Search This Blog

Thursday, 29 October 2020

சஹர் - இஃப்தார்

 

சஹர் - ப்தார்


وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ


இருள் விலகி விடியலின் வெளிச்சம் உங்களுக்கு தெளிவாக தெரியும் வரை (ஃபஜ்ரு வரை) உண்ணங்கள்; பருகுங்கள். பின்னர் இரவு (தொடங்கும்) வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்.    திருக்குர்ஆன்:-2:187


இஸ்லாமிய மார்க்கம் ஒவ்வொரு வழிபாட்டுக்கும் சில ஒழுக்க நெறிகளை கற்றுத்தந்துள்ளது. அதன் வரிசையில் நோன்பு நோற்பதற்கும் சில சட்ட வரம்புகள் உண்டு. நோன்பின் தொடக்கமும், முடிவுமான சஹர் - இஃப்தார் உடைய சிறப்புகள் மற்றும் சட்டங்கள் சிலவற்றை அறிந்து கொள்வது அவசியமாகும்.


தஹஜ்ஜுத் நேரம்


(நபியே!) இரவில் ஒரு பகுதியில் (விழித்து) தஹஜ்ஜுத் எனும் தொழுகையை அதை (குர்ஆனை)க் கொண்டு நிறைவேற்றுவீராக!     திருக்குர்ஆன்:- 17:79


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உயர்வும் வளமும் மிக்க நம் இறைவன் ஒவ்வொரு இரவிலும், இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இருக்கும் போது (தஹஜ்ஜுத் நேரத்தில்) கீழ் வானத்திற்கு இறங்கி வந்து, ( مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ ) "என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன், என்னிடம் யாரேனும் (தன் தேவையைக்) கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் எவரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்" என்று கூறுகிறான்.    அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்   நூல்:- புகாரீ-1145


சஹர் நேரம் ஓர் இனிய நேரம்! அந்நேரத்தின் முற்பகுதியை தஹஜ்ஜுத் தொழுவதற்கும் பிற்பகுதியை சஹர் உணவு உண்ணுவதற்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


ரமளான் மாதத்தில் அவசியமாக அதிகாலை ஃபஜ்ருக்கு முன்பே எழ வேண்டியதிருப்பதால் அந்த மாதம் முழுவதும் தஹஜ்ஜுத் எனும் சிறப்புக்குரிய தொழுகை தொழுவதற்கு பாக்கியம் கிடைக்கிறது.


பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் அந்த நிசப்தமான புனித நேரத்தில் தஹஜ்ஜுத் தொழுதுவிட்டு நமது தேவைகள், மனக்குறைகள் அனைத்தையும் அல்லாஹ்விடம் பிரார்த்தனையின் மூலம் விண்ணப்பிக்கலாம். எனவே ரமளான் மாத இறைவழிபாட்டுப் பட்டியலில் தஹஜ்ஜுத் தொழுகையும் இடம்பெறச் செய்ய வேண்டும்.


தற்காலத்தில் தஹஜ்ஜுத் தொழுகையையும் பிரார்த்தனைகளையும் கெடுப்பதற்காக ஷைத்தான் ஒரு செயலை நமக்கு நல்லதாக காட்டுகிறான். அது தான் தொலைக்காட்சியில் சஹர் நேர பயான்கள், மார்க்க விளக்க கேள்வி பதில்கள். இவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிவையே!


ஒவ்வொரு வழிபாட்டிற்கும் ஒவ்வொரு நேரம் உண்டு. இமாம் ஜமாஅத் எனும் கட்டாயத் தொழுகை கூட்டாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இதர தொழுகைகள் கூடாது. ரமளான் மாதத்தில் இதர நோன்புகள் கூடாது. ஹஜ்ஜுடைய குறிப்பிட்ட நாட்களில் உம்ரா செய்வது கூடாது. இது போலவே சஹருடைய நேரம் என்பது தஹஜ்ஜுத் தொழுகை மற்றும் பிரார்த்தனைக்குரிய நேரமாகும்.


அந்நேரத்தில் மார்க்க விளக்கங்களை கேட்டுக் கொண்டிருப்பது சரியல்ல. சஹர் சிந்தனை எனும் பெயரில் சொற்பொழிவாற்றுபவர்களுக்கே இது தவறு என்று தெரியும். கேட்ட, மார்க்க விளக்கங்களை அமல்படுத்தும் நேரம் இது! குறிப்பாக தஹஜ்ஜுத் எனும் தொழுகை அந்நேரத்தில் மட்டுமே தொழ முடியும் என்று விளங்க வேண்டும்


அருள்வளம் கிடைக்கும்


நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள். ( تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً ) சஹர் செய்யுங்கள். ஏனெனில் சஹர் செய்வதில் அருள்வளம் (பரக்கத்) உள்ளது.     அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ- 1923, முஸ்லிம்-2000


நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள். ( فَصْلُ مَا بَيْنَ صِيَامِنَا وَصِيَامِ أَهْلِ الْكِتَابِ أَكْلَةُ السَّحَرِ ) நமது நோன்பிற்கும் வேதக்காரர்களின் உபவாசத்திற்கும் உள்ள வேறுபாடு சஹர் நேரத்தில் உண்பதுதான்.  அறிவிப்பாளர்:- அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-2001


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى المُتَسَحِّرِینَ ) நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது வானவர்களும் சஹர் சாப்பிடுகின்றவர்கள் மீது சலவாத்துக் கூறுகின்றனர். (அல்லாஹ் அவர்கள் மீது தன் அருள்வளத்தைப் பொழிகிறான். வானவர்கள் அவர்களுக்காக பிரார்த்திக்கிறார்கள்.) அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, இப்னு ஹிப்பான், முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-328


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( ثَلَاثَةٌ لَیسَ عَلیهِم حِسَابٌ فِیمَا طَعِمُوا اِن شَاءَ اللّٰهُ اِذَا کَانَ حَلَالً الصَّائمُ وَالمُتَسَحِّرُ وَالمُرَابِطُ فِی سَبِیلِ اللّٰهِ மூன்று சாராருடைய உணவு ஹலாலானதாக இருந்து, அல்லாஹ் நாடினால் அந்த உணவைப் பற்றி அவர்களிடம் எந்தவொரு கேள்வி கணக்கும் இல்லை. 1) நோன்பாளி 2) சஹர் உணவு உண்பவர் 3) அல்லாஹ்வின் பாதையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள்   நூல்:- பஸ்ஸார், தப்ரானீ, முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-329


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( تَسَحَّرُوْا وَلَوْ بِجَرعَةٍ مِن مَاءٍ'நீங்கள் சஹர் சாப்பிடுங்கள். அது ஒரு மிடர் தண்ணீரானாலும் சரியே'     அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- இப்னு ஹிப்பான், முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-330


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் சஹர் செய்து விட்டுப் பின்னர் (ஃபஜ்ரு) தொழுகைக்குத் தயாராவோம் என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் ( كَمْ كَانَ قَدْرُ مَا بَيْنَهُمَا ) “சஹருக்கும் (ஃபஜ்ரு) தொழுகைக்குமிடையே எவ்வளவு இடைவெளி இருக்கும்? என்று வினவினேன். அதற்கு ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் ( خَمْسِينَ آيَةً ) “(குர்ஆனிலுள்ள) ஐம்பது வசனங்கள் (ஓதும் நேரம்)” என்று பதிலளித்தார்கள்.       நூல்:- முஸ்லிம்-2002, திர்மிதீ-638


சூரிய உதயத்திற்கு முன்பிருந்து - அதாவது ஃபஜ்ரின் ஆரம்பித்திலிருந்து - சூரியன் மறையும் வரை உணவு, பானம், பாலுறவு ஆகியவற்றை இறைவனுக்காகக் கைவிடுவதே நோன்பு எனப்படுகிறது. இவ்வாறு நோன்பைத் தொடங்குவதற்கு முன்பு, உணவு உண்டு ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கே 'சஹர்' எனப்படும்.


(பரக்கத் எனும்) அருள்வளம் என்பது ஒரு பொருள் பல்கி பெருகுவதும், அது குறைந்த அளவில் இருந்தாலும் அதைக்கொண்டே அனைத்து தேவைகளும் பூர்த்தியாகுவதுமாகும். எனவே இந்த அருள்வளம் என்பது மனித திறமை, முயற்சியை சார்ந்ததல்ல. அது அல்லாஹ் கொடுப்பதாகும்.


சஹர் உணவு குறைவாக இருந்தாலும் அதன் மூலம் நிறைவையும், ஆரோக்கியத்தையும், நல்லெண்ணங்களையும், நற்செயல் புரிவதற்கான பலத்தையும் அல்லாஹ் கொடுப்பது தான் அருள்வளம் ஆகும். இறைவனின் அருள்வளத்தைப் பெற நாம் சிரமப்பட வேண்டியதில்லை. சஹர் நேரத்தில் சாப்பிட்டாலோ அல்லது சிறிதளவு தண்ணீர் பருகினால் கூட போதும் நமக்கு அருள்வளம் கிடைத்துவிடும். மேலும் வானவர்களின் பிரார்த்தனையும் கிடைத்துவிடும். அந்நேரத்தில் நம் வீட்டு சிறு பிள்ளைகளையும் எழுப்பி சில கவளம் உணவு ஊட்டுவது மூலம் அவர்களுக்கும் அருள்வளம் கிடைத்து விடும்.


சிலர் சஹர் உணவை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அது தவறிவிட்டாலும் வருந்துவதில்லை. சிலரோ தன் தூக்கத்திற்கு ஆசைப்பட்டு அல்லது தனது பொடுபோக்குத்தனத்தால்  தராவீஹ் தொழுகைக்கு பின் ஒரேடியாக சாப்பிட்டு விட்டு நிய்யத் வைத்து தூங்கி விடுகின்றனர். இத்தகையவர்கள் மகத்தான நன்மைகளைப் பெறாத துர்ப்பாக்கியவான்களாக ஆகிவிடுகின்றனர்.


மனிதன் தன்னுடைய இச்சைகளை அடக்க வேண்டும் என்பதற்காகத்தான் நோன்பே  விதிக்கப்பட்டுள்ளது. நோன்பு வைக்கும் போது இதை கவனமாக நாம் கடைபிடிக்க வேண்டும். முடிந்த அளவு அத்தகைய இச்சைகளை அடக்கி கொள்ள முயற்சிக்க வேண்டும். மேலும் நோன்பு உண்டாக்கும் பட்டினியைக் கொண்டு பசியைக் கொண்டு (கெட்டதை மட்டுமே தூண்டும் மனதை) நஃப்ஸை அடக்கி ஒடுக்கி அவற்றின் மூலம் ஆன்மாவை திடகாத்திரமாய் வளர்த்து ஆளாக்க வேண்டும்.


ஆனால், தற்காலத்தில் நோன்பு காலங்களில் இச்சைகளை மனிதன் அடக்க முடியாமல் தோற்றுப் போய்க் கொண்டே வருகிறான். இந்த தோல்வியின் காரணமாக ஒழுக்கக் குறைபாடுகள், மார்க்க ரீதியான குறைபாடுகள் ஏற்பட்டு விடுகிறது. ரமளான் மாதம் என்பது சாப்பிடுவதற்கு என்றே உள்ள மாதமாக இன்று மாறி வருகிறது. இந்த மாதத்தில் சாப்பாட்டுக்கு என்று எவ்வளவுதான் செலவு செய்தாலும் அதைப் பற்றி எல்லாம் அல்லாஹ் விசாரிக்கவே மாட்டான் என்று கூட சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


கொஞ்சம் பொருளாதார பலமுள்ளவர்களாக இருந்துவிட்டால் அப்புறம் சொல்லவே வேண்டியதில்லை. உண்ணுவதற்கு என்றே உண்டான மாதமாக இந்த ரமளான் மாதம் பரிதாபத்திற்குரியதாக ஆகிவிடுகிறது. வயிற்றுக்கு வசந்த காலமாக ரமளான் மாறி வருகிறது. இது மிகவும் வருத்தப்பட வேண்டிய கைசேதத்திற்குரிய செயலாகும். காலை முதல் மாலை வரை இன்று என்னென்ன உணவுகளை சமைக்கலாம்; எந்த வகையான மெனுவை தயாரிக்கலாம் என்று திட்டமிடுவதிலேயே கழிகின்றது. பிறகு இஃப்தாரில் இருந்து சஹர் வரைக்குமான நேரத்தை தங்கள் வயிற்றை கவனிப்பதற்கென்றே செலவிடப்படுகிறது. இத்தகைய நோன்பு சாப்பிடும் ஆசையை தூண்டி விடுவதாக அமைந்து வருகிறது. தூண்டிவிடப்பட்ட அந்த உணர்வை அடக்குவதுதான் நோன்பின் குறிக்கோள் என்று விளங்க வேண்டுமே!


வயிறு நிரம்ப உண்ணுபவனுக்கு முதலில் அதிகமாக தூக்கம் தான் வரும். தூக்கம் அதிகம் ஏற்பட்டால் அறிவு மந்தமாகி இதயம் தன் சுய ஒளியை இழந்து விடும். இதனால் இதயம் இறுக்கமானதாக ஆகிவிடும். மேலும் உடலில் அதிக சோர்வு ஏற்பட்டு உடல் உபாதைகள் உண்டாகும். இறைவணக்கத்தில் நாட்டமும் குறைந்துவிடும்.


சஹரின் நேரம் இரவின் பிற்பகுதியிலிருந்து (அதாவது இரவின் மூன்றாவது பகுதியின் தொடக்கமான  இரவு சுமார் இரண்டு மணியிலிருந்து) ஃபஜ்ரு வரை உள்ளது. இருப்பினும், இறுதி நேரத்தில்-அதாவது ஃபஜ்ருக்கு சற்று முன்பு சஹர் உணவு உண்ணுவதே சுன்னத் எனும் நபிவழியாகும். உற்சாகத்துடன் நோன்பை மேற்கொள்ளவும் சிரமத்தைக் குறைக்கவும் இது உதவும். சஹர் நேரத்தின் முற்பகுதியில் உண்டுவிட்டால் ஃபஜ்ரு தொழுகை சந்தேகமாகிவிடும்.


சஹரின் முடிவு நேரம் தான் சுப்ஹின் ஆரம்ப நேரம். எனவே சஹர் முடியும் அந்த சுப்ஹின் ஆரம்ப நேரத்திலேயே பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு வரை சஹர் உணவு சாப்பிடலாம். ஆனால் சுப்ஹின் நேரம் வந்து 10 அல்லது 20  நிமிடங்கள் கழித்தே பாங்கு சொல்லப்படும் இடங்களும் உள்ளன. அந்த இடங்களில் நாம் பாங்கு வரை சஹர் உணவு சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் நோன்பே உண்டாகாது.


மேலும் சுப்ஹு எனும் அதிகாலையின் ஆரம்பித்திலேயே பாங்கு சொல்லப்படுகிறது என்றாலும், சஹரின் முடிவுக்கும்-பாங்குக்கும் மத்தியில் திருமறையின் 50 வசனங்கள் ஓதும் அளவுக்கு நேர இடைவெளி வேண்டும் என்று நபிமொழி கூறுவதால் சுமார் 10 அல்லது 15 நிமிடங்களுக்கு முன்பு சஹர் உணவை முடித்துக் கொள்வது விரும்பத்தக்கதாகும். சஹருக்கும்- ஃபஜ்ரு தொழுகைக்கும் இடைப்பட்ட அந்த குறுகிய நேரத்தில் குர்ஆன் ஓதுதல், திக்ரு செய்தல், இஸ்லாமிய நூல்கள் வாசித்தல், ஆகியவற்றில் ஈடுபடலாம்.


அந்த அடிப்படையில்தான் சஹர் - இஃப்தார் அட்டவணைகளில் பேணுதலுக்காக 10 அல்லது 15 நிமிடங்களுக்கு முன்பே சஹர் முடிவு நேரம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் பின்பற்றுவதே பேணுதலாகும்.


சிலர் நோன்பை நிய்யத் செய்து விட்டால் அதன் பிறகு எதுவும் உண்ணக்கூடாது என்று எண்ணுகின்றனர். இது தவறாகும். நாம் எவ்வளவு முன் கூட்டியே நிய்யத் செய்தாலும் நோன்பு ஆரம்பமாவது ஃபஜ்ரு உதயத்திலிருந்து தான். இதுவே மார்க்கம் நிர்ணயித்த நேரமாகும்.


உதவி உபகாரம்


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ غَيْرَ أَنَّهُ لاَ يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا ) நோன்பு துறக்க நோன்பாளிக்கு யார் உதவுகிறாரோ அவருக்கு, நோன்பாளிக்குக் கிடைக்கும் நன்மையைப் போன்று கிடைக்கும்; அதே நேரத்தில் நோன்பாளிக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் குறைந்துவிடாது.  அறிவிப்பாளர்:- ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள்    நூல்:- திர்மிதீ -735, இப்னுமாஜா, இப்னுஹிப்பான்


நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் ( مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ عِتْقُ رَقَبَةٍ وَمَغْفِرَةٌ لِذُنُوبِهِ ) "நோன்பு துறக்க நோன்பாளிக்கு யார் உதவுகிறாரோ, அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், நரகத்திலிருந்து அவர் விடுதலை பெறுவதற்கும் அது காரணமாகி விடும்என்று கூறினார்கள்.

 

அப்போது நபித்தோழர்கள், ( يَا رَسُولَ اللهِ، لَيْسَ كُلُّنَا يَجِدُ مَا يُفَطِّرُ الصَّائِمَ ) “நாயகமே! எங்களில் அனைவரும் நோன்பாளிக்கு நோன்பு துறக்க உணவளிக்கும் சக்தி உடையவர்களாக இல்லையே?” என்று வருந்தினர். அப்போது அண்ணலார், ( يُعْطِي اللَّهُ هَذَا الثَّوَابَ مَنْ فَطَّرَ صَائِمًا عَلَى مَذْقَةِ لَبَنٍ أَوْ تَمْرَةٍ أَوْ شَرْبَةِ مَاءٍ، وَمَنْ أَشْبَعَ صَائِمًا كَانَ لَهُ مَغْفِرَةٌ لِذُنُوبِهِ وَسَقَاهُ اللَّهُ مِنْ حَوْضِي شَرْبَةً لَا يَظْمَأُ حَتَّى يَدْخُلَ الْجَنَّةَ، وَكَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَجْرِهِ شَيْئًا ) "ஒரு நோன்பாளிக்கு பேரிச்சம்பழம் அல்லது ஒரு மிடறு தண்ணீர் அல்லது ஒரு மிடறு பால் ஏதேனும் ஒன்றைக் கொண்டு நோன்பு துறக்க உதவினாலும் சரியே! அல்லாஹ் அவருக்கும் இந்தளவு நன்மைகளை வழங்குவான். யார் நோன்பாளிக்கு வயிறு நிரம்ப உணவளிக்கிறாரோ அதுவே அவரின் பாவங்கள் மன்னிக்கப்பட காரணமாகும். மேலும் (மறுமை நாளில்) அவர் சொர்க்கம் நுழையும் வரை தாகமெடுக்காதவாறு அல்லாஹ் அவருக்கு தடாகத்தில் இருந்து தண்ணீர் புகட்டுவான். மேலும் நோன்பாளிக்குக் கிடைக்கும் நன்மையைப் போன்று கிடைக்கும்; அதே நேரத்தில் நோன்பாளிக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் குறைந்துவிடாது. (அதாவது, அவருக்கு அல்லாஹ் அந்த முழு நன்மையை வழங்குவான்)என்று விளக்கமளித்தார்கள்.  அறிவிப்பாளர்:- சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் நூல்:- இப்னுகுஸைமா, பைஹகீ, உம்தத்துல் காரீ 


ஹம்மாத் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் ரமளான் மாதத்தில் ஒவ்வொரு இரவிலும் 50 நபர்கள் நோன்பு துறக்க உணவு ஏற்பாடுகள் செய்து கொடுப்பார்கள். பெருநாள் அன்றைய இரவில் அவர்களுக்கு ஆடைகள் வழங்குவார்கள்.


நமது குடும்ப உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார், ஏழை எளியோர் இவர்களிலுள்ள நோன்பாளிகள் நோன்பு நோற்பதற்கும் - துறப்பதற்கும், நம்மால் முடிந்த உணவுகளை சமைத்து கொடுத்து உதவ வேண்டும். இதன் மூலம் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.


இதன் அடிப்படையில் தான் தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் ரமளான் மாதம் முழுவதும் நோன்புக் கஞ்சிக் காய்ச்சி எல்லோருக்கும் வழங்கும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது. 


ஒரு காலத்தில் கிராமங்களின் பள்ளிவாசல்களில் "இன்று நோன்புக்கஞ்சி இன்னாருடையது" என்று கரும்பலகையில் எழுதிப்போடுவார்கள். இதனால் பேணுதலாக இருக்க முடிந்தது. ஆனால் இன்று பெரும்பாலான கிராமம் மற்றும் நகரங்களிலுள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள் நோன்புக் கஞ்சிக்கு என்று பணம் தரும் அனைவரிடமும் மொத்தமாக வசூலித்து, அதிலிருந்து தினமும் நோன்பு கஞ்சிக்கு செலவளிக்கின்றனர். மொத்தமாக வசூலித்த இந்த பணத்தில் தவறான வருவாய் கலந்து விடுகிறது. இதை மறுக்க முடியாது. ஆகவே, பள்ளிவாசலின் நோன்பு கஞ்சியைத் தவிர்ந்து கொள்ளுவது பேணுதலாகும். தவறான வருவாய் மூலம் உள்ள எந்த வழிபாட்டையும் இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை.


தமிழகத்தில் சில பள்ளிவாசல்களிலும், ஹோட்டல்களிலும் சஹர் உணவுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது மகிழ்ச்சிக்குரிய செயலாக இருந்தாலும், சஹர் மற்றும் இஃப்தாருக்காக ஏற்பாடு செய்யப்படும் உணவுகளில் ஹராமான வருவாய் கலப்பதற்கு வாய்ப்புண்டு என்பதில் கவனம் தேவை.


அதனால், இது போன்ற பொது இடங்களில் சஹர் மற்றும் இஃப்தாருக்காக ஏற்பாடு செய்யப்படும் விருந்து உபச்சரிப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பது பேணுதலாகும். மாறாக ஹலால் ஹராமில் பேணுதலுள்ள, மார்க்கப்பற்றுள்ள ஒருவர் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்யும் இதுபோன்ற விருந்து உபச்சரிப்பில் கலந்து கொள்ளலாம். சுருங்கக்கூறின் சஹர் மற்றும் இஃப்தாருக்காக உணவுகள் நமது சொந்த வருமானத்தில் உள்ளதாக மட்டும் இருப்பது சிறந்தது.


இந்த சஹர் ஏற்பாடு, ஏழைகளுக்கும் மற்றும் குடும்பமின்றி ஹோட்டல்களில் சாப்பிட்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் என்பது கவனிக்கத்தக்கது.


பேரிச்சம்பழம் - தண்ணீர்


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ فَإِنَّهُ بَرَكَةٌ فَمَنْ لَمْ يَجِدْ فَلْيُفْطِرْ عَلَى مَاءٍ فَإِنَّهُ طَهُورٌ ) யாருக்கு (நோன்பு துறக்கும்போது) பேரிச்சம்பழம் கிடைக்கிறதோ அவர் அதன் மூலம் நோன்பு துறக்கட்டும். ஏனெனில் அது, (பேரிச்சம்பழம்)  பரக்கத் எனும் அருள்வளம் வாய்ந்ததாகும். கிடைக்காதவர் தண்ணீரால் நோன்பு துறக்கட்டும். தண்ணீர் தூய்மையாக்கக்கூடிய பொருளாகும்.  அறிவிப்பாளர்:- சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள்  நூல்:- திர்மிதீ-631


பேரிச்சம்பழம் அல்லது தண்ணீர் கிடைக்கவில்லையெனில் எந்த உணவுப்பொருள் கிடைக்குமோ அதைக்கொண்டு நோன்பு துறக்க வேண்டும். எதுவும் கிடைக்கவில்லையெனில் நோன்பு துறப்பதாக உள்ளத்தில் எண்ணிக் கொள்ள வேண்டும்.


டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD., (Chin.Med), A.T.C.M (CHINA), Zhejiang University, Hangzhou, (China), (Chinese Traditional Medicine) என்பவர் கூறுகிறார்.

நோன்பு திறக்கும் நேரத்தில் பல அமிலங்கள் வயிற்றில் சுரந்திருக்கும். குடலிலும் வயிறிலும் இன்னும் தேவையற்ற கழிவுகளும் தங்கியிருக்கும்.இவைகளை நீக்கும் சக்தி சுத்தப்படுத்தும் சக்தி தேனுக்கு உண்டு. பேரீத்தம் பழத்தை தேனில் நனைத்து நன்றாக மென்று சாப்பிட்டு நோன்பு திறக்கும் போது, உடலில் ஊறிக் கிடக்கும் தேங்கிய கழிவுகள் நீக்கப்படுகின்றன.


எலுமிச்சப் பழச்சாற்றில் தண்ணீர் தேன் கலந்து குடிக்கலாம். விரைவாகக் குடிக்காமல் நிதானமாகக் குடிக்க வேண்டும். ஆரஞ்சு, அன்னாசி பழச்சாறுடனும் தேன் கலந்து குடிக்கலாம். ஆனால் எந்த ஜுஸ் சாப்பிட்டாலும் சீனியும் ஐஸ்சும் சேர்க்கக் கூடாது. இளநீரும் நோன்பு திறக்க நல்லதொரு பானமாகும். இளநீர் வயிற்றின் நச்சுக்களை சிறுநீராக மாற்றி வெளியேற்றி விடும்.

 

ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு நிறைந்த பானங்கள், காப்பி, டீ, புகைபிடித்தல், எண்ணெய்யில் மூழ்கி எடுத்த சம்சா, பஜ்ஜி போன்றவற்றின் மூலம் நோன்பு திறக்கக் கூடாது. வாயு நிறைந்த பானங்கள் மூலமும் நோன்பு திறப்பது உடல் நலத்தை பாழடித்து விடும். வயிற்றில் அமில சுரப்பை அதிகப்படுத்தி விடும். விட்டமின் சி உள்ளதாகக் கூறி விற்கப்படும் செயற்கைப் பானங்கள், பவுடர் கரைசல்களால் தயாரித்த பானங்களையும் தவிர்த்தல் மிகவும் நல்லது.

 

இவ்வாறு முறையாக நோன்பு திறந்து 1 மணி நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது உடல்நலத்துக்கு மிகவும் சிறந்து. அவ்வாறு உண்ணாமல் இருக்கும் போது, வயிறு தன் அமிலத்தை முழுவதும் வெளியேற்றி விடும். பிறகு நாம் உணவை நன்றாக மென்று உண்பதால் நன்கு ஜீரணம் ஏற்படும். வயிற்றில் கோளாறு எதுவும் ஏற்படாது. ஏற்கனவே கோளாறு இருக்குமானால் அதுவும் குணமடையும். வயிறு முட்ட உண்பதையும், கார உணவை உண்பதையும் தவிர்ப்பது நல்லது.


மேற்கண்ட முறையில் நோன்பு வைக்கப் பழகிக் கொண்டால் உடலில் தளர்ச்சி, சோர்வு, மயக்கம் போன்றவை இருக்காது.

 

உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாத கொழுப்புகள் குறைய ஆரம்பிக்கும். உடல் எடை குறையும், உடம்பு வனப்பு அதிகமாகும். முக்கியமாக இரவுத் தொழுகையில் மிகவும் விருப்பத்துடன் சோர்வில்லாமல் தொழ முடியும். உடலில் புது தெம்பு பிறக்கும். மனதில் புது உற்சாகம் உண்டாகும்.


பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ لِلصَّائِمِ عِنْدَ فِطْرِهِ لَدَعْوَةً مَا تُرَدُّ ) நோன்பாளி நோன்பு துறக்கும் நேரத்தில் செய்யும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை.       நூல்:- இப்னுமாஜா, பைஹகீ


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَநோன்பு துறப்பதை விரைவுப்படுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்.     அறிவிப்பாளர்:- சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள்   நூல்:- முஸ்லிம்-2003, திர்மிதீ-635


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ أَحَبُّ عِبَادِي إِلَيَّ أَعْجَلُهُمْ فِطْرًا ) வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறினான்: என் அடியார்களில் எனக்கு மிகவும் பிரியமானவர்கள் (நேரம் வந்ததும்) விரைவாக நோன்பு துறக்கக் கூடியவர்களே ஆவர்.  அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்  நூல்:-திர்மிதீ -636, முஸ்னது அஹ்மத், இப்னு குஸைமா


நோன்பு துறக்கும் (இஃப்தார்) நேரம், சூரியன் மறையும் போது வந்துவிடுகிறது. காலம் தாழ்த்தாமல் ஆரம்ப நேரத்திலேயே நோன்பு துறப்பதுதான் நபிவழியாகும். மக்களுக்கு சிரமம் ஏற்படாதிருக்க ஏற்ற வழியும் இதுதான்.


நோன்பு துறக்கும் நேரம் நெருங்கிவிட்டால் அதனை கண்டு கொள்ளாமல் தன்னுடைய வேலைகளில் ஈடுபடலாகாது. உடனடியாக நோன்பு துறக்க வேண்டும். ஏனெனில் நாம் அல்லாஹ்விடம் "இறைவா! இதற்கு மேல் என்னால் தாங்க இயலாது" என்று நமது இயலாமைத்தான் வெளிப்படுத்த வேண்டும். மாறாக “என்னால் இன்னும் தாக்கு பிடிக்க இயலும்” என்று பலத்தைக் காட்டக்கூடாது. இது அடிமையின் ஒழுக்கமுமல்ல!!


அல்லாஹ் தனது அடியார்களின் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்ற நோன்பு துறக்கும் நேரத்தில், நாம் அலட்சியமாக இருக்கக்கூடாது. நமக்கு தேவையான இம்மை மறுமையின் அனைத்து நலன்களையும் கேட்டு அந்நேரத்தில் பிரார்த்திக்க வேண்டும்.


மகிழ்ச்சி


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لِلصَّائِمِ فَرْحَتَانِ فَرْحَةٌ حِينَ يُفْطِرُ وَفَرْحَةٌ حِينَ يَلْقَى رَبَّهُ ) நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒரு மகிழ்ச்சி, நோன்பு துறக்கும்போது ஏற்படுவதாகும். மற்றொரு மகிழ்ச்சி, அவர் தம் இறைவனைச் சந்திக்கும்போது ஏற்படுவதாகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்   நூல்:- திர்மிதீ-697


இயற்கையாகவே மனிதன் விருப்பமான உணவை உண்பதிலும் பருகுவதிலும் அதிக ஆர்வமுள்ளவன். சிலர் டீ, காபி பருகுவது, வெற்றிலை மெல்லுவது போன்ற குறிப்பான உணவை அடிக்கடி உபயோகிப்பதை பழக்கமாக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் நோன்பை துறந்து அவ்வுணவை உண்ணும்போது அடையும் இன்பத்திற்கு அளவேயில்லை. இதை இந்த நபிமொழி தெளிவுப்படுத்துகிறது.


மனிதன் தமது தொழுகை, ஸகாத், ஹஜ் போன்ற வணக்கங்களுக்குரிய நன்மைகள் என்னவென்று அறிந்த பிறகே அல்லாஹ்வைச் சந்திப்பான். ஆனால், தாம் நோற்ற நோன்புகளுக்குரிய நன்மைகள் என்னவென்று அறியாத நிலையில் அல்லாஹ்வைச் சந்திப்பான். அவ்வாறு அல்லாஹ்வைச் சந்திக்கும் போது தான், அல்லாஹ் நோன்பிற்குரிய நன்மைகளை வழங்கும்போது மனிதன் மிகவும் சந்தோசமடைவான். நோன்பிற்குரிய நன்மைகளை அல்லாஹ் மட்டுமே அறிந்தவன். எனவேதான், நோன்பாளி அல்லாஹ்வைச் சந்திக்கும்போது மிகவும் சந்தோசமடைவான் என்று அறிஞர்கள் மேற்காணும் நபிமொழிக்கு விளக்கமளித்துள்ளார்கள்.


மேலும், முறையாக நோன்பு நோற்றவருக்கு சொர்க்கம் கிடைப்பது உறுதியாகிறது. சொர்க்கத்தில் தான் அல்லாஹ்வை காண முடியும்.


நோன்பின் சட்டத்திட்டங்களை முறையாக அறிந்து அதன்படி செயல்படவேண்டும். எனவே நாம் ரமளான் மாதத்தில் நோன்பையும் இன்னபிற வணக்கங்களையும் முறையாக கடைப்பிடித்து இறையன்பைப் பெற அல்லாஹுத்தஆலா அருள்பாலிப்பானாக! ஆமீன்!                                                


மௌலவி மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

முதல் மரியாதை

  முதல் மரியாதை   وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ தனது தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படி மனிதனுக்கு நாம் நல்ல உபதேசம் செய்தோம்....