வலப் புறத்தை முற்படுத்துவோம்
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ
حِسَابًا يَسِيرًا
ஆகவே, (அந்நாளில்) எவருடைய வலக் கரத்தில் அவருடைய ஏடு கொடுக்கப்படுகின்றதோ, அவர் மிக்க இலகுவாக கேள்வி கணக்கு கேட்கப்படுவார். திருக்குர்ஆன்:- 84:7,8
விஞ்ஞான அறிவானது கொடி கட்டி பறக்கும் இன்றைக்கும் பதினான்கு
நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த எழுதப்படிக்க எந்த மனிதனும் கற்றிடாத இறைத்தூதர்
நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் தங்களின் மெஞ்ஞானத்தால் அள்ளித் தந்துள்ள கருத்துச்
செல்வத்தை காணும் அறிஞர் உலகம் வியந்துப் போற்றுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நற்பண்புகளில் ஒன்று அனைத்து
காரியங்களிலும் வலப்புறத்தை முற்படுத்துவதாகும்.
சொர்க்கத்தின் மொழியான அரபு மொழி வலப்புறத்திலிருந்து இடப்புறமாக வாசிக்கப்படுகிறது. (இறையில்லம்
எனும்) கஅபாவை நாம் (தவாஃப் எனும்) வலம் வரும்போது வலப்புறம் ஆரம்பித்து இடப்புறமாகவே
வலம் வேண்டும். ஆடை அணிதல், காலனி மற்றும் காலுறை
அணிதல், பள்ளிவாசலுக்குள் மற்றும் வீட்டுக்குள் நுழைதல், பிறருக்கு ஒரு பொருளை கொடுத்தல் மற்றும் வாங்குதல்,
பல் துலக்குதல், கண்களுக்கு சுர்மா இடுதல், நகம் வெட்டுதல், மீசை கத்தரித்தல், தலைமுடி வாருதல்,
அங்கத்தூய்மை செய்தல், உண்ணுதல் பருகுதல், கழிப்பிடத்திலிருந்து வெளியேறுதல், (முஸாபஹா எனும்) கை கொடுத்தல், தொழுகையின் இறுதியில்
சலாம் கொடுத்தல் உள்ளிட்ட செயல்களை வலப்புறத்திலிருந்து தொடங்குவது சிறப்பிற்குரியதாகவும்
விரும்பத்தக்கதாகவும் மார்க்கம் கருதுகிறது.
நற்காரியங்களின்போது
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
(உளூ மற்றும் குளியல் மூலம்) தம்மை தூய்மைப்படுத்திக் கொள்ளும்போதும், தலைவாரி கொள்ளும்போதும்,
காலணி அணியும்போதும் வலப்புறத்திலிருந்து தொடங்குவதையே
விரும்புவார்கள். நூல்:- புகாரீ-168, முஸ்லிம்-446, திர்மிதீ-553
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜில் நாவிதரிடம் தலை
முடியை மழிக்கும்போது (முதலில்) தமது தலையின் வலப்புறத்தையும் பின்னர் இடப்புறத்தையும்
காட்டி, “எடு!” என்றார்கள். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-2510,
திர்மிதீ-836
உண்ணுதல் – பருகுதல்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ وَإِذَا شَرِبَ
فَلْيَشْرَبْ بِيَمِينِهِ ) உங்களில் ஒருவர் உண்ணும்போது வலக் கையால் உண்ணட்டும்.
பருகும்போது வலக்கையால் பருகட்டும். நூல்:- முஸ்லிம்-4108
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يَأْكُلَنَّ أَحَدٌ مِنْكُمْ بِشِمَالِهِ وَلاَ يَشْرَبَنَّ
بِهَا فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ وَيَشْرَبُ بِهَا ) உங்களில் எவரும் இடக் கையால் உண்ண வேண்டாம். பருக வேண்டாம். ஏனெனில்,
ஷைத்தான் இடக் கையால் தான் உண்ணுகிறான்;
பருகுகிறான்.
அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4109
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அருகில் இடக் கரத்தால் உணவு உண்டார். அப்போது நபியவர்கள், ( كُلْ بِيَمِينِكَ ) "வலக் கரத்தால் உண்ணுவீராக" என்று கூறினார்கள். அவர், "என்னால் முடியாது" என்றார். நபியவர்கள், ( لاَ اسْتَطَعْتَ ) "உன்னால் முடியாமலே போகட்டும்" என்று கூறினார்கள். அகம் பாவம் அவரை (நபியவர்களுக்கு கட்டுப்படாமல்) தடுத்தது. அவ்வாறே அவரால் தமது வாய்க்கு கையை உயர்த்த முடியாமல் போனது. நூல்:- முஸ்லிம்-4110
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எந்த நற்காரியத்தை செய்தாலும் வலப்புறத்தை
முற்படுத்துவார்கள். அதற்காக, இது கட்டாய கடமையல்ல.
ஆனாலும், வலப்புறத்தை முற்படுத்தி செயல்படுவது
நபிவழி மரபு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வலது பக்கத்தார்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் (மிஃராஜ் எனும்)
விண்வெளி பயணம் சென்றபோது முதல் வானத்தில் ஒரு மனிதர் இருந்தார். அவரது வலப் புறத்திலும்
இடப் புறத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தனது வலப் புறம் பார்க்கும்போது சிரித்தார்.
தனது இடப் புறம் பார்க்கும்போது அழுதார்.
அப்போது நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், ( يَا جِبْرِيلُ مَنْ هَذَا ) "ஜிப்ரீல் இவர் யார்?" என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், ( هَذَا آدَمُ صلى الله عليه وسلم وَهَذِهِ
الأَسْوِدَةُ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ نَسَمُ بَنِيهِ فَأَهْلُ الْيَمِينِ
أَهْلُ الْجَنَّةِ وَالأَسْوِدَةُ الَّتِي عَنْ شِمَالِهِ أَهْلُ النَّارِ فَإِذَا
نَظَرَ قِبَلَ يَمِينِهِ ضَحِكَ وَإِذَا نَظَرَ قِبَلَ شِمَالِهِ بَكَى ) "இவர்தாம் (ஆதிமனிதர்) ஆதம் (அலை) அவர்கள். இவருடைய
வலப் பக்கமும் இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அன்னாரின் சந்ததிகள். வலப் புறமிருப்பவர்கள்
சொர்க்கவாசிகள். இடப் புறமிருக்குப்பார்கள் நரகவாசிகள். ஆகவேதான், அவர் வலப் புறம் (சொர்க்கவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும்போது சிரிக்கிறார்.
இடப் புறம் (நரகவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும்போது அழுகிறார்" என்று பதிலளித்தார்.
அறிவிப்பாளர்:- அபூதர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3342, முஸ்லிம்-263
வலப் புறத்தார்கள் நற்பாக்கியவான்கள். இவர்களால் நபி ஆதம் (அலை)
அவர்களுக்கு சந்தோஷம் ஏற்படுகிறது. பிறரை சந்தோஷப்படுத்துபவரே சிறந்தவர் ஆவார். திருக்குர்ஆனில்
அல்வாகிஆ என்ற அத்தியாயத்தில், "நற்பாக்கியம் பெற்றவர்கள் எல்லோரும் வலது புறத்தார்களே" என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
அந்த நற்பாக்கியங்கள்: முள்ளில்லாத இலந்தை, அடுக்கடுக்கான குலைகள் கொண்ட வாழைகள், பறந்து விரிந்திருக்கும் நிழல், எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் நீரருவி,
தங்கு தடையின்றி கிடைக்கும் கனி வகைகள் இவை அனைத்தும்
வலது புறத்தாருக்கு உரியவை.
அடுத்து இடப் புறத்தார்கள் துர்பாக்கியம் பற்றியும் கூறப்படுகிறது.
அவர்கள் அனல் காற்றிலும், கொதிக்கும் நேரிலும்,
கரும் புகையிலும் கிடப்பார்கள். அவர்களின் உணவு
பானம், கள்ளி மரமும் கடமையாக கொதிக்கும்
சுடுநீருமாகும்.
எவர்களுக்கு அவர்களின் (தினசரி குறிப்பு) புத்தகம் வலது கையில்
கொடுக்கப்பெறுகிறதோ அவர்கள் அதனை (மிக்க மகிழ்ச்சியோடு) வாசிப்பார்கள். திருக்குர்ஆன்:-
17:71
மறுமைநாளில் வலது கையில் தினசரி பதிவேடு தரப்படுவோர் மிக இலேசான
முறையில் கேள்வி கணக்கு கேட்கப்படுவார் என்று தலைப்பில் காணும் திருவசனத்தின் விளக்கம்
என்னவென்றால், அவர்கள் புரிந்த நன்மை
தீமைகள் அவர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டு, துருவி ஆராயாமல் விடப்படும். எனவே, அவர்களின் விசாரணை சுலபமாக முடித்துவிடும். எவர் விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டு, துருவித் துருவி கணக்கு
கேட்கப்படுவாரோ அவர் நிலை திண்டாட்டம் தான்.
தொழுகையில்
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் ஒரு
இரவு கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுடன் தொழுதபோது, நபியவர்களின் இடப்புறமாக நின்றேன். அப்போது நபியவர்கள் என் தலையின்
பின்புறத்தை பிடித்து தமது வலப்புறத்தில் என்னை நிறுத்தினார்கள். நூல்:- புகாரீ-726,
திர்மிதீ-215
இமாமுடன் தொழுகையாளி (முக்ததி) ஒருவர் மட்டும் இருந்தால் வலப்புறத்தில்
இமாமுக்கு சற்று பின்னால் அந்த தொழுகையாளி நின்று கூட்டாக (ஜமாஅத்தாக) தொழ வேண்டும்
என்ற சட்டத்தை இது போன்ற நபிமொழியில் இருந்தே எடுக்கப்பட்டதாகும்.
உறங்கும்போது
ஹுதைபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார்
(ஸல்) அவர்கள் படுக்கைக்கு சென்றால் வலது உள்ளங்கையை வலது கன்னத்தின் கீழ் வைத்து உறங்குவார்கள்.
நூல்:- புகாரீ-6314, ஷமாயில் திர்மிதீ-253
மனித உடலில் இதயம் இடப்புறமாக உள்ளது. எனவே இடப்புறமாக சாய்ந்து
படுத்துறங்கும்போது பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
இடப்புறம் சாய்ந்து படுத்து உறங்கும்போது, இரைப்பை, குடல்களின் சுமை இதயத்தின் பக்கம் சாய்கிறது. அதனால்,
இரத்த ஓட்டம் மற்றும் இதயத்துடிப்புகள் அளவு குறைகிறது.
எனவே, இதனால் இதய நோய் உண்டாகிறது.
மும்பை மருத்துவமனையின் "டாக்டர் கிஷன்லால் சர்மா"
தூக்கத்தைப் பற்றி தன் ஆய்வின் அனுபவங்களை கூறுகிறார். மருத்துவ ஆய்வுக்காக நோயாளிகளில்
சிலரை வலப்புறமாக சாய்ந்து படுக்க வைக்கப்பட்டபோது, அதனால் அவர்கள் மிக விரைவில் குணமடைந்தார்கள். மேலும்,
நோயாளிகளில் சிலரை இடப்புறமாக சாய்ந்து படுக்க வைக்கப்பட்டபோது,
அவர்கள் நிம்மதி இல்லாமல் தவித்தார்கள்.
இடப்புறம் சாய்ந்து படுப்பதை வழக்கமாக வைத்துக்கொண்டால்,
இதய நோய், இரைப்பை நோய், மயக்கம் மற்றும் (நிரந்தர மயக்கம் எனும்) கோமா நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக,
நோயாளிகளை வலப்புறம் சாய்ந்து படுக்க வைப்பதே அவர்களின்
உடல் நலத்திற்கு நல்லது என்கிறது மருத்துவ உலகம்.
விருந்து பரிமாற்றத்தில்
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள்
எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். நபியவர்களுக்கு பால் பருக கொடுத்தோம். அவர்கள் பருகினார்கள்.
அப்போது உமர் (ரலி) அவர்கள், ( يَا
رَسُولَ اللَّهِ أَعْطِ أَبَا بَكْرٍ ) "நாயகமே! அபூபக்ருக்கு
கொடுங்கள்" என்று நபியவர்களிடம் கூறினார். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபியவர்களின்
இடது புறத்தில் இருந்தார். ஆனால், நபியவர்கள் (தமக்கு
வலப்புறத்தில் இருந்த) கிராமவாசி ஒருவருக்கே கொடுத்தார்கள். மேலும், ( الأَيْمَنَ
فَالأَيْمَنَ ) “(பானங்கள் உள்ளிட்டவற்றை பரிமாறும்போது முதலில்)
வலது புறம் இருப்பவருக்கும், அடுத்து (அவருக்கு)
வலது புறத்தில் இருப்பவருக்கும் (கொடுக்க வேண்டும்)" என்று கூறினார்கள் நூல்:-
முஸ்லிம்-4128
எவ்வளவு கூட்டம் இருந்தாலும் விருந்து தரும் மனிதர் தனது வலப்புறத்தில்
இருப்பவருக்கே முதலிடம் தர வேண்டும். வலது புறம் உள்ளவர் அந்தஸ்தில் குறைவானவராக இருந்தாலும்
இடது புறம் உள்ளவருக்கு கொடுக்காமல் வலது புறம் உள்ளவர் வசமே கொடுக்க வேண்டும் இதுவே
நபிவழியாகும்.
துப்புரவின்போது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيُمْنَى وَإِذَا
خَلَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ ) உங்களில் ஒருவர் காலணி அணியும்போது முதலில் வலது
காலில் அணியட்டும். அதை கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றட்டும். அறிவிப்பாளர்:-
அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-5855, முஸ்லிம்-4258
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يُمْسِكَنَّ أَحَدُكُمْ ذَكَرَهُ بِيَمِينِهِ وَهُوَ يَبُولُ
وَلاَ يَتَمَسَّحْ مِنَ الْخَلاَءِ بِيَمِينِهِ ) உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது அவர்
தமது இன உறுப்பை வலக் கரத்தால் பிடிக்க வேண்டாம். மலஜலம் கழித்த பின் வலக்
கரத்தால் கையால் சுத்தம் செய்ய வேண்டாம். அறிவிப்பாளர்:- அபூ கத்தாதா (ரலி) அவர்கள்
நூல்:- புகாரீ-154, முஸ்லிம்-443
வீடு மற்றும் பள்ளிவாசல் போன்ற நல்ல இடங்களுக்குள் நுழையும்போது
வலது காலை முன்வைத்து உள்ளே நுழைய வேண்டும். வெளியேறும்போது இடது காலை முன்வைத்து வெளியேற
வேண்டும்.
மாறாக, கழிவறை போன்ற அசுத்தமான
இடங்களுக்குள் நுழையும்போது இடது காலை முறைப்படுத்த வேண்டும். வெளியேறும்போது வலது
காலை முறைப்படுத்த வேண்டும்.
இன உறுப்புக்களை சுத்தம் செய்வது, மூக்கு, காது போன்ற உறுப்புகளை
சுத்தம் செய்வது, காலணி மற்றும் காலுறைகளை
கழற்றுவது உள்ளிட்ட செயல்களை உடலில் இடது புறத்திலிருந்து தொடங்குவது விரும்பத்தக்கதாகும்.
வலது கரத்தால் அசுத்தங்களை துப்புரவு செய்யக் கூடாது. என்பதில் சற்று கூடுதல் கவனம்
தேவை.
நீராட்டும்போது
உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்)
அவர்களது மகளை நீராட்டும்போது, நபியவர்கள்,
( ابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ مِنْهَا ) “அவரது வலப்புறத்திலிருந்தும் அங்கத்தூய்மை செய்ய
வேண்டிய பகுதியிலிருந்தும் ஆரம்பியுங்கள்” என்று
கூறினார்கள். நூல்:- புகாரீ-1255
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மூத்த மகளார் ஸைனப் (ரலி) அவர்கள்
ஹிஜ்ரீ 8 ஆம் ஆண்டின் தொடக்கத்தில்
இறந்தார்கள். அவர்களை நீராட்டுவது குறித்தே மேற்காணும் நபிமொழி கூறுகிறது.
குழந்தைகள், பெரியவர்கள் என உயிரோடு
இருப்பவர்களுக்கு குளிப்பாட்டுவதாக இருந்தாலும், இறந்தவர்களை குளிப்பாட்டுவதாக இருந்தாலும் வலப்புறத்தில் இருந்து
ஆரம்பிப்பதே நபிவழியாகும். நாம் குளிப்பதாக இருந்தாலும் வலப்புறத்தில் இருந்தே
ஆரம்பிக்க வேண்டும்.
பிறருக்காக வேண்டாம்
தமிழகத்தின் முதல் இஸ்லாமியக் கல்லூரி (வேலூரில் இருக்கும்)
"அல்பாக்கியாதுஸ் ஸாலிஹாத்" ஆகும். அதன் நிறுவனர் அறிஞர் அப்துல் வஹ்ஹாப்
(ரஹ்) அவர்களை செல்வந்தர் ஒருவர் விருந்துக்கு அழைத்தார். விருந்துக்கு வந்தோரின் பலர்
சகோதர சமயத்தவர்கள்.
ஹள்ரத் அவர்கள் சாப்பிட ஆரம்பிக்கும்போது அந்தச் செல்வந்தர்
அன்னாரின் அருகில் வந்து காதோடு காதாக, "சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது உணவு தேவைப்படின் வலக்
கரத்தால் கையால் எடுத்து வைக்க வேண்டாம். அது நாகரீகமாக இருக்காது. எனவே, இடக் கரத்தால் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.
அவ்வளவுதான் அன்னார் எழுந்துவிட்டார்கள். சுற்றி இருப்பவர்களுக்காக
என்னுடைய நபியின் வழிமுறையை என்னால் விட முடியாது" எனக் கூறி, தமது இல்லத்திற்கு புறப்பட்டார்கள். பிறகு அந்தச்
செல்வந்தர் எவ்வளவோ கூறியும் அன்னார் சாப்பிடவில்லை.
ஆம்! ஹள்ரத் அவர்கள் சுற்றி இருந்தவர்களுக்காக இறைத்தூதரின்
வழிமுறையை விட்டு விடவில்லை. இஸ்லாமிய வழிமுறையை விட்டு விடுவதின் மூலம் கண்ணியத்தைப்
பெற்றுவிடலாம் என்று ஒருபோதும் எண்ணக்கூடாது. ஏனெனில், கண்ணியத்தையும் இழிவையும் தருவது ஏக இறைவன் அல்லாஹுத்தஆலா ஆகும்.
அறிவியல் ரீதியாக
மனிதனுடைய உடலில் மூன்று நாடிகள் செயல்படுகிறது. அவை வலது நாடி,
இடது நாடி, மத்திம நாடி என அழைக்கப்படுகிறது. இவற்றில் வலது நாடியானது எப்போது
செயல்படுகிறதோ அப்போது உடலின் வலது பகுதியானது நன்கு செயல்பட செயல்படக்கூடியதாக இருக்கிறது.
வலது நாடி செயல்படும்போது மனிதனின் மூளைப் பகுதியானது மிகவும்
விழிப்புத்தன்மை கொண்டதாக விளங்கும். சுறுசுறுப்பு அதிகமாக இருக்கும். மனிதனுடைய உடல்
உறுப்புக்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக செயல்படும். ஆகவே, வலது புறமாகவே நாம் ஒவ்வொரு காரியத்தையும் செய்யும்போது இயல்பாகவே
வலது நாடி அதிகமாக இயங்க ஆரம்பிக்கிறது. இதனால் செயல்பாடுகள் தெளிவான நிலையில் அமைந்துவிடுகிறது.
மேலைநாடுகளில் இடக் கரத்தால் உண்ணுவதையும் பருகுவதையும் நாகரீகமாக
கருதப்படுகிறது. இடக் கரம் மலஜலம் சுத்திகரிப்புக்கு பயன்படுத்துகிறோம். அருவருப்பான
அந்த பணியை செய்யும்போது இடக் கரத்தால் உணவு உண்ணவும் பருகவும் பயன்படுத்தும்போது மனதில் அருவருப்பும், சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகரித்துவிடும் என்கிறது
மருத்துவ உலகம்.
இடது கை பழக்கமுள்ளவர்கள் கல்வி கற்றுக் கொள்வதில் மிகுந்த கஷ்டமும்,
கற்பதற்குரிய அறிவை மழுங்கச் செய்துவிடும். உடல்
சதைகளிலும், நரம்புகளிலும்,
மூட்டுகளிலும், தைராய்டு சுரபிகளிலும் எரிச்சல் வியாதியால் பாதிக்கப்படுகிறார்கள்
என அமெரிக்க அறிஞர் "நார்மன் கெஸ்வின்" என்பவர் கூறுகிறார்.
சுருங்கக்கூறின்,
நற்காரியங்கள் அனைத்திற்கும்
வலப் புறத்தை முற்படுத்துவதையே இறைவனும், இறைத்தூதர்களும், நல்லோர்களும் விரும்புகின்றனர்.
எனவே, நாமும் நற்காரியங்களில் வலப்
புறத்தை முற்படுத்தி, இறையருளை பெறுவோமாக!
ஆமீன்!
(இந்தக் கட்டுரை 16 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)
மௌலவி,
மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment