Search This Blog

Monday, 22 September 2025

கருணையின் வட்டத்திற்குள்...

 

கருணையின் வட்டத்திற்குள்...

 

وَالْأَنْعَامَ خَلَقَهَا لَكُمْ فِيهَا دِفْءٌ وَمَنَافِعُ وَمِنْهَا تَأْكُلُونَ

கால்நடைகளை உங்களுக்காகவே படைத்தான். அவற்றில் (குளிரைத் தடுக்கும்) பொருள்களும் பல பயன்களும் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் புசிக்கிறீர்கள். திருக்குர்ஆன்:- 16:5

 

விலங்குகள் இயற்கையின் ஒரு முக்கிய அம்சமாகும், ஏனெனில் அவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மனித நல்வாழ்வுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன. சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள அனைத்து உயிரினங்களும் இயற்கையின் சூழலியலை சமநிலையில் வைத்திருக்க இணைந்து வாழ்கின்றன.  விலங்கு உரிமைகள் மற்றும் நலனுக்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 ஆம் தேதி (World Animal Day) உலக விலங்குகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

 

மனிதன் மற்ற படைப்பினங்களையும்விட பகுத்தாய்வு செய்யும் அறிவுத்திறனால் சிறந்தவன். இதனால் பல மடங்கு பெரிய மிருகங்களும்கூட மனிதன் முன் மண்டியிட்டு வாழ்கின்றன. சிங்கம், புலி போன்ற கொடிய மிருகங்கள்கூட தங்களின் வீரத்தை இழந்து மனிதன் முன் வீழ்ந்து கிடக்கின்றன. இந்நிலையில் மனிதன் பிற உயிரினங்களின் மீது எப்போதும் கருணையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறது.

 

இரக்க உணர்வு இறைவனிடமிருந்து இரக்கத்தைப் பெற்றுத் தரும். இதனால் இவ்வுலக வாழ்வும், மறு உலக வாழ்வும் வளமாக அமையும். இப்படி மனிதர்களின் இதயங்களுக்கு நற்கூலியை வாக்களித்து, மிருகங்களுக்கும் பாசத்தையும் பரிவையும் பெற்றுத் தந்தது இஸ்லாம். மிருகங்களை கொடுமைப் படுத்துவது பெரும் பாவச் செயல் என்று கூறி, அதை தடுத்திட சட்டங்கள் வகுத்துத் தந்தது இஸ்லாம்.

 

இஸ்லாம் புத்துயிர் பெற்று எழுந்த பின்னர் தான் பிற உயிரினங்கள் தங்கள் உணவையும் உரிமைகளையும் உரிய வகையில் பெற்றன. உயிரினங்கள் வைத்திருப்போரின் தவறுகளுக்கு அந்த உயிரினங்களை தண்டிக்கப்பட்ட நிலை விட்டகன்று உயிரினங்கள் தவறு செய்தால் அவற்றை தடுக்கா குற்றத்திற்கு அதன் உரிமையாளர்கள் தண்டிக்கப்படும் காலம் வந்தது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اِتَّقُوا اللَّهَ فِي هٰذِهِ الْبَهَائِمِ الْمُعْجَمَةِ ) இந்த வாயில்லாக் கால்நடை விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.  அறிவிப்பாளர்:- ஸஹ்ல் பின் ஹன்ழலிய்யா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-2185, முஸ்னது அஹ்மத், இப்னு ஹிப்பான், இப்னு குஸைமா

 

சில சட்டங்கள்

 

மாடு முட்டி அல்லது கொம்பால் குத்தி மனிதன் இறந்துவிட்டான் என்றால், அந்த மாட்டை கல்லால் அடித்து கொலை செய்திட வேண்டும் இது யூதச்சட்டம்.

 

மிருகங்களை விசாரிக்கவும் தண்டிக்கவும் ஒரு தனி துறையே வைத்திருந்தார்கள் கிரேக்கர்கள். உதாரணமாக, ஒரு மாடு ஒரு மனிதனை முட்டி விட்டது என்றால் அதன் உரிமையாளர் அந்த மாட்டை நன்றாகக் கட்டி முட்டப்பட்டவர் முன் கொண்டு வர வேண்டும். முட்டப்பட்டவர் அந்த மாட்டை தன் விருப்பம் போல் பழி வாங்கிக் கொள்ளலாம். அவர் அந்த மாட்டை கொலையும் செய்யலாம் என்பது கிரேக்கச் சட்டம்.

 

வயல்வெளியை உழுது கொண்டிருக்கிறது ஒரு மாடு அது வரப்பை கடந்த அடுத்தவர் வயலில் மிதித்து விடுகிறது என்றால், ஏர் பூட்டி உழுதவரோடு அந்த ஏரில் பூட்டப்பட்ட மாடும் கொலை செய்யப்பட வேண்டும் என்பது ரோமர்களின் சட்டம்.

 

கிரேக்கச் சட்டம் மற்றும் ரோமர்களின் சட்டங்களை தான் பிற்காலத்தில் ஜெர்மனியர்கள் பின்பற்றினர்.

 

உயிருடன் இருக்கும் பிராணியுடைய உடம்பின் ஒரு பாகத்திலிருந்து மாமிசத்தை வெட்டியெடுத்து சமைத்து உண்ணும் கொடிய பழக்கம் அறியாமைக் கால அரேபியர்களிடம் நிலவி இருந்தது.

 

கடுமையான நரக பயத்தைக் காட்டி அச்சமூட்டி மிருகங்களை கொடுமை செய்வது வந்து தடுத்தது இஸ்லாம். மனிதர்களின் நலனுக்காக படைக்கப்பட்டது தான் பிற உயிரினங்கள். அதனால், எந்த சூழ்நிலையிலும் அவற்றிடம் மிகுந்த பரிவோடும் பாசத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகள் போதிக்கின்றன.

 

போக்குவரத்து வசதி உள்ள இந்த நவீன யுகத்தில்கூட இன்றும் கால்நடைகளின் தேவை, உதவி அவசியப்படுகிறது. வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கு கால்நடைகள் மூலமாகத்தான் பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறது. சில கால்நடைகள் விவசாயத்திற்காகவும், சில கால்நடைகள் சவாரிக்காகவும், சில உயிரினங்கள் மருந்தாகவும், சில பிராணிகள் இறைச்சி உணவாகவும், அதன் பால் சுவை மிகுந்த சத்துள்ள பானமாகவும், சில உயிரினங்களின் தோல்கள் குளிரைத் தடுக்கும் ஆடையாகவும் மனிதனுக்கு பயன்படுகிறது. இதைத்தான் தலைப்பில் காணும் திருவசனம் கூறுகிறது.

 

நற்பலன் கிடைக்கும் 

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( فِي كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ ‏ ) பிற உயிரினங்கள் ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும். நூல்:- புகாரீ-2363, முஸ்லிம்-4516, அபூதாவூத்-2187

 

கப்ஷா பின்த் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. என் (மாமனார்) அபூ கத்தாதா (ரலி) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் (உளூ எனும்) அங்கத்தூய்மை செய்வதற்கு நான் தண்ணீர் கொண்டு வந்து ஒரு பாத்திரத்தில் ஊற்றினேன். அப்போது பூனை ஒன்று வந்து அந்தத் தண்ணீரைக் குடிக்கலாயிற்று. உடனே கத்தாதா (ரலி) அவர்கள் அந்த பூனை குடித்து முடிக்கும்வரை அந்தப் பாத்திரத்தை சரியாக பிடித்தார்கள்.

 

நான் அதை (வியப்புடன்) உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்ட அபூ கத்தாதா (ரலி) அவர்கள், ( أَتَعْجَبِينَ ) "(உளூச் செய்யும் தண்ணீரை பூனை குடிப்பதைக் கண்டு) நீ ஆச்சரியப்படுகிறாயா?" என்று கேட்டார்கள். நான், "ஆம்" என்றேன். அதற்கு அவர்கள், "அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ( إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ إِنَّمَا هِيَ مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ  ) 'பூனைகள் அசுத்தமான பிராணிகள் அல்ல. அவையெல்லாம் உங்களைச் சுற்றிச் சுற்றி வரக்கூடியவை ஆகும்' என்று கூறினார்கள் என்றார்கள்" நூல்:- திர்மிதீ-85, நசாயீ-67

 

அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் ரொட்டி துண்டுகளை இடித்து மாவாக ஆக்கி, எறும்புகளுக்கு வழங்குவார்கள். "இவை நம்முடைய அண்டை வீட்டார். இவற்றிற்கு நம்முடைய உபசரிப்பின்மீது உரிமை இருக்கிறது" என்றும் கூறுவார்கள்.

 

உணவளிப்பதில் கவனம்

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( دَخَلَتِ امْرَأَةٌ النَّارَ فِي هِرَّةٍ رَبَطَتْهَا فَلاَ هِيَ أَطْعَمَتْهَا وَلاَ هِيَ أَرْسَلَتْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ حَتَّى مَاتَتْ ) ஒரு பூனையை, அது சாகும்வரை (பட்டினி போட்டு) கட்டிவைத்த காரணத்தால் ஒரு பெண் நரகத்தில் நுழைந்தாள். அவளும் அதற்குத் தீனி போடவில்லை; பூமியின் புழு பூச்சிகளைத் தின்று பிழைத்துக்கொள்ளட்டும் என அதை அவள் அவிழ்த்துவிடவுமில்லை. முடிவில் அது மெலிந்து போய் செத்துவிட்டது. நூல்:- முஸ்லிம்-5318, இப்னுமாஜா-4246, முஸ்னது அஹ்மத், முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக், இப்னு ஹிப்பான்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا سَافَرْتُمْ فِي الْخِصْبِ فَأَعْطُوا الإِبِلَ حَظَّهَا مِنَ الأَرْضِ وَإِذَا سَافَرْتُمْ فِي السَّنَةِ فَأَسْرِعُوا عَلَيْهَا السَّيْرَ وَإِذَا عَرَّسْتُمْ بِاللَّيْلِ فَاجْتَنِبُوا الطَّرِيقَ فَإِنَّهَا مَأْوَى الْهَوَامِّ بِاللَّيْلِ ) நீங்கள் செழிப்பான காலத்தில் பயணம் செய்தால் பிரயாண வாகனங்களுக்கு அவற்றின் உணவு பங்கை பூமியிலிருந்து கொடுங்கள். பஞ்ச காலத்தில் நீங்கள் பயணம் செய்வீர்களாயின் அவற்றை வேகமாக ஓட்டிச் செல்லுங்கள். வரட்சியான காலத்தில் பயணம் செய்தால் ஒட்டகங்களைத் துரிதமாகச் செலுத்துங்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-3891, அபூதாவூத்-2206, திர்மிதீ-2785

 

அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருநாள் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (இயற்கை கடனை நிறைவேற்றுவதற்காக) அன்சாரிகளில் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் நுழைந்தார்கள். அப்போது அங்கு ஓர் ஒட்டகம் நின்று கொண்டிருந்தது. அது நபியவர்களிடம் வந்து முனங்கிக்கொண்டே கண்ணீர் வடித்தது. நபியவர்கள் அதன் முதுகையும் பின்தலையையும் தடவி கொடுத்தார்கள். அது அமைதி அடைந்தது.

 

பின்னர் நபியவர்கள், ( مَنْ صَاحِبُ الْجَمَلُ ) "இந்த ஒட்டகத்தின் உரிமையாளர் யார்?" என்று வினவினார்கள். அன்சாரிகளை ஓர் இளைஞர் வந்து, "நாயகமே! அது எனக்குரியதுதான்" என்றார். அப்போது நபியவர்கள் (அவரிடம்), ( أَفَلاَ تَتَّقِي اللَّهَ فِي هَذِهِ الْبَهِيمَةِ الَّتِي مَلَّكَكَ اللَّهُ، فَإِنَّهُ شَكَى إِلَىَّ أَنَّكَ تُجِيعُهُ وَتُدْئِبُهُ ) "அல்லாஹ் உமக்கு உடமை ஆக்கிகொடுத்த இந்தப் பிராணி விஷயத்தில் அவனை நீர அஞ்சமாட்டீரா? நீர், பசியாலும் வேலைப்பளுவாலும் தன்னை கொடுமைப்படுத்துவதாக என்னிடம் இது முறையிடுகிறது" என்று (கோபத்துடன்) கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-2186-, முஸ்னது அஹமத்-1654

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. பயணத்தில் ஓர் இடத்தில் தங்க நேர்ந்தால் பயண ஊர்திகளின் சுமைகளை இறக்கி, அவற்றை மேயவிடும் வரை தொழுகையை நாங்கள் தொழமாட்டோம். நூல்:- அபூதாவூத்-2188 அல்அஸ்வத் இமாம் தப்ரானீ, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்


பிராணிகளுக்கு போதிய உணவு கொடுக்காமல் பட்டினிப்போடுவது இறைவனைக் கோபமூட்டும் செயலாகும் என்று நபிமொழி எச்சரிக்கிறது.

 

பிராணிகள் தமது தேவைகளை வெளியிட இயலாதவை. இந்நிலையில் அவைகளுக்கு தீனி கொடுப்பதில் அதிக கவனம் வைப்பது மிகவும் அவசியமாகும். இதில் சோம்பேறித்தனம், கஞ்சத்தனம் செய்வது கொடிய பாவமாகும்.

 

பயிர்ப் பச்சைகள் பெருகி செழிக்கும் காலமாக இருக்கும்போது பூமியில் நாலாத் திசைகளிலும் புறப்பூண்டுகள் முளைத்திருக்கும். அக்காலத்தில் பயணத்தில் உள்ள பிராணிகள் மேய்வதற்கு சந்தர்ப்பம் கொடுத்துட வேண்டும். மேலும், வழியில் பசி தாகத்திலிருந்து அப்பிராணிகளை பாதுகாத்திட வேண்டும் என்று போதிக்கின்றது இந்த நபிமொழி.

 

வீடுகளில் பிராணிகளை வளர்ப்பவர்கள் அவற்றிற்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தந்தாக வேண்டும். இவற்றை அவர்களால் செய்து தர முடியவில்லை என்றால் அவர்கள் அந்த பிராணிகளை விற்று விட வேண்டும். அல்லது அவற்றைச் சுற்றி திரிந்து உணவும், உறைவிடவும் தேடிக்கொள்ள விட்டுவிட வேண்டும். அந்த பிராணிகளை உணவாக பயன்படுத்திக்கொள்ள அனுமதி இருந்தால் அதை அதற்கு பயன்படுத்தலாம்.

 

அதிகச் சுமை

 

நபித்தோழர் அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் ஓர் ஒட்டகம் இருந்தது. அதன் பெயர் “தம்மூன்" என்பதாகும். அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் அதை யாரேனும் இரவலாக கேட்டால், ( لَا تَحمِلُوا عَلَيهِ إِِلَّا كَذَا وَكذا ، فَإِِنَّهُ لَا يُطِيقُ أَكثَرَ مِن ذٰلِكَ ) “இதை இதைத் தவிர வேறு எந்த சுமைகளையும் அதன்மீது ஏற்றாதீர்கள். ஏனெனில், இவற்றைவிடக் கூடுதலாக சுமக்கும் சக்தி அதற்கு இல்லை” என்று கூறித்தான் அவர்களிடம் ஒப்படைப்பார்கள்.

 

அபுத்தர்தா (ரலி) அவர்கள் தனது இறுதிநேரத்தில் தனது ஒட்டகத்தை நோக்கி, ( يَا دَمُّونُ ، لَا تُخَاصِمْنِي غَدًا عِندَ رَبِّي ، فَإِنِّي لَم أَكُن أَحمِلُ عَلَيكَ إِلَّا مَا تُطِيقُ )  தம்மூனே! நாளை (மறுமையில்) அல்லாஹ்விடம் என்மீது புகார் சொல்லிவிடாதே. ஏனெனில், உன்னால் சுமக்க முடியும் அளவுக்குத்தான் உன்மீது நான் பாரத்தை ஏற்றினேன்” என்று கூறினார்கள். நூல்:- தாரீக் திமிஷ்க் இமாம் இப்னு அஸாகிர், அல்வரங் இமாம் இப்னு அபித்துன்யா

 

பொருள்களை சுமந்து செல்ல பயன்படும் பிராணிகளைப் பொறுத்தவரை அவற்றால் எளிதாக சுமந்து செல்ல முடியும் அளவே சுமை ஏற்ற வேண்டும். சக்திக்கு மீறி அதை சிரமப்படுத்தக் கூடாது. இதுவே இஸ்லாமிய சட்டமாகும்.

 

நமது பராமரிப்பில் உள்ள பிராணிகளை திருட்டு, பிறரை பழி வாங்குதல், தனது உடல் இச்சையை தீர்த்துக் கொள்தல் (மனிதன் சிம்பன்சி குரங்குடன் உறவு கொண்டுதான் எய்ட்ஸ் என்ற கிருமியை உருவாக்கினான் என்பதாகவும், பெண்களில் சிலர் தமது வீட்டில் வளர்க்கும் நாயை தமது காம இச்சைக்கு பயன்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது) போன்ற தவறான செயல்களுக்கு பயன்படுத்துவது பெரும் பாவச் செயலாகும்.

 

துன்புறுத்தக் கூடாது

 

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. கோழி ஒன்றைக் கட்டி வைத்து அதன்மீது அம்பெய்து கொண்டிருந்த சிலர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைக் கண்டதும் அதை அப்படியே விட்டு விட்டு சிதறி ஓடி விட்டனர். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ( مَنْ فَعَلَ هَذَا إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَعَنَ مَنْ فَعَلَ هَذَا ) "இதை செய்தவர் யார்? இவ்வாறு செய்பவர்களை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-5515, முஸ்லிம்-3957, முஸ்னது அஹ்மத்-2345

 

கழுதை, நாய் போன்ற பிராணிகளின் வாயில்களில் பட்டாசு கட்டி வைத்து வெடிப்பது போன்ற வினை ஏற்படுத்தும் விளையாட்டுக்களை இஸ்லாம் அறவே அனுமதிப்பதில்லை. சிலர் பிராணிகளை சூதாட்டத்திற்கு பயன்படுத்தின்றனர். சிலர் கேளிக்கைகளுக்காகவும் விளையாட்டுக்காகவும் பிற உயிரினங்களை கொன்று வருகின்றனர். அதனை பாவம் என்றுகூட எண்ணுவதில்லை.

 

மிருகங்களை மோதவிட்டு அவை சண்டையிட்டு செத்து மடிவதை கேளிக்கையாக ஆக்கி, அவற்றிற்கு விழா நடத்தும் வைபவங்கள் இன்னும் இந்த உலகில் பல நாடுகளில் இருக்கின்றன. ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகளுக்கு அதன் வாயில் மதுவை ஊற்றி அதற்கு வெறிஏற்றிவிட்டு, அதை அடக்குவது வீரம் என்று எண்ணும் போது தான் அந்த மாடுகளால் மனிதனுக்கு துன்பம் ஏற்படுகிறது. இது மனிதர்களுக்கு பொழுதுபோக்கு; அந்த மிருகங்களுக்கு அவை வாழ்வா? மரணமா? என்ற போராட்டமாகும்.

 

சரியாக குறி பார்த்து அம்பு எறிவதற்கோ, துப்பாக்கிச் சுடுவதற்கோ பொருளாக உயிரினங்களை ஆக்கக்கூடாது. புலியை வேட்டையாட ஆட்டை கட்டி வைப்பதும், மீனைப் பிடிக்க மண்புழுவை பயன்படுத்துவதும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இதனால் தான் நபித்தோழர்கள் மரங்களின் இலைகளைகூட தேவையின்றி பறிக்க மாட்டார்கள்.

 

விஷ நாக்கு

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்த போது ஒரு பெண் ஒட்டகம் ஒன்றில் அமர்ந்திருந்தார். அந்த ஒட்டகம் முரண்டுபிடித்த போது அப்பெண் அந்த ஒட்டகத்தை சபித்தார். இதை செவியுற்ற நபியவர்கள், ( خُذُوا مَا عَلَيْهَا وَدَعُوهَا فَإِنَّهَا مَلْعُونَةٌ ) "அதன் மீது உள்ளவற்றை அகற்றிவிட்டு, அதை விட்டு விடுங்கள். ஏனெனில், அது சாபத்திற்குள்ளானதாகும்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5058, அபூதாவூத்-2198

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ تَسُبُّوا الدِّيكَ فَإِنَّهُ يُوقِظُ لِلصَّلاَةِ ) சேவலை திட்டாதீர்கள். ஏனெனில், அது உங்களை (அதிகாலையில்)  தொழுகைக்காக எழுப்பிவிடுகிறது. அறிவிப்பாளர்:- ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4437

 

நாம் பயன்படுத்தும் பிராணிகளை குறிப்பாக, ஒட்டகம் போன்ற கால்நடைகளை சபிக்கலாகாது. நமது தேவைக்காக பிராணியை பயன்படுத்திவிட்டு, அதை வார்த்தைகள் மூலமாகவோ, உடலளவிலோ எத்தகைய வதையும் செய்யக்கூடாது. தேவைப்படும்போது அரவணைத்தல் பின்னர் எட்டி உதைத்தல் என்ற கொடூர மனப்பான்மை மனிதர்களிடம் வந்து விடக்கூடாது என்பதையே இந்த நபிமொழி எச்சரிக்கிறேன்.

 

உயிரற்ற பொருள்களுக்கு வேண்டுமானால், (Use and through) "பயன்படுத்திவிட்டு எறிந்து விடலாம்" என்ற வாசகம் பொருந்தலாம். உயிரினங்களையும் அதே போன்று பயன்படுத்தினால் அதைவிட நன்றி கெட்டத்தனம் எதுவும் இருக்க முடியாது.

 

மேற்காணும் நபிமொழியில் சேவலையும் அதன் பயனையும் மட்டுமே குறிப்பிட்டிருந்தாலும், அல்லாஹ்வால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் மனிதனுக்கு ஏதாவது ஒரு வகையில் பயனளிக்கிறது. ஆகவே, பிற உயிரினங்களை ஏசுவதும், இழிவாக கருதுவதும் கூடாது.

 

காகம் பறப்பதும், ஆந்தை அலறுவதும், பூனை குறுக்கே செல்வதும் ஆகியவற்றை அபசகுனமாக எண்ணுவதை இஸ்லாம் தடுக்கிறது.

 

பிற உயிரினங்களின் யதார்த்தமான சில செயல்கள் அபசகுனமாக கருதுவதால், தேவையின்றி அந்த உயிரினங்களின் மீது வெறுப்பு உண்டாக, அதை அடித்து துரத்தும், துன்புறுத்தும் எண்ணம் உண்டாகலாம் என்பதற்காகவும் அபசகுணம் தடுக்கப்பட்டதின் காரணங்களில் ஒன்றாகும்.

 

பாச உணர்வு

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். நபியவர்கள் மலம் ஜலம் கழிக்க சென்றார்கள். நாங்கள் தாய் குருவியுடன் சேர்ந்து இரு குஞ்சுகள் இருப்பதைக் கண்டோம். நாங்கள் (தாய்க்குருவியை விட்டுவிட்டு) அதன் இரு குஞ்சுகளையும் பிடித்துக்கொண்டோம்.

 

அப்போது தாய் பறவை (எங்கள் அருகில்) வந்து தனது சிறகுகளை விரித்து (பதற்றத்தால்) அடித்துக்கொண்டது. நபியவர்களும் வந்து விட்டார்கள். அப்போது நபியவர்கள், ( مَنْ فَجَعَ هَذِهِ بِوَلَدِهَا ) "இந்த பறவையின் குஞ்சுகளைப் பிடித்து வைத்துக்கொண்டு இதற்குத் துன்பம் அளித்தவர் யார்?" என்று கேட்டு, ( رُدُّوا وَلَدَهَا إِلَيْهَا ) "அதன் குஞ்சுகளை அதனிடத்தில் விட்டு விடுங்கள்" என்று அறிவுறுத்தினார்கள். நூல்:- அபூதாவூத்-2300

 

பிற உயிரினங்களின் சிசுக்களை அதன் தாயிடம் இருந்து பிரிப்பது பாவச் செயலாகும். மனிதர்களுக்கு பாச உணர்வுகள் இருப்பதைப் போன்று பிற உயிரினங்களுக்கும் தாய் குட்டிகளுக்களுக்கிடையில் பாச உணர்வு உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. தாய்ப்பறவையிடமிருந்து குஞ்சுகளைப் பிரிப்பதை கடிந்துக்கொண்ட அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பரிவை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மனிதர்களின் இதயங்களின் விசாலமான கருணைச் சிந்தையை விதைத்துவிட எண்ணினார்கள். பிற உயிரினங்களின் மீது கருணை காட்டும் பண்பை பெற்றவர்கள் ஒருபோதும் மனிதனான தமது சகோதரனிடம் கருணையற்று கடுமையாக நடந்து கொள்ள மாட்டார்கள் என்பதே நபியவர்களின் தொலைநோக்கு சிந்தனையாகும்.

 

இறைவனின் குடும்பம்

 

பூமியில் உள்ள எந்த உயிரினமானாலும், தன்னுடைய இரு இறக்கைகளால் பறந்து செல்லும் எந்த பறவையானாலும் அவையும் உங்களைப் போன்ற இனங்கள் தான். திருக்குர்ஆன்:- 6:38

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். சூரியன் மறைந்துவிட்டால் இரவின் (ஆரம்ப நேர) இருள் விலகும்வரை உங்கள் கால்நடைகளையும், குழந்தைகளையும் வெளியே விடாதீர்கள். ஏனெனில், ஷைத்தான்கள் சூரியன் மறைந்துவிட்டால் இரவின் (ஆரம்ப நேர) விலகும்வரை கிளம்பிச் செல்கின்றனர். நூல்:- முஸ்லிம்-4101

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اَلخَلقُ عِيَالُ اللَّهِ، فَأَحَبُّ الخَلقِ إلَى اللَّهِ مَن أَحسَنَ إلىَ عِيَالِهِ ) படைப்பினங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பமாகும். யார் அவனது குடும்பத்தாரிடம் நல்ல முறை நடந்துக்கொள்கிறாரோ அவரே படைப்பினங்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானவர் ஆவார். அறிவிப்பாளர்:-  அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- அல்பஸ்ஸார், அபூயஅலா, தப்ரானீ, ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, முஸனது ஃபிர்தவ்ஸ் இமாம் தைலமீ

 

தமது குழந்தைகளை பாதுகாத்து பராமரிப்பதுபோல் நமது பராமரிப்பில் உள்ள உயிரினங்களையும் பரிவோடு பாதுகாக்க வேண்டும் என்கிறது இந்த நபிமொழி.

 

நமது பராமரிப்பில் உள்ள உயிரினங்களாக இருந்தாலும், வெளியே சுற்றித் திரியும் உயிரினங்களாக இருந்தாலும் அவற்றிடம் கருணையோடு நடந்துகொண்டால் அதன்மூலம் அல்லாஹ்வின் பிரியத்தைப் பெறலாம். இதனால் தான் இஸ்லாமியச் செல்வந்தர்களில் சிலர் வித்தியாசமான அறக்கட்டளைகளை உருவாக்கினார்கள்.

 

வித்தியாசமான அறக்கட்டளை

 

மாராஜ் – இ - அக்சர் (Maraj - E - Akzhar) இது டமாஸ்கஸ் நகரில் உள்ள ஒரு அறக்கட்டளையாகும். இங்கு பறந்து விரிந்த நிலப்பரப்புகளில் மேய்ச்சல் நிலங்களை உருவாக்கி, அதனை தங்கள் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட குதிரைகளின் உணவறைகளாக பயன்பட வேண்டும் என்று உயிர் எழுதி வைக்கப்பட்டது. இந்த குதிரைகள் இவற்றில் தங்கள் ஆயுள் உள்ள வரைக்கும் மேய்ந்தன.

 

டமாஸ்கஸ் நகரில் உள்ள மற்றொரு அறக்கட்டளை, பூனைகளுக்காகவே உருவாக்கப்பட்டது. பூனைகளுக்கு இங்கே உணவும் உறைவிடமும் அளிக்கப்பட்டன. அவற்றிற்காக கட்டப்பட்ட வீடுகளில் நூற்றுக்கணக்கான பூனைகள் வாழ்ந்தன. இங்கு பூனைகளுக்கு உணவும், உறைவிடமும் கிடைத்துக் கொண்டிருந்ததால், அவை அங்கிருந்து வெளியே செல்லவில்லை. அவை வெளியே சென்றதெல்லாம் விளையாடவும் குதூகளித்திருக்கவுமே.

 

இங்கே சில நிலப்பரப்புகளை தானமாக வழங்கி அதில் வயது முதிர்ந்த பிராணிகளின் உணவாக பயன்படும் செடி, கொடிகளையும் வளர்க்க பயன்படுத்தப்பட வேண்டும் என்று உயில் எழுதி வைத்தார்கள்.

 

மென்மை வேண்டும்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ اللَّهَ كَتَبَ الإِحْسَانَ عَلَى كُلِّ شَىْءٍ  وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ فَلْيُرِحْ ذَبِيحَتَهُ ) அல்லாஹ் எல்லாவற்றிலும் எளிய முறையை விதியாக்கியுள்ளான். (பிராணிகளை) அறுக்கும்போதுகூட எளிய முறையில் அறுங்கள். உங்களில் ஒருவர் அறுப்பதற்கு முன் கத்தியை தீட்டிக்கொள்ளட்டும். அறுக்கப்படும் பிராணியை ஆசுவாசப்படுத்தட்டும். அறிவிப்பாளர்:- ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-3953, அபூதாவூத்-2432, திர்மிதீ-1329, நசாயீ-4329

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் கத்தியை தீட்டியடியே ஆட்டைப் படுக்க வைத்தார். அதைக் கண்ட பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், ( أَتُرِيدُ أن تُمِيتَهَا مَوتَاتٍ هَلَّا حَدَدتَ شَفرَتَكَ قَبلَ أَن تُضجِعَهَا )  "இதை ஒருமுறை கொல்வதற்கு நாடுகிறாயா? அல்லது பலமுறை கொல்வதற்கு நாடுகிறாயா? அதை படுக்க வைக்கும் முன்பே மறைவாக கத்தியைத் தீட்டியிருக்க வேண்டாமா?" என்று அறிவுறுத்தினார்கள். நூல்:- ஹாகிம், தப்ரானீ,  பைஹகீ

 

அபூசயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரை கடந்து சென்றார்கள். அவர் ஆட்டின் காதைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றார். அப்போது நபியவர்கள், ( دَعْ أُذُنَهَا وَخُذْ بِسَالِفَتِهَا ) "அதன் காதை விட்டுவிடு. (சிரமம் ஏற்படாத வகையில்) அதன் பிடரியைப் பிடித்துச் செல்" என்று கூறினார்கள். நூல்:- இப்னுமாஜா-3162

 

பிராணிகளை அறுக்கும்போது அவற்றை சித்திரவதை செய்யக்கூடாது. எளிய முறையில் அதன் கழுத்தை அறுத்து அதன் உயிர் பிரிய வகை செய்ய வேண்டும். அதற்காக கத்தியை கூர்மையாகத் தீட்டிக்கொள்ள வேண்டும். அதன் பின் அறுத்தால் அதன் உயிர் எளிதாக பிரிந்துவிடும். அறுக்கப்படும் பிராணிக்கு முன்பாகவே கத்தியை தீட்டுவதையும், வேறு ஒரு பிராணிக்கு முன்னால் ஒரு பிராணியை அறுப்பதையும்கூட தவிர்க்க வேண்டும்.

 

அறிவியல் ரீதியாக

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், ( بِحَدِّ الشِّفَارِ وَأَنْ تُوَارَى عَنِ الْبَهَائِمِ وَقَالَ ‏ )  கத்தியை நன்கு தீட்டிக்கொள்ளுமாறும், (மற்ற) கால்நடைகளிலிருந்தும் அதை மறைத்துக்கொள்ளுமாறும் கட்டளையிட்டார்கள். மேலும், ( إِذَا ذَبَحَ أَحَدُكُمْ فَلْيُجْهِزْ ) உங்களில் எவரேனும் (பிராணியை) அறுத்தால், அவர் அதை விரைவாகவும் முழுமையாகவும் செய்துகொள்ளட்டும். நூல்:- இப்னுமாஜா-3163

 

பிராணியின் கழுத்தை அறுக்கும்போது அதன் மூச்சுக்குழல் மற்றும் மூளைக்கு இரத்தம் பாயும் இருபுறநாளங்களை மட்டுமே துண்டிக்க வேண்டும். முதுகு தண்டவடம் அறுபடாதவாறு கவனித்துக் கொள்ள வேண்டும். (அதுவே இஸ்லாமிய சட்டத்தின்படி பிராணிகளை அறுக்கும் முறையாகும்) இம்முறையில் அறுக்கும்போது மூளைக்கு பாயும் இரத்தம் தடைபடுவதால் ஒரு நொடியில் பிராணி உணர்விழந்து வலியை உணரும் சக்தி உடனே இழந்து விடுகிறது. முதுகு தண்டுவடம் அறுக்கப்படாதவாறு இருப்பதால் மூளைக்கும் உடலுக்கும் இடையே உள்ள தொடர்பு நீடிக்கிறது.

 

மூளையின் இயக்கத்திற்கு தேவையான இரத்தம் பாய்வது தடைபடுவதால், வேண்டிய அளவு இரத்தத்தை அனுப்பி வைக்குமாறு பிராணியின் இதயத்திற்கு நரம்புகள் மூலம் மூளை மற்றும் முதுகு தண்டுவடம் செய்தி அனுப்புகிறது. எனவே, இதயத்தின் இயக்கம் அதிகரிக்கின்றது இதய இயக்கத்திற்கு தேவையான இரத்தம் உடலின் பாகங்களிலிந்து அனுப்பப்படுவதற்காக பிராணியின் உடல் தசைகள் வேகமாக துடிக்கிறது. அதன் மூலம் தசைகள் விரைந்து சுருங்கி அவற்றில் தங்கி உள்ள இரத்தத்தை வெளியேற்றுகிறது. எனவே இரத்தம் நீங்கி தசைகள் தூய்மை பெறுகின்றன. தூய்மை பெற்ற தசைகள் உண்பதற்கு ஏற்றதாக அமைகிறது.

 

பிராணியின் தலையில் அடித்தோ அல்லது அதன் கழுத்தை முறித்தோ கொள்ளும்போது அது அதற்கான வலியை உணர்கிறது. அதன் இதய இயக்கம் நின்று விடுகிறது. அதனால் இரத்தம் வெளியேற வழியின்றி தசைகளில் தங்கிவிடுகிறது. எனவே, தசையில் தூய்மையற்றதாக ஆகிவிடுகிறது. (இது தவறான முறையாகும்) என்ற இந்த அறிவியல் தகவலை ஜெர்மன் நாட்டின் ஹனோவர் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்குல்ட்ஸ் அவருடன் பணிபுரியும் டாக்டர் ஹாஷிம் ஆகிய இருவருமே E.E.G. (Electro  Encophalo Gram மூளையின் இயக்கத்தை கணிக்கும் கருவி) மற்றும் E.C.G. (Electro Cardio Gram) இதய இயக்கத்தை கணிக்கும் கருவி) என்ற தொழில்நுட்ப கருவிகள் மூலம் ஆராய்ந்து கண்டறிந்தனர். உயிரினங்களின் இரத்தம் அசுத்தமானது என்பது மற்றொரு அறிவியல் செய்தியாகும்.

 

ஒரு பிராணியை அறுக்கும்போது அறுபட காத்திருக்கும் மற்ற பிராணிகளின் பார்வையில் படாதவாறு அறுக்க வேண்டும் என்பது இஸ்லாமிய போதனையாகும். இவை அறிவியல் ரீதியாக சரி காணப்பட்டிருக்கிறது. அறுபடும் பிராணியை பார்க்கும் மற்றொரு பிராணிக்கு ஏற்படும் பயம், அது உடலில் சில இரசாயன மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. அதன் விளைவாக பிராணியின் இறைச்சியில் சுவை குறைந்துவிடுகிறது என்பதையும் ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

 

பயன்கள் ஏராளம்

 

அவர்களுக்கு அவற்றை நாம் பணியச் செய்துள்ளோம். அவற்றில் அவர்களுக்கான வாகனங்களும் உள்ளன. அவற்றில் சிலவற்றை அவர்கள் உண்ணவும் செய்கின்றனர். அவற்றில் அவர்களுக்கு(ப் பல்வேறு) பயன்களும் பானங்களும் உள்ளன. எனவே, அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா? திருக்குர்ஆன்:- 36:72 ,73

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِيَّاكُمْ أَنْ تَتَّخِذُوا ظُهُورَ دَوَابِّكُمْ مَنَابِرَ فَإِنَّ اللَّهَ إِنَّمَا سَخَّرَهَا لَكُمْ لِتُبَلِّغَكُمْ إِلَى بَلَدٍ لَمْ تَكُونُوا بَالِغِيهِ إِلاَّ بِشِقِّ الأَنْفُسِ ) உங்களின் வாகனப் பிராணிகளின் முதுகுகளை (நிற்கும்) மேடைகளாக ஆக்கிக்கொள்வதை நான் எச்சரிக்கிறேன். நிச்சயமாக அல்லாஹ், மிகுந்த சிரமத்துடன் அன்றி உங்களால் செல்ல முடியாத (தொலைவான) ஊருக்கு உங்களைச் சுமந்து செல்வதற்காகவே அதை உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-2204, பைஹகீ, இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான், ஹாகிம்

 

மனித வாழ்வின் நலனில் கால்நடைகளுக்கு மகத்தான பங்கு இருக்கிறது. அவற்றின் பால் மனிதனுக்கு வலுவையும் பொலிவையும் கொடுக்கிறது. புதுப்பொலிவூட்டும் புரதச்சத்து மிக்க பாலை பூரண (Complete food) உணவு என்பர். ஏனெனில், பாலில் 3.6% கொழுப்பு, 3.3% புரதச்சத்து, 4.8%  கார்போ ஹைட்ரேட்,  0.7% தாது சத்து, 87.8%  தண்ணீர் மற்றும் வைட்டமின், கால்சியம், பாஸ்பேட் ஆகியவை அடங்கியுள்ளன.

 

பால் மருந்தாகவும் பயன்படுகிறது. நோயாளிகளுக்காக தயாரிக்கப்படும் விசேஷ உணவு வகைகளில் பாலே முக்கியத்துவம் பெறுகிறது. மாத்திரை மருந்துகளால் ஏற்படும் வயிற்றுப் புண்ணை பால் குணப்படுத்தும் திறன் வாய்ந்தது. பால் பல சுவையான உணவுப் பொருள்களை தயாரிக்க பயன்படுகிறது.

 

கால்நடைகளின் தோல்களில் நீங்கள் வீடுகளாக அமைக்க (வசதியான விதத்தில்) உங்களுக்காக அவன் படைத்திருக்கிறான். திருக்குர்ஆன்:- 16:80

 

அக்காலத்தில் மக்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றின் இறைச்சியை உணவாக உண்டு எஞ்சியிருக்கும் தோலைப் பதப்படுத்தி தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு கூரைகளாகவும், தண்ணீர் கொண்டு வரும் துருத்திகளாகவும், காகிதங்களை இப்போது எழுத பயன்படுத்துவது போல் அக்கால மக்கள் தோல்களில் எழுதியும் வந்தனர்.

 

இறைவேதமான திருக்குர்ஆனை கால்நடைகளின் தோல்களிலும், எலும்புகளிலும் எழுதி வந்தனர் என்பதை நபிமொழிகளின் மூலம் அறிய முடிகிறது.

 

ஆனால், இக்காலத்தில் அரிய விலங்கினங்களான புலி, மான், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, நீலத்திமிங்கலம், முதலை போன்றவை அவற்றின் இனமே அழியும் வரை வேட்டையாடப்படுவது தான் வேதனைக்குரிய விஷயம். இவ்விலங்கினங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கின்றன. இவ் விலங்கினங்களுக்கு அழகிய தோல் இருப்பதால் தோலுக்கு மட்டுமே அவற்றைக் கொல்லப்படுகிறது.

 

அல்லாஹ் திருக்குர்ஆனில் மனிதர்கள் வளர்க்கும் கால்நடை பிராணிகளின் தோலை தான் மனித பயன்பாட்டுக்கு அனுமதிக்கிறானே தவிர, காட்டு விலங்குகளின் தோல்களை அல்ல என்பதை சிந்தித்துணர வேண்டும்.

 

மாட்டின் தோலை ஏற்றுமதி செய்வதால் ஆண்டுதோறும் நமது நாட்டுக்கு 3,150 கோடி வருமானம் கிடைப்பதாகவும், தோல் தொழிற்சாலைகள் மூலம் 15 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவதாகவும் தோல் ஏற்றுமதி கவுன்சில் தலைவர் கூறுகிறார். நன்றி:- தினமணி 2-8-2003

 

குளிர்காலத்தில் குளிரிலிருந்து நம்மை காப்பது கம்பளி ஆடைகளே. அந்த கம்பளி ஆடைகளை தருவது செம்மறி ஆடுகளே. செம்மறியாட்டின் உடலில் வளரும் உரோமமே கம்பளி எனப்படும். கோடை காலம் தொடங்கும் போது செம்மறி ஆட்டின் உரோமங்கள் பெரிய கத்தரி கொண்டு வெட்டப்பட்டு, அதில் உள்ள முட்கள், அழுக்கு, எண்ணெய் பிசுக்குகள் நீக்கப்படுகின்றன. இயந்திரங்களின் உதவியால் சுருட்டை உரோமங்கள் ஒரே சீராக நீட்டப்படுகிறது. பின்னர் அதை கம்பளி நூல்களாக நூற்று, இந்த நூலை நெய்தோ அல்லது பின்னியோ கம்பளி ஆடைகளாக தயாரிக்கப்படுகிறது. "மெரினா" இன ஆடுகளின் கம்பளி மிகவும் சூடானது. கம்பளி உற்பத்தியில் ஆஸ்திரேலியா முதல் இடமும், அமெரிக்கா இரண்டாவது இடமும் வகிக்கிறது. நன்றி:- தினத்தந்தி: 29-9-2004

 

கருணையின் வட்டத்தை மனிதர்களுடன் சுருக்கிக் கொள்ளாமல் அதனுள் பிற உயிரினங்களையும் இணைத்துக்கொண்டு அதன்மூலம் இறையன்பைப் பெறுவோமாக! ஆமீன்!

 

(இந்தக் கட்டுரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

1 comment:

  1. மாஷா அல்லாஹ் சிறந்த ஆய்வுகள். உயர்ந்த முயற்சிகள். அல்லாஹ் உங்களது அற்பணிப்பு பணியை கபூல் செய்து அருள்வானாக ஆமீன்

    ReplyDelete

குறைகளை ஏற்றுக்கொள்வோம்

  குறைகளை ஏற்றுக்கொள்வோம்   وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ قَالَ فَعَلْتُهَا إِذًا وَأَنَا مِنَ الضّ...