Search This Blog

Friday, 15 May 2026

தீர விசாரிப்போம்!

 

தீர விசாரிப்போம்!

 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ

இறைநம்பிக்கையாளர்களே! தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தியை உங்களிடம் கொண்டு வந்தால், (அது உண்மைதானா என்று) தீர விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையெனில், அவனுடைய சொல்லை நம்பி) அறியாமைத்தனமாக ஒரு கூட்டத்தினருக்கு நீங்கள் தீங்கிழைத்துவிட்டுப் பின்னர், நீங்கள் செய்தவைகளைப் பற்றி நீங்களே கவலைப்படும்படியும் நேர்ந்துவிடும். திருக்குர்ஆன்:- 49:6

 

வாழ்க்கையில் நாம் அன்றாடம் பல செய்திகளைக் கேட்கிறோம், பல முடிவுகளை எடுக்கிறோம். கேள்விப்படும் அனைத்தையும் அப்படியே நம்புவதும், யோசிக்காமல் செயல்படுவதும் பெரும் ஆபத்தில் முடியும். எந்த ஒரு விஷயத்தையும் தீர விசாரித்து, அதன் உண்மைத்தன்மையை உணர்ந்து செயல்படுவதே சிறந்த அறிவார்ந்த செயலாகும்.

 

சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில், வதந்திகள் மிக வேகமாகப் பரவுகின்றன. தீர விசாரிக்காமல் ஒரு செய்தியைப் பரப்புவது சமூகத்தில் தேவையற்ற பதற்றத்தையும், குழப்பத்தையும் உண்டாக்கும்.

 

ஒரு வணிகமோ, உறவோ அல்லது ஒருவரின் குணநலனோ எதுவாக இருந்தாலும், அதைப்பற்றிய ஆழமான விசாரணை இல்லாமல் நம்புவது ஏமாற்றத்தில் தான் முடியும்.

 

வேலை வாய்ப்பு, முதலீடு, அல்லது ஒரு பயணத் திட்டம் என எதுவாக இருந்தாலும், முன்முடிவுகள் இல்லாமல் நிதானமாக ஆராய்ந்தால் மட்டுமே சரியான முடிவை எடுக்க முடியும்.

 

ஒரு செய்தி எங்கிருந்து வருகிறது? அந்தத் தகவலுக்கு ஆதாரம் என்ன? என்று கேட்க வேண்டும். கேட்ட தகவலை, மற்றொரு கோணத்தில் அல்லது உண்மையான வல்லுநர்களிடம் சரிபார்க்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காமல், நிதானமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

 

ஆராய்ந்து பார்க்காமல், வரும் தகவல்களை அப்படியே நம்புவது வழிகேட்டிலும், தவறான பாதையிலும் கொண்டு சென்று சேர்க்கும். அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் நீண்ட காலப் பாதிப்பையும், மன உளைச்சலையும் உண்டாக்கும்.

 

எந்த ஒன்றையும் தீர விசாரிப்பதே நல்லது" என்பது ஒரு பழமொழி மட்டுமல்ல, அது ஒரு சிறந்த வாழ்க்கை நெறி. உண்மையை அறிவது ஒருவனைத் தீய வழியில் செல்வதைத் தடுக்கும், நல்வழிப்படுத்தும். எனவே, எந்த ஒரு விஷயத்தையும் நம்புவதற்கு முன், ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து, தீர விசாரித்துச் செயல்படவேண்டும்.

 

அவசரப்படக்கூடாது 

 

முஜாஹித் (ரஹ்), கத்தாதா (ரஹ்) ஆகிய இருவரும் கூறியுள்ளார்கள். பனூ முஸ்தலிக் என்ற கூட்டத்தாரிடம் ஸக்காத் பொருள்களை வசூல் செய்வதற்காக அருமை நாயகம் (ஸல்) அவர்கள் வலீத் பின் உக்பா என்பவரை  அனுப்பிவைத்தார்கள். அந்தக் கூட்டத்தினர் தர்மப் பொருள்களுடன் அந்த மனிதரை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர் (வழியிலேயே) திரும்பி வந்து பனூ முஸ்தலிக் கூட்டத்தினர் உங்களுக்காக தர்மப் பொருள்களைத் திரட்டி வைத்திருப்பது உங்களுடன் போர் செய்வதற்காகத்தான். மேலும், அவர்கள் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறிவிட்டனர் என்று கூறினார்.

 

உடனே பனூ முஸ்தலிக் கூட்டத்தினரிடம் போர் செய்வதற்காக நபியவர்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்களை அனுப்பிவைத்தார்கள். மேலும், நிதானமாக அணுகுமாறும் அவசரப்பட வேண்டாம் என்றும் காலிதுக்கு நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.

 

காலித் (ரலி) அவர்கள் புறப்பட்டு அந்தக் கூட்டத்தினரிடம் இரவு வந்து சேர்ந்தார்கள். தம்முடைய உளவாளிகளை (ஊரினுள்) அனுப்பி வைத்தார்கள். அவர்கள் திரும்பி வந்து, "அந்தக் கூட்டத்தினர் இஸ்லாமிய மார்க்கத்தை உறுதியாக பின்பற்றி வருகிறார்கள் என்பதாகவும், அவர்களின் பாங்கு சத்தத்தையும் தொழுகையையும் நாங்கள் செவியற்றதாகவும் கூறினர்.

 

காலித் (ரலி) அவர்கள் காலை நேரத்தில் அந்த கூட்டத்தினரிடம் சென்றார்கள். தங்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியை கொடுக்கும் நல்ல நிலையை அங்கு கண்டார்கள். உடனே நபியவர்களிடம் அந்த செய்தியை தெரிவித்தார். அப்போதுதான் தலைப்பில் காணும் திருவசனம் இறக்கியருளப்பட்டது. நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னர் வலீத் பின் உக்பா (ரலி) அவர்களுக்கும் பனூ முஸ்தலிக் கோத்திரத்தாருக்கும் ஒரு கொலை சம்பந்தமான பகை உணர்வு இருந்து வந்தது. இஸ்லாத்திற்கு வந்த பின் அந்த பகை மறைந்து போனது.

 

வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள் வருகை புரியும் செய்தியறிந்து, அந்த கோத்திரத்தார் அவரை வரவேற்பதற்காக பெரும் படையை திரட்டி புடைசூழ ஊரின் எல்லையில் குழுமியிருந்தார்கள். இதைக் கண்ட வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள் உண்மை என்னவென்று உறுதிப்படுத்தாமல் பழைய பகை உணர்வை மனதில் வைத்து நம்மை தீர்த்துக்கட்ட இவர்கள் ஒன்று கூடியிருக்கிறார்கள் என்று அவராக மனதில் நினைத்துக்கொண்டு, வந்த வழியை நோக்கி அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிவிட்டார்.

 

மேலும், அந்த கோத்திரத்தார் குறித்து தம் எண்ண அடிப்படையில் பின் வரும் சில செய்திகளை கூறுகிறார். 1) அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விட்டார்கள், 2) ஸக்காத் பொருள்களை தர மறுக்கிறார்கள், 3) என்னை கொலை செய்யவும் தயாராகிவிட்டார்கள்.

 

இந்தச் செய்திகளை நபியவர்கள் கேட்டதும் நம்பவில்லை. நடந்தது என்ன? என்பதை ஆய்வு செய்வதற்காக காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு சிறிய படையை அனுப்பிவைத்து, அதன் உண்மைத்தன்மை என்ன? என்று அறிந்துகொண்டார்கள்.

 

குடும்பப் பிரச்சனை

 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) நாங்கள் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது ஒரு பெண்மணி வந்து, "நாயகமே! என் கணவர் ஸஃப்வான் பின் முஅத்தல் (ரலி) அவர்கள் நான் தொழுதால் என்னை அடிக்கிறார். நான் நோன்பு நோற்றால் என்னை நோன்பை துறக்கச் சொல்கிறார். மேலும் அவர் சூரியன் உதயமாகும் வரை ஃபஜ்ர் தொழுகை தொழாமல் இருக்கிறார்" என்று கூறினார்.

 

அப்போது நபியவர்கள், அங்கிருந்த பெண்ணின் கணவர் ஸஃப்வானிடம் அந்தப் பெண் முறையிட்டதை குறித்து கேட்டார்கள்.

 

அதற்கு அவர், "நாயகமே! நான் தொழுதால் என்னை அடிக்கிறார் என்று அவளின் கூற்று, (உண்மைதான்) அவள் (தொழுகையில்) இரண்டு அத்தியாயங்களை ஓதுகிறாள். அவ்வாறு ஓத வேண்டாமென நான் தடுத்தேன்" என்று கூறினார். அப்போது நபியவர்கள், ( لَوْ كَانَتْ سُورَةً وَاحِدَةً لَكَفَتِ النَّاسَ ) "தொழுகையில் ஓர் அத்தியாயம் ஓதுவது மக்களுக்கு அதுவே போதுமானதாகும்" என்று (அப்பெண்ணுக்கு) கூறினார்கள்.

 

பிறகு ஸஃப்வான் (ரலி) அவர்கள், "நான் நோன்பு நோற்றால் என்னை நோன்பு துறக்கச் சொல்கிறார் என்று அவள் கூறுகிறாள். நான் வாலிபனாக இருக்கும் நிலையில் அவள் நோன்பு நோற்றுக்கொண்டே இருக்கிறாள். என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை" என்று கூறினார். நபியவர்கள், ( لاَ تَصُومُ امْرَأَةٌ إِلاَّ بِإِذْنِ زَوْجِهَا ‏ ) “கணவனின் அனுமதியின்றி மனைவி (கூடுதலான) நோன்பை நோற்கக் கூடாது" என்று கூறினார்கள்.

 

பிறகு ஸஃப்வான் (ரலி) அவர்கள், "சூரியன் உதிக்கும்வரை நான் பஜ்ர் தொழாமல் இருக்கிறேன் என்று அவளின் கூற்று, (உண்மை தான்). நாங்கள் (இரவில்) உழைப்பவர்கள். இதை அனைவரும் அறிவர். சூரியன் உதிக்கும் வரை எங்களால் தூக்கத்திலிருந்து விழிக்க இயலவில்லை" என்று கூறினார். அப்போது நபியவர்கள், ( فَإِذَا اسْتَيْقَظْتَ فَصَلِّ ) "நீர் விழித்தவுடன் (ஃபஜ்ர் தொழுகை) தொழுது கொள்வீராக!" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-2103

 

தம்பதியர் தமது ஜோடியை குறை சொல்லும்போது, அதன் உண்மை தன்மை என்ன? என்று முதலில் விசாரிக்க வேண்டும். பிறகு தான் அவர்களுக்கு உபதேசிக்க வேண்டும். மாறாக, உமது ஜோடியை இப்படி வழிநடத்து! இப்படி கண்ணியப்படுத்து! என்று வெறுமனே விசாரணையற்ற உபதேசம் வெறுப்பை உண்டாக்கிவிடும்.

 

விமர்ச்சிக்க எண்ணினால்

 

மனிதன் மிக அவசரக்காரனாக இருக்கின்றான். திருக்குர்ஆன்:- 17:11

 

அபூதர்தா (ரலி) அவர்கள் டமாஸ்கஸ் நகரில் தனது முதுமைப் பருவத்தில் ஒருமுறை மரக்கன்றுகளை நட்டுக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த ஒருவர், ( أَتَفْعَلُ هَذَا وَأَنْتَ صَاحِبُ رَسُولِ اللَّهِ، وَأَنْتَ شَيْخٌ كَبِيرٌ وَهَذِهِ لَا تُطْعَمُ إلَّا فِي كَذَا وَكَذَا عَامًا ) " (அபூதர்தா - ரலி அவர்களே! மரம்  நட்டுவைப்பது என்பது உலகப்பற்று. எனவே,) இதை இறைத்தூதரின் தோழரான நீங்கள் செய்வதா? மேலும், இந்த வயதான காலத்தில் மரக்கன்று நடுகிறீர்களே! இதிலிருந்து நீங்கள் எதையும் சாப்பிட முடியாதே! (அப்படியே சாப்பிட வேண்டுமானால்) இத்தனை இத்தனை வருடங்கள் ஆகுமே" என்று கூறினார்.

 

அப்போது அன்னார், ( لَا تَعْجَلْ عَلَيَّ سَمِعْتُ رَسُولَ اللَّهِ يَقُولُ [مَنْ غَرَسَ غَرْسًا لَمْ يَأْكُلْ مِنْهُ ءَادَمِي وَلَا خَلْقٌ مِنْ خَلْقِ اللَّهِ إلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ] مَا عَلَىَّ أَنْ يَكُونَ لِي اَجْرُهَا وَيَأْكُلُ مِنْهَا غَيْرِي )  "என்னை (விமர்ச்சிக்க) அவசரப்படாதீர்! ‘ஒருவர் ஒரு மரத்தை நட்டு அதிலிருந்து (கிடைக்கும் கனிகளை) ஒரு மனிதனோ, இறைவனின் படைப்புகளில் உள்ள (பறவைகள் விலங்குகள் போன்ற) ஏதேனும் ஒன்று உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்கு கிடைக்கும்’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன். இதன் மூலம் நான் பயன்பெறாவிட்டாலும், (எனக்கு பின்னால் வரும்) மற்றவர்கள் இதிலிருந்து சாப்பிடுவார்களே! அதன் நன்மை எனக்கு கிடைக்கும்" என்று பதிலளித்தார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், முஹிய்யிஸ் ஸுன்னா, உம்தத்துல் காரீ

 

"ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு" என்பது பழமொழி.

 

ஆத்திரமும் அவசரமும் நிறைந்த மனம், சூழ்நிலையை தீர ஆராய விடாமல் தடுத்துவிடும்.

 

இறையச்சம் மிகுந்த மார்க்க அறிஞர் ஒருவர் உலக காரியங்கள் ஒன்றை மிகுந்த ஈடுபாட்டோடு செய்வதைக் கண்டால், உடனே "இவர் உலக ஆசை மிகுந்தவர்" என்று தூற்றிவிடக் கூடாது. அந்த அறிஞர் எதற்காக இதில் இவ்வளவு மும்மரம் காட்டுகிறார் என்று முதலில் விசாரிக்க வேண்டும்.

 

மாறாக, முடிந்தளவு எவ்வளவு கடுமையாக அவரைப்பற்றி விமர்சிக்க முடியுமோ அந்த அளவிற்கு விமர்சித்துவிட்டு பிறகு அதன் எதார்த்தம் தெரிந்தவுடன் “(sorry) மன்னிக்கவும்” என்று வெற்றுச் சொல்லை சொல்லிக் கடந்து விடுவது சரியல்ல.

 

ஒருவரை விமர்சிப்பதற்கு முன் பலமுறை யோசிக்க வேண்டும். விமர்சித்து விட்டு வருந்துவதால் எந்த பலனும் இல்லை. அதனால் உள்ளங்கள் தான் உடைந்து போகும் என்பதில் கவனம் தேவை.

 

நமது விமர்சனம் இன்றைய அரசியல்வாதிகளின் விமர்சனத்தைப் போன்று ஒருபோதும் இருந்துவிடக் கூடாது.

 

அழுதுகொண்டே வந்தாலும்

 

ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நான் நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தேன்‌. ஒரு பெண் கடுமையாக அழுதுகொண்டே வந்து தமது கணவன் தம்மை விட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டார். நீண்ட நாள்கள் ஆகிவிட்டன என்று முறையிட்டாள். அப்போது நான் அந்தப் பெண்ணை நோக்கி! ( أَصْلَحَكَ اللَّهُ ) "அல்லாஹ் உனக்கு வாழ்க்கையை சீராக்குவானாக!" என்று கூறினேன். பிறகு ஷுரைஹ் அவர்களிடம் இந்த பெண் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறாள். எனவே, இவள் குறித்து நல்லதொரு தீர்ப்பை வழங்குங்கள் என்றேன். ஷுரைஹ் (ரஹ்) அவர்கள், ( وَمَا عَلْمُكَ؟ ) “இந்தப் பெண்ணைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று என்னிடம் கேட்டார். அப்போது நான், ( لِشِدَّةِ بُكَائِهَا وَكَثْرَةِ دُمُوعِهَا ) "இந்தப் பெண் கடுமையாக அழுது இவ்வளவு கண்ணீர் வடிக்கிறாளே. (இதை பார்த்தாலே தெரியவில்லையா?)" என்று கேட்டேன்.

 

ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் ( لَا تَفْعَلْ إِلَّا بَعْدَ أَنْ تَتَبَيّنَ أَمْرُهَا، فَإِنَّ إِخْوَةَ يُوسُفَ جَاؤُوا أَبَاهُمْ عِشَاءً يَبْكُونَ وَهُمْ لَهُ ظَالِمُونَ ) “நீர் இவளைப்பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் (வெறுமெனே இவளின் அழுகையை மட்டும் கண்டு) இப்படி (எல்லாம் பரிந்துரை) செய்யாதீர். (காரணம்,) யூசுப் நபியின் சகோதரர்கள் அவருக்கு அநீதமிழைத்துவிட்டு (அதாவது, எல்லோரும் ஒன்று சேர்ந்து அவரை கிணற்றில் தள்ளி விட்டுவிட்டு) இவ்வாறு தான் தமது தந்தையிடம் அழுதுகொண்டே வந்தனர். (எனவே, ஒருவள் அழுதுகொண்டே வருகிறாள் என்பதற்காக அவள் பாதிக்கப்பட்டவள் என்று எண்ணிவிடக் கூடாது. எதையும் விசாரித்த பிறகு தான் ஒரு முடிவுக்கு வர முடியும்)” என்று கூறினார். நூல்:- ஹில்யத்துல் அவ்லியா இமாம் அபூநயீம்-4/313, தாரீக் திமிஷ்க் இமாம் இப்னு அஸாகிர்-23/46, அல்முன்தளிம் இமாம் இப்னு ஜவ்ஸீ-6/185

 

ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் குர்ஆன் கூறும் ஞானங்களை தமக்குள் வைத்திருந்த காரணத்தால் தான் நீதித்துறையில் இவர் ஒரு முன்மாதிரியாய் விளங்குகிறார்.

 

ஒருவரின் அழுகையை மட்டும் பார்த்துவிட்டு அவர்மீது இறக்கப்பட்டு ஓர் முடிவுக்கு வந்துவிடக் கூடாது. உலகத்தில் போலியான அழுகைகளும் உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது.

 

நபிமொழிகளை அறிய

 

உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அபூமூசா (ரலி) அவர்கள் (ஜனாதிபதி) உமர் (ரலி) அவர்களிடம் (சென்று அவர்களது இல்லத்திற்குள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டார்கள். (ஆனால், அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அப்போது) உமர் (ரலி) அவர்கள் ஏதோ அலுவலில் ஈடுபட்டிருந்தார்கள். எனவே அபூமூசா (ரலி) அவர்கள் திரும்பி விட்டார்கள்.

 

அலுவலை முடித்த உமர் (ரலி) அவர்கள், ( أَلَمْ أَسْمَعْ صَوْتَ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ ائْذَنُوا لَهُ  ) "அப்துல்லாஹ் பின் கைசின் (அபூமூசா) குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதி அளியுங்கள்" என்றார்கள். அவர் திரும்பிச் சென்றுவிட்டார் என்று கூறப்பட்டது. உடனே உமர் (ரலி) அவர்கள் அபூமூசா (ரலி) அவர்களை அழைத்து வரச் செய்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், (  مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ ) "இவ்வாறு நீங்கள் செய்ததற்கு என்ன காரணம் (ஏன் மூன்று முறை அனுமதி கோரிவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டீர்கள்?)" என்று கேட்டார்கள்.

 

அபூமூசா (ரலி) அவர்கள், ( إِنَّا كُنَّا نُؤْمَرُ بِهَذَا ) "இவ்வாறு நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம்" என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், (  لَتُقِيمَنَّ عَلَى هَذَا بَيِّنَةً أَوْ لأَفْعَلَنَّ ) "நீங்கள் இதற்குரிய சான்றை நிலைநிறுத்த வேண்டும். அல்லது நான் (இன்னின்னவாறு) நடவடிக்கை எடுப்பேன்" என்றார்கள். எனவே, அபூமூசா (ரலி) அவர்கள் அன்சாரிகளின் அவையொன்றை நோக்கி புறப்பட்டார்கள். அன்சாரிகள், "எங்களில் சிறியவர் ஒருவரை இதற்காக உமக்குச் சாட்சியமளிப்பார்" என்று கூறினர். ஆகவே, அபூசயீத் (ரலி) அவர்கள் எழுந்து (உமர்-ரலி அவர்களிடம் சென்று), ( كُنَّا نُؤْمَرُ بِهَذَا ) "இவ்வாறு நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2062, முஸ்லிம்-4354, அபூதாவூத்-4509, திர்மிதீ-2614, இப்னுமாஜா-3697, முஸ்னது அஹ்மத்

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் காலத்தில் “இவ்வாறு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூற கேட்டேன்” என்று ஒரு நபிமொழியை போகின்ற போக்கில் சொல்லிவிட்டுச் சென்றுவிட முடியாது. நான் சொல்வது நபிமொழி தான் என்பதற்குரிய சாட்சிகள் வேண்டும். காரணம், நபிமொழி என்று எதையாவது சொல்லி மக்களை குழப்பிவிடக் கூடாது என்பதேயாகும்.

 

உமர் (ரலி) அவர்களிடம் ஒரு நபிமொழியை எடுத்துரைத்தால், அது உண்மையாகவே நபிமொழி தானா? என்று தீர ஆய்வு செய்த பிறகே அதை ஏற்றுக்கொள்வார்கள்.

 

எனவே, ஏதேனும் ஒன்றை மார்க்கத்தின் பெயரில் கூறக் கேட்டால், அதை உடனே நம்பிவிடாமல், அது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அல்லது அது குறித்து மார்க்க அறிஞர்களிடம் கேட்டறிந்து தெளிவு பெற்றுக்கொள்ள வேண்டும்.

 

தொலைநோக்குப் பார்வை 

 

உர்வா பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் மூத்தா போரில் நியமிக்கப்பட்ட மூன்று தளபதிகள் ஒருவர் பின் ஒருவராக வீர மரணம் அடைந்தனர். இறுதியாக காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் தளபதி பொறுப்பை ஏற்றார்கள்.

 

போர்க்காலத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கையைவிட எதிரிகளின் எண்ணிக்கை மிக அதிகம் இருந்தது. காலித் (ரலி) அவர்களின் புத்தி கூர்மையால் ஒரு கட்டத்தில் எதிரிகள் பின்வாங்கி ஓட, தொடர்ந்து சென்று அவர்களை தாக்கவேண்டாம் என்று தளபதி அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்கள். அன்று மாலையே மதீனா திரும்புமாறு மறு உத்தரவிட்டார்கள். படை மதீனாவுக்கு திரும்புகிறது.

 

ஆயினும், படை வந்தடையும் முன்னரே அவர்கள் குறித்த செய்தி காட்டுத்தீ போல் மதீனத்து மக்களிடம் வேகமாக பரவுகிறது. ஆம்! இஸ்லாமியப் படை எதிரிகளோடு போர் புரியாமல் பின்வாங்கி வருகின்றது என்று யூகச் செய்தி பரவத் துவங்கியது.

 

மக்களில் சிலர், நகருக்குள் நுழைந்த இஸ்லாமியப் படையை வாழ்த்தி வரவேற்பதற்கு பகரமாக, ஒட்டுமொத்த படை மீது மண்ணை வீசி, ( يَا فُرَّارُ، فَرَرْتُمْ فِي سَبِيلِ اللَّهِ؟ ) "ஓடிப்போனவர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போரிடாமல்) ஓடினீர்கள்?" என்று கூறி தூற்றினர். தகவல் அறிந்த நபியவர்கள் காலித் (ரலி) அவர்களிடம் போரின் நிலை குறித்து விசாரித்தார்கள்.

 

காலித் (ரலி) அவர்கள், "நாயகமே! எதிரிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சம். ஆனால், முஸ்லிம்களின் எண்ணிக்கையோ வெறும் பத்தாயிரம் தான். புறமுதுகிட்டு ஓடும் எதிரிகளை விரட்டிச் சென்று தாக்கும்போது திடீரென எதிரிகள் எதிர்தாக்குதல் நடத்திவிட்டால் நமக்குத்தான் பெரும் உயிர் சேதம் ஏற்படும். நாங்கள் புறமுதுகுக்காட்டி ஓடிவரவில்லை. மற்றொரு சந்தர்ப்பத்திற்காக திரும்பி வந்துள்ளோம்" என்று விளக்கினார்.

 

நபியவர்கள் கூடி நின்ற மதீனத்து மக்களிடம், ( لَيْسُوا بِالْفُرَّارِ، وَلَكِنَّهُمُ الْكُرَّارُ إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى ) "அவர்கள் (போரை விட்டும்) விரண்டோடி வந்தவர்கள் அல்லர். எனினும் அவர்கள், அல்லாஹ் நாடினால் திரும்பச் சென்று தாக்குபவர்கள்" என்று கூறினார்கள். நூல்:- சீரத் இப்னு ஹிஷாம், தாரீக் அத்தபரீ, தலாயிலுந் நுபலா இமாம் பைஹகீ, அல்பிதாயா வந்நிஹாயா

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மற்றவர்வர்களைப் போன்று அவசரப்படவில்லை. வானத்திற்கும் பூமிக்கும் குதித்து வசைபாடவில்லை. நடந்தது என்ன? என்று நிதானமாக தீர விசாரித்தார்கள்.

 

இருதரப்பு விசாரணை

 

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. (யமன் தேசத்திற்கு என்னை நீதி நிர்வாக பணிக்காக அனுப்பியபோது) என்னிடம் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், ( إِذَا تَقَاضَى إِلَيْكَ رَجُلاَنِ فَلاَ تَقْضِ لِلأَوَّلِ حَتَّى تَسْمَعَ كَلاَمَ الآخَرِ فَسَوْفَ تَدْرِي كَيْفَ تَقْضِي ) "உம்மிடம் இருவர் வழக்கைக் கொண்டு வந்தால், (வாதியின் வாதத்தைக் கேட்டது போன்றே) பிரதிவாதியின் வாதத்தையும் கேட்காமல் வாதிக்குச் சாதகமாக நீர் தீர்ப்பளித்துவிடாதீர். ஏனெனில், பின்னர் தான் எவ்வாறு தீர்ப்பளிக்க வேண்டும் என்பதை உமக்கு புலப்படும்" என்று கூறினார்கள். அதற்குப் பின் நான் சரியான முறையில் தீர்ப்பு வழங்குபவராக இருந்து வருகிறேன்.  நூல் திர்மிதீ-1252

 

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். தனது ஒரு கண் பிடுங்கபட்ட நிலையில் ஒருவன் இரத்தம் வடிய வடிய வந்து நீதி கேட்டாலும், அவனது எதிரி வரும்வரை அவனுக்கு நீதி வழங்கிவிடாதே! ஏனெனில், அவனது எதிரி ஒருவேளை இரண்டு கண்களும் பிடுங்கப்பட்ட நிலையில் வரக்கூடும்.

 

முதலில் வந்து புகார் அளிப்பவன் நல்லவனாக இருக்கக்கூடும் என்று எண்ணிவிடக்கூடாது. தீர விசாரிக்காமல் தீர்ப்பு வழங்குவது அறிவுடைமையாகாது.

 

தீர்ப்புகள் தவறாகிவிடக்கூடாது

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அருமை நாயகம் (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணுடன் இணைத்து ஒரு மனிதர் அவதூறு சொல்லப்பட்டார். அப்போது அண்ணலார் அலீ (ரலி) அவர்களிடம், ( اِذْهَبْ فَاضْرِبْ عُنُقَهُ ) "நீங்கள் சென்று அவருடைய கழுத்தை வெட்டிவிடுங்கள்" என்று கூறினார்கள்.

 

அவ்வாறு அலீ (ரலி) அவர்கள் சென்றபோது, அவர் சுற்றுச் சுவர் இல்லாத ஒரு கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அவரிடம் அலீ (ரலி) அவர்கள், "மேலே வா" என்று தமது கையை கொடுத்து அவரை வெளியேற்றினார்கள். அப்போது அவர் இன உறுப்பு துண்டிக்கப்பட்டவராக, இன உறுப்பே அற்றவராக இருந்தார்.

 

ஆகவே, அலீ (ரலி) அவர்கள் அவரை(க் கொல்லாமல்) விட்டுவிட்டார்கள். பிறகு அண்ணலாரிடம் வந்து, ( يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ لَمَجْبُوبٌ مَا لَهُ ذَكَرٌ ) "நாயகமே! அவர் இன உறுப்பு துண்டிக்கப்பட்டவர்; இன உறுப்பே அற்றவர் ஆவார்" என்று (கூறி தான் அவரை கொல்லாமல் விட்டதற்கான காரணத்தை) கூறினார்கள்.                                                                 நூல்:- முஸ்லிம்-5352

 

மற்றொரு அறிவிப்பில் "பிரசன்னமாக இருப்பவருக்கு தெரிவதெல்லாம் மறைந்து இருப்பவருக்கு தெரிவதில்லை" என்று அண்ணலார் கூறியதாக அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சம்பந்தப்பட்ட அம்மனிதரை விசாரித்த பிறகு உண்மையெனில், அவர் கொல்லப்பட வேண்டும் என்பது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் உத்தரவு. எனவே, அம்மனிதரின் நிலையை கண்ட பிறகு அதற்குரிய காரணமில்லாததால் அலீ (ரலி) அவர்கள் அம்மனிதரை கொல்லாமல் விட்டுவிட்டார்கள். இதை அண்ணலாரும் நியாயமானதாகவே கருதினார்கள்.

 

ஒரு மனிதரைப்பற்றி என்னத்தான் குற்றம்சாட்டப்பட்டாலும், தீர விசாரிக்காமல் அவரைப்பற்றி ஒரு முடிவுக்கு வரக்கூடாது.

 

முறையாக விசாரிக்கப்படாமல் எழுதப்படும் தீர்ப்புகள் அனைத்தும் குப்பையே! அதனை எழுதியவரும் அதே தரத்தை சார்ந்தவர் ஆகும்.

 

தமது கருத்தை மாற்றிக்கொண்டார்கள்

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மர்யமின் புதல்வர் (ஈசா (அலை) அவர்கள்), ஒரு மனிதர் திருடிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவனிடம், ( أَسَرَقْتَ ) "நீ திருடினாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அவன், ( كَلاَّ وَاللَّهِ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ ) "யாரைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஏக இறை)வன் மீதாணையாக! இல்லை (நான் திருடவில்லை)" என்றான்.

 

உடனே ஈசா (அலை) அவர்கள், ( آمَنْتُ بِاللَّهِ وَكَذَّبْتُ عَيْنِي ) "அல்லாஹ்வை (முன்னிறுத்தி சத்தியமிட்டு அவன் கூறுவதால் அவன் கூறியதை) நான் நம்பினேன். (திருடுவதைப் போன்று நானாகவே எண்ணிக்கொண்டதால்) என்னை நான் நம்ப மறுக்கிறேன்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-3444, முஸ்லிம்-4721, நசாயீ-5332, இப்னுமாஜா-2093, முஸ்னது அஹ்மத்

 

ஆரம்பத்தில் அந்த மனிதர் திருடியதாக ஈசா (அலை) அவர்கள் கருதினார்கள். அவர், தாம் திருடவில்லை என்று அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்து சொன்னவுடன் தமது கருத்தை ஈசா (அலை) அவர்கள் மாற்றிக்கொண்டார்கள். எனவே, அந்தப் பொருள் அந்த மனிதருக்கே சொந்தமானதாக இருந்து ஏதோ காரணத்திற்காக அதை அவர் ஒளித்துவைத்து எடுத்திருக்கலாம். அதைப் பார்த்த ஈசா (அலை) அவர்கள் திருடுகிறார் என்று எண்ணியிருக்கலாம். அல்லது பிறருடைய பொருளாகவே அது இருந்து, திருட வேண்டும் என்ற எண்ணமின்றி வேறு நோக்கத்திற்காக அவர் அதை எடுத்திருக்கலாம். எப்படியானாலும் கண்ணால் பார்ப்பதோ, காதால் கேட்பதோ மட்டும் போதாது. தீர விசாரித்தே முடிவு செய்ய வேண்டும் என்று இதிலிருந்து தெரிகிறது.  நூல்:- ஃபத்ஹுல் பாரீ, உம்தத்துல் காரீ

 

செவியுற்றதெல்லாம் உண்மையல்ல

 

உஸ்மான் பின் அப்தில்லாஹ் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருவர் எகிப்திலிருந்து ஹஜ் செய்ய வந்திருந்தார். அவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், "நான் உங்களிடம் ஒரு விஷயம் குறித்து கேட்பேன். நீங்கள் எனக்கு பதிலளிப்பீர்களா?" இந்த இறையில்லத்தின் புனிதத்தை முன்வைத்து தங்களிடம் கேட்கிறேன்.

 

1) உஸ்மான் (ரலி) அவர்கள் உஹுத் போரின்போது (போர்க்களத்திலிருந்து) வெருண்டோடியதை நீங்கள் அறிவீர்களா? என்ற வினவ, அன்னார்,  ஆம் (அறிவேன்) என்றார்கள். 2) உஸ்மான் (ரலி) அவர்கள் பத்ரு போரில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று வினவ, அன்னார், ஆம் (தெரியும்) என்றார்கள். 3) உஸ்மான் (ரலி) அவர்கள் ஹுதைபியாவில் நடந்த 'பைஅத்துர் ரிள்வான்' சத்தியப் பிரமாணத்திலும் கலந்து கொள்ளவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? என்று வினவ, அன்னார், ஆம் (தெரியும்) என்றார்கள்.

 

(இவற்றைக் கேட்டுவிட்டு) அந்த எகிப்தியர் (உஸ்மான் - ரலி அவர்கள் தாம் நினைத்திருந்ததைப் போன்று இவ்வளவு குறைகளையும் கொண்டவர் தான் என்ற தொனியில்) அல்லாஹு அக்பர் (அல்லாஹு மிகப் பெரியவன்) என்று கூறினார்.

 

அதற்கு அன்னார், "வா! (இவற்றையெல்லாம் உஸ்மான் - ரலி அவர்கள் ஏன் பங்கு பெறவில்லையென்று) உனக்கு நான் விளக்குகிறேன்" எனச் சொல்லிவிட்டு, பின்வருமாறு கூறினார்கள்.

 

அவர்கள் உஹுத் போரின்போது வெருண்டோடிய சம்பவம் தொடர்பாக அல்லாஹ் அவரது பிழையைப் பொறுத்து அவருக்கு மன்னிப்பளித்துவிட்டான் என்று நானே சாட்சியம் கூறுகிறேன்.

 

பத்ரு போரில் அவர்கள் கலந்து கொள்ளாததற்கு காரணம், அருமை நாயகம் (ஸல்) அவர்களின் மகள் (ருகய்யா - ரலி) உஸ்மான் (ரலி) அவர்களின் துணைவியாக இருந்தார். அப்போது அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார்‌. நபியவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம், "பத்ருப்போரில் கலந்துகொண்ட ஒரு மனிதருக்குரிய (மறுமை) பலனும் (போர்ச் செல்வத்தில்) ஒருவரது பங்கும் உங்களுக்கு கிடைக்கும் (நீங்கள் உங்கள் மனைவியைக் கவனியுங்கள்)" என்று கூறினார்கள். எனவே தான், அவர் அதில் கலந்து கொள்ளவில்லை.)

 

மக்கா புறநகரில் நடந்த பைஅத்துர் ரிள்வான்  சத்திய பிரமாண நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளாததற்கு காரணம், நபியவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களை (குறைஷியரிடம் பேச மக்காவிற்குத் தம் தூதுவராக) அனுப்பியிருந்தார்கள்.

 

மேலும், இந்தச் சத்திய பிரமாண நிகழ்ச்சி உஸ்மான் (ரலி) அவர்கள் (மக்காவிற்கு) போன பின்பு தான் நடைபெற்றது. நபியவர்கள், தம் (வலக்)கையை (சுட்டிக்காட்டி, "இது உஸ்மானுடைய கை" என்று சொல்லி, அதை) தம் (இடக்)கையின் மீது தட்டினார்கள். (பிறகு), "இப்போது நான் இந்த சத்தியப் பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்" என்று கூறினார்கள்.

 

இவ்வாறு அப்துல்லாஹ் உமர் (ரலி) அவர்கள் (கூறிவிட்டு, உஸ்மான் - ரலி அவர்களைப்பற்றி தாழ்வாக எண்ணியிருந்த) அந்த மனிதரிடம், "நான் சொன்ன இந்தப் பதில்களை எடுத்துக்கொண்டு இப்போது நீர் போகலாம்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்-5511

 

குறிப்பிட்ட ஒருவரைப்பற்றி யாரோ ஒரு சிலர் ஏதேனும் ஒன்றைக் கூறிவிட்டார்கள் என்பதற்காக அதை அப்படியே நம்பி, அவர் தவறானவர் என்று முடிவு செய்வது சரியன்று. அது குறித்து, சரியான ஒருவரிடம் சென்று தீர விசாரித்து, தெளிவு பெற வேண்டும்.

 

ஒரு தாய் தனது பிள்ளைகளிடம், இவர் தான் உங்களின் தந்தை என்று கூறுகின்ற கூற்றை ஆய்வு செய்யக்கூடாது. அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்‌. மாறாக, தீர விசாரித்த பிறகே ஏற்றுக்கொள்வோம் என்று ஆய்வு செய்தால், அந்தப் பிள்ளைகள் தமது தாயின் பத்தினித்தன்மையில் சந்தேகப்படுவது என்று பொருளாகும்.

 

இவ்வாறு தான், ஏக இறைவனைக் குறித்து திருக்குர்ஆன் மற்றும் இறைத்தூதர்களின்  உண்மையான கூற்றை ஆய்வு செய்யக்கூடாது.  மாறாக, தீர விசாரித்த பிறகே ஏற்றுக்கொள்வோம் என்று ஆய்வு செய்தால், அது முழுமையான இறைநம்பிக்கையாக ஆகாது.

 

நாம் உலகக் காரியங்கள் குறித்து, “கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய்‌‌. தீர விசாரிப்பதே மெய்” என்று உணர்ந்து செயல்பட அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951


Thursday, 9 April 2026

தீமைக்குத் துணைபோகாதே!

 

தீமைக்குத் துணைபோகாதே!

 

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

நன்மைக்கும் இறையச்சத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்துக்கும் எல்லை மீறலுக்கும் (அநியாயத்திற்கும்) துணைபோய்விடாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அல்லாஹ் தண்டனை வழங்குவதில் கடுமையானவன் ஆவான். திருக்குர்ஆன்:- 5:2

 

இஸ்லாமிய பார்வையில் தீமைக்கு துணைபோவது (பாவம் மற்றும் அநியாயத்திற்கு உதவுவது) வன்மையாகக் கண்டிக்கப்படும் குற்றமாகும். இது சமூக அமைதியைக் குலைத்து, இறைவனின் தண்டனைக்கு வழிவகுக்கும், பாவத்திலும் பகைமையிலும் உதவக்கூடாது. நன்மையைத் தடுப்பவர்கள் மற்றும் தீமையை அனுமதிப்பவர்கள், நன்மையை அழிப்பவர்களாவர். பாவக்காரியங்களுக்கு உதவுவது தீயவர்களின் பண்பாகும், இது கடும் தண்டனைக்குரியது.

 

தீமைகளை கண்டு கொள்ளாமல் இருப்பது அல்லது சகித்துக் கொள்வது மூலம் நன்மையை அழித்து, தீயவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். அநியாயக்காரர்களுக்கு துணைபோவது அல்லது அநியாயத்தை  செய்ய அனுமதிப்பது இறைவனின் கோபத்தையும், தண்டனையையும் கொண்டு வரும்.

 

தீயவனின் அடையாளம்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن أعانَ عَلى خُصُومَةٍ بِغَيْرِ حَقٍّ، كانَ في سَخَطِ اللَّهِ حَتّى يَنْزِعَ )  அநியாயமாக ஒரு சர்ச்சையை ஆதரிப்பவர், அதிலிருந்து விலகும் வரை அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிவிட்டவர் ஆவார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- ஹாகிம், தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن مَشى مَعَ ظالِمٍ لِيُعِينَهُ، وهو يَعْلَمُ أنَّهُ ظالِمٌ، فَقَدْ خَرَجَ مِنَ الإسْلامِ ) ஒருவன் அநியாயக்காரன் என்று தெரிந்தும், அவனுக்கு உதவுவதற்காக அவனுடன் நடப்பவர், இஸ்லாத்தை விட்டு விலகிவிட்டார். அறிவிப்பாளர்:- அவ்ஸ் பின் ஷுரஹ்பில் (ரலி) அவர்கள் நூல்:- தாரீக் அல்கபீர் இமாம் புகாரீ, தப்ரானீ, ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَعَانَ عَلَى قَتْلِ مُؤْمِنٍ بِشَطْرِ كَلِمَةٍ لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ آيِسٌ مِنْ رَحْمَةِ اللَّهِ ) ஒருவர் இறைநம்பிக்கையாளர் ஒருவரைக் கொலை செய்வதற்கு அரை வார்த்தை அளவுக்கு உதவி செய்தாலும் அவருடைய இரு கண்களுக்கு இடையில் (நெற்றியில்) அல்லாஹ்வின் அருளிலிருந்து நிராசையடைந்தவர் என எழுதப்பட்டிருக்கும் நிலையில் (மறுமையில்) மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வைச் சந்திப்பார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-2610 பைஹகீ, ஹில்யத்துல் அவ்லியா

 

ஒருவரை கொலை செய்வதற்கு அரை வார்த்தை அளவு உதவி செய்தாலே குற்றம் எனும்போது, கொலை செய்ய கட்டளையிட்டால் அல்லது கொலை செய்வதில் கூட்டானால் அவரது குற்றம் எந்த அளவு பெரியது என சிந்திக்க வேண்டும்.

 

குவைத்தைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற காரி மற்றும் அறிஞர் மிஷாரி ராஷித் அல்அஃபாஸி (Mishary Rashid Al-Afasy) என்பவர், (Trump will open the doors of hell for the Iranian regime) "அதிபர் டிரம்ப் ஈரான் ஆட்சியாளர்களுக்கு நரகத்தின் கதவுகளைத் திறப்பார்" என்று (03-04-2026) வெளியிட்ட ஒரு அறிக்கைதான் வலைத்தளங்களில் இப்போது பேசுபொருளாக உள்ளது.

 

எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல், பிரச்சனையை ஊதிப் பெரிதாக்கி, அதன் மூலம் இலாபம் பார்ப்பவர்கள் அல்லது தமது வஞ்சகத்தை தீர்த்துக்கொள்பவர்கள் மிகவும் மோசமானவர்கள்.

 

தீமையைத் தடுப்பது ஒவ்வொரு முஸ்லிமின் சமூகக் கடமையாகும். இது நன்மையை ஏவுவதோடு இணைந்து, சமூக ஒழுங்கைப் பாதுகாக்கும் தூணாகக் கருதப்படுகிறது. தீமையைக் கண்டால் கைகளால் (நடவடிக்கை), நாவால் (பேச்சு) அல்லது உள்ளத்தால் (வெறுப்பு) தடுக்க வேண்டும் என்பது இஸ்லாம் கூறும் போதனையாகும்.

 

தீமையை தடுக்கும் ஆற்றல் இருந்தும் மௌனமாக இருப்பது இறைதண்டனைக்குரிய குற்றமாகும். சமூகத்தில் நீதியை நிலைநாட்டவும், இறைவனின் பொருத்தத்தைப் பெறவும் தீமையைத் தடுப்பது அவசியமான ஒன்றாகும்.

 

உதவுவதும் குற்றமே!

 

அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டார்கள். அவர்களுடன் (மக்களும்) புறப்பட்டனர். அவர்களில் ஒரு சிறு குழுவை, நபியவர்கள் வேறு வழியில் திருப்பிவிட்டார்கள். அவர்களில் நானும் ஒருவன். “நாம் சந்திக்கும்வரை கடலோரமாக நீங்கள் செல்லுங்கள்” என்று நபியவர்கள் கூறினார்கள்.

 

கடலோரமாகச் சென்று திரும்பிய போது, என்னைத் தவிர அனைவரும் இஹ்ராம் கட்டியிருந்தனர்; நான் மட்டும் இஹ்ராம் கட்டியிருக்கவில்லை. இவ்வாறு நாங்கள் சென்றுகொண்டிருக்கும்போது (என் தோழர்கள்) காட்டுக் கழுதைகளைக் கண்டனர்.

 

(நான் குதிரையில் ஏறியதும்) எனது சாட்டை கீழே விழுந்தது. (அதை எடுத்துத் தருமாறு என் தோழர்களிடம் நான் கேட்டபோது) என் தோழர்கள், ( لاَ نُعِينُكَ عَلَيْهِ بِشَىْءٍ، إِنَّا مُحْرِمُونَ ) “நாங்கள் இஹ்ராம் கட்டியிருப்பதால் இந்த விஷயத்தில் உமக்கு எந்த உதவியும் செய்யமாட்டோம்” என்று கூறிவிட்டனர். எனவே, நானே (இறங்கி) அதை எடுத்தேன்.

 

பிறகு நான் அக்கழுதைகளை வேட்டையாடி கொண்டு வந்தேன். அனைவரும் (ஓரிடத்தில்) இறங்கி அதன் இறைச்சியைச் சாப்பிட்டனர். “நாம் இஹ்ராம் கட்டியிருக்கும் நிலையில் வேட்டையாடப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்ணலாமா?” என்று தோழர்கள் (ஒருவரையொருவர்) கேட்டுக்கொண்டனர். எஞ்சிய இறைச்சியை எடுத்துக்கொண்டு நபியவர்களிடம் சென்று, நடந்தவற்றை விவரித்தார்.

 

அப்போது நபியவர்கள், ( مِنْكُمْ أَحَدٌ أَمَرَهُ أَنْ يَحْمِلَ عَلَيْهَا، أَوْ أَشَارَ إِلَيْهَا  ) “உங்களில் எவரேனும் அதைத் தாக்குமாறு அவரைப் பணித்தாரா? அல்லது அதை நோக்கி சைகை செய்தாரா?” என்று கேட்டார்கள். தோழர்கள் “இல்லை” என்றனர். அதற்கு நபியவர்கள், ( فَكُلُوا مَا بَقِيَ مِنْ لَحْمِهَا ) “அப்படியானால், அதன் எஞ்சிய இறைச்சியை உண்ணுங்கள்” என்று கூறினார்கள். நூல்:-  புகாரீ-1824, முஸ்லிம்-2244, 2247,

 

ஹஜ் அல்லது உம்ராவிற்காக இஹ்ராம் கட்டிய ஒருவர் தாமே வேட்டையாடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அவரது உத்தரவின் பேரில் அல்லது அவரது ஒத்துழைப்புடன் மற்றவர் வேட்டையாடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

 

இஹ்ராம் கட்டிய ஒருவர் வேட்டையாடுவது எப்படி குற்றமோ அது போன்று வேட்டையாடுவதற்கு உதவுவதும் குற்றம் என்பதை மேற்கண்ட செய்தியின் மூலம் விளங்கமுடிகிறது.

 

மார்க்க வரம்புகளை நாம் மீறாவிட்டாலும் அவ்வாறு மீறுபவர்களுக்கு உதவி செய்வதும் தவறு என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். எனவே, பாவக்காரியங்களைச் செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது. அவற்றுக்குக் கடுகளவும் உதவி செய்யாமலும் இருக்க வேண்டும்.

 

உடல் உழைப்பு கொடுப்பது, பொருளாதாரம் மற்றும் ஆலோசனை வழங்குவது, மட்டுமல்ல! தீமையான காரியம் நடைபெறும் இடத்திற்கே செல்லக் கூடாது. ஏனெனில், ஒரு வகையில் ஆராய்ந்து பார்த்தால் அதுவும் அந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு உதவுவதாகவே இருக்கிறது.

 

அமெரிக்கா தன்னுடைய இருப்பிடத்திலிருந்து ஏவுகணைகளை செலுத்த முடியாமல் அரபு நாடுகளில் தம்முடைய ராணுவத்தளங்களை அமைத்து அங்கிருந்து ஏவுகணைகளை ஈரான் மீது செலுத்துகிறது. அதாவது, அமெரிக்கா ஈரானை தாக்குவதற்கு அரபு நாடுகள் முழுமூச்சாக ஒத்துழைக்கிறது என்பது பொருளாகும்.

 

இவ்வாறு தான் அமெரிக்காவால் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் அநியாயமாக தாக்கப்பட்டு சீரழிக்கப்பட்டது. இன்றைய அரபு நாடுகள் அநியாயத்திற்கும், அத்துமீறலுக்கும் துணைபோகின்றது என்று சொன்னால் மிகையில்லை.

 

கண்டுக்கொள்ளாமல் இருப்பதும் குற்றமே!

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது மக்ஸுமி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள். அந்தப் பெண் தொடர்பாக கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் (பேசி தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க) சொல்வது யார்? என்று குறைஷியர் ஆலோசித்து, நபியவர்களின் செல்லப்பிள்ளை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தேர்வு செய்தனர்.

 

அவ்வாறே உசாமா (ரலி) அவர்கள் நபியவர்களிடம் பரிந்து பேசினார். அப்போது நபியவர்கள், ( أَتَشْفَعُ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ ) "அல்லாஹ் விதித்த தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்ற விடாமல் விட்டுவிடுமாறு) நீ பரிந்துரை செய்கின்றாய்?" என்று கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரையாற்றினார்கள்.

 

( أَيُّهَا النَّاسُ إِنَّمَا أَهْلَكَ الَّذِينَ قَبْلَكُمْ أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ وَإِذَا سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ وَايْمُ اللَّهِ لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا ) மக்களே! உங்களுக்கு முன் வாழ்ந்த (பனீ இஸ்ராயீல்) மக்கள் அழிந்து போனதற்கு காரணமே (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால், அவர்கள் அவரை தண்டிக்காமல் விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால், அவர்கள் மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். இறைவன் மீதாணையாக! இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி இருந்தாலும் நான் அவரது கையை துண்டித்தே இருப்பேன். நூல்:- புகாரீ-3475, முஸ்லிம்-3485

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن حالَتْ شَفاعَتُهُ دُونَ حَدٍّ مِن حُدُودِ اللَّهِ، فَقَدْ ضادَّ اللَّهَ في أمْرِهِ ) அல்லாஹ்வால் விதிக்கப்பட்ட தண்டனைகளில் ஒன்றை நிறைவேற்றுவதைத் தடுக்க எவரேனும் பரிந்துபேசினால், அவர் அல்லாஹ்வின் கட்டளையை எதிர்த்தவராவார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்

 

தவறை யார் செய்தாலும், தவறு என்று உரத்தக் குரலில் எடுத்துக் கூறி, அதற்காக கண்டிக்க வேண்டும் அல்லது தண்டிக்க வேண்டும். தம்மைச் சேர்ந்தவர்கள் தவறிழைத்தால் அதைக் கண்டுக்கொள்ளாமல் இருப்பது, மிகப்பெரிய அநீதியாகும். தவறுக்கு துணைபோனதாகவே கருதப்படும். தவறுக்கு துணைபோக எண்ணியவர்களை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக கண்டித்துள்ளார்கள்.

 

தடுக்கவேண்டும்

 

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ( انْصُرْ أَخَاكَ ظَالِمًا أَوْ مَظْلُومًا ) “உன் சகோதரன் அநீதியாளனாக இருக்கும் நிலையிலும் அநீதிக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்” என்று சொன்னார்கள்.

 

அப்போது ஒரு மனிதர், ( يَا رَسُولَ اللَّهِ أَنْصُرُهُ إِذَا كَانَ مَظْلُومًا، أَفَرَأَيْتَ إِذَا كَانَ ظَالِمًا كَيْفَ أَنْصُرُهُ ) “அல்லாஹ்வின் தூதரே! அநீதியிழைக்கப்பட்டவனுக்கு நான் உதவி செய்வேன். (அது சரிதான்.) அநீதியாளனுக்கு எப்படி நான் உதவி செய்வேன்? கூறுங்கள்!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ( تَحْجُزُهُ أَوْ تَمْنَعُهُ مِنَ الظُّلْمِ، فَإِنَّ ذَلِكَ نَصْرُهُ ) “அவனை அநீதியிழைக்கவிடாமல் நீ தடுப்பாயாக! இதுவே நீ அநீதியாளனுக்குச் செய்யும் உதவியாகும்” என்றார்கள். நூல்:- புகாரீ-6952, திர்மிதீ, முஸ்னது அஹ்மத்

 

கொடியோன் அபூஜஹ்ல் ஓர் அனாதைச் சிறுவனின் சொத்துக்குப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டிருந்தான். ஒருநாள் அந்தச் சிறுவன் உடுத்துவதற்குச் சரியான ஆடை எதுவுமின்றி நிர்வாண கோலத்தில் அபூஜஹ்லிடம் வந்தான். தன்னுடைய ஏழ்மையை எடுத்துரைத்தான். தன் சொத்தைத் திருப்பித் தருமாறும் உதவி செய்யுமாறும் கேட்டான். ஆனால் அபூஜஹ்ல் பணம் தரமுடியாது என்று மறுத்ததுடன் அந்தச் சிறுவனின் நெஞ்சில் கை வைத்து விரட்டினான்.

 

கஅபாவின் முற்றத்தில் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த குறைஷிப் பிரமுகர்கள் அந்தச் சிறுவனிடம், "நீ முஹம்மதிடம் சென்று முறையிடு. அவர் அபூஜஹ்லிடம் சென்று உனக்காகப் பரிந்துரைப்பார். உன் பணத்தைப் பெற்றுத்தருவார்" என்று கூறினர். அவர்களின் நோக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இந்த பிரச்சனையில் சிக்க வைக்க வேண்டும், அபூஜஹ்லிடம் திட்டுவாங்கச் செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால், இது அந்தச் சிறுவனுக்கு தெரியாது.

 

அச்சிறுவன் அண்ணலாரிடம் வந்து அபூஜஹ்ல் பற்றி முறையிட்டான். தன்னுடைய பணத்தை மீட்டுத் தருமாறு கோரினான். எளியோருக்கு எந்த உதவியும் செய்யாமல் அவர்களை வெறுமனே திருப்பி அனுப்புவது அண்ணலாரின் பழக்கம் அல்ல. அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு அபூஜஹ்லிடம் சென்றார்கள். அண்ணலாரைக் கண்டதும் கண்ணியமாக வரவேற்றான். அனாதைச் சிறுவனுக்குரிய பணத்தை எடுத்துக் கொடுத்தான். அதைப் பார்த்துக்கொண்டிருந்த குரைஷிப் பிரமுகர்கள் அபூஜஹ்லின் செயலைக் கண்டு வியந்தனர். நீ மதம் மாறிவிட்டாயா? என்று அவனிடம் கேட்டனர்.

 

அதற்கு அவன்,  "முஹம்மதின் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் சிறியதோர் ஈட்டியைக் கண்டேன். பயந்து போய்விட்டேன். அவர் கேட்டுக்கொண்டபடி சிறுவனின் பணத்தைக் கொடுக்கவில்லை எனில் அது என்னைக் குத்திவிடுமோ என்று அஞ்சினேன். அதனால்தான் உடனே பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன்" என்று கூறினான். நூல்:- தஃப்சீர் பைளாவி,  ஹாஷியத்துல் ஜமல்

 

யாரோ எவரையோ தாக்குகிறார். அதைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? என்ற எண்ணம் மிகவும் தவறாகும். அடுத்த வீட்டில் பற்றி எரிகின்ற தீயை அணைக்காவிட்டால், அது நம் வீட்டையும் எரித்து சாம்பலாக்கிவிடக்கூடும் என்று யோசிக்க வேண்டும்.

 

அடுத்தவர் படுகின்ற கஷ்டத்தை நாம் கண்டும் காணாமல் சென்று விட்டால், நமக்கு ஏதேனும் கஷ்டம் ஏற்படும்போது பிறர் கண்டும் காணாமல் சென்றுவிடுவார்கள். நமக்கு யாரும் உதவ முன்வர மாட்டார்கள்.

 

நாமும் பாதிக்கப்படலாம்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைவனின் விதிகளைக் கடைப்பிடிப்பவர், அவற்றை மீறி நடப்பவர் ஆகியோரின் நிலையானது, (கப்பலில் பயணம் செய்த) ஒரு கூட்டத்தாரின் நிலையைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல்தளத்திலும் வேறுசிலருக்குக் கீழ்த்தளத்திலும் இடம் கிடைத்தது.

 

கீழ்த்தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டுவர) அவர்கள் மேல்தளத்தில் இருப்பவர்களைக் கடந்துசெல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது).

 

அப்போது, கீழ்த்தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) ‘‘நாம் (தண்ணீருக்காக) நமது பங்கில் (கீழ்த்தளத்தில்) ஒரு துளை போட்டுக்கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருக்கலாம்’ என்று பேசிக்கொண்டார்கள்.

 

எனவே, ( فَإِنْ يَتْرُكُوهُمْ وَمَا أَرَادُوا هَلَكُوا جَمِيعًا، وَإِنْ أَخَذُوا عَلَى أَيْدِيهِمْ نَجَوْا وَنَجَوْا جَمِيعًا ) அவர்கள் விரும்பியபடி செய்துகொள்ள அவர்களை மேல்தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால், (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்துபோவார்கள். (துளையிட விடாமல்) அவர்களின் கரங்களைப் பிடித்துக்கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக்கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக்கொள்வார்கள். அறிவிப்பாளர்:- நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2493

 

பாவமோ, அநியாயமோ யாரோ எவருக்கோ செய்கிறார்கள் நாம் அதை செய்யவில்லை எனவே, அதைப் பற்றிய அக்கறை நமக்கு தேவையில்லை என்ற அலட்சியப்போக்கு ஆபத்தானது. சமூகத்தில் பாவமான காரியங்கள் பெருகிவிட்டால் அவற்றைச் செய்பவர்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் அதன் பாதிப்பு நேரிடும். இதைச் சிறுபிள்ளைக்கும் புரியும் வகையில் நபியவர்கள் உதாரணம் மூலம் விளக்கி இருக்கிறார்கள்.

 

அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஈரானை தாக்குகிறது. அதனால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஏற்பட்டு வருகிறது. ஈரானுக்கு தானே பிரச்சினை என்று விட்டுவிடும்போது அதன் விளைவு உலகம் முழுவதும் பிரதிபலிக்கிறது.

 

சமாதானம் செய்து வைப்பது

 

(பிறரின் அநியாயத்தை) மன்னித்து சமாதானமாக செல்வோருக்கு அவரது கூலி அல்லாஹ்விடம் உள்ளது. அவன் அநியாயம் செய்பவர்களை விரும்பமாட்டான். திருக்குர்ஆன்:-  42:40

 

ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் மீதொருவர் கற்கள் வீசிக் கொள்ளுமளவிற்கு 'குபா' வாசிகள் (தமக்கிடையே) சண்டையிட்டனர். அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நபியவர்கள், ( اذْهَبُوا بِنَا نُصْلِحُ بَيْنَهُمْ ) "நம்மை அழைத்துச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கிடையே சமாதானம் செய்து வைப்போம்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2693

 

யாரோ இருவர் சண்டையிட்டுக்கொள்கிறார்கள் நமக்கு ஏன் வந்தது வம்பு? என்ற அடிப்படையில் ஒதுங்கிச் செல்வது முறையல்ல. அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள சண்டையால் பிறருக்கு பாதிப்பு வரக்கூடும் என்று தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து, அவர்களை சமாதானத்திற்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.

 

இரு நாட்டுக்கு மத்தியில் போர் மேகம் சூழ்ந்த போதிலும், அந்த நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடி, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சமாதானத்தை விரும்புவது தான், தமது குடிமக்கள்மீதுள்ள அக்கறை உள்ள சிறந்த தலைமைப் பண்பிற்குரிய அடையாளமாகும்.

 

ஒரு தீமையைக் கண்டவுடன் ”எடுத்தோம் கவிழ்த்தோம்” என்றில்லாமல், அதற்கு ஏற்ற விதத்திலே அதனை தடுக்கவேண்டும். அதுவும், அதனை எந்த அடிப்படையில் தடுத்து, மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற சிந்தனையுடனே செயல்பட வேண்டும்.

 

38 நாள்களுக்கு பிறகு பதட்டம் தணியும் விதகமாக அமெரிக்கா, ஈரான் ஆகிய இரு நாடுகளையும் இரண்டு வார போர் நிறுத்தமும் 10 நிபந்தனைகளுடன் பேச்சு வார்த்தைக்கு (8-04-2026 அன்று) அழைத்து வந்துள்ளது பாகிஸ்தான். இது அழகிய முயற்சி என்று உலகம் முழுவதும் பாகிஸ்தானை பாரட்டி வருகிறது.

 

விரைவிலேயே முழுவதுமாக போர் பதற்றம் நீங்கி, உலகம் அமைதி பெற, அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

வலிமையானவர்

  வலிமையானவர்   إِنَّا سَنُلْقِي عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا நிச்சயமாக விரைவில் உம்மீது பாரமான சொல்லான (இவ்வேதத்)தை முழுமையாக நாம் இறக்க...