Search This Blog

Wednesday, 27 May 2026

துறவறம்

 

துறவறம்

 

وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَا مَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ إِلَّا ابْتِغَاءَ رِضْوَانِ اللَّهِ

(உலகத்தின் எல்லா இன்பங்களையும் துறந்துவிடக்கூடிய) துறவித்தனத்தை நாம் அவர்கள்மீது கடமையாக விதிக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய விரும்பி, அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள். திருக்குர்ஆன்:- 57:27

 

"இல்லறம் இறைவனை நெருங்க, அவனை அடைய ஒரு தடைக்கல்" என்ற சித்தாந்தம் தான் உலகில் பெரும்பாலான மதங்களில் இருந்தது. இந்த வழியில்தான் சன்னியாசம் போற்றி வளர்க்கப்பட்டது. மாறாக, இஸ்லாம் கரைபுரண்டோடும் காமத்தை கட்டுப்படுத்துவோ, ஆசையை அடியோடு அடக்கிவைக்கவோ முடியாது என்கிறது. அது இயலாத காரியமே! மனிதனின் இயற்கை தேட்டமான காமத்திற்கு  வடிகால் தான் திருமணம். 

 

கட்டுப்பாடற்ற காமம், காட்டாறு வெள்ளம் போன்றது. அது பேரழிவை உண்டாக்கிவிடும். அடக்கி ஒடுக்கப்பட்ட காமம், தேங்கும் நீராய் ஆங்காங்கே தங்கி உடலுக்கும் உள்ளத்திற்கும் சுகாதாரக்கேடு உருவாக்கிவிடும். ஆகவே, திருமணம் சுகத்திற்கு மட்டுமல்ல, நல்ல உடல் நலத்திற்கும் ஆரோக்கியமான ஆன்மீகத்திற்கும், ஒளிமயமான ஆன்மாவிற்கும் அவசியமானது.

 

தமிழில் "திரு" என்றால் கடவுள் என்றும் பொருள் உண்டு. அப்படியானால் கடவுளின் மணம் பெறுவதுதான் திருமணம். எனவே தான், இஸ்லாம் துறவறத்தை ஆதரிக்கவில்லை. இல்லறம் இறைவனை அடைவதற்கு தடைக்கல் அல்ல. அவனை அடைவதற்கு அது ஒரு படிக்கல் என்கிறது இஸ்லாம். சிற்றின்பத்தின் வழியாக பேரின்பத்தை நோக்கிய பயணம் தான் திருமணம்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَا صَرُورَةَ فِي الإسلَامِ ) சன்னியாசம் இஸ்லாத்தில் இல்லை. அறிவிப்பாளர்:-  அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-1729, தப்ரானீ,  ஹாகிம்

 

இல்லறம் நல்லறமே!

 

(நபியே!) நிச்சயமாக நாம் உங்களுக்கு முன்னரும் தூதர்கள் பலரை அனுப்பி இருக்கிறோம். உங்களைப் போலவே அவர்களுக்கும் மனைவி மக்களையும் கொடுத்திருந்தோம்.   திருக்குர்ஆன்:- 13:38

 

இறைவனை மக்களுக்கு அறிமுகப்படுத்திய இறைத்தூதர்களே இல்லறம் கண்டவர்கள் தான் என திருக்குர்ஆன் இயம்புகிறது.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يَا مَعْشَرَ الشَّبَابِ مَنِ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ، وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ، فَإِنَّهُ لَهُ وِجَاءٌ ) இளைஞர்களே! (உங்களில்) தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும். கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும். ஏனெனில், நோன்பு ஆசையை கட்டுப்படுத்த கூடியதாகும். நூல்:- புகாரீ-5066

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَرَادَ أَنْ يَلْقَى اللَّهَ طَاهِرًا مُطَهَّرًا فَلْيَتَزَوَّجِ الْحَرَائِرَ ) எவர் பரிசுத்தமானவராக, பரிசுத்தமாக்கப்பட்டவராக இறைவனைச் சந்திக்க நாடுகிறாரோ அவர் (பத்தினிகளான) சுதந்திரப் பெண்களை திருமணம் செய்து கொள்ளட்டும். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-1862

 

இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஒரு முஸ்லிம் உபரியான வணக்கங்களில் ஈடுபடுவதைவிட திருமணம் செய்து மனைவி, மக்களின் தேவைக்காக உழைப்பது சிறந்ததாகும்.

 

எந்த உணர்ச்சியையும் இங்கே செயலிழக்கச் செய்ய வேண்டியதில்லை. எல்லா செயல்களும் இங்கு இருக்கும். காதல், காமம், அன்பு, வெறுப்பு, கொடுப்பது, மறுப்பது எல்லாம் நடக்கும். ஆனால் அவைகளை இயக்கிவிடும் மூலவிசை மாறியிருக்கும். மனோஇச்சை இங்கே இறந்து போயிருக்கும். எல்லாம் இறைவனுக்காக என்று அமைந்திருக்கும்.

 

இன்றைய விஞ்ஞானிகள் மனிதகுலம் மணம் புரிவதில் தான் உடல் நலமும், மனவளமும், சீர் சிந்தனையும் பெற முடியும் என்று தமது ஆய்வில் அறிவித்துள்ளனர்.

 

பிரிட்டனைச் சேர்ந்த டாக்டர் பில்டிஹர் 1955 முதல் 1995 வரை 40 ஆண்டுகள் திருமணம் குறித்து பல்வேறு கோணத்தில் ஆய்வு நடத்தி, "உலகில் திருமணம் செய்யாதவர்களுக்கு அதிக நோய்கள் தாக்குகின்றன. மணமாகாதவர்கள் நேரத்திற்கு சாப்பிடாமல் உடல் நலனில் அக்கறையின்றி வாழும் அவல நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். யாருக்காக நாம் வாழ வேண்டும் என்ற மனவிரக்தில், மன உளைச்சலில் காலப்போக்கில் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என தறிகட்டு வாழ்ந்து இறுதியில் தன் இன்னுயிரை நீத்துக்கொள்ள தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனர்" என்ற முடிவுகளை தெரிவித்துள்ளார்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَا رَهْبَانِيَّةَ فِي الْإِسْلَامِ ) இஸ்லாத்தில் துறவறம் என்பது இல்லை. நூல்:- ஃபத்ஹுல் பாரீ, மராசில்

 

மிகவும் மோசமானவர்கள்

 

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை கண்மணி  பெருமானார் (ஸல்) அவர்களின் சபைக்கு (செல்வந்தரான) அக்காஃப் பின் பிஷ்ரு தமீமீ (ரலி)  அவர்கள் வந்தார். அவரிடம் அண்ணலார், ( يَا ‏ ‏عَكَّافُ ، ‏هَلْ لَكَ مِنْ زَوْجَةٍ ) “அக்காஃப்! உனக்கு மனைவி உண்டா?” அவர் “இல்லை” என்றார். அண்ணலார், (وَلَا ‏‏جَارِيَةٍ ‏؟ ‏ ) “அடிமைப்பெண்ணாவது உண்டா?” என்று வினவினார்கள். அதற்கும் அவர் "இல்லை" என்றார்.

 

பிறகு அண்ணலார், ( أَنْتَ إِذًا مِنْ إِخْوَانِ الشَّيَاطِينِ ، وَلَوْ كُنْتَ فِي ‏ ‏النَّصَارَى ‏ ‏كُنْتَ مِنْ رُهْبَانِهِمْ ‏، ‏إِنَّ سُنَّتَنَا النِّكَاحُ ، شِرَارُكُمْ عُزَّابُكُمْ ، وَأَرَاذِلُ مَوْتَاكُمْ عُزَّابُكُمْ ، أَبِالشَّيْطَانِ ‏ ‏تَمَرَّسُونَ !‏ ‏مَا لِلشَّيْطَانِ مِنْ سِلَاحٍ أَبْلَغُ فِي الصَّالِحِينَ مِنْ النِّسَاءِ إِلَّا الْمُتَزَوِّجُونَ ، أُولَئِكَ الْمُطَهَّرُونَ الْمُبَرَّءُونَ مِنْ ‏‏الْخَنَا ) "நீர் ஷைத்தானுடைய சகோதரர் ஆவீர். நீர் மட்டும் கிறிஸ்தவராக இருந்திருந்தால் அவர்களில் ஒரு துறவியாக இருந்திருப்பீர். திருமணம் செய்வது தான் நம்முடைய அழகிய வழிமுறை. உங்களில் மோசமானவர்கள் பிரம்மச்சாரிகள் தான். இறந்தவர்களில் கேவலமானவர்கள் பிரம்மச்சாரிகள் தான். ஷைத்தானிய செயல்களில் ஈடுபடுகிறீர்கள்? ஷைத்தான் திருமணமாகாத நல்லடியார்களை வழிகெடுப்பதற்கு பெண்களைவிட வேறெந்த ஆயுதத்தையும் பயன்படுத்துவதில்லை. மணமுடித்தவர்களே பரிசுத்தமானவர்கள் (அவர்கள் தான்) அருவருப்பான பேச்சுக்களை விட்டும் விலகி இருப்பார்கள்.” என்றார்கள். இந்த கடுமையான எச்சரிக்கையைக் கேட்ட பிறகு அக்காஃப் (ரலி) அவர்கள் உடனடியாக அங்கேயே திருமணம் முடித்துக் கொண்டார். நூல்:- முஸ்னது அஹ்மத்

 

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். ( مَا يَمنَعُكَ مِنَ النَّكَاحِ إلَّا عَجزٌ أو فُجُورٌ ) திருமணம் செய்வதிலிருந்து உன்னை தடுப்பது (இரண்டு மட்டும்தான். அவை: மலட்டுத்தனம் எனும்) இயலாமை; அல்லது பாவச்செயல் (கற்பொழுக்கம் பேணாமை). நூல்:- முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக், முஸன்னஃப் இப்னு அபீஷைபா, சுனன் சயீத் பின் மன்ஸூர், அக்பாரு மக்கா இமாம் ஃபாக்கிஹி, ஹில்யா இமாம் அபூநயீம்

 

சிலர், ஆன்மீக குருக்கள் அல்லது பிரம்மச்சாரிகள் என்ற போர்வையில்  பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் இழைக்கப்படும் பாலியல் தொல்லைகள் மற்றும் வன்கொடுமைகள் ஏராளம்.

 

குடும்பப் பிரச்சனை, நோய், கடன் போன்ற காரணங்களுக்காக பரிகாரம் செய்வதாகக் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் பறிக்கும் பிரம்மச்சாரிகளும் உண்டு. அவர்கள் அறக்கட்டளை என்ற பெயரில் பல இடங்களில் நிதி மோசடி செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

சாம்பல், லிங்கம் மற்றும் இன்ன பிற பொருள்கள் வரவழைப்பது போன்ற மாயாஜால வித்தைகளை காட்டி, “நானே கடவுள்” அல்லது “நான் கடவுளின் அவதாரம்” என்றெல்லாம் கூறி, மக்களை ஏமாற்றக்கூடிய பல பிரமச்சாரிகள் பலரையும் உலகம் கண்டுள்ளது.

 

அவர்களின் சாயம் வெழுத்த பிறகு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க பலர் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடுவதும், தலைமறைவாக வாழ்வதும் தொடர்கிறது.

 

இச்சைகளை இல்லாமல் ஆக்குவது மனித இயல்புக்கு முரணான, நடைமுறைக்கு சாத்தியமில்லாத காரியமாகும். இயற்கைக்கு முரணான இது மாதிரியான எந்த ஒரு அபத்தமும் இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லவே இல்லை. இதுவே இணையில்லா இஸ்லாத்தின் இமாலயச் சிறப்பு.

 

உயர்ந்த படித்தரங்களை இழக்க நேரிடலாம்

 

நபிகள் நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள். ( مَن تَرَكَ التَّزَوُّجَ مَخَافَةَ العَیلَةِ فَلَیسَ مِنَّا ) குடும்ப பாரத்தை அஞ்சி திருமணத்தைக் விடுபவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.   நூல்:- தைலமீ

 

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த அறிஞர் பிஷ்ருல் ஙாபி (ரஹ்) அவர்கள் திருமணம் முடிக்கவில்லை. இந்நிலையில் இறந்த பின் அன்னார் கனவில் காணப்பட்டபோது கூறினாராம். நான் சொர்க்கத்தின் பல படித்தரங்களுக்கு உயர்த்தப்பட்டேன். என்றாலும், குடும்பஸ்தர்களின் படித்தரத்தை சொர்க்கத்தில் என்னால் அடைய முடியவில்லை.

 

ஆண்மை நீக்கம் செய்யலாமா?

 

இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள தூய்மையான பொருள்களை நீங்கள் விலக்கிக் கொள்ளாதீர்கள். மேலும், நீங்கள் எல்லை மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லை மீறுவோரை நேசிப்பதில்லை. திருக்குஆன்:- 5:87 

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் (எங்கள் துணைவியாரோ வேறு பெண்களை மணமுடித்துக்கொள்ள தேவையான செல்வமோ) ஏதும் இருக்கவில்லை. ஆகவே, நாங்கள் நபியவர்களிடம் (ஆண்மை நீக்கம் செய்து கொள்ள) நாங்கள் காயடித்து கொள்ளலாமா? என்று கேட்டோம். அவ்வாறு செய்ய வேண்டாமென நபியவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். அதன் பின்னர் ஆடைக்குப் பதிலாகப் பெண்களை மணமுடித்துக்கொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள்" என்று கூறிவிட்டு, மேற்காணும் (5:87) வசனத்தை எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள். அறிவிப்பாளர்:- கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் நூல்:- புகாரீ-5075

 

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் துறவறம் மேற்கொள்ள (விரும்பி அனுமதி கேட்டபோது) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள். அவருக்கு (மட்டும்) நபியவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம். நூல்:- புகாரீ-5073

 

உஸ்மான் பின் மள்ஊன் (ரலி) அவர்கள் கூறியதாவது. (நான் பேராசான் பெருமானார் ஸல் - அவர்களிடம்) "நாயகமே! விதையடித்து ஆண்மை நீக்கும் செய்ய எங்களுக்கு அனுமதி தாருங்கள்" என்று கோரினேன். அப்போது நபியவர்கள், ( لَيْسَ مِنَّا مَنْ خَصَى وَلَا اخْتَصَى إِنَّ خِصَاءَ أُمَّتِي الصِّيَامُ ) "மற்றவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்தவரும், சுயமாக ஆண்மை நீக்கம் செய்து கொண்டவரும் நம்மைச் சார்ந்தவர்கள் அல்லர்.  எனது சமுதாயத்தினரின் ஆண்மை நீக்கம் (எனும் மன இச்சைகளை அடக்குவது என்பது) நோன்பு நோற்பதாக்கும்” என்று கூறினார்கள். மேலும் நான், "துறவறம் பூண்டு வழிபாடுகளில் ஈடுபட எங்களுக்கு அனுமதி தாருங்கள்" என்று கோரினேன். அதற்கு நபியவர்கள், ( إِنَّ تَرَهُّبَ أُمَّتِي الْجُلُوسُ فِي الْمَسَاجِدِ انْتِظَارًا لِلصَّلَاةِ ) "எனது சமுதாயத்தினரின் துறவற வழிபாடு என்பது பள்ளிவாசல்களில் தொழுகையை எதிர்பார்த்து அமர்வதாகும்" என்று கூறினார்கள். நூல்:- ஷர்ஹுஸ் ஸுன்னா இமாம் பஙவீ,  மிஷ்காத்-724

 

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! ஆண்மை நீக்கம் (விதையடித்தல்) செய்துகொள்ள எனக்கு அனுமதி தாருங்கள்" எனக் கோரினார். அப்போது நபியவர்கள், ( خِصَاءُ أُمَّتِي اَلصِّيَامُ وَالْقِيَامُ ) "என் சமுதாயத்தாரின் ஆண்மை நீக்கமானது நோன்பும், இரவுத் தொழுகையும் ஆகும்" என்றார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், தப்ரானீ, அல்காமில் இமாம் இப்னு அதிய்யி

 

ஒரு போருக்காக வெளியூர் சென்றிருந்த நபித்தோழர்கள் அங்கு நீண்ட நாள்கள் தங்க வேண்டியதாயிற்று. துணைவியர் உடன் இல்லாத நிலையில் தாம்பத்திய உறவுக்காக அவர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். எனவே, ஆண்மையை அகற்றிக்கொள்வதற்காக விதையடித்துக்கொள்ள சிலர் அனுமதி கேட்டார்கள். இது ஆண்மையை சிதைத்து இனப்பெருக்கத்தையே தடுத்துவிடுகின்ற ஒரு நடவடிக்கையாகும் என்பதால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை.

 

விதையடித்தல் கூடாது என நபியவர்கள் கூறியதை உறுதிப்படுத்தும் வகையில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், (5:87) எனும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

 

அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நாங்கள் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களுடன் ஒரு படை பிரிவில் சென்றோம். அப்போது ஒரு மனிதர் சிறிது நீருள்ள ஒரு குகையை கடந்து சென்றார். அவர் அந்த குகையில் தங்கி அங்குள்ள நீரைப் பருகி சுற்றியுள்ள தாவரங்களை உண்டு உலகிலிருந்து விலகி வாழ நினைத்தார். 

 

அவர், ( لَوْ أَنِّي أَتَيْت نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَإِنْ أَذِنَ لِي فَعَلْتُ وَإِلَّا لَمْ أَفْعَلْ ) "நான் நபியவர்களிடம் சென்று இதைக் கூறிய பிறகு அவர்கள் அதை அனுமதித்தால் அவ்வாறு செய்வேன். இல்லையெனில்  செய்யமாட்டேன்" என்று கூறினார். அவர் நபியவர்களிடம் சென்று, ( يَا نَبِيَّ اللَّهِ إِنِّي مَرَرْتُ بِغَارٍ فِيهِ مَا يَقُوتُنِي مِنْ الْمَاءِ وَالْبَقْلِ فَحَدَّثَتْنِي نَفْسِي بِأَنْ أُقِيمَ فِيهِ وَأَتَخَلَّى عَنْ الدُّنْيَا ) "நாயகமே! நான் ஒரு குகையை கடந்து சென்றேன். அதில் எனக்கு வாழ்வதற்கான நீரும் தாவரங்களும் உள்ளன. நான் அங்கு தங்கி உலகத்தில் இருந்து விலகி வாழ நினைக்கிறேன்" என்று கூறினார்.

 

அப்போது நபியவர்கள், ( إِنِّي لَنْ أُبْعَثَ بِالْيَهُودِيَّةِ وَلا بِالنَّصْرَانِيَّةِ وَلَكِنِّي بُعِثْتُ بِالْحَنِيفِيَّةِ السَّمْحَةِ ) "நான் யூதக்கொள்கையுடனும் கிறிஸ்தவ கொள்கையுடனும் அனுப்பப்படவில்லை. மாறாக, எளிமையான ஏகத்துவ மார்க்கத்துடன் அனுப்பப்பட்டுள்ளேன்" என்று கூறினார்கள். (அவருக்கு துறவு வாழ்க்கைக்கு அனுமதி கிடைக்கவில்லை). நூல்:- முஸ்னது அஹ்மத், தல்பீஸ் இப்லீஸ் பாடம்-10

 

அன்றைக்கு யூதர்கள், கிறிஸ்தவர்களில் சிலர் துறவறம் புகுவதைக் கண்ட அருமை நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்தின் மகத்துவத்தையும் மாண்பையும் எடுத்துரைக்கும் விதமாக "இஸ்லாத்தில் துறவறம் இல்லை" என்று கூறினார்கள்.

 

சிரமத்தை ஏற்படுத்திக்கொள்ளாதீர்!

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கும் மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபியவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து விசாரித்தனர்.

 

அது பற்றி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபியவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்கு சமாதானமும் கூறிக்கொண்டு), 'முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபியவர்கள் எங்கே? நாம் எங்கே? என்று சொல்லிக்கொண்டனர்.

 

அவர்களில் ஒருவர், "(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்" என்றார். இன்னொருவர், "நான் ஒருநாள்கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கபோகிறேன்" என்றார். மூன்றாமவர், "நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒரு போதும் மணமுடித்துக்கொள்ள மாட்டேன்" என்று கூறினார்.

 

அப்போது நபியவர்கள் அந்த தோழர்களிடம் வந்து, ( أَنْتُمُ الَّذِينَ قُلْتُمْ كَذَا وَكَذَا أَمَا وَاللَّهِ إِنِّي لأَخْشَاكُمْ لِلَّهِ وَأَتْقَاكُمْ لَهُ، لَكِنِّي أَصُومُ وَأُفْطِرُ، وَأُصَلِّي وَأَرْقُدُ وَأَتَزَوَّجُ النِّسَاءَ، فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي ) "இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள் தானே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன். தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன். மேலும் நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-5063

 

அலீ (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) ஆகியோரே அந்த மூவர் எனக் கூறப்படுகிறது. நூல்:- ஃபத்ஹுல் பாரீ

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ تُشَدِّدُوا عَلَى أَنْفُسِكُمْ فَيُشَدَّدَ عَلَيْكُمْ فَإِنَّ قَوْمًا شَدَّدُوا عَلَى أَنْفُسِهِمْ فَشَدَّدَ اللَّهُ عَلَيْهِمْ فَتِلْكَ بَقَايَاهُمْ فِي الصَّوَامِعِ وَالدِّيَارِ ) (மக்களே!) உங்களுக்கு நீங்களே சிரமத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். (அவ்வாறு நீங்கள் செய்தால்) அல்லாஹ் உங்களை மீது சிரமத்தை ஏற்படுத்திவிடுவான். ஏனெனில் (இஸ்ராயீல் மக்களில்) ஒரு கூட்டத்தினர் (காலமெல்லாம் நோன்பு நோற்பது, இரவெல்லாம் விழித்து வணங்குவது, மனைவியரிடமிருந்து விலகியிருப்பது போன்ற செயல்களால்) தங்களுக்குத் தாங்களே சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டனர். எனவே அல்லாஹ் அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி விட்டான். அவர்களின் எஞ்சியிருக்கும் மக்கள் (கிறிஸ்தவர்களின்) துறவிமடங்களிலும் (யூதர்களின்) வழிபாட்டு தலங்களிலும் இருக்கின்றனர்.

 

'மேலும், (அவர்களின்மீது கடமையாக்கப்படாத) துறவறத்தை அவர்களாகவே உருவாக்கிக் கொண்டனர். அவர்கள் மீதும் நாம் அதனை விதியாக்கவில்லை' எனும் (திருக்குர்ஆன்:- 57:27) திருவசனத்தை ஓதினார்கள். நூல்:- அபூதாவூத்-4258

 

ஒரு மனிதர் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! நான் இந்த இறைச்சியை உட்கொண்டால் பாலியல் உணர்வுக்கு ஆளாகிவிடுகிறேன். அதனால், இறைச்சி எனக்கு நானே தடை  விதித்துக்கொண்டேன்" என்று தெரிவித்தார். அப்போதுதான் (5:87) இவ்வசனம் அருளப்பெற்றது. நூல்:- ஃபத்ஹுல் பாரீ, உம்தத்துல் காரீ

 

எவருக்காவது காம உணர்வை கட்டுப்படுத்தி, குழந்தைப்பேற்றை தள்ளிப்போட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதிகமாக நோன்பு நோற்கட்டும்! இரவில் நின்று வணங்கட்டும்! என நபியவர்கள் யோசனை கூறினார்கள். காரணம், நோன்பும் சரி! இரவுத் தொழுகையும் சரி! தடை செய்யப்பட்ட செயல்களில் ஈடுபடும் வேட்கையைத் தடுத்துவிடும்.

 

விதிவிலக்கானவர்கள்

 

பஸாராவின் கவர்னர், ஆன்மீகப் பெருந்தகை ஆமீர் பின் அப்துல்லாஹ் அத்தமீமி (ரஹ்) அவர்களை அழைத்து, “நீங்கள் இதுவரை ஏன் திருமணம் முடிக்காமல் இருக்கிறீர்கள்? என்று வினவினார். ஆமீர் (ரஹ்) அவர்கள், “நான் திருமணத்தை வெறுப்பவர் அல்லர். அது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் (சுன்னத் எனும்) அழகிய நடைமுறை என்பதை நான் அறிவேன். இஸ்லாத்தில் துறவறத்திற்கு அனுமதி இல்லை என்பதையும் நான் அறிவேன். என்னிடம் இருப்பது ஒரு மனம் அதை நான் அல்லாஹ்விடம் கொடுத்துவிட்டேன். ஒருவேளை, நான் திருமணம் முடித்து அவர்களின் அன்பு என் மனதில் மிகைத்து, அல்லாஹ்வை விட்டும் நகர்ந்து விடுவேனோ என்ற பயம் எனக்கு இருக்கிறது. இதனால்தான் நான் திருமணம் முடிக்காமல் இருக்கிறேனே தவிர, மற்றவர்களை நோக்கி திருமணம் செய்யாதீர்கள் என்று நான் கூறவில்லை” என்று பதிலளித்தார்.

 

ஒருமுறை ஆமீர் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள், “இறைவா! நான் பெண்களை காணும்போது ஏற்படும் காம உணர்வுகளை விட்டும் என் உள்ளத்தை பாதுகாப்பாயாக! (அதாவது, எனக்கு பெண்கள் மீது பிரியமே ஏற்படக்கூடாது)” என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ் அதை ஏற்றுக்கொண்டான். அன்னாரே கூறுகிறார்கள். என்னை பொருத்தவரையில் நான் ஒரு பெண்ணை பார்ப்பதும் ஒரு சுவற்றைப் பார்ப்பதும் சமமாகவே இருக்கிறது. எனக்கு எந்த உணர்வும் ஏற்படுவதில்லை.

 

உண்மையாகவே, பெண்கள்மீது மோகம் இல்லாதவர்கள் மணம் முடிக்காமல் இருப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறது. இயற்கையாகவே பெண்கள்மீது மோகம் இல்லாதவர்கள், ஊர் உலகத்திற்காக திருமணம் முடித்துவிட்டு, மனைவியின் உடல் தேவை பூர்த்திச்செய்யாமல் இருப்பது பெரும்பாவமாகும்.

 

திருமணமே வேண்டாம் என்று சொல்பவர்கள் சற்று சிந்திக்க வேண்டும். ஒரு ஆணோ, பெண்ணோ திருமணம் செய்யாமல் கொஞ்ச நாளைக்கு நல்லபடியாக வாழலாம்.

 

ஆனால்,  கடைசி காலத்தில் நம்மைப் பார்த்துக்கொள்ள யாருமே இருக்க மாட்டார்கள். அந்நிலையில் நம்மிடம் பேசுவதற்கு கூட யாரும் விரும்பமாட்டார்கள். அது மிகவும் கொடுமையாக இருக்கும். இதற்காகவா திருமணம் செய்ய வேண்டும்? என்று எண்ணவேண்டாம். ஆனால், இதற்காகவாவது திருமணம் செய்திருக்கலாமே என்று அப்போது எண்ணத் தோன்றும்.

 

உடம்பில் ஆரோக்கியம் இருக்கின்ற வரைக்கும் தான் தனிமையில் வாழ்வதற்கு தைரியம் இருக்கும். முதுமை வந்து, நடைகள் தளரும்போது தான், "நமக்கென்று ஒருவள் / ஒருவன் தாங்கி செல்ல இருந்திருக்கலாமோ" என்று யோசனைத் தோன்றும். அப்போது தேடினால் யாரும் வர மாட்டார்கள். இப்படி புலம்புபவர்கள் நிறைய பேரை பார்த்துவிட்டது இந்த உலகம்.

 

அப்போது தவித்த வாய்க்கு தண்ணீர் தர யாரும் இருக்கமாட்டார்கள். ஒருவேளை சோற்றுக்குகூட உறவுக்காரர்களை நம்பித்தான்  இருக்கவேண்டும்.

 

எவ்வளவு தான் நாம் காசு வைத்திருந்தாலும் பார்க்க வருகிறவர்கள் நமது காசுக்காக மட்டுமே வருவார்கள்.  நம்மிடம் காசு இல்லையென்றால் அவர்களும் வருவதை நிறுத்தி விடுவார்கள்.

 

கடைசி காலத்தில் நாம் இறக்கும்போது நம்மிடம் பணம் இருந்தால் நம்மை நல்லடக்கம் செய்வார்கள். நம்மிடம் பணம் இல்லையென்றால் நாம் ஒரு அநாதைப் பிணம் தான். அதனால் தான், நல்ல துணையைத்தேடி திருமணம் செய்துகொள்ள வேண்டும். குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

 

"பிரம்மச்சாரியம்" சமூகத்தில் புண்ணியம் நிறைந்தது என்று கருதுபவர்களை நோக்கி, "குடும்பத்துடன் வாழ்பவன் தான் பரிசுத்தவான்" என்று இஸ்லாம் இயம்புகிறது.

 

ஆண்மையுள்ள மனிதன் துறவியாக இருக்கவே முடியாது. அப்படி சிலர் இருக்கின்றனர் என்றால் அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். அதற்கு உலகில் போலி சாமியார்கள், சன்னியாசிகள், பாதிரிமார்கள் ஆகியோரை உதாரணமாக சொல்லலாம்.

 

எனவே, நாம் இஸ்லாம் கூறுகின்ற வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

துறவறம்

  துறவறம்   وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَا مَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ إِلَّا ابْتِغَاءَ رِضْوَانِ اللَّهِ ( உலகத்தின் எல்லா இன்பங்களை...