Search This Blog

Sunday, 30 November 2025

குறைகளை ஏற்றுக்கொள்வோம்

 

குறைகளை ஏற்றுக்கொள்வோம்

 

وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ قَالَ فَعَلْتُهَا إِذًا وَأَنَا مِنَ الضَّالِّينَ

(ஃபிர்அவ்ன்), "நீர் செய்(ய தகா)த ஒரு காரியத்தையும் செய்தீர். (நான் உன்னை வளர்த்த உபகாரத்திற்கு) நீர் நன்றி கெட்டவராகவே இருக்கிறீர்" என்றான். அதற்கு (மூசா நபியவர்கள்), "நான் அறியாதவனாக இருந்த நிலையில் அதை செய்தேன்" என்று கூறினார். திருக்குர்ஆன்:- 26:19,20

 

மனிதன் நிறைகுறைகள் நிறைந்தவன். வினோதம் என்னவென்றால் நம் குறைகள் நமக்கு தெரிவதில்லை. எனவே, ஒவ்வொருவரும் தமது குறைகள், பலவீனங்கள், பலம் ஆகிவற்றை ஏற்றுக்கொண்டு அதற்கு ஏற்ப செயல்படுதல் அவசியம். குறைகளையும், பலவீனங்களையும் அறிந்தால் தான் அவற்றை களைய முடியும். பலம் எது என்று தெரிந்தால் தான் அதை மென்மேலும் வளர்த்துக்கொள்ள முடியும்.

 

நம்முடைய தவறை பிறர் சுட்டிக்காட்டும்போது அதை உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும். நாம் தவறிழைத்துவிட்டால் "தெரியாமல் நடந்துவிட்டது; அறியாமல் செய்துவிட்டேன்; அடுத்தமுறை திருத்திக்கொள்கிறேன்; மன்னித்துவிடுங்கள்" என்று பணிந்து சொல்வதால், நமது மதிப்பும் மரியாதையும் எந்த விதத்திலும் குறைந்துவிடாது.

 

தவறை உணர்ந்த பின்பு வெளிப்படையாக ஏற்கத் துணிவில்லாமல் அதை நியாயப்படுத்திக்கொண்டே இருப்பது தான் பெரும் தவறாகும் என்கிறது இஸ்லாம்.

 

அறியாதவனாக செய்தேன்

 

மூசா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னின் வளர்ப்பு மகனாக இருந்த காலத்தில் எளியவனை வலியவனொருவன் அநியாயமாக தாக்கிக் கொண்டிருப்பதை காண நேர்ந்தது. அதனால் மூசா (அலை) அவர்கள் கொதித்தெழுந்தார்கள். எளியவனுக்கு உதவுவதற்காக வலியவனை ஓங்கி குத்தினார்கள். எதிர்பாரா விதமாக குத்துப்பட்டவன் வலி தாங்காமல் இறந்துபோனான்.

 

பிற்காலத்தில் இறைத்தூதர் என்றானபோது ஃபிர்அவ்னிடம் நபியவர்கள் மூசா (அலை) அவர்கள் ஏகத்துவத்தை எடுத்துரைக்க வந்தபோது இந்நிகழ்ச்சியை நினைவுப்படுத்தினான். அப்போது மூசா (அலை) அவர்கள், "அந்த பாவச்செயலை நான் அறியாதவனாக இருந்த நிலையில் செய்துவிட்டேன்" என்று கூறி தனக்கு நேர்ந்துவிட்ட தவறை உணர்ந்து மறுத்து பேசாமல் ஒப்புக்கொண்டார்கள். இதைத்தான் தலைப்பில் காணும் திருவசனம் கூறுகிறது.

 

இறைத்தூதர்கள் போன்ற நல்லோர்கள் பழக்கம் குறைகளைச் சுட்டிக்காட்டினால் அதை ஒப்புக்கொள்வார்கள். ஆனால் நம்ரூத், ஃபிர்அவ்ன், அபூஜஹ்ல் போன்ற தீயவர்களிடம் அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தவறுகளை சுட்டிக்காட்டியவரின் வாயை அடைக்க என்ன வழி? அல்லது அவர்களின் மூச்சை நிறுத்த என்ன வழி? என்று சிந்திப்பார்கள்.

 

அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். என்னுடைய குறைகளை நீங்கள் சுட்டிக்காட்டாவிட்டால் உங்களிடமிருந்து எனக்கு எந்தவித நன்மையும் இல்லை. அப்படி உங்களால் எனது குறைகளை சுட்டிக்காட்டப்பட்டு அதனை நான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்னிடமிருந்து உங்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

 

நியாயமான கூற்று

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள்  கூறியதாவது. (வீட்டுக்குள் இருந்த நபிகள் நாயகம் - ஸல் அவர்களின் புனித உடலை பார்த்துவிட்டு) அபூபக்ர் (ரலி) அவர்கள் வெளியே வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் (நபியவர்கள் இறக்கவில்லை என்று கோபமாக) பேசிக் கொண்டிருந்தார்கள். இதைக்கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள், ( اِجْلِسْ يَا عُمَرُ ) "உமரே! அமருங்கள்" என்று கூறினார்கள்  உமர் (ரலி) அவர்கள் அமர மறுத்தார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களை நோக்கி! இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, "முஹம்மத் (நபி) ஓர் தூதரேயன்றி (இறக்காமல் இருக்கக்கூடிய இறைவன்) அல்லர். அவருக்கு முன்பும் இவ்வாறே பல தூதர்கள் சென்றிருக்கின்றனர்." (திருக்குர்ஆன்:- 3:144) என்ற வசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள்.

 

உடனே உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். ( وَاللَّهِ مَا هُوَ إِلاَّ أَنْ سَمِعْتُ أَبَا بَكْرٍ تَلاَهَا فَعَقِرْتُ حَتَّى مَا تُقِلُّنِي رِجْلاَىَ، وَحَتَّى أَهْوَيْتُ إِلَى  الأَرْضِ حِينَ سَمِعْتُهُ تَلاَهَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدْ مَاتَ ) அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலி) அவர்கள் இந்த வசனத்தை ஓத நான் கேட்டபோதுதான், அது என் நினைவுக்கே வந்தது. எனவே, அதிர்ச்சியடைந்தேன். அப்போது என் கால்களால் என் (உடல்) சுமையையே தாங்க முடியவில்லை. அபூபக்ர் (ரலி) அவர்கள் ஓதிக்காட்டிய இவ்வசனத்தைக் கேட்டு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து நான் தரையில் விழுந்துவிட்டேன். நூல்:- புகாரீ-4454  

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சியில் இரவு காலங்களில் நகர்வலம் வரும்போது ஒரு வீட்டிலிருந்து இன்னிசை கேட்டது. உடனே உமர் (ரலி) அவர்கள் சந்தேகப்பட்டு அந்த வீட்டின் சுவரை ஏறி குதித்து வீட்டுக்குள் புகுந்தார்கள். அங்கு பாடல் இசைத்தபடி ஒரு மனிதரும் அவர் அருகே மது புட்டியும் ஒரு மங்கையும் இருப்பதை கண்டு கோபமடைந்தவர்களாக, "அல்லாஹ்வின் விரோதியே! உன்னை அல்லாஹ் பார்க்கவில்லை என்று எண்ணிக்கொண்டாயா?" என்று கேட்டார்கள்.

 

அதற்கு அம்மனிதர், "உமரே! நான் சில விஷயத்தில் அல்லாஹ்வுக்கு மாறுசெய்கிறேன். நீரும் சில விஷயத்தில் அல்லாஹ்வுக்கு மாற்றம் செய்துவிட்டீரே!" என்று கூறினார்.

 

"வீடுகளுக்கு செல்வதாக இருந்தால் அவைகளின் தலைவாசல்கள் வழியே செல்லுங்கள்" (2:189) என்பது இறைவசனம். ஆனால், நீங்களோ வீட்டின் தலைவாசல் வழியாக வராமல் வீட்டின் சுவரேறி குதித்து உள்ளே வந்து விட்டீர்கள்.

 

"பிறர் வீட்டுக்கு செல்லும்போது வீட்டினருக்கு சலாம் கூற வேண்டும். அனுமதி பெறாமல் நுழையக்கூடாது" (24:27) என்பது இறைவசனம். அதற்கு மாற்றமாக நீங்களோ எனக்கு சலாம் கூறவில்லை. என்னிடம் அனுமதியும் பெறவில்லை" என்று அம்மனிதர் உமர் (ரலி) அவர்களின் சில குறைகளை எடுத்துரைத்தார். 

 

இவரின் கூற்றில் நியாயம் இருப்பதை உமர் (ரலி) அவர்கள் உணர்ந்து தனது தவறை எண்ணி வேதனைப்பட்டார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் அம்மனிதரை நோக்கி! "நண்பரே! நான் எனது தவறை உணர்ந்துகொண்டேன். நீயும் உனது தவறை உணர்ந்து மனம் வருந்தி, திருந்திவிடு!" என்று கூறினார்கள். நூல்:- கன்ஸுல் உம்மால்

 

உமர் (ரலி) அவர்கள் அம்மனிதரின் தீய செயலை திருத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு நுழைந்தபோது அம்மனிதர் உமர் (ரலி) அவர்களின் இச்செயல் தவறாகும் என்பதற்கு இறைவசனங்களை சான்றாகக் கூறி உள்ளத்தை நெகிழ வைத்துவிட்டார்.

 

எவராக இருந்தாலும் சரி, அவர்கள் சொல்வது சரியானதாக இருக்குமானால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தவறாக இருக்குமானால் விட்டுவிடலாம்.

 

இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்வதை மட்டும் எவ்வித கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் நபித்தோழர்கள் மார்க்க விஷயங்கள் குறித்து அவ்வப்போது விவாதம் செய்வார்கள். குர்ஆன் மற்றும் நபிமொழிகளிலிருந்து அதற்குரிய ஆதாரங்களை எடுத்துரைப்பார்கள். அப்போது அவர்களின் விவாதங்களையும் ஆதாரங்களையும் உமர் (ரலி) அவர்கள் ஏற்றுக்கொண்டு தன்னுடைய சொல் மற்றும் செயலில் தவறு ஏற்பட்டிருந்தால் உடனே திருத்திக் கொள்வார்கள்.

 

உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். எவர் என் குறைகளை என் முன் எடுத்துக்காட்டுகிறாரோ அவரே என் நண்பர் ஆவார். எவர் என் முன்னால் என்னைப் புகழ்கிறாரோ அவர் என் கழுத்தை அறுப்பவர் போன்றவராவார்.

 

கண்ணாடியாய் இருப்போம்

 

மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான். திருக்குர்ஆன்:- 4:28

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْمُؤْمِنُ مِرْآةُ الْمُؤْمِنِ ) ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறைநம்பிக்கையாளருக்கு (குறைகளை எடுத்துச் சொல்லித் திருத்தும்) கண்ணாடி ஆவார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4272, அல்அதபுல் முஃப்ரத்-239

 

உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் ஜனாதிபதி பொறுப்பேற்ற முதல் நாளன்று அரசு பணிகளையெல்லாம் முடித்துவிட்டு களைப்புடன் வீட்டுக்கு வந்து காலை உணவை முடித்துவிட்டு படுத்துவிட்டார்கள். இறையச்சமும் நல்லொழுக்கமும் நிறைந்த அன்னாரின் மகனார் அப்துல் மலிக் (ரஹ்) அவர்கள் அப்போது அங்கு வந்தார். வந்தவர் தமது தந்தைக்கு சலாம் கூறிவிட்டு, "(முன் சென்ற ஆட்சியாளர்களான) பனூ உமையாக்கள் பொதுமக்களிடமிருந்து அபகரித்து வைத்துள்ள பொருள்களைத் திருப்பிக் கொடுக்கும்முன் தாங்கள் தூங்க விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்.

 

அன்னார், "லுஹர் தொழுகைக்குப் பின் அந்த வேலையைச் செய்கிறேன்" என்று கூறினார்கள். மகனார், லுஹர் வரையில் தாங்கள் உயிருடன் இருப்பீர்கள் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது?" என்று கேட்டார்.

 

இதை கேட்டதும் அன்னார் துள்ளி எழுந்தார்கள். மகனை ஆரதழுவியவர்களாய், "மார்க்க காரியங்களில் எனக்கு உதவி செய்யக்கூடிய பிள்ளையைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி!" என்று கூறினார்கள்.

 

கண்ணாடி நம்முடைய குறைகளை நம்மிடம் மட்டுமே சுட்டிக்காட்டும். அதுபோல் நல்ல நண்பன் என்பவன் நம்முடைய குறைகளை தயங்காமல் முழுமையாக சுட்டிக்காட்டி நம்மை திருத்துபவனாக அமைய வேண்டும்.

 

கண்ணாடி நமது குறைகளை எடுத்துரைக்கும்போது, "என் குறைகளையா எடுத்துரைக்கிறாய்?" என்றெண்ணி நாம் அதை அடித்து உடைத்து விடுவதில்லை. மாறாக, அது எடுத்துரைக்கும் குறைகளை முழு மனதுடன் நாம் ஒப்புக்கொள்கிறோம். பிறர் நமது குறைகளை நல்ல மனதுடன் சொல்லும்போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, தன்னை திருத்திக்கொள்கின்ற பக்குவம் வேண்டும்.

 

மனிதனாக பிறந்தவன் எவனும் தவறுகளுக்கும், குறைகளுக்கும் அப்பாற்பட்டவன் அல்லன். ஆனால், தவறு என்று உணர்ந்த பின்போ அல்லது உணர்த்தப்பட்ட பின்போ அந்தத் தவறை ஒப்புக்கொள்ள தயாராக இருக்கிறோமா என்பது தான் நம்மை மற்றவரிடமிருந்து வித்தியாசப்படுத்தும். செய்தது தவறா? தவறில்லையா? என்பதுகூட பிரச்சினையன்று. நான் அதை ஒப்புக்கொள்வதா? என்கிற அகங்கார நினைப்புதான் பிரச்சனை.

 

வியாபாரம் செய்தாலும், விளையாட்டில் ஈடுபட்டாலும் நமது தவறுகளை ஏற்றுக்கொள்வதை பொறுத்துதான் வாழ்க்கையில் நமது வெற்றி அமைகிறது. வளர்ச்சி நோக்கி செல்லும் ஒருவரிடம் நிறைகுறை இருக்கும். அதை அடையாளம் கண்டு களைய வேண்டியவற்றை களைந்து, வளர்க்க வேண்டியவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

 

வாரப்பத்திரிகை மற்றும் மாதப் பத்திரிகைகளிலும் வாசகர்கள் வட்டம் என்று ஒரு பகுதி இருக்கும். மேலும், அனைத்து டி.வி. நிகழ்ச்சிகளுக்கு பின்பும் விமர்சனங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன என்ற ஒரு வாக்கியம் வரும். அதன் மூலம் வாசகர்கள் நமது பத்திரிக்கையில் உள்ள குறைகளையும், பார்வையாளர்கள் நமது நிகழ்ச்சியில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும்; பிறகு குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்; பிறகு அதில் மென்மேலும் வளர்ச்சி காண வேண்டும் என்பதே அவைகளின் நோக்கமாகும்.

 

நாவிதரின் ஞானம்

 

சட்டக்களஞ்சியம் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நான் மக்காவில் இருந்தபோது ஹஜ்ஜுடைய காரியங்களில் ஐந்து தவறுகள் செய்துவிட்டேன். அவற்றை ஒரு நாவிதர் எனக்குச் சுட்டிக்காட்டினார். நான் திருத்திக்கொண்டேன்.

 

ஹஜ் கடமைகளில் இறுதியானது தலைமுடி நீக்குதல். அங்கிருந்த ஒரு நாவிதரிடம், "தலைமுடி சிரைக்க எவ்வளவு கூலி?" என்றேன். அதற்கு அவர் "இறைவழிபாட்டை நிறைவேற்றுவதில் பேரம் பேசுதல் கூடாது. உங்களால் இயன்றதை தாருங்கள். இப்போது உட்காருங்கள்" என்றார்.

 

நான் கிப்லாவை கவனிக்காமல் உட்கார்ந்தபோது, அவர், கிப்லாவை முன்னோக்கி அமரும்படி சைகை செய்தார்.

 

நான் கவனக்குறைவால் தலையின் இடப்பக்கத்தைக் காட்டியபோது அவர், "முதலில் வலப்புறத்தை காட்டுங்கள்" என்றார்.

 

நான் முடி சிரைக்கும்போது மௌனமாக இருந்தேன். அவர், "ஏதேனும் தக்பீர் கூறிக் கொண்டிருங்கள்" என்றார்.

 

நான் முடி சிரைக்கப்பட்டதற்கு பின்பு எழுந்து நின்று வாகனத்திற்கு செல்லலாம் என்று எண்ணியபோது அவர், "இரண்டு ரக்அத்துக்கள் தொழுதுவிட்டு செல்லுங்கள்" என்றார்.

 

இந்த நாவிதர் எனது ஒவ்வொரு தவறையும் சுட்டிக்காட்டியபோது நான் ஆச்சரியமடைந்தேன். இவர் சாமானிய மனிதனாக இருக்க முடியாது. ஹஜ்ஜின் சுன்னத்துக்களை இவ்வளவு நுட்பமாக கற்றுத் தேர்ந்துள்ளாரே என்றெண்ணி, இவரைப்பற்றி விசாரித்தபோது தான் இவர் மாமேதை அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் என்று அறிந்துகொண்டேன்.

 

பிறர் நம்மை குறை சொல்லும்போது நமது பலவீனங்களை எண்ணமாக படம் பிடித்துக்காட்டுகிறார் என்று அனுபவித்து ரசிக்க வேண்டும். பிடிச்சார்யா பாயிண்டை! என்று சொல்லி உண்மையான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆமாம் என்று தலையாட்ட வேண்டும்.

 

நியாயப்படுத்த வேண்டாம்

 

இறைவன் ஷைத்தானை நோக்கி! "நீ ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கு மரியாதை செய்!" என்று கூறினான். ஷைத்தான் இறைவனின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் மறுத்து பேசுவது தவறு என்று உணர்ந்திருந்தும், மறுத்துப் பேசி தவறிழைத்தான்.

 

அந்தத் தவறை ஒப்புக்கொள்ளாமல் அதை நியாயப்படுத்த வார்த்தைகளை அடுக்கினான். அதாவது, "ஆதம் (அலை) அவர்கள் களிமண்ணால் படைக்கப்பட்டவர். நான் நெருப்பால் படைக்கப்பட்டவன். உயர்ந்தவன் தாழ்ந்தவருக்கு மரியாதை செய்து என்பது நியாயமில்லை" என்று வாய்ப்பந்தல் போட்டான். அதன் விளைவு, இறைவனால் சபிக்கப்பட்டு விரட்டப்பட்டான் என்கிறது திருக்குர்ஆன். (7: 12,13 - 15: 33,34,35)

 

நமது தவறை பிறர் சுட்டிக்காட்டிய பிறகும் ஒப்புக்கொள்ளாமல் அதை நியாயப்படுத்த மேலும் வார்த்தைகளை அடக்கிக்கொண்டே போவது மிகவும் அபாயகரமானது.

 

இணைவைப்பாளர்களாக வாழ்ந்த மக்களிடம் பல இறைதூதர்கள் வந்து அவர்களின் தவறுகளை எடுத்துரைத்து அதனை உணர்ந்து திருந்தி, ஏகத்துவவாதிகளாக மாறிவிடுங்கள் என்று கூறினார்கள். அவர்களின் தவறை உணர்ந்து திருந்தியவர்கள் இறைநம்பிக்கை கொண்டு வாழ்வில் வெற்றி பெற்றனர். தவறை உணராதவர்கள் அல்லது உணர்ந்தும் திருந்தாதவர்கள் இணைவைப்பாளர்களாக வாழ்ந்து இறைவனின் சாபத்தைப் பெற்று தோல்வியைத் தழுவி, மீள முடியாத நரக படுகுழியில் வீழ்ந்துவிட்டனர்.

 

துறவியானது எப்போது?

 

எவரேனும் தன்னுடைய தீயச் செயலுக்குப்பின் (கைசேதப்பட்டு தன் குற்றத்தை) சீர்திருத்திக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து விடுவான். திருக்குர்ஆன்:- 6:54

 

இறைநேசச் செல்வர் இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்கள் பல்க் நாட்டை அரசாட்சி செய்து கொண்டிருந்தபோது தனக்கு துறவறத்தின் பக்கம் நாட்டம் எப்படி ஏற்பட்டது என்பதை அவர்களே கூறுகிறார்கள்.

 

எனது படுக்கையில் மலர் இதழ்களை பரப்பும் பணி மேற்கொண்ட எனது அடிமைப்பெண் ஒருநாள் அந்த படுக்கையில் படுத்துறங்கிக் கொண்டிருந்தாள். அதைக் கண்டு அதிர்ச்சியுற்ற நான் அந்த அடிமையை சாட்டையால் அடித்து விளாசினேன். அலறித் துடித்துக்கொண்டு எழுந்த அவள் என்னைப் பார்த்து சிரித்தாள். அடிகளை பொறுத்துக்கொண்டு சிரிப்பதற்கான காரணத்தை வினவினேன்.

 

அதற்கு அவள், "சற்று நேரம் இந்த மலர் படுக்கையில் கண்ணயர்ந்த எனக்கு இந்தளவிற்கு தண்டனை என்றால், காலமெல்லாம் இதில் படுத்துறங்கும் தங்களுக்கு எவ்வளவு தண்டனை கிடைக்குமோ? என்று எண்ணிப் பார்த்தேன். நான் பெற்ற தண்டனை எனக்கு குறைவானதாகவே தோன்றியது. எனவே, நிம்மதி பெரும் மூச்சோடு சிரித்தேன்" என்று அந்த அடிமைப்பெண் கூறினாள்.

 

ஆடம்பர வாழ்க்கை எனும் தவறை எனக்கு எடுத்துரைத்தாள். பிறகு உணர்ந்தேன். எளிமையின் நாட்டம் கொண்டு திருந்தினேன்.

 

நம்முடைய குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள், மேலதிகாரிகள், தமக்கு கீழ் பணிபுரிபவர்கள், முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் என யாராக இருந்தாலும் சரி, அவர்கள் நம்முடைய குறை மற்றும் தவறுகளை எடுத்துரைத்தால், அதை ஒப்புக்கொள்ள தயங்கக்கூடாது.

 

தனது தவறை பிறர் சுட்டிக்காட்டினாலும் அல்லது தானாகவே அறிந்துகொண்டு திருத்திக்கொண்டாலும் சரி, எப்படியோ தவறை உணர்ந்து திருந்தி வாழ இறைஞ்சுவோரை இறைவன் மன்னிக்கிறான்.

 

தன்னுடைய பேச்சின் மூலமா அல்லது எழுத்தின் மூலமோ மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கும் அழைப்பாளர்களிடம் அவர்களுடைய பேச்சிலும் எழுத்திலும் உள்ள தவறுகளை பிறர் உணர்த்தினால் அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு, உடனே திருத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

 

ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சியினர் கூறும் எல்லா குற்றச்சாட்டுகளையும் கண்டு கொள்ளாமல், "இவர்களுக்கு வேறு வேலை இல்லை" என்றெண்ணி அலட்சியப்படுத்திவிட்டால் மக்களின் நன்மதிப்பைப் பெறுவது சிரமமாகிவிடும். அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை ஆலோசித்து, அது உண்மையானால் அதை களைய முற்பட வேண்டும். அப்போதுதான் ஆட்சி நிலைத்து நிற்கும்.

 

ஒரு மருத்துவ ஸ்கேன் அறிக்கையில் கோளாறு சுட்டிக்காட்டப்பட்டால், உடனே சிறப்பு மருத்துவர்களைத் தேடி ஓடுகிறோம். நம் பேச்சு மற்றும் செயல்களிலுள்ள குறைபாடுகளை எதிராளி ஒருவர் செலவின்றி கண்டுபிடித்து தரும்போது அதை கிழித்து குப்பைத் தொட்டியில் போட எண்ணுவது சரியான அணுகுமுறையாகாது.

 

தவறுகளை ஒப்புக்கொள்வது என்பது எதிரிகளை நண்பர்களாகித் தரும் பலம். எதிர்த்து வீழ்த்த முடியாத பலம். குறைகளை மூச்சுவிடாமல் நிறைகளை மட்டுமே பேசி ஜால்ரா போடும் கூட்டங்களுக்கு மத்தியில் வாழ்வோர் வளர்ந்து சாதித்ததாக வரலாறு இல்லை.

 

குற்றச்சாட்டுகளில் உள்ள உண்மையை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்லி, அவற்றிற்கான முயற்சிகளை மேற்கொள்ள முன்வந்து செயலிலும் இறங்குவது தான் புத்திசாலித்தனம். இதுவே, நல்லோர்களின் நற்குணமாகும்.

 

நம்முடைய குறைகளை அடையாளம் கண்டு, அதை களைந்து கண்ணியத்துடன் வாழ, அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! ஆமீன்!


(இந்தக் கட்டுரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

 

No comments:

Post a Comment

குறைகளை ஏற்றுக்கொள்வோம்

  குறைகளை ஏற்றுக்கொள்வோம்   وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ قَالَ فَعَلْتُهَا إِذًا وَأَنَا مِنَ الضّ...