Search This Blog

Monday, 31 August 2026

விசாரிக்கப்படுவோம்

 

விசாரிக்கப்படுவோம்

 

فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا

தனது வினைப் பதிவேட்டை வலக்கரத்தில் வழங்கப்பெற்றவர், விரைவில் இலகுவான கேள்வி கேட்கப்படுவார். திருக்குர்ஆன்:- 84:7,8

 

ஓர் முஸ்லிம், அல்லாஹுத்தஆலாவை நம்புவதைப் போல், மறுமை நாளையும் அதில் நடைபெற இருக்கும் நிகழ்வுகளை நம்பவேண்டும். குறிப்பாக, விசாரணை மன்றத்தில் அவன் தமது வாழ்நாளில் செய்த நன்மை - தீமை என அனைத்தை பற்றியும் விசாரிக்கப்படுவான்.

 

ஓர் இறைநம்பிக்கையாளன் இலகுவான முறையில் விசாரிக்கப்படுவதைப் போன்று, ஓர் இறைமறுப்பாளன்  விசாரிக்கப்படமாட்டான். அவனுக்குரிய விசாரணை மிகவும் கடுமையாக இருக்கும்.

 

மறுமைநாளில் மனிதர்களது நிலையைப் பொறுத்து விசாரணையின் கால அளவு குறுகியதாகவோ, மிக நீண்டதாகவோ, இலகுவானதாகவோ, கடினமானதாகவோ அமையும். செயற்பதிவேடுகள் காட்டப்படுவது தவிர்ந்து வேறெந்த விசாரணையும் இல்லாமலே சுவர்க்கம் செல்வோருமிருப்பர். நீண்ட நெடுங்காலம் விசாரணைக்காக நின்று அல்லல் படுவோரும் அங்கிருப்பர்.

 

மறைத்துவிடுவான்

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் இறைநம்பிக்கையாளரை தன் பக்கம் நெருங்கச்செய்து, அவர்மீது தன் திரையைப் போட்டு அவரை மறைத்துவிடுவான். பிறகு அவரை நோக்கி, (  أَتَعْرِفُ ذَنْبَ كَذَا أَتَعْرِفُ ذَنْبَ كَذَا ) ‘‘நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா? நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?” என்று கேட்பான். அதற்கு அவர், “ஆம், என் இறைவா!” என்று கூறுவார். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக்கூறி) அவர் (தாம் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக்கொள்ளச் செய்வான்.

 

அந்த இறைநம்பிக்கையாளர், ( أَنَّهُ هَلَكَ ) “நாம் இத்தோடு ஒழிந்தோம்” என்று தம்மைப் பற்றிக் கருதிக்கொண்டிருக்கும்போது இறைவன், ( سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا، وَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ‏ ) “இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்துவைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்துவிடுகிறேன்” என்று கூறுவான். அப்போது அவரது நற்செயல்களின் பதிவேடு அவரிடம் கொடுக்கப்படும். நூல்:- புகாரீ-2441

 

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர் விசாரணைக்காக அழைக்கப்படுவார். அப்போது அவருடைய இறைவன் அவருடைய வினைப் பதிவுகளை அவருக்கும் தனக்கும் மட்டும் தெரிகின்ற வகையில் எடுத்துக்காட்டுவான்.

 

அவர் ஆம்! என் இறைவா! நான் செய்தேன்; நான் செய்தேன்; நான் செய்தேன்; என்று கூறி, ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பார்.

 

எனவே, அவருடைய பாவங்களை அவருக்காக அல்லாஹ் மன்னித்து, அவரைவிட்டு மறைப்பான். அதையடுத்து பூமியிலுள்ள எந்த உயிரும் அவருடைய பாவங்களில் ஒன்றைக்கூட காணமுடியாது. அவருடைய நன்மைகள் (மட்டுமே) வெளியே தெரியும். மக்கள் அனைவரும் அந்த நன்மைகளையே காண வேண்டும் என அல்லாஹ் விரும்புவான். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர் யாசீன் வசனம்-65

 

இலகுவான விசாரணை

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் சில தொழுகைகளில், ( اللَّهُمَّ حَاسِبْنِي حِسَابًا يَسِيرًا ) "இறைவா! இலகுவான முறையில் என்னை விசாரிப்பாயாக" என்று பிரார்த்தித்தார்கள். அவர்கள் தொழுகை முடித்தவுடன், ( مَا الْحِسَابُ الْيَسِيرُ؟ )  "(நாயகமே!) இலகுவான விசாரணை என்றால் என்ன?" என்று வினவினேன்.

 

நபியவர்கள், ( أَنْ يَنْظُرَ فِي كِتَابِهِ فَيَتَجَاوَزُ لَهُ عَنْهُ، إِنَّهُ مَنْ نُوِقش الحسابَ يَا عائشةُ يَوْمَئِذٍ هَلَكَ ) "(மறுமைநாளில், அல்லாஹ்) ஒருவனின் வினைப் பதிவேடை பார்த்துவிட்டு, கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவான். ஆயிஷா! அன்று யார் துருவித் துருவி விசாரிக்கப்படுகிறாரோ, அவர் அழிந்தார்" என்று பதிலளித்தார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், இப்னு குஸைமா, ஹாகிம், தஃப்சீர் இப்னு கஸீர்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், ( لَيْسَ أَحَدٌ يُحَاسَبُ إِلاَّ هَلَكَ ) ‘‘(மறுமை நாளில்) விசாரணை செய்யப்படும் எவரும் அழிந்தே போய்விடுவார்” என்று சொன்னார்கள்.

 

“எவரது வினைப்பதிவேடு அவரது வலக் கரத்தில் வழங்கப்படுமோ, அவர் எளிதான முறையில் விசாரணைக் குள்ளாக்கப்படுவார்” என்றல்லவா அல்லாஹ் (84:8ஆவது வசனத்தில்) கூறுகின்றான்? என்று நான் கேட்டேன்.

 

நபியவர்கள், ( ذَاكَ الْعَرْضُ يُعْرَضُونَ، وَمَنْ نُوقِشَ الْحِسَابَ هَلَكَ  ) ‘‘இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்கள் புரிந்த நன்மை தீமைகளின் பட்டியலை) அவர்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்படுதலாகும்; கேள்வி கணக்கின்போது யார் துருவித் துருவி விசாரிக்கப்படுவாரோ, அவர் அழிந்தார்” என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-4939, முஸ்லிம்-5514, திர்மிதீ-2350

 

தலைப்பில் காணும் திருவசனத்தின் விளக்கம் என்னவென்றால், அவர்கள் புரிந்த நன்மை - தீமைகள் அவர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டுத் துருவி ஆராயாமல் விடப்படும். எனவே, அவர்களின் விசாரணை சுலபமாக முடிந்துவிடும். எவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு துருவித் துருவி கணக்கு வாங்கப்படுவாரோ அவர் நிலை திண்டாட்டம் தான்.

 

உன்னை மறந்துவிடுகிறேன்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மறுமைநாளில்) இறைவன் அடியானைச் சந்தித்து, ( أَىْ فُلْ أَلَمْ أُكْرِمْكَ وَأُسَوِّدْكَ وَأُزَوِّجْكَ وَأُسَخِّرْ لَكَ الْخَيْلَ وَالإِبِلَ وَأَذَرْكَ تَرْأَسُ وَتَرْبَعُ ) "இன்ன மனிதனே! உன்னைக் கண்ணியப்படுத்தி, உன்னைத் தலைவனாக்கி, உனக்கு(த் தகுந்த) துணையையும் நான் வழங்கவில்லையா? குதிரைகளையும் ஒட்டகங்களையும் நான் உன் வசப்படுத்தவில்லையா? உன்னை (செல்வாக்குள்ள) தலைவனாக்கிப் போர் செல்வத்தில் நான்கில் ஒரு பகுதியை உனக்கு உரிமையாக்கவில்லையா?" என்று கேட்பான்.

 

அதற்கு அந்த அடியான், "ஆம்" என்பான். இறைவன், ( أَفَظَنَنْتَ أَنَّكَ مُلاَقِيَّ ) "நீ என்னை சந்திப்பாய் என எண்ணினாயா?" என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், "இல்லை" என்பான். இறைவன், ( فَإِنِّي أَنْسَاكَ كَمَا نَسِيتَنِي ) "அவ்வாறாயின், நீ என்னை மறந்ததைப் போன்றே நானும் உன்னை மறந்து விடுகிறேன்" என்பான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்  நூல்:- முஸ்லிம்-5678, அத்தவ்ஹீத் இமாம் இப்னு குஸைமா, இப்னு அபீ ஷைபா

 

"இன்று நானும் உன்னை மறக்கிறேன்" என்பதற்கு, ( اَلْيَومَ اَتْرُكُكَ فِي الْعَذَابِ ) "இன்று உன்னை நான் வேதனையில் விட்டுவிடுகிறேன்" என்று பொருள். இவ்வாறு இதற்கு அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

 

அறிஞர்களில் சிலர், "அவ்வாறே இன்று அவர்களை நாம் மறந்துவிடுவோம்" எனும் (7:51ஆவது) வசனத் தொடருக்கு, "இன்று நாம் அவர்களை வேதனையில் (தத்தளிக்குமாறு) விட்டு விடுவோம்" என்பதே பொருளாகும் என விளக்கம் அளித்துள்ளனர். நூல்:- திர்மிதீ-2352

 

வாய்க்கு முத்திரையிடப்படும்

 

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. (மறுமைநாளில்) இறைமறுப்பாளரும், நயவஞ்சகரும் விசாரணைக்காக அழைக்கப்படுவர். அப்போது அவருடைய இறைவன் அவருடைய வினைகளை எடுத்துக்காட்டுவான். அவர், (أَيْ رَبِّ، وَعَزَّتِكَ لَقَدْ كَتَبَ عَلَيَّ هَذَا الْمَلَكُ مَا لَمْ أَعْمَلْ ) "என் இறைவா! உனது கண்ணியத்தின் மீதாணையாக! இந்த வானவர் நான் செய்யாதவற்றை எனக்கெதிராக பதிவு செய்துவிட்டார்" என்று கூறி அவற்றை மறுப்பார்.

 

அப்போது அவரிடம் அந்த வானவர், ( أَمَا عَمِلْتَ كَذَا، فِي يَوْمِ كَذَا، فِي مَكَانِ كَذَا؟ ) "நீ இன்ன நாளில் இன்ன இடத்தில் இன்ன செயலைச் செய்யவில்லையா?" என்று கேட்பார். அதற்கு அவர், ( لَا وَعِزَّتِكَ أيْ رَبِّ مَا عملتُه ) "இல்லை; என் இறைவா! உனது கண்ணியத்தின் மீதாணையாக! நான் அதைச் செய்யவில்லை" என்பார். இவ்வாறு அவர் நடந்துகொள்ளும்போது அவரது வாய்க்கு அல்லாஹ் முத்திரையிடுவான்.

 

இப்படி கூறிய அபூமூசா (ரலி) அவர்கள் அதைத்தொடர்ந்து, ( فَإِنِّي أَحْسَبُ أَوَّلَ مَا يَنْطِقُ مِنْهُ الْفَخِذُ ) "அந்த மனிதரின் உறுப்புகளில் முதன் முதலில் (அவருக்கெதிராகப்) பேசும் உறுப்பு நிச்சயமாக அவரது வலப்புற தொடையாகவே இருக்கும் என கருதுகிறேன்” என்று கூறினார்கள்.

 

பின்னர், "அவர்களின் வாய்களுக்கு இன்று நாம் முத்திரையிடுவோம். அவர்களின் கைகள் நம்மிடம் பேசும். அவர்கள் தேடிக்கொண்டிருந்த (தீய)வை பற்றி அவர்களின் கால்கள் சாட்சியமளிக்கும்" (36:65) எனும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். நூல்:- தஃப்சீர் அத்தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர் யாசீன் வசனம்-65

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மறுமைநாளில்) அடியான் (தன் இறைவனிடம்), ( يَا رَبِّ أَلَمْ تُجِرْنِي مِنَ الظُّلْمِ ) "என் இறைவா! நீ எனக்கு அநீதியிழைப்பதிலிருந்து பாதுகாப்பு வழங்குவாய் என உறுதியளிப்பாய் அல்லவா?" என்று கேட்பான்.

 

அதற்கு இறைவன், "ஆம்" என்பான். அடியான், ( فَإِنِّي لاَ أُجِيزُ عَلَى نَفْسِي إِلاَّ شَاهِدًا مِنِّي ) "அவ்வாறாயின், எனக்கெதிராக (சாட்சியம் கூற) என்னிலிருந்து தவிர வேறெந்த சாட்சியத்தையும் நான் அனுமதிக்கமாட்டேன்" என்று கூறுவான்.

 

அதற்கு இறைவன், ( كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ شَهِيدًا وَبِالْكِرَامِ الْكَاتِبِينَ شُهُودًا ) "இன்றைய தினம் உனக்கெதிராகச் சாட்சியமளிக்க நீயும் கண்ணியமிக்க எழுத்தர்(களான வானவர்)களுமே போதும்" என்பான். பிறகு அவனது வாய்க்கு முத்திரையிடப்படும். அவனுடைய உறுப்புகளிடம், "பேசுங்கள்" என்று சொல்லப்படும். உடனே அவை அந்த அடியான் செய்த செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும்.

 

பிறகு அந்த அடியானும் உறுப்புகளும் தனியாகப் பேசுவதற்கு அனுமதியளிக்கப்படும். அப்போது அந்த அடியான், ( بُعْدًا لَكُنَّ وَسُحْقًا ‏ فَعَنْكُنَّ كُنْتُ أُنَاضِلُ ) "உங்களுக்கு நாசமுண்டாகட்டும்! தொலைந்துபோங்கள். உங்களுக்காகத் தானே நான் (இவ்வளவு நேரம் இறைவனிடம்) வழக்காடினேன்" என்று (தன் உறுப்புகளிடம்) சொல்வான். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5679

 

திருக்குர்ஆன் விரிவுரையாளர் பேரறிஞர் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இறைமறுப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்கள் ஆகியோர் சந்திக்கும் நிலையாகும்.

 

அவர்கள் இவ்வுலகில் இழைத்த குற்றங்களை மறுத்து, தாம் அவற்றைச் செய்யவே இல்லை என்று (மறுமைநாளில்) சத்தியம் செய்வார்கள். வானவர்கள்மீது வீண்பழி சுமத்துவார்கள். அப்போது அவர்களின் வாய்களுக்கு அல்லாஹ் முத்திரையிடுவான். அவர்களின் உறுப்புக்கள் செய்தவற்றை, அந்த உறுப்புகளையே சொல்ல வைப்பான்.

 

சாக்குப் போக்குகள் வெல்லாது

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يُعْرَضُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ ثَلاَثَ عَرَضَاتٍ فَأَمَّا عَرْضَتَانِ فَجِدَالٌ وَمَعَاذِيرُ وَأَمَّا الْعَرْضَةُ الثَّالِثَةُ فَعِنْدَ ذَلِكَ تَطِيرُ الصُّحُفُ فِي الأَيْدِي فَآخِذٌ بِيَمِينِهِ وَآخِذٌ بِشِمَالِهِ ) மறுமை நாளில் மக்கள் (விசாரணைக்காக அல்லாஹ்விற்கு முன்னால்) மூன்று கட்டங்களில் முன்னிறுத்தப்படுவார்கள். முதல் இரண்டு கட்டங்கள் வாக்குவாதமும் சாக்குப் போக்குகளாகவுமே இருக்கும். மூன்றாவது கட்டத்தில் வினைப்பதிவேடுகள் அவர்களின் கைகளை நோக்கிப் பறந்து வரும். தம் வலக் கையால் பதிவேட்டை பிடிப்பவரும் இருப்பர்; தம் இடக் கையால் பிடிப்பவரும் இருப்பர். அறிவிப்பாளர்:- அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2349, இப்னுமாஜா-4267, முஸ்னது அஹ்மத்

 

மறுமைநாளில் மூன்று கட்டங்களாக மனிதர்களிடம் விசாரணை நடைபெறும். முதல்முறை மனிதர்கள் மறுக்கும் உத்தியைக் கையாள்வார்கள். இறைத்தூதர்கள் யாரும் எங்களுக்கு வரவில்லை; எனவே, எங்களுக்கு ஒன்றும் தெரியாது என அல்லாஹ்வின்மீதே குற்றம் சாட்டப்பார்ப்பார்கள்.

 

அடுத்த கட்டத்தில், வேறு வழியின்றி தங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்வார்கள்; ஆனால், அவற்றையெல்லாம் அறியாமையிலோ தவறுதலாகவோ செய்துவிட்டதாக சாதிக்கப்பார்ப்பார்கள்.

 

உடனே மூன்றாவது கட்டமாக, அவர்களின் வினைப்பதிவேடுகள் பறந்து வந்து அவர்களின் கைகளை எட்டும். தாங்கள் அறியாமலேயே சிலர் வலக் கையிலும் சிலர் இடக் கையிலும் வினை பதிவுகளைப் பிடித்துக்கொள்வார்கள். வலக் கையில் பிடிப்போர் நற்பெயர் பெற்றவர்கள்; இடக் கையில் பிடிப்போர் துர்பேறு பெற்றவர்கள் ஆவர். நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ

 

தனித்தனியாக

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا سَيُكَلِّمُهُ اللهُ، لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ ) அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் (தனித்தனியாகப்) பேசாமலிருப்பதில்லை. அப்போது அல்லாஹ்விற்கும் உங்களில் ஒருவருக்கும் இடையே மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். அறிவிப்பாளர்:- அதீ பின் ஹாத்திம் (ரலி) நூல்:- முஸ்லிம்-1846

 

அல்லாஹுத்தஆலா நமக்கு மறுமை நாளில் விசாரணையை இலேசாக்கி, வலக் கையில் பதிவேட்டை வழங்கி கண்ணியப்படுத்துவானாக! ஆமீன்!

 

மௌலவி மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951


No comments:

Post a Comment

எல்லோருக்கும் புரியாது

  எல்லோருக்கும் புரியாது فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ فَقَالَ إِنِّي سَقِيمٌ   فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِينَ (பண்டிகை விழாவிற்கு இ...