Search This Blog

Thursday, 29 October 2020

கண்ணுப்படப் போகுதுங்க...

 

கண்ணுப்படப் போகுதுங்க...


قال الله تعالي : وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ

 قال رسول الله صلي الله عليه وسلم : اَلْعَيْنُ حَقٌّ لتُورِدُ القَبرَ وَالجَمَلَ القِدرَ وَاِنَّ اَکثَرَ هَلَاكِ اُمَّتِي فِي العَینِ


மனம் உற்று நோக்கும் பார்வையை கண்ணேறு, கண்படுதல், திருஷ்டி என்றும் கூறுவர். சிலர் பொறாமையோடு, அல்லது ஏக்கத்தோடு ஒரு பொருளைப் பார்க்கும்போது, பார்க்கப்படும் பொருளில் இறைவன் ஒரு சில பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறான். இதனால் உண்ணப்படும் பொருளானால் அது விஷத்தன்மை உடையதாக மாறி, அதை உண்பவருக்கு ஏதேனும் தீங்கு நேரலாம். இத்தகைய கண்பார்வை உடையோர் ஒருவரைப் பார்த்தால் அவருக்கு ஏதேனும் தொல்லை நேரலாம். பொறாமையுடனோ ஏக்கத்துடனோ பார்ப்பவரின் கண்ணிலிருந்து ஒரு வகை நஞ்சு வெளியேறி காற்றில் கலந்து எதிராளியின் உடலை அடைகிறது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.


கண்வலி உள்ளவரின் கண்ணைப் பார்ப்பவருக்கும் கண்வலி வருவதும், ஒருவர் கொட்டாவி விட்டால் அது மற்றவரையும் தொற்றிக்கொள்வது இதற்கு எடுத்துக்காட்டுகளாகும் என சில அறிஞர்கள் விவரிக்கிறார்கள்.


மேலும் இந்தக் கண்ணேறு மரம், மட்டை, தோட்டம், பிராணிகள், பயிர்கள், அழகிய கட்டிடங்கள் போன்றவற்றையும் தாக்கலாம்.


காரணம் எதுவாயினும் சில கண்களுக்குப் பொருட்களையும் உயிரினங்களையும் பாதிப்படையச் செய்கின்ற சக்தியை இறைவன் அளித்துள்ளான் என்பது மட்டும் உண்மையாகும். விஷம் அருந்தும்போது உயிருக்கு ஆபத்தை நேர்வதை போன்றே கண்பார்வையால் பாதிப்புக்கள் நேருகின்றன. இரண்டையும் இறைவனே உருவாக்கினான். இவ்வாறு கண்ணேறு ஏற்பட்டுவிட்டால் அதைப் போக்க ஓதி பார்க்குமாறு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.


கல்லடி பட்டாலும் படலாம். கண்ணடிப்படக்கூடாது என்பது சொல்வழக்கு.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 ( الْعَيْنُ حَقٌّ لتُورِدُ القَبرَ وَالجَمَلَ القِدرَ وَاِنَّ اَکثَرَ هَلَاكِ اُمَّتِي فِي العَینِ )   நிச்சயமாக கண்ணேறு (உயிரோடிருக்கும்) ஒரு மனிதனை மண்ணறைக்குள் நுழையச் செய்து விடும். (உயிரோடிருக்கும்) ஒரு ஒட்டகத்தை (சமையல்) பாத்திரத்திற்குள் நுழைய செய்துவிடும். என் சமுதாயத்தில் அதிகமானவர்களின் அழிவு கண் திருஷ்டியினால் தான் ஏற்படும். அறிவிப்பாளர்:- ஜாபிர் (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர் அல்கலம் வசனம்-51


அதாவது மனிதனுக்கு கண்ணேறு ஏற்பட்டால் அதன் தீங்கினால் இறந்து மண்ணறைக்குள் போய்விடுவான். ஒட்டகத்துக்கு கண்ணேறு ஏற்பட்டுவிட்டால் அது அதன் விளைவால் அறுக்கப்பட்டு இறைச்சியாக சமைக்கப்பட்டு விடும்.


பதினோரு ஆண்மக்கள்


(இறைத்தூதர் யாகூப் - அலை அவர்கள் தமது மக்களை நோக்கி!) “என் அருமை மக்களே! (எகிப்தில் நீங்கள் அனைவரும்) ஒரே வாசலில் நுழையாதீர்கள். வெவ்வேறு வாசல்கள் வழியாக (தனித் தனியாக) நுழையுங்கள்” என்று கூறினார்.    திருக்குர்ஆன்:-12:67


இறைத்தூதர் யஃகூப் (அலை) அவர்கள் தனது பதினோரு ஆண்மக்களையும் எகிப்துக்கு சென்று உணவுப்பொருட்கள் வாங்கி வர ஏற்பாடு செய்து முடித்த போது, அவர்கள் நகருக்குள் ஒரே தலை வாசல் வழியாக நுழைய வேண்டாம் என்றும், பல வாசல்கள் வழியாக நுழையுமாறும் அறிவுறுத்தினார்கள்.


இப்னு அப்பாஸ் (ரலி), சுத்தீ (ரஹ்) உள்ளிட்டோர் கூறியதாவது. காரணம், யஃகூப் (அலை) அவர்களின் பதினோரு ஆண் மக்களும் அழகும் வனப்பும் மிக்கவர்களாக இருந்தனர்; எழில்மிகு தோற்றமும் வசீகரமான வடிவமும் அவர்களுக்கு இருந்தது. அவர்கள் மீது மனிதர்களின் கண் பட்டுவிடுமோ என்று அன்னார் அஞ்சினார்கள். (இதைப்பற்றி மேற்காணும் திருவசனம் 12:67 எடுத்துரைக்கிறது.) நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்


படுதோல்வி கண்டது


وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ


தூயோன் அல்லாஹ் தன்னுடைய தூதருக்குக் கூறுகின்றான்: (நபியே) இறை நிராகரிப்பாளர்களான இவர்கள் (குர்ஆன் எனும்) நல்லுபதேசத்தை செவியுறும் போதெல்லாம் தங்களின் கூர்பார்வைகளால் (முறைத்து) உம்மைச் சறுக்கி விழவைக்க பார்க்கிறார்கள். திருக்குர்ஆன்:- 68:51


மக்காவில் "பனீ அஸத்"  கோத்திரத்தில் சிலர் இருந்தனர். அவர்களது பார்வையிலும் நாவிலும் கொடிய விஷமிருந்தது. ஏதேனும் ஒரு பொருளைப் பார்த்து "இது நன்றாக இருக்கிறதே" என அவர்கள் கூறினால், அது கெட்டுவிடும். உயிருள்ள ஒன்றைப் பார்த்து, "ஆஹா! இது அழகாகவும் கவர்ச்சிகரமாகவும் இருக்கிறதே" என்று சொல்லிவிட்டால், போதும் அது இறந்துவிடும்.


நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் நபித்துவத்தைக் கண்டு பொறாமைப்பட்டு அதை மறுப்பதற்கு எத்தனையோ வழிகளை கையாண்டும் ஒன்றுமே வெற்றி பெறாத காரணத்தினால், அண்ணலார் பிரச்சாரம் செய்யும் போதும், திருக்குர்ஆனை இனிமையாக போதும் "இது நல்ல சாதுரியமான பேச்சாக இருக்கிறதே, இந்த ஓதுதல் எவ்வளவு அழகாக இருக்கிறது" எனக் கூறி கண் திருஷ்டி ஏற்படுத்துவதில் கைதேர்ந்த பனூ அஸத் கோத்திரத்திலுள்ள ஒருவனைக் கொண்டு அண்ணலாருக்கு கண்திருஷ்டி ஏற்படுத்த முடிவு செய்தனர்.


அவனது கண் திருஷ்டியை மேலும் வலுவடையச் செய்ய மூன்று நாட்கள் அவனை கொடிய பட்டினியில் வைத்தனர். எனினும் எதிரிகளின் சதி முயற்சி அண்ணலாரின் விஷயத்தில் படு தோல்வி கண்டது.            நூல்:- தஃப்சீர் குர்துபீ, தஃப்சீர் பஙவீ, தஃப்சீர் காஸின், தஃப்சீர் ஹக்கானீ


மேனியழகு


அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை என் தந்தை சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் சென்றார்கள். (என் தந்தையின் கட்டுடலைப் பார்த்து வியப்படைந்த) ஆமீர் (ரலி) அவர்கள், "இன்று போல் என்றும் நான் கண்டதில்லை; முக்காடுக்குள் இருக்கும் இளம் பெண்ணின் மேனியைக்கூட (இந்த அளவுக்கு வெண்மையாக) நான் கண்டதில்லை" என்று சொன்னார்.


இவ்வாறு அவர் சொன்னதுதான் தாமதம் என் தந்தை சஹ்ல் (ரலி) அவர்கள் மூர்ச்சையாகி கீழே சரிந்தார்கள். உடனே அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டது. "சஹ்லைப் பாருங்கள்; அவர் ஏதோ தாக்கி மூர்ச்சையாகிவிட்டார்" என்று சொல்லப்பட்டது. அண்ணலார், ( هَلْ تَتَّهِمُونَ لَهُ أَحَدًا ) "நீங்கள் யாரையாவது சந்தேகப்படுகிறீர்களா?" என்று வினவினார்கள்.


'ஆமிர் பின் ரபீஆ' என்று மக்கள் கூறினர். அண்ணலார், ( عَلَامَ يَقْتُلُ أَحَدُكُمْ أَخَاهُ ، أَلَّا بَرَّكْتَ ) "உங்களில் ஒருவர் தம் சகோதரரை ஏன் கொல்ல வேண்டும்" சகோதரரிடம் வியப்புக்குரிய ஒன்றைப் பார்த்தால், அவருக்காக அருள்வளம் வேண்டி பிரார்த்திக்க வேண்டும்" என்று கூறினார்கள்.


பின்னர் (ஒரு பாத்திரத்தில்) தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, அந்தத் தண்ணீரில் ஆமீரை உளூச் செய்யச் சொன்னார்கள். அதன்படி அவர் தம் முகத்தையும், முழங்கைகள் வரை இரண்டு கைகளையும், தன் இரண்டு கரண்டைக் கால்களையும், தம் கீழாடையின் உள் பகுதியையும் கழுவினார். அந்தத் தண்ணீரை அவர் (சஹ்ல்) மீது ஊற்றுமாறு ஏவினார்கள். கழுவிய தண்ணீர் ஊற்றப்பட்டதும் அவர் எழுந்து மக்களோடு சென்றார்.              நூல்:- இப்னுமாஜா, முஸ்னது அஹ்மது, முவத்தா மாலிக்-1715


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْعَيْنُ حَقٌّ وَلَوْ كَانَ شيء سَابَقَ الْقَدَرَ سَبَقَتْهُ الْعَيْنُ وَإِذَا اسْتُغْسِلْتُمْ فَاغْسِلُوا ) கண்ணேறு உண்மையாகும். தலைவிதியை ஏதேனும் ஒன்று வெல்ல முடியுமானால் கண்ணேறு அதை வென்றிருக்கும். (கண்ணேறுக் காரணமான) உங்களிடம் குளித்துக் கொள்ளுமாறு கூறப்பட்டால் குறித்துக் கொள்ளுங்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4405, திர்மிதீ-1988, முஸ்னது அஹ்மத்


கண்ணேறு பாதிப்பு நேரும் என்பது உண்மையே. எனினும், அதுவும் தலைவிதிக்கு உட்பட்டு, அதற்கேற்ப நடப்பது தான்; விதியை மிகைத்தன்று.


அடுத்து யார் கண்பட்டு பாதிப்பு ஏற்பட்டதோ அவர் உறுப்புகளைக் கழுவிக் குளித்துக் கொண்டால் கண்ணேறு கண்டவருக்குப் பாதிப்பு நீங்கும் என்ற நடைமுறை அன்று அறியப்பட்டிருந்தது. அவ்வாறு குணம் ஏற்படும் என்றிருப்பின் அவ்வாறே செய்து கொள்ளலாம் என்று அனுமதியளித்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள், "கண்ணேறுக்கு யார் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறதோ அவரிடம் அவ்வாறு குளித்துக் கொள்ளுமாறு வேண்டப்பட்டால் அவர் அதற்கு இணங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்கள்.


நீண்ட நாட்களானாலும்...


ராபிஊ (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அண்ணலாரின் இல்லத்தில் ஒரு பாத்திரத்தில் கொழுப்புடன் கூடிய இறைச்சித் துண்டு இருந்தது. அது எனக்கு சாப்பிட விருப்பமாக இருந்தது. அதை எடுத்து விழுங்கி விட்டேன். அதன் பின்னர் ஒரு வருடமாக வயிற்று வலியினால் அவதிப்பட்டேன். அண்ணலாரிடம் இதை தெரிவித்தேன். அதற்கு அண்ணலார், "நீ சாப்பிட்ட இறைச்சியின் மீது ஏழு பேருடைய கண் இருந்தது" எனக் கூறினார்கள். பின்பு என் வயிற்றை தன் கையால் தடவினார்கள். பின்னர் பச்சையாக வாந்தி எடுத்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! கூறுகிறேன். அதன்பிறகு இந்த நேரம் வரை வயிற்றில் வலி ஏற்பட்டதில்லை. நூல்:- பைஹகீ


மருத்துவம்


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலி அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (தம் பேரர்களான) ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) ஆகியோருக்காக அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரி (பிரார்த்தித்து) வந்தார்கள்.

أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ (பொருள்: அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும், விஷக்கடியிலிருந்தும், தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் உங்களிருவருக்காக இறைவனிடம் பாதுகாப்பு கோருகிறேன்.)


மேலும் இவ்வாறு தான் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் புதல்வர்களான இஸ்ஹாக் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோருக்காக பாதுகாப்புக் கோரி (பிரார்த்தித்து) வந்தார்கள் என்றும் அண்ணலார் கூறுவார்கள். நூல்:- புகாரீ-3371, திர்மிதீ-1986


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( أَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ أَمَرَ أَنْ يُسْتَرْقَى مِنَ الْعَيْنِ )  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்ணேறுவி(ன் தீய விளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டார்கள். நூல்:- புகாரீ-5738


சில கண்களுக்குப் பொருட்களையும் உயிரினங்களையும் பாதிப்படையச் செய்கின்றன சக்தியை இறைவன் அளித்துள்ளான் என்பது மட்டும் உண்மையாகும். விஷம் அருந்தும்போது உயிருக்கு ஆபத்தை நேர்வதை போன்றே கண்பார்வையால் பாதிப்புக்கள் நேருகின்றன. இரண்டையும் இறைவனே உருவாக்கினான். இவ்வாறு கண்ணேறு ஏற்பட்டுவிட்டால் அதைப் போக்க ஓதி பார்க்குமாறு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.


அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் (அருமை நாயகம் - ஸல் அவர்களிடம்) "நாயகமே! ஜஅஃபர் (ரலி) அவர்களின் பிள்ளைகளுக்கு வெகு சீக்கிரம் கண்ணேறு ஏற்பட்டு விடுகிறது. ஆகவே, அவர்களுக்காக நான் ஓதிப்பார்க்கலாமா?" என்று கேட்டேன். அதற்கு அண்ணலார்,  ( نَعَمْ فَإِنَّهُ لَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرَ لَسَبَقَتْهُ الْعَيْنُ )   "ஆம்! (ஓதிப்பார்க்கலாம்); ஏனெனில், விதியை ஏதேனும் ஒன்று முந்த முடியுமென்றால் இந்த கண்ணேறு அதை முந்தி விடும்" என்றார்கள். நூல்:- திர்மிதீ-1985


அதாவது இறைவன் வகுத்த விதியை மீறுகின்ற சக்தி எதற்கேனும் இருப்பதாக வைத்துக்கொண்டால் அது கண்ணேறாகத்தான் இருக்கும். கண்ணேறுக்கே அந்தச் சக்தி இல்லை எனும்போது வேறொன்றுக்கு எப்படி அது இருக்கும்? ஏனெனில், கண்ணேறால் ஒரு பாதிப்போ அழிவோ ஏற்படின், அது இறைவனின் செயலாலேயே ஏற்படுகிறது. பார்வையுள்ள ஒருவர் மற்றொருவரைப் பார்க்கும்போது பாதிப்பு உண்டாகும் என்ற நிலையை அல்லாஹ் தான் உருவாக்குகிறான். நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ


கையில் ரிமோட் கண்ட்ரோலை வைத்துக்கொண்டு கண்களுக்குப் புலப்படாத கதிர்களை பாய்ச்சி டிவி, கணினி மற்றும் சாட்டிலைட்களை இயக்குகிறோம். ரிமோட் கண்ட்ரோலைக் கையில் வைத்துக் கொண்டு பூமியில் இருந்தபடி பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் பறந்து கொண்டிருக்கும் ராக்கெட்டை திசை திருப்புகிறோம். அதில் உள்ளவர்களுக்கு மருத்துவம் செய்கிறோம். அதன் கோளாறுகளை சரி செய்கிறோம். கைகளை அசைத்தால் கதவு திறக்கிறது.


எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் கருவிகள் பாய்ச்சும் கண்களுக்கு புலப்படாத கதிர்கள் மூலம் படம் பிடித்து உடலிலுள்ள நோய்களை கண்டறிகிறோம். மேலும் அவைகளை கொண்டே மருத்துவமும் செய்கிறோம். இப்படியே ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போகலாம். கண்களின் செயல்பாடுகள் இந்த வகையைப் போன்றதுதான். ஆம்! சிலருடைய தீய பார்வை பட்ட உடனேயே பாதிப்பை உண்டு பண்ணிவிடும். வியக்கத்தக்க விளைவுகளை உண்டு பண்ணிவிடும்.


பேரறிஞர் அல்லாமா இப்னு கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். கண் திருஷ்டியிட்டவர் இன்னாரென்று அறியப்பட்டால் (அதாவது யாருடைய கண் பட்டதோ) அவரை முதலில் உளூ செய்துகொள்ளும்படி கூற வேண்டும். பின்பு அவரைக் கொண்டே, கண் திருஷ்டினால்  பாதிக்கப்பட்டவரை (அதாவது யாருக்கு கண்பட்டதோ அவரை)க் குளிப்பாட்டி விடச் சொல்ல வேண்டும். நூல்:- ஸாதுல் மஆத்


வரம்பு மீறக்கூடாது

  

உஸ்மான் (ரலி) அவர்கள் ஓர் அழகிய சிறுவனைக் கண்டார்கள். அதன் பிறகு, ( دَسِّمُوا نُونَتَهُ لِئَلَّا تُصِيبَهُ الْعَيْنُ ) "இவனுக்குக் கண்ணேறு படாமல் இருக்க இவனுடைய கன்னக்குழியில் கருப்பு மையைத் தீட்டி வையுங்கள்" என்று கூறினார்கள். நூல்:- ஷரஹுஸ் ஸுன்னா, ஃகரீபுல் ஹதீஸ் இமாம் கத்தாபீ, அத்திப்புந் நபவீ இமாம் இப்னு கய்யிம்


அபூஹுரைரா ரலி அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் ( الْعَيْنُ حَقٌّ ‏"‏‏.‏ وَنَهَى عَنِ الْوَشْمِகண்ணேறு ஏற்படுவது உண்மையே என்று சொன்னார்கள். மேலும் பச்சை குத்திக் கொள்வதை தடை செய்தார்கள். நூல்:- புகாரீ-5740, முஸ்லிம்-4404


அறியாமைக் காலத்தில் கண்ணேறுவைப் போக்க அல்லது திருஷ்டி கழிக்க சிலர் பச்சை குத்திக் கொள்வது உண்டு. அவ்வாறு செய்யக்கூடாது என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆகவே திருஷ்டி கழிக்க மார்க்கம் அனுமதிக்காத வழிமுறைகளை கையாள கூடாது.


கடைகளில்  கண்திஷ்ட்டி ஏற்படாதிருக்க கல்லாவுக்கு அருகில் கையாட்டிப் பொம்மையை வைப்பது. அல்லது மீன் தொட்டி வைப்பது. புது கட்டிடங்களில் கண்திஷ்ட்டி ஏற்படாதிருக்க வைக்கோல் பொம்மை அல்லது பெரிய பூசணிக்காயைத் தொங்க விடுவது. இவை மூடநம்பிக்கையேயாகும்.


கண் திருஷ்டி போக்க ஏதேதோ பொருட்களைக் கொண்டு ஆரத்தி எடுத்து விட்டு அதில் மூன்று முறை எச்சில் துப்புவது, பூசணிக்காயை தலையில் மூன்று முறை சுற்றிவிட்டு அதை தெருவில் போட்டு உடைப்பது. அல்லது காய்ந்த மிளகாய், உப்பு, முச்சந்தி மண், வீட்டுக் கூறையின் ஓலை இது போன்றவை எடுத்து கண்திருஷ்டிப்பட்டவரின் தலையில் மூன்று முறை சுற்றி நெருப்பில் போடுவது இந்த பழக்கம் பிற சமயத்தவர்களின் பழக்கம். எனவே, இம்முறைகளை கையாள இஸ்லாம் அனுமதிக்கவில்லை.


கண்ணேறு நீங்க, திருக்குர்ஆனின் வசனங்கள் மற்றும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆக்களை (பாதுகாப்பு ஸ்லோகங்களை) கொண்டு மந்திரித்துக் கொள்ளலாம். ஆனால் இதன் பயன், இதனை அல்லாஹ்வின் ஆற்றல் மீது திடமான நம்பிக்கை கொண்டும், மனத்தூய்மையுடன் ஆன்மா ஆற்றலோடும்  நம்பிக்கையோடும் ஓகின்றோமோ அதைப் பொறுத்துத்தான் அமையும். இதற்கு அப்பாற்பட்டு ஏகத்துவக் கொள்கைக்கு எதிரான வார்த்தைகளைக் கொண்டு மாந்திரீகர்கள், பூசாரிகள், பாதிரியார்களிடம் போய் மந்திரித்தால் அது இணைவைத்தலாகும் என்று நினைவில் கொள்ள வேண்டும்.


அருள்வளம் பொழிவாயாக!


ஹிஷாம் பின் உர்வா (ரஹ்)  அவர்கள் தம் தந்தையிடமிருந்து அறிவிக்கிறார்கள். என் தந்தை ஆச்சரியப்படத்தக்க எதையாவது பார்த்தால் அல்லது ஒரு தோட்டத்தில் நுழைந்தால் ( مَا شَاءَ اللّٰهُ لَا قُوَّةَ اِلَّا بِاللّٰهِ ) "மாஷா அல்லாஹ் லா குவ்வத்த இல்லா பில்லாஹ்" என்று கூறுவார்கள். நூல்:- அத்திப்புந் நபவீ இமாம் இப்னு கய்யிம்


பிறர் பார்ப்பதால் மட்டும்தான் நமக்கு திருஷ்டி ஏற்படும் என்று எண்ண வேண்டாம். சில சமயங்களில் நம் கண்களால் கூட நமக்கு திருஷ்டி உண்டாகலாம்.


ஒருவர் நம் கண்ணால் பிறருக்கு கண்ணேறு ஏற்பட்டுவிடும் என அஞ்சினால், ( اَللَّهُمَّ بَارِكْ عَلَيْهِ )  "அல்லாஹும்ம பாரிக் அலைஹி" (இறைவா! அவருக்கு அருள் வளத்தை ஏற்படுத்துவாயாக!) என்றும், அல்லது ( مَا شَاءَ اللّٰهُ لَا قُوَّةَ اِلَّا بِاللّٰهِ ) "மாஷா அல்லாஹ் லா குவ்வத்த இல்லா பில்லாஹ்" (அல்லாஹ் நாடியது நடந்து விட்டது. அல்லாஹ்வைக் கொண்டே தவிர எந்த ஆற்றலும் இல்லை) இது போன்ற வார்த்தைகளை சொல்வதன் மூலம் தன் கண்ணால் பிறருக்கு துன்பம் ஏற்படாமல் தடுக்கலாம்.


பேரறிஞர் இப்னு கைய்யிம் (ரஹ்)  அவர்கள் கூறுகிறார்கள். கண்ணேறு ஏற்படுத்துபவருக்குப் பார்வைத்திறன் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சிலவேளை அவர் பார்வை அற்றவராக இருக்கலாம். பார்வைத்திறன் இல்லாமலேயே அவரின் ஆன்மாவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் உண்டு. ஏதேனும் பொருள் குறித்து அவரிடம் விவரிக்கப்படலாம். அப்போது அவர் அதை பார்க்காவிட்டாலும் அவரது ஆன்மா தாக்கத்தை ஏற்படுத்தும். கண்ணேறு ஏற்படுத்துவோருள் மிகுதியானோர், நேரடியாகப் பார்க்காமலேயே விவரித்துக் கூறப்பட்டதை வைத்தே தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். நூல்:- அத்திப்புந் நபவீ


ஜின்களால்


கண்ணேறு இரண்டு வகை. 1) மனிதக் கண்ணேறு, 2) ஜின்களின் கண்ணேறு.


உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. அண்ணலார், ( اِسْتَرْقُوا لَهَا، فَإِنَّ بِهَا النَّظْرَةَ )  "இவளுக்கு ஓதிப் பாருங்கள். ஏனெனில், இவள் மீது கண்ணேறு பட்டிருக்கிறது" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-5739


ஹுசைன் பின் மஸ்ஊத் அல்பர்ராஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. இந்நபிமொழியில் இடம்பெற்றுள்ள கண்ணேறு என்பது ஜின்களின் கண்ணேறு ஆகும் அதாவது ஜின்களின் பார்வையால் இவளுக்கு கண்ணேறு ஏற்பட்டுள்ளது என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


அபூசயீது (ரலி) அவர்கள் கூறியதாவது. ( أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ مِنَ الْجَانِّ، وَمِنْ عَيْنِ الْإِنْسَانِ ) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஜின்களுடைய கண்ணேறிலிருந்தும் பின்னர் மனிதர்களின் கண்ணேறிலிருந்தும் பாதுகாப்புத் தேடுபவர்களாக இருந்தார்கள். நூல்:- இப்னுமாஜா


ஓதிப் பார்ப்போம்!


அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு முறை  அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கவலையுடன் இருந்தபோது ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்து,  "நாயகமே! உங்கள் கவலைக்கு காரணம் என்ன? என்று வினவினார்கள்.  அண்ணலார், "தனது பேரர்களான ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) இருவருக்கும் கண் திருஷ்டி ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.


அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், "கண் திருஷ்டி உண்மையானதுதான். அதற்கு இந்த வார்த்தைகளைக் கொண்டு அக்குழந்தைகளுக்கு பாதுகாப்புத் தேட வேண்டாமா?" என்று கூறிவிட்டு பின்வருமாறு ஓதிக்காட்டினார்கள்.


اَللّٰهُمَّ ذَا سُلطَانِ العَظِیمِ وَالمَنَّ القَدِیمِ ذَا الوَجهِ الکَرِیمِ وَلِيَ الکَلِمَاتُ التَّمَّاتُ وَالدَّعَوَاتُ المُستَجَابَاتُ عَافِ الحَسَنَ وَالحُسَینَ مِن اَنفُسِ الجِنِّ وَاَعیُنِ الاِنس


(பொருள்: பேரரசுக்கு சொந்தக்காரனே! பூர்வீகமான உபகாரத்திற்கு உரியவனே! சங்கையான முகத்திற்கு உரியவனே! பரிபூரணமான வார்த்தைகளுக்கும் அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனைகளுக்கும் பொறுப்புதாரியே! ஹசன், ஹுசைன் இருவருக்கும் ஜின்களின் கெடுதியிலிருந்தும், மனிதர்களின் கண் திருஷ்டியிலிருந்தும் சுகமளிப்பாயாக!)


அண்ணலார் அதை ஓதினார்கள். உடனே அவர்களின் முன்னிலையிலேயே இரண்டு குழந்தைகளும் எழுந்து விளையாடினர். அப்போது அண்ணலார்,  "உங்களுக்கும், உங்கள் மனைவியருக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் இதன் மூலம் பாதுகாப்பு தேடுங்கள். ஏனெனில் பாதுகாப்பு தேடக்கூடிய எவரும் இது போன்றதைக் கொண்டு பாதுகாப்புத் தேடுவதில்லை" என்று கூறினார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர் அல்கலம் வசனம்-52


நம் வீட்டுக் குழந்தைகள், பெண்கள் மீது இத்தகையவர்களின் கழுகுக் கண்கள் தாக்கும்போது, அவர்கள் எளிதில் நோய்வாய்ப்படுகிறார்கள். வழக்கமாக நம் வீடுகளுக்கு வந்து செல்பவர்கள் கூட இவ்வகைக் கண்ணுடையவர்களாக இருக்கலாம். எனவே, அவர்களிடம் இருந்து நம்மையும்,  நம் குடும்பத்தாரையும், நம் உடமைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது.


இமாம் அபுல் காசிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ஒருமுறை என் குழந்தை வியாதி என்று மரணத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போது ஓர் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கனவில் கண்டு என் குழந்தையின் நிலையைக் கூறி அவர்களிடம் முறையிட்டேன். உடனே அண்ணலார்,


وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُؤْمِنِينَ  (9:14), 


وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ (10:57)

            

 يَخْرُجُ مِنْ بُطُوْنِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهٗ فِيْهِ شِفَآءٌ لِّلنَّاسِ‌ 

 (16:69),

وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ (17:82), 


 وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ (26:80), 


  قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ (41:44)

ஆகிய வசனங்களை ஓதுமாறு கூறினார்கள். நான் விடிந்ததும் இவற்றை எழுதித் தண்ணீரில் கரைத்து என் குழந்தைக்கு ஊட்டினேன். குழந்தை விரைவில் சுகம் அடைந்தது.


அபூஅப்தில்லாஹ் அத்தய்யாஹீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் ஹஜ்ஜுக்காக ஒரு ஒட்டகத்தில் பயணம் செய்தேன். பயண கூட்டத்தில் ஒருவன் இருந்தான். அவன் பார்ப்பதெல்லாம் அழிந்துவிடும். அவன் குறித்து என்னிடம், ( اِحْفَظْ نَاقَتَكَ مِنَ الْعَائِنِ ) "உங்களின் ஒட்டகத்தை இவனிடமிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்" எனக் கூறப்பட்டது. அப்போது நான் ( لَيْسَ لَهُ إِلَى نَاقَتِي   )என்னுடைய ஒட்டகத்திற்கு ஒன்றும் ஆகாது என்று கூறினேன். இவ்வாறு நான் கூறியதைப்பற்றி அவனிடம் தெரிவிக்கப்பட்டது.


எனவே, அவன் நான் இல்லாத நேரத்தை கவனித்துக் கொண்டே இருந்து, என் ஒட்டகத்திடம் வந்து, அதனைப் பார்த்தான். உடனே அது திடுக்கிட்டுக் கீழே விழுந்து விட்டது. பின்னர் நான் வந்ததும் அது குறித்து என்னிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே நான், ( دِلُّونِي عَلَيْهِ ) “அவனை எனக்குக் காட்டுங்கள் என்று சொன்னதும் அவனை எனக்குக் காட்டினார்கள். அப்போது நான்,


بِسمِ اللّٰهِ، حَبسٌ حَابِسٌ، وَحَجَرٌ يَابِسٌ، وَشِهَابٌ قَابِسٌ، رَدَدْتُ عَيْنَ الْعَائِنِ عَلَيْهِ، وَعَلَى أَحَبِّ النَّاسِ إِلَيْهِ، فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرى مِنْ فُطُورٍ، ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ خاسِئاً وَهُوَ حَسِيرٌ


(பொருள்:  அல்லாஹ்வின் பெயரால் தடை ஏற்படுத்தக்கூடிய தடை, காய்ந்த கல், கொளுத்தப்பட்ட தீப்பந்தம் இவற்றைக் கொண்டு பொறாமைக்காரனின் கண்ணேறுவை அவன் மீதும் அவனுக்கு பிரியமானோர் மீதும் நான் திருப்பி விட்டு விட்டுவிட்டேன். மற்றொரு முறை அதைக் கவனித்துப் பார். அதில் யாதொரு பிளவையும் நீ காண்கிறாயா? பின்னரும் இருமுறை பார்! இவ்வாறு நீ எத்தனை முறை துருவித்துருவிப் பார்த்த போதிலும் யாதொரு குறையும் காண முடியாது. உன்னுடைய பார்வைதான் அலுத்து, கேவலமுற்று உன்னிடம் திரும்பிவிடும்.)


என்று ஓதினேன். உடனே கண்ணேறிலிருந்து விடுபட்ட என்னுடைய ஒட்டகம், அதற்கு எதுவும் ஏற்படாததைப்போல் எழுந்தது. நூல்:- அத்திப்புந் நபவீ இமாம் இப்னு கய்யிம்


ஹசன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். தம் மீதும், தம் பொருட்களின் மீதும் கண் திருஷ்டிப்படும் என்று சந்தேகிப்பவர் திருக்குர்ஆனின் "அல்கலம்" அத்தியாயத்திலுள்ள கடைசி இரண்டு வசனங்களை  மூன்று தடவைகள் ஓதி ஊதிக் கொள்ளவும்.


தேளின் கொடுக்கிலும், பாம்பின் பல்லிலும் அல்லாஹுத்தஆலா விஷத்தை வைத்திருப்பது போல் சில மனிதர்கள் கண்களிலும் ஒரு வித விஷத்தை வைத்திருக்கிறான்.


நமக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளை பிறரிடம் எடுத்துரைத்து வீண்பெருமை பேசும்போது, அதனால் நம்மீது சிலருக்கு பொறாமை எண்ணம் உண்டாகி அவர்களின் கண்ணேறுக்கு நாம் ஆளாகிவிட நேரும். எனவே இதைத் தவிர்க்க வேண்டும்.


யாருக்கு கண்படும் என்று அஞ்சப்படுகிறதோ, அவருக்கு அழகு தரும் பகுதியை (கவர்ச்சியை) மூடி மறைத்துக் கொள்வதன் மூலம், பிறர் வியக்க வைக்கும் வண்ணம் நகைகள் மற்றும் ஆடை அலங்காரம் செய்து அழகுபடுத்திக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்வதன் மூலம் கண்படுவதைப் பெருமளவு தடுக்கலாம்.


ஜின், ஷைத்தான் தீங்குகளை விட்டும், நம்மால் பிறருக்கும், பிறரால் நமக்கும் கண்திஷ்ட்டி ஏற்பட்டுவிடாமலும் அல்லாஹ் நம்மையும், நமது குடும்பத்தினரையும் பாதுகாப்பானாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

கர்பலாவை நோக்கி!

  கர்பலாவை நோக்கி!   لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ لِأُولِي الْأَلْبَابِ அறிவுடையவர்களுக்கு இவர்களுடைய வரலாறுகளில் படிப்பினை நி...