வல்லவனுக்கு வல்லவன்
وَفَوْقَ كُلِّ ذِي عِلْمٍ عَلِيمٌ
ஒவ்வொரு
அறிஞனுக்குமேல் அறிஞன் இருக்கிறான். திருக்குர்ஆன்:- 12:76
உலகில் செல்வம், அதிகாரம், அறிவுத்திறன், அழகு ஆகியவற்றில்
ஒருவனை மிஞ்சிய இன்னொருவன் இருக்கவே செய்கிறான். ஏதோ ஒரு நேரத்தில் இதை உணரும் பட்சத்தில்
தான் கர்வத்தை வடிகட்ட முடியும். என்னால் மட்டுமே முடியும் என்ற அகம்பாவத்தை விட்டொழிக்க
முடியும்.
"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு" என்பது தமிழ் பழமொழி.
ஒருவர் எந்தத் துறையில்
மிகவும் திறமையானவராக இருந்தாலும், அவரைவிடச் சிறந்த வல்லவன் இந்த உலகில் நிச்சயம் இருப்பார் என்பதாகும்.
இந்த பழமொழி, ஒருவருக்கு இருக்கும்
அகம்பாவத்தை நீக்கி, மேலும் கற்கவும், பணிவை மேற்கொள்ளவும் தூண்டுகிறது.
ஒருவர் தன்னையே உயர்ந்தவனாகக்
கருதிக்கொள்ளாமல், எப்போதும் தன்னைவிடச் சிறந்தவர்கள் இருப்பதை உணர்ந்து செயல்பட
இது ஒரு சிறந்த அறிவுரை.
மண்ணைத் தூவிவிட்டுச்
சென்றார்கள்
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களை கொலை செய்வதற்கு குறைஷியர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது கொடியோன் அபூஜஹ்ல், "நம் (குறைஷிக் குலத்தின்)
குடும்பங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் வீரமிக்க ஓர் இளைஞரை நாம் தேர்ந்தெடுத்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும்
கூர்மையான வாள் ஒன்றை கொடுப்போம். அவர்கள் யாவரும் முஹம்மதை நோக்கி ஒரே நேரத்தில்
(கூட்டாக) வெட்டி அவரைக் கொலை செய்ய வேண்டும். அவர்கள் அனைவரும் சேர்ந்து அவரை கொல்லும்போது
அந்தக் கொலைப் பழி (தனிப்பட்ட யார்மீதும் விழாமல்) அனைத்து குடும்பத்தாரிடையேயும் பிரிந்துவிடும்.
அதற்குப் பிறகு (முஹம்மதின்)
பனூ அப்துல் மனாஃப் குடும்பத்திற்கு ஒட்டுமொத்த குறைஷியரையும் எதிர்த்து சண்டையிடச்
சக்தியிருக்காது. எனவே அதைக் காணும் அவர்கள் நம்மிடம் ஈட்டுத்தொகை பெற்றுக் கொள்வதற்கு
சம்மதம் தெரிவிப்பார்கள். ஆகவே, நாம் அவர்களுக்கு ஈட்டுத்தொகை கொடுத்துவிடலாம். (அத்துடன் முஹம்மதின்
தொல்லை ஓய்ந்து) நான் நிம்மதி பெறலாம்" என்று கூறினான். இதுவே அனைவரின் முடிவாகவும்
ஆனது.
உடனே ஜிப்ரீல் (அலை)
அவர்கள் நபிவர்களிடம் வந்து, ( لَا تَبِتْ هَذِهِ اللَّيْلَةَ عَلَى فِرَاشِكَ الَّذِي كُنْتَ
تَبِيتُ عَلَيْهِ ) "நீங்கள் வழக்கமாக
படுக்கும் இடத்தில் இன்றிரவு படுக்க வேண்டாம்" என்று கூறி(யதுடன், குறைஷியரின் சதித்திட்டம்
பற்றியும் தகவல் கூறி)னார்கள். அன்றிரவு இருள் சூழ்ந்தபோது, குறைஷி இளைஞர்கள்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் உறங்குவதை எதிர்பார்த்து அவர்கள் மேல் தாக்கல் தொடுப்பதற்கு
அவர்களின் (இல்லத்தின்) வாசலில் ஒன்றுகூடினர்.
இதை அறிந்த நபியவர்கள், அலீ (ரலி) அவர்களிடம், ( نَمْ عَلَى فِرَاشِي،
وَتَسَجَّ بِبُرْدِي هَذَا الْحَضْرَمِيِّ الْأَخْضَرِ فَنَمْ فِيهِ، فَإِنَّهُ
لَنْ يَخْلُصَ إِلَيْكَ شَيْءٌ تَكْرَهُهُ مِنْهُمْ ) "என் படுக்கையில் நீங்கள்
உறங்குங்கள். என்னுடைய இந்த பச்சை நிற ஹழ்ரமீ போர்வையை போர்த்திக் கொண்டு உறங்குங்கள்.
குறைஷியரிடமிருந்து உங்களுக்கு விரும்பத்தகாத எதுவும் நேரிடாது" என்று கூறினார்கள்.
நபியவர்கள் உறங்கினால் அந்தப் போர்வையைப் போர்த்திக் கொண்டுதான் உறங்குபவர்களாக இருந்தார்கள்.
பின்னர் நபியவர்கள்
ஒருபிடி மண்ணை எடுத்து, அதில் யாசீன் அத்தியாயத்தின் ஒன்று முதல் ஒன்பது வரையிலான வசனங்களை
ஓதியவாறு அந்த மண்ணை மக்களின் தலையில் ஊதிவிட ஆரம்பித்தனர். அந்த மண்ணின் துகள்கள்
அவர்கள் அனைவரின் தலையிலும் படர்ந்தது. பிறகு நபியவர்கள் செல்ல விரும்பிய இடத்திற்குச்
சென்று விட்டார்கள்.
அந்தக் கூட்டத்தில்
இடம்பெறாத ஒருவர் (வாசலில் நின்றிருந்த) அவர்களிடம் வந்து,
( قَدْ وَاللَّهِ خَرَجَ عَلَيْكُمْ مُحَمَّدٌ، ثُمَّ مَا تَرَكَ
مِنْكُمْ رَجُلًا إِلَّا وَقَدْ وَضَعَ عَلَى رَأْسِهِ تُرَابًا، وَانْطَلَقَ
لِحَاجَتِهِ، أَفَمَا تَرَوْنَ مَا بِكُمْ؟ )
"அல்லாஹ்வின் மீதாணையாக!முஹம்மத்
உங்களை கடந்து சென்றுவிட்டார். அவர் உங்கள் அனைவரின் தலையிலும் மண்ணைத் துவாமல் செல்லவில்லை.
அவர் தமது தேவைக்காக (வெளியே) நடந்து (சென்று)விட்டார். உங்களுக்கு நிகழ்ந்ததை நீங்கள்
கவனிக்கவில்லையா?" என்று கேட்டார்.
அப்போதுதான் அவர்களின்
ஒவ்வொருவரும் தமது தலையில் கை வைத்து பார்த்தனர். தலையில் மண் துகள்கள் இருந்தது. பிறகு
அவர்கள் (உள்ளே) நோட்டமிட முற்பட்டனர். அங்கு அலீ (ரலி) அவர்கள் நபிவர்களின் பார்வையைப்
போர்த்தியவாறு படுக்கையில் இருப்பதைக் கண்டனர். உடனே அவர்கள், ( وَاللَّهِ إِنَّ هَذَا لَمُحَمَّدٌ
نَائِمًا عَلَيْهِ بُرْدُهُ ) "அல்லாஹ்வின் மீதாணையாக! இதோ முஹம்மத் உறங்கிக்கொண்டிருக்கிறார்.
அவர்மீது அவருடைய போர்வை உள்ளது" என்று கூறிக்கொண்டே தொடர்ந்து விடியும்வரை காத்திருந்தனர்.
பிறகு விடிந்தபோது
படுக்கையிலிருந்து அலீ (ரலி) அவர்கள் எழுந்தார். அப்போது குறைஷியர், ( وَاللَّهِ لَقَدْ كَانَ
صَدَقَنَا الَّذِي كَانَ حَدَّثَنَا )
"நமக்கு தெரிவித்தவர் நமக்கு
உண்மையைத்தான் சொல்லியுள்ளார்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். நூல்:-
சீரத் இப்னு ஹிஷாம், அல்பிதாயா வந்நிஹாயா
அண்ணல் நபி (ஸல்)
அவர்களை எல்லோரும் சேர்ந்து வெட்டிவிட்டு கொலைப்பழியில் இருந்து அனைவரும் தப்பித்துக்கொள்ளலாம்
என்று அபூஜஹ்ல் ஆலோசனை கூறினான். ஆனால், நபியவர்கள் யாருக்கும் நஷ்டம்
ஏற்படாதவாறு தம்மை கொல்ல வந்தவர்களின் தலைகளில் மண்ணை தூவி விட்டு, அவர்களின் கண்களில்
படாதவாறு லாபகரமாக தப்பிச் சென்றார்கள்.
வசமாகச் சிக்கிக்கொண்டான்
ஜனாதிபதி உமர் (ரலி)
அவர்கள் முஙீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களை பஹ்ரைன் பகுதிக்கு ஆளுநராக நியமித்தார்கள்.
அவ்வூர் மக்களுக்கு இவரைப் பிடிக்கவில்லை. மக்கள் ஜனாதிபதியிடம் முறையீடு செய்தனர்.
எனவே, அவர் மதீனாவுக்கு திரும்ப அழைக்கப்பட்டார். அதன்பின் ஜனாதிபதி
அவர்கள் இவரையே மீண்டும் நம் பகுதிக்கு நியமித்துவிடுவார்களோ என்ற அச்சம் அம்மக்களுக்கு
ஏற்பட்டது. எனவே, அங்குள்ளவர்கள் ஒன்றுகூடி இவரை மீண்டும் நமக்கு ஆளுனராக நியமித்துவிடாமல்
இருக்க என்ன வழி? என்று யோசித்தார்கள்.
அவர்களில் ஒருவன், "அப்படியானால் நான்
சொல்வதைக் கேளுங்கள். எல்லோரும் சேர்ந்து என்னிடம் ஒரு இலட்சம் வெள்ளிக்காசுகள் வசூல்செய்து
கொண்டு வந்து கொடுங்கள். நான் அதை எடுத்துக்கொண்டு ஜனாதிபதி அவர்களிடம் சென்று இதைக்
கொடுக்கிறேன். ஜனாதிபதி அவர்கள் இது என்னவென்று கேட்டு விசாரிப்பார்கள். அப்போது நான்,
‘இது முஙீரா வரிப்பணத்திலிருந்து என்னிடம் கொடுத்து வைத்த பணம்’ என்று சொல்லிவிடுகிறேன்.
அதன்பின் அவர் எங்குமே ஆளுநராக நியமிக்கப்படமாட்டார்" என்று ஒரு யோசனையை கூறினான்.
அப்போது மக்கள், "ஆகா... இது நல்ல யோசனையாக
இருக்கிறதே! அப்படியே செய்துவிடலாம்"
என்று கூறினர். அதன்பின் மக்கள் ஒரு இலட்சம் வெள்ளிக்காசுகளை வசூல் செய்து அவனுடைய கையில் ஒப்படைத்தனர்.
அவன் அந்தப் பணத்தை
எடுத்துக்கொண்டு வந்து நேராக ஜனாதிபதி அவர்களிடம் கொடுத்தான். பிறகு விவரத்தைக்
கூறினான். உடனே ஜனாதிபதி அவர்கள், முஙீரா (ரலி) அவர்களை அழைத்து வரச்செய்து, இது குறித்து அவரிடம்
விசாரித்தார்கள்.
முஙீரா (ரலி) அவர்கள், ( كَذَبَ أَصْلَحَكَ اللَّهُ ، إنَّمَا كَانَتْ مِائَتَيْ أَلْفٍ ) "அல்லாஹ் உங்களுக்கு வழிக்காட்டட்டும்! இவன் பொய் சொல்கிறான். (இவனிடம் ஒரு இலட்சம் இல்லை;) இரண்டு
இலட்சங்கள் கொடுத்து வைத்திருந்தேன். (இவனிடம் நன்றாக விசாரியுங்கள்)" என்றார்கள்.
ஜனாதிபதி அவர்கள், ( فَمَا حَمَلَكَ عَلَى
هَذَا ) "ஏன் இவ்வாறு செய்தீர்?” என்று கேட்டபோது, முஙீரா (ரலி) அவர்கள், ( الْعِيَالُ وَالْحَاجَةُ ) "எல்லாம் என் குடும்ப கஷ்டம். தேவைகள் தான் காரணம்" என்று
கூறினார்கள்.
அதைக் கேட்ட அவன்
நடுங்கிப் போய்விட்டான். நாம் இன்றைக்கு ஜனாதிபதி அவர்களிடம் வசமாக மாட்டிக்கொண்டோம்
என்று நினைத்தான். ஜனாதிபதி அவர்கள் அவனிடம், ( مَا تَقُولُ ) “(இது
குறித்து) நீ என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார்கள். அவன்,
( لَا وَاللَّهِ لَأَصْدُقَنَّك مَا دَفَعَ إلَيَّ قَلِيلًا وَلَا
كَثِيرًا ) "(இவர் சொன்னவாறு)
இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக, (என்ன நடந்தது என்று) நான்
உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். இவர் கொஞ்சமோ அல்லது நிறையவோ எதையும் என்னிடம் கொடுத்து
வைத்திருக்கவில்லை. (இவர் எங்கள் ஊருக்கு மீண்டும் ஆளுநராக வரக்கூடாது என்பதற்காகவும், அவருடைய பெயரைக் களங்கப்படுத்துவதற்காகவும் நான் தான் எங்கள்
ஊர் மக்களிடம் பணம் வசூல் செய்துகொண்டு வந்தேன். நான் பொய் சொல்லிவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள்)"
என்றான்.
ஜனாதிபதி அவர்கள், ( مَا أَرَدْتَ إلَى هَذَا ) "(முஙீரா!) இதை வைத்து நீர் என்ன செய்ய விரும்பினாய்? (நீர் இரண்டு இலட்சங்கள்
என்று ஏன் கூறினீர்?)" என்று கேட்டார்கள். முஙீரா (ரலி) அவர்கள், ( الْخَبِيثُ كَذَبَ عَلَيَّ ، فَأَحْبَبْتُ أَنْ أُخْزِيَهُ ) “அந்தப் பொல்லாதவன் என்னைப்பற்றி பொய் சொன்னான். நான் அவனை அவமானப்படுத்த
விரும்பினேன். (அதன் மூலம் அவனிடமிருந்து உண்மையை வரவழைப்பதற்காகத்தான் நான் அவ்வாறு
கூறினேன். அவ்வளவு தான்)" என்றார். நூல்:- சியரு அஃலாமுந் நுபலா இமாம் அத்தஹபீ
எனவே, இவரை யாராவது
ஒருவர் விரல் நீட்டி விமர்சிக்கின்றபோதுகூட மிகவும் கவனமாக தான் பேச வேண்டும். இல்லையேல், அதற்குத்தக்க பதிலடி
கொடுத்துவிடுவார். குற்றவாளி என்றோ வேறு ஏதேனும் குற்றச்சாட்டுகளையோ அவ்வளவு எளிதில்
இவர்மீது குற்றம் சாட்டிவிட முடியாது.
முஙீரா பின் ஷுஅபா
(ரலி) அவர்கள் பஸரா, கூஃபா போன்ற பல பகுதிகளுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
காரணம், மிகவும் சிந்தனைத்திறன்
மிக்கவர். முஙீரா அர்ராயி (சிந்தனைத்திறன் மிக்க முஙீரா) என்று மக்கள் அழைப்பார்கள்.
கபீஸா பின் ஜாபிர்
(ரஹ்) அவர்கள் கூறியதாக இமாம் ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். முஙீரா பின் ஷுஅபா
(ரலி) அவர்களுடைய நெருங்கிய நண்பர்கள் இவரின் அறிவுத்திறன், தந்திரம் குறித்து (பின்வருமாறு இவ்வாறு) கூறுகின்றனர். ( فَلَوْ أَنَّ مَدِينَةَ لَهَا ثَمَانِيَةٌ أَبْوَابٌ ، لَا يَخْرُجُ
مِنْ بَابِ مِنْهَا إلَّا بِمَكْرٍ ، لَخَرَجَ مِنْ أَبْوَابِهَا كُلِّهَا ) ஒரு ஊருக்கு எட்டு வாசல்கள் இருந்து ஒருவர் அதற்குள் நுழைய வேண்டுமாயின், ஏதாவது தந்திரம் செய்துதான்
நுழைய முடியும் என்றிருந்தால், முஙீரா (ரலி) அவர்கள் அந்த எட்டு வாசல்களில் சென்றுவிடுவார்.
(அவர் அவ்வளவு பெரிய தந்திரக்காரர் ஆவார்.) நூல்:- சியரு அஃலாமுந் நுபலா இமாம் அத்தஹபீ
வாழ்க்கை முழுவதும்
அவரை யாரும் ஏமாற்றியதில்லை. ஏமாற்றவும் முடியவில்லை. ஆனால், தம்மை ஒருவன் ஏமாற்றிவிட்டதாக
அவர் கூறுகிறார்.
அவளை முத்தமிடுவதாகக்
கண்டேன்
முஙீரா பின் ஷுஅபா
(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ( مَا
غَلَبَنِي أَحَدٌ قَطُّ إِلَّا غُلَامٌ مِنْ بَنِي الْحَارِثِ بْنِ كَعْبٍ ) “என்னை 'பனுல் ஹாரிஸா பின் கஅப்' என்ற குலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனைத் தவிர வேறு யாரும் என்னைத்
ஏமாற்றியதில்லை.
(ஒருமுறை) நான் பனுல்
ஹாரிஸா குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணமுடிக்க பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர்களில்
ஒரு இளைஞன் என்னுடன் இருந்தான். அவன் என் பேச்சைக் கேட்டு, ( أَيُّهَا الأَمِيرُ، لَا خَيْرَ لَكَ
فِيهَا ) "தலைவரே! அவளால் உங்களுக்கு எந்த நன்மையும் இல்லை" என்று
சொன்னான். நான், ( يَا
ابْنَ أَخِي وَمَالَهَا ) "என் சகோதரரின் மகனே!
அவளுக்கு என்ன பிரச்சினை?" என்று வினவினேன். அவன், ( اِنِّي رَأَيْتُ رَجُلًا يُقَبِّلُهَا ) "ஒரு ஆண் அவளை முத்தமிடுவதை நான் பார்த்தேன்"
என்று கூறினான். அதனால் நான் அவளை (மணமுடிக்காமல்) ஒதுங்கிக்கொண்டேன். பின்னர், அந்த இளைஞன் அவளை மணமுடித்துக்கொண்டதாகக் கேள்விப்பட்டேன்.
(ஒருநாள்) நான் அவனிடம், ( أَلَمْ تُخْبِرْنِي
أَنَّكَ رَأَيْتَ رَجُلًا يُقَبِّلُهَا ) "ஒரு ஆண் அவளை முத்தமிடுவதைக் கண்டதாக நீ என்னிடம்
கூறவில்லையா?" என்று கேட்டேன். அவன், ( بَلَى رَأَيْتُ أَبَاهَا يُقَبِّلَهَا
وَهِيَ صَغِيرَةٌ ) "ஆமாம்! (நான் சொன்னது
உண்மைதான்.) அவள் சிறுமியாக இருந்தபோது, அவளின் தந்தை அவளைக் (கொஞ்சி மகிழ்ந்து) முத்தமிட்டதை
நான் பார்த்தேன். (அதைத்தான் சொன்னேன்.)" என்றான். அறிவிப்பாளர்:- ஷஅபீ (ரஹ்)
அவர்கள் நூல்:- அல்இக்துல் ஃபரீது ( العقد الفريد ) இமாம்
இப்னு அப்துர் ரப்பிஹ் உந்துலுஸீ (ஹிஜ்ரீ-328- கி.பி.860-940)
வஞ்சப் புகழ்ச்சி
(தாபிஈ எனும் இரண்டாம்
தலைமுறை அறிஞர்) இமாம் ஷஅபீ (ரஹ்) அவர்கள் அவர்கள் கூறுகிறார்கள்: கலீஃபா அப்துல் மலிக்
அவர்கள் என்னை ரோம் நாட்டு அரசனிடம் அரசுமுறைப் பயணமாக அனுப்பி வைத்தார். நான் அவரிடம்
சென்றேன். அவர் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தேன்.
ரோம் நாட்டின் மன்னர்
பொதுவாக (அந்நிய நாட்டின்) தூதர்களை தன்னிடம் அதிக நாள்கள் தங்கவைப்பதில்லை. ஆனால்
(என் அறிவுத்திறனால் கவரப்பட்ட அவர்) என்னை அதிக நாள்கள் தங்கவைக்க விரும்பினார். இங்கிருந்து
கிளம்பிவிடலாம் என்று எனக்கு தோன்றும்வரை தங்கவைத்தார்.
ஊருக்கு கிளம்ப நான்
ஆயத்தமானபோது அவர் என்னிடம், ( مِنْ أَهْلِ بَيْتِ الْخَلِيفَةِ أَنْتَ ) “நீங்கள் கலீஃபாவின் குடும்பத்தை சார்ந்தவரா?” என்று கேட்டார்.
நான், ( لَا وَلَكِنِّي رَجُلٌ مِنْ عَامَةِ
الْعَرَبِ ) “இல்லை; (அரச குடும்பத்தவனல்லன்)
அரபு பொதுமக்களில் ஒருவன் தான்” என்றேன்.
அப்போது அவர் இரகசியக்
குரலில் தன் தோழர்களிடம் ஏதோ கூறினார். உடனே என்னிடம் மூடப்பட்ட கடிதம் ஒன்று தரப்பட்டது.
மன்னர் என்னிடம், ( إذَا أَدَّيْتَ
الرَّسَائِلَ إلَى الْخَلِيفَةِ فَأُوصِلْ إلَيْهِ هَذِهِ الرُّقْعَةَ ) “அரசுமுறை தூதுச்செய்திகளை கலீஃபாவிடம் நீங்கள்
எடுத்துரைத்த பின் இந்த கடிதத்தை அவரிடம் கொடுங்கள்” என்று கூறினார்.
நான் கலீஃபா அப்துல்
மலிக் அவர்களிடம் சென்றவுடனே அரசுமுறை செய்திகளை ஒப்படைத்தேன். இந்த கடிதத்தை மறந்துவிட்டேன்.
அரண்மனையிலிருந்து வெளியேறிய பிறகுதான் கடிதம் பற்றிய ஞாபகம் வந்தது. உடனே திரும்பிச்சென்று
அக்கடிதத்தை கலீஃபாவிடம் ஒப்படைத்தேன்.
கடிதத்தை படித்தவுடன்
என்னிடம், ( أَقَالَ لَكَ شَيْئًا قَبْلَ أَنْ يَدْفَعَهَا إلَيْكَ ) “ரோம் நாட்டு மன்னர்
இக்கடிதத்தை தருவதற்கு முன் உங்களிடம் ஏதேனும் சொன்னாரா” என்று கலீஃபா கேட்டார்.
நான் ,“ஆம். நீங்கள் கலீஃபாவின்
குடும்பத்தை சார்ந்தவரா?” என்று கேட்டார். “இல்லை; நான் அரபு பொதுமக்களில் ஒருவன்தான் என்று கூறினேன்” என்று கலீஃபாவிடம் கூறிவிட்டு
வெளியே செல்ல முற்பட்டு அரண்மனை வாசலருகே வந்தேன்.
கலீஃபா என்னை திரும்ப
அழைத்தார். நான் கலீஃபாவின் முன் மரியாதையோடு நின்றேன். கலீஃபா, ( أَتَدْرِي
مَا فِي الرُّقْعَةِ ) “இக்கடிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது தெரியுமா?” என்றார். நான், “தெரியாதே”
என்றேன். என்னிடம் அதை தந்து “படியுங்கள்” என்றார். படித்தேன்.
அதில் ரோம் மன்னன், ( عَجِبْتُ
مِنْ قَوْمٍ فِيهِمْ مِثْلُ هَذَا كَـيـْفَ مَلَّكُوا غَيْرَهُ ) “இவரைப்போன்ற (அறிவாளியான)
மனிதர்கள் இருக்கும் சமுதாயத்தில் மற்றவர்களிடம் எப்படி மக்கள் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைக்கிறார்கள்? என்று எனக்கு வியப்பாக இருக்கிறது!” என்று எழுதியிருந்தான்.
அதிர்ச்சியுற்ற நான்
உடனே, ( وَاللَّهِ لَوْ عَلِمْتُ مَا فِيهَا مَا حَمَلْتُهَا
وَإِنَّمَا قَالَ هَذَا لِأَنَّهُ لَمْ يَرَكَ ) “இதிலே என்ன எழுதப்பட்டுள்ளது என்று தெரிந்திருந்தால் நான் இதை
கொண்டு வந்திருக்கவே மாட்டேன். (உங்களை அவன் பார்த்திருந்தால்
இப்படி எழுதியிருக்க மாட்டான்.) உங்களை அவன் நேரில் பார்த்ததில்லை. அதனால் இப்படி
எழுதியிருக்கிறான்” என்று கலீஃபாவிடம் கூறினேன்.
அதற்கு கலீஃபா, ( أَفَتَدْرِي لِمَ كَتَبَهَا ) “ஏன் அவன் இப்படி எழுதி (அதை உங்களிடமே கொடுத்தனுப்பி)யுள்ளான்
தெரியுமா?” என்று கேட்டார்.“தெரியவில்லையே” என்றேன்.
கலீஃபா, ( حَسَدَنِي
عَلَيْكَ ، وَأَرَادَ أَنْ يُغَرِّينِي بِقَتْلِكَ ) “உங்களைப்போன்ற புத்திசாலிகள் என்னிடம் இருப்பதால்
அவனுக்கு என்மீது பொறாமை. எனவே, என் கையாலேயே உங்களைக் கொல்ல செய்ய என்னைத் தூண்டியுள்ளான்”
என்றார்.
இந்த தகவல் ரோம் மன்னனுக்கு
கிடைத்தபோது அவன், ( مَا أَرَدْتُ إلَّا مَا
قَالَ ) "அவர் சொன்னதைத்தான்
நான் விரும்பினேன்" (அதாவது, என் திட்டமும்
அது தான்)” என்று கூறினான். நூல்:- வஃபிய்யாத்துல் அஃயான் - இப்னு ஹல்கான் ( وفيات الأعيان ابن خلكان )
வஞ்சப் புகழ்ச்சியை
அடையாளம் காணுபவர் தான் பகைவர்களின் தீங்கிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்வார்.
தோற்றுப் போனேன்
நீதிபதி இயாஸ் பின்
முஆவியா (ரஹ்) அவர்கள் (ஹிஜ்ரி 46-122) காலத்தில் ஒரு பேரித்தம் பழத்தோட்டம் குறித்து இரண்டு பேருக்கும்
மத்தியில் தகராறு ஏற்பட்டது. இந்தத் தோட்டம் எனக்குரியது என்றும், மற்றொருவர் எனக்குரியது
என்றும் வாதிட்டனர். இது குறித்து தீர்ப்புக்காக அன்னாரிடம் வந்தனர். (உண்மையாகவே அந்தத்
தோட்டத்தினரின் உரிமையாருளருக்காக) சாட்சி சொல்லவும் ஒருவர் வந்தார்.
நீதிபதி இயாஸ் பின்
முஆவியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( مَا
غَلَبَنِي إلَّا رَجُلٌ جَاءَ يَشْهَدُ لِاٰخَرَ بِمِلْكِيَّةِ مَزْرَعَةِ نَخْلً ) “ஒரு பேரித்தம்பழத் தோட்டத்தின் உரிமை குறித்து ஒருவரின் சார்பாக சாட்சியமளிக்க
வந்த மனிதரைத் தவிர வேறு யாரும் என்னைத் தோற்கடித்ததில்லை.
நான், சாட்சிச் சொல்ல வந்தவரிடம், ( وَمَا عَدَدُ
النَّخْلِ فِي الْمَزْرَعَةِ ) "தோட்டத்தில் எத்தனை
பேரித்தம் மரங்கள் உள்ளன?" என்று கேட்டேன். அவர், ( لَا أَعْلَمُ
عَدَدَهُ بِالضَّبْطِ ) "எனக்கு சரியான எண்ணிக்கை தெரியாது" என்றார்.
நான், ( وَكَيْفَ تَشْهَدُ اِذَنْ ) "(அப்படியானால்,) இப்போது நீங்கள் எப்படி சாட்சியமளிக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.
அவர், ( مُنْذُ كَمْ يَحْكُمُ الْقَاضِي فِي هَذَا الْمَجْلِسِ ) "நீங்கள் எவ்வளவு காலமாக இந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக தீர்ப்பளித்து
வருகிறீர்கள்?" என்று கேட்டார். நான், ( مُنْذُ
كَذَا سَنَةً ) "(பதினைந்து அல்லது இருபது என) இவ்வளவு ஆண்டுகள் இருக்கலாம்" என்று
கூறினேன். அவர் கூரையின் உத்திரங்களை நோக்கி தலையை உயர்த்தியவாறு, ( سَيِّدِي الْقَاضِي كَمْ عَدَدُ الْخَشَبِ فِي سَّقْفِ هَذَا
الْمَجْلِسِ ) "மதிப்பிக்குரிய நீதிபதி அவர்களே! இந்த நீதிமன்றத்தின்
கூரையில் எத்தனை (பலகைகள்) உத்திரங்கள் உள்ளன?" என்று கேட்டார்.
அவருடைய நோக்கத்தை
நான் புரிந்துகொண்டேன். நான் இங்கு பல வருடங்களாக வந்து போய் கொண்டிருந்த போதும், அதன்
கூரையில் எத்தனை உத்திரங்கள் உள்ளன என்று எனக்குத் தெரியாது. எனவே, அந்தத் தோட்டத்தில் எத்தனை மரங்கள் உள்ளன என்பது அவருக்கு தெரியுமா?" என்று எண்ணியவாறு, ( لَا أَدْرِي
وَالْحَقَّ مَعَك وَأَجَزْتُ شَهَادَتَهُ ) "எனக்குத் தெரியாது, நீங்கள் சொல்வது சரிதான்” (என்று கூறிவிட்டு) அவருடைய
சாட்சியத்தை நான் ஏற்றுக்கொண்டேன். நூல்:- அல்வாஃபீ பில்வஃபயாத் ( الوافي بالوفيات )
தாபியீன்களில் ஒருவராகவும்
பசரா நகரத்தின் தலைமை நீதிபதியாகவும் இருந்த இயாஸ் பின் முஆவியா (ரஹ்) அவர்கள் அறிவு
கூர்மையிலும் சமயோத ஞானத்திலும் மிகவும் தேர்ச்சிப் பெற்றவர்கள்.
பஸரா, கூஃபா மற்றும் அரபுலகத்தில் அறிவுஜீவிகள் பற்றி பேச்சு வரும்போது
"இவர் பெரிய இயாஸ் என்ற நினைப்பா?" என்று கூறுவார்கள்.
அந்தளவிற்கு இயாஸ் (ரஹ்) அவர்கள் அறிவு அறிவுமுதிர்ச்சிப் பெற்றவராக இருந்தார்கள்.
அப்படிப்பட்ட இயாஸ்
(ரஹ்) அவர்கள் தம்முடைய வாழ்நாளில் நீதிபதியாக இருந்த காலத்தில் ஒரே ஒரு வழக்கில் மட்டும்தான்
தாம் தோற்றுப்போனதாக கூறுகிறார்கள்.
திருடன்
பிடிப்பட்டான்
ஒருநாள் ஒரு வீட்டுக்குள்
கொள்ளையன் புகுந்து வீட்டுக்காரரை கட்டிப்போட்டு, வீட்டிலுள்ள அனைத்து பொருள்களையும் கொள்ளையடித்துச்
சென்றான். போகும்போது வீட்டுக்காரனிடம் "திருடன் யார் என்று சொல்லமாட்டேன். அப்படிச் சொன்னால்
என் மனைவி தலாக்" என்று குர்ஆனை கையில் கொடுத்து சத்தியம் செய்யச் சொன்னான். இல்லையெனில்
கொலைசெய்து விடுவதாக மிரட்டியதால் உயிருக்கு பயந்து வீட்டுக்காரர் அப்படியே சத்தியம்
செய்துவிட்டார்.
மறுநாள் இவருடைய பொருள்களை
இவருக்கு முன்பாகவே தைரியமாக விற்றுக்கொண்டிருக்கிறான். இவரால் ஒன்றும் செய்யவோ, சொல்லவோ முடியவில்லை.
அப்படி சொன்னால் தலாக் நிகழ்ந்துவிடுமே. மிகுந்த கவலையுடன் இமாம் அபூஹனீபா (ரஹ்)
அவர்களிடம் சென்று தனக்கு நேர்ந்த அவலத்தை எடுத்துரைத்தார். அதற்கு இமாம் அவர்கள்
அவரிடம், “உனது மஹல்லாவிலுள்ள முக்கியஸ்தர்களை அனைவரையும் ஒன்று கூட்டி வை. இன்ஷா
அல்லாஹ் நான் அங்கு வந்து அவர்களிடம் பேசி இதற்கு தீர்வு காணலாம்” என்றார்கள்.
அவ்விதம் எல்லோரும்
வந்து சேர்ந்ததும், நீங்களெல்லாம் இவருடைய கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள் யாவும்
திரும்ப இவருக்கு கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? என்று
கேட்டார்கள். அதற்கு அவர்கள் ஆம்! என்றனர்.
இமாம் அவர்கள், “அப்படியானால்
உங்கள் மஹல்லாவிலுள்ள அனைவரையும் உங்கள் பள்ளிவாசலுக்கு வரவழைத்து, எல்லோரும் வந்த பின்பு
ஒருவர் பின் ஒருவராக வெளியே வரும்போது (திருடன்) இவரா? என இவரிடம் கேட்கவேண்டும். இவர் இல்லை! இல்லை!
என்று மறுத்துக்கொண்டே இருக்கவேண்டும். திருடியவன் வெளியே வரும்போது மட்டும் மறுப்பேதும்
தெரிவிக்காமல் பேசாமல் இருக்க வேண்டும். ஆம்! என்றும் சொல்லக்கூடாது. இல்லை! என்றும் சொல்லக்கூடாது. மௌனமாக நிற்க வேண்டும்.
அப்போது இவர் சொல்லாமலே திருடன் யார் என்று தெரிந்துவிடும். இவரின் மனைவியும் தலாக் ஆகமாட்டாள்” என்று தங்களுக்கே உரிய நுண்ணறிவை கொண்டு
சட்டத்தின் தீர்ப்பை வழங்கினார்கள் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள்.
மொழிப் புலமை
அரபு மொழியை சரளமாக
பேசத் தெரிந்த பாரசீகத்தை சேர்ந்த ஒருவர், அரபுகளிடத்தில் பேசும் போதெல்லாம் 'நீ எந்த குலத்தை சார்ந்தவர்' என வியந்து கேட்பர்.
சிரித்துக்கொண்டே, ’நான் பாரசீகன். அரபு மொழியை அரபுகளைவிட அதிகமாக அழகாகப் பேசுவேன்’ என்பார். வழமைபோல ஒருநாள் அரபு சமூகத்தின் சபையில்
வந்தமர்ந்து அவர்களுடன் அரபியில் பேசினார். நீ எந்த கோத்திரத்தை சேர்ந்தவர் என அவர்கள்
வினவ, நான் பாரசீகன். உங்களைவிட
நன்றாக அரபுமொழி பேசுவேன் என சிரித்துக்கொண்டே கூறினார்.
அவர்களில் ஒருவர்
எழுந்து அந்த பாரசீகரிடத்தில், "நீ குறிப்பிட்ட இந்த அரபியிடம் சென்று அவரிடம் உரையாடு.
நீ அரபியரல்லாத அந்நியர் என்பதை அவர் தெரிந்து கொள்ளாவிட்டால், நீ நினைத்துக்கொண்டிருப்பதைப்
போலவே வெற்றி பெற்று, எங்களை வென்றுவிட்டவனாவாய்" சொன்னார்,
அந்த அரபி, மிக்க
நுண்ணறிவு படைத்தவராக இருந்தார். பாரசீகர் அவரின் வீட்டிற்குச் சென்று கதவை தட்டினார்.
அந்த அரபியரின் மகள் “வாசலில் யார்?” என்று வினவினாள். அந்த பாரசீகர், “நான் அரபு குலத்தைச் சேர்ந்தவன்.
உன் தந்தையைக் காண நாடி வந்தேன்” என கூறினார்.
சிறுமி, ( أَبِي ذَهَبٍ إِلَى الْفَيَافِي فَإِذَا فَاءَ الْفِي أَفَى ) “அவர் வயல்வெளிக்கு சென்றுள்ளார். இருட்டும்போது திரும்பி வந்துவிடுவார்”
என்று இலக்கிய நயமாக மறுமொழி தந்தாள். அந்த பாரசீகருக்கு சிறுமியின் பதில் புரியாததால்,
“எங்கே சென்றுள்ளார்?”
என மீண்டும் கேட்டார்.
சிறுமி, ( فَاءَ الْفَيَافِي كَيْ يَفِيءَ بِفَيْئَةٍ فَإِنْ فَاءَتِ الْفَاءُ فَاءَ
بِفَيْئِهِ ) "வேட்டையாடுவதற்காக
அவர் வயல்வெளிக்கு சென்றுள்ளார். இருட்டும்போது வேட்டையுடன் திரும்பி வந்துவிடுவார்"
சிறுமி மீண்டும் நயமாக பதில் கூறினாள்.
பேச்சுக் குரலைக்
கேட்டதும் சிறுமியின் தாய் கேட்டார். “மகளே!, வாசலில் யார்?” என்று வினவினாள். சிறுமி, “அரபியல்லாத அந்நியரொருவர்
வாசலில் நிற்கிறாரம்மா” என்றுக் கூறி, அவரின் சுயரூபத்தை உடைத்தாள். சிறுமியே அரபு
புலமையில் இப்படியென்றால், அவளின் தந்தை? தன் குட்டு வெளிப்பட்டதும் பாரசீகர், பின்னங்கால் பிடரியிலடிக்க
வந்த வழியே ஓட்டம் பிடித்தார்.
அல்லாஹ் தான் மிகவும்
அறிந்தவன்
முஹம்மத் பின் கஅப்
அல்குரளிய்யி (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஜனாதிபதி அலீ (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர்
வந்து ஒரு சட்டம் பற்றி கேட்டார். அலீ (ரலி) அவர்கள் அதில் தமது விளக்கத்தை சொன்னார்கள்.
உடனே அவர், ( لَيْسَ
كَذَلِكَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، وَلَكِنْ كَذَا وَكَذَا ) "ஜனாதிபதி அவர்களே! அந்தச் சட்டம் நீங்கள் சொல்வது போன்று அல்ல.
மாறாக, இவ்வாறு இவ்வாறு தான்" என்று கூறி, சரியான கருத்து என்ன என்பதையும் எடுத்துரைத்தார்.
அப்போது அலீ (ரலி)
அவர்கள், ( أَصَبْتَ
وَأَخْطَأْتُ، وَفَوْقَ كُلِّ ذِي عِلْمٍ عَلِيمٌ ) "நீர் சரியாக சொன்னீர். நான் தான் தவறாக சொல்லிவிட்டேன்.
(உலகில்) ஒவ்வொரு அறிஞனுக்குமேல் அறிஞன் இருக்கிறான்" என்று கூறினார்கள். நூல்:- தஃப்சீர் தபரீ, தஃப்சீர் துர்ருல்
மன்ஸூர், கன்ஸுல் உம்மால்
சயீத் பின் ஜுபைர்
(ரஹ்) அவர்கள் கூறியதாவது. நாங்கள் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இருந்தோம்.
அப்போது அவர்கள் அற்புதமான விஷயங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அதைக் கேட்டு
வியந்த ஒரு மனிதர், (
الحَمْدُ لِلَّهِ فَوْقَ كُلِّ ذِي عَلِمٍ عَلِيمٌ ) "அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! ஒவ்வொர் அறிஞனுக்குமேல் (அவரைவிடச் சிறந்த மற்றொர்)
அறிஞன் இருக்கின்றான். (அதாவது, நீங்கள் அறிஞர்களுக்கெல்லாம்
அறிஞர் ஆவீர்)" என்று கூறினார்.
அப்போது அப்துல்லாஹ்
பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், ( بِئْسَ مَا قُلْتَ، اللَّهُ الْعَلِيمُ
وَهُوَ فَوْقَ كُلِّ عَالِمٍ ) "நீர் சொன்ன வார்த்தை
மிகவும் மோசமானது. (அவ்வாறெல்லாம் சொல்லாதீர்) அல்லாஹ் தான் மிகவும் அறிந்தவன். அவன்
தான் அறிஞனுக்கெல்லாம் அறிஞன் ஆவான்" என்று கூறினார்கள். நூல்:- தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் குர்துபீ,
தஃப்சீர் இப்னு கஸீர், தஃப்சீர் துர்ருல் மன்ஸூர், தஃப்சீர் ரூஹுல் மஆனி
பேரறிஞர் ஹசன் அல்பஸரீ
(ரஹ்) அவர்கள் கூறினார்கள். ( لَيْسَ
عَالِمٌ إِلَّا فَوْقَهُ عَالِمٌ، حَتَّى يَنْتَهِيَ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ ) எந்த ஓர் அறிஞனுக்கு மேல் மற்றொரு அறிஞன் இல்லாமல் இல்லை. இறுதியாக, வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுடன் அது முடிவடையும். நூல்:-
தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர், தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்
கில்லாடி
நம்மாளு கிணறு ஒன்றை
விலைக்கு வாங்கினார். மறுநாள் கடைத்தெருவில்
நம்மாளு போய்க் கொண்டிருந்தபோது விற்றவன் அவரை சந்தித்தார்.
"அப்பவே சொல்ல மறந்துவிட்டேன். இப்ப உங்களை பார்த்த உடனே நினைவுக்கு
வந்தது. நான் உங்களுக்கு விற்றது கிணற்றை மட்டும்தான். அதில் இருக்கும் தண்ணீரை அல்ல.
ஆகையினால் அந்த தண்ணீரை நீங்கள் பயன்படுத்த வேண்டுமானால் மாத மாதம் அதற்கு எனக்கு கட்டணம்
செலுத்த வேண்டி வரும். அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்" என்றார்.
அப்ப நம்மாளு தயங்காமல்
"நேற்று நானே உங்களிடம்
சொல்லனும்னு இருந்தேன். நம்ப இன்னிக்கு நேர்ல பார்த்தது நல்லதா போச்சு. எனக்கு கிணறு
மட்டுமே போதும். அதில் இருக்கும் உங்கள் தண்ணீர் எனக்கு வேண்டாம்.
ஒன்று, நீங்கள் அதிலிருக்கும்
தண்ணீரை காலிபண்ணி வெற்று கிணறை எனக்கு கொடுங்கள். இல்லையென்றால் எனக்கு சொந்தமான இடத்தில்
தண்ணீரை வைத்திருப்பதற்காக நீங்கள் மாத வாடகை செலுத்த வேண்டி இருக்கும்" என்றார்.
இதைத்தான் கிராமத்துச்
சொல்வழக்கில் "விடாக்கண்டனுக்கு கொடாக்கண்டன்" என்பார்கள்.
பேரடாக்ஸ்
ஒரு விஷயம் சரியா
இருக்கும்போதே, தப்பா இருக்கும். அதேபோல ஒரு விஷயம் தப்பா இருக்கும்போதே, சரியா இருக்கும்.
இதைத் தான் ஆங்கிலத்தில் பேரடாக்ஸ் (Paradox) என்கிறார்கள்.
ஒரு விடாக்கண்டன், கொடாக்கண்டன் கதையை
சொன்னால் இதை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். அந்தக் காலத்தில் ஒரு வாத்தியார் இருந்தார்.
அவர் வாதம் புரியும் கலையில் கில்லாடி. அதனால் பல ஊர்களில் இருந்தும் நிறைய பேர் வந்து
அவரிடம் படித்து பாரிஸ்டர் பட்டம் வாங்கிக் கொண்டு போவார்கள். அப்புறம் அவங்கவங்க ஊர்
ஆலமரத்தடி முதல் நீதிமன்றம் வரை வழக்காடி சூப்பரா கல்லா கட்டுவாங்க. அவரது மாணவர்களை
யாராலும் அவ்வளவு சுலபத்தில் வழக்காடி ஜெயித்துவிட முடியாது.
ஒருநாள் காலையில்
ஒரு பையன் அவர் வீட்டு வாசல்ல வந்து பாடம் கத்துக்கணும்னு நின்னான். நம்மாளு ஃபீஸை
சொன்னாரு. பையன் மிரண்டு போயிட்டான். ஐயா, இப்போதைக்கு அவ்வளவு பணம் என்கிட்டே கிடையாது. வேணும்னா
ஒரு ஒப்பந்தம் போட்டுக்கலாம்னான். அதாவது, நான் படிச்சு முடிச்சு போனதும் எடுத்துக்கிற முதல்
கேசுல ஜெயிச்சா நீங்க கேட்ட ஃபீஸை உடனே கொடுத்துடுவேன், தோத்துட்டா கொடுக்க மாட்டேன், ஓ.கே.வான்னான் பையன்.
நம்ம சிஷ்யன் நிச்சயம் தோற்க மாட்டான்ற தைரியத்துல ஒப்பந்தத்துக்கு ஒத்துக்கிட்டார்
குரு.
பையன் நல்லா படிச்சான். கோர்ஸை முடிச்சான். ஊருக்கு போயிட்டான்.
ஆனா பல மாசம் ஓடியும் காசு மட்டும் வரலே. கடுதாசி போட்டுப் பார்த்தாரு குரு. பதில்
கடுதாசி தான் வந்தது. ஐயா, நான் இன்னும் கேஸே எடுத்துக்கல. முதல் கேஸ் வரட்டும் பார்க்கலாம்னுட்டான்
அந்த தில்லாலங்கடி. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த குரு ஒருகட்டத்திலே வெறுத்துப் போய்
அவன் மேலேயே ஒரு கேஸைப் போட்டார். இவன் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காம ஏமாத்துறான்றதுதான்
கேஸ்.
பையன் அவன் சார்பா
அவனே ஆஜரானான். இதுதான் அவன் ஆஜராகும் முதல் கேஸ். குருவுக்கு பணம் தரணும்ன்னு நீதிபதி
தீர்ப்பு சொல்லிட்டா, பையன் கேஸ்ல தோத்துருவான். அதனால ஒப்பந்தப்படி பணம் தரத் தேவையில்லை.
தர வேண்டாம்னு சொல்லிட்டா, அதுதான் நீதிபதியே சொல்லிட்டாருல்லன்னு நடையை கட்டிருவான். ஆக, எப்படி பார்த்தாலும்
பணம் தர முடியாதுன்னுட்டான் அந்த கில்லாடி கில்மா.
குரு லேசுப்பட்டவரா? நீதிபதி பணம் தரச்
சொன்னா, தீர்ப்புப்படி பணம்
தரணும். தர வேண்டாம்னு சொன்னா, நீ மொத கேஸ்ல ஜெயிச்சுருவ, அதனால ஒப்பந்தப்படி பணம் தரணும். ஆக எப்படி பார்த்தாலும்
பணம் தரணும் மகனேன்னாரு.
இரண்டு பேரும் இப்படி
கிடுக்கிப்பிடி போடுவதை பார்த்த நீதிபதி பாவம் என்ன பண்ணுவாரு. மயங்கி விழுந்திட்டாரு.
இப்போ புரியுதா, இதுதான் பேரடாக்ஸ்
நாம் எந்தத் துறையில்
தேர்ச்சிப்பெற்றவராக இருந்தாலும் அந்தத் துறையில் நம்மைவிட அதிகம் தேர்ச்சிப்பெற்ற
ஒருவர் நிச்சயமாக இருப்பார். இதுவே, இறைவனின் நியதியாகும்.
எனவே நாம், இறைவனின் இந்த நியதியை ஏற்று, தற்பெருமையற்றவர்களாகவும் நற்பண்புமிக்கவர்களாகவும்
வாழ அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்!
மௌலவி மு.முஹம்மது
ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment