Search This Blog

Sunday, 30 August 2026

ஞானமுள்ளவர்

 

ஞானமுள்ளவர்

يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ

உங்களில் இறைநம்பிக்கை கொண்டோருக்கும், கல்வியறிவு வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான். திருக்குர்ஆன்:- 58:11

 

வணக்க வழிபாடு புரிதல் படைப்பினங்களின் தன்மையாகும். அது, இறைவனின் தன்மை அல்ல. ஆனால் ஞானம் என்பது அல்லாஹ்வின் உயர்ந்த தன்மையாகும். எனவேதான், சில நேரங்களில் வணக்க வழிபாடுகளைவிட இறைஞானத்தை கற்றுக்கொள்வது உயர்வானது என்றும் இறைஞானமுள்ளவர்கள் உயர்ந்தவர்கள் என்றும் இஸ்லாம் இயம்புகிறது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ ) ஒரு வணக்கசாலியைவிட மார்க்க அறிஞருக்கு இருக்கும் சிறப்பானது, (வானிலுள்ள) ஏனைய நட்சத்திரங்களைவிட பௌர்ணமி இரவில் சந்திரனுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும். அறிவிப்பாளர்:- கஸீர் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் நூல்:- அபூதாவூத்-3157, திர்மிதீ-2606, இப்னுமாஜா-219, முஸ்னது அஹ்மத், தாரிமீ-346

 

பிற உயிரினங்களின் பிரார்த்தணை 

 

அபூ உமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இரு மனிதர்களைப் பற்றி பேசப்பட்டது. அவர்களில் ஒருவர் கல்வியாளர் ஆவார். மற்றொருவர் வணக்கசாலி ஆவார்.

 

அப்போது நபியவர்கள், ( فَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِي عَلَى أَدْنَاكُمْ ) "ஒரு வணக்கசாலியைவிட கல்வியாளருக்குள்ள சிறப்பு, உங்களில் கடைநிலையில் உள்ள ஒருவரைவிட (இறைத்தூதராகிய) எனக்குள்ள சிறப்புப் போன்றதாகும்" என்று கூறிவிட்டு, ( إِنَّ اللَّهَ وَمَلاَئِكَتَهُ وَأَهْلَ السَّمَوَاتِ وَالأَرْضِ حَتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا وَحَتَّى الْحُوتَ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِ النَّاسِ الْخَيْرَ ) அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் விண்ணிலும் மண்ணிலும் வசிப்போரும் பொந்துகளில் வாழும் எறும்புகள் (தண்ணீரில் வாழும்) மீன்கள் உட்பட அனைத்தும், மக்களுக்கு நல்லதை கற்பிப்பவருக்காக அருள் வேண்டிப் பிரார்த்திக்கின்றன" என்று கூறினார்கள். நூல்:-  திர்மிதீ-2606

 

வழிபாட்டின் பயன் தன்னோடு முற்றுப்பெற்றுவிடும். கல்வி, அதை போதிப்பதால் ஏற்படும் பயன் பிறருக்கும் நன்மை தரும். எனவேதான் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்பே ஓர் அறிஞரின் சிறப்புக்கு உவமானமாகும்.

 

மார்க்க அறிஞருடைய கல்வியின் மூலம் மனிதர்கள் பயன்பெறுவது உண்மை. ஆனால், மற்ற உயிரினங்கள் எவ்வாறு பயன்பெறுகிறதென்றால், மற்ற உயிரினங்களிடம் எவ்வாறு வேலை வாங்க வேண்டும். எவ்வளவு வேலை வாங்க வேண்டும். அவைகளுக்கு எவ்வளவு ஓய்வு தர வேண்டும். எந்தளவுக்கு இரை போட வேண்டும். எப்படி பராமரிக்க வேண்டும். அவைகளை புசிப்பதாக இருந்தால் எவ்வாறு அறுக்க வேண்டும் என்பது குறித்த நபிமொழிகளையும், சட்டங்களையும் மார்க்க அறிஞர்கள் மக்களுக்கு போதிக்கிறார்கள். அதனால், அந்தப் பயனை அந்த உயிரினங்கள் பெறுகின்றன. எனவே, அவைகள் மார்க்க அறிஞர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றன என்று விளக்கம் சொல்லப்படுகிறது.

 

ஃபுளைல் பின் இயாள் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( عَالِمٌ عَامِلٌ مُعَلَّمٌ يُدْعَي كَبِيرًا فِي مَلَكُوتِ السَّمَاوَاتِ ) மார்க்க அறிவைப் பெற்று, அதன்படிச் செயலாற்றி, அதைப் பிறருக்கு போதிக்கும் அறிஞரை, மாமனிதர் (பெருமைக்குரியவர்) என்று வானவர்கள் அழைக்கிறார்கள். நூல்:- தஃப்சீர் இப்னுல் கய்யிம் அல்முஜாதலா வசனம் -11

 

ஷைத்தானின் பகைவர்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( فَقِيهٌ أَشَدُّ عَلَى الشَّيْطَانِ مِنْ أَلْفِ عَابِدٍ ) ஒரு மார்க்க அறிஞர் ஆயிரம் வணக்கசாலிகளைவிட ஷைத்தானுக்கு மிகவும் கடுமையான (பகை)வர் ஆவார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2602, இப்னுமாஜா-218

 

ஓர் மார்க்க அறிஞர் குர்ஆன், ஹதீஸ் மற்றும் அதன் மூலம் பெறப்பட்ட மார்க்கச் சட்டங்களையும் மிகத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் புரிந்து வைத்திருப்பவராவார். இவர் நல்லவற்றை மட்டுமே போதிப்பார். எனவே, இவர் ஷைத்தானின் துர்போதனைகளையும் கெட்ட நடத்தைகான தூண்டலையும் அறிந்து தடுத்துவிடுவார். எனவே, இவர் எப்போதும் ஷைத்தானின் எதிரியாவார். மார்க்கக் கல்வியை கற்றவர் ஒருவர், இறைவழிபாட்டை சரியாக செய்வதுடன் ஷைத்தானிடம் இருந்து தம்மை காப்பாற்றிக் கொள்வதையும் நன்கு அறிந்தவராவார்.

 

மார்க்க அறிவை நிறைவாக பெறாத வணக்கசாலி அவரின் இறைவழிபாட்டில் குறை இருக்கக்கூடும். பல நேரங்களில் ஷைத்தானின் சூழ்ச்சி புரியாமல் அவன் பக்கம் விழுந்துவிடுவார்.

 

சமத்துவம் இல்லை

 

அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே! திருக்குர்ஆன்:- 39:9

 

தபூக் போர்க்களத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பனூ மாலிக் பின் அந்நஜ்ஜாரின் கொடியை உம்மாரா பின் ஹஸ்ம் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். பின்னர் நபியவர்கள் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களைச் சந்தித்தார்கள். அதன் பிறகு அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடமிருந்து அந்தக் கொடியை வாங்கி ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் கொடுத்துவிட்டார்கள். இப்போது கொடியை பறிகொடுத்த உம்மாரா (ரலி) அவர்கள் நபியவர்களிடம், ( يَا رَسُولَ اللَّهِ، لَعَلَّك وَجَدْتَ عَلَىَّ ) “அல்லாஹ்வின் தூதரே! (ஒருவேளை) என்மீது உங்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுவிட்டதோ! (என்னிடமிருந்து கொடியை வாங்கி மற்றொருவரிடம் கொடுத்துவிட்டீர்கள்? நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா?)" என்று கேட்டார்.

 

நபியவர்கள், ( لَا وَاَللَّهِ، وَلَكِنْ قَدِّمُوا الْقُرْانَ، وَكَانَ أَكْثَرَ أَخْذًا لِلْقُرْانِ مِنْكَ؛ وَالْقُرْانُ يُقَدَّمُ، وَإِنْ كَانَ عَبْدًا أَسْوَدَ مُجَدَّعًا ) "இல்லை, (நீர் எந்த தவறும் செய்யவில்லை.) அல்லாஹ்வின் மீதாணையாக! குர்ஆனுக்கே முன்னுரிமை கொடுங்கள். எனவே, உம்மைவிட அவர் குர்ஆனை அதிகமாக மனனம் செய்துள்ளார்; மேலும், (குர்ஆனில் தேர்ச்சிப் பெற்ற) அவர் ஒரு கறுப்பான, (உடலுறுப்பு) சிதைக்கப்பட்ட அடிமையாக இருந்தாலும் சரியே, குர்ஆனு(டைய அவரு)க்கே முன்னுரிமை உண்டு. (குர்ஆனுடையவர்கள் மற்றவர்களைவிட முற்படுத்தப்பட வேண்டும்)" என்று பதிலளித்தார்கள். நூல்:- அல்மஙாஸீ ( اَلْمَغَازِي لِلْوَاقِدِيّ ) இமாம் வாகிதீ

 

அந்தக் காலத்தில் ஒரு வழக்கம் இருந்தது. போர்க்கொடி பிடிப்பதாக இருந்தாலும், ஒரு படைக்கு தளபதியாக நியமிக்கப்படுவதாக இருந்தாலும், ஒரு குழுவிற்கு தொழ வைப்பதாக இருந்தாலும் குர்ஆனை அதிகமாக மனனம் செய்திருப்பவர் யாரோ அவருக்கே முதலில் முக்கியத்துவம் கொடுக்கப்படும். அந்த அடிப்படையில் நிறைய அத்தியாயங்களை மனப்பாடம் செய்து அதை அழகிய முறையில் ஓதக்கூடிய ஒருவராகவும் இருந்த ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கையில் கொடி கொடுக்கப்பட்டது.

 

நிறம், இனம், மொழி என பேதமின்றி உலக மாந்தர்கள் அனைவரும் சமம் என்று பேசுகின்ற இஸ்லாம், கல்வியாளர்கள் விஷயத்தில் இவ்வாறான சமத்துவம் இல்லை என்றும் கல்வியாளர்கள் உயர்ந்தவர்கள். மற்றவர்கள் அவர்களுக்கு சமமாக முடியாது என்றும் இயம்புகிறது.

 

தொழுகையின் முதல் வரிசையில்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لِيَلِيَنِّي مِنْكُمْ أُولُو الأَحْلاَمِ وَالنُّهَى ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ) உங்கள் அறிவில் சிறந்தோர் எனக்கு பின்னால் (முதல் வரிசையில்) நிற்கட்டும். பின்னர் அவர்களுக்கு அடுத்த (தகுதி உள்ள)வர்களும், பின்னர் அவர்களுக்கு அடுத்த (தகுதி உள்ள)வர்களும் நிற்கட்டும். அறிவிப்பாளர்:- அபூ மஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் நூல்:- நஸாயீ-798

 

கைஸ் பின் உபாத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் (மதீனாவில் மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் முன் வரிசையில் இருந்தபோது, என்னை பின்னாலிருந்து ஒருவர் கடுமையாக இழுத்து, அந்த இடத்தைவிட்டு அகற்றினார். நான் நின்றிருந்த இடத்தில் அவர் வந்து நின்றுகொண்டார். அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகையில் இருந்ததால் அவர் யாரென்று நான் அறியவில்லை. தொழுது முடித்து திரும்பியபோது அவரோ (கற்றறிந்த மூதறிஞர்) உபை பின் கஅப் (ரலி) அவர்கள் ஆவார்.

 

அவர்கள் (என்னை நோக்கி), ( يَا فَتَى لاَ يَسُؤْكَ اللَّهُ إِنَّ هَذَا عَهْدٌ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَيْنَا أَنْ نَلِيَهُ ) "இளைஞரே! தீய எண்ணம் கொள்வதிலிருந்து உன்னை அல்லாஹ் காப்பாற்றுவானாக! (நான் உன்னிடம் அவ்வாறு நடந்து கொண்டது,) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், நாங்கள் அவர்கள் அருகில் (தொழுகையில்) அடுத்து இருக்க வேண்டும் என்று எடுத்துக்கொண்ட ஒப்பந்தமாகும் இது" என்று கூறினார்கள். நூல்:- நஸாயீ-799

 

சட்டமேதைகளில் ஒருவரான இமாம் ஷம்ஸுல் அயிம்மா சர்கஸி (ரஹ்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களின் இந்த நடவடிக்கையை சரி காணும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஏனெனில், தொழுகையில் இமாமுக்கு ஏதாவது தவறு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு பிரதிநிதியாக தொழுகை விரிப்புக்கு போய் நின்று தொழுகையை நடத்தி கொடுப்பதற்குத் தகுதி இல்லாதவர்கள் முன் வரிசையில் இடம் பிடித்துக்கொள்வதும், தகுதியுள்ளவர்கள் பிந்தி வந்தாலும் அவர்களுக்கு வழி விட்டுக்கொடுக்காமல் பிடிவாதம் செய்வதும் முறையல்ல.

 

சிறந்த வள்ளல்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( هَلْ تَدْرُونَ مَنْ أَجْوَدُ جُودًا ؟ ) “அதிகமான கொடைகுணம் கொண்ட வள்ளல் யார் என உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டார்கள். நபித்தோழர்கள், "இறைவனும் இறைதூதரும் தான் நன்கு அறிவார்கள்" என்றனர்.

 

நபியவர்கள், ( اللَّهُ أَجْوَدُ جُودًا ، ثُمَّ أَنَا أَجْوَدُ بَنِي آدَمَ ، وَأَجْوَدُهُمْ مِنْ بَعْدِي رَجُلٌ عَلِمَ عِلْمًا فَنَشَرَهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ أَمِيرًا وَحْدَهُ أَوْ قَالَ : أَمَّةً وَاحِدَةً ) “கொடைகுணம் கொண்ட வள்ளல்களில் இறைவன் தான் மிகப்பெரிய வள்ளல் ஆவான். அடுத்து மனிதர்களில் நான் தான் அனைவரையும்விட மிக அதிகமாகக் கொடை குணம் கொண்ட வள்ளல் ஆவேன். கல்வி கற்று அதைப் பரப்புவோர் தான் (மற்றவர்களுக்கு கற்பிப்பவர் தான்) எனக்குப் பிறகு மனிதர்களில் அனைவரையும்விட மிகச் சிறந்த வள்ளல் ஆவார். அவர் மறுமைநாளில் ஒரு தலைவனின் தகுதிநிலையோடு வருவார். அல்லது அவர் (மறுமைநாளில் சுயமாக) ஒரு முழு சமுதாயத்தின் தகுதிநிலையுடன் வருவார்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ

 

உலக வளங்களில் தலைசிறந்த அருள்வளம் மார்க்க அறிவு தான். அந்த மார்க்க அறிவை மனத்தூய்மையுடன் பிறருக்கு வழங்குபவர் தான் சிறந்த வள்ளலாக இருக்க முடியும் என்கிறது இந்த நபிமொழி.

 

நேரடியாக சொர்க்கம்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يَبْعَثُ اللهُ الْعِبَادَ يَوْمَ الْقِيَامَةِ ، ثُمَّ يُمَيِّزُ الْعُلَمَاءَ ، فَيَقُولُ : يَا مَعْشَرَ الْعُلَمَاءِ ، إِنِّي لَمْ أَضَعْ فِيكُمْ عِلْمِي وَأَنَا أُرِيدُ أَنْ أُعَذِّبَكُمُ ، اذْهَبُوا فَقَدْ غَفَرْتُ لَكُمْ )  அல்லாஹுதஆலா மறுமைநாளில் அடியார்களை எழுப்புவான். பின்பு (அவர்களில்) மார்க்க அறிஞர்களை தனியாகப் பிரிப்பான். அப்போது அல்லாஹ், “மார்க்க அறிஞர்களே! உங்களை வேதனைப்படுத்துவதற்காக உங்களுக்கு எனது கல்வியை கொடுக்கவில்லை. செல்லுங்கள் உங்களை நான் மன்னித்துவிட்டேன்” என்று கூறுவான். அறிவிப்பாளர்:- அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) நூல்:- அல்கபீர் இமாம் தப்ரானீ, அஸ்ஸில்ஸிலத்துல் ளஈஃபா-868

 

மார்க்கக் கல்வியைக் கற்று, பிறருக்கும் கற்பித்து, அதன்படி முறையாக வாழ்ந்து முடித்தவருக்கே இந்த நபிமொழியின் சுபச்செய்தி பொருந்தும்.

 

மறுமையில் பரிந்துரை

 

அவனை விட்டுவிட்டு எவைகளை இவர்கள் (இறைவனென) அழைக்கிறார்களோ அவைகள் (இவர்களுக்காக அவனிடத்தில்) பரிந்துரை செய்யும் சக்தி பெறாது. ஆனால் சத்தியத்தைக் கொண்டு யார் சாட்சியம் அளித்தார்களோ சரியான அறிவுஞானம் உடையவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர! (அவனுடைய அனுமதி கிடைத்தால் அவனிடம் பரிந்து பேசுவார்கள்.) திருக்குர்ஆன்:- 43:86

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ قَرَأَ الْقُرْآنَ وَاسْتَظْهَرَهُ فَأَحَلَّ حَلاَلَهُ وَحَرَّمَ حَرَامَهُ أَدْخَلَهُ اللَّهُ بِهِ الْجَنَّةَ وَشَفَّعَهُ فِي عَشَرَةٍ مِنْ أَهْلِ بَيْتِهِ كُلُّهُمْ وَجَبَتْ لَهُ النَّارُ )  குர்ஆனை ஓதி, அதை மனனமிட்டு அதில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் தடை செய்யப்பட்டிருப்பதைத் தடை செய்யப்பட்டதாகவும் ஏற்றுக்கொண்டால், அதற்காக அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைவிக்கிறான். மேலும், அவருடைய குடும்பத்தாரில் நரகம் உறுதியாகிவிட்ட பத்துப் பேருக்காக அவர் செய்யும் பரிந்துரையை ஏற்றுக்கொள்கின்றான். அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2823, இப்னுமாஜா-212, முஸ்னது அஹ்மத், தாரிமீ

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ( إذَا اجْتَمَعَ العَالِمُ وَ العَابِدُ عَلَى الصِّرَاطِ قِيلَ لِلعَابِدِ : ادْخُلِ الجنَّةَ، و تَنَعَّمْ بِعِبَادَتِكَ، و قِيلَ لِلعَالِمِ قِفْ هُنا فاشْفَعْ لِمَن أحْبَبْتَ، فإِنَّكَ لَا تَشْفَعُ لِأَحَدٍ إِلَّا شَفِّعْتَ، فَقَامَ مَقَامَ الأَنبِيَاءِ ) “ஒரு மார்க்க அறிஞரும், ஒரு வணக்கசாலியும் மறுமைநாளில் நரகத்திற்கு மேல் அமைக்கப்பட்டுள்ள (ஸிராத்தல் முஸ்தகீம் எனும்) பாலத்தில் ஒன்று சேர்ந்தால், அப்போது வணக்கசாலியிடம், “நீர் சொர்க்கத்தில் நுழைந்து, உமது வணக்கத்தின் பலனை அனுபவிப்பீராக!” என்று கூறப்படும். ஆனால் மார்க்க அறிஞரிடம், “நீர் இங்கே நிற்பீராக!; நீர் விரும்புகிறவர்களுக்கு பரிந்துரை (ஷஃபாஅத்) செய்வீராக! ஏனெனில், நீர் யாருக்காக பரிந்துரை செய்தாலும், அது ஏற்றுக்கொள்ளப்படும்’ என்று கூறப்படும். பின்னர் அவர் நபிமார்களின் நிலையை ஒத்த ஒரு உயர்ந்த அந்தஸ்தில் நிறுத்தப்படுவார். நூல்:- அல்ஃபிர்தவ்ஸ்-1293 இமாம் தைலமீ, அத்தன்வீர் ஷரஹ் ஜாமிஉஸ் ஸஙீர் இமாம் அஸ்ஸன்ஆனீ, ளஈஃப் அஜ்ஜாமிஉ-291 இமாம் அல்பானீ

 

மறுமை நாளில் ஒவ்வொரு மனிதனும் தன் நிலையை எண்ணி அச்சப்படும்போது, இறைவனின் உத்தரவின் பேரில் ஒரு மனிதன் மற்றவருக்கு பரிந்துரை செய்வது என்பது பெரிய பாக்கியம் ஆகும். அத்தகைய உயரிய அந்தஸ்தை இறையச்சமுள்ள ஓர் மார்க்க அறிஞர் பெறுவார் என்கிறது இந்த நபிமொழி.

 

உளப்பூர்வமாக நேசித்தல்

 

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நாங்கள் (ஒருநாள்) அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைப்பற்றி ஏதோ பேசிக்கொண்டோம்.

 

அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், ( إِنَّ ذَاكَ الرَّجُلَ لاَ أَزَالُ أُحِبُّهُ بَعْدَ شَىْءٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُهُ سَمِعْتُهُ يَقُولُ‏ اقْرَءُوا الْقُرْآنَ مِنْ أَرْبَعَةِ نَفَرٍ مِنِ ابْنِ أُمِّ عَبْدٍ - فَبَدَأَ بِهِ - وَمِنْ أُبَىِّ بْنِ كَعْبٍ وَمِنْ سَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ وَمِنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ) "அந்த மனிதர் எத்தகையவரென்றால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு அப்தின் புதல்வர் (இப்னு மஸ்ஊத்), உபை பின் கஅப், ஹுதைஃபாவின் முன்னாள் அடிமையான சாலிம், முஆத் பின் ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளுங்கள்" என்று சொல்லி, இப்னு மஸ்ஊத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதை நான் செவியுற்றேன். அப்போதிருந்து அவரை என்றென்றும் நேசித்துக் கொண்டிருக்கிறேன்" என்று சொன்னார்கள். நூல்:- முஸ்லிம்-4863, முஸ்னது அஹ்மத்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ نَظَرَ إِلَى وَجْهِ عَالِمٍ نَظْرَةً فَفَرِحَ بِهِ، خَلَقَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى مِنْ تِلْكَ النَّظْرَةِ وَالْفَرَحِ مَلَكًا يَسْتَغْفِرُ اللَّهَ لِصَاحِبِهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ) யார் ஓர் மார்க்க அறிஞரின் முகத்தைப் பார்த்து சந்தோஷப்படுகிறாரோ, அல்லாஹ் சந்தோஷமடைந்த அந்த பார்வையில் இருந்து ஒரு வானவரை படைத்துவிடுவான். மறுமைநாள் வரை அந்த வானவர் அந்த மனிதருக்கு பாவமன்னிப்புத் தேடிக் கொண்டேயிருப்பார். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- தாரீக் திமிஷ்க் இமாம் இப்னு அசாகிர், தாரிகுல் இஸ்லாம் இமாம் அத்தஹபீ, தாரீக் பக்தாத் இமாம் கத்தீப் அல்பக்தாதீ, நவாதிருல் உசூல், முஸ்னது அல்ஃபிர்தௌஸ், அல்காமிலு ஃபில் ளுஅஃபா இமாம் அதீ

 

ஒரு மனிதன் நேசம் கொள்வதற்கு மிகவும் தகுதியானவர் இறையச்சமுள்ள மார்க்க அறிஞர் தான். நிச்சயமாக, இந்த நேசம் நற்பலனை மட்டுமே தரும். தீயவற்றை விட்டும் பாதுகாக்கும். நல்லோர்களின் நேசம் இறைவன் தந்த வரம்.

 

மரியாதை

 

ஈரான் நாட்டின் குராஸான் பகுதியின் கவர்னர் இஸ்மாயீல் பின் முஹம்மது (ரஹ்) அவர்கள், ஒருநாள் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும்போது, அவ்வழியே ஒருவர் கடந்து சென்றார். அப்போது கவர்னர் அவர்கள், அந்த மனிதருக்காக எழுந்து நின்றார்கள்.

 

இதைப் பார்த்த கவர்னரின் சகோதரர் இஸ்ஹாக் அவர்கள், ( لِمَ تَقُومُ لِرَجُلٍ مِنْ الرَّعِيَّةِ ) “(சகோதரரே!) ஒரு ஆட்டு இடையருக்காக ஏன் எழுந்து நின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு கவர்னர் அவர்கள், "அவர் ஓர் மார்க்க அறிஞர்! நான் அவரிடமுள்ள கல்விக்கு கண்ணியமளித்தேன். என்றார்கள்.

 

அன்றிரவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கவர்னர் இஸ்மாயீல் பின் முஹம்மது (ரஹ்) அவர்களின் கனவில் தோன்றி, ( ثَبَّتَ مِلْكِكَ وَمِلْكِ ابْنَكَ بِاجَلَالِكَ مُحَمَّدُ بْنُ نَصْرٍ ) “முஹம்மது பின் நஸ்ர் என்ற மார்க்க அறிஞருக்கு எழுந்து மரியாதை செய்ததன் மூலம் உம்முடைய ஆட்சியும் உமது சந்ததியின் ஆட்சியும் தொன்றுதொட்டு நிலைத்திருக்க (வழிவகை) செய்துவிட்டாய்” என்று சுபச்செய்தி கூறினார்கள். நூல்:- சச்சீ ஹிகாயாத்

 

ஆகவே, மார்க்க அறிஞர்களுக்கு செலுத்துகின்ற மரியாதை, இம்மை மறுமை இரண்டிலும் நமக்கு உயர்வைத் தரும்.

 

அல்லாஹுத்தஆலா நம்மை இறையச்சமுள்ள மார்க்க அறிஞர்களாக வாழச்  செய்வானாக! அல்லது அவர்களை உளமாற நேசிப்பவர்களாக வாழச்  செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

No comments:

Post a Comment

எல்லோருக்கும் புரியாது

  எல்லோருக்கும் புரியாது فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ فَقَالَ إِنِّي سَقِيمٌ   فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِينَ (பண்டிகை விழாவிற்கு இ...