விலைவாசி உயர்வு
لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ
நீங்கள் அநீதமிழைக்கவும் வேண்டாம்; அநீதமிழைக்கப்படவும் வேண்டாம். திருக்குர்ஆன்:- 2:279
பற்றாக்குறை, வறட்சி, இயற்கைச் சீற்றங்கள்
அல்லது அதிக தேவை போன்ற இயற்கையான காரணங்களால் சந்தையில் ஏற்படும் விலை உயர்வில் அரசு
தன்னிச்சையாக விலைக் கட்டுப்பாடு விதிக்க இஸ்லாம் அனுமதிப்பதில்லை. ஏனெனில்,
அது விற்பனையாளர்களுக்குச் செய்யும் அநீதியாக அமைந்துவிடும்.
சந்தையில் பேராசை மற்றும் முறைகேடுகள் காரணமாகச் செயற்கையாக
விலைவாசி உயர்த்தப்பட்டால், இஸ்லாம் அதை வன்மையாகக்
கண்டிக்கிறது.
சந்தையில் தேவையைவிடக் குறைவான பொருள்களைக் காட்டி, விலையை ஏழைகளுக்கு எட்டாத உயரத்திற்குக் கொண்டு
செல்வது இஸ்லாமிய வர்த்தக முறைக்கு எதிரானது.
தரமற்ற பொருள்களை நல்ல பொருள்களோடு கலந்து விற்பது, தவறான விளம்பரங்கள் மூலம் விலையை உயர்த்துவது போன்றவை
இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளன.
இயற்கையான முறையில் விலை உயரும்போது விலைக் கட்டுப்பாடு விதிக்கக்கூடாது
என்றாலும், வியாபாரிகள் பதுக்கல்
அல்லது முற்றுரிமை (Monopoly) மூலம் மக்களைச் சுரண்டினால்
அரசு தலையிடலாம் என்று இஸ்லாமிய அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கவும் வறுமையை ஒழிக்கவும்,
நியாயமான சந்தை விலையை (Standard Market
Price) அரசு நிர்ணயம் செய்து அநீதியைத்
தடுக்க வேண்டும்.
அரசுப் பொறுப்பல்ல
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின்
காலத்தில் (ஒரு தடவை) விலைவாசி உயர்ந்தது. அப்போது மக்கள், ( يَا رَسُولَ اللَّهِ قَدْ غَلَا السِّعْرُ فَسَعِّرْ لَنَا ) "நாயகமே! விலைவாசி உயர்ந்துவிட்டது. எனவே, எங்களுக்கு நீங்கள் (நிலையான) விலையை நிர்ணயுங்கள்" என்று
கூறினார்கள்.
அப்போது நபியவர்கள், ( إِنَّ
اللَّهَ هُوَ الْمُسَعِّرُ الْقَابِضُ الْبَاسِطُ الرَّزَّاقُ وَإِنِّي لأَرْجُو
أَنْ أَلْقَى رَبِّي وَلَيْسَ أَحَدٌ مِنْكُمْ يَطْلُبُنِي بِمَظْلَمَةٍ فِي دَمٍ وَلاَ
مَالٍ ) "அல்லாஹ் தான் விலை நிர்ணயம் செய்பவன்; வாழ்வாதாரத்தை குறைப்பவன்; தாராளமாக வழங்குபவன்; உணவளிப்பவன் ஆவான்.
உயிரிலோ பொருளிலோ (நான்) அநீதமிழைத்துவிட்டதாக உங்களில் யாரும் என்னிடம் முறையிடாத
நிலையில் என் இறைவனைச் சந்திக்கவே நான் விரும்புகிறேன்" என்றார்கள். நூல்:- அபூதாவூத்-2994, திர்மிதீ-1235, இப்னுமாஜா-2191, முஸ்னது அஹ்மத், தாரிமீ-2433
அப்துர் ரஹ்மான் பின் ஷவ்பான் (ரஹ்) அவர்கள் தமது தந்தை கூறியதாக
அறிவிக்கிறார். நான் ஜனாதிபதி உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களிடம்,
"ஜனாதிபதி அவர்களே! உங்களுக்கு
முந்தையவர்களின் ஆட்சியில் பொருள்களின் விலை குறைவாக இருந்தது. ஆனால், உங்கள் காலத்திலோ பொருள்களின் விலை அதிகமாக இருக்கின்றது;
இது எதனால்?" என்று கேட்டேன்.
உமர் (ரஹ்) அவர்கள், ( إنَّ
الَّذِينَ كَانُوا قَبْلِي كَانُوا يُكَلَّفُونَ أَهْلِ الذِّمَّةِ فَوْقَ
طَاقَتِهِمْ وَلَمْ یَکُونُوا یَجِدُونَ بَدًّا مِنْ أَن یَبِیعُوا وَیَکسِرُوا
مَا فِی اَیدِیهِمْ وَإِنَّا لَا أُكَلِّفُ أَحَدًا إلَّا طَاقَتَهُ فَبَاعَ
الرَّجُلُ كَيْفَ شَاءَ ) “எனக்கு முன்பிருந்தவர்கள் திம்மிகளை (இஸ்லாமிய
அரசின் பாதுகாப்பில் வாழும் முஸ்லிம் அல்லாத குடிமக்கள்) அவர்களது சக்திக்கும் திறனுக்கும்
மேலாக வற்புறுத்தினார்கள். அவர்களிடமிருந்து விற்பதற்கு எதுவும் இல்லை என்று தோன்றும்
வரை அவர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் துண்டு துண்டாக
அடித்து நொறுக்கப்பட்டது. நான் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு மீறி சிரமம் கொடுப்பதை
விரும்பவில்லை. எனவே, ஒருவர் தமது பொருளை
அவர் விரும்பும் நிலையில் விற்கும் சுதந்திரம் பெற்றவராக இருக்கிறார்” என்று
கூறினார்கள்.
நான், ( لَوْ
أَنَّكَ سَعَّرْتَ ) “அவ்வாறெனில்,
நீங்கள் பொருள்களுக்கான விலையை நிர்ணயம் செய்யமாட்டீர்களா?” என்று கேட்டேன். உமர் (ரஹ்)
அவர்கள், ( لَيْسَ إلَيْنَا مِنْ ذَلِكَ
شَيْءٌ إنَّمَا السَّعْرُ إلَى اللَّهِ ) “ஒன்றின் விலைக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அல்லாஹ்வுக்கு
மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது” என்று கூறினார்கள். நூல்:- அஸ்ஸியாசதுல் இக்திசாதிய்யா
வல்மாலிய்யா பக்கம்-48, ( السياسة الاقتصادية
والمالية لعمر بن عبد العزيز ) உமர் பின் அப்துல் அஜீஸ் பக்கம்-70 (அலீ முஹம்மத்
அஸ்ஸல்லாபீ)
அரசாங்கம் நுகர் பொருள்களுக்குக் குறிப்பிட்ட விலைகள் நிர்ணயித்து,
அந்த விலையைவிட கூடுதலாகவோ குறைவாகவோ பொருள்களை
விற்கக்கூடாது என வணிகர்களுக்கு ஆணையிடுவதே "விலை நிர்ணயம்" அல்லது
"விலை கட்டுப்பாடு" எனப்படும்.
பொதுவாக விலைவாசி காலத்துக்கும் உலகப் பொருளாதார ஏற்ற இறக்கத்திற்கும்
ஏற்ப உயரும்; தாழும். இதில் அரசு
தலையிட்டு, நுகர்வோருக்கு சாதகமாக
விலைகளை குறைப்பது, வணிகர்களுக்கு ஆதரவாக விலையை உயர்த்தி மதிப்பிடுவது என இந்த இரண்டுமே
தவறாகும்.
பொதுவாக நாட்டு மக்கள் அனைவரின் நலனை காப்பது தான் அரசின் கடமையே
தவிர, நுகர்வோர் அல்லது வணிகர் ஆகிய
இரு தரப்பாரில் ஒருவருக்குச் சாதகம் செய்வதும் மற்றவருக்குப் பாதகம் செய்வதும் நியாயம்
ஆகாது. பிரச்சனை ஏற்படுகையில் இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் பாதிக்காமல் முடிவு செய்ய
அரசு விட்டுவிட வேண்டும்.
கட்டுப்படியான விலைக்கு விற்பனை செய்யுங்கள் என்று வணிகரை அரசு
கட்டாயப்படுத்தலாகாது. இதுவே பெரும்பான்மை அறிஞர்களின் கருத்தாகும். விலை உயர்வால்
சிலருக்கும், விலை மலிவால் வேறு
சிலருக்கும் அல்லாஹ் வாழ்வளிக்கிறான். அதில் யாரும் தலையிடக்கூடாது.
ஆனால், அறிஞர்கள் சிலர்,
விலையைக் கட்டுப்படுத்தும் உரிமை ஆட்சித் தலைவருக்கு
உண்டு என்று கூறுகின்றனர். வேறு சிலர், விலைவாசி உயரும்போது மட்டும் அரசு தலையிட்டு விலையை நிர்ணயிக்கலாம் என்கின்றனர்.
எப்படியாயினும் நேர்மையோடும் மக்கள்மீது கருணையோடும் நடந்துகொள்ளுமாறு வணிகர்களிடம்
அரசு கூறலாம். நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ, சிந்தீ
பதுக்கலால் வரும் பாதிப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن اِحْتَكَرَ طَعَامًا أَرْبَعِينَ يَومًا، يُرِيدُ بِهِ
الغَلَاءَ؛ فَقَد بَرِئَ مِنَ اللهِ، وبَرِئَ اللهُ مِنه ) நாற்பது நாள்கள் வரை உணவுப் பொருளை விலை உயர்வதற்காகப்
பதுக்கி வைக்கின்றவன் அல்லாஹ்வை விட்டு விலகிவிட்டான். அல்லாஹ்வும் அவனைப் பாதுகாப்பதிலிருந்து
விலகிவிட்டான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- ரஸீன்,
ஹிதாயத்துர் ருவாத்-2827 ( هداية الرواة ) இமாம்
அல்பானீ
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ اِحْتَكَرَ الطَّعَامَ أَرْبَعِينَ يَوْمًا ثُمَّ تَصَدَّقَ
بِهِ لَمْ تَكُنْ صَدَقَتُهُ كَفَّارَةً لِاِحْتِكَارِهِ ) உணவுப் பொருள்களை நாற்பது நாள்களுக்குப் பதுக்கி
வைத்த பின்னர் அவற்றையெல்லாம் தர்மம் செய்தாலும் அது அதற்கு பரிகாரமாகாது. அறிவிப்பாளர்:-
அபூஉமாமா (ரலி) அவர்கள் நூல்:- ரஸீன், முஸ்னது அல்பிர்தவ்ஸ் இமாம் தைலமீ, தாரீக் அல்பக்தாத், தஹ்ரீஜு அஹாதீஸில்
இஹ்யாஉ ( تخريج احاديث الاحياء ) இமாம் இராக்கீ
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( بِئْسَ الْعَبْدُ الْمُحْتَكِرُ: إِنْ أَرْخَصَ اللَّهُ الْأَسْعَارَ
حَزِنَ وَإِنْ أَغْلَاهَا فَرِحَ ) உணவுப்
பொருளை பதுக்குபவன் மிகக் கெட்டவன். அல்லாஹ் விலையை மலிவாகச் செய்துவிட்டால் அளவு கடந்து
வருந்துவான். விலையை உயர்த்திவிட்டாலோ மிகவும் மகிழ்ச்சியுறுவான். அறிவிப்பாளர்:- முஆத்
(ரலி) அவர்கள் நூல்:- ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, ரஸீன், மிஷ்காத்-2897
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْجَالِبُ مَرْزُوقٌ وَالْمُحْتَكِرُ مَلْعُونٌ ) இறக்குமதி செய்(து சரக்குகளைக் கொண்டு
வரு)பவர் (அல்லாஹ்வின் புறத்திலிருந்து) வாழ்வாதாரம் வழங்கப்படுபவர் ஆவார். பதுக்கி
வைப்பவர் சாபத்திற்குரியவர் ஆவார். அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-2144, சுனன் அல்குப்ரா இமாம் நசாயீ, ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, தாரிமீ, பஹ்ஜத்துல் மஜாலிஸ் ( بهجة
المجالس - ابن عبد البر )
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். ( مَنِ احْتَكَرَ حُكْرَةً يُرِيْدُ اَنْ يُغْلِيَ بِهَا عَلَي
الْمُسْلِمِيْنَ فَهُوَ خَاطِيءٌ ) எவன் முஸ்லிம்களின் மீது விலைவாசி உயர (தானியத்தை)ப்
பதுக்கி வைப்பானோ அவன் பாவி ஆவான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:-
முஸ்னது அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்
வெளிச்சந்தையில் எளிதாக கிடைக்காத பொருளை, அல்லது நியாய விலைக்கு விற்க வேண்டிய பொருளை விற்காமல் சட்ட
விரோதமாக மறைத்து வைப்பதையே பதுக்கல் (Hoarding) என்பர்.
இஸ்லாத்தில் பதுக்கல் என்பது உணவுப் பொருளின் விலை உயரட்டும்
என எதிர்பார்த்து, தமக்கு அவசியப்படாமல் இருந்தும்
மக்களுக்குத் தேவை இருந்தும் விற்காமல் வியாபாரி தடுத்து வைப்பதையே குறிக்கும். இத்தகைய
உணவுப் பொருள் பதுக்கலுக்கு இஸ்லாம் தடை விதித்துள்ளது. விலைவாசி உயர்ந்திருக்கும்போது, வணிகத்திற்கென உணவுப் பொருளை வாங்கி, உடனே அதை விற்காமல், மேலும் விலை உயரட்டும்
என்பதற்காகச் சேமித்து வைப்பதையே தடை செய்யப்பட்ட பதுக்கல் ஆகும்.
ஒருவர் தமது கிராமத்திலிருந்து உணவுப் பொருளை கொண்டு வந்து சேமித்து, அல்லது விலை மலிவான நேரத்தில் விலைக்கு வாங்கி சேமித்துப் பின்னர்
விற்றாலோ, அல்லது தமது சொந்தத் தேவைக்காக விலைவாசி உயர்ந்திருக்கும்போது
வாங்கிவைத்தாலோ இதுவெல்லாம் தடை செய்யப்பட்ட பதுக்கல் ஆகாது. அவ்வாறே உணவுப்பொருள்
அல்லாதவற்றிலும் பதுக்கல் என்பது கிடையாது. பொதுமக்கள் உணவுப்பொருள் கிடைக்காமல் திணறிக்
கொண்டிருக்கும்போது, சொந்த இலாபத்திற்காக அதை பதுக்கிவைப்பது
இரக்கமற்ற,
மனிதநேயமற்ற செயலாகும். பதுக்கி
வைக்கப்பட்டிருக்கும் உணவுப்பொருளை வேறு வழியில்லாத போது பறிமுதல் செய்ய அரசுக்கு அனுமதி
உண்டு. நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ, அல்மின்ஹாஜ்
உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான ஃபர்ரூக் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது. ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் உணவுப் பொருள்களை கொண்டு வந்து
வைத்துவிட்டு, "ஜனாதிபதி அவர்களே!
இந்த உணவுப்பொருள் பதுக்கல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது" என்று கூறப்பட்டது.
உமர் (ரலி) அவர்கள், "இதை பதுக்கி வைத்திருந்தவர்
யார்?" என்று வினவினார்கள்.
அதற்கு உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை ஃபரூக்கும், உமர் (ரலி) அவர்களின் (அதாவது தங்களின்) இன்ன அடிமையும் தான்
(இவ்வாறு செய்தனர்)" என்று மக்கள் கூறினர்.
உடனே உமர் (ரலி) அவர்கள் எங்கள் இருவரிடமும் ஆளனுப்பி,
எங்களை வரவழைத்தார்கள். பிறகு எங்களிடம்,
( مَا حَمَلَكُمَا عَلَى احْتِكَارِ طَعَامِ الْمُسْلِمِينَ
) "நீங்கள் இருவரும் முஸ்லிம்களுக்குரிய
உணவுப் பொருள்களை பதுக்கி வைக்க காரணம் என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், ( يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ نَشْتَرِي بِأَمْوَالِنَا وَنَبِيعُ
) "ஜனாதிபதி அவர்களே! நாங்கள்
எங்கள் காசுகளைச் செலவிட்டு வாங்குகிறோம். பிறகு அவற்றை விற்கிறோம். (இதில் பதுக்கல்
செய்தால் தவறென்ன?)" என்று கேட்டோம்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், ( سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
مَنْ احْتَكَرَ عَلَى الْمُسْلِمِينَ طَعَامَهُمْ ضَرَبَهُ اللَّهُ بِالْإِفْلَاسِ
أَوْ بِجُذَامٍ ) "முஸ்லிம்களின் உணவு பொருள்களை அவர்களுக்கு கிடைக்காமல்
பதுக்கல் செய்பவரை திவாலாக்குவதின் மூலம் அல்லது தொழுநோயின் மூலம் அல்லாஹ் தண்டிப்பான்
என அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்று கூறினார்கள்.
நான் இதைக் கேட்டவுடன், ( يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أُعَاهِدُ اللَّهَ وَأُعَاهِدُكَ أَنْ
لَا أَعُودَ فِي طَعَامٍ أَبَدًا ) "ஜனாதிபதி அவர்களே! இனிமேல் நான் உணவுப் பொருள்களை பதுக்க மாட்டேன் என்று அல்லாஹ்விடம்
உறுதியளிக்கிறேன் தங்களிடமும் உறுதியளிக்கிறேன்" என்றேன். உமர் (ரலி) அவர்களின்
முன்னாள் அடிமையோ (மீண்டும்) நாங்கள் எங்கள் காசுகளைச் செலவிட்டு வாங்குகிறோம். பிறகு
அவற்றை விற்கிறோம். (இதில் பதுக்கல் செய்தால் தவறென்ன?)" என்று கேட்டார்.
(இந்த நபிமொழி அறிவிப்பாளர்களுள் ஒருவரான) அபூ யஹ்யா அல்மக்கீ
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( فَلَقَدْ
رَأَيْتُ مَوْلَى عُمَرَ مَجْذُومًا ) (மேற்கண்டவாறு வீண்வாதம்
பேசிய) உமர் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையை(ப் பிற்காலத்தில்) நான் தொழுநோயாளியாகக்
கண்டேன். நூல்:- முஸ்னது அஹமத்-130, தஃப்சீர் இப்னு கஸீர் அல்பகரா வசனம்-276
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنِ احْتَكَرَ عَلَى الْمُسْلِمِينَ طَعَامَهُمْ ضَرَبَهُ اللَّهُ
بِالْجُذَامِ وَالإِفْلاَسِ ) யார் முஸ்லிம்களுக்குத் தாராளமாக கிடைக்க வேண்டிய)
உணவுப் பொருளை பதுக்கிவைக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் தொழுநோயையும், ஓட்டாண்டித்தனத்தையும் விதியாக்கிவிடுகிறான். அறிவிப்பாளர்:-
உமர் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-2146, முஸ்னது அஹ்மத், ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, முஸ்னதுத் தயாலிசீ
அன்றைக்கு தொழுநோய் என்பது மிகவும் சவாலான நோயாக இருந்தது. இன்றைய
புற்றுநோயைப் போன்று. பதுக்கல் என்ற பாவத்தைச் செய்பவன் மிகவும் சவாலான, பெரும் நோய்க்கு
ஆளாவான். அவனது தொழில் திவாலாகிப் போகலாம். ஆக, அவன் உடல் மற்றும் பொருளாதாரா ரீதியாக
மிகவும் பாதிக்கப்படுவான் என்பது கருத்தாகும்.
அளவை நிறுவையில் குறைவு
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلاَّ أُخِذُوا بِالسِّنِينَ
وَشِدَّةِ الْمَؤُنَةِ وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ ) அவர்கள் எடை அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்யும்போது பஞ்சம்,
கடுமையான விலைவாசி, ஆட்சியாளர்களின் அடக்குமுறை
ஆகியவற்றின் பிடியில் சிக்குவார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்
நூல்:- இப்னுமாஜா-4009, ஹுல்யத்துல் அவ்லியா
இமாம் அபூநயீம், அல்உக்குபாத் ( العقوبات ) இமாம் இப்னு அபித்துன்யா, அல்அஸ்வத் இமாம் தப்ரானீ ஹாக்கிம், ஸஹீஹ் ஜாமிஉ-7978
தரகர்களுக்குத் தடை
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. வியாபாரப்
பொருள்கள் சந்தைக்கு வந்து சேருவதற்கு முன் வழியிலேயே வியாபாரிகளைச் சந்தித்து சரக்குகளை
வாங்குவதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். நூல்:- முஸ்லிம்-3043
ஊருக்கு வெளியில் இருந்து வணிகப் பொருள்களையும் தானியங்களையும்
கொண்டுவரும் வியாபாரிகள் ஊருக்குள் நுழைவதற்கு முன்பே, அவர்களை இடைமறித்துக் கொள்முதல் செய்வது தடை செய்யப்பட்ட செயலாகும்.
அவர்கள் ஊருக்குள் வந்து சந்தை நிலவரத்தை அறிவதற்கு முன்பே கொள்முதல் செய்யும்போது, அந்த வியாபாரிகள் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயம் நேரலாம்.
இது அவர்களுக்குப் பாதிப்பை உண்டாக்கிவிடும்.
இத்துடன் இடைமறித்து கொள்முதல் செய்யும் உள்ளூர் வியாபாரிகள்
உடனே அந்தப் பொருள்களை விற்பனை செய்யாமல், விலை ஏறும் வரை பதுக்கிவிடலாம்.
இது விலை உயர்வுக்கு வழி வகுத்து நுகர்வோரைப் பாதித்துவிடும்.
உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையே இடைத் தரகர்கள் புகுந்து
கொள்ளை இலாபம் அடிப்பதைத் தடுப்பதற்காக இதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நூல்:- அல்மின்ஹாஜ், தக்மிலா
ஆன்லைன் வியாபாரம்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنِ ابْتَاعَ طَعَامًا فَلاَ يَبِعْهُ حَتَّى يَسْتَوْفِيَهُ ) உணவு பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அது தமது கைக்கு வந்து சேருவதற்கு முன் (மற்றவருக்கு) அதை விற்க
வேண்டாம்.
இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள்
கூறுகிறார்கள். உணவுப் பொருளைப் போன்றே எல்லாப் பொருள்களையும் நான் கருதுகிறேன். (கைக்கு
வந்து சேர்வதற்கு முன் எதையும் விற்கலாகாது.) நூல்:- புகாரீ-2135, முஸ்லிம்-3058
ஒருவர் ஒரு பொருளை விலைக்கு வாங்கிய பின், அந்தப் பொருள் அவரது கைக்கு வந்து சேருவதற்கு முன்னால்
வேறு ஒருவருக்கு அதை அவர் விற்பது கூடாது. ஏனெனில், பொருள் அவரது கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகுதான், அதை அவர் தமது விருப்பத்திற்கேற்பப் பயன்படுத்த
முடியும். அதற்கு முன்னர் அதை விற்பதோ, அன்பளிப்புச் செய்வதோ கூடாது.
உதாரணமாக, ஒருவர் ஓர் உணவுப்
பொருளை 100 ரூபாய்க்கு விலைக்கு வாங்க முடிவு செய்து, பணத்தை வியாபாரிடம் ஒப்படைத்தார்.
ஆனால், இன்னும் பொருளைப் பெற்றுக்கொள்ளவில்லை.
இதற்கிடையில் வாங்கியவர் பொருளை வேறொருவருக்கு 120 ரூபாய்க்கு விற்றார். விற்கப்பட்ட
பொருள் முதல் வியாபாரியின் கையில் தான் இன்னும் இருந்துவருகிறது. இந்நிலையில் மற்றவருக்கு
இரண்டாவது வியாபாரி விற்பதானது 100 ரூபாய் பணத்தையே 120 ரூபாய்க்கு விற்பதைப் போன்று
ஆகிறது. எனவே, தான் வாங்கிய பொருள்
கைக்கு வந்து சேருவதற்கு முன் மற்றவர்களுக்கு விற்பது கூடாது என்று அப்துல்லாஹ் பின்
அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கமளித்தார்கள். நூல்: அல்மின்ஹாஜ், தக்மிலா
எந்தப் பொருளை ஒருவர் விற்பதாக இருந்தாலும் அதைத் தன் பொறுப்பில்
அவர் கையகப்படுத்த வேண்டும். அதன் பின்னரே விற்க வேண்டும். ஆனால் ஆன்லைன் மூலம் ஒரு
டன் தங்கத்துக்கு பணம் செலுத்தி ஒருவர் பதிவு செய்து கொள்கிறார். அதை அவர் தன் வசப்படுத்துவதில்லை.
தனது பொறுப்பில் எடுத்துக் கொள்வதில்லை. மாறாக பெயரை மட்டும் பதிவு செய்து கொள்கிறார்.
யாரிடமிருந்து பொருளை வாங்குவதாக பதிவு செய்தாரோ அவரது பொறுப்பில்தான் அந்தத் தங்கம்
இருக்கும். இதைத்தான் இந்த நபிமொழி தடுக்கின்றது.
வியாபாரத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பிழைக்க வேண்டும்.
அதிகமான மக்கள் வியாபாரிகளாக இருக்கும்போதுதான் இஷ்டத்துக்கு விலை நிர்ணயம் செய்வது
தடுக்கப்படும். ஒவ்வொரு வியாபாரியும் தன் பொறுப்பில் பொருளைக் கையகப்படுத்த வேண்டும்
எனும்போது ஒரு அளவுக்கு மேல் இது சாத்தியப்படாது. அனைத்தையும் ஒரு சிலர் கையகப்படுத்த
முடியாது. இதனால் ஏராளமான வியாபாரிகள் களத்தில் இருப்பார்கள்.
ஆனால் கையகப்படுத்தாமல் பதிவு செய்து கொள்ளும்போது உலகில் உள்ள
அனைத்து தங்கத்தையும் அனைத்து வெள்ளியையும் ஒருவரோ அல்லது மிகச் சிலரோ பதிவு செய்து
வைத்துக்கொண்டு மற்ற வியாபாரிகளுக்குக் கிடைக்காமல் செய்துவிட முடியும். இதனால் விலைகள்
ஏறி நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் இஸ்லாம் இதை தடை செய்கிறது.
தவிர்ந்துக்கொண்டால்
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மக்களில் சிலர்
உமர் (ரலி) அவர்களிடம் வந்து, ( غَلَا اللَّحْمُ، فَسَعَرُهُ لَنَا ) "இறைச்சியின் விலை
மிகவும் உயர்ந்துவிட்டது. (கசாப்பு கடைக்காரர்கள் தமது விருப்பத்திற்கேற்ற விலையை ஏற்றி
விற்றுக்கொண்டிருக்கின்றனர்.) எனவே, நீங்களே அதற்கு (நடுத்தரமான) ஒரு விலையை எங்களுக்காக நிர்ணயம் செய்யுங்கள்" என்று கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள், ( أَرْخَصُوهُ أَنْتُمْ ) "இறைச்சியின் விலையை
நீங்களே குறைத்துவிடலாமே!" என்றார்கள்.
அதற்கு மக்கள், ( نَحْنُ نَشْتَكِي غَلَاءِ السَّعْرِ
وَاللَّحْمِ عِنْدَ الْجَزَّارِينَ وَنَحْنُ أَصْحَابُ الْحَاجَةِ، فَتَقُول:
أَرْخَصُوهُ أَنْتُمْ؟ ) "கசாப்புக் கடைக்காரர்களிடம் இறைச்சியின் விலை அதிகம்
என்பதாக நாங்கள் புகார் அளிக்கிறோம். நாங்கள் நுகர்வோர் தானே, (அப்படியிருக்க) தாங்கள், 'அதை நீங்களே குறைத்துக்கொள்ளலாமே!' என்று கூறுகிறீர்களே? (அது எப்படி எங்களால் சாத்தியமாகும்)" என கேட்டார்கள்.
அப்போது உமர் (ரலி) அவர்கள், ( اُتْرُكُوهُ لَهُمْ ) "அதை அவர்களிடமே விட்டுவிடுங்கள்.
(அதாவது, பொதுமக்கள் அனைவரும் அதை வாங்காமல்
தவிர்த்துவிட்டால், அது தானாகவே மலிவு
விலைக்கு வந்துவிடும் என்று அழகிய யோசனை)” கூறினார்கள். நூல்:- தாரீக் திமிஷ்க் இமாம்
அசாகிர், ஹில்யதுல் அவ்லியா இமாம் அபூநயீம், அல்பிதாயா வந்நிஹாயா
மக்கள் பொருள்களை வாங்குவதில் சிக்கனத்தைக் கடைபிடித்தால் விலைவாசி
(பணவீக்கம்) குறைய அதிக வாய்ப்பு உள்ளது.
சந்தையில் ஒரு பொருளை வாங்குவதற்கு மக்கள் காட்டும் ஆர்வம் குறையும்போது,
அப்பொருளுக்கான தேவை குறைகிறது. கடைகளில் பொருள்கள்
விற்காமல் தேங்கி நிற்கும்போது, வியாபாரிகளும் நிறுவனங்களும்
தங்களின் விற்பனையை அதிகரிக்க விலையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.
வாடிக்கையாளர்கள் குறைவாக இருக்கும்போது, இருக்கும் சில வாடிக்கையாளர்களையாவது ஈர்க்க நிறுவனங்களுக்கு
இடையே போட்டி ஏற்படும். இதனால் தள்ளுபடிகள் (Discounts) மற்றும் விலைக்குறைப்புகளை நிறுவனங்கள் அறிவிக்கத் தொடங்கும்.
சில நேரங்களில் பொருள்களின் பற்றாக்குறையால் விலை ஏறும். மக்கள்
வாங்குவதைக் குறைக்கும்போது, உற்பத்தி செய்யும்
நிறுவனங்களுக்குப் பொருள்களைச் சேமித்து வைக்கவும், தடையின்றி விநியோகம் செய்யவும் போதிய நேரம் கிடைக்கும். பற்றாக்குறை
நீங்குவதால் விலை தானாகவே குறையும்.
அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப் பொருள்கள், மருத்துவப் பொருள்கள், எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை மக்கள் வாங்குவதை முழுமையாகக்
குறைக்க முடியாது. எனவே, ஆடம்பரப் பொருள்கள்
(Electronics, Cars, Clothes) அளவுக்கு அத்தியாவசியப்
பொருள்களின் விலை வேகமாக இறங்காது.
மக்கள் தங்களின் செலவுகளைப் பெருமளவு குறைத்துக்கொண்டால்,
அது நிறுவனங்களின் நஷ்டத்திற்கும், வேலைவாய்ப்பு இழப்பிற்கும் வழிவகுத்து பொருளாதார
மந்தநிலையை ஏற்படுத்தக்கூடும். இதனால் மக்கள் கையில் பணப்புழக்கம் குறைந்து,
அவர்கள் பொருள்களை வாங்குவதும் குறையும்போது விலைவாசியை
கட்டுக்குள் கொண்டுவரலாம்.
அரிசி விலை உயர்வு காணும்போது கோதுமை மற்றும் சிறுதானியங்கள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.
சுருங்கக் கூறின், மக்கள் ஒரு பொருளை வாங்குவதைக் குறைத்தால், அதன் விலை குறைய வாய்ப்பு அதிகம் உள்ளது.
வாரி வழங்குதல்
ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்,
(ஒருமுறை) மக்கள் கடுமையான
வறட்சியாலும் பஞ்சத்தாலும் அவதிப்பட்டனர். அவர்களின் நிலைமை மிகவும் மோசமானபோது,
அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று,
( يَا خَلِيفَةَ رَسُولِ اللَّهِ، إِنَّ السَّمَاءَ لَمْ تُمْطِرْ،
وَالْأَرْضَ لَمْ تُنْبِتْ، وَقَدْ أَدْرَكَ النَّاسَ الْهَلَاكُ فَمَاذَا
نَفْعَلُ ) "அல்லாஹ்வின் தூதரின்
கலீஃபாவே! வானம் மழையைப் பொழியவில்லை; பூமி பயிர்களை விளைவிக்கவில்லை; மக்கள் அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். (இப்பொழுது) நாங்கள் என்ன செய்வது?”
என்று கேட்டார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், ( انْصَرَفُوا، وَاصْبِرُوا، فَإِنِّي أَرْجُوا أَلَّا يَأْتِيَ
الْمَسَاءُ حَتَّى يُفَرِّجَ اللَّهُ عَنْكُمْ ) “திரும்பிச் சென்று பொறுமையாக இருங்கள். மாலை வருவதற்குள் அல்லாஹ்
உங்களுக்கு நிவாரணம் அளிப்பான் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்கள்.
அன்றைய தினம் பிற்பகலில், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுக்குச் சொந்தமான ஒட்டகப்
பயணக்குழு ஒன்று சிரியாவிலிருந்து மதீனாவிற்கு வந்தடைந்ததாகச் செய்தி வந்தது. அது வந்தடைந்ததும்,
மக்கள் அதை வரவேற்க வெளியே சென்றனர். அதில் நெய்,
எண்ணெய், மாவு ஆகியவற்றால் சுமையேற்றப்பட்ட ஆயிரம் ஒட்டகங்கள் இருந்தன.
அந்தப் பயணக் குழு உஸ்மானின் வீட்டு வாசலில் நின்றது.
அவரது வீட்டில் பொருள்கள் இறக்கப்பட்ட பிறகு, வணிகர்கள் வந்தனர். உஸ்மான் (ரலி) அவர்கள் வந்தவர்களிடம்,
( مَاذَا تُرِيدُونَ ) “உங்களுக்கு என்ன வேண்டும்?”
என்று கேட்டார். அதற்கு வணிகர்கள், ( إِنَّكَ تَعْلَمُ مَا نُرِيدُ، بِعْنَا مِنْ هَذَا الَّذِي وَصَلَ
إلَيْك فَإِنَّك تَعْرِفُ حَاجَةَ النَّاسِ إلَيْهِ ) “எங்களுக்கு என்ன வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். வந்துள்ளவற்றில்
சிலவற்றை எங்களுக்கு விற்பீராக. மக்களுக்கு அது எவ்வளவு தேவை என்பது உங்களுக்குத் தெரியும்”
என்று பதிலளித்தனர்.
உஸ்மான் (ரலி) அவர்கள், ( كَمْ أَرْبَحُ عَلَى الثَّمَنِ الَّذِي اشْتَرَيتُ بِهِ
) “நான் கொடுத்த விலைக்கு எனக்கு
எவ்வளவு லாபம் (தருவீர்கள்)?” என்று கேட்டார். வணிகர்கள், ( الدِّرْهَمَ دِرْهَمَيْنِ ) “(நீர் கொடுத்து வாங்கிய) ஒவ்வொரு வெள்ளிக்காசுக்கும் இரண்டு வெள்ளிக்காசுகள்
(இலாபமாக தருகிறோம்)” என்று பதிலளித்தனர்.
அவர், ( أَعْطَانِي
غَيْرُكُمْ زِيَادَةً عَلَى هَذَا ) “வேறு ஒருவர் இதைவிட
அதிகமாகக் கொடுக்க இருக்கிறார்” என்றார். வணிகர்கள்,
( أَرْبَعَةٌ ) “நான்கு” என்றனர்.
உஸ்மான் (ரலி) அவர்கள், “வேறு ஒருவர் இதைவிடவும் அதிகமாகக் கொடுக்க இருக்கிறார்” என்றார். வணிகர்கள், ( نَرْبِحُكَ خَمْسَةً ) “நாங்கள் உங்களுக்கு இலாபமாக ஐந்து (வெள்ளிக்காசுகள்)
தருகிறோம்” என்றனர்.
உஸ்மான் (ரலி) அவர்கள், “வேறு ஒருவர் இதைவிடவும் அதிகமாகக் கொடுக்க இருக்கிறார்” என்றார். வணிகர்கள், ( لَيْسَ فِي الْمَدِينَةِ تُجَّارٌ غَيْرُنَا، وَلَمْ يَسْبِقُنَا
أَحَدٌ إلَيْكَ، فَمَنْ الَّذِي أَعْطَاكَ أَكْثَرَ مِمَّا أَعْطَيْنَا
) “இந்த நகரத்தில் எங்களைத் தவிர
வேறு வணிகர்கள் இல்லை. எங்களுக்கு முன்பு யாரும் உங்களிடம் வரவில்லை. எங்களைவிட உங்களுக்கு
யார் அதிகமாகக் கொடுக்க உள்ளார்?” என்றனர்.
உஸ்மான் (ரலி) அவர்கள்,
( إنَّ اللَّهَ قَدْ أَعْطَانِي بِكُلِّ دِرْهَمٍ عَشَرَةٌ، اَلْحَسَنَةُ
بِعَشَرَةِ أَمْثَالِهَا، فَهَلْ عِنْدَكُمْ زِيَادَةٌ ) "ஒரு நற்செயலுக்குப் பத்து மடங்கு கூலி கிடைக்கும்.
எனவே, ஒவ்வொரு வெள்ளிக்காசுக்கும்
பத்துத் (மடங்கு) தந்துவிடுவதாக அல்லாஹ் எனக்கு வாக்களித்துள்ளான். அதனால்,
இதைவிட அதிகமாகக் கொடுப்பதற்கு உங்களால் முடியுமா?"
என்று கேட்டார். வணிகர்கள், "முடியாது" என்றனர்.
உஸ்மான் (ரலி) அவர்கள், ( فَإِنِّي أُشْهِدُ اللَّهِ اَنِّي جَعَلْتُ مَا جَاءَتْ بِهِ هَذِهِ
الْجِمَالُ صَدَقَةَ لِلْمَسَاكِينِ وَفُقَرَاءِ الْمُسْلِمِينَ ) "அப்படியானால்,
இந்த ஒட்டகங்கள் கொண்டு வந்ததை நான் ஏழை மற்றும்
தேவையுள்ள முஸ்லிம்களுக்கு தர்மமாக ஆக்கியுள்ளேன் என்பதற்கு அல்லாஹ்வையே சாட்சியாக
ஆக்குகிறேன்" என்று கூறினார்.
பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் தனது பொருள்களை விநியோகிக்கத்
தொடங்கினார். மேலும், அந்த நகரத்தில் தனக்கும்
தன் குடும்பத்திற்கும் போதுமான அளவு பெறாத ஒரு ஏழை மனிதர்கூட இல்லை. அவர்கள் அனைவரும்
நபித்தோழர்கள் ஆவர். நூல்:- அர்ரிக்கத்து வல்புகாஉ ( الرقة و البكاء ) இமாம்
இப்னு குதாமா, ஃபிக்ஹித் தாஜிரில் முஸ்லிம் ( فقه التاجر المسلم - حُسَام الدين عَفَانة ), சுவரும் மின் ஹயாத்திஸ்
ஸஹாபா - அப்துர்ரஹ்மான் ரஅஃபத் பாஷா
விலைவாசி உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழைகளே. செல்வந்தர்கள்
தங்களின் கடமையான 'ஜகாத்' நிதியையும், உபரியான தர்மங்களையும் (சதக்கா) வழங்குவதன் மூலம் ஏழைகளின் வாங்கும்
திறனைப் பாதுகாக்க முடியும்.
ஆடம்பரத்தையும், வீண் விரயத்தையும் தவிர்த்தால்
நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்; விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்வோரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. திருக்குர்ஆன்:-
7:31
பேரறிஞர் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
( مَنْ اشْتَرَى مَالَا يَحْتَاجُ إلَيْهِ يُوشِكُ أَنْ يَبِيعَ مَا
يَحْتَاجُ إلَيْهِ ) யார்
தனக்குத் தேவையில்லாததை வாங்குகிறாரோ, அவர் (வறுமைக்கு ஆளாகி) தனக்குத் தேவையானதை விற்கவும் கூடும். நூல்:- பஹ்ஜத்துல் மஜாலிஸ்
ஒரு பொருளை அதன் தேவைக்காக வாங்குவதைவிட, மற்றவர்களுக்குக் காட்டுவதற்காக அல்லது ஆடம்பரத்துக்காக
வாங்குவது அதிகமாகிறது.
விளம்பரக் கவர்ச்சியில் மதிமயங்கி, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற தள்ளுபடியில் விழுந்து,
தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பதும் விலையேற்றத்திற்கு
காரணமாகும்.
மக்கள் ஆடம்பரத்தையும் வீண் விரயத்தையும் தவிர்த்தால் ஒட்டுமொத்த
விலைவாசி குறைய வாய்ப்புகள் அதிகம். பொருளாதார ரீதியாக, சந்தையில் பொருள்களின் விலையைத் தீர்மானிப்பதில் மக்களின் நுகர்வுப்
பழக்கம் (Consumption habits) முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஒரு பொருளுக்கான தேவை அதிகமாகும்போது அதன் விலை உயர்கிறது. மக்கள்
ஆடம்பரப் பொருள்களையும், தேவைக்கு அதிகமான
பொருள்களையும் வாங்குவதைக் குறைக்கும்போது, சந்தையில் பொருள்களுக்கான தட்டுப்பாடு குறைந்து, விலை இயல்பு
நிலைக்குத் திரும்பும்.
உணவுப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை வீணாக்குவதைத்
தவிர்க்கும்போது, சந்தையில் பொருள்களின்
இருப்பு (Stock) அதிகரிக்கும். இதனால்
பதுக்கல் மற்றும் செயற்கைத் தட்டுப்பாடு தடுக்கப்பட்டு, விலை குறையும்.
ஆடம்பரச் செலவுகள் குறையும்போது, சந்தையில் பணத்திற்கான மதிப்பு நிலைபெறும். இது பணவீக்கத்தைக்
(Inflation) கட்டுப்படுத்த உதவி,
அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைக்க வழிவகுக்கும்.
இருப்பினும், விலைவாசி என்பது அரசாங்கத்தின் வரிகள், எரிபொருள் விலை, உற்பத்திச் செலவு போன்ற பல காரணிகளையும் சார்ந்துள்ளது. ஆனாலும், மக்களின் விவேகமான நுகர்வுப் பழக்கம் விலைவாசியைக்
குறைப்பதற்கான ஒரு வலுவான அடித்தளமாக அமையும்.
ஆடம்பரங்களைத் தவிர்த்து, அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் செலவிடுமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது.
இது சந்தையில் தேவையற்ற தேவைக் குறைப்பை ஏற்படுத்தி விலையைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
கவலை வேண்டாம்
அபூஹாஸிம் சலமா பின் தீனார் ( أبي حازم سلمة بن دينار ) (ரஹ்) அவர்களிடம் மக்கள் வந்து, ( يَا أَبَا حَازِمٍ أَمَا تَرَى قَدْ غَلَا السِّعْرُ ) “அபூஹாஸிம் அவர்களே! (அத்தியாவசியப் பொருள்களின்) விலையெல்லாம் உயர்ந்துவிட்டதே!
நீங்கள் காணவில்லையா?” என்று சொல்லப்பட்டது.
அதற்கு அன்னார், ( وَمَا
يَغُمُّكُمْ مِنْ ذَلِكَ؟ إِنَّ الَّذِي يَرْزُقُنَا فِي الرُّخْصِ هُوَ الَّذِي
يَرْزُقُنَا فِي الْغَلَاءِ ) “அதற்கு
நீங்கள் ஏன் கவலைகொள்கிறீர்கள்? பொருள்கள் மலிவாக
இருக்கும்போது வாழ்வாதாரம் வழங்கியவன். பொருள்களின் விலை உயரும்போதும் வாழ்வாதாரம்
வழங்குவான்” என்று பதிலளித்தார்கள். நூல்:- ஹில்யதுல் அவ்லியா
அல்லாஹ், விலையேற்றத்தை உருவாக்கி சோதிக்கும்போது, ஏழைகள் இறையச்சத்துடன் உழைப்பில் கவனம் செலுத்தினால்,
நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு வழங்க வேண்டிய வாழ்வாதாரத்தை
வழங்குவான் என்கிறார்கள் அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள்.
இஸ்லாமியப் பார்வையில், விலைவாசி உயர்வு என்பது வர்த்தகர்களின் நேர்மைக்கும்,
நுகர்வோரின் பொறுமைக்கும், ஆட்சியாளர்களின் நீதிக்கும் இறைவனால் ஏற்படுத்தப்படும்
ஒரு சோதனையாகும்.
அல்லாஹுத்தாஆலா விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, ஏழை எளியோர்
சிரமமின்றி வாழ, அருள்புரிவானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ
இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்:
9840535951