உயிரினங்களின் ஆதாரம்
وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ
நீரைக் கொண்டு (உயிருள்ள) ஒவ்வொன்றையும் வாழ்ந்திருக்க செய்வோம்.
திருக்குர்ஆன்:- 21:30
மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினம்.
மனிதனும் மற்ற உயிரினங்களும் ஜீவிக்க தேவையான அவசியமான பொருள்
தண்ணீராகும். தண்ணீர் பூமியில் கிடைக்கும் மதிப்பின் மிகுந்த சொத்தாகும். நாம் காலையில்
எழுந்ததிலிருந்து அதன் தேவை துவங்கிவிடுகிறது. குளிக்க, பருக, துணி துவைக்க,
சமைக்க, வீடு வாசல் பண்ட பாத்திரங்கள் கழுவ என இப்படி அடுக்கிக் கொண்டே
போகலாம்.
உலகின் எல்லா வளங்களுக்கும் மூலம் தண்ணீர் தான். உலக நாகரிகங்கள்
எல்லாம் நதிக்கரை ஓரமே உருவானதற்கு காரணம் தண்ணீர்.
இன்றைய உலகின் பெரும் பகுதி தண்ணீர். ஆனால், மனிதப் பயன்பாட்டிற்கு கிடைப்பது குறைவே. மொத்த
நீரில் கடல் நீர் மட்டம் 97.5 சதவீதம். மீதம் உள்ள
2.5 சதவீதம் தான் நிலப்பரப்பில்
தன் நல்ல நீராக இருக்கிறது. ஆனால், இதிலும் 2.24
சதவீதம் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகளாகவும் பனிக்கட்டிகளாகவும்
மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. எஞ்சியுள்ள 0.26 சதவீத நீரைத் தான் பருகவும் விவசாயத்திற்கும் பயன்படுத்தும்
நிலை உள்ளது.
மருத்துவ குணம்
நமது உடல் எடையில் அரவிந்த் 60 சதவீதம் தண்ணீர் தான் உள்ளது. தண்ணீரானது நமது உடலில் பலவிதமான
முக்கியப் பணிகளை செய்கிறது. உடலில் இருந்து ஜீவசத்துகளை கரைத்து, திரவ ரூபமாக உடலிலுள்ள செல்களுக்கு எடுத்துச் செல்கிறது.
மேலும், நமது உடலிலுள்ள இரசாயனப் பொருள்களுடன்
சேர்ந்து கரைந்து உடல் முழுவதும் பரவுவதற்கு அவசியமாகிறது. நம்முடைய உடலுக்கு வெப்பம்
மற்றும் குளிர்ச்சியில் சமநிலையை உண்டாக்குவதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
நுரையீரல் வழியாகவும் சருமங்கள் வழியாகவும் அழுக்குகளை வியர்வை
மூலமாகவும், சளி மூலமாகவும் வெளியேற்றுகிறது.
நமது உடலிலுள்ள திசைக்கள் விஷமாகாமல் தடுத்து ஆக்ஸிஜனை உடல் முழுவதும் உள்ள திசுக்களுக்கு
கொடுத்து உதவுகிறது. முக்கியமாக நாம் சாப்பிட்ட உணவுகள் நல்லபடியாக செரிமானம் ஆவதற்கு
தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. மனிதன் வாழ்வதற்கு தினமும் தண்ணீர் பருகத் தான் வேண்டும்.
உடல் சுத்தப்படுத்துவது குளிப்பதில் நடைபெறுகிறது. உடலின் உள்உறுப்புகளை சுத்தப்படுத்துவது
தண்ணீர் பருகுவதின் மூலம் நடைபெறுகிறது.
பேரறிஞர் முஹம்மது மார்மடியூக் பிக்தால் (1875-1936)
அவர்கள் தான் திருக்குர்ஆனை ஆங்கிலத்தில் (The
Meaning of Glorious Quraan) முதன் முதலாக மொழி
பெயர்த்தவர். இவர் தமது நூல் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் நாகரிகத்தின் ஒரு முக்கிய அம்சம் சுத்தமாகும். முஸ்லிம்
சாம்ராஜ்யத்தில் ஒவ்வொரு நகரிலும் (ஹமாம் எனும்) வெந்நீர் உள்ள குளிக்கும் அறைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
மக்கள் நடமாடும் வழிநெடுகிலும் குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குளிர்நீர் சுனைகளுக்கும்
குறைவில்லை. முஸ்லிம்கள் இருந்த இடங்களிலெல்லாம் சுத்தமான தண்ணீர் கிடைக்க ஏற்பாடு
செய்வது முதல் வேலையாக கவனிக்கப்பட்டது.
நிலையான தர்மம்
உயிரினங்கள் அனைத்தையும் நீரிலிருந்தே அல்லாஹ் படைத்திருக்கிறான்.
திருக்குர்ஆன்:- 24:45
சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கூறியதாவது. என்னுடைய தாய் இறந்துவிட்டார்.
(எனவே நான் அண்ணல் நபி - ஸல் அவர்களிடம் சென்றேன்) "நாயகமே! என் தாயார் இறந்துவிட்டார்.
அவர் சார்பாக நான் தர்மம் செய்யலாமா?" என்று கேட்டேன். அதற்கு அண்ணலார், "ஆம் (தர்மம் செய்யலாம்)" என்று பதிலளித்தார்கள்.
( فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ ) "எந்தத் தர்மம் மிகச் சிறந்தது?"
என்று கேட்டேன். அதற்கு அண்ணலார், ( سَقْيُ الْمَاءِ ) "குடிநீர் வழங்குதல்" என்று கூறினார்கள். எனவேதான் மதீனாவில் காணப்படுகின்ற
'சஅத் நீர்த்தடாகம்'
உண்டானது. நூல்:- நஸாயீ-3606
குடிநீர் வழங்குவதற்காக சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் மதீனாவில்
ஒரு கிணறு தோண்டினார்கள். அப்போது மதீனாவில் தண்ணீர் இல்லாத பஞ்சக்காலமாக இருந்தது.
அந்தக் கிணற்றைத் தோண்டி, இது சஅதியின் தாயாருக்காக
(வக்ஃப் செய்யப்பட்டது) என்று கூறினார்கள்.
மதீனாவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது "ரூமா"
என்ற குடிநீர் கிணறு யூதக் கஞ்சன் கைவசம் இருந்தது. அவன் அந்தக் கிணற்று நீரை விற்றுக்கொண்டிருந்தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ( مَنْ
حَفَرَ رُومَةَ فَلَهُ الْجَنَّةُ )
‘‘பிஃரு ரூமா’ எனும் கிணற்றை (விலைக்கு வாங்கி)
தூர்வாரி (பொதுமக்கள் நலனுக்காக வக்ஃப் செய்து)விடுகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்”
என்று கூறினார்கள். உடனே உஸ்மான் (ரலி) அவர்கள் (சுமார் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து)
அக்கிணற்றை வாங்கி முஸ்லிம்களுக்கு அர்ப்பணித்தார்கள். நூல் தாரக்குத்னீ, மிஷ்காத் பக்கம்-561
"தண்ணீர் கிடைக்காமல் அவதியுறுவோருக்கு வசதி பெற்றிருப்போர்
தண்ணீர் விநியோகம் செய்வது தமக்கு மிக விருப்பமானதாகும்" என எடுத்துரைப்பதின்
மூலம், தண்ணீர் விநியோகம் செய்வதின்
மேன்மையை நபியவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
மனித குலத்திற்காக ஆறுகள் ஓடச் செய்வது கிணறுகள் வெட்டுவது போன்றவை
நிலையான தர்மம் என்று கூறி, இஸ்லாம் தண்ணீர் விஷயத்தில்
எந்தளவு கவனம் செலுத்தியுள்ளது என்பதற்கு மேற்காணும் நபிமொழிகள் சான்றுகளாகும்.
ஆறுகள், கிணறுகள் வெட்டி விடுவது
தண்ணீருக்கான ஏற்பாடுகளில் ஒன்றாகும். இது முந்தைய காலம் தொட்டே நடைமுறையில் இருந்து
வருகிறது. தற்காலத்தில் தண்ணீர் குழாய்கள் பதிக்கப்படுகின்றன. தடாகம் மற்றும் நீர்த்தேக்கங்களில்
தண்ணீரை சேமித்து வைத்து விநியோகம் செய்யப்படுகிறது. இவை அனைத்திற்கும் நற்கூலி உண்டு.
அரிசியோ, பருப்போ, துணியோ விற்று தீர்ந்துவிட்டால் அவற்றை நாம் உற்பத்தி
செய்து கொள்ளலாம். உற்பத்தியில் அளவை உயர்த்தலாம். ஆனால், தண்ணீரை அவ்வாறு உற்பத்தி செய்ய முடியாது. அளவையும் அதிகரிக்க
செய்யவும் முடியாது.
அரிசி இல்லையெனில் கோதுமை உண்ணலாம். சில நாள்களில் பட்டினியாகவும்
இருக்கலாம். வாகனம் இல்லையெனில் நடந்து செல்லலாம். இவ்விதமாக தண்ணீருக்கு எவ்வித மாற்றுப்
பொருளும் இல்லை. சமைப்பதற்கும், சுத்தம் செய்வதற்கும்,
விவசாயம் செய்வதற்கும் தண்ணீர் மிக அவசியம். தண்ணீர்
இல்லையெனில் எந்த உயிரினங்களும் வாழ முடியாது.
தடுக்க வேண்டாம்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( ثَلاَثَةٌ لاَ يَنْظُرُ اللَّهُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ،
وَلاَ يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ رَجُلٌ كَانَ لَهُ فَضْلُ مَاءٍ
بِالطَّرِيقِ، فَمَنَعَهُ مِنِ ابْنِ السَّبِيلِ ) மூன்று பேரை அல்லாஹ் மறுமைநாளில் ஏறெடுத்து பார்க்கவும் மாட்டான்,
அவர்களை தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும்,
அவர்களுக்கு துன்பமிக்க வேதனையும் உண்டு. அதில்
ஒருவன் (மக்களின் பயணப்) பாதையில் தேவைக்கு மிஞ்சிய தண்ணீரை பெற்றிருந்தும் வழிப்போக்கர்கள்
அதை பயன்படுத்தவிடாமல் தடுத்துவிட்டவன். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:-
புகாரீ-2358
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يُمْنَعُ فَضْلُ الْمَاءِ لِيُمْنَعَ بِهِ الْكَلأُ ) (தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரை தடுக்கலாகாது. (அவ்வாறு தடுத்தால்
அதைச் சுற்றியுள்ள) புற்பூண்டுகளை (மேய விடாமல் கால்நடைகளை) தடுத்ததாக ஆகிவிடும். அறிவிப்பாளர்:-
அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2353, முஸ்லிம்-3188
ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளுக்கு புற்பூண்டுகள் தீவனமாக
பயன்படும் என்பதற்காகவே உங்கள் தேவைக்கு மேல் எஞ்சியுள்ள தண்ணீரை ஒரு புற்பூண்டுகளுக்கு
பாய்வதை விட்டும் தடுக்க வேண்டாம் என இந்த நபிமொழி வலியுறுத்துகிறது.
தேவைக்கு மேல் மிஞ்சும் எந்தப் பொருளையும் தேவைப்படுவோருக்கு
வழங்கினால் எப்போதும் நலமுடன் வாழ வழிவகுக்கும்.
தண்ணீர் உள்ள மக்களை நோக்கி, தண்ணீர் இல்லாத மக்கள், "எங்களுக்கும் தாருங்கள்" என்று கேட்கத் தொடங்கி,
இறுதியில் போராட்டக் களம் அமைப்பதை உலகம் முழுவதும்
எல்லா நாடுகளிலும் காணலாம். நமது தமிழகம்கூட கேரளா, கர்நாடகா அரசிடம் தண்ணீர் கேட்டுக் கொண்டிருப்பதை அவ்வரசுகள்
மறுப்பதையும் அறிந்து வைத்துள்ளோம்.
கர்நாடக மாநிலம் தேவைக்கு எஞ்சியுள்ள தண்ணீரை அருகில் இருக்கும்
தமிழகத்திற்கு குறித்த நேரத்தில் தருமேயானால் காவிரி டெல்டா பகுதியில் உள்ள வேளாண்மை
பாதுகாக்கப்படும். தமிழகத்தில் காவிரி ஆற்று நீரை நம்பியே பல விவசாயிகள் வாழ்கின்றனர்.
தேவைக்கு மேல் எஞ்சியுள்ள தண்ணீரை மற்றவர்களின் பயன்பாட்டிற்கு
தர மறுப்பதைப் பெரும் குற்றச் செயலாக இஸ்லாம் கருதுகிறது. மிருகங்கள் உண்ணக்கூட வழியில்லா
நிலை ஏற்படுத்தும் அளவுக்கு தண்ணீர் தர மறுப்பது கூடாது என்பது இஸ்லாமிய போதனையாகும்.
எல்லோருக்கும் வேண்டும்
அல்லாஹ் வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து, அதன் மூலம் இறந்துபோன பூமிக்கு உயிர் ஊட்டுகிறான்
திருக்குர்ஆன்:- 16:65
அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது. (என் தந்தை)
ஸுபைர் (ரலி) அவர்களுக்கும் ஒரு அன்சாரித் தோழருக்கும் பேரிச்சம் தோப்புக்கு தண்ணீர்
பாய்ச்சும் விஷயத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இவ்விஷயம் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம்
சென்றுவிட்டது. அப்போது நபியவர்கள், ( اسْقِ يَا زُبَيْرُ، ثُمَّ احْبِسِ
الْمَاءَ، حَتَّى يَرْجِعَ إِلَى الْجَدْرِ ) "ஸுபைரே! உங்கள் தோப்புக்குத்
தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு பிறகு உங்கள் பக்கத்து தோப்புக்காரருக்கு (இவருக்கு) தண்ணீரை
அனுப்பிவிடுங்கள்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2359
ஒரு சமயம் மதீனாவில் ஒரு வாரம் தொடர்ந்து மழை பெய்தது. அதனால்
பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது கருணைக்கடல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,
( اللَّهُمَّ
حَوْلَنَا وَلاَ عَلَيْنَا ) "இறைவா! எங்கள் சுற்றுப்புறங்கள் மீது இம்மழையை திருப்புவாயாக!
எங்களுக்கு பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே!" என்று பிரார்த்தித்தார்கள். நூல்:- முஸ்லிம்-1633
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَإِفْرَاغُكَ مِنْ دَلْوِكَ فِي دَلْوِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ ) உனது வாளியில் உள்ள தண்ணீரை உன் சகோதரனின் வாளியில் ஊற்றிக்கொடுப்பதும்
நீ செய்யும் தர்மம் ஆகும். அறிவிப்பாளர்:- அபூதர் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1879, முஸ்னது அஹ்மத்,
இப்னு ஹிப்பான், அல்காமில் இப்னு அதிய்யி
வான்மழை தான் நிலத்தடி நீருக்கு ஆதாரம். தன் ஊருக்கு மட்டும்
மழை பெய்து, தண்ணீர் தட்டுப்பாடு
இல்லாமல் சுபிட்சமாக வாழ்ந்தால் போதாது என்று எண்ணி நம்மைச் சுற்றி இருப்பவர்களும்
சுபிட்சமாக வாழ வேண்டும். அதற்காக அவர்கள் பகுதிகளுக்கும் மழை பொழியட்டும்! என்று பிரார்த்தித்து
பொதுநலம் கொண்டவர்களாகத்தான் நபியவர்கள் வாழ்ந்து வழிகாட்டியுள்ளார்கள்.
அண்டை வீட்டார், அண்டை ஊரார் மட்டுமல்ல அண்டை நாட்டவரும் நமது தண்ணீரைக் கொண்டு பயன்பெறும் வகையில்
மனிதநேயத்தோடு நடப்பது அவசியம்.
வியாபாரச்சரக்கு
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إذَا لَمْ يُبَارَكِ اللَّهِ لِلرَّجُلِ فِي مَالِهِ جَعَلَهُ فِي
الْمَاءِ وَالطِّينِ ) அல்லாஹ் ஒருவருடைய
செல்வத்தில் அபிவிருத்தி செய்யாவிட்டால், அந்த மனிதன் தன்னுடைய செல்வத்தை மண்ணிலும், தண்ணீரும் ஆக்கிவிடுகிறான். அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள்
நூல்:- கஸ்ருல் அமல் ( قصر الأمل ) இமாம் இப்னு ஹிப்பான், ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ
இயாஸ் பின் அப்த் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ فَضْلِ
الْمَاءِ ) தேவைக்கு மேல் எஞ்சியுள்ள தண்ணீரை விற்காதீர்கள்.
ஏனெனில், அருமை நாயகம் (ஸல்) அவர்கள்
தண்ணீரை விற்பதற்கு தடைவிதித்தார்கள். அக்காலத்தில் மக்கள் யூப்ரடீஸ் நதிநீரை விற்றுவந்தனர்.
அதற்கு நபியவர்கள் தடை விதித்தார்கள். நூல்:- அபூதாவூத்-3017, முஸ்னது அஹ்மத்,
பைஹகீ
முன்பெல்லாம் வீட்டிற்கு முகம் தெரியாதவர்கள் வந்து,
"அம்மா கொஞ்சம் குடிக்க தண்ணீர்
கொடுங்க!" என்று கேட்டால், அவரை யார்?
என்று கேட்காமல் முகம் மலர்ச்சியுடன் தண்ணீர் கொடுப்பார்கள்.
இப்போது வீட்டிலேயே காசு கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்கும் காலமாக இருப்பதால்,
தாகித்து தண்ணீர் கேட்பவருக்கு கொடுப்பதற்கும் தயங்குகிறார்கள்;
பிறரிடம் தண்ணீர் கேட்பதற்கும் தயங்குகிறார்கள்.
"தண்ணீரை விலை கொடுத்து வாங்குவார்களா?"
என பேசப்பட்டு வந்தது ஒரு காலம். ஆனால்,
ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பதினைந்து ரூபாய்க்கு
வாங்கி கையில் எடுத்து செல்வது இன்று சாதாரணமாகிவிட்டது.
தாகம் தீர்க்கும் தண்ணீர், லாபம் பார்க்கும் கடைச்சரக்காக விற்பனை செய்யப்படுகிறது. நமது
மண்ணுக்குரிய தண்ணீரை ஒரு லிட்டர் ஒன்றே கால் பைசாவுக்கு வாங்கி, 15 ரூபாய் பாட்டில்களில் விற்பனை செய்யப்படுகிறது.
பாலைவிட அதிக விலை விற்கும் தண்ணீரை வாங்கி பருகவும் பலர் பழகிவிட்டனர்.
மற்ற பொருள்களை விலை கொடுத்து வாங்குவதைப் போல், கேன் கேனாக தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது பரவலாக ஆகிவிட்டது.
கிணற்று நீர், ஊற்று நீர் போன்ற தண்ணீர் தனி மனிதனுக்கு சொந்தமானதாக இருந்தால், அதை விற்பது தவறில்லை. எந்த தனி மனிதனுக்கும் சொந்தமில்லாத
ஆற்று நீரையும், கடல் நீரையும் விற்பதுதான்
கூடாது என இந்த நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
தண்ணீர் வியாபாரத்தை அனுமதித்து, அதற்காக பொதுச்சொத்தான நீர் வளங்களையும், நீராதாரங்களையும் தனியார் இலாபத்திற்கு விடுவதும்
பேரழிவுக்கு வழிவகுக்கும். தண்ணீருக்காக மக்கள் தவிப்பு அதிகரிக்கும்போது தண்ணீர் முதலாளிகளின்
இலாப வெறி அதிகரிக்கின்றது. 75,000 கிராம மக்களுக்கு
பயன்பட்ட "வைதார்னா" ஏரியை கோப் கம்பெனி விலை பேசி வாங்கிவிட்டது. இன்னொரு
கம்பெனியோ 22 கி.மீ. நீள ஆற்றை
22 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது.
சக்தி வாய்ந்த எந்திரங்களால் மூர்க்கத்தனமாக பூமியில் இருந்து
தண்ணீரை உறிஞ்சி எடுத்து, பல பகுதிகளுக்கு அதை
கொண்டுச் சென்று சம்பாதித்து, செழிப்பான நிலையில்
இருப்பவர்கள் மிகக் குறைவு; அதனால் பாதிக்கப்பட்டவர்கள்
ஏராளம்.
எந்தப் பகுதியில் வியாபாரத்திற்காக தண்ணீர் எடுக்கப்படுகிறதோ
அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களும் விவசாயிகளும் தண்ணீருக்காகவும் சிரமப்படுகிறார்கள்.
விரைவில் அப்பகுதியில் பூமியின் மேற்பரப்பு நீர்ச்சத்து இல்லாமல் காய்ந்து போய்,
பொற்பூண்டுகள் முளைப்பதற்குகூட சாத்தியமில்லாமல்
போய்விடுகிறது. அதனால் கால்நடைகளின் தீவனத்திற்கு மிகச் சிரமமாகி விடுகிறது.
விரயம் செய்யாதீர்
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
ஐந்து முத்து அளவு தண்ணீரில் குளித்து விடுபவர்களாகவும், ஒரு முத்து அளவு தண்ணீரில் அங்கத்தூய்மை செய்து விடுபவர்களாகவும்
இருந்தார்கள். நூல்:- புகாரீ-201, முஸ்லிம்-541 திர்மிதீ-51
அண்ணல் நபி (ஸல்) அவர்களது மதீனா நகரில் நடைமுறையில் இருந்து
வந்த முத்து எனும் அளவை 586 மீ.லிட்டர் கொள்ளளவு
கொண்டதாகும். ஐந்து முத்து அளவை 2930 மீ.லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். நபியவர்கள் தண்ணீரில் சிக்கனத்தை கடைபிடித்து
வாழ்ந்துள்ளார்கள்.
உலகின் பல நாடுகள் இயற்கையாகவே இப்போது தண்ணீர் பற்றாக்குறையால்
தவிர்த்துக் கொண்டிருக்கின்றன. உலகில் உள்ள 80 நாடுகளில் 40 சதவீத மக்கள் சரிவர தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். 110 கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். இப்படியே போனால்
இன்னும் சில நூற்றாண்டுகளில் உலகமே பாலைவனமாக மாறிவிடலாம். மக்களும் மாண்டு போகும்
நிலை ஏற்படலாம்.
மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் அது தண்ணீருக்காகக்கூட இருக்கலாம்
என்கின்றனர் சர்வதேச பார்வையாளர்கள். அதனால் தான் செவ்வாய் கிரகத்தில் நீர்வளம் இருக்குமா?
என்று போட்டிப் போட்டு விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர்.
இறைவணக்கத்தின் வாசல் எனப்படும் (உளூ எனும்) அங்கத்தூய்மையின்போது
உடல் உறுப்புக்களையும் மூன்று முறை கழுவ வேண்டும். அதிகப்படியாக கழுவினால் அது வீண்விரயம் எனக்கூறி
கண்டிக்கிறது இஸ்லாம்.
ஒருநாளைக்கு ஒரு அமெரிக்கர் 500 லிட்டர் தண்ணீரையும், பிரிட்டிஷார் 200 லிட்டர் தண்ணீரையும் செலவிடுகின்றனர். நமது தமிழகத்தில் ஒரு மனிதனுக்கு ஒருநாள்
செலவுக்கு குறைந்தபட்சம் 40 லிட்டர் தண்ணீர்
தேவை என குடிநீர் வடிகால் வாரியம் கணித்துள்ளது.
அல்லாஹ்வின் அருட்கொடையான தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாக செலவழித்து
நீர் வளத்தை பெருக்க வேண்டும். குறைந்தபட்சம் திறந்த குழாயை முழுமையாக மூட வேண்டும்.
அது பழுதாகி இருந்தால் உடனடியாக மாற்ற வேண்டும். தண்ணீர் குழாயைத் திறந்து விட்டவாறே
பல் துலக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். தண்ணீரை கணக்கில்லாமல் வாளி வாளியாக குளிக்காமல்,
பிடித்து வைத்த அளவுடன் குளிக்க வேண்டும். தண்ணீரை
அளவோடு பயன்படுத்தி வீண்விரயத்தை குறைப்பதின் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க
முடியும். தண்ணீரின் விலை மதிப்பற்றது என்பதை உணர வேண்டும்.
நமது வீட்டுப் பகுதியில் காலியாக கிடக்கும் இடத்தில் வாழை,
தென்னை போன்ற மரவகைகள் அல்லது காய்கறிச் செடிகள்,
கொடிகள், பூச்செடிகள், கீரை வகைகள் போன்றவற்றை பயிரிட்டு நமது வீட்டில் குளிப்பதற்கு, வீடு வாசல் பாத்திரங்கள் கழுவுவதற்கு பயன்படுத்தப்பட்ட
கழிவுநீரை இவற்றிற்கு பாய்ச்சலாம். அதனால் கிடைக்கும் பொருள்கள் மனிதர்களுக்கு பயன்படுவதோடு
பொருளாதாரத்தையும் மேம்படுத்தலாம். சுருங்கக்கூறின், கழிவுநீரைகூட வீணடித்துவிடக் கூடாது.
நீரோட்டம் பார்க்கவும்
இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்கள் காலத்தில் "ஹுத்ஹுத்"
என்ற பறவை எந்த இடத்தில் எத்தகைய தண்ணீர் கிடைக்கும் என்பதை மிகத் துல்லியமாக கண்டுபிடித்து
அதனை சுலைமான் (அலை) அவர்களுக்கு தெரிவித்துவிடும் உடனே நபியவர்கள் ஜின்னுகளைக் கொண்டு
அந்த இடத்தில் பள்ளம் தோண்ட வைத்து, தேவையான தண்ணீரை எடுத்துக்கொள்வார்கள். நூல்:- தஃப்சீர் மதாரிக்குத் தன்ஸீல்
இமாம் நசஃபீ
பூமிக்கு அடியில் கண்ணுக்குத் தெரியாமல் ஓடும் நீரோட்டத்தின்
அறிவை "ஹுத்ஹுத்" என்ற பறவை அறிந்து வைத்திருந்ததாக வரலாறு கூறுகிறது.
நீர்வளத்துறை துறையில் ஓய்வு பெற்ற உயரதிகாரி ஒருவர் கூறிய தகவல்
இதோ: நிலப்பகுதியில் கிடைக்கும் உப்பு நீரானது பூமிக்குள் ஓடும் நீரோட்டங்களால் காலப்போக்கில்
உப்புத் தன்மையை இழந்து நல்ல தண்ணீராக மாற வாய்ப்பு இருக்கிறது. கடலில் உப்புத் தண்ணீரில்
குளித்ததும் நமது வீட்டில் கிணற்றில் குளிக்கின்றோமே அந்த நல்ல தண்ணீர் எங்கிருந்து
கிடைக்கிறது? பூமிக்குள் ஓடும்
நீரோட்டங்களால் தான்.
அந்த நீரோட்டத்தை கண்டறிந்து தோண்டும் இடங்களில் நல்ல சுவையான
தண்ணீர் கிடைக்கிறது. நீரோட்டத்தை கண்டறிந்து நாம் தோண்டும் இடம் கடல் ஓரமாக இருந்தாலும்
கடல் நீரின் உப்புத்தன்மை நீரோட்டத்தில் உள்ள நல்ல நீரை பாதிப்பதில்லை.
அதேவேளையில் பூமிக்கு அடியில் கண்ணுக்குத் தெரியாமல் ஓடும் நீரோட்டங்களை
தடுத்து மறிப்பது போல் போக்குவரத்து பாலங்களைக் கட்டி விடுவதால் நீரோட்டத்தின் தொடர்பு
அறுந்துவிடுகிறது. உப்புநீர், உப்பு நீராகவே இருந்து
விடுகிறது. பூமியில் ஓடும் நீரோட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாலங்கள் அமைத்தால்
உப்புநீர் நல்ல நீராக மாற வாய்ப்புண்டு. நமது நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு குறையவும்
வாய்ப்புண்டு. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இதை கவனிப்பார்களா?
பாதுகாப்பது நமது பொறுப்பு
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلاَ يَغْمِسْ يَدَهُ
فِي الإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا ثَلاَثًا فَإِنَّهُ لاَ يَدْرِي أَيْنَ بَاتَتْ
يَدُهُ ) இரவில்
உங்களில் ஒருவர் உறங்கி எழுந்தால், அவர் தமது கையை இரண்டு
அல்லது மூன்று முறை கழுவாமல் (தண்ணீர்) பாத்திரத்திற்குள் இட வேண்டாம். ஏனெனில்,
இரவு அவரது கை எங்கே இருந்தது என்பதை அவர் அறிய
மாட்டார். நூல்:- முஸ்லிம்-467, திர்மிதீ-24
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ الَّذِي لاَ
يَجْرِي، ثُمَّ يَغْتَسِلُ فِيهِ ) உங்களில் எவரும் ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில்
சிறுநீர் கழிக்கவும் வேண்டாம். பின்னர் அதில் குளிக்கவும் வேண்டாம். நூல்:- புகாரீ-239,
முஸ்லிம்-475
மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே இருக்க, பாதுகாக்கப்பட்ட குடிநீர் தேவையும் அதிகரிக்கிறது.
சுத்தம் பாராமல் மாசு கலந்த தண்ணீரை பருகுவதால் உலக அளவில் 20 நிமிடத்திற்கு ஒரு மனிதன் இறக்கிறான் எனவும்,
போர்களால் ஏற்படும் உயிரிழப்பைவிட மாசு கலந்து தண்ணீரை
பருகுவதால் ஏற்படும் உயிரிழப்பு அதிகம் எனவும் ஐ.நா. சபை தெரிவிக்கிறது.
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 40 ஆயிரம் கோடி டன் கழிவுகள் நீரை மாசுப்படுத்தி வருகின்றன. சில
நாடுகளில் கிடைக்கும் தண்ணீரோ தரமற்றதாக இருக்கிறது. நமது நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலான
ஆறுகள் ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவுகளால் மாசு அடைந்து விஷமாகி வருகின்றன.
கங்கை நதியை மட்டும் சுத்தப்படுத்துவதற்கு 900 கோடி தேவைப்படும் என மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளது.
நமது நாட்டிலுள்ள சொற்ப நீராதங்கள் கழிவு நீர்களால் மாசுபடுத்தப்பட்டு
வருவதால் நிலத்தடி நீரில் 33 சதவீதம் மட்டுமே
குடிநீராக பயன்படுத்தும் நிலை உள்ளது. விளைவு கிடைப்பதற்கு மலிவாக இருந்த தண்ணீர் மனிதனின்
செயற்கையால் விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு கிராக்கியானதாக ஆகிவிட்டது.
நாம் தூங்கும்போது வியர்வை, அசுத்தம் உள்ள உறுப்பில் கைகள் படுவதற்கு வாய்ப்பு அதிகம். உடலில்
எங்கேனும் நாம் கைகளால் சொறிந்திருக்கலாம். அதன் மூலம் நகங்களுக்குள் அழுக்குகள் கிருமிகள்
படிந்திருக்கலாம். அந்நிலையில் அந்த கையை பாத்திரத்திற்குள் இடும்போது நகங்களில் உள்ள
அழுக்கு கிருமிகள் தண்ணீரில் கலந்து மாசுபடுத்தி விடலாம். இதனாலேயே தூங்கி எழுந்தவுடன்
இரு கைகளையும் சுத்தமாகக் கழுவி, பின்னேரே தண்ணீர்
பாத்திரத்திற்கு இடவேண்டும் என்று நபிமொழி கூறுகிறது. தூங்கி எழுந்ததும் எந்த பொருளையும்
தொடுவதற்கு முன்பு கைகளை கழுவிக்கொள்ளுவது நல்லது.
நமது வீட்டில் உள்ள தண்ணீரை பாதுகாப்பதில் அக்கறை எடுத்து கொள்வதுபோல்,
பொதுச்சொத்தான நீர் தேக்கங்களை பாதுகாப்பதிலும்
அக்கறை வேண்டும்.
ஓடாமல் தேங்கி நிற்கும் சிறிதளவு தண்ணீரில் சிறுநீர் கழிப்பதால்
நீர் அசுத்தமாகிவிடும். சிறுநீர் போன்ற கழிவுநீர் மற்றும் குப்பைகள் நீர் தேக்கங்களான
குளம், குட்டை, ஏரி, அணைகள் போன்றவற்றில் கலந்து விடுவதால் அந்நீர் விஷமாகிவிடுகிறது. அது தெரியாமல்
அந்த தண்ணீரை யாரும் பயன்படுத்திவிட்டால் அதன் விளைவு ஏராளமான நோய்களுக்கு ஆளாகக்கூடும்.
ஓடும் தண்ணீராக இருப்பினும், சிறுநீர் கழிப்பதை தவிர்ப்பது, அதில் கழிவுநீர் மற்றும் குப்பை கலந்துவிடாமல் இருப்பது நல்லது.
நீர் தேக்கங்களின் கறைகளில் அமர்ந்து மலஜலம் கழிப்பதும் வெறுக்கப்பட்டதாகவும்
சுகாதார கேடாகவும் அமைகிறது. நமது பகுதியில் உள்ள நீர் தேக்கங்களை பாதுகாப்பது நம்மில்
ஒவ்வொரு மீதும் பொறுப்பாகும்.
தண்ணீருக்கு மதிப்பை அறிந்து, அதை முறையாக பயன்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் போதிய அறிவை அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும்
வழங்குவானாக! ஆமீன்!
(இந்தக் கட்டுரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment