நுழைவதற்கு முன்...
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ
بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا ذَلِكُمْ خَيْرٌ
لَكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
இறைநம்பிக்கையாளர்களே! உங்களுடையதல்லாத வீடுகளில் நீங்கள் (நுழையக்
கருதினால்) அதில் இருப்பவர்களுக்கு சலாம் கூறி, (அவருடைய) அனுமதியைப்பெறும் வரையில் நுழையாதீர்கள். இவ்வாறு நடந்து
கொள்வது உங்களுக்கே மிக்க நன்று. இதை (மறந்து விடாது) நீங்கள் கவனத்தில் வைப்பீர்களாக!
திருக்குர்ஆன்:- 24:27
பிறர் வீட்டுக்கு நாம் சென்றால் அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும்
என்ற உயர்ந்த ஒழுக்கத்தை நமக்கு அல்லாஹ் கற்றுத்தருகிறான். முதலில் நாம் பார்வையை தாழ்த்திக்
கொண்டு வீட்டின் ஓரப்பகுதியில் நிற்க வேண்டும். மனிதர்களுக்கிடையே பிரியத்தை ஏற்படுத்தக்கூடிய
சலாமை கூறி அனுமதி கோர வேண்டும். தன்னை யார் என்று அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த சிறந்த கலாச்சாரம் பல தீமைகளிலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும்.
பிற மனிதர்களைச் சந்திக்க தனது பாதங்களை எடுத்து வைக்கும்போது
இந்த வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று இஸ்லாம் விரும்புகிறது. இந்த விதிமுறைகளை
அலட்சியப்படுத்திவிட்டால் இறை கட்டளைகளை அலட்சியப்படுத்தியதாகவே கருதப்படும்.
பார்வை படாமல் இருக்க
அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் ஒரு வீட்டுக்கு சென்றால் (அனுமதி கோருவதற்காக) வாசலுக்கு நேராக வந்து
நிற்காமல் வலது அல்லது இடது புறத்தில் நின்று, "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூறுவார்கள். (பிறகு அனுமதி
கிடைத்தால் நுழைவார்கள்.) நூல்:- அபூதாவூத்-4512
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் கதவில்
ஒரு துவாரத்தின் வழியாக கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களது அறையினுள் எட்டிப் பார்த்தார்.
அப்போது நபியவர்கள் பேன் சீப்பு மூலம் தனது தலைமுடியைக் கோதிக் கொண்டிருந்தார்கள்.
அவரைக் கண்ட நபியவர்கள், ( لَوْ أَعْلَمُ
أَنَّكَ تَنْظُرُنِي لَطَعَنْتُ بِهِ فِي عَيْنِكَ ) "நீர் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று
எனக்கு முன்பே தெரிந்திருந்தால் இந்த சீப்பால் உன் கண்ணை குத்தியிருப்பேன்" என்று
கூறிவிட்டு, ( إِنَّمَا جُعِلَ الإِذْنُ
مِنْ أَجْلِ الْبَصَرِ ) "(வீட்டிற்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே பார்வை (எல்லை
மீறி வீட்டிலிருப்பவர்கள்மீது விழக் கூடும் என்ற) காரணத்தால் தான்" என்று கூறினார்கள்
நூல்:- புகாரீ-5924, முஸ்லிம்-4358
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَوْ أَنَّ رَجُلاً اطَّلَعَ عَلَيْكَ بِغَيْرِ إِذْنٍ فَخَذَفْتَهُ
بِحَصَاةٍ فَفَقَأْتَ عَيْنَهُ مَا كَانَ عَلَيْكَ مِنْ جُنَاحٍ ) உன் அனுமதியின்றி ஒரு மனிதர் உன்னை எட்டிப் பார்த்த போது அவர்மீது
நீ சிறு கல்லை சுண்டியெறிய அது அவரது கண்ணை பறித்துவிட்டால் உன்மீது எந்த குற்றமில்லை.
நூல்:- புகாரீ-6888, முஸ்லிம்-4362
பிறர் வீட்டினுள் நுழைவதற்கு அனுமதி கோரி நிற்பவர் பார்வையை
தாழ்த்திக் கொண்டு, வீட்டின் தலை வாசலுக்கு
நேராக நிற்காமல் ஓரப்பகுதியில் ஒதுங்கியே நிற்க வேண்டும். தலைவாசலுக்கு நேராக நின்றால்
கதவு திறந்தவுடன் பார்க்கக்கூடாதவைகளின்மீது பார்வை படலாம். அதனால் வீட்டினர் சங்கடப்படலாம்.
ஒரு சிலர் அனுமதி கேட்கும்போது வீட்டில் பார்ப்பது, கதவு பூட்டி இருந்தால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்ப்பது,
சாவி துவாரத்தின் வழியாக பார்ப்பது போன்ற தவறான
செயல்களில் ஈடுபடுவார்கள். இது போன்ற மனிதர்களிடம் கடுமையாக நடந்து கொண்டால்கூட குற்றமில்லை
என்று இந்த நபிமொழி போதிக்கிறது.
கைஸ் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார்
(ஸல்) அவர்கள் எங்களின் வீட்டில் எங்களைச் சந்திக்க வந்த போது (வீட்டு வாசலில் நின்று,
அனுமதி கோருவதற்காக) சலாம் கூறினார்கள். அதற்கு
(எனது தந்தை) சஅத் (ரலி) அவர்கள் (நபிகளாருக்குக் கேட்காத வகையில்) மெதுவான குரலில்
பதில் சலாம் கூறினார்கள்.
அப்போது நான் (என் தந்தையிடம்), ( أَلاَ تَأْذَنُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
) நபியவர்களுக்கு நீங்கள் அனுமதி
தர மாட்டீர்களா?" என்று கேட்டேன் அதற்கு
எனது தந்தை, ( ذَرْهُ يُكْثِرْ عَلَيْنَا
مِنَ السَّلاَمِ )
"அவர்களை அந்நிலையிலேயே விட்டுவிடு.
அப்போதுதான் நபியவர்கள் நம்மீது சலாமை அதிகமாக சொல்வார்கள்" என்று கூறினார். இவ்வாறு
ஒன்றன்பின் ஒன்றாக மூன்று முறை நபியவர்கள் சலாம் கூறினார்கள். (அனுமதி கிடைக்காததால்)
நபியவர்கள் திரும்பினார்கள்.
அப்போது சஅத் (ரலி) அவர்கள் நபியவர்களைப் பின் (தொடர்ந்து) சென்று,
( يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ أَسْمَعُ تَسْلِيمَكَ وَأَرُدُّ
عَلَيْكَ رَدًّا خَفِيًّا لِتُكْثِرَ عَلَيْنَا مِنَ السَّلاَمِ
) "நாயகமே! நான் உங்களுடைய சலாமை
கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். நீங்கள் எங்களுக்கு அதிகமாக சலாம் சொல்ல வேண்டும் என்பதற்காக
உங்களுக்கு மெதுவான குரலில் பதில் சலாம் கூறிக் கொண்டிருந்தேன்" என்று கூறினார்.
பிறகு சஅத் (ரலி) அவர்களுடன் நபியவர்கள் (அவரது வீட்டிற்கு) திரும்பி வந்தார்கள். நூல்:-
அபூதாவூத்-4511
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا اسْتَأْذَنَ أَحَدُكُمْ ثَلاَثًا فَلَمْ يُؤْذَنْ لَهُ
فَلْيَرْجِعْ ) (பிறர் வீட்டிற்குள் நுழைய) உங்களில் ஒருவர் மூன்று
முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பி விடட்டும்.
அறிவிப்பாளர்:- அபூமூசா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2062, முஸ்லிம்-4351, அபூதாவூத்-4510
அனுமதி கேட்பதற்கு அடையாளமாக அழைப்பு மணி (காலிங் பெல்) இருந்தால்
மெதுவாக அழுத்தலாம். கலவரப்படுத்துகிற மாதிரி கடுமையாக அழுத்தக்கூடாது. பிறகு சலாம்
சொல்ல வேண்டும். அழைப்புமணி இல்லாவிட்டால் வீட்டின் கதவை இலேசாக தட்டலாம். விரல்களை
மடித்துக்கொண்டும் தட்டலாம். பதில் கிடைக்காவிட்டால் சலாமின் சப்தத்தை மெல்ல உயர்த்தலாம்.
ஆனால், அனுமதி கேட்பது எந்த வகையில்
அமைந்தாலும் மூன்று முறை தான் இருக்க வேண்டும். பதில் வரவில்லையெனில் மற்றொரு சந்தர்ப்பத்தில்
சந்தித்துக் கொள்ளலாம் என்றெண்ணி திரும்பிவிட வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் வந்தவரை
வரவேற்பதைவிட மிக முக்கிய வேலைகளில் ஈடுபட்டு இருக்கலாம். நின்று கொண்டு பிடிவாதம்
பிடிக்கக் கூடாது.
சலாம் கூற வேண்டும்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் வீட்டில் இருக்கும்போது ஒருவர்
அனுமதி கோரி, "நான் உள்ளே வரலாமா?"
என்று கேட்டார். அப்போது நபியவர்கள் தங்களது பணியாளரை
அழைத்து, ( اخْرُجْ إِلَى هَذَا
فَعَلِّمْهُ الاِسْتِئْذَانَ فَقُلْ لَهُ قُلِ السَّلاَمُ عَلَيْكُمْ أَأَدْخُلُ ) "அவரிடம் சென்று அனுமதி
கோருவதற்கான ஒழுக்கத்தை கற்றுக் கொடு. அஸ்ஸலாமு அலைக்கும் நான் உள்ளே வரலாமா?
என்று கூறுமாறு அவருக்குச் சொல்லிக் கொடு"
என்றார்கள்.
நபியவர்கள் கூறியதை கேட்டுக் கொண்டிருந்த அவர்,
"அஸ்ஸலாமு அலைக்கும் நான் உள்ளே
வரலாமா?" என்று கேட்டார். நபியவர்கள்
அனுமதித்தபோது அவர் வீட்டினுள் நுழைந்தார். நூல்:- அபூதாவூத்-4508, முஸ்னது அஹ்மத்
பிறர் வீட்டுக்கு சென்றால் சலாம் கூறிவிட்டு நுழைவதற்கு அனுமதி
கேட்க வேண்டும். "யாரது உள்ளே வாருங்கள்" என்று பதில் கிடைத்த பின்னர்தான்
நுழைய வேண்டும். சலாம் மட்டும் கூறிவிட்டு அனுமதி கேட்காமல் நுழையக்கூடாது. அனுமதி
பெறாமல் உள்ளே நுழைந்த பிறகு "நான் வரலாமா?" என்று கேட்பது மிகப்பெரிய தவறாகும்.
எவ்வளவு நெருங்கி பழகியவர்களின் வீடாக இருந்தாலும் சரி,
பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், பிள்ளைகள் போன்றோர் அறையாக இருந்தாலும் சரி, சலாம் கூறி கதவைத் தட்டிவிட்டு காத்திருக்க வேண்டும். இதுவே
சிறந்த பண்பாகும்.
பிறர் வீட்டின் கதவு திறந்தே கிடந்தாலும்கூட அனுமதியின்றி நுழையக்கூடாது.
அனுமதியின்றி நுழைவதன் மூலம் அங்கு ஒரு பொருள் முன்கூட்டியே காணாமல் போயிருந்தாலும்,
அல்லது பொருள் வேறு ஒருவர் மூலம் வீணடிக்கப்பட்டிருந்தாலும்
நம்மீது அதன் பழி உண்டாகிவிடலாம்.
பிற மக்களின் பார்வை விழாதபடி நம் வீட்டு வாசல் கதவை எப்போதும்
தாழ்ப்பாள் போட்டு வைத்திருக்க வேண்டும். அல்லது வாசலில் திரைச்சீலை மாட்டியிருக்க
வேண்டும்.
சிலர் தெரிந்தவர்கள் வீடுகளில் நுழைந்து நேரடியாக சமையலறை வரையிலும்,
ஏன் படுக்கையறை வரையிலும்கூட நேரே வந்து விடுகிறார்கள்.
"என்னங்க இப்படி?" என்று விளக்கம் கேட்டால்,
"அந்த அளவுக்கு நான் நெருங்கி
பழகிவிட்டேன்" என்கிறார்கள். எவ்வளவு நெருங்கி பழகியவர்கள் என்றாலும் இப்படி நுழைவதை
எவரும் விரும்புவதில்லை. நாகரீகம் கருதி இதை வீட்டினர் சுட்டிக் காட்டுவதில்லை.
பெயர் கூறுதல்
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மிஃராஜ் எனும்)
விண்வெளி பயணத்தின் போது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு முதல்
வானத்திற்கு உயர்ந்து சென்று அதன் கதவை திறக்கும்படி கூறினார். அங்குள்ளவர்கள்,
( مَنْ أَنْتَ ) "நீங்கள் யார்?" என்று வினவ,
"ஜிப்ரீல்" என்றார்.
( وَمَنْ مَعَكَ )
"உங்களுடன் யார்?" என்று வினவ,
"முஹம்மத்" என்றார். இதுபோன்ற
ஏழு வானத்திலும் வினவப்பட்டபோது ஏழு வானத்திலும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இதுபோன்றே
பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-259
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. என் தந்தை (ஒரு யூதருக்கு)
கொடுக்க வேண்டிய ஒரு கடன் விஷயமாக அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத்
தட்டினேன். அப்போது நபியவர்கள், ( مَنْ
ذَا ) "யாரது?"
என்று கேட்டார்கள். அதற்கு நான், "நான்தான்" என்றேன் அப்போது நபியவர்கள்,
( أَنَا أَنَا ) "நான் நான் என்றால்...?" என அதை விரும்பாதவர்களைப்
போன்று கூறினார்கள். நூல்:- புகாரீ-6250, முஸ்லிம் 4357
சமுதாயத்தின் பெரும் தலைவராக இருந்தாலும் சரி, சாமானியராக இருந்தாலும் சரி (வானவர்கள் உட்பட) பிறகு
பிறர் வீட்டுக்கு சென்றால் தனது பெயரையோ அல்லது மக்களிடம் பிரபலமான தனது புனைப்பெயரையோ
சொல்லித்தான் அனுமதி கோர வேண்டும். இதுவே ஒழுக்கமும் பணிவும் ஆகும். வெறுமனே நான் தான்,
என் குரல் உங்களுக்கு தெரியவில்லையா? என்று கூறி வீட்டினரை குழப்பத்திற்கு ஆளாக்குவது
நற்பண்பல்ல.
தனது பெயரை தெளிவாக கூறுவது தான் நபி வழியாகும். ஆண்கள் மட்டுமே
வசிக்கும் இல்லமாக இருந்தாலும் சலாமும் பெயரையும் கூறி அனுமதி பெற்று தான் நுழைய வேண்டும்.
சரி செய்து கொள்வார்கள்
இறைநம்பிக்கையாளர்களே! உங்களுடைய அடிமைகளும் உங்களில் பருவமடையாத
(சிறிய) பிள்ளைகளும் உங்களிடம் வருவதற்கு மூன்று நேரங்களில் அனுமதி கோர வேண்டும். பஜ்ரு
(அதிகாலை) தொழுகைக்கு முன்பு, மதிய வேளையில் நீங்கள்
ஆடைகளைக் கலைந்து இருக்கும்போது, இஷா (இரவுத்) தொழுகைக்கு
பின்னர். ஆகிய மூன்று நேரங்களும் நீங்கள் மறைவாக இருக்க வேண்டிய நேரங்கள். திருக்குர்ஆன்:-
24:58
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு தோழர் வந்து, ( يَا رَسُولَ اللَّهِ أَسْتَأْذِنُ عَلَى أُمِّي ) "நாயகமே! (வீட்டுக்குள் நுழைய) என் தாயிடம் அனுமதி பெற வேண்டுமா?" என்று வினவினார். நபியவர்கள், "ஆமாம்" என்றார்கள். அவர், ( إِنِّي مَعَهَا فِي الْبَيْتِ ) "நானும் என் தாயாரும் ஒரே வீட்டில் தான் வசிக்கின்றோம். (அப்படி இருந்தும் அவளிடம் அனுமதி பெற்றுத்தான் நுழைய வேண்டுமா?)" என்று கேட்டார். நபியவர்கள், ( اسْتَأْذِنْ عَلَيْهَا ) "நீர் அவளிடம் அனுமதி பெறத்தான் வேண்டும்" என்றார்கள்.
அவர், ( إِنِّي
خَادِمُهَا ) நான் தான் அவளின்
பணியாளராக இருக்கிறேன். (அப்படி இருந்தும் அவளிடம் நான் அனுமதி பெற்றுத்தான் நுழைய
வேண்டுமா?)" என்று கேட்டார். நபியவர்கள்,
( اسْتَأْذِنْ عَلَيْهَا أَتُحِبُّ أَنْ تَرَاهَا عُرْيَانَةً
) "நீர் அவளிடம் அனுமதி பெறத்தான்
வேண்டும். உன் தாயை (அரைகுறையான) நிர்வாணக் கோலத்தில் காண்பதை நீர் விரும்புவீரா?"
என்று கேட்டார்கள். அவர், "விரும்ப மாட்டேன்" என்று கூறினார். நபியவர்கள்,
( فَاسْتَأْذِنْ عَلَيْهَا
) "(அப்படியானால்) நீர் அவளிடம் அனுமதி பெற்றுத்தான் நுழைய வேண்டும். (ஏனெனில்,
தனிமையில் இருக்கும்போது அவர்கள் எந்த நிலையிலும்
இருக்கலாம் அல்லவா?)" என்று கூறினார்கள்.
நூல்:- முவத்தா மாலிக்-1857
ஒருவர் தனிமையில் இருக்கும் போது அவரின் அனுமதியின்றி படுக்கையறைக்குள்
வந்துவிட்டால் தங்கள் கண்டதை பிறரிடம் சொல்லிக் காட்டுவார்கள் என்பது மட்டுமல்ல,
அது அவர்களுடைய உள்ளங்களில் தவறான எண்ணங்களை உண்டாக்கிவிடும்.
தன் வீட்டுப் பிள்ளைகளுக்குகூட இது போன்ற உயரிய பண்பாட்டை போதிப்பது இஸ்லாம் மட்டுமேயாகும்.
ஒருவர் தன்னுடைய பெற்றோர், சகோதர சகோதரிகள், பிள்ளைகள் போன்றோரின் அறைக்குள் நுழைவதாக இருந்தாலும் பெயரைச் சொல்லி அழைத்தோ,
கதவைத் தட்டியோ அனுமதி பெற்று நுழைவது தான் நாகரீகமாகும்.
அரைகுறை ஆடையுடன் ஒழுங்கற்ற கோலத்தில் அவர்கள் தம் அறையில் இருக்கலாம்.
அனுமதியின்றி உள்ளே சட்டென நுழையும் போது அவர்களுக்கு சங்கடமாகிவிடலாம். அனுமதி கேட்டு
நுழைந்தால் அவர்கள் தன் நிலையை சரி செய்து கொள்வார்கள்; எச்சரிக்கையாகி விடுவார்கள். தனக்கு மிக நெருங்கிய உறவினர்கள்
அறைக்குள் நுழைவதற்கே இந்த நிலை என்றால், பிறர் வீடுகள் நிலையைக் கேட்கவே வேண்டாம்.
பெண்கள் மட்டும் இருந்தால்
நீங்கள் திரும்பிவிடுங்கள் என்று (அவ்வீட்டில் இருக்கும் பெண்கள்
முதலிய எவராலும்) கூறப்பெற்றால் நீங்கள் திரும்பிவிடுங்கள். இதுவே உங்களை பரிசுத்தமாக்கி
வைக்கும். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிவான். திருக்குர்ஆன்:- 24:28
பெண்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்கு பயப்பட்டவர்களாயின்
(அந்நியருடன் பேசும்போது) நளினமாக பேசாதீர்கள். ஏனெனில், (பாவ) நோய் இருக்கும் உள்ளமுடையவர் (தவறான) விருப்பங்களைக் கொள்ளக்கூடும்
திருக்குர்ஆன்:- 33:32
நாம் பிறர் வீட்டுக்குச் செல்லும்போது அங்கு பெண்கள் மட்டும்
இருந்தால் உள்ளே நுழையக்கூடாது. அவசியமான அல்லது அவசரமான செய்தியானால் வீட்டுக்கு வெளியே
நின்றுகொண்டே சுருக்கமாக சொல்லிவிட்டு சென்றுவிட வேண்டும். ஆண்கள் இல்லாதபோது வீட்டுக்குள்
நுழைந்து உட்கார்ந்து கொண்டு, "சகோதரர் வரட்டும் நான் காத்திருக்கிறேன்" என்றெல்லாம் சொல்லக்கூடாது.
மேலும், நம் வீட்டுப் பெண்களும்
வீட்டில் ஆண்கள் இல்லாதபோது, பிறர் தேடி வந்தால்,
"தற்போது ஆண்கள் இல்லை. பிறகு
பேசிக்கொள்ளுங்கள்" என்று கண்டிப்பாக கூற அனுப்பிவிட வேண்டும்.
அந்நிய ஆண்களின் மனதை கவனத்தை தன் பக்கம் ஈர்க்கும்படியாக நளினமாக
பேசுவதும், உரத்த தொனியில் பேசுவதும்
கூடாது. வீட்டினர், "திரும்பி விடுங்கள்"
என்று சொல்லிவிட்டால், உடனே நாம் திரும்பி
விட வேண்டும். என்னை மதிக்கவில்லை என்று வருந்தக்கூடாது. எதிரியாக இருந்தாலும் வந்தவர்களை
வாருங்கள் என்று சொல்வது தான் நாகரீகம் இவர்களுக்கு இதுகூட தெரியவில்லையே என்று அவர்களை
தவறாக எண்ணக்கூடாது. பிறர் சூழ்நிலையைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.
சில காரணங்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எவரும் இல்லாத வீட்டுக்குள்
நுழைந்தால் ( السَّلَامُ عَلَيْنَا
وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ) "நம் மீதும் நல்லடியார்கள்
மீதும் அமைதி எனும் சலாம் உண்டாவதாக" என்று கூறவேண்டும். இதற்கு வானவர்கள் பதில்
கூறுவார்கள்.
திடீரென்று அறிவிப்பு இல்லாமல் ஒருவர் ஏன் மற்றவரின் அறைக்குள்
ஒரு வீட்டுக்குள் நுழையக்கூடாது என்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.
1) அவர்கள் எந்த கோலத்தில் இருப்பார்கள் என்பது நமக்குத்
தெரியாது.
2) தங்களுக்கே உரிய விஷயங்களை பேசிக்கொண்டிருக்கும்போது மற்றவர்கள் நுழைவதை எவரும் விரும்புவதில்லை
3) ஏதோ பேச்சிலும் நினைப்பிலும் இருக்கும் அவர்களுக்கு ஒரே நொடியில் முற்றிலும் புதியவர்களை அல்லது தெரிந்தவர்களை வரவேற்கும் மனநிலை இருப்பதில்லை. இருக்கும் மனநிலையிலிருந்து மாற அவர்களுக்கு சில அறிவிப்பும், சில நொடிகளும் அவகாசமும் தேவைப்படுகின்றன.
நம்முடைய ஒவ்வொரு செயலும் நம் பண்பை காட்ட வல்லவை. அருமை நாயகம்
(ஸல்) அவர்கள் பிறர் வீட்டுக்குள் நுழையும்போது பேண வேண்டிய இந்த பண்பாடுகளை தமது வாழ்நாளிலும்,
தம் சமுதாயத்தினர் வாழ்விலும் நடைமுறைப்படுத்தி
ஒழுக்கம் நிறைந்த சிறந்த சமுதாயமாக உருவாக்கி விட்டுச் சென்றுள்ளார்கள்.
எனவே, நாமும் இந்த ஒழுக்கம்
மாண்புகளை முறையாக கடைபிடித்து, அதன் மூலம் இறையன்பை
பெறுவோமாக! ஆமீன்!
(இந்தக் கட்டுரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.
செல்: 9840535951
No comments:
Post a Comment