Search This Blog

Monday, 18 May 2026

நல்லோர்கள் பொருட்டால்...

 

நல்லோர்கள் பொருட்டால்...

 

وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ

(நபியே!) நீங்கள் அவர்களுக்கிடையில் இருக்கும் வரையில் (உங்கள் பொருட்டால்) அல்லாஹ் அவர்களை வேதனை செய்யமாட்டான். திருக்குர்ஆன்:- 8:33

 

இறைநேசர்கள் (அவ்லியாக்கள்) என்பவர்கள் அல்லாஹ்வின்மீது ஆழமான அன்பு கொண்டு, அவனது கட்டளைகளை முழுமையாகப் பேணி நடப்பவர்கள். அவர்களின் தோழமை, பிரார்த்தனை மற்றும் வழிகாட்டுதல்கள் மூலம் இவ்வுலகிலும் மறுமையிலும் எண்ணற்ற ஆன்மீக, சமூக பலன்கள் கிடைக்கின்றன.

 

இறைநேசர்கள் மக்களை இஸ்லாத்திற்கு அழைத்தார்கள். முஸ்லிம்களுக்கு சரியான மார்க்கத்தை சொல்லிக்கொடுத்தார்கள். அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற வழிகாட்டினார்கள். சமூக சீர்திருத்தப் பணிகள் பலவற்றை திறம்படச் செய்தார்கள். அரசியல் ரீதியாகவும் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு உழைத்தார்கள். அக்கிரமச் சக்திகளுக்கு எதிராகப் போராடினார்கள்.

 

இறைநேசர்களின் நற்பண்புகள் மற்றும் பிரார்த்தனைகளின் பொருட்டால், சமூகத்திற்கு அல்லாஹ்வின் அருள்வளங்கள் கிடைக்கப் பெறுகிறது.

 

இறைநேசர்கள் வாழும்போதும் பிறருக்கு பயனளிப்பவர்களாக அல்லாஹுத்தஆலா அவர்களை வாழச் செய்தான். அவர்கள் இறந்த பிறகும் மக்களுக்கு பயனளிப்பவர்களாகவே அல்லாஹ் அவர்களை ஆக்கியுள்ளான்.

 

 நபியவர்கள்   

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூஜஹ்ல், ( اَللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوِ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ ) இறைவா! இது (குர்ஆன்) உன்னிடமிருந்து வந்த சத்தியம்தான் என்றிருப்பின் எங்கள்மீது வானத்திலிருந்து கல் மழையைப் பொழியச் செய்! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!” என்று சொன்னான். அப்போது (தலைப்பில் காணும் 8:33) திருவசனம் அருளப்பெற்றது. நூல்:- புகாரீ-4648, முஸ்லிம்-5389

 

ஜல்ஹமா பின் உருஃப்தா (ரலி) அவர்கள் ( جلهمة بن عرفطة ) கூறியதாவது. குறைஷியர் பஞ்சகாலத்தில் இருந்த சமயம் நான் மக்காவிற்கு வந்தேன். அப்போது சிலர் “மழைக்காக லாத், உஸ்ஸா கடவுள்களிடம் நம்பிக்கையோடு வேண்டிக்கொள்ளுங்கள்” என்றனர். வேறு சிலர் “மூன்றாவது கடவுளான ‘மனாத்’திடம் நம்பிக்கையோடு வேண்டிக்கொள்ளுங்கள்” என்றனர்.

 

வசீகரமான அழகிய முகத்தோற்றமும், நல்ல அறிவாற்றலும் உள்ள ஒரு முதியவர் ( أَنَّى تُؤْفَكُونَ وَفِيكُمْ بَقِيَّةُ إِبْرَاهِيمَ سُلَالَةُ إِسْمَاعِيلَ ) “உங்களில் நபி இப்ராஹீம் (அலை), நபி இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் சந்ததிகள் இருக்க வேறு எங்கோ திருப்பப்படுகிறீர்களே?” என்று கூறினார்.

 

அப்போது அம்மக்கள் அவரிடம், ( كَأَنَّكَ عَنَيْتَ أَبَا طَالِبٍ؟ ) “நீர் அபூதாலிப் அவர்களை குறித்து தானே சொல்கிறீர்?” என்றனர். அதற்கு அவர் “ஆம்” என்றார். அனைவரும் அபூதாலிப் அவர்களை நோக்கி சென்றனர். அவர்களுடன் நானும் சென்றேன். நாங்கள் சென்று வீட்டு கதவைத் தட்டினோம். அப்போது தன் கீழாடையை சரிசெய்த நிலையில் அழகிய முகத்தோற்றமுடைய ஒரு மனிதர் வெளியே வந்தார். அவரை கண்டவுடன் அவரை நோக்கி மக்கள் விரைந்தோடினர்.

 

இன்னும் அம்மக்கள், ( يَا أَبَا طَالِبٍ أَقْحَطَ الْوَادِي وَأَجْدَبَ الْعِيَالِ فَهَلُمَّ فَاسْتَسْقِ لَنَا ) “அபூதாலிப் அவர்களே! (நமது) பள்ளத்தாக்கு வறண்டு போயுள்ளது; (நமது) குடும்பங்கள் வறட்சியால் அவதிப்படுகின்றன. எனவே, (பீடித்துள்ள பஞ்சத்தைப் போக்க) எங்களுக்காக மழை வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள்.

 

உடனே அபூதாலிப் அவர்கள் தன்னோடு ஒரு சிறுவரையும் (முஹம்மத் - ஸல் அவர்களையும்) அழைத்துக்கொண்டு (கஅபாவை நோக்கி) புறப்பட்டார்‌. அந்தச் சிறுவர், சூரியனை கருமேகங்கள் சூழ்ந்து விலகும்போது அந்தச் சூரியன் எப்படி பிரகாசிக்குமோ அதுபோன்று இருந்தார். பிறகு அந்தச் சிறுவரின் முதுகை கஅபாவுடன் இணைத்தார். அந்தச் சிறுவரின் விரலை பிடித்தவாறு அல்லாஹ்விடம் பஞ்சத்திலிருந்து பாதுகாவல் தேடினார்.

 

அச்சமயம் வானத்தில் சிறு மேகம்கூட இல்லாத நிலையில் நாலாபுறத்திலிருந்து மேகம் வந்தது. கடுமையாக மழை பொழிந்தது. மழையினால் பள்ளாத்தாக்கும் நிரம்பி ஓடியது. அந்த மழை மக்கா நகரில் வசிப்போரையும், சுற்றுப்புற கிராமங்களில் வசிப்போரையும் செழிப்பாக்கியது.

 

பிறகு அபூதாலிப் அவர்கள் (பின்வரும்) கவிதையை படித்தார்:

 

( وَأَبْيَضَ يُسْتَسْقَى الْغَمَامُ بِوَجْهِهِ ) இ(ந்தச் சிறு)வர் தூய்மையான (தலை)வராவார். இவரின் பொருட்டினால் அல்லாஹ்விடம் மழையை வேண்டப்படும்.

( ثِمَالُ الْيَتَامَى عِصْمَةٌ لِلْأَرَامِلِ ) இவர் அநாதைகளின் உதவியாளர்; கைம்பெண்களின் பாதுகாவலர்.

( يَلُوذُ بِهِ الْهَلَاكُ مِنْ الِ هَاشِمٍ ) ஹாஷிம் குடுபம்பத்தாரில் அழிவின் விளிம்பில் உள்ளவர்கள் இவரைக்கொண்டே பாதுகாவல் தேடுவார்கள்.

( فَهُمْ عِنْدَهُ فِي نِعْمَةٍ وَفَوَاضِلِ ) ஹாஷிம் குடும்பத்தார்கள் இவரின் மூலம் (இறைவனின்) ஆசிவாதங்களையும், அருட்கொடைகளையும் பெற்றுள்ளனர். நூல்:- சுபுலுல் ஹுதா வர்ரஷாதி ஃபீ சீரத்தி கைரில் இபாதி ( سبل الهدى والرشاد فى سيرة خير العباد )

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொருட்டால், இந்தச் சமுதாயம் பெற்ற சிறப்புகளும், அருள்வளங்களும் ஏராளம். எனவே, நாம் நபியவர்கள்மீது அதிகப் பிரியம் கொண்டு நபிவழியைப் பின்பற்றுவதில் அதிகம் ஆர்வப்பட வேண்டும்.

 

இறைத்தூதர்கள்

 

அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ( لَمَّا افْتَتَحْنَا تُسْتَرَ وَجَدْنَا فِي مَالِ بَيْتِ الْهُرْمُزَانِ سَرِيرًا، عَلَيْهِ رَجُلٌ مَيِّتٌ، عِنْدَ رَأْسِهِ مُصْحَفٌ، فَأَخَذْنَا الْمُصْحَفَ فَحَمَلْنَاهُ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ ) பாரசீக நாட்டிலுள்ள துஸ்த்தர் எனும் நகரத்தை (ஜனாதிபதி உமர் - ரலி அவர்களின் காலத்தில் ஹிஜ்ரீ 17 ஆம் ஆண்டு) நாங்கள் வெற்றி கொண்டபோது, "ஹுர்முஸான்" என்பவரின் வீட்டுப் பொருள்களோடு ஒரு கட்டிலைக் கண்டோம். அந்தக் கட்டிலில் ஒரு சடலம் இருந்தது. அந்தச் சடலத்தின் தலைக்கருகில் ஓர் ஏடு இருந்தது. நாங்கள் அந்த ஏட்டை எடுத்துக்கொண்டு அதை உமர் (ரலி) அவர்களிடம் எடுத்துச் சென்றோம்.

 

எனவே, அதற்காக கஅப் (ரலி) அவர்களை உமர் (ரலி) அவர்கள் அழைத்தார்கள். அவர் அதை அரபியில் மொழியாக்கம் செய்தார். அரபியர்களுள் நானே அதை முதலாவதாகப் படித்தேன். திருக்குர்ஆனைப் படிப்பதைப் போன்று அதை நான் படித்தேன்.

 

(அபுல் ஆலியா - ரஹ் அவர்களிடம் இதைக்கேட்ட காலித் பின் தீனார் - ரஹ் அவர்கள்) கூறுகிறார்: அப்போது நான் அபுல் ஆலியா (ரஹ்) அவர்களிடம், ( فَمَا صَنَعْتُمْ بِالرَّجُلِ؟ ) "அந்தச் சடலத்தை என்ன செய்தீர்கள்?" என்று கேட்டேன். ( حَفَرْنَا بِالنَّهَارِ ثَلَاثَةَ عَشَرَ قَبْرًا مُتَفَرِّقَةً، فَلَمَّا كَانَ بِاللَّيْلِ دَفَنَّاهُ وَسَوَّيْنَا الْقُبُورَ كُلَّهَا ; لِنُعَمِّيَهُ عَلَى النَّاسِ فَلَا يَنْبِشُونَهُ ) “பகல் முழுக்க பதின்மூன்று மண்ணறைகளை தனித்தனியே தோண்டினோம். இரவில் அதை நாங்கள் (அவற்றுள் ஒரு குழிக்குள்) அடக்கம் செய்தோம். அதை மக்களில் யாரும் தோண்டி எடுத்துவிடக்கூடாது என்பதற்காக அந்த அனைத்துக் குழிகளையும் சமப்படுத்திவிட்டோம்.

 

மேலும், ( فَمَا يَرْجُونَ مِنْهُ؟ ) “அவர்கள் அந்தச் சடலத்தை எதற்காக வைத்துக் கொண்டிருந்தார்கள்?" என்று நான் கேட்டேன். ( كَانَتِ السَّمَاءُ إِذَا حُبِسَتْ عَنْهُمْ بَرَزُوا بِسَرِيرِهِ ) "வானம் மழையைப் பொழியவில்லையென்றால் அவர்கள் அதைக் கட்டிலுடன் வெளியே கொண்டு வந்து வைப்பார்கள்; பின்னர் அவர்களுக்கு மழைப்பொழியும்" என்று கூறினார். "அந்த மனிதர் யார்? என்று நீங்கள் கருதுகிறீர்கள்” என்று வினவினேன். ( رَجُلٌ يُقَالُ لَهُ دَانْيَالُ ) "அவர் பெயர் தானியால்" என்று பதிலளித்தார்.

 

( مُنْذُ كَمْ وَجَدْتُمُوهُ قَدْ مَاتَ؟ ) "அவர் இறந்து எவ்வளவு காலம் ஆகியிருந்தது?" என்று நான் வினவ, ( مُنْذُ ثَلَاثِمِائَةِ سَنَةٍ ) "சுமார் முந்நூறு ஆண்டுகள் (இருக்கலாம்)" என்று பதிலளித்தார். ( مَا تَغَيَّرَ مِنْهُ شَيْءٌ؟ ) "அதில் ஏதேனும் ஒரு பகுதியை மாற்றம் அடைந்ததா?" என்று நான் வினவினேன். ( لَا إِلَّا شَعَرَاتٌ مِنْ قَفَاهُ إِنَّ لُحُومَ الْأَنْبِيَاءِ لَا تُبْلِيهَا الْأَرْضُ وَلَا تَأْكُلُهَا السِّبَاعُ ) "அவருடைய பிடரியின் சில உரோமங்கள் தவிர எதுவும் சிதைவடையவில்லை; ஏனென்றால், நிச்சயமாக நபிமார்களின் உடலைப் பூமி சிதைக்காது; காட்டு விலங்குகளும் சாப்பிடாது." என்று கூறினார். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா

 

இப்னு அபித்துன்யா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார். தான்யால் (அலை) அவர்களுடன் ஒரு ஏடு, ஒரு குடம், நெய், சில வெள்ளிக்காசுகள், அவருடைய மோதிரம் ஆகியவற்றை அபூமூசா (ரலி) அவர்கள் கண்டார்கள். அதைப்பற்றி அபூ மூசா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.

 

அதற்கு உமர் (ரலி) அவர்கள், ( أَمَّا الْمُصْحَفُ فَابْعَثْ بِهِ إِلَيْنَا، وَأَمَّا الْوَدَكُ فَابْعَثْ إِلَيْنَا مِنْهُ، وَمُرْ مَنْ قِبَلَكَ مِنَ الْمُسْلِمِينَ يَسْتَشْفُونَ بِهِ، وَاقْسِمِ الدَّرَاهِمَ بَيْنَهُمْ، وَأَمَّا الْخَاتَمُ فَقَدْ نَفَّلْنَاكَهُ ) "அந்த ஏட்டையும் அந்த நெய்யில் சிறிதளவையும் எமக்கு அனுப்பி வைப்பீராக; உம்மோடு உள்ள முஸ்லிம்களிடம் அதன் மூலம் நோய் நிவாரணம் பெற்றுக்கொள்ளும்படி கூறுவீராக; வெள்ளிக்காசுகளை அவர்களுக்கிடையே பங்கிட்டு கொடுப்பீராக; மோதிரத்தை போரில் கிடைத்த வெற்றிப் பொருள்களில் ஒன்றாக உமக்கே வழங்கிவிட்டோம்" என்று பதில் எழுதினார்கள். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா

 

அபூபக்ர் பின் அபித்துன்யா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார். ( إِنَّ دَانْيَالَ دَعَا رَبَّهُ عَزَّ وَجَلَّ أَنْ تَدْفِنَهُ أُمَّةُ مُحَمَّدٍ ) "நிச்சயமாக தானியால் (அலை) அவர்கள் இறைவனிடம், முஹம்மத் (ஸல்) அவர்களுடைய சமுதாயம் தான் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபுல்அஷ்அஸ் அல்அஹ்மரீ (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார். நூல்:- அஹ்காமுல் கபூர்

 

பேரறிஞர் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அபுல் ஆலியா (ரஹ்) அவர்களோடு இணைக்கப்பட்டுள்ள இந்தச் செய்தி சரியான அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ளது தான். எனினும் அவர் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இறந்தார் என்பது நம்பகமான வரலாற்று தகவலாக இருந்தால் அவர் ஒரு நபியாக இருக்க முடியாது. மாறாக, ஒரு நல்ல மனிதராக இருந்திருக்கலாம்.

 

காரணம், (எனக்கும் ஈசாவுக்கும் இடையில் எந்த நபியும் இல்லை. அபூதாவூத்-3766) இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களுக்கும், இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் இடையே எந்த நபியும் இல்லை. (புகாரீ) அவ்விருவருக்கும் இடையே ஏறக்குறைய நானூறு ஆண்டுகள் முதல் அறுநூறு ஆண்டுகள் வரை இடைவெளி இருந்துள்ளது.

 

எனவே, அவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு 800 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்திருக்கலாம். அந்தச் சடலம் தானியால் (அலை) அவர்களுடையதாக இருந்திருந்தால் எண்ணூறு ஆண்டுகள் என்பதே அவர்களின் காலத்துக்கு ஏறக்குறைய ஒத்து வருவதும் பொருத்தமானதும் ஆகும். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா

 

அண்டைவீட்டார்

 

இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள். மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாக இருப்பவர்களுடன் சேர்ந்திருங்கள். திருக்குர்ஆன்:- 9:119

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ( إِنَّ اللَّهَ لَيَدْفَعُ بِالْمُسْلِمِ الصَالِحٍ عَنْ مِائَةِ أَهْلِ بَيْتٍ مِنْ جِيرَانِهِ الْبَلَاءَ ) (மார்க்கத்தை முறையாகப் பின்பற்றி வாழக்கூடிய) நல்ல முஸ்லிமின் மூலம் அவருடைய அண்டைவீட்டார் நூறு பேருக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை அல்லாஹ் தடுத்துவிடுகிறான்" என்று கூறினார்கள்.

 

அதன்பின் அப்துல்லாஹ் உமர் (ரலி) அவர்கள் (இவ்வாறு) மனிதர்களில் சிலரைச் சிலரால் அல்லாஹ் அடக்கி வைக்காவிட்டால், பூமி சீர்குலைந்து போகும். எனினும், அல்லாஹ் அகிலத்தார்மீது அருளுடையவன் ஆவான். (2:251) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர் அல்பகரா வசனம்-251, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ( إِنَّ اللَّهَ لَيُصْلِحُ بِصَلَاحِ الرَّجُلِ الْمُسْلِمِ وَلَدَهُ وَوَلَدَ وَلَدِهِ وَأَهْلَ دُوَيْرَتِهِ وَدُوَيْرَاتٍ حَوْلَهُ، وَلَا يَزَالُونَ فِي حِفْظِ اللَّهِ عَزَّ وَجَلَّ مَا دَامَ فِيهِمْ ) நிச்சயமாக அல்லாஹ் ஒரு நல்ல மனிதரின் பொருட்டால் அவருடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், அவருடைய வீட்டைச் சுற்றியுள்ள அனைவரையும் செம்மைப்படுத்துகிறான். அந்த நல்ல மனிதர் அவர்களுடன் இருக்கும் வரை அவர்கள் அல்லாஹ்வின் பாதுகாப்பிலேயே இருந்து வருவார்கள். அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர் அல்பகரா வசனம்-251

 

ஒரு மனிதன் இறையச்சம் பேணி கண்ணியத்துடன் வாழ்ந்துவிட்டால், அல்லாஹ் அவனின் சந்ததிகளை செம்மைப்படுத்தப்போதுமானவன். நல்லவர்களின் நட்பு நம்மையும் நல்லவனாக்கும்.

 

நம்முடன் வாழ்வார்கள்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَا يَزَالُ فِيكُمْ سَبْعَةٌ بِهِمْ تُنْصَرُونَ وَبِهِمْ تُمْطَرُونَ وَبِهِمْ تُرْزَقُونَ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ ) உங்களிடத்தில் ஏழு பேர்கள் தொடர்ந்து இருந்து கொண்டிருப்பார்கள். அவர்களின் பொருட்டால் நீங்கள் உதவி செய்யப்படுவீர்கள்; மழை பொழிவிக்கப்படுவீர்கள்; வாழ்வாதாரம் வழங்கப்படுவீர். இறைவனுடைய உத்தரவு வரும்வரை (இது நடந்து கொண்டிருக்கும்). அறிவிப்பாளர்:- ஸவ்பான் (ரலி) அவர்கள் நூல்:-  அப்துர் ரஸ்ஸாக், தஃப்சீர் இப்னு கஸீர் அல்பகரா வசனம்-251

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اَلْأَبْدَالُ فِي أُمَّتِي ثَلَاثُونَ بِهِمْ تَقُومُ الْأَرْضُ، وَبِهِمْ تُمْطَرُونَ وَبِهِمْ تُنْصَرُونَ" قَالَ قَتَادَةُ إِنِّي لَأَرْجُو أَنْ يَكُونَ الْحَسَنُ مِنْهُمْ ) "(ஒவ்வொரு காலத்திலும்) என் சமுதாயத்தாரில்  நல்லடியார்கள் (அப்தால்) முப்பது பேர் வாழ்வார்கள். அவர்களால் தான் உங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கப்படுகிறது; மழை பொழிவிக்கப்படுகிறது; உதவிகளும் அளிக்கப்படுகின்றன" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் நூல்:- இப்னு மர்தவைஹி, முஸ்னது அஹ்மத், தப்ரானீ, தஃப்சீர் இப்னு கஸீர் அல்பகரா வசனம்-251, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. மக்கள் பஞ்சத்தால் பீடிக்கப்படும்போது ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களை, மழை வேண்டிப் பிரார்த்திக்கும்படி கேட்பார்கள்.

 

(அந்நேரங்களில்) உமர் (ரலி) அவர்கள், ( اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا فَتَسْقِينَا وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا ) "இறைவா! எங்கள் நபியவர்களின் பொருட்டால் உன்னிடம் நாங்கள் உதவி கோரிவந்தோம். நீயும் (அதை ஏற்று) எங்களுக்கு மழை பொழிந்துவந்தாய். இப்போது எங்கள் நபியின் தந்தையின் சகோதரர் (அப்பாஸ்-ரலி) அவர்களின் பொருட்டால் உன்னிடம் (மழை பொழியும்படி) கோருகின்றோம். எங்களுக்கு மழை பொழிவாயாக!" என்று வேண்டுவார்கள். அதன்படி மக்களுக்கு மழை பெய்துவந்தது. நூல்:- புகாரீ-1010

 

இறந்தவர்கள்   

 

இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ( إنِّي لَأَتَبَرَّكُ بِأَبِي حَنِيفَةَ وَأَجِيءُ إلَى قَبْرِهِ فِي كُلِّ يَوْمٍ يَعْنِي زَائِرًا فَإِذَا عَرَضَتْ لِي حَاجَةٌ صَلَّيْتُ رَكْعَتَيْنِ وَجِئْتُ إِلَى قَبْرِهِ وَسَأَلْتُ اللَّهَ تَعَالَى الْحَاجَةَ عِنْدَهُ فَمَا تَبْعُدُ عَنِّي حَتَّى تُقْضَى ) நான் ஒவ்வொரு நாளும் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் மண்ணறையை தரிசிக்கச் செல்வேன். எனக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் அந்த இடத்திலேயே தொழுதுவிட்டு (இமாம் அபூஹனீபா - ரஹ் அவர்களை வசீலாவாக வைத்து அல்லாஹ்விடம்) பிரார்த்திப்பேன். சிறிது நேரத்திற்குள் எனது தேவை பூர்த்தியாக்கப்படும். அறிவிப்பாளர்:- அலீ பின் மைமூன் (ரஹ்) அவர்கள் நூல்:-  தாரீக் அல்பக்தாத் இமாம் அபூபக்ர் அல்கத்தீப் 1/122, ஹைராத்துல் ஹிசான் பக்கம்-69 இமாம் இப்னுஹஜர்

 

அப்துல்லாஹ் பின் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. எனது தந்தை இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் (தமது ஆசிரியர்) இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களை வசீலாவாகக் கொண்டு அடிக்கடி பிரார்த்தனை செய்வார்கள். அதைப்பற்றி எனது தந்தையாரிடம் வினவினேன். அதற்கு அவர்கள், ( يَا بُنَيَّ كَانَ الشَّافِعِيُّ كَالشَّمْسِ لِلدُّنْيَا، وَكَالْعَافِيَة لِلنَّاسِ ) "எனது அன்பு மகனே! உலகத்திற்கு சூரியன் எவ்வளவு முக்கியமோ அதுபோன்றும்,  மனிதர்களுக்கு ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதுபோன்றும் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் (நம்முடைய வாழ்க்கைக்கு) மிகவும் அவசியமுடையவராக இருக்கிறார்கள்" என்றார்கள். நூல்:-  ஷவாஹிதுல் ஹக் பக்கம்-166

 

நபிமொழித்துறை வல்லுனர் அல்ஹாபிழ் இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் “தூஸ்” எனும் ஊரில் இருக்கும்போது எனக்கு ஏதாவது கஷ்டம் ஏற்பட்டால், உடனே அலீ பின் மூசா அர்ரிழா (ரஹ்) அவர்களுடைய கப்ரை ஸியாரத்து செய்துவிட்டு, அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால், அது உடனே ஏற்றுக்கொள்ளப்படுவதோடு எனது கஷ்டமும் நீங்கிவிடும். இதை நான் பலமுறை பரீட்சித்துப் பார்த்தும் அவ்வாறே நடந்தது. நூல்:- அத்துகாத் 8/456 இமாம் இப்னு ஹிப்பான்

 

ஹிஜ்ரி 464 ஆம் ஆண்டு ஸமர்கந்த் எனுமிடத்தில் மழையின்றி கடுமையான வறட்சி ஏற்பட்டது. அந்நேரம் ஸமர்கந்தை சார்ந்த ஓர் நல்லடியார்  அந்நாட்டு (காஜி) அதிகாரியிடம், “நமது ஊருக்கு மழை கிடைக்க நீங்கள் மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து ஃகர்தங்க் என்ற கிராமத்தில் உள்ள இமாம் புகாரீ (ரஹ்) அவர்களது மண்ணறைக்குச் சென்று மழைக்காக பிரார்த்தியுங்கள். இறைவன் கண்டிப்பாக மழையை தருவான்” என்று கூறினார். இதைக் கேட்ட அந்த (காஜி) அதிகாரி மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி கொண்டு இமாம் புகாரீ (ரஹ்) அவர்களது மண்ணறைக்குச் சென்று மழைக்காக துஆ செய்தனர். பிறகு இறைவன் அவர்களுக்கு செழிப்பான மழையை இறக்கினான்.

 

இந்நிகழ்வு குறித்து இமாம் கஸ்தல்லானி (ரஹ்), இமாம் ஸுப்கி (ரஹ்) போன்ற ஏராளமான இமாம்கள் குறிப்பிடுகிறார்கள். நூல்:- தபகாத்துஷ் ஷாஃபிஇய்யத்துல் குப்ரா, இர்ஷாதுஸ்ஸாரீ, சியரு  அஃலாமுந் நுபலா 

 

நாம் நம்மிடத்தில் இருந்தவாறு பிரார்த்திப்பதைவிட இறைநேசர்களின் மண்ணறைகளுக்கு சென்று யாஸீன் போன்ற குர்ஆன் அத்தியாயங்கள் எதையேனும் ஓதி, அதை அவர்களுக்கு (ஈஸால் ஸவாப் எனும்) அர்ப்பணம் செய்துவிட்டு, “இறைவா! இந்த இறைநேசர்களின் பொருட்டால் என்னுடைய இந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக!” என்று நம்முடைய தேவைகள் குறித்து அல்லாஹ்விடம் பிரார்த்திக்கலாம். அந்த பிரார்த்தனைக்கு அல்லாஹ்விடம் மதிப்பு உண்டு  

 

அங்கீகரிக்கப்படலாம்

 

பிலால் (ரலி) அவர்கள் கூறியதாவது. (விடைபெறும் ஹஜ்ஜின்போது நாங்கள்) முஸ்தலிஃபாவில் தங்கியிருந்த நாளில் அதிகாலைப் பொழுதில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( إِنَّ اللَّهَ تَطَوَّلَ عَلَيْكُمْ فِي جَمْعِكُمْ هَذَا فَوَهَبَ مُسِيئَكُمْ لِمُحْسِنِكُمْ وَأَعْطَى مُحْسِنَكُمْ مَا سَأَلَ ادْفَعُوا بِاسْمِ اللَّهِ ) "உங்களில் உள்ள நல்லோரின் (பிரார்த்தனையின்) காரணத்தால் உங்களில் உள்ள தீயோருக்கு (பாவமன்னிப்பை) பரிசாக வழங்கியுள்ளான். உங்களில் உள்ள நல்லோர் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்துள்ளான். (இப்போது) அல்லாஹ்வின் பெயரால் (இங்கிருந்து மினாவை நோக்கிப்) புறப்பட்டுச் செல்லுங்கள்" என்று கூறினார்கள். நூல்:-  இப்னுமாஜா-3015, அக்பாரு மக்கா இமாம் ஃபாக்கிஹி, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக், ஹில்யத்துல் அவ்லியா இமாம் அபூநயீம், அஸ்ஸில்ஸிலத்துஸ் ஸஹீஹா லில் அல்பானீ-1624

 

நல்லோர் பொல்லோர் என நாம் கூட்டாக செய்கின்ற பிரார்த்தனை, தொழுகை, ஹஜ் போன்ற வழிபாடுகளில் கலந்துகொண்ட நல்லோர் பொருட்டால் நமது வழிபாடுகள் ஏற்றுக்கொள்ளப்படலாம். அதனால் தான் தனியாக தொழுவதைவிட கூட்டாக (ஜமாஅத்தாக) தொழுவது சிறந்தது என்கிறது இஸ்லாம்.

 

இறையச்சமுள்ள நல்லடியார்களால் பாமரர்களுக்கு பயன் உண்டு. எனவே, அவர்களை மதித்துப்பழக வேண்டும். அவர்களிடம் நட்புறவு கொண்டு, அவர்களின் உபதேசங்களை ஏற்று வாழவேண்டும்.

 

எனவே, நாம் இறையச்சம் பேணி, பிறருக்கு பயனளிக்கும் வகையில் வாழ அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

No comments:

Post a Comment

நல்லோர்கள் பொருட்டால்...

  நல்லோர்கள் பொருட்டால்...   وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ (நபியே!) நீங்கள் அவர்களுக்கிடையில் இருக்கும் வரையில்...