Search This Blog

Sunday, 1 November 2020

அரக்கன்

 

அரக்கன்

 وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌ۚ  يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوا الرِّبٰوا اَضْعَافًا مُّضٰعَفَةً


இறைநம்பிக்கையாளர்களே! (அசலுக்கு அதிகமாகவும் வட்டிக்கு வட்டி போட்டும்) பன்மடங்காகப் பல்கிப் பெருகும் வட்டியை நீங்கள் உண்ணாதீர்கள். அல்லாஹ்வுக்கு பயந்து (இதனை தவிர்ந்து கொண்டால்) நீங்கள் வெற்றி பெறலாம்.                திருக்குர்ஆன்:- 3:130


பணத்தின் வலுவையும், சுகத்தையும் சுவைத்து விட்ட மனிதன் அதை தேடிக் குவிக்க பல வழிகளைத் தேடுகிறான். அப்படி அவன் கண்டுபிடித்த வழிகளில் மிகவும் கொடுமையான ஒன்று தான் வட்டித் தொழில்.


இருக்கும் பணத்தை இல்லாதவர்களுக்கு, அவசரமாக தேடுபவர்களுக்கு கடனாகக் கொடுத்து அந்த கருணைக்கு விலையாக வசூலிக்கும் தொகை தான் வட்டி. உழைப்பே இல்லாமல் உட்கார்ந்து கொண்டே சம்பாதிக்கும் இந்த இலகுவாக தொழில் உலகம் முழுவதும் பரவி நிற்பதே அதன் தனி வலிமை.


தற்காலத்தில் வட்டி என்பது கந்து வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, தின வட்டி, என பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்த பல்வேறு வகையான வட்டிகளால் கொலை, கொள்ளை, தற்கொலை போன்ற அழிவுகளை தான் அதிகம் காண்கிறோம்.


தங்களது தொழில் மற்றும் நிறுவனங்களுக்காக வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் அதிலிருந்து மீளுவதற்கு கடுமையாகப் போராடியும் மீள முடியாமல் அனைத்தையும் இழந்து தெருவில் நிற்கின்றனர். செல்வம் அனைத்தும் ஒரு சாராரிடம் தேங்கி விடுகிறது. ஒரு கூட்டம் வட்டியால் செல்வத்தை பெருகிக்கொண்டே செல்ல, மற்றொரு கூட்டம் மென்மேலும் வறுமையில் வீழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த கருத்தை தான் தலைப்பில் காணும் திருவசனம் கூறுகிறது.


வகை வகையான தண்டனை


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اِذَا ظَهَرَ الرِّبَا فِی قَریَةٍ أَحَلُّو بِأَنفُسِهِم عَذَابَ اللّٰه ) ஒரு ஊரில் வட்டி மிகைத்து விட்டால் அவர்கள் அல்லாஹ்வுடைய வேதனையை வரவழைத்து கொண்டார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- ஹாகிம், முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-655


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَامِن قَومٍ یَظهَرُ فِیهِمُ الرِّبَا اِلَّا أَخِذُوا بِالسَّنَةِ ) எந்த கூட்டத்தாரிடம் வட்டி பெருகிவிட்டதோ அவர்கள் பஞ்சத்துக்கு ஆளாவார்கள்.                அறிவிப்பாளர்:- அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் நூல்:-முஸ்னது அஹ்மது, முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-656


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்றிரவு (கனவில்) மனிதர்கள் (தோற்றத்தில் வந்த வானவர்கள்) இருவரைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு பகுதிக்கு என்னை அழைத்து சென்றனர். நாங்கள் நடந்து வந்த போது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். அந்த ஆற்றுக்குள் ஒருவர் தத்தளித்து கொண்டு கரையேற முயற்சிக்கிறார்.


ஆனால் அந்த ஆற்றங்கரையில் மற்றொருவர் நிறைய கற்களை வைத்துக்கொண்டு இவரை கரையேற விடாமல் இவர் வாயில் கற்களை எறிகின்றார். இதனால் இவர் மீண்டும் முன்பிருந்த இடத்திற்கே சென்று விடுகிறார். இவர் கரையேற முயற்சிக்கும் போதெல்லாம் இவ்வாறே நடைபெறுகிறது.


( مَا هَذَا ) “இவர் யார்? என்று என்னை அழைத்து சென்றவர்களிடம் நான் வினவினேன். அதற்கு அவர்கள்  ( الَّذِي رَأَيْتَهُ فِي النَّهَرِ آكِلُ الرِّبَا ) ஆற்றுக்குள் தத்தளித்து கொண்டிருப்பதாக நீங்கள் பார்த்தவர் வட்டி உண்பவராவார்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2085


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் மிஃராஜ் எனும் விண்வெளிப் பயணம் சென்ற போது ஒரு கூட்டத்தாரிடம் என்னை அழைத்து செல்லப்பட்டது. அவர்களின் வயிறுகள் வீடுகளைப் போன்று (பெரியதாக) இருந்தது. அதிலே பாம்புகள் இருந்தன. அவைகளை அவர்களின் வயிற்றுக்கு வெளியிலிருந்து பார்க்கப்பட்டது.


(அருகிலிருந்தவானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் இவர்கள் யார்? என்று நான் வினவினேன்.  ( هٰؤُلَاءِ اَکَلَةُ الرِبٰوا )   "இவர்கள் தான் வட்டியை சாப்பிட்டவர்கள்" என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள்.  அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்    நூல்:- இப்னுமாஜா-2264, முஸ்னது அஹ்மது


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الرِّبَا سَبْعُونَ حُوبًا، أَيْسَرُهَا أَنْ يَنْكِحَ الرَّجُلُ أُمَّهُ ) வட்டி எழுபது (வகையான) பாவங்களைக் கொண்டதாகும். அதில் குறைவானது ஒருவன் தன் தாயை திருமணம் முடிப்பதாகும். (அதன் பாவங்களில் ஒன்று ஒருவன் தன் தாயை திருமணம் முடிப்பது போன்ற பாவத்திற்கு சமமானதாகும்)        அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-2265, பைஹகீ, முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-654


தவறான வருவாய்


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( دِرْهَمٌ رِبًا يَأْكُلُهُ الرَّجُلُ وَهُوَ يَعْلَمُ، أَشَدُّ مِنْ سِتَّةٍ وَثَلَاثِينَ زَنْيَةً ) ஒருவன் நன்கு அறிந்துகொண்டே வட்டியின் மூலம் ஒரு வெள்ளிக்காசை சாப்பிடுவது 36 தடவை விபசாரம் செய்வதைவிட கடினமான பாவமாகும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் ஹன்ளலா (ரலி) அவர்கள்        நூல்:- முஸ்னது அஹ்மது, மிஷ்காத் பக்கம்-245


ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் "வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதற்கு கணக்கு எழுதுபவரையும், அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும் இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்" என்று கூறினார்கள்.       நூல்:- முஸ்லிம்-3258,  திர்மிதீ-1127, இப்னுமாஜா-2268


வட்டித் தொழில் இஸ்லாமில் தடை செய்யப்பட்டுள்ளது. வட்டிக்கு துணைபோகும் வங்கிகள், வட்டி கணக்குகளுக்கு தேவையான மென்பொருள் (Soft ware) செய்து தரும் நிறுவனங்கள், L.I.C. நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றுவது கூடாது. காரணம் வட்டிக்கு துணைபோகும் நிறுவனங்களில் பணியாற்றும் ஒருவர் வட்டிக்கு துணைபோகின்ற எழுத்து, கணக்கு போன்ற வேலைகளை மேற்கொண்டால் இரண்டு காரணங்களுக்காக அது தடுக்கப்பட்டுள்ளது.


1) வட்டித் தொழிலுக்கு துணைபோகுதல். 2) வட்டி எனும் தடுக்கப்பட்ட (ஹராமான) பணத்தை ஊதியமாக பெறுதல்.


வட்டிக்கு துணைபோகும் நிறுவனங்களில் பணியாற்றும் ஒருவருக்கு வட்டி தொடர்புள்ள வேலை இல்லாவிட்டாலும், இரண்டாவது காரணத்திற்காக அதுவும் குற்றமே!


இமாம் தகிக்குல் ஈத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஒருவன் வட்டி மூலமாக சம்பாதித்த பணம் அவன் இறந்த பிறகும் அக்குடும்பத்தில் நிலைத்திருந்தால், அவன் இறைநம்பிக்கையை (ஈமானை) இழந்த பிறகே இறந்திருக்கிறான். வட்டி (ஈமானை) செல்லரித்தது போல் செய்து விடும்.


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். வட்டித் தொழில் புரிவோர் தர்மங்களையும், ஹஜ்ஜையும், இதர நன்மையான காரியங்களையும் அல்லாஹ் ஏற்பதில்லை.


விட்டுவிட வேண்டும்


இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (உங்களுக்கு) வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்.


அவ்வாறே நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போரை உறுதியாக எதிர்பாருங்கள். நீங்கள் பாவமன்னிப்புக் கோரி (வட்டியை விட்டு) விட்டால் உங்களுடைய அசல் தொகை உங்களுக்கு உரியது. நீங்கள் அநீதியிழைக்கவும் வேண்டாம். அநீதியிழைக்கப்படவும் வேண்டாம்.       திருக்குர்ஆன்:- 2:278,279


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில் கூறினார்கள். ( وَكُلُّ رِبًا فِي الْجَاهِلِيَّةِ مَوْضُوعٌ تَحْتَ قَدَمَيْ هَاتَيْنِ، وَأَوَّلُ رِبًا أَضَعُ رِبَا الْعَبَّاسِ ) அறியாமைக் காலத்தில் செய்யப்பட்ட வட்டி ஒப்பந்தம் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. (அசல் தொகை மட்டுமே உங்களுக்கு உரியதாகும்) நான் ரத்து செய்யும் முதலாவது வட்டி ஒப்பந்தம், (என் சிறிய தந்தை) அப்பாஸ் (ரலி) அவர்கள் செய்த வட்டி ஒப்பந்தமாகும்.                நூல்:- தஃப்சீர் இப்னுகசீர் அல்பகரா-275, திர்மிதீ


வட்டித்தொழில் தடுக்கப்படுவதற்கு முன்பு அப்பாஸ் (ரலி) அவர்கள் வட்டித்தொழில் செய்து வந்தார்கள். எனவே தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் "இனிமேல் அப்பாஸ் (ரலி) அவர்கள் வட்டித்தொழில் செய்ய மாட்டார். அவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தவர்கள் அசல் தொகையை மட்டும் அவரிடம் கொடுத்தால் போதும் வட்டி கொடுக்க தேவையில்லை" என்று வாக்குறுதி அளித்தார்கள். மேலும் அண்ணலார் வட்டித்தொழில் கூடாது என்பதை முதலில் தனது குடும்பத்தினரிடமிருந்தே துவங்கினார்கள்.


அறியாமைக் காலத்தில் பனூ அம்ரு பின் உமைர், பனூ முஙைரா ஆகிய இரு குடும்பத்தினர் இடையே வட்டி கொடுக்கல் வாங்கல் இருந்து வந்தது. பிறகு இவர்கள் முஸ்லிம்களாயினர். அப்போது இவர்களில் பனூ முஙைரா குடும்பத்தினர் மட்டும் வட்டித் தொழிலை விட்டொழித்தனர். இவர்கள் பனூ அம்ரு குடும்பத்தினருக்கு கொடுக்க வேண்டிய வட்டித் தொகையை கொடுக்க மறுத்து விட்டனர்.


பனூ அம்ரு குடும்பத்தினருக்கு பனூ முஙைரா குடும்பத்தினர் மூலம் பெருமளவு வட்டித் தொகை வர வேண்டியிருந்ததால் எப்படியாவது அத்தொகையை பெற்றுவிட முனைந்தனர். ஆகவே அப்போது மக்காவின் ஆளுநராக இருந்த இதாப் பின் உசைத் (ரலி) அவர்களிடம் இவ்வழக்கு வந்தது. அவர் இது குறித்து அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்கு கடிதம் எழுதினார்.


அப்போது தான் (2:278,279) மேற்காணும் திருவசனம் அருளப்பட்டது. பின்னர் அண்ணலார் இந்த வசனங்களை மக்கா ஆளுநருக்கு எழுதி அனுப்பினார்கள். (மக்கா ஆளுநர் இதனை மக்களுக்கு ஓதிக்காட்டியபோது)  அவர்கள் ( نَتُوبُ إِلَى اللَّهِ، وَنَذَرُ مَا بَقِيَ مِنَ الرِّبَا ) "நாங்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி வட்டியை விட்டு விடுகிறோம்" என்று கூறினர்.      அறிவிப்பாளர்:- இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் நூல்:- தஃப்சீர் காஸின், தஃப்சீர் இப்னு கசீர், தஃப்சீர் அஹ்சனுத் தஃபாசீர்


வட்டி என்பது மனிதனின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டது. அதைப்பற்றி விளக்கம் தெரிந்ததும் அதிலிருந்து சட்டென விலகிக்கொள்ள வேண்டும். இல்லையேல் அல்லாஹ்வுடன் நாம் போர் செய்ய தயாராகிவிட்டோம் என்றே பொருளாகும்.


வட்டித் தொழிலை நிறுத்தி விட்டு பாவமன்னிப்புக் கோரி திருந்திக் கொண்டால், முதலுக்கு மோசம் வராது! அப்படியில்லாது வட்டியில் தொடர்ந்து கொண்டே இருந்தால், அழிவு வட்டிக்கு மட்டுமல்ல அசலுக்கும் வந்து விடும்! என்பது தான் இந்த வசனத்தின் மறைமுக எச்சரிக்கை.


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். வட்டித் தொழிலை விடாமல் அதில் தொடர்ந்து ஈடுபடுபவரிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும், வட்டியை விட்டு விடும்படியும் முஸ்லிம் ஆட்சியாளர் ஆணையிட வேண்டும். அதன் பிறகும் அவர் வட்டியில் ஈடுபட்டால் அவருடைய தலையைத் துண்டிக்க வேண்டும். (இதுவே வட்டி உண்போருக்குரிய தண்டனை) நூல்:- தஃப்சீர் இப்னுகசீர் அல்பகரா வசனம்-279


பொருளாதார சீரழிவு


வட்டி உண்போர் ஷைத்தான் தீண்டியதால் பைத்தியம் பிடித்தவன் எழுவதைப் போலன்றி (வேறுவிதமாக மறுமை நாளில்) எழ மாட்டார்கள். "வணிகம் என்பது வட்டியைப் போன்று தான்" என அவர்கள் கூறியதே இதற்குக் காரணமாகும். அல்லாஹ் வணிகத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துள்ளான்.  திருக்குர்ஆன்:- 2:275


பொருளாதார நிபுணர்கள் "பொருளாதார சீரழிவுக்கு அடிப்படைக் காரணம் வட்டி தான்" என்கிறார்கள்.


1983 ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டில் வங்கி வட்டி  2.63% ஆக இருந்தது. இந்த வட்டி விகிதம் மற்ற நாட்டின் வட்டி விகிதத்தை விட மிகவும் குறைவு. இதனால்   1983 ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் வேலையில்லா திண்டாட்டமும், வறுமையும் குறைந்தது.


வட்டி விகிதம் குறைவாக உள்ள நாட்டில் வறுமை விகிதமும் குறைவாக உள்ளது.


புதிய தொழில் ஆரம்பக்க, பழைய தொழிலில் முதலீடு செய்ய என பல நோக்கங்களுக்காக வட்டிக்கு கடன் வாங்கி, இந்த முதலை தொழிலில் போட்டு இரவு பகலாக அயராது பாடுபட்டு அதிலிருந்து வரும் இலாபத்தில் ஒரு பெரும் பங்கை வட்டியாக செலுத்தும் அவலநிலை ஏற்படுகிறது. கடுமையாக உழைத்தும் இதனால் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. எனவே தான் வட்டி என்ற அரக்கன் தொழில்துறையில் ஆர்வமும், திறமையும் உள்ளவர்களைச் செயல்படவிடாமல் முடக்கி விடுவதால் தொழில்துறையில் நசிவு ஏற்பட்டு வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுகிறது.


ஒரு கம்பெனி வட்டிக்கு வாங்கி முதலீடு செய்தால் அவ்வட்டியை பொருளின் விலையுடன் சேர்த்து எட்டு ரூபாய்க்கு விற்க வேண்டியதை, பத்து ரூபாய்க்கு விற்பதால் அதை வாங்கும் மக்கள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். வட்டியின் மூலம் தனி மனிதன் மட்டுமல்ல ஒரு சமுதாயமே பாதிக்கப்படுகிறது.


புது வீடு அல்லது புது வண்டி வாங்கியுள்ளேன் என்று சொல்பவர்களிடம் ஓன் வீடா அல்லது லோன் வீடா? என்றும், ஓன் வண்டியா அல்லது லோன் வண்டியா? என்று கேட்கும் அவலநிலை இருக்கிறது.


"அட்டிகை செய்வதற்கு வட்டிக்கு வாங்கினேன். வட்டியைக் கட்ட முடியாமல், அட்டிகையை விற்று வட்டியை கட்டினேன்" என்பது தமிழ் பழமொழி.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு சென்ற புதிதில் மதீனாவில் சிறுபான்மையினராக இருந்த இணைவைப்பாளர்கள் மற்றும் யூதர்களுடன் நல்லுறவுக்கான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். மதீனாவில் வாழும் ஒவ்வொரு சாராரும் தங்களின் மதத்தின்படி வாழ அனுமதிக்கப்பட்டனர். ஆனால் வட்டித் தொழில் புரிபவர்கள் மதீனாவில் தங்கி வாழ அனுமதிக்கப்படவில்லை.            நூல்:- கிதாபுல் ஃபதாவா


வட்டி சில நேரங்களில் நமது தேவைகளை நிறைவு செய்தாலும், சில சிரமங்களை குறைத்தாலும், சுமைகளை எளிதாக்கினாலும் இது மிகப்பெரிய கொடிய நோய் என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த கொடிய நோய் வாங்குபவரையும், கொடுப்பவரையும் அரித்துத் தின்றுவிடும்.


ஊதிப்போன உடலைப் போன்றது

அல்லாஹ் வட்டியை அழித்து தர்மங்களை வளர்க்கிறான்.   திருக்குர்ஆன்:- 2:276


(பிற) மனிதர்களின் செல்வங்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வமும்) பெருகுவதற்காக நீங்கள் வட்டிக்குக் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடம் பெருகுவதில்லை.    திருக்குர்ஆன்:- 30:39


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ( مَا اَحَدٌ اَکثَرَ مِنَ الرِّ بٰوا اِلاَّ کَانَ عَاقِبَةُ اَمرِه اِلیَ قِلَّةٍ ) வட்டியினால் அதிகரிக்கும் ஒருவனது செல்வம் இறுதியில் குறைந்து (அழிந்தே) விடுகிறது. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-2270, முஸ்னது அஹ்மது, தஃப்சீர் இப்னுகசீர் அல்பகரா வசனம்-276


வட்டியின் மூலம் சேகரிக்கப்படும் செல்வத்தின் காலம் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் தாண்டுவதில்லை என்கின்றனர் அறிஞர்கள்.


வட்டியின் மூலமாக செல்வம் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அதில் அல்லாஹ்வின் (பரக்கத்) அருள்வளம் அகற்றப்பட்டு விடுகிறது. வட்டியால் வளர்ச்சி அடைந்த செல்வம் ஊதிப்போன உடலைப் போன்றது.


அதாவது அதற்கு விரைவில் அழிவு வரப் போகிறது என்று பொருள். வட்டி என்பது மனித இரத்தத்தை உறிஞ்சி சேகரிக்கப்படும் செல்வமாக இருப்பதால் விஷக் கிருமிகள் அச்செல்வத்தில் நிறைய சேகரமாகி விடுகின்றன. எனவே அச்செல்வம் அழிவதோடு, அதனை சேகரித்து வந்தவனையும் அழித்து விடும்.


வட்டித் தொழில் புரிபவர்கள் செல்வம் கொளுத்த நிலையில் பெரும் மாளிகைகளில் மன அமைதியுடன் வாழ்வதைப் போல் காட்டிக் கொள்ளலாம். இதனை பிறர் நம்பும்படி அவர்கள் நடிக்கலாம். ஆனால் இவையெல்லாம் உண்மையில் வெறும் காணல் நீரையைப் போன்றாகும்.


வட்டித் தொழில் செய்பவன் இரவு பகல் முழுவதும் கணக்கு போட்டுக்கொண்டே இருப்பான். கையில் இருக்கும் தொகையை பொருளை திருடர்களிடமிருந்தும், அரசாங்கத்திடமிருந்தும், அதன் கெடுபிடியிலிருந்தும் பாதுகாப்பது எப்படி? வராத பாக்கிகளை வசூலிப்பது எப்படி? என்றெல்லாம் பல வகையான கவலைகள் அவனை வாட்டிக் கொண்டே இருக்கும்.


பலன் தரும் கடன்


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (کُلُّ قَرضٍ جَرَّ نَفعًا فَهُوَ الرِبٰوا  )  பயனைக் கொணரும் கடன்கள் யாவும் வட்டியாகும்.         நூல்:- பைஹகீ


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் யாருக்காவது கடன் கொடுத்து விட்டால் கடன் பெற்றவருடைய அன்பளிப்பை ஏற்க வேண்டாம். மேலும் அவருடைய வாகனத்தில் பயணிக்க வேண்டாம். ஆனால் ஏற்கனவே அவருடன் அன்பளிப்பை பரிமாறிக்கொள்ளும் நடைமுறை இருந்தால் பரவாயில்லை. (அவரின் அன்பளிப்பை ஏற்கலாம்)       அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-2423, பைஹகீ


உபையி பின் கஅப் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு தமது தோட்டத்தில் விளைந்த பழங்களை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்கள். அதனை உமர் (ரலி) அவர்கள் திருப்பி அனுப்பி விட்டார்கள். காரணம் உமர் (ரலி) அவர்கள் உபையி பின் கஅப் (ரலி) அவர்களுக்கு 10 ஆயிரம் திர்ஹங்கள் கடன் கொடுத்திருந்தார்கள். எனவே அனுப்பி வைத்த அந்த அன்பளிப்பு கடனுக்குரிய இலாபமாக (வட்டியாக) ஆகிவிடக்கூடாதே! என்று அஞ்சினார்கள்.


இதனால் வருத்தமுற்ற உபையி பின் கஅப் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் வந்து என் தோட்டத்தின் கனிகள் மதீனாவிலேயே மிகவும் சுவையானது என்பதை தாங்கள் அறிவீர்கள். அப்படியிருந்தும் தாங்கள் ஏன் இதனை மறுத்தீர்கள்? என்று கடுமையாக ஆட்சேபித்து இதனை தாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று வற்புறுத்தினார்


(இதற்கு முன்பே இவர்களுக்குள் அன்பளிப்பை பரிமாறிக் கொள்ளும் நடைமுறை இருந்ததால்) அதன் பிறகு தான் அந்த அன்பளிப்பை உமர் (ரலி) அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.


யஸீத் பின் ஹாரூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருநாள் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் வெயிலில் ஒரு வீட்டின் வாசல் அருகே அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களிடம் (அந்த வீட்டின்) நிழலுக்கு சென்று நீங்கள் அமரலாமே! என்றேன். அதற்கு இமாமவர்கள் அந்த வீட்டுக்குரியவர் என்னிடம் சில வெள்ளிக்காசுகள் கடன் வாங்கியுள்ளார். அதனால் அவர் வீட்டின் நிழலில் நான் அமர விரும்பவில்லை. (ஏனெனில் அது கூட வட்டியாகி விடுமே என்ற அச்சம் தான்) என்று பதிலளித்தார்கள்.        நூல்:- மளாஹிருல் ஹக்- 4/739


கடன் பெற்றவரிடம் கடனாகக் கொடுத்த தொகையைவிட சிறிதளவு கூடுதலாக வசூலித்தாலும், அதற்கு எந்த முறையை தேர்ந்தெடுத்தாலும் கூடாது. இதுவும் வட்டியேயாகும்.


இன்றைய நிலை


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لاَ يَبْقَى مِنْهُمْ أَحَدٌ إِلاَّ أَكَلَ الرِّبَا فَمَنْ لَمْ يَأْكُلْ أَصَابَهُ مِنْ غُبَارِهِ ) மக்களுக்கு இப்படி ஒரு காலம் வரும். அப்போது வட்டியை சாப்பிடாத யாரும் இருக்க மாட்டார்கள். அப்படியே (நேரடியாக) வட்டி சாப்பிடவில்லையானாலும் (மறைமுகமாக) அதனுடைய புழுதி அல்லது புகையாவது அவரை வந்து விடும்.  அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-, இப்னுமாஜா-2269


தற்போது எங்குப் பார்த்தாலும் அரசு மற்றும் தனியார் வங்கிகள், வட்டிக் கடை, அடகு பிடிக்கும் கடை, பவுன் புரோக்கர் என்ற பலகைகள் தான் மிதமிஞ்சிக் காணப்படுகிறது. வீடுகளில் பெண்கள்கூட வட்டித் தொழிலை ஆரம்பித்து விட்டனர். வட்டி பெரும் பாவம் என்று சொல்லிக் கொண்டாலும் இன்று வட்டியின்றி வணிகமில்லை என்றாகிவிட்டது. 


ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று வட்டி வசூலிப்பவர்கள் வருகை தராத அலுவலகமோ, தொழிற்சாலைகளோ கிடையாது என்று சொன்னால் மிகையாகாது. எத்தனையோ தொழிலதிபர்களும், செல்வந்தர்களும் வட்டியின் காரணமாக வறுமைக்கு ஆளாகி விடுவதை அன்றாடம் காண்கிறோம்.


தற்போது எந்த முஸ்லிமும் வங்கிகளை விட்டும் முற்றாக ஒதுங்கியிருப்பது சாத்தியமற்றதாக ஆகிவிட்டது. வங்கியின் அமைப்பு முழுவதும் வட்டியின் மீதே கட்டமைக்கப்பட்டுள்ளது.


வட்டியை மிக வெறுக்கக்கூடிய ஒருவர் பணம் எடுக்கவோ, போடவோ அல்லது ஏதேனும் தகவல் அறிந்து கொள்ளவோ வங்கி அல்லது (A.T.M.) பணம் எடுக்கும் மிஷின் உள்ள அறைக்குள் நுழையும்போது அங்கு சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறி அல்லது A/C யிலிருந்து வரும் குளிர்ந்த காற்று அவர் மீது படத்தான் செய்யும். அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சரியே!


அந்த குளிர்ந்த காற்று, அங்கு வைக்கப்பட்டிருக்கும் நாற்காலி, குடிநீர், எழுதுவதற்குரிய பேனா ஆகியவை வட்டியின் வருமானத்தின் மூலமே வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.


நமது நாட்டில் அரசு செய்யும் பெரும்பாலான வசதிகள் அதாவது சாலைகள், பாலங்கள் போன்றவை உலக வங்கியில் வட்டிக்கு கடன் வாங்கியே செய்கிறது. இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் உலக வங்கியிடம் பல கோடி ரூபாய் வட்டிக்கு கடனாக வாங்குகிறது. "வட்டியின் புகையாவது அவரை வந்து சேரும்" என்ற நபிமொழியின் பொருள் இப்போது விளங்குகிறது.


நிர்வாகிகள் கவனிக்க வேண்டும் 


அறியாமை காலத்தில் புனித கஅபாவின் சுவர்கள் பழுதடைந்து விட்டது. எனவே கஅபாவை இடித்து விட்டு புனரமைக்க வேண்டும் என குறைஷியர் முடிவு செய்தனர். அப்போது (அண்ணல் நபி - ஸல் அவர்களின் தந்தையின் தாய் மாமன்) அபூவஹ்பு பின் அம்ரு என்பவர் எழுந்து "குறைஷி குலத்தோரே! உங்களுடைய நல்ல சம்பாத்தியத்தைத் தவிர வேறு எந்த பொருளையும் கஅபாவின் கட்டிடப் பணிக்குப் பயன்படுத்தி விடாதீர்கள் வட்டிப் பணத்தையோ, மனைவியிடம் வலுக்கட்டாயமாக வாங்கிய (மஹரையோ) மணக்கொடையையோ இதில் பயன்படுத்தாதீர்கள்" என்று கூறினார்.


கஅபாவின் புனரமைப்புப் பணிக்காக நிதி திரட்டிய போது வட்டித்தொழில் செய்யாத குடும்பங்களிடம் மட்டுமே நிதி வசூலித்தனர். எனினும் அன்று மக்காவில் வட்டித்தொழில் செய்யாதோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால் கட்டியப் பணி முழுமை அடையவில்லை. அனைத்து சுவர்களையும் எழுப்புவதற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதால் கஅபாவின் பரப்பளவே குறைந்து அதனுடைய ஒரு பகுதி, சுவருக்கு வெளியே அமைய வேண்டிய நிலை ஏற்பட்டது. அது தான் தற்போது ஹத்திம் அல்லது ஹிஜ்ரு இஸ்மாயீல் என்று அழைக்கப்படுகிறது.          நூல்:- சீரத் இப்னு ஹிஷாம்


அன்று குறைஷியர் பெரும்பாலோனர் இணைவைப்பாளர்களாக இருந்தும்கூட புனித ஆலயத்தின் புனரமைப்புப் பணியில் தவறான வழியில் கிடைத்த பொருட்கள் கலந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்துள்ளனர்.


பள்ளிவாசல், மதரசா, கப்ருஸ்தான் ஆகியவை கட்டுவதற்கு அதனை நிர்வகிப்பதற்கு  வட்டிப் பணத்தை பயன்படுத்தக் கூடாது என்பது மார்க்கச் சட்டம்.   நூல்:- ஃபதாவா ஆலம்கீரி 5/349


ஆனால் இப்பொழுது பள்ளிவாசலுக்காக சந்தாவோ, நன்கொடையோ வசூல் செய்யும் சில நிர்வாகிகள் பணம் கிடைத்தால் போதுமென்று எண்ணி, வட்டி வாங்குவதையே தம் தொழிலாக ஆக்கிக் கொண்டவர்களிடமும் உதவிப் பெற்றுக் கொள்கின்றனர். இப்படி செய்வது தடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பள்ளிவாசல் அல்லாஹ்வுடைய வீடாகும். வட்டிப் போன்ற தடுக்கப்பட்ட தொழில் செய்பவர்களிடம் உதவி பெற்று அதனால் அல்லாஹ்வுடைய வீட்டை அசுத்தப்படுத்துவது மாபெரும் குற்றமாகும்.


வட்டி பணத்தின் மூலமாக பள்ளிவாசல்களில் கழிப்பறை கூட கட்டக்கூடாது என்பது மார்க்கச் சட்டம். எனவே பள்ளிவாசல் நிர்வாகிகள் இந்த விஷயத்தில் மிகவும் பேணுதலாக இருக்க வேண்டும்.


அடமானப் பொருள் 


1887 ம் ஆண்டு தியோடர் ஹெசில் என்ற யூதனின் தலைமையில் ஒரு குழு அன்றைய இஸ்லாமிய உலகின் (கலீபாவாக) ஜனாதிபதியாக இருந்த சுல்தான் அப்துல் ஹமீது என்பவரிடம் வந்து நாங்கள் நிறைய பணம் தருகிறோம். பலஸ்தீனில் ஒரு பகுதியை எங்களுக்கு தாருங்கள் என்று கோரினர். அதற்கு இஸ்லாமிய ஜனாதிபதி மறுத்து விட்டார்.


ஜனாதிபதியிடம் தம் முயற்சி தோற்றவுடன் பலஸ்தீனில் வாழ்ந்த ஏழை விவசாயிகளின் பக்கம் அவர்கள் கவனம் சென்றது. அந்த விவசாயிகளுக்கு உதவுவது போல் நடித்து, விவசாயிகளின் வீட்டை அடமானம் வைத்து, அளவுக்கு மீறி வட்டிக்கு கடன் கொடுத்தனர். வீடு வட்டியில் மூழ்கிய போது அதை தங்களுக்கு சொந்தமாக்கினர். இவ்வாறு தான் யூதர்கள் பலஸ்தீனில் கொஞ்ச கொஞ்சமாக நுழைந்து தமது குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர்.


ஒருவர் மூன்று இலட்சத்தைப் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட இத்தனை ஆண்டுகளுக்கு என்னுடைய இந்த வீட்டை (Lease) அடமானத்திற்கு விடுகிறேன் என்று எழுதி கொடுத்து விடுவார். பணத்தை கொடுத்தவர் அந்த வீட்டில் இருந்து கொள்வார். ஆனால் வாடகை கொடுக்க மாட்டார். பணத்தை வாங்கியவர் அதைத் தமது தேவைக்கு பயன்படுத்திக் கொள்வார். குறிப்பிட்ட ஆண்டுகள் முடிவடைந்து அப்பணத்தை அப்படியே கொடுத்தப்பின் அடமானத்திற்கு இருந்தவர் காலி செய்து விடுவார். இது இன்றைய நடைமுறை. வீடு, கடை, நிறுவனம் என்று எல்லாவற்றிலும் இது தொடர்கிறது.


மூன்று இலட்சத்திற்கு பிடிமானமாக வழங்கப்பட்டது தான் அந்த வீடு. அந்த வீடு நம்முடைய பாதுகாப்பில் இருக்க வேண்டுமே தவிர, நாம் அதை பயன்படுத்தக் கூடாது. பிடிமானமாக வழங்கப்பட்ட பொருளை பயன்படுத்துவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.


கொடுக்கப்பட்ட பணத்தை கடனாகவே இஸ்லாம் கருதுகிறது. எனவே கடன் கொடுத்தவர் அந்த வீட்டை பயன்படுத்தும் அந்த பயன்பாடு வட்டியாகவே கருதப்படும். ஆகவே இந்த முறை கூடாது. நூல்:- ஜதீத் ஃபிக்ஹ் மசாயில்


எனவே வீடு வாங்குவது மற்றும் கொடுப்பதில் மாதமாதம் ஒரு நடுத்தர தொகையை வாடகை என வாங்கினால் கூடும். அல்லது வாடகை என கொடுத்து விட்டால் ஆகுமானதாகும். இல்லையெனில் ஒத்திக்கு வீடு வாங்குவதும், கொடுப்பதும் கூடாது. அது வட்டியைப்போல் ஆகிவிடும்.


கடன் அட்டை


வங்கியில் வழங்கப்படும் (Credit Card எனும்) கடன் அட்டையைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அப்போது நமது வங்கி கணக்கில் பணம் இருக்க வேண்டிய அவசியமில்லை. 30 அல்லது 40 நாட்கள் என்று வங்கி நமக்கு வழங்கும் காலத் தவணைக்குள் நாம் வாங்கிய பொருட்களுக்கான பணத்தை வங்கியில் செலுத்தி விட்டால் வட்டி செலுத்த வேண்டியதில்லை. நமக்கு வழங்கப்பட்ட காலத்தவணை கடந்து விட்டால் அது ஒரு நாளாக இருந்தாலும் சரியே! நாம் வாங்கிய கடனுடன் வட்டியும் செலுத்தியாக வேண்டும்.


1970 ம் ஆண்டு இந்த கடன் அட்டை புழக்கத்தில் வந்தது. இதை பயன்படுத்துவதை இஸ்லாம் முற்றிலுமாக  (ஹராம் என்று) தடை செய்துள்ளது. காரணம் என்னவென்றால் இந்த கடன் அட்டையை பெறுவதற்கு நாம் நிரப்பிக் கொடுக்கும் விண்ணப்பப் படிவத்தில் "உரிய காலத்திற்குள் பணத்தை செலுத்தாவிட்டால் அதற்கான வட்டியை செலுத்த சம்மதிக்கிறேன்" என்ற நிபந்தனையும் உள்ளது. அதற்கு இசைந்து தான் ஒவ்வொருவரும் கைய்யொப்பமிடுகிறார்கள். எனவே ஒருவர் வட்டி கொடுக்க மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறார் என்று தான் பொருள். ஆகவே தான் இந்த Credit Card  எனும் கடன் அட்டை பயன்படுத்துவதை இஸ்லாம் தடுத்துள்ளது.


வட்டியின் நோக்கத்துடன் தான், வங்கி இந்த கடன் அட்டையை கூவிக்கூவி அழைத்து வீடு தேடி வந்து இதை தருகிறோம் என்கிறது. மாறாக மக்களின் அவசரத்திற்கு கடன் கொடுத்து உதவுவது வங்கியின் நோக்கமல்ல.


விசா கார்டு, மாஸ்டர் கார்டு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு என்று பல பெயர்களில் இருக்கும் இந்த கடன் அட்டைகளை பெரும்பாலும் பணக்காரர்கள் மற்றும் கை நிறைய சம்பாதிப்பவர்கள் மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள்.


இந்த கடன் அட்டை தன்னிடம் இருப்பதையும், பொருள் வாங்குவதற்கு பணமே இருந்தாலும் கூட அதை கொடுத்து பொருள் வாங்காமல் இந்த கடன் அட்டையை பயன்படுத்தி பொருள் வாங்குவதையே பெருமையாக கருதுகின்றனர். சுருங்கக்கூறின் வங்கிக்கு கடனாளியாகவே வாழ்வதை விரும்புகின்றனர். இந்த கடன் அட்டையை பெரும்பாலும் கஷ்டப்படும் ஏழைகள் பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கடன்பட்டவன் எவ்வளவு தான் கஷ்டத்தில் உழன்று கொண்டிருந்தாலும், தனது கடனையும், வட்டியையும் எப்படியாவது கடன்பட்டவனைக் கசக்கிப் பிழிந்து கறக்கத்தான் பார்ப்பார்களே தவிர, பொறுத்துக் கொள்ளலாம், விட்டுக் கொடுக்கலாம் என்ற சிந்தனை அறவே இருப்பதில்லை.


ஆபாச வாரத்தைகள் பேசி, உருட்டி, மிரட்டி, பயப்பட வைத்து பணம் வசூலிக்க முயற்சிப்பார்கள். பணம் வராது எனத் தெரிந்தால் கடன்பட்டவன் வீட்டிலுள்ள தட்டுமுட்டுச் சாமான்கள் கிடைத்தாலும் பறித்துக்கொண்டு செல்லவே எண்ணுவார்கள். இதனால் தான் இரக்கமற்ற வட்டி எனும் அரக்கனுடன் தொடர்பு கொள்வதை இஸ்லாம் விரும்புவதில்லை.


வங்கியின் வட்டிப் பணம்


கடந்த 60 ஆண்டுகளாக இந்திய முஸ்லிம்களின் ஏறக்குறைய 75 ஆயிரம் கோடி ரூபாய் வட்டிப் பணம் கேட்பாரற்று முஸ்லிம்களால் நிராகரிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் வங்கிகளில் முடங்கிக் கிடக்கிறது. கேரளாவில் மட்டும் 45 ஆயிரம் கோடி ரூபாய் முடங்கிக் கிடப்பதாக மத்திய வங்கி வெளியிட்ட -RBI Legal News and Views  என்ற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபோது முஸ்லிம்களால் வங்கியின் வட்டிப் பணம் நிராகரிக்கப்பட்டதால் அதன்மூலம் தேவாலயம் (சர்ச்) கட்டப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது. இந்நிலையைக் கண்ட பின்னர் அன்றைய இந்திய மார்க்க அறிஞர்கள் எக்காரணம் கொண்டும் வட்டிப் பணத்தை வங்கியில் விட்டு வைக்கக் கூடாது என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கினர். நூல்:- பேங்க் இன்சூரன்ஸ் அவ்ர் சர்காரீ கர்ளா


வங்கியில் உள்ள வட்டிப் பணத்தை எடுக்காமல் விட்டு விட்டால், அந்த வட்டி நிர்வாகத்திற்கு மேலும் உதவி புரிவதாக ஆகிவிடும். இவ்வாறு உதவி புரிவது பாவமான செயலாக இஸ்லாம் கருதுகிறது. ஆகவே அடிக்கடி வங்கியில் உள்ள கணக்குகளை கண்காணித்து அதில் வந்து சேரும் வட்டிப் பணத்தை உடனுக்குடன் எடுத்து, நன்மை கருதாமல் ஏழைகளுக்கு கொடுத்துவிட வேண்டும். இதற்கு தர்மத்தின் நன்மைகள் கிடைக்காது. இதனை தனக்காக பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தை அரசு விதிக்கும் சில வரிகளுக்கு பயன்படுத்தலாம்.


அநியாயமான வரிகளுக்கு


நமது நாட்டில் வரி என்பது இரண்டு வகைப்படும். 1) ஜிப்ரீ எனும் நிர்பந்த வரி 2) வாஜிப் எனும் அவசியமான வரி.


அரசு விதிக்கும் வருமான வரி, விற்பனை வரி, பிறப்பு வரி, இறப்பு வரி போன்ற மார்க்கத்தில் கூறப்படாத அநியாயமான வரிகள் தான் ஜிப்ரீ எனும் நிர்பந்த வரி என்பதாகும். எனவே இந்த வரிகளுக்கு அரசு வங்கியிலிருந்து பெறப்பட்ட வட்டிப் பணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் நிர்பந்தமான நிலையில் வட்டியுடன் கடன் வாங்க நேரிட்டால் அந்த வட்டியை அடைக்க நமக்கு வங்கியிலிருந்து வழங்கப்பட்ட வட்டிப் பணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.


வீட்டு வரி, தண்ணீர் வரி, கழிப்பறை வரி, மின் கட்டணம், வண்டிக்கு இன்ஷூரன்ஸ் கட்டணம் போன்றவை வாஜிப் எனும் அவசியமான வரி என்பதாகும். இந்த வகையான வரிகள் கண்டிப்பாக நாம் செலுத்த வேண்டிய நம் மீது கடமையான ஒன்றாகும். எனவே இவற்றுக்கான கட்டணங்களுக்கு வட்டிப் பணத்தை பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்திவிட்டால் வட்டிப் பணத்தை நாமே பயன்படுத்தியது போல் ஆகிவிடும்.              நூல்:- இம்தாதுல் ஃபதாவா 3/173, ஜதீத் ஃபிக்ஹ் மசாயில்


பொது நிதி வேண்டும்


ஹிஜ்ரி 23 ம் ஆண்டு ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் வந்து, தான் வியாபாரம் செய்ய போவதாகக் கூறி கடன் கேட்டார். ஜனாதிபதி அவர்கள் அப்பெண்ணுக்கு பைத்துல்மால் எனும் பொது நிதியிலிருந்து 4000 தீனார்கள் (தங்கக்காசுகள்) கடன் கொடுத்தார்கள். அப்பெண் அதைப் பெற்றுக் கொண்டு "கல்ப்" என்ற ஊருக்கு சென்று வணிகம் செய்து பொருளீட்டி வந்தார்.      நூல்:- முவத்தா மாலிக், தாரீகுத் தபரீ


வட்டித் தொழிலால்  மக்களுக்கு ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள், அதனால் மறுமையில் கிடைக்க போகும் தண்டனைகள் ஆகியவற்றை திருக்குர்ஆன், நபிமொழிகள், வரலாற்றுச் செய்திகள், தற்காலச் சூழ்நிலைகள் மிகத் தெளிவாக விவரிக்கிறது.


எனவே வட்டியை ஒழிப்பதற்கு ஓரே தீர்வு ஏழைகளுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற பொதுநல சிந்தனையுடன் ஒவ்வொரு ஊர்கள் தோறும் பைத்துல்மால் எனும் பொது நிதி, சிறுசேமிப்புத் திட்டம், வட்டியில்லாக் கடன் வழங்கும் அறக்கட்டளைகள் உருவாக்க வேண்டும். மேலும் இஸ்லாமிய வங்கி முறை பரவலாக்கப்பட வேண்டும் இதற்கு முஸ்லிம் செல்வந்தர்கள் மனத்தூய்மையுடன் முயற்சிக்க வேண்டும்.


நாம் வட்டி என்ற கொடிய பாவத்திலிருந்து முழுமையாக விலகி, நல்லவர்களாக வாழ அல்லாஹ் அருள்பாலிப்பானாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர் அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 



No comments:

Post a Comment

வணக்கசாலியாக இருந்தால் போதுமா?

  வணக்கசாலியாக இருந்தால் போதுமா?   وَلَا يَأْتُونَ الصَّلَاةَ إِلَّا وَهُمْ كُسَالَى (நயவஞ்சகர்களான) அவர்கள் சடைந்தவர்களாகவே தொழுகைக்க...