எண்ணம்போல்…
إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ
بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا
(நடுவர்களாகிய) அவ்விருவரும்
நல்லிணக்கத்தை நாடினால் அல்லாஹ்வும் (தம்பதிகளாகிய) அவ்விருவருக்கிடையே நல்லிணக்கத்தை
ஏற்படுத்துவான். அல்லாஹ் (அனைவரையும்) மிகவும் அறிந்தவனாகவும், நன்குணர்ந்தவனாகவும் இருக்கின்றான். திருக்குர்ஆன்:-
4:35
உலகின் மிகச்
சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே. அவ்வெண்ணங்கள் நல்ல எண்ணங்களாக இருக்க
வேண்டும். அவ்வாறு நம்முடைய மனதில் உண்டாகும் நல்ல எண்ணங்களே நமது வாழ்க்கையை
திறம்பட உருவாக்கும் அரும்பெரும் கருவியாக திகழ்கின்றது.
மனிதனின்
எண்ணமும் கண்ணாடியும் ஒன்று. கண்ணாடி மனிதனின் பிம்பத்தை எவ்வாறு பிரதிபலிக்கிறதோ
அதே போலத்தான் நம்முடைய எண்ணமும் வாழ்க்கையும். நம் உள்ளத்தில் எண்ணுகின்ற நல்ல
உயர்ந்த எண்ணங்களே நம்முடைய வாழ்க்கையை வளமாக்குகின்றது.
நாம் எண்ணும்
எண்ணங்களே நமது வாழ்வாக அமைகிறது. நாம் இன்று வாழும் வாழ்க்கை நேற்றைய நமது
எண்ணங்களின் தொகுப்பே! சூரியக்கதிரை குவியாடி (லென்ஸ்) மூலம் குவித்து ஒரு
காகிதத்தின்மீது காட்டினால் காகிதம் புகைந்து எரியத் தொடங்கும். நமது எண்ணங்களின்
வலிமையும் அப்படித்தான். எண்ணங்களை ஒருமுகப்படுத்தினால் எண்ணங்கள் செயல்கள் ஆகும்.
இதைத்தான்
சான்றோர்கள் “எண்ணம் போல்
வாழ்க்கை” என்று கூறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( وَإِنَّمَا لِكُلِّ
امْرِئٍ مَا نَوَى ) ஒவ்வொரு
மனிதனுக்கும் அவன் எண்ணியது தான் கிடைக்கும். அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள் நூல்:-
புகாரீ-1
நபிகள்
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ
طَلَبِ الدُّنْيَا حَلَالًا اسْتِعْفَافًا عَنْ الْمَسْأَلَةِ ، وَسَعْيًا عَلَى أَهْلِهِ ، وَتَعَطُّفًا
عَلَى جَارِهِ ، لَقِيَ اللَّهَ تَعَالَى يَوْمَ الْقِيَامَةِ وَوَجْهُهُ مِثْلَ
الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ . وَمَنْ طَلَبَ الدُّنْيَا حَلَالًا ، مُكَاثِرًا ،
مُفَاخِرًا مُرَائِيًا لَقِيَ اللَّهَ تَعَالَى وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ ) ஒரு மனிதன் பிறரிடம் கை நீட்டாமல் வாழ்வதற்கும் குடும்பத்தார்களை
காப்பாற்றவும் அண்டை வீட்டார்களுக்கு உபகாரம் செய்வதற்கும் எண்ணம் கொண்டு ஹலாலான வழியில்
பணம் சம்பாதித்தால் மறுமைநாளில் அவன் பௌர்ணமி இரவிலுள்ள பரிபூரண சந்திரனை அவன் முகம்
மிளிர்ந்த நிலையில் இறைவனை தரிசிப்பான்.
மாறாக, தான் மிகப்பெரும்
செல்வந்தராக வேண்டும், பிறரிடம் தற்பெருமை காண்பிக்க வேண்டும், தமக்கு பெயர் கிடைக்க
வேண்டும் என்ற நோக்கத்தோடு ஹலாலான வழியில் பணம் சம்பாதித்தால்கூட அவன் மறுமைநாளில்
இறைவனை கடுமையாக கோபமுற்ற நிலையில் தான் தரிசிக்க நேரிடும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல்:- ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, அல்ஹில்யா இமாம் அபூநயீம், மிர்காத்துல் மஃபாதீஹ் ஷரஹு மிஷ்காத்
எண்ணங்கள் நல்லவிதமானதாக
அமைந்துவிட்டால் அதற்கு நற்கூலி கிடைக்கிறது. எண்ணங்கள் சீர்கெட்டுவிடும்போது பாவத்தைச்
சுமக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
போர்ச் செல்வங்கள் வேண்டாம்
ஷத்தாத் பின் அல்ஹாத் (ரலி) அவர்கள் கூறியதாவது. கிராமவாசிகளில் ஒருவர் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து "தங்களை நான் (இறைத்தூதர் என்று) நம்புகிறேன்.
தங்களை நான் பின்பற்றுகிறேன்" என்று கூறினார். பிறகு நடைபெற்ற போரிலும் கலந்துகொண்டார்.
அந்த போரில் கிடைத்த போர்ச் செல்வங்களை (ஙனீமத்) பங்கிடப்பட்டது. நபித்தோழர்கள்
அதில் அவருக்குக்குரிய பங்கை எடுத்துக்கொண்டு வந்து அவரிடம் கொடுத்தனர். அவர் அதை எடுத்துக்கொண்டு
அண்ணலாரிடம் வந்து "இது என்ன?" என்று கேட்டார். அண்ணலார் "(போரில் கிடைத்ததில்)
உமது பங்காக நான் வழங்குவது" என்று கூறினார்கள்.
அதற்கு அவர், "இதற்காக உங்களை (நபியாக ஏற்று) நான் பின்பற்றவில்லை. மாறாக, நான் இங்கே (தமது
தொண்டைப்பகுதியின் பக்கம் சைகை செய்து இங்கு) அம்பால் (போரில்) தாக்கப்பட்டு இறந்து, சொர்க்கம் செல்ல வேண்டும்
என்பதற்காகவே உங்களை (நபியாக) ஏற்றுப் பின்பற்றுகிறேன்" என்று கூறினார்.
அண்ணலார், ( إِنْ
تَصْدُقِ اللَّهَ يَصْدُقْكَ ) "நீர் அல்லாஹ்வைப்பற்றி (நம்பி சொல்கின்றவற்றில்)
உண்மையாளராக இருந்தால், அல்லாஹ் உன்னை (உயிர்த்தியாகியாக மரணமடையச் செய்து) உண்மைப்படுத்துவான்"
என்று கூறினார்கள். அதன்பிறகு நடைபெற்ற ஒரு போரில் அந்த கிராமவாசியும் கலந்து கொண்டு
இறந்துபோனார். அவர் சைகை செய்த இடத்தில் அம்புபட்டு அவர் இறந்த நிலையில் அண்ணலாரிடம்
தூக்கி வரப்பட்டார்.
அவரைக் கண்ட அண்ணலார், ( صَدَقَ اللَّهَ فَصَدَقَهُ ) "அவர் அல்லாஹ்வை நம்பினார். அல்லாஹ்வும் அவரை உண்மைப்படுத்தினான்"
என்று கூறினார்கள். பின்னர் அண்ணலார் அம்மனிதருக்கு தமது போர்வையை சவ ஆடையாக அணிவித்தார்கள்.
நூல்:- நசாயீ-1927
வீட்டிலேயே
இருந்தாலும்
நவ்ஃபல் பின்த் உம்மு
வரக்கத் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் பத்ருப் போருக்குப்
போகும்போது நான், ( يَا
رَسُولَ اللَّهِ ائْذَنْ لِي فِي الْغَزْوِ مَعَكَ أُمَرِّضُ مَرْضَاكُمْ لَعَلَّ اللَّهَ
أَنْ يَرْزُقَنِي شَهَادَةً ) "நாயகமே! போரில் தங்களுடன்
கலந்துகொள்ள எனக்கும் அனுமதியுங்கள். போரில் காயமடைபவர்களுக்கு நான் பணிவிடை செய்வேன்.
(அதனால்) எனக்கும் (ஷஹாதத் எனும்) வீரமரணம் அடையும் நற்பெயர் கிடைக்க அல்லாஹ் அருள்செய்வான்"
என்று கூறினேன்.
அதற்கு நபியவர்கள், ( قِرِّي فِي بَيْتِكِ فَإِنَّ
اللَّهَ تَعَالَى يَرْزُقُكِ الشَّهَادَةَ )
"நீ போருக்கு வர வேண்டாம்.
வீட்டிலேயே தங்கியிரு. வீரமரணம் அடையும் நற்பேற்றை அல்லாஹ் உனக்குத் தருவான்"
என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் கூறுகிறார்:
உம்மு வரக்கத் (ரலி) அவர்களுக்கு ஒரு அடிமை ஆணும், ஒரு அடிமைப் பெண்ணும் இருந்தனர். அவ்விருவர் குறித்து
உம்மு வரக்கத் (ரலி) அவர்கள் என் மரணத்திற்குப் பிறகு எனது அடிமைகள் விடுதலை ஆகிவிடுவார்கள்
என்று (முதப்பர் எனும்) சாசனம் எழுதி வைத்திருந்தார். (விரைவில் விடுதலை ஆகவேண்டும்
என்றெண்ணிய அவ்விரு அடிமைகளும் சேர்ந்து ஒரு நாள்) இரவு உம்மு வரக்கத் (ரலி) அவர்கள்
தூங்கிக் கொண்டிருக்கும்போது முகத்தைப் போர்வையால் மூடி (மூர்ச்சையடையச் செய்து) கொலை
செய்துவிட்டு ஓடிவிட்டனர்.
இதையறிந்த (ஜனாதிபதி)
உமர் (ரலி) அவர்கள் காலையில் மக்களிடம், ( مَنْ كَانَ عِنْدَهُ مِنْ هَذَيْنِ عِلْمٌ أَوْ مَنْ رَآهُمَا فَلْيَجِئْ
بِهِمَا )
"அவ்விருவரும் பற்றிய
விவரம் யாரேனும் அறிந்திருந்தால் அல்லது அவர்களை யாரேனும் பார்த்தால் அவர்களைப் பிடித்துவாருங்கள்"
என்று அறிவித்தார்கள். பின்னர் அவ்விருவரும் பிடித்துவரப்பட்டு மரணதண்டனை வழங்கப்பட்டனர்.
மதீனாவில் மரண தண்டனை வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். நூல்:- அபூதாவூத்-500, முஸ்னது அஹ்மத்
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் சொன்னபடியே உம்மு வரக்கா (ரலி) அவர்கள் தாம் எண்ணியவாறு (ஷஹாதத் எனும்) வீரமரணம்
அடைந்தார்கள்.
சமாதானம் ஏற்படுத்த வேண்டும்
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் ஒரு தம்பதிகளுக்கு இடையில் பிணக்கு
ஏற்பட்டு தீர்வு காண சிலர் ஓரிடத்தில் ஒன்றுகூடினர். ஆனால் அவர்களுக்குள் ஒரு நல்லிணக்க
தீர்வு ஏற்படவில்லை.
இதனை அறிந்த ஜனாதிபதி அவர்கள் அந்த பஞ்சாயத்துக்காக ஒன்று கூடியவர்களை அழைத்து
அவர்களுக்கு ஆளுக்கொரு சாட்டையடிக் கொடுத்துவிட்டு "ஒரு தம்பதியரின் பிணக்கு நீங்கி
அவர்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் நீங்கள் ஒன்று கூடிப் பேசினால், அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான் என்று திருக்குர்ஆன் (4:35) பேசுகிறது. அதனால்
நீங்கள் நல்லெண்ணத்துடன் பஞ்சாயத்து பேசுங்கள்" என்று கூறி அவர்களை விரட்டினார்கள்.
மீண்டும் அவர்கள் ஒன்று கூடி பஞ்சாயத்துப் பேசியபோது அந்த தம்பதியருக்கு இடையில் இணக்கம்
நிலவியதைக் கண்டார்கள்.
கணவன் மனைவிக்கு இடையே
ஏற்படும் சண்டை சச்சரவினால் அவர்களுக்கு மத்தியில் நிரந்தர (தலாக் எனும்) பிரிவு ஏற்பட்டுவிடும்
என்று அவ்விருவரின் குடும்பத்தினர் அஞ்சினால் அவனுடைய குடும்பத்தாரில் ஒரு நடுவரையும்
அவளுடைய குடும்பத்தாரில் ஒரு நடுவரையும் அனுப்பி, அவ்விருவரும் இணைந்து
அவர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து, அவர்கள் தம்பதிகளாக
நீடிப்பது நல்லதா? அல்லது பிரிந்து விடுவது
நல்லதா? என்பதை கண்டறிந்து எது நன்மையோ
அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்தச் சூழ்நிலையில் அவ்விருவரும் நல்லிணக்கத்தை
நாடினால், அல்லாஹ்வும் அந்தத் தம்பதிகளுக்கிடையே
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவான் என்கிறது தலைப்பில் காணும் திருவசனம்.
இரண்டும் சாத்தியமானது
எங்கள் இறைவா! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை அளிப்பாயாக. மறுமையிலும் நன்மை
அளிப்பாயாக. நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக எனறு கேட்போரும் அவர்களில் உள்ளனர்.
திருக்குர்ஆன்:- 2:201
துன்யா (செல்வம்) இருந்தால், தீன் (மார்க்கப்பற்று) இருக்காது; தீன் இருந்தால் துன்யா இருக்காது என்று பலரும் தப்பெண்ணெம் கொள்கிறார்கள்.
அவ்வாறல்ல. இரண்டையும் பெற்ற நல்லடியார்கள் பலர் உண்டு.
"ஒன்றை இழந்தால் ஒன்றைப் பெறமுடியும்" என்ற
சொல்வழக்கு எல்லாவற்றுக்கும் பொருந்தாது. இம்மை மறுமை இரண்டிலும் எல்லா நலவுகளைப் பெற்று
நிம்மதியாக வாழ வேண்டும் என்று எண்ணம் கொண்டு இவ்வாறு பிரார்த்தியுங்கள் என்று திருக்குர்ஆன்
கற்றுத்தருகிறது.
உமர் (ரலி) அவர்கள் ( اَللَّهُمَّ ارْزُقْنِي
شَهَادَةً فِي سَبِيلِكَ، وَاجْعَلْ مَوْتِي فِي بَلَدِ رَسُولِكَ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ ) "இறைவா! உன் தூதருடைய ஊரில் (அதாவது, மதீனா
மாநகரில்) உயிர்த்தியாகம் செய்யும் வாய்ப்பை எனக்கு அளிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். நூல்:- புகாரீ-1890
அன்னை ஹஃபசா (ரலி) அவர்கள் கூறியதாவது. என் தந்தை உமர் (ரலி) அவர்கள் "யா
அல்லாஹ்! உன்னுடைய பாதையிலேயே நான் கொல்லப்பட
வேண்டும்; உன்னுடைய இறைத்தூதரின்
புனித நகரிலேயே (மதீனாவில்) மரணமாகும் பாக்கியம் எனக்குக் கிடைக்கப் பெற வேண்டும்"
என்று பிரார்த்தித்தார்கள். அப்போது நான், ( وَاَنَّی یَکُونُ هَذَا؟ ) "அது எவ்வாறு (இரண்டும் ஒரே இடத்தில்) சாத்தியமாகும்?" என்று கேட்டேன். அதற்கவர்கள், ( یَأتِی بِهِ اللّٰهُ اِذَا شَاءَ ) "அல்லாஹ் நாடினால்
அதையும் செய்துகாட்டுவான்" என்று கூறினார்கள். நூல்:- பத்ஹுல் பாரீ, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-1, பக்கம்-645
26 துல்ஹஜ் ஹிஜ்ரி 23 (கி.பி. 644) அன்று மஸ்ஜிதுந் நபவியில் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள்
பஜ்ரு தொழ வைப்பதற்கு தக்பீர் கட்டியவுடன் பைரோஸ் என்ற பாரசீக அடிமை உமர் (ரலி) அவர்கள்
மீது பாய்ந்து குறுவாளால் ஆறு இடங்களில் குத்தினான். அதன் மூலமாக வீர மரணமடைந்தார்கள்.
நூல்:-அல்ஃபாரூக்
பொருத்தமான ஜோடி
இராக் நாட்டின் ஒரு
பகுதியான திக்ரித் நகரின் ஆட்சியாளராக இருந்த நஜ்முத்தீன் ஐயூப் (ரஹ்) அவர்கள் நீண்ட
காலமாக திருமணம் முடிக்காமல் இருந்தார். ஏன் திருமணம் முடிக்காமல் இருக்கின்றீர்கள்
என்று ஒருமுறை அவரது சகோதரரான அஸதுத்தீன் ஷிராக்கோ அவரிடம் வினவினார்.
நஜ்முத்தீன்: எனக்கு
பொருத்தமான யாரும் இன்னும் கிடைக்கவில்லை.
சகோதரன் : நான் உனக்கு
திருமணம் பேசவா?
நஜ்முத்தீன்: யாரை?
சகோதரன்: ஸல்ஜூக்கிய
மன்னரின் மகள் அல்லது பிரதம அமைச்சரின் மகள்
நஜ்முத்தீன்: அவர்கள்
எனக்கு தகுதியானவர்கள் அல்லர்.
சகோதரன்: ஆச்சர்யம்
மேலிட்டவராக, அப்படியாயின் யார் தான் உனக்கு
பொருத்தமானவள்?
நஜ்முத்தீன்: எனக்கு
ஒரு மனைவி வேண்டும். அவள் என்னை சொர்க்கத்திற்கு அழைத்துச்செல்ல வேண்டும். அவள் மூலம்
ஒரு பிள்ளையை நான் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த பிள்ளை இளமை பருவத்தை அடையும் வரை
சிறந்த முறையில் அவள் பயிற்றுவித்து, ஒரு குதிரை வீரனாக உருவாக்க வேண்டும். அந்த இளைஞன்
ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பைதுல்முகத்திஸை மீட்டு, முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
சகோதரன்: இப்படி ஒருவர்
கிடைப்பது சாத்தியமா?
நஜ்முத்தீன்: உண்மையான
எண்ணம் (இக்லாஸ்) இருந்தால் நிச்சயம் அல்லாஹ் அருள்பாலிப்பான்.
அன்றொரு நாள் நஜ்முத்தீன்
(ரஹ்) அவர்கள் திக்ரித் பள்ளியில் அமர்ந்துகொண்டு ஒரு ஆன்மீக
ஞானிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு யுவதி அங்கு வந்து, அந்த ஆன்மீக ஞானிடம் பேச வேண்டும் என்று திரைக்கு பின்னால் இருந்துகொண்டு அனுமதி
வேண்டினாள்.
நஜ்முத்தீன்
(ரஹ்) அவர்களிடமிருந்து விடைப்பெற்ற அந்த ஆன்மீக ஞானி
அந்த யுவதியுடன் உரையாடல் துவங்கினார்.
ஆன்மீக ஞானி: ஏன்
உன்னை பெண் கேட்டு வந்த இளைஞனை வேண்டாம் என்றாய்?
யுவதி: ஆம்! அந்த
இளைஞன் அழகிலோ, அந்தஸ்த்திலோ குறைந்தவனல்லன் என்பது உண்மை. ஆனால், அவன் எனக்கு பொருத்தமானவன் அல்லன்.
ஆன்மீக ஞானி: நீ
எப்படிப்பட்டவரை எதிர்பார்க்கிறாய்?
யுவதி: என்னை சொர்க்கத்திற்கு
அழைத்துச் செல்கின்ற ஒரு கணவனாக, அவன் இருக்க வேண்டும். அவன் மூலம் நான் ஒரு பிள்ளையை
பெற்றுக்கொள்ள வேண்டும். அந்தப் பிள்ளை ஒரு குதிரை வீரனாக உருவாகி, பைதுல்முகத்திஸை
முஸ்லிம்களுக்கு மீட்டுக் கொடுக்க வேண்டும்.
இவர்களின் சம்பாஷனை
நஜ்முத்தீன் (ரஹ்) அவர்கள் செவிகளில் விழுந்தது. உடனே அன்னார் அந்த ஆன்மீக ஞானியை அழைத்து
அந்தப் பெண்ணை தான் மணமுடிக்க விரும்புவதாக மிகுந்த ஆனந்தத்துடன் கூறியபோது, அந்தப் பெண் இந்த
ஊரின் ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று ஆன்மீக ஞானி சொன்னார்.
அவள் தான் தனக்கு
மனைவியாக வருவதற்கு மிகவும் தகுதி படைத்தவள் என்பதை தெரிந்துகொண்டவர் அந்தப் பெண்ணை
மணமுடிப்பதற்கு பூரண விருப்பம் தெரிவித்தார். மன்னரின் மகளும் வேண்டாம். அமைச்சரின்
மகளும் வேண்டாம் என மறுதலித்த நஜ்முத்தீன் (ரஹ்) அவர்கள் ஒரு ஏழை வீட்டுப் பெண்ணை திருமணம்
முடித்துக்கொண்டார்.
இருவருக்கும் ஒரு
ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பெரியவனாகி மிகச்சிறந்த வீரனாக உருவெடுத்து, முஸ்லிம்களின்
கையில் மீண்டும் பைதுல்முகத்திஸை பெற்றுக்கொடுத்தார். அந்தக் குழந்தை வேறு யாருமல்லன்.
அவர் தான் மாவீரர் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள்.
நாம் அல்லாஹ்வுக்காக
கொண்ட தூய்மையான எண்ணங்கள் நிச்சயம் ஒரு நாள் சாத்தியப்படும்.
மதீனாவில்
நல்லடக்கம்
எகிப்து நாட்டின்
பேரறிஞர் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் சிந்தனைச் சிற்பி முஹம்மத் அல்கஸ்ஸாலி
(ரஹ்) அவர்கள் (1917-1996) மதீனா நகரில் மரணமடைய வேண்டும் என்று விரும்பினார்கள். பிரார்த்தனையும்
செய்துகொண்டிருந்தார்கள்.
இதை அன்னாரின் குடும்பத்தினரும்
மாணவர்களும் அறிந்து வியப்படைந்தனர். ‘இது கிடைப்பது சிரமம். ஏனெனில், யார் எங்கே மரணிப்பார்
என்று யாருக்கும் தெரியாது?’ என்றனர்.
ஆனால், அல்லாஹ் நாடிவிட்டான்.
1996 ஆம் ஆண்டு சவூதியின் ரியாத் நகரத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு அன்னார் அழைக்கப்பட்டார்கள்.
புறப்படத் தயாரானார்கள்.
மாணவர்களோ செல்லவேண்டாம் என்று தடுத்தனர். காரணம் அந்தக் கருத்தரங்கில் மாற்றுக்கருத்துடையோரும்
பங்கேற்பார்கள். அன்னாரை அவர்கள் தாக்கிப் பேசலாம். அதனால் அன்னார்
உணர்ச்சிவயப்படலாம். அது அன்னாரின் உடல் நலத்திற்கு
நல்லதல்ல. குறிப்பாக மருத்துவர்கள் அன்னார், “உணர்ச்சி வயப்படக்கூடாது” என்று அறிவுறுத்தியிருந்தனர்.
யாருடைய சொல்லையும்
கேட்காமல் அன்னார் கருத்தரங்கில் பங்கேற்கப் புறப்பட்டார்கள். கருத்தரங்கில் ஒருவர், “நீங்கள் நபிவழிக்கு
எதிரானவர்” என்றொரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அன்னார் இந்த அவதூறைக்
கேட்டவுடன் உணர்ச்சி வயப்பட்டார்கள். நபிவழி குறித்த தனது நிலைப்பாட்டையும் அதன்மீது
தனக்கு இருக்கும் பற்றையும் உணர்வுப்பூர்வமாக பேசிக்கொண்டிருக்கும்போதே அவர்களுக்கு
நெஞ்சுவலி ஏற்பட்டது.
“வணக்கத்திற்குரியவன்
அல்லாஹ் ஒருவனே என்ற முழக்கத்தை மேலோங்கச் செய்வதே எமது இலக்கு” இதுதான் அவர்களின்
இறுதிச் சொற்கள். அன்னாரின் உயிர் பிரிந்தது.
அமைச்சர் அப்துல்லாஹ்வின்
முயற்சி மற்றும் அறிஞர் பின் பாஸ் அவர்களின் ஃபத்வா ஆகியவற்றின் அடிப்படையில் இமாமின்
உடல் மதீனா நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
டாக்டர் ஸக்லூல் நஜ்ஜார்
கூறுகிறார்: “உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அன்னாரின் ஜனாஸா தொழுகையில் பங்கேற்பதற்காக
மக்கள் சிறப்பு விமானங்களில் பறந்து வந்தனர். மஸ்ஜிதுந் நபவீ தொழுகையாளிகளால் நிரம்பி
வழிந்தது. அன்னாரை அடக்கம் செய்வதற்கு நாங்கள் ‘ஜன்னத்துல் பகீவு’க்கு சென்றோம். அப்போதும்
பள்ளிவாசல் மக்கள் கூட்டத்தால் நிரம்பியே இருந்தது.”
“ஜன்னத்துல் பகீவு-ல்
அடக்கம் செய்வது தொடர்பான பணிகளின் நிர்வாகி எங்களிடம் கூறினார்: அன்னாருக்காக நாங்கள்
மண்ணறையை தோண்டும் இடமெல்லாம் கடினமாகவே இருந்தன. கடைசியாக இங்கே தோண்டினோம். இது, திருக்குர்ஆன் விரிவுரையாளர்
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களால் உரிமை விடப்பட்ட நஃபிவு (ரஹ்) மற்றும் இமாம்
மாலிக் (ரஹ்) ஆகிய இருவருடைய மண்ணறைக்கும் மத்தியில் உள்ள இடமாகும். இங்குதான் தரை
தோண்டுவதற்கு இலகுவாக இருந்தது. இங்குதான் இமாம் முஹம்மத் அல்கஸ்ஸாலி (ரஹ்)
அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள். ஆதாரம்:- அல்மஸ்ராவி, இதழ். (04.08.2023)
நடத்தையை
மாற்றிக்கொள்ளாத வரை
மனிதர்கள் (தங்கள்
தீய நடத்தையைவிட்டு) தங்களை மாற்றிக்கொள்ளாத வரை நிச்சயமாக அல்லாஹ்வும் (அவர்களுக்குப்
புரிந்த அருளை) மாற்றி விடுவதில்லை. திருக்குர்ஆன்:- 13:11
நாம் புரிகின்ற தவறுகள்
மற்றும் புகை, மது, மாது, சூது போன்ற கெட்டப் பழக்கங்களை கைவிட்டு திருந்தி, கண்ணியமாக வாழ நாம் எண்ணம் கொண்டால் மட்டுமே, அல்லாஹ் நல்லுதவி
புரிவான். மாறாக, என்னுடைய தவறான பழக்கங்களை கைவிட இன்னும் அல்லாஹ்
நாடவில்லை என்றும் நான் ஐவேளை தொழுகையைப் பேண, நோன்பு நோற்க, ஹஜ் உம்ரா செய்ய மற்றும் இன்னபிற நல்லறங்கள் புரிய அல்லாஹ் இன்னும்
நாடவில்லை என்றும் வேதாந்தம் பேசுவதும் சரியல்ல. நாம் எண்ணம் கொண்டு அதற்காக முயற்சிக்காத
வரை அல்லாஹ்வின் நல்லுதவி நமக்கு கிடைக்கப்போவதில்லை.
மனிதனின் நல்ல எண்ணங்கள்
அவனது வாழ்க்கையை சீராக்கும். தற்பெருமை, ஆணவம் போன்ற ஷைத்தானிய
எண்ணங்கள் அவனை அழித்துவிடும்.
எனவே, நாம்
வாழ்வில் நல்ல எண்ணங்களை மேற்கொண்டு நல்லறங்கள் புரிய, அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக!
ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது
ஹைதர் அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment