நலிந்தோருக்கு நன்மை புரிவோம்!
وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ
நிச்சயமாக அல்லாஹ்
நன்மை செய்பவர்களுடன் இருக்கின்றான். திருக்குர்ஆன்:- 29:69
நலிந்தோருக்கு உதவுதல்
என்பது ஒரு சமூகப் பொறுப்பு. மேலும், அது மனிதாபிமானமும், ஆன்மீக ரீதியான நன்மையையும் தரக்கூடிய ஓர் அறச்செயல்.
இது மனிதர்களிடையே இரக்கம் மற்றும் கருணையை வளர்க்கிறது. மேலும், அதன்மூலம் சமூகத்தில்
ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்க முடியும். எனவே, ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு நலிந்தோருக்கு
உதவ முன்வர வேண்டும்.
நலிந்தோர் என்றால், ஏழைகள் மட்டுமல்லாமல், துன்பத்தில் சிக்கித்
தவிக்கும் அனைவரையும் குறிக்கும். அவர்களுக்கு உதவுதல் என்பது, பொருளாதாரம் வழங்குதல் மட்டுமல்ல. அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதும், அவர்கள் சிக்கித்
தவிக்கும் துன்பத்தில் இருந்து மீட்க உதவுவதும் ஆகும்.
ஏழைகள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள்
நோயாளிகள், அநாதைகள், ஆதரவற்ற முதியோர்கள், திடீர் கஷ்ட நஷ்டத்தில் சிக்கிக்கொண்டவர்கள், கடன்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களைப் போன்றோர் அனைவரும்
நலிந்தோர் தான். இவர்களுக்கு உதவுதல் பேருபகாரமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ نَشَرَ اللَّهُ عَلَيْهِ كَنَفَهُ وَأَدْخَلَهُ
جَنَّتَهُ رِفْقٌ بِالضَّعِيفِ وَشَفَقَةٌ عَلَى الْوَالِدَيْنِ وَإِحْسَانٌ إِلَى
الْمَمْلُوكِ ) யாரிடம் மூன்று
குணங்கள் இருக்கின்றனவோ அவரை அல்லாஹ் தனது பாதுகாப்பில் வைத்துக்கொள்வான். மேலும், அவரை தனது சொர்க்கத்தில்
நுழைவிப்பான். (அவை:) 1.நலிந்தோரை மென்மையாக நடத்தல் 2.பெற்றோரின்மீது பரிவு காட்டல்
3.(பணியாளர்கள் எனும்) அடிமைகளுக்கு உபகாரம் புரிதல். அறிவிப்பாளர்:- ஜாபிர் (ரலி)
அவர்கள் நூல்:- திர்மிதீ-2418, அல்ஃபிர்தவ்ஸ் (தைலமீ), அத்தர்ஙீபு வத்தர்ஹீபு
நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம்
அன்பு செலுத்துவது இறைவனின் கருணையைப் பெற உதவும் என்பதை அறியலாம்.
ஒதுங்கிச் செல்லவில்லை
ஆதாயம் கருதிப் பிறருக்கு
உதவி செய்யாதீர். திருக்குர்ஆன்:- 74:6
இறைத்தூதர் மூசா
(அலை) அவர்கள் ஃபிர்அவ்னின் அரச மாளிகையில் வளர்ந்து வந்த காலகட்டத்தில் சாமிரி என்பவனும்
வாழ்ந்தான். இவன் இஸ்ரவேலர்களைச் சேர்ந்தவன்.
ஒருமுறை இவனுக்கும்
அரண்மனை சமையல்காரன் பாத்தூன் என்பவனுக்கும் தகராறு ஏற்பட்டபோது மூசா (அலை) அவர்களிடம்
சாமிரி உதவி வேண்டினான். எனவே, இவர்கள் சாமிரியை காப்பாற்ற சமாதான முயற்சியில் இறங்கியபோது, பாத்தூன் மூசா (அலை)
அவர்களை தாக்க முற்பட்டான். எனவே, மூசா (அலை) அவர்கள் யதார்த்தமாக பாத்தூனை ஓங்கி ஒரு குத்துவிட்டார்கள்.
அங்கேயே வீழ்ந்து இறந்தான்.
பாத்தூன் கிப்தி
(ஃபிர்அவ்னுடைய) இனத்தைச் சேர்ந்தவன். அதனால் மூசா (அலை) அவர்களைக் கொலை செய்வதற்காக
கைது செய்து வருமாறு ஃபிர்அவ்ன் உத்தரவிட்டான்.
இதையறிந்த மூசா (அலை)
அவர்கள் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எகிப்தில் இருந்து மத்யம் நகருக்கு நடந்தே வந்தார்கள்.
அப்போது கீரையும் மர இலைகளையுமே சாப்பிட்டார்கள். அவர்களிடம் வேறு எந்த உணவும் இல்லை.
காலில் காலணி இல்லை. மத்யன் நகரை அடைவதற்குள்ளாக அவர்களின் பாதங்களில் இருந்த காலணிகள்
அறுந்துவிட்டன. இவ்வாறு எட்டு நாள்கள் பயணித்து ஒன்பதாம் நாள் மத்யம் நகரின் எல்லையை
அடைந்தார்கள். (இவ்வூர் சினாய் மலைக்குக் கிழக்கே செங்கடல் ஓரத்தில் உள்ளது. இங்கு
வாழ்ந்த மக்களை சீர்திருத்தவே ஷுஐப் (அலை) அவர்களை அல்லாஹ் அனுப்பியிருந்தான்.)
இவ்வூரின் எல்லையை
அடைந்த மூசா (அலை) அவர்கள் ஒரு மரத்தடியில்
அமர்ந்திருந்தார்கள். அப்போது அங்கிருந்த கிணற்றிலிருந்து தம் கால்நடைகளுக்கு நீர்
புகட்டிக் கொண்டிருந்த இடையர்களைக் கண்டார்கள். அவர்கள் நீர் புகட்டி முடித்ததும் ஒரு
பாறாங்கல்லால் மீண்டும் அக்கிணற்றை மூடிவிட்டார்கள். பத்து ஆட்கள் சேர்ந்தே அக்கலை
தூக்க முடியும். அந்த அளவுக்குப் பெரிய கல்லாக அது இருந்தது.
அங்கே இரு பெண்கள்
தமது கால்நடைகளுக்கு நீர் புகட்டுவதற்கு மக்களை விட்டு ஒதுங்கியிருந்தார்கள்.
இவ்விரு பெண்களையும்
கண்ட மூசா (அலை) அவர்கள் இரக்கப்பட்டவராக, "உங்கள் நிலை என்ன? இவர்களுடன் சேர்ந்து நீங்கள் ஏன் நீர் போகாமல் இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அந்தப் பெண்கள், "இந்த இடையர்கள் தங்கள்
ஆடுகளுக்குரிய நீரை இறைத்து அந்தத் தொட்டியை நிரப்பிக் கொண்டு தங்கள் ஆடுகளை அதில்
நீர் அருந்த விடுவார்கள். அவர்களுடைய ஆடுகள் அனைத்தும் நீர் அருந்தி விட்ட பிறகு மீதமிருப்பதை
தான் எங்களுடைய ஆடுகளைவிட்டு நீர் அருந்த செய்வோம். நீர் இறைக்கும் வாளி மிகப் பெரியதாக
இருப்பதால் எங்களால் கிணற்றிலிருந்து நீர் இறைக்கமுடியாது. எங்கள் தந்தையோ மிகவும்
வயதானவர். அவருக்கு கண்பார்வை மங்கிப்போய்விட்டதால், அவரால் எங்களுக்கு இதில் எந்தவித உதவியும் செய்ய
இயலாது. இத்தகைய காரணங்களால் தான் நாங்கள் அந்த இடையர்கள் போகும் வரை காத்துக் கொண்டிருக்க
வேண்டியிருக்கிறது" என்று கூறினார்கள்.
உடனே மூசா (அலை) அவர்கள்
அந்த பாறாங்கல்லை தூக்கினார்கள். ஒரே ஒரு வாளி தான் நீர் இறைத்தார்கள். அப்பெண்களின்
எல்லா ஆடுகளுக்கும் தாகம் தீர்ந்தது. இது குறித்து திருக்குர்ஆன் (28:23,24) விவரிக்கிறது.
நூல்:- இப்னு அபீஷைபா, தஃப்சீர் இப்னு கஸீர், அல்பிதாயா வந்நிஹாயா
வலியவன் ஒருவன் நலிந்தவனிடம்
வீண் தகராறில் ஈடுபட்டு, நலிந்தவன் தன்னைத் தற்காத்துக்கொள்ள உதவி கேட்டால் அவனுக்கு
உதவி புரியவேண்டும். நமக்கு எதற்கு வம்பு? என்று ஒதுங்கி செல்வது சரியல்ல.
பலகீனமானவர்கள் சிரமத்தில்
இருப்பதை நாம் அறிந்தால், நாமாக சென்று அவர்களுக்கு உதவி முன்வரவேண்டும். அவர்கள் நம்மிடம்
வந்து உதவி கோரட்டும் என்று எதிர்ப்பார்ப்பது முறையல்ல.
அறப்போருக்குச் சமம்
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( السَّاعِي عَلَى الأَرْمَلَةِ وَالْمِسْكِينِ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ
اللَّهِ، أَوْ كَالَّذِي يَصُومُ النَّهَارَ وَيَقُومُ اللَّيْلَ ) (கணவனை இழந்த) கைம்பெணுக்காகவும், ஏழைக்காகவும் பாடுபடுகின்றனர்
அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார். அல்லது இரவில் நின்று வழிபட்டு; பகலில் நோன்பு நோற்பவர்
போன்றவராவார். அறிவிப்பாளர்:- ஸஃப்வான் பின் சுலைம் (ரஹ்) அவர்கள் நூல்:- புகாரீ-6006, முஸ்லிம்-5703
அப்துல்லாஹ் பின்
அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) மதீனா நகருக்கு ஒரு வணிகக்குழு வந்திருந்தது.
அவர்களிடம் இரண்டு வயது கன்று ஒன்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விலைக்கு வாங்க விரும்பினார்கள்.
ஆனால், அவர்களிடம் அதற்கான
விலையைக் கொடுக்கப் பணம் கையில் இல்லை. (பிறகு விலையைத் தருகிறேன் என்று சொல்லி விட்டு
வாங்கினார்கள்.) பின்னர் அக்கன்றை விற்பனை செய்தார்கள். சில 'ஊக்கியா'க்கள் இலாபமாக கிடைத்தன.
(ஊக்கியா என்பது 40 வெள்ளிக்காசுகளின் மதிப்பு கொண்ட சுமார் 125 கிராம் வெள்ளியளவை
கொண்ட நாணயம் ஆகும்) பின்னர் வியாபாரிக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டு, மீதியைத் தர்மமாக
அப்துல் முத்தலிப் குடும்பத்தாரில் உள்ள ஆதரவற்ற விதவை பெண்களுக்கு தர்மமாக வழங்கினார்கள்.
நூல்:- முஸ்னது அஹ்மத்-1989, அவ்னுல் மஅபூத், அல்ஃபத்ஹுர் ரப்பானீ
ஹஸன் அல்பஸரீ (ரஹ்)
அவர்கள் கூறுகிறார்கள். ( أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ أَلْقَى اللَّهُ عَلَيْهِ مَحَبَّتَهُ، وَنَشَرَ
عَلَيْهِ رَحْمَتَهُ: مِنْ بِرِّ وَالِدَيْهِ، وَرَفَقَ بِمَمْلُوكِهِ، وَكَفْلَ
الْيَتِيمِ، وَأَغَاثَ الضَّعِيفَ ) யார் நான்கு நல்லறங்களைப்
பேணுகிறாரோ அவர்மீது அல்லாஹ் தமது பிரியத்தையும், அருள்வளத்தையும் பொழிகிறான்.
1. பெற்றோர்களுக்கு
உபகாரம் செய்தவர்.
2. தனக்குக் கீழ்
பணிபுரிபவர்களிடம், மென்மையாக நடந்துக் கொள்பவர்.
3. அநாதையை பராமரிப்பவர்.
4. பலகீனமானவர்களுக்கு
உதவி புரிபவர். நூல்:- الدُّرَرُ اللَّآلِئُ مِنْ أَقْوَالِ الْحَسَنِ
الْبَصْرِيِّ
நன்மையின் தட்டு கனத்தது
தாபிஈன்களில் ஒருவரான
அஹ்மத் பின் மிஸ்கீன் (ரஹ்) அவர்களின் மாணவர் அபூ நஸ்ரு அஸ்ஸியாத் (ரஹ்) அவர்கள் தனது
மனைவி மக்களுக்கு போதிய உணவு வழங்கமுடியாத அளவுக்கு வறுமையில் வாடினார். தனது ஆசிரியரின்
வழிகாட்டுதல்படி மீன் பிடிக்க சென்று பிடிப்பட்ட மீன்களை விற்று, தனது மனைவி மக்களுக்காக
ஒரு பையில் இறைச்சி, மற்றொரு பையில் இனிப்புப்பண்டம் என இரண்டு பைகளில் உணவுகளை வாங்கிக்கொண்டு
வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார். இடையில் ஒரு பெண் கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு அழுதபடி
இவரிடம் வந்து, பசியால் பல நாட்கள் அவஸ்தைபட்டு வருகிறோம். எங்களுக்கு உண்ண ஏதேனும் தாருங்கள்
என்று கேட்டாள்.
இந்த அபலைப் பெண்ணின்
நிலையில்தான், தனது மனைவி மக்களும் இருக்கிறார்கள். இருப்பதோ இரண்டு பைகள் தான். என்ன செய்வது? என்று யோசித்துவிட்டு, அந்த உணவுப் பைகளை
அப்பெண்ணிடம் கொடுத்தார். அதை அவள் பெற்றுக்கொண்டபோது, ( ابْتَهَجَ وَجْهَهَا وَ ابْتَسَمَ ابْنُهَا
فَرَحًاً ) “அவளது முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. அவளது கைக்குழந்தை சந்தோஷத்தால் புன்முறுவல்
பூத்தது”. பிறகு வெறுங்கையோடு வீட்டிற்கு வந்தார்.
அவர் வீட்டிற்கு வந்த
கொஞ்ச நேரத்திற்குள் ஒருவர் வந்து, ( إِنَّ أَبَاكَ كَانَ قَدْ أَقْرَضَنِي
مَالًاً مُنْذُ عِشْرِينَ سَنَةً ثُمَّ مَاتَ وَ لَمْ أَسْتَدِلَّ عَلَيْهِ، خُذْ
يَا بَنِي هَذِهِ الثَّلَاثِينَ أَلْفَ دِرْهَمٍ مَالَ أَبِيكَ! ) "உங்கள் தந்தை இருபது ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு
கடன் கொடுத்து உதவினார். அவரும் இறந்துவிட்டார். அதைத் திருப்பி தர இயலாமல் போனேன்.
(இப்போது அதைக் கொண்டு வந்துள்ளேன். இதோ!) உங்கள் தந்தைக்கு கொடுக்கவேண்டிய முப்பதாயிரம்
வெள்ளிக்காசுகளைப் பெற்றுக்கொள்வீராக" என்று கூறினார்.
அபூ நஸ்ரு அஸ்ஸியாத்
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அதன் பிறகு நான் மக்களிலேயே பெரிய செல்வந்தனாகிவிட்டேன்.
அந்தப் பொருளாதாரத்தின் மூலம் நான் சம்பாதித்து நிறைய தானம் தர்மம் செய்தேன். பிறகு
ஒருநாள் இரவு கனவில் மறுமை நாளை கண்டேன். நன்மை தீமையை நிறுக்கக்கூடிய வானவர் ஒருவர்
என்னிடம், ( أَبُو نَصْرٍ الصَّيَّادُ هَلُمّ لِوَزْنِ حَسَنَاتِكَ
وَسَيِّئَاتِكَ ) “அபூ நஸ்ரு அஸ்ஸியாத்! உமது நன்மை தீமைகளை நிறுத்துப் பார்க்க
கொண்டு வாருங்கள்!” என்றார். அவ்வாறே நான் கொடுத்தேன். அவை நிறுக்கப்பட்டபோது எனது
பாவங்கள் தான் கனமாக இருந்தது.
அப்போது நான், ( أَيْنَ
الْأَمْوَالُ الَّتِي تَصَدَّقَتُ بِهَا؟ )
"எனது தர்மப் பொருள்கள் எங்கே?" என்றேன். அதுவும்
அங்கே கொண்டு வந்து வைக்கப்பட்டது. அப்போதும் எனது பாவங்கள்தான் கனமாக இருந்தது. பிறகு, ( كَيْفَ
النَّجَاةُ؟ ) "எப்படி வெற்றி பெறுவது?"
என்று கூறியவாறு அழ ஆரம்பித்துவிட்டேன்.
உடனே அங்கு இருக்கக்கூடிய
வானவர் ஒருவர், ( هَلْ بَقِيَ لَهُ مِنْ شَيْءٍ؟ )
"இவருடைய நன்மையில் ஏதேனும்
மீதமுள்ளதா?" என்று கேட்டார். அங்கிருந்த மற்றொரு வானவர், ( نَعَمْ
بَقِيتُ لَهُ فَطِيرَتَانِ ) "ஆம்! இரண்டு உணவுப் பைகள் உள்ளன” என்று கூறிவிட்டு, அவற்றை எனது நன்மையின்
தட்டில் கொண்டு வந்து வைத்தார். அப்போது எனது நன்மையின் தட்டும் தீமையின் தட்டும் சமமாக
இருந்தது. அப்போதும் நான் பயந்தேன்.
மீண்டும் அந்த வானவர்
"இவருடைய நன்மையில் ஏதேனும் மீதமுள்ளதா?" என்று கேட்டார். ( بَقِيَ لَهُ شَيْءٌ ) "(ஆம்!) அவருக்குரிய ஒரு பொருள் மீதமுள்ளது” என்று கூறினார்.
( مَا هُوَ؟ ) “அது என்ன?” என்று கேட்கப்பட்டது. ( دُمُوعُ الْمَرْأَةِ حِينَ أُعْطِيَتْ لَهَا
الْفَطِيرَتَانِ! ) “இவர் உணவுப் பைகளை
கொடுத்தபோது அதை வாங்கிக்கொண்ட அந்த அபலைப் பெண், சந்தோஷத்தால் அழுத கண்ணீர் தான்” என்று கூறிவிட்டு, அந்தக் கண்ணீரை கொண்டு
வந்து நன்மையின் தட்டில் வைத்தார். அப்போது நன்மையின் தட்டு பெரும் பாறாங்கல்லை வைத்ததை
போன்று கனத்தால் கீழே இறங்கியது. அப்போது நான் அதிகம் மகிழ்ச்சியடைந்தேன்.
பிறகு "இன்னும்
இவருடைய நன்மையில் ஏதேனும் மீதம் உள்ளதா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு, ( نَعَمِ
ابْتِسَامَةُ الطِّفْلِ الصَّغِيرِ حِينَ أُعْطِيَتْ لَهُ الْفَطِيرَتَانِ ) "ஆம்! இவர் அன்று உணவுப்
பைகளை கொடுத்தபோது அதை வாங்கிக்கொண்ட சந்தோசத்தில் அந்த குழந்தை புன்முறுவல் பூத்தது
அல்லவா?) அந்த புன்முறுவல்
இருக்கிறது" என்று சொல்லப்பட்டு, அதை எனது நன்மையின் தட்டில் வைக்கப்பட்டபோது அதன்
கனம் இன்னும் அதிகமானது. அப்போது அந்த வானவர் என்னிடம், (
لَقَدْ نَجَا لَقَدْ نَجَا ) "நீ வெற்றி அடைந்துவிட்டாய்!
நீ வெற்றியடைந்து விட்டாய்!" என்று அவர் சொல்வதை நான் கேட்டேன்.
அர்யணையின் நிழலில்
உனக்கு அல்லாஹ் நன்மை
செய்ததைப் போன்று நீயும் (பிறருக்கு) நன்மை செய். திருக்குர்ஆன்:- 28:77
அல்லாஹுத்தஆலா இறைத்தூதர்
தாவூத் (அலை) அவர்களுக்கு (பின்வருமாறு வஹி எனும்) இறைச்செய்தியை அறிவித்தான்: ( يَا دَاوُدُ كُنْ لِلْيَتِيمِ كَالْأَبِ
الرَّحِيمِ وَكُنْ لِلْأَرْمَلَةِ كَالزَّوْجِ الشَّفِيقِ وَاعْلَمْ كَمَا
تَزْرَعُ كَذَا تَحْصُدُ ) தாவூத்! அனாதைகளுக்கு
இரக்கமுள்ள தந்தையைப் போலவும், விதவைப் பெண்ணுக்கு இரக்கமுள்ள கணவனை போலவும் பணியாற்றுவீராக!
விதைப்பதையே அறுவடை செய்வீர்!
தாவூத் (அலை) அவர்கள், ( إِلَهِي
مَا جَزَاءُ مَنْ أَسْنَدَ الْيَتِيمَ وَالْأَرْمَلَةَ ابْتِغَاءَ وَجْهِكَ ) "என் இறைவா! அநாதைகளையும்
விதவைப் பெண்ணையும் உன் திருப்திக்காக கவனித்தவருக்குரிய கூலி என்ன? என்று கேட்டார்கள்.
அல்லாஹ், ( جَزَاؤُهُ أَنْ أَظِلَّهُ فِي ظِلِّي يَوْمٍ لَا ظِلَّ
إِلَّا ظِلِّي
) "நிழலில்லாத மறுமைநாளின்போது என் (அர்ஷ் எனும்) அர்யணையின் நிழலில் இடமளிப்பேன்.
இதுவே அவருக்குரிய கூலியாகும்” என்று பதிலளித்தான். நூல்:- அல்கபாயிர் இமாம் அத்தஹபீ
ஸிமம் தஃப்தரி
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( الْخَلْقِ كُلُّهُمْ عِيَالُ اللَّهِ، فَأَحَبُّ الْخَلْقَ إِلَى اللَّهِ
مَنْ أَحْسَنَ إِلَى عِيَالِهِ ) மனித குலம் முழுவதும்
அல்லாஹ்வின் குடும்பமாகும். அல்லாஹ்வின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடன் (அதாவது, பலவீனமானவர்கள் மற்றும்
ஆதரவற்றவர்களுடன்) எவர் நல்ல முறையில் நடந்து கொள்கின்றாரோ, அவர்தான் மனிதர்களிலேயே
அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர் ஆவார். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- ஷுஅபுல்
ஈமான் இமாம் பைஹகீ, தைலமீ
உஸ்மானிய கிலாஃபத்தின்
உன்னதமான ஆட்சியின்பொழுது, துருக்கிய வியாபாரிகள் தங்கள் கடைகளில் தங்களுடைய வாடிக்கையாளர்கள்
செலுத்தவேண்டிய பணத்தை (கடனை) ஒரு கணக்குப் புத்தகத்தில் எழுதி வைத்திருப்பார்கள்.
அந்தக் கணக்குப் புத்தகத்தின் பெயர்தான் “ஸிமம் தஃப்தரி” (ZIMEM DEFTERI)
வசதி படைத்த உஸ்மானிய
குடிமக்கள் ஆண்டுதோறும் ரமளான் மாதத்தில் கடைகளுக்குச் சென்று இந்தக் கணக்குப் புத்தகத்தில்
எழுதப்பட்டுள்ள ஏழை மக்களின் கடன்களைப் பார்வையிடுவார்கள். ஏழைகளின் கடன்கள் அனைத்தையும்
இவர்களே செலுத்திவிடுவார்கள்.
இதில் நெஞ்சை நெகிழ
வைக்கும் நிகழ்வு என்னவென்றால் இந்தக் கடன்களை அடைத்தது தாங்கள் தாம் என்பது அந்த ஏழைகளுக்குத்
தெரியக்கூடாது என்று சொல்லிவிடுவார்கள்.
கடனைச் செலுத்த முடியாதவர்கள்
தர்மசங்கடமான நிலைக்கோ, வெட்கத்திற்கோ ஆளாகிவிடக்கூடாது என்பதற்காகவே இப்படிச் செய்திருக்கிறார்கள்.
இரகசியமாகச் செய்யப்படும் தர்மங்களுக்கு இஸ்லாம் இயம்பியிருக்கும் இமாலயச் சிறப்புகளை
அவர்கள் நன்கு விளங்கி வைத்திருந்திருந்ததாலேயே இந்த ஏற்பாடு. இந்த உன்னதப் பாரம்பரியத்தை
இன்றும் துருக்கியர்கள் தொடர்கிறார்களாம்.
எனவே, நாம் (இக்லாஸ்
எனும்) தூய்மையான எண்ணத்துடன் நலிந்தோருக்கு உதவிகள் செய்து அல்லாஹுத்தஆலாவின் அன்பையும், அருளையும் பெறுவோமாக!
ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது
ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951