Search This Blog

Monday, 28 September 2026

எறும்புகள்

எறும்புகள்

 

حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ

அவர்கள் எறும்புகளின் ஓடைக்கருகே வந்தபோது ஓர் எறும்பு, "எறும்புகளை! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்துவிடுங்கள். சுலைமானும் அவருடைய படையினரும் தங்களுக்கே தெரியாமல் உங்களை மிதித்து விட வேண்டாம்" என்று கூறியது. திருக்குர்ஆன்:- 27:18

 

உலக எறும்புகள் தினம் (World Ant Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 5 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பூமியின் சுற்றுச்சூழல் அமைப்பில் எறும்புகளின் முக்கியத்துவத்தையும், அவற்றின் கடின உழைப்பையும் போற்றும் வகையில் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

எறும்பு ஒரு வியக்கத்தக்க சுறுசுறுப்பான மற்றும் ஒழுக்கமான பூச்சியினமாகும். உலகெங்கும் காணப்படும் இந்த சிறிய உயிரினத்திடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். எறும்புகளின் வாழ்க்கை முறை, குணங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

 

சிவப்பு நிற சிறிய நெருப்பெறும்பு, உருவத்தில் சற்று பெரிய கரிய கட்டெறும்பு, மரத்திலிருக்கும் வெளிர் சிகப்பு நிற சூவை எறும்பு, சிறிய கருப்பு எறும்பு இவைதான் நமக்குத் தெரிந்த எறும்பு வகைகள். ஆனால், உலகில் 11,931 வகையான எறும்புகளும், இதில் 5.2 சதவிகிதம் வகைகள் இந்தியாவிலும் உள்ளன.

 

இந்த பூமிப் பந்தில் எறும்புகள் இல்லாத இடம் மிகக் குறைவு. எறும்புகள் சுமார் 150 அண்டார்டிகா போன்ற கடும்பனி பிரதேசங்களைத் தவிர பூமியின் பல இடங்களில் எறும்புகள் பரவி காணப்படுகின்றன. ஆயினும் எறும்பு வகைகள் அதிகமாக இருப்பது, பூமத்திய ரேகைக்கு அருகாமையிலுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில்தான். இப்பகுதிகளில் உள்ள யானை, புலி, ஒட்டகச் சிவிங்கி இன்னும் பல தரைவாழ் விலங்குகள் அனைத்தையும் ஒரு தராசுத் தட்டில் வைத்து, மற்றொரு தட்டில் எறும்புகள் அனைத்தையும் வைத்தால், எறும்புகள் உள்ள தட்டுதான் எடை தாங்காமல் கீழே இறங்கும். உருவத்தில் சிறியதாக இருந்தாலும். எண்ணிக்கையில் அபரிமிதமாக இருப்பவை எறும்பினங்கள்.

 

பெற வேண்டிய படிப்பினை

 

இறைதூதர் சுலைமான் (அலை) அவர்கள் தம்முடன் இருந்த படை பட்டாளங்களுடன்  எறும்புகள் கூட்டமாக வாழ்ந்த ஓர் ஓடையைக் கடந்து சென்றபோது, ஓர் தலைமை எறும்பு, "எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்துவிடுங்கள். சுலைமானும் அவருடைய படையினரும் தங்களுக்கே தெரியாமல் உங்களை மிதித்துவிட வேண்டாம்" என்று கூறியது. அந்த எறும்பு கூறியதை சுலைமான் (அலை) அவர்கள் விளங்கிக்கொண்டு புன்னகைத்து சிரித்தார்கள். இது குறித்தே தலைப்பில் காணும் திருவசனம் கூறுகிறது.

 

எறும்புகள் ஒரு எச்சரிக்கை மணியை ஒலித்ததன் மூலம் சுலைமான் நபி தன் படையினரை எறும்புகள் மீது மிதிப்பதைத் தடுத்தது. இந்த நிகழ்வு, எறும்புகளின் புத்திசாலித்தனம், ஒருங்கிணைந்த செயல்பாடு, மற்றும் இறைவனின் படைப்பில் உள்ள சிறிய உயிரினங்களுக்கான மரியாதையை எடுத்துரைக்கிறது.

 

மேலும், எறும்புகள் தங்கள் இருப்பிடத்தை எவ்வாறு பாதுகாத்துக்கொள்கின்றன என்பதையும், தங்கள் உயிர்களைப் பாதுகாக்க எவ்வாறு எச்சரிக்கை செய்கின்றன என்பதையும் எடுத்துரைக்கிறது.

 

எறும்புகள் ஒன்றுபட்டு ஒரு குறிக்கோளுடன் செயல்படும் தன்மை, இஸ்லாமியர்களுக்கு மத்தியில் ஒற்றுமை, தலைமைக்குரிய பொறுப்பு மற்றும் ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

 

எறும்புகளின் பிரார்த்தனை

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ اللَّهَ وَمَلاَئِكَتَهُ وَأَهْلَ السَّمَوَاتِ وَالأَرْضِ حَتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا وَحَتَّى الْحُوتَ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِ النَّاسِ الْخَيْرَ ) அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் விண்ணிலும் மண்ணிலும் வசிப்போரும் பொந்துகளில் வாழும் எறும்புகள் (தண்ணீரில் வாழும்) மீன்கள் உட்பட அனைத்தும், மக்களுக்கு நல்லதை கற்பிப்பவருக்காக அருள் வேண்டிப் பிரார்த்திக்கின்றன. நூல்:-  திர்மிதீ-2606

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்கள் மழை பொழிய வேண்டுவதற்காக நகரை விட்டு வெளியேறினார்கள். அப்போது ஓர் எறும்பு நிமிர்ந்து படுத்துக்கொண்டு தன்னுடைய கால்களை வானத்தின் பக்கம் தூக்கிவாறு, ( اَللَّهُمَّ إِنَّا خَلْقٌ مِنْ خَلْقِكَ, لَيْسَ بِنَا غِنًى عَنْ سُقْيَاكَ ) "அல்லாஹ்வே! நாங்கள் உன்னுடைய படைப்புகளில் ஒரு படைப்பாக உள்ளோம். உன் மழை எங்களுக்கு அவசியம் தேவை" என்று கூறிக் கொண்டிருந்ததை கண்டார்கள்.

 

பின்னர் சுலைமான் (அலை) அவர்கள், ( ارْجِعُوا لَقَدْ سُقِيتُمْ بِدَعْوَةِ غَيْرِكُمْ ) "நீங்கள் எல்லோரும் திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் அல்லாத வேறு ஒரு பிராணியின் பிரார்த்தனையால் நீங்கள் நீர் புகட்டப்பட்டு விட்டீர்கள்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், ஹாகிம், தாரீக் அல்கபீர் இமாம் புகாரீ, அத்துஆ இமாம் தப்ரானீ, அஸ்ஸுகாத் இமாம் இப்னு ஹிப்பான், அத்தாரீக் இமாம் கதீப் அல்பக்தாதீ, புலூகுல் மராம்-544

 

மனிதர்களின் நலனில் எறும்புகள் அக்கறை கொள்கிறது. எனவே, மனிதர்கள் 'எறும்புகள் தானே' என்ற சாதாரணமாக கருதாமல் அவற்றின்  விஷயத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.

 

எறும்புகளின் பயன்கள்

 

பூமி மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்திற்கு எறும்புகள் மிக முக்கியமான பங்களிப்பை வழங்குகின்றன.

 

எறும்புகள், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் பல வழிகளில் உதவுகின்றன. நிலத்தைக் குடைந்து அவை புற்று கட்டுவதால், மண்ணிற்குள் காற்று உட்புகுவதற்கான பணியை செய்வதில் முக்கிய பணியாற்றுகிறது. இதனால் நீர் மற்றும் பிராணவாயு ஆகியவை செடி, கொடிகளின் வேர்களுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. மண் வளமும் பெருகுகிறது. இதனால் விவசாயத்திற்கு நன்மை கிடைக்கிறது.

 

‘இலை வெட்டி எறும்பு’ என்று அழைக்கபபடக்கூடிய எறும்புகள், இலைகளை வெட்டிய உடன் அப்படியே பச்சையாக இவை சாப்பிடுவதில்லை. புற்றுக்குள் ஓரிடத்தில் இலைகளைச் சேமிக்கின்றன. அந்த இலைகளின் மீது வேதித் திரவத்தைச் சுரக்கின்றன. சில நாள்களில் இலைகள் மக்கி, அதில் பூஞ்சை உருவாகும். அந்தப் பூஞ்சைகளைத்தான் இலைவெட்டி எறும்புகள் சாப்பிடுகின்றன. மக்கிய இலைகள் மண்ணுக்கு உரமாகிறது.  

 

கரிமக் கழிவுகளைச் சேகரித்து துகள்களாக மாற்றி மண்ணில் சேர்ப்பதால் தாவரங்களுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன.

 

இறந்த பூச்சிகள் மற்றும் சிறிய விலங்குகளின் சடலங்களை அழித்து சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருக்கின்றன.

 

தாவர விதைகளை ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்குச் சுமந்து சென்று புதிய செடிகள் வளர உதவுகின்றன.

 

பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் மற்ற சிறிய பூச்சிகளை வேட்டையாடி அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகின்றன.

 

எறும்புகள் இருக்கும் மரங்களின் பிற பூச்சிகளின் தாக்குதல் 70 முதல் 75 குறைவு என்கிறது ஒரு ஆய்வு. மரம் எறும்புகளுக்கு உணவைத் தருவதால் எறும்புகள் மரத்திற்கு (பிற பூச்சிகள் அண்டவிடாமல்) பாதுகாப்பு தருகிறது.

 

எறும்புகளின் கூட்டு ஒழுக்கம் மற்றும் திட்டமிடல் போன்ற பண்புகள் கணினி அறிவியல் மற்றும் ரோபோடிக்ஸ் துறைகளில் ஆய்வுக்குப் பயன்படுகின்றன.

 

எறும்புகள், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் பல வழிகளில் உதவுகின்றன.

 

தீயினால் பொசுக்கக் கூடாது

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( نَزَلَ نَبِيٌّ مِنَ الأَنْبِيَاءِ تَحْتَ شَجَرَةٍ فَلَدَغَتْهُ نَمْلَةٌ، فَأَمَرَ بِجَهَازِهِ فَأُخْرِجَ مِنْ تَحْتِهَا، ثُمَّ أَمَرَ بِبَيْتِهَا فَأُحْرِقَ بِالنَّارِ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ فَهَلاَّ نَمْلَةً وَاحِدَةً ) இறைத்தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்தின் கீழே தங்கினார். அவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே அவர் தமது (பயண) மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்தும்படி உத்தர விட்டார். அவ்வாறே அவை மரத்தின் கீழிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. பிறகு எறும்புப் புற்றை எரிக்கும்படி உத்தர விட்டார். அவ்வாறே அது தீயிட்டு எரிக்கப்பட்டது.

 

அப்போது அல்லாஹ் அவருக்கு, ‘‘உங்களைக் கடித்தது ஒரேயோர் எறும்பல்லவா? (அதற்காக ஓர் எறும்புக் கூட்டத்தையே எரிக்கலாமா?)” என்று வஹீ’ அறிவித்(து அவரைக் கண்டித்)தான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3319, முஸ்லிம்-4512

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். நபியவர்கள் மலம் ஜலம் கழிக்க சென்றுவிட்டு திரும்பி வந்த பிறகு எறும்புகளும் அதன் புற்றும் தீயினால் பொசுக்கப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது நபியவர்கள், ( مَنْ حَرَّقَ هَذِهِ ) "(எறும்போடு) இந்தப் புற்றை பொசுக்கியது யார்?" என்று கேட்டார்கள். "நாங்கள்தான் (பொசிக்கிறோம்)" என்று கூறினோம். அப்போது நபியவர்கள், ( إِنَّهُ لاَ يَنْبَغِي أَنْ يُعَذِّبَ بِالنَّارِ إِلاَّ رَبُّ النَّارِ ) "நெருப்பைப் படைத்தவனைத் தவிர வேறு யாருக்கும் நெருப்பால் தண்டிக்கும் உரிமை இல்லை" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-2300

 

அந்த நபியின் மார்க்கத்தில் எறும்பை கொல்வதும் அதை நெருப்பால் எரிப்பதும்கூட அனுமதிக்கப்பட்டிருக்கலாம். எனவேதான், கடித்த ஓர் எறும்புக்குப் பதிலாக எறும்புப் புற்றில் இருந்த அனைத்து எறும்புகளையும் எரித்ததை அல்லாஹ் கண்டித்தான். ஆனால், நமது மார்க்கத்தில் எந்த உயிரினத்தையும் நெருப்பால் எரிப்பது தடை செய்யப்பட்டதாகும். நூல்:- அல்மின்ஹாஜ்

 

வெட்டுக்கிளி, பேன், தேள், பாம்பு ஆகியவற்றை தீயிட்டு பொசுக்குவது விரும்பத்தகுந்த செயல்ல. விறகுகளில் ஏறிய எறும்புகள், தேள் போன்றவை நாம் அறியாத வகையில் விறகை எரிக்கும்போது பொசுங்கினால் தவறில்லை என்று அறிஞர்களில் சிலர் கூறியுள்ளனர்.

 

பொய் பேசினால்

 

பேரறிஞர் இப்னு கைய்யிம் (ரஹ்) அவர்கள் ஓர் எறும்புடன் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை இவ்வாறு விவரிக்கின்றார். ஒருநாள் ஒரு மரத்தடியில் நிழலுக்காக நான் அமர்ந்திருந்தேன். அப்போது அந்த மரத்தடியில் இருந்து ஓர் எறும்பு நான் இருக்கும் இடத்திற்கு அருகே ஊர்ந்து வந்தது. அங்கே இறந்துபோன வெட்டுக்கிளியின் இறக்கை ஒன்று கிடந்தது.

 

அதைத் தூக்கிச் செல்வதற்காக பலமுறை அந்த எறும்பு முயன்றது. பாரமாக இருந்த காரணத்தால் அதனால் தூக்க இயலவில்லை. உடனே அது தன்னுடைய வசிப்பிடத்தை நோக்கி வேகமாக திரும்பிச் சென்றது. சற்று நேரத்தில் எறும்புப் படையே வரிசையாக வந்தது. அவை அந்த இறக்கைக்கு அருகே வந்ததும் நான் அந்த இறக்கையை கையால் உயர்த்தினேன். அவை இறக்கையைத் தேடின. கிடைக்காதபோது திரும்பிவிட்டன. ஆனால், அந்த முதல் எறும்பு மட்டும் அங்கேயே நின்றது. (அதுதான் முதல் எறும்பாக இருக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றியது)

 

உடனே நான் அந்த இறக்கையை கீழே போட்டேன். அந்த எறும்பு மீண்டும் அதை தூக்க முயற்சித்தது. முடியவில்லை. மீண்டும் தம் படையை அழைத்து வர சென்றது.

 

முதல் முறையைவிட குறைவான எறும்புக்கூட்டம் வெளியே வந்தது. அவை அருகில் வந்ததும் மீண்டும் நான் அந்த இறக்கையை உயர்த்தினேன். அவை தேடின. கிடைக்காதபோது மீண்டும் வசிப்பிடம் நோக்கி திரும்பின. அந்த ஒற்றை எறும்பு மட்டும் அங்கேயே நின்றது. நான் மீண்டும் அந்த இறக்கையை போட்டேன். மூன்றாவது முறையும் அது தனது படையை அழைத்து வரச் சென்றது. முதல் இரண்டு முறையைவிட குறைவான எண்ணிக்கையில் கொஞ்சம் எறும்புகள் வசிப்பிடத்திலிருந்து வெளியே வந்தன. இப்போதும் நான் அந்த இறக்கையை உயர்த்தினேன்.

 

அப்போதுதான் ஆச்சரியமான ஒரு செயலைப் பார்த்தேன். ஆம்! அந்த எறும்புக்கூட்டம் கோபம் கொண்டன. தங்களை ஏமாற்றி அழைத்து வந்த அந்த ஒற்றை எறும்பை சூழ்ந்து கொண்டு, அதன் கை, கால்களை துண்டித்தன. பின்னர் அதன் வயிற்றை கிழித்து துண்டு துண்டாக கிழித்துப் போட்டன. அந்த எறும்பு இறந்தது. உடனே நான் அந்த இறக்கையை மீண்டும் போட்டேன். அதைப் பார்த்த ஏனைய எறும்புகள் கைசேதப்பட்டிருக்கும். ஆயினும், காலம் கடந்துவிட்டது.

 

உடனே அங்கிருந்து எழுந்து சென்று எனது ஆசிரியர் இப்னு தைமிய்யா (ரஹ் ) அவர்களைச் சந்தித்து விவரத்தை கூறினேன். அதற்கு அவர், ( أَمَّا أَنْتَ فَغَفَرَ اللَّهُ لَكَ، وَلَا تَعُدْ لِمِثْلِهَا، وَأَمَّا مَا حَدَّثْتَنِي بِهِ، فَسُبْحَانَ مَنْ عَلَّمَ النَّمْلَ قُبْحَ الْكَذِبِ، وَعُقُوبَةَ الْكَذَّابِ ) "நீ செய்த இந்த செயலுக்காக அல்லாஹ் உன்னை மன்னிப்பானாக. மீண்டும் இதுபோன்ற செயலைச் செய்யாதே. நீ என்னிடம் சொன்னதை வைத்து பார்க்கும் போது, பொய் சொல்வதன் அசிங்கத்தையும், பொய்யனுக்கான தண்டனையையும் எறும்புகளுக்குக் கற்பித்த அவன் பரிசுத்தமானவன். (பொய் சொல்வது மிகப்பெரிய தவறு என்ற சிந்தனை எறும்புகளின் உணர்வில் கலந்துள்ளன)" என்று கூறினார்கள். நூல்:- மிஃப்தாஹ் தாருஸ் ஸஆதா

 

மனிதன் பொய் பேசுவதை பாவமாகவே கருதுவதில்லை. மாறாக, "பொய் பேசுபவனே பிழைக்க தெரிந்தவன்" என்பதாக எண்ணப்படுகிறது. ஆனால் எறும்புகள், “பொய் பேசுதல் தண்டனைக்குரிய குற்றம்’ என்பதாக கருதுகிறது.

 

நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு சில உணவுத் துகள்கள் கீழே சிந்திவிட்டால், சற்று நேரத்தில் அங்கு ஒரு எறும்புக் கூட்டம் வந்து சேர்வதைக் காணலாம். இது எப்படிச் சாத்தியமாகிறது? உணவு இருப்பதைப் பார்க்கும் ஓர் எறும்பு அவற்றின் அருகில் வந்து தனது உணர்நீட்சிகளால் (Antenna) அதை தொட்டுப் பார்த்துவிட்டு, அங்கிருந்து செல்லும்போது தனது உடலின் பின்பகுதியிலிருந்து ஒருவித வேதிப்பொருளை தரையில் கோடு போல் தனது கூடு வரை ஆங்காங்கே இட்டுச் செல்கிறது. இதை மோப்பம் பிடிக்கும் மற்ற எறும்புகளும் அந்தத் தடத்தைப் பின்பற்றி உணவு இருக்குமிடத்தை அடைகின்றன. இந்தத் தடம் எப்போதும் வளைந்து வளைந்துதான் இருக்கும்.

 

பெரும்பாலும் சர்க்கரை உள்ள பொருள்களை எறும்புகள் உணவாகக் கொண்டாலும், பல வேளைகளில் மற்ற சிறிய உயிரினங்களை வேட்டையாடவும், இறந்து போன உயிரினங்களையும், விதைகளையும், மற்ற தாவர உறுப்புகளையும் சாப்பிட்டு வாழ்கின்றன.

 

நீதி நேர்மை

 

இஸ்தான்புல் நகரில் ஓர்  அரண்மனை உண்டு. அதன் பெயர் “தொப்காபி”  அங்குள்ள மரக்கட்டைகளை எறும்புகள் பெருமளவில் ஆக்கிரமித்திருப்பதாக உஸ்மானிய கிலாஃபத்தின் கலீஃபாக்களுள் ஒருவரான சுல்தான் சுலைமான் அல்கானூனி (ரஹ்) அவர்களுக்குச் செய்தி கிடைத்தபோது, அவர் மார்க்க அறிஞர்களிடம் ஆலோசனை கேட்டார். பின்னர், அக்காலத்தின் தலைசிறந்த மார்க்க அறிஞரும் முஃப்தியுமான அபூஸ்ஸுஊத் அஃபந்தி (ரஹ்) அவர்களிடம் இது குறித்து மார்க்கத் தீர்ப்பு கேட்டார். கேள்வியை கவிதையாக எழுதிக் கேட்டார்.

 

அதற்கு அபூஸ்ஸுஊத் அஃபந்தி, எறும்புகளிடம்கூட நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி கவிதை வரிகளால் பதிலளித்ததார்.

 

எறும்புகள் நம்முடைய பொருள்களைச் சுற்றி வளைத்தாலும் அதை உடனடியாக கொன்றுவிடுவது முறையல்ல. முதலில் எறும்புகள் அவற்றிலிருந்து விலகிச் செல்லும் விதமாக, அந்தப் பொருளை அசைத்து அவற்றை விரட்டலாம். அல்லது எறும்புகளை மொத்தமாக கூட்டிப் பெருக்கி வீட்டிற்கு வெளியே கொண்டு போய் போடலாம். காரணம் அவையும் நம்மைப் போன்ற உயிரினமே.

 

எறும்புகளைப் பற்றிய தகவல்கள்

 

எறும்புகள் குழுவாக வாழும் 6 கால்களைக் கொண்ட ஒரு பூச்சி இனம். எறும்புகள் அளவில் மிகச் சிறியவை என்றாலும், அவை மிகவும் வலிமையானவை. எறும்புகள் அதன் எடையைவிட 10 முதல் 50 மடங்கு எடையுள்ள பொருள்களைக் கூட தூக்கிச் செல்லும் ஆற்றல் மிக்கவை. சாதாரண வகை எறும்புகள் 90 நாள்கள் வரை உயிர் வாழும். ஆனால், அதிலுள்ள கருப்பு வகை பெண் எறும்புகள் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும் என்கிறார்கள் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள்.

 

எறும்புகள் மனித சமுதாயத்தினை போலவே குணாதிசயங்களை ஒத்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனித சமுதாயத்தினை போலவே எறும்புகளுக்கும் மன்னன், மகாராணி, அமைச்சர்கள், இராணுவ வீரர்கள், பணியாட்கள், அடிமைகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

 

எறும்புகள் கூட்டமாக வாழுமிடத்தை ஆங்கிலத்தில் (Colony) காலனி என்கிறார்கள். அதை நாம் புற்று என்கிறோம். இவற்றின் கூட்டமைப்பில் மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன:

1.ராணி எறும்பு (Queen Ant): முட்டையிட்டு தன் இனத்தைப் பெருக்குவது இதன் முக்கிய வேலை. இவை மற்ற எறும்புகளை விட அளவில் பெரியவை.

2.ஆண் எறும்புகள் (Male Ants): இவை ராணி எறும்புடன் இணை சேர மட்டுமே உதவுகின்றன.

3.வேலைக்கார எறும்புகள் (Worker Ants): உணவு சேகரிப்பது, கூட்டைப் பாதுகாப்பது, குஞ்சுகளைப் பராமரிப்பது போன்ற அனைத்து கடினமான வேலைகளையும் இவையே செய்கின்றன.

 

சராசரியாக ராணி எறும்புகள் 30 வருடங்கள் வரை உயிர் வாழும். வேலைக்கார எறும்புகள் 3 வருடம் வரை உயிர் வாழும். ஆண் எறும்புகள் சில மாதங்களுக்கு மட்டுமே உயிர் வாழும். சில எறும்புகள் நீருக்கு அடியில் 4 மணி நேரம் உயிர் வாழும்.

 

ஒரு எறும்புகள் கூட்டத்தில் நூறு முதல் இலட்சம் வரை பல எறும்புகள் உயிர் வாழ்கின்றன. இவற்றிற்கு காதுகள் கிடையாது. அதற்குப் பதிலாக அவற்றின் தலையில் உள்ள உணர்ச்சிக் கொம்புகள் (Antennae) மூலம் அதிர்வுகளையும், வாசனையையும் உணர்கின்றன. மிகச் சிறந்த மோப்ப சக்தியும், கண் பார்வையும் கொண்டது எறும்புகள். இதனால் நிலநடுக்கத்தை முன் கூட்டியே அதனால் அறிந்துகொள்ள முடியும். எறும்புகள் பகல் முழுவதும் இரை தேடி அலையும். இரவில் தன்னுடைய புற்றுகளில் ஓய்வு எடுக்கும். உணவுப் பொருள்களை தரையில் காணும் எறும்புகள் தனது சகாக்களுக்கு தனது தலையில் உள்ள ஆன்டெனா போன்ற உறுப்பின் மூலம் தகவலை தெரிவிக்கின்றன.

 

எறும்புகள் எங்கு சென்றாலும் வரிசையாகவே செல்வதை கவனித்திருப்பீர்கள். இதற்கு என்ன காரணம்? எறும்புகள் வரிசையில் செல்வதற்கும் திரும்பி வரும்போது ஒன்றுடன் ஒன்று சந்தித்துக்கொள்வதற்கும் அறிவியல்ரீதியாக என்ன காரணம்? எறும்புகள் எப்பொழுதும் கூட்டணியாகத்தான் வாழும். தங்களின் வசிப்பிடம் அல்லது இனத்தைப் பொறுத்து குழுக்களாக வாழும். எனவே, உணவு தேட எறும்புகள் செல்லும்பொழுது, ‘பீரோமோன் (Pheromone)’ என்னும் இரசாயனத்தை வழியில் விட்டுச்செல்லும்.

 

இதனால் முதலில் செல்லும் எறும்பின் இரசாயனத்தை, அதன் பின் வரும் எறும்பு நுகர்ந்து பின் தொடரும், தானும் இரசாயனத்தை விட்டுச் செல்லும். இதனால், அனைத்து எறும்புகளும் ஒன்றின் பின் ஒன்றாக வரிசையாக செல்லும். எனவே, அவை தங்களின் வழித்தடத்தை உறுதிசெய்து கொண்டு, திரும்பி வரும் பொழுதும் அவ்வாறே இரசாயனத்தை உமிழ்ந்துகொண்டு செல்லும். இதனால், அவை வழி மாறாமல் பயணிக்கும். எதிராளி யாராவது வந்தால்கூட எளிதாக அவை அடையாளம் கண்டுவிடும். மேலும், அதை கூட்டமாக எதிர்கொள்ள இவற்றுக்கு அந்த இரசாயன வித்தை உதவும்.

 

எறும்புகள் தங்களுக்குள்ளான கருத்துப் பரிமாற்றத்தை ஒன்றுக்கொன்று மோதி, அல்லது தங்களின் கால்களை உரசி வெளிப்படுத்தும், சைகை மொழி போல. அவை, தங்களின் முகத்தில் இருக்கும் கொடுக்குகள் மூலமாக இரசாயனத்தை உமிழ்வதில்கூட, கருத்துப் பரிமாற்றத்தை நிகழ்த்துகின்றன.

 

எறும்புகள் தனது காலனி முகப்பில் காவலாளி எறும்புகளை நிறுத்தி வைத்திருக்கும். அது அங்கே வரும் ஒவ்வொரு எறும்புகளையும் முகர்ந்து பார்த்துவிட்டே தனது புற்றுக்குள் அனுமதிக்கும். எறும்புகள் தகவல் பரிமாற்றத்திற்கு, “ஃபெர்மோன்’ எனும் வேதிப்பொருளை பயன்படுத்துகிறது.

 

மனிதர்களைப் போன்றே எறும்புகள் இறந்த உடல்களை மண்ணில் புதைத்துவிடுகின்றன. தங்களின் அன்றாடப் பணிகளை சீராக பங்கிட்டு செயலாற்றுகின்றன.

 

மழைக்காலங்களில் வெளியே சென்று உணவு தேட முடியாது என்பதால், வெயில்காலத்திலேயே தனக்குத் தேவையான உணவைச் சேகரித்துத் தன் புற்றில் சேமித்து வைக்கும் வழக்கம் கொண்டவை.

 

தானியங்களையும் விதைகளையும் தன் உணவுக்காக சேகரிக்கும் எறும்புகள் பூமிக்கு அடியில் அவற்றை ஒளித்து வைக்கும்போது அவற்றை இரண்டாக உடைத்து விடுமாம். ஏனென்றால் இரண்டாக உடைத்தால் அவை முளைப்பதில்லை.

 

ஆனால் கொத்தமல்லி விதையை மட்டும் எறும்புகள் நான்கு துண்டுகளாக உடைத்து வைத்திருந்தன. இதைக் கண்டு வியப்புற்றனர் விஞ்ஞானிகள். இது ஏன்? என்று ஆய்வு செய்தபோது அவர்களுக்கோர் உண்மை விளங்கிற்று. கொத்தமல்லி விதை இரண்டாக துண்டித்தாலும் முளைக்கும்.

 

கனவில் கண்டால்

 

கனவுகளுக்கு விளக்கம் கூறும் மேதைகளான இமாம் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்), அப்துல் கனி அந்நபுல்சி (ரஹ்) போன்றோர்களின் கூற்றுப்படி:

 

எறும்புகள் உணவைச் சுமந்து வீட்டிற்குள் வருவதாகக் கண்டால், வீட்டில் பொருளாதார வளம், அதிகரிக்கும் என்பதைக் குறிக்கிறது.

 

எறும்புகள் வீட்டை விட்டு வெளியேறுவதாகக் கண்டால் குடும்பத்தில் வறுமை அல்லது ஏதேனும் ஒரு சில நெருக்கடிகள் ஏற்படலாம். எறும்புகள் உணவைச் சுமந்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறினால் அது வாழ்வாதாரக் குறைவைக் காட்டுகிறது.

 

எறும்புகள் வீட்டை விட்டு பறந்து செல்வதாக கண்டால் அந்த வீட்டில் உள்ளவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவர் பயணம் மேற்கொள்ளலாம்.

 

படுக்கையில் எறும்புகள் இருப்பதாக கண்டால், அது குழந்தைகள் அல்லது சந்ததிகள் பெருகுவதைக் குறிக்கும்.

 

அதிகப்படியான எறும்புகள் வீட்டில் இருப்பதாக கண்டால், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அல்லது உறவினர்களின் வருகை அதிகரிப்பதைக் குறிக்கிறது.

 

உடல்நலம் குன்றிய ஒருவர் தன் உடலில் எறும்புகள் ஊர்வது போல் கனவு கண்டால், அவரது நோய் குணமாகச் சற்று கூடுதல் காலம் எடுக்கலாம் என்பதைக் காட்டுகிறது.

 

எறும்புகளின் மொழியைப் புரிந்துகொள்வது அல்லது அவற்றுடன் பேசுவதாக கண்டால், சுலைமான் (அலை) அவர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, இக்கனவு  உயர்ந்த பதவி, அதிகாரம் அல்லது தலைமைத்துவம் கிடைக்கப் போவதைக் குறிக்கிறது.

 

எறும்புகளைக் கொல்லுவதாக கண்டால், நல்லதாகக் கருதப்படுவதில்லை. இது பலவீனமான அல்லது தேவையுடைய மனிதர்களுக்குத் தீங்கு விளைவிப்பதைக் குறிக்கும்.

 

ஒரு நகரம் அல்லது வீட்டிலிருந்து எறும்புகள் தப்பி ஓடுவதாகக் கண்டால், திருடர்கள் அந்த இடத்திலிருந்து எதையாவது திருடுவார்கள். அதைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடைபெறும். ஏனெனில் எறும்புகளும் கட்டுமானமும் ஒன்றிணைந்து இருப்பதில்லை‌.

 

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

"சுறுசுறுப்பிற்கு எறும்பைப் பார்" என்ற பழமொழிக்கு ஏற்ப, எறும்புகள் நமக்கு உழைப்பையும், சேமிப்பையும், ஒற்றுமையையும் கற்றுத் தருகின்றன. அளவில் சிறியதாக இருந்தாலும், விடாமுயற்சியோடு செயல்பட்டால் வாழ்வில் பெரிய வெற்றிகளை அடையலாம் என்பதற்கு எறும்புகளே சிறந்த உதாரணம்.

 

எனவே, நாமும் ஒற்றுமையையும், உழைப்பையும் முறையாகப் பேணி இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

No comments:

Post a Comment

எறும்புகள்

எறும்புகள்   حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ ...