Search This Blog

Saturday, 23 May 2026

ஒன்றுபடுவோம்

 

 

ஒன்றுபடுவோம்

 

وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا‌



மேலும், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் என்னும்) கயிற்றை பலமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். (உங்களுக்குள் தர்க்கித்துக்கொண்டு) நீங்கள் பிரிந்திட வேண்டாம். திருக்குர்ஆன்:- 3:103

 

முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஐக்கியமாகச் செயல்படும்போது, இறைவனின் அருள்வளமும், பாதுகாப்பும், அரவணைப்பும் அவர்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும். பிரிந்து போனால் அருள்வளத்தையும் பாதுகாப்பையும் அமைதியையும் இறைவன் அகற்றிவிடுவான்; அவர்களின் நிலை சீர்குலைந்து விடும்.

 

திருக்குர்ஆன் சட்டங்களையும், அறிவுரைகளையும் தனிமனிதனைப் பார்த்துச் சொல்லாமல் சமூக ரீதியான அழைப்பு வாசகங்களையே பயன்படுத்தியிருக்கிறது.

 

அதாவது, ( يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوَاْ ) “இறைநம்பிக்கையாளர்களே!” என்று  89 தடவையும், ( أَيُّهَا النَّاسُ ) “மனிதர்களே!” என்று 20 தடவையும், ( بَنِي آدَمَ ) “ஆதமின் மக்களே!” என்று 5 தடவையும் கூறியுள்ளான். மனிதர்கள் பரஸ்பரம் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதை இது காட்டுகிறது.

 

ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சிகளை முறிப்பது கடினம். ஒற்றுமையால் வீழ்ந்தவரில்லை. வேற்றுமையால் வாழ்ந்தவரில்லை.

 

ஒன்றுபட்டு (கூட்டாக) நிறைவேற்றப்படும் தொழுகைக்குதான் மதிப்பு அதிகம். ஒன்றுபட்டு வாழும் எந்த ஒரு சமுதாயமும் எந்த விஷயத்திலும் பின்னடைவதில்லை. பிணைப்புக்கள் ஒருபக்கம் உருவாகிறபோது, பிளவுகள் மறுபக்கம் அகற்றப்படுகிறது. எந்தவொரு காரயத்திலும் ஒற்றுமையோடு செயல்படும்போது அருள்வளத்தை நிறைவாகக் காணலாம்.

 

உண்ணுவதில்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ( كُلُوا جَمِيعًا وَلَا تَفَرّقُوا؛ فَإِنَّ الْبَرَكَةَ مَعَ الْجَمَاعَةِ ) நீங்கள் அனைவரும் சேர்ந்து சாப்பிடுங்கள்; பிரிந்துவிடாதீர்கள். சேர்ந்திருப்பதில் தான் அருள்வளம் உள்ளது. அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா, தஃப்சீர் இப்னுகஸீர் அந்நூர் வசனம்-61

 

வஹ்ஷீ பின் ஹர்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபித்தோழர்களில் சிலர் (அண்ணல் நபி - ஸல் அவர்களிடம் வந்து) "நாயகமே! நாங்கள் சாப்பிடுகிறோம் ஆனால் வயிறு நிரம்புவதில்லை" எனக் கூறினர். அண்ணலார், ( فَلَعَلَّكُمْ تَفْتَرِقُونَ ) "நீங்கள் தனித்தனியாக சாப்பிடுகிறீர்களா?" என்று வினவினார்கள். அவர்கள், "ஆம்" என்றனர். அண்ணலார், ( فَاجْتَمِعُوا عَلَي طَعَامِكُمْ وَاذْكُرُوا اسْمَ اللهِ عَلَيْهِ يُبَارَكْ لَكُمْ فِيهِ )  "நீங்கள் ஒன்றுகூடி உண்ணுங்கள். அவ்வாறு உண்ணும்போது 'பிஸ்மில்லாஹ்' என்று கூறி சாப்பிடுங்கள். (நீங்கள் அவ்வாறு உண்டால்) அந்த உணவில் உங்களுக்கு அருள்வளம் செய்யப்படும்" என்று (தீர்வு) கூறினார்கள்.  நூல்:- அபூதாவூத்-4023

 

குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, குடும்ப உறவுகளை வலுப்படுத்துகிறது. இது ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை உருவாக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

 

குடும்ப உறுப்பினர்கள் தினமும் ஒரு வேளையாவது ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது, இதோ உனக்கு எனக்கு கொஞ்சம் என்று பகிர்ந்து உண்ணும் பழக்கம் ஏற்படுகிறது. அதன் மூலம், அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள இது சிறந்த வாய்ப்பாக அமைகிறது. வேலையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைத்து, மன அமைதியைத் தரும்.

 

குழந்தைகள் மற்றவர்களைப் பார்த்து சாப்பிடுவதால், புதிய ஆரோக்கியமான உணவுகளை விரும்பி உண்ணும் பழக்கம் உருவாகும். குடும்பத்தினருடன் பேசிக்கொண்டே நிதானமாக சாப்பிடுவதால், உணவு எளிதில் செரிமானம் அடையும்.

 

தரையில் சம்மனங்கால் போட்டு அமர்ந்து சாப்பிடுவது இன்னும் சிறந்தது. இது மூளைக்குச் செல்லும் 'வேகஸ்' நரம்பைத் தூண்டி, வயிறு நிறைந்த உணர்வை முன்கூட்டியே மூளைக்குத் தெரிவிக்கும். இதனால் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது தவிர்க்கப்பட்டு உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.

 

பயணத்தின்போது

 

அம்ரு பின் உஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (பயணத்தில்) ஓர் இடத்தில் தங்கினால் அவர்களுடனேயே சென்ற மக்கள் (இராணுவத்தினர்) மலைக்கணவாய்களிலும், பள்ளத்தாக்குகளிலும் பிரிந்து சென்று (அவரவர் விரும்பிய இடங்களில்) தங்கி கொள்பவர்களாக இருந்தனர். அப்போது நபியவர்கள், ( إِنَّ تَفَرُّقَكُمْ فِي هَذِهِ الشِّعَابِ وَالأَوْدِيَةِ إِنَّمَا ذَلِكُمْ مِنَ الشَّيْطَانِ ) "நீங்கள் மலைக்கணவாய்களிலும், பள்ளத்தாக்குகளிலும் பிரிந்து தங்கினீர்களானால் நீங்கள் (பிரிந்து செல்லும்) அ(ச்செயலான)து ஷைத்தானின் செயலாகும்" என்று கூறினார்கள்.

 

அதன் பின்பு அவர்களோடு செல்லும் மக்கள் (இராணுவத்தினர்) அவர்களின் மேல் ஓர் ஆடையைப் போர்த்தினால் அவர்கள் அனைவரும் அதற்குள் இருப்பார்கள் என்று கூறும் அளவு அவர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து தங்குவார்கள். நூல்:- அபூதாவூது-2259, முஸ்னது அஹ்மத், இப்னு ஹிப்பான்-1664, ஹாகிம்

 

கூட்டாக வாழும் வாழ்க்கையின் மூலம் உணர்வுகள், அனுபவங்கள் மற்றும் வேலைகளைப் பகிர்ந்துகொள்வதால் மனிதர்களுக்கிடையேயான பிணைப்பை பலப்படுத்துகிறது. மேலும், தனிமை உணர்வு நீங்கும். மனச்சோர்வு மற்றும் பதற்றம் குறைந்து, மூளையின் நினைவாற்றல் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு மேம்படுகிறது.

 

நிச்சயமாக, "தனியாக வாழ்வதைவிட மக்களோடு மக்களாக இணைந்து வாழ்வது சிறப்பு" என்பது மிகச்சரியான மற்றும் ஆழமான தத்துவமாகும். மனிதன் ஒரு சமூக விலங்கு; அவனது முழுமையான வளர்ச்சிக்கும் மன அமைதிக்கும் பிற மனிதர்களின் கூட்டுறவு அவசியமானது. எனவே, பயணத்தின்போதுகூட தனித்தனியே தங்குவதைவிட கூட்டாக ஒரே இடத்தில் தங்குவது தான் மிகவும் சிறந்தது என்கிறது இஸ்லாம்.

 

தம்பதியரின் பிரிவினை

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்லீஸ் தண்ணீர்மீது தன் இருப்பிடத்தை அமைத்து தனது ஷைத்தான் பட்டாளங்களை அனுப்பி மனிதர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துமாறு கூறுவான். அதில் ஒரு ஷைத்தான் வந்து, ( مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ ) “நான் ஒரு அடியானுக்கும், அவனது மனைவிக்கும் இடையில் (தலாக் எனும்) மணவிலக்கு ஏற்படும் அளவுக்கு (கோபத்தை மூட்டி) குழப்பத்தை ஏற்படுத்தினேன்” என்று கூறுவான். அவனைப் பார்த்து இப்லீஸ், (  نِعْمَ أَنْتَ ) “நீ தான் (சிறந்தவன்)” என்று கூறி தனக்கு அருகில் அமர வைப்பான்.   நூல்:- முஸ்லிம்-5419

 

இப்லீஸ்களின் மாநாடு தண்ணீர்மீது நடைபெறும். அந்த  மாநாட்டில்  ஒவ்வொரு ஷைத்தானும் தங்களுடைய சேவையை  மாநாட்டில் சொல்லிக் காட்டுவார்கள். அவர்களில் மிகவும் பாராட்டுக்குரியவன் யாரென்றால் எந்த ஷைத்தான் ஒற்றுமையோடு இருக்கும் இருவரைப் பிரித்து வைத்தானோ அவன் தான். அவனை தலைமை ஷைத்தான் கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவான்.

 

சின்ன விஷயங்களுக்கெல்லாம் தலாக் என்ற முடிவெடுப்பது ஷைத்தானை ஊக்கப்படுத்துவதாகும்.

 

திருமண விவாகரத்து என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிப்பதாக ஆய்வில் உறுதி படுத்தப்பட்டுள்ளது. விவகாரத்தால் குடும்ப அமைப்பு சீர்கெட்டுப் போகும். பிள்ளைகளின் எதிர்காலம் உருக்குலைந்து போகும்.

 

தம்பதியரின் பிரிவினையால் உறவுகளுக்கு இடையே ஏற்படும் கசப்புணர்வு சமூகத்தில் அவப்பெயரையும், சட்ட நடவடிக்கைகளால் தேவையற்ற பொருளாதார இழப்பையும் உண்டாக்கும்.

 

தம்பதியர், உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என ஒன்றிணைந்து இருப்பவர்கள் மனம் கசந்து பிரிந்துவிட்டால், முதலில் மகிழ்ச்சியடைவது இப்லீசும் அவனுடைய சந்ததிகளான ஷைத்தான்களும் தான்.

 

கூட்டுத் தொழுகை

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( صَلاَةُ الْجَمَاعَةِ أَفْضَلُ مِنْ صَلاَةِ أَحَدِكُمْ وَحْدَهُ بِخَمْسَةٍ وَعِشْرِينَ جُزْءًا ) கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதைவிட இருபத்தைந்து பங்கு அதிகச் சிறப்புடையதாகும். அறிவிப்பாளர்:- அபூஹூரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1147

 

உபைதுல்லாஹ் பின் அதீ பின் அல்கியார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. உஸ்மான் (ரலி) அவர்கள் முற்றுகையிடப்பட்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்று, “நீங்கள் மக்கள் தலைவர் ஆவீர்கள். நீங்கள் காணும் சோதனை (முற்றுகை) உங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் (இன்று) எங்களுக்குக் குழப்பவாதத் தலைவர் தொழுகை நடத்திக்கொண்டிருக்கிறார். அதனால் நாங்கள் (பாவத்தில் வீழ்கிறோமோ என்ற அச்சத்தில்) மன வேதனை அடைகிறோம். (எனவே, அவருக்குப் பின்னால் நாங்கள் தொழலாமா?)” என்று கேட்டேன்.

 

அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், ( الصَّلاَةُ أَحْسَنُ مَا يَعْمَلُ النَّاسُ، فَإِذَا أَحْسَنَ النَّاسُ فَأَحْسِنْ مَعَهُمْ، وَإِذَا أَسَاءُوا فَاجْتَنِبْ إِسَاءَتَهُمْ‏ ) “தொழுகை, மக்கள் செய்கின்ற செயல்களிலேயே மிக நல்ல செயலாகும். மக்கள் நன்மை செய்தால் நீங்களும் நன்மை செய்யுங்கள். அவர்கள் தவறிழைத்தால் அவர்கள் இழைக்கும் தவறுகளிருந்து நீங்கள் ஒதுங்கிவிடுங்கள்” என்று சொன்னார்கள். நூல்:- புகாரீ-695

 

இஸ்லாமிய அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் குழப்பவாதியோ, மார்க்கக் குழப்பவாதியோ, மார்க்கத்தில் அடிப்படை இல்லாத நூதனக் கொள்கையையும் நவீன அனுஷ்டானமும் உள்ள பித்அத்வாதியோ தொழ வைத்தால் அவருக்கு பின்னால் தொழுவதில் தவறில்லை. அவரது செயலுக்கு அவரே பொறுப்பு. அவரது குற்றம் மற்றவர்களின் தொழுகையை பாதிக்காது. நூல்:- ஃபத்ஹுல் பாரீ

 

ஹிஜ்ரி 35 ஆம் ஆண்டு கலகக்காரர்களால் மதீனா நகரமே சூழப்பட்டிருந்தது. மதீனா நகரை குழப்பக்காரர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஜனாதிபதி உஸ்மான் (ரலி) அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டார்கள்.  அன்றைக்கு ஜனாதிபதி தான் தலைமை தாங்கி தொழுவிப்பார்கள் (இமாமத் செய்வார்கள்).

 

இந்நிலையில் கலகக்காரர்களே (இமாமத் செய்யும்) அந்த பொறுப்பை கையில் எடுத்துக் கொண்டனர். "காஃபிகீ பின் ஹரப்" என்பவன் தான் அன்று இமாமாக தொழவைத்தவன். இவ்வளவு குழப்பங்களுக்கு மத்தியிலும், இந்தப் பள்ளியில் தொழக்கூடாது என்று அவர்களை எந்த நபித்தோழரும் தடுக்கவும் இல்லை. இங்கே தொழமாட்டோம் என்று குழப்பவாதிகள் தனி பள்ளி அமைக்கவும் இல்லை.

 

குழப்பவாதிகள் தொழுகை நடத்தியபோது அலீ (ரலி) அவர்கள் உட்பட அப்போது அங்கிருந்த மூத்த நபித்தோழர்கள் பலரும் கலகக்காரர்களுக்குப் பின்னால் நின்று (மஃமூம்களாகத்)தான் தொழுதார்கள்.

 

பல நபித்தோழர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம், "நாங்கள் தனியாகத் தொழலாமா?" என்று  கேட்டனர். உஸ்மான் (ரலி) அவர்கள், "நான் உயிருடன் இருக்கும்வரை இந்த மதீனத்து மண்ணில் அதற்கு சம்மதிக்கமாட்டேன்"  என்று உறுதியுடன் கூறி மறுத்துவிட்டார்கள். அது மட்டுமல்ல "இது ஜனாதிபதியின் ஆணை" என்றும் கூறினார்கள்.

 

ஒரே குழுவாக செயல்பட வேண்டும்

 

இஸ்லாமிய ஆரம்ப காலத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அனுமதியுடன், மக்காவிலிருந்து சில நபித்தோழர்கள் இஸ்லாமிய முறைப்படி வாழ்வதற்காக அருகில் இருக்கும் அபிசீனியா நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதை அறிந்த மக்கா இணைவைப்பாளர்கள் அந்நாட்டு மன்னர் நஜ்ஜாஷி அவர்களிடம் வந்து, "உங்கள் நாட்டுக்கு வந்திருக்கும் இவர்கள் (அதாவது இந்த முஸ்லிம்கள்) சமுதாயத்தை பிளவுப்படுத்துபவர்கள். மேலும் உங்கள் கடவுள் கொள்கைக்கும் எதிரானவர்கள்" என்று புகார் கூறினர்.

 

எனவே, மன்னர் நஜ்ஜாஷி அதைப்பற்றி விசாரிக்க, அந்த முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தார். அதற்காக முஸ்லிம்கள் ஒன்று கூடி விவாதித்தனர். அப்போது ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள்,  ( أَنَا خَطِيبُكُمُ الْيَوْمَ، فَاتَّبَعُوهُ ) "இன்றைய தினம் மன்னரிடம் உங்களுக்காக நான் பேசுவேன். என்னையே நீங்கள் பின்பற்றுங்கள்" என்று கூறிவிட்டு மன்னரிடம் சென்று இதைப்பற்றி தெளிவாகப் பேசினார்கள். அதன்பிறகு மன்னர் நஜ்ஜாஷி,  ( اِنْزِلُوا حَيْثُ شِئْتُمْ ) "நீங்கள் (இங்கு) விரும்பிய இடத்தில் (நிம்மதியுடன்) தங்கிக்கொள்ளுங்கள்" என்று அனுமதி அளித்தார்.     நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா

 

எந்த பிரச்சினையாக இருந்தாலும் நபித்தோழர்கள் தன்னிச்சையாக செயல்படாமல் ஒரு தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயல்பட்டு வந்துள்ளனர் என்பதை இந்நிகழ்வு விளக்குகின்றது.

 

ஒரு வீட்டில் குழந்தை பிறந்தது. அந்தக் குடும்பத் தலைவர் (கணவர்) தன் தந்தையின் பெயரான "முஹம்மது" என்பதைத்தான் வைக்க வேண்டும் என்று கூறினார். அவரின் மனைவி இல்லை, தன் தந்தையின் பெயரான "அப்துல்லாஹ்" என்பதைத்தான் வைக்க வேண்டும் என்று கூறினாள். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து கொள்ளாமல் சண்டையிட்டுக் கொண்டனர். காரசாரமாக சண்டை முற்றியது.

 

இந்த சண்டையை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் வந்து என்னவென்று விசாரித்துவிட்டு நான் அழகான யோசனை சொல்கிறேன். அதாவது, முஹம்மது சலீம் அப்துல்லாஹ் என்று பெயர் வையுங்கள் என்று ஆலோசனை கூறினார். குடும்பத் தலைவர், “சரி! என் தந்தை பெயர் முஹம்மது, என் மனைவியின் தந்தை பெயர் அப்துல்லாஹ் இடையிலே சலீம் என்று ஒரு பெயர் வருகிறது. அது யாருடையது?” என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர், “அது என் தந்தையின் பெயர்” என்றார்.

 

எந்த வீட்டில் குடும்பத்தலைவருக்குக் கட்டுப்பட்டு, ஒற்றுமையாக இருப்பார்களோ, அந்த வீட்டில் நிம்மதியும், சந்தோஷமும் வியபித்திருக்கும்.

 

ஒன்றாக இருக்கவேண்டியவர்கள் சண்டையிட்டுக்கொண்டால் அப்போது பஞ்சாயத்து செய்வதற்கென்று சிலர் வருவார்கள். அவர்களால் பிரச்சனை இன்னும் பெரிதாகுமே தவிர, குறையாது. அல்லது அவர்கள் அதில் இலாபம் பார்த்துவிடுவார்கள். எந்த பிரச்சனை எழுந்தாலும், அதை தமக்குள்ளே தீர்த்துக்கொள்வது தான் புத்திச்சாலித்தனம். அடுத்தவர் வந்து பஞ்சாயத்து செய்யும் அளவிற்கு வைத்துக்கொள்ளக் கூடாது.

 

சுயநலவாதிகள்

 

தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பிறகும் கருத்து மாறுபாடு கொண்டு பிரிந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அத்தகையோருக்கே (மறுமை நாளில்) பெரும் வேதனை உண்டு. திருக்குர்ஆன்:- 3:105

 

அபூஆமிர் அப்துல்லாஹ் பின் லுஹை (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஹஜ்ஜின் நாள்களில் லுஹர் தொழுகையின்போது முஆவியா (ரலி) அவர்கள் எழுந்து நின்று பின்வருமாறு கூறினார்கள். பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( إنَّ أهْلَ الْكَتَابَيْنِ افْتَرَقُوا فِي دِينِهِمْ عَلَى ثنتيْنِ وَسَبْعِينَ مِلَّةً، وإنَّ هذِهِ الأمَّةَ سَتَفْتَرِقُ عَلَى ثَلاثٍ وَسَبْعِينَ مِلَّةً -يَعْنِي الْأَهْوَاءَ-كُلُّهَا فِي النَّار إِلَّا وَاحِدَةٌ، وَهِيَ الْجَمَاعَةُ، وَإِنَّهُ سَيَخْرُجُ فِي أُمَّتِي أَقْوَامٌ تُجَارى بِهِمْ تِلْكَ الأهْواء، كَمَا يَتَجَارى الكَلبُ بصَاحِبِهِ، لَا يَبْقَى مِنْهُ عِرْقٌ وَلا مَفْصِلٌ إِلَّا دَخَلَهُ )

(தவ்ராத் மற்றும் இன்ஜீல் ஆகிய) இரு வேதங்கள் வழங்கப்பெற்ற (யூத கிறிஸ்த)வர்கள் தமது மார்க்க விஷயத்தில் எழுபத்திரண்டு கூட்டங்களாகப் பிரிந்தனர். (என்னுடைய) இந்த சமுதாயமோ எழுபத்து மூன்று கூட்டங்களாக பிரியும். அதாவது, சுயநலத்தால் பிரியும். (அந்தப் பிரிவுகள்) அனைத்தும் நரகத்தில் இருக்கும். ஒரேயொரு பிரிவைத் தவிர. அது (நானும் என்னுடைய தோழர்களும் நடந்த வழியைக் கடைபிடிக்கும்) கூட்டம் ஆகும். என் சமுதாயத்தில் பல்வேறு கூட்டங்கள் தோன்றுவார்கள். நாய்க்கடி நோய் ஏற்பட்டவனுக்கு, அந்நோய் அவனது நரம்பு, மூட்டு ஆகிய அனைத்திலும் ஊடுருவிவிடுவதைப் போன்று அவர்களுக்குள்ளேயே சுயநலம் புரையோடிப்போய்விடும். நூல்:- முஸ்னது அஹ்மத், தப்ஸீர் இப்னு கஸீர் ஆலு இம்ரான் வசனம்-105

 

எந்த குழுவில் சுயநல சிந்தனை ஏற்படுமோ அங்கு பிரிவினை விரைவில் ஏற்படும். அது, அவர்களின் பலத்தைக் குன்றச் செய்து, அழிவின் பக்கம் அழைத்துச் செல்லும்.

 

அறிஞர்களுக்கிடையே

 

தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பிறகும் கருத்து மாறுபாடு கொண்டு பிரிந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அத்தகையோருக்கே (மறுமை நாளில்) பெரும் வேதனை உண்டு. திருக்குர்ஆன்:- 3:105

 

சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அவ்வப்போது உமர் (ரலி) உஸ்மான் (ரலி) ஆகிய இருவரும் ஏதேனும் ஒரு மார்க்கச் சட்டம் குறித்து தங்களுக்கு இடையில் விவாதம் செய்துகொள்வார்கள். அவ்விருவரையும் பார்ப்பவர்கள், "இதற்குப் பிறகு இவ்விருவரும் ஒன்று சேரவே மாட்டார்கள்!" என்று நினைப்பார்கள். பிறகு அவ்விருவரும் அந்த சபையைவிட்டு பிரிந்து செல்லும்போது மிகச்சிறந்த முறையில் கண்ணியத்தோடு பிரிந்து செல்வார்கள். நூல்:- கன்ஸுல் உம்மால், ஸஹாபா 3/310

 

அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (தேவையற்ற) கருத்து முரண்பாடுகள் மார்க்கத்தை மொட்டையடித்துவிடும். மக்களுக்கு மத்தியில் குழப்பத்தை உண்டுபண்ணும். வீண் சர்ச்சைகள், நற்செயல்களை அழித்துவிடும். கருத்து முரண்பாடு, உங்களை குழப்பத்தின் பக்கம் அழைக்கும். குழப்பம், உங்களை நரகத்தின் பக்கம் அழைக்கும். நூல்:- தம்முல் கலாம்


மூசா யூனுஸ் அஸ்ஸுத்தீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களைப் போன்று தன்மான உணர்வுள்ள ஒருவரை நான் கண்டதில்லை. அன்னாருடன் ஒரு சட்டத்தைப் பற்றித் தர்க்கம் செய்து கொண்டிருந்தேன். விவாதம் நீண்டுக்கொண்டே சென்றது. விட்டுக்கொடுக்காமல் நாங்கள் இருவரும் எங்களின் தரப்பு ஆதாரங்களை எடுத்து வைத்துக்கொண்டே இருந்தோம். விவாதம் செய்து கொண்டிருந்த எனக்கு முகம் மாறியது. கோபம் எட்டிப் பார்த்தது. உடனே அன்னார் அமைதியாக இருந்துவிட்டார்கள்.

 

விவாதம் முடிந்து சபையை கலைந்து இருவரும் எழுந்து வெளியே செல்ல தயாரானபோது, அன்னார் வேகமாக வந்து என் கரத்தைப் பிடித்தவாறு, ( يَا أَبَا مُوسَى، اَلَا يَسْتَقِيمُ أَنْ نَكُونَ إخْوَانًا وَاِنْ لَمْ نَتَّفَقْ فِي مَسْأَلَةِ ) "அபூமூசா! ஒரு விஷயத்தில் நாம் இருவரும் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும்கூட, நாம் இருவரும் சகோதரர்களாக இருப்பதற்கு தடை ஏதும் இல்லை அல்லவா?" என்றார்கள். நூல்:- மஅல் அஇம்மா அஷ்ஷைக் சல்மான் அல்அவ்தா

 

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஹதீஸ் துறையில் தீவிர ஈடுபாட்டைக் கொண்டிருந்த எம்மைப் போன்ற இராக்கின் சட்ட வல்லுனர்களுக்கும், சட்டமிற்றுவதில் பகுத்தறிவுக்கு முன்னுரிமை கொடுக்கும் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் மாணவர்களுக்கும் கருத்து வேற்றுமை நிலவியிருந்தது. நாங்கள் அவர்களைத் திட்டினோம்; அவர்கள் எங்களைத் திட்டி தீர்த்தார்கள். இந்நிலையில், எங்களிடத்தில் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் வந்து சேரும் வரை நிலவிற்று. அவர்கள் தான் எங்களை ஒற்றுமையாக இணைத்து வைத்தார்கள். நூல்:- மஅல் அஇம்மா அஷ்ஷைக் சல்மான் அல்அவ்தா

 

தாம் கேள்வி கேட்டிருக்காத ஒன்றைக் கேள்விப்படும்போது வியப்படைவது, முற்கால அறிஞர்களிடத்தில் இருந்த இயல்பான தன்மையாகும். அத்தகைய நேரங்களில், அவர்கள் உடனே மறுக்கவும் கூடும். அந்த மறுப்பானது அவர்களிடம் சினமுண்டாக்கி, அக்கருத்தை கூறியவரை விட்டுத் தன்னை விலக்கியிருக்கச் செய்யவும் கூடும். ஆனால், இமாம் ஷாபிஈ (ரஹ்)  அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர்.

 

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் இராக்கின் அறிஞர்களுக்கிடையே  ஒற்றுமையை உண்டாக்கியப் பிறகு இராக்கில் இரு சாராருக்கும் சட்டங்கள் பற்றிய இரு வேறு கருத்துக்கள் அதன் பின்னரும் தொடர்ந்திருந்தாலும், மாற்றுக் கருத்துக்களை விமர்சிக்கவும் இல்லை;  பிளவு ஏற்படவுமில்லை. இஸ்லாமிய சகோதரத்துவ உறவு நீடித்தது. இதனாலேயே இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களை இராக்கிய அறிஞர்கள் பெரிதும் மதித்தார்கள்.

 

அறிஞர் பெருமக்கள் எவ்வாறு ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடனும் மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் தன்மையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பதையும்; வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்பதையும் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கற்றுத்தருகிறார்கள்.


அறிஞர்களுக்கு மத்தியில் மார்க்க சட்ட விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் பிரியவில்லை. தனித்தனிக் குழுக்களாகவும் அவர்கள் மாறவில்லை. அவர்கள் தங்களுக்கு (சிந்திக்க) அனுமதியுள்ள விஷயங்களில் சிந்தித்தார்கள். இதனால் பல சட்டங்களில் அவர்களின் கருத்துக்கள் மாறுபட்டன. மாற்றாமல் இஸ்லாமிய சகோதரத்துவ உணர்வுடன் இஸ்லாம் கூறும் அன்பு, நேசம், ரீதியாக ஒருவரை ஒருவர் மதித்து அழகிய பண்புகளுடனும் பழகிக்கொண்டார்கள்.

 

பிரித்தாளும் சூழ்ச்சி

 

நீங்கள் ஒருவருக்கொருவர் சச்சரவு செய்யாதீர்கள். (அவ்வாறு செய்தால்) நீங்கள் தைரியமிழந்து, (பூமியில்) உங்கள் தடயமே இல்லாது போய்விடும். ஆகவே, நீங்கள் (கஷ்டங்களைக் சகித்துக்கொண்டு) பொறுமையாக இருங்கள்;  நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளருடன் இருக்கின்றான். திருக்குர்ஆன்:- 8:46

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَرَادَ بُحْبُوحَةَ الْجَنَّةِ فَلْيَلْزَمِ الْجَمَاعَةَ ) யார் சொர்க்கத்தில் மிகச் சிறந்ததை (வசிப்பிடமாகப் பெற) விரும்புகிறாரோ அவர் சமுதாயக் கூட்டமைப்போடு சேர்ந்திருக்கட்டும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2091

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يَدُ اللَّهِ مَعَ الْجَمَاعَةِ ) அல்லாஹ்வின் (உதவிக்)கரம், சமுதாயக் கூட்டமைப்புடன்தான் உள்ளது. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2092

 

செங்கிஸ்கான் மங்கோலியப் பேரரசின் நிறுவனர். மில்லியன் கணக்கில் முஸ்லிம்களைக் கொன்றவன். நாடுபிடிக்கும் ஆசையில் போர்களை நடத்தியவன்.

 

முஸ்லிம்களின் பெருமைமிகு நகரமான புஹாராமீது தாக்குதல் நடத்தியபோது அவனால் அந்நகருக்குள் நுழைய இயலவில்லை. அப்போது “எமது அணியில் சேர்ந்து கொள்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். (அவர்களை தாக்கமாட்டோம்)” என்று அந்நகரவாசிகளுக்கு எழுத்துமூலம் அறிவித்தான்.

 

ஊர் இரண்டானது. ஓர் அணி செங்கிஸ்கானின் கோரிக்கையை புறக்கணித்தது. அவனை எதிர்க்கவேண்டும் புஹாரா நகரத்தையும் நகரிலுள்ள கடைசி மனிதன்வரை அனைவரையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. மற்றொரு அணி, மங்கோலியர்களின் கொடுமைக்கு பயந்து, செங்கிஸ்கானிடம் சரணாகதி அடைவதென்று முடிவெடுத்தது.

 

சரண்டைந்தவர்களிடம் “எங்களை எதிர்ப்பது என்று முடிவெடுத்த (உங்கள் ஊர்) மக்களுடன் போரிடுவதற்கு எங்களுக்கு நீங்கள் உதவிசெய்தால் (அவர்களை வீழ்த்திய பின்) உங்கள் ஊரின் ஆட்சி அதிகாரத்தை உங்களிடம் ஒப்படைப்போம்” என்றான் செங்கிஸ்கான். ஏமாந்தனர் புஹாராவாசிகள்.

 

காட்டிக்கொடுப்பவர்களும் கைக்கூலிகளும் கோழைகளும் செங்கிஸ்கானுக்கு ஆதரவாக அணிதிரண்டனர். ஓரே ஊரைச் சார்ந்த மக்கள் மோதிக்கொண்டனர். மங்கோலியப் படையினர் வேடிக்கை பார்த்தனர். இறுதியாக துரோகிகளின் அணி வென்றது.

 

ஆனால் பேரதிர்ச்சி என்னவென்றால், (காரியம் முடிந்த பிறகு செங்கிஸ்கான் தன் வேலையைக் காட்டினான்) துரோகிகளிடம் கொடுத்திருந்த ஆயுதங்களை திரும்பப் பெற்று அவர்கள் அனைவரையும் கொல்ல உத்தரவிட்டான்.

 

அப்போது தான் செங்கிஸ்கான், ( ﻟَﻮ ﻛَﺎﻥَ ﻳُﺆْﻣِﻦُ ﺟَﺎﻧِﺒَﻬُﻢ ﻟَﻤَﺎ ﻏَﺪَﺭُﻭﺍ ﺑِﺈِﺧْﻮَﺍﻧِﻬِﻢ ﻣِﻦ ﺃَﺟْﻠِﻨَﺎ ﻭَﻧَﺤْﻦُ ﺍﻟﻐُﺮَﺑَﺎﺀُ )  அவர்களுக்கு தங்கள்மீது நம்பிக்கை இருந்திருந்தால் (நம்மை வீழ்த்தியிருப்பார்கள்.) அந்நியர்களான நமக்காக தம் சகோதரர்களுக்கே துரோகம் செய்திருக்க மாட்டார்கள்” என்ற புகழ்மிக்க தனது பொன்மொழியை  சொன்னான்.

 

இன்றுவரை சகோதரர்களுக்கிடையிலான துரோகத்தை அந்நியர்கள் பயன்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். நூல்: அல்காமில் ஃபித்தாரீக்  இமாம் இப்னுல் அசீர்

 

"ஒரு ஓநாய் ஆட்டு மந்தைக்குள் புகுந்தது. அது ஒரு வெள்ளை ஆட்டைத் தின்றது; இதைக் கண்டு கருப்பு ஆடுகள் மகிழ்ச்சியடைந்தன. பிறகு அந்த ஓநாய் ஒரு கருப்பு ஆட்டைத் தின்றது; அப்போது வெள்ளை ஆடுகள், 'இந்த ஓநாய் மிகவும் நீதியானது' என்று கூறின.

 

அன்று முதல் இன்று வரை அந்த ஓநாய் அவற்றுக்கிடையே தனது 'நீதியை' நிலைநாட்டிக்கொண்டே இருக்கிறது."

 

இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தின் உலகளாவிய பல்வேறு வீழ்ச்சிகளுக்கும் சீரழிவுகளுக்கும் முக்கிய காரணம் "ஒற்றுமையின்மை" தான். அனைத்து விஷயங்களிலும் முஸ்லிம்கள் தங்களின் ஐக்கியத்தை தவறவிட்டதால் பல்வேறு சீரழிவுகளை உலக அரங்கில் இஸ்லாம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

 

நீயா? நானா?

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا خَرَجَ ثَلاَثَةٌ فِي سَفَرٍ فَلْيُؤَمِّرُوا أَحَدَهُمْ ) மூன்று பேர் பயணம் செய்தால் அவர்களில் ஒருவரை தலைவராக நியமித்துக்கொள்ளுங்கள்.  அறிவிப்பாளர்:- அபூஸஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-2608

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மரண நோயில் பீடிக்கப்பட்டிருந்த இறுதி நேரத்தில், (வயதில் சிறியவரான) உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களை ஒரு படைக்கு தளபதியாக (தலைவராக) நியமித்தார்கள். அவரது தலைமையின் கீழ் உமர் (ரலி), அபூஉபைதா (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), அபூ அஃவர் (ரலி), சயீத் பின் ஸைத் (ரலி), கதாத்தா பின் நுஃமான் (ரலி), சலமா பின் அஸ்லம் (ரலி) போன்ற (வயதிலும், அனுபவத்திலும்) மூத்த நபித்தோழர்கள் (சாதாரண படைவீரர்களாக) கலந்துகொண்டார்கள்.                                                                                                                       நூல்:- ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-1, பக்கம்-539

 

நீ பெரியவனா? நான் பெரியவனா?  என்ற மனநிலை ஏற்படாதவாறு நம்மை தற்காத்து கொள்ளவேண்டும். நம்மிடம் விட்டு கொடுக்கும் உயர்ந்த மனப்பான்மை உருவாகிவிட்டால் நாம் வெற்றிவாகை சூடலாம்.

 

இன்று முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளும், பிரிவுகளும் சகோதரத்துவம் எனும் கட்டமைப்பில் இருந்து எவ்வளவு தூரம் விலகி நிற்கிறது என்றால், T.V. யில் ஏதாவது ஒரு சேனலில் கிடைக்கிற அரை மணி அல்லது ஒரு மணி நேரத்தில் அல்லது யூடிப், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் ஒருவருக்கொருவர் மிகக் கேவலமாக விமர்சித்துக்கொள்ளும் நிலை.

 

நான் தான் உண்மையான சுன்னத் ஜமாஅத், அவன் தவ்ஹீத் ஜமாஅத், இவன் தப்லீக் ஜமாஅத் என்றும், அவர் வஹ்ஹாபீ, இவர் பரோலவீ, நீ தப்பான லீக் என்றும் பிறரை குற்றம் சுமத்தி, குறை கூறி, பழிசொல் கூறியும், பஃத்வா கொடுக்கிறோம்.

 

பிறருடைய இறைநம்பிக்கையை பற்றி தெரிய, அறிய நாம் என்ன பஃத்வா கமிட்டி தலைவரா? இன்னும், ஒரு படி மேலே சென்று பார்த்தால், நான் தான் உண்மையான முஸ்லிம், நீ முஷ்ரிக், அவன் காஃபிர் என்று நாளுக்கொரு ஃபத்வா வழங்கி சகோதரத்துவ உறவுக்கு உலைவைக்கிற இறைநம்பிக்கையை அழிக்கக்கூடிய வேலையைச் செய்து கொண்டிருக்கின்றோம்.

 

ஸ்பெயின் நாட்டில் முஸ்லிம்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், அங்கிருந்த கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் அது கூடும்; இது கூடாது என்று கொள்கை ரீதியாக பிரிவினையை உண்டாக்கி, அவர்களுக்குள் சண்டை மூட்டிவிட்டு, அவர்களை பலவீனப்படுத்தி, அதன் பிறகு அந்நாட்டை விட்டே வெளியேற்றினார்கள் என்பது வரலாறு. கொள்கை ரீதியாக சண்டையிட்டு பிரிந்து நிற்பதே நம்மை துடைத்தெறிய காரணமாகிவிடும்.

 

இந்திய தேசத்தில் முஸ்லிம்களாகிய நாம் கணிசமாக இருந்தும் நம்மால் அரசியலில் எதுவும் சாதிக்க முடியவில்லை. இங்கே எத்தனை கட்சிகள் தோன்றினாலும் அந்த  கட்சிகள் அனைத்திலும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆனால், முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு கட்சியாக உருவாகி, தமது பலத்தைக் காட்ட முற்படுவதில்லை. மாறாக ஓட்டு வங்கியாகவே இருக்கின்றனர்.

 

நேற்றைக்கு கட்சி ஆரம்பித்தவனெல்லாம் இன்றைக்கு முதலமைச்சராகி விடுகின்றான். ஆனால், இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து கட்சி ஆரம்பித்து நடத்திக்கொண்டிருக்கின்ற முஸ்லிம்கள், ஒரு அமைச்சர் பதவிக்குகூட அலைந்து திரிகின்ற நிலையில் தான் இருக்கின்றது.

 

ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் காயிதே மில்லத் இஸ்மாயீல் சாஹிப் (ரஹ்) அவர்கள் தலைமையில் 28 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட பலமான எதிர்க்கட்சியாக முஸ்லிம்கள் இருந்துள்ளனர் என்பது வரலாறு

 

மூன்று பேராக இருந்தாலும் அதில் ஒருவர் தலைவராக இருக்க வேண்டும் என்கிறது நபிமொழி. இந்தியாவில் சுமார் 25 கோடி முஸ்லிம்கள் உள்ளோம். ஆனால், நமக்கு ஓர் சக்தி வாய்ந்த தலைவர் உண்டா? யோசிக்க வேண்டுமே!

 

ஒற்றுமையாய் இருப்பதை ஒரு பண்பாகவே வளர்த்துக்கொண்டோமெனில் பிறகு நீ வேறு, நான் வேறு என்று நினைப்பே இல்லாமல் போய்விடும்.


எனவே, நாம் வாழ்க்கையின் அனைத்து கட்டத்திலும் ஒற்றுமையைப் பேணி வாழும் பண்பாளர்களாக அல்லாஹுத்தஆலா நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

ஒன்றுபடுவோம்

    ஒன்றுபடுவோம்   وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا‌  மேலும் , நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்ல...