களை நிர்வகிப்பதில் ஒரு ஆட்சித்தலைவர் எவ்வளவுதான் திறமைமிக்கவராக இருந்தாலும், அவர் தமது அதிகாரிகளை மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்காவிட்டால், வெற்றி பெற முடியாது.

 

ஒரு முஸ்லிம் கற்பு நெறியில் ஒழுக்கமற்றவராக, கொடுக்கல் வாங்கலில் நேர்மையற்றவராக, (பெற்றோர் மனைவி மக்கள் போன்ற) தமது குடும்பத்தினருக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளை முறையாக நிறைவேற்றாதவராக, உறவுகளை பேணாதவராக, எளியோரைக் கண்டு இரக்கமற்றவராக, பணியாளர்களிடம் பண்பற்றவராக (சுருங்கக்கூறின்: மனித உரிமைகளை மீறுபவராக) இருந்துவிட்டு, தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களில் மட்டும் கவனம் செலுத்துவதால் வெற்றியடைந்துவிட முடியாது.

 

எனவே, நாம் இஸ்லாம் கூறுகின்ற இறைவழிபாடுகளிலும் பண்பியலிலும் கவனம் செலுத்தி, இறையருளை பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

 

No comments:

Post a Comment

வணக்கசாலியாக இருந்தால் போதுமா?

  வணக்கசாலியாக இருந்தால் போதுமா?   وَلَا يَأْتُونَ الصَّلَاةَ إِلَّا وَهُمْ كُسَالَى (நயவஞ்சகர்களான) அவர்கள் சடைந்தவர்களாகவே தொழுகைக்க...