Search This Blog

Wednesday, 20 May 2026

பிள்ளைகளுக்காகப் பிரார்த்திப்போம்!

 

பிள்ளைகளுக்காகப் பிரார்த்திப்போம்!

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

(நபி இப்ராஹீம்-அலை) என் இறைவனே! என்னையும் என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது வருபவர்களாக ஆக்கிவை. எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக்கொள்வாயாக!   திருக்குர்ஆன்:- 14:40

 

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்காகச் செய்யும் பிரார்த்தனை மிகவும் சக்தி வாய்ந்தது என்று இஸ்லாம் கூறுகிறது. பெற்றோரின் பிரார்த்தனை ஒருபோதும் நிராகரிக்கப்படுவதில்லை பிள்ளைகளின் நல்வாழ்வு, ஆரோக்கியம் மற்றும் இறைநம்பிக்கையைப் பேணப் பெற்றோர்கள் தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

 

பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் ஒவ்வொரு நன்மைக்காகவும், ஆபத்துகளில் இருந்தும் பாதுகாக்கும்படி உளப்பூர்வமாக அல்லாஹ்விடம் மன்றாட வேண்டும்.

 

ரமளான் மாதம், ஐந்து வேளை பர்ளு தொழுகைக்குப் பிறகு, (தஹஜ்ஜுத் எனும்) இரவின் கடைசி பகுதி, பாங்குக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரம், மற்றும் வெள்ளிக்கிழமை போன்ற சிறப்பான நேரங்களில் பிரார்த்தனை செய்வது மிகவும் நன்மை பயக்கும்.

 

பிள்ளைகளின் நல்வழிக்காகப் பெற்றோர்கள் செய்யும் பிரார்த்தனை, இவ்வுலகிலும் மறுமை வாழ்விலும் அவர்களுக்குப் பெரும் நன்மைகளையும் பாதுகாப்பையும் பெற்றுத்தரும்.

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( ثَلاَثُ دَعَوَاتٍ يُسْتَجَابُ لَهُنَّ لاَ شَكَّ فِيهِنَّ وَدَعْوَةُ الْوَالِدِ لِوَلَدِهِ ) மூன்று பிரார்த்தனைகள் (இறைவனிடம்) ஏற்புக்குரியவை ஆகும். அதில் எந்த ஐயமுமில்லை. அவைகளில் ஒன்று பிள்ளைக்காகத் தந்தை செய்யும் (சாதகமான) பிரார்த்தனை ஆகும்.   அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்  நூல்:- இப்னுமாஜா-3852

 

இறைத்தூதர்களின் பிரார்த்தனை

 

எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! (ஹஜ்ஜுடைய காலத்தில்) எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித்தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான்  மிக மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன் (என்று இப்ராஹீமும், இஸ்மாயீலும் பிரார்த்தனை செய்தார்கள்). திருக்குர்ஆன்:- 2:128

 

இன்று ஒரு சில பிள்ளைகள் மார்க்கப் பற்றின்மையால் மிக மோசமான நடத்தையுடையோராக மாறி, தொழுகையைப் பேணாதவர்களாகவும், பெற்றோரை மதிக்காதவர்களாகவும், போதைக்கு அடிமையானவர்களாகவும் இருப்பதால் அவர்களைப் பெற்றவர்களே அப்பிள்ளைகளை ஏன் பெற்றெடுத்தோம்? இவன் பிறக்காமல் இருந்தாலே நான் மானம், மரியாதையுடன் வாழ்ந்திருப்பேன் என்று பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, நாம் பிள்ளைகளின் நேர்வழிக்காக அதிகம் நாம் பிரார்த்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

 

குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்வது பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியமாகும். நாம் எவ்வளவு தான் திருத்துவதற்கு முயற்சி செய்தாலும் அல்லாஹ் நாடாவிடால் நம் குழந்தைகள் நல்லவர்களாக உருவெடுக்க முடியாது. எனவே இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் உதவியை அவசியம் கேட்க வேண்டும்.

 

இறைத்தூதரின் மகனாக இருந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் தான் அவன் நல்லவனாக முடியும். எனவே தான் நபிமார்கள் தங்கள் பிள்ளைகள் நல்லவர்களாகத் திகழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்துள்ளார்கள். இதையே தலைப்பில் காணும் திருவசனம் கூறுகிறது.

 

வாழ்வு வளம் பெற

 

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒருமுறை தனது மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களைக் காண மக்கா நகர் வந்தார்கள். அப்போது மகனார் வீட்டில் இல்லை. வீட்டிலிருந்த மருமகள் தனது கணவர் வெளியே சென்றிருப்பதாகக் கூறினார். இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மருமகளிடம் ( كَيْفَ أَنْتُمْ ) "நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் (நலம்தானா)?” என்று கேட்டார்கள். மேலும், அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார், ( نَحْنُ بِخَيْرٍ وَسَعَةٍ‏ )  நாங்கள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைப் புகழ்ந்தார்.

 

இப்ராஹீம் (அலை) அவர்கள், ( مَا طَعَامُكُمْ ) ‘‘உங்கள் உணவு என்ன?” என்று கேட்க அவர், “இறைச்சி” என்று பதிலளித்தார். அவர்கள், ( فَمَا شَرَابُكُمْ ) ‘‘உங்கள் பானம் எது?” என்று கேட்க, “தண்ணீர்” என்று பதிலளித்தார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள், ( اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي اللَّحْمِ وَالْمَاءِ‏ ) ‘‘இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும், தண்ணீரிலும் வளத்தை அளிப்பாயாக!” என்று பிரார்த்தனை புரிந்தார்கள். நூல்:- புகாரீ-3364  தஃப்சீர் அத்தபரீ 

 

மக்கா பாலைவனப் பூமி தான். என்றாலும் எந்த காலத்திலும் அங்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதில்லை.

 

அங்கு புனித கஅபாவை தரிசிப்பதற்காக உலகின் எல்லா பகுதிகளில் இருந்தும் தினமும் இலட்சக்கணக்கில் மக்கள் வந்து கூடுகின்றனர். ஹஜ் காலத்தில்  சுமார் 40 இலட்சம் பேர் வரை யாத்ரீகர்கள் கூடுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் போதுமான உணவுப் பொருட்களும், அத்தியாவசியப் பொருள்களும் அங்கு தாரளமாக கிடைக்கின்றன.

 

அங்கு ஆண்டுதோறும் ஹஜ்ஜுக்கு வருகின்ற ஒவ்வொரு ஹாஜியும் குறைந்தது ஒரு ஆடும் மேலும் வசதியுள்ளவர்கள் சில நூறு ஆடுகள் வரையிலும் இலட்சக்கணக்கானோர்  பலியிடுதல் எனும் குர்பானியைக் கொடுக்கின்றனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான மாடு, ஒட்டகைகளும் அப்போது அங்கு குர்பானி கொடுக்கப்படுகிறது. ஆண்டுதோறும் எண்ணிலடங்கா ஆடு, மாடு, ஒட்டகைகள் பலியிடப்பட்டாலும் அங்கு இந்த கால்நடைகள் விஷயத்தில் பஞ்சம் ஏற்பட்டதில்லை. அவை தாராளமாகவே கிடைக்கின்றன.

 

பெற்றோரின் பிரார்த்தனை பிள்ளைகளின் வாழ்வை செழிப்பாக்கும்.

 

சோதனைகள் நீங்க

 

இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 194 ஷவ்வால் பிறை 13 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு புகாரா என்ற ஊரில் பிறந்தார்கள். புகாரீ (ரஹ்) அவர்கள் தமது சிறுவயதில் பார்வையை இழந்து விட்டார்கள். எனவே அன்னாரின் தாயார் அப்போதிருந்த பெரும் பெரும் மருத்துவர்களிடம் சென்று மருத்துவம் செய்தும், பார்வை திரும்பவில்லை.

 

அன்னாரின் தாயார் அதிகம் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுபவராகவும், இறைநெருக்கம் பெற்றவர்களில் ஒருவராகவும் இருந்ததினால், இறைவனிடம் அதிகம் அழுது மன்றாடி தன் பிள்ளைக்கு பார்வை கிடைப்பதற்காக பிரார்த்தித்துக்கொண்டே இருந்தார்கள்.

 

அம்மையார் ஒருநாள் இரவு வேளையில் தூங்கும்போது அவர்களின் கனவில் இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) தோன்றி, ( يَا هَذِهِ قَدْ رَدَّ اللَّهُ عَلَى ابْنِكِ بَصَرَهُ لِكَثْرَةِ دُعَائِكِ )  “நீ அதிகம் அழுது இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டே இருந்ததினால் உன் பிள்ளைக்கு பார்வை திரும்பிவிட்டது" என்று சுபச்செய்தி கூறினார்கள்.

 

பிறகு அது போன்றே அதிகாலையில் இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் தன் படுக்கையில் இருந்து எழுந்திருக்கையில் அவர்களுக்கு பார்வை மீண்டும் வந்துவிட்டது. நூல்:- அஃலாமுந் நுபலா இமாம் அத்தஹபீ

 

பெற்றோர், பிள்ளைகளுக்கு நோய்நொடி ஏற்படும்போது, அவர்களுக்கு மருத்துவம் செய்வது போன்றே அவர்களின் நல்வாழ்விற்கு பிரார்த்திக்கவும் வேண்டும்.

 

உயரிய அந்தஸ்த்தைப் பெற

 

இறைநேசர் அபூயஜீத் பிஸ்தாமி (ரஹ்) அவர்களிடம், “இம்மாபெரும் அந்தஸ்த்து தங்களுக்கு எவ்வாறு கிடைத்தது?” என்று வினவப்பட்டது. அப்போது அன்னார், நான் ஏழு வயது சிறுவனாக இருந்தபோது மஸ்ஜிதில் எனது ஆசிரியரிடம்  குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தேன். அந்நேரத்தில்  (வபில் வாலிதைனி இஹ்ஸானா) ‘பெற்றோருக்கு உபகாரம் செய்தல்’ குறித்து ஓர்  வசனத்தை ஓதியபோது ஆசிரியரிடம் அந்த வசனத்தின் விளக்கத்தை கேட்டேன். அதற்கு அவர்கள், “எனக்கு நீ பணிவிடை செய்வது போல உனது பெற்றோருக்கும் செய்ய வேண்டும் என்பதே அதன் கருத்து” என்று கூறினார்கள்.

 

குர்ஆன்  ஓதிவிட்டு வீடு வந்து சேர்ந்ததும் எனது தாயாரின் பாதங்களை முத்தமிட்டு, “எனது அருமை தாயே! தாய்க்கு பணிவிடை செய்வது குறித்து அல்லாஹுத்தஆலாவின் திருவசனங்களை கேட்டுவிட்டு வந்து இருக்கிறேன். நான் உங்களுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்வேன். எனக்காக தாங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறினேன்.

 

அப்போது எனது தாயார் இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு எனது கரங்களைப் பற்றியவாறு கிப்லாவை முன்னோக்கி எனக்காக பிரார்த்தனை செய்தார்கள். ஆகவே, “எனக்கு கிடைத்த நற்பாக்கியங்களெல்லாம் எனது தாயாரின் பிரார்த்தனையால் கிடைத்ததே!” என்று கூறினார்கள்.

 

பெற்றோரின் பிரார்த்தனையால் ஒரு மனிதன் அறிஞனாக, சிறந்த ஆட்சியாளனாக, மக்களால் மதிக்கக்கூடிய பண்பாளனாக, இறைநேசராக உயரலாம்.

 

குறும்பு செய்யும்போது

 

அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்கள் இளமையில் பெரும் பாவியாகவே இருந்தார்கள். ஆனால், இவரது பெற்றோர்கள் இவருக்காக செய்த தர்மங்களும், பிரார்த்தனைகளும் இவரை மார்க்கத்தின் பெரும் சட்ட மேதையாக மாற்றியது என்பது வரலாறு.

 

மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹரம் எனும் இறையில்லத்தின் இமாம் மற்றும் புனிதமான மக்கா, மதீனா மஸ்ஜித்களின் நிர்வாக தலைவருமான அறிஞர் அப்துர் ரஹ்மான் சுதைசி அவர்கள் தமது சிறுபிராயம் குறித்து இவ்வாறு கூறுகிறார்: ஒருமுறை எங்கள் வீட்டிற்கு விருந்தாளி வந்திருந்தார்கள். அவர்களுக்கு என்னுடைய தாயார்  உணவு சமைத்துக் கொண்டு இருந்தார். அவ்வேளையில் உணவு சமைத்து வைத்திருந்த சட்டியில் நான் விளையாட்டுத்தனமாக கொஞ்சம் மண்ணை அள்ளிப் போட்டு விட்டேன். இது குறித்து என் தாயாருக்கு தெரிந்தபோது கடுமையாக கோபப்பட்டவராக, "அப்துர் ரஹ்மானே! இங்கிருந்து சென்று விடு! அல்லாஹ் உன்னை கஅபாவின் இமாமாக ஆக்குவானாக" என்று மட்டும் கூறினார்.

 

மேலும், அன்னாரின் தாயார், "அல்லாஹ் உன்னை ஹரமைனின் இமாமாக ஆக்குவானாக!" என அடிக்கடி பிரார்த்திப்பார்களாம். அறிஞர் அப்துர் ரஹ்மான் சுதைசி அவர்கள் தன் தாயாரின் பிரார்த்தனை தான் தமது உயர் நிலைமைக்கு காரணம் என்று அடிக்கடி கூறுவார்.

 

அப்துர் ரஹ்மான் அல்சுதைசி அவர்களின் தாயார் மிகுந்த இறையச்சம் கொண்டவர். இவ்வாறு அவரின் தாயார் சந்தோஷத்திலும், சங்கடத்திலும்கூட தமது மகனார் கஅபாவின் இமாமாக வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டே இருந்துள்ளார்.

 

அவர் தனது பிள்ளை சிறு வயதில் செய்யும் சிறு குறும்புகளுக்குக் கூட, கோபத்தில் திட்டாமல், "அல்லாஹ் உன்னை ஹரமைனின் (கஅபாவின்) இமாமாக ஆக்குவானாக!" என ஆசிர்வதித்து பிரார்த்தனை செய்துள்ளார்.

 

தாயாரின் அந்த உளப்பூர்வமான பிரார்த்தனையே, இன்று அவர் மக்கா மற்றும் மதீனா மஸ்ஜித்களின் தலைவராகவும், மஸ்ஜிதுல் ஹரமின் தலைமை இமாமாகவும் உயர்ந்து திகழ முக்கியக் காரணமாக அமைந்தது. இது பெற்றோரின் பிரார்த்தனை எத்தகைய மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.

 

அப்துர் ரஹ்மான் சுதைசி அவர்கள் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் 10-2-1960 ல் பிறந்தார்.

தன்னுடைய 12 ஆம் வயதில் முழு குர்ஆனை மனனமிட்டார். ஹன்பலி மத்ஹபைப் பின்பற்றக்கூடியவர்‌.

1979 ல் இளங்கலை பட்டம் பெற்றார்.

1983 ல் ரியாத் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஷரியத்திற்கான பட்டய படிப்பை பெற்றார்.

1987ல் முதுகலை பட்டமும் (M.A.), 1995 ல் இஸ்லாமிய ஷரியத் சம்பந்தமான டாக்ட்ரேட் (Ph.D. முனைவர்) பட்டம் பெற்றார்.

ரியாத் பல்கலைக்கழகத்திலும், உம்முல் குராம் பல்கலைக்கழகத்திலும் உதவி பேராசிரியராக பணியாற்றினார்.

மக்கா ஹரம் ஷரீஃபின் இமாமாக பொறுப்பேற்ற பொழுது (1984) அவர் வயது 24 மட்டுமே.

2012 ல் புனிதமான மக்கா மதீனா மஸ்ஜித்களின் நிர்வாக தலைவராக நியமிக்கப்பட்டு அமைச்சர் அந்தஸ்தும் அவருக்கு வழங்கப்பட்டது.

 

பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக பெற்றோர் அடிக்கடி தான தர்மங்களும், பிரார்த்தனையும் செய்ய வேண்டும்.

 

பழைய காலத்துப் பெண்கள் சில நேரங்களில் தமது பிள்ளைகளை "அரசாளுவாயாக!" என்று திட்டுவார்கள். அதாவது அவர்கள் திட்டும் போதுகூட அது பிரார்த்தனையாக இருந்தது.

 

பிறரிடம் கேட்டுக்கொள்வது

 

ஒருமுறை ஹசன் அல்பஸ்ரி (ரஹ்) அவர்களின் தாயார் கைரா (ரஹ்) அவர்கள் குழந்தையாக இருந்த இவரை கொண்டுபோய் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் கொடுத்து, "இந்தக் குழந்தையின் நல்வாழ்வுக்காக பிரார்த்தியுங்கள்" என்று வேண்டிக்கொண்டார்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு எவ்வாறு பிரார்த்தித்தார்களோ அதைப்போன்று உமர் (ரலி) அவர்கள் ( اللهم فَقِّهُ فِي الدِّينِ وَحَبِّبهُ اِلَي النَّاسِ ) இறைவா! இந்த குழந்தைக்கு மார்க்க ஞானங்களை நிரப்பமாக தருவாயாக! இந்த குழந்தையை மக்களால் விரும்பப்படுபவராக ஆக்குவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.

 

முஆவியா பின் குர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. எனது குழந்தை இயாஸ் பிறந்தபோது நபித்தோழர்களில் சிலரை அழைத்து விருந்து கொடுத்தேன். பிறகு அவர்கள் எனது குழந்தைக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது நான், ( إِنَّكُمْ قَدْ دَعَوْتُمْ فَبَارَكَ اللَّهُ لَكُمْ فِيمَا دَعَوْتُمْ ) "என் குழந்தைக்குப் பிரார்த்தனை புரிந்த உங்களுக்கு அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! என்றேன். மேலும் நானும் பிரார்த்தனை செய்கிறேன் நீங்கள் அதற்கு ஆமீன் சொல்லுங்கள்" என்று கூறிவிட்டு, குழந்தையின் மார்க்கப்பற்றுக்காகவும் கல்வி ஞானத்திற்காகவும் இன்ன பிறவற்றுக்காகவும் அதிகமாகப் பிரார்த்தனை செய்தேன். நிச்சயமாக நான் அன்றைய நாளில்தான் அது விஷயத்தில் பிரார்த்தனை உள்ளது என்பதை அறிந்துகொண்டேன். நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-1255

 

மார்க்க அறிஞர்கள், இறையச்சமுள்ள பெரியவர்கள் ஆகியோரை சந்திக்கும் போதெல்லாம் நமது பிள்ளைகளின் நல்வாழ்விற்காக பிரார்த்தனை செய்யுமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டும். அவர்களின் பிரார்த்தனையால் நமது பிள்ளைகளின் வாழ்வு சிறந்தோங்கி விடலாம்.

 

செய்தால் செய்யப்படும்

 

"முன் கை நீண்டால் முழங்கை நீளும்" என்பது கிராமத்துச் சொல்வழக்கு

 

முதலில் நாம் ஒன்றை செய்து ஆரம்பித்து வைத்தால் அதைப்பார்த்து பிறரும் செய்து அதை முழுமைப்படுத்துவார்கள்.

 

எங்கள் இறைவனே! எனக்கும், என் தாய் தந்தைக்கும், மற்ற நம்பிக்கையாளர்களுக்கும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பளிப்பாயாக!" (என்று பிரார்த்தித்தார்.) திருக்குர்ஆன்:- 14:41

 

பெற்றோர்களே! நீங்கள் முதலில் உங்கள் பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக பிரார்த்தியுங்கள். பிறகு அவர்கள் உங்கள் நல்வாழ்வுக்காக பிரார்த்திப்பார்கள் என்பதைத் தான் இந்த (14:40,41) இரண்டு வசனங்களும் எடுத்துரைக்கிறது.

 

சாபம் வேண்டாம்

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த 'ஜுரைஜ்’ என்று அழைக்கப்பட்டு வந்த ஒரு மனிதர் (தமது ஆசிரமத்தில்) தொழுதுகொண்டிருந்தார். அப்போது அவருடைய தாயார் வந்து அவரை அழைத்தார். அவருக்குப் பதிலளிக்க மறுத்துவிட்ட ஜுரைஜ், ‘‘நான் தாய்க்குப் பதிலளிப்பதா, அல்லது தொழுவதா?” என்று (மனத்திற்குள்) கூறிக்கொண்டார். பிறகு (மீண்டும்) அவருடைய தாயார் அவரிடம் வந்து, (தான் அழைத்தும் தன் மகன் பதிலளிக்கவில்லையே என்ற கோபத்தில்), ( اللَّهُمَّ لاَ تُمِتْهُ حَتَّى تُرِيَهُ الْمُومِسَاتِ ) ‘‘இறைவா! விபசாரிகளின் முகத்தில் விழிக்கச் செய்யாத வரை அவனுக்கு (ஜுரைஜுக்கு) மரணத்தைத் தராதே” என்று கூறினார்.

 

(ஒருநாள்) ஜுரைஜ் தமது ஆசிரமத்தில் இருந்தார். அப்போது ஒரு பெண், ‘‘நான் ஜுரைஜை நிச்சயம் சோதனைக்குள்ளாக்குவேன்” என்று சொல்லிக்கொண்டு, ஜுரைஜின் முன்பு வந்து அவருடன் (தகாத உறவு கொள்ள) அழைத்தாள். அவர் மறுத்துவிட்டார்.

 

அதன்பிறகு அவள், ஓர் இடையனுடன் இணைந்தாள். அதன் காரணமாக ஒரு (ஆண்) குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு, ‘‘இவன் ஜுரைஜுக்குப் பிறந்தவன்” என்று கூறினாள். (இதைக் கேட்ட) மக்கள் (வெகுண்டெழுந்து) ஜுரைஜிடம் வந்து, அவரது ஆசிரமத்தை உடைத்து தகர்த்துவிட்டனர்; அவரை (அவரது அறையிலிருந்து) இறக்கி அவரை ஏசினர்.

 

ஜுரைஜ் அங்கத்தூய்மை செய்து தொழுதார். பிறகு அக்குழந்தையிடம் வந்து, ( مَنْ أَبُوكَ يَا غُلاَمُ ) ‘‘குழந்தையே! உன் தந்தை யார்?” என்று கேட்டார். அந்தக் குழந்தை (வாய் திறந்து), ‘‘(இன்ன) இடையன்” என்று கூறியது. இதைச் செவியுற்ற மக்கள், ( نَبْنِي صَوْمَعَتَكَ مِنْ ذَهَبٍ ) ‘‘உங்கள் ஆசிரமத்தைத் தங்கத்தால் நாங்கள் கட்டித்தருகிறோம்” என்று (ஜுரைஜிடம்) கூறினர். அதற்கு ஜுரைஜ், ( لاَ إِلاَّ مِنْ طِينٍ ) ‘‘இல்லை; களிமண்ணால் கட்டித்தந்தாலே போதும்” என்று கூறினார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2482

 

யாஸீத் பின் ஹவ்ஷாப் அல்ஃபிஹ்ரிய்யு ரஹ் அவர்கள் தமது தந்தையிடம் இருந்து அறிவிக்கிறார். பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَوْ كانَ جُرَيْجٌ الرّاهِبُ فَقِيهًا عالِمًا، لَعَلِمَ أنَّ إجابَتَهُ أُمَّهُ أفْضَلُ مِن عِبادَةِ رَبِّهِ )  "துறவியாக வாழ்ந்த ஜுரைஜ் ஒரு அறிவாற்றல் நிறைந்த சட்ட வல்லுநராக இருந்திருந்தால், தனது தாயாருக்கு பதிலளிப்பது தனது இறைவனை வணங்குவதைவிட சிறந்தது என்பதை அவர் அறிந்திருப்பார்" என்றுகூறினார்கள். நூல்:- அல்பைஹகீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் பனீ இஸ்ராயீல் வசனம்-23

 

(புகழ்பெற்ற தஃப்சீர் கஷ்ஷாஃப் நூலின் ஆசிரியரும், பிரபலமான திருக்குர்ஆன் விரிவுரையாளராகவும் விளங்கிய) இமாம் அபுல் காசிம் ஸமஹ்ஷரீ (ரஹ்) அவர்களின் ( أَبُو الْقَاسِمِ مَحْمُودِ بْنِ مُحَمَّدٍ الزَّمَخْشَرِيّ الْخُوَارِزْمِيّ ஹிஜ்ரீ 467-538 ) ஒரு கால் ஊனமாகிவிட்டதால், கட்டை காலுடன் நடந்து சென்றபோது  அன்னாரிடம், கால் ஊனமானதற்கான காரணத்தை வினவப்பட்டது.

 

இமாம் அவர்கள், என்னுடைய தாயாரின் சாபம் தான் காரணம். அதாவது, நான் சிறுவனாக இருக்கும்போது ஒரு சிட்டுக்குருவியை வளர்த்து வந்தேன். அந்தக் குருவியின் காலில் ஒரு நூலை கட்டி அதனுடன் நான் விளையாடுவது வழக்கமாகும். ஒரு நேரத்தில் அந்தக் குருவி ஒரு பொந்தில் நுழைந்துகொண்டது. குருவியின் காலில் கட்டி இருந்த நூலைப் பிடித்து பலமுறை மெதுவாக இழுத்துப் பார்த்தேன். அது வெளியே வரவில்லை இறுதியாக, பலமுடன் அந்த நூலை வேகமாக வெளியே இழுத்தேன். அப்போது அந்த நூலோடு குருவியின் ஒரு கால் மட்டும் ஒடிந்து கொண்டு வந்துவிட்டது இதைப் பார்த்து வேதனைப்பட்ட என் தாயார், ( قَطَعَ اللَّهُ رِجْلُكَ كَمَا قَطَعْتَ رِجْلَهُ ) "(ஸமஹ்ஷரீ) நீ குருவியின் காலை ஒடித்தது போல், அல்லாஹ் உம்முடைய காலையும் ஒடிப்பானாக! (இவ்வாறு விளையாடாதே! என்று நான் பலமுறை கூறினேனே கேட்டாயா?)" என்று கூறினார்.

 

பிறகு நான் அறிவைத் தேடும் வயதை அடைந்தபோது, அறிவைத் தேடி புகாராவுக்குப் பயணம் செய்தேன். நான் (அந்தப் பயணத்தில்) என் வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டேன். அப்போது என் கால் உடைந்துவிட்டது. (சிகிச்சை செய்த பிறகும்) அது எனக்கு ஏதோ செய்தது. பிறகு அதை வெட்டியெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. (அன்று என் தாயார் கூறிய வார்த்தையின் பாதிப்பை இன்று என் வாழ்வில் அனுபவிக்கிறேன்)" என்று கூறினார்கள். நூல்:- வஃபயாதுல் அஃயான் ( وفيات الأعيان ) இப்னு கல்க்கான் ( ابن خلكان ), அல்வாளிஹு ஃபீ உலூமில் குர்ஆன் ( اَلْوَاضِحُ فِي عُلُومِ الْقُرْانِ )  முஸ்தஃபா தீபில் புஙா ( مُصْطَفَى دِيبِ الْبُغَا )

 

வார்த்தைகளின் பாதிப்பை உணராத தாய்மார்கள் சாதாரண காரியத்திற்கெல்லாம் தனது அன்பு குழந்தைகளை "நாசமாக போ! அழிந்து போ!" என்று திட்டித் தீர்த்துவிடுகிறார்கள். பிற்காலத்தில் அந்த வார்த்தைகளின் பாதிப்பை நம் அன்பு குழந்தைகள் அனுபவிப்பார்களே என்று இவர்கள் உணர வேண்டாமா?

 

நமது பிள்ளைகளின் நல்வாழ்விற்காக அதிகம் பிரார்த்தனை செய்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோமாக! அல்லாஹுத்தஆலா, நமது பிள்ளைகளுக்காக நாம் செய்கின்ற பிரார்த்தனையை ஏற்று, அவர்களின் இரு உலக  வாழ்க்கையையும் செழிப்பாக்கி வைப்பானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

No comments:

Post a Comment

பிள்ளைகளுக்காகப் பிரார்த்திப்போம்!

  பிள்ளைகளுக்காகப் பிரார்த்திப்போம்! رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ (நபி இப்ராஹீம்-...