வாக்குத் தவறேல்!
مَنْ أَوْفَى بِعَهْدِهِ وَاتَّقَى فَإِنَّ
اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ
யார் தமது வாக்குறுதியை
நிறைவேற்றி, (இறைவனை) அஞ்சுகிறாரோ அத்தகைய இறையச்சமுடையோரை(யே)
அல்லாஹ் நேசிக்கின்றான். திருக்குர்ஆன்:- 3:76
வாக்குறுதிகளை நிறைவேற்றுவது
முஸ்லிம்களின் பண்புகளில் மிகவும் முக்கியமானதாகும். ஒரு முஸ்லிம் ஒன்றை செய்வேன் என
ஏற்றுக்கொண்டால் அதை அவர் செய்து முடிக்கவேண்டும். ஓர் ஒப்பந்தத்தில் அவர் தன்னை ஈடுபடுத்திக்
கொண்டால், கடைசி வரை அதை மதித்து நடக்க வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இறைநம்பிக்கையின்
மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.
ஓர் முஸ்லிம், நம்பிக்கை, நாணயம், வாக்குறுதியை நிறைவேற்றல்
ஆகியவற்றில் மிகுந்த கவனத்துடன் இருப்பார். வாக்குறுதியை நிறைவேற்றுவது இஸ்லாமிய நற்பண்புகளில்
தலையாயதாகும். எனவே, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது இறைநம்பிக்கையின் அடையாளமாகும். அதைப் புறக்கணிப்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( لَا دِيْنَ لِمَنْ لَا عَهْدَ لَهُ ) யார் வாக்குறுதியை நிறைவேற்றவில்லையோ அவரிடம் (பரிபூரணமான) மார்க்கம்
இல்லை. அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், பைஹகீ, இப்னு ஹிப்பான்-194, ஜாமிஉஸ் ஸஙீர்-9685 இமாம் சுயூத்தீ
வாக்குறுதியை நிறைவேற்றுவது
இறைநம்பிக்கையுடனும், இஸ்லாமிய மார்க்கத்துடனும் தொடர்புடையது. அதை ஒரு முஸ்லிம் நிறைவேற்றாமல்
போகும்போது அவரிடமிருந்து உண்மையான இறைநம்பிக்கையும், உணர்வுப்பூர்வமான மார்க்கப்பற்றும் பாதிக்கப்படுகிறது.
இத்தகைய சிந்தனையைத்தான் மேற்காணும் நபிமொழி கூறுகிறது.
தேவை இருந்தும்
வாக்குறுதிகளை (முழுமையாக)
நிறைவேற்றுங்கள்! நிச்சயமாக வாக்குறுதிகள் குறித்து (மறுமை நாளில்) விசாரிக்கப்படுவீர்கள்.
திருக்குர்ஆன்:- 17:34
ஹுதைஃபா பின் அல்யமான்
(ரலி) அவர்கள் கூறியதாவது. நான் பத்ருப் போரில் கலந்துகொள்ளாததற்குக் காரணம் யாதெனில், நானும் என் தந்தை
ஹுசைல் (எனும் அல்யமான்) அவர்களும் (பத்ர் நோக்கிப்) புறப்பட்டோம். அப்போது குறைஷி
இறைமறுப்பாளர்கள் எங்களைப் பிடித்துக்கொண்டனர். "நீங்கள் முஹம்ம(துடன் சேர்ந்து
எங்களுக்கெதிராகப் போர் செய்வ)தை நாடித்தானே செல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
நாங்கள் "(இல்லை)
மதீனாவை நோக்கியே செல்கிறோம்" என்று (பேச்சை மாற்றிச்) சொன்னோம். அப்போது குறைஷியர்
"நாங்கள் மதீனாவுக்கே திரும்பிவிட வேண்டும்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து (குறைஷியருக்கெதிராக)
போரிடக்கூடாது" என அல்லாஹ்வின்மீது ஆணையிட்டு எங்களிடம் வாக்குறுதி பெற்றுக்கொண்டனர்.
நாங்கள் இருவரும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தோம். அப்போது அவர்கள், "நீங்கள் இருவரும்
(மதீனாவுக்கே) திரும்பிச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கு ஆதரவாக அவர்களது வாக்குறுதியை
நிறைவேற்றுவோம். அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடம் உதவி கோருவோம்" என்று சொன்னார்கள்.
நூல்:- முஸ்லிம்-3661
இஸ்லாத்தின் முதல்
அறப்போரான பத்ருப்போர் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி)
அவர்களும் அவர்களது தந்தையும் மக்காவிலிருந்து மதீனாவிற்கு போய்க் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களைச் சுற்றி வளைத்த இணைவைப்பாளர்கள், "எதற்காக நீங்கள் மதீனா செல்கிறீர்கள்?" என்று கேட்க, "நாங்கள் எங்கள் வாழ்க்கையைத்
தேடி மதீனா செல்கின்றோம்" என்று கூறினார்கள். அப்போது அந்த இணைவைப்பாளர்கள், "முஹம்மது எங்களுக்கு
எதிராக ஏதேனும் போர் தயாரிப்புக்கள் செய்கிற போது எங்களுக்கு எதிராக நீங்கள் அவருடன்
போருக்கு வரக்கூடாது. இப்படி ஒரு ஒப்பந்தம் எங்களிடம் செய்தால் தான் உங்களை மதீனாவிற்கு
அனுப்புவோம்" என்று கூறினர்.
வேறு வழியின்றி இருவரும், "அல்லாஹ்வின் மீதாணையாக!
நாங்கள் உங்களுக்கு எதிராக போரில் கலந்து கொள்ள மாட்டோம்" என வாக்குறுதி அளித்தனர்.
மதீனா வந்து சேர்ந்த பிறகு நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களிடம் நடந்த அனைத்தையும்
கூறி, இப்போது நாங்கள் என்ன
செய்ய வேண்டும்?" என்று வினவினர்.
அப்போது நபியவர்கள், "நீங்கள் இருவரும்
பத்ருப் போருக்கு வர வேண்டாம். கொடுத்த வாக்குறுதியை நீங்கள் காப்பாற்றுங்கள்"
என்று கூறி, அவர்களுக்கு பத்ருப் போரில் கலந்துக்கொள்ள தடை விதித்து விட்டார்கள்.
நேர்மையாக இருப்பவர்களும்
நெருக்கடியான வேலைகளில் தடம் புரண்டுவிடுவார்கள். ஆனால், நபியவர்களோ போர்க்காலங்களிலும் மிகச் சோதனையான காலகட்டங்களிலும்
வாக்குறுதி காக்க தவறவில்லை.
பத்ரு போர் முஸ்லிம்கள்
மீது திணிக்கப்பட்டது. அப்போரில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் எண்ணிக்கையோ எதிரிகளோடு
ஒப்பிடும்போது மிகச்சிறிய அளவில் இருந்தது. முஸ்லிம்கள் 313 பேர். எதிரிகளின் எண்ணிக்கை
1000 பேர். நெருக்கடியான இந்தச் சூழலில் போரிட வீரர்கள் தேவைப்படவே செய்தனர். இருப்பினும், அவ்விருவரையும் போரில் கலந்துகொண்ட கலந்து கொள்ள
வேண்டாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துவிட்டார்கள். காரணம், கொடுத்த வாக்குறுதையைக் காப்பாற்ற வேண்டும் என்ற
நற்குணம்.
போர்க்களம் என்பது
தந்திர பூமி. எதிராளியை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றுவதற்கு போர்த் தந்திரங்களில்
அனுமதி உண்டு. எனவே, "எதிரியிடம் கொடுத்த வாக்குறுதியை நாம் எதற்கு காப்பாற்ற வேண்டும்
வாருங்கள் போகலாம்" என்று நபியவர்கள் அவர்களை அழைக்கவில்லை. நபியவர்கள் எதிர்
தரப்பினரின் ஒப்பந்தத்திற்கு மரியாதை கொடுத்தார்கள்.
வாக்குறுதியை நிறைவேற்றுவது
முஸ்லிமின் அடையாளம். எனவே, நபியவர்கள் எதிரிகளிடம்கூட வாக்குறுதி மீறியது கிடையாது. அவ்வாறே ஒரு சமுதாயத்தை
உருவாக்கினார்கள்.
நல்லவன் தீயவன்
பேரறிஞர் மைமூன் பின்
மஹ்ரவான் அவர்கள் கூறுகிறார்கள். ( ثلاثة تؤدَّي الى البرِّ والفاجر الأمانة والعهد وصلة
الرحر ) மூன்று விஷயங்கள்
தான் ஒருவரை பாவியாகவோ நல்லவனாகவோ மாற்றுகின்றன: 1) நம்பிக்கை (அமானிதம் பேணுதல்)
2) உடன்படிக்கை (வாக்குறுதி நிறைவேற்றுதல்) உறவினர்களுடன் (நல்ல முறையில்) தொடர்பு
வைத்தல். நூல்:- உமர் பின் அப்துல் அஜீஸ் பக்கம்-195 (அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபீ)
யாருக்கு எந்த வாக்குறுதி
கொடுத்தாலும் அவன் எதிரியாக இருந்தாலும்கூட அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு
இருக்கிறது என்பதே இதன் மூலம் நாம் அறியவேண்டியவை.
எதையும் கேட்கமாட்டேன்
ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் ஒருமுறை நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களிடம் உதவி கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகு நான்
கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் நான் கேட்டேன். எனக்குக்
கொடுத்துவிட்டு, "ஹகீமே! இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும்.
யார் இதைப் பேராசையின்றி பெற்றுக் கொள்கிறாரோ அவருக்கு அதில் அருள்வளம்
வழங்கப்படும். யார் இதைப் பேராசையுடன் பெற்று கொள்கிறாரோ அவருக்கு அதில் அருள்வளம்
வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார். மேல்
கை தான் கீழ் கையை விடச் சிறந்ததாகும்" என்று கூறினார்கள்.
நான், "நாயகமே! உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! தங்களுக்குப்
பின் நான் இந்த உலகைவிட்டு பிரியும்வரை யாரிடமும் எதையும் கேட்டு (அவரது
செல்வத்தை)க் குறைக்க மாட்டேன்" என்று கூறினேன்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சி காலத்தில்) அன்பளிப்பு
பெற்றுக்கொள்ளுமாறு ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்களை பலமுறை அழைத்தார்கள். ஆனால், அவர் அதை ஏற்க
மறுத்துவிட்டார். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) ஹக்கீம் (ரலி)
அவர்களுக்கு கொடுப்பதற்கு அழைத்தார்கள்.
அவர் அதையும் ஏற்க மறுத்துவிட்டார்.
ஆகவே, உமர் (ரலி)
அவர்கள், "முஸ்லிம் சமுதாயமே! இந்தப் பொதுநிதியிலிருந்து தமது பங்கைப்
பெற்றுக்கொள்ளுமாறு ஹகீமை நான் அழைக்கிறேன். அவரோ அதை ஏற்க மறுக்கிறார். இதற்கு
நீங்களே சாட்சி" என்று கூறினார்கள்.
இவ்வாறு ஹகீம் (ரலி) அவர்கள் அண்ணலாருக்குப் பிறகு தாம் இறக்கும் வரை மக்கள்
யாரிடத்திலும் எதையும் கேட்டுப் பெறவில்லை என சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள்
கூறுகிறார்கள். நூல்:- புகாரீ-1472, திர்மிதீ-2387
ஹக்கீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள், தாம் யாரிடம் வாக்குறுதி கொடுத்தோமோ அவர் இப்போது
உலகத்தில் இல்லை. தமது வாக்குறுதிக்கு சற்று மாற்றம் செய்தால் ஏன் இவ்வாறு செய்தாய்? என்று கேட்பதற்கும்
ஆளில்லை. வருடங்கள் பல கடந்தபோதிலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதில்
உறுதியாக இருந்தார்.
மூன்று நாள்களாக
யார் தம் இறைவனுக்கு
அஞ்சி வாழ்ந்தார்களோ அவர்களுக்கு அடுக்கடுக்காக கட்டப்பட்ட உயர்ந்த மாளிகைகள் இருக்கின்றன.
அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். அல்லாஹ்
ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறுசெய்வதில்லை. திருக்குர்ஆன்:- 39:20
அப்துல்லாஹ் பின்
அபுல் ஹம்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம், அவர்கள் நபியாக நியமிக்கப்படுவதற்கு
முன், ஒரு பொருளை விலைக்கு
வாங்கினேன். நபியவர்களிடம் அதன் விலை மீதத்தொகை கொஞ்சம் கொடுக்க வேண்டியதிருந்தது.
எனவே அந்த இடத்திற்கே அதைக் கொண்டு வந்து தருவதாக அவர்களிடம் வாக்கு கொடுத்தேன். ஆனால்
நான் மறந்துவிட்டேன்.
மூன்று நாள்களுக்குப்
பிறகு எனக்கு நினைவு வந்தது. உடனே நான் நபியவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் அதே
இடத்தில் இருந்தார்கள். மேலும் நபியவர்கள் (என்னிடம்) வாலிபரே! நீ என்னைச் சிரமத்திற்கு
உள்ளாகிவிட்டீர். நான் இங்கு மூன்று நாள்களாக உம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்"
என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-4344
வாக்குறுதியை காப்பாற்றுவது
புகழுக்குரிய பண்பு. அது இறைவனின் ஒப்பற்ற பண்பாகவும், நபிமார்களின் மாசற்ற பண்பாகவும், உண்மையான இறைநம்பிக்கையாளர்களின்
உயர்ந்த பண்பாகவும் அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ஒரு மனிதர் தமது சகோதரனிடம் வாக்கு கொடுத்தார். அதை நிறைவேற்ற
வேண்டும் என்பதே அவரது எண்ணம். எனினும், (தகுந்த காரணத்தினால்) வாக்குறுதியை நிறைவேற்ற
முடியாமல் குறித்த நேரத்திற்கு அவர் வரவில்லையெனில் அவர்மீது யாதொரு குற்றமுமில்லை.
அறிவிப்பாளர்:- ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4343
பொதுவாக நெருக்கடியான
வேளைகளில் வாக்குறுதிகள் காப்பாற்றப்படுவதில்லை. சிலர், "நான் உங்களுக்கு அந்த வாக்குறுதி தந்தது உண்மைதான்.
ஆனால், என்ன செய்வது? நானே நெருக்கடிக்கு ஆளாகி விடப்பட்டபடியால் அந்த
வாக்குறுதியை என்னால் காப்பாற்ற முடியவில்லை" என்று கூறுவார்கள். நிர்பந்த
நிலையில் இருப்பவருக்கு இதில் விதிவிலக்கு உண்டு. ஆனால், எந்தச் சூழலிலும் நபியவர்கள்
ஒருபோதும் கொடுத்த வாக்குறுதிகளை மீறியதில்லை. செய்த ஒப்பந்தங்களை முறித்ததில்லை.
மரணத்திற்குப்
பிறகும்
அபூ உசைத் (ரலி) அவர்கள்
கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் நாங்கள் இருந்தபோது, பனூ சலமா கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வந்து, ( يَا
رَسُولَ اللَّهِ هَلْ بَقِيَ مِنْ بِرِّ أَبَوَيَّ شَيْءٌ أَبَرُّهُمَا بِهِ بَعْدَ
مَوْتِهِمَا
) "நாயகமே! என் பெற்றோர் இறந்த பின் அவ்விருவருக்கும் நான் நன்மை
செய்வதற்கு வேறு ஏதேனும் கடமைகள் உண்டா?" என்று வினவினார்.
நபியவர்கள், ( نَعَمِ
الصَّلاَةُ عَلَيْهِمَا وَالاِسْتِغْفَارُ لَهُمَا وَإِنْفَاذُ عَهْدِهِمَا مِنْ
بَعْدِهِمَا ) "ஆம்! அவர்களுக்காக பிரார்த்தனை செய்வது, அவர்களுக்காக மன்னிப்புக் கோருவது, அவர்கள் (இறந்ததற்கு) பிறகு அவர்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது"
என்று பதிலளித்தார்கள். நூல்:- அபூதாவூத் -4476, இப்னுமாஜா-3654
ஒருவர் கொடுத்த வாக்கை
நிறைவேற்றாது இறந்துபோனால், அவரின் வாரிசுதாரர் அதை நிறைவேற்றுவது, அவர் அவருக்குச் செய்யும் பேருதவியாகும். என்கிறது இந்த நபிமொழி.
ஜாபிர் பின் அப்துல்லாஹ்
(ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் "பஹ்ரைனின் நிதி
நம்மிடம் வந்தால், நான் உனக்கு இவ்வளவு இவ்வளவு தருவேன்" என்று கூறி, இரு கைகளையும் அள்ளித்
தருவதைப் போன்று (மூன்று முறை) சேர்த்துக்காட்டினார்கள். ஆனால், அந்த நிதி வருவதற்குள்
நபியவர்கள் இறந்துவிட்டார்கள்.
பின்னர் (ஆட்சித்
தலைவராக வந்த) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அந்த நிதி வந்தது. அப்போது பொது அறிவிப்பாளர் ஒருவரிடம் "எவருக்காவது
நபியவர்கள் ஏதேனும் வாக்களித்திருந்தால் அல்லது எவருக்காவது அவர்கள் கடன் தர வேண்டியிருந்தால்
அவர் நம்மிடம் வரட்டும்" என்று பொது அறிவிப்பு செய்யும்படி கட்டளையிட்டார்கள்.
அவ்வாறே அவர் பொது அறிவிப்பு செய்தபோது நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று நபியவர்கள்
என்னிடம் கூறியதை எடுத்துரைத்தேன்.
அப்போது அபூபக்ர்
(ரலி) அவர்கள் இரு கை நிறைய ஒரு தடவை அள்ளிக் கொடுத்து "எண்ணிப்பார்" என்று
சொன்னார்கள். நான் எண்ணிப் பார்த்தபோது 500 (நாணயங்கள்) இருந்தன. மீண்டும் "இதைப்
போன்று இன்னும் இரு மடங்குகளும் பெற்றுக்கொள்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2296, முஸ்லிம்-4632
செத்தும் கொடை கொடுத்தார்
சீதக்காதி என்று தமிழில் சொல்லப்படும்.
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் இறந்த பிறகும்கூட தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றியுள்ளார்கள் என்பதை இங்கே
கவனிக்கத்தக்கது.
அதை அப்படியே கொடுத்துவிடுவேன்
ஒருமுறை ஆயிஷா (ரலி)
அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கொடைத்தன்மையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது சபையில் இருந்த முஹம்மது பின் முன்கதிர் (ரஹ்) அவர்கள் தன் குடும்பத்தின் வறுமை
நிலையை விவரித்துக் கொண்டிருந்தார். அவரின் நிலையை செவியுற்ற ஆயிஷா (ரலி) அவர்கள், "இப்போது என்னிடம்
பத்தாயிரம் வெள்ளிக்காசுகள் இருந்திருந்தாலும் அதை அப்படியே உங்களுக்கு கொடுத்து உதவவேனே!"
என்று கூறினார்கள்.
அவர் அச்சபையை விட்டு
சென்ற சிறிது நேரத்திற்குள் கஃலீபா முஆவியா (ரலி) அவர்களிடமிருந்து நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களின் குடும்பத்திற்கு வரவேண்டிய மாதாந்திர தொகை பத்தாயிரம் வெள்ளிக்காசுகள்
ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கொடுத்து அனுப்பப்பட்டது. உடனே ஆயிஷா (ரலி) அவர்கள், “இவ்வளவு
சீக்கிரமாக நான் பரிசோதிக்கப்படுவேன் என்றெண்ணவில்லையே!” என வியந்தவாறு முஹம்மது பின்
முன்கதிர் (ரஹ்) அவர்களை அழைத்து வரச் செய்து அவரிடம் இந்தப் பெரும் தொகையை கொடுத்தார்கள்.
உடனே அவர், ஆயிஷா (ரலி) அவர்களிடம், "இவ்வளவும் எனக்கு
வேண்டாம். அதிலிருந்து கொஞ்சமாவது நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்" என்று கெஞ்சினார்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "நான் சிறிது நேரத்திற்கு முன் என்னிடம் பத்தாயிரம் வெள்ளிக்காசுகள்
இருந்திருந்தாலும் அதை அப்படியே உங்களுக்கு தந்து உதவி செய்வேன் என்று கூறினேன். எனவே, அந்த என் வார்த்தையை
பரிசோதிப்பதற்கு தான் அல்லாஹ் இந்த பத்தாயிரம் வெள்ளிக்காசுகளை எனக்கு தந்திருக்கிறான்.
அதனால் என் வாக்கை நான் காப்பாற்றி இறைவனின் பரிசோதனையில் நான் வெற்றி பெற வேண்டும்"
என்று கூறியவாறு, அந்த முழு தொகையும் அவரிடமே கொடுத்து அனுப்பினார்கள். அவர் அதைக்கொண்டு ஒருப் பெண்ணை மணமுடித்தார். அவள் மூலமாக
அவருக்கு பல குழந்தைகள் பிறந்தனர். நூல்:- தபக்காத்
இப்னு சஅத்
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களின் வழி நடக்கும்,
முஸ்லிம்களும் வாக்குறுதியை
நிறைவேற்ற வேண்டும். வாக்குறுதி என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. அது மன உறுதியின்
வெளிப்பாடு. அது உள்ளத்திலிருந்து வெளிப்பட வேண்டும். உதட்டின் அளவில் மட்டும் இருந்தால்
போதாது.
‘உங்கள் முகங்களை
கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக வாக்களித்தால்
தமது வாக்கை நிறைவேற்றுபவர்களே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே
(இறைவனை) அஞ்சுபவர்கள். திருக்குர்ஆன்:- 2:177
நல்லது செய்ய நினைப்பவர்கள்
ஜனாதிபதி உமர் (ரலி)
அவர்களின் ஆட்சிக் காலத்தில், மூன்று பேர் ஒரு இளைஞனைப் பிடித்துக்கொண்டு வந்து, “ஜனாதிபதி அவர்களே!, எங்கள் தந்தையைக்
கொன்ற இவரிடமிருந்து நீங்கள் பழிவாங்க வேண்டும்” என்றனர். உமர் (ரலி) அவர்கள், “(அவரிடம்) ஏன் அவரைக்
கொன்றீர்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அந்த இளைஞன், “நான் ஒட்டகம் மற்றும்
ஆடு மேய்ப்பவன். என்னுடைய ஒட்டகங்களில் ஒன்று, அவர்களுடைய தந்தையின் நிலத்தில் இருந்த ஒரு மரத்தைத்
தின்றுவிட்டது. அதனால், (ஆத்திரமுற்ற) அவர்களுடைய
தந்தை அதை ஒரு கல்லால் அடித்தார். அது இறந்துவிட்டது. பிறகு நான் அதே கல்லை எடுத்து
(ஆத்திரத்துடன்) அவர்களுடைய தந்தையை அடித்தேன். அவரும் இறந்துவிட்டார்” என்று பதிலளித்தார்.
உமர் (ரலி) அவர்கள், “அப்படியானால், நான் உனக்கு விதிக்கப்பட்ட (மரண) தண்டனையை நிறைவேற்றுவேன்”
என்றார்கள்.
அதற்கு அந்த இளைஞன், ( أَمْهِلْنِي ثَلَاثَةَ
أَيَّامٍ فَقَدْ مَاتَ أَبِي وَتَرَكَ لِي كَنْزًا أَنَا وَأَخِي الصَّغِيرِ
فَإِذَا قَتَلْتَنِي ضَاع الْكَنْز وَضَاع أَخِي مِنْ بَعْدِي ) “எனக்கு மூன்று நாள்கள் அவகாசம் கொடுங்கள். ஏனெனில், என் தந்தை இறந்துவிட்டார்.
எனக்கும், பருவ வயதை அடையாத
என் தம்பிக்கும் ஒரு புதையலை விட்டுச் சென்றிருக்கிறார். (எனவே, நான் அந்த புதையலை
எடுத்து என் தம்பியிடம் கொடுத்துவிட்டு வந்து விடுகிறேன். ஆனால், இப்பொழுதே) நீங்கள்
என்னைக் கொன்றால், அந்தப் புதையலை இழக்க
நேரிடும், எனக்குப் பிறகு என்
சகோதரனை (பாரமரிக்க ஆளின்றி அவனை)யும் இழக்க நேரிடும்” என்றான்.
உமர் (ரலி) அவர்கள், ( وَمَنْ يَضْمَنُكَ ) “உனக்காக யார் ஜாமீன்
ஏற்பார்?” என்று கேட்டார். அந்த
மனிதர் மக்களின் முகங்களைப் பார்த்துவிட்டு, (அபூதர் - ரலி அவர்களை நோக்கி) “இந்த மனிதர்!” என்றார்.
உமர் (ரலி) அவர்கள், ( يَا أَبَا ذَرٍّ هَلْ
تَضْمَنُ هَذَا الرَّجُلُ؟ ) “அபூதர்! இந்த மனிதருக்காக நீ ஜாமீன் ஏற்பாயா?” என்று கேட்டார்கள்.
அபூதர் (ரலி) அவர்கள், “ஆம், ஜனாதிபதி அவர்களே!” என்று பதிலளித்தார்.
உமர் (ரலி) அவர்கள், ( إِنَّكَ لَا تَعْرِفُهُ
وَإِنْ هَرَبَ أَقَمْتُ عَلَيْكَ الْحَدِّ ) “உனக்கு அவரைத் தெரியாது. அவர் தப்பித்துவிட்டால், (அதற்குப் பகரமாக)
உன் மீதே விதிக்கப்பட்ட (மரண) தண்டனையை நான் நிறைவேற்றுவேன்” என்றார்கள். அபூதர் (ரலி)
அவர்கள், ( أَنَا
أَضْمَنُهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ ) “ஜனாதிபதி அவர்களே! நான் அவருக்காக ஜாமீன் ஏற்கிறேன்”
என்று பதிலளித்தார்.
அந்த மனிதர் (மூன்று
நாள்கள் அவகாசம் பெற்றுப்) புறப்பட்டுச் சென்றார். முதல்,
இரண்டாம், மூன்றாம் நாள்கள்
கடந்தன. அபூதர் (ரலி) அவர்களுக்குத் தண்டனை கிடைத்துவிடுமோ என்று அனைவரும் கவலைப்பட்டனர்.
மஃக்ரிப் தொழுகைக்குச் சற்று முன்பு, அந்த மனிதர் மூச்சிரைக்க, களைப்புடன் திரும்பி
வந்து, உமர் (ரலி) அவர்கள்
முன் வந்து நின்றார்.
அந்த மனிதர், ( لَقَدْ سَلِمَتْ الْكَنْز
وَأَخِي لِأَخْوَالِه وَأَنَا تَحْتَ يَدِكَ لِتُقِيم عَلَيَّ ) "நான் (தோண்டி எடுத்த
அந்தப்) புதையலையும் என் தம்பியையும் எங்கள் தாய்மாமன்களிடம் ஒப்படைத்துவிட்டேன், இப்போது தண்டனையைப்
பெறுவதற்காக நான் உங்கள் வசம் ஆகிவிட்டேன்" என்றார்.
உமர் (ரலி) அவர்கள்
ஆச்சரியப்பட்டு, ( مَا
الَّذِي أُرْجِعُكَ كَانَ يُمْكِنُ أَنْ تَهْرُبَ )
"ஏன் திரும்பி வந்தாய்? நீ தப்பி ஓடியிருக்கலாமே!"
என்றார்கள். அந்த மனிதர், ( خَشِيتُ أَنْ يُقَالَ لَقَدْ ذَهَبَ الْوَفَاءُ بِالْعَهْدِ ) "கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் குணம் மக்களிடமிருந்து
மறைந்துவிட்டது என்று சொல்லப்பட்டுவிடுமோ என அஞ்சினேன்" என்று பதிலளித்தார்.
உமர் (ரலி) அவர்கள்
அபூதர் (ரலி) அவர்களிடம், ( مَاذَا ضَمِنَتَهُ ) "நீ ஏன் அவருக்காகப் பிணை ஏற்றாய்?" என்று கேட்டார். அபூதர்
(ரலி) அவர்கள், ( خَشِيتُ
أَنْ يُقَالَ لَقَدْ ذَهَبَ الْخَيْرِ مِنْ النَّاسِ ) "(அடுத்தவருக்கு உதவுகின்ற)
நற்செயல் மக்களிடமிருந்து மறைந்துவிட்டது என்று சொல்லப்பட்டுவிடுமோ என அஞ்சினேன்"
என்று பதிலளித்தார்.
(இதைப் பார்த்துக்கொண்டிருந்த)
கொல்லப்பட்டவரின் மகன்கள் கண்ணீர் மல்கியவர்களாக, ( لَقَدْ عَفَوْنَا عَنْهُ )
"நாங்கள் அவரை மன்னித்துவிட்டோம்!"
என்றார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "ஏன்?" என்று கேட்டார்கள்.
அவர்கள், ( نَخْشَى
أَنْ يُقَالَ لَقَدْ ذَهَبَ الْعَفْوِ مِنْ النَّاسِ ) "மன்னிக்கும் குணம்
மக்களிடமிருந்து மறைந்துவிட்டது என்று சொல்லப்பட்டுவிடுமோ என அஞ்சினோம்" என்று
பதிலளித்தார்கள்.
நல்லது செய்ய நினைப்பவர்கள்
புதிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை. குறைந்தபட்சம் கொடுத்த வாக்கை காப்பாற்றினாலே
போதுமானது. இதுபற்றியே திருக்குர்ஆன் கூறுகிறது.
ஒரு முஸ்லிம் தனது குடும்பம், சமூகம் மற்றும் வர்த்தகம் என அனைத்து நிலைகளிலும்
கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றும்போது, சமுதாயத்தில் பரஸ்பர நம்பிக்கையும் அமைதியும் நிலைபெறுகிறது.
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு மனிதன் இறைவனின் அன்பையும், மக்களின் நன்மதிப்பையும்
பெறுகிறான்.
பாவக்காரியம்
இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்கள் கூறினார்கள். ( لَا تَعِدَنَّ أَخَاكَ بِمَا لَا تُنْجِزُهُ لَهُ. فَإِنَّ ذَلِكَ
عَدَاوَةُ مَا بَيْنَكَ وَبَيْنَهُ ) உன்னால்
நிறைவேற்ற இயலாததை உன் சகோதரனுக்கு வாக்களிக்காதே! ஏனென்றால், அதுவே உனக்கும் அவனுக்குமிடையே
பகைமை ஏற்பட காரணமாகும். நூல்:- தாரீகு மதீனத்தி திமிஷ்க்,
அல்பிதாயா வந்நிஹாயா
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ شَرَطَ لِأَخِيهِ شَرْطًا لَا يُرِيدُ أَنْ يَفِيَ لَهُ بِهِ
فَهُوَ كَالْمُدْلِي جَارَهُ إِلَى غَيْرِ مَنَعَةٍ ) யார் நிறைவேற்றும் எண்ணமின்றி தன் சகோதரனுக்கு ஒன்றை வாக்களித்தானோ, அவன் (பொய்யாக வாக்களித்தவன்) தன்னிடம் அடைக்கலம் தேடி வந்தவனை
பாதுகாப்பற்ற இடத்தில் தள்ளிவிட்டவனைப் போன்றவன் ஆவான்.
அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ( اَلْعِدَّةُ دَيْنٌ ، وَيْلٌ لِمَنْ وَعَدَ ثُمَّ أَخْلَفَ ) வாக்குறுதி ஓர் கடனாகும். அளித்துவிட்டு அதை மீறுபவனுக்குக் கேடுதான்.
நூல்:- இப்னு அசாகிர்
அல்முஸ்ஸன்னா பின் ஹாரிஸா அஷ்ஷைபானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
( ُلِأَنَّ أَمُوت
عَطَشًا، أَحَبُّ إلَيَّ مِنْ أَخْلَفَ مَوْعِدًا ) கொடுத்த வாக்குறுதியை மீறுவதைவிட தாகத்தால் (கொடுமையால்) இறப்பதே
மேல்.
நிறைவேற்ற முடியாதவற்றை வாக்குறுதியாக தராமல் இருப்பது சிறந்தது.
நாம் ஒருவருக்கு கொடுத்த வாக்குறுதி, இறைவனுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு இணையானதாகக்
கருதவேண்டும்.
கடன் வாங்கியவர் திருப்பித்தரவேண்டியது எந்த அளவு கடமையோ அதே
போன்றுதான் பிறருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதும் கடமையாகும்.
இன்றைய சூழலில் வாக்குறுதி மீறுவதும் பொய்யாக வாக்களிப்பதும்
வாடிக்கையாகிவிட்டது. இன்றைய அரசியல் வாக்குறுதி என்பதே மக்களை ஏமாற்றும் ஒரு தந்திரமாக
மாறிவிட்டது.
வாக்கு தவறுதல் என்பது நம்பிக்கை மோசடி வகையைச் சார்ந்தாகும்.
ஒருவரிடம் ஒரு காரியம் ஆக வேண்டும் என்பதற்காக அந்த நேரத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு, தனது வேலை முடிந்துவிட்டால், தான் அளித்த வாக்குறுதியை
சவகாசமாக மறந்துவிடுகிறோம். அதைப்பற்றி கேட்கும்போது பிரச்சினை வெடிக்கிறது.
அரச அலுவலகங்களில் கடமையாற்றுகின்ற அதிகாரிகள் தொடக்கம் சாதாரண
கூலித் தொழிலாளி வரைக்குமான பல மட்டங்களில் உள்ளவர்களில் சிலர் தாம் அளித்த வாக்குறுதிக்கு
மாறு செய்கின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடித்துத் தருவதாக மக்களிடம்
வாக்களித்து பின்பு அதை நிறைவேற்றுவதில்லை. இதை அல்லாஹ் முற்றாக வெறுக்கின்றான்.
கடும் குளிர்கால இரவொன்றில் கோட்டைக்குத் திரும்பிய அரசர், மெல்லிய ஆடையணிந்த வாயிற் காவலனைக் கண்டார். அவனை
நெருங்கி "குளிரை நீ உணரவில்லையா?" எனக்கேட்டார். வாயிற் காவலன், "குளிர்கிறது தான்.
ஆனால், குளிர்காக்கும் ஆடைகள் என்னிடமில்லையே!"
என்றான். அரசர், “நான் இப்போதே கோட்டைக்குச்
சென்று, பணியாளரிடம் ஆடைகள் கொடுக்கச்
சொல்கிறேன்” என்றார்.
அரசரின் வாக்குறுதி காவலன் மகிழ்ச்சியடைந்தான். ஆனால், கோட்டையினுள் நுழைந்த அரசர் தன் வாக்குறுதியை மறந்துவிட்டார்.
காலையில் பார்த்தபோது, காவலனின் உயிர் பிரிந்திருந்தது.
அவனுக்கு அருகில் கடிதம் ஒன்று கிடந்தது.
"மன்னரே! ஒவ்வொரு இரவிலும் குளிரைத் தாங்கிக்கொண்டு
உறுதியாகத் தான் இருந்தேன். ஆனால் குளிர்காக்கும் ஆடை குறித்த உங்கள் வாக்குறுதி என்
வலிமையைப் போக்கி என்னைக் கொன்றுவிட்டது." என்று எழுதப் பட்டிருந்தது.
மற்றவர்களுக்கு நாம் வாக்களிப்பது, நாம் வர்ணிப்பதைவிட அதிகமான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். எனவே, வாக்கு மாறக்கூடாது. அதனால் எதனை இடிந்துப்போகச்
செய்தோம் என்று அறியமாட்டோம்.
நயவஞ்சனின் பண்பு
எந்த வாக்குறுதியையும்
(நிறைவேற்றுவதை) அவர்களுள் பெரும்பாலோரிடம் நாம் காணவில்லை. மேலும், அவர்களுள் பெரும்பாலோரைப் பாவிகளாகவே கண்டோம். திருக்குர்ஆன்:-
7:102
அருமை நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ
كَانَ مُنَافِقًا خَالِصًا وَمَنْ كَانَتْ فِيهِ خَلَّةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَلَّةٌ
مِنْ نِفَاقٍ حَتَّى يَدَعَهَا إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا عَاهَدَ غَدَرَ وَإِذَا
وَعَدَ أَخْلَفَ وَإِذَا خَاصَمَ فَجَرَ ) பேசினால் பொய் சொல்வது, ஒப்பந்தம் செய்து
கொண்டால் நம்பிக்கை மோசடி செய்வது, வாக்களித்தால் மாறு செய்வது, வழக்காடினால் நேர்மை தவறுவது ஆகிய இந்த நான்கு குணங்கள்
எவரிடம் குடி கொண்டுள்ளனவோ அவர் அப்பட்டமான நயவஞ்சகர் ஆவார். எவரிடம் அவற்றில் ஒரு
குணம் குடிகொண்டுள்ளதோ அவர் அதை விட்டு விடும் வரை அவருள் நயவஞ்சகத்தின் ஒரு குணம்
குடிகொண்டிருக்கும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-34, முஸ்லிம்-106
அரசியல்வாதிகளின்
தேர்தல் வாக்குறுதிகள் போன்று நம்முடைய வாக்குறுதிகள் போலியானதாக இருந்துவிடக்கூடாது. நயவஞ்சகன் தான் வாக்குறுதிகளை
காப்பாற்ற மாட்டான் என்கிறது இஸ்லாம். எனவே, வாக்குறுதிகள் விஷயத்தில் மிகவும் கவனம் தேவை.
வாக்குறுதியை காப்பாற்றுவது
வாய்மையாளர்களின் மாண்பாகும். வாக்குறுதியை காப்பாற்றாதவனிடம் இஸ்லாம் நிலைக்கொள்வதில்லை.
வாக்குறுதியை மீறுவது நயவஞ்சகர்களின் பண்புகளில் ஒன்றாகும்.
ஆகவே, வாக்குறுதியை நிறைவேற்றி
வாழும் நற்பண்பாளர்களாக நம்மை இறைவன் வாழச் செய்வானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது
ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment