அக்கம் பக்கம்
وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا
وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ
وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ
தாய், தந்தைக்கு நன்மை செய்யுங்கள்.
(அவ்வாறே) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும்,
ஏழைகளுக்கும், பக்கத்து வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், உறவினர் அல்லாத பக்கத்து வீட்டாருக்கும்,
(பயணத்தில் அல்லது அலுவலகத்தில்)
பக்கத்திலிருக்கும் நண்பர்களுக்கும் (அன்புடன் நன்மை செய்யுங்கள்). திருக்குர்ஆன்:-
4:36
அக்கம் பக்கத்தினரின் சுகத் துக்கங்களில் மனிதநேயத்துடன் பங்கெடுத்த
காலமெல்லாம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டே வருகிறது. இன்றைய பரபரப்பான
நகர வாழ்க்கையில் பக்கத்து வீட்டாரை பற்றி கவலைப்பட மனிதனுக்கு அவகாசம் இல்லை. தனது
பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் யார்? அவர் ஊர் எது? என்பதை பற்றிக்கூட
தெரியாத நிலையில் தான் இன்றைய நகரவாசிகள் பட்டும் படாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
கட்டுக்கோப்பு மிக்க கிராம வாழ்க்கையில் ஒவ்வொரு வீட்டினரும்
தம் பக்கத்து வீட்டாரை பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். அவர்களின் இன்ப துன்பங்களில்
ஓடோடி சென்று பங்கு கொள்வார்கள். ஆனால், இன்றைக்கு கிராமப்புறங்களிலும் இதுபோன்ற நன்னடத்தைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டு வருகிறது.
பக்கத்து வீட்டாரின் மதிப்பும் மரியாதையும் மிகப்பெரியது என்றும்,
அவர்களுக்குரிய சேவை மிக அதிகமானது என்றும் இஸ்லாம்
வலியுறுத்துகிறது.
உலகில் வாழும் நிலையில் பக்கத்து வீட்டார் தான் நமது முதல் சொந்தம்.
எந்த நன்மைக்கும் நஷ்டத்திற்கும் முதலில் வந்து நிற்பவர்கள் அவர்கள் தான். நமது அந்தரங்க
செயல்பாடுகளை நமது உறவினரிடம் மறைத்து விடலாம். ஆனால், பக்கத்து வீட்டாரிடம் மறைப்பது அவ்வளவு எளிதல்ல. இதனால் பிரச்சனைகளும்
மற்றவர்களைவிட பக்கத்து வீட்டாரால்தான் அதிகம் ஏற்படுகின்றன. பக்கத்து வீட்டாருடன்
நாம் பாசமாக இருந்தால் நமது வாழ்க்கை சொர்க்கம் ஆகிவிடும்.
ஒரு பயணத்தில் இரு தோழர்கள், ஒரு கல்வி அறையில் இரு மாணவர்கள், ஒரு தொழிற்சாலையில் அல்லது கடையில் பணிபுரியும் இரு ஊழியர்கள்
என இவர்கள் அனைவரும் பக்கத்து வீட்டாருக்குரிய உரிமையை பெற்றவர்கள். தோழர்கள்,
மாணவர்கள், ஊழியர்கள் என பெயரிட்டு அழைத்தாலும் பக்கத்து வீட்டாருக்கான
அடிப்படை உரிமைகள் பெற்றவர்கள் இவர்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ
جَارَهُ ) அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர்
தம் பக்கத்து வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும். அறிவிப்பாளர்:- அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி)
அவர்கள் நூல்:- புகாரீ- 6019, முஸ்லிம்-77
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( فَأَمَّا الَّذِي لَهُ حَقٌّ وَاحِدٌ فَجَارٌ مُشْرِكٌ لَا رَحمَ
لَهُ، لَهُ حَقُّ الجَوار. وأمَّا الَّذِي لَهُ حقانِ فَجَارٌ مُسْلِمٌ، لَهُ
حَقُّ الْإِسْلَامِ وَحَقُّ الْجِوارِ، وأَمَّا الَّذِي لَهُ ثَلاثةُ حُقُوقٍ،
فَجَارٌ مُسْلِمٌ ذُو رَحِمٍ لَهُ حَقُّ الْجِوَارِ وَحَقُّ الْإِسْلَامِ وحَقُّ
الرحِمِ ) ஒரேயொரு உரிமை பெற்றவர், உறவினரல்லாத இணைவைப்பாளரான பக்கத்து வீட்டார் ஆவார். இவருக்கு பக்கத்து வீட்டாருக்குரிய
உரிமை மட்டுமே உண்டு. இரண்டு உரிமைகளை பெற்றவர், உறவினரல்லாத முஸ்லிமான பக்கத்து
வீட்டார் ஆவார். இவருக்கு இஸ்லாமிய மார்க்கம் சார்ந்த உரிமை, பக்கத்து வீட்டுக்குரிய உரிமை ஆகிய இரண்டு உரிமைகள் உண்டு. மூன்று உரிமைகளை பெற்றவர், உறவினரான முஸ்லிமான பக்கத்து வீட்டார், இவருக்கு பக்கத்து வீட்டாருக்குரிய
உரிமை, இஸ்லாமிய மார்க்கம் சார்ந்த உரிமை, உறவினர் என்ற உரிமை ஆகிய மூன்று வகையான உரிமைகள் உண்டு. அறிவிப்பாளர்:- ஜாபிர்
பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, முஸ்னது அல்பஸ்ஸார், தஃப்சீர் இப்னு கஸீர்
சிறந்தவர்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وخَيْرُ الجِيرانِ عِنْدَ اللهِ خَيْرُهُمْ لِجَارِهِ ) தம் பக்கத்து வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்பவரே அல்லாஹ்விடம் அண்டை
வீட்டார்களில் சிறந்தவர் ஆவார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள்
நூல்:- திர்மிதீ-1867, முஸ்னது அஹ்மத்,
தாரிமீ
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம்
(ஸல்) அவர்களிடம் ஒருவர், ( كَيْفَ لِي أَنْ أَعْلَمَ إِذَا أَحْسَنْتُ وَإِذَا أَسَأْتُ ) "நான் நன்மை செய்தால்
(அல்லது) தீமை செய்தால் அதனை எப்படி தெரிந்துகொள்வேன்?" என்று வினவினார்.
அதற்கு நபியவர்கள், ( إِذَا سَمِعْتَ جِيرَانَكَ يَقُولُونَ
قَدْ أَحْسَنْتَ فَقَدْ أَحْسَنْتَ وَإِذَا سَمِعْتَهُمْ يَقُولُونَ قَدْ أَسَأْتَ
فَقَدْ أَسَأْتَ ) "நீர் நன்மை செய்தீர் என்று உம்முடைய பக்கத்து வீட்டார் கூறுவதை
நீ செவியுற்றால் நீர் நன்மை செய்துள்ளதாக கருதிக்கொள்வீர். நீர் தீமை செய்துவிட்டீர்
என்று அவர்கள் கூறுவதை நீ செவியுற்றால் நீர் தீமை செய்துள்ளதாகவே கருதிக்கொள்வீர்"
என்று பதிலளித்தார்கள் நூல்:- இப்னுமாஜா-4213, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக், முஸ்னது அஹ்மத், இப்னு ஹிப்பான், தப்ரானீ, அல்ஹுல்யா
இமாம் அபூநஈம், ஷரஹுஸ் ஸுன்னா இமாம் பஙவீ
ஒரு மனிதனுடைய இயல்பு எப்படிப்பட்டது என்பதை அவனது பக்கத்து
வீட்டார் ஓரளவு அறிந்து வைத்திருப்பார். இரவும் பகலும் அவனுடைய நடமாட்டங்களை தெரிந்து
கொள்வதற்கான வாய்ப்பு பக்கத்து வீட்டாருக்கு அதிகம் இருக்கிறது. முஸ்லிமுமோ அல்லது
பிற சகோதர சமயத்தவர்களோ எவராக இருப்பினும் ஒருவர் நல்லவரா, கெட்டவரா என்பதை அறிவதற்கு வேறு யாரிடத்திலும் கேட்டு தெரிந்து
கொள்வதைவிட பக்கத்து வீட்டாரிடம் விசாரித்து பார்த்தால் உண்மை புலப்படும்.
அவரவர் சக்திக்கேற்ப
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا زَالَ جِبْرِيلُ يُوصِينِي بِالْجَارِ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ
سَيُوَرِّثُهُ ) பக்கத்து வீட்டார் (நலனில் அக்கறை கொள்வது) குறித்து
என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அறிவுறுத்திக்கொண்டே இருந்தார். எந்த அளவுக்கென்றால், (எங்கே) பக்கத்து வீட்டாரை எனக்கு (எனது சொத்தில்) வாரிசாக்கி விடுவாரோ என்று நான்
எண்ணும் அளவிற்கு. நூல்:- புகாரீ-6015, முஸ்லிம்-5119, திர்மிதீ-1865
முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் பேராசான்
பெருமானார் (ஸல்) அவர்களிடம், ( يَا رَسُولَ اللَّهِ مَا حَقُّ جَارِي عَلَيَّ ؟ ) "பக்கத்து வீட்டாரின்
உரிமை என்மீது எவ்வளவு?" என்று வினவினேன்.
அதற்கு நபியவர்கள், ( إِنْ مَرِضَ عُدْتَهُ ، وَإِنْ مَاتَ شَيَّعْتَهُ ، وَإِنِ
اسْتَقْرَضَكَ أَقْرَضْتَهُ ، وَإِنْ أَعْوَزَ سَتَرْتَهُ ، وَإِنْ أَصَابَهُ
خَيْرٌ هَنَّأْتَهُ ، وَإِنْ أَصَابَتْهُ مُصِيبَةٌ عَزَّيْتَهُ ، وَلَا تَرْفَعْ
بِنَاءَكَ فَوْقَ بِنَائِهِ فَتَسُدَّ عَلَيْهِ الرِّيحَ ، ) "பக்கத்து வீட்டார் நோயற்றால் அவரிடம் சென்று நலம் விசாரிக்க
வேண்டும்; அவர் இறந்தால் அவரது
நல்லடக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்; அவர் உன்னிடம் கடன் கேட்டால் அவருக்கு கடன் கொடுத்து உதவ வேண்டும்; அவர் தவறு செய்தால் (அதை பகிரங்கப்படுத்தி அவமானத்தை
உண்டாக்காமல்) அதை மறைக்கவேண்டும்; அவரது மகிழ்ச்சியில் பங்கு கொண்டு வாழ்த்து கூற வேண்டும்; அவரது துயரத்தை பகிர்ந்துகொண்டு தேற்றவேண்டும்;
அவருக்கு காற்று வராமல் தடை ஏற்படும்படி உமது கட்டிடத்தை
அவரது கட்டிடத்தைவிட உயர்த்தி கட்டக் கூடாது" என்று பதிலளித்தார்கள். நூல்:-
ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, தஹ்தீபுல் கமால்,
மஜ்மஉஸ் ஸவாயித், தஃப்சீர் குர்துபீ, ஹயாத்துஸ் ஸஹாபா 2/635
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மார்க்க அறிஞர்களுக்கு
என்ன ஆனது? அவர்கள் தங்கள் பக்கத்து
வீட்டாருக்கு நல்லதை செய்யும்படியும், தீமையை விட்டு விலகி இருக்கும்படியும் அறிவுரை கூறக்கூடாதா? நூல்:- முஸ்னது இஸ்ஹாக்
பக்கத்து வீட்டாரை நேசிப்பவரை அல்லாஹ் நேசிப்பான் என்றும்,
பக்கத்து வீட்டாருடன் சண்டையிடுபவரின் வணக்க வழிபாடுகள்
ஒப்புக்கொள்ளப்படாது என்றெல்லாம் பல நபிமொழிகள் கூறுகின்றது.
அவரவர் சக்திக்கேற்ப பக்கத்து வீட்டாருக்கு நன்மை புரிந்திட
வேண்டும். அன்பளிப்பு வழங்குதல், முகமன் (சலாம்) கூறல்,
சந்திக்கும்போது முகம் மலர்தல், இன்ப துன்பங்களில் பங்கெடுத்தல், வேண்டிய உதவிகளை செய்தல், நன்மைகள் குறித்து ஆர்வமும் தீமைகளை குறித்து எச்சரிக்கையும்
செய்தல், குறைந்தபட்சம் தொல்லை தராமல்
இருத்தல் உள்ளிட்ட நன்மைகளை செய்திட வேண்டும்.
முஸ்லிமல்லாதவராக இருந்தால், அவரிடம் இஸ்லாம் பற்றி எடுத்துரைத்து, அதன் நற்போதனைகளை விளக்கிக் கூறிட வேண்டும்.
தீயவராக இருந்தால், அவருடைய குற்றங்குறைகளை பலரிடம் சொல்லிக் கொண்டிருக்காமல், பக்குவமாக அவரிடமே எடுத்துச்சொல்லி அவரை திருத்த
முயற்சிக்க வேண்டும்.
அன்பளிப்பு
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يَا نِسَاءَ الْمُسْلِمَاتِ لاَ تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا
وَلَوْ فِرْسِنَ شَاةٍ ) பெண்களே! எந்த பக்கத்து வீட்டு பெண்ணாவது உங்களுக்கு
ஓர் ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) வழங்கினாலும், அதை அற்பமாக கருத வேண்டாம். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி)
அவர்கள் நூல்:- புகாரீ-6017, முஸ்லிம்-1868
தன்னுடையதை உயர்வானதாகவும் பிறருடையதை தாழ்வானதாகவும் பேசுவது
மனித இயல்பு என்றாலும், அது பெரும் தவறாகும்.
ஏழைகள் தாங்கள் உயர்வாக கருதும் ஒரு பொருளை பக்கத்து வீட்டாரான செல்வந்தருக்கு பிரியத்துடன்
கொடுக்கும்போது, அவர் அந்த அன்பளிப்பை
துச்சமாக கருதி குப்பைத் தொட்டியில் வீசி ஏழைகளை அவமதிப்பது மாபெரும் தவறு. இவ்வாறு
பிறர் மனதை புண்படுத்துவது இஸ்லாம் அறவே விரும்புவதில்லை.
பக்கத்து வீட்டார் அனுப்பிய அன்பளிப்பு எவ்வளவு சிறியதாக இருந்தாலும்
அதை மறுக்காமல் பெற்றுக் கொள்வது சிறந்த பண்பாகும்.
தன் பக்கத்து வீட்டாருக்கு அற்பமான பொருள்களையெல்லாம் அன்பளிப்பு
வழங்கக் கூடாது. மதிப்பு வாய்ந்த பெரிய பொருள்களையே அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்பது
பெண்களின் பொதுவான மனப்பான்மையாகும்.
அதாவது, பயனற்ற ஆட்டின் கால்குளம்பு தானே இதை எவ்வாறு பக்கத்து வீட்டாருக்கு கொடுப்பது எனக் கருதி விடாமல்,
சிறிய அன்பளிப்பையேனும் கொடுத்து பக்கத்து வீட்டாருடன்
நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இதைப் போன்ற ஆட்டின் கால்குளம்பு தானே! இது என்ன பிரமாதம்!
இருந்திருந்தும் இதை போய் அன்பளிப்பு செய்திருக்கிறார்களே! என்று அற்மாக கருதிவிடாமல்
பக்கத்து வீட்டார் பிரியதோடு வழங்கும் சிறிய அன்பளிப்பைக்கூட ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எவ்வளவு சாதாரண பொருளாக இருந்தாலும் கொடுப்பவரும் வாங்குபவரும்
இன்முகத்துடன் பரிமாறிக்கொள்ள வேண்டும். பக்கத்து வீட்டோடு உள்ள உறவை பராமரிப்பதில்
ஆண்களைவிட பெண்கள் ஆற்றுகின்ற பங்கே அதிகமாகும். இதனால் தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்
பெண்களுக்கு பிரத்தியேகமாக கட்டளையிட்டுள்ளார்கள்.
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், ( وَاللَّهِ لاَ
يُؤْمِنُ الَّذِي لاَ يَأْمَنُ جَارُهُ بَوَايِقَهُ ) "அல்லாஹ்வின் மீதாணையாக!
எவனுடைய நாச வேலைகளிலிருந்து அவனுடைய பக்கத்து வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவன்
இறைநம்பிக்கையாளன் அல்லன்" என்று மூன்று முறை கூறினார்கள். நூல்:- புகாரீ-6016
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களிடம்,
( يا رَسُولَ اللَّهِ، إنَّ فُلانَةً تَصُومُ النَّهارَ وتُصَلِّي
اللَّيْلَ وفي لِسانِها شَيْءٌ يُؤْذِي جِيرانَها أيْ هي سَلِيطَةٌ ) "நாயகமே! இன்ன பெண் ஒருவள் பகலில் நோன்பு நோற்கிறாள்; இரவில் நின்று வணங்குகிறாள். ஆனால், அவளுடைய நாவால் அவளுடைய பக்கத்து வீட்டாரை காயப்படுத்துகிறாள். அதாவது,
அவள் (ஏசிபேசும்) கூர்மையான நாவு உடையவள். (எனவே,
இவளின் நிலை என்ன?)" என்று வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள்,
( لا خَيْرَ فِيها، هي في النّارِ ) "அவளிடம் எந்த நன்மையும் இல்லை; அவள் நரகத்தில் இருப்பாள்" என்று பதிலளித்தார்கள்.
நூல்:- முஸ்னது அஹ்மத், அல்பஸ்ஸார்,
இப்னு ஹிப்பான், தஃப்சீர் ராஸீ இமாம் ஃபக்ருத்தீன் ராஸீ
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு போருக்கு
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது நபியவர்கள், ( لَا يَصْحَبْنَا الْيَوْمَ مَنْ أَذٰى جَارَهُ
) "தம்முடைய பக்கத்து வீட்டாருக்கு
நோவினை செய்தவர் யாரும் நம்முடன் வர வேண்டாம்" என்று கூறினார்கள். உடனே அவர்களில்
உள்ள ஒருவர், ( أَنَا بُلْتُ فِي أَصْلِ
حَائِطِ جَارِي ) "(நாயகமே!) நான் என் பக்கத்து வீட்டாரின் சுவற்றின் அடிப்பகுதியில் சிறுநீர் கழித்தேன்"
என்று கூறினார். நபியவர்கள், ( لَا تَصْحَبْنَا الْيَوْمَ ) "இன்றைய தினத்தில் எங்களுடன் சேர்ந்து நீர் (போருக்கு) வர வேண்டாம்"
என்று கூறினார்கள். நூல்:- தப்ரானீ, மஜ்மஉஸ் ஸவாயித், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2, பக்கம்-636
நம்முடைய பக்கத்து வீட்டார் நம்மை குறித்து "இவரிடமிருந்து
தமக்கு எந்தத் தொல்லையும் ஏற்படாது" என்றெண்ணி, அவர் அமைதிகொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் இறைநம்பிக்கையாளராக
ஆவோம். பக்கத்து வீட்டாருக்கு துன்பமிழைப்பது இறைநம்பிக்கைக்கு முரணான செயலாகும் என்கிறது
மேற்காணும் நபிமொழி.
ஒருவர் பெரும் வணக்கசாலியாக இருந்தபோதும், அவர் தமது பக்கத்து வீட்டாருக்கு நோவினை செய்பவராக
இருந்தால், அவருடைய வணக்க வழிபாடுகள்
அவருக்கு போதிய பலனை தராது. மாறாக, அவர் நரகம் செல்வதற்கு
அவரின் செயல்பாடுகளே காரணமாக அமைந்து விடலாம் என்கிறது மேற்காணும் நபிமொழி.
பகிர்ந்தல் வேண்டும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து,
"நாயகமே! எனக்கு அணிவதற்கு
ஆடை கொடுங்கள்" என்று கேட்டார். நபியவர்கள் அவரைக் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள்.
மீண்டும் அவ்வாறே அம்மனிதர் கேட்டார். அப்போது நபியவர்கள், "இரண்டு ஆடைகளுக்கு மேல் மிச்சமாக வைத்திருக்கும்
பக்கத்து வீட்டார் ஒருவர்கூட உனக்கு இல்லையா?" என்று கேட்டார்கள். அவர், "ஏன் இல்லை? பலர் இருக்கின்றனர்"
என்று கூறினார். நபியவர்கள், "அப்படியெனில் சொர்க்கத்தில்
உன்னையும் உமது பக்கத்து வீட்டாரையும் அல்லாஹ் ஒன்று சேர்க்க மாட்டான்" என்று
கூறினார்கள். நூல்:- தப்ரானீ
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது. (என்னிடம்) அருமை நாயகம்
(ஸல்) அவர்கள், ( يَا أَبَا ذَرٍّ ، إِذَا طَبَخْتَ مَرَقَةً ، فَأكثِرْ مَاءهَا
وَتَعَاهَدْ جيرَانَكَ ) "அபூதர்! நீர் குழம்பு சமைத்தால் அதில் அதிகமாக தண்ணீரைச்
சேர்த்துக்கொண்டு அதன்மூலம் உன்னுடைய பக்கத்து வீட்டாரையும் கவனித்துக்கொள்வீராக"
என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-5120, அல்அதபுல் முஃப்ரத்-114
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَيْسَ المُؤْمِنُ الَّذِي يَشْبَعُ وجارُهُ جائِعٌ ) தம் பக்கத்து வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்பவர் உண்மையான இறைநம்பிக்கையாளராக இருக்க
முடியாது. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-112, அபூயஅலா, ஹாகிம், தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்
பகிர்தலை வாழ்வின் அனைத்து நிலையிலும் ஜனரஞ்சகப்படுத்தியுள்ளது.
இருப்பதை இல்லாதவருடன் பகிர்தலை கடமையும் சட்டமும் ஆக்கியது இஸ்லாம்.
ஒருவர் தனது இல்லத்தில் சமைக்கிறபோது பக்கத்து வீட்டாரையும்
கவனத்தில் கொள்ள வேண்டும். பக்கத்து வீட்டாருக்கு பசியாற வழியில்லை என்றால்,
அவர்களுக்கும் சேர்த்து நாம் சமைக்க வேண்டும். சரி,
இருப்பது நமக்கே போதாது என்றால், அவ்வுணவில் சற்று தண்ணீரையாவது அதிகம் சேர்த்து
பக்கத்து வீட்டாருக்கு வழங்கும்படி சமைக்க வேண்டும். இதுவே இஸ்லாம் கூறும் அறிவுரையாகும்.
அனுசரிப்பு தேவை
அபூஜஅஃபர் முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. சமுரா
பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் அவர்களுக்குச் சொந்தமான பேரீச்ச மரங்கள் சில, ஓர் அன்சாரித் தோழருக்குரிய தோட்டத்தில் இருந்தன.
அந்த அன்சாரியுடன் அவருடைய குடும்பத்தினரும் தங்கி இருந்தனர். இந்நிலையில் சமுரா (ரலி)
அவர்கள் அந்த அன்சாரியின் தோட்டத்திற்குள் நுழை(ந்து அங்கிருக்கும் தம் மரங்களை பார்வையிடு)வார்.
இது அந்த அன்சாரித் தோழருக்கு இடையூறையும் சிரமத்தையும் அளித்தது.
எனவே, அந்த அன்சாரித் தோழர் அதை
தமக்கு விற்கும்படி சமுரா (ரலி) அவர்களிடம் கேட்டுக் கொண்டார். ஆனால், அவர் மறுத்துவிட்டார். அதற்குப் பதிலாக தமக்குச்
சொந்தமான வேறொரு மரங்களை வாங்கிக் கொள்ளுமாறு அன்சாரி தோழர் கேட்டுக் கொண்டார். அதற்கும்
அவர் மறுத்துவிட, அந்த அன்சாரித் தோழர்
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததை தெரிவித்தார்.
அப்போது நபியவர்கள் சமுரா (ரலி) அவர்களிடம் அதை அவருக்கு விற்று
விடும்படி கூறினார்கள். அதற்கு அவர் மறுத்துவிட்டார். பின்னர் அதற்குப் பகரமாக வேறொரு
இடத்தில் உள்ள மரங்களை வாங்கிக் கொள்ளுமாறு கூறினார்கள். அதற்கும் அவர் மறுத்துவிட்டார்.
(இறுதியாக) நபியவர்கள், ( فَهَبْهُ لَهُ وَلَكَ
كَذَا وَكَذَا ) "அதை அன்பளிப்பாக அந்த அன்சாரிக்கு கொடுத்து விடுங்கள். உங்களுக்கு இன்னின்ன நன்மைகள்
(மறுமையில்) கிடைக்கும்" என்று கூறி, அவரை ஆர்வமூட்டினார்கள். சமுரா (ரலி) அவர்கள் அப்போதும் மறுத்துவிட்டார். (உடனே)
நபியவர்கள், ( أَنْتَ مُضَارٌّ
) "நீர் இடையூறு அளிப்பவராகிவிட்டீர்"
என்று கூறிவிட்டு, அந்த அன்சாரி தோழரிடம்,
( اذْهَبْ فَاقْلَعْ نَخْلَهُ ) "நீர் சென்று அவரது மரங்களை (உம் இடத்திலிருந்து)
பிடிங்கி எறிந்துவிடுவீராக!" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-3152,
அல்குப்ரா இமாம் பைஹகீ
நம் வீட்டில் சந்தோஷமுமோ சச்சரவோ எதுவாக இருப்பினும்,
இரைந்து பேசாமல் இருப்பது நாகரீகம். தொலைக்காட்சி
பெட்டி ரேடியோ, கைப்பேசி போன்றவற்றின்
சப்தத்தின் மூலம் பக்கத்து வீட்டாருக்கு தொந்தரவு தரக்கூடாது.
அடுக்குமாடி வீடுகளில் சிறிய சப்தம்கூட நான்கு வீட்டுக்கு எதிரொலிக்கும்.
எனவே, அடுத்தவரின் நலனை உத்தேசித்து,
அவர்கள் வீட்டு குழந்தைகளின் படிப்பை உத்தேசித்து
சப்தமில்லாமல் வாழ்வது சிறப்பாகும்.
நம் வீட்டில் திருக்குர்ஆனை ஓத (கிராஅத்) கேட்பது அல்லது மார்க்கச்
சொற்பொழிவு (பயான்) கேட்பது நல்ல விஷயம் தான். ஆனால், அது யாருக்காவது தொந்தரவாக இருக்கிறதா? என்று பார்த்துச் செய்வது நல்லது. மெல்லிய சப்தத்தோடு
அதை பயன்படுத்துவது சாலச் சிறந்தது.
அந்தப் பகுதியிலுள்ள அனைத்து வீட்டுக்கும் இது (கிராஅத்,
பயான்) கேட்க வேண்டும் என்று ஆவலோடு அலற வைக்கிறவர்
நாகரீகம் குறைந்தவர் ஆவார். நான் நல்லது தானே செய்கிறேன் என்று சொன்னாலும்,
மற்றவர்கள் விருப்பம் எது என்று அறியாதவாறு தன்னை
தரம் தாழ்த்திக் கொள்கின்ற மிருக முயற்சி இது.
நம்முடைய அசையா சொத்துக்களான வீடு, கடை, தோட்டம் போன்றவற்றை
விற்பதாக இருந்தால் அதைச் சுற்றியுள்ள அக்கம் பக்கத்தினரிடம், "எனது இந்தச் சொத்துக்களை நான் விற்க உள்ளேன். உங்களுக்கு
தேவைப்பட்டால் வாங்கிக் கொள்ளுங்கள்" என்று தெரிவிக்க வேண்டும் என்பது மார்க்கச்
சட்டம். ஏனெனில், அறிவிப்புச் செய்யாமல்
அந்த சொத்தை பிறருக்கு விற்று விடும்போது அதைச் சுற்றி இருப்பவர்களுக்கு அதனால் சிரமம்
ஏற்பட்டுவிடலாம். ஆகா... நமக்கு தெரிந்திருந்தால் இதை நாமே வாங்கி இருக்கலாமே! இன்னும்
நமக்கு வசதியாக இருந்திருக்குமே! என்று அவர்கள் ஏங்கக் கூடும். ஆக, அக்கம் பக்கத்தினரிடம் எந்த அறிவிப்பும் செய்யாமல்
அதை விற்பது நல்லதல்ல.
ஏங்கவைக்கக் கூடாது
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَلَا تُؤْذِيهِ بِرِيحِ قِدْرٍ
إِلَّا أَنْ تَغْرُفَ لَهُ مِنْهَا ) நீ சமைத்த உணவிலிருந்து அவருக்கு கொடுக்காமல்,
உமது சமையலின் நறுமணத்தால் அவரை நோவினை செய்யக்கூடாது.
(அதாவது, நமது வீட்டில் விசேஷமாக சமைத்தால் பக்கத்து வீட்டாருக்கு கொஞ்சம் கொடுக்க
வேண்டும்.) அறிவிப்பாளர்:- பஹ்ஸ் பின் ஹக்கீம் (ரஹ்) அவர்கள் நூல்:- தஹ்தீபுல் கமால்,
மஜ்மஉஸ் ஸவாயித், தஃப்சீர் குர்துபீ
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إذَا اشْتَرَيْتَ فَاكِهَةً فَأَهْدِ لَهُ، فَإِنْ لَمْ تَفْعَلْ
فَأَدْخِلْهَا سِرًّا، وَلَا يَخْرُجُ بِهَا وَلَدَك لِيَغِيظَ بِهِ وَلَدَهُ ) நீர் பழம் வாங்கினால், பக்கத்து வீட்டாருக்கு
அதிலிருந்து அன்பளிப்பாக கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யமுடியாவிட்டால், அதை நீர் இரகசியமாக கொண்டு போக வேண்டும். அவருடைய
குழந்தை கோபமடையும்படி உமது பிள்ளையை (அக்கனியுடன்) வெளியே விடலாகாது. அறிவிப்பாளர்:-
அம்ர் பின் ஷுஐப் (ரலி) அவர்கள் நூல்:- மகாரிமுல் அஹ்லாக் இமாம் அல்கராயிதீ ( مكارم الأخلاق للخرائطي ), முஸ்னது அஷ்ஷாமியீன் இமாம் தப்ரானீ ( مسند الشاميين للطبراني ), தஃப்சீர் குர்துபீ
நம் வீட்டு விசேஷங்களில் சமைக்கும்போது அதன் நறுமணம் பக்கத்து
வீட்டாருக்கு வீசும். அங்குள்ளவர்களுக்கு அதன்மீது ஆசை ஏற்படும். அவர்களுக்கு கொஞ்சம்
கொடுத்துவிட்டால், அவர்களின் ஆசை நிறைவேறிவிடும்.
பக்கத்து வீட்டார் ஏழையாக இருக்கலாம். தன் குழந்தைகள் விரும்பும்
தின்பண்டங்களை அவர்கள் வாங்கி கொடுக்குமளவுக்கு வசதியற்றவர்களாக இருக்கலாம். இந்நிலையில்
நம் வீட்டு குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுக்கும்போது முடியுமானால் பக்கத்து
வீட்டாருக்கும் அன்பளிப்பு வழங்க வேண்டும். இல்லையேல், அந்த ஏழை குழந்தைகள் கண்ணில் படாதவாறு நம் வீட்டுக் குழந்தைகளுக்கு
அவற்றை இரகசியமாக உண்ண கொடுக்க வேண்டும்.
இதைவிடுத்து, பக்கத்து வீட்டு ஏழை குழந்தைகளின் பார்வையில் படும்மாறு பழங்களின் தோல்களையோ, விதைகளையோ இனிப்பு பண்டங்களின் உறைகளையோ போடுவோமேயானால் அந்த
குழந்தைகள் ஏங்கிப்போகக்கூடும். ஏழைகளின் உள்ளங்கள், உணர்வுகள் பாதிக்கப்படாமல் நடப்பது என்பது உயர்வான நற்குணமாகும்.
பெரும்பாவம்
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் கண்மணி
பெருமானார் (ஸல்) அவர்களிடம், ( أَىُّ الذَّنْبِ أَعْظَمُ عِنْدَ اللَّهِ ) “அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?” என்று கேட்டேன். நபியவர்கள், ( أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ ) “உன் பக்கத்து வீட்டாரின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது” என்று
சொன்னார்கள். நூல்:- புகாரீ-4477
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أنْ يَزني الرَّجُلُ بِعَشْرِ نِسْوَة، أَيْسَرُ عَلَيْهِ مِنْ أَن
يزنيَ بامرَأَةِ جَارِهِ لَأَنْ يَسْرِقَ الرَّجُلُ مِن عَشْرَةِ أَبْيَاتٍ،
أَيْسَرُ عَلَيْهِ مِنْ أَنْ يسرِقَ مِنْ جَارِهِ ) ஒருவன் தன் பக்கத்து வீட்டாரின் மனைவியுடன் விபச்சாரம்
செய்வதானது பத்து பெண்களிடம் விபச்சாரம் செய்வதைவிட மிகவும் இழிவான செயலாகும். மேலும்,
ஒருவன் தன் பக்கத்து வீட்டில் திருடுவதானது பத்து
வீடுகளில் திருடுவதைவிட மிகவும் இழிவான செயலாகும். அறிவிப்பாளர்:- மிக்தாத் பின் அஸ்வத்
(ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹமத், தஃப்சீர் இப்னு கஸீர், தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்
பக்கத்து வீட்டார் நட்பின் காரணமாக பக்கத்து வீட்டு ஆண் பெண்களும்
தம்முடைய வீட்டுக்கு வருவதையும் போவதையும், தம்முடைய வீட்டில் உள்ள ஆண் பெண்களும் அவர்களுடன் பேசுவதையும்
பழகுவதையும் அனுமதிப்பதுடன், தம்முடைய வீட்டு சாமான்களை
அவர்களை விட்டும் மறைக்காமலும், அவர்களை சந்தேகக்
கண் கொண்டு பார்க்காமல் இருப்பார்கள். "பக்கத்து வீட்டார் நமக்கு துரோகம் செய்ய
மாட்டார்" என்ற நம்பிக்கையுடன் இருப்பார்கள். எனவே, பக்கத்து வீட்டில் திருடுவதும் அங்குள்ள பெண்களை கெடுப்பதும்
சுலபம்.
தூரத்து வீட்டின் நிலை இதற்கு நேர்மாறானது. அந்நியர்கள் பக்கத்து
வீட்டின் அருகில் சுற்றுவதையும், அடிக்கடி நடமாடுவதையும்,
தம் வீட்டு ஆண் பெண்களுடன் ஏதேனும் பேசுவதையும்
சந்தேகக் கண் கொண்டு பார்ப்பார்கள். எனவே, அங்கு திருடுவதும் அங்குள்ள பெண்களை கெடுப்பதும் சிரமமான காரியமாகும்.
பக்கத்து வீட்டாருக்கு உதவி புரிவதும், அவரின் உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதும் முஸ்லிமான
ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.
இந்நிலையில், தன்மீது நம்பிக்கை வைத்துள்ள பக்கத்து வீட்டாரின் பொருள்களை திருடுவதும்,
அவரை மனைவியை கவர்ந்து அவளை சம்மதிக்க வைத்து அவளுடன்
தவறான முறையில் உறவு கொள்வதும் மிகப்பெரிய துரோகமாகும்.
பக்கத்து வீட்டு ஆண் பெண்களுடன் காதல் என்பதும், கள்ளக்காதல் என்பதும் இப்போதெல்லாம் சாதாரணமாகிவிட்டது.
"வேலையே பயிரை மேய்ந்த கதை" இதுதான். திருடுவதும், விபச்சாரம் செய்வதும் ஒரு குற்றமாகும். பக்கத்து
வீட்டுக்கு பாதுகாப்பு அளிக்க தவறியது மற்றொரு குற்றமாகும்.
சண்டை சச்சரவு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يَمْنَعُ جَارٌ جَارَهُ أَنْ يَغْرِزَ خَشَبَهُ فِي
جِدَارِهِ ) ஒருவர் தன் (வீட்டுச்) சுவரில் தன் பக்கத்து வீட்டார்
மரக்கட்டை (அல்லது உத்திரம், சாரம், பரண் போன்ற எதையும்) பதிப்பதைத் தடுக்க வேண்டாம்.
நூல்:- புகாரீ-2463, திர்மிதீ-1353
இரு வீடுகளுக்கிடையே உள்ள சுவர் பொதுச் சுவராக இருக்கலாம். அதை
பயன்படுத்தும் உரிமை சமமாக உண்டு என்பது தெளிவு. இடைச்சுவர் ஒருவருக்கு மட்டும் உரியதாக
இருப்பின் மற்றவரும் அதை பயன்படுத்திக் கொள்ள மரக்கட்டை, உத்திரம் போன்றவற்றை சுவரில் வைக்க அல்லது பதிக்க அனுமதிப்பதில்
உரியவர் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என இந்த நபிமொழி வலியுறுத்துகிறது.
பக்கத்து வீட்டாருடன் சண்டை வருகிறது எனில் பெரும்பாலும் சாக்கடையும்
குப்பையுமே காரணமாகும். பக்கத்து வீட்டு சாக்கடையும், குப்பையும் தன் வீட்டு முன் வந்தால் அதற்காக வரிந்து கட்டிக்கொண்டு
சண்டைக்கு கிளம்பும் பெண்கள் அதைத் தொடர்ந்து ஆண்கள் என சண்டை போட்டி போட்டு இறுதியில்
காவல் நிலையம் வரை செல்லும் கொடுமையைப் பார்க்கிறோம். சுத்தம் சுகாதாரம் இவையெல்லாம்
நமக்கு மட்டுமல்ல பிறருக்கும் வேண்டுமென விரும்ப வேண்டும்.
சில இடங்களுக்கு துணையாக போக, வீட்டு சாவியை கொடுத்துவிட்டு போக,
இப்படி எத்தனையோ வகையில் உறுதுணையாக இருக்கும்.
பக்கத்து வீட்டாருடன் நல்லிணக்கத்தோடும் விட்டுக்கொடுத்தும் வாழ்வது இறைநம்பிக்கை
சார்ந்த அம்சமாக இஸ்லாம் பார்க்கிறது.
அக்கம் பக்கத்து பிள்ளைகள் சண்டைகளுக்காக பெரியவர்கள் வரிந்துக்
கட்டிக்கொண்டு களத்தில் இறங்கக்கூடாது. இன்று சண்டையிட்டுக் கொள்ளும் பிள்ளைகள் நாளை
சேர்ந்து விளையாடுவார்கள் என்பதை பெரியவர்கள் கவனத்தில் வைக்க வேண்டும்.
பாக்கியசாலி
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مِنْ سَعَادَةِ الْمَرْءِ الْجَارُ الصَّالِحُ ) ஒரு மனிதனுக்கு பக்கத்து வீட்டார் நல்லொழுக்கம் உள்ளவராக அமைவது
நற்பாக்கியமாகும். அறிவிப்பாளர்:- நாஃபிஉ பின் அப்துல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் நூல்:-
முஸ்னது அஹ்மத், ஸஹீஹ் அல்ஜாமிஉ-887,
அல்அதபுல் முஃப்ரத்116
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்)
அவர்கள், ( اللَّهُمَّ إِنِّي
أَعُوذُ بِكَ مِنْ جَارِ السُّوءِ فِي دَارِ الْمُقَامِ، فَإِنَّ جَارَ الدُّنْيَا
يَتَحَوَّلُ ) "இறைவா! தங்கும் வீட்டில்
தீய பக்கத்து வீட்டானை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். ஏனெனில், உலகின் பக்கத்து வீட்டான் நிலைமைகள் மாறுபவனாக உள்ளான். (ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்
அவனின் மூலம் என்ன ஏற்படுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கும்)" என்று பிரார்த்திப்பார்கள்.
நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-117
பக்கத்து வீட்டார் ஒழுக்கங்கெட்டவராகவும், சிறு சிறு விஷயத்திற்கெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு
சண்டையிடுபவராகவும் அமைந்துவிட்டால் அருகில் குடியிருப்பவருடைய முழு நிம்மதியும் சீர்குலைந்து
போகும்.
வாடகை வீடுகளில் குடியிருப்பவராயின் இது மாதிரியான மோசமான பக்கத்து
வீட்டாரின் தொல்லை தாங்க முடியாமல் வேறு வீட்டுக்கு எளிதில் குடிபெயர்ந்துவிட இயலும்.
பக்கத்து வீட்டார் இருவருமே சொந்த வீட்டுக்குரியவராய் இருந்து, அதில் ஒருவர் மோசமானவராக அமைந்து விடுவாராயின் நல்லொழுக்கமுடையவருக்கு
அது ஒரு நிரந்தர நெருடல் ஆகிவிடும். பக்கத்து வீட்டார் நல்லொழுக்கமுள்ளவராக அமைவது
நற்பாக்கியம் என இதைத்தான் இந்த நபிமொழி எடுத்துரைக்கிறது.
பிற சமயத்தவர்களிடம்
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அப்துல்லாஹ் பின் அம்ர்
(ரலி) அவர்களுக்காக அவர்களின் குடும்பத்தில் ஓர் ஆடு அறுக்கப்பட்டது. அப்துல்லாஹ் பின்
அம்ர் (ரலி) அவர்கள் (வீட்டுக்கு) வந்தபோது (தன் வீட்டாரிடம்), ( أَهْدَيْتُمْ
لِجَارِنَا الْيَهُودِيِّ ) "நம் பக்கத்து வீட்டு யூதருக்கு (இதிலிருந்து) அன்பளிப்புக்
கொடுத்தனுப்பினீர்களா?" என்று திரும்பத் திரும்ப
கேட்டார்கள். நூல்:- அபூதாவூத்-4485, திர்மிதீ-1866
திருக்குர்ஆன் விரைவுரையாளர்களில் ஒருவரான நவ்ஃபல் அல்பகாலீ
(ரஹ்) அவர்கள் (தலைப்பில் காணும்) திருவசனத்திலுள்ள உறவினரான பக்கத்து வீட்டார் என்பது
முஸ்லிமான பக்கத்து வீட்டாரையும், உறவினர் அல்லாத பக்கத்து
வீட்டார் என்பது யூத கிறிஸ்தவர்களான (பிற சமயத்தவர்களான) பக்கத்து வீட்டாரையும் குறிக்கும்"
எனக் கூறியுள்ளார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
பக்கத்து வீட்டார் (அல்ஜார்) என்பது முஸ்லிம் - முஸ்லிமல்லாதவர்,
உறவினர் - அந்நியர், நல்லவர் - கெட்டவர், நண்பர் - பகைவர் ஆகிய அனைத்து வகையினரையும் குறிக்கும்.
உடலளவில் பக்கத்து வீட்டுக்கு போவதும், பேச்சளவில் அவருடன் நல்லறவு கொள்வது மட்டும் போதாது.
பண்டப் பரிமாற்றங்களை செய்து, பொருளாதார ரீதியாகவும்
அவர்களுடன் நல்லுறவு பேணுதல் வேண்டும் என இஸ்லாம் இயம்புகிறது.
சில விதிமுறைகள்
நாம் புதிதாக ஒரு வீட்டுக்கு குடித்தனம் சென்றால், பக்கத்து வீட்டாரிடம் நாமே வழியே சென்று தன்னைத்தானே
அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். "நம்ம ஊர் ஸ்பெஷல்" என்று ஏதாவது அன்பளிப்பு
அளித்தோ, அல்லது நம் வீட்டுக்கு அவர்களை
அழைத்தோ பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். அன்புக்கும் அசையாதவர்கள் அவனியில் உண்டோ?
பக்கத்து வட்டார் நம்மோடு அன்பாக இருக்கிறார்கள் என்பதற்காக
தேவையில்லாமல் அடிக்கடி சென்று அவர்களுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது.
"என்னிடம் இத்தனை பட்டுப்புடவைகளும், பிற ஆடைகளும், என் வீட்டில் இன்ன இன்ன பொருள்களும் இருக்கின்றது" என்று
பிறர் பொறாமைப்படும்படி பெருமை பேசக்கூடாது.
எடுத்ததற்கெல்லாம் அவர்களிடம் கடன் கேட்கக்கூடாது. நிர்ப்பந்த
நிலையின்றி அவர்களிடம் அரிசி, பருப்பு, பால், சர்க்கரை, சீரகம், தேயிலை போன்ற சிறு சிறு பொருள்களையெல்லாம் இலவசமாகவோ
இரவலாகவோ கேட்டு அவர்களை சிரமப்படுத்த கூடாது.
தவிர்க்க முடியாத நேரத்தில் ஏதாவது பொருளை இரவலாக வாங்கினால்,
குறிப்பிட்ட நேரத்தில் திருப்பி கொடுத்துவிட வேண்டும்.
ஒன்றை திருப்பிக் கொடுக்காத வரை மீண்டும் மற்றொரு பொருளை கேட்பதை தவிர்க்க வேண்டும்.
ஆரம்பத்தில் தரத்தான் செய்வார்கள். நாள் ஆக ஆக நாம் கேட்பதை அவர்களிடம் வைத்துக்கொண்டே
இல்லை எனச் சொல்லி விடுவார்கள். இப்படி அவர்கள் பொய் சொல்வதற்கு நமது நச்சரிப்பு தான்
காரணம் என்பதை உணர வேண்டும்.
வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்கு வாக்களித்த நாளைவிட சிறிது
பிந்திவிட்டால், அதற்காக அவர்களிடம்
மன்னிப்பு கேட்க வேண்டும். பக்கத்து வீட்டாருடன் நாம் இவ்வாறு நடந்து கொண்டால் நமது
நட்பு மேலும் பலப்படும்.
"கடும் சினேதம் கண்ணை மறைக்கும்" என்பது கிராமத்து
சொல்வழக்கு
பக்கத்து வீட்டாரின் சொந்த விஷயத்தில் தேவையில்லாமல் மூக்கை
நுழைக்கக்கூடாது. அவர்கள் வீட்டுக்கு யார் வந்தது? யார் போனது? இவ்வளவு நேரம் ஏன்
இருந்தார்கள்? என்ன உறவு?
என்றெல்லாம் அவர்கள் குடும்ப இரகசியங்களை துருவித்
துருவி கேட்பதில் முனைப்பாக இருக்கக் கூடாது. அவர்களாகவே சொன்னால் மட்டும் கேட்கலாம்.
"பக்கத்து வீட்டார் நல்ல உறவோடு இருக்க வேண்டுமானால்,
அவர்களின் சொந்த விஷயங்களில் கண்களையும் காதுகளையும்
மூடிக்கொள்" என்பது அரேபிய பழமொழி.
பக்கத்து வீட்டாரைப்பற்றி புறம் பேசுவதும், அவர்களின் சிறு குற்றம் குறைகளை பூதக்கண்ணாடி போட்டு
உருப்பெருக்கி பட்டியலிடுவதும் பெரும் தவறாகும்.
எனவே, பக்கத்து வீட்டாருடன்
நல்லுறவு என்பது வெறும் வாய்ப்பந்தலாக இல்லாமல் உண்மையிலேயே அவர்களின் எல்லா காரியங்களிலும்
அக்கறை செலுத்தி, உடன்பிறப்புகள் போல்
அவர்களோடு நேசத்துடன் வாழ்கின்ற அழகிய பண்பாளர்களாக அல்லாஹுத்தஆலா நம்மை மிளிரச் செய்வானாக!
ஆமீன்!
(இந்தக் கட்டுரை சுமார்
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்:
நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment