Search This Blog

Friday, 31 October 2025

தயவுகாட்ட தயக்கம் வேண்டாம்

 

தயவுகாட்ட தயக்கம் வேண்டாம்

 

وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْرًا لَهُمْ بَلْ هُوَ شَرٌّ لَهُمْ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ

அல்லாஹ் தன் பேரருளால் அவர்களுக்கு வழங்கியவற்றில் கஞ்சத்தனம் செய்பவர்கள் அதை தங்களுக்கு நல்லதென எண்ணிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு தீங்கு தான். அவர்கள் கஞ்சத்தனம் செய்த பொருள்களைக் கொண்டு மறுமைநாளில் அவர்களுக்கு கழுத்தில் அரிகண்டமாக மாட்டப்படும். திருக்குர்ஆன்:- 3:180

 

ஒரு மனிதன் பிறக்கும்போதே எல்லாவற்றையும் கொண்டு வந்து விடுவதில்லை. இன்னும் வாழும் போதே எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டதுமில்லை. ஒவ்வொரு மனிதனும் ஏதாவது தேவையுடையவனாகவே இருக்கிறான். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தேவை அனைத்தையும் தானே நிறைவேற்றிக் கொள்வதில்லை. பிறரின் உதவியோடு வாழ்ந்தாக வேண்டும் என்ற நிலை உள்ளதால் தன் தேவைக்கு பிறரிடம் ஏதேனும் கேட்டு நிற்கும் நிலைக்கு ஆளாகிறான்.

 

இறைவன் மற்ற எல்லா படைப்புகளிலும் ஏற்றத்தாழ்வை படைத்தது போல், மனித படைப்பிலும் சிலரை செல்வந்தராகவும் பலரை வறியவராகவும் படைத்துள்ளான்.

 

செல்வந்தர்கள் தம்மைத் தேடி வருபவர்களுக்கு தன்னால் இயன்றவரை உதவி செய்ய வேண்டும். இறைவன் நமக்கு செல்வத்தை தந்தது ஏழை எளியோருக்கு வாரி வழங்கத்தான் என்று எண்ண வேண்டும். எளியவர்களுக்கு உதவி செய்வது நமக்கு நாமே செய்யும் பேருபகாரமாகும் என்கிறது இஸ்லாம்.

 

சிறு சிறு செயலும்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ ) தர்மம் செல்வத்தை குறைப்பதில்லை. நூல்:- முஸ்லிம்-5447, திர்மிதீ-2247

 

அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்கு கூறினார்கள். ( الصَّدَقَةُ تَسُدُّ سَبْعِينَ بَابًا مِنَ السُّوءِ ) தர்மம் செய்வது தீய செயல்களின் எழுபது வாயில்களை அடைத்துவிடும். அறிவிப்பாளர்:- ராஃபிஉ பின் ஹதீஜ் (ரஹ்) அவர்கள் நூல்:- தப்ரானீ, ஜாமிஉஸ் ஸஙீர் இமாம் சுயூத்தீ

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ وَأَمْرُكَ بِالْمَعْرُوفِ وَنَهْيُكَ عَنِ الْمُنْكَرِ صَدَقَةٌ وَإِرْشَادُكَ الرَّجُلَ فِي أَرْضِ الضَّلاَلِ لَكَ صَدَقَةٌ وَبَصَرُكَ لِلرَّجُلِ الرَّدِيءِ الْبَصَرِ لَكَ صَدَقَةٌ وَإِمَاطَتُكَ الْحَجَرَ وَالشَّوْكَةَ وَالْعَظْمَ عَنِ الطَّرِيقِ لَكَ صَدَقَةٌ وَإِفْرَاغُكَ مِنْ دَلْوِكَ فِي دَلْوِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ ) உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிவதும் நீ செய்யும் தர்மம் ஆகும். நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதும் தர்மம் ஆகும். தெரியாத பகுதியில் (தடுமாறும்) ஒருவருக்கு வழிகாட்டுவதும் நீ செய்யும் தர்மம் ஆகும். கண்பார்வை தெரியாத ஒருவரைக் கவனிப்பதும் நீ செய்யும் தர்மம் ஆகும். நடைபாதையில் கிடக்கும் கல், முள், எலும்பு ஆகியவற்றை அகற்றுவதும் நீ செய்யும் தர்மம் ஆகும். உனது வாளியில் உள்ள தண்ணீரை உன் சகோதரனின் வாளியில் ஊற்றிக்கொடுப்பதும் நீ செய்யும் தர்மம் ஆகும். அறிவிப்பாளர்:- அபூதர் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1879, இப்னு ஹிப்பான், அல்காமில் இப்னு அதிய்யி  

 

அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். சிறிதளவு கொடுக்கின்றோமே என்று நீ வெட்கப்பட வேண்டாம். ஏனெனில், எதுவும் கொடுக்காதிருப்பதைவிட சிறிதளவு கொடுப்பது சிறப்பானதாகும்.

 

தர்மம் செய்வதால் செல்வம் குறைந்துவிடாது என்பதற்கு இருவித விளக்கங்கள் கூறப்பட்டுள்ளது.

1. செல்வத்தில் அருள்வளம் ஏற்படும். செல்வத்திற்கு ஏற்படவிருந்த விபத்து விலகும். எனவே, தர்மத்தால் செல்வத்தில் ஏற்பட்ட குறைவு நிவர்த்தி செய்யப்பட்டுவிடும்.

2.  தர்மத்தால் வெளிப்படையில் செல்வம் குறைந்தாலும் அதற்கு கிடைக்கும் பன்மடங்கான நன்மை அதனை நிவர்த்தி செய்து விடும்.

 

ஒரு மனிதனின் தீய செயல்கள் அவன் வாழ்வில் ஏற்படக்கூடிய  வாழ்வாதாரப் பெருக்கத்திற்கு நல்வாழ்விற்கும் தடை போடும் திரையாக அமைந்துவிடுகிறது. ஒருவன் தர்மம் செய்வதால் அவனிடம் இருக்கக்கூடிய தீய செயல்கள் அவனை விட்டும் நீங்கிவிடுகிறது. பாவங்கள் குறைவதால் இறையருள் பொழியவும், வளம் உண்டாகவும் வழி ஏற்படுகிறது.

 

யாசித்து நிற்பவருக்கு ஐம்பது ரூபாய் கொடுக்க எண்ணுகிறோம். ஆனால், நம்மிடம் இருப்பதோ ஐந்து ரூபாய் தான். இந்த அற்ப ரூபாயை எப்படி ஒருவக்கு தர்மமாக கொடுப்பது என்று என்ன வேண்டாம். இறைவன் தர்மத்தின் அளவை பார்ப்பதில்லை; அதன் எண்ணத்தையே பார்க்கிறான்.

 

திருக்குர்ஆன் கூறும் வரலாறு

 

யமன் தேசத்தில் உள்ள "சன்ஆ" என்ற நகரத்தை சேர்ந்த ஒரு நல்லடியார் தனது தோட்டத்தில் விளையும் விவசாயத்தை அறுவடை செய்த பின்னர் கதிர்களில் எஞ்சி இருப்பதையும், மரத்தில் பழங்கள் பறித்திடும்போது கீழே விழும் பழங்களையும் ஏழைகளுக்கென்று கொடுத்துவிடுவார். இதனால் இவர் தோட்டத்தில் அறுவடை நேரத்தில் ஏழைகள் அதிகம் கூடிவிடுவார்கள்.

 

இவரது மரணத்திற்கு பின்னர் இந்தத் தோட்டம் இவரது பிள்ளைகள் வசம் ஆனது. அவர்களோ தந்தை போல் தர்ம சிந்தனை உள்ளவர்கள் அல்லர். ஏழைகளுக்கு அள்ளி அள்ளி கொடுத்துவிட்டால் தம் பிள்ளைகளுக்கு என்னதான் மிஞ்சும்? என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். தோட்டத்தின் அறுவடை நேரத்தில் ஏழைகள் வரும் முன்பே அதிகாலையில் கனிகள், விளைச்சல்கள் அனைத்தையும் அறுத்துக்கொண்டு வந்து வீட்டில் சேர்த்து விடுவதென்று முடிவு செய்து கொண்டனர்.

 

அவர்களில் இறையச்சம் கொண்ட ஒருவர், "இவ்வாறு செய்யக்கூடாது; ஏழைகளுக்கு கொடுப்பதால் பொருள் அபிவிருத்தி அடையுமே தவிர குறையாது. இறைவனை மறந்து இவ்வாறு தீர்மானிக்காதீர்கள்" என்று உபதேசித்தார்.

 

ஆனால், இவரின் உபதேசத்தை கண்டு கொள்ளாமல் அவர்கள் தீர்மானித்தபடியே அதிகாலையில் எழுந்து தோட்டத்திற்குள் நுழைந்தனர். ஆனால், இரவிலேயே அல்லாஹ் நெருப்புக் காற்றை அனுப்பி, அத்தோட்டத்தை நாசப்படுத்தி அழித்துவிட்டான். இந்நிகழ்வு குறித்து திருக்குர்ஆன் அத்தியாயம் அல்கலம் (17 முதல் 29 வரையுள்ள வசனங்கள்) பேசுகிறது.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ الدُّنْيَا حُلْوَةٌ خَضِرَةٌ وَإِنَّ اللَّهَ مُسْتَخْلِفُكُمْ فِيهَا فَيَنْظُرُ كَيْفَ تَعْمَلُونَ ) நிச்சயமாக இவ்வுலகம் இனிமையாகவும் பசுமையாகவும் இருக்கிறது. இங்கு நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என சோதிக்கவே இறைவன் இவ்வுலகில் உங்களுக்கு பிரதிநிதித்துவ அந்தஸ்தை (கிலாஃபத்தை) வழங்கி இருக்கிறான். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-2742

 

அல்லாஹ் மனிதனுக்கு வழங்கி இருக்கிற அருட்கொடைகளுக்கு அவர்கள் உரிமையாளர்கள் அல்லர். மாறாக, அல்லாஹ்வே அவற்றின் உண்மையான உரிமையாளன் ஆவான். 

 

மனிதனின் பணி இதுவே: இறைவன் தனக்கு வழங்கியுள்ள செல்வங்கள், ஆற்றல் அனைத்தையும் உண்மையான உரிமையாளனான அல்லாஹ்வின் விருப்பப்படியே அந்தக் கொடைகளை ஏழைகளின் நலனுக்காகவும், பிற நற்பணிகளுக்காகவும் அதை பயன்படுத்தி அதன் மூலம் இறைவன் உவப்பைப் பெறுவதை நோக்கமாக இருக்க வேண்டும்.

 

நம்மைவிட வசதியில் மேல் இருப்பவர்கள் அல்லது வசதியில் நமக்குச் சமமாக இருப்பவர்கள் நம்மிடம் ஏதேனும் உதவி கோரினால் அதற்கு பெயர் "தானம்" ஆகும் என்றும், நம்மைவிட வசதியில் கீழ் இருப்பவர்கள் நம்மிடம் ஏதேனும் உதவி கூறினால் அதற்கு பெயர் "தர்மம்" ஆகும் என்கிறார் ஒரு தமிழறிஞர்.

 

பிறர் நம்மிடம் கேட்பது என்பது யாசகமன்று.  மாறாக, உதவி அல்லது தன்னிறைவுக்காக வேண்டுதல் என்று தான் கூற வேண்டும். பணக்காரனுக்கு ஏழையின் உதவிகூட சில சமயம் தேவைப்படக்கூடும்.

 

வேண்டுகோள் அல்லது உதவி கேட்டு ஒருவர் நிற்கும்போது உதவுவதுதான் மனிதன் பண்பு. இதன் காரணமாகத்தான் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களிடம் எதைக் கேட்டாலும் இல்லை என்று எப்போதும் கூறியதில்லை (புகாரீ-6034)

 

தான் உதவ முடியாத நிலையில் இருக்கும்போதும்கூட உதவும் எண்ணமுடையவர்களிடம் அந்தத் தேவையுடையவரை அணுகச் செய்த நிகழ்வுகளும் நபியவர்களின் வாழ்க்கையில் ஏராளம் உண்டு.

 

கல்லாய் போனது

 

உஸ்மான் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமை கூறியதாவது. (அன்னை) உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு சமைக்கப்பட்ட இறைச்சி அன்பளிப்பாக வந்தது. உடனே அன்னையவர்கள், கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் இறைச்சியை விரும்புவார்கள் என்பதால் பணிப்பெண்ணிடம், ( ضَعِيهِ فِي الْبَيْتِ لَعَلَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُهُ ) "இதை வீட்டில் (பத்திரமாக எடுத்து) வைத்து விடு! நபியவர்கள் இதை உண்ணக்கூடும்" என்று கூறினார்கள். அவ்வேதமே பணிப்பெண் அதை வீட்டு மாடத்தில் வைத்து விட்டார்.

 

அந்நிலையில் யாசிப்பவர் ஒருவர் வீட்டு வாசலில் நின்று, ( تَصَدَّقُوا بَارَكَ اللَّهُ فِيكُمْ ) (நபியின் வீட்டாரே!) தர்மம் செய்யுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு அருள்வளம் புரிவானாக!" என்று கூறினார். அதற்கு வீட்டினர், ( بَارَكَ اللَّهُ فِيكَ )  "(வழங்குவதற்கு எதுவும் இல்லை என்ற கருத்தில்) அல்லாஹ் உமக்கு அருள்வளம் புரிவானாக! என்று கூறி (எதுவும் வழங்காமல் திருப்பி அனுப்பி)விட்டனர். எனவே யாசிப்பவர் போய்விட்டார்.

 

அப்போது நபியவர்கள் வீட்டுக்குள் வந்து, ( يَا أَمَّ سَلَمَةَ هَلْ عِنْدَكُمْ شَيْءٌ أَطْعَمُهُ ) "உம்மு ஸலமா! உன்னிடம் நான் உண்பதற்கு உணவு ஏதேனும் உள்ளதா?" என்று கேட்டார்கள். அதற்கு அன்னையவர்கள், "ஆம்" என்று கூறி, பணிப்பெண்ணிடம், ( اذْهَبِي فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكِ اللَّحْمِ ) "நீ சென்று, அந்த இறைச்சியை எடுத்துக் கொண்டு வந்து நபியவர்களுக்கு வழங்கு!" என்று கூறினார்கள்.

 

அவ்விதமே அவர் சென்று அங்கு மாடத்தில் (வைக்கப்பட்டிருந்த இறைச்சி காணாமல்) வெண்ணிறக் கல் தான்  இருக்கக் கண்டார். அப்போது (நடந்தவற்றை விசாரித்து அறிந்து கொண்ட) நபியவர்கள், ( فَإِن ذَلِك اللَّحْمَ عَادَ مَرْوَةً لِمَا لَمْ تُعْطُوهُ السَّائِلَ ) "அந்த இறைச்சி தான் வெண்ணிறக்கல்லாக மாறிவிட்டிருக்கிறது. நீங்கள் அதனை யாசிப்பவருக்கு கொடுக்காமல் இருந்ததே அதற்கு காரணம்" என்று கூறினார்கள் நூல்:- தலாயிலுந் நுபுவ்வா இமாம் பைஹகீ, மிஷ்காத்-1880

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவியர்களின் கொடைத்தன்மைக்கும் தயாளத்தன்மைக்கும் முன்பாக யார் தான் நிகராக முடியும்? ஒரு இறைச்சித்துண்டை தனக்காக அல்லாமல் நபியவர்களுக்காக எடுத்து வைத்ததற்கே இந்நிலை என்றால் சுயநலத்தோடு பிறருக்கு கொடுக்காமல் நாம் சேர்த்து வைக்கும் செல்வத்தின் நிலை என்னவாகும்?

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து, ( يَا رَسُولَ اللَّهِ، أَىُّ الصَّدَقَةِ أَفْضَلُ ) "நாயகமே! தர்மத்தில் மிகச் சிறந்தது எது?" என்ற வினவினார். நபியவர்கள், ( أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ حَرِيصٌ‏.‏ تَأْمُلُ الْغِنَى، وَتَخْشَى الْفَقْرَ ) “நீ ஆரோக்கியமானவராக, பொருளாசை உள்ளவராக, செல்வத்தை விரும்புவோராக, ஏழைமையை வெறுப்பவராக இருக்கும்போது நீ தர்மம் செய்வதுதான் மிகச்சிறந்த தர்மம் ஆகும்" என்று கூறினார்கள் .நூல்:- புகாரீ-2748, முஸ்லிம்-1870, அபூதாவூத்-2865

 

இயலாமையும், முதுமையும், நோயும் வரும்போது மரணத்தின் விளிம்பைத் தொடும்போதும் நன்மை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மனிதன் தர்மம் செய்திட முயல்கிறான்.

 

இந்த தர்மங்களுக்கு உரிய நன்மைகள் கிடைக்கும் என்றாலும் இளமைக்காலத்திலும்,ஆரோக்கியமாக இருக்கும்போதும், இன்னும் பொருள் சேர வேண்டும்; செல்வம் பெருக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ள நேரத்திலும், தர்மம் செய்தால் ஏழ்மை ஏற்படலாம் என எண்ணும் நேரத்திலும் தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும் என்பது இந்த நபிமொழியின் கருத்து.

 

நம்முடைய அனைத்து செல்வங்களிலும் ஏழை எளியோருக்கு ஒரு பங்கு உண்டு. அதில் அவர்களுக்குரிய பங்கை அவர்களுக்கு கொடுக்க மறுப்பது மாபெரும் மோசடியாகும்.

 

விரட்ட வேண்டாம்

 

நபியை யாசிப்பவரை நீர் விரட்டாதீர்! திருக்குர்ஆன்:- 93:10

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யாசிப்பவரை விரட்டி அடிப்பவர்களை மறுமைநாளில் வானவர்கள் விரட்டியடிப்பார்கள்.

 

கடையின் உரிமையாளர்களில் சிலர் தம் கடையின் கல்லாப்பெட்டியில் அமர்ந்து கொண்டு யாசிப்பவர்களை பார்த்து, "முதலாளி இல்லை! பிறகு வாங்க!" என்று கூறுவார்கள். அப்பட்டமான இந்தப் பொய் வார்த்தையின் விளைவாக இறைவன் இவர்களை முதலாளி என்ற அந்தஸ்திலிருந்து இறக்கி யாசிப்பவர்களாக மாற்றிவிட்டால் என்ன செய்ய முடியும்? இந்த பொய்யை சர்வ சாதாரணமாக சொல்லும் இவர்கள் சற்று யோசிப்பார்களா?

 

சிலர் ஏழை எளியோரை விரட்டி அடித்துவிட்டு, "என் தொழில் துறையில் அருள்வளம் இல்லை என்றும், நேரம் காலம் சரியில்லை என்றும் புலம்பிக்கொண்டு, ஜோதிடம் பார்ப்பதும், தொழில் ஸ்தாபனங்களில் இணைவைப்பை போதிக்கும் ஏதேனும் மாந்திரீகர்களிடம் சென்று செப்புத் தகடுகளை பிரேம் செய்து மாட்டி வைப்பதும், மந்திரித்த இன்ன பிற பொருள்களை ஆங்காங்கே மாட்டி வைப்பதும் இவைகளின் பரக்கத்தால் வியாபாரம் செழிப்படையும் என்று எண்ணுகிறார்கள். இவைகள் அனைத்தும் பாவச் செயல்கள் என்பதை மறந்து விட்டனர்.

 

ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன் பிறரையும்) உணவளிக்க அவன் தூண்டவுமில்லை. ஆகவே, இன்றைய தினம் அவனுக்கு இங்கே யாதொரு நண்பனும் இல்லை. (புண்களில் வடியும் சீழ் சலத்தைத் தவிர (அவனுக்கு வேறு) உணவில்லை (என்றும் கூறப்படும்). திருக்குர்ஆன்:- 69:34,35,36

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَوْ أَنَّ دَلْوًا مِنْ غَسَّاقٍ يُهَرَاقُ بِهِ الدُّنْيَا , لَأَنْتَنَ أَهْلَ الدُّنْيَا ) (நரகத்தில் உள்ள சீல் சலம் நிரம்பிய) கழிவுநீர் ஒரு வாளியை இந்த உலகில் ஊற்றப்பட்டால், உலக மக்கள் மிகவும் துர்நாற்றம் வீசுபவர்களாக மாறிவிடுவார்கள். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது இப்னு முபாரக், ஹாகிம், தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்

 

முடிந்தவரை பிறருக்கு கொடுத்து உதவ வேண்டும். உதவ இயலாதபோது மென்மையாக பேசி அனுப்பிவிட வேண்டும்.

 

உதவி என்பது, பொருள் உதவி மட்டுமல்ல. மார்க்கச் சட்டங்களை அறிந்துகொள்ள விழைபவர், கல்வியறிவு பற்றி ஐயப்பாடுகளைக் கேட்டு வருபவர், தொழில் முறைகளை கற்க வருபவர், மார்க்க விஷயத்தில் முரண்பாடான கருத்துடையோர் என எவர் நம்மைத் தேடி வந்தாலும் அவர்களை விரட்டி விடாது. இறக்கத்தோடு பதிலளித்து உதவ வேண்டும்.

 

நாம் மனத்தூய்மையோடு நற்செயல்கள் புரிய அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! ஆமீன்!

 

(இந்தக் கட்டுரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

No comments:

Post a Comment

குறைகளை ஏற்றுக்கொள்வோம்

  குறைகளை ஏற்றுக்கொள்வோம்   وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ قَالَ فَعَلْتُهَا إِذًا وَأَنَا مِنَ الضّ...