Search This Blog

Monday, 15 September 2025

நீதி நேர்மை தவறேல்

 

நீதி நேர்மை தவறேல்

 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ

இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதத்தின் மீதே உறுதியாக நிலைத்திருங்கள். திருக்குர்ஆன்:- 4:135

 

நேர்மை என்பது அடுத்தவர்களுக்கு உண்மையாக நடந்து கொள்வதில் இல்லை. அது தனக்குத்தானே உண்மையுணர்வுடன் நடந்து கொள்வதில் இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் குடும்பத்தினரே சொன்னாலும், நெருங்கிய நண்பர்களை வற்புறுத்தினாலும், பணிக்கு அமர்த்தியவர்களே பயமுறுத்தினாலும் தவறானவற்றுக்கு பணிந்து விடமாட்டார்கள். அவர்களுக்கு இறையச்சம் மற்றும் உள்ளுணர்வு மட்டும் வெளிச்சக் கதிர்களாக விளங்கும்.

 

அநீதமழைத்தல் என்பதற்கு, "ஒன்றுக்கு அதற்கான இடத்தை வழங்க மறுப்பது அல்லது ஒன்றை அதற்குரிய இடமில்லாத வேறொரு இடத்தில் வைப்பது" என்று பொருள். அவ்வாறு ஒருவரது உரிமையை வழங்க மறுப்பதும், உரிமை மீறலில் ஈடுபடுவதும் அநீதம் தான். அநீதமிழைப்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது மட்டுமின்றி மறுமையில் பதில் சொல்ல வேண்டிய குற்றமும் ஆகும்.

 

நீதி என்பது நீதிமன்றங்களிலும், நேர்மை என்பது அரசு அலுவலகங்களில் மட்டும் இருக்க வேண்டியவை. மேலும், நம் மீது அதற்கான பொறுப்புகள் இல்லை என்ற தவறான சிந்தனை பரவி விட்டதால், எல்லா இடங்களிலும் அநீதியும் நேர்மையின்மையும் தலைவிரித்தாடுகிறது. சமூக வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் இவை கடைபிடிக்கப்பட வேண்டும்.

 

பெற்றோர், மனைவி, பிள்ளைகள், ஏழை, பணக்காரன், அனைத்து சமயத்தவர்களிடமும், அனைத்து தொழில் ஸ்தாபனங்களிலும், மற்றும் ஆட்சி அதிகாரத்திலும் நீதி நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( رَوَى عَنِ اللَّهِ، تَبَارَكَ وَتَعَالَى أَنَّهُ قَالَ ‏ يَا عِبَادِي إِنِّي حَرَّمْتُ الظُّلْمَ عَلَى نَفْسِي وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّمًا فَلاَ تَظَالَمُوا  ) அல்லாஹுத்தஆலா அறிவிக்கின்றான்: என் அடியார்களே! அநீதமிழைப்பதை எனக்கு நானே தடை செய்து விட்டேன். அதை உங்களிடையேயும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதமிழைக்காதீர்கள்.  நூல்:- முஸ்லிம்-5033

 

திருமணத்திற்கு பின்...

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إذَا فَعَلَتْ أُمَّتِي خَمْسَ عَشْرَةَ خَصْلَةً حَلَّ بِهَا الْبَلَاءُ وَأَطَاعَ الرَّجُلُ زَوْجَتَهُ، وَعَقَّ أُمَّهُ ) என் சமுதாயத்தார் பதினைந்து (தீய) காரியங்களைச் செய்வார்களாகின் அவர்கள்மீது இறைவனின் சோதனை இறங்கும். (அதில் ஒன்று) ஒருவர் தம் தாயைப் புண்படுத்திவிட்டு, மனைவிக்கு அடிபணிந்து நடப்பது. அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2136

 

உங்கள் மனைவியின் பேச்சைக் கேட்டு உங்கள் பெற்றோரை துன்புறுத்தாதீர்கள். அவ்வாறு செய்பவர்களை அல்லாஹ்வும், வானவர்களும் சபிக்கிறார்கள். அவர்களின் வணக்கங்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை என்கிறது ஒரு நபிமொழி.

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ خُلُقًا )  மக்களின் நற்குணம் மிகுந்தவரை நிறைவான இறைநம்பிக்கையாளர் ஆவார். உங்களில் தம் துணைவியரிடம் நற்பண்புகளுடன் நடந்துகொள்பவரே உங்களில் சிறந்தவர் ஆவார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1082, இப்னுமாஜா-1968, முஸ்னது அஹ்மத்

 

ஒரு ஆண்மகன் திருமணம் முடித்த பின்னர் தம் பெற்றோர் மனைவி, உறவினர் ஆகியோரின் உரிமைகளை சரியாக நிறைவேற்ற வேண்டும். "பொண்டாட்டி தாசன்" என்று பிறரிடம் பெயரெடுத்துவிடக் கூடாது. ஏனெனில், "பொண்டாட்டி தாசன்" என்றால் மனைவி சொல்லே மந்திரம் என்றெண்ணி, பெற்றோர் மற்றும் உறவினர்களை மதிக்காமல் இருப்பவனுக்கு சொல்லப்படும் வார்த்தையாகும்.

 

அதுபோல், "அம்மா பிள்ளை" என்றும் பெயரெடுத்துவிடக் கூடாது. ஏனெனில், "அம்மா பிள்ளை" என்றால், அம்மா சொல்வது தவறாகவே இருந்தாலும் அது தான் நியாயம் என்றெண்ணி, மனைவியின் உரிமையை சரியாக நிறைவேற்றாமல், கொத்தடிமை போல் அவளை கொடுமைப்படுத்துவதும், அவளின் உறவினர்களையும் மதிக்காமல் இருப்பவனுக்கு சொல்லப்படும் வார்த்தையாகும். 

 

எல்லா கணவன்மார்களும் தன் மனைவி தனக்கு பயந்து, தன் பேச்சை மதித்து நடக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். இது தவறில்லை. மனைவியின் உரிமையை மார்க்கம் அனுமதித்த வகையில் சரியாக நிறைவேற்றி, அவளின் உறவினருடன் நல்லுறவைப் பேணி நடந்தால் கணவனின் கண் ஜாடைக்கு மனைவி கட்டுப்படுவாள். மனைவி கணவனுக்குரிய உரிமையை சரியாக நிறைவேற்றி, கணவனின் உறவினருடன் நல்லுறவைப் பேணி நடந்தால் மனைவி வார்த்தைக்கு கணவனும் மதிப்பளிப்பான். அப்போது இல்லற வாழ்க்கை இன்பமாகிவிடும்.

 

ஒரு ஆண்மகன் தனது பெற்றோர் மற்றும் மனைவியிடம், "எனது மகன், எங்களிடமும் அவன் மனைவியிடமும் நல்ல முறையில் நடந்து கொள்கிறான்" என்றும், "எனது கணவர் என்னிடமும் அவரது பெற்றோரிடமும் நல்ல முறையில் நடந்து கொள்கிறார்" என்றும் நற்பெயர் எடுக்க வேண்டும்.

 

பிள்ளைகளுக்கு மத்தியில்

 

நுஅமான் பின் பஷீர் ரலி அவர்கள் கூறியதாவது. (நான் சிறுவனாக இருந்தபோது) என்னை என் தந்தை (பஷீர் பின் சஅத் - ரலி) அவர்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, ( إِنِّي نَحَلْتُ ابْنِي هَذَا غُلاَمًا كَانَ لِي ) "நான் என்னுடைய இந்த மகனுக்கு ஓர் அடிமையை அன்பளிப்பாக வழங்கியுள்ளேன்" என்று கூறினார்.

 

அதற்கு நபியவர்கள், ( أَكُلَّ وَلَدِكَ نَحَلْتَهُ مِثْلَ هَذَا ) "உமது பிள்ளைகள் அனைவருக்கும் இதைப் போன்றே அன்பளிப்பு வழங்கியுள்ளீரா?" என்று வினவினார்கள். என் தந்தை, "இல்லை" என்று பதிலளித்தார். நபியவர்கள், ( فَارْجِعْهُ ) "அவ்வாறாயின், அதை (உமது அன்பளிப்பை) திரும்பப் பெற்றுக் கொள்க!" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2586, முஸ்லிம்-3321

 

ஒருவர் தம் பிள்ளைகளுக்கு ஏதேனும் அன்பளிப்பு வழங்குவதாக இருந்தால் அவர்கள் அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும். சிலருக்கு வழங்கி சிலருக்கு வழங்காமல் பாகுபாடு காட்டுவது அநீதமாகும். இதில் ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என்ற இனப் பாகுபாடு கூடாது.

 

பெற்றோர்களில் சிலர் நேர்மையின்றி பிள்ளைகளிடையே ஒருவருக்கு முக்கியத்துவம் அளித்து மற்றொருவரை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இதன் விளைவாக அப்பிள்ளைகளுக்குள் விரோதமும் குரோதமும் அதிகரித்து அவர்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாகி விடுகின்றனர்.

 

சிலர், பிள்ளை தன்னைப் போன்றிருக்கிறான் என்றெண்ணியும், சிலர் ஒரு மனைவியின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளித்து மற்ற மனைவிக்கு பிறந்த பிள்ளைகளை புறக்கணிக்கவும் செய்கின்றனர். ஒரு பிள்ளைக்கு உயர் கல்வியளித்து மற்ற பிள்ளைகளுக்கு அதை மறுப்பார்கள். இவை அனைத்தும் பெற்றோருக்கே கேடாக முடியும். புறக்கணிக்கப்பட்டவர்கள் பெற்றோரின் எதிரியாகி விடுவார்கள்.

 

கல்வி, நோய், கடன், வேலை கிடைக்காதவர், பெரிய குடும்பம் உள்ளவர் இது போன்ற காரணங்கள் உள்ள பிள்ளைகளுக்கு பெற்றோர் கொஞ்சம் கூடுதலாக கொடுக்கலாம். அதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது. அதே நேரத்தில் இவ்வாறான தேவைகள் மற்றும் பிள்ளைகளுக்கு ஏற்பட்டால் அவர்களுக்கும் உதவி செய்வேன் என்று உறுதி பெற்றோரிடம் இருக்க வேண்டும்.

 

ஒரு தந்தை, இந்த மகன் தன்னை மதிக்கவில்லை அல்லது தன்னை கண்ணியமாக பராமரிக்கவில்லை என்பதற்காகவோ, அல்லது தந்தை மகனுக்கு மத்தியில் சண்டை ஏற்பட்டு, நீ என்னுடைய மகனே அல்ல என்று கூறி, அவனுக்கு என் சொத்தில் பாகம் இல்லை என்று உயில் எழுதி வைப்பதும் அல்லது அவனுக்கு மட்டும் குறைவாக கொடுப்பதும் (ஹராம்) தடை செய்யப்பட்ட செயலாகும். இவ்வாறு அநீதமாக உயில் எழுதி வைத்தாலும் அந்த உயில் மார்க்கச் சட்டப்படி செல்லாது. தந்தையின் சொத்தை எல்லா மகன்களுக்கும் சரிசமமாகத்தான் பாகம் பிரித்துக் கொள்ள வேண்டும்.

 

சில இடங்களில் பெரிய அண்ணன்மார்கள் எல்லா சொத்தையும் கைப்பற்றி கொண்டு தந்தை சொத்தில் தனக்கு கூடுதல் அதிகாரம் இருப்பதாக நினைத்துக் கொண்டு தன் விருப்பப்படி செலவழிக்கின்றனர். ஆனால், இரண்டு வயதுள்ள தம்பியாக இருந்தாலும் மார்க்கம் அவனுக்கும் சமபங்கு கொடுத்திருப்பதை மறந்துவிடக்கூடாது.

 

பெண் பிள்ளைகளுக்கு திருமணம் முடித்துக் கொடுக்கும்போது நகை, வரதட்சனை, சீதனம் என தந்தையின் சொத்திலிருந்து நிறைய செலவு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் தந்தையின் சொத்திலிருந்து அவர்களுக்கு பாகம் கொடுக்க முடியாது என்பதும் சரியல்ல. மார்க்கம் கடமையாக்காத வரதட்சனை போன்ற செலவினங்களை காரணம் காட்டி, பெண் பிள்ளைகளுக்கு சொந்தமான சொத்துக்களை கொடுக்க மறுப்பது அநீதமாகும்.

 

தந்தை உயிரோடு இருக்கும்போது ஆண் -  பெண் பிள்ளைகளுக்கு எந்தச் செலவு செய்தாலும் அவை அனைத்தும் அன்பளிப்பாக கருதப்படும். அது பாகப்பிரிவினை அல்ல. தந்தை மரணித்த பிறகு தான் அவர் சொத்தில் மக்களுக்கு மத்தியில் பாகப்பிரிவினை ஏற்படும் என்பது மார்க்கச் சட்டமாகும்.

 

சோம்பேறித்தனம்

 

ஒரு தந்தை சம்பாதிக்கும் வயதும் உடல் பலமும் இருந்தும்கூட சம்பாதிக்க போகாமல் சோம்பேறித்தனத்தால்

 

பிள்ளைகள் படிக்க வேண்டிய வயதில் அவர்களின் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, அவர்களை சம்பாதிக்க அனுப்பி அவர்கள் கொண்டுவரும் வருமானத்தில் உண்டு, உடுத்தி வாழ்வது அநீதமாகும்.

 

பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு காலச் சூழ்நிலைக்குத் தோதுவான கல்வியையும், இஸ்லாமிய கலாச்சாரத்தையும், நல்லொழுக்கத்தையும் கற்றுத் தரவில்லையெனில் பிற்காலத்தில் பிள்ளைகள் அவர்களை உதாசீனப்படுத்தி வீட்டை விட்டு விரட்டும் சூழ்நிலை ஏற்படலாம்.

 

பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு உலகில் பிழைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளில் இஸ்லாமிய நல்லொழுக்கங்களையும் கற்றுத்தர இயலாமல் அவர்களுக்கு அநீதமிழைப்பதைவிட பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளாமல் இருப்பது சிறந்தது.

 

 பலதார மணம் விரும்புவோர்

 

உடல் பலமும், பொருள் வசதியும் உள்ள ஒரு மனிதர் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணந்துகொள்ள இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்கிறது. ஆனால், தம் மனைவியரிடம் மிகவும் நீதி நேர்மையோடு நடந்துகொள்ள இயலாது என்று அஞ்சினால், ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணமுடிப்பது தடை செய்யப்பட்டதாகும் என்று திருக்குர்ஆன் (4:3) கூறுகிறது

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ كَانَتْ لَهُ امْرَأَتَانِ فَمَالَ إِلَى إِحْدَاهُمَا جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَشِقُّهُ مَائِلٌ ) யாருக்கு இரண்டு மனைவிகள் இருந்து ஒருத்தியின் பக்கம் சற்று அதிகமாக சாய்ந்துவிட்டால் (அவர்களில் ஒருத்தியை மட்டும் சற்று மிகுதமாக கவனித்துக்கொள்கிறாரோ) அவர் மறுமை நாளில் தனது ஒரு பக்கம் சாய்ந்தவாறு (விகாரமான தோற்றத்தில்) வருவார் அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-1821, முஸ்னது அஹ்மத்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தம் மனைவியருடன் தங்கும் நாள்களைச் சமமாக பங்கிட்டு வந்தார்கள். மேலும் அவர்கள், ( اللَّهُمَّ هَذِهِ قِسْمَتِي فِيمَا أَمْلِكُ فَلاَ تَلُمْنِي فِيمَا تَمْلِكُ وَلاَ أَمْلِكُ ) "இறைவா! இது என் சக்திக்குட்பட்ட பங்கீடு ஆகும். (இதில் பாரபட்சமின்றி நான் நடந்து கொள்கிறேன்.) என் சக்திக்கு அப்பாற்பட்டதும் உன் கைவசத்தில் உள்ளதுமான விஷயத்தில் (அதாவது, அன்பு செலுத்தும் விஷயத்தில்) என்னை கண்டித்துவிடாதே!"  என்று கூறுவார்கள்.  நூல்:- அபூதாவூத்-1822, திர்மிதீ-1059, நஸாயீ-3882, தாரிமீ-2110, முஸ்னது அஹ்மத்

 

ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணந்து கொண்டிருப்பவர், அவர்கள் மத்தியில் நீதியோடு நடந்து கொள்ள வேண்டும். உணவு, உடை, உறைவிடம், இரவுகளைப் பங்கிடல், தாம்பத்திய உறவு போன்ற விஷயங்களில் மனைவியரைச் சமமாக நடத்த வேண்டும். இந்த அம்சங்கள் மனிதனின் விருப்பத்திற்கும் சக்திக்கும் உட்பட்டவை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. மனதளவில் ஏற்படும் அன்பு, ஈர்ப்பு போன்றவை மனித சக்திக்கு அப்பாற்பட்டவை. இவற்றில் சமமாக நடத்துவதென்பது இயலாத காரியமாகும்.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மனைவியர்கள் விஷயத்தில் இறைவனை மிகவும் பயப்படுவார்கள். தம் மனைவியரில் எவருக்கேனும் அநீதமிழைத்த அதனால் இறை தண்டனைக்கு ஆளாகி  விடுவோமோ என்று அஞ்சுவார்கள். நபியவர்களின் மனம் மற்ற மனைவியரைவிட ஆயிஷா (ரலி) அவர்களைச்  சற்று அதிகம் நேசித்தது. அதனால் குற்றவாளியாகிவிடக்கூடாது என்றெண்ணி இவ்வாறு இறைஞ்சுவார்கள். பலதாரமணம் விரும்புவோர் இந்த நபிமொழியை நினைவில் கொள்ள வேண்டும்.

 

பலதாரமணத்தில் வாழ்பவர் தமது மனைவியரிடையே நீதமாக நடக்காதபோது மறுமை நாளில் இறைவனிடம் கடுமையான தண்டனையை பெறுவார் என்பதில் சந்தேகமில்லை.

 

கணவன், குறிப்பிட்ட ஒரு மனைவிக்கு மட்டும் சில காரணங்களுக்காக கொஞ்சம் கூடுதலாக ஏதேனும் கொடுக்க நாடினாலும் அல்லது அவளிடம் மட்டும் கொஞ்சம் நாள்கள் கூடுதலாக தங்குவதற்கு நாடினாலும் பிற மனைவியரிடம் இதற்கு அனுமதி கோரவேண்டும். அவர்கள் அனுமதி வழங்கினால் மட்டுமே செயல்படலாம்.

 

சம்பாதிக்கும் சமயத்தில்

 

அளவில் மோசடி செய்பவருக்கு கேடு தான். அவர்கள் மக்களிடமிருந்து அளந்து வாங்கும்போது நிறைவாக வாங்கிக்கொள்கின்றனர். ஆனால், மக்களுக்கு அவர்கள் அளந்தோ நிறுத்தோ கொடுக்கும்போது குறைத்து (அவர்களை நஷ்டப்படுத்தி) விடுகின்றனர். திருக்குர்ஆன்:- 83:123

 

இறைநேசர் ஃபுளைல் பின் இயாள் (ரஹ்) அவர்கள் தங்க வியாபாரியாக இருந்தார்கள். ஒருநாள் தன் மகன் ஒரு பவுனை விற்கும்போது அதை நிற்பதற்கு முன் துணியால் துடைத்து பிறகு நிறுத்து கொடுத்தார். துடைக்காமல் இருந்தால் அந்த அழுக்கின் கனம் தங்கத்தின் எடையை அதிகப்படுத்திக் காட்டிவிடும் இது மோசடியாகும். அன்னார் தன் மகனின் இந்த நேர்மையான வணிகத்தை கண்டு பாராட்டியதோடு, "இவ்வாறு நீதமாக வியாபாரம் செய்வது நஃபிலான ஹஜ்ஜைவிட மேலானது" என்றார்கள்.


கொடுக்கிற காசுக்கு தரம் பார்க்கிற நாம் பெறுகிற காசுக்கு தகுதி பார்ப்பதில்லை. நாம் நமக்கு ஒரு மாதிரியும் அடுத்தவர்களுக்கு ஒரு மாதிரியும் எடைக்கற்களை தயாரித்து வைத்திருப்பதும், பொருளை வாங்குவதற்கு ஒரு தராசும் அவற்றை விற்பதற்கு ஒரு தராசும் தயாரித்து வைத்திருப்பது மிகப்பெரிய தண்டிக்கப்பட வேண்டிய பாவம் என்ற எச்சரித்து நிலுவை-அளவையில் மோசடி செய்வதை தடுப்பதில் இஸ்லாம் தனிக்கவனம் செலுத்துகிறது.

 

மேற்காணும் வசனத்தின் எச்சரிக்கை வியாபாரிகளுக்கு மட்டுமல்ல, நுகர்வோருக்கும் பொருந்தும். நாம் கொடுக்கும் பணத்தின் மதிப்புக்கு தகுந்தாற் போல் பொருளின் தரத்தை எதிர்பார்ப்பது குற்றமல்ல. ஆனால், பணத்தின் மதிப்பைவிட பொருளின் தரத்தை அதிகமாக எதிர்பார்ப்பது தவறாகும்.

 

நாம் குறைந்த விலைக்கு மதிப்புமிக்க நிலத்தை வாங்க ஆசைப்படும்போது தான் புறம்போக்கு நிலங்களை வாங்க நேரிடுகிறது. சேதாரமின்றி, செய்கூலியின்றி நகை வாங்க நினைக்கும்போது பித்தளைகளை தங்கமென்று வாங்கி ஏமாறுகிறோம்.

 

நாம் கொடுக்கும் பணம் குறைவு. ஆனால், ஒரு பொருளுக்கு இன்னொரு பொருள் இலவசமாகப் பெற விரும்பும்போது இரண்டும் சீக்கிரம் வீணாகிவிடுகிறது. ஆனால், கடைக்காரன் கலப்படம் செய்து ஏமாற்றிவிட்டான்; போலியை விற்றுவிட்டான் என்று அவனைத் திட்டுகிறோம். மகா தள்ளுபடியில் பல நேரங்கள் நாம் தடுமாறி விழுகிறோம்.

 

நம்முடைய வேலைக்காரர்கள் நம்மிடம் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற முதலாளிகள், வேலைக்காரர்களின் உரிமையை கண்ணியத்துடன் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், அநீதியாகும். வேலைக்கேற்ற ஊதியம் சரியாக கிடைக்க வேண்டும் என்று எண்ணுகிற வேலைக்காரர்கள், வாங்குகிற ஊதியத்திற்கு பணியாற்றுவது அவசியம். வேலை நேரத்தில் வெற்று அரட்டை அடிப்பதும் நேர்மையின்மை ஆகும்.

 

நம் வியர்வை மட்டும் மதிப்பற்றது; மற்றவர்கள் கண்ணீர் கூட மலிவானது என்று திடமாக நம்பும்போது நாம் நேர்மையின்மை நுழைவாயிலில் பிரவேசிக்கிறோம் என்பதை உணர வேண்டும்.

 

பொருளை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் எந்த வகையிலும் நஷ்டம் ஏற்படாமல் நடக்கும் வியாபாரமே நேர்மையானது. இருவரில் எவருக்கும் நஷ்டம் ஏற்பட்டாலும் நேர்மையின்மை நுழைந்துவிட்டது என்றாகிவிடும்.

 

(துணி வியாபாரியான) இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்களிடம் ஒரு பெண் வந்து பட்டுத்துணியை கொடுத்துவிட்டு, "இதை வைத்துக்கொண்டு நூறு வெள்ளிக்காசுகள் தாருங்கள்" என்று கேட்டாள். இமாம் அவர்கள், "இது மிகவும் குறைவு" என்றார்கள். மீண்டும் அந்தப் பெண், "இருநூறு வெள்ளிக்காசுகள் தாருங்கள்" என்றாள். அப்போதும் இமாம் அவர்கள், "இது மிகவும் குறைவு" என்றார்கள். அந்தப் பெண், "முந்நூறு வெள்ளிக்காசுகள் தாருங்கள்" என்றாள். அப்போதும் இமாம் அவர்கள், "இது மிகவும் குறைவு" என்றார்கள். பிறகு அந்தப் பெண், "தாங்கள் வேடிக்கையாக இப்படி பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன்" என்றாள். இறுதியாக, இமாம் அவர்கள், அந்தப் பெண்ணிடம் (அதற்குரிய நியாயமான விலையான) ஐநூறு  வெள்ளிக்காசுகளை கொடுத்துவிட்டு, அந்தத் துணியை வாங்கிக்கொண்டார்கள். நூல்:- சீரத்தே நுஅமான் - அல்லாமா ஷிப்லீ நுஅமானி, தாரீகுல் மதாஹில் இஸ்லாமிய்யா ( تاريخ المذاهب الاسلامية ) முஹம்மத் அபூ ஸஹ்ரா


சில சமயம் விலை மதிப்புள்ள பொருள்களை அவசர நிமித்தமாக குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஒரு மனிதன் உள்ளாக வேண்டியது வரும். அது போன்ற சூழ்நிலையில் வந்தது வரை சுருட்டுவோம் என்ற பாணியில் அவற்றை அடிமாட்டு விலைக்கு வாங்கிக் கொள்ளாமல் அதற்குரிய விலையை கொடுத்து வாங்குவதே நேர்மையாகும்.

 

தீர்ப்பளிக்கும்போது

 

மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்பு கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறு நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான். திருக்குர்ஆன்:- 4:58

 

அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் எகிப்து நாட்டின் கவர்னராக நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒருமுறை இவர்களின் மகன் ஒரு சாதாரண குடிமகனை சாட்டையால் அடித்துவிட்டார். இது சிறிய நிகழ்ச்சியேயானாலும் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. எகிப்தின் கவர்னருடைய மகன் குற்றம் சாட்டப்பட்டு நிற்கிறார். ஜனாதிபதி அவர்கள் சற்றும் சலனமின்றி பாதிக்கப்பட்ட அந்த சாதாரண குடிமகனின் கையில் சாட்டையை கொடுத்து, பழிதீர்த்துக் கொள்ள வகை செய்தார்கள். 


அத்தோடு எகிப்தின் கவர்னரை பார்த்து, ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள், ( مَتَى اسْتَعْبَدْتُمُ النَّاسَ وَقَدْ وَلَدَتْهُمْ أُمَّهَاتُهُمْ أَحْرَارًا ) "அவர்களுடைய தாய்மார்கள் அவர்களை சுதந்திரமானவர்களாக பெற்றெடுத்திருக்க, எப்போதிருந்து நீங்கள் மக்களை அடிமைகளாக கருத ஆரம்பித்தீர்கள்?" என்று கோபமாக கூறி கண்டித்தார்கள். நூல்:- மனாகிப் உமர் (ரலி) அவர்கள் இமாம் இப்னு ஜவ்ஸீ, கன்ஸுல் உம்மால்

 

எல்லா நிலைகளிலும், எல்லா பிரச்சினைகளிலும் குடிமக்கள் அனைவருக்கும் நியாயம் மிக எளிதாக கிடைக்குமாறு நீதி பரிபாலனத்தை நிலை நிறுத்த வேண்டும். ஒரு பாமர மனிதனிலிருந்து உயர் நிலையிலுள்ள ஆட்சியாளர்களை அனைவரையும் சட்டமும் நீதிமன்றங்களும் சமமாக கருத வேண்டும்.

 

தனிப்பட்ட விசேஷ சலுகை யாருக்குமே இருக்கக் கூடாது. தனி மனிதர் மீதுள்ள அன்பும், இனப்பற்றும் இன்னொருவருக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை தடுத்துவிடக்கூடாது. குற்றம் என்றால் யார் செய்தாலும் குற்றமே! கடமையெனில் அனைவரும் நிறைவேற்றியாக வேண்டும்.

 

எல்லா வகையான தலையீடுகளிலிருந்தும் நீதிமன்றங்கள் சுதந்திரமாக இருந்தால்தான் நியாயமான நீதியை வழங்க முடியும். அது மட்டுமல்லாமல் மக்களுடைய உரிமைகளை பறிப்பவர் ஆட்சியாளராக இருந்தாலும் அவர்மீதும் தன்னுடைய அதிகாரத்தை செயல்படுத்துபவராக ஒரு நீதிபதி இருக்க வேண்டும்.

 

நீதிமன்றங்களில்கூட நியாயம் கிடைக்காமல் மனம் வெதும்பிப் போய் நிற்கும் அவல நிலையை இந்திய தேசத்தில் மட்டுமே காண முடியும்.

 

நாம் நம்முடைய தூதர்களை தெளிவான அத்தாட்சிகளைக்கொண்டே அனுப்பி வைத்தோம். அத்துடன் அவர்களுக்கு வேதத்தையும் கொடுத்தோம். மனிதர்கள் நீதமாக நடந்து கொள்ளும் பொருட்டு (நீதியின்) தராசையும் கொடுத்தோம் திருக்குர்ஆன்:- 57:25

 

தராசை நீதியைக் குறிக்கும் சின்னமாக அனைத்து நாட்டவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். நீதிமன்றங்களில் தராசின் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதையும் காண்கிறோம். யார் நிறுக்கிறார்கள்? என்ன பொருள்கள் நிறுத்தப்படுகின்றன? என்று பாராது. இரும்பை ஒரு தட்டிலும் அதே நிறைக்கு தங்கத்தை மற்றொரு தட்டிலும் வைத்து நிறுத்தாலும் சரி, அப்பொருள்களை சம எடையாக காட்டுமே தவிர இரும்பு, தங்கம் என்று தராசு வேற்றுமை காட்டுவதில்லை. எனவே, அதுதான் நீதியின் சின்னமாக ஏற்றுக் கொள்ள தகுதியுடையது.

 

இக்காரணங்களால் தான் மக்கள் அனைவரும் எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய ஓர் உதாரணத்தின் மூலம் எல்லா இறைத்தூதர்களையும் தராசு (மீஸான்) கொடுத்து அனுப்பியுள்ளோம் என்ற இறைவன் அறிவிக்கிறான்.

 

நீதி வழங்குதல் என்பது மனிதனின் உரிமையை, உடமையைக் காப்பது மட்டுமல்ல. அவனைக் கொடுமை செய்வோரிடமிருந்து காப்பதும் நீதி பரிபாலனமாகும்.

 

நாம்தான் வழிக்காட்டி

 

ஒருமுறை ஜனாதிபதி அலீ (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, "ஜனாதிபதி அவர்களே! உங்கள் ஆட்சியில் தான் நாட்டில் குழப்பங்கள் அதிகமாக நிகழ்கிறது. உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில்  குழப்பமே இல்லாமல் நாடு அமைதியாக இருந்தது" என்று அலீ (ரலி) அவர்களின் ஆட்சி குறித்து குறை கூறினார்.

 

அப்போது அலீ (ரலி) அவர்கள், "உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் ஆளப்படும் குடிமக்களாக என்னைப் போன்றவர்கள் இருந்தனர். ஆனால், நான் ஆட்சி செய்யும்போது ஆளப்படும் குடிமக்களாக உன்னை போன்றவர்கள் அல்லவா இருக்கின்றனர்?" என்று கூறினார்கள்.

 

உமர் (ரலி) அவர்களைப் போன்ற நீதமான ஆட்சியாளரைக் காண விரும்புகின்றவர்கள் முதலில் உஸ்மான் (ரலி), அலீ (ரலி), தல்ஹா (ரலி), ஸுபைர் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகியோரைப் போன்று அரசுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடக்கக்கூடிய சிறந்த குடிமக்களாக இருக்க வேண்டும். நாம் நீதி நேர்மையை வாழ்க்கையின் நெறிமுறைகளாக கடைப்பிடித்து சிறந்த குடிமக்களாக இல்லாமல், ஆட்சியாளர்கள் அதிகாரிகளிடம் மட்டும் ஒருதலைபட்சமாக இதனை எதிர்பார்ப்பது அறிவுடைமை ஆகாது.

 

குழப்பமும் பஞ்சமுமின்றி ஒரு நாடு அமைதிப் பூங்காவாகவும், செழிப்பாகவும் இருக்க வேண்டுமென்றால் அந்நாட்டை ஆள்பவர்களும், ஆளப்படுபவர்களும் நீதி நேர்மையை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அலீ (ரலி) அவர்களின் கருத்து.

 

நமது தேசத்தந்தை காந்தி அவர்கள், இந்திய தேசம் முன்னேற வேண்டும் என இஸ்லாமிய இரண்டாம் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களைப் போன்று நமது நாட்டின் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நீதி நேர்மையோடு நடந்து கொள்ள வேண்டும்" என்று கூறினார். நாமும் அதைத்தான் எதிர்பார்க்கிறோம். இது சிறந்த எண்ணம் தான். ஆனால், நாம் எப்படி இருப்போமோ அப்படித்தான் நமது ஆட்சியாளர்களும் இருப்பார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

 

நீதி நேர்மையில் அரசாங்க நீதி நேர்மை, தனியார் நீதி நேர்மை என்ற பாகுபாடு கிடையாது. அது ஒரு சமூகத்தின் தூய வாழ்க்கை நெறி. அரசாங்கம் மட்டுமே நீதி நேர்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற சமுதாயம் முன்னேற முடியாது.

 

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சேர்ந்து ஊழலில் ஈடுபடுகிறார்கள் என்று நாம் அவர்களை குறை கூறுகிறோம். ஆனால், அவர்கள் அந்தத் தவறைச் செய்வதற்கு குடிமக்களாகிய நாம் தான் காரணம் என்று உணர்வதில்லை. தன் தகுதிக்கு மிஞ்சிய ஒரு பதவியைப் பெறுவதற்காகவோ, அடுத்தவரின் உரிமையை அடைவதற்காகவோ தான் இலஞ்சம் கொடுப்பவன் கொடுக்கிறான். இலஞ்சம் கொடுப்பவர்களே இல்லையெனில் இலஞ்சம் வாங்குபவர்கள் எங்கிருந்து உருவாகுவார்கள்?

 

அரசியல்வாதிகள் மக்கள் வரிப்பணத்தை மக்கள் நலனுக்கு செலவு செய்வதைவிட விழாக்கள் பெயரில் தன் பெயரையும் புகழையும் தக்க வைத்துக் கொள்வதற்கு அதிகமாக செலவழித்து வீண்விரயம் செய்கின்றனர் என்று அவர்களை குறை கூறுகிறோம். ஆனால், நாமும் அதைத்தான் செய்கிறோம். நமது வீட்டில் நடைபெறும் திருமணம், (கத்னா எனும்) சுன்னத் கல்யாணம், பெண் குழந்தைக்கு சடங்கு, காது குத்து போன்ற வீட்டு விசேஷங்களில் பல்லாயிரம் ரூபாய் வீண்விரயம் செய்கிறோம். வெறும் பெயருக்காகவும் புகழுக்காகவும் வீணடிக்கும் செல்வங்களை நற்காரியத்திற்கும், ஏழைகளின் நல்வாழ்வுக்கு செலவழித்தால் எவ்வளவு பயனாகும். நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அதை ஏழைகளுக்கும் பங்கு உண்டு என்கிறது இஸ்லாம். ஆட்சியாளர்களின் தவறான காரியங்களுக்கு நாம்தான் வழிகாட்டி என்று என்றாவது சிந்தித்தோமா?


(தற்போதைய அரசு, சிறுபான்மையினரை பல வகையிலும் வஞ்சிக்கிறது. அது தவறுதான் என்பதை மறுக்க முடியாது. ஆனால், குடிமக்களாகிய நாம் நமது மனைவியர் முதல் உறவினர், பணியாளர்கள், நமக்கு கீழே பணிபுரிபவர்கள்,  மாணவர்கள் என நமக்கு கீழே இருப்பவர்களை வஞ்சிப்பது தவறாகவே தெரிவதில்லை ஏன்?


ஓட்டு திருட்டு என்பது அநியாயம் தான். அது, கண்டிப்பாக  கண்டிக்கப்பட வேண்டிய குற்றம்தான். ஆனால், குடிமக்களாகிய நாம் அந்த ஓட்டுக்கு பணமும் இன்னபிற பொருள்களையும் இலஞ்சமாக வாங்குகின்றோமே அது எந்த வகையில் நியாயமாகும்?)

 

நல்ல சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படுவது

 

அரசாங்கம் மக்கள் பாதிப்பிற்கு ஆளாகும்படியான தவறான சட்டங்களை கொண்டு வரும்போது அந்தச் சட்டங்களை நீக்குவதற்காக அரசுக்கு எதிராக கோஷங்கள், ஆர்ப்பாட்டம், பேரணி, கடையடைப்பு, சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு, எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். அதுபோல், மக்கள் நலன் கருதி அரசு பல சட்ட திட்டங்களை கொண்டு வரும்போது மக்கள் அதை ஆதரித்து அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

 

நிலத்தடி நீரை பாதுகாத்து தண்ணீர் பஞ்சத்தை தவிர்க்க மழை நீர் சேமிப்புத்திட்டம் என்றும், சாலை விபத்தை தவிர்ப்பதற்காக சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்பவர் சீட்டு பெல்ட் போட வேண்டும் என்றும் சட்டம் கொண்டு வந்து, இதில் தவறிழைப்போர் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவிக்கிறது.

 

ஆனால், இது போன்ற அரசின் நல்ல சட்டதிட்டங்களை எத்தனை பேர் கடைப்பிடிக்கிறார்கள்? நமது நாட்டில் சாலை விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காததால் ஆண்டுக்கு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிறது. அரசுக்கு வந்து சேர வேண்டிய நாட்டின் முதுகெலும்பாக திகழும் வரிப்பணம் ஒரு நாளைக்கு பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் ஆட்சியாளர்களின் நேர்மையின்மையால் நமது நாட்டில் எல்லா வளமும் இருந்தும் நாடு முன்னேற்ற பாதையில் செல்ல முடியாமல் திணறுகிறது.

 

மேலை நாடுகளில் கைகுட்டை அளவுள்ள தீவு போன்ற குட்டி நாடுகளெல்லாம் குறுகிய காலத்திற்குள் பெரும் வல்லரசாக திகழ்ந்திருப்பதற்கு காரணம், அங்கே அரசுடைய நல்ல சட்ட திட்டங்களுக்கு அந்நாட்டு மக்கள் முழுமையாக கட்டுப்படுகிறார்கள். அங்கு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது மக்கள் நலனுக்காக பாடுபடுகிறது.

 

அரசு கொண்டுவரும் நல்ல சட்ட திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுத்து அதை செயல்படுத்தாதவரை நாடும் நாட்டு மக்களும் முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது. எதிர்வரும் காலத்தில் இந்தியா வல்லரசாக ஆகிவிடும் என்று பகல் கனவு கண்டால் மட்டும் போதாது. அதற்குண்டான பணிகளில் அரசும், மக்களும் நீதி நேர்மையுடன் ஈடுபட வேண்டும். நீதி நேர்மை என்றால் என்னவென்றே அறியாத நாட்டினர் வளம் காண இயலாது.

 

நமது வாழ்க்கையின் அனைத்து கட்டத்திலும் நீதி நேர்மையைப் பேணி வாழும் நன்மக்களாக அல்லாஹுத்தஆலா நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்!

 

(இந்தக் கட்டுரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

 

No comments:

Post a Comment

குறைகளை ஏற்றுக்கொள்வோம்

  குறைகளை ஏற்றுக்கொள்வோம்   وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ قَالَ فَعَلْتُهَا إِذًا وَأَنَا مِنَ الضّ...