Search This Blog

Wednesday, 11 November 2026

ஆவதும் பெண்ணாலே! அழிவதும் பெண்ணாலே!

 

ஆவதும் பெண்ணாலே! அழிவதும் பெண்ணாலே!

 

فَدَلَّاهُمَا بِغُرُورٍ

இப்லீஸ் அவ்விருவரையும் (தனது) ஏமாற்று வலையில் சிக்க வைத்தான். திருக்குர்ஆன்:- 7:22

 

மனிதர்கள் படைக்கப்படுவதும் வளர்க்கப்படுவதும் பெண்களினால் தான். அதனால் தான், “ஆவதும் பெண்ணாலே” என்கிறோம்.

 

உலகில் பல அறிஞர்கள், சாதனையாளர்களின் வளர்ச்சிக்கு காரணம் அவர்களின் தாய் அல்லது சகோதரி, மனைவி, மகள் காரணமாக இருப்பார்கள்.

 

அடுத்தது, “அழிவதும் பெண்ணாலே!” இது கொஞ்சம் நீளமாக போகும். நாட்டில் பலரது குடும்பங்கள் அழிந்தது மட்டுமல்லாமல், பல நாடே அழிந்தது பெண்களினால் தான். இதற்கு ஏராளமான உதாரணங்களை சொல்லலாம்.

 

ஒரு பெண்ணின் சிந்தனையும் செயலும் சீராக இருந்தால் அவளுடைய குடும்பமும் சீராக இருக்கும். மாறாக, அவளின் சிந்தனையும் செயலும் சீர்குலைந்து போய்விட்டால் அவளுடைய  குடும்பத்தின் நிலைமையும் அதுதான்; சந்தேகமில்லை.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களை நோக்கி, ( وَمَا رَأَيْتُ مِنْ نَاقِصَاتِ عَقْلٍ وَدِينٍ أَغْلَبَ لِذِي لُبٍّ مِنْكُنَّ ) “அறிவிலும் மார்க்கத்திலும் குறைபாடுள்ளவர்களாகவும், அறிவிற் சிறந்தோரைக்கூட (கவர்ச்சியால்) வீழ்த்தக்கூடியவர்களாகவும் (பெண்களான) உங்களைப் போன்று வேறு யாரையும் நான் காணவில்லையே" என்று கூறினார்கள்.

 

அப்பெண்மணி, ( يَا رَسُولَ اللَّهِ وَمَا نُقْصَانُ الْعَقْلِ وَالدِّينِ ) "அறிவிலும் மார்க்கத்திலும் எங்களுடைய குறைபாடு என்ன? அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ( أَمَّا نُقْصَانُ الْعَقْلِ فَشَهَادَةُ امْرَأَتَيْنِ تَعْدِلُ شَهَادَةَ رَجُلٍ فَهَذَا نُقْصَانُ الْعَقْلِ وَتَمْكُثُ اللَّيَالِيَ مَا تُصَلِّي وَتُفْطِرُ فِي رَمَضَانَ فَهَذَا نُقْصَانُ الدِّينِ ) "அறிவிலுள்ள குறைபாடு யாதெனில், ஓர் ஆணின் சாட்சியத்திற்கு இரு பெண்களின் சாட்சியம் நிகராகிறது. இதுதான் (பெண்களின்) அறிவிலுள்ள குறைபாடாகும். (மாதவிடாய் ஏற்படும்) பல நாள்கள் அவள் தொழாமல் இருந்துகொண்டிருக்கிறாள்; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்காமல் இருக்கிறாள். இதுதான் (அவளுடைய) மார்க்கத்திலுள்ள குறைபாடு" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-132, அபூதாவூத்-4059, இப்னுமாஜா-3993, முஸ்னது அஹ்மத்-5091

  

கவலையைப் போக்கினார்கள்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஹுதைபியா ஒப்பந்தப் பத்திரத்தை எழுதி முடித்த பின்பு தன் தோழர்களை நோக்கி, ( قُومُوا فَانْحَرُوا ثُمَّ احْلِقُوا ) "எழுந்து சென்று பலிப்பிராணி அறுத்துக் கொடுத்துவிட்டு தலைமுடி களைந்துக்கொள்ளுங்கள்" என்று உத்தரவிட்டார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் கூட எழுந்திருக்கவில்லை.

 

எனவே, நபியவர்கள் மூன்று முறை இவ்வாறு கூறினார்கள். இருந்தும் அவர்களில் எவரும் எழுந்திருக்காத காரணத்தால் (தம் மனைவி) உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்று, மக்களிடமிருந்து தான் சந்தித்த அதிருப்தியை(யும் அதனால், அவர்கள் தமக்கு கீழ்படியாமலிருப்பதையும்) கூறினார்கள்.

 

உடனே உம்மு சலமா (ரலி) அவர்கள், ( يَا نَبِيَّ اللَّهِ، أَتُحِبُّ ذَلِكَ؟ اخْرُجْ ثُمَّ لَا تُكَلِّمْ أَحَدًا مِنْهُمْ كَلِمَةً حَتَّى تَنْحَرَ بُدْنَكَ، وَتَدْعُوَ حَالِقَكَ فَيَحْلِقَكَ ) "நாயகமே! மக்கள் பலிப்பிராணியை அறுத்துவிட்டு, தலைமுடி களைந்துகொள்ள வேண்டும் என்பதை விரும்புகிறீர்களா? (அப்படியென்றால்) நீங்கள் (பலிப்பிராணியை அறுத்து தலைமுடி களையப்) புறப்படுங்கள். நீங்கள் பலிப்பிராணிகளான ஒட்டகங்களை அறுத்துவிட்டு, உங்கள் நாவிதரை அழைத்து அவர் உங்கள் முடியை களையும் வரை அவர்களின் எவரிடமும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்" என்று (ஆலோசனை) கூறினார்கள்.

 

உடனே நபியவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களை அறுத்து பலியிட்டு விட்டு, தம் நாவிதையை அழைத்து தலை முடியை களைந்து கொண்டார்கள். அதுவரை அவர்களின் எவரிடமும் நபியவர்கள் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன்  நபித்தோழர்களும் எழுந்து சென்று பலிப்பிராணிகளை அறுத்து, ஒருவர் மற்றவரின் தலைமுடியை களைய தொடங்கினார்கள். ஒருவர் மற்றவரை போட்டி போட்டுக்கொண்டு (பலிப்பிராணிகளை அறுக்கவும், முடிகளை களையவும்) சென்றனர். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் உம்ரா செய்யும் எண்ணத்தில் இஹ்ராம் ஆடை அணிந்து பலிப்பிராணிகளை அழைத்துக்கொண்டு மக்காவை நோக்கி வந்துகொண்டிருந்தபோது ஹுதைபியா எனும் இடத்தில் வைத்து மக்கா இணைவைப்பாளர்கள் உம்ராவுக்காக வந்தவர்களை மக்காவிற்குள் அனுமதிக்க முடியாது. அதற்கு முன் நாங்கள் கூறும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்து போட்டு தர வேண்டும்.

 

வேண்டுமானால், எதிர்வரும் வருடம் நீங்கள் மக்கா வந்து உம்ரா செய்து கொள்ளலாம்" என்றனர். அதற்கு நபியவர்கள் உடன்பட்டு உடன்படிக்கை பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்தார்கள். அதன் பிறகு, "நாம் இப்போது உம்ரா செய்ய இயலாது. எனவே, இந்த இடத்திலேயே (ஹுதைபியாவிலேயே) இஹ்ராம் ஆடை களைந்து, தலைமுடி களைந்து, பலிப்பிராணிகளை அறுத்து பலியிட்டு விட்டு ஊர் திரும்பி விடுவோம் வாருங்கள்" என்றபோது தான், நபித்தோழர்கள் தயங்கினர். அதாவது, உம்ரா செய்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து மக்காவிற்கு அருகில் வந்துவிட்ட பிறகு, உம்ரா செய்யாமல் ஊர் திரும்புவதா? என்று சற்று தயங்கினர்.

 

நபியவர்களின் கண் ஜாடைக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்த நபித்தோழர்கள், உம்ரா வேட்கையால் தான் சற்று தயங்கினர். எனவே, நபியவர்கள், "தமது ஆருயிர் தோழர்கள் இறைத்தூதரான தம்முடைய சொல்லுக்கு மாறுசெய்து அல்லாஹ்வின் கண்டிப்புக்கு ஆளாகிவிடக் கூடாதே" என்று அஞ்சினார்கள்.

 

நபியவர்களுக்கு ஏற்பட்ட அந்த இக்கட்டான சூழ்நிலையில் உம்மு சலமா (ரலி) அவர்கள் தக்க ஆலோசனை வழங்கி, தமது கணவரான அருமை நாயகம் (ஸல்) அவர்களின் கவலையைப் போக்கினார்கள். அன்னை உம்மு சலமா (ரலி) அவர்கள் நபித்தோழர்களுக்கு ஏற்படவிருந்த இறைவனின் கண்டிப்பு என்ற பெரும் சோதனையிலிருந்து காப்பாற்றினார்கள்.

 

உத்வேகமான வார்த்தை

 

ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்கள் அவர்களின் ஆட்சியின்போது ரோமானியர்களுக்கு எதிராக நடைபெற்ற யர்மூக் போரில் முஸ்லிம் படையினரின் எண்ணிக்கை நாற்பத்து ஐந்தாயிரம் ஆகும். ரோமானிய படையினரின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ஆகும். முஸ்லிம் படையினரோடு ரோமானியப் படையை ஒப்பிட்டால் எதிரிகள் ஆறு மடங்கு அதிகமாக இருந்தனர்.

 

அந்த போரில் முஸ்லிம்கள்மீது ரோமானியர்களின் தாக்குதல் கடுமையாக இருந்த காரணத்தால் முஸ்லிம் வீரர்கள் சிலர் நிலை குலைந்து தம் நிலையைவிட்டு அகன்று சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ரோமானிய வீரர்கள் முஸ்லிம்களை விரட்டி சென்றனர். முஸ்லிம்கள் படையின் பின்பகுதியில் தம்முடைய முகாம்களுக்குச் சென்று ஒதுங்கும்வரை இந்த விரட்டுதல் தொடர்ந்தது.

 

அங்கே ஓடிவந்த வீரர்களை முஸ்லிம் பெண்கள், கூடாரத்தின் தடிகளால் அடித்தும், அவர்களின் முகங்கள்மீது கற்களை எறிந்தும் எதிர்கொண்டனர். முஸ்லிம் வீரர்களை அடித்து விரட்டிக்கொண்டே அப்பெண்கள், ( أَيْنَ عَزُّ الْإِسْلَامِ وَالْأُمَّهَات وَالْأَزْوَاج أَيْن تَفِرُّونَ وَتَدْعُونَنَا لِلْعُلُوجِ ) "இஸ்லாத்தின் கண்ணியம் எங்கே? உங்கள் தாய்மார்கள் மற்றும் மனைவியரின் கண்ணியம் எங்கே? எங்களை இறைமறுப்பாளர்களிடம் விட்டுவிட்டு எங்கே வெருண்டு ஓடுகிறீர்கள்? (குதிரைகளில் ஏறி நாங்கள் போராட வேண்டும் என்பதற்காக எங்களை விட்டுச் செல்கிறீர்களா?)" என்று கூறினார்.

 

அப்போது அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களின் மகளார், ( قَبَّحَ اللَّهُ رَجُلًا يَفِرُّ عَنْ حَلِيلَتِهِ  وَقَبَّحَ اللَّهُ رَجُلًا يَفِرُّ عَنْ كَرِيمَتَهِ ) "தன்னுடைய மனைவியை விட்டுவிட்டு ஓடுபவரை அல்லாஹ் நாசமாக்குவானாக! தன்னுடைய குடும்ப பெண்களை விட்டு விட்டு ஓடும் ஆண்களை அல்லாஹ் அழிப்பானாக!" என்று கூறினார். இதைக் கேட்டு ரோஷம் கொண்ட பெண்களில் சிலர், ( لَسْتُمْ بِعُوْلَتِنَا إنْ لَمْ تَمْنَعُونَا ) "எங்களைக் காப்பாற்ற முடியாவிட்டால், நீங்கள் எங்கள் கணவர்களே அல்லர்" என்று சப்தமாக கூறினர்.

 

அப்பெண்கள் கூறிய இந்த வார்த்தைகளை கேட்ட வீரர்கள் மீண்டும் போர்க்களம் நோக்கி வேகமாகத் திரும்பினர். ரோமானியர்களையும் மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கினர். கண்ணில் கண்ட எதிரிகளை வெட்டி வீழ்த்தினர். புதுத் தெம்புடன் ரோமானியர்களுடன் போரிட்டு எதிரிகள் கைப்பற்றிய இடங்களை எல்லாம் மீண்டும் கைப்பற்றினர்.  இறுதியாக, அந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றி வாகை சூடினர். நூல்:- الْعَمَلِيَّاتُ التَّعْرُضِيَّةُ وَالدِّفَاعِيَّةُ பக்கம்-174, அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரலி) பக்கம்-325 (அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபீ)

 

யர்மூக் போரில் முஸ்லிம் வீரர்களைவிட எதிரிகளின் எண்ணிக்கை அதிகம் இருந்ததால், போரின் ஆரம்பத்தில் முஸ்லிம்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. முஸ்லிம் பெண்களின் உத்வேகமான வார்த்தைகளைக் கேட்டு உரமேற்றியவர்களாக முஸ்லிம்கள் மூர்க்கமாக போரிட்டு, இறையருளால் வெற்றி வாகை சூடினர். அதாவது, யர்மூக் போரில் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்ததற்கு அல்லாஹுத்தஆலா பெண்களையும் ஓர் காரணமாக ஆக்கினான்.

 

பெண்ணின் பேணுதல்

 

ஹசன் அல்பஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நான் மக்காவில் ஒரு ஆடை வாங்குவதற்காக ஒரு துணி வியாபாரியின் கடையில் நின்றேன். அவர் தனது பொருள்களைப் புகழ்ந்து பேசவும், சத்தியம் செய்யவும் தொடங்கினார். அதனால், "இவரைப் போன்ற ஒருவரிடம் வாங்குவது சரியல்ல" என்று எண்ணி, அவரிடம் வாங்காமல் வேறொரு வியாபாரியிடம் சென்று துணியை வாங்கினேன்.

 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நான் ஹஜ் யாத்திரை மேற்கொண்டபோது மீண்டும் அவரது கடையில் நின்றேன். ஆனால், அவர் தமது பொருள்களை மிகைப்படுத்திப் புகழ்வதையோ அல்லது சத்தியம் செய்வதையோ நான் செவியுறவில்லை. நான் அவரிடம், ( أَلَسْتَ الرَّجُلِ الَّذِي وَقَفْتُ عَلَيْهِ مُنْذُ سَنَوَاتٍ ) "பல ஆண்டுகளுக்கு முன்பு நான் (துணி வாங்குவதற்காக வந்து) நின்றேனே அதே மனிதர்தானே நீங்கள்?" என்று கேட்டேன்.

 

அவர், "ஆம்" என்றார். நான் அவரிடம், ( وَأَيُّ شَيْءٍ أَخْرَجَكَ إلَى مَا أَرَى ؟ مَا أَرَاك تُمْدَحُ وَلَا تَحْلِفُ )  "நான் பார்க்கக்கூடிய இந்த நிலைக்கு உங்களை கொண்டுவந்தது எது? (அதாவது,) நீங்கள் இப்போது (தமது துணிகளைக் குறித்து) புகழ்வதையோ அல்லது சத்தியம் செய்வதையோ நான் காணவில்லையே!" என்று கேட்டேன்.

 

அவர், "எனக்கு மனைவி ஒருவள் இருந்தாள். நான் அவளுக்குக் குறைவாகக் கொண்டுவந்தால், அதை அவள் அற்பமாகக் கருதுவாள்; நான் அதிகமாகக் கொண்டுவந்தால், அதை அவள் ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டாள். இறைவன் என்மீது கருணை காட்டி, அவளை இறக்கச் செய்தான்.

 

அவளுக்குப் பிறகு நான் வேறொரு பெண்ணை மணந்தேன். நான் சந்தைக்குச் செல்லும்போதெல்லாம், அவள் என் ஆடைகளைப் பிடித்துக்கொண்டு, ( يَا فُلَانُ اتَّقِ اللَّهَ وَلَا تُطْعِمَنَا إلَّا طَيِّبًا ، وَإِنَّ جِئْتَنَا بِقَلِيلٍ كَثَّرْنَاهُ ، وَإِنْ لَمْ تَأْتِنَا بِشَيْءٍ أَعَنَّاكَ بِمَغْزَلْنَا ) "இன்னாரே! இறைவனுக்கு அஞ்சி, எங்களுக்கு நல்லதை (ஹலாலை) மட்டுமே உண்ணுவதற்கு கொடுங்கள். நீங்கள் எங்களுக்கு (இலாபம்) குறைவாகக் கொண்டுவந்தால், நாங்கள் அதை அதிகமானதாகவே கருதுவோம்; நீங்கள் எதுவும் கொண்டுவராவிட்டாலும், நாங்கள் நூலை நூற்று (விற்பனை செய்து) உங்களுக்கு உதவுவோம்' என்று சொல்வாள்" என்று கூறிவிட்டு “எனது மனைவியின் இந்த வார்த்தைகள்தான் என்னுடைய வாழ்க்கையில் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தின” என்றும் பதிலளித்தார். நூல்:- அல்முஜாலஸா வஜவாஹிருல் இல்ம் ( المجالسة وجواهر العلم - إمام أبو بكر أحمد بن مروان الدينوري )

 

ஒரு குடும்பத்தில் மனைவியின் மனப்பான்மை கணவனின் வாழ்க்கையிலும், அவரது தொழில் நேர்மையிலும் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

 

கணவன் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதைவிட, நல்ல வழியில் ஈட்டிய வருமானம் மட்டுமே நமக்குப் போதும் என்று ஊக்கப்படுத்தும் மனைவியே குடும்பத்தின் உண்மையான பலம்.

 

கணவனின் வருமானம் குறைவாக இருக்கும்போது அவனை இழிவுபடுத்தாமல், அவனது உழைப்பைப் பாராட்டி, கிடைத்ததைக் கொண்டு திருப்தியடையும் மனப்பான்மை ஒரு குடும்பத்தில் நிம்மதியையும் அருள்வளத்தையும் உருவாக்குகிறது.

 

நமக்குத் தேவையானது, அதிகமான செல்வம் மட்டுமல்ல; அந்தச் செல்வம் அனுமதிக்கபபட்ட நல்ல வழியில் ஈட்டியதாகவும் இருக்க வேண்டும்.

 

குறைவான ஹலாலான வருமானத்தில் கிடைக்கும் நிம்மதியும் அருள்வளமும் தவறான வழியில் ஈட்டப்படும் அதிகமான வருமானத்தில் கிடைக்காது.

 

சக்கரவர்த்தி ஜஹாங்கிர்

 

இஸ்லாமிய வரலாற்றை இன்னும் புரட்டிப் பார்த்தால் இந்தியாவின் முதல் சக்கரவர்த்திகளில் ஒருவர் ஜஹாங்கிர், அவரின் மனைவி நூர்ஜஹான். அந்த நூர்ஜஹானை மணந்துகொண்ட பிறகு அவரின் ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்களையும், திருத்தங்களையும் வரலாறு தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

 

அந்த முதல் சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி, தன் மனைவியை மேடைக்கு கொண்டு வந்ததில்லை, வீதிக்கு கொண்டு வந்ததில்லை. நூர்ஜஹான் வெளியில் வராமல் உள்ளே இருந்தாலும்கூட ரிமோட் தன் கையில் வைத்துக்கொண்டு மன்னர் ஜஹாங்கிர் மூலம் அவர் தான் நிர்வாகம் நடத்தினார்.

 

வரலாறு சொல்கிறது; நூர்ஜஹான் வந்த பிறகு ஜஹாங்கிருடைய வாழ்கையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அதாவது, மொடக்குடிகாரராக இருந்த அவரை பக்குவப்படுத்திய பெருமை நூர்ஜஹானையே சேரும். அதுமட்டுமல்ல ஆட்சியிலும், நிர்வாகத்திலும், அதிகாரம் எடுக்கக்கூடிய முடிவிலும், நூர்ஜஹானுடைய பங்களிப்பு, அவரின் தலையீடு அதிகமாகவே இருந்தது. நாட்டிலே மிகப்பெரிய அளவில் கல்வியும், கலையும், அறிவும் வளர்ச்சியடைந்ததில் நூர்ஜஹானுடைய பங்கீடும், தலையீடும் மிக அதிகமாக இருந்தது என வரலாறு சொல்கிறது.

 

தாயாரின் அக்கறை

  

பேரறிஞர் இமாம் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அன்னாரின் தாயார் அதிக அக்கறை எடுத்துக்கொண்டார்கள். ஒருமுறை கூறினார்கள். என் அன்பு மகனே! நீ கல்வியைத் தேடு. நான் நூல் நூற்றுச் சம்பாதித்து உனக்கு வேண்டிய அனைத்தையும் செய்து தருவேன்.

 

மேலும் கூறினார்கள். "என் அன்பு மகனே! பத்து எழுத்துக்களை நீ கற்றுக்கொண்டாய் எனில், அது உன் உள்ளத்தில் இறையச்சத்தை, சாந்தத்தை அதிகப்படுத்துகிறா? என்று பார். அப்படி இல்லையெனில், அது உனக்குக் கேடு விளைவிக்குமே தவிர பயன் அளிக்காது என்பதை அறிந்துகொள்" என்று உபதேசித்தார்கள்.

  

பேரறிஞர்களான ஷாஃபிஈ (ரஹ்), அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்), புகாரீ (ரஹ்) போன்றோர் தமது சிறு பிராயத்தில் தந்தையை இழந்து அநாதையாகி, தமது தாயாரின் வளர்ப்பில் தான் மாபெரும் மேதையானார்கள்.

 

முதல் பெண்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَلَوْلاَ حَوَّاءُ لَمْ تَخُنْ أُنْثَى زَوْجَهَا الدَّهْرَ ) ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம் - அலை அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்த பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3399, முஸ்லிம்-2917

 

பேரறிஞர் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஆதம் (அலை) அவர்கள் (தடை செய்யப்பட்ட) அந்த மரத்திலிருந்து உண்டபோது, அல்லாஹ், ( لِمَ أَكَلْتَ مِنْ الشَّجَرَةِ الَّتِي نَهَيْتُك عَنْهَا ) "நான் தடை செய்திருந்த மரத்திலிருந்து ஏன் உண்டீர்?" என்று கேட்டான். அதற்கு அவர், ( حَوَّاءُ أَمَرَتْنِي ) “(எனது மனைவி) ஹவ்வா தான் என்னை உண்ணுமாறு பணித்தார்" என்று (பதில்) கூறினார். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர் அல்அஃராஃப் வசனம்-22

 

திருக்குர்ஆன் விரிவுரையாளர் பேரறிஞர் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஆதம் (அலை) அவர்களுக்கு முன்பே, தடுக்கப்பட்ட மரத்திலிருந்து ஹவ்வா (அலை) அவர்கள் சாப்பிட்டுவிட்டார். அவர்தான் அதை சாப்பிடுமாறு ஆதம் (அலை) அவர்களை தூண்டினார். அல்லாஹ்வே நன்கு அறிபவன். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா

 

ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்களையும் அவருடைய துணைவியார் ஹவ்வா (அலை) அவர்களையும் படைத்து சொர்க்கத்தில் தங்குமாறு இறைவன் பணித்தான். அப்போது சொர்க்கத்தும் மரங்களில் ஒன்றைக் காட்டி, அதன் அருகே செல்லக்கூடாது என்றும் அதன் கனியை புசிக்கக் கூடாது என்றும் அவர்கள் இருவருக்கும் இறைவன் தடை விதித்தான். ஆனால், ஷைத்தான் அவ்விருவருக்கும் ஆசைக் காட்டி, இறைவனின் தடை ஆணையையும் மறக்கச் செய்து கனியை புசிக்க வைத்துவிட்டான். (இதையே தலைப்பில் காணும் திருவசனம் தெளிவுபடுத்துகிறது)

 

ஆதம் (அலை) அவர்கள் அந்தக் கனியை சாப்பிடுவதற்கு, அவருடைய துணைவியார் ஹவ்வா (அலை) அவர்கள் ஊக்கமளித்தார். இதையே இங்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். நூல்:-  தக்மிலத்து ஃபத்ஹில் முல்ஹிம்

 

அந்த மரக்கனியை புசிக்குமாறு இப்லீஸ் அவர்களை தூண்டிவிட ஹவ்வாவும் ஆதமுக்கு ஊக்கமளித்தார். முதல் பெண்ணை தொடர்ந்து மற்ற பெண்களும் அவ்வாறே தம் கணவர்களுக்கு பேராசை ஊட்டி வருகின்றனர் என இதையே இங்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.  நூல்:- உம்தத்துல் காரீ, இர்ஷாதுஸ் ஸாரீ

 

சுருங்கக்கூறின், இப்லீசின் ஏமாற்று வலையில் முதலில் தாம் சிக்கி, தமது கணவரையும் சிக்க வைத்தது ஒரு பெண் என்பது தெளிவாகிறது.

 

மன்னன் மாண்டான்

 

இறைத்தூதர் யஹ்யா (அலை) அவர்கள் காலத்தில் டமாஸ்கசில் உள்ள ஓர் அரசன், தான் மணமுடிக்கத் தடை செய்யப்பட்ட ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினான். அதை யஹ்யா (அலை) அவர்கள் தடுத்தார்கள். இவ்விசயம் அப்பெண்ணுடைய நெஞ்சில் ஆழமாக பதிந்துவிட்டது. (தந்திரத்தின் அடிப்படையில்) அவளிடம் அவன் எதை விரும்பினானோ அது (திருமணம்) நடந்தேறியது.

 

அதன்பிறகு அவள், ( أُرِيدُ دَمَ يَحْيَى بْنِ زَكَرِيَّا )  "யஹ்யா பின் ஸகரிய்யாவின் இரத்தம் வேண்டும்" என்று அவனிடம் கேட்டாள். அதன்படி யஹ்யா (அலை) அவர்கள் கொலை செய்யப்பட்டு, அன்னாருடைய தலையையும், ஒரு கோப்பையில் இரத்தத்தையும் கொண்டுவந்து அவளின் முன்னிலையில்  வைக்கப்பட்டது. அன்று மாலை நேரம் ஆனபோது அல்லாஹ், அந்த அரசனையும் அவனுடைய குடும்பத்தாரையும் அவனுடைய பணியாட்களையும் பூமியில் புதையச் செய்து அழித்துவிட்டான். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா

 

யஹ்யா (அலை) அவர்கள், "திருமணம் செய்வதற்குக் கூடாத உறவு முறை" என்று எடுத்துரைத்த ஒரே காரணத்திற்காக ஒரு பெண்ணால் வஞ்சம் தீர்க்கப்படுகிறார்கள். இதற்குக் காரணமான அரசன் மற்றும் அனைவரையும் அல்லாஹ் பலி வாங்கினான்.

 

மனித சமுதாயம் சுமூகமாக இயங்குவதற்கும், ஒழுக்க நெறிமுறைகளைப் பேணுவதற்கும் சில உறவுமுறை எல்லைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், சில நேரங்களில் மனித மனம் இந்த எல்லைகளைத் தாண்டிச் செல்ல முற்படுகிறது. அது மிகவும் தவறானது.

 

கடும் தவம் செய்தவர்

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் எகிப்து தேசத்தின் கவர்னர் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், "ஜனாதிபதி அவர்களே! எங்கள் பகுதிக்கு குர்ஆனை நன்கு கற்றறிந்த ஒருவரை அனுப்பி வையுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். அதற்கு ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் முல்ஜம் என்பவரை அனுப்பிவிட்டு, இவ்வாறு கடிதம் எழுதினார்கள். இவர் குர்ஆனை கற்றறிந்த அறிஞர் ஆவார். இவர் மதீனாவுக்கு தேவையானவராக இருந்தபோதும், நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இவரை நான் எகிப்து தேசத்திற்கு அனுப்பி வைக்கிறேன். இவர் குர்ஆனை போதிக்கும் ஆசிரியர் என்பதால் இவருக்குரிய தங்கிமிடம் வழங்கி, இவரிடம் கண்ணியம் பேண வேண்டும்.

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களால் குர்ஆன் உடையவர் என்று கண்ணியப்படுத்தப்பட்ட அப்துர் ரஹ்மான் பின் முல்ஜம் என்பவர் தான் இஸ்லாத்தின் முதல் குழப்பவாதிகளான கவாரிஜிய்யாக்களுடன் சகவாசம் கொண்டு வழிக்கெட்டுப்போனார்.

 

இஸ்லாத்தின் முதல் குழப்பவாதிகளான காரிஜிய்யாக்களைச் சேர்ந்த கதவ்ம் என்ற அழகு வாய்ந்த பெண்ணின்மீது இவர் காதல் வசப்பட்டுவிட்டார். அவளின் தந்தையும்,  சகோதரரும் நஹர்வான் போரில் கொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களது படுகொலைக்கு வஞ்சகம் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவளது இதயத்தை எப்போதுமே கனன்று கொண்டிருந்தது. எனவே, ஜனாதிபதி அலீ (ரலி) அவர்களின் தலையைத் துண்டித்து என் முன் கொண்டு வந்து அதை (மஹ்ர் எனும்) திருமணக் கொடையாகக் கொடுத்து, என்னை மணம்முடித்துக் கொள்வீராக" என்று அப்துல் ரஹ்மான் பின் முல்ஜம் என்பவரிடம் கூறிவிட்டாள். எனவே, இவர் இந்தப் பணியை நிறைவேற்றுவதற்காக தம்முடன் இரண்டு காரிஜியாக்களை இணைத்துக்கொண்டார். அவர்களில் ஒருவன் வெர்தன். இவன், கதவ்ம் என்ற அந்தப் பெண்ணின் உறவுக்காரன். மற்றொருவன் ஷவ்பிப் பின் பிஜ்ரா.

 

இந்த மூன்று சதிகாரர்களும் ஜனாதிபதி அலீ (ரலி) அவர்களின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தனர். அலீ (ரலி) அவர்கள் பள்ளிவாசலுக்குள் வந்து தொழுகைக்காக தக்பீர் கட்டியவுடன் வெர்தன் என்பவன் அலீ (ரலி) அவர்கள் மீது ஓங்கி வெட்டினான். அந்த வெட்டு சரியாகப்படாமல் இலக்கு தவறியது. பின்னர் அப்துர் ரஹ்மான் பின் முல்ஜம் தனது விஷம் தோய்ந்த வாளால் அலீ (ரலி) அவர்களின் முன்நெற்றியில் வெட்டினார். விஷம் தோய்ந்த வாளால் வெட்டப்பட்ட அலீ (ரலி) அவர்கள் அன்றிலிருந்து மூன்றாவது நாள் (கி.பி.24-01-661 அன்று) மரணமடைந்தார்கள்.

 

மரண தண்டனை கொடுப்பதற்காக இவரை இழுத்துச் சென்றபோது இவரது இரண்டு முட்டுக்கால்களும் நெற்றியும் கருத்து காய்ந்து போய் இருந்தது. அது அவர் அதிகமாக குர்ஆன் ஓதுவதிலும் தொழுவதிலும் ஏற்பட்ட அடையாளம் ஆகும். அழகாக முறையில் குர்ஆனை தானும் கற்று, பிறருக்கும் கற்றுக்கொடுத்து வந்த மனிதர், கெட்ட சகவாசத்தால் தம்முடைய அழகிய வாழ்க்கையைத் தொலைத்து, கெட்டு சீரழிந்து போனார்.

 

கடும் தவம் செய்தவர்கள்கூட பெண்ணால் வழிகெட்டுப் போன வரலாறுகள் பல உண்டு. அவர்களில் ஒருவர் தான் இந்த அப்துர் ரஹ்மான் பின் முல்ஜம் என்பவர்

 

அறப்பணியாளர்

 

அபுல்ஃபரஜ் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) கூறினார்கள். பக்தாத் நகரில் சாலிஹ் முஅத்தின் என்றழைக்கப்பட்ட ஒருவரைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். நாற்பது ஆண்டுகள் பள்ளிவாசலில் (அதான் எனும்) பாங்கு சொல்லி, மக்களால் மிகவும் நல்லவர் என்று அறியப்பட்டவர். அவர்  ஒருநாள் வழக்கம்போல் பாங்கு சொல்வதற்காகப் பள்ளிவாசலின் மினாரா மீது ஏறினார். அப்போது அருகில் இருந்த ஒரு கிறிஸ்தவரின் வீட்டு அழகிய பெண்ணை தற்செயலாகக் காண நேரிட்டது. அந்த கணநேரப் பார்வையில் தன் மனதைக் பறிகொடுத்து, இச்சைக்கு ஆளானார்.

 

உடனடியாக அந்தப் பெண்ணின் வீட்டுக்கதவைத் தட்டினார். உள்ளிருந்து, "யார் அது?"  என்று குரல் வந்தது. "நான் தான் பாங்கு சொல்லக்கூடிய ஸாலிஹ்" என்றார். கதவு திறக்கப்பட்டதும், அவர் அவளை கட்டியணைத்தார். அந்தப் பெண், ( أَنْتُمْ أَصْحَابُ الْأَمَانَاتِ فَمَا هَذِهِ الْخِيَانَةُ ) "நீங்கள் தான் இறைநம்பிக்கையைப் பேணவேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள். பிறகு எதற்காக இந்த துரோகச் செயலை செய்கிறீர்கள்?” என்று கேட்டாள். அதற்கு அவர், ( تُوَافِقِيْنِي عَلَى مَا أُرِيدُ وَإِلَّا قَتَلْتُكِ ) "என் விருப்பத்திற்கு உடன்படு! இல்லையென்றால், உன்னைக் கொன்றுவிடுவேன்" என்று மிரட்டினார்.

 

அவள் (புத்திசாலித்தனமாக), ( لَا. إلَّا أَنْ تَتْرُكَ دِينَكَ ) "முடியாது; நீங்கள் உங்கள் மார்க்கத்தைக் கைவிட்டால் மட்டுமே இது சாத்தியம்" என்றாள். (இச்சையின் உச்சத்தில் இருந்த) அவர், ( أَنَا بَرِيٌّ مِنْ الْإِسْلَامِ وَمِمَّا جَاءَ بِهِ مُحَمَّدٌ ) "நான் இஸ்லாத்தை விட்டும், முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை விட்டும் வெளியேறிவிட்டேன்" என்றார். அதைக் கேட்ட அப்பெண், ( إِنَّمَا قُلْتَ هَذَا لِتَقْضِيَ غَرَضَكَ ثُمَّ تَعُودَ إلَى دَيْنِكَ، فَكُلْ مِنْ لَحْمِ الْخِنْزِيرِ ) "உங்கள் காரியம் முடிந்ததும் மீண்டும் உங்கள் மார்க்கத்திற்குச் சென்றுவிடுவீர்கள். அதனால்தான்  இவ்வாறு சொல்கிறீர்.  (எனவே, நான் உங்களை முழுமையாக நம்ப வேண்டுமென்றால்) இந்த பன்றி இறைச்சியைச் சாப்பிடுங்கள்" என்றாள். அவர் அதையும் சாப்பிட்டார். ( فَاشْرَبِ الْخَمْرَ ) "இந்த மதுவையும் குடியுங்கள்" என்றாள். அதையும் குடித்தார்.

 

மதுவின் போதை தலைக்கேறியதும் அவர் அவளை நெருங்கினார். உடனே அப்பெண் ஒரு அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு, ( اِصْعَدْ إلَى السَّطْحِ حَتَّى إذَا جَاءَ أَبِي زَوَّجَنِي مِنْك ) "என் தந்தை வந்ததும் உமக்கு என்னை மணமுடித்துத் தருவார். அதுவரை வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று காத்திருங்கள்" என்றாள். போதையில் மொட்டை மாடிக்குச் சென்றவர், நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

உடனே அப்பெண் ஒரு துணியால் அவரது உடலைப் போர்த்தி வைத்தாள். பிறகு அவள், இரவில் வீடு திரும்பிய தந்தையிடம் நடந்ததைக் கூற, அவரும் அந்த உடலை வீதிக்குக் கொண்டு சென்று வீசிவிட்டார். அதன் பிறகு அவரின் உண்மை நிலை அம்பலமானது. அவர் மதம் மாறியவர் என்பதனால், இறுதியில் குப்பைமேட்டில் தூக்கி எறியப்பட்டார். நூல்:- தம்முல் ஹவா ( ذم الهوى -  ابن الجوزي ), அஹவாலுல் மவ்தா வ உமூருல் ஆகிரா ( أحوال الموتى وأمور الآخرة - القرطبي )

 

நாற்பது வருட காலங்கள் ஓர் பள்ளிவாசலில் பாங்கு சொல்லக்கூடிய அறப்பணியை செய்து கொண்டிருந்த ஒரு மனிதர் ஒரு நிமிடம் சபலப்பட்டதை அறிந்த ஒரு கிறிஸ்துவப் பெண் அவருடைய இறைநம்பிக்கையை முழுமையாக பறித்தெடுத்து, அவரை இறைமறுப்பாளராக மாற்றிவிட்டாள்.

 

மனித வாழ்க்கையில் ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிக முக்கியமான தூண்களாகக் கருதப்படுகின்றன. ஆனால், சில நேரங்களில் உணர்ச்சிகளின் தூண்டுதலாலும், சபலங்களாலும் மனிதர்கள் தங்கள் பாதையிலிருந்து விலகிச் செல்கிறார்கள். குறிப்பாக, ஒரு பெண்ணின் கவர்ச்சியாலோ அல்லது சபலத்தைத் தூண்டும் செயல்களாலோ ஒரு ஆண் தன் நெறியான பாதையை விட்டு வழிதவறிப் போவது காலங்காலமாக நடந்து வரும் ஒரு சமூக நிகழ்வாகும்.

 

ஒரு மனிதன் சபலத்தால் வழிதவறும்போது அவனது வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது.

 

ஆண்-பெண் ஈர்ப்பு என்பது இயற்கையானது என்றாலும், அது எல்லை மீறி சபலமாக மாறி ஒருவரை வழி கெடுக்கும்போது அது பேரழிவை மட்டுமே தரும். "மன தூய்மையே மிகச்சிறந்த அறம்" என்கிறது இஸ்லாம். தற்காலிகச் சபலங்களுக்கு அடிமையாகாமல், தன் அறிவாலும் சுயக்கட்டுப்பாட்டாலும் நேர்வழியில் நடப்பதே ஒரு மனிதனுக்குப் பெருமை சேர்க்கும்.

 

ஆகவே, அல்லாஹுத்தஆலா நம்மையும், நம்முடைய பெண்களையும் நேர்வழி காட்டும் பண்பாளர்களாக மிளிரச் செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

 

 

No comments:

Post a Comment

ஆவதும் பெண்ணாலே! அழிவதும் பெண்ணாலே!

  ஆவதும் பெண்ணாலே! அழிவதும் பெண்ணாலே!   فَدَلَّاهُمَا بِغُرُورٍ இப்லீஸ் அவ்விருவரையும் (தனது) ஏமாற்று வலையில் சிக்க வைத்தான். திருக்...