Search This Blog

Wednesday, 28 October 2026

ஆகாயத் தோட்டி

 

ஆகாயத் தோட்டி

 

فَبَعَثَ اللَّهُ غُرَابًا يَبْحَثُ فِي الْأَرْضِ لِيُرِيَهُ كَيْفَ يُوَارِي سَوْءَةَ أَخِيهِ قَالَ يَا وَيْلَتَا أَعَجَزْتُ أَنْ أَكُونَ مِثْلَ هَذَا الْغُرَابِ فَأُوَارِيَ سَوْءَةَ أَخِي فَأَصْبَحَ مِنَ النَّادِمِينَ

தம் சகோதரரின் சடலத்தை எவ்வாறு மறைப்பது என்பதை அவருக்குக் காட்ட அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டிற்று. (இதைக் கண்ட) அவர், "அந்தோ! காகத்தை போன்று இருப்பதற்குக்கூட என்னால் இயலவில்லையே! அவ்வாறு இருந்திருந்தால் என் சகோதரரின் சடலத்தை நான் மறைத்திருப்பேனே!" என்று கூறி, கவலைகொள்வோரில் ஒருவரானார். திருக்குர்ஆன்:- 5:31

 

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 27 ஆம் தேதி "சர்வதேச காகம் மற்றும் அண்டங்காகம் பாராட்டு தினம்" (International Crow and Raven Appreciation Day) ஆக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

காகங்களின் கூர்மையான அறிவுத்திறன், அவற்றின் சமூகப் பண்பு மற்றும் அவை நம் இயற்கைக்குச் செய்யும் நன்மைகள் ஆகியவற்றைப் போற்றும் விதமாகவும், அவை குறித்த தவறான புரிதல்களைப் போக்கவும் பறவை ஆர்வலர்களால் இந்தத் தினம் தொடங்கப்பட்டது.

 

காகம், காக்கை என்று தமிழிலும் Crow என்று ஆங்கிலத்திலும் غُرَابٌ என்று அரபுமொழியிலும் இவை அழைக்கப்படுகின்றன. காகம் கார்விடே (Corvidae) குடும்பத்தைச் சேர்ந்த பறவை இனமாகும். பெரும்பாலும் கருப்பு நிறத்திலும் அரிதாக வெள்ளை நிறத்திலும் இருக்கும் பறவை இனமாகும். காகங்களில் ஆஸ்திரேலிய, வட அமெரிக்க, ஆப்பிரிக்க, ஐரோப்பிய, ஆசிய என 40 வகை இனங்கள் உள்ளன. கரியன் காகம், வீட்டுக் காகம், அண்டங் காகம் என்பன ஆசியக் காக இனங்களாகும்.

 

பறவை இனங்களிலேயே கூடுதலான அறிவுத் திறன்கொண்ட பறவையாக காகம் கணிக்கப்பட்டுள்ளது. காகத்தின் அளவில் உள்ள பறவைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால்  இதனுடைய மூளையே பெரிது. காகங்களின் கூரிய அறிவுத்திறனுக்குக் காரணம் அதன் மூளைப்பகுதியில் அமைந்துள்ள “நிடோபோடாலியம்” என்ற பகுதிதான் என பறவையியற் துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்

 

மனிதனுக்குப் பாடம் நடத்தியது

 

ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களுடைய இரண்டு புதல்வர்களில் ( قَابِيل ) காபீல் என்பவர் தமது சகோதரர் ( هَابِيل ) ஹாபீல் அவர்களைக் கொலை செய்துவிட்டு அவரது உடலை அங்கேயே விட்டுவிட்டார். அந்த உடலை என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தார்.

 

அப்போது இரு சகோதர காகங்களை அல்லாஹ் அனுப்பினான். அவை ஒன்றோடு ஒன்று சண்டையிட்டதில் ஒன்று மற்றொன்றைக் கொன்றுவிட்டது.

 

பின்னர் தன் சகோதர காகத்திற்காக அது ஒரு குழியைத் தோண்டி, அதில் செத்த காகத்தைப் போட்டு மண்ணைத் தள்ளியது. இதைக்கண்ட காபீல், "அந்தோ இந்த காகத்தைப் போன்று இருப்பதற்குக்கூட என்னால் இயலவில்லையே" என்று கூறினார். பிறகு தம் சகோதரரின் சடலத்தை மண்ணில் புதைத்தார். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

மனிதன் இறந்த பிறகு அவனது உடலை அப்படியே விட்டுவிடக் கூடாது, மாறாக மண்ணைத் தோண்டி கண்ணியமான முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற இறுதிச் சடங்கு வழிகாட்டுதலை முதன்முறையாக மனிதகுலம் ஒரு பறவையிடமிருந்தே கற்றுக் கொண்டது.

 

ஆற்றலிலும் சிந்தனையிலும் சிறந்தவனாகப் படைக்கப்பட்ட மனிதன், ஒரு சிறிய பறவையைத் தன் ஆசிரியராக ஏற்றுக்கொண்டு பாடத்தைக் கற்றான். அறிவு என்பது யாரிடமிருந்தும், ஏன் ஒரு விலங்கு அல்லது பறவையிடமிருந்தும் கூட கிடைக்கலாம்; அதைப் பெற்றுக்கொள்ள மனிதனுக்குத் தாழ்மை உணர்வு (Humility) அவசியம் என்பதை இது காட்டுகிறது.

 

இறைவனின் படைப்புகளையும், இயற்கையின் செயல்பாடுகளையும் உற்று நோக்குவதன் மூலம் மனிதன் தன் அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிய முடியும் என்ற பாடம் இதில் அடங்கியுள்ளது.

 

காகத்தின் செயலைக் கண்டவுடன் காபீலுக்குத் தன் தவறு புரிந்தது. கோபத்திலும் பொறாமையிலும் செய்யும் பாவங்கள், இறுதியில் மனிதனுக்கு மிதமிஞ்சிய கைசேதத்தையும் குற்ற உணர்ச்சியையும் மட்டுமே தரும் என்பதை காகத்தின் வருகை அவருக்கு உணர்த்தியது.

 

இறைவனால் வழிகாட்டியாக அனுப்பப்பட்ட காகம், மனித நாகரிகத்தின் மிக முக்கியத் தேவையான சுகாதாரமான வாழ்விற்கும், இறந்தவர்களைக் கண்ணியப்படுத்துவதற்கும் அடித்தளமிட்டது.

 

புதைப்பதே சிறந்தது

 

மனிதன் பிறந்தது முதல் இறக்கும்வரையிலான வழிகாட்டல்களை இஸ்லாம் வழங்கி உள்ளது. இறந்த சடலங்களைக் குளிப்பாட்டி சுத்தம் செய்து அதற்குரிய இடத்தில் நல்லடக்கம் செய்வது முஸ்லிம்களின் கடமை.

 

இதே போல் யூத, கிறிஸ்தவ மதங்களிலும் எரிப்பதைவிடப் புதைப்பதே பின்பற்றப்படுகின்றது. இந்து மதத்தில் எரிப்பதும் புதைப்பதும் நடைமுறையில் உள்ளது. பார்சி மதத்தவர்கள் இறந்த உடல்களை அப்படியே உயரமான கோபுரத்தில் வெட்டவெளியில் கழுகுகள், மற்றும் பறவைகளுக்கு உணவாக போட்டு விடுகின்றனர்.

 

இறந்தவர் குடும்பத்தினரின் நிதிநிலையைக் கணக்கிட்டால் சடலத்தை எரிப்பதற்கான செலவு, புதைப்பதற்கு ஆகும் செலவைவிட அதிகமே.

 

பிணம் நன்றாக எரிவதற்கு சுமார் 1600 முதல் 2000 டிகிரி பாரன் ஹீட் வெப்பம் தேவைப்படும் . இதற்கான கருவிகளின் விலையும் அதிகம் மின்மயானங்கள் கிராமப் பகுதிகளில் இல்லாமல் நகர்ப்புறங்களில்தான் இருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் எரியூட்டத் தேவையான மின்சாரம் நகர்ப்புறங்களில் மட்டுமே தடையின்றிக் கிடைக்கும் என்பதும் ஒரு காரணம்.

 

சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டால், மனித உடல் எரியூட்டப்படுவதால் எழும் புகை மற்றும் மாசுக்களால் சுற்றுப்புறச் சூழல் கெடுகின்றது. புதைப்பதால் நாற்றமெடுத்த சவம்கூட மண்ணுக்குள் அடங்கிவிடும். ஆனால் எரியூட்டப்படுவதால் எழும் நாற்றம் பல மைல் தூரங்கள் வரை காற்றில் பரவி ஆரோக்கியமான காற்றை மாசுபடுத்த வாய்ப்புகள் அதிகம்.

 

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பின் Persistent Organic Pollutants (POP) அறிக்கையின்படி பிணம் எரியூட்டப்படுவதால் கொடிய விஷத்தன்மையுள்ள நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, அமில மழைக்குக் காரணமான கந்தக டையாக்சைடு ஆகியவை வெளியேறுகின்றன. பிண எரிப்பால் வெளியாகும் டையாக்ஸினின் அளவு 0.2%.

 

உலகின் பெரும்பாலான பகுதிகளில் பிணங்களை புதைப்பதே வழக்கத்தில் உள்ளதால் இந்த அளவு ஓரளவு கட்டுக்குள் உள்ளது.

 

இந்தியாவைத் தவிர்த்து உலகளாவிய நடைமுறையினை பார்க்கும்போதுகூட புதைக்கும் பழக்கமே இன்றும் பரவலாக இருப்பதை அறியலாம். இப்படி இறந்தவர்களை புதைப்பதுதான் சிறந்தது என்று மனிதனுக்கு சொல்லிகொடுத்தது யார்? என்று பார்க்கும்போது, ஆச்சரியம்! ஆதி மனிதனுக்கு இதைக் கற்றுக்கொடுத்தது ஒரு காக்கை.

 

அல்லாஹ்வின் படைப்பில் ஏராளமான ஜீவராசிகள் இருக்கும்போது, காகத்தை ஏன் அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்? உண்மையில் அல்லாஹ் படைத்த பறவை இனங்களில் காகத்திற்கு மட்டும் கூடுதல் புத்தி கூர்மையை அல்லாஹ் கொடுத்துள்ளான். இதை இன்றைய நவீன ஆய்வுகள் உண்மைப்படுத்தியுள்ளன.

 

உணவு கொண்டுவந்தது

 

(இறைத்தூதர் இல்யாஸ் - அலை அவர்கள் கூறினார்.) நீங்கள் (ஏக இறைவனை) அஞ்ச மாட்டீர்களா? நீங்கள் அழகிய படைப்பாளன் ஆகிய, உங்கள் இறைவனும் (உங்களுக்கு) முன் இருந்த உங்கள் மூதாதையரின் இறைவனும் ஆகிய அல்லாஹ்வை விடுத்து பஅல் (எனும்) சிலையை வழிபடுகின்றீர்களா? திருக்குர்ஆன்:- 37:124 - 126

 

இறைத்தூதர் இல்யாஸ் (அலை) அவர்கள் டமாஸ்கஸ் நகருக்கு மேற்கிலிருந்த நகர்வாழ் மக்களுக்கு இறைத்தூதராக அனுப்பப்பட்டார். அம்மக்கள் சிலை வணக்கத்தை விட்டுவிட்டு இறைவழிக்கு வர வேண்டுமென அவர் பரப்புரை செய்தார்.

 

அந்த மக்கள் வணங்கி வந்த சிலைக்கு "பஅல்" என்று பெயரிட்டிருந்தனர். அம்மக்கள் அவரை பொய்யர் என்றனர். அவருடன் மோதல் போக்கை மேற்கொண்டு அவரைக் கொன்று விடுவதற்கும் முயன்றனர். ஆனால், அவர் அவர்களிடமிருந்து தப்பியோடி ஒரு மலைக்குகைக்குள் இருபது அல்லது நாற்பது நாள்கள் மறைந்திருந்தார். அந்நாள்களில் அவருக்குக் காகங்கள் உணவு கொண்டு வந்து கொண்டிருந்தன. நூல்:-  இப்னு அபித்துன்யா, அல்பிதாயா வந்நிஹாயா, தாரீக் திமிஷ்க்

 

இறைத்தூதர் இல்யாஸ் (அலை) அவர்கள் வழிதவறிய இஸ்ரவேலர்களை சீர்திருத்துவதற்காக அனுப்பப்பட்டவர். பழைய ஷாம் தேசத்தில் டமாஸ்கஸ் நகருக்கு மேற்கில் இருந்த "பஅலபக்" நகரவாசிகளிடம் இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள். அவர்கள் வாழ்ந்த காலம் இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களுக்குப் பின் கி.மு. பத்தாம் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது.

 

வரும்முன் காப்போம்

 

அபூ உமாமா அல்பாஹிலி (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோலாலான தமது இரு காலுறைகளை எடுத்து வரச் சொன்னார்கள். அவற்றில் ஒன்றை அணிந்து மற்றொன்றை எடுப்பதற்குள் ஒரு காகம் வந்து அதை தூக்கிச் சென்று தலைகீழாக கவிழ்த்துப்போட்டது. அப்போது அதிலிருந்து குட்டி பாம்பொன்று விழுந்ததைப் பார்த்தார்கள். அப்போது நபியவர்கள், ( مَنْ كَانَ يُؤْمِنُ بِاَللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ، فَلَا يَلْبَسْ خُفَّيْهِ حَتَّى يَنْفُضَهُمَا ) "அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிய எவரும் தங்களின் காலுறைகளை உதறாமல் (தட்டாமல்) அணிந்துகொள்ள வேண்டாம்" என்று கூறினார்கள். நூல்:- தாரகுத்னீ, தப்ரானீ, ஜாமிஉஸ் ஸஙீர்-8964 இமாம் சுயூத்தீ

 

நாம் தினமும் வெளியில் செல்லும்போதும், வீட்டை விட்டுப் புறப்படும்போதும் காலணிகளை அணிவது ஒரு வழக்கமான செயலாகும். ஆனால், அவசரமாகக் கிளம்பும்போது பலரும் செய்யும் ஒரு பெரிய தவறு, காலணிகளை அப்படியே அணிவதுதான். ஷூ மற்றும் காலணிகளை அணியும் பொழுது அவற்றை நன்றாகத் தட்டிவிட்டு அணிவது ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் மிகவும் நல்லது.

 

கோடைகாலத்திலும், குறிப்பாக மழைக்காலத்திலும் தேள்கள், பூரான்கள், சிலந்திகள், பல்லிகள் மற்றும் சிறிய பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்கள் தங்குவதற்கு இருட்டான மற்றும் கதகதப்பான இடங்களைத் தேடுகின்றன. நாம் வீட்டின் வாசலிலோ அல்லது வெளியிலோ கழற்றி வைத்திருக்கும் ஷூக்களின் உள்பகுதி அவற்றுக்குப் பாதுகாப்பான புகலிடமாக மாறிவிடுகிறது. தட்டாமல் அப்படியே கால்களை நுழைக்கும்போது, பயந்துபோய் அந்தப் பூச்சிகள் நம்மைக் கடித்துவிடக்கூடும்.

 

காலணிகளுக்குள் காற்றில் பறந்து வரும் தூசிகள், மணல் மற்றும் சிறிய கூழாங்கற்கள் விழுந்து கிடக்க வாய்ப்புள்ளது. இவற்றை கவனிக்காமல் அப்படியே அணியும்போது, நடக்கும்போது அவை பாதங்களில் உறுத்தலை ஏற்படுத்தும். சில நேரங்களில் கூர்மையான கற்கள் பாதங்களில் காயங்களை ஏற்படுத்தி, தொற்றுக்கு (Infection) வழிவகுக்கலாம்.

 

மழைக்காலங்களில் காலணிகளுக்குள் இலேசான ஈரப்பதம் இருக்கலாம். இதனால் பூஞ்சைக்காளான்கள் (Fungus) அல்லது கிருமிகள் உருவாகி, காலணிகளின் உள்ளே பூஞ்சை நாற்றம் வீசக்கூடும். காலணிகளைத் தட்டும்போது அங்கிருக்கும் ஈரப்பதம் அல்லது பூஞ்சை படிமங்கள் ஓரளவு நீங்கி, பாதங்கள் சொறி, சிரங்கு போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கப்படும்.

 

காலணிகளை கையில் எடுத்து, அதன் உள்பகுதி தரையை நோக்கி இருக்குமாறு தலைகீழாகப் பிடித்து இரண்டு அல்லது மூன்று முறை நன்றாகத் தட்ட வேண்டும்.

 

மூடிய வகை ஷூக்களை (Closed shoes) அணியும்போது, தட்டிய பிறகும் டார்ச் லைட் அல்லது கைபேசி வெளிச்சத்தைக் கொண்டு உள்ளே ஏதேனும் இருக்கிறதா என்று ஒருமுறை பார்ப்பது நல்லது.

 

காலணிகளை கண்ட இடங்களில் விடாமல், மூடிய ஷூ ரேக்குகளில் (Shoe Rack) வைப்பதன் மூலம் பூச்சிகள் நுழைவதைத் தடுக்கலாம்.

 

"வருமுன் காப்பதே சிறந்தது" என்ற பழமொழிக்கு ஏற்ப, ஒரு நொடி செலவழித்து காலணிகளைத் தட்டிவிட்டு அணிவது நம்மைப் பெரிய விபத்துகளிலிருந்தும், விஷக்கடிகளிலிருந்தும் பாதுகாக்கும். எனவே, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த எளிய, ஆனால் மிக முக்கியமான பழக்கத்தை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பது அவசியமாகும். இதையே இந்த நபிமொழி கூறுகிறது.

 

அவசரம் கூடாது

 

அப்துர்ரஹ்மான் ஷிப்லீ (ரலி) அவர்கள் கூறியதாவது. ( نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ نَقْرَةِ الْغُرَابِ ) கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், காகம் கொத்துவதைப் போன்று (தொழுகையில் அவசர அவசரமாக சஜ்தா) செய்வதை தடை செய்தார்கள். நூல்:- அபூதாவூத்-731, நசாயீ-1100, இப்னுமாஜா-1419, முஸ்னது அஹ்மத்

 

ஒரு காகம் தனக்குரிய உணவைத் தரையில் இருந்து கொத்தி எடுக்கும்போது, மிக வேகமாக தனது அலகால் பூமியைக் குத்திவிட்டு உடனடியாக தலையை உயர்த்திக் கொள்ளும். இதேபோல, தொழுகையில் ருகூஃ (குனிதல்), ஸஜ்தா (சிரவணக்கம்) ஆகிய நிலைகளில் உடலை முழுமையாக நிலைநிறுத்தாமல், நெற்றி தரையில் பட்டதும் படாததுமாக அவசரமாகத் தலையை உயர்த்தித் தொழுவதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "காக்கை கொத்துவதைப் போன்ற தொழுகை" என்று வர்ணித்தார்கள்.

 

தொழுகை என்பது வெறும் உடற்பயிற்சியோ அல்லது கடமைக்காகச் செய்து முடிக்க வேண்டிய ஒரு சடங்கோ அல்ல. அது அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வோடு நேரடியாகத் தொடர்பு கொள்ளும் உன்னதமான வணக்கமாகும்.

 

இத்தகைய சிறப்புமிக்க தொழுகையை மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும், உள்ளச்சத்தோடும்  நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

 

சகுனங்களை நினைவூட்டும் பெயர்கள்

 

முஸ்லிம் (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களுடன் நான் ஹுனைன் போரில் கலந்துகொண்டேன். அப்போது நபியவர்கள், ( مَا اسْمُكَ ) "உமது பெயர் என்ன?" என்று கேட்டார்கள். நான், ( غُرَابٌ ) "ஃகுராப் (காகம்)" என்று கூறினேன். நபியவர்கள், ( لَا بَلِ اسْمُكَ مُسلِمٌ )  "வேண்டாம். மாறாக, (இனிமேல்) உமது பெயர் முஸ்லிம்" என்று கூறினார்கள். நூல்:- அல்அதபுல் முஃரத்-824, ஹாகிம், ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, தபக்காத்துல் குப்ரா, மஜ்மஉஸ் ஸவாயித், ஹயாத்துல் ஹயவான் அல்குப்ரா இமாம் அத்திமீரிய்யி

 

இஸ்லாத்திற்கு முந்தைய அரபு சமூகத்தில், காகம் என்பது துரதிர்ஷ்டம், மரணம் மற்றும் பிரிவின் அடையாளமாகக் கருதப்பட்டது. அவர்கள் காகத்தை "غُرَابُ البَينَ"  (பிரிவின் காகம்) என்று அழைத்தனர். ஒரு பயணத்தைத் தொடங்கும்போதோ அல்லது சுபகாரியங்களின்போதோ காகத்தைக் கண்டால் அது கெட்ட சகுனம் என்று நம்பினர்.

 

இஸ்லாம் இத்தகைய மூடநம்பிக்கைகளையும், சகுனம் பார்ப்பதையும் முற்றிலும் தடை செய்தது. எந்தவொரு உயிரினமும் தானாகவே நன்மையையோ அல்லது தீமையையோ கொண்டு வருவதில்லை; அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கிறது என்பதை இஸ்லாம் தெளிவுபடுத்தியது. எனினும், மூடநம்பிக்கைகளின் அடையாளமாக இருந்த "குராப்" (காகம்) என்ற பெயரை மனிதர்களுக்கு வைப்பதையும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் விரும்பவில்லை.

 

இஸ்லாமிய மார்க்கத்தில் மனிதர்களுக்குப் பெயர் சூட்டுவது என்பது வெறும் அடையாளத்திற்கு மட்டுமல்ல; அது ஒரு மனிதனின் கண்ணியம், ஆளுமை மற்றும் அவனது வாழ்நாள் பிரார்த்தனையாகவும் கருதப்படுகிறது. இதனால்தான், நல்ல அர்த்தமுள்ள பெயர்களை வைக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அந்த வகையில், அரபு மொழியில் "குராப்" (Ghurab) எனப்படும் "காகம்" என்ற பெயரை மனிதர்களுக்குச் சூட்டுவதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.

 

காகம் புத்திசாலித்தனமான படைப்பாக இருந்தாலும், அதன் பெயரால் மனிதர்களை அழைப்பது அவமரியாதையாகக் கருதப்படுகிறது. சகுனங்களை நினைவூட்டும் காகம் போன்ற பெயர்களைத் தவிர்ப்பது நபியவர்களின் வழிகாட்டுதலாகும்.

 

கொல்லலாம்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( خَمْسٌ فَوَاسِقُ يُقْتَلْنَ فِي الْحَرَمِ الْفَأْرَةُ، وَالْعَقْرَبُ، وَالْحُدَيَّا، وَالْغُرَابُ، وَالْكَلْبُ الْعَقُورُ ) தீங்கிழைக்கக்கூடிய ஐந்து உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்கு உள்ளேயும் கொல்லப்படும். அவையாவன: எலி, தேள், காகம், பருந்து, வெறிநாய். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3314, முஸ்லிம்-2256

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில குறிப்பிட்ட உயிரினங்களை மனித வாழ்விடங்களுக்கும், ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடியவை என அடையாளம் காட்டியுள்ளார்கள்.

 

இந்த நபிமொழியில் காகம் தீங்கிழைக்கும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்குக் காரணம், அதன் திருட்டுக் குணம் மற்றும் பிற விலங்குகளுக்கும் மனிதர்களின் உணவுப் பொருள்களுக்கும் சேதம் விளைவிக்கும் இயல்பு ஆகும்.

 

ஹஜ், உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிய ஒருவர் உயிரினங்களை வேட்டையாடக் கூடாது. ஆனால், தனக்குத் தீங்கு தரும் உயிரினங்களாக இருந்தால் அதை அடித்துக் கொல்லலாம். அதற்கு தடை ஏதுமில்லை.

 

இஹ்ராம் நிலையில் உள்ளவர்கள் (ஹஜ்/உம்ரா காலங்களில்) கொல்ல அனுமதிக்கப்பட்ட ஐந்து தீய/துன்புறுத்தும் உயிரினங்களில் காகமும் ஒன்றாக சில நபிமொழிகளில் கூறப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் அசுத்தங்களை உண்டு வாழும் காகங்களைக் குறிக்கிறது என்று அறிஞர்கள் விளக்குகிறார்கள்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள், எந்த உயிரினங்களை கொல்லுங்கள் என்று கூறினார்களோ அவற்றை உண்ணக்கூடாது என்பது மார்க்கச் சட்டமாகும்.

 

தூய்மைப்பணி  

 

ஆகாயத்தோட்டி' (Sky Scavenger) என்று அழைக்கப்படும் பறவை காக்கை ஆகும். எனவே, அது மனிதர்கள் வாழும் சூழலைத் தூய்மையாக வைத்திருப்பதில் மிக முக்கியப் பங்காற்றுகிறது. கிராமங்களோ, நகரங்களோ மனிதர்கள் தூக்கி எறியும் வீணான உணவுப் பொருட்கள், அழுகிய பொருள்கள் மற்றும் இறந்த எலி, பல்லி போன்ற எத்தனையோ சுகாதாரக் கேடானவற்றைக் கொத்தித் தின்றுச் சுத்தம் செய்துவிடுகிறது காகம். இவ்வாறு சுற்றுப்புறச் சூழலை சுத்தம் செய்கின்றன. 


ஒருவேளை இந்தக் கழிவுகள் அப்படியே இருந்தால், அவை அழுகி காற்றில் துர்நாற்றத்தையும், நோய்க்கிருமிகளையும் பரப்பும். மனிதர்கள் செய்யத் தவறும் இந்தத் தூய்மைப் பணியை, காக்கைகள் வானிலிருந்து கவனித்துச் செய்வதால் இவை "ஆகாயத்தோட்டி" என்றும் "இயற்கையின் துப்புரவாளர்" என்றும் அழைக்கப்படுகின்றன.

 

காகம், உண்மையில் இந்த பூமியின் மிக முக்கிய தூய்மைப் பணியாளராகச் செயல்படுகிறது. இயற்கையின் சமநிலையைப் பேணிக் காக்கும் இவற்றை நாம் போற்றாவிட்டாலும், அவற்றிற்குத் துன்பம் விளைவிக்காமல் பாதுகாப்பது நமது கடமையாகும்.

 

காகத்தின் எச்சங்கள் மரங்களுக்குச் சிறந்த உரமாகப் பயன்படுகின்றன. மரங்கள் வளர, காகம் பெரிய அளவில் பறந்து பறந்து உதவுகிறது. காகம் சாப்பிட்ட பழங்களின் விதைகள் அதன் எச்சத்தில் கலந்து விழும். பல இடங்களில் அது பறப்பதால் எச்சமும் பல இடங்களில் விழுவதால் பற்பல இடங்களில் மரங்கள் முளைக்கும். எனவே, நாம் விரும்பும் பசுமைப் புரட்சி தோன்றுவதற்குக் காகம் செய்யும் உதவி முக்கியமானது. ஒரு காகம் தன் ஆயுளில் சுமார் 30,000 மரங்களை நடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

 

பயணங்களில்

 

அந்த காலத்தில் மாலுமிகள் கடல் பயணம் மேற்கொள்ளும்பொழுது கடற்கரை எந்த பக்கம் உள்ளது என்று கண்டுபிடிப்பதற்காக சில காகங்களை தங்களோடு கொண்டு செல்வார்கள்

 

நடுக்கடலில் கப்பல் பயணித்துக்கொண்டிருக்கும்போது கடற்கரைக்கு செல்ல விரும்பினால், கடற்கரை எந்த பக்கம் உள்ளது என்பதை அறிந்துக்கொள்ள, அவர்கள் தங்களோடு கொண்டுவந்துள்ள சில காகங்களை கட்டவிழ்த்து விடுவார்கள். அந்த காகங்கள் எந்த திசையில் பயணிக்கிறதோ, அந்த திசையில் தான் கரை உள்ளது என்று மாலுமிகள் வெகுவாக கணித்துவிடுவார்கள்.

 

காகங்கள் இயல்பாகவே கடல் பகுதிகளில் விட்டால் கரையை நோக்கி செல்லும் குணத்தை கொண்டிருப்பதை அவர்கள் தெரிந்து வைத்துள்ளார்கள் என்பது சற்று வியப்பாகத்தான் உள்ளது.

 

அதே சமயம் அந்த காகங்கள் ஊருக்குள் கரைந்துகொண்டே சென்று ஏதாவது ஒரு மரத்திலோ அல்லது வீட்டின் கூரையிலோ அமர்ந்து கரைந்து கொண்டிருக்கும். அதை பார்க்கும் ஊரார் கடலில் இருந்து மாலுமிகள் வரப்போகின்றனர் என்பதை புரிந்து கொண்டு, வருபவர்களை விருந்தாளியாக பாவித்து, வந்ததும் இளைப்பாற தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளார்கள்.

 

இச்செயலே பின்னாளில் "காகம் கரைந்தால் விருந்தாளிகள் வருவார்கள்" என்ற எண்ணக்கரு தோன்றுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

 

"காகம் கரைந்தால் விருந்தாளிகள் வருவார்கள்" என்ற வார்த்தையின் உண்மை இது தான்.

 

மகன்: அத்தா! காக்கா கத்தினா நம்ம வீட்டு விருந்தாளி வருவாங்கலாமே! அப்படினா, எது கத்தினா வந்த விருந்தாளிகள் வீட்ட விட்டு போவாங்க.

அத்தா: உங்க அம்மா பத்து நிமிஷம் கத்தினா போதும். வந்த விருந்தாளிகள் நம்ம வீட்ட விட்டு மட்டுமல்ல, இந்த ஊர விட்டே போயிருவாங்க.

 

ஜப்பான் நகரத்தில்

 

ஜப்பானில் இருக்கும் ஒரு வகையான அண்டங்காக்கைகள் அங்குள்ள ஒரு நகரத்தில் வாழ்க்கை நடத்துவதற்கான நெளிவு சுளிவுகளை நன்கு கற்றுத் தேர்ந்துவிட்டன. கொட்டைகளை உடைத்து அதனுள் இருக்கும் பருப்பை சாப்பிட இக்காகங்கள் நம்மை ஆச்சர்யப்படவைக்கும் நூதன முறையை கையாள்கின்றன.

 

வாகனங்கள் விரைந்து செல்லும் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள ஒரு சிக்னலின் மேலிருந்து தமது அலகால் கடித்து உடைக்க முடியாத கொட்டைகளை கீழே போடுகின்றன. வாகனங்களின் சக்கரத்தில் அரைபட்ட கொட்டைகளிலிருந்து பிறகு பருப்பினை எடுத்துச் சாப்பிடுகின்றன. அதுவும் எப்போது? பாதசாரிகள் நடந்துசெல்வதற்கான விளக்கு எறிந்தவுடனே தான். இல்லையெனில் வாகனங்களில் அடிபட நேரிடுமே! சிவப்பு விளக்கு எரியும்போது வாகனங்கள் வராது என்ற உண்மையை  அக்காக்கைகள் அறிந்துள்ளன.

 

பழி வாங்கக்கூடியவை  

 

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Dr. John Marzluff மற்றும் அவரது குழுவினர் 2006 ஆம் ஆண்டு காகங்களின் நினைவாற்றல் குறித்து ஒரு அதிர்ச்சியூட்டும் ஆய்வைத் தொடங்கினர்.

 

சில ஆராய்ச்சியாளர்கள் கோரமான முகமூடிகளை அணிந்து காகங்களைப் பிடித்து பயமுறுத்தினர். மற்ற ஆய்வாளர்கள் சாதாரண முகமூடி அணிந்து அந்த இடத்திலேயே இருந்தனர். பிறகு நாட்கள் கழித்து, அதே பயமுறுத்தும் முகமூடியை அணிந்து அவர்கள் மீண்டும் அந்த இடத்திற்கு சென்றனர்.

 

பயமுறுத்திய முகமூடியை பார்த்ததும் காகங்கள் உடனே அவர்களை அடையாளம் கண்டு தாக்க முயற்சி செய்தன! சாதாரண முகமூடி அணிந்தவர்களை ஒன்றும் செய்யவில்லை.

 

மேலும் ஆச்சரியமானது என்ன தெரியுமா? பயமுறுத்தப்படாத மற்ற காகங்களும் கூட இந்த எதிரிகளைப் பார்த்தவுடன் ஆக்ரோஷமாக கத்தியது. அதாவது, ஒரு காகத்திற்கு நடந்த துன்பம், மற்ற காகங்களுக்கும் தகவலாக பரவியுள்ளது.

 

இந்த ஆய்வு 2006 முதல் 2012 வரை தொடர்ந்து கவனிக்கப்பட்டது. அதன் முடிவில் விஞ்ஞானிகள் சொன்ன அதிர்ச்சி உண்மை: காகங்கள் ஒருவரை 20 வருடங்கள் வரை நினைவில் வைத்துக் கொண்டு அவனை எதிரியாக கருதி பழி வாங்கக் கூடிய நினைவாற்றலை கொண்டவை!

 

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை உண்மை: எந்த உயிரையும் இகழக்கூடாது. எந்த பறவையையும் துன்புறுத்தக்கூடாது. குறிப்பாக காக்கையை ஒருபோதும் கிண்டல் செய்யக்கூடாது. ஏனெனில், அது மறக்காது. மன்னிக்கவும் தயங்கும்.

 

கற்பனை கதையன்று

 

"ஒரு ஊர்ல ஒரு காகம் இருந்துச்சாம். அதுக்கு ரொம்ப தாகம் எடுத்தப்போ.." - இந்த கதையை கேட்காமலோ, படிக்காமலோ நம்ம பள்ளிப் பருவம் கண்டிப்பா கடந்திருக்காது. தாகத்தோடு வந்த காகம், பானையில இருந்த கொஞ்சூண்டு தண்ணிய குடிக்க, சின்ன சின்ன கற்களை பானைக்குள் போட்டு தண்ணியை மேல வர வச்சு குடிச்சதுன்னு நாம படிச்சிருப்போம்.

 

இதை வெறும் நீதிக்கதை, நம்ம குழந்தைகளுக்கு "முயற்சி திருவினையாக்கும்" என்று புரிய வைப்பதற்காக எழுதப்பட்ட கற்பனை கதை என்று தான் நாம் இத்தனை வருடமாக  நினைத்திருந்தோம். ஆனால் அது கற்பனை இல்லை. நூற்றுக்கு நூறு உண்மை என்று அறிவியல் ரீதியாக  நிரூபணமாகியுள்ளது.

 

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் காகங்களை வைத்து ஒரு ஆச்சரியமான ஆராய்ச்சி செய்தார்கள். ஒரு நீளமான கண்ணாடி குழாயில் பாதியளவு தண்ணி ஊற்றி, அதில்  காகத்துக்கு பிடித்த  உணவை மிதக்க விட்டார்கள். பக்கத்திலேயே சில கற்களையும், மிதக்கக்கூடிய எடை குறைவான பிளாஸ்டிக் துண்டுகளையும் வைத்தார்கள்.

 

அங்க நடந்த விஷயம்தான் எல்லாரையும் வாய் பிளக்க வைத்தது. அந்த காகம், பிளாஸ்டிக் துண்டுகளை தூக்கிப் போட்டால் தண்ணீர்  மேல வராது என்று தெரிந்துகொண்டு, அதை தவிர்த்துட்டு, கனமான கற்களை மட்டும் ஒவ்வொன்றாக அந்த குழாய்க்குள் போட்டது. தண்ணீர் மேல வந்ததும் உணவை சாப்பிட்டு பறந்து போய்விட்டது.

 

அறிவியலில் சொல்லப்படுகின்ற 'Water Displacement' (நீர் இடப்பெயர்ச்சி) தத்துவத்தை ஒரு காகம் எந்த பள்ளிக்கூடத்துக்கும் போகாமலேயே  ரொம்ப அசால்ட்டாக செய்து காட்டயது. ஒரு பிரச்சனையை எப்படி அணுக வேண்டும், கருவிகளை எப்படி பயன்படுத்த வேண்டும்  காகத்துக்கு இயல்பாகவே தெரிந்துள்ளது.

 

இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடம் ஒன்று உள்ளது. வாழ்க்கையில நமக்கு ஒரு பிரச்சனை வரும்போது, பானையில் இருக்கின்ற தண்ணீர் மாதிரி தீர்வு நமக்கு எட்டாத தூரத்துல் இருக்கலாம். ஆனால், பதற்றப்படாமல், பொறுமையாக  ஒவ்வொரு கல்லாக எடுத்து போடுவது போல், நாம்  சிறுசிறு முயற்சிகளை தொடர்ந்து செய்தால் வெற்றி தானாக நம்மை தேடி வரும்.

 

எவ்வளவு பெரிய அறிவியல் தத்துவத்தையும், தன்னம்பிக்கை பாடத்தையும் ஒரு சாதாரண காகத்திடம் இருந்து நம் முன்னோர்கள் கவனித்து நமக்கு கதையாக சொல்லிவிட்டு சென்றுள்ளார்கள்.

 

முகஸ்துதி செய்வதைக் காக்காய் பிடித்தல் என்கிறோம். காக்காய் பிடிப்பதற்கும் முகஸ்துதிக்கும் எந்த சம்பந்தம் இல்லை. `கால்கை பிடித்தல்’ என்பதே `காக்கை பிடித்தல்’ என மருவியிருக்க வேண்டும் என்கிறார் கி.வா.ஜகந்நாதன்.

 

சுவாரஸ்ய தகவல்!

 

காகங்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய குணங்கள் என்னென்ன என்பதை ஒரு பழைய வெண்பா பட்டியலிடுகிறது.

 

`காலை எழுந்திருத்தல் காணாமலே புணர்தல்

மாலை குளித்து மனை புகுதல்

சால உற்றாரோ டுண்ணல் உறவாடல்

இவ்வாறும் கற்றாயோ காக்கைக் குணம்.’

 

காகம் அதிகாலையில் எழும் பழக்கமுடையது. காகம் உயர்ந்த ஒழுக்க நெறி கொண்ட பறவை. கற்புக்கு உதாரணமாக காகத்தை சொல்லலாம். தனது ஜோடியுடன் மட்டுமே இணை சேரும். அது, தனது இணையுடன் சேர்வதை யாரும் காண இயலாது.

 

காகங்கள், தங்களை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளும் குணம் கொண்டவை. தினமும் நீர்நிலைகளில் குளித்துத் தன் சிறகுகளைச் சுத்தமாக வைத்திருக்கும். பெரும்பாலும் மாலையில் நீர் நிலைகளில் குளித்துவிட்டு தான் தன் கூட்டுக்கு செல்லும் வழக்கம் உடையது.

 

காகம் உணவை ஒருபோதும் தனியாக சாப்பிடவேண்டும் என்கிற சுயநலமற்ற பறவை. உணவு கிடைத்தால் கரைந்து தன் சகாக்களையும் அழைத்து பகிர்ந்து சாப்பிடும் சிறந்த குணம் காகத்திற்கு உண்டு.

 

காகத்திற்கு இது தன் முட்டை இல்லை என்று தெரியும். தெரிந்தும் குயிலின் முட்டையை அடை காக்கும். குயில் குஞ்சுக்கும் தன் குஞ்சு போலவே பறக்கும் வரை உணவளித்து பராமரிக்கும். 'உலகில் மிகச்சிறந்த மாற்றந்தாய்' காகம் தான் என்பதை உணரலாம்.

 

மனிதர்கள் ஒரு குற்றத்தை செய்தார்கள் என்றால் அதற்கான தண்டனைகளை கொடுப்பது போல அந்தக் காகங்களுக்கிடையில் நடக்கின்ற ஒவ்வொரு குற்றத்திற்கும் பற்பல தண்டனைகளை வைத்துள்ளதை பார்க்கலாம். அவைகள் அவற்றுக்குள்ளே ஒரு பெரிய அரசாங்கமே நடத்துகின்றதாம்.

 

உஷார்! காகத்திற்கு நம்மை ஞாபகம் இருக்கும். அது பழியும் வாங்கும். இந்த உலகத்தில் எந்த விலங்கிடம் வேண்டுமானாலும் வம்பு வைத்துக் கொள்ளலாம் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் ஒரே ஒரு உயிரிடம் மட்டும் வம்பு வைத்துக் கொள்ளவே கூடாது அது காகம்!

 

ஏனெனில் காகத்திற்கு அபாரமான நினைவாற்றல், கருவி பயன்படுத்தும் புத்திசாலித்தனம், எதிர் காலத்தை முன்னமே திட்டமிடும் ஆற்றல், பகை உணர்வை நீண்ட காலம் மனதில் வைத்துக்கொள்ளும் திறன் அனைத்தும் உண்டு.

 

காகம் ஒரு சாதாரணப் பறவையல்ல. அது மனிதனைப் போலவே யோசித்து செயல்படும் அறிவுத்திறன் கொண்ட உயிர். ஒரு மரப் பொந்தில் இருக்கும் புழுக்களை குச்சி போன்ற கருவிகளைப் பயன்படுத்தி எடுத்துச் சாப்பிடும் திறன் காக்கைக்கு உண்டு.

 

விஞ்ஞானிகள் கூறுவதாவது: ஒரு காகத்தின் அறிவுத் திறன் ஐந்து முதல் ஏழு வயது குழந்தையின் அறிவுத்திறனை ஒத்ததாக இருக்கும்.

 

மனித மூளையில் இருப்பதைப் போலவே காகத்தின் மூளையிலும் நியூரான்கள் மிக அடர்த்தியாக அமைந்திருக்கின்றன.

 

காகம் தன் உணவை எதிர்காலத்திற்காக சேமித்து, மறைத்து வைத்து, அதை எந்த இடத்தில் வைத்தது என்றும் துல்லியமாக நினைவில் வைத்துக்கொள்ளும்.

 

காகம் தனித்து வாழும் பறவை அல்ல. அது சமூகமாகக் கூட்டமாக வாழும் பறவை. ஒரு காக்கைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அந்த தகவலை அது மற்ற காகங்களுக்கும் உடனே பகிர்ந்துகொள்கிறது. இதனால்தான் ஒரே இடத்தில் உள்ள பல காகங்கள் ஒருவரை ஒரே நேரத்தில் தாக்க முயற்சிப்பதை நாம் பல முறை பார்த்திருப்போம்.

 

தன் இனத்தைச் சேர்ந்த ஒரு காகத்திற்கு ஆபத்து என்றாலோ அல்லது ஏதேனும் ஒரு காகம் இறந்துவிட்டாலோ, சுற்றியுள்ள அனைத்துக் காகங்களும் ஒன்று கூடி குரல் எழுப்பி தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும். ஒரு காகம் இறந்துவிட்டால் மற்ற காகங்கள் ஒன்றுகூடி மண்ணில் குழித்தோண்டி இறந்த காகத்தை புதைத்துவிடும்.

 

கனவில் கண்டால்           

 

காகத்தை கனவில் காண்பது கஞ்சத்தனம் செய்பவனை உணர்த்துவதாக கொள்ளலாம்.

 

காகத்தை ஒருவன் தனது வீட்டு வாசலில் கண்டால் தனது மனைவிக்கு அவன் மாறு செய்வான்.

 

காகத்தின் இறைச்சியை உண்பதாகக் கண்டால், அவன் திருடப்பட்ட பொருளை உண்பவன் ஆவான்.

 

தனது தலைவாசலில் காகத்தைக் கண்டால் அதை காண்பவன் தனது சகோதரனையே கொலை செய்வான். பின்னர் கைசேதம் கொள்வான். அந்த இழப்புக்கு ஈடு ஏதும் இல்லை.

 

காகத்தை கண்டபின் சில தினங்களில் அவனைப் பயணம் புறப்பட்டால், அந்தப் பயணம் சுகம் தராது. வீட்டுக்குள்ளேயே காகம் சுற்றிச் சுற்றி வருவதாக காண்பது நயவஞ்சகத்தின் அறிகுறி.

 

பொதுவாக, காகத்தை கனவில் காண்பது கெட்ட நண்பர்கள், தீயவழி, தீயபொருள்கள், நயவஞ்சகம் இவைகளையே குறிக்கும். நூல்:- தலீலுல் ஹைரானி ஃபீ தஃப்சீரில் அல்லாமல் - முஹம்மத் அலீ குத்பு

 

எனவே, நாம் பிற உயிரினங்களில் இருந்து படிப்பினைப் பெறுவோமாக! ஆமீன்!  

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

ஆகாயத் தோட்டி

  ஆகாயத் தோட்டி   فَبَعَثَ اللَّهُ غُرَابًا يَبْحَثُ فِي الْأَرْضِ لِيُرِيَهُ كَيْفَ يُوَارِي سَوْءَةَ أَخِيهِ قَالَ يَا وَيْلَتَا أَعَج...