Search This Blog

Tuesday, 26 May 2026

நீர் பூத்த கண்கள்

 

நீர் பூத்த கண்கள்

 

وَأَعْيُنُهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ حَزَنًا أَلَّا يَجِدُوا مَا يُنْفِقُونَ

(அல்லாஹ்வின் பாதையில்) தாங்களே செலவு செய்துகொள்ள வசதியில்லையே என்று எண்ணித் துக்கத்தால் தங்களின் கண்களில் கண்ணீர் வடித்தவர்களாகத் திரும்பிச் சென்று விட்டார்கள்.  திருக்குர்ஆன்:- 9:92

 

கால்கள் நனையாமல் கடல் கடந்தவர்கள் உண்டு. கண்கள் நனையாமல் வாழ்க்கையை கடந்தவர்கள் இல்லை.

 

இவ்வுலகில் மனிதன் பல தருணங்களில் அழுகின்றான். கணவர், மனைவி, பிள்ளை, பெற்றோர், உடன்பிறப்புகள் போன்ற உறவுகளின் இறப்பால் அழுகிறான். வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டாலோ, நம்பிக்கைக்குரியவர் ஏமாற்றிவிட்டாலோ, தமது பொருளாதாரம் திருடப்பட்டுவிட்டாலோ, தாங்கமுடியாத வலி வேதனையை அனுப்பவித்தாலோ, தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றாலோ, தனக்கு ஆசைப்பட்ட பொருள் கிடைக்காவிட்டாலோ இயற்கை சீற்றம் ஏற்பட்டு பாதிப்பிற்குள்ளானாலோ, உணர்ச்சிவசப்பட்டவனாக இவ்வாறான பல்வேறு தருணங்களில் கண்ணீர் வடிக்கின்றான்.

 

அல்லாஹ்வுகாகவும், அவன் மார்க்கத்திற்காகவும் கவலைப்படுவதும் கண்ணீர் சிந்துவதும் இறைவழிபாடாகவும், அல்லாஹ்வின் கட்டளைக்கு வழிப்படுவதுமாகும். அதன் மூலம் நன்மைத்தராசின் நமது எடை கனத்து விடும். இறைநம்பிக்கை ஏற்றம் பெறும். எனவே, இறைவனுக்கு வழிப்பட இயலவில்லையென்றாலோ, அவனுக்கு மாறுசெய்ய நேர்ந்தாலோ கவலைப்படவேண்டும். பிறகு, அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரவேண்டும். இறைவனை அஞ்சி கண்ணீர் சிந்த வேண்டும். 

 

அழுவது அவமானமல்ல

 

அலீ தன்தாவீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அழுவது ஆண்மைக்குக் குறையென்றால், அகிலத்தின் தலைவர் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள், அழுதிருக்க மாட்டார்கள். அழுவதை அவமானமாகக் கருதாதீர்; ஏனெனில், உள்ளத்தின் நெருப்பை டமாஸ்கஸின் ஏழு நதிகளின் நீராலும் அணைக்கமுடியாது.  ஆனால், கண்ணீர் விடுவது அணைத்துவிடும்.

 

சில நேரங்களில் அழுதுவிடுதல் தான் ஆறுதலாகி விடுகின்றது. அழுதுவிட்டால் ஏதோ மனப்பாரம் குறைந்துவிட்டது போல் உணர்ந்திட முடியும். யாரிடமும் சொல்ல முடியாத வலிகள் அழுது விடுவதின் மூலம் உள்ளத்திற்கு நிம்மதியை தந்துவிடும். மருந்தே தேவையில்லாத மன வலிகளுக்கு அழுது முடிப்பது அருமருந்தாகிவிடும்.

 

யாருடைய அழுகையையும் எந்த இடத்திலும் தடுக்கக்கூடாது. அவர்களுக்கு வலி குறையும் வரை அழட்டும் என விட்டுவிட வேண்டும். வார்த்தைகளில் கிடைக்கும் ஆறுதலை தாண்டி, அவரவர் அழுது கொள்வதில் ஆறுதல் அதிகம் இருக்கின்றது. அழுகையும் அருமருந்து தான்.

 

சிலர், அழுவதே பெண்களுக்குரியது என்றெண்ணி, ஓர் ஆண்மகன் அழுவதைக் கண்டால் “பெட்டைத்தனமாக ஏன் அழுகிறாய்?” என்று கேட்பார்கள். இந்த எண்ணம் மிக தவறானது. அல்லது அழுவது கோழைத்தனம் என்று எண்ணுகிறார்கள். இதுவும் தவறான எண்ணமே! 

 

உதவமுடியவில்லையே!

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் தம்முடன் சேர்ந்து (தபூக்) அறப்போர் புரிய புறப்படுமாறு மக்களுக்கு கட்டளையிட்டார்கள். அப்போது நபித்தோழர்களில் ஒரு குழுவினர் நபியவர்களிடம் வந்தனர். அவர்களில் அப்துல்லாஹ் பின் முஙஃப்பல் அல்முஸனீ (ரலி) அவர்களும் இருந்தார்.

 

அக்குழுவினர், ( يَا رَسُولَ اللَّهِ، احْمِلْنَا ) "நாயகமே! (வசதியற்ற) எங்களுக்கு வாகன வசதி செய்து தாருங்கள்" என்று கோரினர். நபியவர்கள், ( وَاللَّهِ لَا أَجِدُ مَا أَحْمِلُكُمْ عَلَيْهِ ) "அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஏற்றிச் செல்வதற்கு என்னிடம் ஏதுவுமில்லை" என்று கூறினார்கள்.

 

எனவே, வந்தவர்கள் கண்ணீர் வடித்தவாறு திரும்பிச் சென்றனர். அறப்போர் புரியாமல் அமர்ந்திருப்பது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தோன்றியது. அவர்களுக்குப் பொருளாதார வசதியோ வாகன வசதியோ கிடைக்கவில்லை.

 

அவர்கள் தன்மீதும் தன் தூதர்மீதும் அதிக அன்பு வைத்திருப்பதை அல்லாஹ் கண்டபோது அவர்களின் இயலா நிலையைக் குறிப்பிட்டு தலைப்பில் காணும் வசனத்தை அருளினான். நூல்:-  தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர்

 

நன்மை செய்யும் வாய்ப்பு தவறிப்போகிறதே, அல்லாஹ்வின் ஆணைக்கேற்ப அறப்போருக்குச் செல்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என்பதை நினைத்து அழுதார்கள்.

 

இதற்கே இப்படி அழுதார்கள் என்றால்? அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் ஒரு குற்றத்தைச் செய்திருந்தால் அவர்களது உள்ளங்கள் எவ்வளவு வருந்தியிருக்கும்? எப்படி அழுதிருப்பார்கள்? உண்மை முஸ்லிமுடைய நிலை இப்படித்தான் இருக்கும்.

 

ஆனால், இன்று நம்மில் பலருடைய நிலை ஆச்சரியமாக உள்ளது. நன்மை செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தாலும்கூட அதை அலட்சியப் படுத்துகிறோம். கண்டும் காணாமல் கடந்து செல்கிறோம். நினைவிருக்கட்டும்! நன்மை செய்ய சந்தர்ப்பம் கிடைப்பதே ஓர் அருள்தான்.

 

இறையச்சத்தால்

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தனது நிழலின் மூலம் நிழலளிப்பான். (அதில் ஒருவர்) தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்திய மனிதன். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6806

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( كُلُّ عَيْنٍ بَاكِيَةٌ يَوْمَ الْقِيَامَةِ، إِلَّا عَيْنًا غَضّتْ عَنْ مَحَارِمِ اللَّهِ، وَعَيْنًا سَهِرَتْ فِي سَبِيلِ اللَّهِ، وَعَيْنًا يَخْرُجُ مِنْهَا مِثْلُ رَأْسِ الذُّبَابِ، مِنْ خَشْيَةِ اللَّهِ، عَزَّ وَجَلَّ ) மறுமைநாளில் எல்லாக் கண்களும் அழுதுக்கொண்டிருக்கும்; இறைவனால் தடை செய்யப்பட்டவற்றைப் பார்க்காமல் விலகிக்கொண்ட கண், இறைவழியில் விழித்திருந்த கண், இறையச்சத்தால் ஈயின் தலை போன்று (சிறிதளவேனும்) கண்ணீர் வெளிவந்த கண் ஆகியவற்றைத் தவிர. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னு அபீதுன்யா, தஃப்சீர் இப்னு கஸீர்

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( ابْكُوا فَإِنْ لَمْ تَبْكُوا فَتَبَاكَوْا ) (இறையச்சத்தினால்) அழு(து கண்ணீர் விடு)ங்கள். நீங்கள் அழவில்லையானால் சிரமம் எடுத்துக்கொண்டு அழுங்கள். அறிவிப்பாளர்:- சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-4186, முஸ்னது அபீயஅலா, ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّهِ حَتَّى يَعُودَ اللَّبَنُ فِي الضَّرْعِ ) அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தால் அழுதவர், கறந்த பால் மடி புகாதவரை நகரத்திற்குச் செல்லமாட்டார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2233

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, (  يَا رَسُولَ اللَّهِ ، بِمَ أَتَّقِي النَّارَ )  "அல்லாஹ்வின் தூதரே! நரக நெருப்பிலிருந்து என்னை நான் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?" என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ( بِدُمُوعِ عَيْنَيْكَ ؛ فَإِنَّ عَيْنًا بَكَتْ مِنْ خَشْيَةِ اللَّهِ لَا تَمَسُّهَا النَّارُ أَبَدًا ) "உமது கண்களின் கண்ணீரால் தான்; ஏனெனில், அல்லாஹ்வின் அச்சத்தால் கண்ணீர் சிந்தும் கண்ணை நரக நெருப்பு ஒருபோதும் தீண்டாது" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்:- ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் நூல்:- அர்ருக்கத்து வல்புகாஉ இமாம் ( الرقة و البكاء ) இப்னு அபீத்துன்யா

 

பேராசான் பெருமானார் ஸல் அவர்கள் கூறினார்கள். (  مَا مِنْ قَطْرَةٍ أَحَبَّ إِلَى اللَّهِ مِنْ قَطْرَةٍ مِنْ دَمٍ فِي سَبِيلِ اللَّهِ ، وَقَطْرَةِ دُمُوعٍ قُطِرَتْ مِنْ عَيْنِ رَجُلٍ فِي جَوْفِ اللَّيْلِ مِنْ خَشْيَةِ اللَّهِ ) இறைவனின் வழியில் சிந்தப்படும் ஒரு துளி இரத்தத்தையும், நள்ளிரவில் இறை அச்சத்தால் ஒரு மனிதனின் கண்ணிலிருந்து சிந்தப்படும் ஒரு துளி கண்ணீரையும் விட இறைவனுக்கு மிகவும் பிரியமானது வேறு எதுவும் இல்லை.  அறிவிப்பாளர்:- ஹசன் அல்பஸ்ரி (ரஹ்) அவர்கள் நூல்:- அர்ருக்கத்து வல்புகாஉ

 

அபூ ஜல்த் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: தாவூத் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு ஒன்றை படித்துள்ளேன். அதாவது, இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்கள் தமது இறைவனை நோக்கி, ( إِلَهِي , مَا جَزَاءُ مَنْ بَكَى مِنْ خَشْيَتِكَ حَتَّى تَسِيلَ دُمُوعُهُ عَلَى وَجْنَتَيْهِ ) “என் இறைவா, உன்மீதுள்ள அச்சத்தால் கண்ணீர் துளிகள் கன்னங்களில் ஓடும் அளவிற்கு அஞ்சி, அழும் ஒருவனுக்குக் கிடைக்கும் வெகுமதி என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ், ( جَزَاؤُهُ أَنْ أُحَرِّمَ وَجْهَهَ عَلَى لَفْحِ النَّارِ ، وَأَنْ أُؤَمِّنَهُ يَوْمَ الْفَزَعِ )  அவனுக்கான வெகுமதி என்னவென்றால், நான் அவனது முகத்தைச் சுட்டெரிக்கும் நெருப்பிலிருந்து தடுப்பேன்; மேலும், பயங்கர (மறுமை)நாளில் அவனுக்குப் பாதுகாப்பை வழங்குவேன்" என்று பதிலளித்தான். நூல்:- அர்ருக்கத்து வல்புகாஉ

 

பேரருளும் மேன்மையும் பெற்ற அல்லாஹ் கூறினான் ( وَعِزَّتِي , لَا يَبْكِي عَبْدٌ مِنْ خَشْيَتِي , إِلَّا أَجَرْتُهُ مِنْ نِقْمَتِي ، وَعِزَّتِي , لَا يَبْكِي عَبْدٌ مِنْ خَشْيَتِي إِلَّا أَبْدَلْتُهُ ضَحِكًا فِي نُورِ قُدُسِي ) என் வல்லமையின்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன், எனக்கு அஞ்சி அழும் எந்த அடியானையும் நான் என் கோபத்திலிருந்து காக்கிறேன். என் வல்லமையின்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். எனக்கு அஞ்சி அழும் எந்த அடியானையும் நான் என் பரிசுத்த ஒளியினால் அவனது கண்ணீருக்குப் பதிலாக சிரிப்பை வரவழைக்கிறேன். நூல்:- அர்ருக்கத்து வல்புகாஉ

 

உலகில் மிகப்பெரிய சோதனை 'மரணம்' அல்ல; நமக்குள் அல்லாஹ்வின் மீதுண்டான அச்சம் மரணித்து விடுவதுதான்!

 

உலகின் கடல்களால் நரக நெருப்பின் சிறு துண்டைக்கூட அணைக்க முடியாது; ஆனால் அல்லாஹ்வின் அச்சத்தினால் வழியும் சிறு துளிக் கண்ணீரால் நரக நெருப்புக்கும் நமக்குமிடையே திரையை ஏற்படுத்த முடியும்.

 

எல்லா அச்சமுமே நம்மை பலகீனமாகவும், தோல்விடைந்தவனாகவும் ஆக்கி, நமக்கு துக்கத்தையும் வரவழைக்கும்; அல்லாஹ்வின் மீதான அச்சத்தைத் தவிர! அது படைப்பிலேயே மிக மகத்தானதை நமக்கு  வரவழைக்கும்.

 

பயனளிக்கும் நல்லுபதேசம்

 

(நபியே!) நீங்கள் நல்லுபதேசம் செய்யுங்கள். நிச்சயமாக நல்லுபதேசம் இறைநம்பிக்கையாளர்களுக்கு பயனளிக்கும். திருக்குர்ஆன்:- 51:55

 

உமர் பின்ஃகத்தாப் (ரலி) அவர்களை ஒரு பெண்மணி சந்தித்தார். ( كُنَّا نَعْرِفكَ عُمَيْرًا ثُمَّ صِرْتَ بَعْد عُمَيْرٍ عُمَرَ ثُمَّ صِرْتَ بَعْدَ عُمَرَ أَمِيرِ الْمُؤْمِنِينَ فَاتَّقِ اللَّهَ، فَانْظُرْ فِي أُمُورِ النَّاسِ،فَإِنَّهُ مَنْ خَافَ الْوَعِيد، قَرَّبَ عَلَيْهِ الْبَعِيد ) "உங்களை (உமைர்) சிறுவனாகவே நாங்கள் அறிவோம். பிறகு உமராகி விட்டீர். அதன்பின் (அமீருல் முஃமினீன்) இறைநம்பிக்கையாளரின் தலைவராகி விட்டீர்; எனவே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! மக்களின் காரியங்களில் கவனம் செலுத்துங்கள்! ஏனென்றால், எவர் எச்சரிக்கையாளன் அல்லாஹ்வை அஞ்சுகிறாரோ, அவருக்கு தூரமானதெல்லாம் நெருக்கமாகிவிடும்." என்றார்.

 

"இறைநம்பிக்கையாளரின் தலைவரை அழ வைத்துவிட்டாயே!" என்று அப்பெண்மணியை மக்கள் கடிந்துகொண்டனர்.

 

அப்போது உமர் (ரலி) அவர்கள், ( وَيْحَكَ هَذِهِ خَوْلَةُ الَّتِي سَمِعَ اللَّهُ قَوْلَهَا فِي سَمَائِهِ، فَعُمَرُ أَحْرَى أَنْ يَسْمَعَ قَوْلَهَا ) "உங்களுக்கு நாசம் விளையட்டும்! இவர் தான் ஃகவ்லா (ரலி) அவர்கள். இவரின் சொல்லை அல்லாஹ் தன் வானத்தில் கேட்டான். எனவே, இவரின் சொல்லைக் கேட்க, உமரே மிகத் தகுதியானவர்." என்றார்கள். நூல்:-  உயூனுல் அஃக்பார்  தீனூரி

 

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் கூறுகின்ற நல்லுபதேசங்கள், நம்மைவிட வயதில், மார்க்க ஞானத்தில் மூத்தவர்கள் கூறுகின்ற அனுபவ ரீதியாக கருத்துகள் இறைநம்பிக்கையாளர்களை அழ வைத்துவிடும்

 

பாவங்களை எண்ணி

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْ عَبْدٍ مُؤْمِنٍ يَخْرُجُ مِنْ عَيْنَيْهِ دُمُوعٌ وَإِنْ كَانَ مِثْلَ رَأْسِ الذُّبَابِ مِنْ خَشْيَةِ اللَّهِ ثُمَّ تُصِيبُ شَيْئًا مِنْ حُرِّ وَجْهِهِ إِلاَّ حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ ) இறைநம்பிக்கை கொண்ட எந்த ஓர் அடியாரின் கண்களில் இருந்தும் அல்லாஹ்வின் அச்சத்தால் வடிகின்ற கண்ணீர், அது ஓர் ஈயின் தலை அளவுக்கே இருப்பினும், பின்னர் அது அந்த அடியாரின் முகத்தில் எந்தப் பகுதியில் வழியாக வடிந்தாலும் அதில் நரக நெருப்பு தீண்டவிடாமல் அல்லாஹ் முற்றிலும் தடை செய்துவிடுவான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-4187 தப்ரானீ, ஹுல்யா இமாம் அபூநயீம், ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ

 

யஸீத் இப்னு அபான் அர்ரக்காஷீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ( بَلَغَنِي أَنَّهُ مَنْ بَكَى عَلَى ذَنْبٍ مِنْ ذُنُوبِهِ نَسِيَ حَافِظَاهُ ذَلِكَ الذَّنْبَ ، وَمَنْ فَاضَتْ عَيْنَاهُ مِنْ خَشْيَةِ اللَّهِ أُعْطِيَ الْأَمَانَ يَوْمَ الْقِيَامَةِ ) எனக்கொரு செய்தி கிடைத்தது. (அதாவது,) யார், தன் பாவத்தை நினைத்து அழுகிறாரோ, அவருடைய இரு பாதுகாவலர்கள் (நன்மை, தீமை எழுதும் இரு மலக்குகள்) அவர் செய்த பாவத்தை (எழுத) மறந்துவிடுகிறார்கள். அல்லாஹ்வின்மீதுள்ள பயத்தின் காரணமாக, யாருடைய கண்கள் கண்ணீர் வடிக்கிறதோ, மறுமைநாளில் நிம்மதி வழங்கப்படுவார். நூல்:- அல்கலிமுத் தய்யிப்  ( الكلم الطيب )

 

மாலிக் இப்னு தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். காற்று அடித்து வீசக்கூடிய தருணத்தில் மரங்களிலிருந்து காய்ந்த இலைகள் விழுவதைப் போல் நாம் வாழ்க்கையில் செய்த தவறுகளை நினைத்து நன்றாக கண்ணீர் வடிப்பதால் நமது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. நூல்:- தம்முல் ஹவா-216

 

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களிடம் அறிஞர் அபூஹாமித் அல்கல்கானி என்பவர் இமாமவர்களிடம், "வாய்மொழி பாடல்களையும், கவிதைகளையும் பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு இமாமவர்கள், "இதற்கு ஏதேனும் ஓர் எடுத்துக்காட்டைக் கூறுங்கள்" என்றார்கள். அபூ ஹாமித் பாடிக் காட்டினார்:

إِذَامَاقَالَ لِي رَبِّي

أَمَااسْتَحْیَيْتَ تَعْصِیْنِی

وَتُخْفِي الذَّنْبَ مِنْ خَلْقِي

وَبِالْعِصْيَانِ تَأْتِيْنِي

என் இறைவன் என்னிடம்,  / “(இறையச்சமின்றி) என்னை மீறிப் பாவம் செய்ய உனக்கு வெட்கமாக இல்லையா? / மக்களிடமிருந்து பாவத்தை மறைக்கிறாய்.  / ஆனால், பாவத்தோடு என்னிடம் வருகிறாயே!” என்று கூறினால்... (நான் என்ன செய்வேன்).

 

இக்கவிதைகளைக் கேட்டவுடன், இமாமவர்கள், ( أَعِدْ عَلَيَّ ) அக்கவிதையை மீண்டும் பாடுவீராக!” என்று கேட்டார்கள். நான் மீண்டும் அதைப் பாடிக்காட்டினேன். அதைக் கேட்டுவிட்டுக் கண்ணீர் சிந்தியவர்களாகத் தமது வீட்டிற்குள் சென்றுவிட்டார்கள். நூல்:- மஅல் அஇம்மா அஷ்ஷைக் சல்மான் அல்அவ்தா பக்கம்-53

 

இறையச்சம், மண்ணறை வாழ்க்கை மற்றும் மறுமை வாழ்க்கை குறித்த செய்திகளை படிக்கும்போதும் அல்லது கேட்கும்போதும் அதைப்பற்றி சிந்தித்து, கண்ணீர் விடுவது நல்லோர்களின் பண்பாகும்.

 

திருக்குர்ஆன் ஒதும்போது 

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் என்னிடம், "எனக்கு (குர்ஆனை) ஓதி காட்டுவீராக" என்று கூறினார்கள். நான், "தங்கள்மீது குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா?" என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், ( فَإِنِّي أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي ) "(ஏனெனில்,) நான் பிறரிடம் அதைக் கேட்க விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.

 

ஆகவே, நான் அவர்களுக்கு 'அந்நிசா' அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். "ஒவ்வொரு சமுதாயத்தாரிலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும்போதும், (நபியே!) உம்மை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?" எனும் (4:41ஆவது) வசனத்தை நான் அடைந்தபோது நபியவர்கள், "நிறுத்துங்கள்" என்று கூறினார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன. நூல்:- புகாரீ-4582, முஸ்லிம்-1465, திர்மிதீ-2951, இப்னுமாஜா-4184, முஸ்னது அஹ்மத்

 

நஜ்ஜாஷீ மன்னர் தமது நாட்டின் அறிஞர்களில் எழுபது பேரை தேர்ந்தெடுத்து அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார். அந்த எழுபது அறிஞர்களும் மக்காவில் நபியவர்களை சந்தித்தார்கள். வருகை தந்திருந்த அந்த அறிஞர்களுக்கு நபியவர்கள் யாசீன் அத்தியாயத்தை அதன் இறுதிவரை ஓதிக்காண்பித்தார்கள். அதன் துவக்கத்திலிருந்து இறுதிவரை அந்த அறிஞர்கள் அழுதுக்கொண்டே இருந்தனர். இறுதியாக, அவர்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் குறித்தே அல்லாஹ் அல்கஸஸ் அத்தியாயத்தின் 52,53 வது ஆகிய வசனங்களை இறக்கியருளினான்.

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் மறுமையின் அந்தப் பயங்கரமான நிலையை எண்ணி அழுதிருக்கலாம். அல்லது தம் சமுதாய மக்களில் தம் மார்க்கத்தைப் பின்பற்றாதவர்களுக்கெதிராகத் தாமே சாட்சியாக நிற்க வேண்டியுள்ளதே! இவர்களின் நிலை எவ்வாறு பரிதாபமானது என எண்ணி நபியவர்கள் கண்ணீர் சொரிந்திருக்கலாம். நூல்:- உம்தத்துல் காரீ, இர்ஷாதுஸ் ஸாரீ

 

அல்லாஹ்வின் ஆற்றல், அவன் தனக்கு மாறுசெய்கின்றவர்களை தண்டிக்கும் விதம், மரணம், மண்ணறை, மறுமைநாள் பயங்கரம் ஆகியவற்றின் யதார்த்த நிலையை குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் மூலம் அறியும்போது அவற்றில் நாம் சிக்கிவிடாமல் காப்பாற்றப்படவேண்டுமே என்றெண்ணி அதிகமாக அழ வேண்டும்.

 

தொழுகின்றபோது 

 

அப்துல்லாஹ் பின் அஷ்ஷகீர் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் தொழும்போது அழுகையின் காரணமாக அவர்களின் நெஞ்சில் இருந்து திருகை (அரைக்கும் போது ஏற்படும்) சத்தத்தைப் போன்று சப்தம் ஏற்பட்டதை நான் பார்த்தேன். நூல்:- அபூதாவூத்-769, நஸாயீ-1199, முஸ்னது அஹ்மத்

 

இமாம் அவ்ஸாயீ (ரஹ்) அவர்களின் மனைவியை சந்திக்க ஒரு பெண் வந்தாள். அப்போது, தொழுகைக்கு பயன்படுத்தும் பாய் ஒன்று ஈரமாக இருப்பதைக் கண்டாள். அவள், ( لَعَلَّ الصَّبِيَّ بَالَ هَاهُنَا ) “குழந்தை இங்கே சிறுநீர் கழித்துவிட்டதா?” என்று கேட்டாள். இமாமவர்களின் துணைவியார், ( لَا، هَذَا مِنْ أَثَرِ دُمُوعِ الشَّيْخِ فِي سُجُودِهِ، وَهَكَذَا يُصْبِحُ كُلَّ يَوْمٍ ) “இல்லை! எனது கணவர் (தஹஜ்ஜுத் தொழுகையின்) சஜ்தாவில் அழுத கண்ணீரின் அடையாளம் தான் இது. ஒவ்வொரு நாளும் இவ்வாறு தான் நடக்கிறது” என்று கூறினார்கள். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் குர்ஆன் ஓதும்போது அல்லது அல்லாஹ்வை நினைக்கும்போது அவன் மீதுண்டான அச்சத்தின் காரணமாக அழுதுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

 

தொழுகையில் அழுவது கூடுமா என்பதில் மார்க்க அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். பெரும்பாலான அறிஞர்கள் இறையச்சம், மறுமை நினைவு, நரக தண்டனை ஆகியவற்றை நினைத்து தொழுகையில் அழுவது கூடும். மாறாக, நோய் அல்லது வலி வேதனை காரணமாக அழுதால் தொழுகை முறிந்து விடும் என்று கூறுகின்றனர். நூல்:- அத்துர்ருல் மன்ளூத்

 

அல்லாஹ்வின் மீதான அன்பு, பயம் அல்லது சுவர்க்கம்-நரகம் போன்றவற்றை நினைத்து இயல்பாக வரும் அழுகையும், கண்ணீரும் தொழுகையைச் சிறப்படையச் செய்யும். தொழுகையின்போது இறையச்சம் (உள்ளச்சம்) காரணமாக அழுவது அனுமதிக்கப்பட்டதும், சிறப்பிற்குரியதும் ஆகும். இதனால் தொழுகை முறியாது. தொழுகையில் உலக விஷயங்களை நினைத்து அல்லது சப்தமிட்டுப் பிறருக்கு இடையூறு ஏற்படும் வகையில் அழுவது தவிர்க்கப்பட வேண்டும்.

 

மார்க்கம் தேய்மானத்தை நோக்கி

 

இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் அண்டை வீட்டுக்காரர் ஒருவர் என்னிடம் கூறினார். ஒருமுறை நான் பயணத்திலிருந்து திரும்பி வந்தேன் ஜாபிர் (ரலி) அவர்கள் நலம் விசாரிப்பதற்காக என்னிடம் வந்தார்கள். எனக்கு சலாம் கூறினார்கள். மக்கள் பல பிரிவுகளாகப் பிளவுப்பட்டு போனது குறித்தும் இறைமார்க்கத்தில் அவர்கள் ஏற்படுத்திய பித்அத்கள் (எனும் தன்னிச்சைச்) செயல்பாடுகள் குறித்தும் அவர்களிடம் எடுத்துரைக்கத் தொடங்கினேன்.

 

அதைக் கேட்ட ஜாபிர் (ரலி) அவர்கள் அழத் தொடங்கினார்கள். பிறகு கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நான் செவியுற்றிருக்கிறேன். ( إِنَّ النَّاسَ دَخَلُوا فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا، وَسَيَخْرُجُونَ مِنْهُ أَفْوَاجًا ) "மக்கள் இறைமார்க்கத்தில் (இப்போது) கூட்டம் கூட்டமாக சேர்ந்துவிட்டார்கள். அதிலிருந்து கூட்டம் கூட்டமாக அதிவிரைவில் அவர்கள் வெளியேறுவார்கள்". நூல்:-  தஃப்சீர் இப்னு கஸீர் அத்தியாயம்  அந்நஸ்ர், ஜாமிஉஸ் ஸஙீர்

 

இஸ்லாமிய மார்க்கம் தேய்மானத்தை நோக்கி பயணிக்கும்போது, அதாவது முஸ்லிம்கள், உலக ஆதாயத்தை எதிர்பார்த்து இஸ்லாமிய மார்க்கத்தில் பிடிப்பில்லாமல் வெளியேறிக்கொண்டிருக்கும்போது, நிச்சயமாக அதை எண்ணி மார்க்க ஞானமுள்ளவர்கள் கண்கள் கவலையால் கண்ணீரை வடிக்கும்.

 

எத்தனையோ ஆண்கள், பெண்கள் காதல் என்ற பெயரில் இஸ்லாமிய மார்க்கத்தைவிட்டு விரண்டோடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இறைநம்பிக்கையைவிட உடல் இச்சை பெரிதாக தெரிகிறது. இந்தத் துயரத்தை எண்ணும்போது இறைநம்பிக்கையாளர்களின் கண்கள் கண்ணீர் வடிக்கும். இதை தடுப்பதற்கு சமுதாய அக்கறைக்கொண்டவர்கள் முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர்.

 

மையவாடிகளுக்கு சென்றால்

 

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் ஒரு ஜனாஸா (பிரேத நல்லடக்க நிகழ்)வில் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபியவர்கள் மண்ணறையின் ஓரத்தில் அமர்ந்தார்கள். தரை நனையும் அளவுக்கு அழுதார்கள். பின்னர், ( يَا إِخْوَانِي لِمِثْلِ هَذَا فَأَعِدُّوا ) "என் சகோதரர்களே! இது போன்ற(தை எதிர்கொள்வ)தற்கு ஆயத்தமாக இருங்கள்" என்று கூறினார்கள். நூல்:- இப்னுமாஜா-4185, முஸ்னது அஹ்மத், அத்தாரீகுல் கபீர் இமாம் புகார, இப்னு அபீஷைபா, ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, தப்ரானீ,

 

உஸ்மான் (ரலி) அவர்களின் பணியாளர் ஹானிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்குச் சென்றுவிட்டால் தங்களது தாடி நனையும் அளவுக்கு தேம்பித் தேம்பி அழுவார்கள். அப்போது அவர்களிடம் “சொர்க்கம் நரகம் பற்றி உங்களிடம் கூறுகின்றபோதுகூட இவ்வாறு அழுததில்லையே! ஆனால் மண்ணறைக்கு வந்துவிட்டால் இவ்வாறு தேம்பித் தேம்பி அழுகிறீர்களே ஏன்?" என்று வினவப்படும்.

              

அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் ( إِنَّ الْقَبْرَ أَوَّلُ مَنَازِلِ الآخِرَةِ فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ )  "மண்ணறை என்பது மறுமையின் தங்குமிடங்களில் முதல் தங்குமிடமாகும். இதி(ல் தரப்படும் வேதனையி)லிருந்து ஒருவர் தப்பிவிட்டால், அதற்கு பின்னுள்ளவை அவருக்கு மிகவும் எளிதானதாகவே அமையும். இதிலிருந்து ஒருவர் தப்பாவிட்டால் அதற்கு பின்னுள்ளவை அவருக்கு இதைவிட கடுமையானதாகவே இருக்கும்” என்று கூறினார்கள். மேலும் ( مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ إِلاَّ وَالْقَبْرُ أَفْظَعُ مِنْهُ ) “நான் மண்ணறையைவிட பயங்கரம் நிறைந்த ஓர் இடத்தை ஒருபோதும் கண்டதில்லை” என்று    அருமை நாயகம் (ஸல்) கூறினார்கள். (அதனால்தான்   மண்ணறையை காணும்போது நான் அழுகிறேன்) என்று விடையளித்தார்கள்.   நூல்:- திர்மிதீ-2230, இப்னுமாஜா-4257

 

ஸியாரத்திற்காகவோ, பிரேதத்தை அடக்கம் செய்வதற்கோ பொதுமையவாடிகளுக்கு சென்றால், “நாமும் ஒருநாள் இங்கு வர இருக்கின்றோம் நமது மண்ணறை வாழ்க்கை எப்படி இருக்கும்? அதற்கான தயாரிப்பை நாம் செய்து வைத்துள்ளளோமா? என்றெண்ணி, இறையச்சத்தால் கண்ணீர் வடிக்கவேண்டும்‌.

 

கஅபாவை காணும்போது  

 

ஒரு இறைநம்பிக்கையாளன் முதல் முறையாக கஅபாவை காணும் பொழுது அவனையும் அறியாமல் அழுதுவிடுவான். ஏதோ அல்லாஹ்வையே நேரடியாக தரிசித்ததைப் போன்ற ஒரு உணர்வு அவனுக்குள் ஏற்பட்டுவிடும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தியாக வாழ்க்கையை எண்ணியவாறு  நபியவர்களின் மண்ணறையை தரிசிக்கும்போதும் நம்மை அறியாமல் நமக்கு அழுகை ஏற்படும். நமது பெற்றோர், மற்றும் நல்லோர்கள் நாதாக்களின் மண்ணறைகளை தரிசிக்கும்போதும் நம்மை அறியாமல் அழுகை ஏற்படும். இது, உண்மையான இறைநம்பிக்கையாளர்களின் நிலைப்பாடு.

 

தண்டிக்கப்பட்டவர்களின் வசிப்பிடங்களைக் கண்டால்

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ர் பகுதியைக் கடந்து சென்றபோது, ( لاَ تَدْخُلُوا مَسَاكِنَ الَّذِينَ ظَلَمُوا إِلاَّ أَنْ تَكُونُوا بَاكِينَ، أَنْ يُصِيبَكُمْ مَا أَصَابَهُمْ ) ‘‘அக்கிரமம் புரிந்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்த அதே தண்டனை உங்களுக்கும் கிடைத்துவிடுமோ என்று அஞ்சி அழுதவாறு அல்லாமல், நுழையாதீர்கள்” என்று சொன்னார்கள். நூல்:- புகாரீ-3380

 

கி.மு. 2430 ஆம் ஆண்டுகளில் ஸமூத் குலத்தார் சவூதி அரேபியாவில் உள்ள "அல்ஹஜ்ர்" எனும் இடத்தில் வாழ்ந்தனர். இப்போது அந்த இடத்தை "மதாயின் ஸாலிஹ்" என்று அழைக்கின்றனர். அம்மக்கள் சிலைவணக்கம் புரிந்து வந்தனர். ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கித் திளைத்தனர். அவர்களை சீர்படுத்திட  அல்லாஹுத்தஆலா இறைத்தூதர் ஸாலிஹ் (அலை) அவர்களை அனுப்பி வைத்தான். அன்னாரின் போதனைகளை அந்த மக்கள் கடைசி வரை ஏற்காததால், அல்லாஹ் நிலநடுக்கத்தால் அவர்களை அழித்தான்.

 

முன் வாழ்ந்த அட்டூழியக்காரர்களின் வாழ்விடத்தை காணும்பொழுது அவர்கள் செய்த அக்கிரமத்தால் அவர்கள் எவ்வாறு அழிக்கப்பட்டார்கள் என்றெண்ணி நமக்கு அந்நிலை வந்து விடக்கூடாது என்று அழுதவாறு பிரார்த்திக்க வேண்டும்.

 

அநீதமிழைக்கப்பட்டதை எண்ணி

 

வளீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருவர் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! நிச்சயமாக நாங்கள் அறியாமையிலும் சிலை வழிபாட்டிலும் இருந்தபோது (பெண்) குழந்தைகளை கொலை செய்து கொண்டிருந்தோம். எனக்கு ஒரு பெண்பிள்ளை  இருந்தாள். நான் அவளை அழைக்கும் போது என்னுடைய அழைப்பால் மகிழ்ச்சி அடைவாள்.

 

ஒரு நாள் அவளை நான் அழைத்தவுடன் (என் அழைப்பிற்கு) பதிலளித்து என்னைப் பின்தொடர்ந்தாள். நான் நடந்து சென்று அருகில் இருந்த என் குடும்பத்தாருக்குரிய கிணற்றிற்கு பக்கத்தில் வந்த போது அவளுடைய கையைப் பிடித்து கிணற்றில் அவளை தள்ளிவிட்டேன். அவள் என்னிடம் கடைசியாக, தந்தையே! தந்தையே! என்று கூறினாள்" என்று தெரிவித்தார்.

 

அப்போது நபியவர்களுடைய இரு கண்களில் இருந்தும் கண்ணீர் வடிந்தோடியது. அப்போது சபையில் இருந்த ஒருவர் அம்மனிதரிடம், "நீர் நபியவர்களை கவலையில் ஆழ்த்தி விட்டீர்" என்று கூறினார். நபியவர்கள், ( كُفَّ فَإِنَّهُ يَسْأَلُ عَمَّا أَهَمَّهُ ) "(அவரை) விட்டு விடுங்கள். அவருக்கு கவலை அளித்த விஷயத்தைப் பற்றியே அவர் கேட்கின்றார்" என்று கூறிவிட்டு, அம்மனிதரிடம், ( أَعِدْ عَلَيَّ حَدِيثَكَ ) "நீர் கூறிய செய்தியை மறுபடியும் என்னிடம் கூறுவீராக!" என்றார்கள். அவர் நபியவர்களிடம் மறுபடியும் அந்த செய்தியை கூறினார்.

 

அதனால் நபியவர்களின் இரு கண்களில் இருந்தும் கண்ணீர் அவர்களுடைய தாடியின் வழியாக வழிந்தோடும் அளவுக்கு அழுதார்கள். பிறகு அம்மனிதரிடம், ( إِنَّ اللَّهَ قَدْ وَضَعَ عَنْ الْجَاهِلِيَّةِ مَا عَمِلُوا، فَاسْتَأْنِفْ عَمَلَكَ ) "அறியாமைக் காலத்தார் (இஸ்லாத்தை ஏற்கும்முன்) செய்தவற்றை நிச்சயமாக அல்லாஹ் மன்னித்துவிட்டான். இனிமேல், உன்னுடைய செயலை (நல்ல விதமாகச் செய்யத்) துவங்குவீராக!" என்று கூறினார்கள். நூல்:- தாரிமீ

 

அநியாயமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்களை எண்ணி அழுவது மனித இயல்பு. அநியாயமான முறையில் மக்களை கொல்பவர்களை தடுக்க வேண்டும். அநீதம் இழைக்கப்பட்டவர்களுக்காக நாம் எங்கிருந்தாலும் குரல் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நம்மால் இயன்ற   உதவிகள் செய்ய வேண்டும். அவர்களை ஆதாரித்து ஆர்பாட்டங்கள், பேரணிகள் நடத்த வேண்டும். நமது கண்டன குரல்களை பதிவு செய்ய வேண்டும்.

 

இறுதிநிலையை எண்ணி

 

இமாம் சுஃப்யான் அஸ்ஸவ்ரி (ரஹ்) அவர்கள் மரணிக்கும் தருவாயில் இருந்தபோது மிகவும் அழுதுள்ளார். அவரை பார்த்து ஒருவர், "பாவங்களை நினைத்து அழுகிறீர்களா?" என்று கேட்டார்.

 

அதற்கு இமாம் அவர்கள், “ஒரு வைக்கோல் துரும்பை எடுத்து, "என் பாவங்களை நினைத்து நான் அழவில்லை. (அல்லாஹ்வின் கருணைக்கு முன்னாள்) அவை இந்த வைக்கோலைவிட அற்பமானவை. (அல்லாஹ் மன்னித்துவிடுவான்) ஆனால், இஸ்லாத்தைவிட்டு என் உயிர் பிரிந்துவிடுமோ என்ற பயத்தில்தான் அழுகிறேன்" என்று பதிலளித்தார்கள்.

 

அறிஞர், பாமரன் என யாராக இருந்தாலும் அவரின் இறுதிநிலை எப்படி அமையும் என்று உறுதியாக சொல்லமுடியாது. நாம் இந்த உலகத்தைவிட்டு பிரியும் அந்தத் தருணத்தில் திருக்கலிமா மொழிந்தவாறு இறைநம்பிக்கையுடன் செல்லவேண்டும். இதற்காக நாம் அனுதினமும் அல்லாஹ்விடம் அழுது பிரார்த்திக்க வேண்டும்.

 

ஷைத்தான் ஓலமிட்டான் 

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا قَرَأَ ابْنُ آدَمَ السَّجْدَةَ فَسَجَدَ اعْتَزَلَ الشَّيْطَانُ يَبْكِي يَقُولُ يَا وَيْلَهُ- وَفِي رِوَايَةِ أَبِي كُرَيْبٍ يَا وَيْلِي- أُمِرَ ابْنُ آدَمَ بِالسُّجُودِ فَسَجَدَ فَلَهُ الْجَنَّةُ وَأُمِرْتُ بِالسُّجُودِ فَأَبَيْتُ فَلِيَ النَّارُ ) ஆதமின் மைந்தன் (மனிதன்) சஜ்தா (சிரவணக்கத்திற்கான) வசனத்தை ஓதி சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் ஷைத்தான் அழுதவாறே “அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமின் மைந்தன் சிரவணக்கம் செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் சிரவணக்கம் செய்துவிட்டான். அவனுக்கு செர்க்கம் கிடைக்கப்போகிறது. ஆனால் (ஆதி மனிதர் ஆதமுக்குச்) சிரம்பணியும்படி எனக்கு கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்துவிட்டேன். எனவே, எனக்கு நரகம் தான்” என்று கூறியபடி விலகிச் செல்கிறான். அறிவிப்பாளர்ர்:- அபூஹுரைரா (ரலி), நூல்:- முஸ்லிம்-133, இப்னுமாஜா-1042, முஸ்னது அஹ்மத்-9336

 

மேலும், நான்கு சந்தர்ப்பங்களில் ஷைத்தான் ஒப்பாரி வைத்து ஓலமிட்டு அழுதான்.

 

ஒன்று,  குர்ஆனின் முதல் அத்தியாயமான “தோற்றுவாய்” அத்தியாயம் அருளப்பட்டபோது ஷைத்தான் ஒப்பாரி வைத்து அழுதான். காரணம், அந்த அத்தியாயத்தின் இறுதியில், “இறைவா, உன் கோபத்திற்கு ஆளாகாத, நெறிதவறிப் போகாதவர்களின் வழியில் எம்மை நடத்துவாயாக” எனும் பிரார்த்தனை உள்ளது. இந்தப் பிரார்த்தனையை எண்ணித்தான் ஷைத்தான் அழுதான்.

 

இரண்டு, இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த அன்று ஷைத்தான் ஓவென்று அழுதான். இறுதித்தூதரின் மூலம் ஏராளமான மக்கள் நேர்வழி அடைந்துவிடுவார்களே என்று எண்ணி அழுதானாம்.

 

மூன்று, பத்ருப் போர் வெற்றியின்போது ஒப்பாரி வைத்து அழுதான். இஸ்லாமிய வரலாற்றில் ஒரு திருப்புமுனைதான் பத்ருப் போர். இஸ்லாம் வெற்றி பெறுகிறது எனில் ஷைத்தான்களுக்குப் பொறுக்குமா என்ன?

 

நான்காவது, ஹஜ்ஜின்போது அரஃபா நாளில் ஷைத்தான் கதறி அழுவான். காரணம், அன்று இலட்சக்கணக்கான அடியார்களின் பாவமன்னிப்புக் கோரிக்கை இறைவனால் ஏற்கப்பட்டு, நரகத்திலிருந்து விடுதலை பெற்றுவிடுவார்கள். இதை எண்ணி ஷைத்தான் கதறுவான். யோசித்துப் பார்க்கும்போது இந்த நான்கு நிகழ்வுகளும் ஷைத்தானால் தாங்கமுடியாத நிகழ்வுகள்தாம்.

 

இறையச்சத்தின் அடிப்படையில் அழுகை என்பது மிகவும் அர்த்தமுள்ளது. எனவே, நாம்  செய்துவிட்ட  பாவங்களை எண்ணியும், மண்ணறை மற்றும் மறுமைநாளின் குழப்பங்களை எண்ணியும் அனுதினமும் அழுது பிரார்த்திக்கக்கூடிய பாக்கியத்தை அல்லாஹுத்தஆலா நமக்கு வழங்கி, அருள்புரிவானாக! ஆமீன்!

 

மௌலவி மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை செல்: 9840535951

 

 

No comments:

Post a Comment

துறவறம்

  துறவறம்   وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَا مَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ إِلَّا ابْتِغَاءَ رِضْوَانِ اللَّهِ ( உலகத்தின் எல்லா இன்பங்களை...