Search This Blog

Saturday, 1 November 2025

இரகசியம் இரகசியமாக…

 

இரகசியம் இரகசியமாக

 

وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا فَلَمَّا نَبَّأَتْ بِهِ وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ

நபிகள் (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவியர்களில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகக் கூறியதை அம்மனைவியானவர் அதனை (மற்றொரு மனைவிக்கு) அறிவித்துவிட்டார். இதை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கித் தந்தான். திருக்குர்ஆன்:- 66:3

 

இரகசியம் காப்பது இறைநம்பிக்கையாளர்களின் நற்பண்புகளில் ஒன்றாகும். இரகசியம் என்பது ஒவ்வொரு மனிதனின் சொந்த சொத்து. அதை மனப்பெட்டியில் பூட்டி பாதுகாக்கும் வரை அதற்கு இரகசியம் என்று பெயர். பெரும்பாலும் மனிதர்கள் இதை பாதுகாப்பதில்லை.

 

கணவன் மனைவிக்கு மத்தியிலும் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு மத்தியிலும் இரு நண்பர்களுக்கு மத்தியிலும் இரு நாடுகளுக்கு மத்தியிலும் இரகசியங்கள் பாதுகாக்கப்படும் வரை நமக்கு மத்தியில் உள்ள காதல், அன்பு, நட்பு, நம்பிக்கை அனைத்தும் நமக்கு இன்பமாகவே இருக்கும்.

 

அடுத்தவர்களின் இரகசியங்களைப் பாதுகாக்க தவறியதனால் எண்ணிறந்த உறவுகள் அறுபட்டு போயிருக்கின்றன; நாள் கணக்கில் தழைத்து வந்த நல்ல நட்பில் விரிசல்கள் வீழ்ந்திருக்கின்றன. பிறரின் இரகசியங்களை தெரிந்தோ தெரியாமலோ வெளியிட்டுவிட்டதால் மிகப்பெரிய திட்டங்கள் எல்லாம் செயல் வடிவம் பெறாமல் போயிருக்கின்றன.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ سَمِعَ مِنْ رَجُلٍ حَدِيثًا لَا يَشْتَهِي أَنْ يُذْكَرَ عَنْهُ فَهُوَ أَمَانَةٌ، وَإِنْ لَمْ يَسْتَكْتِمْهُ ) தாம் கூறியதாக வெளியில் தெரிவிக்கப்படுவதை விரும்பாத ஒருவரிடமிருந்து யாரேனும் ஒருவர் ஒரு செய்தியைச் செவியுற்றால் அச்செய்தி நம்பி ஒப்படைக்கப்பட்ட (அமானத்)தாகும். அதை வெளியிட வேண்டாம் என அவர் (வெளிப்படையாகக்) கோராவிட்டாலும் சரியே. அறிவிப்பாளர்:- அபுத்தர்தா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், ஸஹீஹுல் குத்பித்திஸ்ஆ வஸவாயித்-345

 

காதல் கசந்துபோகும்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் துணைவியார் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (அவர்களது அறையில்) தேன் சாப்பிட்டுவிட்டு அவரிடம் (அதிக நேரம்) தங்கி விடுவார்கள்.

 

(இது பிடிக்காமல் நபியவர்களின் மற்றொரு துணைவியரான) ஹப்சாவும் நானும் இவ்வாறு கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம். தேன் சாப்பிட்ட பின் நம்மவரில் எவரிடம் நபியவர்கள் முதலில் வருவார்களோ அவர் நபியவர்களிடம், ( أَكَلْتَ مَغَافِيرَ إِنِّي أَجِدُ مِنْكَ رِيحَ مَغَافِيرَ‏ ) “கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்களிடமிருந்து பிசின் துர்வாடை வருகிறதே!” என்று கூறி விட வேண்டும்.

 

(வழக்கம்போல் ஸைனப்பின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டுவிட்டு நபியவர்கள் வந்தபோது நாங்கள் பேசி வைத்தபடி கூறியதற்கு) நபியவர்கள், ( لاَ وَلَكِنِّي كُنْتُ أَشْرَبُ عَسَلاً عِنْدَ زَيْنَبَ ابْنَةِ جَحْشٍ فَلَنْ أَعُودَ لَهُ وَقَدْ حَلَفْتُ لاَ تُخْبِرِي بِذَلِكِ أَحَدًا ) "இல்லை! (நான் பிசின் சாப்பிடவில்லை) ஸைனப்பிடம் அவரது அறையில் தேன் பருகி வந்தேன். இனிமேல் ஒருபோதும் அதை பருக மாட்டேன். நான் சத்தியமும் செய்துவிட்டேன்" என்று கூறிவிட்டு, "இதுகுறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே!" என்றும் கூறினார்கள். நூல்:- புகாரீ-4912

 

இனிமேல் தேன் குடிக்க மாட்டேன் என்று நான் சத்தியம் செய்திருந்த இரகசியத்தை எவரிடமும் தெரிவித்து விடாதே என்று நபியவர்கள் எந்த துணைவியாரிடம் கூறினார்களோ அந்த துணைவியார் பிறரிடம் இதனை கூறிவிட்டார். இது குறித்தே தலைப்பில் காணும் திருவசனமும் மேலும் சில வசனங்களும் அருளப்பட்டது.

 

குடும்பங்களில் ஏற்படும் தவறுகள், மான அவமானங்கள், சொத்து சுகங்களின் விவரங்கள், கொடுக்கல் வாங்கல்கள், நோய் நொடிகள் போன்றவற்றில் இரகசியங்கள் பேணப்பட வேண்டும். குடும்ப இரகசியங்கள் வீதிக்கு வரும்போது பிரச்சனைகள் பூகம்பமாக வெடிக்கும் என்பதை வீட்டு நிர்வாகிகளான பெண்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

 

உடை, உடலின் இரகசியங்களை பாதுகாக்கும். அழகான ஆடை அழகற்றவர்களையும் அழகானவர்களாகக் காட்டும். இதுபோல் எந்த வீட்டில் கணவன் மனைவி அவர்களின் ஒருவருக்கொருவர் இரகசியங்களை பாதுகாப்பவர்களாகவும், குறைவான குணங்களை நிறைவுப்படுத்தி காட்டுபவர்களாகவும், தனது முரட்டுத்தனங்களை அடக்கி மென்மையானவர்களாகவும் விளங்குவார்களோ அந்த வீட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாகிவிடும்.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ مِنْ أَشَرِّ النَّاسِ عِنْدَ اللَّهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ الرَّجُلَ يُفْضِي إِلَى امْرَأَتِهِ وَتُفْضِي إِلَيْهِ ثُمَّ يَنْشُرُ سِرَّهَا ) கணவனும் மனைவியும் உடலுறவில் ஈடுபட்டு மனைவியின் (தாம்பத்திய) இரகசியத்தை (பிறரிடம்) பரப்புகின்ற மனிதனே மறுமைநாளில் அல்லாஹ்விடம் தகுதியால் மிகவும் மோசமானவன் ஆவான். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-2832, அபூதாவூத்-4227, முஸ்னதுஅஹ்மத்

 

மனைவியிடம் ஈடுபட்டுவிட்டு அதனை தன் தோழர் தோழியரிடம் வெளியிடக்கூடாது. நான்குச் சுவற்றுக்குள் நடக்கும் இந்த விஷயத்தை அம்பலத்திற்கு கொண்டு வருவதை இந்த நபிமொழி வன்மையாக கண்டிக்கிறது.

 

தன் மனைவி என்பவள் வெட்கத்தைத் துறந்து தன்னை கணவரிடம் ஒப்படைக்கிறாள். இந்த உறவு இரகசியமாகவே இருக்க வேண்டும்.

 

சிலர் தனது அந்தரங்க அனுபவங்களை தனது நட்பு வட்டாரத்தோடு பகிர்ந்து கொள்ளும்போது அது அவர்களை அடிசறுக்கச் செய்யலாம். தன் மனைவி அல்லது கணவன் இப்படடியெல்லாம் தனக்கு இசையவில்லையே என்று அவர்களுக்கு வருத்தம் ஏற்படலாம்.

 

தனது அந்தரங்கங்களை கணவன் பிறரோடு பகிர்ந்து கொண்ட விஷயம் மனைவிக்கு தெரிந்துவிட்டால் அந்த மனைவி கணவனை வெறுக்க ஆரம்பித்து விடுவாள்.

 

அறியாமையும் மூடத்தனமும் நிறைந்த பைத்தியக்காரன் தான் இதுபோன்ற அந்தரங்கங்களை பிறரிடம் வெளிப்படுத்துவான். அவன் அல்லாஹ்விடம் கேவலமானவர்களில் ஒருவனாக கருதப்படுவான்.

 

பெண்களுக்கு ஓர் முன்மாதிரி

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மரணம் நெருங்கியபோது நபியவர்களின் அனைத்து மனைவியர்களும் அருகில் இருந்தோம். அப்போது நபியவர்களின் மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்தார்கள். நபியவர்கள் தமது மகளை வரவேற்றார்கள்.

 

பிறகு அவரை தமக்கருகில் அமர்த்திக்கொண்டு, அவரிடம் ஏதோ இரகசியம் கூறினார்கள். அதைக் கேட்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள் பலமாக அழுதார்கள். நபியவர்கள் மீண்டும் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ இரகசியம் கூறினார்கள். அப்போது அவர் சிரித்தார்.

 

அச்சமயம் நான் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம்,  "நபியவர்கள் உங்களிடம் ஏதோ ஒன்றை கூறினார்கள். அதற்காக நீங்கள் அழுதீர்கள். இரண்டாவது முறையாக ஒன்றை கூறினார்கள். அதற்காக நீங்கள் சிரித்தீர்கள். அப்படி என்ன இரகசியத்தை உங்களிடம் மட்டும் நபியவர்கள் கூறினார்கள்" என்று கேட்டேன்.

 

அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், ( مَا كُنْتُ أُفْشِي عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سِرَّهُ ) “நபியவர்கள் கூறிய இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை" என்று கூறிவிட்டார். நபியவர்களின் மரணத்திற்கு பின்னர் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் வற்புறுத்தி அதைப் பற்றி கேட்டேன். அவர் பின்வருமாறு கூறினார்.

 

நபியவர்கள், ( وَلاَ أُرَانِي إِلاَّ قَدْ حَضَرَ أَجَلِي وَإِنَّكِ أَوَّلُ أَهْلِي لُحُوقًا بِي وَنِعْمَ السَّلَفُ أَنَا لَكِ ) "எனக்கு மரணம் நெருங்கிவிட்டதாக கருதுகிறேன். என் குடும்பத்தாரில் என்னை முதலில் வந்தடையபோவது நீதான் நான் உனக்கு முன்னால் நல்லபடியாக (இவ்வுலகை விட்டு) சென்றுவிடுவேன்" என்றார்கள். இதனால் தான் அழுதேன். பிறகு என்னிடம், ( أَلاَ تَرْضَيْنَ أَنْ تَكُونِي سَيِّدَةَ نِسَاءِ الْمُؤْمِنِينَ ) “இறைநம்பிக்கை உள்ள பெண்களுக்கு தலைவியாக நீ இருக்க விரும்பவில்லையா? என்று இரகசியமாகக் கேட்டார்கள்." அதற்கு நான் சிரித்தேன். நூல்:- புகாரீ-3623, முஸ்லிம்-4845

 

ஆண்களைவிட பெண்கள் இரகசியத்தை பாதுகாப்பதில் சற்று பலகீனமானவர்கள் தான். என்றாலும், பெண் சமுதாயம் முழுவதும் அப்படித்தான் என்று சொல்ல முடியாது.

 

அன்று ஃபாத்திமா (ரலி) அவர்கள் தமது தந்தை கூறிய இரகசியத்தை தந்தையின் வாழ்நாள் வரை பாதுகாத்த பின்னர் அவசிய தேவை ஏற்பட்டதால் மட்டுமே இரகசியத்தை வெளியிட்டு பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார்கள். மார்க்க அறிவையும், நல்ல பக்குவத்தை அடைந்த முஸ்லிம் பெண்கள் இரகசியத்தை பாதுகாப்பது உயர்ந்த பண்பென்று விளங்கிக்கொள்வார்கள்.

 

போதிய அறிவும், பக்குவமும் இல்லாதவர்களிடம் ஒரு இரகசியத்தை சொல்லி, "இதை யாரிடமும் சொல்லாதே!" என்று சொன்னால், "நான் யாரிடம் சொல்ல மாட்டேன்" என்று சொல்லிவிட்டு, சற்று நேரத்திற்குள்ளாக பிறரிடம் அந்த இரகசியத்தை அப்படியே சொல்லி, "இதை உன்னிடம் மட்டும் தான் சொல்கிறேன். வேறு யாரிடமும் நீ சொல்லிவிடாதே!" என்று சொல்வார்கள். ஒரு சில நிமிடங்களில் ஊர் உலகம் முழுவதும் அந்த இரகசியம் வெளியாகிவிடும்.

 

இது போன்றில்லாமல் பெண்கள், இரகசியங்கள் பாதுகாக்கும் பெட்டாமாக திகழ வேண்டும். பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் மத்தியிலுள்ள இரகசியம் பாதுகாக்கப்பட்டால் அவர்களுக்கு மத்தியிலுள்ள பாசமும் பசுமையாகவே இருக்கும்.

 

நட்பின் இலக்கணம்

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். ஒருமுறை நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம், ( إِنْ شِئْتَ أَنْكَحْتُكَ حَفْصَةَ ) "நீங்கள் விரும்பினால் (விதவையான என் மகள்) ஹஃப்ஸாவை உங்களுக்கு மணமுடித்து தருகிறேன்" என்று கூறினேன். அவர், ( قَدْ بَدَا لِي أَنْ لاَ أَتَزَوَّجَ يَوْمِي هَذَا‏ ) "இப்போது திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்றே எண்ணியுள்ளேன்" என்று கூறிவிட்டார். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களிடம், "என் மகள் ஹஃப்சாவை உங்களுக்கு மணமுடித்து தருகிறேன்" என்று கூறினேன். அப்போது அவர் ஏதும் கூறாது அமைதியாக இருந்தார். இதனால் உஸ்மான் (ரலி) அவர்களைவிட அபூபக்ர் (ரலி) அவர்கள்மீது எனக்கு அதிகமான வருத்தம் இருந்தது.

 

பிறகு பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் என் மகள் ஹஃப்சாவை பெண் கேட்டார்கள். ஹஃப்சாவை மணமுடித்துக் கொடுத்தேன். பிறகு (ஒருநாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னை சந்தித்தபோது, "நீங்கள் என்னிடம் ஹஃப்சாவை குறித்து சொன்னபோது நான் உங்களுக்குப் பதில் ஏதும் கூறாததால் உங்களுக்கு என்மீது வருத்தம் ஏற்பட்டிருக்கலாம். அதற்கு காரணம் என்னவெனில், ( أَنِّي قَدْ عَلِمْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ ذَكَرَهَا، فَلَمْ أَكُنْ لأُفْشِيَ سِرَّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَلَوْ تَرَكَهَا لَقَبِلْتُهَا ) நபியவர்கள் ஹஃப்சாவை (தாம் மணமுடித்துக் கொள்வது) பற்றி பேசுவதை நான் அறிந்திருந்தேன். நபியவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. (எனவே தான், உங்களுக்கு பதிலேதும் கூறவில்லை) நபியவர்கள் ஹஃப்சாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால் உறுதியாக நான் ஹஃப்சாவை மணமுடித்திருப்பேன்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-4005

 

தனது நண்பனின் இரகசியத்தை பாதுகாப்பதே நட்பின் இலக்கணமாகும் என்பதை அபூபக்ர் (ரலி) அவர்கள் நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.

 

நம்முடைய நண்பன் நம்மீது நம்பிக்கை வைத்து, தன் உள்ளத்தில் இருக்கும் இரகசியங்களை கூறும்போது அதை பாதுகாப்பது நம்மீது கடமையாகும். அவற்றை விளம்பரப்படுத்துவது நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருள்களை அபகரிப்பதற்கு ஈடாகும்.

 

உன்னை நம்பிச் சொன்னேனே அதை போட்டு உடைத்து விட்டாயே? உன்னை நம்பினேனே நீ ஏமாற்றிவிட்டாயே? என்றெல்லாம் பாதிக்கப்பட்டவன் நம்மை முகத்துக்கு நேராக கேட்க நேர்ந்தால், நாம் நம் முகத்தை எங்கு வைத்துக்கொள்வோம்? நம்மீது பிறர் வைத்துள்ள நம்பிக்கையை ஒருபோதும் சிதறடித்து விடக்கூடாது.

 

இரகசியங்களை காப்பாற்ற முடியாதவர்களால் மக்களிடம் மதிப்பையும், மரியாதையையும், உயர்வையும் பெற முடியாது.

 

சிலர் நண்பர்களாக இருக்கும் காலத்தில் ஒருவருக்கொருவர் இரகசியங்களை பரிமாறிக் கொண்டிருந்திருப்பார்கள். ஆனால், அவர்களுக்குள் நட்பு முறிந்து விடும்போது ஒருவருடைய இரகசியத்தை மற்றொருவர் வெளிப்படுத்துவார். இதனால் அவர்களுக்கு மத்தியில் பகைமை இன்னும் அதிகமாகும். நட்பும் மீண்டும் மலர வாய்ப்பு இல்லாமலேயே போய்விடும். இந்த இழிகுணத்தை அளித்தொழிக்க வேண்டும். நண்பர்களுக்கு மத்தியிலுள்ள இரகசியங்கள் பாதுகாக்கப்படும் வரை நட்பின் காலம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

 

விசுவாசம்

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (நான் அருமை நாயகம் - ஸல் அவர்களிடம் சேவகனாக இருந்த போது) நபியவர்கள், என்னை ஓர் அலுவல் நிமித்தம் (ஓரிடத்திற்கு) அனுப்பி வைத்தார்கள். அதனால் என் வீட்டுக்கு தாமதமாகவே போனேன்.

 

அப்போது என் தாயார், ( مَا حَبَسَكَ ) "தாமதத்திற்கு காரணம் என்ன?" என்று என்னிடம் வினவினார். நான், ( بَعَثَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِحَاجَةٍ ) "நபியவர்கள் ஒரு அலுவலுக்காக என்னை அனுப்பினார்கள்" என்று பதிலளித்தேன். அப்போது என் தாயார், ( مَا حَاجَتُهُ ) "அது என்ன அலுவல்?" என்று வினவினார். நான், ( إِنَّهَا سِرٌّ )  "அது இரகசியம்" என்று கூறினேன். அப்போது என் தாயார், ( لاَ تُحَدِّثَنَّ بِسِرِّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَحَدًا ) "நீ நபியவர்களின் இரகசியத்தை எவரிடமும் சொல்லிவிடாதே!" என்று கூறினார். நூல்:- முஸ்லிம்-4891

 

அனஸ் (ரலி) அவர்களின் தாயார் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இரகசியத்தை பேணுவதில் தன் மகனார் கொண்டிருந்த ஆர்வத்தை பார்த்து அதற்கு மதிப்பளித்து, தாய்மார்களுக்கு முன்மாதிரியாக விளங்கியுள்ளார்.

 

பிறருடைய இரகசியத்தைப் பற்றி நம்முடைய நெருங்கிய உறவினர்கள் கேட்டாலும், அதைப்பற்றி வாய் திறக்கக் கூடாது. மேலும், பிறருடைய இரகசியங்களைப் பற்றித் துருவித் துருவி கேள்வி கேட்டு அதைப்பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுவதும் தவறாகும்.

 

பெரும்பாலான மனிதர்களால் இரகசியங்கள் காப்பாற்ற முடிவதில்லை. அதற்கான காரணங்கள் சில...

 

1.எவருக்கும் தெரியாத ஒன்று எனக்குத் தெரியும் என்று மற்றவரிடம் காண்பித்துக் கொள்ள நினைக்கும் மனோபாவம்.

 

2.நான்தான் அந்த உண்மையை முதலில் கண்டுப்பிடித்தேன். அல்லது தெரிந்து கொண்டேன் என்பதை நிலைநாட்டுவதில் உள்ள ஆசை.

 

3.இதைத் தெரிந்து கொள்ளும் அளவிற்கு அந்த நண்பனிடம் எனக்கு நெருக்கமும் செல்வாக்கும் உண்டு என்பதை நிரூபிக்க நினைக்கும் மனோபாவம்.

 

4.மற்றவர்களை அசத்த வேண்டும், வியப்பில் ஆழ்த்த வேண்டும் என்கின்ற தூண்டுதல். இந்த எண்ணங்கள் தூக்கி எறியப்பட வேண்டியவை.

 

(நபியே!) அவர்களுடைய இரகசியப் பேச்சுக்களில் பெரும்பாலானவற்றில் எந்த நன்மையும் இல்லை. (எனினும்) தர்மத்தைக் கொண்டும், நன்மையைக் கொண்டும் மனிதர்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதைக் கொண்டும் ஏவுவதைத் தவிர. ஆகவே, ஏதேனும் இறைபொருத்தத்தை நாடி இவ்வாறு (இரகசியம்) பேசினால் (மறுமையில்) நாம் அவர்களுக்கு மகத்தான நற்கூலியை தருவோம். திருக்குர்ஆன்:- 4:114

 

தர்மம், நற்செயல், சமாதானம் ஆகிய இம்மூன்று செயல்களுக்கும் இரகசிய ஆலோசனை மேற்கொள்வது நற்பண்பாகும் என்கிறது திருக்குர்ஆன்.

 

தன்மானமிக்க ஏழை எளியோர் வளம் செழிக்க, உதவி கரம் ஏற்றி வாழ்வாங்கு வாழ இரகசிய ஆலோசனை செய்வது சிறந்த செயலாகும்.

 

நன்மையை ஏவுவதும் தீமையை தடுப்பதும் தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்றமளிக்கும் இனிய செயலாகும். இதை எப்படியெல்லாம் நடைமுறைப்படுத்தலாம் என்று இரகசிய திட்டங்கள் தீட்டுவது உயர்ந்த செயலாகும்.

 

தம்பதிகளுக்கிடையில், இரு குடும்பத்தாருக்கிடையில், இரு சமுதாயத்திற்கிடையில், இரு நாட்டவருக்கிடையில் பிணக்கு ஏற்படும்போது இரு சாரார்களையும் தனித்தனியாக அணுகி, இரகசியமாக சமரசம் பேசி, சமாதானம் செய்து நல்லுறவை நிலைப்படுத்துவது மகிழ்ச்சிக்குரிய செயலாகும். இவை அனைத்தையும் இறைபொருத்தத்தின் நாடி இரகசிய ஆலோசனை செய்தால், நம்மால் மக்களுக்கும் நன்மை பயக்கும்; அவர்களால் நமக்கும் இறைவனிடம் நன்மை பயக்கும்.

 

துரோகச் செயல்

 

ஹாத்திப் பின் அபீபல்தஆ (ரலி) அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்பாளர் சிலருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இராணுவ இரகசியத்) திட்டங்கள் சிலவற்றை கடிதத்தின் மூலம் தெரிவிப்பதற்காக செயல்பட்டபோது நபியவர்கள் அதை கண்டுபிடித்து தடுத்துவிட்டார்கள். இதை அவர் பொதுநலத்தின் அடிப்படையில் செய்யவில்லை. பிறகு அவரை இத்தீய செயலுக்காக நபியவர்கள் கண்டித்தார்கள்.

 

இவர் பத்ருப்போரில் கலந்துக்கொண்டவர். இதனால் அவரை எவரும் (இராணுவ இரசியத்தை வெளிப்படுத்தியவர் என்பதற்காக) குறைவாக மதிப்பிட்டுவிடக்கூடாது என்பது நபியவர்களின் எச்சரிக்கையாகும்.  அல்லாஹ் அவரை கண்டிக்கும் விதமாக,

 

அப்போதுதான், "இறைநம்பிக்கையாளர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாக இருப்பவரை நண்பர்களாக எடுத்துக்கொண்டு நட்பின் காரணத்தினால் (உங்களின் இரகசியங்களை) அவருடன் (பரிமாறிக் கொண்டு) உறவாட வேண்டாம். அவர்கள் உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை மறைத்து விட்டவர்கள்" (60:1) என்ற வசனத்தை  அருளினான். நூல்:- புகாரீ-4274

 

ஒரு நாட்டை பொறுத்தமட்டில் ராணுவ சக்தி, ஆயுத பலம், போர்த்திறன், பொருளாதாரத் தன்மை, பல துறை ஆய்வுகள் போன்றவை இரகசியமாக வைக்கப்படுகின்றன. சிலர் தமது தாய் நாட்டின் இது போன்ற இரகசியங்களை பிற நாட்டினரிடம் கூறி அதனை காசாக்க நினைப்பதுண்டு. இது போன்ற துரோகச் செயல்களை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

 

இடம் பார்த்து

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا حَدَّثَ الرَّجُلُ بِالْحَدِيثِ ثُمَّ الْتَفَتَ فَهِيَ أَمَانَةٌ ) ஒருவர் ஒரு செய்தியை சொல்லிவிட்டு, பிறகு (இங்கும் அங்கும்) திரும்பிப் பார்த்தாலே அது (இரகசியம் காக்கப்பட வேண்டிய) அமானிதமாகும். அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4225, திர்மிதீ-1882, முஸ்னதுஅஹ்மத்

 

நம்முடைய இரகசியங்களை பலரிடம் சொல்லி விடக்கூடாது. இவர்கள் காதில் இதை போடலாமா? அப்படி போடுவதனால் நமக்கு நன்மை ஏற்படுமா? அல்லது தீமை ஏற்படுமா? என்றெல்லாம் சிந்திக்க வேண்டும். அவர்களுடைய வாய் ஒலிபெருக்கி இல்லை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். நாம் கூறும் விஷயங்களை வெளியே கூறமாட்டார் என்று நம்பும் ஒருவரிடம் மட்டுமே இரகசியம் கூற வேண்டும்.

 

இரகசியம் பேசும்போது சுற்று முற்றும் பார்த்துவிட்டு மிக மெதுவாக பேச வேண்டும். “சுவற்றுக்கும் காது இருக்கும்” என்பார்கள் தமிழில்.

 

எந்த ஒரு இரகசியம் பேசும்போதும் சம்பந்தப்பட்டவரோ அல்லது வேறு யாரோ வந்துவிட்டால் சற்றென்று பேச்சை மாற்றுவது எப்படி என்ற கலையைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மாறாக, திருத்திரு என்று விழித்து மாட்டிக்கொள்ளக் கூடாது; அரண்டும் மிரண்டும் போய் விடக்கூடாது.

 

அம்பலப்படுத்த வேண்டும்

 

இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் நீங்கள் இரகசியம் பேசினால் பாவம் செய்வதற்காகவும், வரம்பு மீறுவதற்காகவும், (நம்முடைய) தூதருக்கு மாறு செய்வதற்காகவும் இரகசியம் பேசாதீர்கள். ஆயிரம் நன்மை செய்வதற்காகவும், பரிசுத்தத் தன்மைக்காகவும் இரகசியங்கள் பேசலாம். திருக்குர்ஆன்:-  58:9

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (   الْمَجَالِسُ بِالأَمَانَةِ إِلاَّ ثَلاَثَةَ مَجَالِسَ سَفْكُ دَمٍ حَرَامٍ أَوْ فَرْجٌ حَرَامٌ أَوِ اقْتِطَاعُ مَالٍ بِغَيْرِ حَقٍّ ) சபைகள் அமானிதம் பேணப்படவேண்டும். (அவற்றில் பேசப்பட்ட இரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.) மூன்று சபைகளைத் தவிர (அவை பாதுகாக்க கூடியவை அல்ல. மாறாக, அவற்றை பிறரிடம் சொல்லிவிடுவது அவசியம்) 1. அநியாயமாக கொலை செய்வதற்காக பேசிய இரகசியம். 2. விபச்சாரம் பற்றி பேசிய இரகசியம். 3. அநியாயமாக பொருள்களை அபகரிப்பதற்காக பேசிய இரகசியம். (இம்மூன்றையும் வெளிப்படுத்தலாம்.) அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4226

 

ஏதேனும் ஒரு வகையில் பாவகரமான அநியாயத்திற்காக இரகசிய ஆலோசனை நடைபெற்றால் அந்த சபையில் கலந்து கொள்ளக்கூடாது. ஆனால், நிர்பந்தமான சூழ்நிலையில் அச்சபையில் நாம் பங்கு பெற்றிருந்தால் அந்த இரகசியத்தை ஒருபோதும் மறைக்கக்கூடாது.

 

இரகசியம் என்பது எல்லா காரியங்களிலும் உண்டு. நன்மைக்குண்டான இரகசியம் என்றால் அதை வெளிப்படுத்தவே கூடாது. தீமைக்குண்டான இரகசியம் என்றால் அதை அவசியம் பிறரிடம் வெளிப்படுத்தி, அந்தத் தீமையை தடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

 

மக்களுக்கும், சமுதாயத்திற்கும் எதிராக சூழ்ச்சி செய்யப்படும்போது அந்நேரத்தில் இரகசியத்தை பாதுகாக்கிறேன் என்ற போர்வையில் சமுதாய அழிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க இஸ்லாம் அனுமதிப்பதில்லை. சுருங்கக் கூறின், நற்செயலுக்குரிய இரகசியங்களை மட்டுமே பாதுகாக்க வேண்டும்.

 

நற்செயலுக்குரிய இரகசியத்தில், "இவருக்கு எல்லாம் தெரியும். ஆனால், இவரிடம் எதையும் தெரிந்து கொள்ள முடியாது" என்று நம்மைப் பார்த்து மற்றவர்கள் சொல்வதை குறையாக எண்ணாமல், இதைவிடச் சிறந்த பாராட்டு வேற எதுவுமே இருக்க முடியாது என்று எண்ண வேண்டும்.

 

எனவே அல்லாஹுத்தஆலா, நம்மை நன்மைக்குரிய இரகசியங்களைக் காப்பதில் சிறந்தவர்களாக வாழச் செய்வானாக! ஆமீன்!

 

(இந்தக் கட்டுரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

 


No comments:

Post a Comment

குறைகளை ஏற்றுக்கொள்வோம்

  குறைகளை ஏற்றுக்கொள்வோம்   وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ قَالَ فَعَلْتُهَا إِذًا وَأَنَا مِنَ الضّ...