Search This Blog

Friday, 27 March 2026

திருமணத்திற்கு உதவுவோம்

 

திருமணத்திற்கு உதவுவோம்

 

وَأَنْكِحُوا الْأَيَامَى مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ

உங்களில் வாழ்க்கைத் துணையின்றி இருப்பவர்களுக்கும் உங்களுடைய ஆண் மற்றும் பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும் நீங்கள் மணமுடித்து வையுங்கள். திருக்குர்ஆன்:- 24:32

 

திருமண வாழ்வை துவங்கும் ஏழை, எளியோருக்கு நம்மால் இயன்ற ஆபரணங்களாகவோ, பத்திரங்களாகவோ, பணமாகவோ, ஆடைகளாகவோ ஏதேனும் ஒரு சிறிய உதவியேனும் செய்வதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில், நாம் உதவிய அந்த தம்பதிகளின் மூலமாக பிறக்கக்கூடிய மறுமைநாள் வரையிலான அனைத்து சந்ததிகளும் செய்யக்கூடிய தொழுகை, ஜகாத், ஹஜ் போன்ற நற்காரியங்களில் பலன்கள் நமது மண்ணறையில் நாம் அறியாமலே வந்தடைந்துக்கொண்டே இருக்கும்.

 

மிகச் சிறந்த உதவி

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பாதுகாக்கும் பணியில் ரபீஆ அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் அல்லும் பகலும் ஈடுபட்டிருந்தார். நபியவர்கள் இஷா தொழுகையை முடித்துவிட்டு இல்லம் சென்றவுடன் இவர், நபியவர்களுக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் நிறைவேற்றித் தருவதற்காக அங்கேயே வாசற்படியில் அமர்ந்திருப்பார். ஒருமுறை நபியவர்கள் இவரிடம் "மணமுடித்துக் கொள்!" என்று கூறினார்கள். அதற்கு அவர், "நாயகமே! நான் மணமுடித்துக் கொண்டால் எனது இந்தப் பணிக்கு அது ஒத்து வராது" என்று கூறினார். ஆனால், நபியவர்கள் அவரிடம் திரும்பத் திரும்ப மணமுடித்துக்கொள்! என்று கூறி, அவருக்கு வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிய வைத்து, அவருக்கு மணமுடித்து வைத்தார்கள் நூல்:- முஸ்னது அஹ்மத்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது பணியாளருக்கு மணமுடித்து வைத்து சந்தோஷப்பட்டார்கள். நமது பணியாளர்கள் அல்லது பணியாளர்களின் பிள்ளைகளுக்கு திருமணம் நடந்தேற நம்மால் முடிந்த உதவிகளை செய்ய முன் வரவேண்டும்.

 

இமாம் ஷஅரானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். திருமண உதவி என்பது ஒருவருக்கொருவர் செய்யக்கூடிய சகோதர கடமையாகும். மேலும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், தர்ம போராட்டத்திற்காகவும் செய்யும் உதவியை காட்டிலும் திருமண உதவி மிகவும் சாலச் சிறந்ததாகும் என முன்னோர்களான நாதாக்கள் கூறுகிறார்கள். ஏனெனில், திருமணம் என்பது மிகச் சிறந்த சுன்னத்தாகும். இவ்வுலகில் திருமணம் நடக்கவில்லையெனில் அல்லாஹ்வை வணங்கக்கூடிய இறைநேசர்கள் மற்றும் நேர்மையான அறப்போர் வீரர்கள் எவரும் இங்கு பிறக்க மாட்டார்கள்.  நூல்:- அல்அன்வார் ஃபீ ஸுஹ்பத்தில் அக்யார்

 

ஊக்கப்படுத்துதல்

 

பாத்திமா பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரலி) அவர்களும், அபூஜஹ்ம் பின் ஹுதைபா (ரலி) அவர்களும் என்னை பெண் கேட்கின்றனர்" என்று சொன்னேன்.

 

அதற்கு அண்ணலார்,  ( أَمَّا أَبُو جَهْمٍ فَلاَ يَضَعُ عَصَاهُ عَنْ عَاتَقِهِ وَأَمَّا مُعَاوِيَةُ فَصُعْلُوكٌ لاَ مَالَ لَهُ انْكِحِي أُسَامَةَ بْنَ زَيْدٍ )  "அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்கமாட்டார். (கோபக்காரர் மனைவியைக் கடுமையாக அடித்துவிடுபவர்) முஆவியா அவர் ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்துகொள்!" என்று கூறினார்கள். நானும் அவ்வாறு அவரை மணந்துகொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன். நூல் முஸ்லிம்-2953, நசாயீ-3193

 

திருமண பேச்சின்போது இன்னார் வீட்டிலுள்ள பெண் அல்லது மாப்பிள்ளை எப்படி? அல்லது அந்த வீட்டினர் எப்படிப்பட்டவர்கள்? என்று நம்மிடம் ஆலோசனை கேட்கப்படும்போது அவர்களிடமுள்ள நற்பண்புகளை எடுத்துரைத்து கேட்டவர்களை ஊக்கப்படுத்துவதும் திருமணத்திற்குரிய உதவிகளில் ஒன்றாகவே கருதப்படும்.

 

மாறாக, விசாரிக்க வந்தவர்களிடம் அவர்களைப்பற்றி தவறாக எடுத்துரைத்து, அவர்களை தாறுமாறாக விமர்சனம் செய்துவிட்டால் திருமணம் நடைபெறுமா? புத்தியுள்ள எவரும் பெரும்பாலோரின் விமர்ச்சனத்திற்கு ஆளானவருக்கு மணமுடித்து கொடுக்கமாட்டார்கள்.

 

பரிந்துரைத்தல்

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு முறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்சாரி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை (குள்ளமாகவும், அருவருப்பான தோற்றமுடையவராகவும் இருந்த) ஜுலைபீப் (ரலி) அவர்களுக்கு மணமுடித்து வைப்பதற்காக அப்பெண்ணின் தந்தையிடம் பெண் கேட்டார்கள். அவர், "மனைவியிடம் கேட்டுச் சொல்கிறேன்" என்று கூறினார்.

 

பிறகு அவர் தம் மனைவியிடம் நடந்ததை தெரிவித்தார். அவருடைய மனைவி, "அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு நான் சம்மதிக்கமாட்டேன். என்ன? அண்ணலாருக்கு ஜுலைபீபைத் தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா? இன்னின்னவர்களெல்லாம் நம்மிடம் பெண் கேட்டனர். அவர்களுக்கெல்லாம் நம் மகளை (தர முடியாது என) மறுத்துவிட்டோம். (அப்படியிருக்க இவருக்கா? சம்மதிக்க மாட்டோம்)"என்று கூறினார்.

 

இதையெல்லாம் அப்பெண்ணின் மகள் திரைக்குப் பின்னால் நின்றுகொண்டு கேட்டுக்கொண்டிருந்தாள். அந்த மனிதர் தம் மனைவியின் கருத்தை அண்ணலாரிடம் தெரிவிப்பதற்காக புறப்பட்டார்.

 

அப்போது அவருடைய மகள்,  ( أَتُرِيدُونَ أَنْ تَرُدُّوا عَلَى رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ أَمْره إِنْ كَانَ قَدْ رَضِيَهُ لَكُمْ فَأَنْكِحُوه ) "அண்ணலாரின் உத்தரவுக்கு நீங்கள் மாற்றம் செய்ய நினைக்கிறீர்களா? அண்ணலார், அவரையே உங்களுக்கு (மருமகனாக ஆக்க) விரும்பினால், அவருக்கே என்னை மணமுடித்து வையுங்கள்" என்று கூறினாள். அப்பெண் தன் பெற்றோரை(யும் அவர்களின் நிலைபாட்டையும்) விட்டு ஒதுங்கிக்கொண்டவளை போல் பேசினாள். அப்போது பெற்றோர், "நீ கூறுவது சரியே!" என்றனர்.

 

பின்னர் அப்பெண்ணின் தந்தை அண்ணலாரிடம் சென்று, "(நாயகமே!) நீங்கள் அவரையே விரும்பினால், எங்களுக்கும் அவர் திருப்தி தான்" என்றார். அண்ணலார், ( فَإِنِّي قَدْ رَضِيته )  "நான் அவரையே திருப்திபடுகிறேன்" என்று கூறினார்கள். பின்னர் அப்பெண்ணை அந்த மனிதருக்கே மணமுடித்து வைத்தார்கள்.

 

மேலும் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். பிற்காலத்தில் ஜுலைபீபுடைய மனைவியை நான் கண்டபோது, மதீனாவிலேயே அதிகமாகச் செலவழிக்கும் வீட்டினராக அவள் இருந்தாள். (அதாவது பெரும் சீமாட்டியாக இருந்தாள்). நூல்:- முஸ்னது அஹ்மது, முஸன்னஃப் அப்திர் ரஸ்ஸாக், தஃப்சீர் இப்னு கஸீர் அத்தியாயம் அல்அஹ்ஸாப், வசனம்-36

 

இந்த பையனுக்கு உங்கள் பெண்ணை மணமுடித்து வையுங்கள். அவர்கள் நன்றாக வாழ்வார்கள். இந்த பையன் ஏழையாக இருந்தாலும் அல்லது இவனுக்கு சொந்தம் பந்தம் என்று பெரியளவில் இல்லாவிட்டாலும் அல்லது கருப்பாக அழகற்றவனாக இருந்தாலும் அல்லது பெரிய படிப்புகள் படிக்காதவனாக இருந்தாலும், இவன் அல்லாஹ்விற்கு அஞ்சி ஐவேளை தொழக்கூடியவன், நற்குணமுள்ளவன், எந்த கெட்டப் பழக்கமும் இல்லாதவன், தமது மனைவி மக்களை காப்பாற்றும் அளவுக்கு ஓரளவு சம்பாதிக்கக்கூடியவன் என்றெல்லாம் கூறி ஒருவருக்கு திருமணம் நடந்தேற பரிந்துரைப்பதும் திருமணத்திற்குரிய உதவிகளில் ஒன்றாகவே கருதப்படும்.

 

பிறரின் பிரார்த்தனை

 

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் எப்போது வியாபாரத்திற்கு சென்றாலும் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவின் எல்லை வரை வந்து வழியனுப்புவார்கள். காரணம், இவரின் சம்பாத்தியத்தின் மூலம் பிற மக்கள் பயனடைந்து வந்தனர். இவ்வாறு ஒருமுறை அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் வியாபாரத்திற்கு சிரியா நோக்கி பயணமானார். அப்போது நபியவர்கள் மதீனாவின் எல்லை வரை வந்து வழியனுப்பவில்லை. வீட்டில் இருந்தவாறு சோகத்துடன் வழியனுப்பிவைத்தார்கள்.

 

இதைக் கவனித்த ஹுதைபா பின் அல்யமான் (ரலி) அவர்கள், "நாயகமே! அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்களின் விஷயத்தில் இப்போது நீங்கள் கொஞ்சம் மாற்றமாக நடந்துகொள்கிறீர்களே என்ன காரணம்?" என்று வினவினார். நபியவர்கள், "எனது அன்புத்தோழர் அப்துர்ரஹ்மான் இந்த பயணத்தில் சிரியாவிலேயே இறந்துவிடுவார். மீண்டும் மதீனா திரும்பமாட்டார். அவரது தவணை விரைவில் முடிந்துவிடும்" என்று கூறினார்கள். (நபியவர்களின் சொல் என்றும் பொய்ப்பதில்லை.)

 

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் தமது சிரியா பயணத்தை முடித்துக்கொண்டு நல்ல விதமாக மதீனா வந்து சேர்ந்தார். அப்போது நபியவர்களுக்கும், ஹுதைபா (ரலி) அவர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது பிறகு நபியவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை அழைத்து,  “உமது சிரியா பயணத்தில் என்ன நடந்தது? என்று விசாரித்தார்கள்.

 

அப்போது அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் நடந்த ஒவ்வொன்றையும் சொல்லிக்கொண்டே வரும்போது எங்களின் பயண குழுவில் நான்கு வாலிபர்கள் (மஹர் எனும்) மணக்கொடை கொடுத்து திருமணம் முடிப்பதற்கு போதிய வசதியற்றவர்களாக இருந்தனர். நான் எப்போது சிரியா சென்றாலும் அங்கே ஒரு வீட்டில் விருந்தாளியாக தாங்குவேன். அந்த வீட்டில் திருமணம் முடிக்காத நான்கு குமரிகள் இருந்தனர். உடனே, நான் அந்த நான்கு வாலிபர்களிடமும் குறிப்பிட்ட ஒரு தொகையைக் கொடுத்து, இந்தத் தொகையை மஹராக வைத்து இந்த நான்கு பெண்களையும் மணமுடித்துக் கொள்ளுங்கள் என்று கூறி, நான் அவர்களுக்கு மணமுடித்து வைத்தேன். அப்போது அவர்கள், இறைவா! எங்களுக்கு மணமுடித்து வைத்த இவருக்கு எங்கள் ஆயுளில் இருந்து சில ஆண்டுகளை இவருக்கு கொடுத்து இவரின் ஆயுளை நீட்டிப்பாயாக! என்று பிரார்த்தித்தனர்" என்று கூறினார்.

 

அப்போது நபியவர்கள், அப்துர்ரஹ்மானே! உமது ஆயுள் முடிந்துவிட்டது. இருந்தாலும், நீ யாருக்கு உதவி செய்தாயோ அவர்களின் பிரார்த்தனையின் மூலம் அவர்களின் ஆயுளில் இருந்து உனக்கு சில ஆண்டுகள் கொடுக்கப்பட்டு அதன் மூலம் உன் ஆயுள் நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.

 

திருமணத்திற்காக தவித்துக்கொண்டிருப்போருக்கு நாம் உதவி செய்யும்போது அவர்கள் நமக்காக பிரார்த்திக்கலாம். அந்தப் பிரார்த்தனையை அல்லாஹ் அலட்சியப்படுத்துவதில்லை.

 

கொடுக்கும் அந்தஸ்தில் இருப்பவர்கள்

 

ஜனாதிபதி உமர் பின் அப்தில் அஜீஸ் (ரஹ்) அவர்களை (ஹிஜ்ரீ 61-101) சந்திக்க ஈராக் மாகாணத்திலிருந்து ஒருபெண் (சிரியாவுக்கு) வந்து ஜனாதிபதி அவர்களின் வீட்டுக்குச் சென்றாள். சிறிது நேரத்தில் வீட்டிற்குள் வந்த ஜனாதிபதி அவர்கள் தமது மனைவியிடம், “யார் இந்தப்பெண்? ஏன் வந்துள்ளார்?” என்று விசாரித்தார்கள். அன்னாரின் மனைவி, “இதோ இருக்கிறார். அப்பெண்ணிடம் நீங்களே கேளுங்கள்” என்றார்.

 

ஜனாதிபதி அவர்கள், ( مَا حَاجَتُكِ ؟ ) “உமக்கு என்ன தேவை இருக்கிறது?” என்று கேட்டார்கள். உடனே அப்பெண், (  امْرَأَةٌ مِنْ أَهْلِ الْعِرَاقِ لِي خَمْسُ بَنَاتٍ كُسْلٌ كٌسْدٍ، فَجِئْتُكَ أَبْتَغِي حَسْنَ نَظَرِكَ لَهُنَّ )நான் ஈராக் மாகாணத்திலிருந்து வந்துள்ளேன். எனக்கு ஐந்து பெண்பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் யாரையும் யாரும் இதுவரை விரும்பி பெண்கேட்டு வந்ததில்லை. என்பிள்ளைகள்மீது உங்களின் கருணையை (உதவியை) எதிர்பார்த்து வந்துள்ளேன்” என்றார்.

 

ஜனாதிபதி அவர்கள்யாருமே பெண்கேட்டு வரவில்லையா?” என்று திரும்பத் திரும்பக் கூறியபடியே கண்ணீர் வடித்தார்கள். பின்னர் மைக்கூடு, காகிதம் ஆகியவற்றை கொண்டுவரச்சொல்லி, ஈராக் மாகாண ஆளுநருக்கு கடிதம் எழுதினார்கள்.

 

அப்போது ( سُمِّيَ اكْبُرْهُنّ ) “பெரிய மகள் பெயர் என்னம்மா”? என்று அப்பெண்ணிடம் கேட்டு அப்பெண்ணின் பெயரைக்குறிப்பிட்டு “இவ்வளவு உதவித்தொகை வழங்கவேண்டும்” என்றெழுதினார்கள். இதைப்பார்த்த அப்பெண் (அல்ஹம்து லில்லாஹ்) “அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்” என்றாள். பின்னர், இரண்டாம் மகள், மூன்றாம் மகள் நான்காம் மகள் என ஒவ்வொரு பிள்ளைகளின் பெயரையும் அவர்களுக்கு ஒதுக்கவேண்டிய பணத்தையும் குறிப்பிட்டு எழுதினார்கள்.

 

கொஞ்சநாட்களுக்கு பிறகு ஈராக் வந்த அப்பெண் அக்கடிதத்தை கவர்னரிடம் கொடுத்தார். கடிதத்தைப் பார்த்து கவர்னர் அழுதார். அழுதுகொண்டே, ( رَحِمَ اللَّهُ صَاحِبُ هَذَا الْكِتَابِ ) “இக்கடிதத்தை கொடுத்தனுப்பியவருக்கு (ஜனாதிபதிக்கு) அல்லாஹ் அருள்புரிவானாக” என்றார். இதைக்கேட்ட அப்பெண், “ஜனாதிபதி அவர்கள் மரணித்துவிட்டார்களா?” என்று கேட்டார். “ஆம்” என்றார் ஆளுநர். அழுதுகொண்டே அப்பெண் திரும்பிச் செல்ல முற்பட்டார்.

 

உடனே ஆளுநர், ( لَا بَأْسَ عَلَيْكِ، مَا كُنْتُ لِأَرُدَّ كِتَابَهُ فِي شَيْءٍ ) “பரவாயில்லை. ஜனாதிபதி அவர்களின் கடிதத்தை எதற்காகவும் நான் திருப்பி அனுப்ப விரும்பவில்லை.” என்று சொல்லி, அப்பெண்ணின் மகள்களுக்குரிய பணத்தை கொடுத்தனுப்பி அவரின் தேவைகளை நிறைவேற்றி அனுப்பினார். நூல்:- சீரா உமர் பின் அப்தில்அஜீஸ் இமாம் இப்னு அப்தில் ஹகம்

 

டமாஷ்கஸில் இருந்த வக்ஃப்களின் எண்ணிக்கைக்கும் அதன் பயன்பாட்டிற்கும் அளவேயில்லை. அவை ஏராளமாக இருந்தன.

 

அவற்றில் ஒன்று, பெண்பிள்ளைகளை தகுந்த மாப்பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு சக்தியற்ற பெற்றோருக்கு உதவிட ஒரு வக்ஃப் இருந்தது. அவற்றில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு திருமணம் செய்து வைத்திட செலவிட்டனர்.

 

மேலும், அநாதைப் பிள்ளைகளுக்காகவும் வக்ஃப் ஒன்று இருந்தது. அவற்றில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு அநாதைகளைப் பராமரிக்க, அவர்களுக்கு கல்வி கற்பிக்க, திருமணம் செய்து வைத்திட செலவிட்டனர்.”இந்த வக்ஃப்கள் அந்த ஊர்களின் பெருமைமிகுந்த வியப்பிற்குரியனவாக இருந்தன” என்கிறார் இப்னு ஜுபைர். நூல்:- ரிஹ்லா இப்னு பதூதா, ரிஹ்லா இப்னு ஜுபைர்

 

அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் அல்லது கொடுக்கும் அந்தஸ்தில் இருப்பவர்கள் தம்மை தேடி வந்து திருமணத்திற்கு உதவுமாறு கேட்கும்போது அவர்களின் நிலையை முழுமையாக அறிந்து, முடிந்தளவு அவர்களுக்கு உதவ வேண்டும்.

 

வலிமா விருந்து

 

புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது. அலீ (ரலி) ஃபாத்திமா (ரலி) ஆகியோரின் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதும் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (அலீ - ரலி அவர்களை நோக்கி!), ( أَنَّهُ لَا بُدَّ لِلْعُرْسِ مِنْ وَلِيمَةٍ ) "(வலீமா எனும்) திருமண விருந்து  நடைபெற வேண்டுமே" என்றார்கள். உடனே, (அலீ - ரலி அவர்களின் பொருளாதார நிலை அறிந்த ) சஅத் (ரலி) அவர்கள், "நான் ஒரு செம்மறி ஆடு தருகிறேன்" என்றார். (இதைப் பார்த்த) பல அன்சாரிகள் வாற்கோதுமை சேகரித்துக் கொண்டுவந்துக் கொடுத்தனர். (அதை வைத்து அலீ - ரலி அவர்களின் திருமண விருந்து சிறப்பாக நடைபெற்றது.) நூல்:- தப்ரானீ

 

இஸ்லாமியப் பார்வையில் திருமணத்தின்போது மணமகனுக்கு இரண்டு செலவுகள் உண்டு. 1) மணக்கொடை 2) வலிமா விருந்து.

 

அலீ (ரலி) அவர்கள் தன்னிடமிருந்த மதிக்கத்தக்க கேடயத்தையே (மஹ்ர் எனும்) மணக்கொடையாகக் கொடுத்தார்கள். வலீமாவிற்கு செலவு செய்ய ஒன்றுமில்லை என்ற நிலையில் இருந்தபோது தான் சஅத் (ரலி) அவர்கள் போன்றவர்கள் வலிமாவிற்காக பொருள்களை கொடுத்து உதவினர்.

 

கனவிலும் உதவி

 

பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸல்ஜுக் பேரரசின் புகழ்பெற்ற அரசர் ஜலாலுதீன் மலிக் ஷா (ரஹ்) (1055-1092) அவர்களைக் காண ஒரு மனிதர் வந்தார். அவர் வயதான தோற்றத்தில், அழகான உருவ அமைப்பில், கம்பீரமாக காணப்பட்ட முதியவராக இருந்தார். வந்தவர் மன்னருக்கு பரிசாக ஒரு மிஸ்வாக் குச்சியையும், ஒரு சீப்பையும் வழங்கினார்.

 

அவர், "நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் தூதராக உங்களிடம் வந்துள்ளேன் என்று கூறிவிட்டு, "எனக்கு பல பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்; நான் மிகவும் ஏழ்மையாக இருக்கின்றேன்; அவர்களுக்கு திருமணம் செய்வதற்குத் தேவையான பொருள்கள் என்னிடம் இல்லை. அதற்காக ஒவ்வொரு நாள் இரவும் நான் அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக்கொண்டே இருந்தேன்.

 

இந்நிலையில் ஒரு வெள்ளிக்கிழமை இரவில் நான் மிகவும் வருத்தத்தோடு அல்லாஹ்விடம் என் மகள்களின் திருமணம் குறித்து சொல்லி உதவி கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த இரவில் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் என் கனவில் காட்சியளித்தார்கள்; அப்பொழுது நபியவர்கள், "நீ தொடர்ந்து அல்லாஹ்விடம் உன் மகள்களின் திருமணத்திற்காக உதவிகளை கேட்டுக்கொண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள்.

 

நான், "ஆம்" என்று பதிலளித்தேன்; அதற்கு நபியவர்கள், "அப்படியானால் நீங்கள் மன்னர் ஷாவிடம் சென்று, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என் மகள்களின் திருமண செலவினங்களுக்கு உதவி செய்யுமாறு உங்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள்" என்று கூறினார்கள்.

 

உடனே நான் நபியவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! மன்னர் ஏதேனும் அடையாளங்களை கேட்டால் நான் என்ன சொல்வேன்?" என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், "நீங்கள் அவரிடம், ஒவ்வொரு நாள் இரவும் உறங்குவதற்கு முன் அல்முல்க் (67 வது) அத்தியாயத்தை முழுமையாக ஓதி வருகிறீர்கள் என்று சொல்லுங்கள்" என்று கூறினார்கள்.

 

இந்த செய்தியை மன்னர் கேட்டதும் அதிர்ச்சிக்குள்ளானார்; உடனே அவர், "நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையானது; இதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது; ஏனென்றால் முல்க் அத்தியாயத்தை ஒவ்வொரு இரவும் ஓதி வரும்படி எனது ஆசிரியர் எனக்கு சொன்னார்; அதை நான் இன்று வரை நடைமுறைப்படுத்தி வருகிறேன்" என்று சொன்னார்.

 

பின்னர் மன்னர் அவர்கள் அந்த ஏழை மனிதரின் மகள்கள் திருமண செலவினங்களுக்கு தேவையான முழுமையான பொருளாதார உதவிகளை செய்தார். மேலும், அவருக்கு தேவையான அளவு உதவிகளை மனமுவந்து தாராளமாக செய்து மரியாதையோடு வழியனுப்பி வைத்தார். நூல்:- அல்இஃதிபார்

 

தேவையற்ற செலவுகள் 

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَخَذَ أَمْوَالَ النَّاسِ يُرِيدُ إِتْلاَفَهَا أَتْلَفَهُ اللَّهُ ) யார் மக்களின் பொருளைப்பெற்று அதை சீரழிக்க நாடுகிறானோ அவனை அல்லாஹ் சீரழிப்பான். நூல்:- புகாரீ-பாடம்: லா சதகத்த இல்லா அன் ளஹ்ரி ஙினன்-1426

 

வசதியற்ற திருமண வீட்டார் திருமணத்திற்கென்று பிற மக்களிடம் வசூலித்ததை, தாம் சிரமப்பட்டு சம்பாதித்த பணமன்று, பிற மக்கள் வழங்கிய பிச்சைதானே என்றெண்ணி, அதை மார்க்கத்திற்கு முரணான பாவக்காரியங்களில், மூடநம்பிக்கையான காரியங்களில் அல்லது ஆடம்பரங்களில் செலவழித்தல் என்பது அல்லாஹ்விற்கு கோபத்தை உண்டாக்கும் செயலாகும்.

 

பணம், பொருள் யாருடையதாக இருந்தாலும், அதை விரயம் செய்வது பாவமாகும். அதிலும் பிற மக்களிடம் வசூலித்ததை தவறான முறையில் செலவு செய்வது, நம்பிக்கைத் துரோகமாகும்.

 

நம்மால் முடிந்தளவு திருமண தேவையுடையோருக்கு மனத்தூய்மையுடன் உதவுகள் புரிந்து, இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

No comments:

Post a Comment

திருமணத்திற்கு உதவுவோம்

  திருமணத்திற்கு உதவுவோம்   وَأَنْكِحُوا الْأَيَامَى مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ உங்களில் வாழ்க்கைத் துணைய...