Search This Blog

Saturday, 25 October 2025

டர்ர், புர்ர், டமால்...

டர்ர், புர்ர், டமால்...

 

وَتَأْتُونَ فِي نَادِيكُمُ الْمُنْكَرَ

(இறைத்தூதர் நூஹ் - அலை அவர்கள் தமது சமுதாயத்தாரை நோக்கி!) உங்கள் அவையில் அருவருக்கத்தக்க (காரியத்)தைச் செய்கிறீர்களா? (என்று கண்டித்தார்கள்.) திருக்குர்ஆன்:- 29:29

 

நமது உடலில் காற்றுப் பிரிகை நிகழ்வது மிகவும் இயல்பானதுதான். செரிமான அமைப்பிலிருந்து ஆசன வாய் வழியாக வாயு வெளியேற்றப்படுவது பொதுவானது. சராசரியாக ஒருநாளில் ஒருவருக்கு எட்டு முதல் இருபத்து ஐந்து முறை வாயு குவிப்பு வெளியேறலாம் என்கிறார்கள் இரைப்பை குடல் நிபுணர்கள்.

 

நமது உடலிலிருந்து வாயு வெளியேறுவது என்பது, நாம் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறோம் என்பதையே குறிக்கிறது.

 

சீரான வாயு வெளியேற்றம் ஆரோக்கியமான செரிமான அமைப்பின் அடையாளமாகும். உணவு சரியாக செரிக்கப்படுகிறது என்பதையும், குடல் பாக்டீரியாக்கள் சரியான முறையில் செயல்படுகின்றன என்பதையும் இது குறிக்கிறது. செரிமான அமைப்பு சீராக இயங்கும்போது, ஊட்டச்சத்துக்கள் உடலில் நன்றாக உறிஞ்சப்படுகின்றன.

 

வாயு வெளியேற்றம் ஒரு இயற்கையான உடல் செயல்பாடு. அதை சங்கடமாகவோ அல்லது வெட்கப்படவோ தேவையில்லை. மாறாக, இது உடல் ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய அம்சம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 

கண்டிக்கப்பட வேண்டியவை 

 

தலைப்பில் காணும் வசனத்திற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ( إِنَّهُمْ كَانُوا يَتَضَارَطُونَ فِي مَجَالِسِهِمْ ) "(நூஹ் - அலை அவர்களின் சமுதாயத்தாரான) அவர்கள் அவையில் இருந்து கொண்டு, ஒருவருக்கொருவர் வேண்டுமென்றே சப்தமாக நாற்ற வாயுவைப் பிரியவிட்டுக் கொள்வார்கள்" என்று விளக்கமளித்தனர். நூல்:- தஃப்சீர் குர்துபீ

 

தலைப்பில் காணும் வசனத்திற்கு மார்க்க அறிஞர்களில் சிலர், ( كَانُوا يَتَضَارَطُونَ وَيَتَضَاحَكُونَ ) "(நூஹ் - அலை அவர்களின் சமுதாயத்தார்) அவையில் இருந்து கொண்டு, வேண்டுமென்றே சப்தமாக நாற்ற வாயுவைப் பிரியவிட்டு ஒருவருக்கொருவர் சிரித்துக் கொண்டிருப்பார்கள்" என்று விளக்கமளித்தனர். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

சபையின் ஒழுக்கம் பேணாமல், வேண்டுமென்றே தாமே வாயுவைப் பிரியவிட்டு பிறரைக் கேலி கிண்டல் செய்வதும், அதை ஒரு பொழுதுபோக்காக எண்ணி, சிரித்து மகிழ்வதும் சரியல்ல என்பது திருக்குர்ஆனின் கருத்து.

 

சபையில் வேண்டுமென்றே சப்தமாக வாயுவை பிரியவிட்டு கேலி கிண்டல் செய்து சிரித்து மகிழ்வது இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்களின் சமுதாயத்தாரில் கேடுகெட்டவர்களின் தீய செயலாகும். இதுகுறித்து அவர்கள், நூஹ் (அலை) அவர்களின் கண்டிப்புக்கு ஆளானார்கள். எனவே, இது போன்ற பழக்கம் நம்மிடம் வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 

இறைநம்பிக்கையாளர்களே! ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில், (பரிகாசிக்கப்படுவோர்) அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். திருக்குர்ஆன்:- 49:11

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், "(உடலிலிருந்து பிரியும் துர்)வாயு காரணமாக மக்கள் சிரிப்பது குறித்து, ( لِمَ يَضْحَكُ أَحَدُكُمْ مِمَّا يَفْعَلُ ) "(அப்படிச் சிரிக்க வேண்டாமெனக் குறிப்பிடும் வகையில்) 'உங்களில் ஒருவர் தாம் செய்யும் ஒரு செயலிற்காக (அதே செயலைப் பிறர் செய்யும்போது) ஏன் சிரிக்கிறார்?" என்று கேட்டபடி (அதைத் தவிர்ந்துக்கொள்ள வேண்டுமென) உபதேசித்தார்கள்.  நூல்:- புகாரீ-4942, முஸ்லிம் 5484

 

அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறியதாவது. ( نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَضْحَكَ الرَّجُلُ مِمَّا يَخْرُجُ مِنَ الأَنْفُسِ ) உடலில் இருந்து வெளியேறும் ஒன்(றான வாயுக் காற்)றைக் கேட்டு எவரும் சிரிப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். நூல்:- புகாரீ-6042

 

மனிதனுக்கு ஏற்படக்கூடிய இயல்பான ஒன்றை, ஏன் கேலி செய்ய வேண்டும்? ஒருவருக்கு வாயுப் பிரிந்தால் அவரை கேலி கிண்டல் செய்து எள்ளி நகையாடுவது சரியல்ல. சபையில் இருக்கும் ஒருவருக்கு எதிர்பாராத விதமாக வாயு பிரிந்துவிட்டால், அதைக் கண்டுக்கொள்ளக் கூடாது என்பது இந்த நபிமொழியின் கருத்து.

 

ஷைத்தானின் ஓட்டம்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا نُودِيَ لِلصَّلاَةِ أَدْبَرَ الشَّيْطَانُ لَهُ ضُرَاطٌ حَتَّى لاَ يَسْمَعَ التَّأْذِينَ فَإِذَا قُضِيَ التَّأْذِينُ أَقْبَلَ حَتَّى إِذَا ثُوِّبَ بِالصَّلاَةِ أَدْبَرَ حَتَّى إِذَا قُضِيَ التَّثْوِيبُ أَقْبَلَ حَتَّى يَخْطِرَ بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ ) தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் ஷைத்தான் பாங்கை கேட்காமலிருப்பதற்காக வாயுவை வெளியேற்றியவாறு (வெகு தூரத்திற்கு) பின்வாங்கி ஓடுகிறான். பாங்கு முடிந்ததும் மீண்டும் (பள்ளிவாசலுக்கு) வருகிறான். பின்னர் 'இகாமத்' சொல்லப்பட்டால், பின்வாங்கி ஓடுகிறான். 'இகாமத்' சொல்லி முடிக்கப்பட்டதும் (திரும்பவும் பள்ளிவாசலுக்கு) வந்து (தொழுது கொண்டிருக்கும்) மனிதனின் உள்ளத்தில் ஊசலாட்டத்தைப் போடுகிறான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-608, முஸ்லிம்-636, அபூதாவூது-433, நஸாயீ-664, முஸ்னது அஹ்மது

 

பாங்கு எந்தளவுக்கு உரத்த குரலில் சொல்லப்படுகிறதோ அந்த அளவுக்கு ஷைத்தான் தூர விரட்டப்படுகிறான். அதனால் அவனுக்கு சிரமம் உண்டாகிறது. எனவே, உரத்த குரலில் பாங்கொலித்து  ஷைத்தானுக்கு சிரமத்தை ஏற்படுத்த வேண்டும்.

 

ஷைத்தான் பாங்கொலியைக் கேட்கக்கூடாது என்பதற்காகத் தலைதெறிக்க ஓடுகிறான். அதுவும் வாயுவை விட்டுக்கொண்டே ஓடுகிறான். பாங்கோசை அவனை சவுக்கால் அடிப்பது போன்று இருக்கும்.

 

பாங்கோசையும் மிஞ்சும் அளவுக்கு வாயுவை விட்டுக்கொண்டே ஓடுவதற்கு காரணம், பாங்கோசையைக் கேட்கும் அனைத்து படைப்புகளும் மறுமைநாளில் சாட்சி சொல்லும். அந்த இடத்தில் ஷைத்தான் இருந்தால் அவனும் சாட்சி சொல்ல வேண்டிவரும். ஆகவே, பாங்கின் வார்த்தைகளை தன் காதில் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக வாயுவை சப்தமாக வெளியேற்றிக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறான் என்று அல்லாமா அய்னீ (ரஹ்) அவர்கள் விவரிக்கிறார்கள். நூல்:- அஸ்ஸம்ஹுல் மஹ்மூத்

 

ஐயத்தை பொருட்படுத்த வேண்டியதில்லை

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا كَانَ أَحَدُكُمْ فِي الْمَسْجِدِ فَوَجَدَ رِيحًا بَيْنَ أَلْيَتَيْهِ فَلاَ يَخْرُجْ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا ) உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் இருக்கும்போது தமது ஆசனவாய் வழியே வாயு பிரிந்ததைப் போன்று தோன்றினால், அவர் (வாயு பிரிந்ததன்) சப்தத்தைக் கேட்காத வரை, அல்லது நாற்றத்தை உணராத வரை (உளூச் செய்வதற்காக அங்கிருந்து) வெளியேற வேண்டாம். அறிவிப்பாளர்:- அபூஹரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-70

 

ஒருவர் (அங்கத்தூய்மை  எனும்) உளூச் செய்தார். தாம் உளூச் செய்தோம் என்பது அவருக்கு உறுதியாகத் தெரியும். பின்னர் உளூவை முறிக்கும் வகையில் நாற்ற வாயு பிரிந்ததோ என்ற சந்தேகம் அவருக்கு எழுகிறது. ஆனால், அது உறுதியாகவில்லை என்றால், முன்பு செய்த உளூவைக் கொண்டே தொழலாம். ஏனெனில், உளூ செய்தது உறுதி. உளூ முறிந்தது வெறும் சந்தேகம்தான். சந்தேகத்தால் உறுதியான ஒன்றை அழித்திட இயலாது.

 

வாயு பிரிந்தது உறுதி என்றால் அதன் அடையாளமாக வாயு வெளியான சப்தத்தைக் கேட்டிருக்க வேண்டும். அல்லது நாற்றத்தை உணர்ந்திருக்க வேண்டும். இந்த இரண்டும் ஏற்படாதபோது மனதில் தோன்றிய ஐயத்தை பொருட்படுத்த வேண்டியதில்லை.

 

உளூ முறிந்துவிடுமா?

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறங்கி பிறகு (புதிதாக உளூ செய்யாமலேயே) தொழுவதைக் கண்டேன். அப்போது நான், ( يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ قَدْ نِمْتَ ) "நாயகமே! நீங்கள் உறங்கிவிட்டீர்களே (பிறகு புதிதாக உளூ செய்யாமல் தொழுகிறீர்களே)?" என்று கேட்டேன்.

 

நபியவர்கள், ( إِنَّ الْوُضُوءَ لاَ يَجِبُ إِلاَّ عَلَى مَنْ نَامَ مُضْطَجِعًا فَإِنَّهُ إِذَا اضْطَجَعَ اسْتَرْخَتْ مَفَاصِلُهُ ) “விலாப்புறத்தில் சாய்ந்து படுத்து உறங்கியவருக்கே உளூ செய்வது கடமையாகும். ஏனெனில், சாய்ந்து படுத்து உறங்கும்போது மூட்டுக்கள் தளர்கின்றன" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-72

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَامَ حَتَّى نَفَخَ ثُمَّ قَامَ فَصَلَّى ) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் குறட்டைவிடும் அளவுக்கு உறங்கினார்கள். பின்னர் எழுந்து (புதிதாக உளூ செய்யாமலேயே) தொழுதார்கள்.

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( كَانَ نَوْمُهُ ذَلِكَ وَهُوَ جَالِسٌ ) நபியவர்களின் அந்த உறக்கம் அவர்கள் அமர்ந்திருந்த நிலையில் நடைபெற்றது. நூல்:- இப்னுமாஜா-468, 469, முஸ்னது அல்பஸ்ஸார், முஸ்னது அஹ்மத்

 

சாலிஹ் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்களிடம், ( عَمَّنْ نَامَ قَاعِدًا مُعْتَمِدًا ) “புட்டங்கள் தரையில் படியுமாறு உட்கார்ந்து உறங்குபவர் பற்றி (அவருடைய உளூ முறியுமா? அவர் மீண்டும் உளூ செய்ய வேண்டுமா?)" என்று கேட்டேன். அதற்கு அன்னார், ( لاَ وُضُوءَ عَلَيْهِ ) "அவர் (மீண்டும்) உளூ செய்ய வேண்டியதில்லை" என்று விடையளித்தார்கள்.

 

அறிஞர்களில் பெரும்பாலானோர், ( لاَ يَجِبَ عَلَيْهِ الْوُضُوءُ إِذَا نَامَ قَاعِدًا أَوْ قَائِمًا حَتَّى يَنَامَ مُضْطَجِعًا ) “உட்கார்ந்துகொண்டு உறங்கினாலும், நின்றுகொண்டு உறங்கினாலும் உளூ முறியாது. சாய்ந்து படுத்து உறங்கினால் தான் உளூ முறியும்” என்று  கருதுகின்றனர். இதுதான் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) ஆகியோரின் கூற்றாகும்.

 

இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள், ( مَنْ نَامَ قَاعِدًا فَرَأَى رُؤْيَا أَوْ زَالَتْ مَقْعَدَتُهُ لِوَسَنِ النَّوْمِ فَعَلَيْهِ الْوُضُوءُ ) "உட்கார்ந்து கொண்டு உறங்கி, தூக்கம் பிடித்ததும் கனவு கண்டால், அல்லது ஆரம்பத் தூக்கத்திலேயே புட்டம் தரையோடு படியாமல் நீங்கி விட்டால் உளூ முறிந்து விடும்" என்று கூறியுள்ளார்கள். நூல்:- திர்மிதீ-73

 

உறக்கம் என்பது உளூவை நேரடியாக முறிக்கும் செயலாகாது. இருப்பினும், உறக்கத்தின்போது நாற்ற வாயு பிரிவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, வாயு பிரிவதை உணர முடியாத அளவுக்கு ஆழ்ந்த உறக்கம் ஒருவரை தழுவினால் அவரது உளூ முறிந்துவிடும். இது நன்கு சாய்ந்து படுத்து உறங்கும்போது ஏற்படும் நிலையாகும்.

 

புட்டத்தை பூமியில் நறுக்கென்று அழுத்தி, சம்மனமிட்டு அமர்ந்த நிலையில், உறங்கிக்கொண்டிருந்தால் அவ்வளவு எளிதில் வாயு வெளியேறாது. உளூவும் முறிந்துவிடாது. மாறாக, சுவற்றில் ஒரு பக்கமாக சாய்த்தவாறு  புட்டத்தின் ஒரு பகுதி பூமியிலிருந்து சற்று நீங்கிய நிலையில் உறங்கினால் வாயு வெளியேறி, உளூ முறிந்துவிட சாத்தியமுண்டு. ஜும்ஆ தொழுகைக்கு வந்து (பயான் எனும்) சொற்பொழிவு நேரத்தில் உறங்குபவர்கள் இது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

வானவர்களுக்கும் நோவினை

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَكَلَ الْبَصَلَ وَالثُّومَ وَالْكُرَّاثَ فَلاَ يَقْرَبَنَّ مَسْجِدَنَا فَإِنَّ الْمَلاَئِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو آدَمَ ) வெங்காயம், வெள்ளைப் பூண்டு, சீமை பூண்டு ஆகியவற்றை சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில், மனிதர்கள் எதனால் தொல்லை அடைகிறார்களோ அதனால் வானவர்களும் தொல்லை அடைகிறார்கள். அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-976

 

பள்ளிவாசலுக்குள் வைத்து  வாயுவை வெளியேற்றுவது அருவருக்கத்தக்க செயல் என்பது மார்க்கச் சட்டமாகும். காரணம், அந்தத் துர்நாற்றத்தால் அங்கிருக்கும் மனிதர்கள் மட்டுமல்ல, வானவர்களும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

 

வாயு என்பது மனிதனுக்கு தவிர்க்க முடியாத ஒன்று. ஆனாலும், அது வெளியேறப்போவதை எல்லாம் மனிதர்களும் உணர்வால் அறிந்து கொள்வார்கள். ஆகவே, அது வெளியேறப்போவதை உணர்ந்தவுடன் உடனடியாக பள்ளிவாசலை விட்டும் வெளியேறி விடுவது மிகவும் நல்லது.

 

அழகிய முன்மாதிரி

 

ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் ஒரு வீட்டில் இருந்தார்கள். அன்னாருடன் ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதருக்கு காற்று பிரிந்துவிட்டது. உடனே உமர் (ரலி) அவர்கள், ( عَزَمْتُ عَلَى صَاحِبِ هَذِهِ الرِّيحِ لَمَّا قَامَ فَتَوَضَّأَ ) "சத்தியமிட்டு சொல்கிறேன். இச்செயலை செய்தவர் எழுந்து சென்று உளுச் செய்துவிட்டு வரவும்" என்று கூறினார்கள்.

 

அப்போது ஜரீர் (ரலி) அவர்கள், ( يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَوْ يَتَوَضَّأُ الْقَوْمُ جَمِيعًا ) "ஜனாதிபதி அவர்களே! சபையினர் அனைவருமே உளூச் செய்துவிட்டு வந்தால் நன்றாக இருக்குமே" என்று கூறினார். உடனே உமர் (ரலி) அவர்கள், ( رَحِمَكَ اللَّهُ نِعْمَ السَّيِّدُ كُنْتَ فِي الْجَاهِلِيَّةِ وَنِعْمَ السَّيِّدُ أَنْتَ فِي الْإِسْلَامِ ) "அல்லாஹ் உமக்கு அருள்புரியட்டும். நீர் அறியாமை காலத்திலும் சிறந்த தலைவராக இருந்தீர்; இஸ்லாத்திலும் சிறந்த தலைவராக இருக்கிறீர்" என்று கூறினார்கள். நூல்:- தபக்காத் இப்னு சஅத், சியரு அஃலாமுந் நுபலா இமாம் அத்தஹபீ, ஸிஃபத்துஸ் ஸஃப்வாஹ் ( صفة الصفوة ) இமாம் ஜவ்ஸீ, கன்ஸுல் உம்மால், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்-553

 

அபூ அலீ அத்தக்காக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை ஒரு பெண் ஹாத்திம் (ரஹ்) அவர்களிடம் வந்து மார்க்கச் சட்டம் குறித்து கேள்வி கேட்டாள். இந்நிலையில், எதிர்பாரா விதமாக அப்பெண்ணுக்கு வாயுத்தொல்லையின் காரணமாக சப்தமாக வாயுப் பிரிந்தது.

 

இதைக் கொஞ்சமும் எதிர்பாராத அந்தப் பெண் வெட்கத்தால் நாணிப் போனாள். அந்தப் பெண்ணின் தர்மச் சங்கடத்தை உணர்ந்த இமாம் அவர்கள், ( ارْفَعِي صَوْتَكِ. فَأَوْهَمَهَا أَنَّهُ أَصَمُّ )  “(என்னம்மா கேள்வி கேட்டாய்?) கொஞ்சம் சப்தமாகக் கூறு! என்று சொல்லி, இமாம் அவர்கள் அந்தப் பெண்ணைத் தான் காது கேளாதவன் என்று எண்ண வைத்தார்கள். அந்தப் பெண் இதைக்கண்டு மகிழ்ச்சியடைந்தாள். உடனே அந்தப் பெண், ( إِنَّهُ لَمْ يَسْمَعِ الصَّوْتَ ) "இவர் (குறைவான) சப்தத்தை கேட்காதவர்" என்றாள். இதனால்தான் ஹாத்திம் (ரஹ்) அவர்களுக்கு, "காது கேளாத ஹாத்திம்" ( حَاتِمُ الْأَصَمِّ ) என்று செல்லப் பெயர் சூட்டப்பட்டது.

 

இப்னு முலக்கின் (ரஹ்) அவர்களின் மற்றொரு அறிவிப்பின்படி “ஹாத்திம் அல்அஸம்மு (ரஹ்) அவர்கள் அந்தப் பெண் மரணிக்கும் வரை காது கேட்காதவரைப் போன்றே இருந்துவிட்டு, பின்னர் தனக்கு காது கேட்கும் என்றும் மேற்கூறிய காரணத்தால் தான் இது வரை காது கேளாதவரைப் போன்று நான் இருந்தேன் என்றும் எனக்கு காது கேட்கும் விவரம் அந்தப் பெண்ணுக்கு தெரிந்தால் அவளின் மனம் சங்கடப்படும் என்பதால் நான் அஸம்மு என்று அழைப்பதை மனமுவந்து ஏற்றுக்கொண்டேன்” என்று கூறினார்கள். நூல்:- மதாரிஜுஸ் ஸாலிக்கீன் ( مدرج السّالكين ) இமாம் இப்னுல் கய்யிம், தபகாத்துல் அவ்லியா இமாம் இப்னுல் முலக்கின்

 

உணவு, பானத்தைக் குறைத்தால்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا فَسَا أَحَدُكُمْ فِي الصَّلاَةِ فَلْيَنْصَرِفْ فَلْيَتَوَضَّأْ وَلْيُعِدْ صَلاَتَهُ ) தொழுகையில் உங்களுக்கு வாயு வெளியாகிவிட்டால், நீங்கள் திரும்பிச் சென்று உளூ செய்யுங்கள். (பின்பு) தொழுகையைத் திரும்பத் தொழுங்கள். அறிவிப்பாளர்:- அலீ பின் தல்க் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-853

 

ஜமாஅத்  தொழுகையில் இருக்கும் போது வாயு வெளியேறிவிட்டால், உடனே ஜமாஅத்தில் இருந்து விலகிச் சென்று, உளூச் செய்துவிட்டு, மீண்டும் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும். வாயு வெளியேறிய பிறகும் தொழுதுகொண்டிருந்தால் அந்தத் தொழுகையும் நிறைவேறாது; ஜமாஅத்தும் தவறிப்போகும்.

 

ஒரு பள்ளிவாசலில் இமாம் தமது தேவை ஒன்றிக்காக வெளியே சென்றுவிட்டார். அப்போது ஒருவர் லுஹர் தொழுவித்தார். அந்தத் தொழுகையில் அவர் "சஜ்தா ஸஹ்வ்" செய்தார்.

 

தொழுகை முடிந்த பிறகு பின்னாள் தொழுத பள்ளிவாசல் தலைவர் தொழுவித்தவரை நோக்கி, "பாய்! தொழுகையில் நமது இமாம் சஜ்தா ஸஹ்வ் செய்தார் என்றால், அவர் (வாஜிபான) ஏதேனும் ஒன்றை விட்டிருப்பார். அதனால் அவர் சஜ்தா ஸஹ்வ் செய்வார். ஆனால், நீங்கள் சரியாக தொழுவித்தது போன்றே இருந்தது. பிறகு நீங்கள் ஏன் சஜ்தா ஸஹ்வ் செய்தீர்?" என்று கேட்டார். அதற்கு தொழுவித்தவர், (அதுவா!) நான் காற்றை (வாயு) விட்டேன். அதனால் சஜ்தா ஸஹ்வ் செய்தேன்" என்று பதிலளித்தார்.

 

இமாமிற்குரிய தகுதியையும், மார்க்கச் சட்டங்களையும் அறியாதவர்கள் தொழுவித்தால் இவ்வாறு தான் அந்தத் தொழுகை அமையும்.

 

இவரைப் போன்றே சிலர், தொழுகையில் வாயு வெளியேறிவிட்டால் தொழுகை வீணாகிவிடும் என்பதைக்கூட  அறியாமல் இருக்கிறார்கள்.

 

நாம் உண்ணுவதாலும் பருகுவதாலும் உடலில் வாயு ஏற்பட்டு, அது வெளியேறுகிறது. நாம் உளூவுடன் இருக்கும்போது வாய் வெளியேறினால் உளூ முறிந்துவிடும். உளூவுடன் நீண்டநேரம் இருக்க விரும்பினால், உண்ணுதல் பருகுதலை குறைக்க வேண்டும்.

 

ரமளான் மாதம் பகல் நேரத்தில் நாம் உண்ணாமல் பருகாமல் இருப்பதால் உளூ நீண்டநேரம் இருப்பதை நாம் உணர்கிறோம்.

 

ஹஜ் மற்றும் உம்ராவின்போது கஅபா மற்றும் ஸஃபா - மர்வா மலைகளைச் சுற்றிவர, உளூ அவசியமாகும். இதைச் செய்வதற்கு குறிப்பிட்ட அளவு நேரம் தேவைப்படும். இந்த வணக்கத்தை செய்து கொண்டிருக்கும்போது இடையில் வாயுப் பிரிந்து உளூ முறிந்துவிட்டால், உடனே உளூ செய்துவிட்டுதான் தொடர வேண்டும். கஅபாவின் பகுதியில் இருந்து வெளியேறி உளூ செய்துவிட்டு, மீண்டும் உள்ளுக்குள் வருவது சற்று சிரமமாக இருக்கும்.

 

எனவே, இந்த வணக்கத்தை செய்வதற்கு முன்பு உணவு பானத்தை குறைத்துக் கொண்டால், வாயு வெளியேறுவது குறைந்துவிடும். எனவே, முறையாக உளூ செய்து, அந்த உளூவை தக்கவைத்து இந்த வணக்கத்தை ஒரே மூச்சில் முடிப்பது மிகவும் சிறந்தது.

 

அடக்கக்கூடாது

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَلاَ يُصَلِّي وَهُوَ حَقِنٌ حَتَّى يَتَخَفَّفَ ) மலஜலத்தை அடக்கிக்கொண்டு தொழக்கூடாது. மலஜலத்தை வெளியாக்கி, தன் வயிற்றை இலகுவாக்கிக் கொண்டு தொழ வேண்டும். அறிவிப்பாளர்:- ஸவ்பான் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-83

 

மனிதன், இயற்கை உபாதையான மலஜலம், வாயு இவற்றை அடக்குவதால் எண்ணிலடங்கா ஆரோக்கியக் கேடுகளுக்கு ஆளாகிறான்.

 

வாயு பிரிவது உடலில் இயற்கையாக நடக்கும் நிகழ்வு. ஆனால் வெளியேற்றாமல் அடக்கும்போது அது வீக்கம் மற்றும் தசைப்பிடிப்பு போன்ற அசெளகரியங்களை ஏற்படுத்தும். வாயு தொல்லையே நாள்பட பிரச்சனை எனும்போது, வாயு வெளியேற்றாமல் அடக்குவது நல்லதல்ல.

 

சமூகத்தில், பொதுஇடங்களில் வாயு வெளியேற்றுவது சங்கடமான ஒரு விஷயமாகக் கருதப்படுகிறது. இதனால், பலர் வாயுவை அடக்க முயற்சி செய்கின்றனர். ஆனால், இந்த இயற்கையான உடல் செயல்பாட்டை அடக்குவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். வாயு வெளியேற்றுவது ஒரு இயல்பான உடல் செயல்பாடு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் அவசியமானது. இது உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவுகிறது.

 

உணவு செரிமானத்தின்போது, வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள் உணவை சிதைக்கும்போது வாயு உற்பத்தி ஆகிறது. இந்த வாயு உடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். வாயுவை அடக்கும்போது, அது வயிற்றில் அசௌகரியம், வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். நீண்ட காலத்திற்கு வாயுவை அடக்குவது செரிமான பிரச்சனைகள் மற்றும் பிற உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இது வலி, அழுத்தம் மற்றும் சங்கடமான துர்நாற்றத்தை கொண்ட வெளியீடுகளை அதிகரிக்கிறது.

 

வாயுவை வெளியேற்றாமல் அடக்கும்போது சிக்கிய இந்த வாயு விரிவடையும்போது குடல் சுவர் நீண்டு, வீக்கம், தசைப்பிடிப்பு போன்றவற்றை தூண்டும். இந்த வயிற்று இறுக்கம் வாயு வெளியேறிய உடன் மறைந்துவிடும். குடல் ஆரோக்கியமாக வைத்திருக்க வாயு இல்லாமல் பார்த்துகொள்ள வேண்டும்.

 

அரிதாக நாம் வாயுவை அடக்கும்போது வாயுவின் சிறிய பகுதி இரத்த ஓட்டத்தில் பரவி நுரையீரலுக்கு சென்று மூச்சை வெளியேற்றும்போது உடலைவிட்டு வெளியேறும். இது பாதிப்பில்லாத மாற்றுப்பாதை என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

 

வயிற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏற்படும் குடல் அடைப்பு, குடல்கள் சுருங்கி சாதாரணமாக நகர தவறுவதால் வாயு இயல்பாக வெளியேறுவதில் ஒரு சிக்கலாக இருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். இவர்கள் வாயுவை உருவாக்கும் உணவுகளை தவிர்ந்துக்கொள்வது நல்லது.

 

வாயுத்தொல்லை எது?

 

அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படும் உணவுப்பாதைப் பிரச்சினையை அலோபதி மருத்துவம் ‘வாயுத் தொல்லை’(Flatulence) என்கிறது.

 

ஆனால், பொதுமக்கள் வாயுக்குத் துளியும் தொடர்பில்லாத நெஞ்சுவலி, முதுகுவலி, முழங்கால் மூட்டுவலி, விலாவலி, இடுப்புவலி, தோள்பட்டை வலி என்று உடலில் உண்டாகும் பலதரப்பட்ட வலிகளுக்கும் வாயு தான் காரணம் என்று முடிவு செய்துகொள்கிறார்கள்.

 

நம் உடற்கூறு அமைப்பின்படி, சுவாசப் பாதை, உணவுப் பாதை இந்த இரண்டு இடங்களில் மட்டுமே வாயு இருக்க முடியும். பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் தலை முதல் பாதம்வரை வாயு சுற்றிக்கொண்டிருப்பதில்லை. அப்படிச் சுற்றினால், அது உயிருக்கே ஆபத்து.

 

இதயப் பிரச்சனை ஏற்படும்போது, இது சாதாரண வாயுத்தொல்லை தான் என்றெண்ணி, கண்டுகொள்ளாமல் இருந்துவிடும்போது தான், இதய அடைப்பு ஏற்பட்டு மனிதன் இறந்துப்போகிறான்.

 

வாயு எப்படி உருவாகிறது?

 

நாம் அவசர அவசரமாகச் சாப்பிடும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும்போது, தேநீர் (காபி  எனும்) கொட்டைவடிநீர், மற்றும் புட்டிப் பானங்களை உறிஞ்சிக் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே காற்றையும் விழுங்கிவிடுகிறோம். இந்தக் காற்றில் 80 சதவீதம் இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறிவிடுகிறது. மீதி குடலுக்குச் சென்று ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.

 

அடுத்ததாக, குடலில் உணவு செரிக்கும்போது அங்கு இயல்பாகவே இருக்கும் தோழமை பாக்டீரியாக்கள் நொதித்தல் எனும் செயல்முறை மூலம் பல வேதிமாற்றங்களை நிகழ்த்துவதால், ஹைட்ரஜன், கார்பன்டை ஆக்சைடு, நைட்ரஜன், ஆக்சிஜன், மீத்தேன் எனப் பலதரப்பட்ட வாயுக்கள் உற்பத்தியாகின்றன.

 

சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். தினமும் சுமார் 2 லிட்டர் வரை வாயு உற்பத்தியாகிறது. இது அப்படியே வெளியேறினால் சுற்றுச்சூழல் கெட்டுவிடும். எனவே, இது பெரும்பாலும் இரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப்பாதை வழியாக வெளியேறுகிறது. சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. வாயு தான் இருக்கக்கூடும். இது வெளியேறுவது உடலுக்கு நன்மை தரும் விஷயம்தான். ஆனால், கெட்ட வாடை கொண்ட வாயு வெளியேறினால், உடலுக்குள் கோளாறு இருப்பதாகவே அர்த்தம்.

 

கெட்ட வாடை ஏன்?

 

சாதாரணமாக மேலே சொன்ன வாயுக்கள் உருவாகும்போது துர்நாற்றம் இருக்காது. ஆனால், குடலில் சில என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது, புரத உணவு சரியாகச் செரிக்கப்படுவதில்லை. அப்போது அமோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு, மெர்காப்டான் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாக வெளியேறும். அப்போதுதான் அக்கம் பக்கம் இருப்பவர்கள் மூக்கைப் பிடிக்கும் நிலை உருவாகிறது. மலச்சிக்கல்  பிரச்சனை உள்ளவர்களுக்கும் வாயு நாற்றமெடுக்கும்.

 

சத்தம் ஏன் கேட்கிறது?

 

பலருக்குச் சத்தமில்லாமல் வாயு வெளியேறுகிறது. சிலருக்குச் சத்தத்துடன் அது வெளியேறுகிறது. காரணம் என்ன? பொதுவாக ஹைட்ரஜனும் மீத்தேனும் சரியான அளவில் ஆக்சிஜனுடன் கலந்தால் ‘புஸ்வாணம் சத்தம்’ மட்டுமே கேட்கும். இந்தக் கலவை அதிகமாகிவிட்டால் ‘அணுகுண்டு வெடியைப் போன்ற சத்தம்’கூடக் கேட்கலாம்.

 

வாயு அதிகமாகப் பிரிவது ஏன்?

 

நாளொன்றுக்குச் சராசரியாக 25 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை. இதற்கு மேல் அளவு அதிகரித்தாலோ வயிற்றில் வலி, கடுமையான இரைச்சல், உப்புசம், புளித்த ஏப்பம் போன்றவை சேர்ந்துகொண்டாலோ என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும்.

 

பொதுவாக, புரதம் மிகுந்த மொச்சை போன்ற உணவு வகைகளையும் ஸ்டார்ச் நிறைந்த கிழங்குகளையும் அதிகமாகச் சாப்பிடுவதுதான் இதற்கு முதன்மைக் காரணம்.

 

அடுத்து மலச்சிக்கல், குடல்புழுக்கள், அமீபியாசிஸ், பித்தப்பைக் கற்கள் போன்றவையும் வாயு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். குடல் காசநோய், புற்றுநோய், கணைய நோய், கல்லீரல் நோய், குடலடைப்பு, குடல் எரிச்சல் நோய் (Irritable Bowel Syndrome) போன்றவற்றால் குடலியக்கம் தடைபடும்போது வாயு அதிகமாகலாம். பேதி மாத்திரைகள், ஆஸ்துமா மாத்திரைகள், ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போதும் வாயுத்தொல்லை அதிகரிப்பது வழக்கம்.

 

உடல் பருமன் உள்ளவர்களுக்கு, அதிக நேரம் உட்கார்ந்துகொண்டே வேலை செய்கிறவர்களுக்கு, வயதானவர்களை இது அடிக்கடி சங்கடப்படுத்தும். உடற்பயிற்சி இல்லாதது, உடலியக்கம் இல்லாமல் முடங்கிக் கிடப்பது, தண்ணீரைச் சரியாகக் குடிக்காதது போன்ற காரணங்களால் இவர்களுக்கு வாயுத்தொல்லை அதிகரிக்கிறது.

 

வாயுவின் தோழமைகள்

 

வாயுப்பிரச்சினை, இது மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைதான். என்றாலும் எல்லோரும் அறிய வேண்டிய முக்கியமான பிரச்சினை “உணவுப் பழக்கம்” தான். 

 

மொச்சை, பட்டாணி, பருப்பு, பயறு, பீன்ஸ், சோயாபீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், காலிஃபிளவர், முந்திரி போன்ற கொட்டை வகைகள், வாழைக்காய், உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சாக்லேட், கேக், பிஸ்கட், பாப்கார்ன், செயற்கைப் பழச்சாறுகள், மென்பானங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மசாலா மிகுந்த உணவுகள், இறைச்சி, முட்டை, பால், பாலில் தயாரிக்கப்பட்ட பால் அல்வா, பால்கோவா, சீஸ் போன்ற உணவு வகைகள், அப்பளம், வடகம், வினிகர், ஆகியவற்றால் அதிகரிப்பதாக இருந்தாலும், அவற்றில் எந்த உணவைச் சாப்பிட்டால் நமக்கு வாயு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதையும் முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும்.

 

என்ன சிகிச்சை?

 

வாயுக்குக் காரணம் உணவா, நோயா என்று மருத்துவரிடம் பரிசோதித்துக்கொண்டு சிகிச்சை பெறுவது வாயுத்தொல்லையை நிரந்தரமாகத் தீர்க்க உதவும். வாயுப் பிரச்சினைக்கு இப்போது நிறைய மாத்திரை, மருந்துகள் வந்துவிட்டன. சீக்கிரத்திலேயே இதைக் குணப்படுத்திவிடலாம். என்றாலும், இதை வரவிடாமல் தடுக்கச் சரியான உணவுமுறை முக்கியம்.

 

அதிகப்படியான வாயு உருவாகுவதை கட்டுப்படுத்த, உணவை மென்று மெதுவாக சாப்பிட்டு விழுங்க வேண்டும். மைதா போன்ற பசை உணவுகளை (பேக்கரி உணவுகளை) தவிர்க்க வேண்டும். எண்ணெய்யில் பொறித்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஆவியில் தயாரித்த உணவு வகைகளை அதிகப்படுத்தலாம். கண்டிப்பாக தினமும் தேவையான அளவு (நாளொன்றுக்கு 2 முதல் 3 லிட்டர்) தண்ணீர் பருக வேண்டும். வெற்றிலைப் பாக்கு, பான்மசாலா தவிர்க்க வேண்டும். புகைப்பழக்கம் ஆகாது. இத்தனையும் சரியாக அமைந்தால், வாயுத்தொல்லை நீங்கலாம்.

 

குடல் இயக்கத்தை தூண்டுவதற்கும் இயற்கையாக வாயுவை வெளியேற்றவும் தினமும் நடைப்பயிற்சி அல்லது முறையான உடற்பயிற்சி செய்யவேண்டும்.

 

வாயு வெளியேற்றத்தின் முக்கிய நன்மைகளில் ஒன்று, வயிற்று உப்புசம் மற்றும் வீக்கத்தைக் குறைப்பதாகும். வயிற்றில் அதிகப்படியான வாயு சேரும்போது, வயிறு உப்புசமாக உணரப்படும். இது அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கும். வாயுவை வெளியேற்றுவதன் மூலம், இந்த அசௌகரியத்தை குறைக்கலாம்.

 

வாயுவின் வாசனை சில சமயங்களில் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய தகவல்களை வழங்கலாம். உதாரணமாக, அதிகப்படியான துர்நாற்றம் அல்லது குறிப்பிட்ட வாசனை செரிமான பிரச்சனைகள் அல்லது உணவு ஒவ்வாமைகளைக் குறிக்கலாம். லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு, பால் பொருள்களை உட்கொண்ட பிறகு அதிக வாயு வெளியேற்றம் ஏற்படலாம். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

 

ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம், செரிமானத்தை மேம்படுத்தலாம் மற்றும் வாயு பிரச்சனைகளை குறைக்கலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுகள், போதுமான நீர் அருந்துதல் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை.

 

நாம் மரணமடையும் வரை, அல்லாஹுத்தஆலா நம்மை உடல் ஆரோக்கியத்தோடு வாழ செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

 


No comments:

Post a Comment

குறைகளை ஏற்றுக்கொள்வோம்

  குறைகளை ஏற்றுக்கொள்வோம்   وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ قَالَ فَعَلْتُهَا إِذًا وَأَنَا مِنَ الضّ...