எல்லோருக்கும் புரியாது
فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ فَقَالَ
إِنِّي سَقِيمٌ فَتَوَلَّوْا عَنْهُ
مُدْبِرِينَ
(பண்டிகை விழாவிற்கு
இப்ராஹீமை மக்கள் அழைத்தபோது) அவர் விண்மீன்களை நோக்கி ஒரு பார்வை பார்த்தார். பின்னர்
"நிச்சயமாக நான் நோயாளி" என்று கூறினார். எனவே, அவரை (மக்கள்) விட்டு விட்டுச் சென்று விட்டனர். திருக்குர்ஆன்:-
37:88,89,90
சிலேடை சொல் என்பதற்கு
அரபி மொழியில் "தவ்ரியா" ( التَورِيَة ) என்று சொல்வார்கள். இரு பொருள் கொண்ட ஒரு வார்த்தையைக் கூறி, அதன் நெருக்கமான பொருளை
விடுத்து, தொலைவான பொருளைக்
கருத்தில் கொள்வதாகும். இதற்கு, "இரு பொருள் மயக்கம்" (Equivocal) என்ற பெயரும் உண்டு.
வெளிப்படைக்கு மாறான
பொருளைத் தருவதாலும் பொருள் ஒன்றிருக்க நோக்கம் வேறொன்றாக இருப்பதாலும் இதைப் பொய்
என்று கருதிவிடலாகாது. உண்மையை மறைக்கும் நோக்கம் இல்லாததால் இது பொய்யாகாது. நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும்கூட இவ்வாறு சிலேடையாக பேசியிருப்பதற்கு ஆதாரங்கள்
உண்டு.
நான் நோயாளி
இறைத்தூதர் இப்ராஹீம்
(அலை) அவர்களின் சமூகத்தினர் ஆண்டுதோறும் ஒரு பெரும் திருவிழாவைக் கொண்டாடுவதற்காக
ஊருக்கு வெளியே செல்வது வழக்கம். அவர்களோடு இப்ராஹீம் (அலை) அவர்களையும் வருமாறு அழைத்தபோது, அவர்கள் வணங்கும்
கற்பனைத் தெய்வங்களின் இயலாமையை அவர்களுக்கு உணர்த்தும் பொருட்டு, ஊருக்குள் தங்கி சிலைகளை
உடைக்க திட்டமிட்டார்கள். அதற்காகவே, "எனக்கு உடல் நலமில்லை" என்று கூறி அவர்களோடு
செல்வதைத் தவிர்த்தார்கள். அவர்கள் சென்ற பிறகு, அங்கிருந்த சிலைகளை உடைத்து தவிடுபொடியாக்கினார்கள்.
இது குறித்தே தலைப்பில் காணும் திருவசனங்கள் கூறுகிறது.
இப்ராஹீம் (அலை) அவர்கள்
தம்மை “நோயாளி” ( سَقِيْمٌ ) என்று குறிப்பிட்டது, வெளிப்படையான உடல் நோயை அல்ல. ஒன்று, 'பலவீனம்' என்ற பொருளில் இருக்கலாம்.
அல்லது சிலைகளை அம்மக்கள் வழிபாடு செய்வதைக் கண்டு ஏற்பட்ட 'மனவலி'யாக இருக்கலாம். இதன்படி, அவர்கள் நோயாளி என்று
சொன்னது எதார்த்தமே! அன்னார் தம்மை நோயாளி என்று தம்மை குறிப்பிட்டது மேலோட்டமாக பார்த்தால்
உண்மை இல்லாதது போல் தோன்றலாம். ஆயினும், மனவலிமையும் பலவீனமும்கூட ஒரு வகையில் நோய் தானே!
இதைக் கருதியே அன்னார் "நான் நோயாளி" என்றார்கள்.
பேரறிஞர் கத்தாதா
(ரஹ்) அவர்கள் கூறியதாவது. ( وَالْعَرَبُ تَقُولُ لِمَنْ تَفَكَّرَ: نَظَرَ فِي
النُّجُومِ ) ஒருவர் ஆழமாக
யோசிக்கிறார் என்பதை குறிக்க அரபியர், "விண்மீன்களை நோக்கி பார்வையைச் செலுத்தினார்"
என்று சொல்வதுண்டு.
அதாவது, இப்ராஹீம் (அலை) சமூகத்தாரின்
கவனத்தைத் திருப்ப என்ன செய்யலாம் என்று யோசித்தவாறு வானத்தை நோக்கினார்கள். பின்னர்
"நான் நோயாளி அதாவது பலவீனமானவன்" என்று கூறினார்கள்.
அம்மக்களும் இதை ஏற்றுக்கொண்டு
போய்விட்டார்கள். காரணம், நட்சத்திரக் கணிநூல் நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. நட்சத்திரத்தை
ஒரு முறை நோக்கிவிட்டு "நோயாளி" என இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறியதால், அது உண்மையாகவே இருக்கும்
எனத் தமது ஐதீகப்படி அவர்கள் நம்பினார்கள். இவ்வாறே மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.
(ஆக, இப்ராஹீம் - அலை தம்மை
நோயாளி என்று கூறியது பலவீனமானவன் என்ற கருத்தில் தான். எனவே, அது பொய்யன்று.) நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
நேர்வழி காட்டுபவர்
அனஸ் பின் மாலிக்
(ரலி) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்குப் பின்னால்
அபூபக்ர் (ரலி) அவர்கள் வர (மக்காவிலிருந்து) மதீனா நோக்கி (ஹிஜ்ரத்) சென்றார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் (இளநரையின் காரணத்தால் தோற்றத்தில்) மூத்தவராகவும், (மதீனாவாசிகளிடையே
வியாபார நிமித்தமாக அடிக்கடி சென்றதில் அவர்களிடையே) அறிமுகமானவராகவும் இருந்தார்கள்.
ஆனால், அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள், (நரை விழாத காரணத்தால் உருவத்தில்) இளையவராகவும் (வெளியூர் சென்று நீண்ட காலமாகிவிட்டதால்
அந்த மக்களிடையே) அறிமுகமற்றவராகவும் இருந்தார்கள்.
(அவர்கள் இருவரும் ஹிஜ்ரத் சென்ற அந்தப் பயணத்தின்போது) அபூபக்ர் (ரலி) அவர்களை
ஒரு மனிதர் சந்தித்து, ( يَا أَبَا بَكْرٍ، مَنْ هَذَا الرَّجُلُ
الَّذِي بَيْنَ يَدَيْكَ ) “அபூபக்ரே! உமக்கு முன்னால் உள்ள இந்த மனிதர் யார்?” என்று கேட்கிறார்.
அதற்கு, அபூபக்ர் (ரலி) அவர்கள், ( هَذَا
الرَّجُلُ يَهْدِينِي السَّبِيلَ ) “இந்த மனிதர் எனக்கு வழிகாட்டுபவர்” என்று (நபியவர்களை எதிரிக்குக்
காட்டிக் கொடுத்துவிடாமலும், அதே சமயம் உண்மைக்குப் புறம்பில்லாமலும் இரு பொருள்படும்படி)
பதிலளிக்கிறார்கள். இதற்கு, “(பயணத்தில்) பாதை (காட்டுபவர்)' என்றே அபூபக்ர் பொருள் கொள்கிறார் என எண்ணுபவர்
எண்ணிக்கொள்வார். ஆனால், 'நன்மார்க்கத்திற்கு (வழி காட்டுபவர்)' என்ற பொருளையே அபூபக்ர்
(ரலி) அவர்கள் கொண்டிருந்தார்கள். நூல்:- புகாரீ-3911
பசியின் அறிகுறி
அபூஹுரைரா (ரலி) அவர்கள்
கூறியதாவது. ஒரு நாள் நான் கடும் பசியில் இருந்தேன். எனவே,
நான் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களும் தோழர்களும் (பள்ளிவாசலில் இருந்து) வெளியேறும் பாதையில் அமர்ந்துகொண்டேன்.
அப்போது அபூபக்ர்
(ரலி) அவர்கள் என்னை கடந்து சென்றார்கள். அவர்களுடன் நான் இறைவேதத்திலுள்ள ஒரு வசனத்தைப்
பற்றி கேட்டேன். (என் பசியைப் போக்கி) என் வயிறார உணவளிப்பார்கள் என்பதற்காகவே அவர்களிடம்
(அந்த வசனம் குறித்துக்) கேட்டேன். அவர்கள் கடந்து சென்று விட்டார்கள். (என் பசி நீங்க
எதுவும்) அவர்கள் செய்யவில்லை.
பிறகு உமர் (ரலி)
அவர்கள் என்னை கடந்து சென்றார்கள். அவர்களிடம் இறைவேதத்திலுள்ள ஒரு வசனத்தைப் பற்றி
கேட்டேன். (என் பசியைப் போக்கி) என் வயிறார உணவளிப்பார்கள் என்பதற்காகவே அவர்களிடமும்
(அந்த வசனம் குறித்துக்) கேட்டேன். அவர்களும் கடந்து சென்று விட்டார்கள். (என் பசி
நீங்க எதுவும்) அவர்கள் செய்யவில்லை.
பிறகு அபுல் காசிம்
(முஹம்மது - ஸல்) அவர்கள் என்னை கடந்து சென்றார்கள். என்னைக் கண்டதை (என் நிலையை உணர்த்துக்கொண்டு)
புன்னகைத்தார்கள். "அபூஹுரைரா!" என்று அழைத்தார்கள். நான், "இதோ காத்திருக்கிறேன்
நாயகமே! (கூறுங்கள்)" என்றேன். "என்னை தொடர்ந்து வருக!" என்று கூறிவிட்டு, நடந்தார்கள். அவர்களை
நான் பின் தொடர்ந்தேன். பிறகு அவர்கள் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்று ஒரு கோப்பையில்
பருக பால் தந்தார்கள். நான் அதை வாங்கிப் பருகி பசியாறினேன். நூல்:- புகாரீ-6452, திர்மிதீ-2401
"பசி வந்தால் பத்தும் பறந்து போகும்" என்பார்கள். ஆனால், அந்தப் பசியை மற்றவர்களிடம்
கையேந்தி கேட்பதற்கு மனித மனம் எளிதில் சம்மதிப்பதில்லை.
ஒரு மனிதன் தன் பசியை
போக்க, நேரடியாக "எனக்கு
உணவு தாருங்கள்" என்று கேட்பதற்கு பெரும் கூச்சமும்,
தன்மானமும் தடையாக இருக்கலாம்.
இதனால், பலர் தங்களின் பசியை
நேரடியாகச் சொல்லாமல், மறைமுகமான வார்த்தைகள் மூலமும், உடல் மொழிகள் மூலமும் வெளிப்படுத்துகிறார்கள்.
ஒருவரது சோர்வையும்
சூழ்நிலையையும் கண்டு, அவர் கேட்கும் முன்பே "சாப்பிடுகிறீர்களா?" என்று அன்போடு கேட்பது
அவர்களின் சுயமரியாதையைக் காக்கும்.
அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகிய இருவருக்கும்
ஒருவரின் பசி உணர்வைப் புரிந்துகொள்ள இயலவில்லை. ஆனால், மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் பக்குவம் பெற்ற
அருமை நாயகம் (ஸல்) அவர்கள், பசியை நேரடியாகச் சொல்ல முடியாதவர்களின் மறைமுக வார்த்தைகளையும், அவர்களின் ஏக்கமான
பார்வைகளையும் புரிந்துகொண்டு, பசியைப் போக்கினார்கள்.
பசி என்பது ஒரு மனிதனின்
பலவீனம் அல்ல. அது இயற்கையின் தேவை. அதை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் மனிதர்களின்
"மறைமுக மொழியை" உணர்ந்துகொள்பவர்களால்தான் இந்த உலகம் இன்னும் அழகாக இருக்கிறது.
பசியோடு இருப்பவர்களின் மறைமுகக் குரலுக்குச் செவிசாய்த்து, நம்மால் இயன்ற உணவை
வழங்கி, பசிப்பிணி போக்க முயற்சிக்க
வேண்டும்.
விடைபெறும் நாள்
அபூசயீத் அல்குத்ரீ
(ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் (எந்த நோயில் இறந்தார்களோ
அந்த நோயின்போது) சொற்பொழிவு மேடை மீதமர்ந்து, (மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அதில்) ( إِنَّ اللَّهَ خَيَّرَ عَبْدًا بَيْنَ
الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ فَاخْتَارَ ذَلِكَ الْعَبْدُ مَا عِنْدَ اللَّهِ ) "அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு உலகம் அல்லது
தன்னிடமிருப்பது - இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கூறினான்.
அந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்துக்கொண்டார்" என்று கூறினார்கள்.
உடனே அபூபக்ர் (ரலி)
அவர்கள் (நபியவர்களின் இறப்பு நெருங்கிவிட்டதை உணர்ந்து) அழுதார்கள். ( أَنْ يُخْبِرَ رَسُولُ اللَّهِ صلى الله
عليه وسلم عَنْ عَبْدٍ خُيِّرَ )
“நபியவர்கள், விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள விருப்ப உரிமை அளிக்கப்பட்ட அடியாரைப் பற்றி
(மகிழ்ச்சியான விஷயத்தைத்) குறிப்பிட்டதற்கு இவர் ஏன் அழுகிறார்?" என்று நாங்கள் வியப்படைந்தோம். நூல்:- புகாரீ-3654,
இப்னு ஹிப்பான், இப்னு அபீஷைபா
அல்லாஹ்வால், உலக வாழ்க்கை அல்லது
மறுமை வாழ்க்கை இந்த இரண்டில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற
விருப்ப உரிமை வழங்கப்பட்ட மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தான். எனவே, நபியவர்கள் மறுமை
வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். அதாவது விரைவிலேயே நம்மைவிட்டு அவர்கள் இறந்துவிடப்
போகிறார்கள். அவர்கள் ஆயுள் முடியப்போகிறது என்ற இந்தக் கருத்தை நபியவர்கள் கூறிய வார்த்தையில்
இருந்து அபூபக்ர் (ரலி) அவர்கள் மட்டும்தான் விளங்கிக் கொண்டார்கள். அந்த சபையில் இருந்த
மற்றவர்களுக்கு இந்தக் கருத்து விளங்கவில்லை. நபியவர்கள்,
யாரோ ஒருவரைப் பற்றி இவ்வாறு
கூறுகிறார்கள் என்று தான் விளங்கி வைத்திருந்தனர்.
எனவே, ஒரு சொல் அல்லது செயல்
எல்லோருக்கும் அதன் கருத்து விளங்கும் என்று வாதிட முடியாது. சிலருக்கு விளங்கக்கூடும்.
சிலருக்கு விளங்காமலும் போகலாம்.
கை நீளமானவர்
ஆயிஷா (ரலி) அவர்கள்
கூறியதாவது அருமை நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலர் நபியவர்களிடம், ( أَيُّنَا
أَسْرَعُ بِكَ لُحُوقًا ) "உங்களது இறப்புக்குப்பின் எங்களில் யார் முதலில்
உங்களை வந்து சேருவார்?" என்று கேட்டனர். அதற்கு நபியவர்கள்,
( أَطْوَلُكُنَّ يَدًا ) "உங்களில் கை நீளமானவரே"
எனக் கூறினார்கள்.
உடனே துணைவியர் ஒரு
குச்சியை எடுத்துத் தங்களின் கைகளை அளந்து பார்க்க ஆரம்பித்தனர். அப்போது சவ்தா (ரலி)
அவர்களின் கைகளே மிகவும் நீளமானதாக இருந்தன. (ஸைனப் - ரலி அவர்கள் இறந்த) பிறகுதான்
கை நீளமானவர் என்பது அதிகம் தர்மம் செய்பவரைக் குறிக்கும் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம்.
(ஸைனப்) அவ்வாறு அதிகம் தர்மம் செய்பவராக இருந்ததால்தான் நபியவர்களை முதலில் அடைந்தார்.
மேலும், அவர் தர்மம் செய்வதை
மிகவும் விரும்பக்கூடியவராகவும் இருந்தார். நூல்:- புகாரீ-1420, நசாயீ-2494
வெளிரங்கத்தில் கை
நீளம் என்று குறிப்பிடப்பட்டாலும், உள்ரங்கத்தில் கை நீளம், அது தான தர்மம் என்பதாக குறிப்பிடப்படுகிறது.
அன்னை ஆயிஷா (ரலி)
அவர்கள் கூறுகிறார்கள். ( وَلَمْ أَرَ امْرَأَةً قَطُّ خَيْرًا فِي الدِّينِ مِنْ زَيْنَبَ وَأَتْقَى
لِلَّهِ وَأَصْدَقَ حَدِيثًا وَأَوْصَلَ لِلرَّحِمِ وَأَعْظَمَ صَدَقَةً وَأَشَدَّ
ابْتِذَالاً لِنَفْسِهَا فِي الْعَمَلِ الَّذِي تَصَدَّقُ بِهِ وَتَقَرَّبُ بِهِ
إِلَى اللَّهِ تَعَالَى ) மார்க்க
ஈடுபாட்டிலும், இறைவனை அஞ்சி நடப்பதிலும், உண்மை பேசுவதிலும், உறவுகளை அனுசரிப்பதிலும், தாராளமாகத் தானம்
வழங்குவதிலும், இறைநெருக்கத்தையும் வாய்மையையும் தரும் நற்செயல்களில் தம்மைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்வதிலும்
ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களைவிடச் சிறந்த ஒரு பெண்ணை நான் ஒருபோதும் கண்டதில்லை.
நூல்:- முஸ்லிம்-4829, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக், முஸ்னது அஹ்மத், அல்அஸ்வத் தப்ரானீ, சுனன் பைஹகீ
ஆயிஷா (ரலி) அவர்கள்
கூறுகிறார்கள். ( وكانتْ
زَينَبُ امرأَةً صنَّاعَةً باليَدِ ، وكانتْ تَدبُغُ وتَخرِزُ وتتصَدَّقُ في سبيلِ
اللهِ ) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்
(ரலி) அவர்கள் கைவினைப் பொருள்களை தயாரிப்பதில் கைதேர்ந்தவர்கள். அவர்கள் தோல் பதனிடுவார்கள்; தைப்பார்கள். (இதன்
மூலம் கிடைக்கின்ற வருமானத்தை) இறைவழியில் தர்மம் செய்வார்கள். நூல்:- ஹாகிம், ஃபத்ஹுல் பாரீ
ஜனாதிபதி உமர் (ரலி)
ஆட்சிக்காலத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவியர்களுக்கு வருடத்திற்கு 12,000 வெள்ளிக்காசுகள் உதவி தொகையை வழங்கி வந்தார்கள்.
நூல்:- சியரு அஃலாமுந் நுபலா இமாம் அத்தஹபீ
பர்ஸா பின்த் ராஃபிஉ
(ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அன்னை ஸைனப் பின்த்
ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கு அவருடைய உதவித்தொகையை அனுப்பினார்கள். அன்னையார், ( غَفَرَ
اللَّهُ لِعُمَرَ ، غَيْرِي من اَخوَاتِي كَانَ أَقْوَى عَلَى قَسْمِ هَذَا مِنِّي ) “அல்லாஹ் உமரை மன்னிப்பானாக! இந்த பணத்தை நபியவர்களின்
துணைவியர் அனைவருக்கும் நான் பங்கிட்டு கொடுப்பதைவிட மற்றவர்களிடத்தில் கொடுத்து பங்கு
வைக்கச் சொல்லி இருக்கலாம்" என்று கூறினார். கொண்டு வந்தவர், ( كُلُّهُ
لَكِ )
“(பிறருக்கு பங்கிடுவதற்கு அல்ல.)
இது முழுவதும் உங்களுக்கே உரியது” என்று கூறினார்.
அன்னையார், “அல்லாஹ் பரிசுத்தமானவன்"
என்று கூறிவிட்டு, ஒரு ஆடையால் தன்னை மூடிக்கொண்டார். பிறகு அன்னையார், ( صَبُّوهُ وَاطرَحُوا عَلَيْهِ ثَوْبًا ) “இதை வெளியே கொட்டி, மற்றொரு ஆடையால் மூடுங்கள்”
என்று கூறினார். பிறகு அதை தன் உறவினர்களுக்கும் அனாதைகளுக்கும் விநியோகிக்கத் தொடங்கினார்.
மீதமிருந்ததை எனக்குக் கொடுத்தார். அது எண்பத்தைந்து வெள்ளிக்காசுகள் என்று நாங்கள்
கண்டறிந்தோம்.
பிறகு அன்னையார் வானத்தை
நோக்கித் தன் கைகளை உயர்த்தி, ( اَللَّهُمَّ لَا يُدْرِكُنِي عَطَاءُ عُمَرَ
بَعْدَ عَامِي هَذَا
) "இறைவா! இந்த ஆண்டுக்குப் பிறகு உமர் (ரலி) அவர்களிடமிருந்து உதவித்தொகை பெறுமாறு
என்னை ஆக்கிவிடாதே!" என்று பிரார்த்தித்தார். அவ்வாறு அண்ணல் நபி (ஸல்) அவர்களின்
மரணத்திற்குப் பிறகு அவர்களின் துணைவியரில் முதலில் மரணித்தவர் ஸைனப் (ரலி) அவர்கள்
தாம். (அன்னையார் ஹிஜ்ரீ இருபதாம் ஆண்டு இறந்தார்.) நூல்:- தபக்காத் இப்னு சஅத், சியரு அஃலாமுந் நுபலா
இமாம் அத்தஹபீ
ஸைனப் (ரலி) அவர்கள்
இறக்கும்போது ஒரு காசைக்கூட விட்டு வைக்காமல் அனைத்தையும் அவர்கள் தர்மம் செய்திருந்தார்கள்.
இவர்களின் இறந்த செய்தியை கேட்டு மதீனாவில் இருந்த அத்தனை ஏழைகளும் கண்ணீர் வடித்தனர்.
புகார் செய்கிறாள்
இமாம் ஷஅபீ (ரஹ்)
அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் ஒரு பெண் வந்து
ஜனாதிபதி அவர்களே! எனது கணவர் பகலெல்லாம் நோன்பு நோற்றுக் கொண்டும், இரவெல்லாம் தொழுதுக்
கொண்டும் இருக்கிறார் என்று கூறினாள். இதை செவியுற்ற ஜனாதிபதி அவர்கள், ( جَزَاكِ
اللهُ خَیْرًا فَقَدْ اَحْسَنْتِ الثَّنَاءَ ) “அல்லாஹ் உனக்கு சிறந்த நற்கூலி வழங்குவானாக! உனது
கணவரைப்பற்றி மிக அழகிய முறையில் புகழ்த்து கூறுகிறாய்” என்று அப்பெண்ணை பாராட்டினார்கள்.
உடனே அப்பெண் திரும்பிச் சென்றுவிட்டாள்.
இதை கவனித்த கஅப்
பின் சவார் (ரலி) அவர்கள், ( یَا اَمِیرَ المُؤْمِنِینَ لَقَدْ
اَبْلَغَتْ اِلَیْكَ فِي الشَّکْوَی
) “ஜனாதிபதி அவர்களே!
(தாங்கள் அப்பெண்ணின் வார்த்தையை கவனிக்கவில்லை என்றே எண்ணுகிறேன்.) உங்களிடம் வந்து
அவள் தனது கணவரை புகழவில்லை. மாறாக புகார் செய்கிறாள். ("அதாவது அவளது கணவர் இரவு
பகல் பாராமல் எல்லா நேரமும் இறைவழிபாட்டில் ஈடுபடுகிறார். அவர் மனைவிக்கு செய்ய வேண்டிய
கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றுவதில்லை என்று சொல்ல நினைக்கிறாள்" என்று கூறினார்.)
பிறகு ஜனாதிபதி அவர்கள் அப்பெண்ணிடம் விசாரித்தபோது தான் கஅப் (ரலி) அவர்களின் கணிப்பு
சரியானது தான் என்று விளங்கிக் கொண்டார்கள்.
பிறகு ஜனாதிபதி அவர்கள்
கஅப் (ரலி) அவர்களிடம் ( اقْضِ بَينَهُمَا اِنَّكَ قَدْ فَطِنْتَ اِلَی مَالَمْ اَفْطَنْ لَّهُ ) நீயே
அவ்விருவருக்கிடையே தீர்ப்பு வழங்கு! நான் புரிந்துகொள்ளாத ஒரு விஷயத்தை நீர் புரிந்துகொண்டீர்.
(அதனால் நீயே தீர்ப்பு வழங்கு!) என்று கூறினார்கள்.
உடனே கஅப் (ரலி) அவர்கள்
அல்லாஹ் ஒரு ஆணுக்கு அதிகபட்சமாக நான்கு பெண்களை மணமுடித்துக் கொள்ள அனுமதித்துள்ளான்.
(திருக்குர்ஆன்:- 4:3) இந்த வசனத்தின் பிரகாரம் இந்த பெண்ணின் கணவர் மூன்று நாள்கள்
இறைவணக்கத்தில் ஈடுபடலாம். ஆனால் நான்காவது நாள் கண்டிப்பாக இவர் தனது மனைவியோடு வந்து
தங்கியே ஆக வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள்.
(இதன்படி ஒருவர் நான்கு பெண்களை மணமுடித்தால் அவர் ஒவ்வொரு மனைவியிடமும் நான்கு
நாள்களில் ஒரு நாள் தங்க வேண்டும். இதுவே ஒவ்வொரு மனைவியின் பங்கு-உரிமை என்று ஆகிறது
என்று கஅப் (ரலி) அவர்கள் விளக்கமளித்தார்கள்.)
இந்த தீர்ப்பை செவியுற்ற
ஜனாதிபதி அவர்கள், ( لِهٰذَا اَعْجَبُ اِلَيَّ مِنَ الْاَوَّلِ ) “உன்னுடைய இந்த தீர்ப்பு, அப்பெண்ணின் வார்த்தையை
முதலில் நீ புரிந்து கொண்டதைவிட அதிக ஆச்சரியமாகவும், அற்புதமாகவும் இருக்கிறது” என வியந்து பாராட்டி, கஅபு (ரலி) அவர்களை
பசரா நகரின் நீதிபதியாக நியமித்தார்கள். நூல்:- அல்இஸ்தீஆப், இப்னு அபீஷைபா, ஹயாத்துஸ் ஸஹாபா 2/937
அவர் சொன்னது உண்மை
ஒருமுறை உமர் (ரலி)
அவர்கள், ( كَيْفَ أَصْبَحْتَ يَا حُذَيْفَةُ ) “ஹுதைபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடம் எப்படி இருக்கிறீர்கள்?” என்று வினவினார்கள்.
ஹுதைபா (ரலி) அவர்கள், ( أَصْبَحْتُ أُحِبُّ الْفِتْنَةَ, وَأَكْرَهُ
الْحَقَّ, وَأُصَلِّي بِغَيْرِ وُضُوءٍ, وَلِي فِي الْأَرْضِ مَا لَيْسَ لِلَّهِ
فِي السَّمَاءِ
) “(ஆம்!) நன்றாக இருக்கிறேன்.
"நான் சோதனையை விரும்புகிறேன் என்றார். (ஹக் எனும்) உண்மையை வெறுக்கிறேன். அங்கத்தூய்மையின்றி
தொழுகிறேன். வானத்தில் இருக்கும் அல்லாஹ்விடம் இல்லாத ஒன்று பூமியிலுள்ள என்னிடம் உள்ளது"
என்று கூறினார்கள்.
இதைச் செவியுற்ற உமர்
(ரலி) அவர்கள் (என்ன சொல்கிறீர்கள் என்று) கடுமையாக கோபமடைந்தார்கள். அவர்களின் கோபத்தின்
ரேகை முகத்தில் படர்ந்து இருந்தது. அப்போது அங்கே அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். அலீ
(ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் நிலையைக் கண்டு, அதற்குரியக் காரணத்தை விசாரித்தபோது, அதற்குரியக் காரணத்தை
எடுத்துரைக்கப்பட்டது.
அலீ (ரலி) அவர்கள், ( قَدْ
صَدَّقَكَ فِيمَا قَالَ يَا عُمَرُ ) "உமர் அவர்களே! அவர் சொன்னது உண்மை தானே! (அதில்
தவறு ஒன்றும் இல்லையே)" என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், ( وَكَيْفَ
ذَلِكَ ) "அது எப்படி? (விவரிங்கள்)" என்றார்கள்.
அலீ (ரலி) அவர்கள், "அவர் சோதனையை விரும்புகிறேன்
என்று சொன்னது, தமது பொருள் மற்றும் பிள்ளைகளை தான்".
அல்லாஹ், பொருள் மற்றும் பிள்ளைகளை
ஃபித்னா (குழப்பம்) என்று தானே திருக்குர்ஆனில் கூறுகிறான்.
اِنَّمَاۤ
اَمْوَالُـكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ
உங்கள் பொருள்களும்
உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான். திருக்குர்ஆன் : 64:15
அவர், உண்மையை வெறுக்கிறேன்
என்று சொன்னது மரணத்தைத் தான். அல்லாஹ், மரணத்தை உண்மை என்று தானே திருக்குர்ஆனில் கூறுகிறான்.
(ஆம்! உலகத்தில் யாரும் மறுக்காத உண்மை மரணம் தான்)
وَاعْبُدْ
رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ
உமக்கு மரணம் வரும்
வரை உமது இறைவனை வணங்குவீராக! திருக்குர்ஆன் : 15:99
அவர், அங்கத்தூய்மையின்றி
தொழுகிறேன் என்று சொன்னது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது அவர் சலவாத்து சொல்வதாகும்.
( صلاة என்ற அரபுச் சொல்லுக்கு தொழுகை என்றும் நபியவர்கள்
மீது சலவாத் ஓதுதல் என்றும் இரண்டு பொருள் உண்டு.)
அவர், அல்லாஹ்வுக்கு இல்லாத
ஒன்று தனக்கு இருப்பதாகக் கூறியது மனைவி மக்களை தான். அல்லாஹ், ஒருவன்; தனித்தவன்; எந்த தேவையுமற்றவன்; அவன் யாரையும் பெற்றெடுக்கவில்லை; அவனை யாரும் பெற்றெடுக்கவில்லை"
என்று விளக்கம் கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள், ( أَحْسَنْتَ
يَا أَبَا الْحَسَنِ، لَقَدْ أَزَلْتَ مَا فِي قَلْبِي عَلَى حُذَيْفَةَ ) "அலீ அவர்களே! அழகாகச்
சொன்னீர்கள். ஹுதைஃபாவுக்கு எதிராக என் இதயத்தில் இருந்ததை நீக்கிவிட்டீர்கள்"
என்று கூறினார்கள். நூல்:- கிஃபாயதுத் தாலிப் ஃபீ மனாகிபு அலீ பின் அபீதாலிப் பக்கம்-219
குர்ஆனில் இந்த வசனங்கள்
அல்லது இந்த நபிமொழிகள் எனக்கு விளங்கவில்லை என்பதற்காக அது உண்மைக்கு புறம்பானது என்று
வாதிடக் கூடாது. குர்ஆன் மற்றும் நபிமொழிகள் அனைத்தும் எல்லோருக்கும் விளங்கும் என்று
உறுதியாக சொல்லவும் முடியாது. விளங்குபவர்கள் விளங்கிக்கொள்கிறார்கள். எனவே தான், மார்க்கம் சம்பந்தப்பட்ட
செய்திகளை படிக்கும்போது நமக்கு விளங்காவிட்டால் அந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களிடம்
வினவ வேண்டும். அப்படி வினவினால் விளக்கங்கள் கிடைக்கப் பெறலாம்.
விவகாரத்து நிகழாது
இமாம் அபூஹனீஃபா
(ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து, "நானும் என் மனைவியும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தோம்.
அப்போது நான் என் மனைவிடம், ( حَلَفْتُ بِالطَّلَاقِ إلَّا أُكَلِّمَ
امْرَأَتِي حَتَّى تُكَلِّمَنِي ) ‘நீ என்னிடம் பேசும் வரை நான் உன்னிடம் பேசமாட்டேன். (அவ்வாறு
நீயே வந்து என்னிடம் பேசாவிட்டால்) சத்தியமாக! நீ (தலாக் எனும்) விவகாரத்து ஆவாய்’
என்றேன்.
அவளோ, ( وَأَنَا
لَنْ أُكَلِّمُكَ حَتَّى تُكَلِّمَنِي ) 'நீ என்னிடம் பேசும் வரை நான் உன்னிடம் பேச மாட்டேன்' என்று என்னிடம் கூறினாள்.
இந்த விஷயம் விவாகரத்துக்கு வழிவகுத்துவிட்டது என்று தோன்றுகிறது. (இப்போது நான் என்ன
செய்வது? சொல்லுங்கள்)"
என்றார்.
அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள், ( اِذْهَبْ
يَا رَجُلُ، امْرَأَتُكَ حَلَالٌ وَلَيْسَتْ طَالِقًا وَعِشْ مَعَهَا وَلَا
يُوجَدُ فِي ذَلِكَ مُشْكِلَةٌ وَلَا تَدْفَعُ وَلَا حَنُثَ يَمِينِكَ، فَاذْهَبْ
إِلَى بَيْتِكَ وَلَا تُعَاوِدَا هَذَا الْأَمْرِ مُجَدَّدًا ) "நீ போ! உன் மனைவி உனக்கு உரியவள், அவள் விவாகரத்து செய்யப்படவில்லை.
அவளுடன் வாழ்; அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நீ (பரிகாரம்) எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
உன் சத்தியத்தையும் மீறவில்லை. வீட்டிற்குச் செல், இந்த விஷயத்தை மீண்டும் செய்யாதே" என்றார்கள்.
மாபெரும் அறிஞர்களில்
ஒருவரான சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் இந்தத் தீர்ப்பைச் செவியுற்றபோது, அவர் கடுங்கோபமடைந்தார்.
அவர் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களிடம் சென்று, ( اَتَبِيحُ الزِّنَا ) "(அவர்களுக்கு மத்தியில்
விவகாரத்து நிகழ்ந்துவிட்டபோது, தவறாக தீர்ப்பளித்து, அவர்களுக்கு) விபச்சாரத்தை அனுமதிக்கிறீர்களா?"”என்று கேட்டார். அதற்கு
இமாம் அவர்கள், "இல்லை" என்றார்.
அவர், ( فَكَيْفَ
هَذِهِ الْفَتْوَى ) "அப்படியானால், நீங்கள் எப்படி இந்தத் தீர்ப்பை வழங்க முடியும்?" என்றார். அபூஹனீஃபா
(ரஹ்) அவர்கள், ( يَا إِمَامُ، اَلْأَمْرُ بَسِيطٌ. هِيَ قَالَتْ لَهُ
"لَنْ أُكَلِّمَكَ حَتَّى تَكَلِّمَنِي" فَقَدْ شَافَهَتْهُ. وَإِنَّمَا
بَحَثْتُ لَهُمَا عَنْ مَخْرَجً بِحِيلَةٍ ذَكِيَّةٍ وَلَمْ أَفْعَلْ حَرَامًا
لَعَلِّي أَجْمَعُ هَذَا الإِرطَ ) "(கண்ணியத்திற்குரிய) இமாம் அவர்களே! காரியம் எளிமையானது.
'நீங்கள் என்னிடம்
பேசும் வரை நான் உங்களிடம் பேச மாட்டேன்' என்று அவள் அவரிடம் கூறினாள். மேலும், அவள் உண்மையில் அவரிடம்
நேருக்கு நேர் பேசிவிட்டாள். நான் இந்த விஷயத்தைச் சமரசம் செய்வதற்காக, ஒரு தந்திரமான உத்தியின்
மூலம் அவர்கள் இருவருக்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தேன்;
மேலும் இவர்களை ஒன்று சேர்ப்பதற்காக
நான் தடுக்கப்பட்ட எதையும் செய்யவில்லை" என்று பதிலளித்தார்கள்.
சுஃப்யான் அஸ்ஸவ்ரீ
(ரஹ்) அவர்கள், இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் ஆழமான மார்க்க அறிவையும், சிந்தனைத் திறனையும்
கண்டு வியந்துபோனார்.
ஒரு அறிஞர் மார்க்கத்
தீர்ப்பு வழங்குவதற்கு முன் சம்பந்தப்பட்டவர்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? என்பதை கவனிக்க வேண்டும்.
கைதியின் மதியூகம்
ரோம் நாட்டின்மீது
தாக்குதல் நடத்த வந்திருந்த முஸ்லிம் ராணுவத்தின் வீரர் ஒருவரை ரோமர்கள் கைதுசெய்து
விட்டனர். முஸ்லிம் படையின் தளபதிக்கு ஒரு கடிதம் எழுதும்படி அந்தக் கைதியை ரோமர்கள்
கட்டாயப்படுத்தினர். அக்கடிதத்தில் “ரோமர்கள் மீது படையெடுத்து வருவதற்கு முஸ்லிம்களின்
தளபதியை உற்சாகப்படுத்தும்படி” கட்டாயப்படுத்தினர்.
அப்படி வரும் பட்சத்தில்
முஸ்லிம்களைத் தாக்கிட பதுங்குக் குழிகளை அமைத்திருந்தினர் ரோமர்கள். இதை அறிந்த அந்த
முஸ்லிம் கைதி, இப்படி கடித வாசகங்களை அமைத்தார். ( نَصَحْتُ، فَدَعْ رَيْبَكَ وَدَعْ مَهْلُكَ ) “நான் உபதேசம் செய்துவிட்டேன். எனவே சந்தேகத்தை விடுக. தாமதம் தவிர்த்திடுக”
(அதாவது; நான் தெளிவாகச் சொல்கிறேன்.
எவ்வித ஐயமும் இன்றி, தாமதமின்றி தாக்குதல் நடத்த வாருங்கள்.)
அவர் எழுதியதை ரோமர்கள்
படித்துப் பார்த்தனர். அவர்கள் நினைத்தபடியே அவர் எழுதியிருந்தார்.
கடிதம் முஸ்லிம்படையின்
தளபதியிடம் வந்தது. கைதி சொல்ல வந்ததை தளபதி புரிந்துகொண்டார். கடிதத்தின் வார்த்தைகளை
இடமிருந்து வலமாக படித்தால் அது எச்சரிக்கையூட்டும் வாசகங்களாக இருந்தன.
அதாவது, ( كُلُّهُمْ
عَدُوٌّ كَبِيرٌ عَدٌّ فَتَحَصَّنَ ) “இவர்கள் அனைவரும் பெரிய எதிரிகள். திரும்பிச்சென்று பாதுகாப்பை
பெற்றுக்கொள்ளுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. (முஸ்லிம்படையினர் ரோம் மீது தாக்குதல்
நடத்தாமல் திரும்பிச் சென்றனர். ரோமர்களின் சூழ்ச்சியிலிருந்து தப்பினர்.) நூல்:- அத்தரீஃப்
வல்ஙரீப் ஃபில்லுஙத்தி வத்தஅலீஃப் - முஹம்மத் ரஜப் அஸ்ஸாமுராயீ ( الطريف والغريب في اللغة والتأليف - محمد
رجب السامرائي )
ஆர்க்கிடெக் என்பவர்
வரைந்துத் தரும் கட்டிடங்களின் புளூ பிரிண்ட் எல்லோருக்கும் புரிவதில்லை. ஆனால், கட்டிடப் பொறியாளருக்கு
புரியும்.
தூய தமிழில் உள்ள
திருக்குறள் எல்லோருக்கும் புரிவதில்லை. ஆனால், தமிழ் ஆசிரியர்களில்கூட சிலருக்கு மட்டுமே புரியும்.
பத்திரிக்கையாளர்கள்
ஒருவரை பேட்டி கேட்கும்போது குறுக்கெழுத்து முறையை கையாளுவார்கள். அது சாதாரண மனிதருக்கு
புரியாது. மற்றொரு பத்திரிக்கையாளருக்கு புரியும்.
குழந்தையின் அழுகையும், சிணுங்கலும் எதற்கு? என்று தாய்க்கு தான்
புரியும். தந்தைக்கு அவ்வளவு எளிதில் புரியாது.
கண் பார்வையற்றவர்களுக்கென்று
குர்ஆனும், நூல்களும் தனியாக இருக்கின்றன. நம்மைப் போன்றோர் அதைப் பார்த்தால் வெறுமனே வெள்ளை
காகிதமாக மட்டும்தான் தெரியும். ஆனால் அந்த நூல்களை கண்பார்வையற்றோர் கைகளால் தடவிக்கொண்டே, இருக்கின்ற அனைத்தையும்
மிகச்சரியாக வாசித்துவிடுவார்கள். இன்னும் சற்று கூடுதலாக கண்பார்வையற்ற சிலர் குர்ஆன்
முழுவதையும், ஏராளமான நபிமொழிகளையும் அது போன்ற நூல்களின் துணையோடு மனனமிட்டு முடித்துள்ளார்கள்.
எல்லோருக்கும் எல்லாமும் புரியாது.
மரண நோய்
அப்துல்லாஹ் பின்
அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ
அந்த நோயின்போது அவர்களிடமிருந்து அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் (அவர்களை நலம்
விசாரித்துவிட்டு) வெளியேறினார்கள். உடனே மக்கள், ( يَا أَبَا حَسَنٍ، كَيْفَ أَصْبَحَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم
) “அபுல்ஹசனே! அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்?” என்று (கவலையுடன்) விசாரிக்க, அதற்கு அவர்கள், ( أَصْبَحَ
بِحَمْدِ اللَّهِ بَارِئًا ) “அல்லாஹ்வின் அருளால் நலமடைந்துவிட்டார்கள்” என்று சொன் னார்கள்.
அப்போது அப்பாஸ் பின்
அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு அவர்களிடம், ( وَإِنِّي
وَاللَّهِ لأُرَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَوْفَ يُتَوَفَّى مِنْ
وَجَعِهِ هَذَا، إِنِّي لأَعْرِفُ وُجُوهَ بَنِي عَبْدِ الْمُطَّلِبِ عِنْدَ
الْمَوْتِ ) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரைவில் தமது
இந்த நோயின் காரணத்தால் இறந்துவிடப் போகிறார்கள் என்றே நான் கருதுகிறேன். மரணத்தின்போது
அப்துல் முத்தலிபுடைய மக்களின் முகங்களை(ப் பார்த்து மரணக் களையை) அடையாளம் கண்டு கொள்பவன்
நான்" என்று கூறினார். நூல்:- புகாரீ-4447
அலீ (ரலி) அவர்களுக்கு
புரியாத ஒன்று அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு புரிந்துள்ளது. காரணம், அப்பாஸ் (ரலி) அவர்கள்
வயதில் மூத்தவர், அனுபவசாலி.
வயதில் மூத்தவர்களில்
சிலர் நோயாளியின் முகத்தைப் பார்த்தவுடன் இவர் பிழைப்பாரா?
மாட்டாரா? என்பதை சொல்லிவிடுவார்கள்.
அது அவர்களுக்கு அனுபவம் கற்றுததந்த பாடம்.
பழையக் கால வைத்தியர்கள்
நோயாளியின் கைநாடியைப் பிடித்து பார்த்தவுடன், என்ன நோய் என்பதை துல்லியமாக சொல்லிவிடுவார்கள்.
இன்றைய மருத்துவர்கள்
(ஊடுகதிர் எனும்) எக்ஸ்ரே, ஸ்கேன், ஈ.சி.ஜி, இரத்தம் மற்றும் மலம் சிறுநீர் பரிசோதனை ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ள
பேப்பர்களை (ரிப்போர்ட்) பார்த்தவுடன் இவருக்கு இன்ன நோய் இருக்கிறது என்பதாக சொல்லிவிடுகிறார்கள்.
ஒரு சாமானியன், நோயாளியின் கைநாடியைப்
பிடித்து பார்த்தாலும் அல்லது இந்த பரிசோதனைகளின் பேப்பர்களை (ரிப்போர்ட்) பார்த்தாலும்
ஒன்றும் புரியாது.
இவனும் ஒரு சுப்ஹானல்லாஹ்
சிலோனைச் சேர்ந்த
மௌலானா நியாஸ் அவர்கள் துபாய்க்கு சென்றிருந்தபோது, நம் தமிழ் மக்களில் தொழாதவர்களை தொழுகைக்கு அழைக்கலாம்
என்று தமிழ் முஸ்லிம் மக்கள் வசிக்கும் கூடாரங்களைத் தேடி,
தமிழ் முஸ்லிம் ஒருவரோடு சென்றார்களாம்.
மௌலானா அவர்கள் அவரிடம், “தொழாதவர்களைக் கண்டால் சொல்! அவரை தொழுகைக்கு அழைக்கலாம்” என்றார்களாம்.
அவர் எதிரில் வந்த
சிலரை சப்தமாக அழைத்து, “இவன் தொழாதவன் தான் ஹஸ்ரத்” என்றார். மௌலானா அவர்கள் அவரிடம், “யாரையும் தொழாதவர் என்று வெளிப்படையாக சொல்லக்கூடாது. இனி அப்படிப்பட்டவர்கள்
வந்தால் "சுப்ஹானல்லாஹ்" என்று சொல் நான் புரிந்துகொள்கிறேன்” என்றார்களாம்.
அது முன்னதைவிட விபரீதம் ஆகிவிட்டது. அவர், தொழாதவர்கள் எதிரில் வந்தால் "இந்தா ஒரு சுப்ஹானல்லாஹ், இவனும் ஒரு சுப்ஹானல்லாஹ், ஒரு அறையைத் திறந்து
இங்கு இருக்கும் எல்லா பயல்களும் சுப்ஹானல்லாஹ் தான் ஹஸ்ரத்" என்றானாம். மௌலானா
அவர்கள் தலையில் அடித்துக் கொண்டார்களாம்.
நாம் ஒருவரிடம் ஒன்றைப்
பற்றி எடுத்துரைக்கிறோம். அது அவருக்கு புரியவில்லை. ஆனால், அவர் தனக்கு புரிந்ததாக
தலையாட்டுகிறார் என்றால், அவருடன் நாம் பயணிப்பது சிறந்ததாக இருக்காது.
எதிராளிகள் சொல்வதை
விளங்கி செயல்படும் சமயோகித அறிவை அல்லாஹுத்தஆலா நமக்கு வழங்கி, அருள்புரிவானாக! ஆமீன்!
மௌலவி மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951