Search This Blog

Tuesday, 23 September 2025

முன்னேற்றத்தின் தடைக்கற்கள்

 

முன்னேற்றத்தின் தடைக்கற்கள்

 

وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنْتُمْ تَعْلَمُونَ

உங்களுக்கிடையே ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (உங்கள் வாதம் பொய்யானதென) நீங்கள் அறிந்திருந்தும் (இதர) மனிதர்களின் பொருள்களில் எதனையும் பாவமான வழியில் (அநியாயமாக இலஞ்சம் கொடுத்து) அபகரித்துக் கொள்ள அதிகாரிகளிடம் செல்லாதீர்கள். திருக்குர்ஆன்:- 2:188

 

சர்வதேச அளவில் இலஞ்சம் ஊழலை ஒழிக்கும் நோக்கத்திற்காக கடந்த 2003- ம் ஆண்டு அக்டோபர் 31- ம் நாள் ஐ.நா. அவையால் டிசம்பர் 9 ம் தேதி (International Anti-Corruption Day) சர்வதேச இலஞ்சம் ஊழல் ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

 

இலஞ்சம், ஊழல் என்பது கடுமையான குற்றச்செயல். இலஞ்சம், ஊழலைத் தடுப்பதோடு, இதை ஒழிக்கவும், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமே இலஞ்சம் ஊழல் ஒழிப்பு தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

 

நேர்மை தான் இயல்பானது. நேர்மையற்ற தன்மை அசாதாரணமானது என்கிற நிலைமை எந்த சமூகத்தில் நிலவுகிறதோ அந்த சமூகம் தான் மேன்மையானதாக இருக்கமுடியும். இலஞ்சம், ஊழல் போன்றவையே நேர்மையை குழிதோண்டி புதைப்பவையாகும்.

 

சில நேரங்களில் இலஞ்ச ஊழல் நாட்டின் அமைப்பை அழிப்பதில் அமைதியான விஷமாக இருக்கலாம்.

 

ஒரு சிலரின் ஊழலால் சமூகங்கள் நொறுங்கலாம். இந்த குற்றத்திற்கு யாரும் விதிவிலக்கல்ல. ஊழல் பல வகைப்படும், ஒவ்வொரு வகையும் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

 

இலஞ்சம், ஊழல், பொய்க் கணக்கு, கமிஷன், மாமூல் கட்டிங், ஏரியா வசூல், கவனிப்பு இவையெல்லாம் எல்லா இந்தியர்களுக்கும் தெரிந்த சொற்கள். தேசபக்தியை உணர்வுகளில் ஊட்டினார்களோ இல்லையோ ஒவ்வொரு இந்தியர்கள் உள்ளத்திலும் அவனின்றி அசையாது என்கிற ஆன்மீகச் சிந்தனையை மாற்றி, "அதுவின்றி எதுவும் அசையாது" என்ற அளவுக்கு மனதை மாற்றி விட்டுள்ளனர்.

 

உலகளவில் தனி மனித ஒழுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருகிறது. தனக்கு சாதகமாக காரியத்தை முடித்துக் கொடுப்பதற்காக அதிகாரமோ செல்வாக்கும் உள்ளவருக்கு முறையற்ற வழியில் கொடுக்கப்படும் பணம் பொருளை இலஞ்சம் எனப்படும்.

 

இலஞ்சத்திற்கும், ஊழலுக்கும் பழகிப்போன எந்த நாட்டினரும் வாழ்க்கையில் உயர்ந்ததாக சரித்திரம் இல்லை. முறையாக சம்பாதிப்பதை இறைவழிபாடாக கருதுகின்ற இஸ்லாம், தவறான வழிகளில் மூலம் வருவாய் வருகின்ற அனைத்து வாசல்களையும் அடைத்துவிடுகிறது.

 

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الرَّاشِي وَالْمُرْتَشِي ) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இலஞ்சம் கொடுப்பவரையும், இலஞ்சம் வாங்குபவரையும் சபித்தார்கள். நூல்:- அபூதாவூத்-3109, திர்மிதீ-1257, இப்னுமாஜா-2304, முஸ்னது அஹ்மத்

 

ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم الرَّاشِيَ وَالْمُرْتَشِيَ وَالرَّائِشَ ) அருமை நாயகம் (ஸல்) அவர்கள், இலஞ்சம் கொடுப்பவர் இலஞ்சம் வாங்குபவர் ஆகிய இருவருக்குமிடையே தரகராகச் செயல்படுபவரையும் சபித்தார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, ஜாமிஉஸ் ஸஙீர்

 

இன்று பல அலுவலகங்களில் பொருளீட்டுகின்ற வகைகளில் சுலபமான ஒரு வழியாக இலஞ்சம் மாறிவிட்டது. பெரும்பாலான வர்த்தகங்களும், வேலைகளும் இலஞ்சமின்றி தொடங்குவதில்லை. இலஞ்சம் போன்ற ஈனச் செயலின் மூலமாகத்தான் இன்று முழுமையான தேசிய உணர்வை காண முடிகிறது.

 

சில அரபு நாடுகள், சீனா, வடகொரியா தென்கொரியா, தெய்வான் போன்ற நாடுகளில் இலஞ்சம், ஊழல், அதிகார முறைகேடு ஆகியவை பெரும் குற்றங்களாக கருதப்பட்டு, மரண தண்டனையைகூட வழங்கப்படுகின்றது. ஆனால் இந்தியா, ரஷ்யா போன்ற உலகின் பெரும்பாலான நாடுகளில் அந்நாட்டு மக்களால் அங்கீகரிக்கப்பட்ட சமூக கொடுமைகளில் ஒன்றாக இலஞ்சம் ஆகிவிட்டது. மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரையிலும் இந்த சமூக கொடுமையினால் வாட்டி வதைபடுகிறான் என்பது உலகறிந்த உண்மையாகும்.

 

உலகளவில் இலஞ்சம் ஊழல் அதிகம் நடைபெறும் நாடுகளில் முதலிடம் சோமாலியா. இதில் 19 ஆவது இடம் இந்தியா. இதில் மிகக் குறைவு பெல்ஜியம், கனடா ஆகும். இந்திய மாநிலங்களில் முதலாவது பீகார். ஒன்பதாவது இடம் தமிழகம். கேரளா கடைசி ஆகும்.

 

எது அன்பளிப்பு

 

அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்னுல் லுத்பிய்யா என்பவரை "ஸகாத்"களை வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் (ஸகாத்களை வசூலித்துவிட்டு) வந்து (கணக்கு ஒப்படைத்தபோது), "இது உங்களுக்குரியது. இது எனக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது" என்று கூறினார்.

 

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று கொண்டு, ( مَا بَالُ عَامِلٍ أَبْعَثُهُ فَيَقُولُ هَذَا لَكُمْ وَهَذَا أُهْدِيَ لِي ‏.‏ أَفَلاَ قَعَدَ فِي بَيْتِ أَبِيهِ أَوْ فِي بَيْتِ أُمِّهِ حَتَّى يَنْظُرَ أَيُهْدَى إِلَيْهِ أَمْ لاَ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لاَ يَنَالُ أَحَدٌ مِنْكُمْ مِنْهَا شَيْئًا إِلاَّ جَاءَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ يَحْمِلُهُ عَلَى عُنُقِهِ ) "நாம் அனுப்பும் அதிகாரியின் நிலை என்ன? அவர் (பணியை முடித்துத் திரும்பிவந்து) "இது உங்களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது" என்று கூறுகிறார். அவர் (மட்டும்) தம் தந்தையின் வீட்டிலோ அல்லது தாயின் வீட்டிலோ உட்கார்ந்துகொண்டு, தமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! இறைவன் மீதாணையாக! உங்களில் யாரேனும் அ(ந்தப் பொதுச் சொத்)திலிருந்து (முறைகேடாக) எதையேனும் பெற்றால் மறுமைநாளில் அதைத் தமது கழுத்தில் சுமந்துகொண்டு வருவார்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ2597, முஸ்லிம்-3739

 

உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ( كَانَتِ الْهَدِيَّةُ فِي زَمَنِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَدِيَّةً، وَالْيَوْمَ رِشْوَةٌ ) அருமை நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அன்பளிப்பு, அன்பளிப்பாக இருந்தது. ஆனால், இன்று அது இலஞ்சமாக மாறிவிட்டது.  நூல்:- புகாரீ அன்பளிப்பு பாடம்-17

 

அதிகாரத்தில் இருப்பவர்கள் தனக்கு வரும் அன்பளிப்பை தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், அது நம்முடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதற்கு கொடுக்கப்படும் முன் தொகையாக இருக்கலாம்.

 

நம்மில் சிலர் இலஞ்சம் வாங்க தாங்களாகவே கை நீட்டுவதில்லை. ஆனால், தானாக கிடைத்தால் வாங்கிக் கொள்வார்கள். அதிலும், தாங்கள் மிகவும் நேர்மையானவர் என்று காட்டிக் கொடுக்கிற பாவனை இருக்கும்.

 

தாம் பணி புரிகின்ற அலுவலகத்தில் இலஞ்சம் வாங்காதது மட்டும் நேர்மையாக முடியாது. வாங்குகிற சம்பளத்திற்கு சரியாக வேலை பார்ப்பதும் மிக அவசியம்.

 

"இலஞ்சம் வாங்கமாட்டேன்" என்ற ஜம்பம் அடித்துக்கொண்டு தமது உறவினரில், நண்பர்களில், சமுதாயத்தினரில் தகுதியில்லாதவர்களுக்கெல்லாம் முக்கிய பணிகள் பெற சிபாரிசு செய்வதும், அதிகாரத்தை பயன்படுத்துவதும் குற்றமாகும்.

 

நாட்டின் கடைநிலை ஊழியன் முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரை அவரவர் தகுதிக்கேற்ப இலஞ்சம், ஊழலில் திளைத்து ஏராளமான செல்வங்களை தவறான முறையில் சேர்த்து வருகின்றனர்.

 

ஏழைகள் தங்கள் உரிமைகளைப் பெற சக்திக்கு மீறிய தொகையை இலஞ்சமாகக் கொடுக்க வேண்டியுள்ளது. இலஞ்சம் கொடுக்க இயலாத பலர் தங்களது உரிமைகளைக்கூட பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

 

அழகிய முன்மாதிரி

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களை "கைபர்" எனுமிடத்தில் வசித்த யூதர்களிடம் அனுப்பி, (இஸ்லாமிய அரசுக்குரிய இடத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்த) அந்த யூதர்களுக்குக் கிடைக்கும் கனி வகைகளையு,ம் விளைபொருள்களையும் மதிப்பீடு செய்து (இஸ்லாமிய அரசுக்கு சேர வேண்டிய பொருள்களை வசூலித்து) வருமாறு பணித்தார்கள்.  அப்போது அந்த யூதர்கள் தம்மிடம் அவர் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அவருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டனர்.

 

அப்போது அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள், ( وَاللَّهِ لَقَدْ جِئْتُكُمْ مِنْ عِنْدِ أَحَبِّ الْخَلْقِ إليَّ، وَلْأَنْتَمْ أَبْغَضُ إليَّ مِنْ أَعْدَادِكُمْ مِنَ الْقِرَدَةِ وَالْخَنَازِيرِ، وَمَا يَحْمِلُنِي حُبي إِيَّاهُ وَبُغْضِي لَكُمْ عَلَى أَلَّا أَعْدِلَ فِيكُمْ )  "அல்லாஹ்வின் மீதாணையாக! படைப்புகளிலேயே எனக்கு மிகவும் பிரியமான ஒருவரிடமிருந்து (நபியவர்களிடமிருந்து) நான் உங்களிடம் வந்துள்ளேன். ஆனால், நீங்களோ குரங்குகளாகவும் பன்றிகளாகவும் உருமாற்றப்பட்ட உங்களின் மூதாதையரைவிட எனக்கு மிகவும் பிடிக்காதவர்கள். இருப்பினும், நபியவர்கள்மீது நான் கொண்டிருக்கும் நேசமோ உங்கள்மீது எனக்குள்ள வெறுப்போ உங்கள் விஷயத்தில் நான் நீதி தவறுவதற்கு காரணமாக இராது" என்று கூறினார்.

 

அப்போது யூதர்கள், ( بِهَذَا قَامَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ ) "வானங்களும் பூமியும் இன்னமும் நிலைத்திருப்பதற்கு இதுதான் காரணம்" என்று கூறினார்கள் .நூல்:- முஸ்னது அஹ்மத், முவத்தா மாலிக், தஃப்சீர் இப்னு கஸீர் அந்நிசா வசனம்-135

 

நேர்மை நமது உடமை உடையாக இருப்பதைவிட அது நமது தோலாக மாறும்போதுதான் நாம் தலைநிமிர்ந்து நிற்க முடியும். நேர்மையால் பெறுகின்ற மகிழ்ச்சி மிக உயர்வானது என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பாசறையில் கல்வி பயின்ற வருமானவரி அதிகாரியான அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.

 

இலஞ்சம் ஊழலால் ஒரு நாட்டினுடைய அமைப்பின் அடிமட்டத்திலிருந்து, தலைமை வரை நிர்வாக சீர்கேடும், ஒழுங்கீனமும் புற்றுநோய்போல பரவும். ஊழல் காரணமாக சாமானிய மனிதர்களின் வரிப்பணம் விரயமாவதுடன், பல அத்தியாவசிய மக்கள் பணிகள் பாதிக்கப்படும். ஊழலால் தரமற்ற பணிகள், நேர விரயமாதல், பொதுச் சொத்து விரயமாதல் ஆகியவை நிகழும். முக்கியமாக ஊழல் காரணமாக சில மனிதர்கள் மட்டுமே செழிப்புறவும், பெரும்பான்மையான மக்கள் வறுமையில் துன்புறுவதும் நடக்கிறது. இதனால் நாட்டின் பொருளாதாரமும், ஆட்சி நிர்வாகமும் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் சமுதாய ஏற்றத்தாழ்வுகளும் அதிகமாகின்றன.

 

பல வகைகள்

 

ஏழைகள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் இலவசமாக சிகிச்சை பெறுவதற்காக நிறுவப்பட்டுள்ள அரசு மருத்துவமனைகள்கூட இலஞ்சம் எனும் நோயால் கடுமையாக பீடிக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம்.

 

விளையாட்டுத்துறையும் இலஞ்சம் தாண்டவமாடும் இடங்களாக மாறிவிட்டன. டொனேஷன் என்ற பெயரில் ஆரம்பப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் இவைகளில் எதுவும் தப்பிவிடாமல் இலஞ்சம் வசூலிக்கப்படுகிறது.

 

நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்கள் இலஞ்சம் கொடுக்க வசதி இல்லாததால் அவர்கள் கல்வி கற்பது, அதிலும் உயர்கல்வி கற்பது மிகப் பெரும் கேள்விக்குறியாகிவிட்டது. படிப்பு ஏறாத குறைந்த மதிப்பெண்கள் பெற்ற பலர் இலஞ்சம் கொடுத்து உயர் கல்விக்கான இடத்தை பெற்றுக் கொள்கின்றனர்.

 

கல்வித்தரமில்லாதோர் மருத்துவரானால் மரண ஓலங்கள் தானே கேட்கும். தகுதியில்லாதோர் கட்டிடங்கள் எழுப்பினால் இடிந்துவிடாமல் என்ன செய்யும்? இலஞ்சம் கொடுத்து பட்டம் பதவிகளை பெறுவோர் அதற்கான உரிமைகளை எங்ஙனம் சரியாக நிறைவேற்றுவார்கள்?

 

மனித வாழ்வின் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துவது திருமணம் தான். அனைத்து இறைத்தூதர்களாலும் பின்பற்றப்பட்ட ஒரே வழிமுறையாக திகழ்கின்ற திருமணம் இன்று வரதட்சணை என்ற இலஞ்சத்தை அடிப்படையாக வைத்தே துவங்கப்படுகிறது. இறைத்தூதர்களின் வழிமுறை கடைபிடிக்க (ஹராமை) இலஞ்சத்தை கொண்டு துவங்குவது எவ்வளவு கேவலத்திற்குரியது?

 

காட்டிக் கொடுத்தான்  

 

யூத மத குருமார்கள் வேத வசனங்களை மூடி மறைத்து அதற்காக சன்மானம் பெற்றார்கள் என்று திருக்குர்ஆன் (2:174 - 9:34 - 5:42, 62, 63) பல இடங்களில் குறிப்பிடுகிறது.

 

யூதர்கள், இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களைக் கொலை செய்வதற்கு திட்டம் தீட்டினர். அதற்காக ஈசா (அலை) அவர்களின் சீடர்களில் ஒருவரான "யூதாஸ் காரியோத்" என்பவனை அணுகி, "நீர் ஈசா இருக்கும் இடத்தைக் காட்டி கொடுத்தால் உனக்கு முப்பது வெள்ளிக்காசுகள் இலஞ்சம் தருகிறோம்" என்று கூறினர்.

 

அதற்கு அவன் சம்மதித்து ஈசா (அலை) அவர்கள் இருக்கும் இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றபோது இறைவன், ஈசா (அலை) அவர்களை வானுலகத்திற்கு உயர்த்திவிட்டு, இலஞ்சம் வாங்கிக்கொண்டு காட்டிக் கொடுத்த 'யூதாஸ் காரியோத்'தின் உருவத்தை ஈசா நபியின் உருவம் போன்று மாற்றிவிட்டான். ஆகவே, அத்துரோகியை ஈசா நபியென எண்ணிய யூதர்கள், அவனைப் பிடித்து சிலுவையில் அறைந்து சித்திரவதை செய்து கொன்றனர். நூல்:- தஃப்சீர் ஹக்கானீ, தஃப்சீர் காஸீன்

 

இலஞ்சம், ஊழல் மூலம் சேர்த்து குவித்த பொருள்களால் மனிதன் நிம்மதியாக வாழ முடிவதில்லை. மனிதன் தவறான முறைகளில் பொருள் சேர்க்க முற்படும்போது, தன்னைக் காட்டிலும் தன் சேமிப்பை அவன் நேசிக்க ஆரம்பித்து விடுகிறான். அப்போது அதை காப்பாற்றுவதற்காக எந்தப் பாவச் செயலையும் செய்யத் துணிந்துவிடுகிறான்.

 

சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கிகளில் அடைபட்டு கிடக்கும் 72  ட்ரில்லியன் டாலர் (அதாவது, 72 இலட்சம் கோடி இந்திய ரூபாய்) இந்திய அரசு மற்றும் நிர்வாக அமைப்பில் திறம்பட பணியாற்றுவோர்க்கு சொந்தமானது. இவ்வளவு பிரமாண்டமான தொகை அனைத்தும் இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகளில் விளந்தவை தான் என்கிறார் இந்திய கடற்படையின் முன்னாள் தலைவர் அருண் பிரகாஷ்.

 

உதவியதற்காக

 

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الرَّاشِي وَالْمُرْتَشِي فِي الْحُكْمِ ‏ ) பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள்  (தீர்ப்புக்காக) இலஞ்சம் கொடுப்பவரையும் இலஞ்சம் வாங்குபவர்களையும் சபித்துள்ளார்கள். நூல்:-  திர்மிதீ -1256

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ( مَنْ رَدِّ عَنْ مُسْلِمٍ مَظْلِمَةً فَأَعْطَاهُ عَلَى ذَلِكَ قَلِيلًا أَوْ كَثِيرًا فَهُوَ سُحْتٌ )  அநீதமிழைக்கப்பட்ட ஓர் முஸ்லிமுக்கு உதவி செய்துவிட்டு, அதற்காக சிறியது அல்லது பெரியது என எதை அன்பளிப்பாகப் பெற்றாலும் அது இலஞ்சம் ஆகும். நூல்:- அல்கபாஇர் இமாம் அத்தஹபீ

 

பேரறிஞர் இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு துறையிலும் சட்ட விரோதமாக நடப்போர் அனைவருமே அந்தந்தத் துறையின் ஷைத்தான்கள் தான்.

 

இமாம் அவ்ஸாயீ (ரஹ்) அவர்களிடம் ஒரு கிறிஸ்தவர் வந்து ஒரு ஜாடி தேன் கொடுத்துவிட்டு, அலபக் நகரிலுள்ள முஸ்லிம் அதிகாரி தன்னிடம் அதிக வரியை கணக்கிட்டு அநீதமிழைப்பதாக கூறினார். இமாம் அவர்கள், வரியை குறைக்குமாறு அந்த அதிகாரிக்கு சிபாரிசு கடிதம் எழுதி அந்த கிறிஸ்துவரிடம் கொடுத்துவிட்டு, "நீர் எனக்கு (இலஞ்சமாக) கொடுப்பதற்கு கொண்டு வந்த தேன் ஜாடியை எடுத்துச் சென்று விடு! அது எனக்கு தேவையில்லை" என்று கூறினார்கள். நூல்:- அல்கபாஇர் இமாம் அத்தஹபீ

 

இறைப்பொருத்தத்திற்காகவே செயல்படுகிறோம் என்று கோசம் போடும் முஸ்லிம் இயக்கங்களில் சிலர் கண்டப் பஞ்சாயத்து மூலம் அநீதம் இழைக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்துவிட்டு, அவர்களிடம் இருந்து சில தொகைகளை அன்பளிப்பாக பெறுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

 

தரம் குறைந்த பொருளை தயாரித்து தரமானது என்று I.S.I. முத்திரை பதிக்க அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தொகை இலஞ்சமாகும். ஏனெனில், அதனால் நுகர்வோர் நஷ்டமடைகிறார்கள்.

 

அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுப்பவர்களுக்கு வேலைகள் விரைவாக முடித்துக் கொடுக்கப்படுகிறது. கொடுக்க மறுப்பவர்களின் வேலைகள் நடப்பதே இல்லை. அல்லது சோர்வை ஏற்படுத்துகின்ற அளவுக்கு மிக நீண்ட தாமதத்திற்குப் பிறகு காரியம் நடக்கிறது. இவ்வாறான அநீதிகளை துடைத்தறியும் நோக்கில் தான் இலஞ்சத்தைப் பாவச்செயல் என அறிவித்து, அதில் கூட்டாகும் அனைவரையும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அருளைவிட்டு தூக்கியெறியுமாறு சபித்துள்ளார்கள்.

 

நமது நாட்டின் இழிநிலை

 

நமது நாட்டு ஊழல்களின் வகைகளில் சில: கால்நடை தீவனம் ஊழல், யூரியா ஊழல், சவப்பெட்டி ஊழல்,  உணவு தானிய ஊழல், முத்திரைத்தாள் ஊழல், வெள்ள நிவாரண நிதி ஊழல், பிற நாடுகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க தேவைப்படும் போர் தடைவாளங்கள் வாங்குவதில்கூட இலஞ்ச ஊழல் புகுந்து, அதில் சம்பந்தப்பட்டவர்கள் மரணித்த பின்பும் அவ்வபோது அது சம்பந்தப்பட்ட வழக்குகள் தலைதூக்கி நம் பாரதத்தை அடிக்கடி தலைகுனிய வைத்துக் கொண்டிருக்கிறது.

 

மேலை நாடுகளில் அரசு அதிகாரிகள் தனக்குரிய வேலைகளை செய்வதற்கு இலஞ்சம் வசூலிப்பதில்லை. மாறாக, தனக்குரிய வேலைகளையும் மிஞ்சி அதிகமான வேலைகள் செய்தால்தான் அதற்காக காசு கேட்கிறார்கள். ஆனால், இந்திய நாட்டின் அரசு அதிகாரிகள் தனக்குரிய வேலைகளை செய்வதற்கே இலஞ்சம் வசூலிக்கிறார்கள். என்ன கொடுமை இது.

 

ஒருசமயம் துபாயில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலில் நடந்த வியாபாரிகள் விருந்தில் அமெரிக்க ஐரோப்பா அதிகாரிகளும், தொழிலதிபர்களும் கருத்து பரிமாற்றம் செய்துகொண்டனர். இந்தியாவின் மிகப் பெரும் சந்தையில் எப்படி பங்கு கொள்வது? என்பது பற்றி பன்னாட்டு நிறுவனங்கள் விசாரித்தன.

 

அப்போது, "இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான தடைகள் நீக்கப்பட்டு விட்டன. என்றாலும், அனுமதி பெறுவதற்கு அரசாங்கத்துக்கே இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது" என்று அக்கூட்டத்தில் பேசிக்கொண்டனர். நம் அரசியல் கட்டமைப்பின் நேர்மை போக்கு எந்த தரத்தில் உள்ளது என்பதற்கு சான்று இது.

 

இந்திய கடற்படை நம் முன்னால் தலைவர் அருண்பிரகாஷ், "வரலாற்று விளிம்பில் இந்தியா" என்ற தமது நூலில் 2020 ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசாக ஆவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இலஞ்ச ஊழல் என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்து இப்போது நமது தேசமெங்கும் பரவி தேசத்தின் இருப்புக்கே உலை வைக்கும் அளவுக்கு விஷ வருட்சமாய் வளர்ந்துள்ளது. இதனால் இந்தியா வல்லரசாக ஆவதற்கு தடை ஏற்படும் என்று கூறிவிட்டு, கீழ்காணும் சிலதை குறிப்பிட்டுள்ளார்.

 

மும்பை தாஜ் ஹோட்டல்மீது தாக்குதல் நடத்த வந்தவர்கள் இந்தியாவின் அதிஉயர் பிரிவான "ரா" (ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு - Research and Analysis Wing - RAW)  தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் நாராயண மந்திரத்தை தனது பெயராகக் கொண்ட ஓர் உயர் அதிகாரிக்கு வெறும் ஒரு இலட்சம் ரூபாய் இலஞ்சமாக கொடுத்துவிட்டு தான் உள்ளே நுழைந்துள்ளனர்.

 

அரசு அலுவலகங்களில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் இலஞ்சப்பணம் புழங்குவதாக பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

 

இலஞ்ச ஊழலுக்காக 2006 ஆம் ஆண்டில் 81 பேர், 2007 ஆம் ஆண்டில் 65 பேர், 2008 ஆம் ஆண்டில் 40 பேர் கைது செய்து தண்டிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ள அனைவரும் ரூ 500 - 1000 என்ற சிறிய அளவில் இலஞ்சம் பெற்ற சாதாரண இலஞ்சப் பேர்வழிகள் தான். இதில் பெருங்கொண்ட இலஞ்ச முதலைகள் சிக்குவதே இல்லை. இவர்கள்தான் நாட்டு முன்னேற்றத்தின் தடைக்கற்களாகும்.

 

மிகப்பெரும் அரசு நிறுவனங்களில் மிகப் பெரும் உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகளில் உலக அளவில் 2742 பேரை கூர்ந்து கவனித்ததில் அந்த அதிகாரிகளின் 30 சதவீதம் பேர் இலஞ்ச ஊழலில் திளைத்திருப்பது தெரிய வந்துள்ளது. அதில் 65 சதவீதம் பேர் இந்திய அரசின் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் என்று 2009 ஆம் ஆண்டுக்கான ஊழல் அறிக்கை வெளிப்படுத்துகிறது.

 

இந்திய நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் மொத்த வழக்குகளில் 26 சதவீதம் இலஞ்சம் ஊழல் தொடர்பானவை. இதில் 26 சதவீதத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆவணங்களில் உறங்கிக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இலஞ்சத்தை பற்றி அதிகாரிகளிடம் சொன்ன செய்தி: நமது அரசு ஒரு குடிமகனுக்காக ஒரு ரூபாய் செலவு செய்தால், அதில் 15 பைசா தான் சம்பந்தப்பட்டவருக்கு போய் சேருகிறது. அதில் 40 பைசா நிர்வாக செலவுக்காகவும், 45 பைசா இலஞ்சமாகவும் கரைந்துவிடுகிறது.

 

பதவி பெறுமுன் ஒரே ஒரு பழைய சைக்கிளே சொத்து. பதவிக்கு வந்தபின் பத்து பங்களாக்கள், 100 கார்கள், மற்றும் கோடிக்கணக்கான பணத்திற்குச் சொந்தக்காரர். இலஞ்சம் ஊழல் தானே இந்த அதிசயத்திற்கு காரணம். மறுக்க முடியுமா?

 

2003 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு சர்வேயின்படி இந்தியாவில் ஒரு வருடத்திற்கு பொதுமக்கள் இலஞ்சமாக செலவழிக்கும் பணம் மட்டும் 25 ஆயிரம் கோடி ரூபாய். இந்திய இராணுவ பட்ஜெட்டுக்காக ஆண்டுதோறும் ஒதுக்கும் தொகையில் சரி பாதி தொகை இது.

 

விழிப்புணர்வு வேண்டும்

 

பொதுமக்கள் இலஞ்சம் வாங்கினால் அதற்குரிய தண்டனையை அரசு வழங்க கடமைப்பட்டுள்ளது. ஆனால், இங்கு அரசு அதிகாரிகளின் வாழ்க்கையே அவர்களின் சம்பளத்தைவிட இலஞ்சத்தை நம்பியே இருக்கிறது.

 

பொறுப்பான உயர் பதவிகள் வகிக்கும் பெரிய அதிகாரிகளின் பேராசை எவ்வளவு கொடுமையானது? இந்த அக்கிரமங்களை பார்த்தும்கூட பொதுமக்களிடம் எந்த தாக்கமும் காணப்படவில்லை. இது பொதுமக்களின் மனத்தை படம்பிடித்துக் காட்டும் அவல நிலையாகும்.

 

இத்தனைக்கும் இலஞ்ச ஊழலை கண்டுபிடித்து அழிக்க, இலஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை என தனித்துறையே அரசாங்கத்தில் உள்ளது. அத்துடன் அரசு சாராத தன்னார்வ அமைப்புகளும் இதற்காக செயல்படுவதாக சொல்லிக்கொள்கின்றன. எல்லாம் இருந்தும் இலஞ்ச ஊழல் தலை விரித்து ஆடுவதை தடுக்க முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்? இலஞ்ச ஊழலை களையெடுக்க வேண்டிய இடத்திலேயே இந்த இலஞ்ச ஊழல்கள் மண்டியிருக்கிறது.

 

அப்படியானால் இலஞ்ச ஊழலை ஒழிக்க வழியே இல்லையா? இருக்கிறது இலஞ்ச ஊழலை நமது நாட்டிலிருந்து மட்டுமல்ல, உலகத்தை விட்டு ஒழிக்க வேண்டுமானால் இரண்டு வழியில் வழிகள் தான் இருக்கிறது.

 

ஒன்று, பொதுமக்களிடம் விழிப்புணர்வும், நாட்டில் யார் என்ன செய்தால் நமக்கென்ன என்று ஒதுங்கி விடாமல், தவறுகளை தட்டிக் கேட்க வேண்டும் என்ற கடமை உணர்வும் வந்தாக வேண்டும். ஆனால், தண்டிக்கும் அதிகாரத்தை தானே நேரடியாக கையில் எடுக்கக் கூடாது.

 

புரையோடிப்போன ஊழல், இலஞ்சம் லாவண்யத்தை ஒழிக்க ஊழல் ஒழிப்பு தினம் கொண்டாடப்படுவதோடு நின்றுவிடாமல், பொதுமக்களும் கையூட்டு கொடுக்காமல் காரியத்தை சாதிக்கும் முறையை கண்டறிந்து, தாமதமானாலும் தவறில்லாமல் பயன்களை பெற முயற்சிக்க வேண்டும்.

 

மற்றொன்று, அதிகாரிகள் உட்பட அனைத்து ஆட்சியாளர்களுக்கும் இறைவனைப் பற்றிய அச்சமும், அவன் வழங்கும் தண்டனை பற்றிய பயம் ஏற்பட்டாக வேண்டும்.

 

கடமையைச் செய்வதற்கு பலனை எதிர்பார்க்காமல் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் பெயரளவுக்கு என்று பணியாற்றாமல் 'ஊழலை ஒழிப்போம்; உண்மையாக நடப்போம்' என உளமாற உறுதி மொழியேற்று அதை தன் உயிருக்கும் மேலாக கடைபிடித்தால் மட்டுமே ஊழலற்ற புது உலகை உருவாக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

 

பொய்சாட்சிகளை உருவாக்கி, மக்கள் நீதிமன்றத்தின் தண்டனையிலிருந்து தப்பிவிடலாம். ஆனால், மறுமைநாளில் இறைவனின் மாமன்றத்தில் இருந்து எந்த குற்றவாளியும் தனது செல்வாக்கை பயன்படுத்தி தண்டணையிலிருந்து தப்பிவிட முடியாது என்ற சிந்தனையோடு, இலஞ்சம் ஊழல் போன்ற பாவச் செயலிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள, அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! ஆமீன்!

 

(இந்தக் கட்டுரை சுமார் பதிநான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

 

No comments:

Post a Comment

குறைகளை ஏற்றுக்கொள்வோம்

  குறைகளை ஏற்றுக்கொள்வோம்   وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ قَالَ فَعَلْتُهَا إِذًا وَأَنَا مِنَ الضّ...