பயனளிப்பவர்
وَلَا تَنْسَوُا الْفَضْلَ بَيْنَكُمْ إِنَّ
اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்)
உபகாரம் செய்து கொள்வதையும் மறவாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்(த்துக்
கூலி கொடு)ப்பவனாக இருக்கின்றான். திருக்குர்ஆன்:-
2:237
"பிறருக்குப்
பயனளிப்பவனாக வாழ வேண்டும்" என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும்
மாற்றும் மிகச்சிறந்த தத்துவமாகும். சுயநலம் கடந்து பிறர் நலம் பேணுவது சமூகத்திற்கு
மாபெரும் பலத்தைத் தரும்.
பிறருடைய தேவைகளை
அறிந்து, தங்களால் இயன்ற பொருளாதார
அல்லது உடல் உழைப்பு சார்ந்த உதவிகளைச் செய்வதும், கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவாக இருப்பதும், ஆறுதல் வார்த்தைகள்
கூறுவதும் கூட ஒருவகையான உதவியே ஆகும்.
முதியவர்கள், ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்
போன்ற சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கு ஆதரவாக இருத்தலும் உதவியே!
கற்ற கல்வியை அல்லது
தொழில் சார்ந்த திறமைகளை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது. மற்றவர்களின் வளர்ச்சிக்கு
வழிகாட்டியாக இருப்பதும் பிறருக்கு செய்யும் உதவியே!
பிறருக்கு உதவும்போது
கிடைக்கும் மன அமைதியும் மகிழ்ச்சியும் அளவிட முடியாதவை. இது நம்மைச்சுற்றி நேர்மறை
ஆற்றலையும் (Positive Energy), நல்ல நண்பர்களையும் உருவாக்கும்.
"நீயும் உருவாகு; பிறரையும் உருவாக்கு"
என்ற பொன்மொழி போல, பிறருக்குப் பயன்படும் வாழ்வே நிலையான புகழையும், இறைவனின் நெருக்கத்தையும்
பெற்றுத் தரும்.
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ يَسَّرَ اللَّهُ عَلَيْهِ فِي الدُّنْيَا
وَالآخِرَةِ ) யார் சிரமப்படுவோருக்கு
உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான். அறிவிப்பாளர்:-
அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5231, அபூதாவூத் திர்மிதீ-இப்னுமாஜா-221
அல்லாஹ்விற்கு மிகவும்
பிரியமானவர்கள்
பேராசான் பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَحَبُّ النَّاسِ إِلَى اللَّهِ
أَنْفَعُهُمْ لِلنَّاسِ ) பிறருக்கு
மிகவும் பயனளிப்பவர்களே மக்களில் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானவர்கள். அறிவிப்பாளர்:-
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, அத்தர்ஙீபு வத்தர்ஹீபு
இறைத்தூதர் மூசா
(அலை) அவர்கள் இறைவனிடம், “இறைவா! மக்களில் வைத்து உனக்கு மிக விருப்பமானவர் யார்?” என்று கேட்டார்கள்.
அதற்கு இறைவன், “தம்முடைய சகோதரருக்கு காலில் ஓர் முள் குத்தினால்கூட அதை தமக்கு ஏற்பட்டதாக நினைத்து
வருத்தப்படுபவனாகும்” என்று கூறினான். நூல்:- தன்பீஹுல் முஃக்தர்ரீன்
எவரும் தமக்கு நல்லது
நடக்க வேண்டும் என்று விரும்புவார். அவ்வாறே பிறருக்கும் நல்லதே விரும்ப வேண்டும்.
அப்படியானால், தமக்கு வெறுப்பதை மற்றவருக்கு வெறுக்க வேண்டும். அடுத்தவர் கெட்டுப்போவதை, சீரழிவதை விரும்பக்கூடாது.
இதுவே நிறைவான இறைநம்பிக்கை ஆகும்.
அவருக்கு முதலில்
உதவுங்கள்
உஹுத் போரின் உச்சத்தில்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின் முகத்தில் ஏற்பட்ட காயத்தையும் அவருடைய முன்பற்கள்
உடைந்திருப்பதையும் தலையில் அணிந்திருந்த பாதுகாப்புக் கவசத்தின் இரண்டு வளையங்கள்
முகத்தில் ஆழப்பதிந்து இருப்பதையும் கண்ட நபித்தோழர்கள் பதறினார்கள். நபித்தோழர்கள்
அனைவரும் நபியவர்களுக்கு உதவ முன் வந்தனர்.
ஆனால் நபியவர்களோ, "உங்கள் சகோதரரை போய்ப்
பாருங்கள்" என்றார்கள். அதாவது, நபியவர்கள் கூறியது தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி)
அவர்களைப் பற்றியே ஆகும்.
தல்ஹா (ரலி) அவர்கள்
நபியவர்களை காப்பாற்றும் முயற்சியில் மிகப் பெரிய அளவில் காயமுற்று அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்.
எனவே, அவருக்கு முதலில்
உதவுங்கள் என்று தமது தோழர்களிடம் நபியவர்கள் கூறினார்கள். நூல்:- அபூபக்ர் (ரலி) அவர்கள்
- அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி
அபூமஸ்ஊத் அல்அன்சாரீ
(ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார்
(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, "நாயகமே! என்னிடம் பயண வாகனம் இல்லாததால் எனது பயணம்
தடைபட்டுள்ளது. எனவே, நான் பயணிக்க எனக்கு வாகனம் ஒன்றை தாருங்கள்" என்று கேட்டார்.
அதற்கு நபியவர்கள், ( لاَ أَجِدُ مَا أَحْمِلُكَ عَلَيْهِ
وَلَكِنِ ائْتِ فُلاَنًا فَلَعَلَّهُ أَنْ يَحْمِلَكَ )
"உன்னை ஏற்றிச் செல்வதற்கான
வாகனம் என்னிடம் இல்லை. ஆயினும், இன்ன மனிதரிடம் நீ செல்! அவர் உன் பயணத்திற்குரிய வாகனத்தைத்
தரக்கூடும்" என்று கூறினார்கள். எனவே அவர் அம்மனிதரிடம் சென்றார். அம்மனிதரும்
அவருக்கு வாகனம் வழங்கினார். பிறகு அவர் நபியவர்களிடம் வந்து நடந்தவற்றை தெரிவித்தார்.
அப்போது நபியவர்கள், ( مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ
أَجْرِ فَاعِلِهِ ) "நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக்
கிடைப்பது போன்ற நற்கூலி கிடைக்கும்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-4464, அல்அதபுல் முஃபரத்-242
நம்மிடம் இயலாத ஒருவர்
வந்து "எனக்கு இது தேவையாக உள்ளது. அதற்காக ஏதேனும் உதவி செய்யமுடியுமா?" என்று கேட்கும்போது, அப்போது நம்மிடம்
இருந்தால் அவருக்கு கொடுத்து உதவவேண்டும். இயலாதபோது,
"நீ இன்னாரிடம் சென்றால் அவர்
உனக்கு உதவக்கூடும்" என்று அழகிய முறையில் அவருக்கு வழிக்காட்ட வேண்டும். இதுவே, நபிவழி ஆகும்.
நன்மையைத் தட்டிச்
சென்றுவிட்டனர்
அனஸ் (ரலி) அவர்கள்
கூறியதாவது. (ஒரு பயணத்தில்) நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அன்று)
தமது ஆடையால் தமக்குத்தாமே நிழலிட்டுக்கொண்டிருந்தவரே எங்களில் அதிக நிழல் பெற்றவராய்
இருந்தார். (அந்த அளவுக்கு வெயில் கடுமையாக இருந்தது; ஒதுங்க இடமில்லை.) நோன்பு நோற்றவர்கள் எந்த வேலையும்
செய்யவில்லை.
நோன்பு நோற்காமல்
விட்டுவிட்டவர்கள்தான் வாகன (ஒட்டக)ங்களை எழுப்பி, (தண்ணீர் புகட்டியும் தீனி போட்டும்) வேலை செய்தார்கள்; நோன்பாளிகளுக்கு
(ஓய்வெடுக்க கூடாரம் அடித்தும்) பணி புரிந்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( ذَهَبَ
الْمُفْطِرُونَ الْيَوْمَ بِالأَجْرِ ) ‘‘இன்று நோன்பு நோற்காதவர்கள் நன்மையைத் தட்டிச் சென்றுவிட்டனர்”
என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2890, முஸ்லிம்
நோன்பு நோற்காதவர்களுக்கு
எல்லா நன்மைகளும் எப்படி சென்றன? காரணம், அவர்களது செயற்பாட்டின் பிரயோசனம் அவர்களுடன் மட்டும் சுருங்கிவிடவில்லை.
அது அடுத்தவர்களையும் சென்றடைந்தது. ஆனால், நோன்பு நோற்றவர்களைப் பொறுத்தவரையில் அதன் பயனை
அவர்கள் மட்டுமே பெற்றுக்கொண்டார்கள். அது பிறருக்கும் சென்றடையவில்லை. எனவே, ஒருவனது செயலின் பயன்
அவனுக்கு மட்டும் உரியதல்லாமல் பிறருக்கும் சென்றடையக்கூடியதாக இருத்தல் மிகவும் அவசியமாகும்.
அதில் தான் அதிகமான நன்மைகள் இருக்கின்றன என்பதை விளங்க வேண்டும்.
ஒருவர் தனக்குரிய
வணக்க வழிபாடுகளில் மட்டும் கவனம் செலுத்துவதைவிட, தனது நற்செயல்கள் பிறருக்குப் பயன்படும் வகையில்
செயலாற்றுவது மார்க்கத்தில் மிக உயர்ந்த நன்மைகளைப் பெற்றுத் தரும்.
பயணத்தின்போது ஏற்படும்
சிரமங்களை உணர்ந்து, நோன்பை விட்டுவிட்டு பின்னர் நோற்கலாம் எனும் இஸ்லாமியச் சலுகையை
பயன்படுத்திக் கொள்வது தவறல்ல என்பதை இது காட்டுகிறது.
இவரது கடனுக்கு நான்
பொறுப்பு
சலமா பின் அல்அக்வஉ
(ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது
ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டுவரப்பட்டது. நபித்தோழர்கள் “நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று நபியவர்களிடம்
கூறினார்கள். நபியவர்கள், ( فَهَلْ عَلَيْهِ دَيْنٌ ) “இவர் கடனாளியா?' என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் “இல்லை” என்றனர்.
நபியவர்கள் ( هَلْ
تَرَكَ شَيْئًا )
“ஏதேனும் (சொத்தை) இவர் விட்டுச்சென்றிருக்கிறாரா?” என்று கேட்டபோது “இல்லை” என்றனர். அவருக்கு நபியவர்கள்
தொழுகை நடத்தினார்கள்.
பிறகு மற்றொரு ஜனாஸா
கொண்டு வரப்பட்டது. அப்போது “(நாயகமே!) இவருக்குத் தொழுகை நடத்துங்கள்” என்று நபித்தோழர்கள்
கூறினர். அதற்கு நபியவர்கள், “இவர் கடனாளியா?” என்று கேட்டபோது “ஆம்” எனக் கூறப்பட்டது. நபியவர்கள், “இவர் ஏதேனும் விட்டுச்சென்றிருக்கிறாரா?” என்று கேட்டபோது
“மூன்று பொற்காசுகளை விட்டுச்சென்றிருக்கிறார்” என்றனர். அவருக்கும் தொழுகை நடத்தினார்கள்.
பிறகு மூன்றாவது ஜனாஸா
கொண்டு வரப்பட்டது. “(நாயகமே!) நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று நபித்தோழர்கள்
கூறினர். நபியவர்கள், “இவர் ஏதேனும் விட்டுச்சென்றிருக்கிறாரா?” என்று கேட்டபோது, “இல்லை” என்றனர். நபியவர்கள், “இவர் கடனாளியா?” என்று கேட்டபோது, “மூன்று பொற்காசுகள் கடன் வைத்திருக்கிறார்” என்று
நபித்தோழர்கள் கூறினார்கள். நபியவர்கள், ( صَلُّوا عَلَى صَاحِبِكُمْ ) “உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்” என்று கூறிவிட்டார்கள்.
அப்போது அபூகத்தாதா
(ரலி) அவர்கள், ( صَلِّ عَلَيْهِ يَا رَسُولَ اللَّهِ، وَعَلَىَّ
دَيْنُهُ ) “இவரது கடனுக்கு நான் பொறுப்பு; நாயகமே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று கூறியதும் அவருக்கு
நபியவர்கள் தொழுகை நடத்தினார்கள். நூல்:- புகாரீ-2289
ஒருவருக்கு தமது இறுதித்
தொழுகையை அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தொழுக வைப்பது பெரும் பாக்கியம். நம்முடைய சகோதரர்
ஒருவருக்கு அந்த பெரும் பாக்கியம் தவறிப்போவது நல்லதல்ல. அவருக்கு அந்த பாக்கியம் கிடைப்பதற்கு
அவர் வாங்கிய கடனுக்கு, தான் பொறுப்பேற்பதன் மூலம் அவருக்கு அந்த பாக்கியம் கிடைக்குமெனில்
அதுவே பெரும் மகிழ்ச்சி என்று அபூகத்தாதா (ரலி) அவர்கள் எண்ணினார்கள்.
பிறர் படுகின்ற கஷ்டத்தில்
பங்கேற்று, அவர்களுக்கு சற்று ஓய்வு தருவதிலும் ஒரு சுகமுண்டு.
சைகை செய்தனர்
அருமை நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( مَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يَنْفَعَ أَخَاهُ فَلْيَفْعَلْ ) உங்களில் ஒருவர் தம் சகோதரருக்குப் பயனளிக்க முடிந்தால் அவ்வாறே
செய்யட்டும் அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4424
யர்மூக் யுத்தக்களத்தில்
நபித்தோழர்கள் பலரும் எதிரிகளின் தாக்குதலுக்குள்ளாகி காயமுற்று வீழ்ந்துகிடந்தனர்.
அப்போது பிறர், காயமுற்றவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக விரைந்தனர்.
தூரத்தில் ஒரு முனகல்
சப்தம் அருகே சென்று பார்க்கிறார். அங்கே, ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் கடும் தாகத்தோடு
காணப்படுகின்றார்.
தண்ணீர் பையை கொண்டு
சென்று முனகல் சப்தத்துடன் கிடந்த ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்களின் வாயின் அருகே
திறந்தபோது அவருக்கு சற்று தொலைவில் இன்னொருவரின் முனகல் சப்தம் கேட்கிறது. அப்போது
ஹாரிஸ் (ரலி) அவர்கள் சப்தம் கேட்ட திசையை நோக்கி அவரின் தாகத்தை போக்குமாறு சைகை செய்தார்.
தண்ணீர் பையோடு அவருக்கு
அருகே சென்ற பார்த்தபோது, அங்கே இக்ரிமா பின் அபூஜஹ்ல் (ரலி) அவர்கள் கடுமையான தாகத்தோடு
காணப்பட்டார். அவருக்கு சற்று தொலைவில் இருந்து இன்னொருவரின் முனகல் சப்தம் கேட்கிறது.
அப்போது இக்ரிமா (ரலி) அவர்கள் அவரின் தாகத்தைப் போக்குமாறு சைகை செய்தார்.
தண்ணீர் பையோடு ஓடிச்
சென்று பார்த்தால் அங்கே, அயாஷ் பின் ரபீஆ (ரலி) அவர்கள் தாகத்தோடு காணப்பட்டார். அவரின்
வாயின் அருகே தண்ணீரை கொண்டு சென்றபோது அயாஷ் (ரலி) அவர்கள் மரணமடைந்துவிட்டார்.
இக்ரிமா (ரலி) அவர்களை
நோக்கி, தண்ணீர் பையோடு ஓடிச்
சென்று பார்த்தால் அவரும் மரணமடைந்துவிட்டார். ஹாரிஸ் (ரலி) அவர்களுக்கு தண்ணீர் கொடுக்கலாம்
என்று அங்கே ஓடிச் சென்று பார்த்தால் அவரும் மரணமடைந்துவிட்டார். நூல்:- அல்மஃகாஸீ - இமாம் அல்வாகிதீ
யர்மூக் போரில் பலத்த
காயத்தோடும், தகிக்கும், தாகத்தோடும் மரணத்தின் விளிம்பில் இருந்து கொண்டிருந்த அந்த நபித்தோழர்கள் ஒவ்வொருவரின்
உணர்வும் தங்களின் உயிரைவிட பிற சகோதரனின் நலனில் அக்கறை செலுத்தினார்கள். அவர்களுக்கு
பிற சகோதரத்துவ உறவே மிகவும் உவப்பானதாக, உயர்வானதாக, தெரிந்தது.
நபித்தோழர்கள் தன்
உயிரைவிட பிற சகோதரன் நலனில் அக்கறை செலுத்துவது மிகவும் சிறப்பானது உயர்வானது. சகோதரத்துவம் நிறைந்த பண்பாகும் என்ற இஸ்லாமியப்
போதனைபடி வாழ்ந்தவர்கள்.
வறுமையில் வாடினாலும்
அப்துல்லாஹ் (ரஹ்)
அவர்கள் கூறுகிறார்கள். நான் ஹஜ் செய்ய நாடியபோது என்னுடைய தாய் மாமா முஸ்லிம் பின்
சஅத் (ரஹ்) அவர்கள் பத்தாயிரம் வெள்ளிக்காசுகளை என்னிடம் கொடுத்து, ( إذَا
قُدِّمَتْ الْمَدِينَة فَانْظُرْ أَفْقَرَ أَهْلِ بَيْتٍ بِالْمَدِينَةِ
فَأَعْطِهِمْ إيَّاهَا ) “நீ மதீனாவுக்கு செல்லும்போது மதீனாவிலேயே மிகவும் வறுமையில்
இருக்கக்கூடிய குடும்பத்தை கண்டுபிடித்து அவர்களிடத்திலே
இந்த வெள்ளிக்காசுகளை கொடுத்துவிடு” என்று கூறினார்.
நான் மதீனாவுக்கு
வந்தேன். மதீனாவிலே மிகவும் வறுமையை வாழக்கூடிய குடும்பத்தை குறித்து விசாரித்தேன்.
அப்போது ஒரு குடும்பத்தை எனக்கு காட்டப்பட்டது. நான் அந்த வீட்டின் கதவை தட்டினேன்.
அப்போது ஒரு பெண்மணி, “நீங்கள் யார்?” என்று கேட்டார். “நான் பக்தாதைச் சேர்ந்தவன். என்னிடம்
பத்தாயிரம் வெள்ளிக்காசுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றை மதீனாவிலே மிகவும் வறுமையில்
இருக்கக்கூடிய குடும்பத்தினருக்கு கொடுக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கிறது.
மக்கள் (உங்களையே) எனக்கு வழிகாட்டினார்கள். எனவே, அவற்றை நீங்கள் எடுத்து கொள்ளுங்கள்” என்று நான்
கூறினேன்.
அதற்கு அந்தப் பெண், ( يَا
عَبْدَ اللَّهِ إِنَّ صَاحِبِكَ اِشْتَرِطَ أَفْقَرَ أَهْلِ بَيْتٍ وَهَؤُلَاءِ
الَّذِينَ بِإِزَائِنَا أَفْقَرَ مِنَّا
) “அப்துல்லாஹ்! உங்களின் உறவினர், மதீனாவிலேயே மிகவும் வறுமையானவர்களாக இருக்க வேண்டும்
என்று நிபந்தனையிட்டு இருக்கிறார். இதோ நமது அண்டை வீட்டினர் நம்மைவிட வறுமையில் இருப்பவர்கள்.
(எனவே, நீங்கள் அவர்களிடம்
செல்லுங்கள்)” என்றார். ஆகவே, நான் அவர்களை விட்டு விட்டு மற்ற வீட்டிற்குச் சென்றேன்.
நான் அருகிலுள்ள வீட்டிற்கு
சென்று கதவைத் தட்டினேன். அப்போது ஒரு பெண் கதவைத் திறந்தாள். நான் முதல் பெண்ணிடம் கூறியது போன்றே கூறினேன்.
அதற்கு அந்த பெண், ( يَا عَبْدَ اللَّهِ نَحْنُ وَجِيْرَانَنَا فِي الْفَقْرِ
سَوَاءٌ فَاقْسِمْهَا بَيْنَنَا وَبَيْنَهُمْ ) “அப்துல்லாஹ்! நாங்களும் எங்களின் அண்டை வீட்டாரும்
வறுமையில் சமநிலையில் தான் உள்ளோம். எனவே நீர், அவர்களுக்கும் எங்களுக்கும் மத்தியில் (அந்த வெள்ளிக்காசுகளை)
பிரித்துக் கொடுப்பீராக!” என்று கூறினார். நூல்:- ஸிஃபத்துஸ் ஸஃப்வா ( صفة الصفوة )
பண்டையக்கால வணிகர்கள்
பண்டையக்கால வணிகர்களிடம்
ஒரு நல்ல வழக்கம் இருந்தது. கடையை திறந்ததும் கடைக்கு வெளியே ஒரு நாற்காலியை வைத்துவிடுவார்கள்.
முதல் வாடிக்கையாளர் வந்து வாங்கி சென்ற பின், நாற்காலியை எடுத்து உள்ளே வைத்துவிடுவார்கள். அடுத்த
வாடிக்கையாளர் வந்தால் கடைக்காரர் கடையை விட்டு வெளியே வந்து, கடைத்தெருவில் எந்த
கடையின் முன் நாற்காலி இருக்கிறதோ அந்தக் கடையை சுட்டிக்காட்டி, “உங்களுக்கு தேவையான
பொருள் அந்த கடையில் கிடைக்கும்” என்று கூறி அனுப்பிவிடுவார்கள்.
சக வணிகர் இன்னும்
அவரது வியாபாரத்தை துவக்கவில்லை. நான் துவங்கி விட்டேன் என்ற காரணம் தான் இது.
இதனால் தான் அவர்களது
வியாபாரங்கள் வளம் கொழித்து விளங்கின. பண்டைக்கால
வணிகர்களிடம் இவ்வாறான ஒரு நல்ல வழக்கம் இருந்தது.
தக்க சமயத்தில் உதவுவது
முத்தலிப் பின் அப்துல்லாஹ்
பின் ஹன்தப் அல்மக்ஸூமிய்யூ (ரஹ்) அவர்கள் அபூபக்ர் பின் அப்துல்லாஹ் பின் ஹாரிஸ்
(ரஹ்) அவர்களிடம் தான் கொடுக்க நேரம் நெருங்கிவிட்ட கடன் விஷயத்தில் உதவி கேட்க வந்தார்.
அவர் வந்து அமர்ந்ததும் அவரிடம் அபூபக்ர் (ரஹ்) அவர்கள் ( قَدْ أَعَانَكَ اللَّهُ عَلَى غُرْمِكَ
بِعِشْرِينَ أَلْفًا )
“(அவரிடம் ஒரு தொகையை கொடுத்து) உம் கடனுக்காக அல்லாஹ் இருபதாயிரம் வெள்ளிக்காசுகளைக்
கொண்டு உமக்கு உதவி செய்துவிட்டான் என்று கூறினார்கள்.
அங்கிருந்த ஒருவர்
அன்னாரிடம் ( وَاللَّهِ
مَا تَرَكْتَ الرَّجُلَ يَسْأَلُكَ )
“அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் உங்களிடம் கேட்கக்கூட நீங்கள் விடவில்லையே?" என்று வினவினார்.
அதற்கு அவர்கள் ( إِذَا
سَأَلَنِي فَقَدْ أَخَذْتُ مِنْهُ أَكْثَرَ مِمَّا أَعْطَيْتُهُ ) “அந்த மனிதர் என்னிடம் கேட்டிருந்தால் நான் அவருக்கு
கொடுத்த தொகையைவிட இன்னும் அதிகம் கொடுத்திருப்பேன்" என்று கூறினார்கள். நூல்:-
களாயில் ஹவாயிஜ் ( قَضَاءِ
الْحَوَائِجِ ) இமாம் இப்னு அபித்துன்யா
எனக்கு வேண்டும் என்பது
தேவை. எல்லோருக்கும் வேண்டும் என்பது சேவை.
கடைகளில் தொங்கும்
கூடைகள்
உஸ்மானியா பேரரசின்
எல்லா கடைகளிலும் கூடைகள் தொங்கவிடப்பட்டிருக்கும். ஒரு செல்வந்தர் அந்த கடைக்கு வந்து
தனக்கு தேவையான நான்கு ரொட்டிகளுக்கு பணம் செலுத்தாமல் எட்டு ரொட்டிக்களுக்கான பணத்தை
கொடுக்கிறார்.
கடைக்காரர் பணம் அதிகமாக
தந்துவிட்டீர்கள் என்று கூறுகிறார். அதற்கு செல்வந்தர் "மீதுமுள்ள பணத்திற்கான
ரொட்டியை தொங்கும் கூடையில் போட்டுவிடுங்கள்" என்று கூறினார்.
கடைக்காரரும் அந்த
பணத்தை தான் எடுத்துக்கொள்ளாமல் அந்த ரூபாய்க்கான ரொட்டிகளை அந்த தொங்கும் கூடையில்
போட்டுவிடுகிறார்.
அடுத்தது ஒரு ஏழ்மையான
மூதாட்டி வருகிறாள். கடைக்காரன் தங்களுக்கு ரொட்டி வேண்டுமா என்று வினவுகிறார்.
ஆமாம் என்று மூதாட்டி
கூற, நான்கு ரொட்டிகளைக்
கொண்டு பையை நிரப்பி கடைக்காரர் மூதாட்டியிடம் கொடுத்தபோது மூதாட்டி கூறுகிறாள், ‘எனக்கு இரண்டு போதும்
மீதத்தை வேறு யாருக்காவதுக் கொடுத்துவிடுங்கள் என்று கூறி தனக்கு எவ்வளவு தேவையோ அதனை
மட்டும் எடுத்துக்கொண்டு விடைபெறுகிறாள்."
தனது அண்டை வீட்டுக்காரர்
பசியோடு இருக்க வயிறு நிரம்ப சாப்பிடுபவர் உண்மையான இரைநம்பிக்கையாளரே அல்லன் என்ற
நபிமொழியை ஒரு சாம்ராஜ்யமே கடைப்பிடித்துள்ளதற்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு.
இந்த அற்புதமான பழக்கத்தின்
விளைவாக தேவையுடையவர்கள் நல்ல நிலைக்கு மாறினாலும், தான் தேவையோடு இருந்த காலங்களில் தனக்குக் கிடைத்த
இந்த உதவிக்கு செய்யும் நன்றிக்கடனாக அவர்கள் ஒரு ரொட்டி வாங்கினால் இரு ரொட்டிக்கான
பணத்தைக் கொடுத்து, மற்றொரு ரொட்டியை தொங்கும் கூடையில் போட்டுவிடுகிறார்கள்.
பிள்ளைகளின் பெருந்தன்மை
சிரியாவிலுள்ள ஒரு
பாடசாலையில் நடந்த சம்பவமே இது: ஒரு ஆசிரியை பாடவேளையின் இறுதியில் மாணவிகளை உற்சாகமூட்டுவதற்காக
ஒரு சிறிய பரீட்சையை நடத்தினார். அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதியதொரு காலணி(செருப்பு)
ஜோடி வழங்கப்படும் என்றும் கூறினார். அனைத்து மாணவிகளும் மிகுந்த சந்தோஷத்துடன் பரீட்சையை
எழுதினர்.
இறுதியில் அவர்களது
விடைகளை பரிசீலித்துப் பார்க்கும்போது அவர்கள் அனைவரது விடைகளும் சரியானவையாகக் காணப்பட்டன.
ஆசிரியை யாருக்கு பரிசினை வழங்குவது என்று சிந்தித்துவிட்டு ஒரு பெட்டியில் அனைவரது
பெயர்களையும் எழுதிப்போடுமாறு கூறினார்.
அனைவரும் எழுதிப்போடவே
ஆசிரியை அப்பெட்டியைக் குலுக்கி அதில் ஒரு காகிதத்தை எடுத்தார். அதில் "வபாஃ"
என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்கு அப்பரிசு வழங்கப்பட்டது.
அம்மாணவி தான் அவ்வகுப்பில்
மிகவும் ஏழ்மையான மாணவி. பல காலமாகவே தேய்ந்து போயிருந்த காலணிகளை
அணிந்து வந்த இம்மாணவிக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி. பின்னர் அவ்வாசிரியை சந்தோஷத்துடன்
வீட்டுக்கு வர, ஆசிரியை நடந்த சம்பவத்தை கணவரிடம் கண்ணீருடன் கூறினார். கணவனும் சந்தோஷப்பட்டார்.
எனினும் அந்த ஆசிரியை
வழமைக்கு மாறாக தொடர்ந்தும் கண்ணீர் வடிக்கவே, கணவர் மீண்டும் காரணம் கேட்க, "நான் வீட்டுக்கு வந்து
பெயர்கள் இடப்பட்ட அப்பெட்டியிலுள்ள காகிதங்களை பிரித்துப்பார்த்தேன். அதில் அனைத்து
மாணவிகளும் தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில் ஏழை மாணவியாகிய "வபாஃ" இன் பெயரையே எழுதியிருந்தனர்."
என்று பதிலளித்தார்.
"தன்னைவிட பிறரை
முற்படுத்தும் பிள்ளைகளாக தமது பிள்ளைகளை வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்"
மகிழ்ச்சியைக் கொடுப்பது
கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مِنْ أَفْضَلِ الْأَعْمَالِ إدْخَالُ
السُّرُورِ عَلَى الْمُؤْمِنِ ، تَقْضِي عَنْهُ دَيْنًا ، تَقْضِي لَهُ حَاجَةٌ ،
تَنَفَّسُ لَه كُرْبَةٌ ) ஒரு இறைநம்பிக்கையாளருக்கு
மகிழ்ச்சியை அளிப்பது, அவரது கடனை அடைப்பது, அவரது தேவையை நிறைவேற்றுவது, அவரது துயரத்தைப்
போக்குவது போன்றவையே சிறந்த நற்செயல்களாகும். அறிவிப்பாளர்:- முஹம்மத் பின் முன்கதீர்
(ரஹ்) அவர்கள் நூல்:- ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, அஸ்ஸில்ஸிலத்துஸ் ஸஹீஹா இமாம் அல்பானீ
அருமை நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
( مَا مِنْ مُؤْمِنٍ أَدْخَلَ عَلَى مُؤْمِنٍ
سُرُورًا إلَّا خَلَقَ اللَّهُ مِنْ ذَلِكَ السُّرُورِ مَلَكًا يَعْبُدُ اللَّهَ
وَيُمَجِّدَهُ وَيُوَحِّدُهُ فَإِذَا صَارَ الْمُؤْمِنِ فِي لَحْدِهِ جَاء
السُّرُورُ الَّذِي أَدْخَلَهُ عَلَيْهِ فَيَقُولُ لَهُ : أَمَّا تَعْرِفُنِي ؟
فَيَقُولُ : مَنْ أَنْتَ ؟ فَيَقُولُ : أَنَا السُّرُورُ الَّذِي أَدَخَلَتْنِي
عَلَى فُلَانٍ أَنَا الْيَوْمَ أُونِسُ وَحْشَتَك وَأُلَقِّنُكَ حُجَّتَك
وَأُثَبِّتُك بِالْقَوْلِ الثَّابِتِ وَأَشْهَدُ بِك مَشْهَد الْقِيَامَةِ
وَأَشْفَعُ لَك مِنْ رَبِّكَ وَأُرِيكَ مَنْزِلَكَ مِنْ الْجَنَّة )
இறைநம்பிக்கையாளர்
மற்றொரு இறைநம்பிக்கையாளருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்போது, அந்த மகிழ்ச்சியிலிருந்து
அல்லாஹ் ஒரு வானவரைப் படைக்கிறான். அந்த வானவர் அல்லாஹ்வை வணங்கி, அவனைப் புகழ்ந்து, அவனது ஏகத்துவத்தை
உறுதிப்படுத்துகிறார். பின்னர், (பிறரை மகிழ்வித்த) அந்த
இறைநம்பிக்கையாளர் (மரணித்து) தனது மண்ணறையில் இருக்கும்போது, வானவர் தோற்றத்தில்
இருக்கும் அந்த மகிழ்ச்சி அவரிடம் வந்து, "உனக்கு என்னைத் தெரியாதா?" என்று கேட்கிறது.
அதற்கு அவர், "நீ யார்?" என்று கேட்பார்.
அப்போது அந்த வானவர், "நீ இன்னாருக்கு ஏற்படுத்திய
மகிழ்ச்சி தான் நான். இன்று நான் உனது தனிமையைப் போக்கி, உனது சான்றிற்கு உன்னை வழிநடத்தி, உறுதியான வார்த்தையால்
உன்னைப் பலப்படுத்தி, மறுமை நாளில் உனக்காகச் சாட்சி பகர்ந்து, உனது இறைவனிடம் உனக்காகப்
பரிந்து பேசி, சொர்க்கத்தில் உனது இடத்தைக் காட்டுவேன்" என்று கூறுவார். அறிவிப்பாளர்:-
ஜஅஃபர் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் நூல்:- அத்தர்ஙீபு வத்தர்ஹீபு, களாயில் ஹவாயிஜ்
( قَضَاءِ الْحَوَائِجِ ) இமாம் இப்னு அபித்துன்யா
ஒருவன் செய்யும் காரியம்
தமக்கு மட்டுமே பயன் தந்தால் அவன் ஒரு உயிரினம். அக்காரியம் அவனைச் சேர்ந்தவர்களுக்கு
பயன் தந்தால் அவன் மனிதன். அக்காரியம் ஒரு சமுதாயத்திற்கே பயன் தந்தால் அவன் மாமனிதன்.
எனவே, அல்லாஹுத்தஆலா நம்மையும், நமது சந்ததிகளையும்
மனத்தூய்மையுடன் பிறருக்குப் பயனளிப்பவராக வாழச் செய்வானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது
ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment