Search This Blog

Tuesday, 10 March 2026

பண்டிகைகள்

 

பண்டிகைகள்

 

وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ

உங்களுக்கு (அல்லாஹ்) நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் பெயரை உரத்த குரலில் கூறுங்கள். (இதன் மூலம்) நீங்கள் நன்றி செலுத்துபவர்களாகத் திகழலாம். திருக்குர்ஆன்:- 2:185

 

இந்தியாவில் சுமார் இருபத்தைந்து கோடிக்கும் அதிகமான மக்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

 

அதில் காற்றை மாசுப்படுத்தவில்லை. கடலை மாசுப்படுத்தவில்லை, கலர்சாயம் பூசவில்லை, மதுவில் மயங்கவில்லை, கேளிக்கையில் மூழ்கவில்லை, கூச்சலும் இல்லை, கூப்பாடும் இல்லை, மாற்று மத வழிபாட்டுத்தலத்திற்கு முன் நின்று கூச்சலிட்டு இடையூறு செய்யவில்லை.

 

மாறாக, தானும் மகிழ்ந்து மற்றவர்களும் மகிழ இயன்றளவு தர்மம் செய்து, அனைத்து சமூக மக்களுடனும் அன்பை பறிமாறி, மாபெரும் இந்த ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகையை அமைதியாய் கடந்துசெல்கிறார்கள்.

 

பெருநாள் தர்மம்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَمَّا غَنِيُّكُمْ فَيُزَكِّيهِ اللَّهُ وَأَمَّا فَقِيرُكُمْ فَيَرُدُّ اللَّهُ عَلَيْهِ أَكْثَرَ مِمَّا أَعْطَاهُ ) உங்களில் செல்வந்தர்கள் இதை (ஸதக்கத்துல் ஃபித்ர்) கொடுத்தால் அல்லாஹ் அவர்களைத் தூய்மைப்படுத்துகிறான். உங்களில் ஏழைகள் கொடுத்தால் உயர்ந்தோன் அல்லாஹ் அவர்கள் கொடுத்ததைவிட அதிகமாகத் திருப்பி வழங்குகின்றான். அறிவிப்பாளர்:- ஸஅலபா பின் அஸ்ஸுஅய்ர் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-1379

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. முஸ்லிம்களில் சுதந்திரமானவர், அடிமை, ஆண், பெண் ஆகிய அனைவருக்காகவும் ஒரு ‘ஸாஉ’ அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ‘ஸாஉ’ அளவு தீட்டாத (வாற்)கோதுமையை நோன்புப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். நூல்:- புகாரீ-1504, முஸ்லிம்-1791 

 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாஉ அளவு ஏதேனும் உணவையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு தொலி நீக்கப்படாத கோதுமையையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழத்தையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு பாலாடைக் கட்டியையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு உலர்ந்த திராட்சையையோ வழங்கிவந்தோம். நூல்:- புகாரீ-1506, முஸ்லிம்-1796 

 

புனித ரமளான் முழுவதும் உண்ணா நோன்பு இருந்து, அடுத்த மாதமான ஷவ்வால் முதல் நாள் கொண்டாடப்படும் நோன்பு பெருநாளை (ஈதுல் ஃபித்ர்) முன்னிட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும் தர்மமே (ஸதக்கத்துல் ஃபித்ரு எனப்படும்) நோன்பு பெருநாள் தர்மமாகும்.

 

நோன்பாளி செய்த சிறு தவறுகளுக்கு இந்த தர்மம் ஒரு பரிகாரமாக அமையும். அன்றைய செலவுகள்போக மேல்மிச்சமாகக் கையிருப்பு வைத்திருக்கும் ஒருவர் தமக்காகவும் தம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்காகவும் தனித்தனியாக கணக்கிட்டு நோன்பு பெருநாள் தர்மம் கொடுக்க வேண்டும். அத்துடன் ஸகாத்தின் உச்சவரம்பையும் (நிஸாப்) பெற்றிருக்க வேண்டும் என்று அறிஞர்களில் சிலர் கூறுகின்றனர். சிறியவர், பெரியவர், ஆண், பெண், சுதந்திரமானவர், அடிமை ஆகிய அனைவருக்காக வேண்டியும் இந்தத் தர்மம் வழங்கப்பட வேண்டும். நூல்:- அல்மின்ஹாஜ்

 

அருமை நாயகம் (ஸல் )அவர்கள் காலத்தில் அரபுகளின் உணவுப் பொருளாக இருந்த கோதுமை மற்றும் பேரிச்சம்பழத்தை அடிப்படையாகக் கொண்டு இங்கு அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

பேரிச்சம்பழமும் தோல் நீக்கப்படாத வாற்கோதுமையாகவோ இருந்தால் அவற்றில் ஒரு "ஸாஉ" ஒருவருக்காக கொடுக்கப்பட வேண்டிய நோன்பு பெருநாள் தர்மத்தின் அளவாகும்.

 

ஒரு "ஸாஉ" என்பது ஹிஜாஸ் பகுதியின் அளவில் 2.135 கி.கிராம் ஆகும். நபியவர்கள் காலத்தில் மதீனாவின் வழக்கத்தில் இருந்த "ஸாஉ" என்பது நிறுத்தலளவையில் 2.135 கி.கிராமும் முகத்தலளவையில் 2.360 லிட்டரும் ஆகும். தோல் நீக்கப்பட்ட மணிகோதுமையாக இருப்பின் இதில் பாதியளவு என்ற மக்கள் நிர்ணயித்துக்கொண்டனர்.

 

இன்று அந்தந்தப் பகுதியில் மிகுதியாக உள்ள உணவு தானியங்களை இதே கணக்கில் கொடுக்கலாம். அறிஞர்களில் சிலர் அந்தத் தானியங்களின் விலைமதிப்பைப் பணமாகவும் கொடுக்கலாம் என்கிறார்கள்.

 

ஹனஃபீ சட்டம்: நாம் உண்ணுகின்ற அரிசி மற்றும் கோதுமை போன்ற தானியங்களின் கிராயத்தை கொடுப்பதே சிறந்தது.

ஷாஃபீ சட்டம்: நாம் உண்ணுகின்ற அரிசி மற்றும் கோதுமை போன்ற தானியங்களை மட்டுமே கொடுக்க வேண்டும்; அதன் கிராயத்தை கொடுக்கக்கூடாது.

 

பெருநாள் தொழுகைக்கு முன்னர்

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( فَرَضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ مَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلاَةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلاَةِ فَهِيَ صَدَقَةٌ مِنَ الصَّدَقَاتِ ) வீணான, கெட்ட பேச்சுகளிலிருந்து நோன்பாளியைத் தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவாக ஆவதற்காகவும் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஸதக்கத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள்.

 

யார் அதை(ப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் நிறைவேற்றினாரோ அது (அவரிடமிருந்து) ஏற்றுக்கொள்ளப்பட்ட (ஸதக்கத்தில் எனும்) நோன்புப் பெருநாள் தர்மம் ஆகும். யார் அதை தொழுகைக்குப் பின்னர் நிறைவேற்றினாரோ அது (அவரிடமிருந்து நிகழ்ந்த சாதாரண) தர்மங்களில் ஒரு தர்மம் ஆகும். நூல்:- அபூதாவூத்-1371, இப்னுமாஜா-1817, ஹாகிம்

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِزَكَاةِ الْفِطْرِ أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ ) மக்கள் பெருநாள் தொழுகைக்கு புறப்படுவதற்கு முன்பே நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும் என அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

 

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் பெருநாளைக்கு ஒருநாள் முன்பே அல்லது இரண்டு நாள் முன்பே நோன்பு பெருநாள் தர்மத்தை நிறைவேற்றுபவர்களாக இருந்தார்கள்.

 

பெருநாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே நபித்தோழர்கள் (இந்தத் தர்மத்தைக்) கொடுத்து வந்தார்கள். நூல்:- நூல்:- புகாரீ- 1511, முஸ்லிம்-1801, அபூதாவூத்-1372

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أُغْنُوهُمْ عَنِ الطَّوَافِ فِي هَذَا الْيَوْمِ ) அந்த நாளில் ஏழைகள் (உணவில்லாமல்) அலைந்து திரிவதை தடுத்துவிடுங்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- தாரகுத்னீ, சுனனுல் குப்ரா இமாம் பைஹகீ, அல்காமில் இமாம் இப்னு அதீ, புலூகுல் மராம்-648

 

நமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மம் வழங்கப்பட வேண்டும். மக்கள் பெருநாள் தொழுகைக்குப் புறப்படுவதற்கு முன்பே இத்தர்மத்தை வழங்கிவிட வேண்டும். ஒன்றிரண்டு நாள்களுக்கு முன்பே கொடுத்துவிட்டாலும் கூடும்.

 

ஃபித்ரா கணக்கு

 

(ஈதுல்ஃபித்ர் எனும்) ஈகைப்பெருநாள் பண்டிகைக்கு முன்பு (ஜகாத் அல்ஃபித்ரா எனும்) கட்டாய தர்மம் ஏழைகளுக்கு கொடுத்தே ஆக வேண்டும் என்பது இஸ்லாமிய மார்க்கச் சட்டமாகும். அதில் குறைந்தபட்ச தொகை ஒருவருக்கு தலா 140 ரூபாய் ( 90, 100, 120, 140, 150, 160, 200 என வேறுபடுகிறது). சராசரியாக, இந்தியாவில் உள்ள சுமார் 25 கோடி முஸ்லிம்களில், 20 கோடி இந்திய முஸ்லிம்களாவது தங்கள் ஊர்களில் உள்ள சக ஏழை எளிய முஸ்லிம்களுக்கு கொடுத்திருப்பார்கள்.

 

இந்தியாவில் ரூபாய் 2800 கோடிக்கு மேலே பெருநாளன்று தர்மம் செய்யப்படுகிறது.

 

உலகளவில் 180 கோடி உலக முஸ்லிம்கள் என கணக்கு எடுத்தால், இவர்களில் ஆகக் குறைந்த பட்சம் 120 கோடி மக்கள். இந்த ஃபித்ரா ஈகையை நிச்சயமாக தர்மம் செய்திருப்பர்.

 

அதாவது, 120 கோடி ×140 = 16,800 கோடி ரூபாய் தர்மம் ஒரே நாளில் நடந்துள்ளது எனலாமா என்றால், வெளிநாடுகளில் ஃபித்ரா தொகை வேறுபடும்.

 

உதாரணமாக, 30 கோடி முஸ்லிம்கள் கொண்ட பணக்கார வளைகுடா நாடுகளில் இந்த ஈதுல் ஃபித்ரா (பெருநாள் ஈகை) தொகை அந்த நாடுகளின் பொருளாதார வாழ்வியலுக்கு ஏற்ப சவுதியில் 25 ரியால் (570 ரூபாய்)  துபாயில் 25 திர்ஹம் (580 ரூபாய்) என்று நான்கு ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும். அந்த வகையில் வளைகுடாவில் மட்டுமே 600×30கோடி = 18,000 கோடி தர்மம் ஒரே நாளில் தரப்பட்டுள்ளது.

 

எனவே, சராசரியாக இந்த ஈகைத்திருநாள் அன்று இவ்வுலகில் எப்படியும் 30,000 கோடி ரூபாய்க்கு மேல் ஏழைகளுக்கு தர்மம் செய்யப்பட்டிருக்கும்.

 

“அட்சயத்திரிதை அன்று 9000 கோடிக்கு தங்கம் விற்பனை, தீபாவளி அன்று 6000 கோடிக்கு பட்டாசு விற்பனை, புத்தாண்டில் டாஸ்மாக் மது விற்பனை 500 கோடி” என்றெல்லாம் ஒவ்வொரு செய்தியிலும் பரபரப்பு பிரேக்கிங் நியூஸாக தண்டோரா போடும் நமது ஊடகங்கள், சுமார், 1400 வருடங்களாக சத்தமில்லாமல் நடக்கும் இந்த புரட்சிகரமான ஃபித்ரா தர்மக்கணக்கு குறித்தும் ஒரு செய்தியை விரிவாக வெளியிட்டால் சிறப்பாக இருக்குமே!

 

குர்பானி கணக்கு

 

குர்பானி செய்வதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி  இருக்கின்றோம். அல்லாஹ் கொடுத்திருந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் மீது அவன் பெயரைக் கூறி குர்பானி செய்யுங்கள். திருக்குர்ஆன்:- 22:34

 

அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்காக அவனுடைய ஆணைக்கேற்ப "ஈதுல் அள்ஹா"வின் நாட்களில் பிராணிகளை அறுத்துப் பலியிடுவதே இஸ்லாமிய மார்க்கத்தின் வழக்கில் "குர்பானி" எனப்படும்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يَذْبَحَنَّ أَحَدُكُمْ حَتَّى يُصَلِّيَ ) போதிய வசதி இருந்தும் யார் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நமது தொழும் இடத்திற்கு வர வேண்டாம். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், இப்னுமாஜா-3242

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா மாநகரில் தங்கியிருந்த பத்தாண்டு காலமும் குர்பானி கொடுத்து வந்தார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ 1427

 

25 கோடி இந்திய முஸ்லிம்கள் பக்ரித் கொண்டாடுகிறார்கள். குறைந்தது  20% முஸ்லிம்கள், குறைந்தபட்சம் ரூ 7000 / - க்கு குர்பான் ஆடுகளை வாங்குகிறார்கள்.

 

5 கோடி x  7000 = 35ஆயிரம் கோடி ரூபாய். இவை சீன தயாரிப்புகள் அல்ல; எம்.என்.சி நிறுவனத்தின் தயாரிப்புகளும் அல்ல. இந்த பெருமளவு பொருளாதாரத்தால் இந்தியப் பொருளாதாரமே பயனடைகிறது. 

 

100 சதவீதம் இந்திய தேசிய கிராமப்புறங்களிருந்து மட்டுமே இந்த வியாபாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு விவசாயி, ஒரு ஆண்டுக்கு சராசரியாக 5 ஆடுகளை நிர்வகித்தால், 5 கோடி ÷ 5 = 1 கோடி விவசாயக் குடும்பங்களுக்கு எளிமையான வேலைவாய்ப்பு கிடைத்துவிடுகிறது.

 

எனவே பக்ரித் 35 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளூர் வணிக பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கிறது என்பது மட்டுமின்றி சுமார் 1 கோடி சிறு விவசாயிகளுக்கு மிக இலகுவான வேலைவாய்ப்பைத் தருகிறது.

 

மேலும், ஒவ்வொரு ஆட்டின் இறைச்சியும், மூன்றில் இரண்டு மடங்கு ஏழைகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்படுவதால், அதாவது ஒருவர் குறைந்தது 10 பேருக்கு பகிர்ந்தளிப்பதால், 50 கோடிப் பேர் சாப்பிடுகிறார்கள்.   

 

மகிழ்ச்சியை வெளிப்படுத்த

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு பெருநாள் தினத்தில் என் அருகில் இரு (அன்சாரிச்) சிறுமியர் (சலங்கையில்லா கஞ்சிராக்களை) அடித்து பாடிக்கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். இதைக் கண்ட அவர்கள், ( أَبِمُزْمُورِ الشَّيْطَانِ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم )  "இறைத்தூதர் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக்கருவிகளா? என்று (கடிந்து) பேசி அவ்விருவரையும் அதட்டினார்கள்.

 

உடனே பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், ( دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا، وَهَذَا عِيدُنَا )  "அவ்விருவரையும் விட்டுவிடுங்கள், அபூபக்ரே! (மகிழ்ச்சியை வெளிப்படுத்த) ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்" என்று கூறினார்கள்.

 

(அன்றைய தினத்தன்று) நபியவர்களின் பள்ளிவாசலி(ன் வளாகத்தி)ல் அபிசீயனியர்கள் ஈட்டியறிந்து (வீர விளையாட்டு) விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களது விளையாட்டை நான் பார்ப்பதற்காக நபியவர்கள் எனது அறை வாசலில் நின்றபடி தமது மேல் துண்டால் என்னை மறைத்துக் கொண்டிருந்தார்கள். நானாக (விளையாட்டை ரசித்துச் சலிப்புற்று)த் திரும்பும்வரை எனக்காகவே அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். நூல்:- புகாரீ-950,952, முஸ்லிம்-1619, 1620

 

இசைக்கருவிகளின் துணையின்றி வாயால் ராகமிட்டு நல்ல கருத்துள்ள பாடல்களைப் பாடுவதற்கும் கேட்பதற்கும் அனுமதி உண்டு. வீர விளையாட்டுக்கள் விளையாடுவதற்கும் அதைப் பார்ப்பதற்கும் அனுமதியுண்டு. பெருநாள் தினத்தன்று மகிழ்ச்சியின் வெளிப்பாடாக பள்ளிவாசலின் வளாகத்திலோ அல்லது மைதானம் போன்ற பொதுஇடங்களிலோ மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மார்க்கம் அனுமதித்த (ஹராமற்ற) பயனுள்ள விளையாட்டுகளை விளையாடலாம்.

 

இஸ்லாம் கூறுகின்ற முறையில் பெருநாள் கொண்டாடி இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

No comments:

Post a Comment

பண்டிகைகள்

  பண்டிகைகள்   وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ உங்களுக்கு (அல்லாஹ்) நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ...