Search This Blog

Friday, 4 September 2026

வானவர்களின் பிரார்த்தனை

 

வானவர்களின் பிரார்த்தனை

 

وَالْمَلَائِكَةُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيَسْتَغْفِرُونَ لِمَنْ فِي الْأَرْضِ

வானவர்கள் (பயந்து) தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிக்கிறார்கள். பூமியில் உள்ளவர்க(ளின் குற்றங்க)ளை மன்னிக்குமாறும் கோருகிறார்கள். திருக்குர்ஆன்:- 42:5

 

ஓர் முஸ்லிம், நல்லோர்களின் பிரார்த்தனையைப் பெற்று வளம் பெற்றுவிட வேண்டும் என்பதில் ஆவல்கொள்கிறான். அதனால் தான், நல்லோர்களைக் காணும்போதெல்லாம் “எனக்காக துஆ செய்யுங்கள்” என்று கோருகிறான்.

 

ஆனால், அவன் சில நற்செயல்களைச் செய்யும்போது, இறைவனின் நெருக்கம் பெற்ற, பரிசுத்தமான வானவர்களின் பிரார்த்தனை கிடைக்கப்பெறுகிறான். வானவர்களின் பிரார்த்தனையைப் பெற்றவன் ஈடேற்றம் பெற்றுவிடுவான் என்பதில் சந்தேகமில்லை.

 

(அர்ஷ் எனும்) இறையாசனத்தைச் சுமந்து கொண்டிருப்பவர்களும் அதைச் சுற்றிலும் நிற்பவர்களும் தன் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, துதித்துக்கொண்டிருக்கின்றனர். அவன்மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். மேலும், இறைநம்பிக்கை கொண்டோருக்காகப் பாவமன்னிப்புக் கோருகின்றனர். "எங்கள் இறைவா! நீ ஞானத்தாலும் கருணையாலும் அனைவரையும்விட மிக்க விசாலமானவன். ஆகவே, (பாவங்களை விட்டு) விலகி உன்னுடைய வழியைப் பின்பற்றுபவர்களுக்கு நீ மன்னிப்பளித்து, அவர்களை நரக வேதனையில் இருந்து நீ பாதுகாப்பாயாக!" (என்று பிரார்த்தனை செய்கின்றனர்.) திருக்குர்ஆன்:- 40:7

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது குறித்து நிறைய, அழகிய தகவல்களை கூறியுள்ளார்கள்.

 

சகோதரருக்காகப் பிரார்த்தணை

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ دَعَا لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ آمِينَ وَلَكَ بِمِثْلٍ ) ஒருவர், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், "ஆமீன் (இறைவா! ஏற்றுக்கொள்வாயாக) அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்!" என்று கூறுகிறார். அறிவிப்பாளர்:- அபூதர்தா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5280

 

நாம், கண்ணெதிரே இல்லாத ஒருவருக்காகவோ பலருக்காகவோ பிரார்த்திக்கும்போது அதில் உள்ளார்ந்த ஒரு ஈடுபாடும், பொது நலமும் இருக்கும். அதை அல்லாஹ் விரும்புகிறான். அதனால் தான் மற்றவர்களுக்காக நாம் கோரும் பிரார்த்தனையில் பலன், பிரார்த்திக்கும் நமக்கும் கிடைக்கும். நமக்கும் அதேபோன்று நலன் ஏற்பட வேண்டும் என்று வானவர்கள் விரும்புகிறார்கள்.

 

உடல்நலம் விசாரித்தல்

 

அபூஃபாக்கித்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை அலீ (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக்கொண்டு, "(வாருங்கள்) நாம் (என் மகனார்) ஹசனிடம் சென்று அவரை உடல்நலம் விசாரிப்போம்" என்று கூறினார்கள். நாங்கள் (ஹசன் - ரலி அவர்களிடம்) சென்றபோது, அங்கு ஹசன் (ரலி) அவர்களிடம் அபூ மூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் இருப்பதை கண்டோம்.

 

அப்போது அலீ (ரலி) அவர்கள், ( أَعَائِدًا جِئْتَ يَا أَبَا مُوسَى أَمْ زَائِرًا ) "அபூமூசா! நீங்கள் உடல் நலம் விசாரிக்க வந்தீர்களா? அல்லது (சாதாரணமாகச்) சந்திப்பதற்கு வந்தீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அபூ மூசா (ரலி) அவர்கள், "இல்லை; உடல்நலம் விசாரிக்க தான் வந்தேன்" என்றார்கள்.

 

அப்போது அலீ (ரலி) அவர்கள், ( مَا مِنْ مُسْلِمٍ يَعُودُ مُسْلِمًا غُدْوَةً إِلاَّ صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُمْسِيَ وَإِنْ عَادَهُ عَشِيَّةً إِلاَّ صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُصْبِحَ وَكَانَ لَهُ خَرِيفٌ فِي الْجَنَّةِ ) ‏ "முஸ்லிம் ஒருவர் மற்றொரு முஸ்லிமை உடல்நலம் விசாரிப்பதற்காக ஒரு காலை நேரத்தில் சென்றால் அவருக்காக மாலை நேரம் வரை எழுபதாயிரம் வானவர்கள் பிரார்த்திக்கின்றனர். அவர் மாலை நேரத்தில் உடல்நலம் விசாரிக்க சென்றால், அவருக்காக காலை நேரம் வரை எழுபதாயிரம் வானவர்கள் பிரார்த்திக்கிறார்கள். மேலும், அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு தோட்டமும் வெகுமதியாக கிடைக்கிறது" என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-891

 

நோயாளியை சந்தித்து உடல்நலம் விசாரிப்பது நற்செயலும் நபிவழியும் ஆகும். நோயாளியை சந்தித்து உடல்நலம் விசாரிப்பதால் நோயாளி ஆறுதலும் உற்சாகமும் அடைவார். இதுவே அவரது உடல்நலம் முன்னேறக் காரணமாக அமையலாம். அத்துடன் இருவருடையே அன்பும் இணக்கமும் அதிகரிக்க வழிவகுக்கும். அதே நேரத்தில் நோயாளிக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் அளவுக்கோ அவருடைய குடும்பத்தாருக்குச் சங்கடம் உண்டாகும் அளவுக்கோ அவர் அருகில் நீண்ட நேரம் அமரலாகாது. நோயாளியைச் சந்தித்து உடல்நலம் விசாரிப்பதின் சிறப்பு தொடர்பாக பல நபிமொழிகள் வந்துள்ளன.

 

மார்க்கக் கல்வியாளர்கள்  

 

கஸீர் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. திமிஷ்கிலுள்ள (டமாஸ்கஸ்) பள்ளிவாசலில் அபூதர்தா (ரலி) அவர்களுடன் நான் அமர்ந்திருந்தேன். அப்போது அங்கு ஒரு மனிதர் வந்து, "அபூதர்தா! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன நபிமொழியை அறிவிப்பதாக நான் கேள்விப்பட்டதால் (அதை அறிய நாடி) நான் மதீனாவிலிருந்து உங்களிடத்தில் வந்திருக்கிறேன். (அதைத் தவிர) வேறு எந்த (பொருளாதாரத்) தேவைக்காகவும் வரவில்லை" என்று கூறினார்.

 

அப்போது அபூதர்தா (ரலி) அவர்கள், ( مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ وَإِنَّ الْمَلاَئِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ وَإِنَّ طَالِبَ الْعِلْمِ يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاءِ وَالأَرْضِ حَتَّى الْحِيتَانِ فِي الْمَاءِ ) "யார் ஒரு பாதையில் கல்வியைத் தேடிச் செல்கிறாரோ அவருக்கு சொர்க்கத்தின் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். கல்வியைத் தேடும் ஒருவர் மீது கொண்டுள்ள அன்பால் வானவர்கள் தம் சிறகுகளை தாழ்த்துகின்றனர். தண்ணீரில் வாழும் மீன்கள் உட்பட வானம் பூமியிலுள்ளோர் யாவரும் கல்வியைத் தேடுவதற்காகப் பாவமன்னிப்பு கோருகின்றனர் என்று அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்றார்கள்.  நூல்:- அபூதாவூத்-3157, இப்னுமாஜா-219, முஸ்னது அஹ்மத், தாரிமீ

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ اللَّهَ وَمَلاَئِكَتَهُ وَأَهْلَ السَّمَوَاتِ وَالأَرْضِ حَتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا وَحَتَّى الْحُوتَ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِ النَّاسِ الْخَيْرَ ) அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் விண்ணிலும் மண்ணிலும் வசிப்போரும் பொந்துகளில் வாழும் எறும்புகள் (தண்ணீரில் வாழும்) மீன்கள் உட்பட யாவரும் மக்களுக்கு நல்லதைக் கற்பிக்கும் ஆசிரியருக்காக அருள்வேண்டி (மன்னிப்பு வேண்டி) பிரார்த்திக்கின்றனர். அறிவிப்பாளர்:- அபூ உமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2606

 

வள்ளல்  

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ الْعِبَادُ فِيهِ إِلاَّ مَلَكَانِ يَنْزِلاَنِ فَيَقُولُ أَحَدُهُمَا اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا ) ஒவ்வொரு நாளும் அடியார்கள் காலைப்பொழுதை அடையும்போது, இரு வானவர்கள் (வானிலிருந்து) இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், “இறைவா! (நல்வழியில்) செலவு செய்பவருக்குப் பிரதிபலன் வழங்குவாயாக!” என்று கூறுவார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1442

 

நமது பொருளாதாரம் தேவையுடையோருக்கு பயன்பட வேண்டும் என்று கருதியே நாம் தானம் தர்மம் வழங்குகிறோம். இது ஒரு வகையில் பொதுநலம். எனவே, பொதுநலம் பேணுவோருக்கு வானவர்கள் பிரார்த்திப்பது இயல்பானது தான்.

 

சிலர் நூறுகளை அல்லது ஆயிரங்களை அல்லது இலட்சங்களை அல்லது கோடிகளை இறைவழியில் செலவு செய்கிறார்கள். அதாவது, அவரவர் தகுதிக்கேற்ப செலவு செய்கிறார்கள். அல்லாஹுத்தஆலா அவன் தகுதிக்கேற்ப பகரத்தை வழங்குவான்.

 

கொடுக்கின்றவர் நன்றாக இருந்தால் தானே, வாங்கி தின்ன முடியும்" என்று சொல்வார்கள்.

 

அதாவது, கொடுக்கின்றவர் வளமாக வாழ வேண்டும் என்று அவரிடம் வாங்கி அனுபவித்தவர்கள் பிரார்த்திப்பார்கள். எனவே, கொடுக்கின்றவருக்கு வானவர்கள் மற்றும் மனிதர்களின் பிரார்த்தனை இருக்கின்றபோது அல்லாஹ் அவரின் வாழ்க்கைத்தரத்தை தாழ்த்துவதில்லை. மாறாக, உயர்த்தவே செய்வான்.

 

சுருங்கக்கூறின், மனத்தூய்மையுடன் இறைவழியில் செலவு செய்கிறவர்களுக்கு வானவர்களின் பிரார்த்தனை கிடைப்பதால் அவர்கள் ஏழையாக மாட்டார்கள்.

 

ஸலவாத் சொன்னால்

 

நிச்சயமாக அல்லாஹ்வும், அவனுடைய வானவர்களும் நபி (முஹம்மது-ஸல் அவர்கள்) மீது ஸலவாத்து சொல்கிறார்கள். ஆகவே, இறைநம்பிக்கையாளர்களே! நீங்களும் (முஹம்மது-ஸல்)  அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி சலாமும் கூறிக்கொண்டிருங்கள்.  திருக்குர்ஆன்:- 33:56

 

அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருநாள், கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், முகத்தில் மகிழ்ச்சி ததும்ப (எங்களிடம்) வந்தார்கள். (அது குறித்து நாங்கள் வினவினோம்.) அப்போது அவர்கள் கூறியதாவது: என்னிடம் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, ( أَمَا يُرْضِيكَ يَا مُحَمَّدُ أَنْ لاَ يُصَلِّيَ عَلَيْكَ أَحَدٌ مِنْ أُمَّتِكَ إِلاَّ صَلَّيْتُ عَلَيْهِ عَشْرًا ) "முஹம்மது (ஸல்) அவர்களே! உங்கள்மீது உங்கள் சமுதாயத்தில் உள்ள ஒருவர் ஸலவாத்து ஓதும்போது, அவரின்மீது நான் பத்து முறை அருள்வேண்டி பிரார்த்தனை புரியாமலிருப்பதில்லை என்பதை நீங்கள் பொருந்திக்கொள்ளவில்லையா?" என்று கூறினார்.   நூல்:- நசாயீ-1278, தாரிமீ

 

சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் உள்ளிட்ட அறிஞர்கள் பலர் அல்லாஹ் ஸலவாத்து சொல்கிறான் என்பதற்கு "அருள் புரிகிறான்" என்றும்,  வானவர்கள் சலவாத்து சொல்கிறார்கள் என்பதற்கு "பாவங்களை மன்னிக்கும்படி வேண்டுகின்றனர்" என்றும் பொருள் கொள்ள வேண்டும் என்று கூறினர்.   நூல்:- திர்மிதீ-447

 

ஸலவாத்து என்றால் ஈடேற்றம் என்று பொருளாகும். ஸலவாத்து சொல்பவர்களைப் பொறுத்து பொருள் மாறுபடும். இதன்படி அல்லாஹ் ஸலவாத்து சொல்கிறான் என்பதற்கு "அருள்புரிகிறான்" என்றும்,  வானவர்கள் ஸலவாத்து சொல்கிறார்கள் என்பதற்கு "பாவமன்னிப்பு கோருகின்றனர்" என்றும், முஸ்லிம்கள் ஸலவாத்து சொல்கிறார்கள் என்பதற்கு "பிரார்த்திக்கிறார்கள்" என்றும்  பொருள் கொள்ள வேண்டும்.

 

தொழுவதற்காக

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவர் அங்கத்தூய்மை (உளூ) செய்து, அந்த அங்கத்தூய்மையைச் செம்மையாகச் செய்து, பின்னர் தொழுவதற்காகவே புறப்பட்டு பள்ளிவாசலை நோக்கிச் செல்வாரானால், அவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டுக்காகவும் அவருக்கு ஒரு பதவி உயர்த்தப்படுகிறது; பாவம் ஒன்று அவரை விட்டு அழிக்கப்படுகிறது.

 

அவர் தொழுதால், வானவர்கள் அவருக்காக, அவர் தாம் தொழுத இடத்தில் இருக்கும்வரை (அருள் வேண்டி) பிரார்த்தித்துக்கொண்டேயிருக்கின்றனர். ( اللَّهُمَّ صَلِّ عَلَيْهِ، اللَّهُمَّ ارْحَمْهُ )  “இறைவா! இவருக்கு அருள் புரிவாயாக! இறைவா! இவர்மீது கருணை காட்டுவாயாக” என்று கூறுவார்கள்.

 

உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் வரை தொழுகையில் இருப்பதாகவே கருதப்படுகிறார்.

 

மற்றொரு அறிவிப்பில் பதிவாகியுள்ளது: வானவர்கள், ( اللَّهُمَّ ارْحَمْهُ اللَّهُمَّ تُبْ عَلَيْهِ ) "இறைவா! இவருக்கு அருள்புரிவாயாக! இறைவா! இவருடைய பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்வாயாக!" என்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் யாருக்கும் எவ்வித  நோவினை தராமல், அங்கத்தூய்மை முறியாமல் இருக்கும் வரை இந்நிலை தொடர்கிறது. நூல்:-  புகாரீ-647, அபூதாவூத்-472

 

லைலத்துல் கத்ர் இரவில் வணங்கினால்

 

அருமை நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். ( إذا كانَ لَيْلَةُ القَدْرِ نَزَلَ جِبْرِيلُ في كَبْكَبَةٍ مِنَ المَلائِكَةِ يُصَلُّونَ عَلى كُلِّ عَبْدٍ قائِمٍ أوْ قاعِدٍ يَذْكُرُ اللَّهَ ) லைலத்துல் கத்ர் இரவு வந்துவிட்டால் வானவர் ஜிப்ரீல் (அலை) மற்றும் வானவர்களின் ஒரு பெரும் கூட்டத்தினர் இறங்குகின்றனர். (அன்றிரவு) நின்றவாறு அல்லது அமர்ந்தவாறு அல்லாஹ்வை நினைவுகூறுகின்ற அடியார் மீது (அன்றிரவு இறங்குகின்ற வானவர்கள் அனைவரும்) சலவாத் கூறுகிறார்கள். (வானவர்களின் சலவாத் என்பது பிரார்த்தனை ஆகும்.) அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர

 

இன்பத்திலும் துன்பத்திலும் இறைநினைவு

 

இறைத்தூதர் யூனுஸ் (அலை) அவர்கள் ஓர் பெரிய மீன் வயிற்றுக்குள் சிக்கிக்கொண்டபோது, "(அல்லாஹ்வே) உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை உன்னை துதிக்கிறேன் நிச்சயமாக நான் அநீதியாளர்களில் ஒருவன் ஆகிவிட்டேன் என்று பிரார்த்தித்தார். அதன் பிறகு அல்லாஹ் அந்த மீன் வயிற்றிலிருந்து அவரை மீட்டெடுத்தான். இதைப்பற்றி திருக்குர்ஆன் (21:87,88) கூறுகிறது.

 

யூனுஸ் (அலை) அவர்களின் பிரார்த்தனையை செவியுற்ற வானவர்கள், ( يَا رَبِّ، صَوْتٌ ضَعِيفٌ مَعْرُوفٌ مِنْ بِلَادٍ غَرِيبَةٍ؟ ) "இறைவா! ஒரு விசித்திரமான தேசத்திலிருந்து பலவீனமான, நன்கு அறியப்பட்ட குரல் கேட்கிறதே" என்றார்கள். அல்லாஹ், ( أَمَا تَعْرِفُونَ ذَاكَ ؟ ) "அவர் யாரென்று உங்களுக்குத் தெரியாதா?"  என்று கேட்டான். வானவர்கள், "இறைவா! எங்களுக்கு தெரியாது. அவர் யார்?" என்றனர். அல்லாஹ், ( عَبْدِي يُونُسُ ) "என்னுடைய அடியார் யூனுஸ் தான்" என்று கூறினான்.

 

வானவர்கள்,  ( عَبْدُكَ يُونُسُ الَّذِي لَمْ يَزَلْ يُرفَع لَهُ عَمَلٌ مُتَقَبَّلٌ ، وَدَعْوَةٌ مُجَابَةٌ؟ ) "எப்பொழுதும் (அவர் செய்கின்ற) நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, (அவருடைய) பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கப்படுமே, அந்த உமது அடியார் யூனுஸா?"  என்று கேட்டனர். அல்லாஹ், "ஆம்" என்று கூறினான். வானவர்கள்,  ( يَا رَبِّ، أَوَلا تَرْحَمُ مَا كَانَ يَصْنَعُ فِي الرَّخَاءِ فتنجيَه مِنَ الْبَلَاءِ؟  ) "இறைவா! அவர் செழிப்பில் இருந்தபோது செய்த வணக்க வழிபாடுகள் மீது இரக்கம் காட்டி, அவரை பேரழிவிலிருந்து காப்பாற்ற மாட்டாயா?"  வினவினர். அல்லாஹ், "ஆம்" என்று கூறி, யூனுஸ் (அலை) அவர்களை திறந்த வெளியில் வீசும்படி அந்த திமிங்கிலத்திற்கு கட்டளையிட்டான். அவ்வாறே, அது யூனுஸ் (அலை) அவர்களை துப்பியது. நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

வாழ்வில் எப்போதும் இறைநினைவுடன் இருப்பவர்களுக்கு ஏற்படும் இக்கட்டான சூழ்நிலை நீங்க, வானவர்கள் பிரார்த்திப்பார்கள். அதன்மூலம் அவர்களுக்கு இறைவனின் உதவி கிடைக்கக்கூடும்.

 

உணவு தர்மம்

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ரொட்டியும் ஆலிவ் எண்ணையும் கொண்டு வந்து உண்ணக் கொடுத்தார். அண்ணலார் உணவருந்திவிட்டு, ( أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمُ الأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلاَئِكَةُ  )  "உங்களிடம் நோன்பாளி நோன்பு துறக்கட்டும். உங்கள் உணவை நல்லவர்கள் உண்ணட்டும். வானவர்கள் உங்களுக்காக அருள்வேண்டிப் பிரார்த்திக்கட்டும்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-3356, இப்னுமாஜா-1737, முஸ்னது அஹ்மத், தாரிமீ-1707

 

பசி தேவை என்று வரும்போது மனிதநேய அடிப்படையில் யாருக்கேனும் உணவும் உதவியும் வழங்கிட வேண்டும். விரும்பி அழைக்கும் விருந்துகளில் இறையச்சமுள்ள நல்லடியார்கள் கலந்து கொள்ளுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இறையச்சமுள்ளவர் உண்டால் இறைவழிபாடு செய்வதற்கு அந்த உணவு பயன்படும். அதன் மூலம் வானவர்களின் பிரார்த்தனை கிடைக்கக்கூடும்.

 

சஹர் சாப்பிடுகின்றவர்கள்

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى المُتَسَحِّرِینَ ) நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது வானவர்களும் சஹர் சாப்பிடுகின்றவர்கள்மீது சலவாத்துக் கூறுகின்றனர். (அல்லாஹ் அவர்கள் மீது தன் அருள்வளத்தைப் பொழிகிறான். வானவர்கள் அவர்களுக்காக பிரார்த்திக்கிறார்கள்.) அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, இப்னு ஹிப்பான், முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-328

 

சூரிய உதயத்திற்கு முன்பிருந்து - அதாவது ஃபஜ்ரின் ஆரம்பித்திலிருந்து - சூரியன் மறையும் வரை உணவு, பானம், பாலுறவு ஆகியவற்றை இறைவனுக்காகக் கைவிடுவதே நோன்பு எனப்படுகிறது. இவ்வாறு நோன்பைத் தொடங்குவதற்கு முன்பு, உணவு உண்டு ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கே 'சஹர்' எனப்படும்.

 

பரக்கத் எனும் அருள்வளம் என்பது ஒரு பொருள் பல்கி பெருகுவதும், அது குறைந்த அளவில் இருந்தாலும் அதைக்கொண்டே அனைத்து தேவைகளும் பூர்த்தியாகுவதுமாகும். எனவே இந்த அருள்வளம் என்பது மனித திறமை, முயற்சியை சார்ந்ததல்ல. அது அல்லாஹ் கொடுப்பதாகும்.

 

சஹர் உணவு குறைவாக இருந்தாலும் அதன் மூலம் நிறைவையும், ஆரோக்கியத்தையும், நல்லெண்ணங்களையும், நற்செயல் புரிவதற்கான பலத்தையும் அல்லாஹ் கொடுப்பது தான் அருள்வளம் ஆகும். இறைவனின் அருள்வளத்தைப் பெற நாம் சிரமப்பட வேண்டியதில்லை. சஹர் நேரத்தில் சாப்பிட்டாலோ அல்லது சிறிதளவு தண்ணீர் பருகினால்கூட போதும் நமக்கு அருள்வளம் கிடைத்துவிடும். மேலும் வானவர்களின் பிரார்த்தனையும் கிடைத்துவிடும். அந்நேரத்தில் நம் வீட்டு சிறு பிள்ளைகளையும் எழுப்பி சில கவளம் உணவு ஊட்டுவது மூலம் அவர்களுக்கும் அருள்வளம் கிடைத்து விடும்.

 

சிலர் சஹர் உணவை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அது தவறிவிட்டாலும் வருந்துவதில்லை. சிலரோ தன் தூக்கத்திற்கு ஆசைப்பட்டு அல்லது தனது பொடுபோக்குத்தனத்தால் தராவீஹ் தொழுகைக்கு பின் ஒரேடியாக சாப்பிட்டுவிட்டு நிய்யத் வைத்து தூங்கிவிடுகின்றனர். இத்தகையவர்கள் மகத்தான நன்மைகளைப் பெறாத துர்ப்பாக்கியவான்களாக ஆகிவிடுகின்றனர்.

 

நமது வாழ்நாளில் வானவர்கள் விரும்புகின்ற பல நல்லறங்களை புரிந்து, அவர்களின் பிரார்த்தனையைப் பெற அல்லாஹுத்தஆலா நமக்கு அருள்புரிவானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

வானவர்களின் பிரார்த்தனை

  வானவர்களின் பிரார்த்தனை   وَالْمَلَائِكَةُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيَسْتَغْفِرُونَ لِمَنْ فِي الْأَرْضِ வானவர்கள் (பயந்து)...