எல்லோரும் என்னைப் போன்றவர்களே!
لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا
مِمَّا تُحِبُّونَ وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ
உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள்
(தானமாக) செலவு செய்யாத வரையில் நிச்சயமாக நீங்கள் நன்மையடைய மாட்டீர்கள். ஒரு சொற்பத்தை
நீங்கள் தானம் செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனையும் நன்கறிவான். திருக்குர்ஆன்:- 3:92
ஓர் முழுமையான இறைநம்பிக்கையாளர் தன்னைப் போன்றே
பிறரும் என்றெண்ணி, தன்னிடமுள்ள சிறப்பம்சம் அனைத்தும் பிறருக்கும் கிடைக்க வேண்டும்
என்று எண்ணுவார். தன்னிடம் உள்ளதில் சிறந்ததை பிறருக்கும் பகிர்ந்தளிக்க விரும்புவார்.
பிறரிடமுள்ள தவறான சிந்தனைகள், தவறான செயல்பாடுகள் எதுவும் தன்னிடம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில்
மிகவும் கவனமாக இருப்பார்.
பரிபூரண முஸ்லிம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَلْيَأْتِ إِلَى النَّاسِ الَّذِي يُحِبُّ أَنْ
يَأْتُوا إِلَيْهِ ) தமக்கு எது கிடைக்க வேண்டும் என்று விரும்புவாரோ
அதையே மக்களுக்கும் அவர் விரும்பட்டும். அறிவிப்பாளர்:- அப்துர் ரஹ்மான் பின் அப்தி
ரப்பில் கஅபா (ரஹ்) அவர்கள் நூல்:- முஸ்லிம்-3759,
நசாயீ-4120, இப்னுமாஜா-3946, முஸ்னது அஹ்மத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَأَحِبَّ لِلنَّاسِ مَا تُحِبُّ لِنَفْسِكَ تَكُنْ
مُسْلِمًا ) உனக்கு விரும்புவதையே பிற மக்களுக்கும் விரும்பும்போது நீ (பரிபூரண) முஸ்லிமாக
ஆவாய். நூல்:- திர்மிதீ-, முஸ்னது அஹ்மத்
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான்
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களிடம், ( أَفْضَلِ الْإِيمَانِ ) இறைநம்பிக்கையின் சிறந்த அம்சம் குறித்து வினவினேன். அதற்கு நபியவர்கள், ( وَأَنْ تُحِبَّ لِلنَّاسِ مَا تُحِبُّ لِنَفْسِكَ وَتَكْرَهُ
لَهُمْ مَا تَكْرَهُ لِنَفْسِكَ ) "உமக்காக எதை நீர் விரும்புகிறீரோ அதைப் பிற மக்களுக்காக நீர்
விரும்புவதும், உமக்காக எதை நீர் வெறுக்கின்றீரோ அதை பிற மக்களுக்காக
நீர் வெறுப்பதும் ஆகும் என்று கூறினார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், மிஷ்காத்-48
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அப்துல்லாஹ் பின்
உமர் (ரலி) அவர்கள் நோயற்றிருந்தார்கள். திராட்சைப் பழங்களை முதல் பாளையில் தோன்றும்
திராட்சை பழங்களை உண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அவர்களின் மனைவி ஸஃபிய்யா
(ரஹ்)அவர்கள் ஒரு ஆளைக் கடைத்தெருவுக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த ஆள் ஒரு வெள்ளிக்காசு
கொடுத்து அப்படிப்பட்ட திராட்சைக் குலை ஒன்றை விலைக்கு வாங்கிவந்தார்.
அந்த ஆளை ஒரு யாசகர் பின் தொடர்ந்தார். அந்த ஆள்
திராட்சைக் குலையுடன் வீட்டில் நுழைந்தவுடன்,
யாசகர் (வந்திருக்கிறேன்)
என்று யாசகர் சப்தமிட்டார். உடனே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ( أَعْطُوهُ إِيَّاهُ ) "அந்தத் திராட்சைப் பழத்தை அந்த யாசகருக்கு கொடுத்துவிடுங்கள்"
என்று கூறினார்கள். அவ்வாறே வீட்டினர். அதை யாசகருக்கு வழங்கினர்.
ஸஃபிய்யா (ரஹ்) அவர்கள் வேறொரு வெள்ளிக்காசு கொடுத்து
அனுப்பி இன்னொரு திராட்சைக் குலையை வாங்கி வரச் சொன்னார்கள். அப்போதும் அந்த யாசகர்
யாசகம் கேட்க, அவருக்கு வழங்குமாறு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
அவர்கள் சொல்ல, அவருக்கே அது வழங்கப்பட்டது. மூன்றாவது வெள்ளிக்காசு
கொடுத்து மூன்றாவது முறையாக திராட்சைக் குலை வாங்கி வரச் சொன்னார்கள் ஸஃபிய்யா (ரஹ்)
அவர்கள். நூல்:- பைஹகீ, தஃப்சீர் இப்னு கஸீர் அல்இன்சான் வசனம்-8
தரமற்றதைத்
தரக்கூடாது
இறைநம்பிக்கையாளர்களே! (தர்மம் செய்யக் கருதினால்)
நீங்கள் சம்பாதித்தவைகளிலிருந்தும் நாம் உங்களுக்கு பூமியிலிருந்து வெளியாக்கிய (தானியம், கனிவர்க்கம் ஆகிய)வற்றிலிருந்தும் நல்லவைகளையே (தர்மமாக) செலவு
செய்யுங்கள். அவற்றில் மட்டமான பொருளைச் செலவு செய்ய எண்ணாதீர்கள். (ஏனெனில் கெட்டுப்
போன பொருள்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால்) அவற்றை நீங்கள் (வெறுப்புடன்) கண்ணை மூடிக்கொண்டவர்களாக
அன்றி வாங்கிக் கொள்ளமாட்டீர்கள். (ஆகவே, நீங்கள் விரும்பாத பொருள்களை பிறருக்கு தர்மமாக
கொடுக்காதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவன்; மிக்க புகழுக்குரியவன் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். திருக்குர்ஆன்:-
2:267
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது. அன்சாரித்
தோழர்கள் தமது பேரிச்சம் தோட்டத்திலுள்ள மரங்களிலிருந்து பேரிச்சங்கனிகள் பறிக்கும்
நாள்களில் செங்காய்க் குலைகளைப் பறித்துக் கொண்டு வந்து மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலின்
இரு தூண்களுக்கிடையே கயிற்றில் கட்டித் தொங்கவிடுவார்கள். உணவு இல்லாத திண்ணைத் தோழர்கள்
பசிக்கும் நேரத்தில் அந்தக் குலையை கம்பால் அடித்து அதிலிருந்து கீழே விழும் செங்கனிகளையும், கனிகளையும் உண்பார்கள்.
அன்சாரித் தோழர்களில் நன்மையில் ஆர்வமில்லாத சிலர், அந்தச் செங்குலைகளுக்கிடையே மட்டமான, சூம்பிப்போன பேரிச்சங் குலையை தொங்கவிட்டனர். (அவற்றுக்கிடையே)
இ(ப்படி ஒரு குலை இருப்ப)து அனுமதிக்கப்பட்டது தான் என்று எண்ணினர். இவ்வாறு செய்தவர்கள்
குறித்தே மேற்காணும் (2:267) திருவசனம் அருளப்பெற்றது. நூல்:- திர்மிதீ-2903, இப்னுமாஜா-1812, ஹாகிம்-3083
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை பேராசான்
பெருமானார் (ஸல்) அவர்களிடம் (சமைத்த) உடும்பு ஒன்று கொண்டுவரப்பட்டது, ஆனால், நபியவர்கள் அதை சாப்பிடவுமில்லை; (அதைச் சாப்பிடுவதை) தடுக்கவுமில்லை.
அப்போது நான், ( يا رَسُولَ
اللَّهِ، أفَلا تُطْعِمُهُ المَساكِينَ؟ ) “அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் ஏன் அதை ஏழைகளுக்கு உணவளிக்கக்கூடாது?” என்று கேட்டேன். நபியவர்கள், ( لَا تُطْعِمُوهُم
مِمَّا لَا تَأْكُلُونَ ) “நீங்கள் சாப்பிடாதவற்றிலிருந்து அவர்களுக்கு உணவளிக்காதீர்கள்”
என்றார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் அல்பகரா வசனம்-267, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் ஆலு இம்ரான் வசனம்-92
அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது .
(ஒருநாள்) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குப் புறப்பட்டு
வந்தார்கள். (தேவையுடையோர் சாப்பிடுவதற்காக) பழக்குலை ஒன்றை ஒருவர் (பள்ளிவாசலில்)
கட்டித் தொங்கவிட்டிருந்தார். (அதைக் கண்ட) நபியவர்கள் தம் கையிலிருந்த கைத்தடியால்
அந்தப் பழக்குலையை (தடதடவென) தட்டிப் பார்க்கலானார்கள்.
பிறகு,
( لَوْ شَاءَ رَبُّ هَذِهِ الصَّدَقَةِ تَصَدَّقَ
بِأَطْيَبَ مِنْهَا ) "இந்த தர்மத்திற்குரியவர் இதைவிடச் சிறந்ததை தர்மமாக
வழங்கி இருக்கலாமே" என்று கூறிவிட்டு,
( إِنَّ رَبَّ هَذِهِ الصَّدَقَةِ يَأْكُلُ الْحَشَفَ
يَوْمَ الْقِيَامَةِ ) "இத்தகைய தர்மத்திற்குரியவர் மறுமைநாளில் (இதைப்
போன்றே) காய்ந்து கெட்டுப் போனதையே உண்பார்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-1370, நசாயீ-2447, இப்னுமாஜா-1811,
முஸ்னது அஹ்மத், இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான், ஹாகிம்
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் மேற்காணும்
வசனத்திற்குப் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள்: ஒருவர் உங்களுக்குத் தர வேண்டிய
பொருளைத் திருப்பிச் செலுத்தும்போது தரம் குறைந்த பொருளை உங்களிடம் தந்தால், அது சரியான கணக்கின்படி தரப்பட்டது தான் எனக் கருதி நீங்கள்
அதை பெறுவதில்லை. மாறாக, அது குறைபாடான பொருள் என்று கருதியே அதை ஏற்றுக்கொள்வீர்கள்.
அப்படியிருக்க, உங்களுக்கு விருப்பமில்லாத பொருளை அல்லாஹ்விற்காகத்
தர்மம் செய்ய எவ்வாறு நீங்கள் விரும்புகிறீர்கள்? நீங்கள் அல்லாஹ்வின்
உரிமையை நல்ல உயர்ந்த பொருளிலிருந்து நிறைவேற்ற வேண்டாமா? நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
உண்ணுவதிலும், உடுத்துவதிலும், பயன்படுத்துவதிலும் எதை நாம் விரும்புகின்றோமோ அது போன்றதையே
பிறருக்கு வழங்குவது சிறந்ததாகும். நாம் பயன்படுத்த விரும்பாத, முகம் சுளிக்கின்ற எப்பொருளையும் யாருக்கும் கொடுப்பது சிறந்ததல்ல.
நாம் இதுவரை ஒரு பொருளை பயன்படுத்தி வந்தோம். தற்போது, அதைவிட சிறந்த ஒன்றை வாங்கிய பிறகு இந்த பொருளைப் பிறருக்கு
வழங்குவது தவறல்ல. நாம் உடுத்தி வந்த ஆடைகள் தற்போது நமக்கு பற்றவில்லை (உடல் பெருத்துவிட்டது)
எனும்போது அதை பிறருக்கு வழங்குவது தவறல்ல.
உண்ணவே முடியாத கெட்டுப்போன உணவுப்பொருள், உடுத்தவே முடியாத அளவிற்கு கிழிந்துபோன ஆடை, பயன்படுத்தவே முடியாத அளவிற்கு உடைந்துபோன பொருள் ஆகியவற்றை
பிறருக்கு வழங்குவது மிகப்பெரிய தவறு. இதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
சுருங்கக்கூறின், நமக்கு ஏதேனும் ஒன்றை
பிறர் தரும்போது, நாம் முகம் சுளிப்போமானால், அப்படிப்பட்டப் பொருளை நாமும் பிறருக்கு வழங்கக்கூடாது.
கஷ்ட நஷ்டங்களின்போது
மேலும்,
தாங்களே உணவை விரும்பக்கூடிய
நிலையிலும்கூட வறியவருக்கும், அநாதைக்கும், கைதிக்கும் உணவு வழங்கிக்
கொண்டிருந்தார்கள். திருக்குர்ஆன்:- 76:8
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, ( يَا رَسُولَ اللَّهِ أَىُّ الصَّدَقَةِ أَعْظَمُ
أَجْرًا ) “அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மை தரும் தர்மம் எது?” எனக் கேட்டார்.
நபியவர்கள்,
( أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ شَحِيحٌ، تَخْشَى
الْفَقْرَ وَتَأْمُلُ الْغِنَى ) “நீர் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருள் தேவை உடையவராகவும், வறுமையை அஞ்சி, செல்வத்தை எதிர் பார்ப்பவராகவும் இருக்கும்போது செய்யும் தர்மமே
(அதிக நன்மையுள்ளதாகும்.) நூல்:- புகாரீ-1419,
முஸ்லிம்-1870
யர்மூக் யுத்தக்களத்தில் நபித்தோழர்கள் பலரும் எதிரிகளின்
தாக்குதலுக்குள்ளாகி காயமுற்று வீழ்ந்துகிடந்தனர். அப்போது பிறர், காயமுற்றவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக விரைந்தனர்.
தூரத்தில் ஒரு முனகல் சப்தம் அருகே சென்று பார்க்கிறார்.
அங்கே, ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் கடும் தாகத்தோடு
காணப்படுகின்றார்.
தண்ணீர் பையை கொண்டு சென்று முனகல் சப்தத்துடன்
கிடந்த ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்களின் வாயின் அருகே திறந்தபோது அவருக்கு சற்று
தொலைவில் இன்னொருவரின் முனகல் சப்தம் கேட்கிறது. அப்போது ஹாரிஸ் (ரலி) அவர்கள் சப்தம்
கேட்ட திசையை நோக்கி அவரின் தாகத்தை போக்குமாறு சைகை செய்தார்.
தண்ணீர் பையோடு அவருக்கு அருகே சென்ற பார்த்தபோது, அங்கே இக்ரிமா பின் அபூஜஹ்ல் (ரலி) அவர்கள் கடுமையான தாகத்தோடு
காணப்பட்டார். அவருக்கு சற்று தொலைவில் இருந்து இன்னொருவரின் முனகல் சப்தம் கேட்கிறது.
அப்போது இக்ரிமா (ரலி) அவர்கள் அவரின் தாகத்தைப் போக்குமாறு சைகை செய்தார்.
தண்ணீர் பையோடு ஓடிச் சென்று பார்த்தால் அங்கே, அயாஷ் பின் ரபீஆ (ரலி) அவர்கள் தாகத்தோடு காணப்பட்டார். அவரின்
வாயின் அருகே தண்ணீரை கொண்டு சென்றபோது அயாஷ் (ரலி) அவர்கள் மரணமடைந்துவிட்டார்.
இக்ரிமா (ரலி) அவர்களை நோக்கி, தண்ணீர் பையோடு ஓடிச் சென்று பார்த்தால் அவரும் மரணமடைந்துவிட்டார்.
ஹாரிஸ் (ரலி) அவர்களுக்கு தண்ணீர் கொடுக்கலாம் என்று அங்கே ஓடிச் சென்று பார்த்தால்
அவரும் மரணமடைந்துவிட்டார். நூல்:- அல்மஃகாஸீ இமாம் அல்வாகிதீ
தனக்கு தேவை இருந்தபோதும் பிறரை முன்னிலைப்படுத்துவதே
நற்குணம் ஆகும்.
தாம் சிரமப்பட்டதைப் போன்று பிறர் சிரமப்படுவதைக்
கண்டால், ஓடிச் சென்று அவர்களுக்கு உதவுவதே இறைநம்பிக்கை
என்று இஸ்லாம் கற்றுத்தருகிறது.
“தனக்கு வந்தால் இரத்தம், பிறருக்கு வந்தால் தக்காளி சட்னி" என்பது ஒரு பழமொழி அல்ல, மாறாக ஒரு பேச்சுவழக்கு சொற்றொடர். ஒருவர் தனக்கு ஏற்படும் கஷ்டங்களை
(இரத்தம்) தீவிரமானதாகவும், ஆனால் பிறருக்கு ஏற்படும் அதே கஷ்டங்களை (தக்காளி
சட்னி போல சாதாரணமாக) அலட்சியப்படுத்துவதையும் கிண்டலாகக் குறிக்கிறது. இது சுயநலத்தையும், இரக்கமின்மையையும் வெளிப்படுத்தும் ஒரு சொற்றொடராகும்.
அறிந்தவர்கள் சிலர் தங்களுக்கு பணத்தேவை வரும்போது
குடியே முழுகப்போவதுபோல் புலம்பி நம்மிடம் பணம் பெற்று சென்றுவிட்டு, தராமல் இழுக்கடிப்பதுடன், நமக்கு பணத்தேவை உள்ளதை
கூறும்போது "அடடா அப்படியா என்னப்பா செய்வது ஏதாவது செய்யலாம்னா என்கிட்டயும்
இப்ப எதுவுமில்லையே, சரி முயற்சிசெய்வோம்" என்று சாதாரணமாக சொல்லும்
நேரம்…. அந்த மொமன்ட்தான். என்னபன்றது பட்டபின்தானே அவர்களைப்பற்றி புரிகிறது.
தினசரி வாழ்வில், நிறைய மனிதர்கள் இதே
மனநிலையில் தான் இருக்கிறார்கள். தாங்கள் மட்டுமே, சிரமப்படுவதாகவும், மற்றவர்கள் சிரமப்படாமல்
கொல்லை புறத்தில் இருந்து பணத்தையோ, வெற்றியையோ பறித்து வருவதை போலவே, இருந்து, இந்த பழ(புது) மொழியை, தினமும் சொல்ல வைத்துவிடுகிறார்கள்.
நம் வீட்டுப்பிள்ளை சேட்டை செய்தால், "என்ன துரு துருவென்று இருக்கின்றான் பாருங்கள்?" என்று மெச்சிக் கொள்கிறோம். அதேவேளை, பக்கத்து வீட்டுப்பிள்ளை ஏதேனும் சேட்டை செய்துவிட்டால், "இவன் பிறருக்கு எவ்வளவு தொந்தரவு தருகிறான்? இவனால் எனக்கு நிம்மதி போய்விட்டது" என்று சினம் கொள்கிறோம்.
இவ்வாறான மனநிலை மிகவும் மோசமானது.
பாவத்தை வெறுப்பது
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒரு வாலிபர்
வந்து, ( يَا رَسُولَ اللَّهِ ، ائْذَنْ لِي بِالزِّنَا ) "நாயகமே! விபச்சாரம் செய்ய எனக்கு அனுமதி கொடுங்கள்" என்றார்.
நபித்தோழர்கள் இதைக்கேட்டு கோபமுற்றனர். அப்போது நபியவர்கள் அவரை தமக்கு அருகில் அழைத்து, ( أَتُحِبُّهُ لِأُمِّكَ ؟ ) "யாராவது உன் தாயுடன் விபச்சாரம் செய்வதை நீ விரும்புவீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், ( لَا وَاَللَّهِ ، جَعَلَنِي اللَّهُ فَدَاكَ )
" அல்லாஹ் என்னை உங்களுக்கு
அர்ப்பணமாக்குவானாக! நான் இதை விரும்ப மாட்டேன்" என்று கூறினார். நபியவர்கள், ( وَلَا النَّاسُ يُحِبُّونَهُ لِأُمَّهَاتِهِمْ ) "(இதே போல்) யாரும் தமது தாயுடன் விபச்சாரம் செய்வதை
விரும்பமாட்டார்கள்" என்று கூறினார்கள்.
நபியவர்கள்,
( أَفَتُحِبُّهُ لِابْنَتِك؟ )
"யாராவது உன் மகளுடன்
விபச்சாரம் செய்வதை விரும்புவீரா?" என்று கேட்டார்கள். அவர், " அல்லாஹ் என்னை உங்களுக்கு
அர்ப்பணமாக்குவானாக! இதை நான் விரும்ப மாட்டேன்"
என்றார். நபியவர்கள், ( وَلَا النَّاسُ يُحِبُّونَهُ لِبَنَاتِهِمْ ) "(இதே போல்) யாரும் தமது மகளுடன் விபச்சாரம் செய்வதை
விரும்ப மாட்டார்கள்" என்று கூறினார்கள்.
நபியவர்கள்,
( أَفَتُحِبُّهُ لِأُخْتِكَ؟ ) "யாராவது உன் சகோதரிடன் விபச்சாரம் செய்வதை விரும்புவீரா?" என்று கேட்டார்கள். அவர், " அல்லாஹ் என்னை உங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக! இதை நான் விரும்ப
மாட்டேன்" என்றார். நபியவர்கள், ( وَلَا النَّاسُ يُحِبُّونَهُ لِأَخَوَاتِهِمْ ) "(இதே போல்) யாரும் தமது சகோதரியுடன் விபச்சாரம் செய்வதை
விரும்ப மாட்டார்கள்" என்று கூறினார்கள்.
நபியவர்கள்,
( أَفَتُحِبُّهُ لِعَمَّتِكَ؟ ) "யாராவது உன் தந்தையின் சகோதரியுடன் விபச்சாரம் செய்வதை
விரும்புவீரா?" என்று கேட்டார்கள். அவர், " அல்லாஹ் என்னை உங்களுக்கு
அர்ப்பணமாக்குவானாக! இதை நான் விரும்ப மாட்டேன்"
என்றார். நபியவர்கள், ( وَلَا النَّاسُ يُحِبُّونَهُ لِعَمَّاتِهِمْ ) "(இதே போல்) யாரும் தமது தந்தையின் சகோதரியுடன் விபச்சாரம்
செய்வதை விரும்ப மாட்டார்கள்" என்று கூறினார்கள்.
நபியவர்கள்,
( أَفَتُحِبُّهُ لِخَالَتِك؟ )
"யாராவது உன் தாயின்
சகோதரிடன் விபச்சாரம் செய்வதை விரும்புவீரா?" என்று கேட்டார்கள். அவர், "அல்லாஹ் என்னை உங்களுக்கு
அர்ப்பணமாக்குவானாக! இதை நான் விரும்ப மாட்டேன்" என்றார். நபியவர்கள், ( وَلَا النَّاسُ يُحِبُّونَهُ لِخَالَاتِهِمْ ) "(இதே போல்) யாரும் தமது தாயின் சகோதரியுடன் விபச்சாரம்
செய்வதை விரும்ப மாட்டார்கள்" என்று கூறினார்கள்.
பிறகு நபியவர்கள் அந்த வாலிபர்மீது கை வைத்து, ( اللَّهُمَّ اغْفِرْ ذَنْبَهُ وَطَهِّرْ قَلْبَهُ ، وَحَصِنْ
فَرْجَهُ ) "இறைவா! (இதுவரை செய்த) இவருடைய பாவத்தை மன்னிப்பாயாக! (விபச்சாரத்தின்
எண்ணத்தை விட்டும்) இவருடைய உள்ளத்தை பரிசுத்தப்படுத்துவாயாக! இவருடைய இனஉறுப்பைப்
பாவங்களை விட்டும் பாதுகாப்பாயாக!" என்று பிராத்தித்தார்கள். அதன் பிறகு அந்த
வாலிபரின் வாழ்க்கையில் விபச்சாரத்தை போன்ற வெறுப்பூட்டும் செயல் வேறு எதுவும் இருந்ததில்லை.
அறிவிப்பாளர்:- அபூஉமாமா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத்
தம் வீட்டுப் பெண்களை பிறர் பார்த்துவிடக் கூடாது
என்பதில் மிகுந்த அக்கறை கொள்கின்ற பலரும்,
தாம் அடுத்த வீட்டு
பெண்களை பார்க்கக்கூடாது என்பதில் அக்கறை கொள்வதில்லை. தம் வீட்டு பெண்களை கற்புக்கரசிகளாகவும்
மற்ற பெண்கள் ஒழுக்கமற்றவர்களாகவும் எண்ணுகின்ற மனோபாவம் மிகவும் மோசமானது.
தொலைக்காட்சியில் நடைபெற்ற “நீயா? நானா?” என்ற நிகழ்ச்சியில் "லிவிங் டுகெதர்"
குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது அதில் கலந்துகொண்ட ஒரு அம்மா, "தன் மகன் பிற பெண்ணோடு லிவிங் டு கெதர் என்ற உறவில் இருக்கின்றான்.
அது எனக்கு தெரிந்தும் நான் அதைப் பற்றி பெரிதுப்படுத்தவில்லை" என்றாள். உடனே
நெறியாளர், "உங்கள் மகன் அவ்வாறான உறவில் இருப்பது உங்களுக்கு
தவறாக படவில்லை. என்றாலும், இதே உறவில் உங்கள் பெண் பிள்ளை இருந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?" என்று கேட்டார். அப்போது அந்த அம்மா மௌனியாகிப் போனாள்.
இதுதான் இன்றைய மக்களின் யதார்த்த மனநிலை. அதாவது, "தன்னுடைய மகன் பிற பெண்களின் கெடுத்தால் பரவாயில்லை. ஆனால், தம்முடைய பெண் பிள்ளையை பிறர் கெடுத்துவிடக் கூடாது" இது
எவ்வாறு முழுமையான ஒழுக்க நிலையாகும்?
பாவத்தில் பிறரைப் பார்க்காதே!
இவர் தொழுகிறார்; நோன்பு நோற்கிறார்; ஹஜ் உம்ராவை நிறைவேற்றுகிறார்; தேவையுடையோருக்கு வாரி வழங்குகிறார்; இன்ன பிற நற்செயல்களையெல்லாம் தாராளமாக செய்கிறார். அதனால் நாமும்
அவரைப் போன்றே நற்செயல்களை தாராளமாக செய்ய வேண்டும் என்று எண்ணலாம்; இதுகுறித்து பிறரிடம் போதிக்கலாம்.
ஆனால், நம்மில் பலரும் வரதட்சனை வாங்குதல், மது குடித்தல், வட்டிக்கு வாங்குதல் போன்ற பாவச்செயலை செய்யும்போது, அதை நியாயப்படுத்துவதற்கு, "ஊர் உலகத்தில் யாரும்
செய்யாத ஒன்றையா நான் செய்துவிட்டேன்?"
அதாவது, "இது போன்ற தவறை மக்கள் எல்லோரும் பரவலாக செய்கிறார்கள்; அதையே நானும் செய்கிறேன்" என்று செய்கின்ற தவறை நியாயப்படுத்துவது
சரியல்ல.
சுருங்கக்கூறின், நாம் நல்லறங்களில் ஈடுபடுவதற்கு, பிறரை முன்னுதாரணமாக பார்க்கலாம்; பாவக் காரியங்களில் ஈடுபடுவதற்கு, பிறரை முன்னுதாரணமாக பார்க்கக்கூடாது.
இத்தகைய எண்ணம் கூடாது
"எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு இரண்டு கண்களும் போகட்டும்" என்பது தமிழ் பழமொழி
பொறாமைக் குணம், பழிவாங்கும் எண்ணம்
கொண்டவர்கள் தான் இத்தகைய எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்தப் பழமொழிக்குப் பின்னால்
ஒரு கதையே இருக்கிறது.
ஒருவன் இறைவனிடம் நீண்ட காலமாக பிரார்த்தித்துக்கொண்டிருந்தான்.
அவ்வாறு அவன் ஒருமுறை பிரார்த்தித்துக்கொண்டிருந்தபோது, இறைவன், "என் அடியானே! இப்போது என்னிடம் நீ எதைக் கேட்டாலும்
உனக்கு வழங்குவேன். ஆனால், உன்னுடைய உறவினர் இன்னாருக்கு அதைவிட இரு மடங்கு
வழங்குவேன். அதனால், நீ எதைக் கேட்டாலும் நன்கு யோசித்து கேள்!" என்று கூறினான். அதன்
பிறகு அவன் நன்கு யோசித்துவிட்டு, "இறைவா! எனக்கு இந்த இரண்டு கண்களில் ஒரு கண் இருந்தாலே
பார்வைக்கு போதுமானதாக இருக்கும். ஒரு கண்ணின் பார்வை பறிப்போகட்டும்" என்று பிரார்த்தித்தான்.
அதாவது,
"எனக்கு கொஞ்சம் சேதாரம்
ஏற்பட்டாலும் பரவாயில்லை. என்னுடைய உறவினரில் இன்னாருக்கு இரு மடங்கு அதிகமாக சேதாரம்
ஏற்பட வேண்டும்" என்பதே அந்தப் பிரார்த்தனையின் நோக்கம். ஆக, இந்த எண்ணம் மிக மோசமானது.
பிறரும் நம்மைப் போன்றவர்களே என்றெண்ணி, அவர்களுக்கு உதவி உபகாரங்கள் புரிந்து, இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது
ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment