Search This Blog

Monday, 3 November 2025

மனிதனே காரணம்!

 

மனிதனே காரணம்!

 

ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ

மனிதர்கள் கைகள் தேடிக்கொண்டதின் காரணமாக கடலிலும், தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவிவிட்டன. அதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்வதற்காக அவர்களின் தீய செயல்களில் சிலவற்றின் தண்டனையை அவர்கள் (இம்மையிலும்) சுவைக்கும்படி அவன் செய்ய வேண்டியதாயிருக்கிறது. திருக்குர்ஆன்:- 30:41

 

ஜூன் -5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம்

 

இறைவனிடமிருந்து மனிதனுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு என்பது இறைவனை வணங்கி வாழ்வது மட்டுமன்று பூமியின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து வாழ்வதும் தான்.

 

பூமியின் சுற்றுச்சூழல் கெட்டுவிட்டால் மனிதன் பூமியில் வளமாக வாழ முடியாது. மனிதன் செயல்களால் பூமி வெப்பமடைந்து விட்டது; பனிப்பாறைகள் கரைந்து கடல் மட்டம் அதிகரிக்கிறது; அதனால் கடற்கரை ஓரம் இருக்கும் ஊர்கள் கடலுக்குள் சென்று விடும் அபாயம் அதிகரித்து வருகிறது.

 

பூமி வெப்ப அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்பட போவது உலகின் 60 சதவீதம் மக்கள் (ஏறத்தாழ 400 கோடி) தொகையை கொண்டுள்ள ஆசிய கண்டம் தான் என்கிறார்கள் ஆய்வாளர். ஒவ்வொரு பத்தாண்டுக்கும் பூமியின் வெப்பநிலை 0.2 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என்பது அறிவியல் செய்தி.

 

பூமியின் வெப்பம் 2 டிகிரி அதிகரித்தால் பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகள் முற்றிலும் மூழ்கிவிடும்.

 

கடல் நீரால் சூழுதல், தண்ணீர் பற்றாக்குறை, மகசூல் குறைவால் உணவுப் பஞ்சம், நோய் பரப்பும் கொசுக்கள் அதிகரிப்பு என பல்வேறு இன்னல்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

 

வேதிப்பொருள்களால் வந்த வினை

 

உனக்கு ஏதாவது தீங்கு வந்தால் அது (நீ இழைத்த குற்றத்தின் காரணமாக) உன்னால்தான் வந்தது. திருக்குர்ஆன்:- 4:79

 

பொறுப்பில்லாத விஞ்ஞான வளர்ச்சியின் பின் விளைவுகள் மனித குலத்தை அச்சுறுத்துகின்றன. சூரியன் ஒவ்வொரு வினாடியும் 300 கோடி யூனிட் சக்தியை கக்குகிறது. இந்த வெப்பம் முழுவதும் பூமியில் இறங்கினால் எந்த உயிரினமும் வாழ முடியாது. மேலும், சூரியனிலிருந்து வெளியாகும் புற ஊதா கதிர்கள் தோல் நோய், புற்றுநோய் போன்ற பெரும் நோய்களை ஏற்படுத்தி உயிரினங்களை அழித்திடும் ஆற்றல் பெற்றவை.

 

இறைவன் இயற்கையாகவே பூமியைச் சுற்றி ஓசோன் படலம் எனும் பாதுகாப்புக் கவசத்தை அமைத்துள்ளான். ஓசோன் படலம் சூரிய வெப்பத்தையும், புற ஊதா கதிர்களையும் தனக்குள் தேக்கி வைத்துக்கொண்டு தேவையான வெப்பத்தை மட்டும் பூமிக்கு அனுப்புகிறது. புற ஊதா கதிர்கள் பூமியை தாக்கி விடாமல் பாதுகாக்கிறது.

 

பெரும் தொழிற்சாலைகள், பெரும் இயந்திரங்கள் தரையிலும், கடலிலும், விண்ணிலும் பறக்கும் வாகனங்கள் மூலம் வெளியாகும் கரியமிலவாயு ஓசோன் படலத்தில் ஓட்டையை ஏற்படுத்திவிட்டது. அதனால் பூமி வெப்பமடைந்துள்ளது. எனவே, பூமிக்கு அழிவு ஆரம்பமாகிவிட்டது என்று விஞ்ஞானிகள் அலறுகிறார்கள். இது குறித்து உலகத் தலைவர்கள் ஒன்றிணைந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

 

சுருங்கக் கூறின், பூமியின் அழிவுக்குக் காரணம், மனித கண்டுபிடிப்புகளான வேதிப்பொருள்கள் (Chemical) தான். இன்று வேதிப்பொருள்களில் வகைகள் இரண்டு கோடிக்கு மேல் இருக்கிறது. மேலும், 27 வினாடிக்கு ஒரு புதிய வேதிப்பொருள், புதிய பெயரோடு உருவாகிறது.

 

உலக அளவில் ஆற்றுக்கரையோரம் இருக்கின்ற தொழிற்சாலைகளின் வேதிப்பொருள்கள் கலந்த கழிவுநீரால் ஆற்றை மாசுபடுத்தி வருகின்றன.

 

திருப்பூர் நகரின் சாயக்கழிவுகள், சர்க்கரை ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், காகித அலைகள், தோல் தொழிற்சாலைகள் ஆகியவற்றின் மூலம் வெளியேறும் வேதிப்பொருள்கள் கலந்த கழிவு நீரால் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்படைந்து வருகிறது. இதனால் மனிதன் ஆஸ்துமா, புற்றுநோய், ஆண்மைக்குறைவு போன்ற பெரும் நோய்களால் அவதிப்படுகிறான்.

 

மரங்களின் பயன்கள் 

 

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் உம்மு முபஷ்ஷிர் அல்அன்சாரிய்யா (ரலி) அவர்களது பேரீச்சந்தோப்பிற்குச் சென்றார்கள். உம்மு முபஷ்ஷிர் (ரலி) அவர்களிடம், ( مَنْ غَرَسَ هَذَا النَّخْلَ أَمُسْلِمٌ أَمْ كَافِرٌ ) "இந்தப் பேரீச்ச மரங்களை நட்டுவைத்தது யார்? முஸ்லிமா அல்லது இறைமறுப்பாளரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இல்லை; ஒரு முஸ்லிம்தாம் (நட்டுவைத்தார்)" என்று விடையளித்தார். அப்போது நபியவர்கள், ( لاَ يَغْرِسُ مُسْلِمٌ غَرْسًا وَلاَ يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلَ مِنْهُ إِنْسَانٌ وَلاَ دَابَّةٌ وَلاَ شَىْءٌ إِلاَّ كَانَتْ لَهُ صَدَقَةٌ ) "முஸ்லிம் ஒருவர் மரமொன்றை நட்டுவைத்து, அல்லது விதையொன்றை விதைத்துப் பயிர் செய்து அதிலிருந்து (வரும் விளைச்சலை அல்லது கனிகளை) ஒரு மனிதனோ கால்நடையோ அல்லது (உயிரினம்) ஏதேனும் ஒன்றோ உண்டால், அது அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-3160

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், ( نَهَى عَنْ قَضَاءِ الْحَاجَةِ تَحْتَ الْأَشْجَارِ الْمُثْمِرَةِ، وَضَفَّةِ النَّهْرِ الْجَارِي ) பழம் தரும் மரங்களின் கீழும், (தண்ணீர்) ஓடும் ஆற்றங்கரையிலும் மலஜலம் கழிப்பதை தடை செய்தார்கள். நூல்:- தப்ரானீ

 

காஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. டமாஸ்கஸ் நகரத்தில்,  அபுத்தர்தா (ரலி) அவர்கள் மரம் நட்டுக் கொண்டிருந்தபோது, ஒருவர் அபுத்தர்தா (ரலி) அவர்களைக் கடந்து சென்றார். அவர் அபுத்தர்தா (ரலி) அவர்களிடம், ( أَتَفْعَلُ هذَا وَاَنْتَ صَاحِبُ رَسُوْلِ اللهِ  صلى الله عليه وسلم ) "தாங்களோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழராக இருக்க தாங்களும் (உலக) அலுவல்களில் ஈடுபடுகிறீர்களா?" என்று கேட்டார்.

 

அபுத்தர்தா (ரலி) அவர்கள், ( لاَ تَعْجَلْ عَلَيَّ سَمِعْتُ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم يَقُوْلُ: مَنْ غَرَسَ غَرْسًا لَمْ يَأْكُلْ مِنْهُ آدَمِيٌّ وَلاَ خَلْقٌ مِنْ خَلْقِ اللهِ اِلاَّ كَانَ لَهُ صَدَقَةٌ )  "என்னைக் குறை சொல்வதில் அவசரப்படாதீர். 'எவர் ஒரு மரம் நட்டு, அம்மரத்திலிருந்து மனிதரோ அல்லது அல்லாஹுதஆலாவுடைய படைப்புகளில் ஏதேனும் ஒரு படைப்போ சாப்பிட்டால், மரம் நட்டது அவருக்கு தர்மம் செய்த நன்மை கிடைக்கக் காரணமாகும்' என்று பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنْ قَامَتِ السَّاعَةُ وَفِي يَدِ أَحَدِكُمْ فَسِيلَةٌ، فَإِنِ اسْتَطَاعَ أَنْ لاَ تَقُومَ حَتَّى يَغْرِسَهَا فَلْيَغْرِسْهَا ) உங்களில் ஒருவரின் கையில் மரக்கன்று இருக்க, மறுமைநாள் வந்துவிட்டால் அதை நடும் வரை மறுமைநாள் ஏற்படாது என்றிருப்பின், அதை நட்டுவிடட்டும். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-479, முஸ்னது அஹ்மத், அல்பஸ்ஸார்

 

பூமியை அதிகமாக சூடாக்குகின்ற கரியமிட வாயுவை மரங்கள், தாவரங்கள் உட்கொண்டு பூமி வெப்பமயமாகுதலை தடுப்பதில் மரங்கள், தாவரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

 

மனிதன் சுயநலத்திற்காக காடுகளை அழித்ததால் வான்மழை குறைந்துவிட்டது. தேவையான நேரத்திற்கு மழை பெய்வதில்லை. சீதோசன நிலை மாறிவிட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள். சீசன் என்று இனி எதுவும் இல்லை.

 

கோடைகாலத்தில் கடும் மழைப்பொழிவு; மழை காலத்தில் கோடையின் வறட்சி. நேற்று சாயங்காலம் வரை பச்சை பசேலென்றிருந்த தாவரம் இன்று காலையில் மக்கி மடிந்து போவது; புழு, பூச்சி, சில பறவைகள் தொலைந்து போவது. சுருங்கக் கூறின், இயற்கை தடம் புரண்டுவிட்டது.

 

மரங்கள் மாசுகளை நீக்கித் தருகின்றன. மனிதனுக்கு தேவையான ஆக்ஸிஜன் எனும் பிராண வாயுவை மரங்களே பெரிதும் உற்பத்தி செய்து தருகின்றன. இரைச்சலை கட்டுப்படுத்துகின்றன. சாலை அரைப்பை அரிப்பை தடுக்கின்றன. வான்மழை பெய்வதற்கு மரங்கள் தேவைப்படுகின்றன.

 

புளிய மரங்கள் வாகனக் கழிவை அதிகமாக உறிஞ்சிக் கொள்கின்றன. அதனால் தான் சாலையோரங்களில் புளிய மரங்கள் அதிகமாக நடப்பட்டது.

 

மரங்கள் முளைவதற்கே தகுதியில்லாத கடுமையான உஷ்ண பூமியில் பிறந்த பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் மரங்கள் நடுவதையும், அதைப் பேணி பாதுகாப்பதையும் ஓர் இஸ்லாமியனின் நற்பண்பு என்று கூறியதை எண்ணும்போது மிகவும் வியப்பாக இருக்கிறது.

 

சிறிய நாடாகிய சிங்கப்பூர் மரங்கள்மீது காட்டுகின்ற கனிவு மிகப் பிரம்மக்குரியது. கட்டிடம் கட்ட இடையூறாய் இருக்கும் மரங்களை நம்மை போன்று அவர்கள் வேரோடு வெட்டி சாய்த்து விடுவதில்லை. மிகுந்த கவனத்துடன் வேரோடு பிடுங்கி ஒரு குழந்தையைப் போன்ற அதை பாதுகாத்து, மற்றொரு இடத்தில் நட்டு வைக்கிறார்கள்.

 

ஜப்பானியர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் எந்த ஒரு மரத்தை வெட்டுவதில்லை. எனவே, உலகிலேயே மிகச் சுவையான நிலத்தடி நீர் ஜப்பானில் தான் உள்ளது.

 

பூமியின் முளைக்குச்சி

 

பூமி மனிதர்களுடன் சாய்ந்து விடாதிருப்பதற்காக அதில் மலைகளை நாம் தான் நட்டினோம். திருக்குர்ஆன்:- 21:31

 

பூமி தொட்டிலாகவும் மலைகள் முளைக்குச்சிகளாகவும் நாம் ஆக்கவில்லையா? திருக்குர்ஆன்:- 78:67

 

நாம் வாழும் பூமியின் மேற்பகுதி கடினமாக அமைந்துள்ளது. ஆனால், பூமியின் ஆழத்தில் கீழடுக்குகளோ மிகவும் வெப்பம் நிறைந்தவையாகவும், திரவ நிலையிலும் எந்த உயிரினமும் வாழத் தகுதியற்றவையாகவும் உள்ளன.

 

கூடாரத்தை தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் முளைக்குச்சிகளைப் போன்று மலைகளின் கெட்டியான வேர்கள் பூமிக்கடியில் நங்கூரம் போன்று பாய்ச்சி பூமியின் மேலோட்டை ஆடாமல் அசையாமல் வலுவுடன் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதுடன் அப்புவியின் மேற்பகுதிக்கு உறுதிமிக்க திடநிலையை அளிக்கின்றன என்று மண்ணியல் நிபுணர்கள் 1956 ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர்.

 

பூமியின் மேற்பரப்பில் காணப்படும் மலைகளின் உயரத்தைவிட 10 -15 மடங்கு ஆழமாக பூமிக்கடியில் மலைவேர் (Mountain Roots என்று அழைக்கப்படுகிறது.) பதிந்திருக்கிறது.

 

உதாரணமாக பூமியின் மேற்பரப்பிலிருந்து 9 கி.மீ. உயரமான இமயமலையின் வேர் சுமார் 125 கி.மீ.  (77.7 மைல்கள்) நீண்டு காணப்படுகிறது.

 

மலைகளிலுள்ள மரங்களை அழித்தால் உறுதிமிக்க மலைகளும் அழிந்துவிடும். மலைப்பகுதியில் நிலச்சரிவுக்குக் காரணம் மரங்களை வெட்டியதால் தான். மலைகள் அழிந்துவிட்டால் பூமியின் ஸ்தரத்தன்மை குறைந்துவிடும். பூமி ஆட்டம் காண ஆரம்பித்துவிடும். நடுநிலக்கம் என்பது சர்வ சாதாரணமானதாக ஆகிவிடும்.

 

நீலகிரிப் பகுதியில் மர அடர்த்தி 47 சதவீதத்திலிருந்து 36 சதவீதத்திற்கு குறைந்துவிட்டது. அதனால் அப்பகுதியில் மழையும் குறைந்துவிட்டது. நீலகிரி மலைப்பகுதியில் 3000 நீரோடைகள் கடந்த நாற்பது ஆண்டுகளில் வறண்டு போய்விட்டன.

 

பழனி மலைப்பகுதியில் மர அடர்த்தி உள்ள இடத்தில் மழை பெய்யும் அளவுக்கு அருகில் 1 கி.மீ. தூரத்தில் இருக்கும் சமவெளியில் மழை இல்லை.

 

மழைகள் தான் நதிகளின் பிறப்பிடமாகும். மழைகள் இல்லையேல் நதிகள் இல்லை. நதிகள் இல்லையேல் உயிரினங்கள் இல்லை. சமமான ஒரு சீதோஷ்ண நிலை நீடிக்க வேண்டுமெனில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். இந்தியாவில் 20 சதவீத காடுகள் தான் உள்ளன. நமது தமிழகத்தில் 17.5 சதவீதம் காடுகள் மட்டுமே உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

 

மண்ணறைப் பூங்கா

 

செடிகளும், மரங்களும் இறைவனுக்கு (சிரவணக்கம் எனும்) சஜ்தா செய்கின்றனர். திருக்குர்ஆன்:- 55:6

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் இரு மண்ணறைகளை கடந்து  சென்றபோது, இவ்விரு மண்ணறைவாசிகளும் வேதனை செய்யப்படுவதாக அறிவித்த நபியவர்கள் பச்சை மட்டை ஒன்றை எடுத்து இரண்டாகப் பிளந்து இரு மண்ணறைகளிலும் ஒவ்வொன்றாக நட்டார்கள். பிறகு, ( لَعَلَّهُ يُخَفَّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا ) "இவ்விரு பச்சை மட்டைகள் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப்பட கூடும்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-1378

 

பிற சமயத்தவர்களின் கல்லறைகள் பொட்டல்வெளியாக இருப்பதும், முஸ்லிம்களின் மண்ணறைகள் மரங்கள் நிறைந்த பூங்காவனமாக காட்சி தருவதற்கும் காரணம், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மரம் வளர்ப்பதில் மனிதனுக்கு அக்கறை வேண்டும் என்ற வழிகாட்டுதலாகும்.

 

இந்த நபிமொழியை ஆதாரமாகக் கொண்டுதான் மண்ணறைகளில் மரங்கள் நடும் வழக்கம் முஸ்லிம்களிடம் தோன்றியது.

 

மனிதர்களுக்கு உபகாரம் செய்தால், அவர்கள் முழு நேரமும் இறைவனுக்கு நன்றியுடன் நடப்பார்கள் என்று உறுதியாகக் கூற முடியாது. ஆனால், மரங்களை நட்டு வளர்த்தால் அவை நிச்சயமாக (திக்ரு எனும்) இறைத்தியானம் செய்யும். அதன் நன்மை நட்டு வைத்தவரை சேரும். மரங்கள் மனிதனுக்கு இரு உலகிலும் நன்மை செய்கின்றன.

 

சுமார் 50 ஆண்டுகள் ஒரு மரம் வளர்ந்தால் வாழ்ந்தால் அதன் மூலம் மனிதனுக்குக் கிடைக்கும் இலாபத்தை கணக்கிடுவோமா?

 

அது தரும் பிராணவாயு (ஆக்ஸிஜன்) மதிப்பு மட்டும் சுமார் 5.2 இலட்சம், காற்றின் மாசுகளை தடுப்பதற்கான மதிப்பு சுமார் 10 இலட்சம், மண் அரிப்பை தடுக்கிறது அதன் மதிப்பு சுமார் 6.4 இலட்சம், இரைச்சலை கட்டுப்படுத்துகிறது அதன் மதிப்பு சுமார் 2 இலட்சம், கனிகள் மற்றும் பறவைகள் பலவகை பூச்சிகளுக்கு அடைக்கலம் தருவதற்கான மதிப்பு சுமார் 2 இலட்சம், அது தரும் மண்வளத்தின் மதிப்பு 6.4 இலட்சம். ஆக மொத்தம் 32 இலட்சம்.

 

நாம் வாழ்கின்ற இந்த பூமிக்கு ஒரு மரத்தால் 32 இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்படுகிறது. ஒரு மரம் 20 கிலோ கரியமில வாயுவை உட்கொண்டு 14 கிலோ பிராணவாயுவை தருகிறது என்பதை அறிஞர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர்.

 

எனவே, நன்கு வளைந்த ஒரு மரம் விழும்போதோ அல்லது வீழ்த்தப்படும்போதோ இந்த பூமியில் 32 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான நன்மைகளை இழக்கிறது.

 

மழைக்கும் மரங்களுக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒரு தொடர்பு இருக்கிறது. அடர்த்தியான மரங்களின் சுற்றுப்புறம் உஷ்ணம் குறைந்து இருக்கும். அதனால் நம்முடைய வீட்டுப்பக்கம் உள்ளங்கை அளவு வெற்றிடம் இருந்தாலும்கூட அதில் சின்ன செடியையாவது ஊன்றி வைக்க வேண்டும். கருமேகங்கள் நம்மைத் தேடும். பூமி சூடாகாமல் (Green House Effect) பூமியின் ஓரங்களான அண்டார்டிக்காவிலும் ஆர்ட்டிக்கிலும் பணி உருகாமலும் பூமியை காப்பாற்ற இயலும்.

 

திருக்குர்ஆனின் தீர்வு

 

பூமியின் உஊர்ந்து திரியக்கூடியவைகளும், தன்னுடைய இரு இறக்கைகளால் (ஆகாயத்தில்) பறக்கக் கூடியவைகளும் உங்களைப் போன்ற (உயிருள்ள) படைப்புகளே (சமுதாயங்களே) அன்றி வேறில்லை. திருக்குர்ஆன்:- 6:38

 

எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கூறுகின்ற திருக்குர்ஆன் பூமி வெப்பமயமாகுதல் தடுப்பதற்கு கீழ்காணும் முறையில் தீர்வு கூறுகிறது.

 

அல்பகரா (மாடு), அல்அன்ஆம் (கால்நடைகள்), அல்அஃராப் (சிகரங்கள்), அல்ஹிஜ்ரு (மலைப்பாதை), அந்நஹ்ல் (தேனீ),  அல்கஹ்ஃப் (குகை), அந்நம்லு (எறும்பு), அல்அன்கபூத் (சிலந்தி), அல்அஹ்காஃப் (மணல்மேடுகள்), அல்ஹதீத் (இரும்பு), கமர் (சந்திரன்), அல்கலம் (எழுதுகோல்), அஷ்ஷம்ஸ் (சூரியன்), அல்லைல் (இரவு), அத்தீன் (அத்திப்பழம்), அல்ஃபீல் (யானை) இவ்வாறு, அல்லாஹ் பிற படைப்பினங்களின் பெயர்களை திருக்குர்ஆனில் சில அத்தியாயங்களுக்கு பெயர் சூட்டிவிட்டு, ஆக கடைசி அத்தியாயத்திற்கு தான் அந்நாஸ் (மனிதர்கள்) என்று பெயர் சூட்டியுள்ளான்.

 

மலைகளும், மரங்களும், பெற உயிரினங்களும் வாழும்வரை தான் மனிதனுக்கும் இந்த உலகில் வாழ்க்கை. ஆனால், இந்த சிந்தனையின்றி மனிதன் எல்லா இயற்கை வளங்களையும் சுரண்டியே தனது சுகங்களை பெருக்கிக்கொள்கிறான். இவற்றை அழித்தால் இந்த பூமி விரைவில் அழிந்துவிடும்.

 

இந்த பூமியில் எல்லா உயிரினங்களும் வாழவேண்டும் என்று நினைத்தால், நாமும் வாழலாம் என்ற கருத்தையே திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

 

மலைகள், குன்றுகள், குளம், குட்டைகள், விவசாய பூமி போன்ற இயற்கை வளங்கள் அனைத்தையும் "ரியல் எஸ்டேட்" என்ற பெயரில் அழித்துவிட்டு, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் என்று கட்டிக்கொண்டால் மட்டும் மனிதன் நிம்மதியாக வாழ்ந்திட முடியுமா?

 

உலக உயிரின பராமரிப்பு ஒன்றியம் ஒவ்வொரு ஆண்டும் அழியும் ஆபத்தில் இருக்கும் உயிரினங்களின் பட்டியலை வெளியிடும் (Redlist of Threatened species) எனப்படும் சிவப்பு பட்டியல். 2004 ஆம் ஆண்டு மட்டும் 3300 உயிரினங்கள் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.  2004 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் இருப்பவை மொத்தம் 15,589 உயிரினங்கள் ஆகும்.

 

நாம் கண்ணால் பார்த்த சில செடிகள், மூலிகை தாவரங்கள், பட்டாம்பூச்சி போன்ற சில உயிரினங்களை நம் பேரக்குழந்தைகளுக்கு வெறும் புகைப்படத்தில் மட்டுமே காட்ட முடியும். பிற உயிரினங்களும் நம்மைப் போன்ற சமுதாயமாகும். பூமியில் மனிதனைப் போன்றே பிற உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதி பெற்றவையாகும்.

 

பூமி வெப்பமயமாவதை தடுக்க வேண்டுமெனில், கரியமில வாயுவை அதிகப்படுத்துகின்ற அனைத்து காரியங்களையும் மனிதன் உடனே தடுத்து நிறுத்த வேண்டும். பசுமை புரட்சியை சொல்லால் மட்டுமல்ல, செயலாலும் கடைபிடிக்க வேண்டும்.

 

பிற உயிரினங்களும் வளமாக வாழ்வதற்கான சூழலை உண்டாக்க வேண்டும். வீட்டையும் நாட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றை கடைபிடித்தால் இன்ஷா அல்லாஹ் மனிதன் இந்தப் பூமியில் வளமாக வாழலாம். பூமியின் அழிவுக்கு காரணம் மனிதன் தான் என்பதை சிந்திப்போமா?

 

எந்த அழிவிற்கும் நாம் காரணமாகிவிடாமல் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! ஆமீன்!

 

(இந்தக் கட்டுரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

 

No comments:

Post a Comment

குறைகளை ஏற்றுக்கொள்வோம்

  குறைகளை ஏற்றுக்கொள்வோம்   وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ قَالَ فَعَلْتُهَا إِذًا وَأَنَا مِنَ الضّ...