நீங்கள் இன்றி நாங்கள் இல்லை!
وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا وَبَرًّا
بِوَالِدَتِي
(இறைத்தூதர் ஈசா - அலை அவர்கள் கூறினார்கள்:) நான் உயிரோடு இருக்கும்
வரை தொழுகையையும் ஸகாத்தையும் நிறைவேற்றுமாறு என்னை அவன் அறிவுறுத்தியுள்ளான். என்
தாய்க்கு நன்மை செய்ய வேண்டுமென்றும் (அவன் என்னை அறிவுறுத்தியுள்ளான்). திருக்குர்ஆன்:-
19:31,32
ஜூலை கடைசி ஞாயிற்றுக்கிழமை தேசிய பெற்றோர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
நம்மைப் பெற்றெடுத்து, அன்புடன் வளர்த்து, நல்வழி காட்டிய பெற்றோருக்கு பணிவிடை செய்வது ஒவ்வொரு பிள்ளையின்
தலையாய கடமையாகும். இதுவே, நம் வாழ்வை உயர்த்தும்.
பெற்றோரிடம் எப்போதும் அன்பாகவும், பணிவாகவும் பேச வேண்டும்.
அவர்களின் மனம் நோகும்படி பேசக்கூடாது. அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அருகில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும். உரிய நேரத்தில் மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொடுக்க வேண்டும்.
பெற்றோருடன் தினமும் சிறிது நேரம் பேசி, அவர்களின் கவலைகளைக்
கேட்டு ஆறுதலாக இருக்க வேண்டும். வயதான காலத்தில் அவர்களுடன் இருப்பது அவர்களுக்குப்
பெரும் மகிழ்ச்சியைத் தரும். அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கி, அவர்கள் சொல்வதைக் கேட்டு, அவர்கள் காட்டும்
வழியில் நடந்தால், வாழ்வில் என்றும் சிறக்கலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وبَرُّوا آباءَكم تَبَرَّكم أبْناؤُكُمْ ) நீங்கள் உங்கள் பெற்றோருக்கு உபகாரம் புரியுங்கள். உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு
உபகாரம் புரிவார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- ஹாகிம், தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் பனீ இஸ்ராயீல் வசனம்-24
பெற்றோரைப் பேணுதல் என்பது: அவர்கள் நம்மிடம் கேட்காமலேயே, அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் அனைத்து காரியங்களையும் நாம் செய்வதாகும்.
இறைவழிபாட்டுக்குப் பிறகு
(நபியே!) தன்னைத் தவிர வேறு யாரையும் நீங்கள் வழிபடக்கூடாதென்றும் பெற்றோருக்கு
நன்மை செய்ய வேண்டுமென்றும் உம்முடைய இறைவன் கட்டளையிடுகின்றான். திருக்குர்ஆன்:-
17:23
எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே (நீங்கள்) திரும்பிவர
வேண்டியுள்ளது. திருக்குர்ஆன்:- 31:14
இறைத்தூதர் ஈசா (அலை) அவர்கள் முதலில் இறைவனுக்கு கீழ்ப்படிவதைப் பற்றிக் குறிப்பிட்ட
பின்னர் அடுத்ததாக, பெற்ற தாய்க்குச் சேவை செய்வதைப்
பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.
பேரறிஞர் லுக்மான் (அலை) அவர்கள் ( قَرَنَ بِوَصِيَّتِهِ إِيَّاهُ بِعِبَادَةِ اللَّهِ وَحْدَهُ
الْبَرَّ بِالْوَالِدَيْنِ ) அல்லாஹ்வை
மட்டுமே வழிபட வேண்டும் என்ற அறிவுரையோடு சேர்த்து, பெற்றோருக்கு நன்மை
செய்யுமாறும் தம் புதல்வரை அறிவுறுத்தினார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
பெரும்பாலும் குர்ஆனில் அல்லாஹ் தன்னை வழிபட வேண்டும் என்று குறிப்பிடும்போதெல்லாம்
கூடவே பெற்றோருக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்பதையும் சேர்த்தே கூறுகின்றான்.
கஷ்ட நஷ்டங்களை போக்கிவிடும்
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில்)
மூன்று பேர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது (திடீரென) மழை பிடித்துக்கொண்டது. ஆகவே, அவர்கள் மலைக்குகையொன்றில் ஓதுங்கினார்கள். (அவர்கள் உள்ளே நுழைந்த)
உடனே மலையிலிருந்து உருண்டுவந்த ஒரு பாறை குகைவாசலை அடைத்துக்கொண்டது. (வெளியேற முடியாமல்
திணறிய) அவர்கள், "நீங்கள் செய்த நற்செயலை
கூறி இறைவனிடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்பமுடியாது" என்று தமக்குள் கூறிக்கொண்டனர்.
எனவே, அவர்களில் ஒருவர் இவ்விதம் (இறைவனிடம்) வேண்டினார்:
இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருவரும் மனைவியும் இருந்தனர். எனக்குச்
சிறு குழந்தைகளும் உண்டு. நான் இவர்களைப் பராமரிப்பதற்காக ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தேன்.
மாலையில் அவர்களிடம் நான் திரும்பி வந்த பின் ஆட்டின் பாலைக் கறந்து கொண்டுவந்து, என் குழந்தைகளுக்கு ஊட்டுவதற்கு முன்பாக என் தாய் தந்தையருக்கு
முதலில் ஊட்டுவேன். ஒரு நாள் இலை தழைகளைத் தேடியபடி வெகுதூரம் சென்றுவிட்டேன். அதனால்
அந்திப் பொழுதிலேயே (வீட்டுக்கு) வர முடிந்தது.
அப்போது (என் தாய் தந்தை) இருவரும் உறங்கிவிட்டிருக்கக் கண்டேன். உடனே எப்போதும்
போல பால் கறந்து, பால் செம்புடன் வந்தேன். பெற்றோரைத்
தூக்கத்திலிருந்து எழுப்பிவிட மனமில்லாமல் அவர்கள் இருவருடைய தலைமாட்டில் நின்றுகொண்டேன்.
அவர்கள் இருவருக்குமுன் குழந்தைகளுக்கு ஊட்டுவதையும் நான் விரும்பவில்லை. என் குழந்தைகளோ
எனது காலருகில் (பால் கேட்டுக்) கூச்சலிட்டுக்கொண்டிந்தனர். இதே நிலையில் நானும் அவர்களும்
இருந்து கொண்டிருக்க, வைகறை வந்துவிட்டது.
(இறைவா!) நான் இச்செயலை உனது உவப்பை நாடியே செய்தேன் என்று நீ கருதியிருந்தால், எங்களுக்கு இந்தப் பாறையைச் சற்றே நகர்த்துவாயாக! என்று பிரார்த்தித்தார்.
அவ்வாறே அவர்களுக்கு அல்லாஹ் பாறையைச் சற்றே நகர்த்திக்கொடுத்தான்.
இவ்வாறு அவர்களில் ஒவ்வொருவரும் தாம் வாழ்நாளில் செய்த ஒரு நற்செயலை முன்னிறுத்தி
பிரார்த்தனை செய்தனர். (இறுதியாக), அவர்களைவிட்டு அல்லாஹ்
(அந்த பாறையை முழுமையாக) நீக்கிவிட்டான். அவர்களும் அதிலிருந்து வெளியேறினார்கள். அறிவிப்பாளர்:-
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3465, முஸ்லிம்-5293
நமது பெற்றோர் நம்முடன் வாழும்பொழுது அவர்களுக்காக நாம் செய்த உபகாரங்கள், நம்முடைய இக்கட்டான சூழ்நிலைகளை, கஷ்ட நஷ்டங்களை போக்கிவிடும் என்கிறது இந்த நபிமொழி.
பாவி மன்னிக்கப்பட்டாள்
யஹ்யா பின் அபீ கஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அபூ மூசா (ரலி), அபூ அமீர் (ரலி) ஆகிய இருவரும் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம்
வந்து, உறுதிபிரமாணம் வழங்கி, இஸ்லாமாக வந்தனர். அப்போது நபியவர்கள், ( ما فَعَلَتِ اِمْرَأةٌ مِنكم تُدْعى كَذا وكَذا؟ ) “உங்களில் ஒரு பெண் (அதாவது) இவ்வாறு இவ்வாறு அழைக்கப்பட்டாளே அவள் என்ன செய்கிறாள்?” என்று வினவினார்கள். அவர்கள், “நாங்கள் அவளை அவளுடைய குடும்பத்துடன் விட்டுவிட்டோம்”
என்று கூறினார்கள். நபியவர்கள், ( فَإنَّهُ
قَدْ غُفِرَ لَها ) "நிச்சயமாக அவள் மன்னிக்கப்பட்டுவிட்டாள்”
என்று கூறினார்கள். அவ்விருவரும், “அல்லாஹ்வின் தூதரே!
எதற்காக (மன்னிக்கப்பட்டாள்)?” என்று வினவினார்கள்.
நபியவர்கள், ( بِبَرِّها والِدَتَها ) “அவள் தன் தாய்க்கு செய்த உபகாரம் தான்" என்று பதிலளித்தார்கள்.
(அதாவது) “அவளுக்கு ஒரு வயதான, தாய் இருந்தாள்.
(ஒருநாள்) ஒரு எச்சரிக்கையாளர் அவர்களிடம் வந்து, "எதிரிகள் இன்றிரவு உங்களைத் தாக்க எண்ணியுள்ளனர்" என்று கூறினார். எனவே, அந்த மக்கள் தங்கள் தலைவருடன் ஒருசேரப் புறப்பட்டனர். ஆனால், அந்த வயதான தாயைத் தூக்கிச் செல்ல அவளுடன் யாரும் இல்லை. தூக்கிச்
செல்ல நாற்காலி போன்ற எதுவும் இல்லை.
எனவே,
( فَجَعَلَتْ تَحْمِلُها عَلى
ظَهْرِها، فَإذا أعْيَتْ وضَعَتْها، ثُمَّ ألْصَقَتْ بَطْنَها بِبَطْنِ أُمِّها،
وجَعَلَتْ رِجْلَيْها تَحْتَ رِجْلَيْ أُمِّها مِنَ الرَّمْضاءِ حَتّى نَجَتْ ) அவள் தன் தாயை தமது
முதுகில் சுமந்து சென்றாள். அவள் சோர்வடைந்தபோது, கொஞ்ச நேரம் கீழே
அமர்த்தினாள். பிறகு அவள் தமது தாயின் வயிற்றுடன் தமது வயிறு ஒட்டியவாறும், (தாய்) சுடுமணலில் (கால் வைக்க நேரும்போது) தன் தாயின்
கால்களுக்குக் கீழே தன் கால்களை வைத்துக்கொண்டவளாக (இவ்வாறு நெஞ்சில் சுமந்து சென்று)
ஒரு பாதுகாப்பான இடத்தில் கொண்டு சேர்த்தாள். நூல்:- முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக், பைஹகீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் பனீ இஸ்ராயீல் வசனம்-23
பெற்றோரை பேணாதவரின் இறைவணக்கத்திற்கு இறைவனிடம் மதிப்பு இருப்பதில்லை. மாறாக, பெற்றோரை பேணுபவன் பாவியாக இருந்தாலும்கூட அல்லாஹ் அவனை மன்னிக்கக்கூடும்.
பரிதவிக்கவிட்டுச் செல்லலாகாது
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் (ஜாஹிமா பின் அல்அப்பாஸ்
பின் முர்தாஸ் - ரலி அவர்கள்) கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! நான் (இந்த) அறப்போரில் கலந்துகொள்ளட்டுமா?" என்று கேட்டார். நபியவர்கள், ( أَلَكَ أَبَوَانِ ) "உமக்கு தாய் தந்தை
இருக்கின்றனரா?" என்று கேட்டார்கள் அவர், "ஆம்! (இருக்கின்றார்கள்)" என்று கூறினார்.
நபியவர்கள், ( فَفِيهِمَا فَجَاهِدْ ) "(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடுவீராக!" என்று
கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-2167
அறப்போருக்குச் சென்று, அதில் வீரமரணம் அடைந்து
சொர்க்கத்தை அடைவதை விட, பெற்றோருக்காக பாடுபட்டு
அவர்களின் தயவால் சொர்க்கம் செல்வதே மேல் என்பதுதான் இஸ்லாமிய சிந்தனை. ஒரு மனிதர்
மார்க்கச் சேவைக்காக வெளியே புறப்பட்டாலும், அவர் பெற்றோரை கவனிப்பாரற்ற
அநாதைகளாக விட்டு விட்டு செல்ல அனுமதி இல்லை.
ஒருமுறை பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் பின்வருமாறு
கூறினார்கள். ( لَهُ
وَالِدَةٌ هُوَ بِهَا بَرٌّ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ فَإِنِ
اسْتَطَعْتَ أَنْ يَسْتَغْفِرَ لَكَ فَافْعَلْ ) (உவைஸ் பின் ஆமிர் என்ற) "அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார். அவருக்கு
உவைஸ் பணிவிடை செய்பவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்தால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான். (உமரே!) அவர் உமக்காகப் பாவமன்னிப்புக்
கோரிப் பிரார்த்திக்கும் வாய்ப்புக் கிட்டினால் அவரிடம் பிரார்த்திக்கச் சொல்லுங்கள்"
என்று கூறினார்கள். நூல் முஸ்லிம் 4971
உவைஸ் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள் யமன் நாட்டைச் சேர்ந்த அல்கரனீ குலத்தை சேர்ந்தவராவார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த அவர், நபியவர்களை பார்க்கவில்லை. தம் தாயாருக்கு பணிவிடை செய்வதில்
ஈடுபட்டிருந்ததால் அவரால் நபியவர்களைச் சந்திக்க முடியாமல் போயிற்று. இருப்பினும், சிறந்த முஸ்லிமாக விளங்கிய அவரின் நிலை குறித்து நபியவர்கள்
தன் தோழர்களுக்கு அறிவித்தார்கள். அவரிடம் சொல்லிப் பிரார்த்திக்குமாறு கேட்கும்படி
நபித்தோழர்களுக்கு நபியவர்கள் அறிவுறுத்தினார்கள்.
அந்த அளவுக்கு அவர் பிரார்த்தனை ஏற்கப்படுபவராக விளங்கினார். இறுதியாக, கூஃபாவில் (இராக்) வசித்தார். அவரை உமர் (ரலி) அவர்கள் உள்ளிட்டோர்
சந்தித்துள்ளனர். ஹிஜ்ரீ 37 ஆம் ஆண்டு (கி.பி. 657) நடந்த 'ஸிஃப்பீன்' போரில் அலீ (ரலி)
அவர்களுடன் கலந்துகொண்டு உவைஸ் (ரஹ்) அவர்கள் வீர மரணம் அடைந்தார்கள். நூல்:- உசுதுல்
ஙாபா, அல்மின்ஹாஜ்
உவைஸ் (ரஹ்) அவர்கள் வாழ்ந்த யமன் நாட்டிலிருந்து அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த
மதீனா நகரம் நீண்ட தூரத்தில் அமைந்துள்ளது. ஒட்டகம், கழுதை போன்ற அன்றைய
வாகனத்தில் பயணிப்பதாக இருந்தால் சில மாதங்கள் ஆகும். எனவே, உவைஸ் (ரஹ்) அவர்கள் தமது தாயாரைப் பார்த்துக்கொள்ள வேறு ஆள்
இல்லாத காரணத்தால் நீண்ட தூரத்தில் அமைந்துள்ள மதீனா நகரம் சென்று நபியவர்களைச் சந்திக்க
முடியாமல் போயிற்று. உவைஸ் (ரஹ்) அவர்களுக்கு நபியவர்கள் திருக்கரம் பற்றி முஸ்லிம்
ஆகவேண்டும் என்று பேராவல் இருந்தாலும், தாயாருக்கு பணிவிடை
செய்யமுடியாது போய்விடுமே என்ற ஒரே காரணத்திற்காக "நபித்தோழர்" என்ற பெரும்
பாக்கியத்தை பெற முடியாது போயிற்று.
இன்று பெற்றோர் சொல்பேச்சுக் கேளாமல் அவர்களைப் பரிதவிக்கவிட்டு, படிப்புக்காகவும், வேலைக்காகவும் வெளியூர்
மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் பிள்ளைகள் ஏராளம்.
கட்டுப்படுதல்
எதைப் பற்றிய அறிவு உனக்கு இல்லையோ அதை எனக்கு இணையாக ஆக்குமாறு அவ்விருவரும் உன்னை
கட்டாயப்படுத்தினால் அவர்களுக்கு நீ இணங்க வேண்டாம். இம்மையில் அவர்களுடன் நல்ல முறையில்
நடந்துகொள்! திருக்குர்ஆன்:- 31:15
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن أصْبَحَ مُطِيعًا لِلَّهِ في والِدَيْهِ أصْبَحَ لَهُ بابانِ
مَفْتُوحانِ مِنَ الجَنَّةِ، وإنْ كانَ واحِدًا فَواحِدًا، ومَن أمْسى عاصِيًا
لِلَّهِ في والِدَيْهِ أصْبَحَ لَهُ بابانِ مَفْتُوحانِ مِنَ النّارِ، وإنْ كانَ
واحِدًا فَواحِدًا ) “யார் அல்லாஹ்விற்காக தனது பெற்றோருக்குக் கட்டுப்படுகிறாரோ, அவருக்கு சொர்க்கத்தின் இரண்டு வாசல்கள் திறக்கப்படும்; பெற்றோரில் ஒருவர் இருந்து அந்த ஒருவருக்கு கட்டுப்பட்டால் சொர்க்கத்தின்
ஒரு வாசல் திறக்கப்படும். யார் அல்லாஹ்விற்காக தனது பெற்றோருக்குக் கட்டுப்படாமல் இருக்கிறாரோ, அவருக்கு நரகத்தின் இரண்டு வாசல்கள் திறக்கப்படும்; பெற்றோரில் ஒருவர் இருந்து அந்த ஒருவருக்கு கட்டுப்படாவிட்டால்
நரகத்தின் ஒரு வாசல் திறக்கப்படும்"என்று கூறினார்கள்.
அப்போது ஒருவர், ( وإنْ ظَلَماهُ؟ ) "அவர்கள் அவருக்கு அநீதமிழைத்திருந்தாலுமா?" என்று கேட்டார். நபியவர்கள், ( وإنْ ظَلَماهُ، وإنْ ظَلَماهُ، وإنْ ظَلَماهُ ) "(ஆம்!) அவர்கள் அவருக்கு அநீதமிழைத்திருந்தாலும் சரியே!" என்று மூன்று முறை
கூறினார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ, இப்னு அபீஷைபா, தஃப்சீர் துர்ருல்
மன்ஸூர் பனீ இஸ்ராயீல் வசனம்-23
சஅத் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் என் தாயாருக்கு நன்மை செய்யும்
மனிதனாக இருந்துவந்தேன். நான் இஸ்லாத்தை ஏற்றபோது என் தாயார் சஅதே! உன்னிடம் நான் புதிதாகக்
காணும் இந்த வழிமுறை என்ன? கண்டிப்பாக நீ இந்த
மார்க்கத்தைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால், நான் சாகும்வரை எதையும்
உண்ணவோ பருகவோ மாட்டேன். அப்போது என்னால் நீ குறைகூறப்படுவாய். 'தாயைக் கொன்றவனே!' என தூற்றப்படுவாய்"
என மிரட்டினார்.
இதைக் கேட்ட நான், ( لَا تَفْعَلِي يَا
أمَه، فَإِنِّي لَا أَدْعُ دِينِي هَذَا لِشَيْءٍ ) "என் (அருமைத்) தாயே! நீங்கள் அவ்வாறு செய்யாதீர்கள். நிச்சயமாக
நான் எதற்காகவும் எனது இந்த மார்க்கத்தை கைவிடமாட்டேன்" என்று கூறினேன்.
என் தாயார் ஒருநாள் முழுக்க சாப்பிடாமல் அப்படியே இருந்தார். மறுநாள் காலை களைத்துப்போயிருந்தார்.
இரண்டாம் நாளும் எதையும் சாப்பிடவில்லை. மூன்றாம் நாள் காலை (முந்தைய நாளைவிட) களைத்துப்போயிருந்தார்.
பின்னர் மூன்றாம் நாளும் எதையும் உண்ணாமல் இருக்க, நான்காம் நாள் காலை
கடுமையாக சோர்ந்துபோனார்.
இதைக்கண்ட நான், ( يا أُمَّهْ،
تَعْلَمِينَ واللَّهِ، لَوْ كانَتْ لَكِ مِائَةُ نَفْسٍ، فَخَرَجَتْ نَفْسًا
نَفْسًا ما تَرَكْتُ دِينِي هَذا لِشَيْءٍ، فَإنْ شِئْتِ فَكُلِي، وإنْ شِئْتِ
فَلا تَأْكُلِي ) "என் அருமைத்தாயே! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு
நூறு உயிர்கள் இருந்து, அவை ஒவ்வொன்றாக பிரிந்தாலும்
எதற்காகவும் எனது இந்த மார்க்கத்தை நான் கைவிட மாட்டேன். இது உங்களுக்கு தெரியவே செய்யும்.
எனவே, உங்களுக்கு விருப்பம் இருந்தால் உண்ணுங்கள். இல்லையானால்
உண்ணாமல் இருங்கள்" என்று திட்டவட்டமாக கூறிவிட்டேன். அதன் பின்னர் என் தாயார்
சாப்பிடலானார்கள். என் தொடர்பாகவே மேற்காணும் வசனம் (31:15) அருளப்பெற்றது. நூல்:-
கிதாபுல் இஷ்ரா இமாம் தப்ரானீ, உசுதுல் ஙாபா இமாம்
இப்னு அஸீர், தஃப்சீர் இப்னு கஸீர்
பெற்றோர்கள் இணைவைப்பவராக இருந்தாலும்கூட உலக விஷயங்களில் அவர்களுக்கு உடன்பட்டு, உறவாடி மகிழ வேண்டும். பெற்றோர், மார்க்கத்திற்கு முரணாக (இணைவைத்தல், இறைக்கடமைகளை தவறவிடுதல், வட்டி, வரதட்சணை போன்ற தவறான காரியங்களுக்கு) கட்டளையிட்டால் அதற்கு கட்டுப்படக் கூடாது என்பது
அல்லாஹ்வின் கட்டளை. அது அல்லாத மற்றவற்றில் அவர்களின் சொல்லுக்கு கட்டுப்படுதல் நாற்காரியமாகும்.
அழகிய பகரம்
தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதருக்கு நான்கு மகன்கள் இருந்தனர், அவர் நோய்வாய்ப்பட்டார். அவர்களில் ஒருவர் கூறினார்: "நீங்கள்
தந்தைக்கு மருத்துவம் பாருங்கள். ஆனால், அவருடைய சொத்திலிருந்து
(கூடுதலாக எதுவும்) உங்களுக்கு வழங்கப்பட மாட்டாது. அல்லது நான் தந்தைக்கு மருத்துவம்
பார்க்கிறேன். அதனால், அவருடைய சொத்திலிருந்து எனக்கு
கூடுதலாக எதுவும் வழங்கப்பட மாட்டாது" என்று கூறினார். மற்றவர்கள் அதற்கு சம்மதித்தனர்.
எனவே, அவரே தமது தந்தையின் இறப்பு வரை தந்தைக்கு மருத்துவம்
பார்த்து பராமரித்து வந்தார். அதற்காக அவர் வாரிசு சொத்திலிருந்து கூடுதலாக எதையும்
பெற்றுக் கொள்ளவில்லை. அவர் தமது தந்தையின் இறப்புக்கு பிறகு கனவில் தந்தையைக் கண்டார்.
அப்போது தந்தை மகனிடம், ( اِئْتِ
مَكانَ كَذا وكَذا، فَخُذْ مِنهُ مِائَةَ دِينارٍ ) "நீ இந்த இடத்திற்கு செல்! அங்கு நூறு தங்கக் காசுகள் இருக்கிறது.
அதை எடுத்துக்கொள்!" என்று கூறினார். அதற்கு அவர், ( أفِيهِ بَرَكَةٌ؟ ) "(தந்தையே!) அந்த பணத்தில் (பரக்கத் எனும்) அருள்வளம்
உண்டா?"
என்று வினவினார். தந்தை, "இல்லை" என்றார். காலையில் கண்விழித்ததும் தன்
மனைவியிடம் இதைக் கூறினார். மனைவி, "அதை எடுத்து வாருங்கள்.
அதை வைத்து வியாபாரம் செய்யலாம். மற்ற வாழ்வாதார காரியங்களுக்கு பயன்படுத்தலாம்"
என்று கூறினாள். ஆனால், அவர் (அதை எடுத்து வர) மறுத்துவிட்டார்.
மறுநாள் அதுபோன்ற அவர் கனவில் தந்தை வந்து, "நீ இந்த இடத்திற்கு செல்! அங்கு பத்து தங்கக்காசுகள் இருக்கிறது. அதை எடுத்துக்கொள்!"
என்று கூறினார். அதற்கு "(தந்தையே!) அந்த பணத்தில் (பரக்கத் எனும்) அருள்வளம்
உண்டா?"
என்று வினவினார். தந்தை, "இல்லை" என்றார். காலையில் கண்விழித்ததும் இதை
தன் மனைவியிடம் கூறினார். மனைவி முன்பு போன்றே கூறினாள். அவர் மறுத்துவிட்டார்.
மூன்றாம் நாள் இரவு அதுபோன்ற அவர் கனவில் தந்தை வந்து, "நீ இந்த இடத்திற்கு செல்! அங்கு ஒரு தங்கக்காசு
இருக்கிறது. அதை எடுத்துக்கொள்!" என்று கூறினார். அதற்கு "(தந்தையே!) அந்த
பணத்தில் (பரக்கத் எனும்) அருள்வளம் உண்டா?" என்று வினவினார். தந்தை, "(ஆம்!) இருக்கிறது"
என்றார்.
விடிந்ததும் அவர் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு சென்று அங்கிருந்த ஒரு தங்கக்காசை
எடுத்துக்கொண்டு வந்தார். வரும் வழியில் ஒருவர் இரண்டு மீன்களை எடுத்துக்கொண்டு சென்றார்.
உடனே அவர்,
( بِكَمْ هَذا؟ ) "இது எவ்வளவு?" என்று கேட்டு, ஒரு தங்கக்காசை கொடுத்து, மீன்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்று, (சமைப்பதற்காக) அந்த மீன்களின் வயிற்றைப் பிளந்தார்.
அப்போது அதன் வயிற்றின் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு முத்து இருந்தன. இது போன்ற அழகான ஓர்
முத்தை மக்கள் எவரும் கண்டதில்லை.
இதை அறிந்த மன்னர், முப்பது கோவேறு கழுதைகள் எடைக்கு
தங்கத்தைக் கொடுத்துவிட்டு அந்த அழகிய முத்தை வாங்கி வருமாறு தமது பணியாட்களை அனுப்பினார்.
அவரும் வந்த தங்கக் குவியலை வாங்கிக்கொண்டு அந்த அழகிய முத்தில் ஒன்றை விற்றுவிட்டார்.
மன்னர் அந்த அழகிய முத்தைக் கண்டு மகிழ்ச்சியுற்ற போது, அவரிடம் மற்றொரு அழகிய முத்து இருப்பதாகவும் கேள்விப்பட்டார்.
உடனே மன்னர் இதைவிட இரட்டிப்பான அளவு தங்கத்தைக்
கொடுத்து அவரிடம் இருந்த மற்றொரு அழகிய முத்தையும் பெற்றுக்கொண்டார். நூல்:- முஸன்னஃப்
அப்துர் ரஸ்ஸாக், பைஹகீ
பெற்றோர்களை கண்ணியத்துடன் பேணுபவர், தமது வாழ்க்கையில்
வழங்கப்படுகின்ற வாழ்வாதாரத்தில் எண்ணிலடங்கா (பரக்கத் எனும்) அருள்வளங்களை காண்பார்.
பெற்றோரின் பிரார்த்தனையே அதற்கு காரணமாகும்.
மரியாதை பேணுதல்
பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும். அவர்களில் ஒருவரோ அல்லது இருவரோ முதுமையடைந்த
நிலையில் உம்மிடம் இருந்தால், அவர்களை நோக்கி, ‘ச்சீ’ என்றுகூடச் சொல்லிவிடாதீர்; அவர்களை விரட்டாதீர்; அவர்களிடம் கண்ணியமான
சொல்லையே சொல்வீராக. பணிவு எனும் சிறகைக் கனிவுடன் அவர்களுக்காகத் தாழ்த்துவீராக! திருக்குர்ஆன்:-
17:23,24
இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( فَيَنْبَغِي بِحُكْمِ هَذِهِ الْايَةِ أَن يَجْعَلَ الْإِنْسَانَ
نَفْسَهُ مَعَ أَبَوَيْهِ فِي خَيْرِ ذِلَّةً فِي أَقْوَالِهِ، وَسَكَنَاتِهِ،
وَنَظَرِهِ ) எனவே, இந்த வசனத்தின்படி, ஒருவன் தன் பெற்றோரிடம் தன் வார்த்தைகளிலும், செயல்களிலும், பார்வையிலும் மிகுந்த
பணிவுடன் நடந்துகொள்ள வேண்டும்.
ஒருமுறை அபூஹுரைரா (ரலி) அவர்கள் நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது (ஒரே முகச் சாயலுள்ள)
இருவரைக் கண்டார்கள். அவர்களில் ஒருவரிடம், "இவர் யார்?" என்று வினவினார்கள்.
"இவர் என் தந்தை" என்றார். அப்போது அன்னார், ( لا تَدْعُهُ بِاسْمِهِ ولا تَمْشِ أمامَهُ، ولا تَجْلِسْ قَبْلَهُ
حَتّى يَجْلِسَ، ولا تَسْتَسِبَّ ) "(உமது தந்தையான) அவரைப் பெயரிட்டு அழைக்காதீர்கள்; மேலும், (அவரை முந்திக்கொண்டு)
அவருக்கு முன்னால் நடக்காதீர்கள்; அவர் உட்காரும் வரை
அவருக்கு முன்னால் உட்காராதீர்கள்; அவரைச் சபிக்காதீர்கள்"
என்று கூறினார்கள். நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் பனீ இஸ்ராயீல் வசனம்-23
யஸீத் பின் அபீ ஹபீப் (ரஹ்) கூறினார்கள். ( إيجَابُ الْحُجَّةِ عَلَى الْوَالِدَيْنِ عُقُوقٌ ) பெற்றோருடன் வாதிடுவது (அதாவது அவர்களை எதிர்த்துப் பேசுவது) கீழ்ப்படியாமை
எனக் கருதப்படுகிறது. நூல்:- பிர்ருல் வாலிதைன் (இமாம் இப்னுல் ஜவ்ஸீ)
உமர் பின் தர் (ரஹ்) அவர்களிடம், ( كَيْفَ كَانَ بَرَّ ابْنَكَ بِكَ ) "உங்கள் மகன் உங்களுக்கு எவ்வாறு கடமையுணர்வுடன் இருந்தார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ( مَا مَشَيْتُ نَهَارًا قَطُّ إِلَّا مَشَى خَلْفِي، وَلَا لَيْلًا
إلَّا مَشَى أَمَامِي، وَلَا رَقِيَ سَطْحًا وَأَنَا تَحْتَهُ ) "பகலில் நான் நடக்கும்போது அவன் எனக்குப் பின்னால்
நடப்பான்; இரவில் நான் நடக்கும்போது அவன் எனக்கு முன்னால்
நடப்பான்; நான் அவனுக்குக் கீழே இருக்கும்போது அவன் ஒருபோதும்
(வீட்டின்) மேற்பகுதிக்கு ஏறியதில்லை" என்று பதிலளித்தார்கள். நூல்:- உயூனுல்
அஹ்பார் – இமாம் இப்னு குதைபா ( عيون الأخبار )
“பெயர் சொல்லத்தான் பிள்ளை” என்று வியாக்கியானம் பேசி, தனிமையிலோ பொதுவெளியிலோ பெற்றோரை பெயர் சொல்லி அழைப்பதும், அவர்களிடம் வேலை சொல்லிவிட்டு அதை அவர்கள் சரியாக செய்யாதபோது
அவர்களை திட்டுவதும், நாம் சொல்வது அவர்களுக்குப்
புரியாதபோது அவர்களை ஏளமாக பார்ப்பதும், சில விஷயங்கள் குறித்து
அவர்கள் நம்மிடம் கேட்கும்போது இதுவெல்லாம் உங்களுக்கு சொன்னால் புரியாது அமைதியாக
இருங்கள் என்று கூறி அவர்களை அடக்குவதும், அவர்கள் நின்றிருக்க
நாம் அமர்ந்துக்கொண்டிருப்பதும் மரியாதை அல்ல.
பணிவிடை செய்தல்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள், ( رَغِمَ أَنْفُ ثُمَّ رَغِمَ أَنْفُ ثُمَّ رَغِمَ أَنْفُ ) "மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்" என்று கூறினார்கள்.
"யார் (மூக்கு), அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு நபியவர்கள், ( مَنْ أَدْرَكَ
أَبَوَيْهِ عِنْدَ الْكِبَرِ أَحَدَهُمَا أَوْ كِلَيْهِمَا فَلَمْ يَدْخُلِ
الْجَنَّةَ ) "தம் பெற்றோரில் ஒருவரையோ
அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும்
ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத்
தவறியவரின் (மூக்குத் தான்)" என்று பதிலளித்தார்கள். நூல்:- முஸ்லிம்-4987
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள்
சொற்பொழிவு மேடையின் மீதேறி "ஆமீன்" என்று கூறினார்கள். பிறகு நபியவர்கள்
மேடையில் இருந்து இறங்கியபோது, அவ்வாறு "ஆமீன்"
என்று சொன்னதற்குரிய காரணம் வினவப்பட்டது. நபியவர்கள், ( إنْ جِبْرِيلَ أَتَانِي، فَقَالَ: وَمَنْ أَدْرَكَ أَبَوَيْهِ أَوْ
أَحَدُهُمَا فَلَمْ يَبِرُّهُمَا فَمَاتَ فَدَخَلَ النَّارَ أَبْعَدَهُ اللَّهُ
قُلْ: اٰمِينَ، قُلْتُ: اٰمِينَ ) "(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து, யாருக்குப் பெற்றோர்களில் இருவரோ அல்லது அவர்களில் ஒருவரோ இருந்து, அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளவில்லையோ, அவர் இறந்தவுடன் நரகத்தில் நுழைவார். மேலும், அல்லாஹுதஆலா அவரைத் (தனது அருளை விட்டும்) தூரமாக்கிவிடுவானாக!
என்று கூறினார். (பிறகு என்னிடம்) ஆமீன் சொல்லுங்கள் என்றார். நான் ஆமீன் என்று கூறினேன்" என பதிலளித்தார்கள்.
நூல்:- முஸ்னது அஹ்மத், ஹாகிம், தப்ரானீ, ஷுஅபுல் ஈமான் இமாம்
பைஹகீ, பர்ருல் வாலிதைன் இமாம் இப்னுல் ஜவ்ஸீ
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ( إنِّي أشْتَهي الجِهادَ ولا أَقْدِرُ عَلَيهِ ) "நான் அறப்போர் புரிந்திட விரும்புகிறேன். எனினும், அதற்கான வலிமை எனக்கு இல்லை" என்றார். நபியவர்கள் அவரிடம், ( هَل بَقِيَ مِن وَالدَيْكَ أَحَدٌ ) "உன் பெற்றோர் இருவரில் ஒருவராவது உயிருடன் இருக்கின்றார்களா? என்று கேட்க, அதற்கவர், "ஆம்! என் தாய் இருக்கிறார்" என்றார். நபியவர்கள், ( قابِلِ اللهَ في بِرِّهَا فإذا فَعلتَ ذلك فأنتَ حَاجٌّ وَمُعتَمِرٌ
ومُجَاهِدٌ ) "உன் தாய்க்கு பணிவிடை
செய்து இறைநெருக்கத்தைப் பெற்றுக்கொள். அப்படி செய்தால் நீ ஹஜ், உம்ரா, அறப்போர் ஆகியவற்றை
செய்தவர் போன்றவர். ஆவாய்" என்றார்கள்.
நூல்:- தப்ரானீ, அபூயஅலா, அத்தர்ஙீபு வத்தர்ஹீபு
பேரறிஞர் சயீத் பின் முசய்யிப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( اَلْبَارُّ بِوَالِدَيْهِ لَا يَمُوتُ مِيتَةَ السُّوءِ ) தன்னுடைய பெற்றோருக்கு (மனமுடைந்து) பணிவிடை புரிபவருக்கு
தீய மரணம் நிகழாது. (அவர் இறைநம்பிக்கையுடன் தான் மரணிப்பார்.) நூல்:- தாரீக் இப்னு
மஈன்
துன்புறுத்தக் கூடாது
முற்கால அறிஞர்களின் ஒருவர், ( لَا تُجِدُ أَحَدًا عَاقًّا لِوَالِدَيْهِ إِلَّا وَجَدْتَهُ
جَبَّارًا شَقِيًّا ) "தன் பெற்றோரைப் புண்படுத்தும் எந்த மனிதனையும் நற்பேறற்ற
ஆணவக்காரனாகவே நீ காண்பாய்" என்று கூறிவிட்டு, தலைப்பில் காணும்
திருவசனத்தை ஓதி காட்டினார். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களிடம், ( هَلْ
يَتَخَاصَمُ الرَّجُلُ مَعَ وَالِدَيهِ
) "ஒரு மனிதன் தன் பெற்றோருடன் வாக்குவாதம் செய்யலாமா?"என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள், ( لَا.. وَلَا مَعَ
نَعْلَيهِمَا، وَإِنَّ مِنْ الْعُقُوقِ أَنْ تُغَلِّبَ وَالِدَيْكَ، وَلَوْ كُنْتَ
عَلَى حَقٍّ ) "கூடாது; அவர்களுடைய காலணிகளுடன்கூட வாக்குவாதம் செய்யக்கூடாது. நிச்சயமாக, நீங்கள் (எந்த பிழையுமின்றி) சரியாக இருந்தாலும், உங்கள் பெற்றோருடன் வாக்குவாதம் செய்வது மரியாதையற்ற செயலாகும்"
என்று பதிலளித்தார்கள்.
பெற்றோருக்கு முன்னால் நாம் சொல்வது உண்மையாகவே இருந்தாலும், அவர்களிடம் வாதிட்டு நமது கருத்தை நிலைநாட்ட முயல்வது பெற்றோரைப்
புண்படுத்தும் பாவமான செயலாகும்.
மக்களிடம் பேசும்போது வார்த்தைகளை அழகாகத் தேர்ந்தெடுத்துப் பேசிவிட்டு, பெற்றோரிடம் பேசும்போது மட்டும் கவனக்குறைவாக நிலையில் கரடுமுரடான
வார்த்தைகளைப் பேசி அவர்களை சங்கடப்படுத்திவிடக் கூடாது.
முதியோர் இல்லம்
பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் அறிவுறுத்தினோம். அவனை, அவன் தாய் சிரமத்துடனேயே சுமந்தாள்; சிரமத்துடனேயே பெற்றெடுத்தாள். அவனை (வயிற்றில்) சுமப்பதற்கும்
பால்குடி மறக்கவைப்பதற்கும் முப்பது மாதங்கள் பிடிக்கின்றன். திருக்குர்ஆன்:-
46:15
தாய், தந்தையை எப்படி நடத்த வேண்டும்; எப்படி நடத்தக் கூடாது என்பதை இறைவன் ஒரு வசனத்தில் தெளிவாகக்
குறிப்பிடுகின்றான்:
ஒருமுறை கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், ( مِنَ العِبَادِ عِبادٌ لَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ القِيامَةِ،
ولا يَنْظُرُ إلَيْهِمْ، ولا يُزَكِّيهِمْ، ولا يُطَهِّرُهُمْ ) "அல்லாஹ் தமது அடியார்களில் சிலரிடம் மறுமைநாளில்
(பரிவுடன்) பேசவும் மாட்டான்; அவர்களை (கருணையுடன்) பார்க்கவும் மாட்டான்; அவர்(களின் பாவங்)களை மன்னித்து அவர்களை பரிசுத்தப்படுத்தவும்
மாட்டான்" என்று கூறினார்கள். அப்போது ஒருவர், ( مَن أُولَئِكَ يَا رَسُولَ اللَّهِ ) "அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்?" என்று கேட்டார். நபியவர்கள், ( المُتَبَرِّئُ مِن والِدَيْهِ رَغْبَةً عَنْهُما )"பெற்றோர் மீதுள்ள
வெறுப்பின் காரணமாக அவர்களை ஒதுக்கிவைப்பவன்.
அறிவிப்பாளர்:- சஹ்ல் இப்னு முஆத் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், பைஹகீ, தஃப்சீர் துர்ருல்
மன்ஸூர்
ஒருவனுக்கு அவனுடைய பெற்றோர் வாழ்நாள் முழுவதும் மிகப்பெரிய உபகாரங்கள் செய்திருந்த
போதிலும் ஒருமுறை அவன் விரும்பாதவற்றை அவர்கள் செய்துவிட்டதற்காக நன்றி கெட்ட தனமாக
அவர்களை ஒதுக்கி வைக்கும் பிள்ளைகளை என்னவென்று சொல்வது?
“நீங்கள் குழந்தையாக இருந்தபோது அவர்கள் உங்களை ஒரு இளவரசனைப் போல வளர்த்தார்கள்; எனவே, அவர்கள் முதியவராகும்
போது அவர்களை மன்னர்களைப் போலக் கவனித்துக்கொள்ளுங்கள்” என்றான் ஓர் அறிஞன்.
ஓர் மகன் தமது தந்தை இறந்த பின் தமது தாயை இல்லத்தில் சேர்த்துவிட்டான். காரணம், தானும், மனைவியும் வேலைக்கு
போவதால் தன் தாயை கவனிக்க வீட்டில் யாருமில்லை. அதன்பிறகு மாதத்திற்கு ஒரு முறை தமது தாயை அங்கு சென்று சந்தித்து
வந்தான்.
வருடங்கள் கடந்தன. ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது.
மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றான். அப்போது மகன், மரணிக்கும் தருவாயில் இருந்த தமது தாயிடம், உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” எனக் கேட்டான்.
அந்தத் தாய், "இந்த முதியவர் இல்லத்தில்
மின் விசிறிகள் எதுவும் இல்லை. காற்று இல்லாமலும், கொசுக் கடித்தும்
நிறைய நாள்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன். இங்கு தரும் கெட்டுப்போன சாப்பாட்டை சாப்பிட
முடியாமல் பல நாள்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன். எனவே, இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும், சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப்
பெட்டியும் வாங்கிக்கொடுப்பாயா?” என மெல்லிய குரலில்
கேட்டாள்.
மகன் ஆச்சரியப்பட்டான்.“பல வருடங்களாக நான் உங்களை பார்க்க வருகிறேன். ஒருநாள்கூட
இப்படி ஒரு குறையை சொல்லவில்லை. இப்போது மட்டும் ஏன் இதை கேட்கிறீர்கள்?” எனக் கேட்ட மகனின் முகத்தை மெல்ல ஏறெடுத்துப் பார்த்தாள்.
“மகனே இங்கு மின் விசிறி இல்லாமல் கொசுக்கடியை தாங்கிக் கொண்டு உறங்குவதற்கு நான்
பழகிக்கொண்டேன். இங்குள்ள பசியையும், துன்பங்களையும் என்னால்
பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால், உனது குழந்தைகள் உன்னை
இந்த இல்லத்திற்கு அனுப்பும்போது என்னால் தாங்கிக்கொள்ள முடிந்ததை உன்னால் அவற்றை தாங்கிக்கொள்ள
முடியாது என்பதை நினைத்துதான் எனக்கு மிகவும்
வருந்தமாக இருக்கிறது. அதனால் தான் இப்போது கேட்கிறேன்” என்றாள்.
நாமும் ஒருநாள் முதுமை அடைவோம்; இன்றைக்கு நம் தாயை, தந்தையை எப்படி நாம் நடத்துகிறோம் என்பதை நம் பிள்ளைகள் கவனிக்கிறார்கள்.
நமது முதுமையில் நம்மை அவர்கள் அப்படித்தானே நடத்துவார்கள் என்பதை யோசித்து, பெற்றோரைக் கண்போல் பாதுகாத்து, அவர்களின் மனம் நோகாமல் நடக்க வேண்டும்.
தமிழகத்தில் 1991இல் இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 44 லட்சம். இவர்களில்
60 விழுக்காட்டினர் உணவு, உடை, உறைவிடம் ஆகிய வசதிகளின்றி தவித்தனர் என்றது ஒரு புள்ளி விவரம்.
இந்தியாவில் 2016ஆம் ஆண்டில், 60 வயதுக்கு மேற்பட்ட
முதியோர் 12 கோடிப் பேர் இருப்பார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இவர்களில் 51 விழுக்காட்டினர்
பெண்களாவர்.
பிள்ளைகள் வசதி வாய்ப்போடு வாழ்ந்தும், முதியோர் இல்லங்களில்
பெற்றோரைச் சேர்த்துவிட்டுப் பொறுப்பைத் தட்டிக்கழித்து விடுகின்றனர். சென்னையில் மட்டும்
சுமார் 50 கட்டண முதியோர் இல்லங்கள் உள்ளன.
நம் இல்லத்தில் முதியோர்கள் இருக்கலாம். ஆனால், அவர்கள் முதியோர்
இல்லத்தில்தான் இருக்கக் கூடாது.
தலைக்கூத்தல்
அருமை அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إنَّ أشَدَّ النّاسِ عَذابًا يَوْمَ القِيامَةِ مَن قَتَلَ نَبِيًّا،
أوْ قَتَلَهُ نَبِيٌّ، أوْ قَتَلَ أحَدَ والِدَيْهِ، والمُصَوِّرُونَ، وعالِمٌ
لَمْ يَنْتَفِعْ بِعِلْمِهِ ) இறைத்தூதரைக் கொன்றவன் அல்லது ஒரு இறைத்தூதரால்
கொல்லப்பட்டவன் அல்லது பெற்றோரில் ஒருவரை கொன்றவன் மேலும், உருவப்படத்தை உருவாக்கின்றவன் மேலும், தான் கற்ற ஞானத்தால் பயனடையாத அறிஞன் ஆகியோர் தான் மறுமை நாளில்
மிகவும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ்
(ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ, தஃப்சீர் துர்ருல்
மன்ஸூர் பனீ இஸ்ராயீல் வசனம்-23
மருத்துவர்களால் கைவிடப்பட்டு, படுத்த படுக்கையில்
இருக்கக்கூடிய முதியவர்களை, எண்ணெய் குளியல் மூலமாக
கொலை செய்யும் வழக்கத்திற்குப் பெயர்தான் “தலைக்கூத்தல்” எனப்படும்.
தமிழ்நாட்டின், தென்மாவட்டங்களில் குறிப்பாக
விருதுநகர், கரூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இம்முறை காணப்படுகிறது. இதனை
குளிப்பாட்டி விடுதல் என்றும் அழைப்பர்.
குடும்பத்துக்கு பாரமாகக் கருதப்படும் முதியவர்கள் அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக்
குளிப்பாட்டப்படுவர். பின்பு நாள் முழுவதும் அவர்களுக்கு அதிக அளவில் இளநீர் பருகத்
தரப்படும். அப்போது எதிர்ப்பு சக்தி குறைவாகக் கொண்ட முதியவர்களுக்கு, இதனால் கடுமையான காய்ச்சல், வலிப்பு, சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு ஓரிரு நாள்களில் இறப்பு ஏற்படும்.
தலைக்கூத்தல் சடங்கு செய்யும் முன்பு குடும்பத்தில் உள்ள முக்கியமானவர்கள் (பெரும்பாலும்
இரவில்) ஒன்றுகூடுவார்கள். அவர்கள் அனைவரிடமும் கருத்து கேட்கப்படும், வயதான பெற்றோர் என்றால் மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்களிடம் சம்மதம் பெறுவார்கள். ஒருமித்த கருத்தை எட்டி, தலைக்கூத்தலுக்கு சம்மதம் என்றால் மட்டுமே இந்த சடங்கு நடைபெறும்.
இச்செயல் இந்தியாவில் சட்டத்துக்குப் புறம்பானது. சில நேரங்களில் தலைக்கு ஊத்துவதற்குப்
பதிலாக குளிர்ந்த பால் தருவது, நஞ்சு ஊசி போடுவது
போன்ற செயல்களின் மூலம் முதியவர்கள் கொலை செய்யப்படுவர். பெரும்பாலும் முதியவர்களின்
உறவினர்களின் அனுமதியோடு அல்லது உறவினர்களாலேயே இக்கொலைகள் நடத்தப்படுகின்றன.
பெண் குழந்தைகளுக்குக் கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லும் பழக்கம் தமிழ்நாட்டில்
1990 க்கு முன்பு பரவலாக இருந்தது. அதுபோலவே 2010 க்கு முன்பு வரை விருதுநகர் மாவட்டத்தில்
பல கிராமங்களில் தலைக்கூத்தல் என்ற இந்த பழக்கம் இருந்தது. இந்த கொலை பழக்கத்தை
2010 ல் முதன்முதலில் செய்தியாக வெளியிட்டது.
அவர்களில் சிலர், தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை
நாள்களில் தமது பெற்றோருக்கு தலைக்கூத்தல் நடத்தினால், பண்டிகை தினம் என்பதால் உறவினர்கள் பலர் இறப்புக்கு வர மாட்டார்கள்.
செலவும் குறையும் என்று எண்ணுகிறார்கள்.
பெற்றோர்களைக்கூட கொலை செய்ய துணிந்துவிட்ட சமூகத்தில் நாம் வாழ்கிறோம். கல்நெஞ்சகக்காரர்களான
அறியாமைக்கால மக்கள்கூட பெண் குழந்தையைத்தான் கொன்றார்களே தவிர, பெற்றோர்களை அல்ல.
இவை இரண்டும் மிகப்பெரிய பாவமே!
நமது பெற்றோரின் முகத்தை அடிக்கடி உற்றுப் பார்த்தால் புரியும். ஒருநாள் வரும். அன்று அவர்களின் முகத்தை நினைவுகூர
நாம் கண்களை மூடிக்கொண்டு தவிக்க நேரிடலாம்.
எனவே, நாம் பெற்றோரை முறையாக பேணி வாழும் நல்ல பிள்ளைகளாக
அல்லாஹுத்தஆலா நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment