Search This Blog

Sunday, 25 October 2020

சுன்னத்தைப் பேணு!

 

சுன்னத்தைப் பேணு!


لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا


எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ அவர்கள் பின்பற்றி நடக்க வேண்டிய அழகான நடைமுறை நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கின்றது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்ந்துக் கொண்டிருப்பார்கள்.                                                   திருக்குர்ஆன்:- 33:21


ஒரு முஸ்லிம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி அவசியம் அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் இஸ்லாத்தின் அனைத்துப் போதனைகளும் அவர்களது வாழ்வை சேர்ந்து உள்ளன. எனவே அவர்களது நற்குணங்கள், வாழ்க்கை நெறிமுறைகளைபற்றி அறிந்திருப்பது கடமையாகும்.


ஒருவரை காப்பியடித்து வாழ்வதைவிட அண்ணலாரின் நற்குணங்களையும் சுன்னத் எனும் அழகிய நடைமுறையையும் கடைபிடித்து வாழும்போது நாமும் நற்பண்புமிக்கவர்களாக ஆகிவிடலாம்.


அண்ணலாரின் எளிமையான வாழ்க்கை முறையை அறியும்போது  அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி  வாழவே மனம் விரும்பும். அண்ணலாரின் நடைமுறையை பின்பற்றி வாழ முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். அண்ணலாரின் நடைமுறை அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைந்துள்ளது.


இக்காலத்தில் தீமைகளும் அனாச்சாரங்களும் பெருகிவரும் நிலையில் நம்மிடம் சுன்னத்துக்கள் மங்கிக் கொண்டே வருகிறது. இது நமது இறைநம்பிக்கையின் உறுதிநிலை தளர்ந்துக் கொண்டே வருவதற்கான அடையாளமாகும். சுன்னத்துக்களை பற்றி பிடிப்பதன் மூலம் நமது இறைநம்பிக்கை வலுபெறும் என்பதில் சந்தேகமில்லை.


உலகில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனித வழிமுறையை நேசிக்க வேண்டும். எந்தளவு அதை நேசிப்பானோ, அந்தளவு அண்ணலார் மீது அன்பு அதிகரிக்கும். இதற்கு இரண்டு வழிகள் உள்ளன.


நேரடியாக அண்ணலாரை நேசிப்பதன் மூலம் அவர்களின் வழிமுறைகள் மீதும் நேசம் ஏற்படும். மற்றொன்று அண்ணலாரின் வழிமுறைகளை நேசிப்பதன் மூலம் அண்ணலாரின் மீது அன்பு ஏற்பட்டுவிடும். ஆக இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்கிறது. அண்ணலாரின் மீது அன்பும் நேசமும் உண்டாகிவிட்டால் அண்ணலாரின் வழிமுறை எது? என்று தேட ஆரம்பித்து விடுவான். அந்த புனித வழிமுறைகளை தேடித் தேடி அவற்றை பின்பற்ற ஆசைப்படுவான்.


எனக்குப் பின்னால்


அம்ர் பின் அவ்ஃப் பின் ஸைத் அல்முஸனீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிலால் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களிடம் "அறிந்து கொள்" என்றார்கள். அதற்கவர், நாயகமே! என்ன அறிந்து கொள்ள வேண்டும்? என்று கேட்டார். மீண்டும் அண்ணலார் அதைப் போன்றே கூறினார்கள். மீண்டும் அவரும் அதே போன்று திருப்பி கேட்டார். அதற்குப்பின் அண்ணலார்( أَنَّهُ مَنْ أَحْيَا سُنَّةً مِنْ سُنَّتِي قَدْ أُمِيتَتْ بَعْدِي فَإِنَّ لَهُ مِنَ الأَجْرِ مِثْلَ مَنْ عَمِلَ بِهَا مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا "அதாவது எனக்குப் பின்னால் சாகடிக்கப்பட்டுவிட்ட எனது வழிமுறை (சுன்னத்) ஒன்றை ஒருவர் உயிர்ப்பித்தால் அந்த வழிமுறையைக் கடைபிடித்தவருக்குக் கிடைக்கும் நன்மை போன்றது அவருக்கும் கிடைக்கும். அதற்காக அந்த நன்மையைக் கடைபிடிப்பவர்களுக்கு கிடைக்கும் நற்பலன்களில் எதுவும் குறைக்கப்படாது" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-2598, இப்னுமாஜா-205


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.     ( مَن تَمَسَّكَ بِسُنَّتِی عِندَ فَسَادِ اُمَّتِی فَلَهُ اَجرُ مِاءَةِ شَهِیدٍ )  எனது சமுதாயத்தினர் சீரழிந்து போயிருக்கும் காலத்தில், என் நடைமுறையை யார் கடைபிடித்து வாழ்கின்றாரோ அவருக்கு இறைவழியில் உயிர் தியாகம் செய்த நூறு உயிர்த் தியாகிகளுக்குக் கிடைக்கும் நன்மைக்கு ஈடான வெகுமதி உண்டு. அறிவிப்பாளர்:- அபூஹூரைரா (ரலி) அவர்கள்     நூல்:- பைஹகீ, மிஷ்காத்


அன்பு என்பது உண்மையில் உள்ளம் சம்பந்தப்பட்டது. அது வெறும் நாவால் கோஷமிடுவதல்ல. அதன் பிரதிபலிப்பு மனித வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் ஊடுருவி விடும். எனவே, நாம் ஒருவரை உண்மையாகவே நேசிக்க ஆரம்பித்து விட்டால் அவரின் ஒவ்வொரு செயலும் இனிமையானதாக நமக்குத் தோன்றும். நாமும் அவரைப் போன்று செயல்பட துவங்கி விடுவோம்.


விடமாட்டேன்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (   إِذَا وَقَعَتْ لُقْمَةُ أَحَدِكُمْ فَلْيَأْخُذْهَا فَلْيُمِطْ مَا كَانَ بِهَا مِنْ أَذًى وَلْيَأْكُلْهَا ) (உண்ணும்போது) உங்களில் ஒருவரிடமிருந்து உணவுக் கவளம் கீழே விழுந்து விட்டால், அதில் படுவதை சுத்தப்படுத்தி விட்டு, பிறகு அதை உண்ணட்டும்.                 நூல்:- முஸ்லிம்-4138


பாரசீக சாம்ராஜ்யத்தை வெற்றி கொண்ட ஹுதைபா பின் யமான் (ரலி) அவர்கள் ஒருமுறை அந்நாட்டுத் தலைவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு ரொட்டித் துண்டு கீழே விழுந்து விட்டது. அன்னார் உடனே அதை எடுத்து சுத்தம் செய்து சாப்பிட்டார்கள். இதை பார்த்த அச்சபையிலிருந்த ஒருவர், "இந்நாட்டில் இவ்வாறு செய்வது கண்ணியக்குறைவாக கருதப்படும், மேலும் இப்பேரவையில் உள்ளவர்கள் தங்களை இழிவாக கருதுவார்கள்" என்று கூறினார்.


அதற்கு ஹுதைபா (ரலி) அவர்கள், "உண்ணும் போது தவறி விழுந்த உணவுப்பொருளை சுத்தம் செய்து சாப்பிட வேண்டும் என்பது எங்களின் நேசர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களின் வழிமுறையாகும்.                 


( أَأَترُكَ سُنَّةَ حَبِيبِي لِهٰؤُلَاءِ الحُمَقَاءِ“நான் (அண்ணலாரின் சுன்னத்துக்களை கேவலமாகக் கருதும்) இத்தகைய மடையர்களுக்காக என்னுடைய நேசர் நபியவர்களின் சுன்னத்தை விட்டுவிடுவேனா?  (அண்ணலாரின் சுன்னத்தை நான் ஒருபோதும் விடமாட்டேன்)" என்று கூறினார்கள்.   நூல்:- குத்பாதே ஹகீமுல் உம்மத் 4/236


உஸ்மான் (ரலி) அவா்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன் மக்காவாசிகளிடம் தூதராகச் சென்றார்கள். அப்போது அஃப்பான் பின் சஅது என்பவர், “என் சிறிய தந்தையின் மகனே! உன்னை பணிவுள்ளவராக காண்கிறேனே, (மக்காவில் வசிக்கும்) உன் கூட்டத்தார்கள் போல் உனது கீழாடையை இறுக்கக் கட்டி கொண்டு (தரையில் இழுபடுமாறு) பெருமையாக நடப்பீராக!என்று கூறினார். அப்போது  உஸ்மான் (ரலி) அவா்கள், ( هٰکَذَا يَأتَزِرُ صَاحِبُنَا اِلَي اَنصَافِ سَاقَ ) “இவ்வாறு தான் எங்கள் தோழர் முஹம்மது (ஸல்) அவர்கள் கெண்டைக்கால் பாதிவரை கீழாடை அணிவார்கள் (அதற்கு மாற்றமாக நான் அணியமாட்டேன்)என்று கூறி (மறுத்து) விட்டார்கள்.  நூல்:- ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்-477


நிச்சயமாக நீங்கள் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கின்றீர்கள். திருக்குர்ஆன்:- 68:4


கொழும்பு ஆலிம்சா என்று அழைக்கப்படும் மௌலானா ஸய்யிது முஹம்மது பாக்கவி (ரஹ்) அவர்கள் இலங்கை மற்றும் தமிழகம் முழுவதும் சுற்றி, நிறைய மக்தப் மதரஸா எனும் அரபி ஆரம்ப பாடசாலைகளை உருவாக்கினார்கள். அவர்கள் தங்களின் 43 ஆம் வயதிற்குள்ளாகவே நாடெங்கும் 666 மக்தப் மதரஸாக்களை தொலைத்தொடர்பு கருவிகள், வாகன வசதிகள் எதுவும் இல்லாத காலத்திலேயே உருவாக்கினார்கள் என்பது இமாலய சாதனையாகும்.


மேலும், அன்னார் துஹ்ஃபத்துல் அத்ஃபால் (ஹனஃபீ), மின்ஹத்துல் அத்ஃபால் (ஷாஃபிஈ) என்ற மார்க்கச் சட்ட  நூல்களையும் அரபுத் தமிழில் எழுதி, அச்சிட்டு மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தார்கள்.  இப்படிப்பட்ட மகானுக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண் இவர்களின் தாடியை குறை கூறியதால், "தாடி வைப்பது நபிவழி (சுன்னத்) இதைப் பிடிக்காத பெண், எனக்கு தேவை இல்லை" என்று உறுதியாகக் கூறிய பின்னர் திருமணமே செய்யாமல் இருந்து விட்டார்கள்.


விபரீதமாகிவிடும்


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆறு சாரார்களை நான் சபித்தேன். அவர்களை அல்லாஹ்வும் சபித்தான். (உலகில்) தோன்றிய அனைத்து இறைத்தூதர்களும் (சபித்தனர்) அவற்றில் ஒரு சாரார். எனது வழிமுறையை சுன்னத்தை (அற்பமாகக் கருதி) கைவிடுபவர். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2080


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( جُعِلَتِ الذِّلَّةُ وَالصَّغَارُ عَلیَ مَن خَالَفَ اَمرِي ) என்னுடைய வழிமுறைக்கு மாற்றம் செய்வோருக்கு அது கேவலத்தையும் இழிவையும் உண்டாக்கும். நூல்:- முஸ்னது அஹ்மது


சாப்பாட்டுக்கு முன் இரண்டு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவ வேண்டும். இது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும். ஒரு கையையோ விரல்களை மட்டுமோ கழுவினால் சுன்னத்து நிறைவேறாது.


உண்பதற்கு முன் இரண்டு கைகளையும் கழுவுவதால் ஏழ்மையும் தரித்திரமும் நீங்கும். உண்டபின் கழுவுவதால் பாவம் மன்னிக்கப்படும் என்பது நபிமொழியாகும்.


சமீபத்திய பத்திரிக்கைச் செய்தி: ஓர் உணவகத்துக்கு அருகில் லாரியை நிறுத்தி விட்டு இறங்கிய ஓட்டுநர் டயரை பரிசோதிக்கும் விதத்தில் அதைத் தட்டிப் பார்த்த பின் உணவு உட்கொள்ள மேசையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவர் வாயில் நுரை தள்ளி கீழே சாய்ந்து மரணமடைந்தார். காரணம், ஓட்டி வந்த லாரி வழியில் ஒரு பாம்பின் மீதேறி அதன் விஷம் டயரின் மீது படிந்திருந்ததை அறியாத ஓட்டுனர் கைகழுவாமல் உணவு உட்கொண்டதால் விஷம் தலைக்கேறி மரணமடைந்திருக்கிறார் என்பது பின்னர் தெரியவந்தது. சுன்னத்தை கடைபிடித்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்குமா?


முதலில் வலப்புறம்


தமிழகத்தின் தாய் மதரசா என்று பெயர் பெற்ற அல்பாக்கியாதுஸ் ஸாலிஹாத் என்ற இஸ்லாமியக் கல்லூரியின் நபிமொழித்துறை ஆசான் மௌலானா ஷைகு ஹசன் பாக்கவி (ரஹ்) அவர்கள் எப்போதும் அங்கத்தூய்மை எனும் உளூவுடன் இருப்பார்கள். அவர்கள் மரணிப்பதற்கு சற்றுமுன் "நான் உளூ செய்ய வேண்டும்" என்று கூறிய போது அருகில் இருந்த ஒருவர் அன்னாரின் செருப்பை கொண்டுவந்து முதலில் இடது காலில் அணிவித்தபோது அதை கழற்றிவிட்டு "முதலில் வலது காலில் அணிவியுங்கள். வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வந்த ஒரு சுன்னத்தை இந்த இறுதி நேரத்தில் விட செய்கின்றீர்களா? என்று கேட்டார்கள்.


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ( كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ، إِلاَّ مَنْ أَبَى ) “என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர” என்று கூறினார்கள். மக்கள், “நாயகமே! ஏற்க மறுத்தவர் யார்?” என்று கேட்டார்கள். நபியவர்கள், ( مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى ) (எனது வழிமுறைகளை கடைபிடிப்பதின் மூலம்) “எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் ஏற்க மறுத்தவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ-7280


அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( وَلَوْ تَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَكَفَرْتُمْ உங்கள் நபியின் நடைமுறையை (தொடர்ந்து) தவறவிட்டால், இறுதியில் இறை நிராகரிப்பில் (குஃப்ரில்) உங்களைச் சேர்த்து விடும். நூல்:- அபூதாவூது-463


இமாம் ஹஸன் அல்பஸரீ (ரஹ்)  அவர்களின் சபையிலே ஒருவர் ஒரு விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது இது சுன்னத்து தானே என்று சாதாரணமாகக் கூறிவிட்டார் அதைக்கேட்டு கடுமையாகக் கோபமடைந்த  ஹஸன் அல்பஸரீ (ரஹ்)  அவர்கள் அந்த மனிதரைப் பார்த்து  “நீ எழுந்து செல்! உன் வாயில் (குப்று) இறைமறுப்பின் வாடை வீசுகிறதுஎன்று கூறினார்கள்.

 

மறதியாக


ஃபுளைல் பின் இயாள் (ரஹ்) அவர்கள் ஒருமுறை அங்கத் தூய்மை செய்யும்போது மறதியாக மூன்று முறை கழுவுவதற்கு இரண்டு முறை கழுவி விட்டார்கள். அவர், அன்றிரவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கனவில் கண்டபோது அண்ணலார், "ஃபுளைலே! இது என்ன புதுமையாக இருக்கிறது? அங்கத் தூய்மையில் மூன்று முறை கழுவது எனது சுன்னத்தல்லவா? அதை விட்டுவிட்டீரே" என்றார்கள். 


உடனே ஃபுளைல் (ரஹ்) அவர்கள் திடுக்கிட்டு எழுந்து மீண்டும் உளூச் செய்து ஒரு சுன்னத்தை விட்டதற்கான பரிகாரமாக அன்றிரவு முழுவதும் பல ரக்அத்துக்கள் தொழுதார்கள். மேலும் மனம் திருப்தியடையாமல் அதற்கு பரிகாரமாக ஒரு வருடமாக இரவு முழுக்க பல ரக்அத்துக்கள் தொழுது கொண்டே இருந்தார்கள்.


ஒரு முறை பேரறிஞர் இமாம் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் தன்னைத் தானே பிரம்பால் அடித்துக் கொண்டும், அடமாடே! அடமாடே! என்று ஏசிக்கொண்டும், அழுது கொண்டும் இருந்ததை மக்கள் பார்த்துவிட்டு, எதற்காக நீங்கள் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? என்று கேட்டனர்.


அப்போது இமாமவர்கள் தன்னைத் தானே அடிப்பதையும், அழுவதையும் நிறுத்திவிட்டு கூறினார்கள். "நான் இன்று இந்த பள்ளிவாசலுக்குள் நுழைகின்ற பொழுது நமது தலைவர் உயிரிலும் மேலான அருமை நாயகம் (ஸல்) அவர்களின்  சுன்னத்துக்கு மாற்றமாக எனது இடது காலை முன்வைத்து நுழைந்துவிட்டேன். உடனே என்னை நோக்கி "யா ஸவ்ர்" (ஓ மாடே!) என்று யாரோ சொல்வது போல் உணர்ந்தேன். அப்போதுதான் நான் செய்த தவறு புரிந்தது. அண்ணலாரின் நல்வழிக்கு மாற்றம் செய்து விட்ட நான் மனிதனாக இருக்க தகுதியற்றவன். மாட்டை போல் நடந்து விட்டேனல்லவா? எனவே தான் என்னை நானே தண்டித்துக்கொண்டேன்" என்று தன் செயலுக்கு விளக்கம் கூறினார்கள்.


பள்ளிவாசலுக்குள் நுழையும் போது வலக்காலை முன்வைத்து நுழைவது சுன்னத். ஆனால், வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மறந்த நிலையில்  சுன்னத்துக்கு மாற்றமாக நடந்ததற்காக தன்னைத்தானே வருத்திக்கொண்டு மாடு என்று பொருள்படும் "அஸ்ஸவ்ரீ" என்பதை தனது பட்டப் பெயராக சூட்டிக்கொண்டார்கள்.


இமாம் அபூ உஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். யார் தமது சொல்லிலும் செயலிலும் சுன்னத்தை நடைமுறைப்படுத்துகிறாரோ அவர் நாவிலிருந்து ஞான மொழிகள் வெளிப்படும். மாறாக, தன்னுடைய மனவிருப்பத்திற்கேற்ப செயல்படுபவாரேயானால் அவருடைய நாவிலிருந்து 'பித்அத்'தின் சொற்கள் தான் வெளிப்படும். நூல்:- அல்மஃபாஹீம் யஜிபு அன் துஸஹ்ஹிஹ


ஆகவே, நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு அசைவிலும் சுன்னத்தான நடைமுறைகளைப் பேணி, அருமை நாயகம் (ஸல்) அவர்களின் நெருக்கத்தையும், இறையன்பையும் பெறுவோமாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர் அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை செல்: 9840535951

 

No comments:

Post a Comment

கர்பலாவை நோக்கி!

  கர்பலாவை நோக்கி!   لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ لِأُولِي الْأَلْبَابِ அறிவுடையவர்களுக்கு இவர்களுடைய வரலாறுகளில் படிப்பினை நி...