Search This Blog

Thursday, 18 September 2025

வார்த்தை தடுமாறினால்...

 

வார்த்தை தடுமாறினால்...

 

إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ

(நபியே!) நிச்சயமாக உம் இரட்சகன் (மக்களின் செயல்பாடுகளை) கண்காணித்துக் கொண்டிருக்கிறான். திருக்குர்ஆன்:- 89:14

 

அல்லாஹுத்தஆலாவின் அருட்கொடைகளில் நாவும் ஒரு பெரும் அருட்கொடையாக இருக்கிறது. அதன் மூலம் தான் நம் உள்ளத்தின் கருத்துக்களை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுகிறோம். நல்ல பேச்சுக்கள், திருமறை ஓதுதல், சொற்பொழிவுகள் போன்ற நல்லவற்றைச் செய்து வருகிறோம். மிருகத்தையும் மனிதனையும் பிரித்துக் காட்டுவது பேச்சாவே இருக்கிறது. நாவை பாதுகாப்பதனால் அதிக பயன்களும், அதை பாதுகாக்க தவறுவதால் அதிக கெடுதிகளையும் குழப்பங்களையும் அடைகிறோம்.

 

உக்பா பின் ஆமீர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் (நபிகள் நாயகம் - ஸல் அவர்களிடம்), "நாயகமே! வெற்றிக்கு என்ன வழி?" என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், ( أَمْسِكْ عَلَيْكَ لِسَانَكَ وَلْيَسَعْكَ بَيْتُكَ وَابْكِ عَلَى خَطِيئَتِكَ ) "நீ உனது நாவை கட்டுப்படுத்திக் கொள்! உனது இல்லமே உனக்கு விசாலமானதாக இருக்கட்டும்! நீ செய்துவிட்ட பாவத்திற்காக அழு!" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-2330

 

ஹுசைன் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நல்ல பேச்சு செல்வத்தை செழிப்பாக்கும்; இரணத்தை விருத்தியாக்கும்; ஆயுளை நீடிக்க செய்யும்; குடும்பத்தார்களுக்கு மத்தியில் ஒற்றுமையை நிலைநாட்டும்; இறுதியில் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்.

 

எனவே, நமது மொத்த வார்த்தையும் வாழ்வில் பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதால் நாம் பேசினால் நல்லதையே பேசுவது என முடிவெடுத்துக் கொள்ளவேண்டும்.

 

பேச்சில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு வாழ்வில் பெரும் விளைவை ஏற்படுத்தும் என்பதை திருக்குர்ஆன் கூறும் வரலாற்றின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

 

அல்லாஹ்வின்மீது அனைத்து பொறுப்பும்

 

ஒருமுறை இறைத்தூதர் யஅகூப் (அலை) அவர்களின் பிள்ளைகள் தமது தந்தையிடம் வந்து, "தந்தையே! நாங்கள் சுற்றுலா செல்கிறோம். அதனால் எங்கள் சகோதரர் யூசுஃபையும் அழைத்துச் செல்கிறோம். அவரை நாங்கள் நன்றாக கவனித்துக் கொள்வோம். அதற்கு அனுமதி தாருங்கள்" என்று கூறினர்.

 

அதற்கு யஅகூப் (அலை) அவர்கள், "நீங்கள் அவரை யூசுஃப்பை அழைத்துச் செல்வது எனக்கு துக்கத்தை ஏற்படுத்திவிடும். மேலும், நீங்கள் (விளையாடிக் கொண்டு) அவரை மறந்து பாராமுகமாய் இருக்கும் சமயத்தில் ஓநாய் அவரை (அடித்து) தின்றுவிடும் என்று நான் என் பயப்படுகிறேன்" எனக் கூறினார்கள். (திருக்குர்ஆன்:- 12:13) என்றாலும், யூசுஃப்பை அழைத்துச் செல்ல அனுமதித்தார்கள்.

 

பின்பு யூசுஃப்பை அழைத்துச் சென்ற பிள்ளைகள் அவரை கிணற்றில் தூக்கி வீசிவிட்டு, "தந்தையே! யூசுஃப்பை ஓநாய் தின்றுவிட்டது. இதோ இரத்தம் படிந்த அவருடையச் சட்டையைப் பாருங்கள்" என பொய் கூறிவிட்டனர். இவ்வரலாற்றின் முழு விவரத்தையும் திருக்குர்ஆனின் யூசுஃப் அத்தியாயம் விவரிக்கிறது.

 

"ஓநாய் அவரை தின்று விடுமோ என்று நான் பயப்படுகிறேன்" என்ற இந்த வார்த்தையை ஒரு இறைத்தூதர் பயன்படுத்துவது அல்லாஹ்விற்கு பிடிக்கவில்லை. மாறாக, "சரி நீங்கள் சிறுவர் யூசுஃப்பை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ் பாதுகாத்துக் கொள்வான். அனைத்திற்கும் அல்லாஹ் ஒருவனே போதுமானவனாக இருக்கிறான்" என்று தான் இறைத்தூதர் யஅகூப் (அலை) அவர்கள் கூறியிருக்க வேண்டும்.

 

ஆனால், அவர்களின் வார்த்தையில் அப்போது சற்று தடுமாற்றம் ஏற்பட்டது. எனவே, அதன் பாதிப்பால் தமது பாசமிகு மகனார் யூசுஃப் (அலை) அவர்களை பல வருடங்கள் பிரிய வேண்டிய சூழ்நிலை யஅகூப் (அலை) அவர்களுக்கு ஏற்பட்டது.

 

எனவே, நாம் எதைப் பேசினாலும் சிந்தித்து பேச வேண்டும். நம்முடைய பேச்சே நமது கவலைகளுக்கு காரணமாகிவிடும். எந்தக் காரியமாக இருந்தாலும் அது குறித்து அல்லாஹ்வின்மீதே முழுமையாக பொறுப்புச் சாட்டுவது சாலச் சிறந்ததாகும்.

 

இறைத்தூதர் யூசுஃப் (அலை) அவர்கள் மிகவும் அழகு நிறைந்தவர்கள். நபியவர்களின் அழகைக் கண்டு மயங்கிய அந்நாட்டு அரசி நபியவர்களை விபச்சாரத்திற்கு அழைத்தார். அவர்கள் மறுப்புக் கூறவே, அப்போது அரசியின் பல தோழிகளும் ஒன்று சேர்ந்து வந்து, அரசியின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டுமென மிகவும் நயமாக பேசிப் பார்த்தனர். ஒன்றும் பலிக்காது போகவே இந்த மனிதரை சிறையில் அடைத்து சித்திரவதை செய்யுங்கள். அப்போதுதான் இவர் உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவார் என பயமுறுத்த ஆரம்பித்தனர்.

 

அதற்கு நபியவர்கள், "என் இறைவா! எதன் பக்கம் என்னை இவர்கள் அழைக்கிறார்களோ அ(த்தீய)தைவிட சிறைக்கூடமே எனக்கு மிக விருப்பமுடையதாகும். ஆகவே, இப்பெண்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னை தடுத்துக் கொள்ளாவிட்டால் இப்பெண்களிடம் சிக்கி (பாவம் செய்யும்) அறிவீனர்களில் நானும் ஒருவனாகி விடுவேன்" என்று பிரார்த்தித்தார். திருக்குர்ஆன்:- 12:33

 

விபச்சாரத்தில் இருந்து பாதுகாப்பு தேடிய நபியவர்கள், "இறைவா! சிறைக்கூடம் செல்வதை விட்டும் என்னை பாதுகாப்பாயாக" என்று பிரார்த்திக்கவில்லை. மாறாக, பெண்கள் அழைக்கும் இத்தீயதைவிட சிறைக்கூடமே என் விருப்பமாகும் எனக் கூறிவிட்ட வார்த்தையின் பாதிப்பால் தான் இறைத்தூதர் யூசுஃப் (அலை) அவர்கள் சுமார் பல வருடங்கள் சிறையில் அடைபட்டு பல துன்ப துயரங்களை அனுபவித்தார்கள்.

 

மேற்கொண்ட இறைத்தூதர்கள் இருவரும் தவறிழைத்துவிட்டார்கள் என்று கூறுவது நமது நோக்கமல்ல. அப்படி கூறுவது பெரும் பாவமாகும். அதை விட்டும் அல்லாஹ் நம்மை  பாதுகாப்பானாக!

 

நமது பேச்சில் எதையும் பேசலாம் என்பது முறையாகாது. பேச்சில் சில வரைமுறைகளை கையாள வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த இறைத்தூதர்கள் இருவரின் வரலாற்றை திருக்குர்ஆனில் எடுத்துக் கூறி அதன் மூலம் இறைவன் இந்த மனித சமுதாயத்திற்கு போதிக்கிறான்.

 

தன்னுடைய தீர்ப்பே தனக்கும்

 

ஒருசமயம் காட்டுப் பகுதியில் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மனித உருவில் ஃபிர்அவ்ன் முன் தோன்றி, நான் உங்களிடம் ஒரு முறையிட்டை கொண்டு வந்துள்ளேன். என் விஷயத்தில் நீங்கள்தான் நியாயத்தை வழங்க வேண்டும்" என்றார்கள்.

 

ஃபிர்அவ்ன், "உன்னுடைய முறையீடு என்ன? யாரால் பாதிக்கப்பட்டுள்ளாய்?" என்று கேட்டான். ஜிப்ரீல் (அலை) அவர்கள், "ஒரு மனிதன் இருக்கிறான். (அதாவது,) அவனின் எஜமானன் மிகவும் கிருபையாளன்; அவனுக்கு என்னென்ன உதவிகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்துள்ளான்; அவனுக்கு நல்ல அந்தஸ்தும் கொடுத்துள்ளான். ஆனால் அவன், அத்தகைய எஜமானுக்கு துரோகம் செய்கின்றான். எஜமானின் கட்டளைகளுக்கு அடிபணிவதில்லை. இத்தகைய துரோகியை எப்படி தண்டிக்கலாம்?" என்று கேட்டார்கள்.

 

அதற்கு ஃபிர்அவ்ன், "அவனின் எஜமான் அவன்மீது இவ்வளவு பெரிய கிருபைகள் செய்தும், உதவிகள் புரிந்தும் அவன் தன்னுடைய எஜமானுக்கு துரோகம் செய்கிறானா? இத்தகைய துரோகியை சும்மாவிடக் கூடாது. உடனே அவனைப் பிடித்து கடலில் மூழ்கடித்து, சாகடிக்க வேண்டும்" என்ற ஆத்திரம் பொங்க கூறினான். ஜிப்ரீல் (அலை) அவர்கள், "நான் உங்களை அரண்மனையில் வந்து சந்திப்பது என்பது மிகக் கடினமான விஷயம். எனவே, தயவுகூர்ந்து நீங்கள் உங்களின் தீர்ப்பை இங்கேயே ஒரு தாளில் எழுதிக் கொடுத்து விடுவது நல்லது!" என்று கேட்டார்கள்.

 

ஃபிர்அவ்ன், "இந்த இடத்தில் என்னிடம் எழுதுகோல், மை போன்ற உபகரணங்கள் எதுவும் இல்லையே! பிறகு எப்படி எழுதி தருவது?" என்று கேட்டான். ஜிப்ரீல் (அலை) அவர்கள், "என்னிடம் இவை எல்லாம் தயாராகவே உள்ளது" என்று கூறிவிட்டு, தங்களிடம் இருந்த அனைத்தையும் எடுத்து அவனிடம் கொடுத்தார்கள். அதைப் பெற்றுக் கொண்ட ஃபிர்அவ்ன் தன்னுடைய தீர்ப்பை எழுதி ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கொடுத்துவிட்டான். (தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டோம் என்று அப்போது ஃபிர்அவ்ன் அறிய வாய்ப்பில்லை.)

 

இறுதியாக, இறைத்தூதர் மூசா (அலை) அவர்களையும் அவர்களின் கூட்டத்தாரையும் அழிப்பதற்கு சென்ற ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டான். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் நீரில் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த ஃபிர்அவ்னிடம் வந்து, "உன் ஆட்சியில் விசுவாசமற்றவர்களை நீரில் மூழ்கடிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றி அன்றொரு நாள் நீ என்னிடம் எழுதித் தந்தாய் அல்லவா? எனவே, உன் சட்டப்படிதான் துரோகியான நீயும் மூழ்கடித்து சாகடிக்கும் தண்டனை அனுபவிக்கப் போகிறாய்" என்று கூறினார்கள். நூல்:- கஸஸுல் அன்பியா

 

நம்முடைய வார்த்தைகளை அல்லாஹ் மிகவும் கண்காணிக்கிறான் என்பதை எப்போதும் மறந்துவிடக் கூடாது. ஃபிர்அவ்னின் வார்த்தையே அவனுக்கு தீர்ப்பாகியது போல் நம் வார்த்தையே நமக்கு தீர்ப்பாக அமையலாம். எனவே, மிகவும் கவனத்துடன் நல்ல வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஃபிர்அவ்ன் கெட்டுப் போனதற்கு மற்றொரு வரலாற்றையும் திருக்குர்ஆன் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

 

ஃபிர்அவ்னின் மனைவி (தம் கணவனிடம்), "இவர் எனக்கும் உமக்கும் கண்குளிர்ச்சியாக இருக்கட்டும். இவரைக் கொன்று விடாதீர்கள். இவர் நமக்குப் பயன்படலாம்; அல்லது நாம் இவரை (வளர்ப்பு) மகனாக ஆக்கிக் கொள்ளலாம்" என்று கூறினார். திருக்குர்ஆன்:- 28:9

 

இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள் குழந்தைப் பருவத்தில் நைல் நதியில் ஒரு பேழைக்குள் வைத்தவாறு மிதந்து வந்தபோது ஃபிர்அவ்னின் மனைவி (ஆசியா பின்த் முஸாஹிம்) அவர்கள் அந்தக் குழந்தையை தூக்கிக் கொண்டு தமது கணவனான ஃபிர்அவ்னிடம் வந்து, "இது எனக்கும் உமக்கும் கண்குளிர்ச்சியாக இருக்கட்டும்" என்று கூறினார். அதற்கு ஃபிர்அவ்ன், ( أَمَّا لَكِ فَنَعَم، وَأَمَّا لِي فَلَا )  "இக்குழந்தை உமக்கு வேண்டுமானால் கண்குளிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், எனக்கோ இந்தக் குழந்தையிடம் எந்தத் தேவையும் இல்லை" என்று கூறினான். அவ்வாறே நடந்தது.

 

நிகழ்ச்சியை எடுத்துரைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ( لَوْ قالَ فِرْعَوْنُ: قُرَّةُ عَيْنٍ لِي ولَكِ. لَكانَ لَهُما جَمِيعًا ) "(இந்தக் குழந்தை) எனக்கும் உமக்கும் கண்குளிர்ச்சியாக இருக்கட்டும் என்று ஃபிர்அவ்னும் கூறியிருந்தால் (எதிர்காலத்தில் அந்தக் குழந்தை) அவர்கள் இருவருக்கும் (கண்குளிர்ச்சி எனும் இறைநம்பிக்கை கிடைக்கக் காரணமாக) ஆகியிருக்கும்" என்று விளக்கம் தந்தார்கள். நூல்:- தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர், தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்

 

தரம் கெட்ட வார்த்தையால் தட்டளைந்தவர்கள்

 

அதற்கு அவர்கள், "மூசா! அவர்கள் அங்கிருக்கும் வரை அதில் நாங்கள் ஒருபோதும் நுழையமாட்டோம். (வேண்டுமானால்) நீரும் உம்முடைய இறைவனும் சென்று போரிடுங்கள். நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கிறோம்" என்று கூறினார்கள். திருக்குர்ஆன்:- 5:24

 

(அதற்கு அல்லாஹ்,) "அவ்வாறாயின், இ(ந்த பூமியான)து அவர்களுக்கு நாற்பது ஆண்டுகள் தடுக்கப்பட்டிருக்கும். அவர்கள் (நாடோடிகளாக) பூமியில் சுற்றித் திரிவார்கள். பாவிகளான இம்மக்களுக்காக நீர் கவலைப்படாதீர்" என்று கூறினான். திருக்குர்ஆன்:- 5:26

 

அல்லாஹுத்தஆலா, புனித பூமியான பைத்துல் மக்திஸ் (ஜெருசலம்) பகுதியில் வசித்து வந்த அமாலிக்கா ரவுடிகளை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு, பனூ இஸ்ரவேலர்களை குடியமர்த்த வேண்டும் என்று இறைத்தூதர் மூசா (அலை) அவர்களுக்கு உத்தரவிட்டான்.

 

இதைப்பற்றி மூசா (அலை) அவர்கள் பனூ இஸ்ரவேலர்களிடம் கூறினார்கள். கோழைகளாக இருந்த பனூஇஸ்ரவேலர்கள் மூசா (அலை) அவர்களிடம், "நீர் எங்களை எந்த ஊருக்குள் நுழைந்து அந்த ஊர்காரர்களுடன் போரிட வேண்டும் என கட்டளையிடுகிறீரோ அந்த ஊரில் அடக்குமுறையாளர்கள் உள்ளனர். அவர்கள் அச்சமூட்டும் தோற்றமுடையவர்களாகவும், பலம் மிக்கவர்களாகவும் உள்ளனர். அவர்களை எதிர்க்கவோ, ஒடுக்கவோ எங்களால் இயலாது. அவர்கள் அங்கு இருக்கின்றவரை எங்களால் அதற்குள் நுழைய முடியாது. அவர்கள் அங்கிருந்து அவர்களாக வெளியேறிவிட்டால் மட்டுமே எங்களால் அங்கு நுழைய முடியும். இல்லாவிட்டால் அவர்களை எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமானால், நீரும் உம்முடைய இறைவனும் சென்று அவர்களுடன் போரிடுங்கள். நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கிறோம்" என்று கூறிவிட்டனர்.

 

ஆம்! பனூ இஸ்ரவேலர்கள் கூறிய அந்த வார்த்தையே அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

 

திருக்குர்ஆன் விரிவுரையாளர் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் மேற்காணும் வசனத்திற்கு பின்வருமாறு விளக்கமளித்தார்கள். பனூ இஸ்ரவேலர்கள் எந்த இடத்தை சுட்டிக்காட்டி, "இவ்விடத்திலேயே (தீஹ் பாலைவனத்திலேயே) அமர்ந்திருப்போம்" என்று கூறினார்களோ அந்த இடத்தைவிட்டுச் செல்வதற்கு நாடி அதிகாலையில் பயணத்தை தொடங்கி இரவு வரை நடப்பார்கள். பிறகு நாம் வேறு இடத்திற்கு வந்து விட்டோம் என்று நினைத்து உறங்குவார்கள். அவர்கள் விடியற்காலையில் கண்விழித்து பார்க்கும்போது, எங்கிருந்து பயணத்தைத் தொடங்கினார்களோ அதே இடத்திற்கு வந்து சேர்ந்திருப்பார்கள். இப்படியே நாற்பது ஆண்டுகள் ஒரே இடத்தையே பலமுறை சுற்றிச் சுற்றி வந்தனர். அவர்களில் பலர் அங்கேயே இறந்து விட்டனர். மேலும், அவர்களின் பயண வாகனங்களான குதிரை, ஒட்டகங்களில் அதிகமானவை அழிந்து போய் விட்டன.

 

பனூ இஸ்ரவேலர்கள் கூறிய வார்த்தையின் பாதிப்பால் தான் தட்டளைந்து கெட்டுப்போனார்கள்.

 

"தவளை தன் வாயாலே கெடும்" என்பது கிராமத்துச் சொல்வழக்கு.

 

தாய்மார்கள் கவனத்திற்கு


(புகழ்பெற்ற திருக்குர்ஆன் விரிவுரையான தஃப்சீர் கஷ்ஷாஃப் நூலின் ஆசிரியர்) இமாம் அபுல் காசிம் ஸமஹ்ஷரீ (ரஹ்) அவர்களின் ( أَبُو الْقَاسِمِ مَحْمُودِ بْنِ مُحَمَّدٍ الزَّمَخْشَرِيّ الْخُوَارِزْمِيّ ஹிஜ்ரீ 467-538 ) ஒரு கால் ஊனமாகிவிட்டதால், கட்டை காலுடன் நடந்து சென்றபோது  அன்னாரிடம், கால் ஊனமானதற்கான காரணத்தை வினவப்பட்டது.

 

இமாம் அவர்கள், என்னுடைய தாயாரின் சாபம் தான் காரணம். அதாவது, நான் சிறுவனாக இருக்கும்போது ஒரு சிட்டுக்குருவியை வளர்த்து வந்தேன். அந்தக் குருவியின் காலில் ஒரு நூலை கட்டி அதனுடன் நான் விளையாடுவது வழக்கமாகும். ஒரு நேரத்தில் அந்தக் குருவி ஒரு பொந்தில் நுழைந்துகொண்டது. குருவியின் காலில் கட்டி இருந்த நூலைப் பிடித்து பலமுறை மெதுவாக இழுத்துப் பார்த்தேன். அது வெளியே வரவில்லை இறுதியாக, பலமுடன் அந்த நூலை வேகமாக வெளியே இழுத்தேன். அப்போது அந்த நூலோடு குருவியின் ஒரு கால் மட்டும் ஒடிந்து கொண்டு வந்துவிட்டது. இதைப் பார்த்து வேதனைப்பட்ட என் தாயார், ( قَطَعَ اللَّهُ رِجْلُكَ كَمَا قَطَعْتَ رِجْلَهُ ) "(ஸமஹ்ஷரீ) நீ குருவியின் காலை ஒடித்தது போல், அல்லாஹ் உம்முடைய காலையும் ஒடிப்பானாக! (இவ்வாறு விளையாடாதே! என்று நான் பலமுறை கூறினேனே கேட்டாயா?)" என்று கூறினார்.

 

பிறகு நான் அறிவைத் தேடும் வயதை அடைந்தபோது, அறிவைத் தேடி புகாராவுக்குப் பயணம் செய்தேன். நான் (அந்தப் பயணத்தில்) என் வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டேன். அப்போது என் கால் உடைந்துவிட்டது. (சிகிச்சை செய்த பிறகும்) அது எனக்கு ஏதோ செய்தது. பிறகு அதை வெட்டியெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. (அன்று என் தாயார் கூறிய வார்த்தையின் பாதிப்பை இன்று என் வாழ்வில் அனுபவிக்கிறேன்)" என்று கூறினார்கள். நூல்:- வஃபயாதுல் அஃயான் ( وفيات الأعيانஇப்னு கல்க்கான் ( ابن خلكان ),  அல்வாளிஹு ஃபீ உலூமில் குர்ஆன் ( اَلْوَاضِحُ فِي عُلُومِ الْقُرْانِ )  முஸ்தஃபா தீபில் புஙா ( مُصْطَفَى دِيبِ الْبُغَا )

 

வார்த்தைகளின் பாதிப்பை உணராத தாய்மார்கள் சாதாரண காரியத்திற்கெல்லாம் தனது அன்பு குழந்தைகளை "நாசமாக போ! அழிந்து போ!" என்று திட்டித் தீர்த்துவிடுகிறார்கள். பிற்காலத்தில் அந்த வார்த்தைகளின் பாதிப்பை நம் அன்பு குழந்தைகள் அனுபவிப்பார்களே என்று இவர்கள் உணர வேண்டாமா?

 

நாம் பேசிய பேச்சுக்களையும், செய்த செயல்பாடுகளையும் நாம் வேண்டுமானாலும் மறந்துவிடுவோம். ஆனால், நம்மைப் படைத்த இறைவன் மறப்பதில்லை. நம்முடைய செயல்பாடுகள் அனைத்திற்கும் அதற்கு உண்டான கூலியை அவ்வபோது இறைவன் மறக்காமல் குறைக்காமல் வழங்கிக் கொண்டுள்ளான். மேலும், நம்முடைய ஒவ்வொரு வினாடியையும் இறைவன் கண்காணிக்கிறான் என்ற எண்ணத்தோடு மிகவும் பக்குவமாக நம் வாழ்க்கைச் சக்கரத்தை நகர்த்த வேண்டும். 

 

எனவே, நாம் தீய வார்த்தைகளையும், சாப வார்த்தைகளையும் பேசி விடாமல் நாவை பாதுகாத்து, இறையருளை பெறுவோமாக! ஆமீன்!

 

(இந்தக் கட்டுரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

 

No comments:

Post a Comment

குறைகளை ஏற்றுக்கொள்வோம்

  குறைகளை ஏற்றுக்கொள்வோம்   وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ قَالَ فَعَلْتُهَا إِذًا وَأَنَا مِنَ الضّ...