Search This Blog

Tuesday, 25 November 2025

கண்களுக்குரிய கடமை

 

கண்களுக்குரிய கடமை

 

وَهُوَ الَّذِي جَعَلَ لَكُمُ اللَّيْلَ لِبَاسًا وَالنَّوْمَ سُبَاتًا وَجَعَلَ النَّهَارَ نُشُورًا

அவன் தான் உங்களுக்கு இரவை போர்வையாகவும், நித்திரையை ஓய்வழிக்கக்கூடியதாகவும், பகலை (உங்கள்) நடமாட்டத்திற்காக (பிரகாசமாக)வும் ஆக்கினான்  திருக்குர்ஆன்:- 25:47

 

தூக்கம் அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு வழங்கியுள்ள மிகப்பெரிய அருட்கொடையாகும். உடலுக்கு சிறந்த நலத்தையும், உள்ளத்திற்கு அமைதியையும், மூளை வளர்ச்சியையும், நிம்மதியையும் வழங்குவதில் தூக்கம் தனிப்பெரும் செல்வமாகும். ஆழ்ந்த தூக்கத்தினால் பெறப்படுகின்ற மேற்கூறப்பட்ட பலன்களை உலகில் உள்ள உணவுகளினாலோ, ஊட்டச்சத்தினாலோ, மருந்துகளினாலோ  பெற முடியாது.

 

மனிதன் மற்றும் பிற உயிரினங்கள் அனைத்துக்கும் தூக்கம் தேவையாகும். உறங்காத உயிரினங்கள் உலகில் இல்லை. தூக்கம் கெட்டால் எல்லா செயல்களுமே ஒருவித தேக்க நிலையை அடைந்துவிடும். தூக்கத்தைப்பற்றி சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் நிறைய கருத்துக்களை தெரிவிக்கின்றன.

 

தசைநோவு நீங்க

 

வெகுநேரம் உடல் உழைத்து வேலைகள் செய்தாலும், உடற்பயிற்சி போன்ற காரியங்களில் ஈடுபட்டாலும் கழிவு பொருள்கள் உடலிலுள்ள தசைகளில் ஏற்பட்டுவிடுகின்றன. எவ்வளவு வேகமாக உடலின் தசைகளில் கழிவுப்பொருள்கள் உண்டாகின்றனவோ அவ்வளவு வேகமாக அப்போதைக்கப்போதே இரத்தமானது அக்கழிவுப்பொருள்களை அகற்றுவதில்லை. அதனால், அக்கழிவுப்பொருள்களில் ஒரு பகுதி தசைகளிலேயே தங்கிவிடுகிறது அப்படி தங்குவதால் தசைநோவு ஏற்படுகிறது. இதையே தசைசோர்வு என்பர்.

 

இந்த தசைசோர்வை அகற்ற வேண்டுமெனில் தசைகளுக்கு நல்ல ஓய்வு கொடுக்க வேண்டும். அப்படி ஓய்வு கொடுத்தால் இரத்தம் அந்த தசைகளில் தங்கிய கழிவுப்பொருள்களை வெளியேற்றிவிடும். தசைசோர்வு, நோவு நீங்கி மீண்டும் வேலைகள் ஈடுபட உடல் தயாராகிவிடும். இதற்கு ஆழ்ந்த உறக்கமே சிறந்த சாதனம் என்கிறது அறிவியல் ஆய்வு.

 

வெற்றிகள் குவிய

 

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற, தூக்கம் எந்தளவு உதவுகிறது என்று அமெரிக்காவில் உள்ள "ஸடான் போர்டு" பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். இதற்காக பல்கலைக்கழகத்தில் உள்ள இளம் நீச்சல் வீரர் மற்றும் வீராங்கனைகள் அணியை பயன்படுத்தி பரிசோதனைகள் செய்தனர்.

 

வீரர் மற்றும் வீராங்கனைகளை தனித்தனி அணியாக பிரித்தனர். இதில் ஒரு பிரிவினருக்கு தினமும் வழக்கமான பயிற்சியுடன் பத்து மணி நேரம் தூக்கம் அளித்தனர். இன்னொரு பிரிவினருக்கு பயிற்சியுடன் ஏழு மணி நேரத்திற்கும் குறைவான அளவில் தூக்கம் கொடுக்கப்பட்டது. மேலும், போட்டிகள் தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு ஒரு பிரிவினருக்கு ஓய்வும் தூக்கமும் அளிக்கப்பட்டது. மற்றொரு பிறவினர் தூங்க அனுமதிக்கப்படவில்லை.

 

இங்கு ஆய்வின் முடிவில் நன்றாக தூங்கி ஓய்வு எடுத்த வீரர் வீராங்கனைகள் பிரிவு தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். நன்றாக தூங்காத பிரிவினர் சுமாராகவே செயல்பட்டனர்.

 

ஆழ்ந்த தூக்கத்துடன் ஓய்வு எடுக்கும்போது மூளை மற்றும் உடல் உறுப்புக்கள் நன்றாக ஓய்வு பெறுவதுடன் தம்மை புதுப்பித்துக் கொள்ளவும் செய்கின்றன. எனவே தான் ஆழ்ந்த தூக்கத்திற்குப் பிறகு மூளையும், உடல் உறுப்புகளும் புதிய உற்சாகத்துடன் செயல்பட்டு வெற்றிகளை குவிக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

 

மேலும், இந்த ஆய்வின் முடிவில் இளைஞர்களுக்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை தூக்கம் தேவை என்றும், சிறுவர்களுக்கு ஒன்பது மணி நேரம் தூக்கம் தேவை என்றும், குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு பத்து மணி நேரம் தூக்கம் தேவை என்றும் கூறுகின்றனர். எந்த போட்டி மற்றும் பரீட்சையாக இருந்தாலும் நன்றாக தூங்கி ஓய்வெடுத்த பிறகு கலந்து கொண்டால், வெற்றி பெறலாம்.

 

தூக்கம் குறைவு, தூக்கம் கெடுதல் ஏற்படும்போது மனித உடலைக் கட்டிக்காக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி வேகமாக குறைந்துவிடுகின்றன என்றும், இதனால் பல வகையான நோய்கள் தூக்கம் இல்லாதவர்களை எளிதில் தாக்கக்கூடிய அபாயம் அதிகம் இருப்பதாகவும் விஞ்ஞானிகளின் அபிப்பிராயமாகும்.

 

நம்மிடம் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் உடல்நலத்திற்கு எந்த மருத்துவத்தாலும் உத்திரவாதம் கொடுக்க முடியாது.

 

மூன்றாவது கண்

 

நமது தலையில் நெற்றியின் மத்தியில் (Third Eye) "மூன்றாவது கண்" என்ற சுரப்பி இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். இவை சூரியஒளி, இருட்டு இதற்கு ஏற்ற மாதிரி பிரதிவினை புரிகிறது. விளக்கமாகச் சொன்னால் "சென்சார் லைட்" மாதிரி ஒளிக்குறைந்தவுடன் தூக்க கட்டுப்பாட்டு மையத்தை இயக்கி நம்மை தூங்க வைத்து விடுகிறது. இந்த மூன்றாவது கண் இயங்குவதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் தூக்கத்தைப்பற்றி ஆராய எலிகளை வைத்து பரிசோதனை செய்து பார்த்தார்கள்.

 

ஒரு அறையில் 24 மணி நேரமும் வெளிச்சம் இருக்கும்படி அதிகமாக ஒளிபடும்படி செய்து அதில் எலிகளை வைத்தார்கள். இதனால் பாதிப்படைந்த மூன்றாவது கண் குழப்பநிலையை அடைந்ததால் எலிகள் உறக்கம் இல்லாமல் அமைதியற்று பைத்தியம் பிடித்த மாதிரி அங்கும் இங்கும் அலைந்து பின்பு இறந்து விட்டன.

 

வெகுகாலம், தேவையான அளவு தூங்காமல் இருப்பது மூளைக்கு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும். தூக்கமின்மையால் நமது வேலைத்திறன் குறைகிறது; உடல் சக்தி அதிகம் செலவாகிறது; உடல் பலகீனம் அடைகிறது.

 

தேவையான அளவு தூக்கத்துடன் ஓய்வுகொள்ளும்போது வேலை செய்யும் திறன் அதிகரிக்கிறது; அப்போது குறைந்த அளவு சக்தி செலவாகிறது; நாம் களைப்பு அடைவது தாமதப்படுகிறது; புத்துணர்ச்சி கிடைக்கிறது.

 

மனிதன் தூங்கும்போது மூளை சுத்திகரிப்பு வேலையை செய்கிறது. அதாவது, அன்றைய தினத்தில் நடந்த நிகழ்வுகளை அது தொடர்பாக மூளையில் பதிவான தகவல்களை புரட்டிப் பார்க்கிறது. இந்த நிகழ்வின்போது தேவையான தகவல்களைத் தவிர மற்ற தகவல்களை மூளை தனது நினைவுப் பகுதியிலிருந்து அழித்துவிடுகிறது என்கிறது அறிவியல் உலகம்.

 

சோர்வோடு இறைவணக்கமா?

 

மன அமைதிக்காக சிற்றுறக்கம் உங்களை தழுவுமாறு அவன் தன் (அருளி)னால் செய்ததை நீங்கள் எண்ணிப் பாருங்கள். திருக்குர்ஆன்:- 8:11

 

பத்ருப்போர் அன்று முஸ்லிம்கள் கடுமையான சோதனைகள் இருந்தபோது அவர்களது உள்ளம் நிம்மதியும் அமைதியும் அடைய வேண்டும் என்பதற்காக போர்முனையில் அவர்களுக்கு சிற்றுறக்கத்தை அல்லாஹ் உண்டாக்கினான். எதிரிகள் எண்ணிக்கை அதிகமாகவும் தன் அணியினர் எண்ணிக்கை குறைவாகவும் இருந்ததால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பதட்டத்தை அந்த சிற்றுக்கத்தின் மூலம் அல்லாஹ் தணித்தான். போர்முனை போன்ற பதட்டமான நேரங்களில் ஒருவருக்கு தூக்கம் வருவது அவர் அமைதியாக உள்ளார் என்பதற்கு சான்றாகும். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறியதாவது. உஹுது போரின்போது சிற்றுறக்கம் ஆட்கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். எந்த அளவுக்கென்றால் எனது வாள் எனது கையிலிருந்து பலமுறை (நழுவி) விழுந்துவிட்டது. அது விழ நான் எடுப்பேன். (மீண்டும்) அது விழ அப்போதும் நான் அதை எடுப்பேன். நூல்:- புகாரீ-4068

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. என்னிடம் ஒரு பெண்மணி இருந்தபோது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்கு வந்து, ( مَنْ هَذِهِ ) "இவர் யார்?" என்று வினவினார்கள். நான், ( امْرَأَةٌ لاَ تَنَامُ تُصَلِّي ) "இவர் (இன்னார்;) இவர் (இரவெல்லாம்) உறங்காமல் தொழுதுகொண்டே இருப்பார்" என்று கூறினேன். நபியவர்கள், ( عَلَيْكُمْ مِنَ الْعَمَلِ مَا تُطِيقُونَ فَوَاللَّهِ لاَ يَمَلُّ اللَّهُ حَتَّى تَمَلُّوا ) "நற்செயல்களில் உங்களால் இயன்றதை செய்து வாருங்கள்  அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் சடைவடையாதவரை அல்லாஹ்வும் சடைவடைய மாட்டான்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-1439

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا نَعَسَ أَحَدُكُمْ فِي الصَّلاَةِ فَلْيَرْقُدْ حَتَّى يَذْهَبَ عَنْهُ النَّوْمُ فَإِنَّ أَحَدَكُمْ إِذَا صَلَّى وَهُوَ نَاعِسٌ لَعَلَّهُ يَذْهَبُ يَسْتَغْفِرُ فَيَسُبُّ نَفْسَهُ ‏ ) உங்களில் எவரேனும் கண்ணயர்ந்துவிட்டால் அவர் தம்மைவிட்டு தூக்கம் அகழும்வரை தூங்கிவிடட்டும். ஏனெனில், உங்களில் ஒருவர் உறங்கியவாரே தொழுவார். ஆனால், அவர் (உணர்வில்லாமல்) பாவமன்னிப்பு கோரப்போக, அவர் தம்மைத்தானே ஏசி (சபித்து)விடக்கூடும் நூல்:- புகாரீ-212, முஸ்லிம்-1440

 

தூக்கம் கண்களை தழுவும்போது இறைவணக்கத்தை தள்ளிப்போடுவதே சிறந்தது. தூக்கம், பசி, மலம் ஜலம் கழித்தல் போன்ற தேவைகளை முடித்த பின்னர் இறைவணக்கத்தில் ஈடுபடுவதையே இஸ்லாம் விரும்புகிறது. தூக்கத்தை புறக்கணித்துவிட்டு இரவு முழுவதும் தொழுகையில் ஈடுபடுவதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் விரும்பவில்லை. இரவையும் மூன்று பகுதிகளாக பிரித்து அதன் இறுதிப் பகுதியில் இறைவணக்கம் புரிவதே நபிவழியாகும்.

 

இரவு கதைகள் வேண்டாம்

 

அபூபர்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் இஷா (தொழுகை)க்கு முன் உறங்குவதையும் இஷா (தொழுகை)க்கு பின் பேசுவதையும் வெறுப்பவர்களாக இருந்தார்கள். நூல்:- புகாரீ-568

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தமது மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களை கடந்து சென்றபோது, ஃபாத்திமா (ரலி) அவர்கள் அதிகாலை (சுப்ஹு) நேரத்தில் படுத்துறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது நபியவர்கள் தங்கள் மகள் பாத்திமா (ரலி) அவர்களை தமது காலால் உசுப்பிவிட்டு, ( يَا بُنَيَّةُ، قَوْمِي اشْهَدِي رِزْقُ رَبِّكِ، وَلَا تَكُونِي مِنَ الْغَافِلِينَ، فَإِنَّ اللَّهَ يُقْسِمُ أَرْزَاقَ النَّاسِ مَا بَيْنَ طُلُوعِ الْفَجْرِ إلَى طُلُوعِ الشَّمْسِ )  "என்னருமை மகளே! எழுந்து உன் இறைவனின் பொருளாதாரத்தை எதிர்பார்(த்துப் பிரார்த்தி)ப்பீராக. நீ கவனக்குறைவானவர்களில் ஒருவராகி விடாதே. ஏனென்றால், அல்லாஹ் அதிகாலையிலிருந்து சூரிய உதயத்திற்கு இடையில் மக்களுக்கு வாழ்வாதாரங்களைப் பங்கிடுகிறான்" என்று கூறினார்கள். நூல்:- இப்னு ஹிப்பான், ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, அத்தர்ஙீபு வத்தர்ஹீபு, ஜாமிஉல் அஹாதீஸ் இமாம் சுயூத்தீ

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( نَوْمُ الصُّبْحَة يُمْنَعُ الرِّزْقَ ) அதிகாலைத் தூக்கம் இரணத்தை தடை செய்யும். அறிவிப்பாளர்:- உஸ்மான் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், பைஹகீ, அல்காமில் இமாம் இப்னு அதிய்யி

 

இஷா தொழுகைக்கு பின் உடனே தூங்கிவிட்டால் தஹஜ்ஜுத் தொழுவதும் ஃபஜ்ரு தொழுவதும் இலகுவாகிவிடும். நம்முடைய இரணத்திலும் இறைவன் அபிவிருத்தி ஏற்படுத்துவான்.

 

இரவு தூக்கத்தை வெகுநேரம் வரை பிற்படுத்தினால் ஃபஜ்ரு தொழுவதுகூட சிரமமாகிவிடும். இதனால் இரவு கதைகள் பேசுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இரவில் வெகுநேரம் கண் விழித்திருப்பவர்களில் பெரும்பாலோர் சூரிய உதயத்திற்கு பின்னரே தூக்கத்திலிருந்து விழித்தெடுக்கிறார்கள். இதனால் உடலில் பலவீனம் ஏற்பட்டு, சோம்பேறித்தனம் உண்டாகிவிடுகிறது. அதிகாலையில் விழித்தெழுவதால் உடலில் பலம், சுறுசுறுப்பு ஏற்படும்.

 

முன்பெல்லாம் கிராம மக்கள் இரவு வந்ததும் உறங்கி அதிகாலையில் விழித்துவிடுவார்கள். இப்போதெல்லாம் கிராமப்புறங்களும் மாறிவிட்டன. இரவில் வெகுநேரத்திற்கு பின் உறங்கி, சூரிய உதயத்திற்கு பின்னர் விழித்தெழுவது பழக்கமாகிவிட்டது. காரணம், தொலைக்காட்சிகளில் வரும் சினிமா, சீரியல் தொடர், பிறர் நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகிவிட்டனர். தற்போது கைப்பேசிகளைத் தேய்த்துக்கொண்டிருப்பவர்களைப்பற்றி சொல்லவே தேவையில்லை. கிராமப்புற மக்களின் வாழ்க்கையின் நிலை இவ்வாறு என்றால், நகர்புற மக்களின் வாழ்க்கை நிலையை எவ்வாறு சொல்வது? இதனால் இரவில் இறைவணக்கம் என்பது தேய்பிறையாகிவிட்டது.

 

தூக்கத்திற்கு சிறந்த நேரம் இரவுதான். பகலில் எவ்வளவு தூங்கினாலும் அது இரவில் சில மணி நேரம் தூங்கியதற்கு ஈடாகாது. சூரிய ஒளி இல்லாத இருட்டு தூக்கத்திற்கு ஏற்றமானது. அதனால் தான் பகலில் நாம் தூங்கினாலும் அறையின் கதவு, ஜன்னல்களை அடைத்து வெளிச்சம் இல்லாத நிலையில் தூங்குவதையே விரும்புகிறோம்.

 

இரவு தூக்கத்தை தொடர்ந்து தவிர்த்து வருபவர்களுக்கு அஜீரணம் ஏற்பட்டு, மூளை பலகீனமாகிவிடும் என்கிறது மருத்துவ உலகம். தலைப்பில் காணும் திருவசனமும், நபிமொழிகளும் இரவு தூக்கத்தையே சிறந்தது என்கிறது.

 

படுக்கை விரிப்பு

 

முஹம்மத் அல்பாக்கிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ( مَا كَانَ فِرَاشُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فِي بَيْتِكِ‏؟‏ ) "உங்கள் வீட்டில் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் படுக்கை விரிப்பு எப்படி இருந்தது?" என்று வினவினேன். அன்னையவர்கள், ( مِنْ أَدَمٍ، حَشْوُهُ لِيفٌ ) "பேரீத்தம் மர நார்கள் நிரப்பப்பட்ட பதனிடப்பட்ட தோல்விரிப்பு" என்று கூறினார்கள்.

 

மேலும், ஹஃப்சா (ரலி) அவர்களிடம், "உங்கள் வீட்டில் நபியவர்களின் படுக்கை விரிப்பு எப்படி இருந்தது? என்று வினவினேன். அன்னையவர்கள், ( مِسْحًا نَثْنِيهِ ثَنِيَّتَيْنِ فَيَنَامُ عَلَيْهِ ) "கம்பளிப் போர்வை. அதை நாங்கள் இரண்டாக மடித்து போடுவோம். அதில் நபியவர்கள் உறங்குவார்கள்" என்று கூறினார்கள்.

 

ஹஃப்சா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருநாள் நபியவர்களுக்கு வசதியாக இருக்கட்டும் என்றெண்ணி இதை நான்காக மடித்து போட்டேன். விடிந்ததும் நபியவர்கள், ( مَا فَرشْتُمْ لِيَ اللَّيْلَةَ ) "இன்றிரவு எனக்கு படுக்கை விரிப்பு விரித்தது யார்?" என்று வினவினார்கள். அதற்கு நான், "இது உங்கள் படுக்கை தான். எனினும், நான் அதை நான்காக மடித்துபோட்டேன் அது உங்களுக்கு வசதியாக இருக்கும்" என்றேன்.  நபியவர்கள், ( رُدُّوهُ لِحَالَتِهِ الأُولَى، فَإِنَّهُ مَنَعَتْنِي وَطَاءَتُهُ صَلاتيَ اللَّيْلَةَ ) "முந்தைய நிலையிலேயே விட்டுவிடுங்கள். இந்த வசதியின் காரணத்தால் எனது இரவுத் தொழுகை தடைபட்டுவிட்டது" என்று கூறினார்கள். நூல்:- ஷமாயில் திர்மிதீ-328

 

மிக சுகமான படுக்கைவிரிப்பு இரவில் இறைவணக்கத்திற்கு இடையூறு ஆகிவிடலாம். தூங்குவதற்கு சாதாரணமான ஒரு படுக்கைவிரிப்பே போதுமானது. இது குறித்து இறைவனிடம் கேள்வி கணக்கும் இலகுவாகிவிடும். என்பதை எளிமையின் பிறப்பிடமான பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களின் எண்ணமாகும்.

 

ஏ.சி. இல்லாமல், குஷன் மெத்தை இல்லாமல் தூங்கமுடியாது என்று எண்ணுபவர்கள் இந்த நபிமொழியை படித்துப் பார்க்கட்டும்.

 

ஆரோக்கியக் கேடு

 

திஹ்ஃபா அல்கிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் பள்ளிவாசலில் என் வயிற்றைத் தரையில் வைத்து (முகங்குப்புற)ப் படுத்திருந்ததை பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது அவர்கள் தம் காலால் என்னை உசுப்பி, ( مَا لَكَ وَلِهَذَا النَّوْمِ هَذِهِ نَوْمَةٌ يَكْرَهُهَا اللَّهُ ) "உமக்கு என்னவாயிற்று? ஏன் இவ்விதம் தூங்குகிறீர்? இவ்விதம் தூங்குவதை அல்லாஹ் வெறுக்கின்றான்" என்று கூறினார்கள். நூல்:- இப்னுமாஜா-3713, முஸ்னது அஹ்மத்

 

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் என் வயிற்றைத் தரையில் வைத்து (முகங்குப்புற)ப் படுத்து இருந்த நிலையில் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் என்னை கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் தம் காலால் என்னை உசுப்பி, ( يَا جُنَيْدِبُ إِنَّمَا هَذِهِ ضِجْعَةُ أَهْلِ النَّارِ ‏ ) "ஜுனைதிப்! இது நரகவாசிகளின் படுக்கையாகும்" என்று கூறினார்கள். நூல்:- இப்னுமாஜா-3714

 

நமது உடலின் இடது பக்கத்தில் இதயம் மாங்கனி வடிவமாக அமைந்துள்ளது. குப்புறப்படுக்கும்போது நெஞ்சு நிலத்தோடு இணைவதால் இதய தசைகள் அமுக்கப்பட்டு இதயத்தின் சுருங்கி விரியும் செயலில் தாக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. மேலும், முகம் குப்புற அமைவதால் ஆக்ஸிசன் வாயுவை உட்கொள்ள முடியாமல் சுவாசத்திலும் தடை உண்டாக வாய்ப்புண்டு. எனவே, குப்புறப்படுக்கும் முறை இஸ்லாத்திற்கும், சுகாதாரத்திற்கும் முற்றிலும் முரணானது.

 

தூக்கத்தில் போர்வையை உடலுக்கு மட்டும் போர்த்த வேண்டும். இறந்த சடலத்திற்கு போர்த்துவது போல் தலையோடு சேர்த்து போர்த்திக்கொண்டு தூங்குவது மருத்துவ ரீதியாக தவறாகும். தலையை மூடிக்கொண்டு தூங்குவது போர்வைக்குள் கரியமில வாயுவை அதிகரிக்க வைக்கிறது. இது நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிசன் மூளையைப் பாதிக்கிறது.

 

திக்ரு முறைகள்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு உறங்கச் சென்றால் ஒவ்வொரு இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து அதில் 112, 113, 114 ஆவது அத்தியாயங்களையும் முழுமையாக ஓதி ஊதி கொள்வார்கள். பிறகு தம்மிரு கைகளால் (அவை எட்டும் அளவுக்கு) தமது உடலில் இயன்றவரை தடவிக்கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம் பிறகு உடலின் முற்பகுதியில் கைகளால் தடவி கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். நூல்:- புகாரீ-5071

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் படுக்கைக்கு சென்றால் ( اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا ) "இறைவா! உன் பெயர் கொண்டு இறக்கிறேன். (உறங்குகிறேன்.) உன் பெயர் கொண்டு உயிர் பெறுவேன் (விழிப்பேன்.)" என்று கூறுவார்கள். நூல்:- ஷமாயில் திர்மிதீ-255

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது மகள் ஃபாத்திமா (ரலி) மற்றும் மருமகனார் அலீ (ரலி) ஆகியோரிடம், ( أَوَيْتُمَا إِلَى فِرَاشِكُمَا فَسَبِّحَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَاحْمَدَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَكَبِّرَا أَرْبَعًا وَثَلاَثِينَ ) "நீங்கள் இருவரும் உங்களுடைய படுக்கைக்குச் செல்லும் போது 33 முறை 'சுப்ஹானல்லாஹ்' 33 முறை 'அல்ஹம்துலில்லாஹ்' 34 முறை 'அல்லாஹு அக்பர்' என்று ஓதிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் இந்த திக்ருகளை ஸிஃப்பீன் போர் நடைபெற்ற (நெருக்கடியான சூழ்நிலையின்) இரவில்கூட ஓதாமல் இருந்ததில்லை" என்று கூறுவார்கள். நூல்:- புகாரீ-5361, முஸ்லிம்-5273

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த திக்ருகளை ஓதிக் கொண்டிருந்தால் விரைவில் தூக்கம் வர வாய்ப்பு உண்டு. ஏனெனில், மனிதன் திக்ரு செய்து நன்மை சம்பாதிப்பதை ஷைத்தான் விரும்ப மாட்டான். இந்த மனிதன் திக்ரு செய்வதைவிட தூங்குவதே சிறந்தது என்றெண்ணி மனதில் தேவையற்ற சிந்தனைகளை போடுவதை விட்டும்ஷைத்தான் ஒதுங்கிக்கொள்வான். தேவையற்ற சிந்தனைகள் மனதில் தோன்றாமல் இருந்தால் தூக்கம் விரைவில் வந்துவிடும்.

 

தூக்க மாத்திரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை பின்னாளில் தூக்கமே வராமல் செய்துவிடும் அபாயம் உண்டு. தூங்கும்போது உலக காரியங்களை சிந்திக்காமல் மறுமையைப்பற்றி சிந்திப்பதும், நினைவில் உள்ள திருக்குர்ஆன் வசனங்கள், திக்ருகள் போன்றவற்றை ஓதிக்கொண்டிருப்பதும் சிறந்ததாகும்.

 

டி.வி. பார்த்துக்கொண்டோ அல்லது தீயப் பாடல்கள் கேட்டுக்கொண்டோ தூங்கும்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த திக்ருகளை ஓத முடிவதில்லை. தீயக் காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டே தூங்கினால் இறைநினைவு மனதில் நிலை கொள்வதில்லை. அந்தத் தூக்கத்தில் இறந்துவிட்டால் நம் நிலை என்னவாகும். தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு டி.வி. கம்ப்யூட்டர் போன்றவற்றை பார்ப்பதை விட்டும் தவிர்ந்துகொள்வது உடல் நலத்திற்கு நல்லது என்கிறது மருத்துவ உலகம்.

 

எனவே, இஸ்லாம் கூறுகின்ற அறிவுரையின்படி அளவான தூக்கத்தையும் அதன் முறைகளை மேற்கொண்டு, உடல் ஆரோக்கியம் பெறுவோமாக! ஆமீன்!

 

(இந்தக் கட்டுரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

 

 

No comments:

Post a Comment

குறைகளை ஏற்றுக்கொள்வோம்

  குறைகளை ஏற்றுக்கொள்வோம்   وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ قَالَ فَعَلْتُهَا إِذًا وَأَنَا مِنَ الضّ...