மீன்கள்
وَمَا يَسْتَوِي الْبَحْرَانِ هَذَا عَذْبٌ
فُرَاتٌ سَائِغٌ شَرَابُهُ وَهَذَا مِلْحٌ أُجَاجٌ وَمِنْ كُلٍّ تَأْكُلُونَ
لَحْمًا طَرِيًّا
இரு கடல்களும் சமமாகி
விடாது; ஒன்று குடிப்பதற்கு
இன்பமான மதுரமான தண்ணீர்! மற்றொன்று கொடிய உப்பு(த் தண்ணீர். இவ்வாறு இவ்விரண்டிற்கும்
வேற்றுமை இருந்த போதிலும்) இவ்விரண்டில் இருந்துமே புத்தம் புதிய (மீன்) மாமிசத்தைப்
புசிக்கின்றீர்கள். திருக்குர்ஆன்:- 35:12
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்
21-ந் தேதி (World Fisheries Day) உலக மீன்வள, மீனவர் தினமாக உலகம் முழுவதிலும் கடைபிடிக்கப்படுகிறது.
வளரும் நாடுகளில்
சுமார் 30 மில்லியன் முதல் 60 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்நாட்டு மீன்பிடியில்
ஈடுபட்டு உள்ளனர். உலக மக்களுக்கு தேவையான உணவுப் புரதத்தில் 25 சதவீதத்துக்கும் அதிகமான அளவு மீன்களில் இருந்து
பெறப்படுகிறது. மக்கள், ஆண்டுக்கு 100 மில்லியன் டன் மீன்களை உணவாக கொள்கின்றனர். இந்தியாவில் 7,516 கிலோமீட்டர்கள் (4,670 மைல்) கடல் கடற்கரையும், 3,827 மீனவ கிராமங்களும், 1,914 பாரம்பரிய மீன் இறங்கு
நிலையங்களும் உள்ளன.
இந்தியாவின் மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் 1.07 சதவீத பங்களிப்பு
மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தில் மீன்பிடித்தல் ஒரு முக்கிய துறையாகும். இந்தியாவில்
மீன்பிடித் துறையானது நாட்டில் 28 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கிறது. உலக உற்பத்தியில்
7.96 சதவீத பங்கு வகிக்கும் இந்தியா, சீனாவிற்கு அடுத்தபடியாக
மீன் வளர்ப்பு மூலம் மீன் உற்பத்தியில் 2-வது இடத்தில் உள்ளது. தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின்
கூற்றுப்படி மீன்பிடித் தொழில் மூலம் ஆண்டுக்கு 334.41 பில்லியன் ரூபாய் ஏற்றுமதி வருமானமாக கிடைக்கிறது.
தற்போது, வேதனையான தகவல் என்னவென்றால், இன்றைக்கு தங்கள் அருகில் உள்ள நீர் வளங்களில் மீன் வளம் குறைந்து வருவதால், மீனவர்கள் தங்கள் பாரம்பரிய நிலங்களில் இருந்து வெகுதொலைவில் மீன்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலை கப்பல்கள், அடிமட்ட இழுவை இழுத்தல் மற்றும் நீடிக்க முடியாத மீன்பிடி முறைகள் மூலம் மீன் வளம் குறைந்துவிட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வில், உலகின் 3-ல் 2 பங்கு மீன்வளம் அதிகமாக அல்லது முழுமையாக அறுவடை செய்யப்பட்டு விட்டதாகவும், 3-ல் ஒரு பங்குக்கு மேற்பட்டவை மீன் வளத்தின் அத்தியாவசிய வாழ்விடங்கள், மாசுபாடு மற்றும் உலகளாவிய இழப்பு போன்ற காரணங்களால் வீழ்ச்சியடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கிறது. இந்த பிரச்சினையை உலக நாடுகள் இணைந்து தீர்க்காத நிலையில், நெருக்கடி மேலும் ஆழமடையும். இந்த சூழலில் உலக மீன்பிடி தினம் இந்த பிரச்சினைகளை உலகின் கவனத்திற்கு முன்னிலைப்படுத்த உதவுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( أُحِلَّتْ لَنَا مَيْتَتَانِ الْحُوتُ وَالْجَرَادُ ) செத்துப்போன இரண்டு வகை உயிரினங்களான மீன்களும் வெட்டுக்கிளிகளும்
நமக்கு உண்ண அனுமதிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்
நூல்:- இப்னுமாஜா-3209, முஸ்னது அஹ்மத்
தண்ணீரில் சுரங்கப்
பாதை
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். (ஒருமுறை) இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள், இஸ்ரவேலர்களிடையே
நின்று சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம், ‘‘மக்களிலேயே மிகவும்
அறிந்தவர் யார்?” என்று வினவப்பட்டது. அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘‘நான்தான்” என்று பதிலளித்துவிட்டார்கள்.
ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான்.
ஏனெனில் மூசா (அலை) அவர்கள், ‘‘(இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு” என்று சொல்லாமல் விட்டுவிட்டார்கள்.
ஆகவே, அல்லாஹ் மூசா (அலை)
அவர்களுக்கு, ‘‘இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர்
உம்மைவிட அதிகமாக அறிந்தவர்” என்று அறிவித்தான். மூசா (அலை) அவர்கள், ( يَا
رَبِّ فَكَيْفَ لِي بِهِ ) ‘‘என் இறைவா! அவரைச் சந்திப்பதற்கு எனக்கு வழி எப்படி?” என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ், ( تَأْخُذُ
مَعَكَ حُوتًا فَتَجْعَلُهُ فِي مِكْتَلٍ، فَحَيْثُمَا فَقَدْتَ الْحُوتَ فَهْوَ
ثَمَّ ) ‘‘நீங்கள் ஒரு மீனைப் பிடித்து அதை ஒரு (ஈச்சங்) கூடையில் போட்டுக்கொள்ளுங்கள்.
(அப்படியே கடலோரமாக நடந்து பயணம் செய்யுங்கள்!) நீங்கள் எங்கே அந்த மீனைத் தவறவிடுகிறீர்களோ
அங்கேதான் அவர் இருப்பார்” என்று சொன்னான்.
எனவே, மூசா (அலை) அவர்கள்
ஒரு கூடையில் மீனை எடுத்துக்கொண்டு நடந்தார்கள். தம்முடன் தம் உதவியாளர் யூஷஉ பின்
நூனையும் அழைத்துக் கொண்டார்கள். இருவரும் (இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகிலிருந்த)
பாறைக்கு வந்து சேர்ந்தபோது அங்கு இருவரும் தலைவைத்து உறங்கினார்கள்.
கூடையிலிருந்த அந்த
மீன் கூடையிலிருந்து குதித்து வெளியேறிக் கடலில் விழுந்தது. கடலில் (சுரங்கம் போன்று)
பாதை அமைத்துக்கொண்டு (செல்லத் தொடங்கி)விட்டது. நீரோட்டத்தை மீனைவிட்டு அல்லாஹ் தடுத்துவிடவே
அதைச் சுற்றி ஒரு வளையம் போல் நீர் ஆகிவிட்டது.
மூசா (அலை) அவர்கள்
(தூக்கத்திலிருந்து) விழித்தபோது அன்னாருடைய தோழர் (யூஷஉ) மீனைப் பற்றி அன்னாருக்குத்
தெரிவிக்க மறந்துவிட்டார். எஞ்சிய பகலிலும் இரவிலும் அவர்கள் (தம் பயணத்தில் தொடர்ந்து)
நடந்தனர்.மறுநாள் ஆனபோது மூசா தம் உதவியாளரை நோக்கி, ‘‘நமது காலைச் சிற்றுண்டியைக் கொண்டுவாரும்! நாம்
நமது இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்துவிட்டோம்” என்று சொன்னார்கள். (18:62)
அல்லாஹ் தமக்குக்
கட்டளையிட்ட (இடத்)தை தாண்டிச் செல்லும்வரை, மூசா (அலை) அவர்கள் களைப்பை உணரவில்லை.
அவர்களுடைய உதவியாளர், ‘‘நாம் அந்தப் பாறையில்
(ஓய்வெடுக்க) ஒதுங்கினோமே பார்த்தீர்களா? அங்கேதான் நான் மீனை மறந்து (தவறவிட்டு)விட்டேன்.
அதை நான் (உங்களுக்குக்) கூறுவதை ஷைத்தான்தான் எனக்கு மறக்கடித்துவிட்டான். (அவ்விடத்தில்
அது, கடலில் செல்ல) விந்தையான
விதத்தில் தன் வழியை அமைத்துக்கொண்டது” என்று கூறினார். (18:63)
அதற்கு மூசா (அலை)
அவர்கள், ( ذَلِكَ مَا كُنَّا نَبْغِي ) ‘‘அதுதான் நாம் தேடிக்கொண்டிருந்த இடம்” என்று கூறினார்கள்.
உடனே அவர்களிருவரும் தங்கள் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்த வழியே திரும்பிச் சென்றார்கள்.
இறுதியில் அந்தப் பாறைக்கு இருவரும் வந்துசேர்ந்தார்கள். அங்கே தம்மை முழுவதுமாக ஆடையால்
மூடியபடி ஒரு மனிதர் (களிர்) இருந்தார். மூசா (அலை) அவர்கள் அவருக்கு சலாம் (முகமன்)
கூறினார்கள். நூல்:- புகாரீ-4725, முஸ்லிம்-4742
இந்த வரலாறு குறித்து
திருக்குர்ஆன் அல்கஹ்ஃப் அத்தியாயம் (60 முதல் 65 வரையுள்ள வசனங்கள்) விவரிக்கிறது.
மூசா (அலை) அவர்கள், ஆன்மீக கல்வியாளருமான இறைநேசருமான களிர் (அலை) அவர்களைச் சந்திப்பதற்காக
அல்லாஹுத்தஆலா இறந்த மீனுக்கு உயிர் தந்துள்ளான். தண்ணீரில் அதன் சென்றப் பாதையை குகைப்
போன்று ஆக்கினான். இறைநேசர்களை சந்திக்கும்போது அல்லாஹுத்தஆலா இவ்வாறான அதிசயங்களை
நிகழ்த்தக்கூடும் என்கிறது இந்த வரலாறு. இதன் மூலம் பிறருக்கு இறைநேசர்கள்மீது மரியாதை
ஏற்படக்கூடும்
உருமாற்றப்பட்டனர்
யூதர்கள் சனிக்கிழமை
அன்று எந்தப் பணியிலும் ஈடுபடாமல் அந்த நாளை கண்ணியப்படுத்தும் விதமாக அந்த நாளின்
(இறைக்)கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அல்லாஹ் அவர்களிடம் உறுதிமொழி வாங்கியிருந்தான்.
(சவூதி அரேபியாவிலுள்ள) மத்யனுக்கும் (சினாய் தீபகற்பத்திலுள்ள) "தூர்"
மலைக்கும் இடையே உள்ள "அய்லா" எனும் கடலோரக் கிராமத்தில் யூதர்கள் வசித்து
வந்தனர். (மீன் பிடிப்பதுதான் அவர்களது தொழிலாக இருந்தது.)
சனிக்கிழமை மீன் பிடிக்க
இறைவன் அவர்களுக்குத் தடை விதித்திருந்தான். சனிக்கிழமைகளில் தான் அந்த கிராமத்தின்
கடலிலுள்ள மீன்கள் யாவும் தண்ணீருக்கு வெளியே வந்து வாயைத் திறந்து கொண்டிருக்கும்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று அவை கடலுக்கடியிலேயே தங்கிவிடும். அடுத்த சனிக்கிழமை
வரும்வரை அவற்றில் எதையும் பார்க்க முடியாது. கடலின் ஆழத்திற்குச் சென்று பெரும் சிரமத்துடன்
மீன்பிடிக்க முயன்ற போதும் அவர்களுக்கு எந்த மீனும் கிடைக்கவில்லை. அவர்கள் இவ்வாறே
சில காலம் இருந்தனர்.
இந்நிலையில் தான்
அவர்களின் சிலர் மீனுக்கு ஆசைப்பட்டு, பள்ளம் ஒன்றைத் தோண்டி,
அதற்குக் கடல் வரை வாய்க்கால்
அமைத்தனர். சனிக்கிழமை வந்தால் அந்த வாய்க்காலைத் திறந்து விடுவார்கள். அதனால் அலைகள்
மீன்களை அடித்துக் கொண்டு வந்து அந்தப் பள்ளத்தில் தள்ளும். அதிலிருந்து மீன்கள் வெளியேற
நினைத்தாலும் வாய்க்காலில் நீர் குறைவாக இருப்பதால் வெளியேற முடியாது. அதிலேயே தங்கிவிடும்.
ஞாயிற்றுக்கிழமை வந்ததும் அங்கு வந்து அதைப் பிடித்து உண்ணத் துவங்கினர்.
அப்போது அவர்களிடையே
இருந்த அறிஞர்கள் அந்த மக்களிடம், ( وَيَحْكَمُ! إِنَّمَا تَصْطَادُونَ يَوْمَ
السَّبْتِ، وَهُوَ لَا يَحِلُّ لَكُمْ
) "உங்களுக்கு கேடு தான் ஏற்படும். நீங்கள் (தடை செய்யப்பட்ட அந்த) சனிக்கிழமை தான்
மீன் பிடிக்கிறீர்கள். அது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதன்று" கூறினர். அதற்கு
அவர்கள், ( إِنَّمَا صِدْنَاهُ يَوْمَ الْأَحَدِ ) "நாங்கள் மீன்களை பிடிப்பது
ஞாயிற்றுக்கிழமையில் தானே" என்றனர்.
அதற்கு அந்த அறிஞர்கள், ( لَا
وَلَكِنَّكُمْ صِدْتُمُوهُ يَوْمَ فَتْحِكُمُ الْمَاءَ فَدَخَلَ ) "இல்லை! அதற்காக நீங்கள்
நீரை திறந்துவிடுகின்ற நாளிலேயே அவை (உங்கள் வசம்) வந்து விடுவதால் அப்போதே அவற்றை
நீங்கள் பிடித்துவிட்டீர்கள் (என்றே பொருள்)" என்றனர். ஆயினும் அதிலிருந்து விலகிக்
கொள்ள முடியாதவாறு அவர்கள் அதில் சிக்கிவிட்டனர். இப்படியே செய்து கொண்டிருந்தபோதுதான்
அவர்களை குரங்குகளின் தோற்றத்திற்கு அல்லாஹ் உருமாற்றினான். நூல்:- தஃப்சீர் இப்னு
கஸீர் அல்பகரா வசனங்கள் 65,66
அவர்கள் பொருளாதார
மோகம் கொண்டு, அல்லாஹ்வின் கட்டளையை மீற நினைத்து, (தந்திரமாக) வெள்ளிக்கிழமை இரவு வலை போட்டு ஞாயிற்றுக்கிழமை
காலை வலையை எடுத்தனர் என்றும் சொல்லப்படுகிறது.
விழுங்கப்பட்டார்
இறைத்தூதர் யூனுஸ்
(அலை) அவர்கள் (கி.மு. 785) இராக்கில் உள்ள "நீனவா" பகுதி மக்களுக்கு இறைத்தூதராக
அனுப்பப்பெற்றார்கள். யூனுஸ் (அலை) அவர்கள் இந்த மக்களை ஓரிறைக் கொள்கைக்கு அழைத்தார்கள்.
ஆனால், அவர்கள் அந்த அழைப்பை
ஏற்க மறுத்து தங்களது இறைமறுப்பிலேயே பிடிவாதமாக இருந்து வந்தனர்.
இதனால் வெறுப்புற்ற
யூனுஸ் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி இல்லாமலேயே அந்த ஊரைவிட்டு வெளியேறிவிட்டார்கள்.
அங்கிருந்து பாலஸ்தீனத்திலுள்ள துறைமுகம் வந்து துனூசியா செல்வதற்காகக் கப்பல் ஏறினார்கள்.
அப்போது கப்பல் குலுங்கியது.
பயணிகளில் ஒருவரைக் குறைத்தால் நல்லது என்று கருதியே கப்பல் உரிமையாளர்கள், சீட்டுக் குலுக்கிப்போட்டார்கள்.
அதில் யூனுஸ் (அலை) அவர்களின் பெயரே வந்தது. யூனுஸ் (அலை) அவர்கள் கடலில் தூக்கியெறியப்பட்டார்கள்.
அல்லாஹ்வின் உத்தரவுக்கிணங்க அப்போது ஒரு பெரிய மீன் அவர்களை விளங்கியது. மீன் வயிற்றுக்குள்
நாற்பது நாள்கள் இருந்தார்கள். அவ்வாறு மீன் வயிற்றுக்குள் இருந்தவாறு அவர்கள், ( لَا
إِلَهَ إِِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ ) "உன்னைத் தவிர வேறு
இறைவன் இல்லை. உன்னைத் துதிக்கிறேன். நிச்சயமாக நான் அநீதியாளர்களில் ஒருவனாகிவிட்டேன்"
என்று பிரார்த்தித்துக்கொண்டே இருந்தார்கள். எனவே, அல்லாஹ் அவரை காப்பாற்றினான்.
கடலில் சுற்றித்திரிந்த
அந்த மீன் அல்லாஹ்வின் உத்தரவுக்கிணங்க கடற்கரைக்கு வந்து அவர்களை உமிழ்ந்துவிட்டு
சென்றது. அதன் பிறகு யூனுஸ் (அலை) அவர்கள் மீண்டும் "நீனவா" சென்று தம் கடமையை
செய்தார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர், தஃப்சீர் அத்தஹ்ரீர் வத்தன்வீர், தஃப்சீர் மாஜிதீ
இந்த வரலாறு குறித்து
திருக்குர்ஆனின் அல்அன்பியா அத்தியாயம் (87,88) விவரிக்கிறது.
ஒருமாத உணவு
ஜாபிர் (ரலி) அவர்கள்
கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறைஷியரின் வணிகக் குழு ஒன்றை எதிர்கொள்ள
படைப்பிரிவு ஒன்றில் எங்களை அனுப்பினார்கள். எங்களுக்கு அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ்
(ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள். ஒரு பை பேரிச்சம் பழத்தை எங்களுக்கு பயண
உணவாக கொடுத்தார்கள். எங்களுக்குக் கொடுக்க வேறதையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை. அது, அன்றைய இரவோடு தீர்ந்துவிட்டது.
(அதன் பிறகு) எங்களுக்கு கடுமையான பசி ஏற்பட்டது. பிறகு நாங்கள் கடற்கரையோரமாக நடந்தோம்.
அப்போது கடலோரத்தில் பெரிய மணல் திட்டைப் போன்று ஏதோ ஒன்று எங்களுக்கு தென்பட்டது.
அங்கு நாங்கள் சென்றோம். அங்கு கொழுப்புத் தலை திமிங்கலம் (அம்பர்) எனப்படும் ஒரு பிராணி
கிடந்தது. அபூஉபைதா (ரலி) அவர்கள் "செத்ததாயிற்றே?"
என்று கூறினார்கள். பிறகு
( لاَ بَلْ نَحْنُ رُسُلُ رَسُولِ اللَّهِ صلى
الله عليه وسلم وَفِي سَبِيلِ اللَّهِ وَقَدِ اضْطُرِرْتُمْ فَكُلُوا ) "இல்லை, நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தூதர்கள் ஆவோம். அல்லாஹ்வின்
பாதையில் (அறப்போரில்) உள்ளோம். நீங்கள் நிர்பந்தத்திற்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறீர்கள்.
எனவே, (இதை) உண்ணுங்கள்"
என்று கூறினார்கள்.
அந்தத் திமிங்கலத்தை
வைத்துக்கொண்டு நாங்கள் ஒரு மாதம் கழித்தோம். எங்கள் முந்நூறு பேரின் உடலும் வலிமையாகிவிட்டது.
நாங்கள் அந்த திமிங்கலத்தின் விழிப் பள்ளத்திலிருந்து பெரிய பாத்திரங்கள் மூலம் எண்ணெய்
எடுத்தோம். அதன் உடலைக் காளை மாட்டின் அளவுக்குத் துண்டு போட்டோம். அபூஉபைதா (ரலி)
அவர்கள் எங்களின் பதிமூன்று பேரைத் தேர்ந்தெடுத்து, அதன் விழிப் பள்ளத்தில் உட்காரவைத்தார்கள்.
மேலும், அதன் விலா எலும்புகளில்
இரண்டை எடுத்து, அதை (பூமியில்) நட்டுவைத்தார்கள். பிறகு
(அவற்றுக்கிடையே) தமது வாகனத்தைச் செலுத்தும்படி
அவர்கள் உத்தரவிட, அவ்வாறே செலுத்தப்பட்டது. அவ்விரு விலா எலும்புகளின் கீழே அவ்வாகனம்
சென்றது. எனினும், அவ்விரண்டையும் தொடாமலேயே அது (அவற்றுக்கிடையே புகுந்து வெளியே)
சென்றுவிட்டது.
பிறகு அந்த மீனை
(அரை வேக்காட்டில்) வேகவைத்து, பயண உணவாக எடுத்துக்கொண்டோம். நாங்கள் மதீனா வந்தபோது, நபியவர்களிடம் சென்று
நடந்ததை அவர்களிடம் தெரிவித்தோம். அப்போது நபியவர்கள், ( هُوَ رِزْقٌ أَخْرَجَهُ اللَّهُ لَكُمْ
فَهَلْ مَعَكُمْ مِنْ لَحْمِهِ شَىْءٌ فَتُطْعِمُونَا
) "அது அல்லாஹ் உங்களுக்கு வெளிப்படுத்திய உணவாகும். அதில் ஏதேனும் உங்களிடம் மீதமிருந்தால்
நமக்கும் உண்ணக் கொடுங்களேன்!" என்று கேட்டார்கள். உடனே நாங்கள் அதிலிருந்து சிறிதளவை
நபியவர்களுக்கு கொடுத்தனுப்பினோம். அதை அவர்கள் உண்டார்கள். நூல்:- புகாரீ-4362, முஸ்லிம் 3915
சொர்க்கவாசிகளின்
முதல் உணவு
அனஸ் (ரலி) அவர்கள்
கூறியதாவது அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்திருக்கும் செய்தி (யூத மதத்தில்
இருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்களுக்கு எட்டியது. உடனே அவர் நபியவர்களிடம் வந்து
சில விஷயங்களைக் குறித்துக் கேட்டார். "தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றி
கேட்கப்போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்" என்று கூறினார். (அதில்
ஒன்று) "சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு எது?"
என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ( وَأَمَّا
أَوَّلُ طَعَامٍ يَأْكُلُهُ أَهْلُ الْجَنَّةِ، فَزِيَادَةُ كَبِدِ الْحُوتِ ) "சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான
சதையாகும்" என்று பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ-3938
பிரார்த்திக்கின்றன
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( إِنَّ اللَّهَ وَمَلاَئِكَتَهُ وَأَهْلَ السَّمَوَاتِ وَالأَرْضِ حَتَّى
النَّمْلَةَ فِي جُحْرِهَا وَحَتَّى الْحُوتَ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِ النَّاسِ
الْخَيْرَ ) "ஒரு பக்தியாளரைவிட
கல்வியாளருக்குள்ள சிறப்பு, உங்களில் கடைநிலையில் உள்ள ஒருவரைவிட (இறைத்தூதராகிய) எனக்குள்ள
சிறப்புப் போன்றதாகும்" என்று கூறிவிட்டு, அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் விண்ணிலும் மண்ணிலும்
வசிப்போரும் பொந்துகளில் வாழும் எறும்புகள் (தண்ணீரில் வாழும்) மீன்கள் உட்பட அனைத்தும், மக்களுக்கு நல்லதை
கற்பிப்பவருக்காக அருள் வேண்டிப் பிரார்த்திக்கின்றன. அறிவிப்பாளர்:- அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2606
பேராசான் பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْعُلَمَاءُ وَرَثَةُ الْأَنْبِيَاءِ، يُحِبُّهُمْ
أَهْلُ السَّمَاءِ، وَ تَسْتَغْفِرُ لَهُمُ الْحِيتَانُ فِي الْبَحْرِ إذَا
مَاتُوا إلَى يَوْمِ الْقِيَامَةِ ) (மார்க்க) அறிஞர்கள்
நபிமார்களின் வாரிசுகள் ஆவர். வானவர்கள் அவர்களை
நேசிக்கிறார்கள். மேலும் கடலில் உள்ள மீன்கள் அவர்களுக்காக மன்னிப்பு தேடுகின்றன. அவர்கள்
இறந்துவிட்டால் மறுமைநாள் வரை (அவர்களுக்காக மன்னிப்பு தேடுதல்) தொடர்கின்றன. அறிவிப்பாளர்:-
அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- ஜாமிஉஸ் ஸஙீர்-5687 இமாம் சுயூத்தீ
அருமை நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ
، وَإِنَّ طَالِبَ الْعِلْمِ يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاءِ وَالْأَرْضِ ،
حَتَّى الْحِيتَانِ فِي الْمَاءِ ) (மார்க்கக்) கல்வியைத்
தேடும் ஒருவர்மீது கொண்டுள்ள அன்பால் வானவர்கள் தமது சிறகுகளை தாழ்த்துகிறார்கள். தண்ணீரில்
வாழும் மீன்கள் உட்பட வானம் பூமியிலுள்ளோர் யாவரும் கல்வியைத் தேடுபவருக்காகப் பாவமன்னிப்பு
கோருகின்றனர். அறிவிப்பாளர்:- அபுத்தர்தா (ரலி) அவர்கள் நூல்:- பஸ்ஸார், இப்னுமாஜா 219
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( أُعْطِيَتْ أُمَّتِي خَمْسُ خِصَالٍ فِي رَمَضَانَ لَمْ تُعْطَهُنَّ
أُمَّةٌ قَبْلَهُمْ وَتَسْتَغْفِرُ لَهُمْ الْحِيتَانُ حَتَّى يُفْطِرُوا ) என்னுடைய சமுதாயத்தினருக்கு ரமளான் மாதத்தில்
ஐந்து விஷயங்கள் பிரத்தியேகமான முறையில் கொடுக்கப்பட்டுள்ளன. அவை முன்னுள்ள எந்த சமுதாயத்தினருக்கும்
கொடுக்கப்படவில்லை. (அதில் ஒன்று) நோன்பாளிகள் நோன்பு திறக்கும் வரை கடலிலுள்ள மீன்கள்
அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுகின்றன. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:-
அல்பஸ்ஸார், பைஹகீ
தரமானவை
பேரறிஞர் இப்னு கைய்யிம்
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மீன்கள் பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றுள் சுவை நிறைந்த, நல்ல வாசனையுடைய, நடுத்தர அளவிலான மீன்களே
தரமானவை ஆகும். மேலும், அவை மென்மையான தோல் உடையனவாகவும் கடினமான சதைப்பற்று இல்லாதவையாகவும்
இருக்க வேண்டும். காய்ந்தவையாகவும் இருக்கக் கூடாது. கூழாங்கற்களின்மீது ஓடக்கூடிய
நன்னீரில் வளர்ந்தவையாகவும் அழுக்குகளையல்லாமல் தாவரங்களை உண்பவையாகவும் இருக்க வேண்டும்.
அவற்றிற்கு இணக்கமான
இடங்கள்: நன்னீரில் உள்ள நதியில் வளர்தல், பாறை சார்ந்த இடங்களில் வாழ்தல், பின்னர் மணற்பாங்கான
இடங்களில் வாழ்தல், அழுக்கில்லாத ஓடக்கூடிய நன்னீரில் வளர்தல். அந்நீரில் அதிகமான
ஓட்டமும் அலையும் இருக்க வேண்டும். சூரிய ஒளியும் காற்றும் படுமாறு திறந்த வெளியில்
இருக்கவேண்டும்.
கடல் மீன்கள் சிறப்பு
வாய்ந்தவை; மென்மையானவை. அவற்றுள் புதியவை குளிர்ச்சியானவை. தாமதமான செரிமானத்தை ஏற்படுத்துபவை.
அவை உடலுக்கு பொலிவை ஏற்படுத்துகின்றன. விந்தணுவை அதிகரிக்கச் செய்கின்றன. சூடான உடல்நிலையை
சீராக்குகின்றன.
மீன்களுள் தரமானவை
வைத்திருந்து தாமதமாக உண்பதைவிட அவற்றைப் பிடித்தவுடன் உண்பதே ஆகும். கொழுத்த புதிய
மீனின் இறைச்சியும் கொழுப்பும் உடலை வளமாக்கும்; செழிப்பாக்கும். நூல்:- அத்திப்புந் நபவீ
கொலைகார மீன்கள்
மீன்களில் நாம் சாப்பிடக்கூடிய
மீன்கள் பல உண்டு. சிக்கினால் நம்மையும் சாப்பிடும் சுறா,
ஆக்டோபஸ் போன்றவையும் கடலில்
வசிக்கின்றன. ஆனால் உருவத்தில் மிகச்சிறியதாக, ராட்சத மீன்களைவிட மிகக் கொடூரமான இரத்த வேட்கை
பிடித்த கொலைகார மீனும் இருக்கிறது.
தென் அமெரிக்கா கண்டத்தில்
ஓடும் அமேசான் நதியில்தான் அந்த மீன்கள் வசிக்கின்றன. 'பிரான்ஹா' மீன் எனப்படும் அந்த மீன்கள் கூட்டம் கூட்டமாக காணப்படும்.
ரம்பம் போன்ற கூறிய
பற்கள் தான் இந்த மீனின் ஆயுதம். இதற்கு பசி வந்துவிட்டால் எது கிடைத்தாலும் சாப்பிட்டுவிடும்.
நதிக்கு தண்ணீரை குடிக்க வரும் எலி முதல் யானை வரை எல்லாமே இதன் கண்களுக்கு இறைதான்.
இதன் கொடூரமான இரத்த வெறிக்கு ஒரு உதாரணத்தை சொல்கிறார்கள். 1976 - ம் ஆண்டு உருபு நதி என்ற ஒரு நதியில் அந்த வழியாக
சென்று கொண்டிருந்த ஒரு பஸ் கவிழ்ந்துவிட்டது. தகவல் கிடைத்த சில மணி நேரங்களுக்குள்
ஒரு மீட்புக் குழு அந்த நதிக்கு சென்றது. ஆனால்
அவர்களுக்கு கிடைத்தது பஸ் பயணிகளில் ஒரு சிலருடைய எலும்புக் கூடுகள் மட்டுமே.
ஒரு சிறிய மீன் எப்படி
இவ்வளவு பயங்கரமான பிராணியாக இருக்கிறது என்பதை தெளிவாக கண்டறிந்திருக்கிறார்கள், நீர் வாழ் உயிரின
ஆய்வாளர்கள். 'பிரான்ஹா' மீன்கள் சிறியவையாக இருந்தாலும் அவற்றின் மண்டை ஓடும்,
பற்களும் மிகவும் பலம் பொருந்தியவை. குறிப்பாக பற்கள் மரங்களை அறுக்க உதவும் ரம்பம்
போல் கூர்மையாக காணப்படுவதுடன், வாயை மூடும்போது மேற்பற்களும் கீழ்ப்பற்களும் மிக கச்சிதமாக
பொருந்தும்படி அமைந்துள்ளன. அதனால் இதன் வாயில்
சிக்கிய எந்த பொருளும் அவ்வளவு எளிதாக தப்ப முடியாது.
இரண்டாவதாக, இந்த மீன்கள் தனியாக
இறை தேடப்போவதில்லை. இந்த மீனுக்கு மிகச்சிறந்த மோப்ப சக்தி உண்டு. அது வசிக்கும் தண்ணீரில்
இறங்கும் எந்த பிராணியையும் சில நொடிக்குள் மோப்பம் பிடித்துவிடும். அடுத்த சில நிமிடங்களில் படு வேகமாக நீந்தி இரையை
பிடித்துவிடும். இவற்றுக்கு குதிரை, மான், மாடுகள் போன்ற விலங்குகள்
இரையாக கிடைக்காவிட்டால் மற்ற இன மீன்களை சாப்பிடத் தொடங்கிவிடும்.
அதேநேரம், 'பிரான்ஹா' மீன்கள் இருக்கும்
நதியில் அமேசான் நதி ஒர கிராமங்களில் வசிக்கும் மக்கள் நீந்துகிறார்கள். அவர்கள் இந்த மீனை கண்டு பயப்படுவதில்லை என்கிறார்கள்.
என்னதான் 'பிரான்ஹா' மீன்கள் பெரிய கொலைகார
மீன்களாக இருந்தாலும் அவையும் மனிதனின் அடுப்பில் உணவாக வந்து தான் சேர்கின்றன. தென் அமெரிக்க பழங்குடியினர் 'பிரான்ஹா' மீன்களை ஆற்றுக்குள்
இறங்காமல் லாவகமாக பிடித்து விடுகிறார்கள். அதாவது, மயக்கமூட்டும் ஒரு செடியின் சாற்றை நதி நீரில் கலந்துவிடுகிறார்கள்.
இந்த சாற்றின் நெடியால் மயக்கமடைந்து நீரில் மிதக்கும் 'பிரான்ஹா' மீன்களை எடுத்து வந்து குழம்பு வைத்து விடுகிறார்கள். இந்த மீனின் பற்களை அம்புக்கு முனைகளாக கட்டுகிறார்கள்.
ஊட்டச்சத்துக்கள்
நிறைந்துள்ளன
மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம், கோலின், அயோடின் பொட்டாசியம், தாது பொருள்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற சத்துக்கள்
நிறைந்துள்ளன. குறைவான சோடியம் உள்ளன.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் என்பவை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை
கொண்ட ஒரு ஊட்டச்சத்தாகும். நம் உடலுக்கு இன்றியமையாத ஒரு ஊட்டச்சத்தாக ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. ஆனால், இது இயற்கையாக உடலில்
உருவாகுவதில்லை. நாம் உணவின் மூலமே இதை பெற முடியும். மீனைத் தொடர்ந்து சாப்பிடுவதால், புரதம் மற்றும் முக்கிய
அமினோ அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்து கிடைக்கின்றன.
மீன் சாப்பிடுபவர்களுக்கு
மருத்துவ நன்மைகள்: இரத்தத்தை மென்மையாக்குகிறது, இரத்தக்குழாய்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது, இரத்தம் உறைவதைத்
தடுக்கிறது, இரத்தத்தில் உள்ள டிரை கிளிசரைடு அளவு குறைகிறது, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது, மாரடைப்பு வருவதை
குறைக்கிறது, மூட்டு வலியை குறைக்கிறது, மைக்ரேன் ஒற்றைத் தலைவலியை குறைக்கிறது, நோய் எதிர்ப்பாற்றலை
அதிகரிக்கிறது, புற்றுநோயை தடுக்கிறது, ஆஸ்துமாவை தடுக்கிறது, முதல் நிலை சிறுநீரகக் கோளாறுகளை தடுக்கிறது.
மீனில் உள்ள ஒமேகா
3 என்ற அமிலம்தான் இதற்கெல்லாம் காரணம் என ஆய்வுகள்
தெரிவிக்கின்றன.
எலும்பு வலிமை, மூளை ஆதரவு, புற்றுநோய் அபாயக் குறைப்பு, கண் ஆரோக்கியம், இதய ஆரோக்கியம், மன செயல்திறன், எடை மேலாண்மை.
நாம் உணவில் மீனைச்
சேர்ப்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்தும் ஆற்றலைக்
கொண்டுள்ளது.
(அலர்ஜி எனும்) ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் மீன்களைத் தவிர்க்க வேண்டும். காரணம், மீன் ஒவ்வாமையை அதிகப்படுத்தும்
என்கிறனர் மருத்துவர்கள்.
வளர்ப்பு மீன்களை
உண்ணுவது ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. காரணம், மீன்வளர்ப்பு பண்ணைகளில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள்
மற்றும் மருந்துகள் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பண்ணையில் வளர்க்கப்படும்
மீன்களை சுவையை அதிகரிக்கவும், எண்ணிக்கையை அதிகரிக்கவும் பல்வேறு இரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அப்படி பயன்படுத்தப்படும் இரசாயணங்கள் மற்றும் பூச்சுக்கொல்லி மருந்துகள் புற்றுநோயை
உண்டாக்குவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுறா போன்ற சில மீன்கள்
உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அவை அதிக அளவு பாதரசம் கொண்டிருப்பதால், அவற்றை சாப்பிடுவது
ஆபத்தானது. பாதரசமானது நரம்பு மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும், குறிப்பாக கர்ப்பிணிகள்
மற்றும் குழந்தைகளுக்கு இது மிகவும் ஆபத்தானது.
எப்படி பார்த்து வாங்க
வேண்டும்?
காய்கறி வாங்கும்போது
வெண்டைக்காயை ஒடித்துப் பார்ப்பது போன்றும், சுரைக்காயை கிள்ளிப் பார்ப்பது போன்றும், தேங்காயில் நன்றாக
தண்ணீர் இருக்கிறதா என்று ஆட்டிப் பார்ப்பது போன்றும் மீன்களிலேயே எந்த மீன் ருசியானது? அதை எப்படி பார்த்து
வாங்க வேண்டும்? என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
மீனின் செவியைத் திறந்து
பார்த்தால், செந்நிறமாக இருக்கவேண்டும். அது சாம்பல் நிறமாக இருந்தால், அது பழைய மீன் அல்லது
கெட்டுப்போன மீன்.
மீனின் கண்கள் மங்கலாக
இல்லாமல், தெளிவாக இருக்க வேண்டும்.
அப்போது தான் புதிய மீன். அல்லது நல்ல மீன்.
மீனைத் தொட்டுப் பார்க்கும்போது, நொள நொளவென்று இருக்கக்கூடாது.
அவ்வாறு இருந்தால், அதை உண்ணுவது நல்லதல்ல.
அதிகம் குளிரூட்டப்பட்ட
மீன் (ஐஸ் அதிகம் சேர்ந்த மீன்) ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. ஐஸ் அதிகம் சேர்ந்திருந்தால், மீனின் மேல் விரலால்
கோடு போட்டால் தெரிந்துவிடும்.
செதில் அதிகமாக இருக்கின்ற
மீனும், உள்ளே முள்கள் அதிகமாக இருக்கின்ற மீனும் ருசியாக இருக்கும். ஆனால், குழந்தைகள் சாப்பிட
முடியாது.
நண்டை கையில் எடுத்துப்பார்க்கும்போது
வெயிட்டாக இருக்கவேண்டும். அதில் தான் அதிகம் சதை இருக்கும்.
பொதுவாக, பெரிய மீன்களைவிட
சிறிய மீன்களில் தான் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக, சிறிய மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள்
அதிகம் காணப்படுகின்றன.
சிறிய மீன்களான மத்தி, நெத்திலி போன்றவை
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரங்கள். இவை இதய
ஆரோக்கியத்திற்கும், மூளை செயல்பாட்டிற்கும் நல்லது.
சிறு மீன்களின் எலும்புகளில்
கால்சியம் அதிகம் உள்ளது. இது எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.
சிறு மீன்களில் வைட்டமின்
பி12, வைட்டமின் டி, செலினியம் போன்ற வைட்டமின்கள்
மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
சிறு மீன்களில் பாதரச
அளவு குறைவாக இருக்கும். மேலும், அவை எளிதில் செரிமானம் ஆகக்கூடியவை. மேலும், சிறு மீன்களில் உள்ள
ஊட்டச்சத்துக்கள் உடலில் எளிதில் உறிஞ்சப்படும்.
சுருங்கக்கூறின், சிறிய மீன்களை உணவில்
அதிகளவு சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.
கனவில் கண்டால்
ஒருவர் தமது கனவில்
மீனைச் கண்டால் நன்மை மற்றும் ஏராளமான வாழ்வாதாரத்தைக் குறிக்கும்.
குழந்தை பெற்றெடுக்கும்
வயதில் இருக்கும் தம்பதியர் அல்லது கர்ப்பிணிப் பெண் கனவில் (ஐந்து அல்லது ஆறு அல்லது
பத்து என) எண்ணக்கூடிய அளவில் மீன்களைக் கண்டால் அவள் பெண் குழந்தையைப் பெற்றெடுப்பாள்.
எண்ண முடியாத அளவிற்கு
மீன்களைக் கண்டால், திரண்ட சொத்து, உயர் பதவிகள், உயரிய அந்தஸ்த்து போன்றவை கிடைக்கலாம்.
பெரிய அளவிலான மீனைக்
கண்டால் அவரின் வருமானத்தில் அபிவிருத்தி கிடைக்கலாம்.
மீன்கள் செத்து மிதப்பதாகக்
கண்டால் அவருடைய நாட்டத்தேட்டங்கள் விரைவில்
நிறைவேறலாம்.
உயிருள்ள மீனைச் சாப்பிடுவதாகக்
கண்டால், அவருக்கு அல்லாஹுத்தஆலாவிடம்
உயரிய அந்தஸ்து கிடைக்கலாம்.
மீனைச் சாப்பிடும்போது
அது மிகவும் உப்புக்கரிப்பதாகக் கண்டால், அவருக்கு நெருக்கடி, துன்பத்துயரம் ஏற்படலாம்.
பொறித்த மீனைச் சாப்பிடுவதாகக்
கண்டால், அவருடைய பிரார்த்தனையை
அல்லாஹுத்தஆலா ஏற்றுக்கொண்டுவிட்டான் அல்லது ஏற்றுக்கொள்ளலாம்.
நெருப்பினால் சுட்ட
மீனைச் சாப்பிடுவதாகக் கண்டால், அவர் மார்க்க அறிவைக் கற்றுக்கொள்ள பயணம் புறப்படலாம்.
பிறர் மீனை வேட்டையாடுவதாக
அல்லது தாமே மீனை வேட்டையாடுவதாகக் கண்டால் அல்லாஹுத்தஆலா அவரை நல்ல முன்னேற்ற நிலைக்கு
உயர்த்தலாம்.
சின்னஞ்சிறிய மீனைக்
கண்டால் அவருக்கு சிரங்கு போன்ற தோல் நோய்கள் அல்லது பொருளாதார சிரமங்கள் ஏற்படலாம்.
தாம் மீனை விற்பதாகக்
கண்டால், அவருக்கும், அவர் மூலமாக அவரைச்
சார்ந்தவர்களுக்கும் நன்மை ஏற்படலாம்.
மீனைப் பிடிக்கும்
தூண்டில், வளை ஆகியவற்றைக் கண்டால்
தந்திரம் மற்றும் மோசடியை குறிப்பதாகும்.
மீனை பயந்த நிலையில்
கண்டால், எந்தளவுக்கு அந்த
மீன் பயந்ததாக காணப்படுகிறதோ அந்தளவுக்கு அவருக்கு சோதனை,
துன்பத்துயரங்கள் ஏற்படலாம்.
தமது இன உறுப்பிலிருந்து
மீன் வெளியாவதாகக் கண்டால் அவருக்கு பெண் குழந்தை பிறக்கக்கூடும்.
தாம் ஒரு மீனின் வாயிலிருந்து
வெளியே வருவதாகக் கண்டால், அவர் ஒரு பொய் பேசி, அதன் மூலம் அவருக்கு மிகப்பெரிய சிரமம் ஏற்படலாம்.
(அந்த சமயத்தில் முதலீடு செய்வதாக இருந்தால் அல்லது ஏதேனும் ஒரு காரியத்தில் ஈடுபட
இருந்தால் சிறிது காலத்திற்கு அதைத் தவிர்த்து கொள்வது நல்லது.)
தமது கைகளால் மீனைப்
பிடிப்பதாகக் கண்டால், அவருக்கு நம்பிக்கையற்ற புறத்திலிருந்து பொருளாதாரம் வரலாம்.
அல்லது ஏதேனும் ஒரு தொழில் தொடங்க இருந்தால் அதிலிருந்து அவருக்கு பலன் கிடைக்கலாம்.
அந்த சமயத்தில் வரன் பார்த்துக்கொண்டிருந்து அப்போது வருகின்ற வரன் நல்ல வரனாக இருக்கலாம்.
அந்த சமயத்தில் வேலைவாய்ப்புத் தேடி, ஒரு வேலை வந்தால், அந்த வேலை நல்ல வேலையாக இருக்கலாம்.
வளை விரித்து மீனைப்
பிடிப்பதாகக் கண்டால் தந்திரம் மற்றும் மோசடியால் பொருளாதாரத்தைச் சேர்ப்பதாக இருக்கலாம்.
கடலில் மீனைக் கண்டால்
அவருக்கு சிரமம் ஏற்படலாம்.
(ஆறு, ஓடை போன்ற) நல்ல நீரில்
மீன் இருப்பதாகக் கண்டால், அவர் சந்தோஷமடையும் அளவிற்கு அவருக்கு ஓர் அருட்கொடை வரலாம்.
மீன் தரையில் கிடப்பதாகக்
கண்டால், அவருடைய மேலதிகாரியால்
அல்லது அவருக்கு மேல் தொழில் செய்பவரால் அவருக்கு நஷ்டம் ஏற்படலாம்.
மீன் உடலிலிருந்து
(எலும்பு, இரத்தம் போன்ற) ஏதேனும்
ஒன்று வெளியே வருவதாகக் கண்டால், அந்த சமயத்தில் ஏதேனும் ஒன்றை செய்ய இருந்தால் அதன் மூலம் அவருடைய
வாழ்க்கையே நல்லவிதமாக மாறலாம். அல்லாஹுத்தஆலாவுடைய பெரிய அருட்கொடையைப் பெறலாம்.
புத்தம் புதிய மீனை
நல்ல முறையில் சமைக்கப்பட்டு அதை அவர் சாப்பிடுவதாகக் கண்டால், அவர் பணிபுரிகின்ற
வேலையின் மூலம் அவருக்கு இரட்டிபான கூலி அல்லது இலாபம் கிடைக்கலாம். அவருக்கு ஏற்கனவே
அவருக்கு குழந்தை இருந்தாலும் அவருக்கு மேலும் குழந்தைச் செல்வங்கள் கிடைக்கலாம். அவருக்கு
குழந்தையே இல்லையெனில், இனிமேல் அவருக்கு அருள்வளம் நிறைந்த பெண் குழந்தை பிறக்கலாம்.
கடலில் தமது கைகளால்
மீனைப் பிடிப்பதாகக் கண்டால், ஒரு மிகப்பெரிய செல்வந்தருடன் நட்பு ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் இலாபம்
கிடைக்கலாம்.
தாம் சிறு குட்டையில்
இருந்து மீன் பிடிப்பதாகக் கண்டால், அவர் மிகவும் சூழ்ச்சிக்காரராக இருந்தால் அவர் மூலமாக
மக்களுக்கு சிரமம் ஏற்படலாம். சூழ்ச்சி அறியாதவராக இருந்தால், அவர் தவறான தொடர்பு
ஏற்பட்டு உலக மோகத்தில் மூழ்கி தவறான வழிக்கு சென்றுவிடலாம்.
ஒருவர் தமக்கு முன்னால்
நல்ல உணவு இருந்தும் அதைக்கண்டு கண்கொள்ளாமல் அழுகிய மீனை சாப்பிட்டுவிட்டு விட்டுச்
சென்றால், அவர் மார்க்கம் அனுமதித்த
பெண்களை விட்டு விட்டு தடைசெய்யப்பட்ட பெண்களை திருமணங்களைச் செய்துள்ளார்.
(மேற்கண்ட கனவின் பலன்கள் அனைத்தும் இணையத்தில் பார்த்தவையே!)
அன்பாளன் அல்லாஹுத்தஆலாவால்
(ஹலால் எனும்) அனுமதிக்கப்பட்ட உணவுகளைப் பேணி, உடல் ஆரோக்கியம் பெறுவோமாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது
ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment