Search This Blog

Thursday, 20 November 2025

வீட்டு வேலைகள்

 

வீட்டு வேலைகள்

 

وَلَا تَنْسَوُا الْفَضْلَ بَيْنَكُمْ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உபகாரம் செய்து கொள்வதையும் மறவாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்(த்துக் கூலி கொடு)ப்பவனாக இருக்கின்றான்.  திருக்குர்ஆன்:- 2:237

 

இஸ்லாமிய பார்வையில் வீட்டு வேலைகள் என்பது தம்பதியினரின் கடமை மற்றும் பொறுப்பாக கருதப்படுகிறது. வீட்டு வேலைகளைப் பெண்கள் மட்டும் செய்ய வேண்டும் என்றில்லை; கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உதவி செய்து, பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்த வேலைகள், வணக்கமாகவும், குடும்ப உறவுகளை வலுப்படுத்தவும் உதவும்.

 

குடும்பத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். இது குடும்பத்தின் ஒற்றுமைக்கும், மகிழ்ச்சிக்கும் அவசியமானது.

 

வீட்டை சுத்தமாகவும் சீராகவும் பராமரிப்பது ஒவ்வொரு பெண்ணின் கடமையாகும்; பெரும்பாலான பெண்கள் தங்கள் குடும்பங்களின் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் உறுதி செய்யும் சமையல் மற்றும் சுத்தம் செய்வதில் கூடுதல் முயற்சியை மகிழ்ச்சியுடன் செய்கிறார்கள்.

 

நம் வீட்டுப் பெண்கள் நம்முடைய வீட்டு வேலைகளைச் செய்வதால் உடலியல் நன்மைகள், மனநல நன்மைகள் மற்றும் குடும்ப உறவுகளை மேம்படுத்துதல் போன்ற பல நன்மைகள் உள்ளன. வீட்டு வேலைகள் உடல் இயக்கத்தை அதிகரிப்பது, நினைவாற்றலை மேம்படுத்துவது, கால்களை வலுப்படுத்துவது, மன அழுத்தத்தைக் குறைப்பது, மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே நல்லுறவை வளர்ப்பது போன்ற நன்மைகளை வழங்குகின்றன.

 

துணி துவைப்பது, அம்மி, ஆட்டுரலில் அரைப்பது, பாத்திரங்கள் துலக்குவது, அறைகள் சுத்தம் செய்வது என எல்லாவற்றுக்குமே இயந்திரங்களை பயன்படுத்த தொடங்கிவிட்டோம் அல்லது பணியாளர்களை வைத்துக் கொள்கிறோம்.

 

இதனால் உடலியக்கம் குறைந்து, உடல் பருமன் அதிகரிப்பது முதல் சர்க்கரை வியாதி வரை பல்வேறு உடல்நல பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடுகிறது.

 

நாம் வீட்டு வேலைகளில் ஈடுபடுவதால் நம்முடைய உடல்நலத்தையும், மனநலத்தையும் நன்கு பராமரிப்பதுடன் நம்முடைய குடும்ப பிணைப்பையும் வலுவாக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

 

குடும்பத் தலைவி

 

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. என்னை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் (மக்காவிலிருந்தபோதே) மணந்துகொண்டார். இந்தப் பூமியில் அவருக்கு அவரது குதிரையை(யும் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும்) தவிர வேறு எந்தச் சொத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை.

 

மேலும், ( فَكُنْتُ أَعْلِفُ فَرَسَهُ وَأَكْفِيهِ مَئُونَتَهُ وَأَسُوسُهُ وَأَدُقُّ النَّوَى لِنَاضِحِهِ وَأَعْلِفُهُ وَأَسْتَقِي الْمَاءَ وَأَخْرِزُ غَرْبَهُ وَأَعْجِنُ وَلَمْ أَكُنْ أُحْسِنُ أَخْبِزُ وَكَانَ يَخْبِزُ لِي جَارَاتٌ مِنَ الأَنْصَارِ وَكُنَّ نِسْوَةَ صِدْقٍ ) அந்தக் குதிரைக்கு நான் தீனி போடுவேன்; அதைப் பராமரிக்கும் பொறுப்புகளை நானே கவனித்துக்கொள்வேன்; (அதற்குத்) தண்ணீர் புகட்டுவேன்; அதை ஓட்டிச் செல்வேன்; தண்ணீர் இரைக்கும் அவரது ஒட்டகத்துக்காகப் பேரீச்சங்கொட்டைகளை இடித்து, அதற்கு ஊட்டுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரது தோல் கமலையைத் தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால், எனக்கு நன்றாக ரொட்டி சுடத்தெரியாது. என் அண்டை வீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத்தருவார்கள். அப்பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர்.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாக ஒதுக்கிய நிலத்திலிருந்து நானே பேரீச்சங் கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலைமீது வைத்துச் சுமந்து வருவேன். அந்த நிலம் (என் வீட்டிலிருந்து) இரண்டு மைல் (3.5 கி.மீ) தொலைவில் இருந்தது. நூல் முஸ்லிம்-4397

 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் ஒரு திருகை இருந்தது. ரொட்டி சுடத் தேவையான கோதுமையை அதில் அவர்களே அரைப்பார்கள்.

 

தற்போது நமது பெண்கள் வீட்டு வேலைகளை செய்யாமல் இருந்துவிட்டு, பிறகு உடலில் கொழுப்புச்சத்து அதிகமாகிவிட்டது. எனவே, நீச்சல்குளம் செல்ல வேண்டும். உடற்பயிற்சி செய்ய சாதனங்கள் வேண்டும் என்று விரும்புகின்றனர். இது தேவையா? வீட்டு வேலைகளை செய்து வந்தால் நன்மையும் கிடைக்கும். பொருளாதாரம் மிச்சமாகும். கணவனின் உள்ளத்தையும் வென்றுவிடலாம். சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களையும் கட்டுப்படுத்த முடியும். உடல் ஆரோக்கியம் கிடைக்கப்பெறும். எனவே, வீட்டு வேலைகளைத் தன் கௌரவமாக தனது முக்கிய கடமையாக கருதவேண்டும்.

 

நம் தாத்தா பாட்டி எல்லோரும் வீட்டு வேலைகள் மட்டும் இல்லாமல் வயல் வேலைகள் என அனைத்தும் செய்து வந்தார்கள். நோய்கள் இன்றி ஆரோக்கியமாக நீண்ட வயதுடன் வாழ்ந்தார்கள். ஆனால், இன்றைய தலைமுறை பெண்கள் எந்த வேலையும் செய்வதில்லை. எல்லாவற்றுக்கும் இயந்திரங்கள் வந்துவிட்டன. வீடு பெருக்குவது முதல் பாத்திரம் துலக்குவது, துணி துவைப்பது என அனைத்து வேலைகளையும் மெஷின் தான் செய்கிறது. இதனால் உடல் பருமன், மூட்டுவலி போன்ற பல பிரச்சனைகளால் இளம் வயதிலேயே பெண்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, உடலைக் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள அதற்காகவே உடற்பயிற்சி கூடம் நோக்கி செல்கிறார்கள்.

 

வீட்டில் உள்ள அன்றாட வேலைகளை சரியாக செய்தாலே போதுமானது. இன்ஷாஅல்லாஹ் அதன்மூலம் உடல் கட்டுக்கோப்பும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

 

குடும்பத் தலைவர்

 

அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்துவந்தார்கள்?” என்று நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ( مَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصْنَعُ فِي بَيْتِهِ قَالَتْ كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ تَعْنِي خِدْمَةَ أَهْلِهِ فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ خَرَجَ إِلَى الصَّلاَةِ ) “தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை அதாவது தம் குடும்பத்தாருக்கான பணிகளை செய்துவந்தார்கள். தொழுகை நேரம் வந்ததும் (வேலைகளை விட்டு விட்டு) தொழுகைக்குப் புறப்பட்டு விடுவார்கள்” என்று பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ-676

 

(அப்துர் ரஹ்மான் பின் சஅத் - ரலி அவர்களின் மகள்) அம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ( مَاذَا كَانَ يَعْمَلُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فِي بَيْتِهِ‏؟ ) "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இல்லத்தில் என்ன செய்து கொண்டிருப்பார்கள்?" என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது.

 

அதற்கு அன்னையவர்கள், ( كَانَ بَشَرًا مِنَ الْبَشَرِ، يَفْلِي ثَوْبَهُ، وَيَحْلُبُ شَاتَهُ، وَيَخْدُمُ نَفْسَهُ ) "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (சாதாரண) மனிதர்களில் ஒருவராக இருந்தார்கள். தனது ஆடை(யின் கிழிசல்)களைத் (தைத்து) சரி செய்து கொள்வார்கள். தமது ஆட்டில் பால் கறந்துகொள்வார்கள். தமது வேலைகளைத் தாமே செய்துகொள்வார்கள்.

 

மற்றொரு அறிவிப்பில், ( كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْصِفُ نَعْلَهُ، وَيَخِيطُ ثَوْبَهُ، وَيَعْمَلُ فِي بَيْتِهِ كَمَا يَعْمَلُ أَحَدُكُمْ فِي بَيْتِهِ ) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது காலணி(யின் கிழிசல்)களைச் சரிசெய்துகொள்வார்கள். தனது ஆடைகளைத் தைத்துக்கொள்வார்கள். உங்களில் ஒருவர் தனது வீட்டில் வேலை செய்வது போல, தனது வீட்டில் வேலை செய்வார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், தாரீகுல் கபீர் இமாம் புகாரீ, ஷமாயில் திர்மிதீ-342, இப்னு ஹிப்பான், ஷரஹுஸ் ஸுன்னா இமாம் பஙவீ

 

கணவன், மனைவியின் வேலைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். சமைப்பது, துணி துவைப்பது, தண்ணீர் கொண்டு வருவது போன்ற வேலைகளைச் செய்வது ஆண்மைக்கு எதிரானது என்பது தவறான கருத்து.

 

நபிகள் நாயகம் ஸல்) அவர்கள், தனது மனைவிமார்களுக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்தார்கள். இது சிறந்த முன்மாதிரியாக உள்ளது.

 

வீட்டு வேலை செய்பவர்களுக்கு நினைவாற்றல், கவனம் செலுத்துதல், கால்களில் வலிமை அதிகரிப்பு, கீழே விழுவதில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் ஆய்வாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள்  “பிஎம்ஜே ஓபன்” (BMJ Open) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

 

21 முதல் 90 வயதுடைய 489 பேர் வயதுவாரியாக பிரிக்கப்பட்டு ஆய்வில் பங்கேற்றனர். அவர்களது வீட்டு வேலைகளை அவர்களே செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதிலும் இரு வகைகளாக பிரிக்கப்பட்டனர்.

 

1. வீட்டை மேலோட்டமாக சுத்தம் செய்வது, படுக்கையை விரிப்பது உள்ளிட்ட இலேசான வேலை செய்வோர்.

2. வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்வது, துணி துவைப்பது, படுக்கையை மாற்றுவது என அதிக வேலை செய்வோர்.

 

அதன்பின்னர் இரு தரப்பினருக்கும் சில உடற்பயிற்சிகளும், நினைவுத் திறன் சோதனைப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

 

இதில் ஒரே வயதுடையவர்களில், அதிக வேலை செய்தவர்கள் நல்ல உடல்நிலையுடன் நல்ல நினைவுத் திறனையும் பெற்றிருந்தது கண்டறியப்பட்டது.

 

வீட்டு வேலைகள் செய்வதை தினசரி வாழ்க்கை முறையில் ஒரு உடல் செயல்பாடாக இணைத்துக்கொள்வது ஆற்றலைத் தரும் என்றும், இது நம்முடைய உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கார், பைக், சைக்கிள் போன்ற நம் வீட்டில் பயன்படுத்தும் வாகனங்களை கழுவுவது ஒரு நல்ல உடற்பயிற்சி. காரின் கூரையை எட்டி துடைப்பது முதல் வாகனங்களின் டயர்களை குனிந்து கழுவுவது வரை உடலுக்கு பயிற்சியாகிறது. கடைசியாக தண்ணீரை ஊற்றிக் கழுவ ஒஸ் பயன்படுத்துவதற்கு பதிலாக, பக்கெட்டில் நீரை நிரப்பி, மக்கில் எடுத்து நாமே தண்ணீரைத் தெளிக்கலாம்.

 

வீட்டு வேலைகளைச் செய்வதைக்கூட கௌரவக் குறைச்சல் என்று சிலர் எண்ணுவதுண்டு. வீட்டில் கால் மேல் கால் போட்டு, வேலை செய்யாமல் இருப்பதே மரியாதை என்றும், மனைவி மக்கள் செய்யும் வேலைகளில் உதவி செய்வது மரியாதைக் குறைவு என்றும் நினைப்பவர்கள் உள்ளனர். இவர்கள் அகில உலகத்தின் தலைவர், இறுதி இறைத்தூதர் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் பணிவையும் அடக்கமான செயல்களையும் பார்க்கட்டும்.

 

வீட்டில் மனைவிக்கு சிறு சிறு வேலைகள் செய்து கொடுத்து, அவளுக்கு உதவி ஒத்தாசை புரிவது (சுன்னத் எனும்) நபிவழியாகும். கணவன் தமது மனைவிக்கு உதவி ஒத்தாசை செய்வதால், "அவன் பொண்டாட்டிதாசன்" என்றோ "மனைவியின் மீதுள்ள அச்சம்" என்றோ "தலையணை மந்திரம்தான் காரணம்" என்றோ தவறாக விளங்கக்கூடாது. அது பணிவின் வெளிப்பாடு என்று விளங்க வேண்டும்.

 

களைப்பை நீக்கும் மந்திரச் சொல்

 

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. ஃபாத்திமா (ரலி) அவர்கள் தமது கையில் வடு ஏற்படுமளவு திருகை சுற்றினார். நெஞ்சில் வடு ஏற்படுமளவு தோல் பையில் தண்ணீர் சுமந்து சிரமத்திற்குள்ளானார். தமது ஆடையில் புழுதி பறக்குமளவு வீட்டை தூய்மை செய்தார். அந்நேரம் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் அடிமைப் பணியாளர்கள் வந்திருந்தனர்.

 

(அவர்களை நபியவர்கள் முஸ்லிம்களிடையே பங்கிடவிருக்கிறார்கள் என்பதை அறிந்த நான்) ( لَوْ أَتَيْتِ أَبَاكِ فَسَأَلْتِيهِ خَادِمًا ) "நீ உன் தந்தையிடம் சென்று (உமது பணிச்சுமையை போக்க) ஒரு பணியாளரைக் கேட்கலாமே" என்று கூறினேன். அவரும் தன் தந்தையிடம் சென்றார். நபியவர்களோடு அந்நிய ஆடவர்கள் பலர் பேசிக் கொண்டிருந்ததை கண்டு (வெட்கித்து) தமது வீட்டுக்கே ஃபாத்திமா (ரலி) அவர்கள் திரும்பி வந்துவிட்டார்.

 

(இதைத் தெரிந்துகொண்ட) நபியவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் மறுநாள் வந்து, ( مَا كَانَ حَاجَتُكِ ) "உமது தேவை தான் என்ன?" என்று கேட்டார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் (வெட்கத்தால்) அமைதிகாத்தார். அப்போது நான், "வீட்டுப்பணிச்சுமையால் ஃபாத்திமா (ரலி) அவர்கள் சிரமப்படுகிறார். எனவே நான்தான், ஃபாத்திமாவை உங்களிடம் சென்று அவரது வீட்டுப் பணியில் உண்டாகும் சிரமத்தைப் போக்க ஒரு பணியாளரைக் கேட்டு (அழைத்து) வா!" என்று கூறினேன்.

 

நபியவர்கள், ( اتَّقِي اللَّهَ يَا فَاطِمَةُ وَأَدِّي فَرِيضَةَ رَبِّكِ وَاعْمَلِي عَمَلَ أَهْلِكِ فَإِذَا أَخَذْتِ مَضْجَعَكِ فَسَبِّحِي ثَلاَثًا وَثَلاَثِينَ وَاحْمَدِي ثَلاَثًا وَثَلاَثِينَ وَكَبِّرِي أَرْبَعًا وَثَلاَثِينَ فَتِلْكَ مِائَةٌ فَهِيَ خَيْرٌ لَكِ مِنْ خَادِمٍ ) "ஃபாத்திமா! அல்லாஹ்வைப் பயந்துகொள். உம்முடைய இறைவனுக்குரிய கடமையை நிறைவேற்று. உன் குடும்பப் பணிகளை செய். நீ படுக்கைக்குச் செல்லும்போது 'சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூய்மையானவன்) என்று முப்பத்து மூன்று தடவையும், 'அல்ஹம்துலில்லாஹ்' (அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே) என்று முப்பத்து மூன்று தடவையும், 'அல்லாஹு அக்பர்' என்று முப்பத்து நான்கு தடவையும் ஆக மொத்தம் நூறு தடவை அல்லாஹ்வை துதிச் செய். அது உமக்கு பணியாள் ஒருவர் இருப்பதைவிட சிறந்ததாகும்" என்று கூறினார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள், ( رَضِيتُ عَنِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَعَنْ رَسُولِهِ صلى الله عليه وسلم ) "கண்ணியமும் மகத்துவமுமிக்க அல்லாஹ், அவனின் தூதர் (ஸல்) அவர்க(ளின் கட்ட)ளை(களை)ப் பொருந்திக் கொண்டேன்" என்று கூறினார்.

 

அலீ (ரலி) அவர்கள், ( مَا تَرَكْتُهُ مُنْذُ سَمِعْتُهُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم ) "இவ்வாறு அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய நாளிலிருந்து அதை நான் ஓதாமல் விட்டதில்லை" என்று சொன்னார்கள். அப்போது "ஸிஃப்பீன் போர் நடைபெற்ற இரவில்கூடவா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அலீ (ரலி) அவர்கள், ( وَلاَ لَيْلَةَ صِفِّينِ ) "ஸிஃப்பீன் போர் நடைபெற்ற இரவில்கூட ஓதாமல் இருந்ததில்லை" என்று பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ-3113, முஸ்லிம்-5273, அபூதாவூத்-2595, திர்மிதீ-3320

 

ஃபாத்திமா (ரலி) அவர்கள் தம் கணவர் அலீ (ரலி) அவர்களின் இல்லத்தில் திரிகை சுற்றுவது போன்ற பணிகளைச் செய்துள்ளார்கள் என்றும் அதனால் அவர்களின் கையில் காய்ப்பு ஏற்பட்டிருந்தது என்றும் இந்த நபிமொழியிலிருந்து தெரிகிறது. இவ்வாறு கணவன் வீட்டு வேலைகளை மனைவி செய்வது அனுமதிக்கப்பட்ட செயல் என்பதாலேயே அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அதை நிராகரிக்கவில்லை. இவ்வாறு என் மகளின் கையில் காய்ப்பு ஏற்படும் அளவிற்கு வீட்டு வேலை வாங்கி கொடுமைப்படுத்தக்கூடாது என்று தமது மருமகனை கண்டிக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஃபாத்திமா (ரலி) அவர்கள் தமது தந்தையிடம் பணியாள் கேட்டு சென்றபோது தாமும் பணியாளை வழங்கவில்லை. ஃபாத்திமாவின் கணவரிடமும் பணியாளை நியமித்திடுமாறு கட்டளையிடவுமில்லை. இதிலிருந்து வீட்டு வேலைகளைக் கவனிக்கப் பணியாளை ஏற்படுத்தும் அளவுக்குக் கணவனிடம் வசதியில்லை என்றால், அவனைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று தெரிகிறது. ஆனால், பணியாளுக்கு ஊதியம் வழங்கும் சக்தயுள்ளவனாகக் கணவன் இருந்து, மனைவியும் பணியாளை நியமிக்கும்படி கோரினால், பணியாளுக்கு ஏற்பாடு செய்வது கணவனின் பொறுப்பாகிவிடும். நூல்:- ஃபத்ஹுல் பாரீ, உம்தத்துல் காரீ

 

நம்முடைய உடல் எடையில் 1 கிலோ குறைக்க விரும்பினால் நம்முடைய வேலைகள் மூலமோ அல்லது உடற்பயிற்சி மூலமோ வாரத்துக்கு சுமார் 3850 கலோரி, அதாவது தினசரி 550 கலோரி சக்தியை கூடுதலாக செலவிட வேண்டும். உடற்பயிற்சிகள் செய்யும்போது சக்தி வேகமாக செலவழிக்கப்படும். ஆனால், வீட்டு வேலைகள் செய்யும்போது மிதமான வேகத்தில் தான் சக்தி செலவாகும். ஒவ்வொரு வீட்டு வேலையும் ஒவ்வொரு விதத்தில் உடலுக்கு பயிற்சியாகிறது. அதில் சில குறிப்பிட்ட வேலைகளை இங்கு பார்க்கலாம்.

 

சமைப்பது, சமையலறையை சுத்தம் செய்வது, ஸ்டவ்வை சுத்தம் செய்வது, மேடையை, ஷெல்ஃப்களை துடைப்பது போன்றவை கை தசைகளுக்கு நல்ல பயிற்சியாகும். அதேபோல், பாத்திரங்கள் கழுவுவது முன்கை மற்றும் விரல்களுக்கு நல்ல பயிற்சியாகும்.

 

பழைய பாணியில் துணிகளை துவைப்பது போன்ற அருமையான உடற்பயிற்சி வேறில்லை. அந்த முறையில் துணிகள் துவைக்க போதிய நேரம் இல்லையெனில், சில வேலைகளை மட்டும் அலசுதல், காயப்போடுதல், மடித்தல் போன்ற வேலைகளை செய்யலாம். துணிகளை அலசும்போது அடிக்கடி குனிய வேண்டியிருக்கும், துணிகளை பிழியும்போது கைகள் வலுவாகும், துணிகளை கொடியில் காயப்போடும்போது உடல் வளைந்து கொடுக்கும், அடித்து துவைத்தல் என எல்லாவற்றையும் செய்வது ஒட்டுமொத்த உடலையும் வலுவாக்கும். தோள்பட்டை, கழுத்து, உடலின் மேற்பகுதி தசைகளுக்கு வேலை கொடுக்க அயர்னிங் சரியான பயிற்சியாகும்.

 

மேலும், பொருள்களை துடைத்து அடுக்குதல், உணவுப் பொருள்களை தயார் செய்தல், தோட்டவேலை, குழந்தை பராமரிப்பு, ஒட்டடை அடித்தல் என நம்முடைய உடலை வலுவாக்க உதவும் ஏராளமான வீட்டு வேலைகள் இருக்கின்றன. வீட்டில் வேலைகள் செய்யாமல், அதே பலன்களுக்காக காசு கொடுத்து உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்பவர்கள் இதை சிந்திக்க வேண்டும். அதே நேரத்தில் இதயம் மற்றும் நுரையீரல் செயல்திறனை அதிகரிக்கும் கார்டியோ-வாஸ்குலர் பயிற்சிக்கு வீட்டு வேலைகள் இணையாகாது. பொதுவாக ஆரோக்கியமாகவும், வளைந்துக்கொடுக்கக் கூடியதாகவும், அழகாகவும் உடலை வைத்துக்கொள்ள விரும்புவர்களுக்கு இவை உதவும். இது ஆண்கள், பெண்கள் இருவருக்குமே பொருந்தும்.

 

வீட்டு வேலைகளைச் செய்வது, பெற்றோர் அல்லது கணவர் போன்ற குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுவதாகும். இதுவும் வணக்கமாகக் கருதப்படுகிறது.

 

பெண்கள், ஆண்கள் என யாராக இருந்தாலும் அவர்களின் வேலைகளால் ஏற்படும் உடல் சோர்வை போக்க, அண்ணல் நபி (ஸல்)  அவர்கள் அழகிய மந்திரச் சொல்லை கற்றுத்தந்துள்ளார்கள். உறங்கும்போது அதை ஓதிக்கொண்டால், உடலில் களைப்பு நீங்கி,  புதுத்தெம்பு ஏற்படக்கூடும்.

 

பிள்ளைகள்

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் ஜுவைரிய்யா (ரலி) அவர்களை திருமணம் செய்தபோது எனது தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் சிறுபிள்ளையாக இருந்த என்னை அழைத்து "மகனே! புதுமாப்பிள்ளையாக இருக்கும் அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்கு காலை உணவு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதனால் இந்த பேரிச்சம்பழங்களையும், நெய்யையும் கொண்டு போய்க் கொடு" என்று கூறி அனுப்பி வைத்தார். நானும் அதை கொண்டுபோய் அண்ணலாரிடம் கொடுத்தேன். நூல்:- தபக்காத் இப்னு சஅத் 

 

குழந்தைகளுக்கு அவர்களுடைய வேலையை கற்றுக்கொடுத்துவிட்டு, எப்போதாவது அந்த குழந்தைகளுக்கு ஒத்தாசை செய்தால் அதற்குப் பெயர் பாசம்.

 

குழந்தைகளுக்கு அவர்களுடைய வேலையை முழுமையாக கற்றுக் கொடுத்த பிறகு, அந்த வேலையை அவர்களையே செய்ய வைத்தால், அதற்குப் பெயர் கண்டிப்பு.

 

குழந்தைகளுக்கு அவர்களுடைய வேலையை முழுமையாக கற்றுக் கொடுத்த பிறகும், நாமே அவர்களின் எல்லா வேலையும் செய்து கொடுத்தால், அதற்குப் பெயர் செல்லம்.

 

குழந்தைகளுக்கு எந்த வேலையும் கற்றுக்கொடுக்காமல் அவர்களின் அனைத்து வேலைகளும் நாமே செய்துகொடுத்தால், அதற்குப் பெயர் பாழாக்குதல்.

 

இன்று பல வீடுகளில் அடிப்படை வீட்டு வேலைகள்கூட தெரியாமல் தற்காலப் பிள்ளைகள் வளர்க்கின்றனர். பள்ளி விடுமுறை விட்டதும் குழந்தைகளை சிலர் கோடைக்கால வகுப்புகளில் சேர்ப்பார்கள். அதே சமயம் வீட்டு வேலைகளை குழந்தைகளுக்கு பழக்குவது மிகவும் அவசியம். அவர்களுக்கு அதனால் தன்னம்பிக்கையும், தைரியமும், தனித்து செயல்படும் இயல்பும் வளரும். டிவி மற்றும் செல்போன்களில் அதிக நேரம் செலவழிப்பது தவிர்க்கப்படும்.

 

வீட்டு வேலைகள் குழந்தைகள் வாழ்க்கை மற்றும் அன்றாட திறன்களைக் கற்றுக்கொள்ள உதவுகின்றன. வீட்டு வேலைகளைச் செய்வதன் மூலம் குழந்தைகள் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

 

வீட்டு வேலைகளைச் செய்வது, குழந்தைகள் தங்களை, ஒரு வீட்டை மற்றும் ஒரு குடும்பத்தை கவனித்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அறிய உதவுகிறது. உணவு தயாரித்தல், சுத்தம் செய்தல், ஒழுங்கமைத்தல் மற்றும் தோட்டக்கலை போன்ற அவர்களின் வயதுவந்த வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய திறன்களை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

 

வீட்டு வேலைகளில் ஈடுபடுவது குழந்தைகளுக்கு தெளிவாகத் தொடர்புகொள்வது, பேச்சுவார்த்தை நடத்துவது, ஒத்துழைப்பது மற்றும் ஒரு குழுவாக வேலை செய்வது போன்ற உறவுத் திறன்களின் அனுபவத்தையும் அளிக்கிறது.

 

மேலும், குழந்தைகள் குடும்ப வாழ்க்கைக்கு பங்களிக்கும்போது, அவர்கள் திறமையானவர்களாகவும் பொறுப்பானவர்களாகவும் உணரக்கூடும். அவர்கள் வேலையை ரசிக்காவிட்டாலும், அவர்கள் தொடர்ந்து செய்யும்போது, அவர்கள் பணியை முடித்துவிட்டதாக திருப்தி அடைய முடியும்.

 

மேலும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வது  குடும்பங்கள் சிறப்பாகச் செயல்படவும், குடும்ப மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும். குழந்தைகள் உதவி செய்யும்போது, வீட்டு வேலைகள் விரைவாகச் செய்யப்படும், மேலும் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய வேலைகள் குறைவாக இருக்கும். இது குடும்பத்தினர் ஒன்றாக வேடிக்கையான விஷயங்களைச் செய்ய நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

 

வீட்டில் உள்ள சிறு சிறு வேலைகளை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

 

வீட்டு வேலைகளை அவர்கள் செய்து முடிக்கும் பொழுது பிள்ளைகளின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மேலும், எதையோ சாதித்த ஒரு உணர்வை அவர்கள் பெறுவார்கள்.

 

(டீம் ஒர்க் எனும்) கூட்டாகச் சேர்ந்து செய்யும் வேலையைச் சொல்லிக் கொடுப்பதற்கு குடும்பம் சார்ந்த வேலைகள் ஒரு சிறந்த வழி. இது சமூகம் மற்றும் அலுவலகம் ஆகிய இரண்டிலும் தேவைப்படும் ஒரு முக்கியமான விஷயம்.

 

வேலைகளை முடிப்பதற்கு நமது பிள்ளைகளுக்கு குறித்த நேரத்தை அமைத்துக் கொடுப்பது, நேரத்தை சிறந்த முறையில் கையாளுவதற்கு அவர்கள் கற்றுக்கொள்ள உதவும்.

 

சாப்பிட்ட தட்டுகளை எடுத்து கழுவுகின்ற இடத்தில் போடுவது, அங்கங்கே தேவையில்லாமல் கிடக்கும் பொருள்கள், நாளிதழ்கள், புத்தகங்கள் போன்றவற்றை எடுத்து ஒழுங்காக அடுக்கி வைப்பது, வீட்டைக்குப்பைகளை  கூட்டுவது துடைப்பது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, துவைத்த துணிகளை மடித்து வைப்பது, காய்கறிகளை நறுக்கிக் கொடுப்பது, இதுபோன்ற சின்னச் சின்ன வேலைகளை தொடர்ந்து நமது பிள்ளைகள் செய்து வரும் பொழுது அவர்கள் புதுப்புது திறன்களை கற்றுக்கொள்வார்கள். மேலும், அவர்களுடைய பொறுப்புணர்வும் நிலையாக அதிகரிப்பதை நம்மால் காணலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

 

தட்டிக்கொடுக்க வேண்டும்

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு நாள் அலுவல் ஒன்றுக்காக என்னை அனுப்பினார்கள். நான் புறப்பட்டுச் சென்றபோது, கடைத்தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் சிலரை கடந்து சென்றேன். (அவர்களுடன் சேர்ந்து நானும் விளையாடலானேன்.) அப்போது நபியவர்கள் எனக்குப் பின்பக்கம் (வந்து) எனது பிடரியைப் பிடித்தார்கள். அவர்களை நான் பார்த்தபோது அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ( يَا أُنَيْسُ أَذَهَبْتَ حَيْثُ أَمَرْتُكَ ) "அருமை அனஸே! நான் உத்தரவிட்ட இடத்திற்கு நீ சென்றாயா?" என்று கேட்டார்கள். நான், ( نَعَمْ أَنَا أَذْهَبُ يَا رَسُولَ اللَّهِ ) "ஆம்; செல்கிறேன் நாயகமே!" என்று கூறினேன். நூல்:-  முஸ்லிம்-4626

 

 அனஸ் (ரலி) அவர்கள் ஒரு சிறுவர். எனவே, அவர் கொடுத்த வேலையை மறந்துவிட்டு சிறுவர்களுடன் விளையாடச் சென்றுவிட்டார். அது அவ்வயதிற்குரிய செயல் என்பதை உணர்ந்துகொண்ட பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், அவரை கண்டிக்காது அவரிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை நினைவுபடுத்திவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

 

பெற்றோர் செய்யக்கூடாதவை: ஆரம்பத்தில் பிள்ளைகள் சரியாக வேலை செய்யாவிட்டால், அவர்களைத் திட்டாமல் பொறுமையாக கையாள வேண்டும். வேலையில் ஏதேனும் தவறு நேர்ந்தால், பரவாயில்லை என்று தட்டிக்கொடுத்து செய்யச் சொல்ல வேண்டும். ‘உனக்கு ஒரு வேலையும் உருப்படியாகச் செய்யத் தெரியாது’ என்று திட்டக்கூடாது. அவர்களை வீட்டு வேலை செய்யும் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்.

 

நம் வீட்டு உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஒத்தாசை புரிந்து, ஒற்றுமையோடு வாழ அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

No comments:

Post a Comment

குறைகளை ஏற்றுக்கொள்வோம்

  குறைகளை ஏற்றுக்கொள்வோம்   وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ قَالَ فَعَلْتُهَا إِذًا وَأَنَا مِنَ الضّ...