Search This Blog

Tuesday, 27 October 2020

இறைநேசர்கள்

 

இறைநேசர்கள்

أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு (எதிர்காலம் பற்றிய) எந்த அச்சமும் இராது. (கடந்த காலம் குறித்து) அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள் என்பதை நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். திருக்குர்ஆன்:- 10:62


அல்லாஹ்வை நன்கறிந்து அவனுக்கு எப்போதும் அடி பணிந்து நடந்து, அவனுடைய அன்புக்காகவே வணக்க வழிபாடுகள் புரிந்து வருபவரே அல்லாஹ்வின் நேசர் (வலியுல்லாஹ்) எனப்படுவார். வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதில் கூடுதலான (நஃபிலான) வழிபாடுகளையும் செய்து வந்தால் அல்லாஹ்வின் நேசத்திற்குரியவராகலாம்.


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا جُبِلَ وَلِيٌّ لِلّٰهِ عَزَّ وَجَلَّ اِلَّا عَلَي السَّخَاءِ وَحُسنُ الخُلُقِ ) எந்த இறைநேசரானாலும் அவரிடம் கொடைத் தன்மையும் நற்குணமும் இயற்கை பண்புகளாக இருக்கும். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- அத்தர்ஙீப் வத்தர்ஹீப்


அருமை
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَإِنْ سَأَلَنِي لأُعْطِيَنَّهُ، وَلَئِنِ اسْتَعَاذَنِي لأُعِيذَنَّهُ ) அல்லாஹ் கூறுகிறான். எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். என்னிடம் கேட்டால், நான் நிச்சயம் தருவேன் என்னிடம் அவர் பாதுகாப்புக் கோரினால், நிச்சயம் நான் அவருக்குப் பாதுகாப்பு அளிப்பேன். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6502


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( ذِكْرُ اْلاَنْبِيَاءِ مِنَ الْعِبَادَةِ وَذِكْرُ الصَّالِحِيْنَ كَفَّارَةٌ للِذُّنُوبِ ) இறைத்தூதர்கள் பற்றி நினைவு கூறுவது வணக்கமாகும். இறைநேசர்கள் பற்றி நினைவு கூறுவது (சிறு) பாவத்திற்கு பரிகாரமாகும். அறிவிப்பாளர்:- முஆத் பின் ஜபல்  (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னதுல் ஃபிர்தௌஸ்


பிரபலம் வேண்டாம்


உசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் யமன் வாசிகளில் உதவிப் படையாக வந்தவர்களிடம் உங்களில் யார் உவைஸ் பின் ஆமீர் என்று விசாரித்து அடையாளம் கண்டு கொண்டார்கள். பிறகு உவைஸ் (ரஹ்) அவர்களிடம் ஜனாதிபதி அவர்கள் கூறினார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் யமன் வாசிகளில் உதவி படையுடன் 'கரன்' குலத்தைச் சேர்ந்த உவைஸ் பின் ஆமீர் என்பவர் உங்களிடம் வருவார். அவருக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு பின்னர் ஒரு திர்ஹம் அளவைத் தவிர மற்றவை குணமாயிருக்கும்.  அவரின் தாயாருக்கு அவர் பணிவிடை புரிபவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டால் அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான். ( فَإِنِ اسْتَطَعْتَ أَنْ يَسْتَغْفِرَ لَكَ فَافْعَلْ ) (உமரே!) அவர் உமக்காகப் பாவமன்னிப்புக் கோரி பிரார்த்திக்க வாய்ப்பு கிட்டினால் அவரைப் பிரத்திக்கச் சொல்லுங்கள்" என்று கூறினார்கள். ஆகவே எனக்காக பாவ மன்னிப்பு வேண்டி பிரார்த்தியுங்கள்.


அவ்வாறே உவைஸ் (ரஹ்) அவர்களும் உமருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள், 'கூஃபாவிற்கு' என்று பதிலளித்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள், ( أَلاَ أَكْتُبُ لَكَ إِلَى عَامِلِهَا ) "கூஃபாவின் ஆளுநரிடம் உமக்காகப் (பரிந்துரை) கடிதம் எழுதட்டுமா?" என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள், ( أَكُونُ فِي غَبْرَاءِ النَّاسِ أَحَبُّ إِلَيَّ ) "சாதாரண மக்களில் ஒருவனாக நான் இருப்பதே எனக்கு மிகவும் விருப்பமானதாகும்" என்று கூறிவிட்டார்கள்.


அடுத்த ஆண்டில் கரன் குலத்தைச் சேர்ந்த பிரமுகர்களில் ஒருவர் ஹஜ்ஜுக்காகச் சென்றிருந்தபோது உமர் (ரலி) அவர்களை தற்செயலாகச் சந்தித்தார். அப்போது அவரிடம் உமர் (ரலி) அவர்கள் உவைஸ் (ரஹ்) அவர்களைப் பற்றி விசாரித்துவிட்டு அவர்களின் சிறப்பை பற்றி எடுத்துரைத்தார்கள்.


ஆகவே, அப்பிரமுகர் உவைஸ் (ரஹ்) அவர்களிடம் சென்று, ( أَنْتَ أَحْدَثُ عَهْدًا بِسَفَرٍ صَالِحٍ فَاسْتَغْفِرْ لِي ) "எனக்காக பாவமன்னிப்பு வேண்டியப் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார். நீர் தான் இப்போது புனிதப் பயணம் ஒன்றை முடித்து வந்துள்ளீர். ஆகவே, நீர் தான் எனக்காகப் பாவமன்னிப்புக் கோர வேண்டும் என்றார்கள். பிறகு, ( لَقِيتَ عُمَرَ ) "நீர் உமர் (ரலி) அவர்களை சந்தித்தீரா? என்று கேட்டார்கள். அவர் 'ஆம்' என்றார். பிறகு அவருக்காகப் பாவ மன்னிப்பு வேண்டி பிரார்த்தித்தார்கள். அப்போதுதான் மக்களும் உவைஸ் (ரஹ்) அவர்களின் அந்தஸ்தை அறிந்துகொண்டனர். பிறகு உவைஸ் (ரஹ்) அவர்கள் தமது திசையில் நடக்கலானார்கள்.  நூல்:- முஸ்லிம் 4971


ஒரு இறைநேசர் அவர் அடையாளம் காணப்படுவதை விரும்ப மாட்டார்.


பணிவெனும் பண்பு


அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியின் மீது பணிவாக நடப்பார்கள். திருக்குர்ஆன்:- 25:63 


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ تَوَاضَعَ لِلّهِ رَفَعَهُ اللهُ فَهُوَ فِيْ نَفْسِهِ صَغِيْرٌ وَفِيْ اَعْيُنِ النَّاسِ عَظِيْمٌ ) எவர் அல்லாஹுதஆலாவுடைய பொருத்தத்தை நாடி பணிவை மேற்கொள்வாரோ, அவரை அல்லாஹுதஆலா உயர்த்தி விடுவான். அதன் காரணமாக அவர் தன்னைத் தாழ்வாகக் கருதுவார், மக்களின் பார்வையில் உயர்ந்து விடுவார். நூல்:- ஷுஅபுல் ஈமான் லில்பைஹகீ


அரசர் மஹ்மூத் அல்கஸ்னவீ  (ரஹ்) அவர்கள் ஹர்கான் என்ற ஊரில் வாழ்ந்த அபுல்ஹஸன் ஹர்கானீ (ரஹ்) அவர்களை சந்தித்தார்கள். அன்னாரிடம் பல அறிவுரைகளைப் பெற்றார்கள். அவ்வறிவுரைகளால் தம் உள்ளத்தை பண்படுத்தி தம்மை தூய்மையாக்கி கொண்டார்கள். அபுல் ஹஸன் (ரஹ்) அவர்கள் அரசருக்கு தலை போர்வை அணிவித்தார்கள்.

பின்னர் அரசரை வழியனுப்பும் போது தன் வீட்டு வாசல்படி வரை வந்து வழியனுப்பினார்கள். அரசருக்கு வியப்பாக இருந்தது. "நான் தங்களிடம் வரும் பொழுது எழுந்து வரவேற்காது. இப்பொழுது எழுந்து வீட்டுக்கு வெளியே வந்து வழியனுப்புகிறீர்கள் என்ன காரணம்? என அரசர் கேட்டார். அபுஹசன் (ரஹ்) அவர்கள், "நீர் வரும்போது அரசராக வந்தீர். இப்போது தாழ்மையுடன் ஆன்மீக உணர்ச்சியுடன் செல்கிறீர். அதனால் தான் எழுந்து நின்று மரியாதை செய்கின்றேன்" என்று கூறினார்கள்.


நன்றியுணர்வு


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ سَرَّتْهُ حَسَنَتُهُ وَسَاءَتْهُ سَيِّئَتُهُ فَذَلِكَ الْمُؤْمِنُ ) ஒருவருக்கு அவரது நற்செயல் மகிழ்ச்சியையும் அவர் தீயசெயல் கவலையையும் அளிக்குமானால் அவரே (உண்மையான) இறைநம்பிக்கையாளர் ஆவார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:-  திர்மிதீ-2091


ஒருமுறை முஹ்யித்தீன் இப்னு அரபி (ரஹ்) அவர்கள் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தபோது ஒருவர் தலையில் விறகுக்கட்டை சுமந்து கொண்டு நொண்டி நொண்டி வந்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த அன்னார் அவர் காலில் முள் தைத்திருப்பதை கண்டார்கள். அன்னார் குனிந்து அவர் காலில் தைத்திருந்த முள்ளை மெதுவாக எடுத்து விட்டார்கள். அவர் சந்தோஷத்தால் நன்றி கூறிவிட்டு சென்றார்.


பிறகு அன்னார் வீடு திரும்பியதும் அன்றிரவு முழுவதும் தொழுதுகொண்டே இருந்தார்கள். இறுதியில் இறைவா! நேற்று மாலை ஒரு விறகு வெட்டிக்கு உதவக்கூடிய நல்ல வாய்ப்பை எனக்கு நல்கியதற்கு நான் எவ்வாறு உனக்கு நன்றி செலுத்த முடியும்?  எனினும் என்னால் இயன்ற அளவு இரவு முழுவதும் நின்று தொழுதுள்ளேன். அதை என் காணிக்கையாக ஏற்றுக்கொள்வாயாக! என்று கண்ணீருடன் பிரார்த்தித்தார்கள்.


தவிர்த்துக்கொள்வார்கள்


(நற்கூலிக்குரிய அவர்கள்) எப்படிப்பட்டர்வர்கள் எனில் பெரும் பாவங்களையும் மானக்கேடான செயல்களையும் தவிர்த்துக்கொள்வார்கள். திருக்குர்ஆன்:- 53:32


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( ثَلَاثَةٌ لَا تَرَي اَعيُنُهُمُ النَّارَ  وَعَينٌ کَفَّت عَن مَحَارِمِ اللّٰهِ ) மூன்று சாராரின் கண்கள் நரகத்தை காணாது. அதில் ஒன்று அல்லாஹ் பார்க்கக் கூடாதென தடுத்தவைகளை விட்டும் தவிர்ந்து கொண்ட கண்கள். அறிவிப்பாளர்:- முஆவியா பின் ஹைதஹ் (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, அத்தர்ஙீப் வத்தர்ஹீப்


ஒருமுறை இறைநேசர் ஜுனைதுல் பாக்தாதி (ரஹ்) அவர்கள் குர்ஆன் முழுவதையும் மனனமிட்டிருந்த (ஹாஃபிளாக இருந்த) தன்னுடைய  ஒரு சீடருடன் சென்று கொண்டிருந்தார்கள்.  அப்போது அந்த சீடர் எதிரே வந்த அழகிய தோற்றமுடைய ஒரு கிறிஸ்துவ பெண்ணை கவனித்தார். அப்போது அந்த சீடர் குருவே! நாளை மறுமையில் இப்படிப்பட்ட அழகிய முகமும் நரகத்தில் வீசப்படும் தானே!" என்று கேட்டார். அதற்கு அன்னார் தன் சீடரிடம், "நீர் இச்சையுடன் அந்த பெண்ணைப் பார்த்துவிட்டீர் எனவே, நீர் பாவமன்னிப்பு தேடுவீராக!" என்றார்கள். தவறை ஒப்புக்கொள்ளாத அந்த சீடர் “நான் பாவம் செய்யவில்லையே, கேள்வி தானே கேட்டேன்" என்று வாதம் புரிந்தார். அவர் இறுதிவரை பாவமன்னிப்பு கோரவில்லை. அந்த பாவத்தின் விளைவு இருபது ஆண்டுக்கு பிறகு குர்ஆன் முழுவதையும் மனனமிட்டவராக இருந்தவர், குர்ஆன் முழுவதையும் மறந்தவராகிவிட்டார்.


பெரிதும் மதிப்பார்கள்


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ تَسُبُّوا أَحَدًا مِنْ أَصْحَابِي فَإِنَّ أَحَدَكُمْ لَوْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا أَدْرَكَ مُدَّ أَحَدِهِمْ وَلاَ نَصِيفَهُ ) என் தோழர்களில் யாரையும் ஏசாதீர்கள். உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தை (தர்மமாகச்) செலவிட்டாலும் என் தோழர்கள் (இறைவழியில்) செலவிட்ட இரு கையளவு, அல்லது அதில் பாதி அளவுக்குக்கூட எட்ட முடியாது. அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4968


ஒருமுறை சயீத் பின் முசய்யப் (ரஹ்) அவர்கள் அபுல் ஹஸன் என்பவரிடம், "நீர் உன்னுடைய ஆளை அனுப்பி நான் சொல்லும் ஒரு மனிதரைப் போய் பார்க்கச் சொல்வீராக!" என்றார்கள். அவ்வாறே அவர் போய் பார்த்த போது அம்மனிதனின் உடல் முழுவதும் மென்மையாகவும் முகம் மட்டும் மிகவும் கருப்பாக இருந்தது. அதிர்ச்சியுடன் அவர் திரும்பினார். அப்போது சயீத் (ரஹ்) அவர்கள், "நான் ஒரு முறை இவனை சந்தித்தபோது இவன் நபித்தோழர்களை திட்டினான். நான் தடுத்தும் அவன் கேட்கவில்லை. அப்போது நான் அவனை நோக்கி, ( اِن كَانَ كَاذِبًا فَسَوَّدَ اللّٰهُ وَجهَكَ ) "நீ பொய்யனாக இருந்தால், அல்லாஹ் உன்னுடைய முகத்தை கருப்பாகி விடுவானாக!"என்று சபித்து விட்டேன். அவ்வாறே நடந்து விட்டது என்றார்கள். நூல்:- இப்னு அபீதுன்யா


இறைநேசர் அபுல் ஹஸன் ஷாதலி (ரஹ்) அவர்கள் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் ஹனஃபி மத்ஹபைப் பின்பற்றி  வந்தார்கள். ஆனாலும் மற்ற இமாம்களுக்கு பெரிதும் மரியாதை செய்வார்கள். ஒரு தடவை மதரசாவில் ஹனஃபி மத்ஹபின் சட்டதிட்டங்களை ஓதிக் கொடுத்து வந்த, 'ஆலிம்' ஒருவர் ஒரு சட்டம் பற்றிக் குறிப்பிடும் போது "இவ்விஷயத்தில் ஷாஃபி கருத்து வேறுபாடுடையவராயிருக்கிறார்" என்று கூறினார். இது அன்னார் செவியுற்றதும் கண்கள் சிவந்தன. உடனே அன்னார் அவரை அழைத்து, இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களை 'ரஹ்மத்துல்லாஹி அலைஹி'  என்று அடைமொழியிட்டு கூறாது, எவரோ தெருவில் செல்பவரை குறிப்பிடுவது போல் மரியாதைக்குறைவாக கூறிவிட்டீரே! இதுவென்ன அறிவீனம்? என்று கடிந்து கொண்டார்கள். உடனே அவர் தாம் செய்த தவற்றிகாக வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.


மன்னித்தேன்


இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமுறை நற்கூலி அளிக்கப்படுவார்கள்; மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்.  திருக்குர்ஆன்:- 28:54


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ اللَّه لَا يَمْحُو السَّيِّئ بِالسَّيِّئِ وَلَكِنْ يَمْحُو السَّيِّئ بِالْحَسَنِ إِنَّ الْخَبِيث لَا يَمْحُو الْخَبِيث ) அல்லாஹ் ஒரு தீமையைத் தீமையால் அழிப்பதில்லை. மாறாக, ஒரு தீமையை ஒரு நன்மையின் மூலமே அழிப்பான். ஒரு மாசு மற்றும் மாசை அழிப்பதில்லை அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மது, தஃப்சீர் இப்னு கஸீர் அல்முஃமினூன் வசனம்-56


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( صِل مَن قَطَعَكَ وَاعْف عَمَّن ظَلَمَكَ وَاَحسِن اِلَي مَن اَسَاءَ اِلَيكَ ) உன் உறவை வெட்டியவனோடு நீ ஒட்டிக் கொள்! உனக்கு அநீதமிழைத்தவனை மன்னித்து விடு! உனக்கு தீங்கு செய்தவனுக்கும் நீ உபகாரம் செய்! அறிவிப்பாளர்:- உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் நூல்:- அத்தர்ஙீப் வத்தர்ஹீப்


அபூகிலாலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ( أَيُّ النَّاسِ أَصْبَرُ؟ ) மனிதர்களில் மிகப் பொறுமையானவர் யார்? என லுக்மான் (அலை) அவர்களிடம் கேட்கப்பட்டது. அன்னார், ( صَبْرٌ لَا يَتْبَعُهُ أَذًى ) "(இடையூறு செய்தவர் மீது) துன்புறுத்தல் தொடராத பொறுமை" என்றார்கள். நூல்:- அல்பிதாயா அந்நிஹாயா


ஒரு நாள் ஒரு ராணுவ வீரன் ஊருக்கு வெளியே வந்து கொண்டிருந்தான். அவன் அங்கே இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்களை வழியில் கண்டு, மக்கள் குடியிருப்பு எங்கே இருக்கிறது? என கேட்டான். அதற்கு மகான் அவர்கள், மண்ணறையை காட்டி அதோ அதுதான் என்று சொன்னார்கள். அவனுக்கு கோபம் வந்தது. "நான் மண்ணறையை கேட்கவில்லை; மக்கள் வசிக்கக்கூடிய பகுதியை கேட்கிறேன்" என்றான். மகான், "அதுதான் உண்மையில் மக்கள் குடியிருப்பு" என திரும்பவும் கூறினார்கள். அவன் கோபத்தில் மகானை கடுமையாக அடித்து விட்டான்.


பிறகு அவன் நகருக்குள் வருகிறான் அப்போது நகரத்தில் உள்ள மக்கள் மகானை உற்சாகத்தோடு வரவேற்றார்கள். அது கண்டு அதிர்ச்சியுற்ற அவன் நாம் நையப்புடைத்த இந்த மனிதருக்கு இவ்வளவு வரவேற்பா? அப்படியென்றால் இவர் யார்? என்று விசாரித்தான். அப்போதுதான் இவர் பல்க் நாட்டின் பேரரசராக இருந்து முடி துறந்த இறைஞானி இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்கள் என்று அவனுக்கு தெரிய வந்தது.


உடனே அவன் வேதனைப்பட்டு வெட்கப்பட்டு மகானிடம் சென்று மன்னிப்பு கேட்டான். நீங்கள் யார்? என்று தெரியாமல் இவ்வாறு தவறாக நடந்துகொண்டேன். எனவே, நீங்கள் என்னை மன்னித்து, எனக்காக பிரார்த்திக்க வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டான். மகான்,  "நீர் என்னை அடிக்கத் தொடங்கியபோதே உன்னை மன்னித்து உனக்கு சொர்க்கம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்து விட்டேன்" என்று கூறினார்கள்.


அவன் உங்களுக்கு அநியாயம் செய்திருக்க அவனுக்காக இப்படியொரு பிரார்த்தனையா? என்று மக்கள் கேட்டனர். மகான், அவன் மூலமாக எனக்குத் தீங்கு ஏற்பட்டபோது நான் அவனை மன்னிக்கவில்லையெனில், என் காரணமாக அவனுக்குத் தீங்கு ஏற்படும் அல்லவா? அப்படியென்றால் இருவருக்கு மத்தியில் என்ன வித்தியாசம்? மேலும், அந்நேரம் நான் பொறுமையாக இருந்ததால் எனக்கு அவன் மூலம் நன்மைகள் பதிவுசெய்யப்படும் போது, என் காரணமாக அவனுக்கு தீமைகள் பதிவுசெய்யப்படக்கூடாதல்லவா?  எனவே தான், நான் அவனுக்காக பிரார்த்தித்தேன்" என்றார்கள்.


இரவு வணக்கம்


அவர்கள் இரவில் வெகு சொற்ப (நேர)மே உறங்குவார்கள். அவர்கள் அதிகாலை நேரத்தில் (எழுந்து இறைவனை வணங்கி, தங்கள் இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள். திருக்குர்ஆன்:- 51:17,18


மாமேதை சுஃப்யான்  அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் என்றேனும் சற்று அதிகமாக சாப்பிட்டுவிட்டார்களானால் அன்றைய இரவு முழுவதையும் இறை வணக்கத்திலேயே கழித்து விடுவார்கள். அவர்களிடம் இது பற்றி வினவப்பட்டது. அன்னார், "கழுதைக்கு அதிக மேய்ச்சல் காட்டப்பட்டால் அதனிடம் வேலையும் சற்று அதிகமாகவே வாங்கப்படுகிறது. நான் மட்டும் இதற்கு விதிவிலக்கா?" என்று பதிலளித்தார்கள்.


அழகிய உபதேசம்


இறைநேசர் இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து தனக்கு உபதேசம் செய்யும்படி வேண்டிக்கொண்டார். அதற்கு அன்னார், அவரிடம் "மூடியிருப்பதைத் திற! திறந்திருப்பதை மூடு!" என்றார்கள். வந்தவருக்கு இதன் பொருள் ஒன்றும் புரியாமல் தவித்தார். மீண்டும் அன்னார், "(மூடியிருக்கும் உனது பணப்)பையை திறந்து விடு! (இறைவழியில் செலவு செய்!) திறந்துள்ள நாவை மூடிக்கொள்! (வீண்பேச்சு பேசாதீர்!)" என்று விளக்கமளித்தார்கள்


நாமும் இறைநேசர்களின் பண்புகளை கடைபிடித்து, இறைநேசர்களாய் ஜொலிக்க, அல்லாஹ் நல்லருள் புரிவானாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.

 

No comments:

Post a Comment

கர்பலாவை நோக்கி!

  கர்பலாவை நோக்கி!   لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ لِأُولِي الْأَلْبَابِ அறிவுடையவர்களுக்கு இவர்களுடைய வரலாறுகளில் படிப்பினை நி...