கல்விப்புரட்சி செய்து புதுயுகம் படைப்போம்!
يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءُ وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ
أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ
அல்லாஹ் தான் நாடுகின்றவர்களுக்கு ஞானத்தை வழங்குகிறான். ஞானம்
வழங்க பெற்றவர் ஏராளமான நன்மைகள் வழங்கப் பெற்றவர் ஆவார். அறிவுடையவரைத் தவிர (மற்ற
எவரும் இதைச்) சிந்திப்பதில்லை. திருக்குர்ஆன்:- 2:269
மெளலானா அபுல்கலாம் ஆசாத் (ரஹ்) அவர்கள் இந்திய தந்தைக்கும், அரபு தாய்க்கும் புனித மக்காவில் 1888 நவம்பர் 11 ஆம் நாள் பிறந்தார். எனவே, அந்த நாளை (நவம்பர் 11 ஆம் தேதி) இந்தியா தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது.
மெளலானா அவர்கள் மக்காவில் மார்க்கக் கல்வி பயின்றவர். குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதியவர். இந்திய சுதந்திரத்திற்கு பெரும் பாடுபட்ட தலைவர்களுள் ஒருவர் ஆவார். காங்கிரஸ் கட்சி வரலாற்றில் மிக இளம் வயதில் (35 வயதில்) தலைவரானவர். இந்திய துணைக்கண்ட வரலாற்றில் மிக முக்கிய காலமான 1940-1949 வரை காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர்.
சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் (1947-1958). இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரியான IIT- யை 1951 ல் நிறுவியவர். UGC என்ற பல்கழைக்கழக மானியக் குழுவை 1954 ல் வடிவமைத்தவர். IIS என்ற இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனத்தை உருவாக்கியவர். சாகித்ய அகாடமியை உருவாக்க வழியமைத்தவர்.
இந்தியாவின் மிக உயர்வான பாரத ரத்னா விருது 1992 ல் நீண்ட கால தாமதத்திற்கு பின் வழங்கப்பட்டது.
இந்தியாவின் ஒட்டுமொத்த கல்வி வளர்ச்சிக்கு அடிப்படை ஸ்தாபகராக இருந்த மெளலானா அவர்களை கண்ணியப்படுத்தி,கெளரப்படுத்தும் வகையில் அவர்களின் பெயரில் பல்வேறு கல்வி நிறுவனங்களை அரசு நிறுவி இருக்கிறது.
பின்தங்கிய சமூகத்தின் கல்வி தரம் மேம்படுத்துவதற்காக THE MINISTRY OF MINORITY AFFAIRS OF THE CENTRAL GOVERNMENT 1989 ஆம் ஆண்டு MOULANA AZAD EDUCATION FOUNDATION ஐ நிறுவியது
MOULANA AZAD MEDICAL COLLEGE, NEW DELHI,
MOULANA AZAD NATIONAL INSTITUTE OF TECHNOLOGY, BHOPAL
MOULANA AZAD NATIONAL URDU UNIVERSITY, HYDERABAD
MOULANA AZAD CENTER FOR ELEMENTRY AND SOCIAL EADUCATION, DELHI
UNIVERSITY MOULANA AZAD COLLEGE, KOLKATA
MOULANA AZAD LIBRARY, ALIGARH
MUSLIM UNIVERSITY , ALIGARH, NEW DELHI
MOULANA AZAD STADIUM, JAMMU
JAMIA MILLIA ISLAMIA (delhi)ன் நிறுவனர்
மனிதன் முழுமை பெற்ற மனிதனாக பரிணமித்திட தன்னை படைத்த இறைவனைப் பற்றி தெரிந்துக்கொள்ள தேவையான அறிவைத் தேடிக்கொள்வது மிக அவசியமாகும். அறிவு தான் அனைத்திற்கும் அடிப்படை. இறைவன் வாக்களித்துள்ள மறுமை வாழ்வில் வெற்றியடையவும், இந்த உலகில் எப்படி வாழ வேண்டும் என்று என்பதையும் வலியுறுத்தும் கருவி தான் அறிவு.
அதைத்தான் எழுதப் படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு
இறைவன் கற்றுக்கொடுத்தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அன்றைய தினம் (ஐந்தாம் நூற்றாண்டு) மனித மிருகங்களாக வாழ்ந்த
மக்களுக்கு, கற்றுக்கொடுத்து
அவர்களை அறிவும் ஆற்றலும் நிறைந்த சமூகமாக மாற்றிக் காட்டினார்கள்.
பொதுவாக மதம் என்றால் சிந்தனைக்கும், கேள்விக்கும் இடமில்லாத சடங்குகளின் தொகுப்பு என்ற வரையறைகளையெல்லாம்
கடந்து அறிவையும் சிந்தனையும் ஆதரிக்கின்ற, வரவேற்றுகின்ற, தூண்டுகின்ற ஒரே மார்க்கம் இஸ்லாமாகும்.
ஒரு குறிப்பிட்ட சாராரைத் தவிர மற்றவர்கள் கற்கக்கூடாது என்ற
நடைமுறை கராராக கடைப்பிடிக்கப்பட்டு வந்த அஞ்ஞான காலத்திலேயே கற்பது ஒவ்வொரு முஸ்லிமான
ஆண் பெண் அனைவரின் மீதும் கட்டாய கடமையாகும் என்றும், கற்பிப்பதும் அதற்கு துணை நிற்பதும் கடமை என்றும் கூறி,
கல்வி அறிவை கடமையாக்கியது இஸ்லாம்.
இஸ்லாமியப் பார்வையில்...
ஓதுவீராக படைத்த உங்களது இறைவனின் திருப்பெயரால் (96:1)
என்று திருக்குர்ஆன் உலகத்தைப் பார்த்து சொன்ன முதல்
கட்டளையே "மனிதா! நீ சிந்தி அறிவொளி பெறு!" என்பதுதான்.
இஸ்லாமிய வரலாற்றில் பத்ர் யுத்தம் என்பது முதல் தற்காப்பு யுத்தம் ஆகும். அந்த பத்ர் யுத்த களத்தில் கைதிகளாக பிடிபட்ட
இறைமறுப்பாளர்கள் விடுதலை பெற ஏதேனும் பொருள் தர வேண்டும் அல்லது எழுதப் படிக்கத் தெரியாத
இஸ்லாமிய சிறுவர்களுக்கு எழுதப் படிக்க கற்றுத் தர வேண்டும் என்று கூறி அறிவொளியின்
அவசியத்தை ஆழ் மனதில் பதிய வைத்தார்கள் அறிவுக்கடல் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள்.
போதும் என்ற மனம் பெற்று இருப்பதை பாக்கியமாகவும், மேலும் மேலும் வேண்டும் என்ற பேராசையை தீய குணமாகவும்
அவமானமாகவும் சித்தரிக்கும் திருக்குர்ஆன் "கல்வியை மட்டும் அதிகப்படுத்த வேண்டும்"
(20:114) என்று பிரார்த்தனை செய்யும்படி
கூறுகிறது.
கல்வி, அறிவு, ஆராய்ச்சி, சிந்திப்பது இவை சம்பந்தமாக திருக்குர்ஆனில் மொத்தம் 580 இடங்களில் கூறப்பட்டுள்ளன.
மக்காவிலிருந்து மதீனாவிற்கு வந்த அருமை நாயகம் (ஸல்) அவர்கள்
முதல் வேலையாக இறையில்லத்தை கட்டி முடித்தார்கள். பிறகு நபியவர்கள் செய்த முக்கிய வேலை
இறைஇல்லத்தை ஒட்டியே ஒரு திண்ணை பள்ளிக்கூடத்தை நிறுவினார்கள். அதிலிருந்து தான் ஆயிரக்கணக்கான
அறிவு இமயங்கள் உருவானார்கள்.
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின் பள்ளிக்கூடத்தில் அனைத்து
நபித்தோழர்களும் கலந்து கொண்டு கல்வி கற்றனர். அவர்களில் ஒருவருக்கு ஒருநாள் வகுப்பில்
கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டாலும் அதை மற்றவரிடம், நபியவர்கள் நேற்று என்ன போதித்தார்கள் என்று கேட்டறிந்து கொள்வார்.
இதுதான் அன்றைய நபித்தோழர்களின் நிலைப்பாடு.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஹுத் போரில் கொல்லப்பட்டவர்களை இரண்டிரண்டு பேராக ஒரே ஆடையில் (கஃபன் எனும்) சவக்கோடி அணிவித்துவிட்டு, ( أَيُّهُمْ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ ) “இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” எனக் கேட்பார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக்காட்டப்பட்டதும், அந்த ஒருவரது உடலை மண்ணறையின் உட்குழியில் முதலில் வைப்பார்கள். நூல்:- புகாரீ-1347
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் யுத்த களங்களில் கொல்லப்பட்ட
தன் தோழர்களை நல்லடக்கம் செய்வதில் கூட கல்வியாளருக்கே முதலிடம் அளித்தார்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருநாள்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தமது அறை ஒன்றிலிருந்து புறப்பட்டு (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள்
நுழைந்தார்கள். அங்கே வட்டமாக இரு குழுவினர் அமர்ந்திருப்பதை கண்டார்கள். ஒரு குழுவினர்,
குர்ஆனை ஓதிக்கொண்டும் இறைவனிடம் பிரார்த்தித்துக்
கொண்டுமிருந்தனர். மற்றொரு குழுவினர், கல்வியைக் கற்றுக் கொண்டும் கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருந்தனர்.
அப்போது நபியவர்கள், ( وَإِنَّمَا
بُعِثْتُ مُعَلِّمًا ) "நான் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவே அனுப்பப்பட்டுள்ளேன்" என்று கூறிவிட்டு,
அக்(கல்விக்)குழுவினரோடு அமர்ந்து கொண்டார்கள்.
நூல்:- இப்னுமாஜா-225 தாரிமீ-352,
முஸ்னதுத் தயாலிசீ
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ خَرَجَ فِي طَلَبِ الْعِلْمِ فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ حَتَّى
يَرْجِعَ ) ஒருவர் கல்வியைத் தேடி புறப்பட்டுச் சென்றால்,
அவர் திரும்பும்வரை அல்லாஹ்வின் பாதையில் இருக்கிறார்.
அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2568
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( يَا أَبَا ذَرٍّ لأَنْ تَغْدُوَ فَتَعَلَّمَ آيَةً مِنْ كِتَابِ
اللَّهِ خَيْرٌ لَكَ مِنْ أَنْ تُصَلِّيَ مِائَةَ رَكْعَةٍ ) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அபூதர்! நீர் காலையில் சென்று
அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு வசனத்தை கற்றுக்கொள்வது நூறு ரக்அத்கள் தொழுவதைவிட
உமக்குச் சிறந்ததாகும். நூல்:- இப்னுமாஜா-215
பேரறிஞர் அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். ( تَعَلَّمُوا الْعِلْمَ فَإِنَّكُمْ صِغَارٌ قَوْمٍ وَتَكُونُونَ
كِبَارَهُمْ غَدًا ) கல்வி கற்றுக்கொள்ளுங்கள். (இன்று) மக்களில்
நீங்கள் சிறியவர்களாக இருந்தாலும், நாளை அவர்களில் நீங்கள்
பெரியவர்களாக ஆகிவிடுவீர்கள். நூல்:- ஜாமிஉ பயானில் இல்மு இமாம் இப்னு அப்துல் பர்
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ( تَعَلَّمُوا الْعِلْمَ؛ فَإِنَّ تَعْلِيمَهُ لِلَّهِ خَشْيَةً
وَطَلَبَهُ عِبَادَةً، وَمُذَاكَرَتَهُ تَسْبِيحٌ وَالْبَحْثَ عَنْهُ جِهَادٌ،
وَتَعْلِيمَهُ لِمَنْ لَا يَعْلَمُهُ صَدَقَةٌ ) அறிவைக் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், அல்லாஹ்வுக்காக அறிவைக் கொள்வது என்பது இறையச்சமிக்கதொரு செயலாகும்.
அதனைத் தேடுவது ஓர் வணக்கமாகும். அதைப்பற்றி ஒருவருக்கொருவர் நினைவூட்டிக் கொள்வது
இறைதியானம் ஆகும். அதைப் பற்றி ஆராய்ச்சி செய்வது அறப்போர் ஆகும். அறியாதவருக்கு அதை
கற்றுக்கொடுப்பது தர்மமாகும். நூல்:- ஹில்யா இமாம் அபூநயீம், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-3 பக்கம்-233
அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( لَا يَزَالُ الْمَرْءُ عَالِمًا مَا طَلَبَ الْعِلْمَ، فَإِذَا ظَنَّ
أَنَّهُ قَدْ عَلِمَ فَقَدْ جَهِلَ ) ஒருவன் கல்வி கற்கும் காலமெல்லாம் அறிஞனாகவே இருப்பான்.
தான் (எல்லாவற்றையும்) கற்றுக்கொண்டதாக அவன் நினைத்துவிட்டால், (அதாவது, இனிமேல், எதையும் கற்க தேவையில்லை என்று நினைத்து, கற்பதை விட்டும் ஒதுங்கிவிட்டால்) அவன் மூடனாகிவிடுவான். நூல்:- அல்மஜாலிஸத்து
வஜவாஹிருல் இல்ம் ( المجالسة وجواهر العلم )
ஒரு சமுதாயம் உயர வேண்டுமானால் உலகத்தின் நடைமுறை கல்வியில்
அது முன்னிலைக்கு வர வேண்டும். அறிவாளிகள் நிறைந்த சமுதாயமாக இருந்தால், அந்தச் சமுதாயத்திற்கு நாட்டில் ஒரு தனி அந்தஸ்து
கிடைத்துவிடுகிறது.
மேலைநாட்டினர் கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு கருவில் கல்விமுறையைக் கற்றுக்கொடுத்து வருகின்றனர்.
19 ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்த "Dr. ஃபிரோபல்" சிறு
குழந்தைகள் இயற்கையிலேயே விளையாடுவதில் ஆர்வம் காட்டுவதை உற்று நோக்கினார். குழந்தைகளுக்கு
விளையாடும்போதே அறிவை வளர்க்க வேண்டும் என்பதற்கு தான் விளையாட்டு வழிக் கல்விமுறை
என்பதை அறிமுகப்படுத்தினார். அதுதான் இன்று "Kinder garten" (ஜெர்மனிய மொழியில் குழந்தைகளின் தோட்டம்) என்று அழைக்கப்படுகிறது.
முன்னேற்றத்திற்கு காரணம்
இரண்டாம் உலகப்போரில் பேரழிவுக்கு தள்ளப்பட்ட ஜப்பான் என்று
தொழில் புரட்சியின் உலகில் தனி இடத்தை பதித்துவிட்டதென்றால், அதன் கல்வித் தாகமே காரணமாகும்.
இந்த உலகில் நான்கில் ஒருவர் முஸ்லிம். ஒரு இந்துவுக்கு இருவர்
முஸ்லிம். ஒரு யூதருக்கு 100 என்ற அளவில் முஸ்லிம்கள்
இருக்கின்றனர். அப்படி இருந்தும் 14 மில்லியன் தொகை கொண்ட
யூதர்கள் செல்வாக்கும் அதிகாரமும் மிக்கவர்களாகவும், 160 மில்லியன் தொகை கொண்ட முஸ்லிம்கள் அதிகாரமற்றவர்களாகவும் ஆனது
ஏன்? எப்படி நிகழ்ந்தது?
என்ற கேள்விக்கு கல்வி தான் காரணம் என்று கூறி விவரிக்கிறார்
Dr.ஃபரூக் சலீம்.
இந்த உலகில் வெறும் 1 கோடியே 40 லட்சம் பேர் கொண்ட
யூதர்கள் கடந்த 150 ஆண்டுகளில் 180 நோபல் விருதுகளை வென்றுள்ளனர். 160 கோடிக்கும் மேலாக உள்ள முஸ்லிம்களில் வெறும் மூன்றே
மூன்று பேர் மட்டுமே தான் நோபல் விருதுகளை வென்றுள்ளனர்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சிக்மன்ட் சோம்ஸ்கி, வில்லியம் ஜேம்ஸ் கின்ஸ், கார்ல் மார்க் போன்ற அறிஞர்கள் யூதர்கள் தான். ஜார்ஜ் சொராஸ்
4 கோடி டாலர்களையும்,
வால்டர் அன்னம் பெர்க் 200 கோடி டாலர்களையும் இவர்களைப் போன்ற பல யூதர்கள்
கல்விக்காகவும் நவீன் ஆராய்ச்சிக்காகவும் பல கோடி டாலர்களையும் நன்கொடையாக அளித்துள்ளனர்.
ஐ.நா.வின் புள்ளிவிவரப்படி இந்த உலக முழுவதிலுமுள்ள கிறிஸ்தவர்களின்
90 சதவீதம் பேர் கல்வியறிவு
பெற்றுள்ளனர். மேலும், அவர்களில் 98 சதவீதம் பேர் தொடக்கக் கல்வி முறையை முடித்திருக்கிறார்கள்.
அவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் அவர்களின் கல்வி கற்றோர் எண்ணிக்கை 100 சதவீதம் எட்டியுள்ளது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் கல்வியறிவு பெற்றவர்கள்
எண்ணிக்கை 40 சதவீதம் தான் தொட்டுள்ளது.
மேலும், முஸ்லிம்களில் 50 சதவீதம் குறைவானவர்களே தொடக்கக் கல்வியை முடித்திருக்கிறார்கள்.
முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ள நாடுகளின் நிலைமையோ இன்னும் படுமோசமாக உள்ளது.
உலக முழுவதிலுமுள்ள கிறிஸ்தவர்களின் 40 சதவீதம் பேர் உயர்கல்வி முடித்து பல்கலைக்கழகங்களில்
பட்டங்கள் பெற்றுள்ளனர். ஆனால், முஸ்லிம்களோ இரண்டு
சதவீதம் பேர்கூட உயர்கல்வியை முடிப்பதில்லை.
கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளை 10 இலட்சம் பேருக்கு 4000 விஞ்ஞானிகளும் 10 ஆயிரம் தொழில்நுட்ப வல்லுனர்களும் உள்ளனர். முழு நேர ஆராய்ச்சியாளர்கள் கிறிஸ்துவ
உலகில் இலட்சக்கணக்கில் உள்ளனர்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் 10 இலட்சம் பேருக்கு 230 விஞ்ஞானிகளும், 50 தொழில்நுட்ப வல்லுனர்களும் உள்ளனர். உலக அளவில் முஸ்லிம்களில் முழு நேர ஆராய்ச்சியாளர்கள்
35 பேர் மட்டுமே உள்ளனர்.
ஆராய்ச்சிப் பணிக்காக கிறிஸ்துவ உலகில் மொத்த வருமானத்தில் ஐந்து
சதவீதத்திற்கும் அதிகமாக செலவிடப்படுகிறது. ஆனால், முஸ்லிம் உலகில் மொத்த அரபு நாடுகளின் மொத்த வருமானத்தில் 0.2 சதவீதம் தான் செலவிடப்படுகிறது.
நமது நாட்டில்கூட கிறிஸ்தவர்களுக்கு தனி மரியாதை கிடைத்திருக்கிறதென்றால்,
அதற்கு அந்தச் சமுதாயம் கல்வியறிவை பெறுவதில் முன்னிலையில்
இருக்கின்றது என்பதுதான் காரணம். புகழ்பெற்ற
பத்திரிக்கையாளர் குல்திப் நய்யார், "முஸ்லிம்கள் தொழில் நுட்பக் கல்வியில் 200 ஆண்டுகள் பின்தங்கி உள்ளனர்" என்று கூறுகிறார்.
கடுமையான முயற்சி
அமெரிக்காவில் யூத சிறுபான்மையினர் நடத்துகிற பள்ளிக்கூடங்கள்
பல உண்டு. அவற்றில் யூதர் அல்லாத ஒரு மாணவன் வெற்றியடைய 35 சதவீத மதிப்பெண்கள் போதுமானவை. ஆனால், ஒரு யூத மாணவன் வெற்றி அடைவதற்கு 50 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற கடுமையான
நிபந்தனையை அவர்கள் வைத்திருப்பதாக மௌலானா வஹீதுத்தீன் கான் அவர்கள் தமது நூல் ஒன்றில்
குறிப்பிட்டுள்ளார்கள்.
இத்தகைய கடுமையான பயிற்சியின் விளைவாகவே யூதர்களில் பெரும் அறிஞர்களும்,
விஞ்ஞானிகளும் தோன்றினர். அதன் விளைவு அவர்களை மதிக்க
வேண்டிய சூழ்நிலைக்கு மற்றவர்கள் ஆட்பட்டனர். அறிவுத்திறன் பெற்ற யூதர்கள் இன்று உலகத்தை
மற்றவர்கள் மூலம் ஆளுகின்றனர். (Jews role the word by proxy)
உலக அளவில் யூதர்களும், இந்திய அளவில் பிராமணர்களும் சிறுபான்மையினர் தான். என்றாலும்,
உலக அளவிலோ நமது நாட்டிலோ யூதர்கள், பிராமணர்கள் சலுகைகள், இடஒதுக்கீடுகள் கேட்டு கோஷங்கள் எழுப்பி போராடியிருக்கிறார்களா?
இல்லை. காரணம், அவர்கள் பெரும் படிப்புகள் படித்து பட்டங்கள் பெற்றார்கள். அதனால்
உயர் பதவிகளும், ஆட்சி அதிகாரங்களும்
அவர்களைத் தேடிச் சென்று கொண்டுள்ளன. இந்த சிறுபான்மையினர் இன்று இந்த உலகையே ஆளுகின்றனர்.
முஸ்லிம் சமுதாயம் இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் சலுகைகளையும்,
அனுதாபங்களையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
காரணம், போதிய கல்வியறிவு இல்லாமையே!
முஸ்லிம் சமுதாயத்தில் I.A.S, I.P.S, I.F.S. துறைகளில் படித்தவர்கள் அதிகம் இல்லாதபோது, அந்த பதவிகளில் போதுமான அளவு முஸ்லிம்களை அரசு ஏன்
நியமிக்கவில்லை? என்று போராடி,
கூப்பாடு போடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
வெறுமனே கோஷங்கள் எழுப்பி, போராட்டங்கள் நடத்துவதால் மட்டும் வெற்றி கண்டுவிட
முடியாது. முஸ்லிம் சமுதாயம் கல்வியறிவில் முன்னேறினால் மட்டும்தான் வெற்றி காணலாம்
என்பதை விளங்க வேண்டுமே!
நம்முடைய நிலை
அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா போன்ற நாடுகளின் 7 சதவீத உற்பத்திப் பொருள்கள் அரபுநாடுகளில் விற்பனையாகின்றன.
தேவைப்படும் பொருள்களை தாமே தயாரிக்கும் அருகதை அரபுநாடுகளுக்கு இதுவரை உண்டாகவில்லை.
அரபு நாடுகளில் எண்ணெய் வளம் இருந்தும் அதனை சுத்திகரிக்க போதிய வழிமுறை தெரியாமல்
மேலை நாடுகளின் உதவியை நாடி போக, உதவி என்ற பெயரில்
உள்ளே நுழைந்து அவர்களின் அழுகிப்போன கலாச்சாரத்தையும் பரப்பிவிட்டு, அரபு நாடுகளின் எண்ணை வளத்திற்கும் அவர்கள் நிர்ணயிப்பதுத்தான் விலை என்றாகிவிட்டது. தற்போது அமெரிக்காவின் நாணயத்தை (டாலர்) வைத்தே சவூதி அரேபியாவின்
நாணயத்தை (ரியால்) மதிப்பீடு செய்யப்படுகிறது. (அதாவது, அமெரிக்கா டாலர் விலை உயர்ந்தால், சவூதி ரியால் விலை உயரும்.
அது சரிந்தால், இதுவும் சரிந்துவிடும்.)
இன்றைய முஸ்லிம் சமுதாயம் கல்வியறிவில் மிகவும் பின்தங்கிப்
போய், அடிமை வாழ்க்கை வாழ்வதற்கு
காரணம், இஸ்லாம் கல்விக்கு அளித்திருக்கும்
முக்கியத்துவத்தை உணராததேயாகும்.
முஸ்லிம் சமுதாயத்தின் முந்தைய தலைமுறையினர் அதாவது,
இன்றைய பெற்றோர்களாக இருப்பவர்களில் பெரும்பாலோர்
உயர்கல்வி கற்காதவர்களாக இருப்பதன் விளைவு தான், தமது குழந்தைகளின் கல்வியில் அக்கறையின்றி இருக்கின்றனர். இதன்
காரணமாகத்தான் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தும் மக்களில் முஸ்லிம்களே முதலிடத்தில்
இருக்கின்றனர்.
பள்ளிக்கல்வியை இடைநிறுத்தும் குழந்தைகளில் முஸ்லிம்களின் குழந்தைகள்
7.67 சதவீதம் ஆவர். S.C.
சமூகத்தினரின் குழந்தைகள் 5.96 சதவீதம் ஆவர். S.T. சமூகத்தாரின் குழந்தைகள்
5.6 சதவீதம் ஆவர் என்பது அரசு
அறிக்கையாகும்.
படிக்கும் பருவத்தில் பணிக்கு அமர்த்தப்படுவதால் சிறுவர்களின்
பெற்றோர் தற்காலிகமாக மாத ஊதியம் பெறலாம். அச்சிறுவர்களின் ஒட்டிய வயிற்றை நிரப்புவதற்கு
வழிவகை செய்யலாம். ஆனால், அச்சிறுவர்களின் அறிவுக்கண்
திறக்க வழிவகை செய்யாததால் காலமெல்லாம் அவர்களை சிறுமைப்படுத்தி விடுகின்றனர். ஒவ்வொரு
சிறுவர் சிறுமியர் உள்ளும் ஒரு சாதனையாளர் ஒளிந்திருக்கக்கூடும்.
கையில் கிடைக்கும் நெல்லிக்கனிக்காக காலத்தில் பழுக்கும் கண்ணியக்
கனியை பெற்றோர் இழக்கின்றனர். அதனால், பெற்றோருக்கு மட்டும் இழப்பல்ல; பெற்றப் பிள்ளைகளுக்கும், சமுதாயத்திற்கும்,
நாட்டுக்கும் இழப்புதான்.
கல்விக்கு ஈடு இணையற்ற செல்வம் வேறொன்றுமில்லை. கல்வியறிவு இல்லாத
ஒருவன் தனது திறமையால் வாழ்வில் உயர்ந்து நிற்கலாம். ஆனால், அவன் கற்றறிந்தால் இன்னும் அல்லவா உயர்ந்திருப்பான்?
அவனுடைய வாழ்க்கையின் பல கட்டங்களில் இதை உணர்ந்திருப்பான்.
தன்னிடம் கல்வியறிவு இல்லாததின் பாதிப்பை பல சந்தர்ப்பங்களை அவன் விண்ணப்பிக்கவே செய்வான்.
எழுதப்படிக்கத் தெரிந்து கொள்வதே இந்தியாவின் கல்வியறிவு என்று
சொல்லப்படுகிறது. இந்தக் குறைந்த கல்வியறிவு பெறுவதில்கூட பிற சமயத்தவர்களைவிட முஸ்லிம்கள்
மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள் என்று இந்தியா டுடே (16-8-2006) வெளியிட்டுள்ளது.
ஒரு சமுதாய முன்னேற உயர் கல்விதான் ஆணிவேர். அதிலும் தரமான உயர்
கல்வியைப் பெற வேண்டும். கல்வியில் இடைநிறுத்தம் செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்திட
வேண்டும். கல்விதான் தங்களை மேம்படுத்தும் என்ற சிந்தனை முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள
பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் வரவேண்டும்.
அறிவுக்குத் தாய் நூல் என்று கருதப்படும் திருக்குர்ஆன் வழிகாட்டியாக
இருந்தும் கடந்த 400 ஆண்டுகளாக உலகளாவிய
முஸ்லிம்களின் முன்னேற்றம் தடைபட்டு சிறுகச் சிறுக பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.
துரிதமாக வளர்ந்த அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளின்
கல்வியறிவோடு போட்டி போட முடியாமல் ஸ்தம்பித்து போய் நின்று விட்டது.
இன்றைய காலகட்டத்தில் ஒரு "அரேபியன்" அல்லது
"ஷேக்" என்றால் நாகரிகமற்ற காட்டுமிராண்டி; மூளையில்லாத சுல்தான் என்று மேலைநாட்டவரும், ஒரு முஸ்லிம் என்றால், ஹோட்டல் காரர், கசாப்பு கடைக்காரர், டைலர், குதிரை வண்டிக்காரர் என்று இந்தியாவிலும் ஒரு தவறான
எண்ணம் பரவலாக இருக்கிறது.
பாதிக்கப்பட்டுள்ளோம்
இஸ்லாமியக் கவிஞர் அக்பர் இலாஹாபாதி, "கொடியோன் ஃபிர்அவ்ன் தனது ஆட்சிக்கு எதிரி உண்டாகி
விடக்கூடாது என்பதற்காக பிறக்கும் ஆண் குழந்தைகளை கொலை செய்தான். ஆனால், கல்வி நிலையங்களை நிறுவி, தனது கொள்கையை போதித்திருந்தால்
அவனுடைய நோக்கம் நிறைவேறி இருக்கும். கொலை குற்றம் புரிய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது"
என்று கூறுகிறார்.
முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கி விட்டதாலும், உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் முஸ்லிம்களால் நடத்தப்படாததாலும் பெரும் பாதிப்பை
இந்த சமுதாயம் சந்தித்து விட்டது.
1861 ஆம் ஆண்டு டானியல் பிளீஸ், வில்லியம் தாம்சன் போன்ற கிறிஸ்தவ பாதிரியார்கள் முஸ்லிம்கள்
அதிகம் வாழும் பகுதிகளில் கல்வி நிலையங்களை ஆரம்பிக்க முனைந்தனர்.
1) அதில் பணிபுரியும் ஆசிரியர்கள் கிறிஸ்துவ மிஷனரிகளில்
பணிபுரிபவர்கள்.
2) முஸ்லிம் மாணவர்களை மதமாற்றம் செய்வதுடன் அவர்களையும்
தங்கள் பணியில் இணைத்துக்கொள்வது என்பது நோக்கம்.
இத்திட்டத்தின்படி துருக்கி, இராக், எகிப்து, சிரியா, லெபனான் போன்ற முஸ்லிம் நாடுகளில் மேற்கத்திய கல்வி நிலையங்களை
ஆரம்பித்து, முஸ்லிம் மாணவர்களின் குணாதிசயங்களில்
ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய, அவர்களை மேலைநாட்டவர்களின்
அடிமைகளாக மாற்றி வெற்றி கண்டனர்.
மதச்சார்பின்மை, தேசியவாதம், அரபினவாதம் என்றெல்லாம் பேசி இஸ்லாத்திற்கும் அரசியலுக்கும்
சம்பந்தமில்லை என்று கூறி (ஹிஜ்ரீ-1342 ரஜப்-28) 3-3-1924 அன்று துருக்கியில் உலக முஸ்லிம்கள் ஒரே தலைமையின்
கீழ் இயங்கி வந்த கிலாஃபாவை (தலைமைத்துவம்) அழித்தனர் போதிய கல்வியறிவு இல்லாத மேற்கத்தியர்களின்
அடிவருடிகள்.
கிருத்துவர்கள் நடத்தும் கல்வி நிலையங்கள் பெரும்பாலும் மதப்பிரச்சாரம்
செய்யும் கருவிகளாகவே செயல்படுகின்றன. ஓசையின்றி தங்களுடைய திட்டங்களை செயல்படுத்த
வருகின்றனர். என் பிள்ளை கான்வென்ட்டில் படிக்கிறான் என்று பெருமையாக பேசும் பெற்றோர்
"Convent"
(கான்வென்ட்) என்பது
"கிறிஸ்துவப் பெண் துறவிகள் வாழும் இடம்" என்று பொருளாகும் என்பதை அறிவார்களா?
முஸ்லிம்கள் உயர்கல்வி கற்று, உயர் பதவிக்கு செல்லாததால், அரசின் எத்தனையோ உரிமைகளையும் சலுகைகளையும் இழந்துள்ளனர்.
இந்திய அரசியல் நிர்ணயச் சட்டப் பிரிவு 30, சிறுபான்மையினர் தங்களுக்கென கல்வி நிலையங்களை நிறுவவும், அவற்றின் உரிமையைப் பற்றியும் பேசுகிறது. ஆனால், 1-5-2002 அன்று "சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஷ்" என்பவர், "இது முழு உரிமை அல்ல. சில கட்டுப்பாடுகளுக்கு உரியதென
வாதிட்டார். அதன் விளைவாக, இஸ்லாமியக் கல்வி
நிலையங்கள் சுதந்திரமாக இயங்காமல் இயங்க முடியாமல் போயின. முஸ்லிம் மாணவர்களுக்கு இஸ்லாமியக்
கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பாடங்களை போதிக்கவோ, முஸ்லிம் ஆசிரியர்
அலுவலர்களை சேர்க்கவோ இயலாமல் போனது. நமது சொந்த செலவில் இறைமறுப்புக் கல்வியை பயிலும்
அவலம் ஏற்பட்டது.
தேசிய அளவிலும், உலக அளவிலும் உயர்கல்வி
கற்ற முஸ்லிம் அறிஞர்கள் மிக மிகக் குறைவாக இருப்பதால், இஸ்லாமிய எதிரிகள் முஸ்லிம்கள் வரலாற்றை மாற்றி, அதை தங்களுக்கு சாதகமாகத் திருத்தி அமைத்து விட்டனர். அதையே
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் போதிக்கப்படும்
பாடமாகவும் மாற்றிவிட்டனர்.
ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்ததை "ஆரியர் வருகை"
என்ற தலைப்பிட்டுள்ள அவர்கள், மொகலாயர்கள் இந்தியாவுக்குள்
வந்ததை "மொகலாயர் படையெடுப்பு" என்று தலைப்பட்டனர். இது போன்ற பல நிகழ்வுகளை
திருத்தி எழுதியுள்ளனர்.
ஒரு சில பகுதிகளின் பள்ளிக்கூடங்களில் இயேசு புகழ் பாடுவதும், சரஸ்வதி வந்தனம் பாடுவதும் எழுதப்படாத சட்டமாக ஆக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மாணவர்களுக்கு இது போன்ற இறைமறுப்பு வார்த்தைகளை சொல்லும் அவல நிலை ஏற்பட்டு
வருகிறது.
எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையை தாமை மாற்றிக் கொள்ளாத வரை
அல்லாஹ் அவர்களின் நிலையை மாற்றுவதில்லை. திருக்குர்ஆன்:- 13:11
"இஸ்லாமிய வனப்புமிகு நாள்கள் ஐரோப்பாவில் இருண்ட
காலங்கள்" என்றும், "ஐரோப்பியர்களுக்கு
அறிவு ஒளியை ஏற்றி வைத்தவர்கள் அரபியர்கள் மற்றும் ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம்கள்"
என்றும் இது போன்ற பழம்பெருமைகளை மட்டும் சொல்லிக்கொண்டிருக்கும் பெருங்காயத் டப்பாக்களாக
நாம் இருப்பதில் பயனில்லை.
ஒரு சமுதாயத்தின் அடிப்படை முன்னேற்றம், அந்த சமுதாயம் பெற்றுள்ள கல்வியறிவை வைத்து தான். தற்போது நமது
தலைமுறை சந்தித்து வருகின்ற சமூக சிக்கல்களை இனிவரும் தலைமுறை சந்திக்கக் கூடாது என்றால்
நாம் ஒவ்வொருவரும் கல்விப் பணியை மிக விரைவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
நமது முன்னோர் வழி
கல்வியை பொறுத்தவரை இஸ்லாத்திற்கு முரண்பட்ட கல்வி, முரண்படாத கல்வி என்று தான் இருக்க முடியுமே தவிர,
உலகக் கல்வி, மார்க்கக் கல்வி என்றெல்லாம் இருக்க முடியாது என்பதை உணர வேண்டும்.
வரலாற்று ஏடுகளில் ஒளி சிந்தும் நமது முன்னோர்கள் உலகக் கல்வி,
மார்க்கக் கல்வி என்றெல்லாம் பிரித்து பாராமல் பன்முகக்
கல்வியிலும் சிறந்து விளங்கியதால் தான் அவர்களால் எல்லா துறைகளிலும் வெற்றி காண முடிந்தது.
அடிப்படை கடமைகளை சரியாக நிறைவேற்றியது போல் திருக்குர்ஆனும்
நபிமொழிகளும் மருத்துவம், உயிரியல்,
புவியியல், வானவியல், வேதியியல்,
என பல தலைப்புகளில் பேசுவதைக் கண்டார்கள். அதனை
ஆய்வு செய்தார்கள். புதியவற்றை கண்டுபிடித்து சாதனை படைத்தார்கள்.
இமாம் ஃபக்ருத்தீன் ராஸீ (ரஹ்) அவர்கள் திருக்குர்ஆன் விரிவுரையாளர்
மருத்துவர், கணித வல்லுனர்,
இயற்பியல் அறிஞர், தத்துவஞானி.
இமாம் இப்னு ருஷ்த் (ரஹ்) அவர்கள் சிறந்த மார்க்க அறிஞர்,
மருத்துவர், விஞ்ஞானத்துறை நிபுணர், பன்மொழிப் புலவர்.
இமாம் இப்னு சீனா (ரஹ்) அவர்கள் மருத்துவர், மனவியல் வல்லுநர், மருத்துவக் கோட்பாடுகளை வகுத்தவர்.
இமாம் ஜாபர் சாதிக் (ரஹ்) அவர்கள் மார்க்க சட்டம் நிபுணர்,
இரசாயனத்தில் ஆய்வாளர்.
மார்க்க அறிவு இல்லாத உலக அறிவு ஆபத்தானது. உலக அறிவு இல்லாத
மார்க்க அறிவு வலுவற்றது. உலக அறிவை மட்டும் பெற்றிருப்பவர்களின் வாழ்க்கையில் இஸ்லாமிய
நல்லொழுக்கங்கள் இருப்பது மிக அரிது. திருக்குர்ஆன் வசனங்கள் மற்றும் நபிமொழிகளில்
சிலவற்றை புரிந்து கொள்ளவும், காலத்திற்கு ஏற்றவாறு
இஸ்லாமிய கொள்கைகளை பரப்பவும், செயல்படுத்தவும் உலகவியல்
அறிவு தேவை. நமது முன்னோர்கள் இரு கல்வியையும் இரு கண்களைப் போல் எண்ணி அதனை கற்கவும்,
கற்பிக்கவும் முயற்சி செய்தனர்.
இன்றுள்ள தொழில்நுட்ப கருவிகளில் பெரும்பாலானவை சகோதர சமயத்தவர்களின்
அறிவுத்திறனால் கண்டுபிடிக்கப்பட்டவை.
நாம் உலக மக்களுக்கு பயனுள்ள புதுப்புது கருவிகளை கண்டுபிடித்த
சேவையாற்ற வேண்டும்.
ஏனெனில், அது நமது மறுமை வாழ்க்கைக்கு
உதவும். பிற மக்களுக்கு பயன்படும் ஒன்றை நாம் விட்டுச் சென்றால் அதன் நன்மையை நமது
மரணத்திற்கு பின்பும் தொடரும் என்கிறது ஒரு நபிமொழி (முஸ்லிம்-3358)
கம்ப்யூட்டர், இன்டர்நெட் போன்ற தொழில்நுட்ப கருவிகளை கண்டுபிடித்தவர்கள் இறைநம்பிக்கையாளர்களாக
மரணம் அடைந்திருந்தால் அவர்கள் எவ்வளவு பெரிய பாக்கியசாலிகளாக இருந்திருப்பார்கள்?
சாதனையாளர்கள்
இந்திய நாடே பெருமைப்பட்டுகக் கொள்ளும் அளவுக்கு வெற்றிகரமாக
விண்ணில் செலுத்தப்பட்ட "சந்திராயன்-1" என்ற செயற்கைக்கோள் நிலவை தொட்டுவிட்டது. இதனை விண்ணுக்கு அனுப்பிய விஞ்ஞானிகள்
குழுவில் ஒரு முஸ்லிம் பெண் உ.பி. மாநிலம் அம்மேகா மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில்
பிறந்த "குஷ்பூ மிர்சா" சாதனை பெண்.
கேரள மாநிலம், கோழிகோட்டைச் சேர்ந்த
பத்தாம் வகுப்பு படிக்கும் "ஹன்னா பின்து ஹாஷிம்" என்ற மாணவி போஸ்டன், சிக்காகோ, மாசாசூட் பல்கலைக்கழங்களிலும்
மேலும், 17 பல்கலைக்கழங்களிலும் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் தத்துவம்
உள்ளிட்ட பல்வேறு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளில் நிறைய தவறுகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டி
நிரூபித்துள்ளார். இவரின் திறமையை கண்டு இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் A.P.J. அப்துல் கலாம் மற்றும் நாசா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில்
உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் பாராட்டியுள்ளன.
மதுரையைச் சேர்ந்த "அப்துல் ரஸ்ஸாக்" என்பவர் பல தொழில்நுட்ப
கருவிகளை கண்டுபிடித்துள்ளார். இளம் கண்டுபிடிப்பாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்.
ஊடகங்களின் மூலம் இவரைப் பற்றி செய்தியை வந்துள்ளன.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த "சையது இஸ்மாயீல்" கன்னியாகுமரியைச்
சேர்ந்த "அப்துல் கலாம்" ஆகிய இருவரும் அமெரிக்காவின் உலக மாஸ்டர் விருதை பெற்றுள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ள முஃபா ஹம்ஸா பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்
இன்ஜினியரிங் படிப்பில் இறுதியாண்டு படிக்கும் நான்கு முஸ்லிம் மாணவர்கள் (பெட்ரோஸ், முஹம்மது கியாஸுத்தீன், முஹம்மது இர்பான், தவ்சர் அஹ்மத்) காற்றின் மூலம் இயந்திரத்தை இயக்கிய வாகனங்களை
ஓட்டலாம் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இதுபோன்ற கல்வியிலும் கண்டுபிடிப்புகளிலும் புரட்சிசெய்யும்
நமது இளைய தலைமுறையினரை பெற்றோரும், உறவினரும், சமுதாய தலைவர்களும், அரசு உயர் பதவி மற்றும்
செல்வாக்கில் இருப்பவர்களும் ஊக்குவிக்க வேண்டும். அறிவாற்றலும் திறமையும் உடைய இவர்களை
தகுந்தபடி நல்வழி காட்டி நடத்திச் செல்ல, தன்னலமற்ற அறிஞர்
குழு வேண்டும்.
நமது சமுதாயத்தில் இவர்களைப் போன்ற இளம் விஞ்ஞானிகளும், அறிஞர்களும் நாடெங்கும் உலகமெங்கும் உருவாக வேண்டும். நமது சமுதாயத்தில்
முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்றால் மாற்றம் காணலாம்.
நமது இளைய தலைமுறை இஸ்லாத்தின் அடிப்படையில் வார்த்தெடுப்பதில்
தனி கவனம் செலுத்த வேண்டும். மார்க்க அறிவு விதைக்கப்படாத எந்த குழந்தையானாலும் சரியான
ஒழுக்கமுள்ள மனிதனாக உருவாக முடியாது.
ஆனால், இன்றைய கல்விமுறை
மார்க்கச் செய்தியை குழந்தைகளிடம் விதைக்க முடியாத அளவிற்கு சிக்கலாக இருக்கிறது. குழந்தைகள்
வீட்டில் இருக்கும்போதும், பள்ளி விடுமுறை நாள்களிலும்
பெற்றோர் குழந்தைகளுக்கு இஸ்லாமிய நல்லொழுக்கங்களைப் போதிக்க வேண்டும். மேலும், அவர்களை கண்காணித்து இறையச்சம் உள்ளவர்களாக வளர்ப்பது பெற்றோர்
மீது கடமையாகும்.
கல்லூரிகளில் தான் தவறுகள் அதிகம் நடைபெறுகின்றன. எனவே, முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் குறைந்தபட்சம் வாரத்தில் இரண்டு
மணி நேரமாவது இஸ்லாமியக் கலாச்சாரக் கல்வியை கற்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள்
தங்களிடம் படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு மார்க்கக் கருத்துக்கள், ஹலால் - ஹராம் ஆகியவற்றை கற்பிக்கவில்லை என்றால் நாம் செய்கின்ற
கல்வி சேவை இறைவனிடத்தில் அங்கீகாரம் பெறாது; இறைவனின் அருளும்
கிடைக்காது.
இஸ்லாமியச் சமுதாயம் கல்வியில் புரட்சி செய்து, சாதனைகள் படைக்க இறைவன் அருள்புரிவானாக! ஆமீன்!
(இந்தக் கட்டுரை சுமார்
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்:
நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment