Search This Blog

Friday, 2 October 2026

பெரியவங்க சொன்னால் கேட்கணும்

 

பெரியவங்க சொன்னால் கேட்கணும்

 

يَا بُنَيَّ ارْكَبْ مَعَنَا وَلَا تَكُنْ مَعَ الْكَافِرِينَ قَالَ سَآوِي إِلَى جَبَلٍ يَعْصِمُنِي مِنَ الْمَاءِ

(இறைத்தூதர் நூஹ் - அலை அவர்கள்), "என் அருமை மகனே! எங்களுடன் (இறைநம்பிக்கை கொண்டு) நீயும் இதில் ஏறிக்கொள். (எங்களை விட்டு விலகி) இறைமறுப்பாளர்களுடன் நீ இருக்க வேண்டாம். (அவ்வாறாயின், நீயும் நீரில் மூழ்கிவிடுவாய்)" என்று (சப்தமிட்டு) அழைத்தார். அதற்கு அவன், "இந்த வெள்ள(ப் பிரளய)த்திலிருந்து என்னைக் காப்பாற்றக்கூடிய ஒரு மலையின் மேல் நான் சென்று விடுவேன்" என்று கூறினான். திருக்குர்ஆன்:- 11:42,43

 

மனித சமுதாயத்தில் ஒழுக்கமும், பண்பாடும் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுவதற்குப் பெரியவர்களே முக்கியக் காரணம். நம்மைவிட வயதிலும், அறிவிலும், அனுபவத்திலும் மூத்தவர்கள் கூறும் அறிவுரைகள், வாழ்க்கைப் பயணத்தில் நமக்குக் கிடைக்கும் மிகச்சிறந்த வழிகாட்டுதல்கள் ஆகும்.

 

பெரியோர்களை மதிப்பதும், அவர்கள் சொல்வதைக் கேட்பதும் நமது ஒழுக்கத்தையும் நற்பண்பையும் வெளிப்படுத்தும். பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது ஒரு மனிதனை முழுமையான நல்வழிக்குக் கொண்டு செல்லும்.

 

புத்தகங்கள் நமக்கு அறிவைத் தரலாம், ஆனால், வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை அனுபவம் மட்டுமே கற்றுத்தரும். பெரியவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல இன்ப துன்பங்கள், வெற்றிகள், தோல்விகள் மற்றும் ஏமாற்றங்களைச் சந்தித்தவர்கள். அவர்கள் கடந்து வந்த பாதையில் உள்ள முட்களையும், கற்களையும் பற்றி நமக்கு முன்கூட்டியே எச்சரிக்கிறார்கள்.

 

நாம் ஒரு தவறைச் செய்து அதில் இருந்து பாடம் கற்பதைவிட, பெரியவர்களின் அனுபவத்தில் இருந்து அதைக் கற்றுக்கொள்வது நம் நேரத்தையும், வாழ்க்கையையும் மிச்சப்படுத்தும்.

 

வெள்ளத்தில் மாண்டான்

 

அல்லாஹுத்தஆலா, "நூஹ் (அலை) அவர்களே! உலகம் முழுவதையும் தண்ணீரால் அழிக்கப்போகிறேன். எனவே, நீங்கள் ஒரு கப்பல் ஒன்றை தயாரித்து அதில் ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்களையும் உலகில் உள்ள பிற உயிரினங்களிலிருந்து ஒவ்வொரு ஜோடிகளையும்  ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று அறிவித்தான்.

 

அதன்படி நூஹ் (அலை) அவர்கள் ஓர் பிரமாண்டமான கப்பலை கட்டி முடித்து ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்களையும் மற்றும் பிற உயிரினங்களையும் ஏற்றினார்கள். பிறகு தமது மகனிடம், "நீயும் இறைநம்பிக்கை கொண்டு இந்தக் கப்பலுக்குள் ஏறிக்கொள்! எதிர்வரும் பெரும் வெள்ளப்பிரளயத்திலிருந்து உன்னை தற்காத்துக் கொள்!" என்று அறிவுரை கூறினார்கள். 

 

ஆனால், அவன் இறைமறுப்புக் கொள்கையில் பிடிவாதமாக இருந்த காரணத்தால் தமது தந்தையின் சொல்லை ஏற்க மறுத்தவனாக, ஏற்பட இருக்கும் வெள்ளப் பிரளயத்திலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள ஒரு பெரிய மலையின் உச்சிக்கு ஏறி சென்றுவிடுவேன்" என்று குதர்க்கம் பேசினான். ஆனால், அவன் அந்த வெள்ளத்தில் மாண்டான். இதுகுறித்தே தலைப்பில் காணும் திருவசனம் கூறுகிறது.

 

சில சமயங்களில் பெற்றோர்கள், பெரியவர்கள் சொல்லை மீறி செயல்படும்போது அதனால் ஏதேனும் விளைவுகள் ஏற்படலாம். ஏற்பட்ட அந்த விளைவுகளுக்கு ஈடுகட்டு முடியாமல் போய்விடலாம். பிறகு வருந்துவதினால் பயனில்லை.

 

வயதில், அனுபவத்தில், மார்க்க அறிவில் மூத்தவர்கள் சொல் கேட்டு நடப்பது  மிகுந்த பயனைத் தரும்.

 

ஏற்றதால் ஈடேற்றம்

 

ஃபாத்திமா பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரலி) அவர்களும், அபூஜஹ்ம் பின் ஹுதைபா (ரலி) அவர்களும் என்னை பெண் கேட்கின்றனர்" என்று சொன்னேன்.

 

அதற்கு அண்ணலார்,  ( أَمَّا أَبُو جَهْمٍ فَلاَ يَضَعُ عَصَاهُ عَنْ عَاتَقِهِ وَأَمَّا مُعَاوِيَةُ فَصُعْلُوكٌ لاَ مَالَ لَهُ انْكِحِي أُسَامَةَ بْنَ زَيْدٍ  )  "அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்க மாட்டார். (கோபக்காரர் மனைவியைக் கடுமையாக அடித்து விடுபவர்) முஆவியா அவர் ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்துகொள்!" என்று கூறினார்கள். நானும் அவ்வாறு அவரை மணந்துகொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன். நூல் முஸ்லிம்-2953, நசாயீ-3193

 

படிப்பு, வேலை,  தொழில்துறை, திருமணம் போன்றவற்றில் பெற்றோர் அல்லது அது சார்ந்த பெரியவர்களிடம் ஆலோசனை கேட்பதும், அது குறித்து அவர்கள் கூறும் அறிவுரைகளை ஏற்று நடப்பதும் மிகவும் நல்லது.

 

ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்ற குழப்பம் வரும்போது, பெரியவர்களின் ஆலோசனை நமக்குத் தெளிவான பாதையைக் காட்டும்.

 

கூட்டுக்குடும்ப முறை சிதைந்து வரும் இன்றைய சூழலில், பெரியவர்களின் அரவணைப்பும் ஆலோசனையும் குழந்தைகளுக்குக் கிடைக்காமல் போவது மிகப்பெரிய இழப்பாகும்.

 

அவசர உலகத்தில் பொறுமையிழந்து எடுக்கும் முடிவுகளால் பல இளைஞர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். பெரியவர்களிடம் மனம் விட்டுப் பேசினாலே பாதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும்.

 

முரட்டுத்தனம் நீடித்தது

 

முஸய்யிப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது. என் தந்தை (ஹஸ்ன் பின் அபீவஹப் - ரலி அவர்கள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபியவர்கள், ( مَا اسْمُكَ ) "உங்கள் பெயரென்ன?" என்று வினவினார்கள். அவர், "ஹஸ்ன்" (முரடு) என்று கூறினார். நபியவர்கள், ( أَنْتَ سَهْلٌ ) “(இல்லை) நீங்கள் இனிமேல் சஹ்ல் (மென்மை)" என்று கூறினார்கள். அவர், ( لاَ أُغَيِّرُ اسْمًا سَمَّانِيهِ أَبِي ) "என் தந்தை சூட்டிய பெயரை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன்" என்றார். அதற்குப் பின்பு எங்கள் குடும்பத்தாரிடையே (அவருடைய குண நலங்களில்) முரட்டுத்தனம் நீடித்தது. நூல்:- புகாரீ-6190, அபூதாவூத்-4305

 

இன்று பலர் பெரியவர்கள் சொல்வதைக் கேட்பதை ஒரு சுமையாகவோ அல்லது தங்கள் சுதந்திரத்தில் தலையிடுவதாகவோ நினைக்கிறார்கள். ஆனால், பெரியவர்கள் சொல்வதைக் கேட்பது கீழ்ப்படிதல் மட்டுமே அல்ல; அது அவர்களின் அன்பையும், அக்கறையையும் புரிந்துகொண்டு, அவர்களுக்கு நாம் தரும் மரியாதை ஆகும். அவர்கள் நம் நலம் விரும்பிகள் என்பதை நாம் உணர வேண்டும்.

 

காற்று தூக்கிச் சென்றது

 

அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களுடன் தபூக் போருக்குச் சென்றோம். நாங்கள் தபூக்கை அடைந்தபோது நபியவர்கள், ( أَمَا إِنَّهَا سَتَهُبُّ اللَّيْلَةَ رِيحٌ شَدِيدَةٌ فَلاَ يَقُومَنَّ أَحَدٌ، وَمَنْ كَانَ مَعَهُ بَعِيرٌ فَلْيَعْقِلْهُ )  “இன்றிரவு கடும் காற்று வீசும்; எனவே, யாரும் எழுந்திருக்க வேண்டாம். ஒட்டகம் வைத்திருப்பவர் அதை நன்கு கட்டிவைக்கட்டும்” எனக் கட்டளையிட்டார்கள். நாங்களும் ஒட்டகங்களைக் கட்டிப்போட்டோம்.

 

கடும் காற்று வீசத் தொடங்கிற்று. (நபியவர்களின் கட்டளையை மீறியவராக) ஒரு மனிதர் எழுந்து வந்தார். உடனே காற்று அவரை ‘தய்யி’ என்ற மலையில் கொண்டுபோய் போட்டுவிட்டது. நூல்:- புகாரீ-1481

 

இந்த பெருசுகளுக்கு என்ன தெரியும்? அவர்கள் காலத்து கதைகளைத்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இன்று உலகம் போகின்ற வேகத்திற்கு அவர்களின் ஆலோசனைகள் ஒத்து வராது என்ற மனநிலை மிகவும் மோசமானது.

 

இளமைப் பருவத்தில் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் பல நேரங்களில் தவறாக முடிவதுண்டு. அதுபோன்ற நேரங்களில் பெரியவர்களின் நிதானமான வழிகாட்டுதல் நம்மைத் தவறான பாதையில் செல்வதைத் தடுத்து, ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கும்.

 

பெரியவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல இன்ப துன்பங்களைச் சந்தித்து, அதில் இருந்து பல உண்மைகளைக் கற்றுக்கொண்டவர்கள். அவர்கள் கடந்து வந்த பாதையைத்தான் நமக்கு அறிவுரையாகச் சொல்கிறார்கள். எனவே, அவர்கள் சொல்வதைக் கேட்பது நம்முடைய குறுகிய கால அனுபவத்தைவிட, அவர்களின் நீண்ட கால அனுபவத்தைப் பயன்படுத்திக்கொள்ள உதவும்.

 

தொழுநோயாளியாக ஆனார்

 

உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான ஃபர்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் உணவுப் பொருள்களை கொண்டு வந்து வைத்துவிட்டு, "ஜனாதிபதி அவர்களே! இந்த உணவுப்பொருள் பதுக்கல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது" என்று கூறப்பட்டது. உமர் (ரலி) அவர்கள், "இதை பதுக்கி வைத்திருந்தவர் யார்?" என்று வினவினார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை ஃபரூக்கும், உமர் (ரலி) அவர்களின் (அதாவது தங்களின்) இன்ன அடிமையும் தான் (இவ்வாறு செய்தனர்)" என்று மக்கள் கூறினர்.

 

உடனே உமர் (ரலி) அவர்கள் எங்கள் இருவரிடமும் ஆளனுப்பி, எங்களை வரவழைத்தார்கள். பிறகு எங்களிடம், ( مَا حَمَلَكُمَا عَلَى احْتِكَارِ طَعَامِ الْمُسْلِمِينَ ) "நீங்கள் இருவரும் முஸ்லிம்களுக்குரிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்க காரணம் என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், ( يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ نَشْتَرِي بِأَمْوَالِنَا وَنَبِيعُ ) "ஜனாதிபதி அவர்களே! நாங்கள் எங்கள் காசுகளைச் செலவிட்டு வாங்குகிறோம். பிறகு அவற்றை விற்கிறோம். (இதில் பதுக்கல் செய்தால் தவறென்ன?)" என்று கேட்டோம்.

 

அதற்கு உமர் (ரலி) அவர்கள், ( سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ احْتَكَرَ عَلَى الْمُسْلِمِينَ طَعَامَهُمْ ضَرَبَهُ اللَّهُ بِالْإِفْلَاسِ أَوْ بِجُذَامٍ ) "முஸ்லிம்களின் உணவு பொருள்களை அவர்களுக்கு கிடைக்காமல் பதுக்கல் செய்பவரை திவாலாக்குவதின் மூலம் அல்லது தொழுநோயின் மூலம் அல்லாஹ் தண்டிப்பான் என அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்று கூறினார்கள்.

 

நான் இதைக் கேட்டவுடன், ( يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أُعَاهِدُ اللَّهَ وَأُعَاهِدُكَ أَنْ لَا أَعُودَ فِي طَعَامٍ أَبَدًا ) "ஜனாதிபதி அவர்களே! இனிமேல் நான் உணவுப் பொருள்களை பதுக்க மாட்டேன் என்று அல்லாஹ்விடம் உறுதியளிக்கிறேன் தங்களிடமும் உறுதியளிக்கிறேன்" என்றேன். உமர் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையோ (மீண்டும்) நாங்கள் எங்கள் காசுகளைச் செலவிட்டு வாங்குகிறோம். பிறகு அவற்றை விற்கிறோம். (இதில் பதுக்கல் செய்தால் தவறென்ன?)" என்று கேட்டார்.

 

(இந்த நபிமொழி அறிவிப்பாளர்களுள் ஒருவரான) அபூ யஹ்யா அல்மக்கீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( فَلَقَدْ رَأَيْتُ مَوْلَى عُمَرَ مَجْذُومًا )  (மேற்கண்டவாறு வீண்வாதம் பேசிய) உமர் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையை(ப் பிற்காலத்தில்) நான் தொழுநோயாளியாகக் கண்டேன். நூல்:- முஸ்னது அஹ்மத்-130, தஃப்சீர் இப்னு கஸீர் அல்பகரா வசனம்-276

 

குர்ஆன் மற்றும் நபிமொழிகள், "இன்னின்ன பாவங்களை செய்தால் இன்னின்ன நோய்களையும் சோதனைகளையும் அனுபவித்து தான் ஆக வேண்டும்" என்று கூறினால், அதற்கு கட்டுப்பட்டு, தவிர்ந்து வாழ முயற்சிக்க வேண்டும். மார்க்க அறிவுரைகளுக்கு கட்டுப்பட முடியாது. விளைவுகள் வந்தால் பார்த்துக்கொள்வோம் என்ற மனநிலை மிகவும் மோசமானது. அதன் பிறகு விளைவுகள் வந்தவுடன் அய்யகோ! போச்சே! என்ற அலறுவது அர்த்தமற்றது.

 

இன்றைய நவீன காலகட்டத்தில், தொழில்நுட்ப வளர்ச்சியால் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பெரியவர்களின் சொற்களைக் கேட்பது குறைந்து வருகிறது. அவசர முடிவுகளை எடுக்கும் முன் பெரியவர்களிடம் ஆலோசனை கேட்பது, அந்த முடிவுகளில் ஏற்படும் தவறுகளைத் தவிர்க்க உதவும்.

 

பள்ளிவாசலை விட்டுப் போகாதே!

 

அப்துர் ரஹ்மான் பின் ஹர்மலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் ஹஜ் அல்லது உம்ராவிற்குச் செல்வதற்காக சஈத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களிடம் கூறி விடை பெறுவதற்காக வந்திருந்தார். (அப்போது சஈத் அவர்கள் பள்ளிவாசலில் இருந்தார்கள்) சஈத் (ரஹ்) அவர்கள் அந்த மனிதரிடம், ( لَا تَبْرَحْ حَتَّى تُصَلِّيَ ) "(பாங்கு சொல்லப்பட்டுவிட்டது) நீர் தொழுகும் வரை பள்ளிவாசலை விட்டு வெளியேறாதீர்.  

 

ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ( لَا يَخْرُجُ بَعْدَ النِّدَاءِ مِنَ الْمَسْجِدِ إِلَّا، مُنَافِقٌ، إِلَّا رَجُلٌ أَخْرَجَتْهُ حاجةُ، وَهُوَ يُرِيدُ الرَّجْعَةَ إِلَى الْمَسْجِدِ )  'தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டபின் பள்ளிவாசலை விட்டு நயவஞ்சகனைத் தவிர வேறெவரும் வெளியேற மாட்டார்கள்; (அவசியமான) ஏதேனும் அலுவல் நிமித்தம் உடனடியாகப் பள்ளிவாசலுக்கு திரும்பிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் வெளியேறுபவரைத் தவிர' என்று கூறியுள்ளார்கள்" என்றார்கள்.

 

அந்த மனிதர், "என் சகாக்கள் 'அல்ஹர்ரா'வில் இருக்கிறார்கள். (அவர்களை நான் சென்றடைய வேண்டும்)" என்று கூறிவிட்டு, புறப்பட்டுச் சென்றார். சஈத் (ரஹ்) அவர்கள் அந்த மனிதரைப் பற்றியே நினைத்து (விசாரித்து)க் கொண்டிருந்தார்கள். முடிவில் அவர் தம் வாகனத்திலிருந்து விழுந்து அவரது தொடை எலும்பு முறிந்துவிட்டது என்று செய்தி தெரிவிக்கப்பட்டது. நூல்:- தாரிமீ, ஸஹீஹுல் குத்பித்திஸ்ஆ வஸவாயிதுஹு-321

 

மார்க்க அறிஞர்கள் மற்றும் பெரியவர்கள் சொல்வதைக் கேட்பது நம் பண்பாட்டின் அடித்தளம், வாழ்க்கையின் வழிகாட்டி மற்றும் வெற்றிக்கான திறவுகோல் ஆகும். "பெரியோர் சொல் வார்த்தை அமிர்தம்" என்ற பழமொழிக்கு ஏற்ப, மூத்தோர்களின் அறிவுரைகள் நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்தும் உன்னதமான மருந்தாகும். இது ஒருவருக்கு நல்ல பெயரையும், மரியாதையையும் பெற்றுத்தரும்.

 

இன்றைய தொழில்நுட்ப உலகில், கூகுள் (Google) மற்றும் இணையதளங்களில் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில்கள் கிடைத்துவிடுவதாக இளைய தலைமுறையினர் நினைக்கிறார்கள். ஆனால், இணையம் உங்களுக்குத் தகவல்களை மட்டுமே தரும். வாழ்க்கைக்குத் தேவையான 'விவேகத்தை' (Wisdom) தராது.

 

"மூத்தோர் சொல் வார்த்தை அமுதத்தூணாகும்" என்பார்கள். பெரியவர்கள் சொல்வதைக் கேட்பது என்பது நமது முன்னேற்றத்திற்கான அடித்தளம். அவர்களின் பிரார்த்தனையும் அறிவுரையும் என்றும் நம்மை வாழவைக்கும் கவசமாகும். அவர்கள் காட்டிய நல்வழியில் நடந்து, அவர்களின் அனுபவங்களை நம் முன்னேற்றத்திற்கான படிக்கட்டுகளாக மாற்றிக்கொள்வதே புத்திசாலித்தனமாகும்.

 

மூத்தோர் முதியோர் கூறும் அனுபவங்களை உள்வாங்கி, செயலாற்றும் அழகிய பண்பை அல்லாஹுத்தஆலா  நமக்கு வழங்கி அருள்புரிவானாக!  ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

No comments:

Post a Comment

பெரியவங்க சொன்னால் கேட்கணும்

  பெரியவங்க சொன்னால் கேட்கணும்   يَا بُنَيَّ ارْكَبْ مَعَنَا وَلَا تَكُنْ مَعَ الْكَافِرِينَ قَالَ سَآوِي إِلَى جَبَلٍ يَعْصِمُنِي مِنَ ...