பெண் கல்வியின் முக்கியத்துவம்
قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا
يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ
அறிந்தோரும், அறியாதோரும்
சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே! (அல்குர்ஆன்
39:9)
இஸ்லாம், கல்வியறிவு
என்பது மனித குலத்திற்கு அவசியமென அறிவுறுத்துகிறது. மேலும், அதில்
ஆண் பெண் என பாலினப் பகுபாடு இல்லை என்றும் அறிவுறுத்துகிறது.
கல்வி என்பது ஆண் பெண் என
இருபாலருக்கும் அவசியமான ஒன்றாகும். கல்வி ஒரு தனிமனிதன் புத்திசாலியாக இருக்கவும், புதிய
விஷயங்களைக் கற்கவும், உலகம் மற்றும் மறுமையின் உண்மைகளைப் பற்றி அறிந்து
கொள்ளவும் உதவுகிறது.
இன்றைக்கு வளர்ந்த நாடு என்பது, பெண்களின்
கல்வியறிவைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. ஆக, நன்றாகப்
படித்து வளர்ந்த பெண் நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்ற முடியும். ஒரு படித்த
பெண் பல்வேறு துறைகளில் இருக்கும் ஆண்களின் சுமையையும் பகிர்ந்துகொள்ள முடியும். நன்றாகப்
படித்த ஒரு பெண் வருங்காலத்தில் ஓர் ஆசிரியராக, எழுத்தாளராக, மருத்துவராக, விஞ்ஞானியாகப்
பணியாற்ற முடியும். மற்ற முக்கியமான துறைகளிலும் அவளால் சிறப்பாக செயல்பட முடியும்.
இவ்வாறு பெண் கல்வியில் பல நன்மைகள் உள்ளன.
பெண்ணுக்கு மார்க்கக் கல்வியை
கட்டாயம் கற்பிக்க வேண்டும். அந்த மார்க்கக்கல்வி தான், அவள்
நேர்வழியில் செல்ல எடுத்துரைக்கிறது. இறையச்சத்தை உணர்த்தி, தவறு
செய்யவிடாமல் தடுக்கிறது. நம்முடைய வாழ்க்கையின் உண்ணுதல், உறங்குதல், சம்பாதித்தல், பிற
மனிதர்களிடம் பழகுதல் போன்ற அனைத்து அம்சங்களிலும் நல்லொழுக்கத்தைக் கற்றுத்தந்து
நம்மை இறையச்சமுள்ள மனிதனாக செதுக்குகிறது. சுருங்கக்கூறின்: மனிதன் மனிதனாக வாழ பயிற்சி
அளிக்கிறது.
ஒரு பெண் மார்க்கக் கல்வியறிவு
பெற்றவளாக இருந்துவிட்டால், அது அவளின் குடும்பத்தில் உள்ளவர்களிடம் நற்பண்பையும்
நல்லொழுக்கத்தையும் உண்டாக்கும். ஒரு பெண்ணின் கல்வியின் முக்கியத்துவம் குடும்பத்தின்
தலைமுறையிலும் குடும்பத்தின் வாழ்க்கை முறையிலும் பிரதிபலிக்கிறது.
சமூகம் பெண்ணிடமிருந்து பிறக்கிறது, மேலும்
பெண்ணுக்கு கல்விக்கான அணுகல் வழங்கப்படாவிட்டால், ஒரு
மனிதன் அவர்களிடம் புகுத்த வேண்டிய அனைத்து முதன்மை கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள்
மற்றும் பண்புகளிலிருந்து சமூகம் தடுக்கப்படும்.
கல்வித்
தாய்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். ( خُذُوا
شَطْرَ دِينِكُمْ عَن هٰذِهِ الْحُمَيْرَاءَ ) உங்கள் மார்க்கத்தின்
ஒருப் பகுதியை இந்த ஹுமைராவிடமிருந்து (ஆயிஷா-ரலி அவர்களிடமிருந்து) எடுத்துக்கொள்ளுங்கள்.
நூல்:- நிஹாயா இப்னுல் அஸீர், முஸ்னது அல்பிர்தவ்ஸ், அல்மகாஸிதுல் ஹசனா இமாம் சஹாவீ
அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி)
அவர்கள் கூறியதாவது. ( مَا
أَشْكَلَ عَلَيْنَا أَصْحَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدِيثٌ قَطُّ فَسَأَلْنَا عَائِشَةَ إِلاَّ وَجَدْنَا عِنْدَهَا مِنْهُ عِلْمًا ) பேராசான்
பெருமானார் (ஸல்) அவர்களின் தோழர்கள் ஆகிய எங்களுக்கு ஏதேனும் ஒரு நபிமொழியை அறிந்து
கொள்வதில் சிரமம் ஏற்படுமானால், நாங்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டு அதற்கான
விளக்கத்தை பெற்றுக்கொள்வோம். நூல்:- திர்மிதீ-3808
மூசா பின் தல்ஹா (ரஹ்) அவர்கள்
கூறியதாவது. ( مَا
رَأَيْتُ أَحَدًا أَفْصَحَ مِنْ عَائِشَةَ ) ஆயிஷா (ரலி) அவர்களைவிட
தெள்ளத் தெளிவாக இலக்கிய நயத்துடன் பேசுகின்ற யாரையும் நான் கண்டதில்லை. நூல்:- திர்மிதீ-3809
இமாம் ஸுஹ்ரி (ரஹ்) அவர்கள்
கூறியதாவது. ( لَوْ
جُمِعَ عِلْمُ عَائِشَةَ إِلَى عِلْمِ جَمِيْعِ اَزوَاجِهِ وَعِلْمِ جَمِيْعِ
النِّسَاءِ، لَكَانَ عِلْمُ عَائِشَةَ أَفْضَلَ ) ஆயிஷா (ரலி) அவர்களது அறிவை, அண்ணல்
நபி (ஸல்) அவர்களின் ஏனைய மனைவியர்களின் அறிவுடனும், அனைத்து
பெண்களின் அறிவுடனும் ஒன்று சேர்த்துப்பார்த்தால் ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவே (அவற்றிலே)
மிக சிறந்ததாக இருக்கும். நூல்:- முவத்தா மாலிக், முஸ்னது இப்னு ராஹவைஹி
ஹிஷாம் இப்னு உர்வா (ரஹ்)
அவர்கள் கூறியதாவது. ( مَارَاَيتُ
أَحَدًا أَعْلَمَ بِفِقْهٍ وَلَا طِبٍّ وَلَا بِشِعْرٍ مِنْ عَائِشَةَ ) மார்க்கச்
சட்டம், மருத்துவம், கவிதை
போன்றவற்றில் ஆயிஷா (ரலி) அவர்களைவிட மிக அறிந்த ஒருவரை நான் பார்த்ததில்லை" என்று
கூறுகிறார். நூல்:- ஹாகிம், தஹ்தீபுல் கமால், ஸிஃபத்துஸ் ஸஃப்வா
உர்வா பின் ஸுபைர் ரஹ் அவர்கள்
கூறுகிறார்கள். ( مَا رَأَيْتُ أَحَدًا مِنْ النَّاسِ أَعْلَمَ بِالْقُرْانِ، وَلَا
بِفَرِيضَةٍ، وَلَا بِحَلَالٍ، وَلَا بِحَرَامٍ، وَلَا بِشِعْرٍ، وَلَا بِحَدِيثِ
الْعَرَبِ، وَلَا بِنَسَبٍ مِنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا )
“மக்களிடையே ஆயிஷா (ரலி) அவர்களைவிட குர்ஆனைப்
பற்றியோ, மார்க்கக்
கடமைகளைப் பற்றியோ, அனுமதிக்கப்பட்டவை
பற்றியோ, தடுக்கப்பட்டவை
பற்றியோ, கவிதைகளைப்
பற்றியோ, அரபுப்
பாரம்பரியங்களைப் பற்றியோ, வம்சாவளியைப்
பற்றியோ அதிக அறிவுடைய ஒருவரை நான் கண்டதில்லை. நூல்:- ஹாகிம், ஸிஃபத்துஸ் ஸஃப்வா
அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்குப்பின்
ஆட்சிப் பொறுப்பிலிருந்த கலீஃபா பெரும் மக்களும், உயர்
பெரும் மூத்த நபித்தோழர்களும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் பல
முடிவுகளைப் பெற்றிருக்கிறார்கள்
கிட்டத்தட்ட அண்ணல் நபி (ஸல்)
அவர்கள்டமிருந்து 2210 ஹதீஸ்களை அறிவித்து பெண்களில்
அதிக நபிமொழிகளை அறிவித்த பெருமை அவர்களை போய்ச்சேரும்.
இன்னும் அன்னை ஸஃபிய்யா (ரலி)
அன்னை உம்மு ஸலமா (ரலி) உம்முத்தர்தா (ரலி) போன்ற பெண்மணிகளும் கல்வியறிவில் ஆண்களுக்கு
நிகரான அறிவினை பெற்று திகழ்ந்ததாக காணமுடிகிறது.
இஸ்லாமிய வரலாற்றில் பெரும்
கல்வியாளர்களாக பெண்களும் வலம் வந்திருக்கிறார்கள், மாபெரும்
சட்டப் பிரச்சனைகளின் போதும், முக்கிய ஆலோசனைகளின் போதும் அவர்களின் பங்கு முக்கியமாய்
அமைந்திருந்ததை பார்க்க முடிகிறது. அவர்களின் முதன்மையானவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களே.
உங்களைப்
போன்ற சமுதாயம் தான்
உபைதுல்லாஹ் பின் ஸியாத்
(ரஹ்) அவர்கள் கூறியதாவது. புஸ்ர் அல்மாஸினிய்யீன் என்பவருடைய இரு மகன்களிடம் சென்றேன்.
அவ்விருவரும் நபித்தோழர்கள் ஆவார். அப்போது நான் அவர்களை நோக்கி! "அல்லாஹ் உங்கள்
இருவருக்கும் அருள்புரிவானாக!" என்று கூறிவிட்டு, ( الرَّجُلُ يَرْكَبُ مِنّا الدّابَّةَ فَيَضْرِبُها بِالسَّوْطِ، أوْ
يَكْبَحُها بِاللِّجامِ، فَهَلْ سَمِعْتُمَا مِن رَسُولِ اللَّهِ صلى الله عليه
وسلم فِي ذَلِكَ شَيْئًا ) "எங்களிலுள்ள
ஒரு மனிதன் தனது வாகனத்தின்மீது சவாரி செய்துகொண்டு அதை சவுக்கால் அடித்து, அல்லது கடிவாளத்தால்
கட்டுப்படுத்துகிறான். இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இருந்து ஏதேனும்
(நபிமொழிகளை) தாங்கள் செவியுற்றுள்ளீர்களா?" என்று
வினவினேன். அதற்கு அவ்விரு நபித்தோழர்களும், "இது
குறித்து எந்த நபிமொழிகளும் நாங்கள் செவியுற்றதில்லையே!" என்றனர். அப்போது வீட்டுக்குள்
இருந்து ஒரு பெண், ( يَا هَذَا إِنَّ اللَّهَ يَقُولُ فِي كِتابِهِ ) “(கேள்வி கேட்கும்) இன்னாரே! (இது குறித்து) நிச்சயமாக
அல்லாஹ்வே குர்ஆனில் சொல்லியிருக்கிறானே! என்று கூறியவாறு, கீழ்
காணும் திருவசனத்தை ஓதி காட்டினார்.
பூமியில் ஊர்ந்து திரியக்
கூடியவைகளும், தன்னுடைய இரு இறக்கைகளால் (ஆகாயத்தில்) பறக்கக்
கூடியவைகளும் உங்களைப் போன்ற (உயிருள்ள) படைப்புகளே (சமுதாயங்களே) அன்றி வேறில்லை
(திருக்குர்ஆன்:- 6:38)
(அதாவது
மனிதர்கள் மீது இரக்கத்தோடும் பரிவோடும் நடந்து கொள்வதைப் போல பிற உயிரினங்களிடமும்
கரிசனத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.)
அவ்விருவரும், (
هَذِهِ أُخْتُنَا وَهِيَ
أكْبَرُ مِنَّا، وَقَدْ أدْرَكَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ) "இவர்
எங்கள் சகோதரி. இவர் எங்களைவிட வயதில் மூத்தவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இருந்து
பலவற்றை அவர் செவியுற்றுள்ளார்" என்றனர். நூல்:- முஸ்னது அஹ்மத், அல்இசாபா, ஷுஅபுல்
ஈமான் இமாம் பைஹகீ, தாரீக் திமிஷ்க் இமாம் இப்னு அசாகிர், தஃப்சீர்
துர்ருல் மன்ஸூர்
குர்ஆனுக்கு அடுத்துத்தானே
நபிமொழிகள். உங்கள் கேள்விக்கு குர்ஆனில் பதில் இருக்கும்போது நபிமொழிக்கு ஏன் போகவேண்டும்
என்பது போல் அவரின் பதில் இருந்தது.
வித்தியாசமான
கேள்விகள்
தபஉ தாபிஈன்களில் ஒருவரான
ரபீஆ (ரஹ்) அவர்கள் ஒருமுறை காட்டு வழியாக நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டார்கள். அந்த
பயணத்தின்போது பங்கரையான தோற்றத்தில் ஒருவர் வந்து இணைந்துகொண்டார். வந்தவர், "நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?" கேட்டார்.
அப்போது அன்னார், "வெளியூரில் இருந்து என் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறேன்; என்
வீடு இன்ன இடத்தில் இருக்கின்றது" என்று கூறினார்கள்.
அவர், "அப்படியா? உங்கள்
வீட்டை கடந்துதான் என் இடத்திற்கு போக வேண்டியுள்ளது" என்று கூறிவிட்டு, "பயணக்
களைப்பு தெரியாமல் இருக்க கொஞ்சதூரம் உங்களை நான் தூக்கிக்கொண்டு வருகிறேன்; பிறகு, கொஞ்ச
தூரம் நீங்கள் என்னை தூக்கிக்கொண்டு வாருங்கள்" என்றார். அன்னார், அவரை
ஒரு முறை ஏற இறங்க பார்த்தார்கள். காரணம் ஒருவரை ஒருவர் தூக்கிக்கொண்டு செல்வது சாத்தியமா? இவர்
ஒரு மாதிரி போல் என்று எண்ணி விட்டு, அவரிடம்
எதுவும் பேசாமல் வந்தார்கள்.
சிறிது தூரம் கடந்தபின் ஒரு
ஜனாஸாவை அவர்களுக்கு அருகில் தூக்கிக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர், "இந்த
சடலம் இறந்ததா? அல்லது உயிருள்ளதா?" என்று
வினவினார். அப்போது அன்னார், வித்தியாசமான கேள்விகளை கேட்கும் இவர், நிச்சயமாக
ஒரு மாதிரி தான் என்று எண்ணி, அவரிடம் ஏதும் பேசாமல் மௌனமாக வந்தார்கள்.
மீண்டும் சிறிது தூரம் கடந்த
பின்னர் ஒரு இடத்தில் நன்கு விளைந்த கோதுமையை அறுவடை செய்துகொண்டிருந்தனர். அப்போது
அவர், "இது சாப்பிட்ட கோதுமையா? அல்லது
சாப்பிடாத கோதுமையா?" என்று வினவினார். அப்போது அன்னாருக்கு தர்ம சங்கடமாக
ஆகிவிட்டது. அவரிடம் எதுவும் பேசாமல் வந்தார்கள்.
சிறிது தூரம் கடந்து வந்த
பின்பு அன்னாரின் வீடு வந்துவிட்டது. அன்னார், "என்
வீட்டில் ஏதேனும் உண்டு விட்டு போகலாம் வாருங்கள்" என்று கூறி அவரை அழைத்தார்கள்.
அவர், "எனக்கு பருக, தண்ணீர்
மட்டும் தாருங்கள் போதும்" என்று கூறிவிட்டு, வீட்டுக்கு
வெளியே அமர்ந்துவிட்டார். அவருக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டதும் வாங்கி பருகிவிட்டு சென்றுவிட்டார்.அதன்பிறகு
அன்னார் தம் மகளிடம் நடந்தவற்றை விவரித்து இவர் பைத்தியம் போல் தெரிகிறது என்றார்கள்.
அதற்கு அன்னாரின் அன்பு மகளார்
தந்தையே! அவர் கேட்ட முதல் கேள்வி: பயணக் களைப்பு தெரியாமல் இருக்க ஒருவரை ஒருவர் தூக்கிக்கொண்டு
செல்வோம் என்றால், ஒருவருக்கொருவர் வரலாற்று நிகழ்ச்சியைச் சொல்லிக்
கொண்டு செல்வோம் என்று பொருள். வரலாற்று நிகழ்ச்சிகளை சொல்லிக்கொண்டு சென்றால் பயணக்
களைப்பு தெரியாது தானே!
இரண்டாவது கேள்வி: இந்த சடலம்
உயிருள்ளதா? இறந்ததா? என்றால், இறந்தவருக்காக
பிரார்த்தனை செய்யக்கூடிய (சாலிஹான) ஒழுக்கமுள்ள பிள்ளைகள் இருந்தால் உயிருள்ள சடலம்.
அவ்வாறு இல்லையெனில் அது இறந்த சடலம்.
மூன்றாவது கேள்வி: சாப்பிட்ட
கோதுமையா? சாப்பிடாத கோதுமையா? என்றால், அந்தக்
கோதுமையை விவசாயம் செய்தவர்கள் யாரிடமாவது பெரும் கடன் வாங்கி இருந்து, விளைந்ததும்
கடனுக்கு பகரமாக இந்தக் கோதுமையை கொடுத்துவிட வேண்டும் என்று நிபந்தனை இருந்தால், இது
சாப்பிட்ட கோதுமை. மாறாக, எந்த கடனும் இல்லாமல் விளைந்த கோதுமை அனைத்தும்
அவர்களுக்கே உரியதாக இருந்தால், அது சாப்பிடாத கோதுமை என்று விளக்கம் கூறினாள்.
பிறகு அன்னார், தம்முடன்
பயணத்தில் வந்தவர் பைத்தியம் அல்லன்; அவர்
சிறந்த ஞானி என்று விளங்கிக்கொண்டார்கள். அவரை தவறாக விளங்கிக்கொண்டோமே என்று வருத்தப்பட்டார்கள்; மகளின்
சிந்தனைத் திறனை எண்ணி வியந்து போனார்கள்.
கல்வி, பெண்களின்
சிந்தனையை விரிவுபடுத்துகிறது, அவளின் விரிவான சிந்தனை பலருக்கும் பயனளிக்கும்.
குறிப்பாக, அவளுடைய குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க உதவுகிறது.
தனக்கும் குடும்பத்துக்கும் எது சிறந்தது என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரத்தை அவளுக்கு
வழங்குகிறது.
பேசுவதெல்லாம்
குர்ஆன்
பேரறிஞர் அப்துல்லாஹ் பின் முபாரக்
(ரஹ்) அவர்கள் ஹஜ்ஜை முடித்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு
பெண்மணி பாலைவனப் பகுதியில் தனியாக இருந்தார். அப்போது அன்னார் அந்தப் பெண்ணுக்கு சலாம்
கூறினார்கள். அதற்கு அந்தப் பெண்மணி, ( سَلَامٌ قَوْلًا مِنْ رَبٍّ رَحِيمٍ ) “ஸலாமுன்”
என்று, நிகரற்ற அன்புடையோனுமான இறைவனிடமிருந்து சொல்லுதல்
உண்டு. (திருக்குர்ஆன்: 36:58) என்ற
வசனத்தை ஓதினார். (இதன்மூலம் ஸலாத்திற்கு பதில் ஸலாம் சொன்னார்.)
பிறகு அன்னார், “நீங்கள்
எங்கே போகின்றீர்?” என்று வினவினார்கள். அதற்கு அந்தப் பெண்மணி, ( سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ
الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى ) “(அல்லாஹ்)
மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து
தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச்
சென்றான்.” (திருக்குர்ஆன்: 17:1) என்ற வசனத்தை ஓதினார். (தான் பாலஸ்தீன் நாட்டுக்கு
போக வேண்டும் என்பதை இந்த வசனத்தின் மூலம் உணர்த்தினார்.)
பிறகு அன்னார், “நீங்கள்
எத்தனை நாட்களாய் இங்கே தங்கி இருக்கிறீர்?” என்று
வினவினார்கள். அதற்கு அந்தப் பெண்மணி, ( أَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلَاثَ لَيَالٍ سَوِيًّا ) “நீர்
சவுக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்.”
(திருக்குர்ஆன்: 19:10) என்ற வசனத்தை ஓதினாள். (அதாவது இந்த இடத்தில் மூன்று
நாட்களாக தங்கி இருப்பதாக இந்த வசனத்தின் மூலம் உணர்த்தினார்.)
பிறகு அன்னார், “இந்த
இடத்தில் சாப்பிட ஒன்றும் இல்லையே?” என்று
வினவினார்கள். அதற்கு அந்தப் பெண்மணி, ( وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ ) “நீங்கள்
நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும்.” (திருக்குர்ஆன்: 2:184) என்ற
வசனத்தை ஓதினார். (அதாவது மூன்று நாட்களும் தான் நோன்பு நோற்றதை இந்த வசனத்தின் மூலம்
உணர்த்தினார்.)
பிறகு அன்னார், “மூன்று
நாட்களாக இங்கே இருப்பதாக நீங்கள் சொல்லுகின்றீர்கள். தொழுகைக்காக உளூச் செய்வதற்கு
இங்கே தண்ணீர் இல்லையே? என்று வினவினார்கள். அதற்கு அந்தப் பெண்மணி, ( فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا
بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ إِنَّ اللَّهَ كَانَ عَفُوًّا غَفُورًا ) “(சுத்தம்
செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய
கைகளையும் தடவி “தயம்மும்” செய்து கொள்ளுங்கள்; (இதன்பின்
தொழலாம்) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும்
இருக்கின்றான்.” (திருக்குர்ஆன்: 4:43) என்ற
வசனத்தை ஓதினார். (அதாவது கடந்த மூன்று நாட்களும் தயமும் செய்து தொழுததாக உணர்த்தினார்.)
பிறகு அன்னார், “நான்
உங்களை பலஸ்தீனத்தில் கொண்டு போய் சேர்த்து விடட்டுமா? என்று
வினவினார்கள். அதற்கு அந்தப் பெண்மணி, ( وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ ) “நீங்கள் எதை செலவுச் செய்தாலும்
அதை ஏன் செய்கின்றீர்கள் என்று அல்லாஹ் அறிவான்”. (திருக்குர்ஆன்: 3:92) என்ற
வசனத்தை ஓதினார். (அதாவது நீங்கள் எனக்கு உதவி செய்வதாக சொல்லும் நோக்கத்தை அல்லாஹ்
அறிவான் என்று உணர்த்தினார்.)
பிறகு அன்னார், “ஒரு
ஒட்டகத்தை ஏற்பாடு செய்து அந்த ஒட்டகத்தின் மீது அப்பெண்மணியை அமரும்படி கூறினார்கள்.
அந்தப் பெண்மணி வாகனத்தில் ஏறி அமர்ந்ததும், ( سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ
مُقْرِنِينَ َإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ ) “அவற்றின்
முதுகுகளின் மீது நீங்கள் உறுதியாக அமர்ந்து கொள்வதற்காக; அவற்றின்
மேல் நீங்கள் உறுதியாக அமர்ந்ததும், உங்கள்
இறைவனுடைய அருளை நினைவு கூர்ந்து “இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை
வசப்படுத்தித்தந்த அ(வ் விறை)வன் மிக்க பரிசுத்தமானவன்” என்று நீங்கள் கூறுவதற்காகவும்.“மேலும், நிச்சயமாக
நாம் எங்கள் இறைவனிடத்தில் திரும்பிச் செல்பவர்கள் (என்று பிரார்த்தித்துக் கூறவும்
அவ்வாறு செய்தான்).” (திருக்குர்ஆன்: 43:13,14)
என்ற வசனத்தை ஓதினார்.
பிறகு அன்னார், “உங்களுக்கு
கணவர் இருக்கின்றாரா?” என்று வினவினார்கள். அதற்கு அந்தப் பெண்மணி, ( يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِنْ
تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ ) “இறைநம்பிக்கைக்கொண்டோரே!
சில விஷயங்களைப்பற்றி (அவசியமில்லாமல்) கேட்டுக் கொண்டிராதீர்கள். (அவை) உங்களுக்கு
வெளிப்படுத்தப்படுமானால் உங்களுக்கு (அது) தீங்காக இருக்கும்.” (திருக்குர்ஆன்: 5:101) என்ற
வசனத்தை ஓதிக் காட்டினார். (அதாவது உங்களுக்கு தேவையில்லாத விஷயத்தை கேட்க வேண்டாம்
என்று உணர்த்தினார்.)
பிறகு அன்னார், கொஞ்சம்
முறையை மாற்றி வேறுவிதமாக, “உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் இருக்கின்றார்கள்? என்று
வினவினார்கள். அதற்கு அந்தப் பெண்மணி, ( وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلًا ) "அல்லாஹ்
இப்ராஹீமை(த் தன்னுடைய) உண்மை நண்பராக எடுத்துக் கொண்டிருக்கிறான்." (திருக்குர்ஆன்:
4:125) ( وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا ) "மூஸாவு(க்கு
வஹ்யி அறிவித்தது)டன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்." (திருக்குர்ஆன்: 4:164) ( يَا يَحْيَى خُذِ الْكِتَابَ بِقُوَّةٍ ) (அதன் பின்னர்) “யஹ்யாவே! நீர்
இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளும்” (எனக் கூறினோம்); இன்னும்
அவர் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு நாம் ஞானத்தை அளித்தோம்” (திருக்குர்ஆன்:
19:12) ஆகிய மூன்று வசனங்களை ஓதினார். (அதாவது தனக்கு பிள்ளைகள்
மூன்றாகும். அவர்களின் பெயர் 1,இப்ராஹீம் 2,மூசா
3,யஹ்யா என்பதாகும் என்று உணர்த்தினார்.)
அப்பெண் ஊருக்குச் சென்றதும்
அவரது மூன்று பிள்ளைகளும் வந்து நலம் விசாரித்தனர். அப்போது அப்பெண்மணி அந்தப் பிள்ளைகளை
நோக்கி! கீழ்க்காணும் வசனத்தை ஓதினார். ( فَابْعَثُوا أَحَدَكُمْ بِوَرِقِكُمْ هَذِهِ إِلَى الْمَدِينَةِ
فَلْيَنْظُرْ أَيُّهَا أَزْكَى طَعَامًا فَلْيَأْتِكُمْ بِرِزْقٍ مِنْهُ ) “உங்களில்
ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள்
சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து
ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்.” (திருக்குர்ஆன்: 18:19) (அதாவது
நமது வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளிக்கு உண்ணுவதற்கு ஏதேனும் உணவு வாங்கி வாருங்கள்
என்று தம் பிள்ளைகளிடம் இந்த வசனத்தை ஓதுவதன் மூலம் உணர்த்தினார்.)
பிறகு உணவு வாங்கி வரப்பட்டது
அன்னார் அந்த உணவை உண்டு முடித்தார்கள். பிறகு அந்தப் பிள்ளைகளிடம் இவர் யாரென்று கேட்டபோது, அந்தப்
பிள்ளைகள் இவர் எங்களுடைய தாய் என்று கூறினார்கள். பிறகு அன்னார் "நாம் எதை கேட்டாலும்
உங்கள் தாய் குர்ஆன் வசனத்தின் மூலமாக பதிலளிக்கிறார் என்றார்கள்.
அதற்கு அவரின் பிள்ளைகள், “ஆம்!
எங்கள் தாய் சுமார் 60 வருடங்களாக இது போன்றுதான்
எதை கேட்டாலும், திருக்குர்ஆன் வசனத்தின் மூலமாக தான் பதிலளித்து
வருகின்றார்” என்று கூறினார்கள். (அதாவது எங்கள் தாய் பேசுவதே குர்ஆன் வசனமாகத்தான்
இருக்கும் என்றார்கள்.)
இதைக்கேட்டு மகிழ்ச்சியுற்ற
அன்னார், ( ذَلِكَ
فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ ) “அதுவே
அல்லாஹ்வின் அருளாகும், தான் விரும்பியவர்களுக்கு அதை அவனளிக்கிறான்; மேலும்
அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.” (திருக்குர்ஆன்: 62:4) என்ற
வசனத்தை ஓதிவிட்டு விடைபெற்றுச் சென்றார்கள்.
நூல்:- ஜவாஹிருல் அதப்
ஒரு தாயிடம் குர்ஆனிய கல்வி
இருந்துவிட்டால் அதன் பிரதிபலிப்பை அவளின் பிள்ளைகளிடம் காணலாம். தேசத்தின் எதிர்காலமாக
விளங்கும் குழந்தைகளின் முதன்மை ஆசிரியர்களாக பெண்கள் இருப்பதால், எதிர்கால
முன்னேற்றத்திற்கு பெண் கல்வி அவசியம். படிக்காத பெண்களால் குடும்பத்தை நிர்வகிப்பதற்கும், குழந்தைகளை
சரியான முறையில் கவனித்துக்கொள்வதற்கும் ஆற்றலுடன் பங்களிக்கமுடியாது. இதனால் பலவீனமான
எதிர்கால தலைமுறை உருவாகிறது.
பெண்களின் கல்விக்கு செலவு
செய்வதை வீண் விரயம் என்று கருதக்கூடாது. பெண் கல்வி கலாச்சாரத்தில் எழுச்சியை ஏற்படுத்தும்.
ஒரு நாட்டின் முன்னேற்றம் மற்றும் வீட்டின் முன்னேற்றம் என்பது பெண்களின் கல்வியில்
தங்கியுள்ளது. எனவே, பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்.
முதல்
பல்கலைக்கழகம்
உலகிலேயே முதன்முதலில் கி.பி.
859 ஆம் ஆண்டு மொரோக்கோவின் ஃபெஸ்
(Fez) என்ற நகரில் அல்கரவிய்யின் பல்கலைக்கழகம் (Al
Qarawiyyin University) நிறுவப்பட்டது. அதை நிறுவியவர் ஃபாத்திமா பின்த்
முஹம்மத் அல்ஃபிஹ்ரிய்யா அல்குறைஷியா என்றொரு முஸ்லிம் பெண்.
உலகிலேயே மிகப் பழமையானதும்
இன்று வரை இயங்கிக்கொண்டிருப்பதும் இந்தப் பல்கலைக்கழகம்தான். இதில் இன்னொரு புதுமை
என்னவென்றால் உலகிலேயே முதன்முதலாக படிப்பு முடிந்ததும் பட்டங்கள் அளிக்கப்படுவதை அறிமுகப்படுத்தியதும்
இந்தப் பல்கலைக்கழம்தான்! இதன் பிறகு தான் இதர பல்கலைக்கழகங்களில் பட்டங்கள் அளிக்கும்
பழக்கம் வந்தது.
தற்பொழுது துனீசியாவில் இருக்கும்
கைரோவான் என்ற இடத்தில் கி.பி. 800 கால அளவில் ஃபாத்திமா பிறந்தார்.
இவர் அரபுக் குறைஷி வம்சத்தில் வந்ததால் “அல்குறைஷிய்யா” என்றழைக்கப்பட்டார்.
கைரோவானிலிருந்து தற்பொழுது
மொரோக்கோவில் இருக்கும் ஃபெஸ் என்ற நகருக்கு அவரது குடும்பம் புலம் பெயர்ந்தது. வசதியில்லையென்றாலும்
அவருடைய தந்தை முஹம்மத் அல் ஃபிஹ்ரி கடுமையாக உழைத்து செல்வந்த வணிகர் ஆனார்.
ஃபாத்திமாவும் அவருடைய சகோதரி
மர்யமும் நன்றாகப் படித்தனர். இஸ்லாமியப் பாடங்களையும் ஃபிக்ஹ் கலையையும் ஹதீஸ் கலையையும்
கற்றுத் தேர்ந்தனர்.
ஃபாத்திமா திருமணம் முடித்து
சில காலங்களிலேயே அவருடைய கணவரும் தந்தையும் மரணித்துவிட்டார்கள் என்றும், தந்தை
தன் பெரும் செல்வத்தை தன் இரு மகள்களுக்கும் விட்டுச் சென்றார் என்றும், வரலாற்றுக்
குறிப்புகள் கூறுகின்றன.
தந்தையின் சொத்தில் தனக்குக்
கிடைத்த பங்கில் கி.பி. 845ல் ஏற்கனவே கட்டப்பட்டிருந்த ஒரு மஸ்ஜிதை ஃபாத்திமா
விலைக்கு வாங்கினார். அதனைச் சுற்றியுள்ள இடங்களையும் வாங்கிய ஃபாத்திமா, அந்த
மஸ்ஜிதை ஏற்கனவே இருந்ததைவிட இரு மடங்கு அளவில் விரிவாக்கிக் கட்டினார்.
மிகப் பிரம்மாண்டமாக எழும்பிய
அந்த மஸ்ஜிதின் கட்டுமானப் பணிகளை ஃபாத்திமாவே நின்று மேற்பார்வையிட்டார். அந்த மஸ்ஜித்
கட்டி முடிக்க 18 வருடங்கள் ஆனது. அதுவரை ஃபாத்திமா
நோன்பு நோற்றதாக மொரேக்கா வரலாற்றாய்வாளர் அப்துல் ஹாதி தாஸி கூறுகிறார்.
தன் பூர்வீக இடமான கைரோவானை
நினைவு கூரும் விதமாக அந்தப் பெயரையே மஸ்ஜிதுக்குச் சூட்டினார் ஃபாத்திமா. அதுதான்
அல்கரவிய்யின் மஸ்ஜித்.
பின்னர் அதன் வளாகத்திலேயே
ஒரு பல்கலைக்கழகத்தைக் கட்டினார் ஃபாத்திமா. “அல்கரவிய்யின் பல்கலைக்கழகம்” என்று பெயர்
சூட்டப்பட்ட அதில் இஸ்லாமியப் பாடங்கள், கணிதம், இலக்கணம், மருத்துவம்
போன்றவை கற்றுத் தரப்பட்டன.
14 ஆம்
நூற்றாண்டில் வரலாற்றாய்வாளர் இப்னு அபீ ஸரா அவரைப் பற்றி எழுதிய சில தகவல்கள் தவிர, அவரது
வாழ்க்கை பற்றி அதிகத் தகவல்கள் கிடைக்கவில்லை. ஏனெனில், அல்கரவிய்யின்
பல்கலைக்கழகத்துடன் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நூலகம் கி.பி. 1323ல்
தீக்கிரையானது. நூல்:- சியரு அஃலாமுந் நுபலா
இந்தப் பல்கலைக்கழகத்தில்தான்
உலகிலேயே மிகப் பழமையான நூலகம் இருந்தது. சமீபத்தில் அதனை கனடா மொரோக்கோ கட்டடக் கலைஞர்
அஸீஸா சாவோனி புதுப்பித்துக் கட்டினார். கடந்த 2016 மே
மாதம் அது பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.
9 ஆம்
நூற்றாண்டின் குர்ஆன் பிரதி, பழைய ஹதீஸ் கிரந்தங்கள் உட்பட சுமார் 4000 கையெழுத்துப்
பிரதிகள் அந்த நூலகத்தில் காலத்திற்கும் அழியாத பொக்கிஷங்களாகச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
இஸ்லாம் பெண்களுக்குக் கல்வி
தர மறுக்கிறது, அனைத்து உரிமைகளையும் மறுத்து பெண்களைப் பிற்படுத்தி
புர்காவுக்குள் அடக்கி வைத்துள்ளது என்று இன்று கூப்பாடு போடும் மேலைநாட்டினர், முஸ்லிம்
ஆண்களும் பெண்களும் கல்வியின் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு ஆன்மா
இருக்கிறதா, இல்லையா என்ற விவாதங்களில் ஈடுபட்டிருந்தனர்.
9 ஆம்
நூற்றாண்டில் ஒரு முஸ்லிம் பெண் தானும் உயர்தரக் கல்வி கற்று, உலகுக்கே
முன்மாதிரியாக முதல் பல்கலைக்கழகத்தை நிறுவி, பட்டம்
அளிக்கும் பழக்கத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.
ஆனால், 19 ஆம்
நூற்றாண்டில் “எங்களுக்குக் கல்வி கற்கும் உரிமை வேண்டும்” என்று மேலைநாடுகளில் பெண்கள்
வீதிக்கு வந்து போராடும் நிலைதான் இருந்தது. அப்படி வீதிக்கு வந்து போராடிய ஒரு பெண்ணைக்
காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இந்தப் போராட்டங்களின் விளைவாக
1821ம் ஆண்டில்தான் அமெரிக்காவில் முதல் பெண் பல்கலைக்கழகம்
உருவானது. 1841ம் ஆண்டில்தான் பெண்கள் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகக்
கற்றுக் கொடுக்க அனுமதிக்கப்பட்டனர்.
1400 வருடங்களுக்கு
முன்பாக நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் பெண்களுக்கெதிரான கொடுமைகள் அனைத்தையும்
தடை செய்து பெண்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கினார்கள். பெண்களுக்குக் கல்வி கற்பதற்கும்
தனக்கு வரப்போகிற கணவரைத் தேர்ந்தெடுப்பதற்கும் தன் தந்தையின் சொத்தில் பங்கு கேட்பதற்கும்
என்று அனைத்து உரிமைகளையும் இஸ்லாம் வழங்கிற்று.
அந்தப் பாரம்பரியத்தில் வந்த
முஸ்லிம்கள் முழு உலகுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். ‘இஸ்லாமியப் பொற்காலம்’
என்றழைக்கப்பட்ட அந்தக் காலக்கட்டத்தில் உலகையே தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டுவந்து
நீதியையும் நியாயத்தையும் நிலைநிறுத்தினார்கள். அறிவொளியைத் தந்து உலகுக்கே ஒளி பாய்ச்சினார்கள்.
9 ஆம்
நூற்றாண்டில் ஒரு முஸ்லிம் பெண் தன்னந்தனியே பல்கலைக்கழகம் ஆரம்பித்த பாரம்பரியம் எங்கே? 19 ஆம்
நூற்றாண்டில் தங்களுக்குக் கல்வி கற்க உரிமை வேண்டும் என்று மேலைநாட்டுப் பெண்கள் வீதிக்கு
வந்து போராடிய பாரம்பரியம் எங்கே? நூல்:-
அல்புதூலாத்து ஹஸ்ஸத் பிஹில் ஜிபால் ( الْبُطُولَاتُ هَزَّتْ
بِهِ الْجِبَالُ )
பெண் ஆசிரியர்கள்
இறைவா! எங்களுடைய கல்வி ஞானத்தை
அதிகப்படுத்துவாயாக. திருக்குர்ஆன்:- 20:114
இமாம் ஹஸன் அல்பஸரி (ரஹ்)
அவர்கள், ராபியத்துல் பஸரிய்யா (ரஹ்) அவர்களிடமும், கல்வி
கற்றுள்ளார்கள்.
இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள்,
நபீஸத்துல் மிஸ்ரிய்யா (ரஹ்) அவர்களிடம் கல்வி கற்றுள்ளார்கள்.
சட்டமேதை இமாம் ஷாஃபிஈ (ரஹ்)
அவர்கள் மரண தருவாயில், "நான் இறந்தபின் அல்லாஹ்வைப்பற்றிய ஆன்மீக பேரின்ப
ஞானங்களை எனக்கு போதித்த இறைநேசப் பெண்மணி நஃபீஸத்துல் மிஸ்ரிய்யா (ரஹ்) அவர்கள் வீட்டுக்குதான்
என் ஜனாஸாவை முதலில் கொண்டு செல்ல வேண்டும். அவர்கள் பிரார்த்தித்த பிறகுதான் பள்ளிவாசலுக்கு
எடுத்து சென்று ஜனாஸா தொழுவிக்க வேண்டும்" என்று (வசியத்து எனும்) இறுதிவிருப்பம்
தெரிவித்துவிட்டு மரணித்தார்கள்.
இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள்
ஆரம்பப் பள்ளிப்படிப்பை படிப்பை தமது தாய் மற்றும் சகோதரியிடம் தான் படித்தார்கள்.
இமாம் இப்னு ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள்
தங்களது ஆரம்பக் கல்வியை தம்முடைய மாமியிடமிருந்து கற்றார்கள்.
இமாம் இப்னு அஸாகிர் (ரஹ்)
அவர்கள் மிகப்பெரிய நபிமொழித்துறை அறிஞர்.
இவருக்கு நபிமொழி கலை போதித்த பேராசிரியர்களின் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களின்
பெயர்களும் இடம் பெற்றிருக்கிறது.
இமாம் தஹாவி (ரஹ்) அவர்கள்
பிரபலமான ஹதீஸ் தொகுப்பாளரும், ஆய்வாளரும் ஆவார். அவர்கள் தொகுத்த நபிமொழித் தொகுப்பான
தஹாவி என்ற நூல் அரபிக் கல்லூரிகளிலும், பல்கலைக்
கழகங்களிலும் உயர்நிலை பாடத்திட்டதில் இணைக்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த
நூலை தொகுத்தவர் இமாம் தஹாவியின் மகள் தான். இமாம் தஹாவி அவர்கள் ஹதீஸையும் அதன் விளக்கத்தையும்
சொல்லிக்கொண்டே போவார். அந்தப் பெண் அதை எழுதிக்கொள்வார். இப்படித்தான் அந்த நூல் தயாரானது.
இப்னு அபீ உஸைபா (ரஹ்) அவர்களின்
சகோதரியும் மகளும் மருத்துவ நிபுணர்களாக விளங்கினார்கள்.
உலக புகழ்பெற்ற “ஃபத்ஹுல்
பாரீ” எனும் நூலின் ஆசிரியர் பேரறிஞர் இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (ரஹ்) அவர்கள்
சிறு குழந்தையாக இருந்தபோதே தாய் தந்தையை இழந்துவிட்டார்கள். அதனால் அவரது மூத்த சகோதரி
தான் அவருக்கு கல்வியறிவைப் புகட்டி வளர்த்து ஆளாக்கினார். இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள்
தமது சகோதரி குறித்து, "அவள் என் இரண்டாவது தாய் போன்றவள்” என்று கூறுவார்கள்.
இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள்
53 பெண் அறிஞர்களிடம் கல்விக்
கற்றுள்ளார்கள். பிற்காலத்தில், அன்னார் நபிமொழி அறிவிப்பாளர்களில் நம்பிக்கையாளர்களின்
தலைவர் என்று அழைக்கப்பட்டார்கள். அன்னார் இறந்த நாளில் 50,000 க்கும்
மேற்பட்ட மக்கள் அவரது ஜனாஸாவில் கலந்துகொண்டனர். மற்றும் கிறிஸ்தவர்களும் கூட சோகத்தின்
வெளிப்பாடாக அழுதனர்.
இஸ்லாம், கல்வியை
ஆண்களைப்போல பெண்களுக்கும் கடமையாக்கியதால் இஸ்லாமியப் பெண்மணிகள் மிகப்பெரிய கல்விமான்களாகத்
திகழ்ந்திருக்கிறார்கள்.
பெண்களுக்கு அடிப்படை அறிவு
இல்லையென்றால், அவள் குடும்ப வாழ்க்கையை சரியாக நடத்த முடியாமல்
போகும்.
ஒரு சமுதாயத்தின் அடித்தளம், ஒரு தாயின் கையில் கட்டமைக்கப்படுகிறது. அந்த கையில் (மார்க்க) அறிவின் வெளிச்சம் இல்லையெனில், கணவனை
சிரமப்படுத்துவாள். பிள்ளைகளின் பாதை சீர்குலையும், அந்தச்
சீர்கேடு மெல்ல மெல்ல சமுதாயத்தின் வேரைத் தின்றுவிடும். பெண்ணின் கல்வி, ஒரு
தனி மனிதனுக்கானது அல்ல; ஒரு தலைமுறைக்கானது.
பெண் கல்வி இஸ்லாமுக்கு எதிரானது
அல்ல. அது இஸ்லாமின் அடிப்படை நோக்கங்களில் ஒன்று. கல்வியற்ற பெண், பலவீனமான
சமூகம். கல்வியுள்ள பெண் நம்பிக்கையுள்ள தலைமுறை. ஒரு பெண்ணிற்கு கல்வியளிப்பது, ஒரு
குடும்பத்தையும், ஒரு சமூகத்தையும், முழு
தலைமுறையையும் நல்ல வழியில் உருவாக்குவதற்கு வழிவகுக்கும்.
எனவே, நாம்
பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, பெண்களை
நல்லொழுக்கமுள்ள சிறந்த கல்வியாளர்களாக உருவாக்கி, அல்லாஹுத்தஆலாவின்
அருளைப் பெறுவோமாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது
ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951